அத்தியாயம் – 9
விருத்தாசுரனின் தோற்றம்
பதம் 6.9.1
ஸ்ரீ-சுக உவச
தஸ்யாஸ்ன் விஸ்வரூபஸ்ய சிராம்ஸி த்ரீணி பாரத
ஸோம்-பீதம் ஸுரா-பீதம் அன்னாதம் இதி சுஸ்ரும

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தஸ்ய—அவருக்கு; ஆஸன்—இருந்தன; விஸ்வரூபஸ்ய—தேவ புரோகிதரான விஸ்வரூபரின்; சிராம்ஸி—தலைகள்; த்ரீணி—மூன்று; பாரத—பரீட்சித்து மகாராஜனே; ஸோம-பீதம்—ஸோம பானம் பருக உபயோகித்த; ஸுரா-பீதம்—மதுபானம் பருக உபயோகித்த; அன்ன-அதம்—சாப்பிட உபயோகித்த; இதி—இவ்வாறு; சுஸ்ரும—சீடப் பரம்பரை மூலமாக நான் கேட்டிருக்கிறேன்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, தேவர்களின் புரோகிதராக நியமிக்கப்பட்ட விஸ்வரூபருக்கு மூன்று தலைகள் இருந்தன. அதில் ஒன்றை ஸோம பானம் பருகவும், மற்றொன்றை மதுபானம் பருகவும், மூன்றாவதை உணவு உட்கொள்ளவும் அவர் உபயோகித்தார் என்று அதிகாரிகளிடமிருந்து நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

பதம் 6.9.2
ஸ வை பர்ஹிஷி தேவேப்யோ பாகம் ப்ரத்யக்ஷம் உச்சகை:
அததத் யஸ்ய பிதரோ தேவா: ஸப்ரஸ்ரயம் ந்ருப

ஸ:—அவர் (விஸ்வரூபர்); வை—உண்மையில்; பர்ஹிஷி—யாகத் தீயில்; தேவேப்ய:—குறிப்பிட்ட தேவர்களுக்கு; பாகம்—உரிய பாகத்தை; ப்ரத்யக்ஷம்—வெளிப்படையாக; உச்சகை:—மந்திரங்களை உரக்க உச்சரித்து; அததத்—அளித்தார்; யஸ்ய—எவருடைய; பிதர—தந்தைகள்; தேவா:—தேவர்கள்; ஸ-ப்ரஸ்ரயம்—மென்மையான குரலில் மிகவும் பணிவுடன்; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே.

பரீட்சித்து மகாராஜனே, தேவர்கள், விஸ்வரூபருடைய தந்தைக்கு உறவினர்கள் என்பதால், விஸ்வரூபர் இந்திராய இதம் ஸ்வாஹா “இது இந்திரனுக்குரியது”) மற்றும் இதம் அக்னயே (“இது அக்னி தேவனுக்குரியது”) போன்ற மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே யாகத் தீயில் வெளிப்படையாக நெய்யை ஊற்றினார். அவர் இம்மந்திரங்களை உரக்க உச்சரித்தபடி, ஒவ்வொரு தேவருக்கும் சேர வேண்டிய அவரவர் பாகத்தை அளித்தார்.

பதம் 6.9.3
ஸ ஏவ ஹி ததௌ பாகம் பரோக்ஷம் அஸுரான் ப்ரதி
யாஜமானோ ‘வஹத் பாகம் மாத்ரு-ஸ்நேஹ-வசானுக:

ஸ:—அவர்; ஏவ—உண்மையில்; ஹி—நிச்சயமாக; ததௌ—அளித்தார்; பாகம்—பாகத்தை; பரோக்ஷம்—தேவர்களுக்குத் தெரியாமல்; அஸுரான் ப்ரதி—அசுரர்களுக்கு; யஜமான:—யாகம் செய்து; அவஹத்—அளித்தார்; பாகம்—பாகம்; மாத்ரு-ஸ்னேஹ—தாயிடம் உள்ள அன்பினால்; வச-அனுக:—கட்டாயப்படுத்தப்பட்டு.

அவர் தேவர்களின் பெயரால் வேள்வித் தீயில் நெய்யை வார்த்த போதிலும், அசுரர்கள் அவரது தாய்வழி உறவினர்கள் என்பதால் அவர் தேவர்களுக்குத் தெரியாமல் அசுரர்களுக்கும் பாகத்தை அளித்தார்.

பதம் 6.9.4
தத் தேவ-ஹேலனம் தஸ்ய தர்மாலீகம் ஸுரேஸ்வர:
ஆலக்ஷ்ய தரஸா பீதஸ் தச்-சீர்ஷாணி அச்சினாத் ருஷா

தத்—அந்த; தேவ-ஹேலனம்—தேவர்களுக்குச் செய்த குற்றம்; தஸ்ய—அவருடைய (விஸ்வரூபரின்); தர்ம-அலீகம்—(தேவ் புரோகிதராக இருந்து கொண்டு, அசுரர்களுக்கும் இரகசிய புரோகிதராக செயற்பட்டு) சமய நெறிகளில் ஏமாற்று வேலை செய்து; ஸுர-ஈஸ்வர:—தேவராஜன்; ஆலக்ஷ்ய—கவனித்து; தரஸா—விரைவாக; பீத:—(விஸ்வரூபரின் ஆசியால் அசுரர்கள் பலம் பெற்று விடுவார்கள்) என்றஞ்சி; தத்—அவருடைய (விஸ்வரூபரின்); சீர்ஷாணி—தலைகளை; அச்சினத்—வெட்டிவிட்டார்; ருஷா—கடுங் கோபத்துடன்.

ஆனால் ஒரு சமயம், விஸ்வரூபர் தேவர்களுக்குத் தெரியாமல் அசுரர்களின் சார்பாக இரகசியமாக வேள்வித் தீயில் நிவேதனம் செய்வதை இந்திரன் புரிந்து கொண்டார். இதனால் அசுரர்களால் தோற்கடிக்கப்படுவோமோ என்று மிகவும் அச்சமடைந்த இந்திரன், விஸ்வரூபரிடம் மிகவும் கோபங் கொண்டு அவருடைய மூன்று தலைகளையும் வெட்டிவிட்டார்.

பதம் 6.9.5
ஸோம-பீதம் து யத் தஸ்ய சிர ஆஸீத் கபிஞ்ஜல:
கலவிங்க: ஸுரா-பீதம் அன்னாதம் யத் ஸ தித்திரி:

ஸோம-பீதம்—ஸோமபானம் பருக உபயோகிக்கப்பட்ட; து—ஆனால்; யத்—எது; தஸ்ய—அவருடைய (விஸ்வரூபரின்); சிர:—தலை; ஆஸீத்—ஆனது; கபிஞ்ஜல:—கௌதாரி பறவையாக; கலவிங்க:—சிட்டுக்குருவியாக; ஸுரர-பீதம்—மது அருந்துவதற்குரிய; அன்ன-அதம்—உணவு உட்கொள்ள உபயோகிக்கப்பட்டதோ; யத்—எது; ஸ:—அது; தித்திரி:—ஒரு சாதாரண பறவையாக.

அதன்பிறகு, ஸோம பானம் பருகுவதற்குரிய தலை கபிஞ்ஜலமாக (கௌதாரியாக) மாற்றப்பட்டது. அதுபோலவே மதுபானம் பருகுவதற்குரிய தலை கலவிங்கமாக (சிட்டுக்குருவியாக) மாற்றப்பட்டது. உணவு உண்பதற்குரிய தலை தித்திரிப் பறவையாக மாற்றப்பட்டது.

பதம் 6.9.6
ப்ரஹ்ம-ஹத்யாம் அஞ்ஜலினா ஜக்ராஹ யத் அபீஸ்வர
ஸம்வத்ஸராந்தே தத் அகம் பூதானாம் ஸ விசுத்தயே
பூமி-அம்பு-த்ரும-யோஷித்ப்யஸ் சதுர்தா வ்யபஜத் தரி:

ப்ரஹ்ம-ஹத்யாம்—பிராமணரைக் கொன்ற பாவ விளைவை; அஞ்ஜலினா—கூப்பிய கரங்களுடன்; ஜக்ராஹ—பொறுப்பேற்றார்; யத் அபி—என்ற போதிலும்; ஈஸ்வர:—மிகவும் சக்திவாய்ந்தவர்; ஸம்வத்ஸர-அந்தே—ஓராண்டுக்குப் பின்; தத்-அகம்—அப்பாவவிளைவை; பூதானாம்—பௌதிக மூலப் பொருட்களின்; ஸ:—அவர்; விசுத்தயே—தூய்மையடைய; பூமி—பூமிக்கு; அம்பு—நீர்; த்ரும—மரங்கள்; யோஷித்ப்ய:—மற்றும் பெண்களுக்கு; சதுர்தா—நான்கு பாகங்களாக; வ்யபஜத்—பிரித்தார்; ஹரி:—இந்திரன்.

ஒரு பிராமணரைக் கொன்றதற்கான பாவ விளைவுகளை நிஷ்பலப்படுத்தும் அளவிற்கு இந்திரன் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்த போதிலும், அவர் தன் பாவச் செயலுக்காக வருத்தப்பட்டு கூப்பிய கரங்களுடன், அப்பாவ விளைவுகளின் சுமையை ஏற்றுக் கொண்டார். இவ்வாறு ஓராண்டு காலம் துன்புற்ற அவர் தன்னை புனிதப்படுத்திக் கொள்வதற்காக அப்பாவ விளைவுகளை நிலம், நீர், மரங்கள், பெண்கள் என்ற நான்கிற்கும் பகிர்ந்தளித்தார்.

பதம் 6.9.7
பூமிஸ் துரீயம் ஜக்ராஹ காத-பூர-வரேண வை
ஈரிணம் ப்ரஹ்ம-ஹத்யாயா ரூபம் பூமௌ ப்ரத்ருஸ்யதே

பூமி:—பூமி; துரீயம்—நான்கிலொரு பகுதி; ஜக்ராஹ—ஏற்றுக் கொண்டது; காத-பூர—துவாரங்கள் நிரப்பப்படும் என்ற; வரேண—வரத்தினால்; வை—உண்மையில்; ஈரிணம்—பாலைவனங்கள்; ப்ரஹ்ம-ஹத்யாயா:—பிராமணரைக் கொன்றதற்கான விளைவின்; ரூபம்—ரூபம்; பூமௌ—பூமியில்; ப்ரத்ருஸ்யதே—காணப்படுகிறது.

அந்த பிராமணரைக் கொன்றதனால் உண்டான பாவ விளைவுகளின் நான்கில் ஒரு பகுதியை நிலம் ஏற்றுக் கொண்டதற்குக் கைமாறாக, பூமியிலுள்ள சாக்கடைகள் தானாகவே நிரப்பப்பட்டுவிடும் என்ற வரத்தை இந்திரன் நிலத்திற்கு அளித்தார்.

பதம் 6.9.8
துர்யம் சேத-விரோஹேண வரேண ஜக்ருஹுர் த்ருமா:
தேஷாம் நிர்யாஸ-ரூபேண ப்ரஹ்ம-ஹத்யா ப்ரத்ருஸ்யதே

துர்யம்—நான்கிலொரு பகுதி; சேத—வெட்டப்பட்ட போதிலும்; விரோஹேண—மீண்டும் வளரும் என்ற; வரேண—வரத்தினால்; ஜக்ருஹு:—ஏற்றுக் கொண்டன; த்ரும:—மரங்கள்; தேஷாம்—அவற்றின்; நிர்யாஸ-ரூபேண—மரங்களிலிருந்து வழியும் திரவத்தின் மூலமாக; ப்ரஹ்ம-ஹத்யா—பிராமணரைக் கொன்றதன் விளைவு; ப்ரத்ருஸ்யதே—காணப்படுகிறது.

தங்களுடைய கிளைகளும், சுள்ளிகளும் வெட்டப்பட்டால் அவை மீண்டும் வளரும் என்ற இந்திரனின் வரத்திற்குப் பதிலாக, மரங்கள், ஒரு பிராமணரைக் கொன்றதற்கான விளைவின் நான்கில் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டன. இந்த விளைவுகள் மரங்களிலிருந்து வழியும் ஒருவித திரவமாக வெளிப்படுகிறது. (ஆகவே இந்த திரவத்தைப் பருகுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.)

பதம் 6.9.9
சஸ்வத்-காம-வரேணாம்ஹஸ் துரீயம் ஜக்ருஹு: ஸ்த்ரிய:
ரஜோ-ரூபேண தாஸ்வ் அம்ஹோ மாஸி மாஸி ப்ரத்ருஸ்யதே

சஸ்வத்—இடைவிடாத; காம—காம இச்சைகளின்; வரேண—வரத்தினால்; அம்ஹ:—பிராமணரைக் கொன்ற பாவ விளைவில்; துரீயம்—நான்கிலொரு பகுதியை; ஜக்ரு:—ஏற்றுக் கொண்டனர்; ஸ்த்ரிய:—பெண்கள்; ரஜ:-ரூபேண—மாதவிடாயின் ரூபத்தில்; தாஸு—அவர்களில்; அம்ஹ:—பாவ விளைவு; மாஸி மாஸி—ஒவ்வொரு மாதமும்; ப்ரத்ருஸ்யதே—காணப்படுகிறது.

பெண்கள் கருவுற்ற காலத்தில் கூட, அக்கருவிற்குத் தீங்கு ஏற்படாதவரை அவர்களால் சிற்றின்பங்களைத் தொடர்ந்து அனுபவிக்க முடியும் என்று இந்திரன் கொடுத்த வரத்திற்குப் பதிலாக, அவர்கள் பாவ விளைவுகளின் நான்கில் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டனர். இந்த விளைவுகளின் பலனாக பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.

பதம் 6.9.10
த்ரவ்ய-பூயோ-வரேணாபஸ் துரீயம் ஜக்ருர் மலம்
தாஸு புத்புத-ஃபேனாப்யாம் த்ருஷ்டம் தத் தரதி க்ஷிபன்

த்ரவ்ய—மற்ற பொருட்கள்; பூய:—அதிகரிக்கும்; வரேண—என்ற வரத்தினால்; ஆப:—நிர்; துரீயம்—நான்கிலொரு பாகத்தை; ஜக்ரு:—ஏற்றுக் கொண்டது; மலம்—பாவ விளைவின்; தாஸு—நீரில்; புத்புத-ஃபேனாப்யாம்—குமிழிகளாலும், நுரையாலும்; த்ருஷ்டம்—காணப்படுகிறது; தத்—அதை; ஹரதி—ஒருவன் சேகரிக்கிறான்; க்ஷிபன்—விலக்கிவிட்டு.

மேலும் நீரானது மற்ற பொருள்களுடன் கலக்கும் பொழுது அவற்றின் அளவு பரிமாணம் அதிகரிக்கும் என்று இந்திரன் அளித்த வரத்திற்குப் பதிலாக, பாவவிளைவுகளின் நான்கில் ஒரு பகுதியை நீர் ஏற்றுக் கொண்டது. எனவே தான் நீரில் நுரையும், குமிழிகளும் உள்ளன. நீரைச் சேகரிக்கும் பொழுது இவ்விரண்டையும் ஒருவன் விலக்கிவிட வேண்டும்.

பதம் 6.9.11
ஹத-புத்ரஸ் ததஸ் த்வஷ்டா ஜுஹாவேந்ராய சத்ரவே
இந்ரோ-சத்ரோ விவர்தஸ்வ மா சிரம் ஜஹி வித்விஷம்

ஹத-புத்ர:—தன் மகனை இழந்த; தத:—அதன்பிறகு; த்வஷ்டா—துவஷ்டா; ஜுஹாவ—ஒரு யாகம் செய்தார்; இந்திராய—இந்திரனின்; சத்ரவே—ஓர் எதிரியை உருவாக்க; இந்திரா-சத்ரோ—இந்திரனின் எதிரியே; விவர்தஸ்வ—விருத்தியடைவாய்; மா—இல்லை; சிரம்—நீண்ட காலத்திற்குப் பிறகு; ஜஹி—கொன்றுவிடு; வித்விஷம்—உன் எதிரியை.

விஸ்வரூபர் கொல்லப்பட்ட பிறகு, அவரது தந்தையான துவஷ்டா இந்திரனைக் கொல்வதற்காக ஒரு வேள்வியை இயற்றினார். “இந்திரனின் எதிரியே, தாமதமின்றி உன் எதிரியைக் கொல்ல விருத்தியடைவாய்” என்று சொல்லி அவர் ஹோமம் செய்தார்.

பதம் 6.9.12
அதான்வாஹார்ய-பசனாத் உத்திதோ கோர-தர்சன:
க்ருதாந்த இவ லோகானாம் யுகாந்த-ஸமயே யதா

அத—அதன்பிறகு; அன்வாஹார்ய-பசனாத்—அன்வாஹார்யம் என்ற தீயிலிருந்து; உத்தித:—தோன்றினான்; கோர-தர்சன:—கோரமான உருவம் தாங்கிய; க்ருதாந்த:—அழிவு சொரூபமானவன்; இவ—போல; லோகானாம்—எல்லாக் கிரகங்களுக்கும்; யுக-அந்த—யுக முடிவின்; ஸமயே—காலத்தில்; யதா—எப்படி.

அதன்பிறகு, அன்வாஹார்யம் என்ற யாகத் தீயின் தெற்குப் பகுதியிலிருந்து, யுக முடிவில் முழு சிருஷ்டியையும் அழித்துவிடுபவன்போல் காணப்பட்ட கோரமான உருவம் தாங்கிய ஒருவன் தோன்றினான்.

பதங்கள் 6.9.13 – 6.9.17
விஷ்வக் விவர்தமானம் தம் இஷு-மாத்ரம் தினே தினே
தக்த-சைல-ப்ரதீகாசம் ஸந்யாப்ரானீக-வர்சஸம்
தப்த-தாம்ர-சிகா-ஸம்ஸ்ரும் மத்யாஹ்னார்கோக்ர-லோசனம்

தேதீப்யமானே த்ரி-சிகே சூல ஆரோப்ய ரோதஸீ
ந்ருத்யந்தம் உன்னதந்தம் ச சாலயந்தம் பதா மஹீம்

தரீ-கம்பீர-வக்த்ரேண பிபதா ச நபஸ்தலம்
லிஹதா ஜிஹ்வயர்க்ஷாணி க்ரஸதா புவன-த்ரயம்

மஹதா ரௌத்ர-தம்ஷ்ட்ரேண ஜ்ரும்பமாணம் முஹுர் முஹு:
வித்ரஸ்தா துத்ருவுர் லோகா வீக்ஷ்ய ஸர்வே திசோ தச

விஷ்வக்—எல்லாப் பக்கங்களிலும்; விவர்தமானம்—வளர்ந்து; தம்—அவனை; இஷு-மாத்ரம்—அம்பின் வேகம்; தினே தினே—ஒவ்வொரு நாளும்; தக்த—எரிந்த; சைல—மலையை; ப்ரதீகாசம்—ஒத்திருந்தான்; ஸந்யா—மாலையில்; அப்ர-அனீக—மேகக் கூட்டங்கள் போல்; வர்சஸம்—பிரகாசமுடைய; தப்த—உருக்கிய; தாம்ர—தாமிரம் போல்; சிகா—மயிர்; ஸ்மஸ்ரும்—மீசையும், தாடியும், மத்யாஹ்ன—நடுப்பகல்; அர்க—சூரியன் போல்; உக்ர-லோசனம்—சக்திமிக்க கண்களுடைய; தேதீப்யமானே—கொழுந்து விட்டெரியும்; த்ரி-சிகே சூலே—திரிசூலத்தின் மேல்; ஆராப்ய—வைத்து; ரோதஸீ—சுவர்க்கத்தையும், பூமியையும்; ந்ருத்யந்தம்—ஆடியது; உன்னதந்தம்—உரக்கக் கூச்சலிட்ட படி; ச—மேலும்; சாலயந்தம்—அசைந்தது; பதா—அவனது காலடியால்; மஹீம்—பூமி; தரீ-கம்பீர—குகைபோல் ஆழமாக; வக்த்ரேண—வாயினால்; பிபதா—பருகி; ச—கூட; நபஸ்தலம்—ஆகாயத்தை; லிஹதா—உறிஞ்சி விடுவது; ஜிஹ்வயா—நாவினால்; ரிக்ஷாணி—நட்சத்திரங்களை; க்ரஸதா—விழுங்கிவிடுவது; புவன-த்ரயம்—மூவுலைகையும்; மஹதா—மிகப்பெரிய; ரௌத்ர-தம்ஸ்த்ரேண—கோரமான பற்களுடன்; ஜ்ரும்பமாணம்—கொட்டாவி விடுவது; முஹு: முஹு:—மீண்டும் மீண்டும்; வித்ரஸ்தா:—பீதியடைந்து; துத்ருவு:—ஓடினர்; லோகா:—மக்கள்; வீக்ஷ்ய—கண்டு; ஸர்வே—எல்லோரும்; திச: தச—திசைகளிலும்.

அந்த அசுரனின் உடல், நான்கு திசைகளிலும் செலுத்தப்பட்ட அம்புகள் போல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது. உயரமாகவும், கருநிறமாகவும் இருந்த அவன் எரிந்து போன ஒரு குன்றுபோலவும், மாலை நேரத்து மேகக் கூட்டங்களின் பளபளப்புடனும் காணப்பட்டான். அந்த அசுரனின் உடலிலிருந்த ரோமமும், அவனது தாடியும் மீசையும் உருக்கிய தாமிரம் போலவும், அவனது கண்கள் நடுப்பகல் சூரியனின் கதிர்களைப் போல் கூர்மையாகவும் இருந்தன. அவன் தனது கொழுந்து விட்டெரியும் திரிசூலத்தின் முனைகளில் மூவுலகங்களையும் வைத்திருப்பவன் போல் வெல்ல முடியாதவனாக காணப்பட்டான். உரத்த குரலுடன் கூச்சலிட்டபடி அவன் ஆடியதைத் தாங்க முடியாமல் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல் பூமி அதிர்ந்தது. ஆழமான குகையைப் போன்ற வாயினால் திரும்பத்திரும்ப அவன் கொட்டாவி விட்டது, ஆகாயம் முழுவதையும் அவன் விழுங்கிவிட முயற்சிப்பது போல் காணப்பட்டது. அவன் ஆகாயத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களையும் நாவினால் உறிஞ்சிவிடுபவன் போலவும், அவனது கூர்மையான நீண்ட பற்களால் முழு பிரபஞ்சத்தையும் சாப்பிட்டுவிடுவது போலவும் காணப்பட்டான். பிரம்மாண்டமான அந்த அசுரனைக் கண்ட அனைவரும் பீதியடைந்து எல்லாத் திசைகளிலும் சிதறியோடினர்.

பதம் 6.9.18
யேனாவ்ருதா இமே லோகாஸ் தபஸா த்வாஷ்ட்ர-மூர்த்தினா
ஸ வை வ்ருத்ர இதி ப்ரோக்த: பாப: பரம-தாருண:

யேன—எவனால்; ஆவ்ருதா:—மூடப்பட்டது; இமே—இவ்வெல்லா; லோகா:—கிரகங்களும்; தபஸா—தவத்தினால்; த்வாஷ்ட்ர-மூர்த்தினா—துவஷ்டாவின் புத்திர ரூபத்தில்; ஸ:—அவன்; வை—உண்மையில்; வ்ருத்ர:—விருத்திரன்; இதி—என்று; ப்ரோக்த:—அழைக்கப்படுகிறான்; பாப:—பாவ சொரூபம்; பரம-தாருண:—மிகவும் பயங்கரமான.

உண்மையில் துவஷ்டாவின் மகனான அந்த பயங்கரமான அசுரன், தன் தவ வலிமையினால் எல்லா கிரக அமைப்புக்களையும் இருளால் மூடினான். எனவே அவன் விருத்திரன், அல்லது அனைத்தையும் மூடிவிடுபவன் எனப்படுகிறான்.

பதம் 6.9.19
தம் நிஜக்னுர் அபித்ருத்ய
ஸகணா விபுதர்ஷபா:
ஸ்வை: ஸ்வைர் திவ்யாஸ்த்ர-சத்ரெளகை:
ஸோ ‘க்ரஸத் தானி க்ருத்ஸ்னச:

தம்—அவனை; நிஜக்னு:—தாக்கினர்; அபித்ருத்ய—நோக்கி ஓடி; ஸகணா:—சேனைகளுடன்; விபுத-ரிஷபா:—சிறந்த தேவர்கள் அனைவரும்; ஸ்வை: ஸ்வை:—அவரவர்; திவ்ய—திவ்யமான; அஸ்த்ர—வில்களாலும், அம்புகளாலும்; சஸ்த்ர-ஓகை:—வெவ்வேறு ஆயுதங்களாலும்; ஸ:—அவன் (விருத்திரன்); அக்ரஸத்—விழுங்கிவிட்டான்; தானி—அவற்றை (ஆயுதங்களை); க்ருத்ஸ்னச:—மொத்தமாக.

இந்திரன் முதலான தேவர்கள் தங்கள் சேனைகளுடனும் தெய்வீகமான தங்களுடைய வில், அம்பு முதலான பிற ஆயுதங்களுடனும் அந்த அசுரனைத் தாக்கினார். ஆனால் அவர்களுடைய ஆயுதங்களையெல்லாம் விருத்ராசுரன் விழுங்கிவிட்டான்.

பதம் 6.9.20
ததஸ் தே விஸ்மிதா: ஸர்வே விஷண்ணா க்ரஸ்த-தேஜஸ:
ப்ரத்யஞ்சம் ஆதி-புருஷம் உபதஸ்து: ஸமாஹிதா:

தத:—பிறகு; தே—அவர்கள் (தேவர்கள்); விஸ்மிதா:—ஆச்சரியமடைந்து; ஸர்வே—அனைவரும்; விஷண்ணா:—மிகவும் வருத்தப்பட்டு; க்ரஸ்த-தேஜஸ:—தங்களுடைய சொந்த பலத்தையெல்லாம்; ப்ரத்யஞ்சம்—பரமாத்மாவிடம்; ஆதி-புருஷம்—ஆதி புருஷராகிய; உபதஸ்து:—பிரார்த்தனை செய்தனர்; ஸமாஹிதா:—எல்லோரும் இணைந்து.

அந்த அசுரனின் பலத்தைக் கண்டு ஆச்சரியமும், ஏமாற்றமும் அடைந்த தேவர்கள் தங்களுடைய சொந்த பலத்தை இழந்தவர்களாயினர். ஆகவே அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, பரமாத்மாவும், பரமபுருஷருமாகிய பகவான் நாராயணரை வழிபட்டு அவரை திருப்திப்படுத்த முயன்றனர்.

பதம் 6.9.21
ஸ்ரீ-தேவா ஊசு:
வாயு-அம்பராக்னி-அப்-க்ஷிதயஸ் த்ரி-லோகா
ப்ரஹ்மாதயோ யே வயம் உத்விஜந்த:
ஹராம யஸ்மை பலிம் அந்தகோ ‘ஸௌ
பிபேதி யஸ்மாத் அரணம் ததோ ந:

ஸ்ரீ-தேவா: ஊசு:—தேவர்கள் கூறினார்கள்; வாயு—காற்று; அம்பர—ஆகாயம்; அக்னி—நெருப்பு; அப்—நீர்; க்ஷிதய:—நிலம் ஆகியவற்றாலான; த்ரி-லோகா:—மூவுலகங்களும்; ப்ரஹ்ம-ஆதய:—பிரம்ம தேவர் முதலான; யே—எவர்கள்; வயம்—நாங்கள்; உத்விஜந்த:—மிகவும் அச்சமடைந்திருப்பதால்; ஹராம—செலுத்தவோமாக; யஸ்மை—யாருக்கு; பலிம்—காணிக்கை; அந்தக:—மரணம்; அஸௌ—அந்த; பிபேதி—பயங்கள்; யஸ்மாக்—யாரிடமிருந்து; அரணம்—புகலிடம்; தத:—ஆகவே; ந:—நம்முடைய.

தேவர்கள் கூறினர்: பிரம்மதேவர் முதலான பல்வேறு தேவர்களால் ஆளப்படும் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் தான் மூவுலகங்களும் படைக்கப்படுகின்றன. காலத் தத்துவம் எங்களுடைய வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுமோ என்ற பெரும் பயத்தினால் நாங்கள் காலம் உத்தரவிடுவதுபோல் எங்களுடைய கடமைகளைச் செய்து, அந்த காலத்திற்கு எங்களுடைய காணிக்கைகளைச் செலுத்துகிறோம். ஆனால் அந்த கால-தத்துவமும் பரமபுருஷரைக் கண்டு அஞ்சுகிறது. ஆகவே எவர் ஒருவரால் நமக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியுமோ, அந்த பரமபுருஷரை இப்பொழுது நாம் வழிபடுவோமாக.

பதம் 6.9.22
அவிஸ்மிதம் தம் பரிபூர்ண-காமம்
ஸ்வேனைவ லாபேன ஸமம் ப்ரசாந்தம்
வினோபஸர்பதி அபரம் ஹி பாலிச:
ஸ்வ-லாங்குலேனாதிதிதர்தி ஸிந்தும்

அவிஸ்மிதம்—ஒருபோதும் ஆச்சரியமடையாத; தம்—அவரை; பரிபூர்ண-காமம்—பரிபூரண திருப்தியுடையவர்; ஸ்வேன—அவரது சொந்த; ஏவ—உண்மையில்; லாபேன—சாதனைகளால்; ஸமம்—சமத்துவம் உடையவர்; ப்ரசாந்தம்—உறுதி மிக்கவர்; வினா—இல்லாமல்; உபஸர்பதி—அனுகுபவன்; அபரம்—மற்றொருவரை; ஹி—உண்மையில்; பாலிச:—ஒரு மூடனாவான்; ஸ்வ—ஒரு நாயின்; லாங்குலேன—வாலினால்; அதிதிதர்தி—கடக்க விரும்புபவன்; ஸிந்தும்—கடலை.

எல்லா பௌதிக எண்ணங்களிலிருந்தும் விடுபட்டவரும், எதனாலும் ஒரு போதும் ஆச்சரியமடையாதவருமான பகவான், தமது சொந்த ஆன்மீக பூரணத்துவத்தினால் எப்பொழுதும் சந்தோஷமாகவும், பூரண திருப்தியுடையவராகவும் இருக்கிறார். அவருக்கு பெளதிகக் கடமைகள் எதுவும் இல்லை. எனவே அவர் உறுதியாகவும், பற்றில்லாதவராகவும் இருக்கிறார். அந்த பரம புருஷர் ஒருவரே அனைவருக்கும் புகலிடமாவார். மற்றவர்களால் காப்பாற்றப்பட விரும்பும் ஒருவன், நாயின் வாலைப்பிடித்துக் கொண்டு கடலைக் கடக்க விரும்பும் ஒருவனைப் போல் மகா மூடனாவான்.

பதம் 6.9.23
யஸ்யொரு-ஸ்ருங்கே ஜகதீம் ஸ்வ-நாவம்
மனுர் யதாபத்ய ததார துர்கம்
ஸ ஏவ நஸ் த்வாஷ்ட்ர-பயாத் துரந்தாத்
த்ராதாஸ்ரிதான் வாரிசரோ ‘பி நூனம்

யஸ்ய—யாருடைய; உரு—மிகவும் உறுதியான, உயர்ந்த; ஸ்ருங்கே—கொம்புடன்; ஜகதீம்—உலகின் வடிவிலிருந்த; ஸ்வ-நாவம்—அவரது சொந்த படகை; மனு:—மனு (சக்தியவிரதன்); யதா—எப்படி; ஆபத்ய—பிணைத்து; ததார—கடந்தாரோ; துர்கம்—கடப்பதற்குக் கடினமானதை (வெள்ளப் பெருக்கை); ஸ:—அவர் (பரமபுருஷர்); ஏவ—நிச்சயமாக; ந:—நம்மை; த்வாஷ்ட்ர-பயாத்—துவஷ்டாவின் மகனுடைய பயத்திலிருந்து; துரந்தாத்—முடிவற்ற; த்ராதா—காப்பவர்; ஆஸ்ரிதான்—(நம்மைப் போன்று) நம்பியிருப்பவர்கள்; வாரி-சர: அபி—ஒரு மீனின் வடிவை ஏற்ற போதிலும்; நூனம்—உண்மையில்.

சத்தியவிரத மகாராஜன் என்ற மனு முன்பு, முழு உலகின் வடிவிலிருந்த சிறிய படகை மச்ச அவதாரத்தின் கொம்புடன் பிணைத்து, அவரது அருளால் வெள்ளப் பெருக்கின் பேராபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். அதே மச்ச அவதாரம், துவஷ்டாவின் மகனால் விளைவிக்கப்பட்ட பயங்கர ஆபத்திலிருந்து நம்மைக் காக்கட்டும்.

பதம் 6.9.24
புரா ஸ்வயம்பூர் அபி ஸம்யமாம்பஸி
உதீர்ண-வாதோர்மி-ரவை: கராலே
ஏகோ ‘ரவிந்தாத் பதிதஸ் ததார
தஸ்மாத் பயாத் யேன ஸ நோ ‘ஸ்து பார:

புரா—முன்பு (சிருஷ்டியின் போது); ஸ்வயம்பூ:—பிரம்மா; அபி—கூட; ஸம்யம-அம்பஸி—பிரளய நீரில்; உதீர்ண—மிகவும் உயரமான; வாத—காற்றின்; ஊர்மி—மற்றும் அலைகளின்; ரவை:—ஓசைகளால்; கராலே—மிகவும் பயங்கரமான; ஏக:—தனியாக; அரவிந்தாத்—தாமரை ஆசனத்திலிருந்து; பதித:—விழுந்துவிடும் நிலையிலிருந்தார்; ததார—தப்பினார்; தஸ்மாத் பயாத்—பயங்கரமான அச்சூழ்நிலையிலிருந்து; யேன—யாரால் (பகவானால்); ஸ:—அவர்; ந:—நம்மை; அஸ்து பார:—காப்பாற்றுவாராக.

படைப்பின் துவக்கத்தில், பயங்கரமான ஒரு காற்று வீசி, வெள்ளத்தில் மூழ்கடிக்கும் கொடூரமான அலைகளை உண்டாக்கியது. அந்த பேரலைகள் எழுப்பிய பயங்கர ஓசையினால் பிரம்ம தேவர் கூட அவரது தாமரை ஆசனத்திலிருந்து பிரளய நீரில் விழுந்துவிடுவது போல் காணப்பட்டார். ஆனால் பகவானின் உதவியால் அவர் காப்பாற்றப்பட்டார். இதனால் நம்மையும் பகவான் ஆபத்தான இச்சூழ்நிலையிலிருந்து காப்பாற்றுவார் என்று நம்புகிறோம்.

பதம் 6.9.25
ய ஏக ஈசோ நிஜ-மாயயா ந:
ஸஸர்ஜ யேனானுஸ்ருஜாம விஸ்வம்
வயம் ந யஸ்யாபி புர: ஸமீஹத:
பஸ்யாம லிங்கம் ப்ருதக் ஈச-மானின:

ய:—அவர்; ஏக:—ஒரே; ஈச:—ஈசுவரரான; நிஜ-மாயயா—அவரது திவ்ய சக்தியால்; ந:—நம்மை; ஸஸர்ஜ—படைத்துள்ளார்; யேன—யாரால் (யாருடைய கருணையால்); அனுஸ்ருஜாம—நாமும் படைக்கிறோமோ; விஸ்வம்—பிரபஞ்சத்தை; வயம்—நாம்; ந—இல்லை; யஸ்ய—எவரின்; அபி—என்ற போதிலும்; புர:—நம்முன் இருக்கிறார்; ஸமீஹத:—செயற்படும் அவருடைய; பஸ்யாம—பார்க்கிறோம்; லிங்கம்—ரூபத்தை; ப்ருதக்—தனிப்பட்ட; ஈச—கடவுள்களாக; மானின:—நம்மை நினைத்துக் கொண்டு.

யாருடைய பகிரங்க சக்தியால் நாம் படைக்கப்பட்டோமோ, யாருடைய கருணையால் பிரபஞ்ச சிருஷ்டியை நாம் விரிவடையச் செய்கிறோமோ, அந்த பரமபுருஷர் பரமாத்மாவாக எப்பொழுதும் நம்முன் இருந்த போதிலும், அவரது ரூபத்தை நம்மால் காண முடியாது. நாமனைவரும் நம்மைச் சுதந்திரமுள்ள தனிப்பட்ட கடவுள்கள் என்று நினைப்பதால், நம்மால் அவரைக் காண இயலவில்லை.

பதங்கள் 6.9.26 – 6.9.27>/span>
யோ ந: ஸபத்னைர் ப்ருசம் அர்த்யமானான்
தேவர்ஷி-திர்யன்-ந்ருஷு நித்ய ஏவ
க்ருதாவதாரஸ் தனுபி: ஸ்வ-மாயயா
க்ருத்வாத்மஸாத் பாதி யுகே யுகே ச

தம் ஏவ தேவம் வயம் ஆத்ம-தைவதம்
பரம் ப்ரதானம் புருஷம் விஸ்வம் அன்யம்
வ்ரஜாம ஸர்வே சரணம் சரண்யம்
ஸ்வானாம் ஸ நோ தாஸ்யதி சம் மஹாத்மா

ய:—அவர்; ந:—நம்மை; ஸபத்னை:—நம் எதிரிகளால்; ப்ருசம்—கிட்டத்தட்ட எப்பொழுதுமே; அர்த்யமானான்—துன்புறுத்தப்படும்; தேவ—தேவர்களுக்கிடையில்; ரிஷி—முனிவர்களுக்கிடையில்; திர் யக்—மிருகங்கள்; ந்ருஷு—மற்றும் மனிதருக்கிடையில்; நித்ய:—எப்பொழுதும்; ஏவ—நிச்சயமாக; க்ருத-அவதார:—ஓர் அவதாரமாகத் தோன்றி; தனுபி:—வெவ்வேறு ரூபங்களுடன்; ஸ்வ-மாயயா—அவரது அந்தரங்க சக்தியினால்; க்ருத்வா ஆத்மஸாத்—அவருக்கு மிகவும் நெருங்கியவராகவும், பிரியமானவராகவும் கருதி; பாதி—காக்கிறார்; யுகே யுகே—யுகந்தோறும்; ச—மேலும்; தம்—அவரை; ஏவ—உண்மையில்; தேவம்—பரமபுருஷர்; வயம்—நாமனைவரும்; ஆத்ம-தைவதம்—எல்லா ஜீவன்களுக்கும் இறைவனான; பரம்—உன்னதமானவர்; ப்ரதானம்—மொத்த ஜட சக்தியின் மூல காரணம்; புருஷம்—பரம அனுபவிப்பாளர்; விஸ்வம்—யாருடைய சக்தி இப்பிரபஞ்சமாக உருவெடுத்துள்ளதோ; அன்யம்—தனியாக உள்ள; வ்ரஜாம—நாம் நாடுகிறோம்; ஸர்வே—எல்லா; சரணம்—புகலிடத்தை; சரண்யம்—புகலிடம் கொள்ளத் தகுந்த; ஸ்வானாம்—அவரது பக்தர்களுக்கு; ஸ:—அவர்; ந:—நமக்கு; தாஸ்யதி—அருளட்டும்; சம்—மங்களம்; மஹாத்மா—பரமாத்மா.

பரமபுருஷர் அவரது நினைத்தற்கரிய அந்தரங்க சக்தியினால் பல்வேறு திவ்ய ரூபங்களாக தம்மை விரிவடையச் செய்கிறார். இவ்விதமாக தேவர்களுக்கிடையில் ஆற்றலின் அவதாரமான வாமன தேவராகவும், முனிவர்களுக்கிடையில் தோன்றிய அவதாரமான பரசுராமராகவும், மிருகங்களுக்கிடையில் தோன்றிய நரசிம்மர் மற்றும் வராக மூர்த்தியாகவும், மேலும் நீரினங்களுக்கிடையில் தோன்றிய மச்சம் மற்றும் கூர்ம அவதாரமாகவும் அவர் அவதரிக்கிறார். அவர் எல்லா வகையான ஜீவராசிகளுக்கிடையிலும், மனிதருக்கிடையிலும் பல்வேறு திவ்ய ரூபங்களை ஏற்கிறார். குறிப்பாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணராகவும், பகவான் ஸ்ரீ ராமராகவும் தோன்றுகிறார். அவர் தமது தனிப்பெருங்கருணையினால், எப்பொழுதும் அசுரர்களால் துன்புறுத்தப்படும் தேவர்களைக் காக்கிறார். அனைத்து ஜீவராசிகளுக்கும் அவரே வழிபடத்தக்க உயர்ந்த மூர்த்தியாவார். அவரே ஆண், பெண் படைப்புச் சக்திகளாகத் தோன்றியுள்ள பரம காரணமாவார். அவர் இப்பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவர் என்றாலும், பிரபஞ்ச வடிவமாக (விராட்-ரூபமாக) விளங்குகிறார். எனவே அச்சம் தரும் இச்சூழ்நிலையில் அவரையே நாம் சரணடைவோமாக. ஏனெனில் பரமாத்மாவாகிய அந்த பரமபுருஷர் நம்மைக் காப்பார் என்பது நிச்சயம்.

பதம் 6.9.28
ஸ்ரீ-சுக உவாச
இதி தேஷாம் மஹாராஜ ஸுராணாம் உபதிஷ்டதாம்
ப்ரதீச்யாம் திசி அபூத் ஆவி: சங்க-சக்ர-கதா-தர:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; தேஷாம்—அவர்களுடைய; மஹாராஜ—அரசே; ஸுராணாம்—தேவர்களின்; உபதிஷ்டதாம்—பிரார்த்தனை; ப்ரதீச்யாம்—உள்ளே; திசி—திசையில்; அபூத்—ஆனார்; ஆவி:—எழுந்தருளினார்; சங்க-சக்ர-கதா-தர:—சங்கு சக்கரம், கதை ஆகிய திவ்யமான ஆயுதங்களைத் தாங்கியவராய்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, அனைத்து தேவர்களும், பரமபுருஷரிடம் தங்களது பிரார்த்தனைகளைச் செய்தபோது, சங்கு, சக்கரம், கதை ஆகிய ஆயுதங்களை ஏந்தியிருப்பவரும், பரமபுருஷருமாகிய பகவான் ஸ்ரீ ஹரி முதலில் அவர்களது இதயங்களுள் தோன்றினார். பிறகு அவர்கள் முன் எழுந்தருளினார்.

பதங்கள் 6.9.29 – 6.9.30
ஆத்ம-துல்யை: ஷோடசபிர் வினா ஸ்ரீவத்ஸ-கௌஸ்துபௌ
பர்யுபாஸிதம் உன்னித்ர-சரத்-அம்புருஹேக்ஷணம்

த்ருஷ்ட்வா தம் அவனௌ ஸர்வ ஈக்ஷணாஹ்லாத-விக்லவா:
தண்டவத் பதிதா ராஜஞ் சனைர் உத்தாய துஷ்டுவு:

ஆத்ம-துல்யை:—கிட்டத்தட்ட தமக்குச் சமமான; ஷோடசபி:—பதினாறு (சேவர்களால்); வினா—இல்லாமல்; ஸ்ரீவத்ஸ-கௌஸ்துபௌ—ஸ்ரீவத்ஸ குறியும், கெளஸ்துப மணியும்; பர்யுபாஸிதம்—எல்லாப்புறமும் சேவிக்கப்பட்டு; உன்னித்ர—மலரும்; சரத்—இலையுதிர் காலத்தின்; அம்புருஹ—தாமரை மலர்கள் போல்; ஈக்ஷணம்—கண்களுடைய; த்ருஷ்ட்வா—கண்டு; தம்—அவரை (பரமபுருஷராகிய நாராயணரை); அவனௌ—பூமியில்; ஸர்வே—அவர்களனைவரும்; ஈக்ஷண—நேரிடையாகக் காண்பதிலிருந்து; ஆஹ்லாத—மகிழ்ச்சியால்; விக்லவா:—பூரிப்படைந்து; தண்ட-வத்—ஒரு தண்டம் போல்; பதிதா:—விழுந்தனர்; ராஜன்—அரசே; சனை:—மெதுவாக; உத்தாய—எழுந்து நின்று; துஷ்டுவு:—பிரார்த்தனை செய்தனர்.

பரமபுருஷராகிய நாராயணரை சேவித்தபடி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், ஸ்ரீவத்ஸ குறியும், கௌஸ்துப மாலையும் மட்டும் இல்லாமல் பகவானைப் போலவே தோற்றமளித்தவர்களுமான அவரது பதினாறு அந்தரங்க சேவகர்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். அரசே, பரமபுருஷர், இலையுதிர் காலத்தில் மலர்ந்த தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன் புன்னகை செய்ததைக் கண்ட அனைத்து தேவர்களும் பெருமகிழ்ச்சியுடன் உடனே தண்டங்களைப் போல் கீழே விழுந்து அவரை வணங்கினர். பிறகு மெதுவாக எழுந்து நின்று பகவானிடம் பிரார்த்தனைகள் செய்து அவரை திருப்திப்படுத்தினர்.

பதம் 6.9.31
ஸ்ரீ-தேவா ஊசு
நமஸ் தே யக்ஞ-வீர்யாய வயஸே உத தே நம:
நமஸ் தே ஹி அஸ்த-சக்ராய நம: ஸுபுரு-ஹூதயே

ஸ்ரீ-தேவா: ஊசு:—தேவர்கள் கூறினார்; நம:—வணக்கங்கள்; தே—தங்களுக்கு; யக்ஞ-வீர்யாய—யாகப் பலன்களை அருளக்கூடிய பரமபுருஷருக்கு; வயஸே—யாகப் பலன்களை முடித்துவிடும் கால தத்துவமான; உத—என்றாலும்; தே—தங்களுக்கு; நம:—வணக்கங்கள்; நம:—வணக்கங்கள்; தே—தங்களுக்கு; ஹி—உண்மையில்; அஸ்த-சக்ராய—சக்கரத்தை விடுபவர்; நம:—பணிவான வணக்கங்கள்; ஸுபுரு-ஹூதயே—பலவித திவ்ய நாமங்களை உடையவர்.

தேவர்கள் கூறினார்: பரமபுருஷராகிய பகவானே, யாகப் பலன்களை அளிக்கத் தகுதியுடையவரும், காலப்போக்கில் அத்தகைய பலன்களையெல்லாம் அழித்துவிடும் கால தத்துவமும் தாங்களேயாவீர். அசுரர்களைக் கொல்வதற்காக சக்கரத்தை விடுபவரும் நீங்களே. பலவகையான பெயர்களை உடைய பகவானே, தங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.9.32
யத் தே கதீனாம் திஸ்ருணாம் ஈசிது: பரமம் பதம்
நார்வாசீனோ விஸர்கஸ்ய தாதர் வேதிதும் அர்ஹதி

யத்—எது; தே—உங்களுடைய; கதீனாம் திஸ்ருணாம்—மூன்று இலக்குகளையும் (சுவர்க்கம், மண்ணுலகம், நரகம்); ஈசிது:—ஆள்பவரான; பரமம்-பதம்—பரமபதமாகிய வைகுண்டலோகம்; ந—இல்லை; அர்வாசீன:—பிறகு தோன்றும் ஒருவன்; விஸர்கஸ்ய—சிருஷ்டிக்கு; தாத:—பரம ஆளுனரே; வேதிதும்—புரிந்து கொள்ள; அர்ஹதி—முடியும்.

பரம ஆளுனரே, (சுவர்க்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுதல் ஒரு மனிதனாகப் பிறவி எடுத்தல், மற்றும் நரகத்தில் தள்ளப்படுதல் ஆகிய) மூன்று இலக்குகளையும் நிர்ணயிப்பவர் தாங்களே என்றாலும், உங்களுடைய மேலான வசிப்பிடம் வைகுண்ட தாமமாகும். உங்களால் இப்பிரபஞ்ச தோற்றம் படைக்கப்பட்ட பிறகுதான் நாங்கள் தோன்றினோம் என்பதால், உங்களுடைய செயல்களை நாங்கள் புரிந்து கொள்வது சாத்தியமில்லை. ஆகவே எங்களது பணிவான வணக்கங்களைத் தவிர, தங்களுக்கு நாங்கள் அர்ப்பணிக்கக்கூடியது எதுவும் இல்லை.

பதம் 6.9.33
ஓம் நமஸ் தே ‘ஸ்து பகவான் நாராயண வாஸுதேவாதி-புருஷ
மஹா-புருஷ மஹானுபாவ பரம-மங்கள பரம-கல்யாண பரம
காருணிக கேவல ஜகத்-ஆதார லோகைக-நாத ஸர்வேஸ்வர லஷ்மீ-
நாத பரமஹம்ஸ-பரிவ்ராஜகை: பரமேணாத்ம-யோக-ஸமாதினா பரிபாவித- பரிஸ்ஃபுட-பாரமஹம்ஸ்ய-தர்மேணோத்காடித-தம:-
கபாட-த்வாரே சித்தே ‘பாவ்ருத ஆத்ம-லோகே ஸ்வயம் உபலப்த-
நிஜ-ஸுகானுபவோ பவான்

ஓம்—பகவானே; நம:—பணிவான வணக்கங்கள்; தே—உங்களுக்கு; அஸ்து—உரித்தாக்கட்டும்; பகவன்—பரமபுருஷரே; நாராயண—எல்லா ஜீவன்களுக்கும் அடைக்கலமாகிய நாராயணர்; வாஸுதேவ—பகவான் வாசுதேவர்; ஆதி-புருஷ—ஆதிபுருஷர்; மஹா-புருஷ—மகாபுருஷர்; மஹா-அனுபாவ—மேலான ஐசுவரியம் உடையவர்; பரம-மங்கள—மங்கள வடிவினர்; பரம-கல்யாண—பரம கல்யாண சொரூபி; பரம-காருணிக—பரம கருணா மூர்த்தி; கேவல—மாற்றமற்றவர்; ஜகத்-ஆதார—பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதாரம்; லோக-ஏக-நாத—அகில லோகங்களுக்கும் ஒரே நாயகர்; ஸர்வ-ஈஸ்வர—சர்வேசுவரர்; லஷ்மீ-நாத—லஷ்மியின் நாதர்; பரமஹம்ஸ-பரிவ்ராஜகை:—உலகம் முழுவதிலும் சஞ்சரிக்கும் பரமஹம்ஸ சந்நியாசிகளால்; பரமேண—பரம; ஆத்ம-யோக-ஸமாதினா-பக்தியோக சமாதியினால்; பரிபாவித—முற்றிலும் தூய்மையடைந்த; பரிஸ்ஃபுட—மற்றும் முழுமையாகத் தோன்றிய; பாரமஹம்ஸ்ய-தர்மேண—உன்னத பக்தித் தொண்டு முறையை நிறைவேற்றுவதன் மூலம்; உத்காடித—தள்ளித் திறந்த; தம:—மாயையான இருப்பின்; கபாட—எதில் கதவானது; த்வாரே—நுழைவாயிலாக இருக்கிறதோ; சித்தே—மனதில்; அபாவ்ருதே—களங்கமில்லாமல்; ஆத்ம-லோக—ஆன்மீக உலகில்; ஸ்வயம்—சுயமாக; உபலப்த—அனுபவிக்கின்றனர்; நிஜ—தனிப்பட்ட; ஸுக-அனுபவ:—மகிழ்ச்சியான உணர்வை; பவான்—தாங்கள்.

பரமபுருஷராகிய நாராயணரே, வாசுதேவரே, ஆதிபுருஷரே, மகாபுருஷரே, மஹானுபாவரே, மங்களமூர்த்தியே, பரம கல்யாண சொரூபியே, பரம கருணாமூர்த்தியே, மாற்றமற்றவரே, பிரபஞ்ச தோற்றத்தின் ஆதாரமே, அகில லோகங்களுக்கும் ஒரே நாயகரே, சர்வேஸ்வரரே, லஷ்மிதேவியின் கணவரே, பக்தியோகத்தின் மூலமாக சமாதியில் முழுமையாக ஆழ்ந்து, கிருஷ்ண உணர்வை பரப்புவதற்காக உலகில் சஞ்சரித்து வரும் மிகச் சிறந்த சந்நியாசிகளால் தாங்கள் உணர்ந்தறியப்படுகிறீர்கள். அவர்களுடைய மனங்கள் உங்கள் மீது குவிந்திருப்பதால், முற்றிலும் தூய்மையடைந்த அவர்களுடைய இதயங்களில், உங்களுடைய சொரூபத்தின் தோற்றத்தை அவர்களால் பெற முடிகிறது. அவர்களுடைய இதயங்களில் உள்ள இருள் முற்றிலும் அகன்று அவர்களுக்கு நீங்கள் காட்சியளிக்கும் பொழுது, அவர்களால் அனுபவிக்கப்படும் உன்னத ஆனந்தம் உங்களுடைய திவ்யமான ரூபமேயாகும். இத்தகைய பக்தர்களைத் தவிர வேறு எவராலும் உங்களை உணர்ந்தறிய முடியாது. ஆகவே தங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.9.34
துரவபோத இவ தவாயம் விஹார-யோகோ யத் அசரணோ ‘சரீர இதம் அனவேக்ஷிதாஸ்மத்-ஸமவாய ஆத்மனைவவிக்ரியமாணேன ஸகுணம் அகுண: ஸ்ருஜஸி பாஸி ஹரஸி

துரவபோத:—புரிந்து கொள்வது கடினம்; இவ—மிகவும்; தவ—உங்களுடைய; அயம்—இந்த; விஹார-யோக:—படைத்தல் காத்தல், அழித்தலாகிய லீலைகளை; யத்—எவை; அசரண:—வேறெந்த ஆதாரத்தையும் சார்ந்திருப்பவரல்ல; அசரீர:—பெளதிக உடல் இல்லாதவர்; இதம்—இந்த; அனவேக்ஷித—காத்திராமல்; அஸ்மத்—எங்களுடைய; ஸமவாய:—ஒத்துழைப்புக்காக; ஆத்மனா—நீங்களாகவே; ஏவ—உண்மையில்; அவிக்ரியமாணேன—மாற்றப்படாமலேயே; ஸ-குண-ஜட—இயற்கைக் குணங்கள்; அகுண:—இத்தகைய பௌதிக குணங்களுக்கு மேலானவர் என்ற போதிலும்; ஸ்ருஜஸி—நீங்கள் படைக்கிறீர்கள்; பாஸி—காக்கிறீர்கள்; ஹரஸி—அழிக்கிறீர்கள்.

பகவானே, தங்களுக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. உங்களுக்கு பெளதிக உடல் இல்லை என்ற போதிலும், எங்களுடைய உதவி உங்களுக்குத் தேவைப்படுவதே இல்லை. நீங்களே பிரபஞ்ச தோற்றத்திற்குக் காரணம். மாற்றமில்லாமல் அதற்கான மூலப்பொருட்களை அளிப்பவரும் நீங்களே என்பதால், இப்பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்து, காத்து, அழிப்பவரும் நீங்களேயாவீர். நீங்கள் பெளதிக செயலில் ஈடுபட்டிருப்பதாகக் காணப்பட்ட போதிலும், அனைத்து பௌதிக குணங்களுக்கும் மேற்பட்டவராவீர். எனவே, உங்களுடைய இந்த உன்னதமான செயல்களைப் புரிந்து கொள்வது மிகமிகக் கடினமாகும்.

பதம் 6.9.35
அத தத்ர பவாம் கிம் தேவதத்தவத் இஹகுண-விஸர்க- பதித: பாரதந்த்ரிணேய ஸ்வ-க்ருத-குசலாகுசலம் ஃபலம் உபாததாதி ஆஹோஸ்வித் ஆத்மாராம உபசம-சீல: ஸமஞ்ஜஸ-தர்சன உதாஸ்த இதி ஹ வாவ ந விதாம:

அத—எனவே; தத்ர—அதில்; பவான்—தாங்கள்; கிம்—என்ன; தேவ-தத்த-வத்—கர்ம பலன்களால் உந்தப்படும் ஒரு சாதாரண மனிதன் போல்; இஹ—இந்த ஜட உலகில்; குண-விஸர்க-பதித:—ஜட இயற்கைக் குணங்களால் உந்தப்பட்டு, ஒரு ஜட உடலில் விழுந்துவிட்ட; பாரதந்த்ரியேண—காலம், இடம், செயல், இயற்கை ஆகிய சூழ்நிலைகளை நம்பியிருப்பதன் மூலம்; ஸ்வ-க்ருத—ஒருவரால் செய்யப்படும்; குசல—நல்ல; அகுசலம்—தீய; ஃபலம்—பலன்களை; உபாததாதி—ஏற்கிறான்; ஆஹோஸ்வித்—அல்லது; ஆத்மாராம:—ஆத்ம திருப்தியுடையவர்; உபசம சீல:—இயல்பான சுயக்கட்டுப்பாடு; ஸமஞ்ஜஸ-தர்சன:—ஆன்மீக சக்திகளை முழுமையாக இழக்காத; உதாஸ்தே—ஒரு நடுநிலையான சாட்சியாக இருக்கிறார்; இதி—இவ்வாறு; ஹ வாவ—நிச்சயமாக; ந விதாம—எங்களுக்குப் புரியவில்லை.

எங்களுடைய கேள்விகள் பின்வருமாறு: சாதாரண பந்தப்பட்ட ஆத்மா பௌதிக சட்டங்களுக்கு உட்பட்டுள்ளதால், அவனது செயல்களின் பலன்களைப் பெறுகிறான். பகவானாகிய தாங்களும் ஒரு சாதாரண மனிதனைப்போல்தான் பெளதிக குணங்களாளான ஒருடலுடன் இந்த ஜட உலகில் வாழ்கிறீர்களா? நீங்களும் காலம், கருமம் போன்றவைகளின் ஆதிக்கத்தின் கீழ் செயல்களின் நல்ல அல்லது தீய பலன்களை அனுபவிக்கிறீர்களா? அல்லது, நீங்கள் தன்னிறைவு பெற்று, எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, ஆன்மீக சக்தியை முழுமையாகப் பெற்று, பாரபட்சமற்ற ஒரு சாட்சியாக மட்டுமே இங்கு இருக்கிறீர்களா? நிஜமாகவே தங்களுடைய உண்மையான நிலையை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பதம் 6.9.36
ந ஹி விரோத உபயம் பகவதி அபரமித-குண-கண ஈஸ்வரே ‘நவகாஹ்ய-மாஹாத்ம்யே ‘ர்வாசீன-விகல்ப:-விதர்க விசார-ப்ரமாணாபாஸ-குதர்க-சஸ்த்ர-கலிலாந்தஹ்கரணாஸ்ரய-துரவக்ரஹ-வாதினாம் விவாதான ஸர உபரத-ஸமஸ்த-மாயாமயே கேவல ஏவாத்ம-மாயயம் அந்தர்தாய கோ
நு அர்தோ துர்கட இவ பவதி ஸ்வரூப-த்வயாபாவாத்

ந—இல்லை; ஹி—நிச்சயமாக; விரோத:—முரண்பாடு; உபயம்—இரண்டும்; பகவதி—பரமபுருஷரில்; அபரிமித—எல்லையற்ற; குண-கணே—உன்னத குணங்களுடையவர்; ஈஸ்வரே—பரம ஆளுனரில்; அனவ காஹ்ய—வைத்திருக்கும்; மாஹாத்ம்யே—ஆழங்காண முடியாத திறமையையும், மகிமைகளையும்; அர்வாசீன—அன்மைய; விகல்ப—சந்தேகங்கள் நிறைந்த; விதர்க—எதிரான வாதங்கள்; விசார—தீர்ப்புகள்; ப்ரமாண-அபாஸ—குறையுடைய ஆதாரம்; குதர்க்க—பயனற்ற வாதங்கள்; சாஸ்த்ர—அங்கீகரிக்கப்படாத சாஸ்திரங்களால்; கலில—குழப்பமடைந்து; அந்தஹ்கரண—மனங்கள்; ஆஸ்ரய—யாருடைய புகலிடம்; துரவக்ரஹ—கபடமான வீண் பிடிவாதங்களால்; வாதினாம்—விதண்டாவாதம் செய்பவர்களின்; விவாத—வாக்குவாதங்களின்; அனவஸரே—எல்லைக்குள் இல்லை; உபரத—பின்வாங்கப்பட்ட; ஸம்ஸ்த—எவரிலிருந்து எல்லா; மாய-மயே—மாயாசக்தி; கேவலே—இரண்டற்ற ஒருவர்; ஏவ—உண்மையில்; ஆத்ம-மாயாம்—நினைத்தற்கரியதைச் செய்யவும், அழிக்கவும் கூடிய மாயா சக்தி; அந்தர்தாய—இடையில் வைத்து; க:—என்ன; நு—உண்மையில்; அர்த:—அர்த்தம்; துர்கட:—சாத்தியமில்லாதது; இவ—என்பது போல்; பவதி—இருக்கிறது; ஸ்வ-ரூப—குணங்கள்; த்வய—இரண்டு; அபாவாத்—இல்லாததால்.

பரமபுருஷரே, எல்லா முரண்பாடுகளையும் உங்களில் சமரசப்படுத்த முடியும். பகவானே, நீங்கள் எல்லையற்ற ஆன்மீக குணங்களின் பிறப்பிடமும், பரம ஆளுனருமான பரமபுருஷர் என்பதால், எல்லையற்ற உங்களுடைய மகிமைகள் பந்தப்பட்ட ஆத்மாக்களின் கற்பனைக்கு கூட எட்டாதவையாக உள்ளன. பல நவீன சமயவாதிகள் எது உண்மையில் சரி என்பதை அறியாமலேயே, சரியைப் பற்றியும் தவறைப் பற்றியும் விவாதிக்கின்றனர். அவர்களுடைய விவாதங்கள் எப்பொழுதும் தவறானவையாகவும். அவர்களுடைய கருத்துகள் நிச்சயமற்றவையாகவும் இருக்கின்றன. ஏனெனில், உங்களைப் பற்றிய அறிவைப் பெறுவதற்குத் தேவையான அதிகாரப் பூர்வமான சாட்சியம் அவர்களிடமில்லை. அவர்களுடைய மனங்கள் தவறான முடிவுகளைக் கொண்ட சாஸ்திரங்களால் குழப்பமடைந்துள்ளன. இதனால் உங்களைப் பற்றிய உண்மையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும், அவர்கள் களங்கப்பட்டவர்களாக இருப்பதால், தவறான முடிவைக் கொண்ட அவர்களுடைய கோட்பாடுகளால், அவர்களுடைய பெளதிக கருத்துக்களுக்கு மேற்பட்டவரான உங்களை அவர்களால் விவரிக்க இயலவில்லை. நீங்கள் இரண்டற்ற ஒருவராவீர். ஆகவே உங்களில் காணப்படும் முரண்பாடுகளான செய்யத்தக்கவை, செய்யத்தகாதவை மற்றும் இன்பம், துன்பம் போன்றவை உண்மையில் முரண்பாடுகளல்ல. உங்களுடைய சக்தி மகத்தானது என்பதால் அதைக் கொண்டு உங்கள் விருப்பம் போல் எதையும் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அந்த சக்தியைக் கொண்டு உங்களால் செய்ய முடியாதது என்ன இருக்கிறது? உங்களுடைய மூலதார நிலையில் இருமை இல்லை என்பதால் உங்களுடைய சக்தியின் செல்வாக்கைக் கொண்டு எதையும் உங்களால் செய்ய முடியும்.

பதம் 6.9.37
ஸம-விஷம-மாதீனாம் தம் அனுஸரஸி யதா ரஜ்ஜு-கண்ட: ஸர்பாதி-தியாம்

ஸம—சமமான அல்லது சரியான; விஷம—சமமில்லாத அல்லது தவறான; மதீனா—புத்தி உடையவர்களின்; மதம்—முடிவு; அனுஸரஸி—நீங்கள் பின்பற்றுகிறீர்கள்; யதா—போல்; ரஜ்ஜூ-கண்ட:—ஒரு கயிற்றை; ஸர்ப-ஆதி—பாம்பு முதலானவை; தியாம்—பார்ப்பவர்களின்.

ஒரு கயிற்றைப் பாம்பு என்றெண்ணும் சித்தம் தடுமாறிய ஒருவனுக்கு, அந்த கயிறே பயத்தை உண்டாக்குகிறது. ஆனால் அது ஒரு கயிறு மட்டுமே என்பதை அறிந்துள்ள சரியான புத்தியுள்ளவனுக்கு அந்த பயம் இல்லை, அதுபோலவே ஒவ்வொருவருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கும் தாங்கள், ஒருவனுடைய புத்திக்கேற்ப அவனிடம் பயத்தையோ அல்லது பயமின்மையையோ தூண்டுகிறீர்கள். ஆனால் உங்களிடம் இருமை என்பது இல்லை.

பதம் 6.9.38
ஸ ஏவ ஹி புன: ஸர்வ-வஸ்துனி வஸ்து ஸ்வரூப: ஸர்வேஸ்வர:
ஸகல-ஜகத்-காரண-காரண-பூத:-ஸர்வ-ப்ரத்யக்-ஆத்மத்வாத் ஸர்வ-குணாபாஸோபலக்ஷித ஏக ஏவ பர்யவசேக்ஷித:

ஸ:—அவர் (பரமபுருஷர்); ஏவ—உண்மையில்; ஹி—நிச்சயமாக; புன:—மீண்டும்; ஸர்வ-வஸ்துனி—ஜடம், ஆன்மீகம் ஆகிய அனைத்திலும்; வஸ்து-ஸ்வரூப:—கருப்பொருள்; ஸர்வ-ஈஸ்வர:—சர்வேசுவரர்; ஸகல-ஜகத்—முழு பிரபஞ்சத்தின்; காரண—காரணங்களுக்கு; காரண-பூத:—காரணமாக இருக்கும்; ஸர்வ-ப்ரத்யக்-ஆத்மத்வாத்—ஒவ்வொரு ஜீவராசியிலும் அல்லது அனைத்திலும், அணுவிலும் கூட பரமாத்மாவாக இருப்பதால்; ஸர்வ-குண—(புத்தி, புலன்கள் முதலான) ஜட இயற்கைக் குணங்களுடைய அனைத்து விளைவுகளின்; ஆபாஸ—தோற்றங்களினால்; உபலக்ஷித—உணரப்படுகிறீர்கள்; ஏக:—ஒருவரே; ஏவ—உண்மையில்; பர்யவசேக்ஷித:—எஞ்சியிருப்பவர்.

ஒருவன் நிதானமான ஆழ்ந்த யோசனையினால், பரமாத்மா வெவ்வேறு வழிகளில் தோன்றிய போதிலும் உண்மையில் அவரே அனைத்திற்கும் அடிப்படைக் கொள்கை என்பதைக் காண்பான். மொத்த பெளதிக சக்தி, பெளதிக தோற்றத்திற்குக் காரணம். ஆனால் அந்த பெளதிக சக்தி பகவானால் ஏற்படுத்தப்பட்டதாகும். ஆகவே, அவரே எல்லாக் காரணங்களுக்கும் காரணமும், புத்தியையும் புலன்களையும் தோற்றுவிப்பவரும் ஆவார். அவர் அனைத்திலும் உள்ள பரமாத்மாவாக உணரப்படுகிறார். அவரன்றி அனைத்தும் உயிரற்றிருக்கும். அந்த பரமாத்மாவாகவும், பரம ஆளுனராகவும் நீங்கள் ஒருவர் மட்டுமே எஞ்சியிருக்கிறீர்கள்.

பதம் 6.9.39
அத ஹ வாவ தவ மஹிமாம்-ரஸ-ஸமுத்ர-விப்ருஷா ஸக்ருத்
அவலீடயா ஸ்வ-மனஸி-நிஷ்யந்மானானவரத-ஸுகேன விஸ்மாரித-த்ருஷ்ட-ஸ்ருத-விஷய-ஸுக-லேசாகாஸா: பரம-பாகவதா ஏகாந்தினோ பகவதி ஸர்வ-பூத-ப்ரிய-ஸுஹ்ருதி ஸரவாத்மனி நிதராம் நிரந்தரம் நிர்வ்ருத-மனஸ: கதம் உ ஹ வா ஏதே மதுமதன புன: ஸ்வார்தத குசலாஹி ஆத்ம-ப்ரிய ஸுஹ்ருத:-ஸாதவஸ் த்வச்-சரணாம்பு ஜானுஸேவாம் விஸ்ருஜந்தி ந யத்ர புனர் அயம் ஸம்ஸார-பர்யாவர்த:

அத ஹ—எனவே; வாவ—உண்மையில்; தவ—உங்களுடைய; மஹிம—மகிமைகளின்; அம்ருத—அமுதத்தின்; ரஸ—ரஸத்தின்: ஸமுத்ர—சமுத்திரத்தின்; விப்ருஷா—ஒருதுளியை; ஸக்ருத்—ஒரு முறை மட்டுமே; அவலீடயா—சுவைத்தவன்; ஸ்வ—மனஸி—தன் மனதில்; நிஷ்யந்தமான—பாயும்; அனவரத—இடையறாது; ஸுகேன—உன்னத ஆனந்தத்தினால்; விஸ்மாரித—மறக்கப்பட்டுவிடுகிறது; த்ருஷ்ட—பௌதிக பார்வையிலிருந்தும்; ஸ்ருத—ஓசையிலிருந்தும்; விஷய-ஸுக—பெளதிக சுகத்தின்; லேச-ஆபாஸா—ஓர் அற்பப் பகுதியின் இலேசான பிரதிபலிப்பு; பரம பாகவதா:—மேலான சிறந்த பக்தர்கள்; ஏகாந்தின:—பரமபுருஷரைத் தவிர வேறெதிலும் நம்பிக்கைவைக்காத; பகவதி—பரமபுருஷரில்; ஸர்வ-பூத—எல்லா ஜீவன்களுக்கும்; ப்ரிய—மிகப் பிரியமானவரான; ஸுஹ்ருதி—நண்பரான; ஸர்வ-ஆத்மனி—பரமாத்மா; நிதராம்—முழுமையாக; நிரந்தரம்—தொடர்ச்சியாக; நிர்வ்ருத—மகிழ்ச்சியுடன்; மனஸ:—யாருடைய மனங்கள்; கதம்—எப்படி; உ ஹ—அப்பொழுது; வா—அல்லது; ஏதே—இவை; மது-மதன—மது என்ற அசுரனைக் கொன்றவரே; புன:—மீண்டும்; ஸ்வ-அர்த-குசலா:—வாழ்க்கையின் நலனில் கைதேர்ந்தவர்கள்; ஹி—உண்மையில்; ஆத்ம-ப்ரிய-ஸுஹ்ருத:—உங்களையே பரமாத்மாவாகவும், பிரியமுள்ள நாயகராகவும், நண்பராகவும் ஏற்றுக் கொண்டுள்ள; ஸாதவ:—பக்தர்கள்; த்வத்-சரண-அம்புஜ-அனுஸேவாம்—உங்களுடைய திருவடித் தாமரைகளுக்குச் செய்யும் சேவையை; விஸ்ருஜந்தி—விட்டுவிட முடியும்; ந—இல்லை; யத்ர—எதில்; புன:—மீண்டும்; அயம்—இந்த; ஸம்ஸார-பர்யாவர்த:—இந்த ஜட உலகில் உள்ள பிறப்பு, இறப்பின் தொடர்ச்சி.

ஆகவே, மது என்ற அரக்கனைக் கொன்றவரே, உங்களது மகிமைகள் என்ற கடலிலிருந்து ஒரு துளி அமுதத்தை ஒரு தடவையாவது சுவைத்தவர்களின் மனங்களில் உன்னத ஆனந்தம் இடைவிடாமல் பெருக்கெடுத்தோடுகிறது. அத்தகைய சிறந்த பக்தர்கள், பௌதிகப் புலன்களான பார்வை மற்றும் ஓசை ஆகியவற்றினால் உண்டாக்கப்படும் பெயரளவேயான பெளதிக இன்பத்தின் அற்பமான நிலையை மறந்துவிடுகின்றனர். எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டுள்ள இத்தகைய பக்தர்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்மையான நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய மனங்களை உங்களிடம் அர்ப்பணித்து, உன்னத ஆனந்தத்தை, வாழ்வின் உண்மையான இலட்சியத்தை அடைவதில் நிபுணர்களாக இருக்கின்றன. பகவானே, இந்த ஜட உலகிற்குத் திரும்பி வரும் அவசியமே இல்லாத அத்தகைய பக்தர்களுக்குத் தாங்களே ஆத்மாவாகவும், உற்ற நண்பராகவும் இருக்கிறீர். உங்களுடைய பக்தித் தொண்டிலுள்ள ஈடுபாட்டை அவர்களால் எவ்வாறு விட்டுவிட இயலும்?

பதம் 6.9.40
த்ரி-புவனாத்ம-பவன த்ரிவிக்ரம த்ரி-நயன த்ரி-லோக-மனோ
ஹரானுபாவ ததைவ தவ விபூதயோ திதிஜ-தனுஜாதயஸ் சாபி தேஷாம் உபக்ரம-ஸமயோ ‘யம் இதி ஸ்வாத்ம-மாயயா ஸுர-நர-ம்ருக மிஸ்ரித- ஜலசராக்ருதிபிர் யதாபராதம் தண்டம் தண்ட-தர ததர்த்த ஏவம் ஏனம்
அபி பகவாஞ் ஜஹி த்வாஷ்ட்ரம் உத யதி மன்யஸே

த்ரி-புவன-ஆத்ம-பவன—பகவானே, தாங்கள் மூவுலகிற்கும் பரமாத்மா என்பதால் மூவுலகிற்கும் புகலிடமாவீர்; த்ரி-விக்ரம—வாமன ரூபத்தை ஏற்கும் பகவானே, உங்களுடைய சக்தியும், ஐசுவரியமும் மூவுலகிலும் பரவியுள்ளன; த்ரி-நயன—மூவுலகங்களையும் காப்பவரும், இரட்சிப்பவருமான பகவானே; த்ரி-லோக-மனோஹர-அனுபாவ—மூவுலகிலும் பேரழகு மிக்கவராக காணப்படுபவரே; தவ—உங்களுடைய; ஏவ—நிச்சயமாக; விபூதய:—சக்தியின் விரிவுகள்; திதி-ஜ-தனு-ஜ-ஆதய:—திதியின் அசுர புத்திரர்களும், மற்றொரு வகை அசுரர்களான தானவர்களும்; ச—மேலும்; அபி—(மனிதர்களும்) கூட; தேஷாம்—அவர்கள் அனைவருடைய; உபக்ரம ஸமய—பராக்கிரமம் அதிகரிக்கும் பொழுது; அயம்—இந்த; இதி—இவ்வாறு; ஸ்வ-ஆத்ம-மாயயா-உமது சுய சக்தியினால்; ஸுர-நர-ம்ருக-மிஸ்ரித-ஜலசர-ஆக்ருதிபி:—தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள், கலப்படங்கள் மற்றும் நீரினங்கள் (வாமனர், பகவான் ராமச்சந்திரர், கிருஷ்ணர், வராஹர், ஹயகிரீவர், நரசிம்மர், மத்ஸ்யர் மற்றும் கூர்மர் ஆகிய அவதாரங்கள்) போன்ற வெவ்வேறு ரூபங்களுடன்; யதா-அபராதம்—அவர்களுடைய குற்றங்களுக்கேற்ப; தண்டம்—தண்டனையை; தண்ட-தர—தண்டிப்பவருள் உயர்ந்தவரே; ததர்த—நீங்கள் அளிக்கிறீர்கள்; ஏவம்—இவ்வாறு; ஏனம்—இவனை (விருத்திரனை); அபி—கூட; பகவன்—பரமபுருஷரே; ஜஹி—கொன்றுவிடுங்கள்; த்வாஷ்ட்ரம்—துவஷ்டாவின் மகனான; உத—நிச்சயமாக; யதி-மன்யஸே—நீங்கள் சரியென்று கருதினால்.

பகவானே, மூவுலகங்களின் வடிவானவரே! மூவுலகிற்கும் தந்தையே! வாமன அவதாரத்தின் உருவில் மூவுலகிற்கும் பலமாக இருப்பவரே! முக்குண மூர்த்தியாகிய நரசிம்மதேவரே! மூவுலகிலும் பேரழகு மிக்கவரே! மனிதர்களும், தைதிய மற்றும் தானவர்களும் உட்பட அனைவரும், அனைத்தும் உங்களுடைய சக்தியின் ஒரு விரிவேயாகும். அசுரர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக மாறிய உடனேயே அவர்களைத் தண்டிப்பதற்காக நீங்கள் பல்வேறு அவதாரங்களாகத் தோன்றுகிறீர்கள். நீங்கள் பகவான் வாமன தேவராகவும், பகவான் ராமராகவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணராகவும் தோன்றுகிறீர்கள். சிலசமயங்களில் நீங்கள் பகவான் வராகரைப் போன்ற ஒரு மிருகமாகவும், சிலசமயங்களில் பகவான் நரசிம்மர் மற்றும் பகவான் ஹயகிரீவர் போன்ற கலப்படமுள்ள அவதாரமாகவும் மற்றும் சிலசமயங்களில் மச்சம் மற்றும் கூர்மம் போன்ற ஒரு நீரினமாகவும் தோன்றுகிறீர்கள். தாங்கள் இத்தகைய ரூபங்களை ஏற்று அசுரர்களையும், தானவர்களையும் எப்பொழுதும் தண்டித்து வந்திருக்கீறீர்கள். ஆகவே இன்று தாங்கள் விரும்பினால், பெரிய அசுரனான விருத்ராசுரனைக் கொல்லும் பொருட்டு மற்றொரு அவதாரமாகத் தோன்ற வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

பதம் 6.9.41
அஸ்மாகம் தாவகானாம் தததத நதானாம் ஹரே தவ சரண-நலின-
யுகல-த்யானானுபத்த-ஹ்ருதய-நிகடானாம் ஸ்வ-லிங்க-விவரணே னாத்மஸாத்-கருதானாம் அனுகம்பானுரஞ்ஜித-விசத-ருசிர-சிசிர-ஸ்மிதாவலோகேன- விகலித-மதுர-முக-ரஸாம்ரு-கலயா சாந்தஸ்
தாபம் அனகார்ஹஸி சமயிதும்

அஸ்மாகம்—எங்களுடைய; தாவகானாம்—உங்களையே முழுமையாகச் சார்ந்துள்ள; தத-தத—தந்தைக்குத் தந்தையாக பாட்டனாரே (பரமபிதாவே); நதானாம்—உங்களிடம் பூரண சரணடைந்துள்ள; ஹரே—பகவான் ஹரியே; தவ—உங்களுடைய; சரண—பாதங்களில்; நலின-யுகல—இரு நீலத் தாமரைகள் போன்ற; த்யான—தியானிப்பதால்; அனுபத்த—பிணைக்கப்பட்டுள்ளன; ஹ்ருதய—இதயத்தில்; நிகடானாம்—யாருடைய சங்கிலிகள்; ஸ்வ-லிங்க-விவரணேன—உங்களுடைய சுய ரூபத்தைத் தோற்றுவிப்பதன் மூலம்; அத்மஸாத்-க்ருதானாம்—உங்களுக்குச் சொந்தமானவர்களாக உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களின்; அனுகம்பா—அருள்கூர்ந்து; அனுரஞ்ஜித—வர்ணமுடைய; விசத—பிரகாசமான; ருசிர—இனிமையான; சிசிர—இதமான; ஸ்மித—புன்சிரிப்புடன்; அவலோகேன—உங்களுடைய பார்வையால்; விகலித—இரக்கத்தினால் உருகும்; மதுர-முக-ரஸ—உங்கள் வாயிலிருந்து வெளிப்படும் இனிய வார்த்தைகளின்; அம்ருத-கலயா—அமுதத் துளிகளால்; ச—மேலும்; அந்த:—எங்களுடைய இதயங்களுள்; தாபம்—பெரும் வேதனையை; அனக—பவித்திரமானவரே; அர்ஹஸி—நீங்கள் தகுதயுடையவர்; சமயிதும்—தடுக்க.

பரம இரட்சகரே, பரம பிதாவே, பவித்திரமானவரே, பகவானே! நாங்களனைவரும் உங்களுடைய திருவடித் தாமரைகளில் சரணடைந்த ஆத்மாக்கள். உண்மையில் எங்களுடைய மனங்கள் தியான நிலையில் அன்புச் சங்கிலியால் உங்களுடைய தாமரைப் பாதங்களில் பிணைக்கப்பட்டுள்ளன. அருள்கூர்ந்து உங்களுடைய அவதாரத்தை இப்பொழுது காட்டியருள வேண்டும். எங்களை உங்களது நித்திய சேவகர்களாகவும், பக்தர்களாகவும் ஏற்று திருப்தியடைந்து, எங்களிடம் இரக்கம் காட்ட வேண்டுகிறோம். உங்களுடைய இதமான, இனிமையான பாசப் புன்சிரிப்புடனும், உங்களுடைய அழகிய திருமுகத்திலிருந்து வெளிப்படும் அமுத வார்த்தைகளுடனும் கூடிய அன்பு ததும்பும் பார்வையால், எப்பொழுதும் எங்களுடைய இதயங்களை நோகடிக்கும் இந்த விருத்ராசுரனால் ஏற்படும் பெரும் கவலையிலிருந்து எங்களை விடுவித்தருளுங்கள்.

பதம் 6.9.42
அத பகவம்ஸ் தவாஸ்மாபிர் அகில-ஜகத்-உத்பத்தி-ஸ்திதி-லய-நிமித்தாயமான-திவ்ய-மாயா-வினோதஸ்ய ஸகல-ஜீவ-நிகாயானாம் அந்தர்-ஹ்ருதயேஷு பஹிர் அபி ச ப்ரஹ்ம-ப்ரத்யக்-ஆத்ம-ஸ்வருபேண ப்ரதான-ரூபணே ச யதா-தேச-கால-தேஹாவஸ்தான-விசேஷம்தத்-உபாதனோலம்பகதயானுபவத: ஸர்வ-ப்ரத்யய-ஸாக்ஷிண ஆகாச-சரீரஸ்ய ஸாக்ஷாத் பர-ப்ரஹ்மண: பரமாத்மன: கியான் இஹ வார்த-விசேஷோ விக்ஞாபனீய: ஸ்யாத் விஸ்ஃபுலிங்காதிபிர் இவ ஹிரண்ய-ரேதஸ:

அத—ஆகவே; பகவன்—பகவானே; தவ—உங்களுடைய; அஸ்மாபி:—எங்களால்; அகில—அகில; ஜகத்—ஜட உலகின்; உத்பத்தி—சிருஷ்டியின்; ஸ்திதி—காத்தலின்; லய—மற்றும் அழித்தலின்; நிமித்தாயமான—காரணமாக இருப்பதால்; திவ்ய மாயா—ஆன்மீக சத்தியுடன்; வினோதஸ்ய—தானாக குதூகலமடையும் உங்களின்; ஸகல—எல்லா; ஜீவ-நிகாயானாம்—ஜீவராசிகளுடைய கும்பல்களின்; அந்த:-ஹ்ருதயேஷு—இதயங்களின் ஆழத்தில்; பஹி: அபி—புறமாகவும் கூட; ச—மேலும்; ப்ரஹ்ம—அருவ பிரம்மனின், அல்லது பரம சத்தியத்தின்; ப்ரத்யக்-ஆத்ம—பரமாத்மாவின்; ஸ்வ-ரூபேண—உங்களுடைய ரூபங்களினால்; ப்ரதான-ரூபேண—புற மூலப்பொருட்களாக உள்ள உங்களுடைய ரூபங்களால்; ச—கூட; யதா—அதற்கேற்ப; தேச-கால-தேஹ-அவஸ்தான—தேசம், காலம், உடல் மற்றும் நிலை ஆகியவற்றின்; விசேஷம்—விவரங்கள்; தத்—அவற்றின்; உபாதான—பௌதிக காரணங்களை; உபலம்பகதயா—வெளிப்படுத்துபவராக இருப்பதன் மூலம்; அனுபவத:—பார்க்கிறீர்கள்; ஸர்வ-ப்ரத்யய-ஸாக்ஷிண:—வெவ்வேறான அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக இருந்து கொண்டு; ஆகாச-சரீரஸ்ய—முழு பிரபஞ்சத்தின் பரமாத்மா; ஸாக்ஷாத்—நேரிடையாக; பர-ப்ரஹ்மண:—பரப்பிரம்மன்; பரமாத்மன:—பரமாத்மா; கியான்—எந்த அளவின்; இஹ—இவ்விடத்தில்; வா—அல்லது; அர்த-விசேஷ:—விசேஷ தேவையை; விக்ஞாபனீய:—எடுத்துக்கூற வேண்டியது; ஸ்யாத்—இருக்கக்கூடும்; விஸ்ஃபுலிங்க-ஆதிபி:—நெருப்புப் பொறிகளால்; இவ—போல; ஹிரண்ய-ரேதஸ:—மூல நெருப்பிடம்.

பகவானே, எப்படி சிறு நெருப்புப் பொறிகளால் முழு நெருப்பின் செயல்களைச் செய்ய முடியாதோ அப்படியே தங்களுடைய பொறிகளான எங்களால் எங்களுடைய வாழ்வின் தேவைகளைப் பற்றி எடுத்துக் கூற முடியாது. தாங்கள் பூரண முழுமையாவீர். ஆகவே, நாங்கள் உங்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய அவசியமேயில்லை. தாங்கள் பிரபஞ்ச தோற்றத்தின் மூல காரணமும், அதைப் பராமரிப்பவரும், பிறகு அதை அழிப்பவரும் ஆவீர். எனவே உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய ஜட மற்றும் ஆன்மீக சக்திகளை ஆள்பவர் என்பதால், இந்த சக்திகளுடன் எப்பொழுதும் நீங்கள் லீலைகள் புரிவதில் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும், பிரபஞ்ச தோற்றத்திற்குள்ளும், இவற்றிற்கு அப்பாலும் இருக்கிறீர்கள். நீங்கள் உள்ளே பரப்பிரம்மனாகவும் வெளியே பௌதிக சிருஷ்டியின் மூலப் பொருட்களாகவும் இருக்கிறீர்கள். எனவே வெவ்வேறு காலங்களிலும், இடங்களிலும், பல்வேறு உடல்களிலும், பல்வேறு நிலைகளில் நீங்கள் தோன்றிய போதிலும், பரமபுருஷராகிய நீங்கள் எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமாவீர். உண்மையில், தாங்களே ஆதியான மூலப் பொருளாகவும் இருக்கிறீர். நீங்களே அனைத்து செயல்களுக்கும் சாட்சியுமாவீர். ஆனால் நீங்கள் ஆகாயம் போல் எங்கும் பரந்து நிற்பதால் அச்செயல்களினால் ஒருபோதும் நீங்கள் தொடப்படுவதில்லை. நீங்கள் பரப்பிரம்மன் மற்றும் பரமாத்மாவாக இருந்து கொண்டு அனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறீர்கள். பரமபுருஷரே உங்களுக்குத் தெரியாதது ஏதும் இல்லை.

பதம் 6.9.43
அத ஏவ ஸ்வயம் தத் உபகல்பயாஸ்மாகம் பகவத: பரம-குரோஸ் தவ சரண-சத-பலாசச் சாயாம் விவித-வ்ருஜின-ஸம்ஸார-பரிஸ்ரமோபசமனீம் உபஸ்ருதானாம் வயம் யத்-காமேனோப ஸாதிதா:

அத ஏவ—ஆகவே; ஸ்வயம்—நீங்களே; தத்—அதை; உபகல்பய—தயவுகூர்ந்து ஏற்பாடு செய்யுங்கள்; அஸ்மாகம்—எங்களுடைய; பகவத:—பரமபுருஷரின்; பரம-குரோ:—பரம குருவான; தவ—உங்களின்; சரண—பாதங்களின்; சத-பலாசத்—ஆயிரக்கணக்கான இதழ்களுடன் கூடிய தாமரை மலர்கள் போல்; சாயாம்—நிழல்; விவித—பல்வேறு; வ்ருஜின—ஆபத்தான நிலைகளுடன்; ஸம்ஸார—இந்த பந்தப்பட்ட வாழ்வின்; பரிஸ்ரம—துன்பத்தை; உபசமனீம்—அகற்றி; உபஸ்ருதானாம்—உங்களுடைய தாமரைப் பாதங்களில் தஞ்சமடைந்துள்ள பக்தர்களான; வயம்—நாங்கள்; யத்—எதற்காக; காமேன—ஆசைகளால்; உபஸாதிதா:—(உங்களுடைய தாமரைப் பாதங்களின் புகலிடத்தை) நெருங்கச் செய்யும்.

பகவானே, நீங்கள் சர்வக்ஞர் என்பதால், எல்லா பெளதிகத் தொல்லைகளிலிருந்தும் விடுதலையளிக்கும் உங்களுடைய தாமரைப் பாதங்களில் எதற்காக நாங்கள் சரணடைந்திருக்கிறோம் என்பதை நன்கு அறிவீர்கள். அனைத்தும் அறிந்தவரான நீங்கள் பரம ஆன்மீக குரு என்பதால், நல்ல அறிவுரைக்காக உங்களுடைய பத்மபாதங்களை நாங்கள் தஞ்சமடைந்துள்ளோம். தயவுகூர்ந்து எங்களுடைய தற்போதைய துன்பத்தை அகற்றி எங்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள். உங்களுடைய தாமரைத் திருவடிகள் மட்டுமே, பூரண சரணாகதியடைந்த ஒரு பக்தனுக்கு அடைக்கலமாகும். அப்பாதங்களே இந்த ஜட உலக துன்பங்களையெல்லாம் அடக்குவதற்குரிய ஒரே வழியாகும்.

பதம் 6.9.44
அதோ ஈச ஜஹி த்வாஷ்ட்ரம் க்ரஸந்தம் புவன-த்ரயம்
க்ரஸ்தானி யேன ந: க்ருஷ்ண தேஜாம்ஸி அஸ்த்ராயுதானி ச

அதோ—ஆகவே; ஈச—பரம ஆளுனரே; ஜஹி—கொன்று விடுங்கள்; த்வாஷ்ட்ரம்—துவஷ்டாவின் மகனான விருத்ராசுரனை; க்ரஸந்தம்—விழுங்கும்; புவன-த்ரயம்—மூவுலகங்களும்; க்ரஸ்தானி—விழுங்கப்பட்டனவோ; யேன—யாரால்; ந:—எங்களுடைய; க்ருஷ்ண—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே; தேஜாம்ஸி—எல்லா பலத்தையும், வீரத்தையும்; அஸ்த்ர—அம்புகள்; ஆயுதானி—மற்றும் பிற ஆயுதங்களையும்; ச—கூட.

ஆகவே பகவானே, பரம ஆளுனராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, தயவுகூர்ந்து பயங்கர அசுரனாகிய இந்த விருத்ராசுரனை அழித்து விடுங்கள். துவஷ்டாவின் மகனான இவன், எங்களுடைய எல்லா ஆயுதங்களையும், போர் உபகரணங்களையும், எங்களுடைய பலத்தையும், செல்வாக்கையும் ஏற்கனவே விழுங்கிவிட்டான்.

பதம் 6.9.45
ஹம்ஸாய தஹ்ர-நிலயாய நிரீக்ஷகாய
க்ருஷ்ணாய ம்ருஷ்ட-யசஸே நிருபக்ரமாய
ஸத்-ஸம்க்ரஹாய பவ-பாந்த-நிஜாஸ்ரமாப்தாவ்
அந்தே பரீஷ்ட-கதயே ஹரயே நமஸ் தே

ஹம்ஸாய—மிகச்சிறந்தவருக்கு (மிகவும் பவித்ரமானவருக்கு, பவித்ரம் பரமம்); தஹ்ர—இதயத்தின் ஆழத்தில்; நிலயாய—யாருடைய இருப்பிடம்; நிரீக்ஷகாய—தனிப்பட்ட ஆத்மாக்களின் செயல்களைக் கண்காணித்துக் கொண்டு; க்ருஷ்ணாய—ஸ்ரீ கிருஷ்ணரின் ஓர் அம்சமான பரமாத்மாவிற்கு; ம்ருஷ்ட-யசஸே—யாருடைய கீர்த்தி மிகவும் பிரகாசமானதோ; நிருபக்ரமாய—ஆரம்பம் இல்லாதவர்; ஸத்-ஸம்க்ரஹாய—தூய பக்தர்களால் மட்டுமே அறியப்படுபவர்; பவ-பாந்த-நிஜ-ஆஸ்ரம-ஆப்தௌ—ஜட உலகிலுள்ள மனிதர்களுக்கு அடைக்கலமான ஸ்ரீ கிருஷ்ணர்; அந்தே—இறுதி முடிவில்; பரீஷ்ட-கதயே—இறுதி இலட்சியமும், வாழ்வின் மிக உயர்ந்த வெற்றியுமான அவருக்கு; ஹரயே—பரமபுருஷருக்கு; நம:—பணிவான வணக்கங்கள்; தே—உங்களுக்கு.

பகவானே, பவித்திரமானவரே, நீங்கள் எல்லோருடைய இதயங்களிலும் இருந்து கொண்டு, பந்தப்பட்ட ஆத்மாக்களின் எல்லாச் செயல்களையும், எல்லா ஆசைகளையும் கவனிக்கிறீர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்று அறியப்படும் பரமபுருஷரே, உங்களுடைய கீர்த்தி பிரகாசமானதும் சந்தேகங்களைப் போக்குவதுமாகும். நீங்களே அனைத்திற்கும் ஆரம்பம் என்பதால் உங்களுக்கு ஆரம்பம் என்பதில்லை. நீங்கள் உண்மையுள்ள தூய பக்தர்களால் சுலபமாக அடையப்படக் கூடியவர் என்பதால், இது தூய பக்தர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது. பந்தப்பட்ட ஆத்மாக்கள் பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு ஜட உலகம் முழுவதிலும் சுற்றித் திரிந்த பிறகு, முக்தி பெற்று உங்களுடைய தாமரைப் பாதங்களில் தஞ்சமடையும் பொழுது, வாழ்வின் மிக உயர்ந்த வெற்றியை அடைந்தவர்கள் ஆகின்றனர். ஆகவே பகவானே, பரமபுருஷரே, தங்களுடைய திருவடித் தாமரைகளுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்.

பதம் 6.9.46
ஸ்ரீ-சுக உவாச
அதைவம் ஈடிதோ ராஜன் ஸாதரம் த்ரி-தசைர் ஹரி:
ஸ்வம் உபஸ்தானம் ஆகர்ண்ய ப்ராஹ தான் அபினந்தித:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அத—அதன்பிறகு; ஏவம்—இவ்வாறாக; ஈடித:—வணங்கி, பூஜிக்கப்படுவதால்; ராஜன்—அரசே; ஸ-ஆதரம்—தகுந்த மரியாதையுடன்; த்ரி-தசை—உயர்கிரக அமைப்புகளிலுள்ள எல்லாத் தேவர்களாலும்; ஹரி:—பரமபுருஷர்; ஸ்வம் உபஸ்தானம்—அவரைத் துதிக்கும் அவர்களுடைய பிரார்த்தனைகளை; ஆகர்ண்ய—கேட்டு; ப்ராஹ—பதிலளித்தார்; தான்—அவர்களுக்கு (தேவர்களுக்கு); அபிநந்தித:—திருப்தியடைந்து.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, தேவர்கள் பகவானிடம் தங்களுடைய உண்மையான பிரார்த்தனைகளை இவ்வாறு செய்தபொழுது, பகவானும் அவரது காரணமற்ற கருணையினால் அவர்களுடைய பிரார்த்தனைகளைக் கேட்டு திருப்தியடைந்து, தேவர்களிடம் பின்வருமாறு பதிலளித்தார்.

பதம் 6.9.47
ஸ்ரீ பகவான் உவாச
ப்ரீதோ ‘ஹம் வ: ஸுர ஸ்ரேஷ்டா மத் உபஸ்தான வித்யயா
ஆத்மைஸ்வர்ய ஸ்ம்ருதி: பும்ஸாம் பக்திஸ் சைவ யயா மயி

ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷர் கூறினார்; ப்ரீத:—திருப்தியடைந்தேன்; அஹம்—நான்; வ:—உங்களுடைய; ஸுர-ஸ்ரேஷ்டா:—தேவர்களில் சிறந்தவர்களே; மத்-உபஸ்தான-வித்யயா—உங்களுடைய மேலான அறிவினாலும், என்னிடம் செய்யப்பட்ட பிரார்த்தனைகளாலும்; ஆத்ம-ஐஸ்வர்ய-ஸ்ம்ருதி:—பரம புருஷராகிய என்னுடைய மேலான உன்னத நிலையைப் பற்றிய நினைவு; பும்ஸாம்—மனிதர்களின்; பக்தி:—பக்தித் தொண்டு; ச—மேலும்; ஏவ—நிச்சயமாக; யயா—எதனால்; மயி—எனக்கு.

பரமபுருஷர் கூறினார்; பிரயமுள்ள தேவர்களே, நீங்கள் சிறந்த அறிவுடன் என்னிடம் பிரார்த்தனை செய்ததால், நான் மிகவும் திருப்தியடைந்தேன். இத்தகைய அறிவினால் ஒருவன் முக்தியடைகிறான். இவ்வாறாக பௌதிக வாழ்வின் நிலைகளுக்கும் மேலானதான எனது உன்னத நிலையை அவன் நினைவுபடுத்திக் கொள்கிறான். இத்தகைய ஒரு பக்தன், பூரண அறிவு நிலையில் பிரார்த்தனைகள் செய்வதால், முழுமையாகத் தூய்மையடைகிறான். இப்பூரண அறிவே எனது பக்தித் தொண்டின் பிறப்பிடமாகும்.

பதம் 6.9.48
கிம் துராபம் மயி ப்ரீதே ததாபி விபுதர்ஷபா:
மய் ஏகாந்த-மதிர் நான்யன் மத்தோ வாஞ்சதி தத்வ-வித்

கிம்—என்ன; துராபம்—அடைவதற்குக் கடினமானது; மயி—நான்; ப்ரீதே—திருப்தியடையும் பொழுது; ததாபி—இருப்பினும்; விபுத-ரிஷபா:—அறிவுமிக்க தேவர்களுள் சிறந்தவர்களே; மயி—என்னில்; ஏகாந்த—பிரத்தியேகமாகப் பதித்துள்ள; மதி:—மனதை; ந அன்யத்—வேறெதையும் இல்லை; மத்த:—என்னைத் தவிர; வாஞ்சதி—விரும்புகிறான்; தத்வ-வித்—உண்மையை அறிந்தவன்.

அறிவுமிக்க தேவர்களுள் சிறந்தவர்களே, நான் ஒருவனிடம் திருப்தியடையும் பொழுது, அவனால் அடையப்படுவதற்குக் கடினமானது எதுவுமில்லை என்றாலும், தன் மனதைப் பிரத்தியேகமாக என்னிடம் பதித்துள்ள ஒரு தூய பக்தன், பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைத் தவிர வேறெதையும் என்னிடமிருந்து கேட்பதில்லை.

பதம் 6.9.49
ந வோ க்ருபண: ஸ்ரேய ஆத்மனோ குண வஸ்து-த்ருக்
தஸ்ய தான் இச்சதோ யச்சேத் யதி ஸோ ‘பி ததா-வித:

ந—இல்லை; வேத—அறிகிறான்; க்ருபண:—உலோப குணமுள்ள ஒரு ஜீவராசி; ஸ்ரேய:—முடிவான தேவை; ஆத்மன:—ஆத்மாவின்; குண-வஸ்து-த்ருக்—ஜட இயற்கைக் குணங்களின் படைப்பினால் கவரப்பட்டுள்ள; தஸ்ய—அவனுடைய; தான்—ஜட சக்தியால் படைக்கப்பட்ட பொருட்களை; இச்சத:—விரும்பும்; யச்சேத்—ஒருவன் அளிப்பான்; யதி—என்றால்; ஸ: அபி—அவனும்; ததா-வித:—அப்படிப்பட்டவனை (தனது உண்மையான நலனைப் பற்றி அறியாத, முட்டாளான ஒரு கருமி).

பெளதிக ஆஸ்திகளையே அனைத்துமாக, அல்லது வாழ்வின் முடிவான இலட்சியமாக நினைப்பவர்கள் கருமிகள் (க்ருபணர்கள்) என்று அழைக்கப்படுகின்றனர். ஆத்மாவின் முடிவான தேவையை அவர்கள் அறியவில்லை. மேலும் இத்தகைய மூடர்களால் விரும்பப்படுவதை ஒருவன் அளிப்பானாயின், அவனையும் ஒரு மூடனாகவே கருத வேண்டும்.

பதம் 6.9.50
ஸ்வயம் நிஹ்ஸ்ரேயஸம் வித்வான் ந வக்தி அக்ஞாய கர்ம ஹி
ந ராதி ரோகிணோ ‘பத்யம் வாஞ்சதோ ‘பி பிஷக்தம

ஸ்வயம்—சுயமாக; நிஹ்ஸ்ரேயஸம்—வாழ்வின் பரம இலக்கை அதாவது பரமபுருஷருடைய பரவச அன்பை அடைவதற்கான மார்க்கத்தை; வித்-வான்—பக்தித் தொண்டில் தேர்ச்சியடைந்தவர்; ந—இல்லை; வக்தி—போதிக்கிறார்; அக்ஞாய—வாழ்வின் முடிவான இலட்சியத்தை அறியாத ஒரு மூடனுக்கு; கர்ம—கருமங்களை; ஹி—உண்மையில்; ந—இல்லை; ராதி—கொடுக்கிறார்; ரோகிண:—நோயாளிக்கு; அபத்யம்—உட்கொள்ளத்தகாத ஒன்றை; வாஞ்சத:—விரும்பிய; அபி—போதிலும்; பிஷக்-தம:—அனுபவசாலியான ஒரு மருத்துவர்.

பக்தித் தொண்டு விஞ்ஞானத்தில் நன்கு தேர்ச்சியடைந்த ஒரு தூய பக்தர், பெளதிக சுகத்திற்கான பலன் கருதும் செயல்களில் ஈடுபடும்படி ஒரு முட்டாளுக்கு ஒரு போதும் உபதேசிக்கமாட்டார். அப்படியிருக்க அத்தகைய செயல்களில் அவனுக்கு உதவுவது என்ற பேச்சுக்கு இடமேயில்லை. அத்தகைய ஒரு பக்தர் அனுபவமுள்ள ஒரு மருத்துவரைப் போன்றவராவார். அந்த மருத்துவர் நோயாளி ஆசைப்பட்டாலும் அவனுக்குக் கெடுதல் விளைவிக்கும் உணவை உண்ணும்படி ஒருபோதும் அவனை ஊக்குவிக்கமாட்டார்.

பதம் 6.9.51
மகவன் யாத பத்ரம் வோ தத்யஞ்சம் ரிஷி-ஸத்தமம்
வித்யா-வ்ரத-தப-ஸாரம் காத்ரம் யாசத மா சிரம்

மகவன்—இந்திரா; யாத—செல்; பத்ரம்—மங்களம் உண்டாகட்டும்; வ:—உங்களனைவருக்கும்; தத்யஞ்சம்—தத்யஞ்சரிடம்; ரிஷி ஸத்-தமம்—மிகச்சிறந்த முனிவரான; வித்யா—கல்வியின்; வ்ரத—விரதத்தின்; தப:—தவத்தின்; ஸாரம்—சாரமான; காத்ரம்—அவரது உடலை; யாசத—கேளுங்கள்; மா சிரம்—தாமதமின்றி.

ஓ மகவன் (இந்திரா), உனக்கு மங்களம் உண்டாகட்டும். சிறந்த முனிவரான தத்யஞ்சரை (ததீசி) நீ அணுகவேண்டும் என்று நான் உனக்கு அறிவுரை கூறுகிறேன். அவர் அறிவிலும், தவ விரதங்களிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர். அவரது உடலும் மிகவும் வலிமையுடையது. தாமதமின்றி அவரிடம் சென்று அவரது உடலை நீ கேட்டுப் பெற வேண்டும்.

பதம் 6.9.52
ஸ வா அதிகதோ தத்யங் அஸ்விப்யாம் ப்ரஹ்ம நிஷ்கலம்
யத் வா அஸ்வசிரோ நாம தயோர் அமரதாம் வ்யதாத்

ஸ:—அவர்; வா—நிச்சயமாக; அதிகத:—அடைந்திருப்பதால்; தத்யந்—தத்யஞ்சர்; அஸ்விப்யாம்—இரு அஸ்வினி குமாரர்களுக்கு; ப்ரஹ்ம—ஆன்மீக ஞானத்தை; நிஷ்கலம்—தூய; யத்-வா—எதனால்; அஸ்வசிர:—அஸ்வசிரம்; நாம—என்ற பெயருடையதாயிற்று; தயோ:—அவ்விருவரும்; அமரதாம்—இப்பிறவியிலேயே முக்தி; வ்யதாத்—அளிக்கப்பட்டனர்.

ததீசி என்றும் அறியப்படுபவரான அந்த தத்யஞ்சர், ஆன்மீக விஞ்ஞானத்தை தன்மயமாக்கிக் கொண்ட பிறகு, அதை அஸ்வினி-குமாரர்களுக்கு அளித்தார். தத்யஞ்சர் ஒரு குதிரைத் தலையின் மூலமாக அவர்களுக்கு மந்திரங்களை அளித்ததாக கூறப்படுகிறது. ஆகவே அம்மந்திரங்கள் அஸ்வசிரம் என்று அழைக்கப்படுகின்றன. ஆன்மீக விஞ்ஞானத்தின் மந்திரங்களை ததீசியிடமிருந்து பெற்ற பிறகு, அஸ்வினி-குமாரர்கள் ஜீவன்-முக்தர்கள் ஆயினர். அதாவது, இப்பிறவிலேயே முக்தி பெற்றவர்களாக இருந்தனர்.

பதம் 6.9.53
தத்யந் அதர்வணஸ் த்வஷ்ட்ரே வர்மா பேத்யம் மத்-ஆத்மகம்
விஸ்வரூபாய யத் ப்ராதாத் த்விஷ்டா யத் த்வம் அதாஸ் தத:

தத்யந்—தத்யஞ்சர்; அதர்வண:—அதர்வாவின் மகனான; த்வ ஷ்ட்ரே—துவஷ்டாவிற்கு; வர்ம—நாராயண பாதுகாப்புக் கவசம்; அபோத்யம்—வெல்ல முடியாத; மத்-ஆத்மகம்—என்னைக் கொண்டதான; விஸ்வரூபாய—விஸ்வரூபருக்கு; யத்—எது; ப்ராதாத்—கொடுக்கப்பட்டது; த்வஷ்டா—துவஷ்டா; யத்—எது; த்வம்—நீ; அதா:—பெற்றாய்; தத:—அவரிடமிருந்து.

வெல்ல முடியாததான தத்யஞ்சரின் நாராயண பாதுகாப்புப் கவசம் துவஷ்டாவிடம் கொடுக்கப்பட்டது. அவரும் அதை அவரது மகனான விஸ்வரூபருக்குக் கொடுத்தார். அவரிடமிருந்து அதை நீ பெற்றுக் கொண்டாய். இந்த நாராயண-கவசத்தினால் ததீசியின் உடல் இப்பொழுது வஜ்ரம் பாய்ந்ததாக உள்ளது. எனவே நீ அவரிடம் சென்று அவரது உடலை யாசிக்க வேண்டும்.

பதம் 6.9.54
யுஷ்மப்யம் யாசிதோ ‘ஸ்விப்யாம் தர்ம-க்ஞோ ‘ங்கானி தாஸ்யதி
ததஸ் தைர் ஆயுத-ஸ்ரேஷ்டோ விஸ்வகர்ம-வினிர்மித:
யேன வ்ருத்ர-சிரோ ஹர்தா மத்-தேஜ-உபப்ரும்ஹித:

யுஷ்மப்யம்—உங்கள் அனைவருக்காக; யாசிது:—கேட்கப்பட்டு; அஸ்விப்யாம்—அஸ்வினி குமாரர்களால்; தர்ம-ஞ:—தர்மமறிந்த ததீசி; அங்கானி—அவரது அங்கங்களை; தாஸ்யதி—கொடுப்பார்; தத:—அதன்பிறகு; தை:—அந்த எலும்புகளால்; ஆயுத—ஆயுதங்களின்; ஸ்ரேஷ்ட:—மிகவும் சக்திவாய்ந்த (வஜ்ராயுதம்); விஸ்வகர்ம- வினிர்மித:—விஸ்வகர்மாவால் தயாரிக்கப்படும்; யேன—எதனால்; வ்ருத்ர-சிர:—விருத்ராசுரனின் தலை; ஹர்தா—பறிக்கப்படும்; மத்-தேஜ:—எனது பலத்தினால்; உபப்ரும்ஹித:—அதிகரிக்கும்.

அஸ்வினி-குமாரர்கள் உன் சார்பாக தத்யஞ்சரின் உடலை யாசிக்கும் பொழுது அன்பின் காரணத்தால் அதை அவர் நிச்சயமாக கொடுத்துவிடுவார். இதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் தத்யஞ்சர் சமயப் புரிந்துணர்வில் மிகவும் அனுபவசாலியாவார். தத்யஞ்சர் அவரது உடலை உனக்குக் கொடுத்ததும், அவரது எலும்புகளிலிருந்து ஒரு வஜ்ராயுதத்தை விஸ்வகர்மா தயாரிப்பார். அந்த வஜ்ராயுதம் என்னுடைய சக்தியைக் கொண்டிருக்கும் என்பதால் இது விருத்ராசுரனை நிச்சயம் கொன்றுவிடும்.

பதம் 6.9.55
தஸ்மின் வினிஹதே யூயம் தேஜோ-‘ஸ்த்ராயுத-ஸம்பத:
பூய: ப்ராப்ஸ்யத பத்ரம் வோ ந ஹிம்ஸந்தி ச மத்-பரான்

தஸ்மின்—அவன் (விருத்ராசுரன்); வினிஹதே—கொல்லப்படும் பொழுது; யூயம்—நீங்களனைவரும்; தேஜ:—சத்தியையும்; அஸ்த்ர—அம்புகளையும்; ஆயுத—பிற ஆயுதங்களையும்; ஸம்பத:—ஐசுவரியத்தையும்; பூய:—மீண்டும்; ப்ராப்ஸ்யத—அடைவீர்கள்; பத்ரம்—மங்களம் உண்டாகட்டும்; வ:—உங்களுக்கு; ந—இல்லை; ஹிம்ஸந்தி—துன்புறுத்துவான்; ச—கூட; மத்-பரான்—என் பக்தர்கள்.

எனது ஆத்ம பலத்தினால் விருத்ராசுரன் கொல்லப்பட்டதும், நீ உன்னுடைய பலத்தையும், செல்வத்தையும், ஆயுதங்களையும் திரும்பப் பெறுவாய். இவ்வாறாக உங்கள் அனைவருக்கும் மங்களம் உண்டாகும். விருத்ராசுரனால் மூவுலங்களையும் அழித்துவிட முடியும் என்றாலும், உனக்கு அவன் தீங்கிழைப்பான் என்று அஞ்ச வேண்டாம். அவனும் ஒரு பக்தன்தான். அவன் ஒருபோதும் உன்னிடம் பொறாமை கொள்ள மாட்டான்.


ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “விருத்ராசுரனின் தோற்றம்” எனும் தலைப்பை கொண்ட ஒன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare