அத்தியாயம் – 13
மன்னர் ரகூகணனுக்கும் மானுட பரதருக்கும்
இடையே மேலும் நடைபெற்ற உரையாடல்
பதம் 5.13.1
ப்ராஹ்மண உவாச
துரத்யயே ‘த்வனி அஜயா நிவேஸிதோ
ரஜஸ்- தம-ஸத்த்வ-விபக்த-கர்மத்ருக்
ஸ ஏஷ ஸார்தோ ‘ர்த-பர பரிப்ரமன்
பவாடவீம் யாதி ந ஸர்ம விந்ததி
ப்ராஹ்மண உவாச—அந்தண பரதர் தொடர்ந்து கூறினார்; துரத்யயே—அது கடப்பதற்கு மிகக் கடினமானதாகும்; அத்வனி—பலன்தரும் செயல்களின் பாதை (இப்பிறப்பில் செய்யும் செயல்களினால் மறுபிறப்பிற்கு வேண்டிய உடலை உண்டாக்கிக் கொள்வது இவ்வாறு தொடர்ந்து பிறப்பு இறப்பினை ஏற்றுக் கொள்வது); அஜயா—முழுமுதற் கடவுளின் புறச்சக்தியான மாயையினால்; நிவேஷித—புகுவதற்குக் காரணமான; ரஜ-தம-ஸத்த்வ-விபக்த-கர்ம-த்ருக்—ஒரு பந்தப்பட்ட ஆத்மா பலன் தரும் செயல்களின் உடனடி நன்மை மற்றும் பலன்களை மட்டுமே பார்க்கிறான்; அவை சத்துவ, இரஜோ, தமோ குணங்களினால் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன; ஸ—அவன்; ஏஷ—இந்த; ஸ-அர்த—உயிர்கள் தவறாக நாடும் புலனுகர்ச்சி; அர்த பர—செல்வம் மீது நாட்டங்கொண்டு; பரிப்ரமன்—எங்கும் அலைந்து; பவ-அடவீம்—பவ என்னும் காடு (மீண்டும் மீண்டும் ஏற்படும் பிறப்பு இறப்பு); யாதி—நுழைகிறான்; ந—இல்லை; ஸர்ம—மகிழ்ச்சி; விந்ததி—அடைதல்.
பிரம்மத்தை முற்றிலும் உணர்ந்த மானுட பரதர் தொடர்ந்து கூறினார்; அன்பு மன்னர் ரகூகணனே, உலகின் பாதையில் உயிர்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கை கடப்பதற்கு மிகவும் அரியதாகும். அதனால் உயிர் ஜனன மரணங்களை மீண்டும் மீண்டும் ஏற்றுக் கொள்கிறது. இயற்கையின் முக்குணங்களின் (சத்துவ, இரஜோ, தமோ குணங்கள்) பாதிப்பினால் உலகினால் மனிதன் ஆட்கொள்ளப்படுகிறான். இயற்கையின் மாயையினால் மனிதன் முச்செயல்களின் பலன்களை மட்டுமே காணக்கூடியவனாக இருக்கிறான். இப்பலன்கள், புண்ணியம், பாவம் மற்றும் இரண்டும் கலந்ததுவாகும். சமயம், பொருண்மை தத்துவம் (பரம் பொருளுடன் இணைதல்) போன்றவற்றின் மீது மனிதன் பற்றுடையவனாகிறான். ஒரு காட்டினுள் போய் அங்கு பொருட்களை இலாபத்திற்காகச் சேகரிக்கும் வணிகனைப் போல் அவன் இரவும் பகலும் மிகக் கடுமையாக உழைக்கிறான். ஆயினும் இந்த உலகில் அவனால் உண்மை இன்பத்தை ஒருக்காலும் அடைய முடியாது.
பதம் 5.13.2
யஸ்யாம் இமேஷன் நர—தேவ தஸ்யவ:
ஸார்தம் விலும்பந்தி குணாயகம் பலாத்
கோமாயவோ யத்ர ஹரத்தி ஸார்திவம்
ப்ரமத்தம் ஆவிஸ்ய யதோரணம் வ்ருகா:
யஸ்யாம்—அதில் (பௌதீக வாழ்க்கை என்னும் காட்டில்); இமே-இவை:ஷவ்—ஆறு; நர-தேவ—ஒ, மன்னனே; தஸ்யவ—கொள்ளைக்காரர்கள்; ஸ-அர்தம்—தவறானக் கருத்துக்களில் ஆர்வமுடைய பந்தப்பட்ட ஆத்மாக்கள்; விலும்பந்தி—கொள்ளையடித்தல், எல்லா உடைமைகளையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருத்தல்; கு-நாயகம்—இவர்கள் எப்போதும் ஆன்மீக குருக்களால் தவறான வழி காட்டப்படுகின்றனர்; பலாத்—பலாத்காரத்தினால்; கோமாயவ—உண்மையில் நரிகளைப் போன்று; யத்ர—அக்காட்டில்; ஹரந்தி—அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்; ஸ-அர்திகம்—பந்தப்பட்ட ஆத்மா தனது உடல் மற்றும் ஆத்மாவைக் காப்பதற்கு நாடும் உலகியல் நலன்கள்; ப்ரமத்தம்—தன் சுயநலத்தை அறியாத பைத்தியக்காரன்; ஆவிஸ்ய—இதயத்தில் புகுந்து; யதா—போன்று; உரணம்——நன்கு பாதுகாக்கப்பட்ட ஆடுகள்; வ்ருகா—புலிகள்.
ஓ, மன்னர் ரகூகணனே, உலக வாழ்க்கை என்னும் காட்டில் மிகவும் வலிமை வாய்ந்த கொள்ளையர் அறுவர் உள்ளனர். கட்டுண்ட ஆத்மா சில உலக நன்மை வேண்டி இக்காட்டினுள் புகும்பொழுது இந்த அறுவரும் அவனைத் தவறான வழிக்கு ஆளாக்குகின்றனர். இவ்வாறு கட்டுண்ட வணிகன் தனது செல்வத்தை எவ்வாறு செலவிடுவது என்று அறியாது போவதினால் அவை இக்கொள்ளையர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. காட்டில் உள்ள புலிகள், நரிகள் போன்ற இரத்த வெறி பிடித்த மிருகங்கள் மேய்ப்பவரின் காவலிலிருந்து ஆட்டுச் குட்டியைக் கவர்ந்து செல்லக் காத்திருப்பது போல் அவனது மனைவியும் மக்களும் அவன் இதயத்தில் புகுந்து அவனைப் பல்வேறு வழிகளில் கொள்ளையடிக்கின்றனர்.
பதம் 5.13.3
ப்ரபூத-வீருத்-த்ருண-குல்ம-கஹ்வரே
கடோரே-தம்னாவர்மஸகைர் உபத்தே:
க்வசித் து கந்தர்வ-புரம் ப்ரபஸ்யதி
க்வசித் க்வசிக் சாஸு- ரயோல்முக-க்ரஹம்
ப்ரபூத—ஏராளமான எண்ணிக்கையில்; வீருத்—கொடிகளின்; த்ருண—புல் வகைகளின்; குல்ம—புதர்கள்; கஹ்வரே—கொடிப்பந்தர்களில்; கடோர—கொடிய; தம்ஸை—கடியினால்; மஸகை—கொசுக்களினால்; உபத்தே—இன்னலுக்காளாதல்; க்வசித்—சிலநேரம்; து—ஆனால்; கந்தர்வ-புரம்—கந்தர்வர்களால் உண்டாக்கப்படும் மாய மாளிகை; ப்ரபஸ்யதி—அவன் பார்க்கிறான்; க்வசித்—மற்றும் சில சமயங்களிலும்; க்வசித்—சில சமயங்களில்; ச—மேலும்; ஆஸு-ரய—மிக விரைவில்; உல்முக—ஒர்எரிமீனைப் போல்; க்ரஹம்—ஒரு பேய்.
அக்காட்டில் புற்கள் மற்றும் கொடிகளினாலான அடர்த்தியான கொடிப் பந்தர்களும் புதர்களும் உண்டு. அக்கொடிப் பந்தர்களில் கட்டுண்ட ஆத்மா எப்போதும் கொசுக்கள் கடிப்பதினால் துன்பத்திற்காளாவான் (காழ்ப்புணர்ச்சி உடையவர்களினால்). சில நேரம் அங்கு வானில் உள்ள எரிமீன்களை ஒத்த பேய், பிசாசுகளின் கூட்டத்தைக் காண்பதில் அவன் குழப்பமடைவான்.
பதம் 5.13.4
நிவாஸ-தோய-த்ரவிணாத்ம-புத்திஸ்
ததஸ் ததோ தாவதி போ அடவ்யாம்
க்வசித் ச வாத்யோத்தித-பாம்ஸு-தூம்ரா
திஸோ ந ஜானாதி ரஜஸ்-வலாக்ஷ:
நிவாஸ—வசிக்கும் இடம்; தோய—தண்ணீர்; த்ரவிண—செல்வம்; ஆத்ம-புத்தி:——அவள் ஆத்மா அல்லது தன்னை உலகப் பொருட்கள் என்று கருதுகிறாள்; தத தத—இங்குமங்கும்; தாவதி—அவன் ஒடுகிறான்; போ—ஓ, மன்னனே; அடவ்யாம்—வாழ்க்கை என்னும் அக்காட்டுப் பாதையில்; க்வசித் ச—சில நேரங்களில்; வாத்யா—சூறைக்காற்றினால்; உத்தித—உயர்ந்த; பாம்ஸு—தூசியினால்; தூம்ரா—புகை வண்ணத்தில் தோன்றும்; திஸ—திசைகள்; ந—இல்லை; ஜானாதி—அறிகிறான்; ரஜ-வல-அக்ஷ—அவனது கண்கள் அத்தூசியினால் மூடப்பட்டிருக்கும் அல்லது மாத விலக்கு நாட்களில் அவன் மனைவியால் அதிகம் கவரப்படுகிறான்.
அன்பார்ந்த மன்னனே, உலகம் என்னும் காட்டுப் பாதையில் செல்லும் மனிதனின் புத்தியானது, வீடு, மனைவி, மக்கள், செல்வம் உறவினர் போன்றவர்களினால் பலியாகின்ற காரணத்தினால் அவன் வெற்றியினைத் தேடி ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ஓடிக் கொண்டிருக்கிறான். சிலநேரம் அவனது கண்கள் சூறாவளிக் காற்றில் எழும் புழுதியினால் மறைக்கப்படுகின்றன. அதாவது அவனது காம இச்சையினால் அவனது அழகிய மனைவியால் குறிப்பாக அவளது மாதவிலக்கு நாட்களில் அதிகம் கவரப்படுகிறான். இவ்வாறு அவனது விழிப்புணர்ச்சி அப்போது மறைந்து போவதால் தான் எங்கே போகிறோம் என்ன செய்கிறோம் என்று அவனால் காண முடியவில்லை.
பதம் 5.13.5
அத்ருஸ்ய-ஜில்லீ-ஸ்வன-கர்ண-ஸுல
ஊலூக-வாக்பின் வியதிதாந்தராத்மா
அபுண்ய-வ்ருக்ஷான் ஸ்ரயதே க்ஷுதார்திதோ
மரீசி-தேயானி அபிதாவதி க்வசித்
அத்ருஸ்ய—கண்ணுக்குப் புலனாகாத; ஜில்லீ—சில்வண்டுகளின் அல்லது ஒரு வகையான தேனீக்களின்; ஸ்வன—ஒலியினால்; கர்ண ஸுல—அவனது செவிகள் இன்னல்படுகின்றன; ஊலூக—ஆந்தைகளின்; வாகிபி—ஒலியதிர்வுகளினால்; வியதித—மிகவும் துன்புற்று; அந்த ஆத்மா—அவனது மனமும் இதயமும்; அபுண்ய விருக்ஷான்—மலர்களோ கனிகளோ இல்லாத பாவமரங்கள்; ஸ்ரயதே—அவன் தஞ்சமடைந்து; க்ஷுத—பசியிலிருந்து; அர்தித—துன்புற்று; மரீசி-தேயானி—பாலைவனத்தில் கானல் நீர்; அபிதாவதி—பின்னால் ஓடி; க்வசித்—சில நேரங்களில்.
உலகில் அலைந்து கொண்டிருக்கும் கட்டுண்ட ஆத்மா சில நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத சில்வண்டுகளின் இரைச்சலைக் கேட்டு அவனது காதுகள் மிகுந்த இன்னலுக்காளாகின்றன. சில நேரங்களில் மலர்களும், கனிகளும் இல்லாத மரத்தைத் தஞ்சமடைகிறான். அவன் மிகுந்த பசியின் காரணமாகவே அந்த மரத்தை அணுகி பின்னர் இவ்வாறு துன்பமடைகிறான். தாகத்தினால் தண்ணீர் வேண்டி கானல் நீர் மீது மோகம் கொண்டு அவன் அதன் பின்னால் ஓடுகிறான்.
பதம் 5.13.6
க்வசித் விதோயா: ஸரிதோ ‘பியாதி
பரஸ்பரம் சாலஷத நிரந்த:
ஆஸாத்ய தவாம் க்வசித் அக்னி-தப்தோ
நிர்வித்யதே க்வ ச யனக்ஷர் ஹ்ருதாஸு:
க்வசித்—சில நேரங்களில்; விதோயா—நீரின் ஆழமின்றி; ஸரித—ஆறு; அபியாதி—அவன் நீராடவோ, குளிக்கவோ செல்கிறான்; பரஸ்பரம்—ஒன்று மற்றொன்று; ச—மேலும்; ஆலஷதே—விரும்புகிறான்; நிரந்த—உணவு இன்றி; ஆஸாத்ய—அனுபவித்தல்; தாவம்—இல்வாழ்க்கையின் காட்டுத் தீ; க்வசித்—சிலநேரங்களில்; அக்னி-தப்த:—நெருப்பால் எரிக்கப்பட்ட; நிர்வித்யதே—சோர்வடைகிறான்; க்வ—ஏதோ ஒரிடத்தில்; ச—மேலும்; யனக்ஷ—துஷ்டர்களையும், திருடர்களையும் ஒத்த அரசர்கள்; ஹ்ருத—எடுத்துக் கொள்கின்றனர்; அஸு—செல்வம்; அவனது உயிரைப் போன்று மதிக்கும் செல்வம்.
சில சமயம் கட்டுண்ட ஆத்மி ஆழமற்ற ஆற்றில் குதித்து விடுகிறான். அல்லது உணவு வேண்டி தானம் செய்யும் பண்பில்லாத மனிதர்களிடம் இரக்கிறான். சில நேரங்களில் காட்டுத் தீயைப் போல் தகிக்கும் இல்வாழ்க்கையில் கிடந்து இடர்ப்படுகிறான். சில நேரங்களில் தான் உயிராக மதித்த செல்வம் அனைத்தும் வருமானவரி என்னும் பெயரால் ஆள்வோரால் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு வருந்துகிறான்.
பதம் 5.13.7
ஸுரைர் ஹ்ருத-ஸ்வ க்வ ச நிர்வின்ன-சேதா:
ஸோசன் விமுஹ்யன்ன உபயாதி கஸ்மலம்
க்வசிச் ச கந்தர்வ-புரம் ப்ரவிஷ்ட:
ப்ரமோததே நிர்ப்ருதவன் முஸுர்தம்
ஸுரை—ஆற்றல் மிக்க பகைவர்களினால்; ஹ்ருத-ஸ்வ—அவனது உடைமைகள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன; க்வ-ச—சில சமயம்; நிர்விண்ண-சேதா—மிக்க சோகமும் இதயத்தில் துன்பமும் அடைகிறான்; ஸோசன்—ஆழ்ந்தசோகம்; விமுஹ்யன்—குழப்பத்திற்காளாகி; உபயாதி—எய்துகிறான்; கஸ்மலம்—மயக்கம்; க்வசிச்—சிலநேரங்களில்; ச—மேலும்; கந்தர்வ-புரம்—காட்டிலுள்ள கற்பனை நகரம்; ப்ரவிஷ்ட—நுழைந்து; ப்ரமோததே—அவன் மகிழ்கிறான்; நிர்வ்ருதவத்—உண்மையில் வெற்றியடைந்த மனிதனைப் போன்று; முஹுர்த்தம்—ஒரு கணம் மட்டும்.
சில சமயம் தன்னைவிட வலிமையுடைய அல்லது அதிகாரமுடைய ஒருவனால் தோல்வியுற்றோ கொள்ளையடிக்கப்பட்டோ தனது உடைமைகளை இழக்கிறான். பிறகு அவன் மிகுந்த துயர்ப்படுகிறான். இழப்பினை எண்ணி சோகமுறுகிறான். சில சமயம் உணர்வின்றியும் போகிறான். சில நேரம் அவன் ஒரு கற்பனை நகரை உருவாக்கி அதில் தன் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியுடனும், செல்வங்களுடனும் வாழ்வதற்கு விரும்புகிறான். இது மட்டும் சாத்தியமானதென்றால் அவன் முற்றிலும் திருப்தியடைகிறான். ஆனால் அந்த மகிழ்ச்சியும் ஒரு கணம் மட்டுமே நீடிக்கிறது.
பதம் 5.13.8
சலன் க்வசித் கண்டக-ஸர்க்கராங்க்ரிர்
நகாருருக்ஷுர் விமனா இவாஸ்தே
பதே பதே ‘ப்யந்தர-வஹ்னினார் தித:
கௌடும்பிக க்ருத்யதி வை ஜனாய
சலன்—அலைதல்; க்வசித்—சில நேரம்; கண்டக-ஸர்கர—சிறு கற்கள் மற்றும் முட்களினால் கிழிக்கப்பட்டு; அங்க்ரி—அவனது பாதம்; நக—மலைகளில்; ஆருருக்ஷு—ஏற விரும்பும் ஒருவன்; விமனா—ஏமாறுதல்; இவ—போன்று; ஆஸ்தே—ஆகிறான்; பதே பதே—அடிகள் தோறும்; அப்யந்தர—வயிற்றினுள்; வஹ்னினா—பசி என்னும் வலிமை மிக்க நெருப்பினால்; அர்தித—சிரமமும், துன்பமும் அடைதல்; கெளடும்பிக—தன் குடும்பத்தினருடன் வாழும் ஒருவன்; க்ருத்யதி—ஆத்திரம் கொள்கிறான்; வை—உறுதியாக; ஜனாய—குடும்பத்தினரிடத்தில்.
சில நேரம் காட்டிலுள்ள வணிகன் மலைகளின் மீதும் சிகரங்களின் மீதும் ஏறுவதற்கு விரும்புகிறான். ஆனால் அவனது காலணிகள் சரியாக இல்லாததினால் அவனது பாதங்கள் மலையிலுள்ள சிறு சிறு கற்களினாலும், முட்களினாலும் குத்திக் கிழிக்கப்படுகின்றன. இவ்வாறு கிழிபடுவதினால் அவன் பெருந்துயரத்திற்காளாகிறான். சில சமயம் தன் குடும்பத்தின் மீது மிகுந்த பற்றுடைய ஒருவன் பசிக்கு ஆட்படுகிறான். தனது துன்பநிலை காரணமாக அவன் தன் குடும்பத்தினர் மீது சீற்றங் கொள்கிறான்.
பதம் 5.13.9
க்வசின் நிகீர்ணோ ‘ஜஹராகினா ஜனோ
நானவதி கிஞ்சித் விபினே ‘பவித்த:
தஷ்ட: ஸ்ம ஸேதே க்வ ச தந்த-ஸுகைர்
அந்தோ ‘ந்த க்ஷபே பதிதஸ் தமிஸ்ரே
க்வசித்—சில சமயம்; நிகீர்ண—விழுங்கப்பட்டு; அஜகர-அதினா—மலைப் பாம்பு போன்ற பெரிய பாம்பினால்; ஜன—பந்தப்பட்ட ஆத்மா; ந—இல்லை; அனவதி—புரிந்து கெள்கிறான்; கிஞ்சித்—ஏதேனும்; விபினே—காட்டில்; அபவித்த—அம்பினால் துளைக்கப்பட்டு துன்புறுதல்; தஷ்ட—கடிக்கப்பட்டு; ஸ்ம—உண்மையில்; ஸேதே—கீழே விழுந்து; க்வச—சிலசமயம்; தந்த-ஸுகை—பிறவகையானப் பாம்புகளினால்; அந்த—குருடாகி; அந்த-கூபே—ஒரு பாழுங்கிணற்றில்; பதித—வீழ்ந்து; தமிஸ்ரே—நரக வாழ்க்கை நிலை.
உலகில் உள்ள கட்டுப்பட்ட ஆத்மா சில சமயம் ஒரு மலைப்பாம்பினால் விழுங்கப்படலாம். அல்லது நொறுக்கப்படலாம். அச்சமயம் அவன் உணர்விழந்து காட்டில் ஒர் இறந்த மனிதனைப் போல் கிடக்கிறான். சில நேரம் பிறவகையான பாம்புகள் அவனைக் கடிக்கின்றன. அவனது உணர்வு குருடாகிப் போனதினால் அவன் நரக வாழ்க்கை என்னும் பாழுங்கிணற்றில் வீழ்ந்து தான் காப்பற்றப்படுவோம் எனும் நம்பிக்கையை இழந்து விடுகிறான்.
பதம் 5.13.10
கர்ஹி ஸ்ம சித் க்ஷுத்ர-ரஸான் விசின்வம்ஸ்
தன்-மக்ஷிகாபிர் வ்யதிதோ விமான:
அத்ராதி-க்ருச்ராத் ப்ரதிலப்தமானோ
பலாத் விலும்பந்தி அத தம் ததோ ‘ன்யே
சுர்ஹி-ஸ்ம-சித்—சில சமயம்; க்ஷுத்ர—முக்கியமற்றதாகும்; ரஸான்—பாலியல் இன்பம்; விசின்வன்—தேடிக்கொண்டு; தத்—அப்பெண்களின்; மக்ஷிகாபி—தேனீக்களால்; அல்லது கணவன்மார்; அல்லது குடும்ப உறுப்பினர்கள்; வ்யதித—மிகுந்த துன்புற்று; விமான—அவமதித்து; தத்ர—அதில்; அதி—மிகவும்; க்ருச்சாத்—பணம் கொழிக்கும் காரணத்தினால் மிக்கக் கடினமுடன்; ப்ரதிலப்தமான—பாலியல் இன்பம் எய்தி; பலாத்—பலாத்காரத்தினால்; விலும்பந்தி—கடத்தப்பட்டு; அத—அதன்பின்; தம்—புலன் இன்பத்தின் பொருள் (பெண்); தத—அவனிடமிருந்து; அன்யே—மற்றொரு பரத்தை.
சிறிதும் முக்கியத்துவமற்றப் பாலியல் இன்பம் வேண்டி ஒருவன் பரத்தையரைத் தேடிப் போகிறான். இம்முயற்சியில் அவன் அப்பரத்தையரின் உறவினர்களால், அவமரியாதைக்கு ஆளாகி அவமானப்படுத்தப்படுகிறான். இது தேன் கூட்டில் தேன் எடுக்கப் போய் தேனீக்களால் கொட்டப்பட்டதை ஒக்கும். சில சமயம் ஏராளமான பணத்தைச் செலவிட்ட பிறகு ஒருவன் மேலும் புலனின்பம் வேண்டி மற்றொரு பெண்ணை வைத்துக் கொள்ளலாம். துரதிர்ஷ்டமாக புலனுகர்ச்சிப் பொருளான அப்பெண் மற்றொரு பரத்தனால் அபகரிக்கவோ அல்லது கடத்திச் செல்லவோ ஆட்படுகிறாள்.
பதம் 5.13.11
க்வசித் ச ஸீதாதப-வாத-வர்ஷ
ப்ரதிக்ரியாம் கர்தும் அனீஸ ஆஸ்தே
க்வசின் மிதோ விபணன் யச் ச கிஞ்சித்
வித்வேஷம் ருச்சதி உத வித்த-ஸாட்யாத்
க்வசித்—சிலசமயம்; ச—மேலும்; ஸுத-ஆதப-வா-வர்ஷ—உறையச் செய்யும் குளிர், கொதிக்கும் கோடை, பலமான காற்று, அதிகமான மழை; ப்ரதிக்ரியாம்—எதிர்த்துச் செயல்படுதல்; கர்தும்—செய்வதற்கு; அனீஸ—இயலாதவனாகி; ஆஸ்தே—துன்பத்தில் உழல்கிறான்; க்வசித்—சிலசமயம்; மித—ஒன்று மற்றொன்று; விபணன்—விற்றல்; யத் ச—எதுவாயினும்; கிஞ்சித்—ஒரு சிறிது; வித்வேஷம்—பரஸ்பர பகை; ருச்சதி—எய்துதல்; உத—சொல்லப்படுகிறது; வித்த-ஸாட்யாத்—பணத்திற்காக ஒருவரை மற்றொருவர் ஏமாற்றுதல்.
இயற்கை உற்பாவங்களான கடுங்குளிர், கொதிக்கும் கோடை வெயில் பலத்த காற்று, கன மழை போன்றவற்றிலிருந்து விளையும் இன்னல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒருவன் தீவிர முயற்சி செய்கிறான். இதற்கு அவனால் இயலாதபோது அவன் மிகுந்த துன்பமடைகிறான். சில சமயம் வியாபாரத்தில் ஒருவன் மாற்றி மற்றொருவரால் ஏமாற்றப்படுகிறான். இவ்வாறு ஏமாற்றுவதினால் தங்களுக்குள் பகைமையினை உண்டாக்கிக் கொள்கின்றனர்.
பதம் 5.13.12
க்வசித் க்வசித் க்ஷி ண-தனஸ் து தஸ்மின்
ஸய்யாஸன-ஸ்தான-விஹார-ஹீன:
யாசம் பராத் அப்ரதிவப்த-காம:
பாரக்ய-த்ருஷ்டிர் லபதே ‘வமானம்
க்வசித் க்வசித்—சில சமயங்களில்; க்ஷீண-தன—எல்லா செல்வங்களையும் இழந்து; து—ஆனால்; தஸ்மின்—அக்காட்டில்; ஸய்யா—படுத்துறங்குவதற்காக; ஆஸன—இருக்க இடம்; ஸ்தான—வசிப்பதற்கு வீடு; விஹார—குடும்பத்துடனான மகிழ்ச்சியின்; ஹீன—இழந்தவனாகி; யாசன்—இரந்து; பராத்—பிறரிடமிருந்து (நண்பர்கள் மற்றும் உறவினர்கள்) அப்ரதிவப்த-காம—தன்னுடைய ஆசைகள் நிறைவேறாது; பராக்ய-த்ருஷ்டி—பிறர் செல்வத்தின் மீது பேராசை கொண்டு; லபதே—அவன் எய்துகிறான்; அவமானம்—அவமானம்.
உலக வாழ்க்கை எனும் காட்டுப் பாதையில் சில சமயம் ஒருவனிடம் செல்வம் இல்லாது போகிறது. இதனால் அவனுக்கு உறங்குவதற்கும், இருப்பதற்கும் ஒரு வீடு இல்லாமலும் முறையான குடும்ப மகிழ்ச்சி இல்லாமலும் போகிறது. அதனால் அவன் பொருள் வேண்டி பிறரிடம் பிச்சை எடுக்கிறான். இவ்வாறு பிச்சையெடுப்பதினால் அவனது விருப்பங்கள் நிறைவேறாத போது அவன் பிறருடைய செல்வத்தைத் திருடவோ, கடன் வாங்கவோ விரும்புகிறான். இவ்வாறு அவன் சமுதாயத்தில் அவமானத்திற்கு ஆளாகிறான்.
பதம் 5.13.13
அன்யோன்ய வித்த-வ்யதிஸங்க-வ்ருத்த-
வைரானுபந்தோ விவஹன் மிதஸ் ச
அத்வனி அமுஷ்மின்ன உரு-க்ருச்சர-வித்தா-
பாதோபஸ்கைர் விஹான் விபன்ன:
அன்யோன்ய—அன்யோன்யமாக; வித்த-வ்யதிஷங்க—பண வரவு செலவினால்; வ்ருத்த—அதிகரித்தல்; வைர-அனுபந்த—பகையினால் வில்லங்கப்படுகிறான்; விவஹன்—சில சமயம் மண முடித்து; மித—ஒருவர் மற்றொருவருடன்; ச—மேலும்; அத்வனி—வாழ்க்கைப் பாதையில்; அமுஸ்மின்—அது; உரு-க்ருச்ச்ர—பெரிய இன்னல்களினால்; வித்த-பாத— பணத்தட்டுப்பாட்டினால்; உபஸர்கை—பிணிகளினால்; விஹரன்—அலைந்து; விபன்ன—முற்றிலும் தொல்லைக்கு ஆளாகிறான்.
பண வரவு செலவு செய்வதின் காரணமாக உறவுமுறை சிக்கலாகி இறுதியில் பகைமையில் முடிகிறது. உலக வளர்ச்சிப் பாதையில் சில சமயம் கணவனும், மனைவியும் சேர்ந்து நடைபோடுகின்றனர். தங்கள் உறவைப் பாதுகாக்க அவர்கள் மிகக் கடினமாக உழைக்கின்றனர். சில சமயம் பணப்பற்றாக்குறையினாலோ அல்லது பிணி உபாதைகள் காரணமாகவோ அவர்கள் தொல்லைக்காளாகி பெரும்பாலும் இறந்து விடுகின்றனர்.
பதம் 5.13.14
தாம்ஸ் தான் விபன்னான் ஸ ஹி தத்ர தத்ர
விஹாய ஜாதம் பரிக்ருஹ்ய ஸார்த:
ஆவர்ததே ‘த்யாபி ந கஸ்சித் அத்ர
வீராத்வன: பாரம் உபைதி யோகம்
தான் தான்—அனைவரும்; விபன்னான்—பல்வேறு மொழிகளினால் தொல்லைப்படுகின்றனர்; ஸ—உயிர்வாழி; ஹி—உறுதியாக; தத்ர தத்ர—இங்குமங்கும்; விஹாய—துறந்து; ஜாதம்—புதிதாகப் பிறந்தோர்; பரிக்ருஹ்ய—எடுத்துக் கொண்டு; ஸ-அர்த—உயிர்ப்பொருள் தனது சுய நன்மைக்காகத் தேடியலைகிறான்; ஆவர்ததே—இக்காட்டில் அலைந்து; அத்ய-அபி—இப்போது வரை; ந—இல்லை; கஸ்சித்—அவர்களில் எவரும்; அத்ர—இக்காட்டில் வீர—ஒ வீரனே; அத்வன—உலக வாழ்க்கைப் பாதையில்; பாரம்—இறுதி முடிவு; உபைதி—பெறுகிறான்; யோகம்—முழுமுதற் கடவுளுக்கான பக்தித் தொண்டு முறை.
அன்பார்ந்த மன்னனே வாழ்க்கை எனும் காட்டுப்பாதையில் முதலில் ஒருவன் தன் தாய், தந்தையை இழக்கிறான். அவர்கள் இறந்த பிறகு அவன் தனக்குப் புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தைகள் மீது பற்றுடையவனாகிறான். இவ்வாறு அவன் சமூக வளர்ச்சிப் பாதையில் அலைந்து இறுதியில் தொல்லைப்படுகிறான். இருந்தும் இறக்கும் வரை இதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதை ஒருவனும் அறிவதில்லை.
பதம் 5.13.15
மனஸ்வினோ நிர்ஜித-திக்-கஜேந்தரா
மமேதி ஸர்வே புவி பத்த-வைரா
ம்ருதே ஸயீரன் ந து தத் வ்ரஜந்தி
யன் ந்யஸ்த-தண்டோ கத-வைரோ ‘பியாதி
மனஸ்வினை—மிகச்சிறந்த வீரர்கள் (மன யூகிகள்); நிர்ஜித-திக்-கஜேந்த்ரா—யானை போன்று பலமுடைய வீரர்களை வென்றவர்கள்; மம—எனது (எனது நிலம், எனது நாடு, என் குடும்பம், என் இனம், என் சமயம்); இதி—இவ்வாறு; ஸர்வே—அனைவரும் (சிறந்த அரசியல், சமூக, சமயத் தலைவர்கள்); புவி—இப்புவியில்; பத்த-வைரா—தங்களுக்குள் பகைமையினை வளர்த்துக் கொண்டு; ம்ருதே—யுத்தத்தில்; ஸயீரன்—மண் மீது மடிந்து கிடக்கின்றனர்; ந—இல்லை; து—ஆனால்; தத்—முழுமுதற் கடவுளின் இருப்பிடம்; வ்ரஜந்தி—அணுகி; யத்—அது; ஞ்யஸ்த—தண்ட ஒரு சந்தியாசி; கத-வைர—இவ்வுலகம் முழுதும் பகையே இல்லாதவர்; அபியாதி—அந்நிறைவினை அடைகின்றனர்.
அன்றும் இன்றும் ஏராளமான அரசியல், சமுதாய வீரர்கள் இருந்தனர். இருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு இணையான ஆற்றலுடைய எதிரிகளை வென்றவர்களாவர். இருந்தும் இந்த மண் நமதே என்று நம்புகின்ற அறியாமையினால் அவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டு தங்கள் உயிர்களை யுத்தத்தில் இழக்கின்றனர். துறவு நெறியிலுள்ள பெரியோர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஆன்மீக நெறியினை அவர்களால் பின்பற்ற இயலவில்லை. அவர்கள் பெரிய வீரர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும் இருந்த போதிலும் ஆன்மீக உணர்வுப் பாதையினை அவர்களால் மேற்கொள்ள முடிவதில்லை.
பதம் 5.13.16
ப்ரஸஜ்ஜதி க்வாபி லதா-புஜாஸ்ரயஸ்
தத்-ஆஸ்ரயாவ்யக்த-பத-த்விஜ-ஸ்ப்ரஹ:
க்வசித் கதாசித் தரி-சக்ரதஸ் த்ரஸன்
ஸக்யம் விதத்தே பக-கங்க-க்ருத்ரை:
ப்ரஸஜ்ஜதி—மேலும் மேலும் பற்றுக் கொண்டு; க்வாபி—சில சமயம்; லதா-புஜ-ஆஸ்ரய—கொடிகளைப் போன்ற தன் அழகிய மனைவியின் மெல்லிய கரங்களைச் சரணடைகிறான்; தத்-ஆஸ்ரய-அக்கொடிகளில் அடைக்கலம் புகுந்திருக்கின்ற; அவ்யக்த பத—தெளிவற்றப் பாடல்களைப் பாடுகின்றன; த்விஜ-ஸ்ப்ருஹ—பறவைகளின் ஒலியைக் கேட்க விரும்பி; க்வசித்—சில சமயம்; கதாசித்—எங்கேனும்; ஹரி-சக்ரத-த்ருஸன்—ஒரு சிங்கத்தின் கர்ஜனை ஒலிக்கு அஞ்சி; ஸக்யம்—நட்பு; விதத்தே—செய்கிறான்; பக-கங்க-க்ருத்ரை—நாரைகள், கொக்குகள் மற்றும் கழுகுகள்.
சில சமயம் வாழ்க்கை என்னும் காட்டிலுள்ள உயிர்ப்பொருள் கொடிகளைத் தஞ்சமடைந்து, அக்கொடிகளின் மீதிருக்கும் பறவைகளின் கீச்சொலியைக் கேட்க விரும்புகிறான். காட்டிலுள்ள சிங்கங்களின் கர்ஜனை ஒலிக்குப் பயந்து அவன் நாரைகள், கொக்குகள், கழுகுகள் போன்றவற்றுடன் நட்பு கொள்கிறான்.
பதம் 5.13.17
தைர் வஞ்சிதோ ஹம்ஸ-குலம் ஸமா விஸன்ன
அரோசயன் ஸீலம் உபைதி வானரன்
தஜ்-ஜாதி-ராஸேன ஸுநிர்வ்ருதேந்த்ரிய:
பரஸ்பரோவீக்ஷண-விஸ்ம்ருதாவதி:
தை—அவர்களால் (யோகிகள், சுவாமிகள், அவதாரங்கள், குருக்கள் என்னும் ஏமாற்றுக்காரர்கள், மோசடிப் பேர்வழிகள்); வஞ்சித—ஏமாற்றப்பட்டு; ஹம்ஸ-குலம்:—சிறந்த பரமஹம்ஸர்கள் அல்லது பக்தர்களின் தொடர்பினால்; ஸமாவிஸன்—தொடர்பு கொண்டு; அரோசயன்—அதில் திருப்தியடையாது; ஸீலம்—அவர்கள் நடத்தை; உபைதி—அணுகுகிறான்; வானரான்—நன்னடத்தையில்லாத பரத்தர்களான குரங்குகள்; தத்-ஜாதி-ராஸேன—அப்பக்தர்களின் தொடர்பிலான புலனுகர்ச்சியினால்; ஸுநிர்வ்ருத-இந்த்ரிய:—புலன் திருப்தியின் வாய்ப்பைப் பெறுவதில் மிகவும் திருப்தி அடைவது; பரஸ்பரம்—பரஸ்பரம்; உத்வீக்ஷண—முகங்களைப் பார்ப்பதினால்; விஸ்ம்ருத—மறந்திருக்கின்றனர்; அவதி—வாழ்வின் இறுதியில்;
உலகமென்னும் காட்டிலுள்ள ஒருவன் போலி சுவாமிகள், யோகிகள் மற்றும் அவதாரங்களின் தொடர்பினைத் துண்டித்து உண்மையான பக்தர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றான். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக அவனால் ஆன்மீக குரு அல்லது உயர்ந்த பக்தர்களின் உபதேசங்களைப் பின்பற்ற முடியாமல் போகிறது; அதனால் அவன் புலனுகர்ச்சி மற்றும் பெண்கள் மீது விருப்பமுடைய குரங்குகளுடன் மீண்டும் தொடர்பு கொள்கிறான். அவன் புலன்களுக்கு மகிழ்ச்சியளிப்பவர்களுடன் கொண்ட தொடர்பின் மூலம் திருப்தியுற்று பாலியல் மற்றும் போதைக்கு அடிமையாகி அவன் தன் வாழ்க்கையினைக் கெடுத்துக் கொள்கிறான். புலன்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் பிறர் முகங்களைக் கண்டு அவன் மறதியுடையவனாகி, மரணத்தைத் தழுவுகிறான்.
பதம் 5.13.18
த்ருமேஷு ரம்ஸ்யன் ஸுத-தார-வத்ஸலோ
வ்யவாய-தீனோ விவஸ: ஸ்வ-பந்தனே
க்வசித் ப்ரமாதாத் கிரி-கந்தரே பதன்
வல்லீம் க்ருஹீத்வா கஜ-பீத ஆஸ்தித:
த்ருமேஷு—மரங்களில் (அல்லது குரங்குகள் கிளைவிட்டுக் கிளை தாவும் மரங்களைப் போன்றிருக்கும் வீடுகளில்); ரம்ஸ்யன்—மகிழ்ந்து; ஸுத-தார-வத்ஸல—மனைவி மக்களிடத்தில் பற்றுக் கொண்டு; வ்யவாயதீன—பாலியல் ஆசை என்னும் நிலையில் செயல்படும் காரணத்தினால் ஏழை மனம் உடையவன்; விவஸ—துறக்க முடியாது; ஸ்வ-பந்தனே—தான் செய்யும் வினையின் பலன்களில் கட்டுண்டு; க்வசித்—சில சமயம்; ப்ரமாதாத்—தவிர்க்க முடியாத மரணத்திற்கு அஞ்சி; கிரி-கந்தரே—மலைக் குகையில்; பதன்—வீழ்ந்து; வல்லீம்—கொடியின் கிளைகளில்; க்ருஹீத்வா—பிடிபட்டு; கஜ-பீத—மரணமென்னும் யானைக்கு அஞ்சி; ஆஸ்தித—அந்நிலையிலேயே இருக்கிறான்.
கிளை விட்டுக் கிளை தாவும் குரங்கைப் போன்று உயிருடைய ஒருவன் இருக்கும் பொழுது அவன் பாலியலைத் தவிர வேறெந்தப் பயனுமில்லாத இல்வாழ்க்கை மரத்தில் இருக்கிறான். இதனால் அவன் ஒரு ஆண் கழுதையைப் போல் அவன் மனைவியினால் உதைத்துத் தள்ளப்படுகிறான். இந்த நிலையிலிருந்து விடுதலை பெற இயலாமல் அவன் அந்நிலையிலேயே இருக்கிறான். சில சமயம் மலைக்குகையினுள் வீழ்வது போன்ற, உயிர்க் கொல்லி நோய்க்குப் பலியாகிறான். அவன் அக்குகையின் முதுகைப் போன்றிருக்கும் மரணம் என்னும் யானைக்கு அஞ்சுகிறான். இவ்வாறு அவன் இக்கட்டிற்காளாகி ஒரு கொடியின் மிலார்களையும், கிளைகளையும் பற்றிக் கொள்கிறான்.
பதம் 5.13.19
அத: கதஞ்சித் ஸ விமுக்த ஆபத:
புனஸ் ச ஸார்தம் ப்ரவிஸதி அரிந்தம
அத்வனி அமுஷ்மின்ன அஜயா நிவேஸிதோ
ப்ரமான் ஜனோ ‘த்யாபி ந வேத கஸ்சன
அத—இதிலிருந்து; கதஞ்சித்—எவ்வாறேனும்; ஸ—அவன்; விமுக்த—விடுதலை பெற்று; ஆபத—ஆபத்திலிருந்து; புன ச—மீண்டும்; ஸ-அர்தம்—அந்த வாழ்க்கையில் விருப்பங்கொண்டு; ப்ரவிஸதி—தொடங்குகிறது; அரிம்-தம—ஒ, பகைவரைக் கொள்வோனே; அத்வனி—இன்பப் பாதையில்; அமுஷ்மின்—அது; அஜயா—மாயா சக்தியின் பாதிப்பினால்; நிவேஸித—ஆழ்ந்து; ப்ரமன்—பயணம் செய்கிறான்; ஜன—பந்தப்பட்ட ஆத்மா; அத்ய-அபி—மரணம் வரை; ந வேத—அறிந்து கொள்வதில்லை; கஸ்சன—எதையும்;
ஒ, பகைவரைக் கொல்லும் மகாராஜா ரகூகணனே, ஏதோ ஒரு வழியில் கட்டுண்ட ஆத்மா தனது ஆபத்தான நிலையிலிருந்து தப்பிவிட்டானென்றால் அவன் மீண்டும் பாலியல் இன்பத்தை அனுபவிக்கத் தன் இல்லறத்திற்குத் திரும்பி வருகிறான். ஏனெனில் அதுதான் பற்றுக் கொள்வதற்கான பாதையாக இருக்கிறது. இவ்வாறு பகவானின் உலகியல் ஆற்றல் எனும் மந்திரத்தில் கட்டுண்ட அவன் வாழ்க்கைக் காட்டில் தொடர்ந்து உழைக்கிறான். அவன் தனது உண்மை நலனை மரணம் வரும் வரையில் கூட அறிவதில்லை.
பதம் 5.13.20
ரஹுகண த்வம் அபி ஹி அத்வனோ ‘ ஸ்ய
ஸன்ன்யஸ்த-தண்ட க்ருத-பூத-மைத்ர:
அஸஜ்-ஜிதாத்மா ஹரி சேவயா ஸிதம்
ஜ்ஞாஸிம் ஆதாய தராதி-பாரம்
ரஹுகண—ஒ, மன்னர் ரகூகணன்; த்வம்—நீ; அபி—கூட; ஹி—உறுதியாக; அத்வன—பௌதீக வாழ்க்கைப் பாதையில்; அஸ்ய—இந்த; ஸன்ன்யஸ்த-தண்ட—குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக மன்னர் வைத்திருக்கும் தண்டத்தினைத் துறந்து; க்ருத-பூத-மைத்ர—அனைவரிடத்தும் நட்புக் கொண்டு; அஸத்-ஜித-ஆத்மா—பௌதீக இன்ப வாழ்வில் மனம் பற்றில்லாதவரின்; ஹரி-ஸேவயா—பரமபுருஷ பகவானுக்கு அன்புத் தொண்டு செய்யும் பாதையினால்; ஸிதம்—கூர்மையான; ஜ்ஞான-அஸிம்—ஞானவாள்; ஆதாய—கையிலெடுத்து; தர—தாண்டிச் செல்லுதல்; அதி-பாரம்—ஆன்மீக வாழ்வின் இறுதிக்கு.
அன்பிற்குரிய மன்னன் ரகூகணனே! உலக இன்பத்தின் கவர்ச்சிப் பாதையில் அமைந்திருப்பதினால் நீயும் கூட வெளியுலக ஆற்றலுக்குப் பலியாகி இருக்கிறாய். ஆகையினால் நீ அனைத்து உயிர்களுக்கும் சமமான நண்பனாகலாம். நீ குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக வைத்திருக்கும் தண்டத்தைத் துறந்து உனது அரச நிலையினையும் துறக்க வேண்டுமென்று இப்போது உனக்கு நான் அறிவுறுத்துகிறேன். புலனுகர்ச்சிப் பொருட்களின் மீதான கவர்ச்சியினை விட்டொழித்து, பக்தித் தொண்டினால் கூர்மையானதாக இருக்கும் ஞானவாளினை எடுத்துக் கொள். பிறகு உன்னால் உலகியற் சக்தியின் வலிமையான முடிச்சைத் துண்டித்து அறியாமைக் கடலினைக் கடக்க முடியும்.
பதம் 5.13.21
ராஜோவாச
அஹோ ந்ரு-ஜன்மாகில-ஜன்ம-ஸோபனம்
கிம் ஜன்மபிஸ் த்வ அபரைர் அபி அமுஷ்மின்
நயத் ஹ்ருஷீகேஸ-யஸ:-க்ருதாத் மனாம்
மஹாத்மனாம் வ: ப்ரசுர ஸமாகம:
ராஜா உவாச—மன்னர் ரகூகணன் கூறினார்; அஹோ—அந்தோ; ந்ரு-ஜன்ம—மனிதனாகப் பிறந்திருக்கும் நீர்; அகில-ஜன்ம-ஸோபனம்—உயிர்கள் அனைத்திலும் சிறந்தது; கிம்—என்ன தேவை; ஜன்மபி—தேவர்களாக தேவலோகத்தில் பிறக்கும் உயர்ந்த பொறுப்பு; து—ஆனால்; அபரை—மேன்மையானதன்று; அபி—உண்மையில்; அமுஸ்மின்—மறுபிறப்பில்; ந—இல்லை; யத்—அது; ஹ்ருஷீகேஸ யஸ:—முழுமுதற் கடவுளும் புலன்கள் அனைத்திற்கும் தலைவரான ரிஷிகேஸரின் பெருமைகளினால்; க்ருத-ஆத்மனாம்—இதயம் தூய்மை பெற்றோரின்; மஹா-ஆத்மனாம்—அவர்கள் உண்மையில் மகாத்மாக்கள்; வ—நமது; ப்ரசுர—அதிகமான; ஸமாகம—தொடர்பு.
மன்னர் ரகூகணன் கூறினான். மானுடப் பிறப்பே அனைத்துப் பிறப்புக்களிலும் மிகச் சிறந்ததேயாகும். தேவ லோகத்தில் தேவர்களாகப் பிறப்பது கூடப் பூலோகத்தில் மனிதர்களாகப் பிறப்பதைக் காட்டிலும் பெருமையுடையதாகாது. ஒரு தேவரின் மேன்மையான நிலை என்ன? தேவலோகத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதினால் அங்கு பக்தர்களுடன் தொடர்பு கொள்வதற்கு அங்கே சாத்திய மில்லை.
பதம் 5.13.22
ந ஹி அத்புதம் த்வச்-சரணாப் ஜ-ரேணுபிர்
ஹதாம் ஹஸோ பக்திர் அதோக்ஷஜே ‘மலா
மௌஹுர்திகாத் யஸ்ய ஸமாகமாச் ச மே
துஸ்தர்க -மூலோ ‘பஹதோ ‘விவேக:
ந—இல்லை; ஹி—உறுதியாக; அத்புதம்—அற்புதமான; த்வத்-சரண-அப்ஜரேணுபி—உமது தாமரைத் திருவடியின் தூசியினால்; ஹத-அம்ஸஹ—பாவ வாழ்வின் பலன்களிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றிருக்கிறேன்; பக்தி—அன்பும் பக்தியும்; அதோக்ஷஜே—முழுமுதற் கடவுளுக்கு, அவர் அனுபவ அறிவிற்கு அப்பாற்பட்டவர் ஆவார்; அமலா—உலக மாசுக்களிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றவர்; மௌஹுர்திகாத்—கணநேரம்; யஸ்யா—அவரது; ஸமாகதாத்—வருகை மற்றும் தொடர்பினால்; ச—மேலும்; மே—எனது; துஸ்தர்க—தவறான வாதங்கள்; மூல—மூலம்; அபஹத—முற்றிலும் வெல்லப்பட்டு; அவிவேக—வேறுபாடின்றி.
உமது தாமரைத் திருவடி தூசியினால் மூடப்பட்டால் ஒருவன் அதோக்ஷஜரின் பக்தித் தொண்டின் தன்மையினை உடனே அடைகிறான் என்பதில் வியப்பேதுமில்லை. இது பிரம்மதேவன் போன்ற தேவர்களுக்குக் கிடைப்பதற்குரியதாகும். உம்முடன் கொண்ட கண நேரத் தொடர்பினால், நான் பெருமையிலிருந்தும் உலகில் சிக்கிக் கொள்வதற்கு ஏதுவான வேறுபாடுகள் இல்லாமலும் விடுதலை பெற்றிருக்கிறேன். இப்போது நான் இப்பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றிருக்கிறேன்.
பதம் 5.13.23
நமோ மஹத்ப்யோ ‘ஸ்து நம: ஸிஸுப்யோ
நமோ யுவப்போ நம ஆவடுப்ய:
யே ப்ராஹ்மணா காம் அவ தூத-லிங்காஸ்
சரந்தி தேப்ய: ஸிவம் அஸ்து ராஜ்ஞாம்
நம—எல்லா வந்தனங்களும்; மஹத்ப்ய—மகான்களுக்கு; அஸ்து—உரியதாகுக; நம—எனது வந்தனங்கள்; ஸிஸுப்ய—சிறுவர்களைப் போன்று தோன்றும் மகான்களுக்கு; நம—மரியாதைக்குரிய வந்தனங்கள்; யுவப்ய—இளைஞர்களாகத் தோன்றுபவர்களுக்கு; நம—மரியாதைக்குரிய வந்தனங்கள்; ஆவருப்ய—குழந்தைகளாகத் தோன்றுபவர்களுக்கு; யே—அனைவர்க்கும்; ப்ராஹ்மணா—உன்னத ஞானத்தில் தன்னுணர்வு பெற்றோர்; காம்—பூமி; அவதூத-லிங்கா—பல்வேறு உடல்களில் அவர்கள் மறைந்திருக்கின்றனர்; சாந்தி—அவர்கள் பயணம் செய்வர்; தேப்ய—அவற்றிலிருந்து; ஸிவம் அஸ்து—அனைத்து மங்கலங்களும்; ராஜ்ஞாம்—அரச வம்சங்கள் அல்லது அரசர்களுக்கு (அவர்கள் எப்போதும் மிகுந்த கர்வமுடையவர்களாவர்).
மிகச் சிறந்த மகான்களுக்கு, அவர்கள் இப்பூமியில் குழந்தைகளாகவும், சிறுவர்களாகவும், அவதூதர்களாகவும், அந்தணர்களாகவும் இருந்த போதிலும், அவர்களுக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களைச் செலுத்துகிறேன். அவர்கள் பல்வேறு வடிவங்களில் மறைந்திருந்த போதிலும் கூட நான் அவர்களுக்கு உரிய மரியாதையினைச் செலுத்துகிறேன். அவர்கள் கருணையினால் அரச குலங்களுக்கு மங்கலம் உண்டாகட்டும். அக்குலப் பெருமை அரசர்களுக்கு தீமை செய்வதாகும்.
பதம் 5.13.24
ஸ்ரீஸுக உவாச
இதி ஏவம் உத்தரா மாத: ஸ வை ப்ரஹ்மர்ஷி ஸுத: ஸிந்து பதய ஆத்மஸதத்த்வம் விகணயத: பரானுபாவ: பரம-காருணிக தயோபதிஸ்ய ரஹுகணேன ஸகருணம் அபிவந்தித-சரண அபூர்ணார்ணவ இவ நிப்ருத கணோர்மி ஆஸயோ தரணிம் இமாம் விசசார
ஸ்ரீ- ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி-ஏவம்—இவ்வாறாக; உத்தரா மாத—அன்னை உத்தரையின் மைந்தனான மகாராஜா பரீட்சித்துவே; ஸ—அந்த அந்தணர்; வை—உண்மையில்; ப்ரஹ்ம-ருஷி-ஸுத—கற்றறிந்த அந்தணரின் மைந்தரான மானுட பரதர்; ஸிந்து-பதயே—சிந்து நாட்டின் மன்னருக்கு; ஆத்ம-ஸ-தத்த்வம்—ஆத்மாவின் உண்மையான சட்டப்பூர்வ நிலை; விகணயத—ஜட பரதரை அவமதித்திருந்தும்; பர அனுபாவ—ஆன்மீக உணர்வில் சிறந்து விளங்குபவர்; பரம காருணிகதயா—வீழ்ந்துவிட்ட ஆத்மாக்களிடம் மிகவும் அன்புடைய அவர் தன்மையினால்; உபதிஸ்ய—உபதேசித்து; ரகூகணேன—மன்னர் ரஹுகணனால்; ஸ-கருணம்—இரக்கங்கொண்டு; அபிவந்தித-சரண:—அவரது தாமரைத் திருவடிகளை பிரார்த்தித்து; அபூர்ண-அர்ணவ:-இவ—அமைதியான கடலைப் போன்று; நிப்ருத—மிகவும் அமைதியுடன்; கரண—புலன்களின்; ஊர்மி—அலைகள்; ஆஸய—இதயம் உடையவர்; தரணிம்—பூமி; இமாம்—இந்த; விசசார—தொடர்ந்து சுற்றி வந்தார்.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் ஒ, அன்னை உத்தலையின் மைந்தனான, அன்பு மன்னனே, பல்லக்கைத் தூக்க வைத்து மானுட பரதரை அவமதித்த காரணத்தினால் மன்னர் ரகூகணனின் மனதில் அதிருப்தி அலைகள் இருந்தன. ஆனால் பரதரோ அதனை உடனே மறந்துவிட்ட காரணத்தினால் அவரது மனம் மீண்டும் ஒரு கடலைப் போன்று அமைதியுடன் இருந்தது. மன்னர் ரகூகணன் அவரை அவமதித்த போதிலும் பரதர் மிகச் சிறந்த அமைதியே உருவானவர் ஆவார். அவர் ஒரு வைணவர் ஆதலினால் அவரது மனம் அன்புடையதாக இருந்தது. அதனால் அவர் அம்மன்னனிடம் ஆத்மாவின் சட்டபூர்வ நிலையினைப் பற்றி எடுத்துரைத்தார். பின்னர் அவர் தனக்கிழைக்கப்பட்ட அவமரியாதையினை மறந்து விட்டார். காரணம் மன்னர் ரகூகணன் அவரது தாமரைத் திருவடிகளிடத்து மனம் வருந்தி மன்னிப்பை வேண்டியிருந்தார். இதன் பிறகு அவர் முன்பு போல் இப்பூமி முழுவதும் சுற்றி வந்தார்.
பதம் 5.13.25
ஸௌ வீர-பதிர் அபிர் ஸுஜன-ஸமவகத-பரமாத்ம-ஸதத்த்வ
ஆத்மனி அவித்யாத்யாரோபிதாம் ச தேஹாத்ம-மதிம் விஸஸர்ஜ ஏவம் ஹி ந்ருப பகவத்-ஆஸ்ரிதாஸ்ரிதானுபாவ:
ஸௌவீர பதி—சௌவீர நாட்டின் அரசன்; அபி—நிச்சயமாக; ஸுஜன—உயர்ந்த மகானிடமிருந்து; ஸமவக—நன்கு அறிந்து கொண்டு; பரமாத்ம-ஸ-தத்த்வ—பரமாத்மா, மற்றும் ஆத்மாவின் சட்டப் பூர்வ நிலை பற்றிய உண்மை; ஆத்மனி—அவரிடத்தில்; அவித்யா—அறியாமையினால்; அத்யாரோபிதாம்—தவறான இயல்பு; ச—மேலும்; தேஹ—உடலில்; ஆத்ம-மதிம்—தன்னைப் பற்றிய கருத்து; விஸஸர்க—முற்றிலும் விட்டு விட்டு; ஏவம்—இவ்வாறு; ஹி—நிச்சயமாக; ந்ருப—ஓ, மன்னனே; பகவத்-ஆஸ்ரித-ஆஸ்ரித-அனுபாவ—பரம்பரை முறையில் ஏற்கெனவே ஒர் ஆன்மீக குருவிடம் சரணடைந்த பக்தரிடம் அடைக்கலம் புகுந்ததைத் தொடர்ந்து (ஒருவன் நிச்சயமாக உடற்கருத்து வாழ்வின் அறியாமையிலிருந்து வெளி வருவோன்).
சிறந்த பக்தரான மானுட பரதரிடமிருந்து உபதேசம் பெற்ற பின் சௌவீர நாட்டின் மன்னரான ரகூகணன் ஆத்மாவின் சட்ட பூர்வ நிலையினை முற்றிலும் உணர்ந்தவரானார். இவ்வாறு அவர் உலகியற் சிந்தனையை முற்றிலும் ஒழித்தார். அன்பார்ந்த மன்னனே பகவானின் தொண்டனை எவனும் சரணடைந்தால் கூட அவன் புகழடைவான். ஏனெனில் அவனால் சிரமமுமின்றி உலகியற் சிந்தனையை விட முடியும்.
பதம் 5.13.26
ராஜோவாச
ய ஹ வா இஹ பஹு-விதா மஹா-பாகவத த்வயாபி ஹித:
பரோக்ஷேண வசஸா ஜீவ-லோக-பவாத்வா ஸ ஹி ஆர்ய-மனிஷயா கல்பித-விஷயோ நாங்ஜஸாவ்யுத்பன்ன-லோக-ஸமதிகம: அத தத் ஏவைதத் துரவகமம் ஸமவேதானுகல்பேன நிர்திஸ்யதாம் இதி
ராஜா உவாச—மன்னர் பரீக்ஷித்துக் கூறினார்; ய—அது; ஹ—உறுதியாக; வா—அல்லது; இஹ—இக்கதையில்; பஹு-விதா—உன்னத ஞானத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளை அறிந்தோர்; மஹா-பாகவத—ஒ, பக்த மாமுனிவரே; த்வயா—உம்மால்; அபிஹித—விளக்கப்பட்ட; பரோக்ஷேண—உருவகமாக; வசஸா—வார்த்தைகளினால்; ஜீவ-லோக-பவ-அத்வா—பந்தப்பட்ட ஆத்மாவின் பௌதீக வாழ்க்கைப் பாதை; ஸ—அது; ஹி—உண்மையில்; ஆர்ய-மனிஷயா—வளர்ச்சியடைந்த பக்தர்களின் புத்தியினால்; கல்பித-விஷய—இப்பொருளானது கற்பனை செய்யப்படுகிறது; ந—இல்லை; அஞ்ஜஸா—நேரடியாக; அவ்யுத்பன்ன-லோக—நன்கு அனுபவப்பட்டவர்கள் அல்லது புத்திமான்கள்; ஸமதிகம—முற்றிலும் அறிந்து கொண்டு; அத—ஆகையினால்; தத் ஏவ—இதன் காரணமாக; ஏதத்—இவ்விஷயம்; துரவகமம்—புரிந்து கொள்ள கடினமானது; ஸமவேத-அனுகல்பேன—இந்நிகழ்ச்சிகளின் நேரடிப் பொருளை மறைமுகப்படுத்தியதினால்; நிர்திஸ்யதாம்—விளக்கப்பட வேண்டும்; இதி—இவ்வாறு.
பின்னர் பரீட்சித்து மன்னர் சுகதேவ கோஸ்வாமியிடம் கூறினார் போற்றுதலுக்குரியவரே, ஒ, பக்த மாமுனிவரே, நீர் எல்லாம் அறிந்தவர் ஆவீர். ஒரு காட்டில் உள்ள வணிகனோடு ஒப்பிடப்பட்டிருக்கும் கட்டுண்ட ஆத்மாவைப் பற்றி நீர் மிகவும் அழகாக விளக்கியுள்ளீர், இவ்வுபதேசங்களிலிருந்து அறிவாளிகள், உடற்கருத்துடைய மனிதனின் புலன்களே காட்டிலுள்ள துஷ்டர்கள் மற்றும் திருடர்களென்றும், அவனது மனைவி, மற்றும் குழந்தைகள் நரிகள் போன்ற கொடிய விலங்குகள் என்றும் புரிந்து கொள்வர். ஆயினும் இக்கதையின் உட்பொருளை மதி குறைந்தவர்களினால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வுருவகக் கதையின் உட்பொருளைப் பிரித்தெடுப்பது மிகவும் கடினமாகும். ஆகையினால் இதன் நேரடிப் பொருளை விளக்கி அருளுமாறு தங்களை நான் வேண்டுகிறேன்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “மன்னர் ரகூகணனுக்கும் மானுட பரதருக்கும் இடையே மேலும் நடைபெற்ற உரையாடல்” எனும் தலைப்பை கொண்ட பதிமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.