அத்தியாயம் – 10
தேவர்களுக்கும் விருத்தாசுரனுக்கும்
இடையிலான யுத்தம்
பதம் 6.10.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரமபுருஷரும், பிரபஞ்ச தோற்றத்திற்குக் காரணமுமான பகவான் ஸ்ரீ ஹரி, இந்திரனுக்கு இவ்வாறு உபதேசித்த பிறகு, தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உடனே அங்கிருந்து மறைந்து போனார்.

பதம் 6.10.2 : பரீட்சித்து மகாராஜனே, தேவர்கள் பகவானின் உபதேசங்களைப் பின்பற்றி, அதர்வாவின் மகனான ததீசியை அனுகினர். அவர் மிகவும் தயாள குணமுள்ளவர். அவர்கள் அவரிடம் அவரது உடலை யாசித்ததும், அவர் உடனே அதற்குச் சம்மதித்தார். ஆனால் தேவர்களிடமிருந்து சமயக் கோட்பாடுகளைப் பற்றி கேட்பதற்காகவே அவர் சிரித்து பின்வருமாறு விளையாட்டாகப் பேசலானார்.

பதம் 6.10.3 : முன்னேற்றமடைந்த தேவர்களே, மரணத்தின் போது ஏற்படும் தாங்க முடியாத கடும் வேதனையானது ஜட உடல்களை ஏற்றுள்ள அனைத்து ஜீவராசிகளின் உணர்வையும் பறித்துவிடுகிறது. இந்த வேதனையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா?

பதம் 6.10.4 : இந்த ஜட உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசியும் தனது ஜட உடலில் மிகவும் பற்றுக் கொண்டுள்ளான். என்றென்றும் தன் உடலை காப்பாற்றப் போராடும் அவன், உடைமைகளையெல்லாம் துறந்தாவது, எல்லா வழியிலும் அதைப் பாதுகாக்க முயல்கிறான். எனவே பகவான் விஷ்ணுவே வந்து ஒருவனது உடலைக் கேட்டாலும், யார்தான் தன் உடலைக் கொடுக்க முன்வருவான்?

பதம் 6.10.5 : தேவர்கள் பதிலளித்தனர்: சிறந்த பிராமணரே, புகழத்தக்க செயல்களைச் செய்பவரான உங்களைப் போன்ற புண்ணிய புருஷர்கள் பொது மக்களிடம் மிகுந்த அன்பும், பாசமும் வைத்திருக்கிறீர்கள். இத்தகைய புண்ணிய ஆத்மாக்களால் மற்றவர்களின் நன்மைக்காக எதைத்தான் கொடுக்க முடியாது? அவர்களால் தங்கள் உடல்கள் உட்பட அனைத்தையும் கொடுக்க முடியும்.

பதம் 6.10.6 : அதிக சுயநலவாதிகளாக இருப்பவர்கள் மற்றவர்களிடமிருந்து எதையேனும் யாசிக்கின்றனர். பிறருடைய வேதனை அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் கொடுப்பவனின் சிரமத்தை யாசகன் அறிவானாயின், அவன் எதையுமே கேட்கமாட்டான். அதுபோலவே, தானம் கொடுக்க முடிந்தவனும் யாசகனின் சிரமத்தை அறிவதில்லை. அப்படி அறிந்ததிருந்தால் அவன் யாசகனால் வேண்டப்படும் எதையுமே கொடுக்கத் தயங்கமாட்டான்.

பதம் 6.10.7 : மாமுனிவரான ததீசி கூறினார்: உங்களிடமிருந்து சமயக் கோட்பாடுகளைப் பற்றி கேட்பதற்காகவே உங்களுடைய வேண்டுகோளை நான் நிராகரித்தேன். இப்பொழுது என்னுடைய உடல் எனக்கு மிகவும் பிரியமானது என்ற போதிலும், இன்றோ அல்லது நாளையோ இது என்னை விட்டுச் செல்லத்தான் போகிறது. எனவே உங்களுடைய உயர்ந்த நோக்கங்களுக்காக இதை நான் விடத்தான் வேண்டும்.

பதம் 6.10.8 : தேவர்களே, துன்பப்படும் மனித குலத்திடம் இரக்கமற்றவனும், சமயக்கோட்பாடுகளின் அல்லது நிரந்தர கீர்த்தியின் உயர்ந்த காரணங்களுக்காக நிலையற்ற தன் உடலைத் தியாகம் செய்யாதவனும், நிச்சயமாக அசைவற்ற ஜீவன்களால்கூட பரிதாபப்படத்தக்கவனாவான்.

பதம் 6.10.9 : ஒருவன் பிற ஜீவராசிகளின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியின்மையும், அவர்களது இன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியும் அடைவானாயின், புண்ணியவான்கள் என்றும் உதார குணமுள்ளவர்கள் என்றும் கருதப்படும் மேன் மக்களால் அவனது சமயக் கோட்பாடுகள் அழிவற்றவை என்று போற்றப்படுகின்றன.

பதம் 6.10.10 : மரணத்துக்குப் பிறகு நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகப் போகும் இவ்வுடல் உண்மையில் ஆன்மீக ஆத்மாவாகிய எனக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை. குறுகிய காலத்துக்கு மட்டுமே உபயோகப்படக் கூடிய உடல் எந்த நொடியிலும் அழிந்துவிடக் கூடும். உடலுடன் அதன் உடைமைகள், உறவினர்கள், செல்வங்கள் ஆகிய அனைத்தும் பிறருடைய நன்மைக்காகவே ஈடுபடுத்தப்பட வேண்டும். இல்லையெனில் அவையே பெருந்துன்பத்துக்கும், விசனத்திற்கும் காரணங்களாகிவிடும்.

பதம் 6.10.11 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக அதர்வாவின் மகனான ததீசி முனிவர் தேவர்களின் சேவைக்காக தன் உடலைக் கொடுக்கத் தீர்மானித்தார். அவர் ஆன்மீக ஆத்மாவாகிய தன்னைப் பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் வைத்து, பஞ்சபூதங்களாலான ஸ்தூல உடலை விட்டார்.

பதம் 6.10.12 : ததீசி முன் தன் புலன்களையும், உயிர்ச்சக்தியையும், மனதையும், புத்தியையும், கட்டுப்படுத்தி சமாதியில் ஆழ்ந்தார். இவ்விதமாக அவருடைய எல்லா பெளதிக பந்தங்களையும் அவர் துண்டித்துக் கொண்டார். அவருடைய பெளதிக உடல் எப்படி அவருடைய ஆத்மாவிலிருந்து பிரிந்தது என்பதை அவரால் அறிய முடியவில்லை.

பதங்கள் 6.10.13 – 6.10.14 : அதன்பிறகு, விஸ்வகர்மாவால் ததீசியின் எலும்புகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட வஜ்ராயுதத்தை இந்திரன் மிகவும் உறுதியுடன் கையிலெடுத்தார். ததீசி முனியின் சிறந்த சக்தியால் ஊக்கமளிக்கப்பட்டு, பரமபுருஷரின் சக்தியால் ஞானம் பெற்ற இந்திரன் அனைத்து தேவர்களாலும் சூழப்பட்டபடி, தனது ஐராவத வாகனத்தின் மேல் சவாரி செய்தார். அப்பொழுது எல்லா சிறந்த முனிவர்களும் அவரை துதித்துப் போற்றினர். இவ்வாறாக விருத்ராசுரனைக் கொல்வதற்காக அவனை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவர், மூவுலகங்களையும் மகிழ்வித்தபடி மிகவும் அழகாக ஜொலித்தார்.

பதம் 6.10.15 : பரீட்சித்து மகாராஜனே, எப்படி அந்தகனிடம் (யமராஜனிடம்) கடுங்கோபங்கொண்டு ருத்திரன் முன்பு அந்தகனைக் கொல்ல அவரை நோக்கி ஓடினாரோ, அப்படியே அசுர சேனைகளால் சூழப்பட்டிருந்த விருத்ராசுரனை, இந்திரன் கோபத்துடனும், பெரும் பலத்துடனும் தாக்கினார்.

பதம் 6.10.16 : அதன்பிறகு, சத்திய யுகத்தின் முடிவில், திரேதாயுகத்தின் ஆரம்பத்தில், நர்மதா நதிக்கரையில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் பயங்கரமான ஒரு யுத்தம் நிகழ்ந்தது.

பதங்கள் 6.10.17 – 6.10.18 : அரசே, எல்லா அசுரர்களும், விருத்ராசுரன் தலைமையில் போர்க்களத்தினுள் வந்தபொழுது, இந்திரன் கையில் வஜ்ராயுதத்துடன், ருத்திரர்கள், வஸுக்கள், ஆதித்தியர்கள், அஸ்வினி-குமாரர்கள், பிதாக்கள், வஹ்ணிகள், மருத்துக்கள், ரிபுகள், சாத்யர்கள், விஸ்வதேவர்கள் ஆகியோரால் சூழப்பட்டிருப்பதைக் கண்டனர். தன் சகாக்களால் சூழப்பட்டிருந்த இந்திரன் மிகவும் பிரகாசமாக ஜொலித்ததால், அவருடைய பிரகாசம் அசுரர்களுக்குப் பொறுக்க முடியாததாக இருந்தது.

பதங்கள் 6.10.19 – 6.10.22 : சுமாலியையும், மாலியையும் தலைமையாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான அசுரர்கள், சிற்றசுரர்கள், யக்ஷர்கள், இராட்சஸர்கள் ஆகியோரும், மற்றவர்களும் மரணதேவனால் கூட சுலபமாக வெற்றி கொள்ள முடியாத தேவேந்திரன் சேனைகளை எதிர்த்தனர். அவர்களுக்கிடையில் நமுசி, சம்பரன், அனர்வா, துவிமூர்தன், ரிஷபன், அசுரன், ஹயகிரீவன் சங்குசிரா, விப்ரசித்தி, அயோமுகன், புலோமா, விருஷபர்வா, பிரஹேதி, ஹேதி மற்றும் உட்கலன் ஆகியோர் இருந்தனர். சிங்கங்களைப் போல் பயமில்லாதவர்களும், உரக்க கர்ஜித்துக் கொண்டிருந்தவர்களும், வெல்ல முடியாதவர்களும், தங்க ஆபரணங்களை அணிந்தவர்களுமான இந்த அசுரர்கள், கதைகள், குண்டாந்தடிகள், அம்புகள், முள் ஆயுதங்கள், மரச் சம்மட்டிகள், நீண்ட ஈட்டிகள் போன்ற ஆயுதங்களால் தேவர்களுக்குத் துன்பம் விளைவித்தனர்.

பதம் 6.10.23 : ஈட்டிகள், திரிசூலங்கள், கோடரிகள், கத்திகள் மற்றும் சதக்னி, புகண்டி போன்ற ஆயுதங்களை வைத்திருந்த அசுரர்கள் வெவ்வேறு திசைகளிலிருந்து தாக்கி தேவர்களுடைய சேனைகளின் தலைவர்களையெல்லாம் சிதறி ஓடச் செய்தனர்.

பதம் 6.10.24 : எப்படி அடர்ந்த மேகங்களினால் மறைக்கப்படும் பொழுது ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களைப் பார்க்க முடியாதோ, அப்படியே தேவர்களின் மீது பொழியப்பட்ட அம்பு மழையினால் முழுமையாக மறைக்கப்பட்ட தேவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

பதம் 6.10.25 : தேவர்களின் சேனையைக் கொல்வதற்காக விடப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் அம்புகளின் மழைகள் தேவர்களை வந்தடையவில்லை. ஏனெனில் விரைவாக செயற்பட்ட தேவர்கள் ஆகாயத்திலேயே அந்த ஆயுதங்களை ஆயிரக்கணக்கான துண்டுகளாக வெட்டி வீழ்த்தி விட்டனர்.

பதம் 6.10.26 : அசுரர்களுடைய ஆயுதங்களும், மந்திரங்களும் குறைந்து கொண்டே வந்ததால் அவர்கள் மலைச் சிகரங்களையும், மரங்களையும், பாறைகளையும் தேவ சேனைகளின் மீது பொழியத் துவங்கினார். ஆனால் தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருந்ததால், முன்போலவே அந்த ஆயுதங்களையெல்லாம் ஆகாயத்திலேயே கண்டதுண்டமாக உடைத்தெறிந்தனர்.

பதம் 6.10.27 : இந்திரனின் சேனைகள் சரமாரியான ஆயுதங்களாலும், மரங்களாலும், பாறைகளாலும், மலைச்சிகரங்களாலும் சிறிதும் காயமடையாமல் நன்றாக இருப்பதைக் கண்ட விருத்ராசுரனின் தலைமையிலான அசுர சேனைகள் மிகவும் அச்சமடைந்தனர்.

பதம் 6.10.28 : அற்ப மனிதர்கள் சாதுக்களுக்கு எதிராகப் பொய்யான கோபம் நிறைந்த குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கடும் வார்த்தைகளை உபயோகிக்கும் பொழுது, பலனற்ற அவர்களுடைய வார்த்தைகள் மேன்மக்களை பாதிப்பதில்லை. அதுபோலவே, எப்பொழுதும் கிருஷ்ணரால் பாதுகாக்கப்பட்டிருந்த தேவர்களுக்கெதிரான அசுரர்களின் எல்லா முயற்சிகளும் பயனற்றுப்போயின.

பதம் 6.10.29 : பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்கள் அல்லாத அசுரர்கள், தங்களுடைய முயற்சிகளெல்லாம் பலிக்காததைக் கண்டு, யுத்தத்தில் தங்களுடைய தற்பெருமையை இழந்தனர். அவர்களுடைய வீரம் முழுவதும் எதிரிகளால் பறிக்கப்பட்டுவிட்டதால், போரின் துவக்கத்திலேயே தங்கள் தலைவனை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடிக்க முடிவு செய்தனர்.

பதம் 6.10.30 : தனது அசுரசேனை தகர்ந்து, சிறந்த வீரர்கள் எனப்படும் அசுரர்கள் கூட பெரும் பயத்தினால் யுத்தகளத்தை விட்டு ஓடியதைக் கண்ட விருத்ராசுரன், உண்மையிலேயே மகாமனம் படைத்த வீரன் என்பதால், அவன் புன்னகை செய்து பின்வரும் வார்த்தைகளைப் பேசினான்.

பதம் 6.10.31 : வீரர்களுள் வீரனான விருத்ராசுரன் தனது நிலைக்கும், காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப, அறிஞர்களால் மிகவும் போற்றத்தக்க வார்த்தைகளைப் பேசினான். அவன் அசுர வீரர்களைப் பார்த்து, “அடே விப்ரசித்தி! நமுசி! புலோமா! மயா! அனர்வா! சம்பரா! ஓடாதீர்கள், நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று அழைத்தான்.

பதம் 6.10.32 : விருத்ராசுரன் கூறினான்: இந்த ஜட உலகில் பிறவி எடுத்துள்ள எல்லா ஜீவராசிகளும் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும். நிச்சயமாக, மரணத்திலிருந்து காக்கக்கூடிய எந்த வழியையும் இவ்வுலகில் எவரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. விதிகூட மரணத்திலிருந்து தப்புவதற்கு எந்த வழியையும் அளிக்கவில்லை. இந்நிலையில் மரணத்தைத் தவிர்க்க முடியாது என்பதால், ஒருவன் வீர மரணமடைவதால் எப்பொழுதும் இங்கு புகழப்படுவதுடன், உயர்கிரகங்களுக்கும் ஏற்றம் பெறுவானாயின், யார் தான் இத்தகைய ஒரு பெருமைமிக்க மரணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான்?

பதம் 6.10.33 : பெருமைமிக்க மரணத்தை சந்திப்பதற்கு இரு வழிகள் உள்ளன. அவ்விரண்டுமே மிகவும் அரிதானவை. எதனால் மனதையும் உயர் சக்தியையும் அடக்கி பரமபுருஷரின் எண்ணத்தில் ஆழ்ந்து மடிய முடியுமோ, அந்த பக்தி யோகத்தைச் செய்தபிறகு, அல்லது அஷ்டாங்க யோகத்தைச் செய்தபிறகு மரணமடைவது ஒரு வழியாகும். புறமுதுகு காட்டி ஓடாமல் சேனையை வழிநடத்திச் சென்று யுத்தகளத்தில் மரணமடைவது இரண்டாவது வழியாகும். இந்த இரண்டு வகையான மரணங்களும் சாஸ்திரங்களில் பெருமைமிக்கவை என்று போற்றப்படுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare