அத்தியாயம் – 23
சிசுமார கிரஹ மண்டலம்
பதம் 5.23.1 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே, சப்தரிஷி மண்டலத்திற்கு மேல் 1,300,000 யோஜனங்கள் (1,400,000 மைல்கள்) தூரத்தில் பகவான் விஷ்ணுவின் உறைவிடம் இருப்பதாகக் கற்றறிந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அங்கே மகாராஜா உத்தானபாதனின் மைந்தனின் சிறந்த பக்தருமான துருவமகாராஜா இருக்கின்றார். அவர் அனைத்து உயிர்வாழிகளின் உயிருக்கும் மூலாதாரமாக படைப்பின் இறுதிவரையில் இருக்கின்றார். அக்னி, இந்திரன், பிரஜாபதி, காச்யபர், தர்மர் போன்றவர்கள் அவருக்குத் தங்கள் மரியாதைக்குரிய மேன்மையான வந்தனங்களை அர்ப்பணிப்பதற்காக அங்கே கூடி இருக்கின்றனர். அவர்கள் துருவமகாராஜாவைத் தங்கள் வலதுபுறத்திலிருந்து சுற்றி வருகின்றனர். நான் ஏற்கனவே துருவ மகாராஜாவின் புகழ்மிக்கச் செயல்களை விளக்கியிருக்கிறேன். (ஸ்ரீமத் பாகவதம் நான்காம் காண்டத்தில்)

பதம் 5.23.2 : முழுமுதற்கடவுளின் பரம விருப்பத்தின் பேரில் நிறுவப்பட்டத் துருவ மகாராஜாவின் கிரஹமான வடமீன், எல்லாக் கிரஹங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்திற்கும் நடு அச்சாகத் திகழ்ந்து தொடர்ந்து ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது. கண் துஞ்சாது, கண்ணுக்குப் புலனாகாது இருக்கும் சக்திமிக்கக் காலம் என்பது இவ்வடமீனைச் சுற்றி எல்லா ஒளிக்கோளங்களும் எந்தவிதத் தடையுமின்றி தொடர்ந்து பயணம் செய்வதற்குக் காரணமாக இருக்கின்றது.

பதம் 5.23.3 : நெற்கதிர்களை சூட்டடிக்கும்பொழுது நடுவில் ஒரு கம்பத்தை நட்டு அதில் மாடுகளை வரிசையாகப் பூட்டியிருப்பர். ஒரு மாடு கம்பத்தின் அருகிலும், மற்றது அதிலிருந்து சற்றுத் தள்ளியும், அதற்கடுத்த மாடு அதிலிருந்து சற்றுத் தள்ளியும், பிணைக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறிதும் மாற்றமின்றி அம்மாடுகள் கம்பத்தைச் சுற்றி வைக்கோலின்மீது நடந்து வரும். அதுபோல் எல்லாக் கிரஹங்களும், நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் நட்சத்திரங்களும் துருவ மகாராஜாவின் கிரஹமான வடமீனைச் சுற்றி, சில மேலேயும், சில கீழேயும் இருந்தபோதிலும் தத்தமக்குரிய கோளப் பாதையிலிருந்து மாறாது அனைத்தும் பயணம் செய்கின்றன. அவற்றின் முன்வினைப் பயனுக்கேற்ப, முழுமுதற் கடவுளால் ஜட இயற்கையின் எந்திரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும் இக்கிரஹங்கள் வடமீனைச் சுற்றிக் காற்றினால் செலுத்தப்படுகின்றன என்பதோடு படைப்பின் இறுதிவரை, தொடர்ந்து இவ்வாறேச் சுற்றி வரும். மேகங்கள் நூற்றுக்கணக்கான டன் தண்ணீரைச் சுமந்து கொண்டு வானில் மிதந்து வருவதுபோல் அல்லது மிகப்பெரிய ஸ்யேனக் கழுகுகள் தமது முன்வினைப் பயன் காரணமாக, பூமியில் விழுவதற்குச் சிறிதும் சந்தர்ப்பம் இன்றி வானில் மிகுந்த உயரத்தில் பறப்பது போல் இக்கிரஹங்கள் பரந்து விரிந்த வானில் மிதந்து வருகின்றன.

பதம் 5.23.4 : நட்சத்திரங்களையும், கிரகஹங்களையும் தன்னிடத்தேக் கொண்டிருக்கும் இப்பெரிய எந்திரம் நீரிலுள்ள சிசுமாரத்தின் (சுறா மீனின்) வடிவத்தை ஒத்திருக்கின்றது. இது சிலசமயம் கிருஷ்ண, வாசுதேவரின் அவதாரமாகவும் கருதப்படுகின்றது. மகாயோகிகள் வாசுதேவரை இந்த வடிவத்திலேயேத் தியானிக்கின்றனர். காரணம் இது கண்களுக்குப் புலனாகக் கூடியதாகும்.

பதம் 5.23.5 : சிசுமாரத்தின் இவ்வடிவம் தலைகீழ் நோக்கியவாறும் உடல் சுருளாகச் சுற்றப்பட்டும் இருக்கின்றது. இதன் வாலின் நுனியில் துருவ லோகம் இருக்கின்றது. வாலின் உடற்பகுதியில் பிரஜாபதி, அக்னி, இந்திரன், தர்மன், போன்ற தேவர்களின் கிரஹங்களும், வாலின் அடிப்பகுதியில் தாதா, விதாதா என்னும் தேவர்களின் கிரஹங்களும் இருக்கின்றன. சிசுமாரத்தில் தேவர்களின் கிரஹங்களும் இருக்கின்றன. சிசுமாரத்தின் இடைப் பகுதியில் வசிஷ்டர், அங்கிரர் போன்ற சப்தரிஷிகள் இருக்கின்றனர். சிசுமார சக்கரத்தின் சுருள்உடல் வலது பக்கத்தை நோக்கி இருக்கிறது. அதன் மீது அபிஜித்திலிருந்து புனர்வஸுவரையுள்ள பதினான்கு நட்சத்திரங்கள் இருக்கின்றன. இதன் இடதுபுறத்தில் புஷ்யா முதல் உத்தராஷாடாவரையுள்ள பதினான்கு நட்சத்திரங்கள் இருக்கின்றன. இவ்வாறு இதன் உடல் சமநிலையில் இருக்கின்றது. காரணம் இதன் இரு பக்கமும் சம எண்ணிக்கையில் உள்ள நட்சத்திரங்கள் இருக்கின்றன. சிசுமாரத்திக்கு பின்புறத்தில் அஜவீதி என்னும் நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றன. இதன் வயிற்றுப் பகுதியில் வானிலிருந்து பெருகி வரும் ஆகாயகங்கையாக இருக்கின்றது (பால் வழி).

பதம் 5.23.6 : சிசுமாரச் சக்கரத்தின் இடுப்புப் பகுதியின் வலது மற்றும் இடது புறத்தில் புனர்வசு மற்றும் புஷ்ய நட்சத்திரங்கள் இருத்தல் வேண்டும். ஆர்த்ரா மற்றும் அஸ்லேஷா நட்சத்திரங்கள் இருத்தல் வேண்டும். ஆர்த்ரா மற்றும் அஸ்லேஷா நட்சத்திரங்கள் அதன் வலது மற்றும் இடது பாதங்களில் இருக்கின்றன. அபிஜித் மற்றும் உத்ராஷாடா நட்சத்திரங்கள் அதன் வலது, இடது நாசித்துவாரங்களில் இருக்கின்றன. சிரவணா மற்றும் பூர்வஷாடா நட்சத்திரங்கள் அதன் வலது, இடது விழிகளில் இருக்கின்றன. தனிஷ்டா மற்றும் மூல நட்சத்திரங்கள் அதன் வலது மற்றும் இடது செவிகளில் இருக்கின்றன. மகா முதல் அனுராதா வரை தென்திசையினைக் குறிக்கும் எட்டு நட்சத்திரங்கள் அதன் உடலின் இடது அங்கத்தில் இருக்கின்றன. மிருக சீர்ஷம் முதல் பூர்வ பாத்ரா வரை வட திசையினைக் குறிக்கும் எட்டு நட்சத்திரங்கள் வலது பக்க அங்கங்களின் மேல் இருக்கின்றன. சதபிஷா மற்றும் ஜியேஷ்டா நட்சத்திரங்கள் அதன் வலது, இடது தோள்களின் மேல் இருக்கின்றன.

பதம் 5.23.7 : சிசுமாரத்தின் மேல் தாடையில் அகஸ்தி இருக்கின்றது; கீழ்த்தாடையில் யமராஜன் இருக்கின்றார்; வாயில் செவ்வாயும்; பிறப்புறுப்பில் சனியும்; கழுத்தின் பின் பக்கத்தில் வியாழனும்; மார்பில் சூரியனும், இதயத்தினுள் நாராயணனும் இருக்கின்றார். அதன் மனதினுள் சந்திரனும் உந்திச் சுழியில் சுக்கிரனும்; முலைகளின்மீது அஸ்வினி குமாரர்களும் உள்ளனர். பிராணபானன் என்னும் அதன் மூச்சுக் காற்றில் புதனும்; அதன் கழுத்தில் இராகுவும் அதன் உடலெங்கும் கேது மற்றும் வால் நட்சத்திரங்களும், ரோமங்களில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் உள்ளன.

பதம் 5.23.8 : அன்பார்ந்த மன்னனே, இவ்வாறு விவரிக்கப்பட்ட சிசுமாரத்தின் உடலானது முழுமுதற் கடவுள் பகவான் விஷ்ணுவின் புறவடிவமாகக் கருதப்படவேண்டும். காலை, மதியம், மாலை வேளைகளில் ஒருவன் சிசுமாரச் சக்கரம் என்னும் பகவானின் வடிவத்தை அமைதியுடன் தியானித்து இம்மந்திரத்தினால் வழிபடவேண்டும். “ஒ. தேவர்களின் தலைவரே, ஒ, பரமபுருஷரே, நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணித்து உம்மைத் தியானிக்கின்றேன்”.

பதம் 5.23.9 : சிசுமாரச் சக்கரத்தினை உருவாக்கிய பரமபுருஷ பகவான் விஷ்ணுவின் உடல், அனைத்துத் தேவர்கள், கிரஹங்கள், நட்சத்திரங்கள் எல்லாவற்றிற்கும் உறைவிடமாகத் திகழ்கின்றது. ஒருவன் இம்மந்திரத்தினால் பரம புருஷ பகவானை காலை, மதியம், மாலை என்னும் மூன்று வேளைகளிலும் வழிபடுவானாயின், அவன் தனது பாவங்களிலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவான். ஒருவன் இவ்வடிவத்தை ஒரு நாளில் மூன்று வேளைகள் வழிபட்டாலோ, நினைத்தாலோ அவனது சமீபத்திய பாவங்கள் அனைத்தும் கூட நீங்கப் பெறுகிறான்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare