அத்தியாயம் – 12
விருத்தாசுரனின் புகழ்மிக்க மரணம்
பதம் 6.12.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தன்னுடைய உடலை விட்டுவிட விரும்பிய விருத்ராசுரன், வெற்றியைக் காட்டிலும் யுத்தத்தில் மரணமடைவதே மேல் என்று கருதினான். பரீட்சித்து மகாராஜனே, பிரபஞ்சம் வெள்ளத்தில் மூழ்கியபொழுது, கைடபன் பரமபுருஷரை மிகுந்த பலத்துடன் தாக்கியது போலவே, விருத்ராசுரனும் தேவராஜனான இந்திரனைத் தனது சூலத்தால் பெரும் வலிமையுடன் தாக்கினான்.

பதம் 6.12.2 : பிறகு அசுரர்களில் சிறந்த வீரனான விருத்ராசுரன், யுகமுடிவில் கொழுந்து விட்டெரியும் தீச்சுடர்களைப் போன்ற முனைகளையுடைய தனது சூலத்தை வேகமாகச் சுழற்றி, “பாவியே இதோ உன்னைக் கொன்று விடுகிறேன் பார்” என்று உரக்கக் கூவி கர்ஜித்தபடி, பெரும் வலிமையுடனும், கோபத்துடனும் அதை இந்திரன் மீது வீசினான்.

பதம் 6.12.3 : ஆகாயத்தில் பறந்து சென்ற விருத்ராசுரனின் சூலம், ஒரு எரி நட்சத்திரம் போல் பிரகாசித்தது. அவ்வாறு பிரகாசித்த அந்த ஆயுதம் கண்ணால் பார்ப்பதற்குக் கடினமாக இருந்தது. இருப்பினும் அதற்கு அஞ்சாத தேவேந்திரன் தன் வஜ்ராயுதத்தினால் அதைக் கண்ட துண்டமாக வெட்டித் தள்ளினார். அதே சமயத்தில் நாகராஜனான வாசுகியின் உடலைப் போல் பருத்திருந்த விருத்ராசுரனின் ஒரு கையையும் அவர் வெட்டித் தள்ளினார்.

பதம் 6.12.4 : விருத்ராசுரனின் உடலிலிருந்து ஒரு கை துண்டிக்கப்பட்ட போதிலும், அவன் கோபத்துடன் இந்திரனை நெருங்கித் தன்னுடைய இரும்பு கதையினால் அவருடைய தாடையில் அடித்ததுடன், அவருடைய வாகனமான யானையையும் அடித்தான். இதனால் இந்திரனுடைய கையிலிருந்த அவரது வஜ்ராயுதம் நழுவி கீழே விழுந்தது.

பதம் 6.12.5 : தேவர்கள், அசுரர்கள், சாரணர்கள், சித்தர்கள் போன்ற வெவ்வேறு கிரகங்களின் வாசிகள் விருத்ராசுரனின் செயலைப் போற்றினர். இருப்பினும் இந்திரன் பேராபத்தில் இருப்பதைக் கண்டதும், “ஐயோ! ஐயோ!” என்று அவர்கள் புலம்பினர்.

பதம் 6.12.6 : தன் எதிரியின் முன்னிலையில் வஜ்ராயுதத்தைத் தன் கையிலிருந்து நழுவவிட்ட இந்திரன் தோல்வியடைந்தவர் போலானதால், அதனால் மிகவும் வெட்கமடைந்தார். அவர் அந்த ஆயுதத்தை மீண்டும் கையிலெடுக்கத் துணியவில்லை. ஆனால் விருத்ராசுரனோ, “உன்னுடைய வஜ்ராயுதத்தைக் கையிலெடுத்து உன் எதிரியைக் கொன்று விடு, விதியை எண்ணிப் புலம்புவதற்கு இது நேரமல்ல” என்று கூறி அவரை உற்சாகப்படுத்தினான்.

பதம் 6.12.7 : விருத்ராசுரன் தொடர்ந்து கூறினான்: இந்திரனே, ஆதி அனுபவிப்பாளரும் பகவானுமாகிய பரமபுருஷரைத் தவிர வேறு எவரும், எப்போதும் வெற்றி பெறுவது நிச்சயமில்லை. அவரே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றிற்குக் காரணமும், அனைத்தும் அறிந்தவருமாவார். பிறர் உதவியை நம்பி இருப்பவர்களும், ஜட உடல்களை ஏற்கக் கட்டுப்பட்டவர்களும், கலகப் பிரியர்களுமான கீழ்நிலையோர் சில சமயங்களில் வெற்றியையும், சில சமயங்களில் தோல்வியையும் தழுவுகின்றனர்.

பதம் 6.12.8 : அனைத்து லோகாதிபதிகளும் உட்பட, இப்பிரபஞ்சத்தின் அனைத்து கிரகங்களிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளும், பகவானின் முழு கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள் வலையில் அகப்பட்டு சுதந்திரமாக சுற்றித் திரிய முடியாத பறவைகளைப் போல் செயற்படுகின்றனர்.

பதம் 6.12.9 : நம்முடைய புலன் சக்தி, மனோபலம், தேகபலம், பிராணன், நித்திய வாழ்வு, மரணம் ஆகிய அனைத்துமே பரமபுருஷரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையாகும். இதையறியாத மூடர்கள், ஜடமான இந்த பெளதிக உடலே தங்களுடைய செயல்களுக்குக் காரணம் என்று நினைக்கின்றனர்.

பதம் 6.12.10 : தேவேந்திரா, எப்படி ஒரு பெண்ணைப் போல் காணப்படும் மரப்பொம்மையும் அல்லது புல்லாலும், இலைகளாலும் செய்யப்பட்ட ஒரு மிருகமும் சுதந்திரமாக அசையவோ, ஆடவோ முடியாமல், அவற்றை ஆட்டுவிப்பவனையே முற்றிலும் சார்ந்துள்ளனவோ, அப்படியே பரம ஆளுனராகிய பரமபுருஷரின் விருப்பத்திற்கேற்பவே நாம் அனைவரும் ஆடுகிறோம். எவருமே சுதந்திரமானவரல்ல.

பதம் 6.12.11 : காரணோதகசாயி விஷ்ணு, கர்போதகசாயி விஷ்ணு, க்ஷீரோதகசாயி விஷ்ணு ஆகிய மூன்று புருஷர்களாலும், ஜட இயற்கை, மொத்த பெளதிக சக்தி, பொய் அகங்காரம், பஞ்ச பூதங்கள், பெளதிக புலன்கள், மனம், புத்தி, உணர்வு ஆகியவற்றினாலும், பரமபுருஷரின் உத்தரவின்றி பெளதிகத் தோற்றத்தைப் படைக்க முடியாது.

பதம் 6.12.12 : ஓர் அறிவற்ற மூடனால் பரமபுருஷரைப் புரிந்துகொள்ள முடியாது. எப்பொழுதும் ஆதரிக்கப்படும் நிலையில் இருப்பினும், தன்னையே பரமன் என்று ஒருவன் தவறாக எண்ணுகிறான். “ஒருவனது முந்திய கருமங்களுக்கேற்ப, அவனுடைய பௌதிக உடல் தாய் தந்தையரால் உண்டாக்கப்படுகிறது. அதே உடல், வேறொரு மிருகம் ஒரு புலியால் கொன்று தின்னப்படுவது போல், வேறொருவனால் அழிக்கப்படுகிறது” என்று ஒருவன் நினைப்பானாயின், அது சரியான புரிந்துணர்வல்ல. பரம்புருஷரே ஜீவராசிகளைப் படைக்கிறார். அவரே அவற்றைப் பிற ஜீவராசிகளின் மூலம் அழிக்கவும் செய்கிறார்.

பதம் 6.12.13 : ஒருவன் மரணமடைய விரும்பாவிட்டாலும், அவன் மரணத்தின் போது, ஆயுள், செல்வம், புகழ் ஆகியவற்றை இழந்தே தீருவான். அதுபோலவே ஒருவன் வெற்றியடையும் நேரம் வரும்போது, இவற்றையெல்லாம் அவன் பரமபுருஷரின் அருளால் பெறுகிறான்.

பதம் 6.12.14 : அனைத்தும் பரமபுருஷரின் மேலான விருப்பத்தையே சார்ந்திருப்பதால், ஒருவன் புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும், வெற்றியிலும், தோல்வியிலும், வாழ்விலும், சாவிலும் சமநிலை உடையவனாக இருக்கவேண்டும். இவற்றின் விளைவினால் வரும் இன்பத்தையும், துன்பத்தையும் ஒருவன் எவ்வித உணர்ச்சிக்கும் இடந்தராமல் சரிசமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பதம் 6.12.15 : சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் ஆத்மாவின் குணங்களல்ல. மாறாக, ஜட இயற்கையின் குணங்கள் என்பதையும், துய ஆத்மாவானவன் இக்குணங்களின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் சாட்சியாக மட்டுமே இருக்கிறான் என்பதையும் அறிந்தவன், முக்தி பெற்றவன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவன் இக்குணங்களுக்குக் கட்டுப்பட்டவனல்ல.

பதம் 6.12.16 : சத்துருவே, என்னைப் பார். நான் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டேன். ஏனெனில் எனது ஆயுதமும், கையும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு விட்டன. இருப்பினும் உன்னைக் கொல்லும் விருப்பத்துடன் என்னால் இயன்றவரை போரிட நான் முயற்சி செய்கிறேன். இத்தகைய மோசமான நிலையிலும் நான் சிறிதும் வருத்தப்படவில்லை. ஆகவே நீ உன் வருத்தத்தை விட்டுவிட்டு தொடர்ந்து யுத்தம் செய்.

பதம் 6.12.17 : என் சத்துருவே, இந்த யுத்தத்தை ஒரு சூதாட்டமாகவும், நம் உயிர்களைப் பந்தயப் பொருள்களாகவும், அம்புகளை தாயக் கட்டைகளாகவும், வாகனங்களாக செயற்படும் மிருகங்களை ஆட்டப் பலகையாகவும் எண்ணிக் கொள். வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியாது. அனைத்தும் விதியையே சார்ந்துள்ளன.

பதம் 6.12.18 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: விருத்ராசுரனின் ஒளிவுமறைவற்ற உபதேச மொழிகளைக் கேட்ட தேவேந்திரன், அவனைப் புகழ்ந்து விட்டு மீண்டும் தன் வஜ்ராயுதத்தைக் கையிலெடுத்தார். பிறகு அவர் கலக்கமோ, கபடமோ இன்றி புன்னகை செய்து, விருத்ராசுரனிடம் பின்வருமாறு கூறலானார்.

பதம் 6.12.19 : இந்திரன் கூறினார் சிறந்த அசுரனே, நீ ஆபத்தான நிலையில் இருந்த போதிலும் பக்தித் தொண்டில் உனக்கு பகுத்தறிவும், சகிப்புத் தன்மையில் இருப்பதையும், நீ பரமாத்மாவும், எல்லோருக்கும் நண்பருமான பரம புருஷரின் சிறந்த பக்தன் என்பதையும் என்னால் காண முடிகிறது.

பதம் 6.12.20 : பகவான் விஷ்ணுவின் மாயாசக்தியை நீ தாண்டிவிட்டாய். இந்த விடுதலையின் காரணத்தினால் நீ அசுர மனோபாவத்தை விட்டுவிட்டு ஒரு சிறந்த பக்தனின் நிலையை அடைந்துவிட்டாய்.

பதம் 6.12.21 : விருத்ராசுரனே, அசுரர்கள் பொதுவாக ரஜோ குணத்தினால் நடத்தப்படுகின்றனர். ஆகவே, என்ன ஆச்சரியம், நீ ஓர் அசுரனாக இருந்தும், ஒரு பக்தனின் மனோபாவத்தை ஏற்று, எப்பொழுதும் சுத்தசத்வ நிலையில் இருப்பவரும், பரமபுருஷருமாகிய வாசுதேவரிடம் உன் மனதைப் பதித்திருக்கிறாய்.

பதம் 6.12.22 : பரமபுருஷரும், மிக உயர்ந்த மங்களத்திற்கு இறைவனுமாகிய ஸ்ரீ ஹரியின் பக்தித் தொண்டில் நிலைபெற்ற ஒருவன், அமுதக் கடலில் நீத்துபவனாகிறான். அவனுக்கு சாக்கடை நீரால் என்ன பயன்?

பதம் 6.12.23 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: விருத்ராசுரனும், தேவேந்திரனும் யுத்தகளத்தில் கூட பக்தித்தொண்டைப் பற்றி உரையாடினர். பிறகு கடமை உணர்ச்சியால் உந்தப்பட்டு மீண்டும் போரைத் துவங்கினார். அரசே, அவ்விருவருமே சம சக்தி படைத்த மிகச் சிறந்த வீரர்களாவர்.

பதம் 6.12.24 : பரீட்சித்து மகாராஜனே, தன் எதிரியை முற்றிலும் அடக்க வல்லவனான விருத்ராசுரன், தனது இரும்பு கதையை எடுத்து, இடது கையால் அதைச் சுழற்றி, இந்திரனைக் குறி பார்த்து அதை வீசி எறிந்தான்.

பதம் 6.12.25 : இந்திரனும் சதபர்வன் என்ற தனது வஜ்ராயுதத்தினால் விருத்ராசுரனின் கதையையும், எஞ்சியிருந்த அவனது கையையும் கண்ட துண்டமாக வெட்டித் தள்ளினார்.

பதம் 6.12.26 : இரு கைகளும் அடிமட்டத்திலேயே வெட்டப்பட்டு இரத்தம் பெருக்கெடுத்தோடியதால், விருத்ராசுரன் இந்திரனால் இறக்கைகள் வெட்டப்பட்ட ஒரு பறக்கும் மலைபோல் மிகவும் அழகாக காணப்பட்டான்.

பதங்கள் 6.12.27 – 6.12.29 : விருத்ராசுரன் தேக பலமும், வசீகர சக்தியும் மிக்கவன், அவன் தன் கீழ்த் தாடையைத் தரையிலும், மேல் தாடையை ஆகாயத்திலும் வைத்தான். அவனது வாய் ஆகாயத்தைப் போலவே மிகவும் ஆழமானதாய் இருந்தது. அவனுடைய நாக்கு ஒரு பெரிய பாம்பை ஒத்திருந்தது. அவன் தன் மரணம் போன்ற கோரப் பற்களினால் முழு பிரபஞ்சத்தையும் விழுங்கிவிட முயல்வதுபோல் காணப்பட்டான். இவ்வாறு பெரும் அசுரனான விருத்ராசுரன் பிரம்மாண்டமான ஒரு உடலை ஏற்று, மலைகளையும் அதிரச் செய்தபடி, இமயமலையே நடந்து வருவது போல் நடந்து வந்து, பூமியின் மேற்பரப்பைத் தன் கால்களால் நசுக்கத் துவங்கினான். அவன் இந்திரன் முன் வந்து, ஒரு பெரிய மலைப்பாம்பு ஒரு யானையை விழுங்குவதுபோல், அவரையும் அவரது வாகனமான ஐராவதத்தையும் விழுங்கினான்.

பதம் 6.12.30 : இந்திரன் அந்த அசுரனால் விழுங்கப்பட்டதைக் கண்ட தேவர்களும், பிரம்மாவும், மற்ற பிரஜாபதிகளும், சிறந்த முனிவர்களும் மிகவும் வருத்தமடைந்து, “ஐயோ! என்ன பேரிடர்! என்ன பேரிடர்| என்று புலம்பினர்.

பதம் 6.12.31 : இந்திரன் பெற்றிருந்த பாதுகாப்பளிக்கும் நாராயண கவசமானது, பரமபுருஷராகிய நாராயணருடன் எல்லா வகையிலும் ஒத்தாகும். அந்த கவசத்தினாலும், தன் சொந்த யோக சக்தியினாலும் காக்கப்பட்டிருந்த இந்திரன், விருத்ராசுரனால் விழுங்கப்பட்ட போதிலும், அவனுடைய வயிற்றுக்குள் அவர் மரணம் அடையவில்லை.

பதம் 6.12.32 : சக்தி மிக்கவரும், பலன் என்ற அசுரனைக் கொன்றவருமான இந்திரன், வஜ்ராயுதத்தால் விருத்ராசுரனின் வயிற்றைப் பிளந்து கொண்டு வேகமாக வெளியே வந்து, மலைச்சிகரம் போல் உயர்ந்திருந்த அவனுடைய தலையை உடனே வெட்டித் தள்ளினார்.

பதம் 6.12.33 : வஜ்ராயுதமானது விருத்ராசுரனின் கழுத்தைச் சுற்றிச்சுற்றி வேகமாகச் சுழன்ற போதிலும், அவனுடைய உடலிலிருந்து அவனது தலையை அறுத்தெடுப்பதற்கு ஓராண்டுகாலம், அதாவது 360 நாட்கள் பிடித்தது. அது சூரியனும், சந்திரனும், மற்ற கிரகங்களும் வட திசை மற்றும் தென் திசைப் பயணங்களை முடிக்கும் காலமாகும். பிறகு, விருத்ராசுரன் கொல்லப்பட வேண்டிய நேரம் வந்ததும், அவனது தலை தரையில் வீழ்ந்தது.

பதம் 6.12.34 : விருத்ராசுரன் கொல்லப்பட்ட பொழுது, சுவர்க்க லோகங்களிலுள்ள கந்தர்வர்களும், சித்தர்களும் மகிழ்ச்சியுடன் துந்துபிகளை முழங்கினர். அவர்கள் விருத்ராசுரனைக் கொன்ற இந்திரனின் வீரத்தை வேத மந்திரங்களால் புகழ்ந்து கொண்டாடி, பேரானந்தத்துடன் அவர் மீது மலர்களைப் பொழிந்தனர்.

பதம் 6.12.35 : எதிரிகளை அடக்குபவரான பரீட்சித்து மகாராஜனே, பிறகு விருத்ராசுரனின் உடலிலிருந்து வெளிப்பட்ட உயிர்ப்பொறியானது, பரமபுருஷரின் உலகிற்கு திரும்பிச் சென்றது. இவ்வாறாக அனைத்து தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் பரலோகத்தில் பிரவேசித்து பகவான் சங்கர்ஷணரின் ஒரு சகாவாக மாறினான்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare