அத்தியாயம் – 6
பகவான் ரிஷப தேவரின் செயல்கள்
பதம் 5.6.1 : பரிட்சித்து மன்னர் சுகதேவ கோஸ்வாமியிடம் கேட்டார் போற்றுதற்குரிய பகவானே! இதயத்தில் முற்றிலும் தூய்மையுடையவர்களுக்கு, பக்தி யோகத்தினால் ஞானம் கைவரப் பெறுகிறது. உலகியல் செயல்களின் மீதான பற்று முற்றிலும் எரிந்து சாம்பலாகிறது. இவரைப் போன்ற மனிதர்களிடம் யோக சக்திகள் தாமாகவே வெளிப்படும். அவை துன்பத்திற்கு காரணமாவதில்லை. பின்னர் ஏன் ரிஷப தேவர் அவற்றைப் புறக்கணித்தார்?

பதம் 5.6.2 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார் அன்பிற்குரிய மன்னனே, நீ மிகச் சரியாகவே சொன்னாய். தந்திரமிக்க ஒரு வேடன் தான் பிடித்த விலங்குகளிடம் நம்பிக்கை வைப்பதில்லை. ஏனெனில் அவை தப்பி ஓடிவிடக் கூடும். அதுபோல் ஆன்மீக வாழ்க்கையில் வளர்ச்சி பெற்றவர்கள் மனதின் மீது நம்பிக்கை வைப்பதில்லை. உண்மையில் அவர்கள் எப்போதும் மிக்க கண்காணிப்புடன் இருந்து மனதின் போக்கினைக் கவனிக்கின்றனர்.

பதம் 5.6.3 : கற்றறிந்த அறிஞர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர். மனமானது இயற்கையிலேயே மிகவும் அமைதியற்றதாகும். அதனால் அதனோடு ஒருவர் நட்பு பாராட்டக் கூடாது. நாம் நமது முழு நம்பிக்கையினையும் மனதின் மீது வைத்தால் அது எந்த நேரத்திலும் நம்மை ஏமாற்றி விடலாம். ஏன், பகவான் கிருஷ்ணரின் மோகினி வடிவத்தைக் கண்டு சிவபெருமான் கூடக் கிளர்ச்சியடைந்தார். சௌபரி முனிவரும் தனது முதிர்ந்த யோக நிலையிலிருந்து தவறி விட்டார்.

பதம் 5.6.4 : கற்பில்லாத பெண் மிக எளிதில் பிற ஆடவர்களால் ஆட்கொள்ளப்படுகிறாள். மேலும் சில நேரங்களில் அவள் கணவன் கூட பிற ஆடவரால் கொல்லப்படுகிறான். ஒரு யோகி தன் மனதிற்கு ஒரு வாய்ப்புக் கொடுத்து அதனைக் கட்டுப்படுத்தவில்லையெனில் அவனது மனம், காம, குரோதம், மோகம் என்னும் பகைவர்களுக்கு இடமும் அளித்து பின் அவற்றினால் ஒருநாள் ஐயத்திற்கு இடமின்றி கொல்லப்படுகிறான்.

பதம் 5.6.5 : காம, குரோத, மோக, சோக, மத, மாச்சர்ய, பயம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது மனமேயாகும். இவையனைத்தும் சேர்ந்தே ஒருவனது செயல்களோடு அவனைக் கட்டுப்படுத்துகிறது. எனவே ஆழ்ந்து கற்றறிந்த எவன் இந்த மனதின் மீது நம்பிக்கை வைப்பான்? மனம் போன போக்கெல்லாம் போக மாட்டான் அல்லவா!

பதம் 5.6.6 : பகவான் ரிஷப தேவர் இகபர உலகின் அனைத்துத் தலைவர்கள், அரசர்களுக்கெல்லாம் தலைவர் ஆவார். ஆயினும் ஒர் அவதூதரைப் போல் மொழி பேசி ஆடை அணிந்து திரிந்ததினால் அவர் புத்தி தடுமாறியவரைப் போன்றும் உலகப் பாசம் உடையவர் போன்றும் செயல்பட்டார். இதனால் ஒருவராலும் அவரது தெய்வீக வளத்தினை உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவர் எவ்வாறு இவ்வுடலினைத் துறப்பது என்பதை யோகிகளுக்குப் போதிப்பதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டார். இருந்தும் அவர் பகவான் வாசுதேவ கிருஷ்ணரின் இயல்பில் தனது உண்மை நிலையினையும் பாதுகாத்தார். எப்போதும் இந்நிலையில் இருந்து கொண்டு அவர் உலகில் பகவான் ரிஷபதேவரின் லீலைகளை நிறுத்திக் கொண்டார். பகவான் ரிஷப தேவரின் காலடிகளைப் பின்பற்றி ஒருவன் தனது நுண்ணுடலைத் துறந்தானென்றால் அவனுக்குப் பரு உடலைப் பெறும் சந்தர்ப்பம் ஏற்படாது.

பதம் 5.6.7 : உண்மையில் பகவான் ரிஷப தேவர் உடலைப் பெற்றிருக்கவில்லை. ஆயினும் யோகமாயையினால் அவர் தனது உடலைப் பௌதீகமாகக் கருதினார். அத்தோடு அவர் ஒரு சாதாரண மனிதனைப் போல் செயல்பட்டாலும் அதனுடன் அடையாளம் காணும் மன நிலையினைத் துறந்தார். இக் கொள்கையினைப் பின்பற்றி அவர் உலகம் முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார். இவ்வாறு பயணிக்கும் பொழுது அவர் தென்னிந்தியாவில் கர்நாடகத்தினை அடைந்து அங்கிருந்து கொங்கம், வேங்கம், குடகம் போன்ற பகுதிகளைக் கடந்து சென்றார். இவ்வழியில்தான் செல்லவேண்டும் எனும் திட்டமும் அவரிடம் இல்லை. ஆயினும் அவர் குடகாசலத்தினை அடைந்து அதன் அருகிலுள்ள காட்டினுள் சென்றார். வாய் நிறையக் கற்களை வைத்துக் கொண்டு, நிர்வாணமாகவும், பரட்டைத் தலையுடனும் ஒரு பைத்தியம் பிடித்த மனிதனைப் போல் அக்காடு முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தார்.

பதம் 5.6.8 : அவ்வாறு அவர் திரிந்து கொண்டிருந்தபொழுது திடீரென்று அக்காட்டில் தீ பிடித்தது. பலமாக வீசிய காற்றினால் மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்ததினால் இத் தீ ஏற்பட்டதாகும். அதனால் காடு முழுவதும் எரிந்ததோடு பகவான் ரிஷப தேவரின் உடலும் எரிந்து சாம்பலாகியது.

பதம் 5.6.9 : சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித்து மன்னரிடம் தொடர்ந்து கூறினார் அன்பார்ந்த மன்னனே, கொங்க, வெங்க, குடக நாட்டின் மன்னர் அர்ஹத் என்பவர் ரிஷப தேவரின் செயல்களைக் கேள்விப்பட்டு அவரது கொள்கைகளைப் பாவனை செய்து புதுவகையான சமயம் (தர்மம்) ஒன்றினை அறிமுகப்படுத்தினார். பாவச் செயல்களுக்குரிய காலமான கலியுகத்தினைப் பயன்படுத்தி மன்னர் அர்ஹத் குழப்ப நிலையில், இடர் தராத வேத அறநெறிகளைத் துறந்துவிட்டு யூகத்தின் அடிப்படையில் வேதத்திற்குப் புறம்பான ஒரு புதிய சமயத்தினை நிறுவினார். அதுவே ஜெயின் தர்ம நெறிமுறையின் தொடக்கமாகும். இந்த நாத்திக முறையினைப் பல சமயங்கள் பின்பற்றின.

பதம் 5.6.10 : மனிதர்களில் இழிந்தவர்களாகவும், பரமபுருஷ பகவானின் மாயா சக்தியினால் குழப்பமடைந்தும் இருக்கும் சிலர் உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தினையும் அதன் ஒழுங்குமுறை விதிகளையும் கைவிட்டுவிடுவர். அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை நீராடுவதும் இறைவனை வழிபடுவதும் இல்லை. தூய்மையினைக் கைவிட்டு முழுமுதற் கடவுளைப் புறக்கணிப்பர். புத்திக்கு ஒவ்வாதக் கொள்கைளை ஏற்றுக் கொள்வர். அவர்கள் தினசரி நீராடுவதோ, வாயைக் கழுவுவதோ இல்லை. அசுத்தமாகவே இருப்பர். தங்கள் தலை முடிகளைக் கைகளினால் பிடுங்குவர். கற்பனையான சமயத்தினைப் பின்பற்றி அவர்கள் வளம் பெறுவர். இக்கலியுகத்தில் மக்கள் அதர்ம நெறிகளையே அதிகம் நாடுவர். இதனைத் தொடர்ந்து மக்கள் இயற்கையாகவே வேதங்களின் அதிகாரத்தினையும், அவற்றைப் பின்பற்றுபவர்களையும், அந்தணர்களையும், முழுமுதற் கடவுளையும் அவர்தம் பக்தர்களையும் இழிவு செய்வர்.

பதம் 5.6.11 : தாழ்ந்த மனிதர்கள் அவர்களது அறியாமையினால் வேத நெறிகளுக்குப் புறம்பான சமய முறையினை அறிமுகப்படுத்துகின்றனர். தங்களது மன யூகத்தினைப் பின்பற்றி வாழ்வின் இருண்ட பகுதியில் அவர்கள் தாமாகவே வீழ்கின்றனர்.

பதம் 5.6.12 : இக்கலியுகத்தில் மக்கள் இரஜோ குணம் தமோ குணங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை மாயையின் பிடியிலிருந்து மீட்பதற்காகவே ரிஷப தேவர் பிறந்தார்.

பதம் 5.6.13 : கற்றறிந்த அறிஞர்கள் பகவான் ரிஷப தேவரின் உன்னதக் குணங்களை இவ்வாறு பாடுகின்றனர் “ஓ, ஏழு கடல்களையும், பல்வேறு தீவுகளையும், நிலப்பகுதிகளையும் உடைய இப்பூவுலகில் பாரத நாடே மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. முழு முதற் கடவுளின் அவதாரங்களான பகவான் ரிஷப தேவர் போன்றவர்களின் செயல்களைப் போற்றிப் புகழ்வதைப் பாரத மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இச்செயல்கள் அனைத்தும் மனித சமுதாயத்தின் நலனுக்கு மிகவும் மங்கலம் வாய்ந்தவையாகும்.

பதம் 5.6.14 : “ஒ, தூய்மையும் பெருமையும் மிக்கப் பிரியவிரதனின் ஆட்சியைப் பற்றி என்னவென்று சொல்வேன். அந்த ஆட்சியில் ஆதி முழுமுதற் கடவுளானப் பரம புருஷர் அவதரித்துப் பிறந்தார். உலகியல் செயல்களில் இருந்து ஒருவரை விடுவிக்கக் கூடிய சமய அற நெறிகளை அவர் நிறைவேற்றினார்.

பதம் 5.6.15 : பகவான் ரிஷப தேவரின் முன்னுதாரணத்தினை, தனது மனதில் கூடப் பின்பற்றும் திறனுடைய தெய்வீக யோகி எவர் இருக்கின்றனர்? எல்லா யோகிகளும் யோகஸித்திகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் பொழுது பகவான் ரிஷப தேவர் இந்த யோகி ஸித்திகள் அனைத்தையும் புறக்கணித்தார். பகவான் ரிஷபதேவரோடு ஒப்பிடக் கூடிய வல்லமை பெற்ற யோகி யார்?

பதம் 5.6.16 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: வேதஞானம் நிறைந்த பகவான் ரிஷப தேவர், மனிதர்கள், தேவர்கள், பசுக்கள் மற்றும் அந்தணர்களின் தலைவர் ஆவார். நான் ஏற்கனவே உயிர்களின் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் அவரது தூய உன்னத குணங்களைப் பற்றி விளக்கியிருக்கிறேன். பகவான் ரிஷப தேவரின் லீலைகளைப் பற்றிய இச்சரிதமானது அனைத்து மங்கலங்களும் நிரம்பியதாகும். ஆச்சாரியார்களின் சுவடுகளைப் பின்பற்றி இவற்றைப்பற்றிப் பேசுபவர்களும் கேட்பவர்களும் முழுமுதற் கடவுளான பகவான் வாசுதேவரின் திருவடித் தாமரைகளுக்கான குற்றமற்ற பக்தித் தொண்டினை நிச்சயம் எய்துவார்.

பதம் 5.6.17 : வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக பக்தர்கள் எப்போதும் பக்தித் தொண்டில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனைச் செய்வதினால் பக்தர்கள் தெய்வீக இன்பத்தை அனுபவிக்கின்றனர். மேலும் வீடுபேறு மனித உருவில் வந்து அவர்களுக்குத் தொண்டு செய்கிறது. இருந்தும் அவர்கள் அத்தொண்டினை அது முழுமுதற் கடவுளால் அளிக்கப்பட்ட போதிலும்கூட ஏற்றுக் கொள்வதில்லை. பக்தர்களைப் பொறுத்தமட்டில் விடுதலை (முக்தி) என்பது சிறிதும் முக்கியத்துவமற்றதாகும். ஏனென்றால் பகவானின் மனவாசகம் கடந்த அன்புத் தொண்டினை அடையப் பெற்றவர்கள் அவர்கள் விரும்பிய அனைத்தையும் அடைவதோடு உலகியல் ஆசைகள் அனைத்தையும் கடந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

பதம் 5.6.18 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பிற்குரிய மன்னனே, முழுமுதற் கடவுளான முகுந்தன் பாண்டவ, யதுகுல உறுப்பினர்களை உண்மையில் காப்பவர் ஆகும். அவரே உனது குரு, வணங்குதற்குரிய தெய்வம், நண்பர் மற்றும் உனது செயல்கள் அனைத்தையும் இயக்குபவரும் அவரே. இதனைச் சொல்வதினால் ஒன்றும் இல்லை. அவர் சில சமயம் உங்கள் குடும்பத்திற்குத் தூதராகவும், தொண்டராகவும் இருந்து சாதாரணப் பணியாளர்கள் செய்வதைப் போன்று பணி செய்தார். பகவானின் கருணையினைப் பெறுவதற்காகத் தொண்டு செய்பவர்கள் பகவானிடமிருந்து விடுதலையினை மிக எளிதில் பெறுகின்றனர். ஆயினும் அவர் தனக்கு நேரடியாகத் தொண்டு செய்யும் வாய்ப்பினை ஒருவனுக்கு எளிதில் அளிப்பதில்லை.

பதம் 5.6.19 : முழுமுதற் கடவுளான பகவான் ரிஷப தேவர் தனது உண்மை அடையாளத்தினை நன்கு அறிந்தவர் ஆவார் ஆகையினால் அவர் சுய நிறையுடையவராக விளங்கினார். அவர் புலநுகர்ச்சிகள் எதையும் விரும்பவில்லை. அவர் மன நிறைவுடையவராதலால் வெற்றி பெறுவதற்கான ஆசைகள் அவருக்குத் தேவையற்றவையாயின. தேவையின்றி உடலோம்பலில் ஈடுபட்டு அதற்குரிய சூழல்களை உண்டு பண்ணுவோர் சுயநலம் மிகுந்து அறியாமை மிக்கவர்களாகவே இருக்கின்றனர். தனது அளவற்றக் கருணையினால் பகவான் ரிஷப தேவர் சுய நலத்தினை அடையாளம் காட்டியதோடு வாழ்க்கை லட்சியத்தினையும் நமக்குப் போதித்தார். ஆகையினால் பகவான் ரிஷப தேவராக அவதரித்த இறைவனுக்கு நமது மரியாதைக்குரிய வந்தனங்களைச் செலுத்துவோம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare