அத்தியாயம் – 9
விருத்தாசுரனின் தோற்றம்
பதம் 6.9.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, தேவர்களின் புரோகிதராக நியமிக்கப்பட்ட விஸ்வரூபருக்கு மூன்று தலைகள் இருந்தன. அதில் ஒன்றை ஸோம பானம் பருகவும், மற்றொன்றை மதுபானம் பருகவும், மூன்றாவதை உணவு உட்கொள்ளவும் அவர் உபயோகித்தார் என்று அதிகாரிகளிடமிருந்து நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

பதம் 6.9.2 : பரீட்சித்து மகாராஜனே, தேவர்கள், விஸ்வரூபருடைய தந்தைக்கு உறவினர்கள் என்பதால், விஸ்வரூபர் இந்திராய இதம் ஸ்வாஹா “இது இந்திரனுக்குரியது”) மற்றும் இதம் அக்னயே (“இது அக்னி தேவனுக்குரியது”) போன்ற மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே யாகத் தீயில் வெளிப்படையாக நெய்யை ஊற்றினார். அவர் இம்மந்திரங்களை உரக்க உச்சரித்தபடி, ஒவ்வொரு தேவருக்கும் சேர வேண்டிய அவரவர் பாகத்தை அளித்தார்.

பதம் 6.9.3 : அவர் தேவர்களின் பெயரால் வேள்வித் தீயில் நெய்யை வார்த்த போதிலும், அசுரர்கள் அவரது தாய்வழி உறவினர்கள் என்பதால் அவர் தேவர்களுக்குத் தெரியாமல் அசுரர்களுக்கும் பாகத்தை அளித்தார்.

பதம் 6.9.4 : ஆனால் ஒரு சமயம், விஸ்வரூபர் தேவர்களுக்குத் தெரியாமல் அசுரர்களின் சார்பாக இரகசியமாக வேள்வித் தீயில் நிவேதனம் செய்வதை இந்திரன் புரிந்து கொண்டார். இதனால் அசுரர்களால் தோற்கடிக்கப்படுவோமோ என்று மிகவும் அச்சமடைந்த இந்திரன், விஸ்வரூபரிடம் மிகவும் கோபங் கொண்டு அவருடைய மூன்று தலைகளையும் வெட்டிவிட்டார்.

பதம் 6.9.5 : அதன்பிறகு, ஸோம பானம் பருகுவதற்குரிய தலை கபிஞ்ஜலமாக (கௌதாரியாக) மாற்றப்பட்டது. அதுபோலவே மதுபானம் பருகுவதற்குரிய தலை கலவிங்கமாக (சிட்டுக்குருவியாக) மாற்றப்பட்டது. உணவு உண்பதற்குரிய தலை தித்திரிப் பறவையாக மாற்றப்பட்டது.

பதம் 6.9.6 : ஒரு பிராமணரைக் கொன்றதற்கான பாவ விளைவுகளை நிஷ்பலப்படுத்தும் அளவிற்கு இந்திரன் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்த போதிலும், அவர் தன் பாவச் செயலுக்காக வருத்தப்பட்டு கூப்பிய கரங்களுடன், அப்பாவ விளைவுகளின் சுமையை ஏற்றுக் கொண்டார். இவ்வாறு ஓராண்டு காலம் துன்புற்ற அவர் தன்னை புனிதப்படுத்திக் கொள்வதற்காக அப்பாவ விளைவுகளை நிலம், நீர், மரங்கள், பெண்கள் என்ற நான்கிற்கும் பகிர்ந்தளித்தார்.

பதம் 6.9.7 : அந்த பிராமணரைக் கொன்றதனால் உண்டான பாவ விளைவுகளின் நான்கில் ஒரு பகுதியை நிலம் ஏற்றுக் கொண்டதற்குக் கைமாறாக, பூமியிலுள்ள சாக்கடைகள் தானாகவே நிரப்பப்பட்டுவிடும் என்ற வரத்தை இந்திரன் நிலத்திற்கு அளித்தார்.

பதம் 6.9.8 : தங்களுடைய கிளைகளும், சுள்ளிகளும் வெட்டப்பட்டால் அவை மீண்டும் வளரும் என்ற இந்திரனின் வரத்திற்குப் பதிலாக, மரங்கள், ஒரு பிராமணரைக் கொன்றதற்கான விளைவின் நான்கில் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டன. இந்த விளைவுகள் மரங்களிலிருந்து வழியும் ஒருவித திரவமாக வெளிப்படுகிறது. (ஆகவே இந்த திரவத்தைப் பருகுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.)

பதம் 6.9.9 : பெண்கள் கருவுற்ற காலத்தில் கூட, அக்கருவிற்குத் தீங்கு ஏற்படாதவரை அவர்களால் சிற்றின்பங்களைத் தொடர்ந்து அனுபவிக்க முடியும் என்று இந்திரன் கொடுத்த வரத்திற்குப் பதிலாக, அவர்கள் பாவ விளைவுகளின் நான்கில் ஒரு பகுதியை ஏற்றுக் கொண்டனர். இந்த விளைவுகளின் பலனாக பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனர்.

பதம் 6.9.10 : மேலும் நீரானது மற்ற பொருள்களுடன் கலக்கும் பொழுது அவற்றின் அளவு பரிமாணம் அதிகரிக்கும் என்று இந்திரன் அளித்த வரத்திற்குப் பதிலாக, பாவவிளைவுகளின் நான்கில் ஒரு பகுதியை நீர் ஏற்றுக் கொண்டது. எனவே தான் நீரில் நுரையும், குமிழிகளும் உள்ளன. நீரைச் சேகரிக்கும் பொழுது இவ்விரண்டையும் ஒருவன் விலக்கிவிட வேண்டும்.

பதம் 6.9.11 : விஸ்வரூபர் கொல்லப்பட்ட பிறகு, அவரது தந்தையான துவஷ்டா இந்திரனைக் கொல்வதற்காக ஒரு வேள்வியை இயற்றினார். “இந்திரனின் எதிரியே, தாமதமின்றி உன் எதிரியைக் கொல்ல விருத்தியடைவாய்” என்று சொல்லி அவர் ஹோமம் செய்தார்.

பதம் 6.9.12 : அதன்பிறகு, அன்வாஹார்யம் என்ற யாகத் தீயின் தெற்குப் பகுதியிலிருந்து, யுக முடிவில் முழு சிருஷ்டியையும் அழித்துவிடுபவன்போல் காணப்பட்ட கோரமான உருவம் தாங்கிய ஒருவன் தோன்றினான்.

பதங்கள் 6.9.13 – 6.9.17 : அந்த அசுரனின் உடல், நான்கு திசைகளிலும் செலுத்தப்பட்ட அம்புகள் போல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது. உயரமாகவும், கருநிறமாகவும் இருந்த அவன் எரிந்து போன ஒரு குன்றுபோலவும், மாலை நேரத்து மேகக் கூட்டங்களின் பளபளப்புடனும் காணப்பட்டான். அந்த அசுரனின் உடலிலிருந்த ரோமமும், அவனது தாடியும் மீசையும் உருக்கிய தாமிரம் போலவும், அவனது கண்கள் நடுப்பகல் சூரியனின் கதிர்களைப் போல் கூர்மையாகவும் இருந்தன. அவன் தனது கொழுந்து விட்டெரியும் திரிசூலத்தின் முனைகளில் மூவுலகங்களையும் வைத்திருப்பவன் போல் வெல்ல முடியாதவனாக காணப்பட்டான். உரத்த குரலுடன் கூச்சலிட்டபடி அவன் ஆடியதைத் தாங்க முடியாமல் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல் பூமி அதிர்ந்தது. ஆழமான குகையைப் போன்ற வாயினால் திரும்பத்திரும்ப அவன் கொட்டாவி விட்டது, ஆகாயம் முழுவதையும் அவன் விழுங்கிவிட முயற்சிப்பது போல் காணப்பட்டது. அவன் ஆகாயத்திலுள்ள எல்லா நட்சத்திரங்களையும் நாவினால் உறிஞ்சிவிடுபவன் போலவும், அவனது கூர்மையான நீண்ட பற்களால் முழு பிரபஞ்சத்தையும் சாப்பிட்டுவிடுவது போலவும் காணப்பட்டான். பிரம்மாண்டமான அந்த அசுரனைக் கண்ட அனைவரும் பீதியடைந்து எல்லாத் திசைகளிலும் சிதறியோடினர்.

பதம் 6.9.18 : உண்மையில் துவஷ்டாவின் மகனான அந்த பயங்கரமான அசுரன், தன் தவ வலிமையினால் எல்லா கிரக அமைப்புக்களையும் இருளால் மூடினான். எனவே அவன் விருத்திரன், அல்லது அனைத்தையும் மூடிவிடுபவன் எனப்படுகிறான்.

பதம் 6.9.19 : இந்திரன் முதலான தேவர்கள் தங்கள் சேனைகளுடனும் தெய்வீகமான தங்களுடைய வில், அம்பு முதலான பிற ஆயுதங்களுடனும் அந்த அசுரனைத் தாக்கினார். ஆனால் அவர்களுடைய ஆயுதங்களையெல்லாம் விருத்ராசுரன் விழுங்கிவிட்டான்.

பதம் 6.9.20 : அந்த அசுரனின் பலத்தைக் கண்டு ஆச்சரியமும், ஏமாற்றமும் அடைந்த தேவர்கள் தங்களுடைய சொந்த பலத்தை இழந்தவர்களாயினர். ஆகவே அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, பரமாத்மாவும், பரமபுருஷருமாகிய பகவான் நாராயணரை வழிபட்டு அவரை திருப்திப்படுத்த முயன்றனர்.

பதம் 6.9.21 : தேவர்கள் கூறினர்: பிரம்மதேவர் முதலான பல்வேறு தேவர்களால் ஆளப்படும் மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் தான் மூவுலகங்களும் படைக்கப்படுகின்றன. காலத் தத்துவம் எங்களுடைய வாழ்வை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடுமோ என்ற பெரும் பயத்தினால் நாங்கள் காலம் உத்தரவிடுவதுபோல் எங்களுடைய கடமைகளைச் செய்து, அந்த காலத்திற்கு எங்களுடைய காணிக்கைகளைச் செலுத்துகிறோம். ஆனால் அந்த கால-தத்துவமும் பரமபுருஷரைக் கண்டு அஞ்சுகிறது. ஆகவே எவர் ஒருவரால் நமக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியுமோ, அந்த பரமபுருஷரை இப்பொழுது நாம் வழிபடுவோமாக.

பதம் 6.9.22 : எல்லா பௌதிக எண்ணங்களிலிருந்தும் விடுபட்டவரும், எதனாலும் ஒரு போதும் ஆச்சரியமடையாதவருமான பகவான், தமது சொந்த ஆன்மீக பூரணத்துவத்தினால் எப்பொழுதும் சந்தோஷமாகவும், பூரண திருப்தியுடையவராகவும் இருக்கிறார். அவருக்கு பெளதிகக் கடமைகள் எதுவும் இல்லை. எனவே அவர் உறுதியாகவும், பற்றில்லாதவராகவும் இருக்கிறார். அந்த பரம புருஷர் ஒருவரே அனைவருக்கும் புகலிடமாவார். மற்றவர்களால் காப்பாற்றப்பட விரும்பும் ஒருவன், நாயின் வாலைப்பிடித்துக் கொண்டு கடலைக் கடக்க விரும்பும் ஒருவனைப் போல் மகா மூடனாவான்.

பதம் 6.9.23 : சத்தியவிரத மகாராஜன் என்ற மனு முன்பு, முழு உலகின் வடிவிலிருந்த சிறிய படகை மச்ச அவதாரத்தின் கொம்புடன் பிணைத்து, அவரது அருளால் வெள்ளப் பெருக்கின் பேராபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். அதே மச்ச அவதாரம், துவஷ்டாவின் மகனால் விளைவிக்கப்பட்ட பயங்கர ஆபத்திலிருந்து நம்மைக் காக்கட்டும்.

பதம் 6.9.24 : படைப்பின் துவக்கத்தில், பயங்கரமான ஒரு காற்று வீசி, வெள்ளத்தில் மூழ்கடிக்கும் கொடூரமான அலைகளை உண்டாக்கியது. அந்த பேரலைகள் எழுப்பிய பயங்கர ஓசையினால் பிரம்ம தேவர் கூட அவரது தாமரை ஆசனத்திலிருந்து பிரளய நீரில் விழுந்துவிடுவது போல் காணப்பட்டார். ஆனால் பகவானின் உதவியால் அவர் காப்பாற்றப்பட்டார். இதனால் நம்மையும் பகவான் ஆபத்தான இச்சூழ்நிலையிலிருந்து காப்பாற்றுவார் என்று நம்புகிறோம்.

பதம் 6.9.25 : யாருடைய பகிரங்க சக்தியால் நாம் படைக்கப்பட்டோமோ, யாருடைய கருணையால் பிரபஞ்ச சிருஷ்டியை நாம் விரிவடையச் செய்கிறோமோ, அந்த பரமபுருஷர் பரமாத்மாவாக எப்பொழுதும் நம்முன் இருந்த போதிலும், அவரது ரூபத்தை நம்மால் காண முடியாது. நாமனைவரும் நம்மைச் சுதந்திரமுள்ள தனிப்பட்ட கடவுள்கள் என்று நினைப்பதால், நம்மால் அவரைக் காண இயலவில்லை.

பதங்கள் 6.9.26 – 6.9.27 : பரமபுருஷர் அவரது நினைத்தற்கரிய அந்தரங்க சக்தியினால் பல்வேறு திவ்ய ரூபங்களாக தம்மை விரிவடையச் செய்கிறார். இவ்விதமாக தேவர்களுக்கிடையில் ஆற்றலின் அவதாரமான வாமன தேவராகவும், முனிவர்களுக்கிடையில் தோன்றிய அவதாரமான பரசுராமராகவும், மிருகங்களுக்கிடையில் தோன்றிய நரசிம்மர் மற்றும் வராக மூர்த்தியாகவும், மேலும் நீரினங்களுக்கிடையில் தோன்றிய மச்சம் மற்றும் கூர்ம அவதாரமாகவும் அவர் அவதரிக்கிறார். அவர் எல்லா வகையான ஜீவராசிகளுக்கிடையிலும், மனிதருக்கிடையிலும் பல்வேறு திவ்ய ரூபங்களை ஏற்கிறார். குறிப்பாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணராகவும், பகவான் ஸ்ரீ ராமராகவும் தோன்றுகிறார். அவர் தமது தனிப்பெருங்கருணையினால், எப்பொழுதும் அசுரர்களால் துன்புறுத்தப்படும் தேவர்களைக் காக்கிறார். அனைத்து ஜீவராசிகளுக்கும் அவரே வழிபடத்தக்க உயர்ந்த மூர்த்தியாவார். அவரே ஆண், பெண் படைப்புச் சக்திகளாகத் தோன்றியுள்ள பரம காரணமாவார். அவர் இப்பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டவர் என்றாலும், பிரபஞ்ச வடிவமாக (விராட்-ரூபமாக) விளங்குகிறார். எனவே அச்சம் தரும் இச்சூழ்நிலையில் அவரையே நாம் சரணடைவோமாக. ஏனெனில் பரமாத்மாவாகிய அந்த பரமபுருஷர் நம்மைக் காப்பார் என்பது நிச்சயம்.

பதம் 6.9.28 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, அனைத்து தேவர்களும், பரமபுருஷரிடம் தங்களது பிரார்த்தனைகளைச் செய்தபோது, சங்கு, சக்கரம், கதை ஆகிய ஆயுதங்களை ஏந்தியிருப்பவரும், பரமபுருஷருமாகிய பகவான் ஸ்ரீ ஹரி முதலில் அவர்களது இதயங்களுள் தோன்றினார். பிறகு அவர்கள் முன் எழுந்தருளினார்.

பதங்கள் 6.9.29 – 6.9.30 : பரமபுருஷராகிய நாராயணரை சேவித்தபடி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், ஸ்ரீவத்ஸ குறியும், கௌஸ்துப மாலையும் மட்டும் இல்லாமல் பகவானைப் போலவே தோற்றமளித்தவர்களுமான அவரது பதினாறு அந்தரங்க சேவகர்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். அரசே, பரமபுருஷர், இலையுதிர் காலத்தில் மலர்ந்த தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன் புன்னகை செய்ததைக் கண்ட அனைத்து தேவர்களும் பெருமகிழ்ச்சியுடன் உடனே தண்டங்களைப் போல் கீழே விழுந்து அவரை வணங்கினர். பிறகு மெதுவாக எழுந்து நின்று பகவானிடம் பிரார்த்தனைகள் செய்து அவரை திருப்திப்படுத்தினர்.

பதம் 6.9.31 : தேவர்கள் கூறினார்: பரமபுருஷராகிய பகவானே, யாகப் பலன்களை அளிக்கத் தகுதியுடையவரும், காலப்போக்கில் அத்தகைய பலன்களையெல்லாம் அழித்துவிடும் கால தத்துவமும் தாங்களேயாவீர். அசுரர்களைக் கொல்வதற்காக சக்கரத்தை விடுபவரும் நீங்களே. பலவகையான பெயர்களை உடைய பகவானே, தங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.9.32 : பரம ஆளுனரே, (சுவர்க்க லோகங்களுக்கு ஏற்றம் பெறுதல் ஒரு மனிதனாகப் பிறவி எடுத்தல், மற்றும் நரகத்தில் தள்ளப்படுதல் ஆகிய) மூன்று இலக்குகளையும் நிர்ணயிப்பவர் தாங்களே என்றாலும், உங்களுடைய மேலான வசிப்பிடம் வைகுண்ட தாமமாகும். உங்களால் இப்பிரபஞ்ச தோற்றம் படைக்கப்பட்ட பிறகுதான் நாங்கள் தோன்றினோம் என்பதால், உங்களுடைய செயல்களை நாங்கள் புரிந்து கொள்வது சாத்தியமில்லை. ஆகவே எங்களது பணிவான வணக்கங்களைத் தவிர, தங்களுக்கு நாங்கள் அர்ப்பணிக்கக்கூடியது எதுவும் இல்லை.

பதம் 6.9.33 : பரமபுருஷராகிய நாராயணரே, வாசுதேவரே, ஆதிபுருஷரே, மகாபுருஷரே, மஹானுபாவரே, மங்களமூர்த்தியே, பரம கல்யாண சொரூபியே, பரம கருணாமூர்த்தியே, மாற்றமற்றவரே, பிரபஞ்ச தோற்றத்தின் ஆதாரமே, அகில லோகங்களுக்கும் ஒரே நாயகரே, சர்வேஸ்வரரே, லஷ்மிதேவியின் கணவரே, பக்தியோகத்தின் மூலமாக சமாதியில் முழுமையாக ஆழ்ந்து, கிருஷ்ண உணர்வை பரப்புவதற்காக உலகில் சஞ்சரித்து வரும் மிகச் சிறந்த சந்நியாசிகளால் தாங்கள் உணர்ந்தறியப்படுகிறீர்கள். அவர்களுடைய மனங்கள் உங்கள் மீது குவிந்திருப்பதால், முற்றிலும் தூய்மையடைந்த அவர்களுடைய இதயங்களில், உங்களுடைய சொரூபத்தின் தோற்றத்தை அவர்களால் பெற முடிகிறது. அவர்களுடைய இதயங்களில் உள்ள இருள் முற்றிலும் அகன்று அவர்களுக்கு நீங்கள் காட்சியளிக்கும் பொழுது, அவர்களால் அனுபவிக்கப்படும் உன்னத ஆனந்தம் உங்களுடைய திவ்யமான ரூபமேயாகும். இத்தகைய பக்தர்களைத் தவிர வேறு எவராலும் உங்களை உணர்ந்தறிய முடியாது. ஆகவே தங்களுக்கு எங்களது பணிவான வணக்கங்கள்.

பதம் 6.9.34 : பகவானே, தங்களுக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. உங்களுக்கு பெளதிக உடல் இல்லை என்ற போதிலும், எங்களுடைய உதவி உங்களுக்குத் தேவைப்படுவதே இல்லை. நீங்களே பிரபஞ்ச தோற்றத்திற்குக் காரணம். மாற்றமில்லாமல் அதற்கான மூலப்பொருட்களை அளிப்பவரும் நீங்களே என்பதால், இப்பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்து, காத்து, அழிப்பவரும் நீங்களேயாவீர். நீங்கள் பெளதிக செயலில் ஈடுபட்டிருப்பதாகக் காணப்பட்ட போதிலும், அனைத்து பௌதிக குணங்களுக்கும் மேற்பட்டவராவீர். எனவே, உங்களுடைய இந்த உன்னதமான செயல்களைப் புரிந்து கொள்வது மிகமிகக் கடினமாகும்.

பதம் 6.9.35 : எங்களுடைய கேள்விகள் பின்வருமாறு: சாதாரண பந்தப்பட்ட ஆத்மா பௌதிக சட்டங்களுக்கு உட்பட்டுள்ளதால், அவனது செயல்களின் பலன்களைப் பெறுகிறான். பகவானாகிய தாங்களும் ஒரு சாதாரண மனிதனைப்போல்தான் பெளதிக குணங்களாளான ஒருடலுடன் இந்த ஜட உலகில் வாழ்கிறீர்களா? நீங்களும் காலம், கருமம் போன்றவைகளின் ஆதிக்கத்தின் கீழ் செயல்களின் நல்ல அல்லது தீய பலன்களை அனுபவிக்கிறீர்களா? அல்லது, நீங்கள் தன்னிறைவு பெற்று, எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, ஆன்மீக சக்தியை முழுமையாகப் பெற்று, பாரபட்சமற்ற ஒரு சாட்சியாக மட்டுமே இங்கு இருக்கிறீர்களா? நிஜமாகவே தங்களுடைய உண்மையான நிலையை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பதம் 6.9.36 : பரமபுருஷரே, எல்லா முரண்பாடுகளையும் உங்களில் சமரசப்படுத்த முடியும். பகவானே, நீங்கள் எல்லையற்ற ஆன்மீக குணங்களின் பிறப்பிடமும், பரம ஆளுனருமான பரமபுருஷர் என்பதால், எல்லையற்ற உங்களுடைய மகிமைகள் பந்தப்பட்ட ஆத்மாக்களின் கற்பனைக்கு கூட எட்டாதவையாக உள்ளன. பல நவீன சமயவாதிகள் எது உண்மையில் சரி என்பதை அறியாமலேயே, சரியைப் பற்றியும் தவறைப் பற்றியும் விவாதிக்கின்றனர். அவர்களுடைய விவாதங்கள் எப்பொழுதும் தவறானவையாகவும். அவர்களுடைய கருத்துகள் நிச்சயமற்றவையாகவும் இருக்கின்றன. ஏனெனில், உங்களைப் பற்றிய அறிவைப் பெறுவதற்குத் தேவையான அதிகாரப் பூர்வமான சாட்சியம் அவர்களிடமில்லை. அவர்களுடைய மனங்கள் தவறான முடிவுகளைக் கொண்ட சாஸ்திரங்களால் குழப்பமடைந்துள்ளன. இதனால் உங்களைப் பற்றிய உண்மையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும், அவர்கள் களங்கப்பட்டவர்களாக இருப்பதால், தவறான முடிவைக் கொண்ட அவர்களுடைய கோட்பாடுகளால், அவர்களுடைய பெளதிக கருத்துக்களுக்கு மேற்பட்டவரான உங்களை அவர்களால் விவரிக்க இயலவில்லை. நீங்கள் இரண்டற்ற ஒருவராவீர். ஆகவே உங்களில் காணப்படும் முரண்பாடுகளான செய்யத்தக்கவை, செய்யத்தகாதவை மற்றும் இன்பம், துன்பம் போன்றவை உண்மையில் முரண்பாடுகளல்ல. உங்களுடைய சக்தி மகத்தானது என்பதால் அதைக் கொண்டு உங்கள் விருப்பம் போல் எதையும் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். அந்த சக்தியைக் கொண்டு உங்களால் செய்ய முடியாதது என்ன இருக்கிறது? உங்களுடைய மூலதார நிலையில் இருமை இல்லை என்பதால் உங்களுடைய சக்தியின் செல்வாக்கைக் கொண்டு எதையும் உங்களால் செய்ய முடியும்.

பதம் 6.9.37 : ஒரு கயிற்றைப் பாம்பு என்றெண்ணும் சித்தம் தடுமாறிய ஒருவனுக்கு, அந்த கயிறே பயத்தை உண்டாக்குகிறது. ஆனால் அது ஒரு கயிறு மட்டுமே என்பதை அறிந்துள்ள சரியான புத்தியுள்ளவனுக்கு அந்த பயம் இல்லை, அதுபோலவே ஒவ்வொருவருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருக்கும் தாங்கள், ஒருவனுடைய புத்திக்கேற்ப அவனிடம் பயத்தையோ அல்லது பயமின்மையையோ தூண்டுகிறீர்கள். ஆனால் உங்களிடம் இருமை என்பது இல்லை.

பதம் 6.9.38 : ஒருவன் நிதானமான ஆழ்ந்த யோசனையினால், பரமாத்மா வெவ்வேறு வழிகளில் தோன்றிய போதிலும் உண்மையில் அவரே அனைத்திற்கும் அடிப்படைக் கொள்கை என்பதைக் காண்பான். மொத்த பெளதிக சக்தி, பெளதிக தோற்றத்திற்குக் காரணம். ஆனால் அந்த பெளதிக சக்தி பகவானால் ஏற்படுத்தப்பட்டதாகும். ஆகவே, அவரே எல்லாக் காரணங்களுக்கும் காரணமும், புத்தியையும் புலன்களையும் தோற்றுவிப்பவரும் ஆவார். அவர் அனைத்திலும் உள்ள பரமாத்மாவாக உணரப்படுகிறார். அவரன்றி அனைத்தும் உயிரற்றிருக்கும். அந்த பரமாத்மாவாகவும், பரம ஆளுனராகவும் நீங்கள் ஒருவர் மட்டுமே எஞ்சியிருக்கிறீர்கள்.

பதம் 6.9.39 : ஆகவே, மது என்ற அரக்கனைக் கொன்றவரே, உங்களது மகிமைகள் என்ற கடலிலிருந்து ஒரு துளி அமுதத்தை ஒரு தடவையாவது சுவைத்தவர்களின் மனங்களில் உன்னத ஆனந்தம் இடைவிடாமல் பெருக்கெடுத்தோடுகிறது. அத்தகைய சிறந்த பக்தர்கள், பௌதிகப் புலன்களான பார்வை மற்றும் ஓசை ஆகியவற்றினால் உண்டாக்கப்படும் பெயரளவேயான பெளதிக இன்பத்தின் அற்பமான நிலையை மறந்துவிடுகின்றனர். எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டுள்ள இத்தகைய பக்தர்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்மையான நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய மனங்களை உங்களிடம் அர்ப்பணித்து, உன்னத ஆனந்தத்தை, வாழ்வின் உண்மையான இலட்சியத்தை அடைவதில் நிபுணர்களாக இருக்கின்றன. பகவானே, இந்த ஜட உலகிற்குத் திரும்பி வரும் அவசியமே இல்லாத அத்தகைய பக்தர்களுக்குத் தாங்களே ஆத்மாவாகவும், உற்ற நண்பராகவும் இருக்கிறீர். உங்களுடைய பக்தித் தொண்டிலுள்ள ஈடுபாட்டை அவர்களால் எவ்வாறு விட்டுவிட இயலும்?

பதம் 6.9.40 : பகவானே, மூவுலகங்களின் வடிவானவரே! மூவுலகிற்கும் தந்தையே! வாமன அவதாரத்தின் உருவில் மூவுலகிற்கும் பலமாக இருப்பவரே! முக்குண மூர்த்தியாகிய நரசிம்மதேவரே! மூவுலகிலும் பேரழகு மிக்கவரே! மனிதர்களும், தைதிய மற்றும் தானவர்களும் உட்பட அனைவரும், அனைத்தும் உங்களுடைய சக்தியின் ஒரு விரிவேயாகும். அசுரர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக மாறிய உடனேயே அவர்களைத் தண்டிப்பதற்காக நீங்கள் பல்வேறு அவதாரங்களாகத் தோன்றுகிறீர்கள். நீங்கள் பகவான் வாமன தேவராகவும், பகவான் ராமராகவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணராகவும் தோன்றுகிறீர்கள். சிலசமயங்களில் நீங்கள் பகவான் வராகரைப் போன்ற ஒரு மிருகமாகவும், சிலசமயங்களில் பகவான் நரசிம்மர் மற்றும் பகவான் ஹயகிரீவர் போன்ற கலப்படமுள்ள அவதாரமாகவும் மற்றும் சிலசமயங்களில் மச்சம் மற்றும் கூர்மம் போன்ற ஒரு நீரினமாகவும் தோன்றுகிறீர்கள். தாங்கள் இத்தகைய ரூபங்களை ஏற்று அசுரர்களையும், தானவர்களையும் எப்பொழுதும் தண்டித்து வந்திருக்கீறீர்கள். ஆகவே இன்று தாங்கள் விரும்பினால், பெரிய அசுரனான விருத்ராசுரனைக் கொல்லும் பொருட்டு மற்றொரு அவதாரமாகத் தோன்ற வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

பதம் 6.9.41 : பரம இரட்சகரே, பரம பிதாவே, பவித்திரமானவரே, பகவானே! நாங்களனைவரும் உங்களுடைய திருவடித் தாமரைகளில் சரணடைந்த ஆத்மாக்கள். உண்மையில் எங்களுடைய மனங்கள் தியான நிலையில் அன்புச் சங்கிலியால் உங்களுடைய தாமரைப் பாதங்களில் பிணைக்கப்பட்டுள்ளன. அருள்கூர்ந்து உங்களுடைய அவதாரத்தை இப்பொழுது காட்டியருள வேண்டும். எங்களை உங்களது நித்திய சேவகர்களாகவும், பக்தர்களாகவும் ஏற்று திருப்தியடைந்து, எங்களிடம் இரக்கம் காட்ட வேண்டுகிறோம். உங்களுடைய இதமான, இனிமையான பாசப் புன்சிரிப்புடனும், உங்களுடைய அழகிய திருமுகத்திலிருந்து வெளிப்படும் அமுத வார்த்தைகளுடனும் கூடிய அன்பு ததும்பும் பார்வையால், எப்பொழுதும் எங்களுடைய இதயங்களை நோகடிக்கும் இந்த விருத்ராசுரனால் ஏற்படும் பெரும் கவலையிலிருந்து எங்களை விடுவித்தருளுங்கள்.

பதம் 6.9.42 : பகவானே, எப்படி சிறு நெருப்புப் பொறிகளால் முழு நெருப்பின் செயல்களைச் செய்ய முடியாதோ அப்படியே தங்களுடைய பொறிகளான எங்களால் எங்களுடைய வாழ்வின் தேவைகளைப் பற்றி எடுத்துக் கூற முடியாது. தாங்கள் பூரண முழுமையாவீர். ஆகவே, நாங்கள் உங்களுக்கு எடுத்துக் கூற வேண்டிய அவசியமேயில்லை. தாங்கள் பிரபஞ்ச தோற்றத்தின் மூல காரணமும், அதைப் பராமரிப்பவரும், பிறகு அதை அழிப்பவரும் ஆவீர். எனவே உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய ஜட மற்றும் ஆன்மீக சக்திகளை ஆள்பவர் என்பதால், இந்த சக்திகளுடன் எப்பொழுதும் நீங்கள் லீலைகள் புரிவதில் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும், பிரபஞ்ச தோற்றத்திற்குள்ளும், இவற்றிற்கு அப்பாலும் இருக்கிறீர்கள். நீங்கள் உள்ளே பரப்பிரம்மனாகவும் வெளியே பௌதிக சிருஷ்டியின் மூலப் பொருட்களாகவும் இருக்கிறீர்கள். எனவே வெவ்வேறு காலங்களிலும், இடங்களிலும், பல்வேறு உடல்களிலும், பல்வேறு நிலைகளில் நீங்கள் தோன்றிய போதிலும், பரமபுருஷராகிய நீங்கள் எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமாவீர். உண்மையில், தாங்களே ஆதியான மூலப் பொருளாகவும் இருக்கிறீர். நீங்களே அனைத்து செயல்களுக்கும் சாட்சியுமாவீர். ஆனால் நீங்கள் ஆகாயம் போல் எங்கும் பரந்து நிற்பதால் அச்செயல்களினால் ஒருபோதும் நீங்கள் தொடப்படுவதில்லை. நீங்கள் பரப்பிரம்மன் மற்றும் பரமாத்மாவாக இருந்து கொண்டு அனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறீர்கள். பரமபுருஷரே உங்களுக்குத் தெரியாதது ஏதும் இல்லை.

பதம் 6.9.43 : பகவானே, நீங்கள் சர்வக்ஞர் என்பதால், எல்லா பெளதிகத் தொல்லைகளிலிருந்தும் விடுதலையளிக்கும் உங்களுடைய தாமரைப் பாதங்களில் எதற்காக நாங்கள் சரணடைந்திருக்கிறோம் என்பதை நன்கு அறிவீர்கள். அனைத்தும் அறிந்தவரான நீங்கள் பரம ஆன்மீக குரு என்பதால், நல்ல அறிவுரைக்காக உங்களுடைய பத்மபாதங்களை நாங்கள் தஞ்சமடைந்துள்ளோம். தயவுகூர்ந்து எங்களுடைய தற்போதைய துன்பத்தை அகற்றி எங்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள். உங்களுடைய தாமரைத் திருவடிகள் மட்டுமே, பூரண சரணாகதியடைந்த ஒரு பக்தனுக்கு அடைக்கலமாகும். அப்பாதங்களே இந்த ஜட உலக துன்பங்களையெல்லாம் அடக்குவதற்குரிய ஒரே வழியாகும்.

பதம் 6.9.44 : ஆகவே பகவானே, பரம ஆளுனராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, தயவுகூர்ந்து பயங்கர அசுரனாகிய இந்த விருத்ராசுரனை அழித்து விடுங்கள். துவஷ்டாவின் மகனான இவன், எங்களுடைய எல்லா ஆயுதங்களையும், போர் உபகரணங்களையும், எங்களுடைய பலத்தையும், செல்வாக்கையும் ஏற்கனவே விழுங்கிவிட்டான்.

பதம் 6.9.45 : பகவானே, பவித்திரமானவரே, நீங்கள் எல்லோருடைய இதயங்களிலும் இருந்து கொண்டு, பந்தப்பட்ட ஆத்மாக்களின் எல்லாச் செயல்களையும், எல்லா ஆசைகளையும் கவனிக்கிறீர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்று அறியப்படும் பரமபுருஷரே, உங்களுடைய கீர்த்தி பிரகாசமானதும் சந்தேகங்களைப் போக்குவதுமாகும். நீங்களே அனைத்திற்கும் ஆரம்பம் என்பதால் உங்களுக்கு ஆரம்பம் என்பதில்லை. நீங்கள் உண்மையுள்ள தூய பக்தர்களால் சுலபமாக அடையப்படக் கூடியவர் என்பதால், இது தூய பக்தர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது. பந்தப்பட்ட ஆத்மாக்கள் பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு ஜட உலகம் முழுவதிலும் சுற்றித் திரிந்த பிறகு, முக்தி பெற்று உங்களுடைய தாமரைப் பாதங்களில் தஞ்சமடையும் பொழுது, வாழ்வின் மிக உயர்ந்த வெற்றியை அடைந்தவர்கள் ஆகின்றனர். ஆகவே பகவானே, பரமபுருஷரே, தங்களுடைய திருவடித் தாமரைகளுக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்.

பதம் 6.9.46 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, தேவர்கள் பகவானிடம் தங்களுடைய உண்மையான பிரார்த்தனைகளை இவ்வாறு செய்தபொழுது, பகவானும் அவரது காரணமற்ற கருணையினால் அவர்களுடைய பிரார்த்தனைகளைக் கேட்டு திருப்தியடைந்து, தேவர்களிடம் பின்வருமாறு பதிலளித்தார்.

பதம் 6.9.47 : பரமபுருஷர் கூறினார்; பிரயமுள்ள தேவர்களே, நீங்கள் சிறந்த அறிவுடன் என்னிடம் பிரார்த்தனை செய்ததால், நான் மிகவும் திருப்தியடைந்தேன். இத்தகைய அறிவினால் ஒருவன் முக்தியடைகிறான். இவ்வாறாக பௌதிக வாழ்வின் நிலைகளுக்கும் மேலானதான எனது உன்னத நிலையை அவன் நினைவுபடுத்திக் கொள்கிறான். இத்தகைய ஒரு பக்தன், பூரண அறிவு நிலையில் பிரார்த்தனைகள் செய்வதால், முழுமையாகத் தூய்மையடைகிறான். இப்பூரண அறிவே எனது பக்தித் தொண்டின் பிறப்பிடமாகும்.

பதம் 6.9.48 : அறிவுமிக்க தேவர்களுள் சிறந்தவர்களே, நான் ஒருவனிடம் திருப்தியடையும் பொழுது, அவனால் அடையப்படுவதற்குக் கடினமானது எதுவுமில்லை என்றாலும், தன் மனதைப் பிரத்தியேகமாக என்னிடம் பதித்துள்ள ஒரு தூய பக்தன், பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பைத் தவிர வேறெதையும் என்னிடமிருந்து கேட்பதில்லை.

பதம் 6.9.49 : பெளதிக ஆஸ்திகளையே அனைத்துமாக, அல்லது வாழ்வின் முடிவான இலட்சியமாக நினைப்பவர்கள் கருமிகள் (க்ருபணர்கள்) என்று அழைக்கப்படுகின்றனர். ஆத்மாவின் முடிவான தேவையை அவர்கள் அறியவில்லை. மேலும் இத்தகைய மூடர்களால் விரும்பப்படுவதை ஒருவன் அளிப்பானாயின், அவனையும் ஒரு மூடனாகவே கருத வேண்டும்.

பதம் 6.9.50 : பக்தித் தொண்டு விஞ்ஞானத்தில் நன்கு தேர்ச்சியடைந்த ஒரு தூய பக்தர், பெளதிக சுகத்திற்கான பலன் கருதும் செயல்களில் ஈடுபடும்படி ஒரு முட்டாளுக்கு ஒரு போதும் உபதேசிக்கமாட்டார். அப்படியிருக்க அத்தகைய செயல்களில் அவனுக்கு உதவுவது என்ற பேச்சுக்கு இடமேயில்லை. அத்தகைய ஒரு பக்தர் அனுபவமுள்ள ஒரு மருத்துவரைப் போன்றவராவார். அந்த மருத்துவர் நோயாளி ஆசைப்பட்டாலும் அவனுக்குக் கெடுதல் விளைவிக்கும் உணவை உண்ணும்படி ஒருபோதும் அவனை ஊக்குவிக்கமாட்டார்.

பதம் 6.9.51 : ஓ மகவன் (இந்திரா), உனக்கு மங்களம் உண்டாகட்டும். சிறந்த முனிவரான தத்யஞ்சரை (ததீசி) நீ அணுகவேண்டும் என்று நான் உனக்கு அறிவுரை கூறுகிறேன். அவர் அறிவிலும், தவ விரதங்களிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர். அவரது உடலும் மிகவும் வலிமையுடையது. தாமதமின்றி அவரிடம் சென்று அவரது உடலை நீ கேட்டுப் பெற வேண்டும்.

பதம் 6.9.52 : ததீசி என்றும் அறியப்படுபவரான அந்த தத்யஞ்சர், ஆன்மீக விஞ்ஞானத்தை தன்மயமாக்கிக் கொண்ட பிறகு, அதை அஸ்வினி-குமாரர்களுக்கு அளித்தார். தத்யஞ்சர் ஒரு குதிரைத் தலையின் மூலமாக அவர்களுக்கு மந்திரங்களை அளித்ததாக கூறப்படுகிறது. ஆகவே அம்மந்திரங்கள் அஸ்வசிரம் என்று அழைக்கப்படுகின்றன. ஆன்மீக விஞ்ஞானத்தின் மந்திரங்களை ததீசியிடமிருந்து பெற்ற பிறகு, அஸ்வினி-குமாரர்கள் ஜீவன்-முக்தர்கள் ஆயினர். அதாவது, இப்பிறவிலேயே முக்தி பெற்றவர்களாக இருந்தனர்.

பதம் 6.9.53 : வெல்ல முடியாததான தத்யஞ்சரின் நாராயண பாதுகாப்புப் கவசம் துவஷ்டாவிடம் கொடுக்கப்பட்டது. அவரும் அதை அவரது மகனான விஸ்வரூபருக்குக் கொடுத்தார். அவரிடமிருந்து அதை நீ பெற்றுக் கொண்டாய். இந்த நாராயண-கவசத்தினால் ததீசியின் உடல் இப்பொழுது வஜ்ரம் பாய்ந்ததாக உள்ளது. எனவே நீ அவரிடம் சென்று அவரது உடலை யாசிக்க வேண்டும்.

பதம் 6.9.54 : அஸ்வினி-குமாரர்கள் உன் சார்பாக தத்யஞ்சரின் உடலை யாசிக்கும் பொழுது அன்பின் காரணத்தால் அதை அவர் நிச்சயமாக கொடுத்துவிடுவார். இதில் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் தத்யஞ்சர் சமயப் புரிந்துணர்வில் மிகவும் அனுபவசாலியாவார். தத்யஞ்சர் அவரது உடலை உனக்குக் கொடுத்ததும், அவரது எலும்புகளிலிருந்து ஒரு வஜ்ராயுதத்தை விஸ்வகர்மா தயாரிப்பார். அந்த வஜ்ராயுதம் என்னுடைய சக்தியைக் கொண்டிருக்கும் என்பதால் இது விருத்ராசுரனை நிச்சயம் கொன்றுவிடும்.

பதம் 6.9.55 : எனது ஆத்ம பலத்தினால் விருத்ராசுரன் கொல்லப்பட்டதும், நீ உன்னுடைய பலத்தையும், செல்வத்தையும், ஆயுதங்களையும் திரும்பப் பெறுவாய். இவ்வாறாக உங்கள் அனைவருக்கும் மங்களம் உண்டாகும். விருத்ராசுரனால் மூவுலங்களையும் அழித்துவிட முடியும் என்றாலும், உனக்கு அவன் தீங்கிழைப்பான் என்று அஞ்ச வேண்டாம். அவனும் ஒரு பக்தன்தான். அவன் ஒருபோதும் உன்னிடம் பொறாமை கொள்ள மாட்டான்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare