அத்தியாயம் – 13
இந்திரன் தன் பாவ விளைவுகளால் துன்புறுதல்
பதம் 6.13.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, சிறந்த வள்ளலே, விருத்ராசுரன் கொல்லப்பட்டபொழுது, இந்திரனைத் தவிர அனைத்து அதிதேவதைகளும், மூன்று லோகங்களிலுள்ள அனைவரும் உடனே தொல்லையிலிருந்து விடுபட்டு திருப்தியடைந்தனர்.

பதம் 6.13.2 : அதன்பிறகு, தேவர்கள், சிறந்த முனிவர்கள், பித்ருலோக மற்றும் பூதலோக வாசிகள், அசுரர்கள், தேவர்களைப் பின்பற்றுபவர்கள், பிரம்மதேவர், சிவபெருமான், இந்திரனுக்குக் கீழ்ப்படிந்த தேவர்கள் ஆகிய அனைவரும் அவரவர் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். ஆனால் அவ்வாறு புறப்பட்டுச் செல்லும் பொழுது ஒருவரும் இந்திரனோடு பேசவில்லை.

பதம் 6.13.3 : பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: சிறந்த முனிவரே, இந்திரனின் வருத்தத்திற்குக் காரணமென்ன? இதைப் பற்றி கேட்க நான் ஆவலாக இருக்கிறேன். அவர் விருத்ராசுரனைக் கொன்றபொழுது எல்லா தேவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அப்படியிருக்க இந்திரன் மட்டும் ஏன் துக்கப்பட்டார்?

பதம் 6.13.4 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு விடையளித்தார்: அனைத்து தேவர்களும், சிறந்த முனிவர்களும் விருத்ராசுரனின் அசாதாரணமான சக்தியினால் தொல்லைக்குள்ளான பொழுது, இந்திரனிடம் அவனைக் கொன்றுவிடும்படி கேட்டுக் கொள்வதற்காக அவர்கள் அங்கு கூடினர். ஆனால் ஒரு பிராமணனைக் கொல்ல அஞ்சிய இந்திரன், அவர்களது வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

பதம் 6.13.5 : இந்திரன் பதிலளித்தார்: நான் விஸ்வரூபரைக் கொன்ற பொழுது, அளவுக்கதிகமான பாவ விளைவுகளைப் பெற்றேன். ஆனால் பெண்கள், நிலம், மரங்கள், நீர் ஆகியவற்றின் உதவியால், என் பாவத்தை அவற்றிற்கு என்னால் பிரித்துக் கொடுக்க முடிந்தது. ஆனால் இப்பொழுது மற்றொரு பிராமணனான விருத்ராசுரனையும் கொன்றால், பாவ விளைவுகளிலிருந்து எவ்வாறு நான் விடுபடுவேன்?

பதம் 6.13.6 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இதைக் கேட்ட சிறந்த முனிவர்கள் இந்திரனிடம், “சுவர்க்க ராஜனே, உமக்கு மங்களம் உண்டாகட்டும். நீர் அஞ்ச வேண்டாம். அந்த பிராமணனைக் கொல்வதால் விளையப்போகும் பாவத்திலிருந்து உம்மை விடுவிப்பதற்கு நாங்கள் ஓர் அஸ்வமேத யாகத்தைச் செய்யப்போகிறோம்” என்று பதிலளித்தனர்.

பதம் 6.13.7 : முனிவர்கள் தொடர்ந்து கூறினர்: இந்திரனே, ஓர் அஸ்வமேத யாகத்தைச் செய்வதனால் பரமபுருஷரும், பரமாத்மாவும், பரமஆளுனருமாகிய பகவான் நாராயணரை திருப்திப்படுத்துவதன் மூலம், ஒருவனால் விருத்ராசுரனைப் போன்ற ஓர் அசுரனைக் கொன்ற பாவத்தை மட்டுமின்றி, முழு உலகையும் கொன்ற பாவவிளைவுகளைக் கூட போக்கிக் கொள்ளமுடியும்.

பதங்கள் 6.13.8 – 6.13.9 : ஒரு பிராமணனையோ, ஒரு பசுவையோ, அல்லது தன் தந்தையையோ, தாயையோ அல்லது குருவையோ கொன்றவனால், பகவான் நாராயணரின் புனித நாமத்தை ஜபிப்பதாலேயே எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் உடனே விடுபட முடியும். சூத்திரர்களை விடத் தாழ்ந்தவர்களான சண்டாளர்கள் மற்றும் நாய் தின்பவர்கள் போன்ற பாவிகள் கூட இம்முறையினால் விடுபட முடியும். ஆனால் நீரோ ஒரு பக்தர். சிறந்த அஸ்வமேத யாகத்தைச் செய்து உமக்கு நாங்கள் உதவி புரியப்போகிறோம். அவ்வாறு பகவான் நாராயணரை உம்மால் மகிழ்விக்க முடியுமானால், பிறகு எதற்காக அஞ்சுகிறீர்? விருத்ராசுரனைப் போன்ற தொல்லை தரும் ஓர் அசுரனைக் கொல்வது ஒருபுறமிருக்க, பிராமணர்கள் உட்பட முழு பிரபஞ்சத்தையும் நீர் கொன்றாலும், அதிலிருந்து நீர் விடுவிக்கப்படுவீர்.

பதம் 6.13.10 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: முனிவர்களின் வார்த்தைகளால் தூண்டப்பட்டு இந்திரன் விருத்ராசுரனைக் கொன்றார். அவன் கொல்லப்பட்டதும் ஒரு பிராமணனைக் கொன்றதன் பாவ விளைவு (ப்ரஹ்ம-ஹத்யா) இந்திரனை வந்தடைந்து.

பதம் 6.13.11 : தேவர்களின் அறிவுரையைப் பின்பற்றி, விருத்ராசுரனைக் கொன்ற அப்பாவச் செயல்களின் காரணத்தால், அவர் துன்பமடைந்தார். மற்ற தேவர்கள் மகிழ்ச்சியடைந்த போதிலும், விருத்ராசுரனைக் கொன்ற இந்திரனால் மகிழ்ச்சியடைய இயலவில்லை. பொறுமை, செல்வம் போன்ற இந்திரனின் பிற நற்குணங்களால் அவரது வருத்தத்தைப் போக்க அவருக்கு உதவ முடியவில்லை.

பதங்கள் 6.13.12 – 6.13.13 : பாவ விளைவின் சொரூபமானது, ஒரு சண்டாளப் பெண்ணின் உருவில் தன்னைப் பின்தொடர்ந்து வருவதை இந்திரன் கண்டார். மிகவும் வயதானவளாகக் காணப்பட்ட அவளது உடல் அங்கங்கள் நடுங்கின. க்ஷயரோகத்தினால் பீடிக்கப்பட்டிருந்த காரணத்தால் அவளது உடலும், ஆடைகளும் இரத்தம் தோய்ந்தவையாக இருந்தன. நரைத்த முடியுடனும், தலைவிரி கோலமாகவும், மீன் வாடை வீசும் மூச்சுக் காற்றினால், செல்லும் வழியிலுள்ள காற்றைக் கெடுத்தபடி, அவள் “நில், நில்” என்று அழைத்துக் கொண்டு இந்திரனைப் பின் தொடர்ந்தாள்.

பதம் 6.13.14 : அரசே, இந்திரன் முதலில் ஆகாயத்தில் பறந்து சென்றார். ஆனால் பாவ சொரூபமான அப்பெண் அங்கும் தன்னைப் பின் தொடர்ந்து வருவதை இந்திரன் கண்டார். அவள் இந்திரன் சென்ற இடத்திற்கெல்லாம் அவரைப் பின்தொடர்ந்து சென்றாள். இறுதியாக அவர் வடகிழக்கு திசையில் விரைந்து மானஸ-ஸரோவர ஏரியில் புகுந்தார்.

பதம் 6.13.15 : பிராமணனைக் கொன்ற பாவ விளைவிலிருந்து விடுபடுவது எப்படி என்று எப்பொழுதும் சிந்தித்து வந்த இந்திரன் யாருக்கும் தெரியாமல் ஒரு தாமரைத் தண்டின் நூலினுள் மறைந்தபடி, அந்த ஏரியிலேயே ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அக்னி தேவன், யக்ஞங்களில் இந்திரனுக்குச் சேரவேண்டிய பாகத்தை அங்கு கொண்டு வருவது வழக்கம். ஆனால் அக்னி தேவன் அந்த நீருக்குள் புக அஞ்சியதால், இந்திரன் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று.

பதம் 6.13.16 : இந்திரன் தாமரைத் தண்டினுள் மறைந்தபடி அந்த நீருக்குள் வாழ்ந்து வந்தது வரை, அறிவும், தவமும், யோக பலமும் வாய்ந்த நகுஷன் தேவலோகத்தை ஆண்டு வந்தார். ஆனால் பலத்தினாலும், ஐசுவரியத்தனாலும் அறிவாகிய கண்ணை இழந்த நகுஷன், இந்திரனின் மனைவியை அனுபவிக்கும் ஆசையுடன், விரும்பத்தகாத திருமணக் பேச்சுகளை அவரிடம் பேசினார். இதனால் நகுஷன் ஒரு பிராமணரால் சபிக்கப்பட்டு ஒரு பாம்பாக மாறினார்.

பதம் 6.13.17 : திக்தேவதையான ருத்திரனின் செல்வாக்கினால் இந்திரனின் பாவங்கள் குறைக்கப்பட்டன. மானஸ-ஸரோவர ஏரியிலுள்ள தாமரைக் கூட்டத்தில் வாழ்ந்து வந்த இந்திரன், பகவான் விஷ்ணுவின் மனைவியான லக்ஷ்மி தேவியால் காக்கப்பட்டிருந்த காரணத்தால், இந்திரனின் பாவங்களால் அவரைப் பீடிக்க இயலவில்லை. இந்திரன் பகவான் விஷ்ணுவைச் சிரத்தையுடன் வழிபட்டதால், முடிவில் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். பிறகு அவர் பிராமணர்களால் சுவர்க்க லோகங்களுக்கு அழைக்கப்பட்டு, மீண்டும் அவரது பழைய பதவியில் அமர்த்தப்பட்டார்.

பதம் 6.13.18 : அரசே, இந்திரன் சுவர்க்க லோகங்களை அடைந்ததும், சிறந்த பிராமணர்களான முனிவர்கள் அவரை அணுகி, பரமபுருஷரை திருப்திப்படுத்துவதற்குரிய அஸ்வமேத யாகத்திற்கு முறைப்படி தீட்சை பெறும்படி செய்தனர்.

பதங்கள் 6.13.19 – 6.13.20 : பிரம்ம ரிஷிகளால் செய்யப்பட்ட அஸ்வமேத யாகத்தில் இந்திரன் பரம்புருஷரை வழிபட்டதால், அவர் தன்னுடைய எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். அரசே, மிகக் கடுமையான ஒரு பாவத்தை அவர் செய்திருந்த போதிலும், அந்த யாகத்தினால், அப்பாவ விளைவுகள் சூரியனைக் கண்ட பனிபோல் உடனே மறைந்து போயின.

பதம் 6.13.21 : இந்திரன், மரீசி முதலான முனிவர்களால் ஆதரிக்கப்பட்டார். அவர்கள் சட்ட திட்டங்களுக்கேற்ப, பரமாத்மாவும் ஆதிபுருஷருமாகிய பரமபுருஷரை முறைப்படி வழிபட்டு அஸ்வமேத யாகத்தை நிறைவேற்றினர். இவ்வாறு தனது மேலான பதவியை திரும்பப் பெற்ற இந்திரன் மீண்டும் அனைவராலும் பெருமைப்படுத்தப்பட்டார்.

பதங்கள் 6.13.22 – 6.13.23 : மிகச்சிறந்த இந்த வரலாற்றில், பரமபுருஷராகிய நாராயணரின் புகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இதில் பக்தித் தொண்டின் மேன்மையைப் பற்றிய கூற்றுகளும், இந்திரன் மற்றும் விருத்ராசுரனைப் போன்ற பக்தர்களைப் பற்றிய வர்ணனைகளும் உள்ளன. இந்திரன் பாவ வாழ்விலிருந்து விடுபட்டதைப் பற்றிய கூற்றுகளும், அசுரர்களை அவர் போரில் வென்றதைப் பற்றிய கூற்றுகளும் கூட இதில் உள்ளன. இச்சம்பவத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒருவன் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவான். ஆகவே இந்திரனைப் பற்றிய இவ்வரலாற்றை எப்பொழுதும் புத்திமான்கள் படிக்க வேண்டும். இது புலன் செயல்களின் திறமையையும், செல்வத்தையும், புகழையும், பாவத்திலிருந்து விடுதலையையும், சத்துரு ஜயத்தையும், நீண்ட ஆயுளையும் அளிக்கக் கூடியதாகும். இந்த வரலாறு எல்லா வகையிலும் மங்களகரமானது என்பதால், புத்திமான்கள் பருவம் தோறும் இதைக் கேட்கவும், திருப்பிக் கூறவும் வேண்டும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare