அத்தியாயம் – 5
பிரஜாபதி தட்சன் நாரதரைச் சபித்தல்
பதம் 6.5.1 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பகவான் விஷ்ணுவின் மாயா சக்தியால் தூண்டப்பட்ட பிரஜாபதி தட்சன், பாஞ்சஜனியின் (அஸிக்னீ) கர்ப்பத்தில் பத்தாயிரம் மகன்களைப் பெற்றார். அரசே, இம்மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பதம் 6.5.2 : அரசே, பிரஜாபதி தட்சனின் மகன்களனைவரும் சாந்தமான குணத்திலும், தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதிலும் ஒரே மாதிரியாக இருந்தனர். தங்கள் தந்தையால் குழந்தைகள் பெறும்படி கட்டளையிடப்பட்ட அவர்களனைவரும் மேற்குத் திசையை நோக்கிச் சென்றனர்.

பதம் 6.5.3 : மேற்கில், சிந்துநதி கடலில் சங்கமிக்கும் இடத்தில், நாராயண-ஸரஸ் என்ற மிகச்சிறந்த தீர்த்த யாத்திரை ஸ்தலம் ஒன்றுள்ளது. அங்கு, ஆன்ம உணர்வில் முன்னேறிய பல முனிவர்களும், மற்றவர்களும் வாழ்ந்து வந்தனர்.

பதங்கள் 6.5.4 – 6.5.5 : ஹர்யஸ்வர்கள், அப்புண்ணிய ஸ்தலத்திலுள்ள ஏரியின் நீரைத் தினந்தோறும் தொட்டும், அதில் நீராடியும் வந்தனர். படிப்படியாகத் தூய்மையடைந்த அவர்கள், பரமஹம்ஸர்களுக்குரிய செயல்களில் நாட்டம் கொண்டனர். ஆயினும், அவர்களது தந்தை ஜனத்தொகையைப் பெருக்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டிருந்ததால், அவரது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அவர்கள் கடுந்தவங்களை மேற்கொண்டனர். ஒரு நாள், ஜனத்தொகை பெருக்கத்திற்காக அவர்கள் கடுந்தவங்கள் புரிவதைக் கண்ட நாரதர் அவர்களை அணுகினார்.

பதங்கள் 6.5.6 – 6.5.8 : மாமுனிவரான நாரதர் கூறினார்: ஹர்யஸ்வர்களே, பூமியின் முடிவை இன்னும் நீங்கள் காணவில்லை. ஒரே ஒரு மனிதன் மட்டும் வாழும் இராஜ்யம் ஒன்றுள்ளது. அங்கு ஒரு துவாரம் உள்ளது. அதில் புகுந்தவன் எவனும் வெளியில் வந்ததில்லை. மிகவும் நெறிதவறிய ஒரு பெண் அங்கிருக்கிறாள். அவள் பல்வேறு கவர்ச்சியான ஆடைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்வாள். அங்கு வாழும் மனிதன் அவளுடைய கணவனாவான். அந்த இராஜ்யத்தில் இரு திசைகளிலும் ஒடும் ஒரு நதியும், இருபத்தைந்து பொருட்களாலான ஒரு வீடும், பல்வேறு ஓசைகளை எழுப்பும் ஓர் அன்னமும், கூர்மையான கத்திகளாலும், வஜ்ரங்களாலும் ஆனதும், தானாகச் சுழல்வதுமான ஒரு பொருளும் உள்ளன. இவைகளையெல்லாம் நீங்கள் இன்னும் காணவில்லை. எனவே நீங்கள் முதிர்ந்த அறிவில்லாத அனுபவமற்ற பையன்களாவீர். அப்படியிருக்க, உங்களால் எப்படி சந்ததியை உண்டாக்க முடியும்?

பதம் 6.5.9 : ஐயோ பாவம்! உங்கள் தந்தை எல்லாம் அறிந்தவர். ஆனால் அவரது உண்மையான உத்தரவு என்னவென்பதை நீங்கள் அறியவில்லை. உங்களுடைய தந்தையின் உண்மையான நோக்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் நீங்கள் எப்படி சந்ததியை உண்டாக்குவீர்கள்.

பதம் 6.5.10 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: நாரத முனிவரின் புதிரான இவ்வார்த்தையைக் கேட்ட ஹர்யஸ்வர்கள், பிறருடைய உதவியின்றி, தங்களுடைய இயல்பான மதி நுட்பத்தினால் தாங்களாகவே அவற்றை ஆராயத் துவங்கினர்.

பதம் 6.5.11 : (ஹர்யஸ்வர்கள் நாரதருடைய வார்த்தைகளைப் பின்வருமாறு புரிந்துகொண்டனர்:) “பூ” (பூமி) என்ற சொல் செயற்களத்தைக் குறிக்கிறது. ஜீவராசியின் கர்மபலனாகக் கிடைத்துள்ள ஜட உடல் தான் அவனது செயற்களமாகும். அது அவனுக்கு பொய்யான பெயர்களைப் பெற்றுத் தருகிறது. அவன் அனாதிகாலமாக பலவகையான ஜட உடல்களைப் பெற்றுள்ளான். அந்த ஜட உடல்களே, ஜட உலகுடன் அவனைப் பிணைக்கும் வேர்களாகும். முட்டாள்தனமாக, நிலையற்ற பலன்நோக்குக் கருமங்களில் ஈடுபடும் ஒருவன், இந்த பிணைப்பை நிறுத்த முயலவில்லையென்றால், அவனது செயல்களால் என்ன பயன்?

பதம் 6.5.12 : (நாரத முனிவர், ஒரு இராஜ்யத்தில் ஒரே ஒரு ஆண்தான் இருக்கிறார் என்று கூறினார். ஹர்யஸ்வர்கள் இக்கூற்றின் பொருளைப் பின்வருமாறு புரிந்து கொண்டனர்) எல்லா இடங்களிலுமுள்ள அனைத்தையும் கண்காணிப்பவரான பரமபுருஷர் ஒருவரே அனைத்தையும் அனுபவிப்பவராவார். அவர் ஆறு கல்யாண குணங்களைப் பூரணமாக உடையவரும், முற்றிலும் சுதந்திரமானவருமாவார். அவர் மூன்று ஜட இயற்கைக் குணங்களுக்கு உட்பட்டவரல்ல. ஏனெனில், அவர் இந்த ஜட சிருஷ்டிக்கு எப்பொழுதும் அப்பாற்ப்பட்டவராக உள்ளார். மனித சமூகத்தினர், தங்களுடைய அறிவு மற்றும் செயல்கள் ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றத்தின் மூலமாக பரமபுருஷரைப் புரிந்து கொள்ளாமல், நிலையற்ற இன்பத்திற்காக அல்லும்பகலும் நாய் பூனைகளைப் போல் மிகவும் கடினமாக உழைக்கின்றனர். இத்தகைய செயல்களால் என்ன பயன்?

பதம் 6.5.13 : (நாரத முனிவர், ஒரு துவாரம் (பில) இருக்கிறதென்றும், அதில் நுழைந்தவன் திரும்பி வருவதேயில்லை என்றும் விவரித்தார். இந்த புதிரின் பொருளையும் ஹர்யஸ்வர்கள் புரிந்து கொண்டனர்) பாதாளம் என்ற கீழான கிரக அமைப்பில் புகுந்தவன் ஒரு முறையேனும் திரும்பி வந்திருப்பதை எவரும் கண்டதில்லை. அதுபோலவே, வைகுண்ட லோகத்தில் (ப்ரத்யக்-தாம) ஒருவன் பிரவேசித்துவிட்டால் அவன் இந்த ஜட உலகிற்குத் திரும்பி வருவதில்லை. எங்கு சென்றுவிட்டால். துன்பகரமான இந்த பெளதிக சூழ்நிலைக்கு ஒருவன் திரும்பி வருவதில்லையோ, அத்தகைய ஓரிடம் இருக்குமானால், அந்த இடத்தைக் காணாமல் அல்லது புரிந்து கொள்ளாமல் நிலையற்ற இந்த ஜட உலகில் குரங்குகளைப் போல் குதித்துக் கொண்டிருப்பதால் என்ன பலன்? இதனால் இலாபமென்ன?

பதம் 6.5.14 : (நாரத முனிவர், வேசித்தனத்தையே தொழிலாகக் கொண்ட ஒரு பெண்ணை விவரித்தார். இப்பெண்ணின் சுய ரூபத்தை ஹர்யஸ்வர்கள் புரிந்து கொண்டனர்) ஒவ்வொரு ஜீவனின் நிலையற்ற புத்தியும், ரஜோ குணத்துடன் கலந்து, பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக உடைகளை மாற்றும் ஒரு வேசியைப் போலாகிவிடுகிறது. ஒருவன் நிலையற்ற பலன் கருதும் செயல்களில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் வேளையில், இது எப்படி நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாதிருப்பானாயின், உண்மையில் அதனால் அவனுக்கு என்ன இலாபம்?

பதம் 6.5.15 : (நாரத முனிவர் அந்த வேசியின் கணவனான ஒரு மனிதனைப் பற்றியும் பேசினார். இதை ஹர்யஸ்வர்கள் பின்வருமாறு புரிந்து கொண்டனர்) ஒருவன் ஒரு வேசியின் கணவனாகும் பொழுது முழு சுதந்திரத்தையும் இழந்து விடுகிறான். அதுபோலவே ஒரு ஜீவராசி கெட்டுப்போன புத்தியுடையவனாக இருந்தால், அவனது பௌதிக வாழ்வை அவன் நீடிக்கச் செய்கிறான். ஜட இயற்கையால் வஞ்சிக்கப்படும் அவன், இன்பதுன்பங்களடங்கிய பல்வேறு சூழ்நிலைகளைக் கொண்டுவரும் புத்தியின் அசைவுகளைப் பின்பற்றியாக வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் ஒருவன் பலன் கருதும் செயல்களைச் செய்வானாயின், அதனால் என்ன பயன்?

பதம் 6.5.16 : (நாரத முனிவர், இருபுறமும் ஓடும் நதி இருப்பதாகக் கூறினார். ஹர்யஸ்வர்கள் இக்கூற்றின் பொருளைப் புரிந்து கொண்டனர்.) ஜட இயற்கை இரு வழிகளில் செயற்படுகிறது. ஒன்று படைத்தல், இரண்டு அழித்தல். இவ்வாறாக ஜட இயற்கை என்ற நதி இருபுறமும் ஓடுகிறது. இதையறியாது இந்நதிக்குள் விழும் ஜீவராசி இதன் அலைகளில் மூழ்கி விடுகிறான். மேலும் நதியின் கரைக்கருகில் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருப்பதால், அவனால் அதிலிருந்து வெளியேற முடிவதில்லை. மாயை என்ற அந்த நதியில் செய்யப்படும் பலன் கருதும் செயல்களால் என்ன பயன்?

பதம் 6.5.17 : (நாரத முனிவர், இருபத்தைந்து மூலப் பொருட்களாலான ஒரு வீடு இருப்பதாகக் கூறினார். ஹர்யஸ்வர்கள் இந்த உவமையைப் புரிந்துகொண்டனர்.) பரமபுருஷர் இருபத்தைந்து மூலப் பொருட்களுக்கும் களஞ்சியமாவார். மேலும் பரம ஜீவன் என்ற முறையில் காரண விளைவுகளை நடத்தும் அவர், அவைகளின் தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அப்பரமபுருஷரை அறியாது, நிலையற்ற பலன் கருதும் செயல்களில் ஒருவன் ஈடுபடுவானாயின், அதனால் அவன் என்ன பயனடைவான்?

பதம் 6.5.18 : (நாரத முனிவர் ஓர் அன்னத்தைப் பற்றி கூறினார். அந்த அன்னம் இச்சுலோகத்தில் விவரிக்கப்படுகிறது) ஜட, ஆன்மீக சக்திகளுக்கெல்லாம் பிறப்பிடமான பரமபுருஷரைப் புரிந்துகொள்வதெப்படி என்பதை வேத சாஸ்திரங்கள் தெளிவாக விளக்குகின்றன. உண்மையில், அவை இவ்விருசக்திகளையும் விவரமாக விளக்குகின்றன. எவனொருவன் ஜடம், சேதனம் இரண்டுக்குமிடையில் வித்தியாசம் காண்கிறானோ, எவன் அனைத்திலுமுள்ள சாரம்சத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறானோ, எவன் பந்தம் மற்றும் மோட்சத்திற்கான வழிமுறைகளை விளக்குகிறானோ, அவனே அன்னம் (ஹம்ஸ) எனப்படுகிறான். வேத வாக்கியங்கள் பலவகைப்பட்ட ஒலி அதிர்வுகளைக் கொண்டுள்ளன. மூடனும் அயோக்கியனுமான ஒருவன் இந்த சாஸ்திரக் கல்வியை விட்டுவிட்டு, நிலையற்ற செயல்களில் ஈடுபடுவதால் என்ன பயன்?

பதம் 6.5.19 : (நாரத முனிவர், கூர்மையான கத்திகளாலும், வஜ்ரங்களாலும் ஆன ஒரு பெளதிகப் பொருளைப் பற்றி கூறினார். ஹர்யஸ்வர்கள் இவ்வுவமையைப் பின்வருமாறு புரிந்து கொண்டனர்.) நித்தியமான காலம், மிகவும் கூர்மையான கத்திகளாலும், வஜ்ரங்களாலும் செய்யப்பட்ட சக்கரம் போல் சுழன்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்காலச் சக்கரம், முழு சுதந்திரத்துடன், ஓயாமல், உலகின் அனைத்துச் செயல்களையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. நித்தியமான இந்த காலத் தத்துவத்தைக் கற்றறிய ஒருவன் முயலவில்லையென்றால், நிலையற்ற பெளதிக செயல்களைச் செய்வதால் அவன் என்ன நன்மையை அடையப் போகிறான்?

பதம் 6.5.20 : (நாரத முனிவர், எவ்வாறு ஒருவன் அறியாமையினால் தன் சொந்த தந்தையின் கட்டளைகளை எதிர்க்க முடியும் என்று கேட்டார். ஹர்யஸ்வர்கள் இக்கேள்வியின் பொருளைப் புரிந்து கொண்டனர்) ஒருவன் சாஸ்திரங்களின் மூல உபதேசங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். வேத நாகரீகத்தின்படி, இரண்டாவது பிறப்பின் அறிகுறியாக ஒருவனுக்கு பூனூல் அணிவிக்கப்படுகிறது. ஓர் உண்மையான ஆன்மீக குருவிடமிருந்து சாஸ்திர உபதேசங்களைப் பெற்றுள்ள ஒருவன் இரண்டாவது பிறப்பை எடுத்தவனாகிறான். எனவே, சாஸ்திரம்தான் உண்மையான தந்தையாகும். ஒருவன் பெளதிக வாழ்வு முறையை முடித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் எல்லா சாஸ்திரங்களும் உபதேசிக்கின்றன. தந்தையினுடைய (சாஸ்திரம்) கட்டளைகளின் நோக்கத்தை அறியாதவன் அறிவிலியாவான். தன் மகனை பெளதிக செயல்களில் ஈடுபடுத்த முயலும் ஒரு பெளதிக தந்தை உண்மையான தந்தையல்ல. அவரது உபதேசங்களும் உண்மையான தந்தையின் உபதேசங்களல்ல.

பதம் 6.5.21 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, பிரஜாபதி தட்சனின் மகன்களான ஹர்யஸ்வர்கள், நாரதரின் உபதேசங்களைக் கேட்டு அதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டனர். அவர்களனைவரும் அவரது உபதேசங்களில் நம்பிக்கை வைத்து ஒரே முடிவுக்கு வந்தனர். அவர்கள் அந்த மாமுனிவரைத் தங்களது ஆன்மீக குருவாக ஏற்று அவரை வலம் வந்து, எந்த வழியில் சென்றால், மீண்டும் இவ்வுலகிற்கு வரவேண்டியதில்லையோ, அந்த வழியைப் பின்பற்றினர்.

பதம் 6.5.22 : இசையின் ஏழு சப்த ஸ்வரங்களான ஸ,ரி,க,ம,ப,த,நி என்பவை இசைக் கருவிகளில் உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் சாம வேதத்திலிருந்து தான் முதன்முதலாக அவை வந்தன. மாமுனிவரான நாரதர் பரமபுருஷரின் லீலைகளை விவரித்து சப்தங்களை எழுப்புகிறார். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்பது போன்ற திவ்யமான ஓசைகளின் மூலமாக, அவர் தமது மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் பதியச் செய்கிறார். இவ்விதமாக அவர் புலன்களின் நாயகரான ரிஷிகேசரை நேருக்கு நேராக தரிசிக்கிறார். ஹர்யஸ்வர்களைக் கடைத்தேற்றிய பிறகு, நாரத முனிவர், பகவானின் தாமரைப் பாதங்களில் எப்பொழுதும் மனதைப் பதித்தவராய், எல்லாக் கிரக அமைப்புக்களிலும் தொடர்ந்து சஞ்சரிக்கலானார்.

பதம் 6.5.23 : பிரஜாபதி தட்சனின் மகன்களான ஹர்யஸ்வர்கள் பண்புமிக்க குணசீலர்களாவர். ஆனால் நாரத முனிவரின் உபதேசங்களைக் கேட்டு, அவர்கள் தங்கள் தந்தையின் உத்தரவை நிறைவேற்றத் தவறிவிட்டனர். இது பற்றி தட்சன் நாதரிடமிருந்து கேள்விப்பட்டதும், அவர் வருத்தப்படத் துவங்கினார். இத்தகைய நல்ல மகன்களுக்குத் தந்தையாக இருந்தும், அவர்களையெல்லாம் அவர் இழந்து விட்டார். நிச்சயமாக இது வருந்தத்தக்க விஷயம்தான்.

பதம் 6.5.24 : பிரஜாபதி தட்சன் தான் இழந்துவிட்ட குழந்தைகளுக்காக வருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது பிரம்ம தேவர் சில அறிவுரைகளைக் கூறி அவரை சமாதானப்படுத்தினார். அதன் பிறகு தட்சன் தன் மனைவி பாஞ்சஜனியின் கர்ப்பத்தில் மேலும் ஆயிரம் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இம்முறை அவரது மகன்கள், சாவலாஸ்வர்கள் என்று அறியப்பட்டனர்.

பதம் 6.5.25 : தங்களுடைய தந்தையின் கட்டளைப்படி, குழந்தைகள் பெறுவதற்காக, இரண்டாவதாக பெற்றெடுக்கப்பட்ட மகன்களும் நாராயண-ஸரஸ் என்ற புண்ணிய தீர்த்தத்திற்குச் சென்றனர். அங்குதான் அவர்களுடைய தமையன்கள் முன்பு நாரதரின் உபதேசங்களைப் பின்பற்றி பூரணத்துவம் அடைந்தனர். சாவலாஸ்வர்கள் கடுந்தவங்களை மேற்கொண்டபடி அப்புண்ணிய தீர்த்தத்தில் வாழ்ந்து வந்தனர்.

பதம் 6.5.26 : நாராயண ஸரஸ் என்ற ஸ்தலத்தில், முதல் பிரிவினரைப் போலவே இரண்டாவது பிரிவைச் சேர்ந்த மகன்களும் தவம் புரிந்தனர். அப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடிய அவர்கள், அதன் ஸ்பரிசத்தினால், தங்களுடைய இதயங்களிலிருந்த அசுத்தமான பெளதிக ஆசைகளெல்லாம் அகலப் பெற்றனர். அவர்கள், ஓம்காரத்துடன் துவங்கும் மந்திரங்களை உச்சரித்து, கடுந்தவங்களை மேற்கொண்டனர்.

பதங்கள் 6.5.27 – 6.5.28 : ஒரு சில மாதங்களுக்கு பிரஜாபதி தட்சனின் மகன்கள், நீரை மட்டுமே பருகி, காற்றை மட்டுமே உண்டனர். இவ்வாறு கடுந்தவங்களை மேற்கொண்ட அவர்கள், “தமது திவ்ய லோகத்திலேயே எப்பொழுதும் வீற்றிருக்கும் பரமபுருஷராகிய ஸ்ரீமன் நாராயணருக்கு எங்களது பணிவான வணக்கங்கள். அவர் பரமபுருஷர் (பரமஹம்ஸ) என்பதால், அவருக்கு எங்களது பணிவான வணக்கங்களை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்” என்ற இந்த மந்திரத்தை உச்சரித்தனர்.

பதம் 6.5.29 : பரீட்சித்து மகாராஜனே, நாரத் முனிவர், குழந்தைகளைப் பெறுவதற்காக தவத்தில் ஈடுபட்டிருந்த தட்சனின் மகன்களை அணுகி, அவர்களது தமையன்களிடம் முன்பு கூறியது போலவே புதிரான வார்த்தைகளைக் கூறினார்.

பதம் 6.5.30 : தட்சனின் மகன்களே, எனது உபதேச மொழிகளைக் கவனமாகக் கேளுங்கள். நீங்களெல்லோரும் உங்கள் தமையன்களான ஹர்யஸ்வர்களிடம் மிகவும் அன்பு கொண்டவர்கள் என்பதால், நீங்கள் அவர்களுடைய வழியைப் பின்பற்ற வேண்டும்.

பதம் 6.5.31 : தர்ம விதிகளை அறிந்துள்ள ஒரு சகோதரன், தன் தமையன்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறான். மிகவும் முன்னேறியுள்ள காரணத்தால், இத்தகைய புண்ணியமுள்ள ஒரு சகோதரன், தங்கள் சகோதரர்களிடம் அன்பாக உள்ள மருத்துக்களைப் போன்ற தேவர்களின் சகவாசத்தில் இன்புறும் வாய்ப்பைப் பெறுகிறான்.

பதம் 6.5.32 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சிறந்த ஆரிய மன்னனே, யாருடைய கருணைபொழியும் பார்வை வீண் போவதில்லையோ, அந்த நாரத முனிவர், பிரஜாபதி தட்சனின் மகன்களிடம் இவ்வளவு கூறியபின், தாம் திட்டமிட்டபடி அங்கிருந்து சென்றுவிட்டார். தட்சனின் மகன்களும் தங்கள் தமையன்களையே பின்பற்றினர். அவர்கள் குழந்தைகளை உற்பத்தி செய்யும் முயற்சியைக் கைவிட்டு, தங்களைக் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

பதம் 6.5.33 : சாவலாஸ்வர்கள், பக்தித் தொண்டை, அல்லது பரமபுருஷரின் அருளைப் பெற்றுத்தரக்கூடிய சரியான வழியை மேற்கொண்டனர். மேல் திசைக்குச் சென்று கழிந்துபோன இரவுகள்போல், அவர்கள் இன்றுவரை திரும்பி வரவேயில்லை.

பதம் 6.5.34 : இச்சமயத்தில் பல கெட்ட சகுணங்களைக் கண்ட தட்சன், தன் இரண்டாவது பிரிவைச் சேர்ந்த மகன்களான சாவலாஸ்வரர்களும், நாரதரின் உபதேசங்களின்படி, தங்கள் தமையன்கள் சென்ற வழியிலேயே சென்றுவிட்டதைப் பற்றி கேள்விப்பட்டார்.

பதம் 6.5.35 : பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்காக, சாவலாஸ்வர்களும் இவ்வுலகபற்றைத் துறந்து சென்றுவிட்டதைக் கேள்விப்பட்ட தட்சன் நாரதரிடம் கோபங்கொண்டு, புத்திர சோகத்தினால் மூர்ச்சையடையும் நிலைக்கு வந்துவிட்டார். தட்சன் நாரதரைச் சந்தித்த பொழுது, அவரது உதடுகள் கோபத்தால் நடுநடுங்க பின்வருமாறு கூறலானார்.

பதம் 6.5.36 : பிரஜாபதி தட்சன் கூறினார்: ஐயகோ, நாரத முனிவரே, நீர் ஒரு சாதுபோல் உடையணிந்திருக்கிறீர். ஆனால் உண்மையில் நீர் சாதுவல்ல. இப்பொழுது நான் இல்லற வாழ்வில் இருந்தபோதிலும், உண்மையில் நான்தான் ஒரு சாது. என் மகன்களுக்குத் துறவு வழியைக் காட்டி, வெறுக்கத்தக்க அநீதியை அவர்களுக்கு நீர் செய்துவிட்டீர்.

பதம் 6.5.37 : பிரஜாபதி தட்சன் கூறினார்: என் மகன்கள் அவர்களது மூன்று கடன்களிலிருந்து சிறிதும் விடுபடவில்லை. உண்மையில், தங்கள் கடமைகளைப் பற்றி அவர்கள் சரிவர யோசிக்கக்கூட இல்லை. பாவம் நிறைந்த நாரத முனிவரே, அவர்கள் சாதுக்களுக்கும், தேவர்களுக்கும், அவர்களது தந்தைக்கும் இன்னும் கடன்பட்டவர்களாகவே இருப்பதால், இவ்வுலகிலும், அடுத்ததிலும் அவர்கள் நல்லதிர்ஷ்டத்தை நோக்கி முன்னேறுவதை நீர் தடுத்துவிட்டீர்.

பதம் 6.5.38 : பிரஜாபதி தட்சன் தொடர்ந்து கூறினார்: இவ்வாறு பிற ஜீவராசிகளுக்குத் தீங்கிழைக்கும் அதேசமயம், பகவான் விஷ்ணுவின் ஒரு சகா என்றும் கூறிக் கொள்ளும் நீர் பரமபுருஷரின் கீர்த்திக்குக் களங்கம் விளைவித்துக் கொண்டிருக்கிறீர். நீர் அநாவசியமாக அறியாத சிறுவர்களின் மனதில் துறவு மனப்பான்மையை எற்படுத்தியுள்ளீர். எனவே நீர் வெட்கமற்றவரும், இரக்கமற்றவருமாவீர். உம்மால் எவ்வாறு பரமபுருஷரின் அந்தரங்க சகாக்களுடன் சஞ்சரிக்க இயலும்?

பதம் 6.5.39 : உம்மைத் தவிர மற்றெல்லா பகவத் பக்தர்களும் பந்தப்பட்ட ஆத்மாக்களிடம் மிகவும் கருணை கொண்டு, அவர்களுக்கு நன்மை செய்ய ஆவலாக உள்ளனர். நீர் ஒரு பக்தனின் உடையை அணிந்திருப்பினும், உம்மிடம் பகையற்றவர்களிடம் நீர் பகையை ஏற்படுத்துகிறீர், அல்லது நீர் நட்பை முறித்து நண்பர்களுக்கிடையில் பகையை மூட்டுகிறீர். வெறுக்கத்தக்க இச்செயல்களைச் செய்யும் அதேசமயம், ஒரு பக்தரைப் போல் பாசாங்கு செய்ய உமக்கு வெட்கமாக இல்லையா?

பதம் 6.5.40 : பிரஜபாதி தட்சன் தொடர்ந்து கூறினார்: துறவு மனப்பான்மையை எழச்செய்வதாலேயே, ஜட உலகிலிருந்து ஒருவன் தன்னை விலக்கிக் கொள்ள முடியும் என்று நீர் எண்ணினால், நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். பூரண அறிவை எழச் செய்யாமல், நீர் செய்துள்ளது போல் உடையை மட்டும் மாற்றிக் கொள்வதால் துறவு மனப்பான்மையைக் கொண்டுவருவது சாத்தியமல்ல.

பதம் 6.5.41 : உண்மையில் பெளதிக சுகம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். ஆனால் அது எவ்வளவு துன்பம் தரக்கூடியது என்பதைச் சுயமாக ஒருவன் அனுபவித்தாலன்றி, ஒருவனால் அவற்றை விட முடியாது. எனவே ஒருவன் அறிவில் முன்னேற்றமடையும் அதே சமயம், பெயரளவேயான பெளதிக சுகத்தில் ஈடுபட்டிருக்கவும் அனுமதிக்க வேண்டும். இதனால் இப்பொய்யான பெளதிக சுகத்திலுள்ள துன்பத்தை அவனால் உணரமுடியும். பிறகு, மற்றவர்களின் உதவியில்லாமலேயே, பெளதிக சுகம் எவ்வளவு வெறுக்கத்தக்கது என்பதை ஒருவன் உணர்ந்து கொள்வான். மற்றவர்களால் மனம் மாற்றப்பட்டு துறவை ஏற்பவர்கள், சுய அனுபவத்திற்குப் பிறகு துறவை ஏற்பவர்களைப் போல் அவ்வளவு சிறந்த துறவிகளாக இருப்பதில்லை.

பதம் 6.5.42 : நான் குடும்ப வாழ்வில் மனைவி, மக்களுடன் வாழ்ந்த போதிலும், வேத விதிகளுக்கேற்ப பலன்தரும் கருமங்களைச் செய்து, பாவ விளைவுகள் இல்லாத ஒரு வாழ்வை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். நான் தேவ-யக்ஞம், ரிஷி-யக்ஞம், பித்ரு-யக்ஞம், ந்ரு-யக்ஞம் உட்பட எல்லா வகையான யக்ஞங்களையும் செய்திருக்கிறேன். இந்த யக்ஞங்கள் ‘விரதம்’ என்று அழைக்கப்படுவதால், நான் க்ருஹவ்ரதன் என்று அழைக்கப்படுகிறேன். துரதிர்ஷ்டவசமாக, நீர் காரணமின்றி என் மகன்களைத் துறவு மார்க்கத்திற்கு தவறாக வழிநடத்திச் சென்று பெரும் அதிருப்தியை எனக்கு அளித்துவிட்டீர். ஒருமுறை இதைப் பொறுத்துக் கொள்ளலாம்.

பதம் 6.5.43 : நீர், ஒருமுறை என் மகன்களை நான் இழக்கும்படி செய்தீர். இப்பொழுது அதே அமங்களச் செயலை மீண்டும் செய்துள்ளீர். எனவே நீர் பிறரிடம் எப்படி நடந்து கொள்வது என்பதையறியாத வஞ்சகராவீர், நீர் இப்பிரபஞ்சம் முழுவதிலும் சஞ்சரிக்கக் கூடும் என்றாலும், எங்குமே உமக்கு வசிப்பிடம் இல்லாமல் போகட்டும் என்று நான் சபிக்கிறேன்.

பதம் 6.5.44 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, நாரத முனிவர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சாது என்பதால், அவர் பிரஜாபதி தட்சனால் சபிக்கப்பட்ட பொழுது, தத் பாடம்: “ஆம் உமது வாக்கு நல்லதாயிற்று. இச்சாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று பதிலளித்தார். பதிலுக்கு பிரஜாபதி தட்சனை அவர் சபித்திருக்கக் கூடும். ஆனால் அவர் பொறுமையும், கருணையும் மிக்க ஒரு சாது என்பதால், ஒன்றும் செய்யவில்லை.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare