அத்தியாயம் – 18
ஜம்புத்வீபவாசிகள் பகவானுக்குத் தங்கள்
பிரார்த்தனைகளை அர்ப்பணித்தல்
பதம் 5.18.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தர்மராஜாவின் புதல்வரான பத்ரஸ்ரவான் பத்ராஸ்வ வர்ஷம் என்னும் நிலப்பகுதியினை ஆள்கிறார். இலாவ்ருத வர்ஷத்தில் சிவபெருமான் சங்கர்ஷணரை வழிபடுவது போல் பத்ரஸ்ரவானும் அவரது மெய்க்காப்பாளர்களும், அங்கு வசிப்போர்களும் ஹயஸீர்ஷர் என்னும் வாசுதேவரின் அம்ச விரிவினை வணங்குகின்றனர். பகவான் ஹயஸீர்ஷர் தன் பக்தர்கள் மீது மிகுந்த அன்புடையவராவார், இவரே சமய அறநெறிகள் அனைத்திற்கும் காவலரும் ஆவார். உயர்ந்த சமாதியில் நிலை நின்று பத்ரஸ்ரவானும் அவரது துணைவர்களும் பின்வரும் பிரார்த்தனைகளை மிகவும் கவனமான உச்சரிப்புடன் ஒதுகின்றனர்.

பதம் 5.18.2 : மன்னர் பத்ரஸ்ரவானும் அவரது நெருங்கிய துணைவர்களும் பின்வருமாறு பிரார்த்தித்தனர்: எங்களது மரியாதைக்குரிய வந்தனங்களை, சமய அறநெறிகள் அனைத்திற்கும் உறைவிடமானவரும், இப்பௌதீக உலகில் உள்ள பந்தப்பட்ட ஆத்மாக்களின் இதயங்களைத் தூய்மை செய்பவருமான முழுமுதற் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றோம். மீண்டும் மீண்டும் எங்கள் மரியாதைக்குரிய வந்தனங்களை அவருக்கு நாங்கள் சமர்ப்பிக்கின்றோம்.

பதம் 5.18.3 : அந்தோ என்ன விந்தை இது. மூட லோகாயதன் வெல்லமுடியாத மரணத்தின் பெரிய ஆபத்தினைப் பற்றிக் கவனத்திற்கொள்ளாதிருக்கின்றானே மரணம் நிச்சயம் வரும் என்பதை அவன் அறிவான். இருந்தும் அவன் சொரணையற்று அதனைப் புறக்கணிப்பவனாக இருக்கின்றான் அவன் தந்தை மரணமடைந்தால், தனது தந்தையின் சொத்துக்களை அனுபவிக்க விரும்புகிறான், அவனது மைந்தன் இறந்தால், அவனது உடைமைகளையும் அனுபவிக்க விரும்புகிறான். இந்த நிலைகளிலுமே அவன் தன்னிடமிருக்கும் பணத்தினால் பௌதீக இன்பத்தையே அனுபவிக்க விரும்புகிறான்.

பதம் 5.18.4 : ஒ, பிறப்பிலியே, ஆன்மீக ஞானத்தில் வளர்ச்சி பெற்ற கற்றறிந்த வேதவித்தகர்கள், பிற தத்துவவாதிகள், தர்க்கவாதிகளைப் போல் பௌதிக உலகம் அழியக் கூடியது என்பதை நிச்சயம் நன்கறிவர். சமாதிநிலையில் அவர்கள் இவ்வுலகின் உண்மை நிலையினை உணர்ந்து அதனை உபதேசிக்கவும் செய்கின்றனர். இருந்தும் அவர்கள் கூட சில சமயம் உமது மாயாசக்தியினால் குழப்பமடைகின்றனர். இது உமக்கே உரிய லீலா வினோதமாகும். ஆகையினால் உமது மாயாசக்தி மிகவும் விந்தையானது என்பதை நான் புரிந்து கொண்டு உமக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களைச் சமர்ப்பிக்கின்றேன்.

பதம் 5.18.5 : ஒ, பகவானே, நீர் இப்பௌதீக உலகின் படைத்தல், காத்தல், அழித்தல் போன்றவற்றிலிருந்து முற்றிலும் பிரிந்து தனித்திருந்து இச்செயல்களினால் நேரடியாகப் பாதிக்கப்படாதிருந்தும் இவையனைத்தும் உமக்கே இயல்புடையனவாகும். இதில் நாங்கள் வியப்படையவில்லை. ஏனெனில் உமது கற்பனைக்கெட்டாத சக்திகள் நீரே காரணங்கள் அனைத்திற்கும் மூலகாரணர் என்னும் நிறைவானத் தகுதியினை உமக்களிக்கின்றன. எல்லாவற்றிலுமிருந்து நீர் பிரிந்து தனியே இருந்த போதிலும் எல்லாவற்றிலும் செயல்படும் விதியாக நீரே விளங்குகின்றீர். இதனால் உமது கற்பனைக் கெட்டாத சக்தியின் மூலமே எல்லாம் நிகழ்கின்றது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம்.

பதம் 5.18.6 : யுக முடிவில் அறியாமையே வடிவமாக வந்த அசுரன் ஒருவன் வேதங்கள் அனைத்தையும் திருடிக் கொண்டு ரஸாதல லோகத்திற்குச் சென்று விட்டான். ஆயினும் பரமபுருஷ பகவான் தனது ஹயக்ரீவர் வடிவத்தில் வேதங்களைக் கைப்பற்றி பிரம்மதேவன் வேண்டிக் கொண்டதினால் அவரிடம் திருப்பி அளித்தார். தனது உறுதியில் தோல்வியடையாத பரமபுருஷ பகவானுக்கு நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 5.18.7 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே, ஹரி வர்ஷம் என்னும் நிலப்பகுதியில் பகவான் நரசிம்மர் இருக்கின்றார். ஸ்ரீமத் பாகவதம் ஏழாம் காண்டத்தில் பகவான் நரசிம்மதேவர் வடிவம் கொள்வதற்கு பிரஹலாத மகாராஜா எவ்வாறு காரணமானவர் என்பதை உனக்கு நான் விளக்குவேன். பகவானின் மிகவுயர்ந்த பக்தரான பிரஹலாத மகாராஜா தெய்வீக மகான்களின் உயர்குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமாவார். அவரது செயல்களும், தன்மைகளும் அவரது அசுர குலத்தில் பிறந்த அனைத்து உறுப்பினர்களையும் அதிலிருந்து மீட்டன. இவ்வுயர்ந்த மகானுக்கு பகவான் நரசிம்மதேவரே மிகவும் பிரியமானவர் ஆவார். அதனால் பிரஹலாத மகாராஜாவும் ஹரிவர்ஷத்தைச் சேர்ந்த அனைவரும், அவரது பணியாளர்களும் பின்வரும் மந்திரத்தை ஒதி பகவான் நரசிம்ம தேவரை வழிபடுகின்றனர்.

பதம் 5.18.8 : அனைத்துச் சக்திக்கும் ஆதாரமாக விளங்கும் பகவான் நரசிம்ம தேவருக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன். வஜ்ராயுதங்களைப் போன்று நகங்களும் பற்களுமுடைய எனது பகவானே, இப்பௌதீக உலகின் பலன்தரும் செயலுக்கான எமது அசுர ஆசைகளை அழிப்பீராக அருள் கூர்ந்து எமது இதயங்களில் எழுந்தருளி எமது அறியாமையினை நீக்குவீராக அப்போதுதான் உமது கருணையினால் இப்பௌதீக உலகின் வாழ்க்கைப் போராட்டத்தில் அச்சமற்றவர்களாக ஆவோம்.

பதம் 5.18.9 : பிரபஞ்சம் முழுவதும் மங்களம் உண்டாகட்டும். காழ்ப்புணர்ச்சியுடைய மனிதர்கள் அனைவரும் அமைதி பெறட்டும். பக்தி யோகத்தின் பயிற்சியினால் உயிர்வாழிகள் அனைவரும் சாந்தி பெறட்டும். பக்தித் தொண்டினை மேற்கொள்வதினால் அவர்கள் பிறர் நலனைப் பற்றிச் சிந்திப்பாராக. அதனால் நாம் எப்போதும் உன்னத பரம் பொருளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபட்டு எப்போதும் அவரது சிந்தனையில் ஆழ்ந்திருப்போமாக.

பதம் 5.18.10 : போற்றுதற்குரிய பகவானே, இல்லம், மனைவி, மக்கள், நண்பர்கள், வங்கியிலுள்ள பணம், உறவினர்களைக் கொண்டுள்ள இல்வாழ்க்கையின் மீது நாங்கள் கவர்ச்சியடையாதிருப்பதற்கு உம்மைப் பிராத்திக்கின்றோம். அப்படியே நாங்கள் பற்றுவைத்தாலும் அது பகவான் கிருஷ்ணரைத் தமது உயிர் நண்பனாகக் கொண்ட பக்தர்கள் மீதே இருக்கட்டும். உண்மையிலேயே ஒருவன் தன்னுணர்வு பெற்று மனதினை அடக்கியவனென்றால் அவன் தனது வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்திலும் முற்றிலும் திருப்தியடைந்தவனாகிறான். அவன் தனது புலன்களைத் திருப்திப்படுத்த முயல்வதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் கிருஷ்ண உணர்வில் விரைவில் வளர்ச்சி பெறுகின்றனர். மாறாகப் பௌதீகப் பொருட்களில் மிகுந்த பற்றுடையோர் இவ்வாறு வளர்ச்சி பெறுவது மிக மிகக் கடினமாகும்.

பதம் 5.18.11 : முழுமுதற் கடவுளான முகுந்தனே எல்லாம் என்று இருக்கும் மனிதர்களிடம் தொடர்பு கொள்வதால் ஒருவன் அவரது ஆற்றல்கள் மிக்கச் செயல்களைக் காதால் கேட்டு அவற்றை மிக விரைவில் புரிந்து கொள்பவனாகிறான். முகுந்தனின் செயல்கள் மிகுந்த சக்தியுடையனவாகும், அவற்றைக் கேட்பதின் மூலம் ஒருவன் பகவானுடன் கூட விரைவில் தொடர்பு கொள்கிறான். தொடர்ந்தும், ஆர்வமுடனும் பகவானின் ஆற்றல் மிக்கச் செயல்களைக் கேட்கும் ஒருவனின் இதயத்தினுள் முழுமுதற் கடவுளின் நாமவடிவமாயிருக்கும் முழுமெய்ப்பொருள் புகுந்து அதிலுள்ள மாசுக்கள் அனைத்தையும் நீக்கித் தூய்மை செய்கிறது. மாறாகக் கங்கையில் குளித்து உடல் அழுக்கும் நோய்க்கிருமிகளும் நீங்கப்பெற்றாலும் புண்ணியச் சேத்திரங்களுக்கு யாத்திரை செல்வதினாலும் மன அழுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகே நீங்கும். அதனால் தனது வாழ்வை உடனே நிறைவு செய்து கொள்வதற்குப் புத்தியுடைய மனிதன் எவன்தான் பக்தர்களுடன் தொடர்பு கொள்ளாதிருப்பான்?

பதம் 5.18.12 : முழுமுதற் கடவுளான வாசுதேவர் மீது மாசற்ற பக்தியில் வளர்ச்சியடைந்திருக்கும் மேன்மைக்குணங்களான சமயதர்மம், ஞானம், துறவு போன்றவையும் வெளிப்படுகின்றன. மாறாக பக்தித் தொண்டு செய்யாது பௌதீகச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் ஒருவனிடம் நற்குணங்கள் ஏதும் இருப்பதில்லை. இவன் யோக ஸித்திப் பயிற்சியில் சேர்ந்தவனாகவோ அல்லது தனது குடும்பத்தையும், உறவினர்களையும் காப்பதற்கு நேர்மையான முயற்சி உடையவனாக இருந்தாலும் அவன், அவனது சுயமனயூகத்தினால் விரட்டப்படுவதோடு, பகவானின் புறச்சக்தியின் தொண்டில் கண்டிப்பாக ஈடுபட வேண்டியவனாகிறான். இம்மனிதனிடம் என்ன நற்குணம் இருக்க முடியும்?

பதம் 5.18.13 : நீர்வாழ் உயிர்கள் எப்போதும் மிகுந்த நீரிடை வாழ விரும்புவது போல் பந்தப்பட்ட ஆத்மாக்கள் இயற்கையிலேயே பரமபுருஷ பகவான் எங்கும் நிறைந்திருக்கும் தோற்றத்திலேயே வாழ விரும்புகின்றனர். ஆகையினால் பௌதீகக் கணக்குகளினால் தேர்ச்சி பெற்ற ஒருவன் பரமாத்மாவைச் சரண்புகாது பௌதீக இல்லற வாழ்க்கையில் பற்றுடையவனாக இருந்தானென்றால் அவனது சிறப்பு இளமை மிக்கப் புலைத்தம்பதியினரைப் போன்றதாகும். பௌதீக வாழ்வில் அதீதப் பற்றுடையவன் ஆன்மீக நற்குணங்கள் அனைத்தையும் இழந்து விடுகிறான்.

பதம் 5.18.14 : ஆகையினால் ஒ, அசுரர்களே இல்வாழ்க்கையின் இன்பம் என்பதைக் கைவிட்டு பயமின்மையின் உண்மையான அடைக்கலமாக விளங்கும் பகவான் நரசிம்மதேவரின் தாமரைத் திருவடிகளைச் சரணடைவீராக. பௌதீக இல்வாழ்வின் சிக்கலே, பௌதீகப் பற்று, இடையறாத ஆசைகள், துக்கம், சினம், ஏமாற்றம், வீண்கர்வம், என்று மீண்டும் மீண்டும் ஏற்படும் ஜனன மரணத்திற்கு உதவும் இவையனைத்திற்கும் மூலகாரணமாகும்.

பதம் 5.18.15 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: கேதுமால வர்ஷம் என்னும் நிலப்பகுதியில் பகவான் விஷ்ணு தனது பக்தர்களின் திருப்திக்காகக் காமதேவனாக வாழ்கிறார். இப்பக்தர்கள் இலட்சுமி தேவி (அதிர்ஷ்ட தேவதை), பிரஜாபதி ஸம்வத்ஸரன், மற்றும் ஸம்வத்ஸரனின் அனைத்துப் புதல்வர்கள், புதல்விகள் உள்ளிட்டப் பலராவர். பிரஜாபதியின் புதல்விகள் இரவுகளின் கட்டுப்படுத்தும் தேவதைகளாகவும் புதல்வர்கள் பகற்பொழுதுகளின் கட்டுப்படுத்தும் தேவர்களாகவும் கருதப்படுகின்றனர். பிரஜாபதியின் குழந்தைகள் 36000 பேர்களாவர், இவர்கள் ஒவ்வொருவரும் மனித ஆயுளில் ஒரு பகலும் ஒர் இரவும் ஆவர். ஆண்டின் இறுதியில் பிரஜாபதியின் புதல்விகள் முழுமுதற்கடவுளின் ஒளிமிக்கச் சக்கரத்தைக் கண்டு கிளர்ச்சியடைந்து அதனால் கருச்சிதைவிற்கு ஆளாகின்றனர்.

பதம் 5.18.16 : கேதுமால வர்ஷத்தில் பகவான் காமதேவர் (பிரத்யும்நன்) மிகவும் கனிவுடன் நடந்து கொள்கிறார். அவரது மெல்லியப் புன்னகை மிகவும் அழகியதாகும். புருவங்களை மெல்ல உயர்த்துவதினாலும், குறும்புத்தனமாகப் பார்ப்பதினாலும் அவர் தனது முகத்தின் அழகினை மேலும் அதிகரித்துக் கொள்கிறார். அவர் அதிர்ஷ்ட தேவதையினை இனிமை செய்கிறார். இவ்வாறு அவர் தனது உன்னதப் புலன்களில் மகிழ்கிறார்.

பதம் 5.18.17 : பகற்பொழுதுகளில் பிரஜாபதியின் மைந்தர்கள் துணையுடனும் (பகற்பொழுதின் தேவர்கள்) இரவு நேரங்களில் அவரது புதல்விகள் துணையுடன் (இரவின் தேவதைகள்) லட்சுமி தேவி சம்வத்ஸரம் எனப்படும் காலத்தில் பகவானின் கருணைமிக்க காமதேவர் வடிவத்தை வழிபடுகிறார். பக்தித் தொண்டில் முற்றிலும் ஆழ்ந்து அவன் பின்வரும் மந்திரங்களை ஓதினான்.

பதம் 5.18.18 : புலன்களை நெறிப்படுத்துபவரும், எல்லாவற்றிற்கும் மூலகாரணருமான முழுமுதற் கடவுள் ரிஷிகேஸருக்கு நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன். உடல், மனம், புத்தி போன்றவற்றின் செயல்கள் அனைத்திற்கும் தலைவர் ஆதலினால் அவரே பலன்கள் அனைத்தையும் அனுபவிப்பவர் ஆவார். மனம் உள்ளிட்டப் பதினோரு புலன்களும், ஐம்புலன்களின் பொருள்களும் அவரது பகுதித் தோற்றங்களாகும். அவரது சக்தியாக விளங்கும் அனைத்துத் தேவைகளையும் அவரே வழங்குகிறார். இவ்வாறு அச்சக்தியிடம் இருந்து அவர் வேறானர் அல்லர். அனைவரின் உடல், மன வலிமைக்கு அவரே காரணர் ஆவார். இவ்வலிமையும் அவரிலிருந்து வேறுபாடுடையதல்ல. அவரே எல்லா உயிர்வாழிகளுக்கும் கணவர் என்பதோடு அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அளிப்பவருமாவார். அவரை வழிபடுவது ஒன்றே வேதங்கள் அனைத்தின் நோக்கமாகும். அதனால் நாம் அனைவரும் நமது மரியாதைக்குரிய வந்தனங்களை அவருக்கு அர்ப்பணிப்போம். அவர் நம்மிடம் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் எப்போதும் கருணை உடையவராக இருப்பாராக.

பதம் 5.18.19 : போற்றுதற்குரியப் பகவானே, நீர் உண்மையில் அனைத்துப் புலன்களிலிருந்தும் முற்றிலும் விடுதலை பெற்றவர் ஆவீர். ஆகையினால் விரதங்கள் மூலம் உம்மைக் கடுமையாகப் பெண்கள் அனைவரும் வழிபடுகின்றனர். அவர்கள் தங்கள் புலன்களைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு கணவனை வேண்டி வழிபடும் காரணத்தினால் அவர்கள் அனைவரும் நிச்சயம் மாயையின் கீழேயே இருக்கின்றனர். அவர்கள் தமக்கோ, தமது குழந்தைகளுக்கோத் தமது கணவனால் பாதுகாப்புக் கொடுக்க முடியாது என்பதை அறிந்திலர். மேலும் அவனால் அவர்கள் செல்வத்தையோ, ஆயுட் காலத்தையோ பாதுகாக்க முடியாது. அவனே உமது ஆளுமையின் கீழுள்ள காலம், பலன் தரும் செயல்களின் விளைவுகள், மற்றும் ஜடஇயற்கையின் குணங்கள் முதலியவற்றைச் சார்ந்திருக்கின்றான்.

பதம் 5.18.20 : அவர் ஒருவரே அச்சமற்றவராகவும், அதேசமயம் அச்சமுடைய அனைவர்க்கும் முழு அடைக்கலம் கொடுப்பவராகவும் இருப்பதினால் அவரே ஒரு கணவரும் பாதுகாவலரும் ஆவார். ஆகையினால் எந்தன் பகவானே நீர் ஒருவரே கணவர் ஆவீர், இந்நிலையினை வேறு எவராலும் உரிமை கொண்டாட முடியாது. நீர் உண்மையானக் கணவர் இல்லையென்றால் நீர் பிறரிடம் அஞ்சுபவர் ஆவீர். அதனால் வேத இலக்கியங்களைக் கற்றுணர்ந்தவர்கள் மேலாண்மைக்குரிய உம்மை மட்டுமே அனைவரின் நாயகராக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். மேலும் அவர்கள் உம்மை விடச் சிறந்த கணவர் மற்றும் பாதுகாவலர் வேறு எவரும் இலர் என்றும் கருதுகின்றனர்.

பதம் 5.18.21 : போற்றுதற்குரிய பகவானே தூய அன்புடன் உமது தாமரைத் திருவடிகளை வணங்கும் ஒரு பெண்ணின் அனைத்து ஆசைகளையும் நீர் நிறைவேற்றுகின்றீர். அதுபோல் வேறு சில காரணங்களுக்காக உமது தாமரைத் திருவடிகளை வணங்கும் ஒரு பெண்ணின் ஆசைகளையும் நீர் உடனே நிறைவேற்றுகின்றீர். ஆயினும் இறுதியில் அவள் இதயம் உடைந்து துக்கமடைகிறாள். ஆகையினால் சில பெளதீக நன்மைகளுக்காக உமது தாமரைத் திருவடிகளை ஒருவன் வணங்கத் தேவையில்லை.

பதம் 5.18.22 : ஒ, வெல்வதற்கரியப் பரமபகவானே, சிவபெருமான், பிரம்மதேவன் பிற தேவர்கள், அசுரர்கள் போன்றோர் பௌதீக இன்பத்திற்கான நினைவுகளில் மூழ்கும்பொழுது அவர்கள் எனது வரங்களைப் பெறுவதற்காக கடுமையானத் தவங்களையும் துறவுகளையும் மேற்கொள்கின்றனர். ஆனால் நானோ, உமது திருவடித் தாமரைகளின் தொண்டில் ஒருவன் ஈடுபடாதவரை அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தபோதிலும் அவனுக்கு நான் கருணை செய்யமாட்டேன். உம்மை எப்போதும் எனது இதயத்தில் வைத்திருக்கின்ற காரணத்தினால் ஒரு பக்தனைத் தவிர வேறு எவருக்கும் நான் கருணை காட்டமாட்டேன்.

பதம் 5.18.23 : ஒ குற்றமற்றவரே, உமது தாமரைக் கரமே அனைத்து வரங்களுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்றது. அதனால் உமது தூய பக்தர்கள் அதனை வணங்குகின்றனர். மேலும் நீரும் அவர்களது தலைமேல் உமது கரத்தைக் கருணையுடன் வைக்கின்றீர். எனது அடையாளப் பொன்வரிகளை ஏற்கனவே நீர் உமது மார்பில் தாங்கியிருந்த போதிலும் எனது தலையின் மீதும் உமது கரத்தை வைப்பீராக. இக்கௌரவத்தினை ஒரு வீண் பெருமையாகவே நான் கருதுகிறேன். நீர் உமது உண்மையானக் கருணையினை உமது பக்தர்களையன்றி என்னிடம் காட்டுவதில்லை. உண்மையில் நீரே பரிபூரண நெறியாளர் ஆவார். உமது நோக்கங்களை வேறு எவராலும் அறிய முடியாது.

பதம் 5.18.24 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ரம்யக—வர்ஷத்தில் வைவஸ்வத மனு ஆண்டபொழுது முழுமுதற் கடவுள் அப்பெருங்காலத்தின் இறுதியில் (சக்ஷுஷ—மன்வந்தரத்தின் இறுதியில்) பகவான் மத்ஸ்யராக அவதரித்தார். வைவஸ்வத மனு இப்போது பகவான் மத்ஸயரை வழிபட்டுப் பின்வரும் மந்திரத்தை ஒதுகிறார்.

பதம் 5.18.25 : தூய உன்னதமானவரான முழுமுதற் கடவுளுக்கு நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன். அனைவரின் வாழ்க்கைக்கும், உடல் பலத்திற்கும், மனோபலத்திற்கும், புலன்களின் திறனுக்கும் அவரே ஆதாரமானவர். மிகப் பெரிய மீன் வடிவமான மத்ஸய அவதாரமே அவர் மேற்கொண்ட அனைத்து அவதாரங்களுக்கும் முதலாவதாகும். மீண்டும் நான் எனது வந்தனங்களை அவருக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

பதம் 5.18.26 : போற்றுதற்குரியப் பகவானே கூத்தாட்டுவான் ஆடும் பொம்மைகளைக் கட்டுப்படுத்துவது போன்றும், ஒரு கணவன் மனைவியைக் கட்டுப்படுத்துவது போன்றும், மேலாண்மைமிக்க நீர், இப்பிரபஞ்சத்தில் உள்ள அந்தண, சத்திரிய, வைசிய, சூத்திர என்பது போன்ற உயிர்வாழிகள் அனைவரையும் கட்டுப்படுத்துகின்றீர். நீரே பரம காட்சியாகவும், தளபதியாகவும் எல்லோரின் இதயங்களின் உள்ளும் இருக்கின்றீர் அதுபோல் வெளியிலும் இருக்கின்றீர் இருந்தும் சமுதாயம், இனம், நாட்டின் தலைவர்களினால் உம்மை உணர முடியவில்லை. வேத மந்திரங்களின் ஒலியதிர்வுகளைக் கேட்பவர்களால் மட்டுமே உம்மைப் போற்றிப் பாராட்ட முடியும்.

பதம் 5.18.27 : போற்றுதற்குரிய பகவானே பிரம்மதேவன் பிற தேவர்கள் தொடங்கி இவ்வுலகில் உள்ள அரசியல் தலைவர்கள் வரை இப்பிரபஞ்சத்தில் உள்ள பெரிய தலைவர்கள் அனைவரும் உமது அதிகாரத்தின் மீது காழ்ப்புணர்ச்சியுடையவர்களாகவே இருக்கின்றனர், உமது உதவியின்றி, அவர்களால் தனித்தோ, பலர் சேர்ந்தோ இப்பிரபஞ்சத்திலுள்ள எண்ணிலடங்கா உயிர்வாழிகளைக் காக்க முடியாது. நீரே உண்மையில் உள்ள அனைத்து மனிதர்கள், பசுக்கள், கழுதைகள், செடிகள், ஊர்வன, பறப்பன, மலைகள் போன்ற அனைத்தையும் பாதுகாப்பவர் ஆவீர்.

பதம் 5.18.28 : ஓ, எல்லாம்வல்ல பகவானே, யுக இறுதியில், எல்லாவிதமான மூலிகைகள், மருந்துகள், மரங்கள் போன்றவற்றிற்கு ஆதாரமாக இருக்கும் இப்பூமியானது அழிக்கும் ஆழிப்பேரலைகளின் கீழ் பிரளய வெள்ளத்தில் மூழ்குகிறது. அச்சமயம் நீர் பூமியுடன் சேர்த்து என்னையும் காத்து அதீத வேகத்துடன் கடலில் சுற்றிக் கொண்டிருந்தீர். ஒ, பிறப்பிலியே, நீரே பிரபஞ்சப் படைப்பில் உண்மையானப் பாதுகாவலர் ஆவீர் அதனால் அனைத்து உயிர்வாழிகளுக்கும் நீரே காரணர் ஆவீர். நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 5.18.29 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் இரண்மய வர்ஷத்தில் பரமபுருஷ பகவானான விஷ்ணு கூர்ம மூர்த்தியின் (ஆமை) வடிவத்தில் இருக்கின்றார். மிகவும் பிரியத்திற்குரிய இவ்வழகிய வடிவம் இரண்மய வர்ஷத்தின் தலைவரான அர்யமான் மற்றும் அந்த நிலத்தின் மற்ற குடிமக்களுடன் எப்போதும் பக்தி சேவையில் வணங்கப்படுகிறது. அவர்கள் பின்வரும் மந்திரத்தை ஒதுகின்றனர்.

பதம் 5.18.30 : ஒ, எந்தன் பகவானே, கூர்ம மூர்த்தியாக வடிவம் கொண்டிருக்கும் உமக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்கள். நீரே உன்னத குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமானவர். விஷயத்தினால் முற்றிலும் பாதிக்கப்படாதவரும் ஆவீர். நிர் மிகவும் நிறைவாக தூய நற்குணத்தில் இருக்கின்றீர். நீர் நீரில் இங்கும் அங்கும் சென்றாலும், உமது நிலையினை நுணுகி அறிய ஒருவராலும் முடியாது. அதனால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன். உமது உன்னத நிலையின் காரணமாக நீர் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்ற வரையளவுக்கு உட்படாதவர் ஆவீர். நீர் எல்லாவற்றிக்கும் அடைக்கலமாக எங்கும் இருக்கின்றீர். ஆகையினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை நான் மீண்டும் மீண்டும் உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 5.18.31 : போற்றுதற்குரிய பகவானே கண்ணுக்குப் புலனாகும் இப்பிரபஞ்சத் தோற்றம் உமது படைப்புச் சக்தியின் வெளிப்பாடாகும். இப்பிரபஞ்சத் தோற்றத்தில் உள்ள எண்ணற்ற வடிவங்கள் எல்லாம் உமது புறச்சக்தியின் வெளிப்பாடாகும். இவ்விராட ரூபம் (பிரபஞ்ச உடல்) உமது உண்மையான வடிவம் அன்று. உன்னத வடிவத்தை ஒருவராலும் உணர முடியாது. அதனால் நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 5.18.32 : போற்றுதற்குரிய பகவானே நீர் உமது பல்வேறு சக்திகளைப் பல்வேறு வடிவங்களாக வெளிப்படுத்தி இருக்கின்றீர் அவை: கருப்பையிலிருந்து, முட்டையிலிருந்து, வியர்வையிலிருந்து பிறப்பன, நிலத்திலிருந்து பிறக்கும் மரம், செடி, கொடிகள், போன்ற உயிர்வாழிகள், அசையும். அசையாத உயிர்வாழிகளான தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் என்று மேலுலகங்களில் வாழ்பவர்கள், மேலும் பூமியிலுள்ள மலைகள், நதிகள், கடல்கள், தீவுகள், போன்றவையாகும். உண்மையில் விண்மீன்களும், கிரஹங்களும் கூட உமது பல்வேறு சக்திகளின் வெளிப்பாடுகளேயாகும். ஆனால் உண்மையில் இரண்டற்ற ஒருவரே ஆவீர். அதனால் உமக்கு மேலாக ஒன்றும் இல்லை. இப்பிரபஞ்சத் தோற்றம் முழுவதும் பொய்மையன்று. இது உமது உய்த்துணரமுடியாத சக்தியின் தற்காலிக வெளிப்பாடாகும்.

பதம் 5.18.33 : ஒ, போற்றுதற்குரிய பகவானே, உமது வடிவமும், உடல் தன்மைகளும் எண்ணிலடங்கா வடிவங்களாக விரிந்திருக்கின்றன. எத்தனை வடிவங்கள் உண்மையில் தோன்றின என்பதை யாராலும் ஆய்ந்தறிய முடியாது, இருந்தும் நீரே உமது கற்றறிந்த கபிலதேவர் வடிவத்தில் இப்பிரபஞ்சம் இருபத்தி நான்கு பொருள்களையுடையது என்று ஆய்ந்திருக்கின்றீர். ஆகையினால் பல்வேறு உண்மைகளை எண்ணிக்கையினால் அறியும் சாங்கிய கொள்கையில் விருப்பமுடைய ஒருவன் அதனை உம்மிடம் இருந்தே கேட்டறிய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பக்தரல்லாதார் பல்வேறு பொருட்களை மட்டும் கணக்கிட்டு, உமது உண்மை வடிவினை அறியாதிருக்கின்றனர். நான் எனது மதிப்பிற்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கிறேன்.

பதம் 5.18.34 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த மன்னனே, அனைத்து வேள்விகளின் பலன்களையும் ஏற்றுக் கொள்ளும் பரமபுருஷ பகவானாக மூர்த்தியாக (பன்றி வடிவம்) ஜம்புத்வீத்தின் வடபகுதியில் வாழ்கிறார். அங்கே, உத்தரகுரு வர்ஷம் என்னும் நிலப்பகுதியில் அன்னை பூமியும், அங்கு வசிப்பவர்களும் உபநிஷத்து மந்திரங்களை மீண்டும் மீண்டும் ஒதி அவரை தோல்வியுறாத பக்தித் தொண்டுடன் வழிபடுகின்றனர்.

பதம் 5.18.35 : போற்றுதற்குரிய பகவானே, மகாபுருஷரான உமக்கு எமது மரியாதைக்குரிய வந்தனங்கள் உரித்தாகுக. மந்திரங்களை ஒதுவதின் மூலமே உம்மை முற்றிலும் அறிந்து கொள்ளக் கூடியவர்களாவோம். நீரே யக்கும் ஆவீர், நீரே க்ரதும் (சடங்கு) ஆவீர். அதனால் அனைத்து வேள்விகளின் சடங்குகளும் உமது உன்னத உடலின் பாகங்களாகும். அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவரும் நீர் ஒருவரே ஆவீர், உமது வடிவம் உன்னத நற்குணத்தினாலானது. நீர் “த்ரி யுக” என்றழைக்கப்படுகின்றீர் ஏனென்றால் கலியுகத்தில் நீர் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றுவதினாலும், ஆறுவகை வளங்களை உடையவராகவும் இருப்பதினாலே தான்.

பதம் 5.18.36 : அரணிக்கட்டையை உராய்வதினால் மாமுனிவர்களும், ரிஷிகளும் அவ்விறகில் உறங்கிக் கொண்டிருந்த நெருப்பை வெளிக்கொணர்கின்றனர். அதே வழியில் ஒ, பகவானே முழு மெய்ப்பொருளை புரிந்து கொள்வதில் தேர்ந்தவர்கள் தங்கள் உடல் உள்ளிட்ட எல்லாவற்றிலும் உம்மையேக் காண முயற்சிக்கின்றனர். இருந்தும் நீர் மறைந்தே இருக்கின்றீர். மறைமுக முறைகளை மனம் அல்லது உடலின் செயல்களினால் நீர் அறிந்து கொள்ளப்படுவதில்லை. காரணம் நீர் சுயமாகத் தோன்றியவர். ஒருவன் இதயப்பூர்வமாக உம்மைத் தேடுகிறான் என்பதை நீர் காணும்பொழுது அவனுக்கு உம்மை வெளிப்படுத்துகின்றீர். ஆகையினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 5.18.37 : புலனின்பப் பொருட்கள் (ஒலி, வடிவம், சுவை, ஊறு, நாற்றம்) புலன்களின் செயல்கள், புலன் உணர்வுச் செயல்களைக் கட்டுப்படுத்துபவர்கள் (தேவர்கள்) உடல் நித்தியக்காலம் மற்றும் ஆணவம் போன்றவை எல்லாம் உமது பௌதீகச் சக்தியின் படைப்புக்களேயாகும். யோகஸித்திப் பயிற்சியினால் நிலைநிறுத்தப்பட்டப் புத்தியுடையோர்களால் மட்டுமே இப்பொருட்கள் அனைத்தும் உமது புறச்சக்தியின் செயல்விளைவே என்பதைப் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றிற்கும் பின்புலமாக உமது உன்னத வடிவமான பரமாத்மாவே இருக்கிறது என்பதையும் கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆகையினால் நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு மீண்டும் மீண்டும் அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 5.18.38 : ஒ, பகவானே, இப்பௌதீக உலகினைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவும் நீர் விரும்புவதில்லை. ஆயினும் பந்தப்பட்ட ஆத்மாக்களுக்காக நீர் இச்செயல்களை உமது படைப்புச் சக்தியினால் செய்கின்றீர். காந்தக் கல்லின் அசைவிற்கேற்ப இரும்புத்துண்டு அசைவது போல் மொத்தப் பௌதீகச் சக்தியையும் நீர் பார்க்கும் பொழுது செயலற்ற ஜடம் அசைகின்றது.

பதம் 5.18.39 : போற்றுதற்குரிய பகவானே, இப்பிரபஞ்சத்தில் ஆதிவராக மூர்த்தியாக நீர் இரண்யாட்சன் என்னும் கொடிய அரக்கனுடன் போர் புரிந்து அவனை அழித்தீர். பிறகு ஒரு யானை விளையாட்டாகத் தண்ணீரிலிருந்து தாமரை மலரைப் பிடுங்கி எடுப்பது போல், கர்போதகக்கடலின் அடியில் கிடந்த என்னை (பூமியை) உமது தந்தத்தின் நுனியினால் வெளியே எடுத்தீர். நான் உம்மை அடிபணிகின்றேன்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare