அத்தியாயம் – 24
சிவபெருமான் பாடிய துதிப்பாடல்
பதம் 4.24.1 : மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்தார்: பிருது மகாராஜாவின் புத்திரரான விஜிதாஸ்வன் என்பவர் தன் தந்தையைப்போலவே புகழ் பெற்றவர், அவர் தன் தந்தைக்குப் பின் பேரரசாகி தான் அளவு கடந்து நேசிக்கும் தன் இளைய சகோதரர்களிடம் இப்பூமியின் பல்வேறு பகுதிகளைக் கவனிக்கும் பொறுப்பினை ஒப்படைத்தார்.

பதம் 4.24.2 : மகாராஜா விஜிதாஸ்வன் ஹர்யக்ஷன் என்னும் சகோதரருக்கு கிழக்குப் பகுதியினையும், தூம்ரகேஸ் என்னும் சகோதரருக்குத் தெற்குப் பகுதியினையும், விருகன் என்னும் சகோதரருக்கு மேற்குப் பகுதியினையும், திரவிணன் என்னும் சகோதரருக்கு வடக்குப் பகுதியினையும் அளித்தார்.

பதம் 4.24.3 : முன்னர் மகாராஜா விஜிதாஸ்வன் தேவலோக அதிபதியான தேவேந்திரனை மகிழ்வித்து அந்தர்தானன் என்னும் சிறப்புப் பெயரினை அவரிடமிருந்து பெற்றார். விஜிதாஸ்வனின் மனைவியின் பெயர் ஸிகண்டினீ என்பது. இவர்கள் இருவருக்கும் மூன்று தன்மைந்தர்கள் பிறந்தனர்.

பதம் 4.24.4 : மகாராஜா அந்தர்தானனுக்கு பாவகன், பவமானன் மற்றும் ஸீசி என்று மூன்று மைந்தர்கள். இதற்கு முன்னர் இம்மூவரும் அக்கினி தேவர்களாக விளங்கியவர்கள். மகாமுனிவர் வசிஷ்டரின் சாபத்தினால் இப்பிறவியில் மகாராஜா அந்தர்தானனுக்கு மகன்களாகப் பிறந்துள்ளனர். ஆகையினால் அவர்கள் அக்கினி தேவர்களுக்குரிய அனைத்துச் சக்திகளையும் பெற்றிருந்தனர். அவர்கள் மீண்டும் தேவர்கள் நிலையினை அடைவதற்குரிய உன்னத யோகசக்தியில் எல்லையில்லாத தேர்ச்சிபெற்று விளங்கினார்கள்.

பதம் 4.24.5 : மகாராஜா அந்தர்தானனுக்கு நபஸ்வதீ என்று மற்றொரு மனைவி இருந்தார், அவள் மூலம் ஹவிர்தானன் என்றொரு மகன் பிறந்தான். மகாராஜா அந்தர்தானன் மிகவும் பெருந்தன்மைமிக்கவர். ஆகையினால் தான் அவர் இந்திரன் தன் தந்தையின் வேள்வியில் குதிரையைத் திருடியபொழுதும் அவர் இந்திரனைக் கொல்லவில்லை.

பதம் 4.24.6 : சிறந்த ஆற்றல்மிக்க அந்தர்தானன் தன் குடிமக்கள் மீது வரிகள் விதிப்பது அல்லது அவர்கள் குற்றங்களுக்கான அபராதம் விதிப்பது போன்றவற்றை மனமுவந்து செய்யமாட்டார். இதுபோன்ற நிர்வாக நடைமுறைகளிலிருந்து அவர் விலகி பல்வேறு விதமான வேள்விகள் செய்வதில் ஈடுபட்டார்.

பதம் 4.24.7 : மகாராஜா அந்தர்தானன் வேள்வியைச் செய்வதில் ஈடுபட்டிருந்த போதிலும் ஆத்ம உணர்வு பெற்றவர் ஆதலினால் அவர் மிகவும் புத்திசாலித்தனமாக, தனது பக்தர்களின் பயத்தைப் போக்கும் பகவானுக்குப் பக்தித் தொண்டு செய்து வந்தார். இவ்வாறு பரமபுருஷ பகவானைப் பணிந்து வந்த அந்தர்தான மகாராஜா தன்னை மறந்த மகிழ்ச்சி நிலையில் பகவானது உலகத்தை மிகவும் எளிதாக அடைந்தார்.

பதம் 4.24.8 : மகாராஜா அந்தர்தானின் மைந்தன் ஹவிர்தானன் என்பவன். அவனுக்கு ஹவிர்தானீ என்றொரு மனைவியுண்டு. அவள் பர்ஹிஸதன், கயன், ஸீக்லன், கிருஷ்ணன், சத்யன் மற்றும் ஜிதவிரதன் என்ற ஆறு மைந்தர்களை ஈன்றெடுத்தாள்.

பதம் 4.24.9 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: எனது அன்பான விதுரனே, ஹவிர்தானனின் ஆற்றல் மிக்க மைந்தனான பர்ஹிஷதன் என்பான் பலன்தரும் வேள்விகள் செய்வதில் நிபுணன் ஆவான். மேலும் அவன் உன்னதமான யோகப்பயிற்சியிலும் தேர்ந்தவன். இவ்வுயர்ந்த தகுதியினால் பிரஜாபதி என்றழைக்கப்பட்டான்.

பதம் 4.24.10 : மகாராஜா பர்ஹிஷதன் இவ்வுலகமெங்கும் அனேக வேள்விகளைச் செய்தார். அவர் குஸப்புற்களை எங்கும் பரப்பி அவற்றின் மேல்பகுதியின் நுனியினைக் கிழக்கு முகமாகப் பார்க்கும்படி வைத்தார்.

பதம் 4.24.11 : இனிமேல் பிராவீனபர்ஹி என்று அழைக்கப்படும் மகாராஜா பர்ஹிஷதன், ஸதத்ருதி என்னும், சமுத்திரராஜனின் மகளை மணந்து கொள்ளுமாறு பிரம்மதேவனால் ஆணையிடப்பட்டார். அவர் மிகுந்த அழகும் இளமையும் வாய்ந்தவனாக இருந்தார். அவள் கண்ணைக் கவரும் ஆடை அணிகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டு சுயம்வர மண்டபத்தினைச் சுற்றிவந்தாள்; அப்படி வரும் பொழுது அவள் அக்னி தேவனை அதிகமாகக் கவர்ந்தாள், முன்பு ஸீகீ என்பவனை அடைய எத்தனை மோகங் கொண்டாளோ அதே போல் ஸதத்ருதியின் மீதும் இப்போது மோகம் கொண்டவள் ஆனாள்.

பதம் 4.24.12 : ஸதத்ருதியின் திருமணம் இவ்வாறு நடைபெறும் வேளையில், அசுரர்கள், கந்தர்வலோகத்தைச் சேர்ந்தவர்கள், மகாமுனிவர்கள், ஸீத்த லோகத்தைச் சேர்ந்தவர்கள், பூலோகத்தைச் சேர்ந்தவர்கள், மற்றும் நாகலோகத்தைச் சேர்ந்தவர்கள் போன்ற உயர்ந்தவர்கள் எல்லாம் அவள் கால் சிலம்பின் ஒசையினால் கவரப்பட்டனர்.

பதம் 4.24.13 : ஸதத்ருத்தியின் வயிற்றிலிருந்து மன்னர் பிராசீனபர்ஹிப் பத்துப் புத்திரர்களை ஈன்றெடுத்தார். அவர்கள் அனைவரும் தர்மவான்களாக விளங்கினர். அவர்கள் அனைவரும் பிரசேதர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பதம் 4.24.14 : இப்பத்துப் பிரசேதர்களும் மணமுடித்துப் பிள்ளைகளைப் பெற அவர்கள் தந்தையினால் கட்டளையிடப்பட்ட பொழுது அவர்கள் அனைவரும் கடலினுள் புகுந்து பத்தாயிரம் ஆண்டுகள் துறவறங்களையும் தவங்களையும் மேற்கொண்டனர். இவ்வாறு அவர்கள் எல்லாத் தவங்களின் நாயகனான முழுமுதற் கடவுளைப் பிரார்த்தித்தனர்.

பதம் 4.24.15 : பிராசீனபர்ஹியின் புதல்வர்கள் அனைவரும் தவம் செய்வதற்காக வீட்டைவிட்டுப் போகும் பொழுது சிவபெருமானைச் சந்தித்தார்கள், அவர் அவர்களின் மீது கொண்ட கருணையினால் அவர்களுக்கு முழுமெய்ப்பொருளைப் பற்றி அறிவுரைகளின்படியே அவற்றை முழு ஈடுபாட்டுடன் ஓதவும் பிரார்த்திக்கவும் செய்தனர்.

பதம் 4.24.16 : விதுரர் மைத்ரேயரிடம் எனது அன்பிற்குரிய அந்தணரே பிரசேதர்கள் வழியில் சிவபெருமானை ஏன் சந்தித்தனர்? இது எவ்வாறு நேர்ந்தது என்றும், சிவபெருமான் அவர்களிடம் ஏன் மனம் மகிழ்வுற்றார் என்றும், அவர்களுக்கு எவ்வாறு அறிவுரைகள் வழங்கினார் என்றும் கருணை கொண்டு எனக்கு விளக்குவீராக. நிச்சயமாக அவர் உரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கும் ஆதலினால் அவற்றை விளக்கி அருள்வீராக.

பதம் 4.24.17 : மகான் விதுரர் தொடர்ந்து கூறினார்: ஓ, அந்தணரில் சிறந்தவரே, ஜட உடல் பெற்று இவ்வுலகில் வாழும் உயிர்கள் சிவபெருமானோடு தொடர்பு கொள்வது என்பது இயலாத ஒன்று. பௌதீகப் பற்றுக்கள் அனைத்தையும் விட்டு எப்போதும் அவரோடு தொடர்பு கொள்வதற்கு தியானங்களில் ஈடுபட்டிருக்கும் மகாமுனிவர்களுக்குக் கூட அவர் தொடர்பு இயலாததாயிற்றே.

பதம் 4.24.18 : பகவான் விஷ்ணுவிற்கு அடுத்த நிலையில் சுயதிருப்தியுடைய மிகவும் சக்திவாய்ந்த தேவர் சிவபெருமான் ஆவார். இப்பௌதீக உலகில் அவர் வேண்டுவது எதுவும் இல்லை. அப்படியிருந்தும் இப்பௌதீக உலகில் இருப்பவர்களுக்காக அவர் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் சலியாது தன்னை தொழிற்படுத்திக் கொண்டேயிருப்பார். அவரோடு எப்பொழுதும் இருபெரும் பயங்கர சக்திகளான காளி தேவியும் துர்காதேவியும் உடன் இருப்பார்கள்.

பதம் 4.24.19 : மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்தார்: எனது அன்பான விதுரனே, தங்களது புனிதமான தன்மையினால் பிராசீனபர்ஹியின் எல்லாப் புதல்வர்களும் தம் தந்தையின் வார்த்தைகளை உளப்பூர்வமாக ஒத்துக் கொண்டனர். இவ்வார்த்தைகளைத் தம் சிரங்களில் மேல் தாங்கித் தங்கள் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக மேற்குத்திசையினை நோக்கிப் பயணப்பட்டனர்.

பதம் 4.24.20 : இவ்வாறு பயணம் செய்யும்பொழுது பிரசேதர்கள் கடலைப் போல் பெரிதான ஓர் நீர்த் தேக்கத்தினைக் கண்டார்கள். ஓர் உயர்ந்த ஆத்மாவின் மனதினைப்போல் அது அமைதியும் அடக்கமும் மிக்கதாக இருந்தது. மேலும் அதில் வாழ்கின்ற, நீர்வாழ் உயிர்கள், அந்நீர்த்தேக்கத்தின் பாதுகாவலின் கீழ் மிகவும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வது போல் தோன்றின.

பதம் 4.24.21 : அந்த ஏரியில் பல்வேறு விதமான தாமரைப் பூக்கள் இருந்தன. சில பூக்கள் நீலமாகவும் சில பூக்கள் சிகப்பாகவும் இருந்தன. சில பூக்கள் இரவிலும் சில பூக்கள் காலையிலும் இந்தீவிரத் தாமரைகள் மாலையிலும் மலர்ந்தன. இவைகள் எல்லாம் சேர்ந்து அந்த ஏரியில் உள்ள தண்ணீரை மறைந்து அந்த ஏரியே இதுபோன்ற பூக்களின் சுரங்கம் போல் தோன்றச் செய்தது. இதற்கும் மேலாக அதன் கரையில் அன்னம், நாரை, சக்கரவாகம், காரண்டவம் மற்றும் பல எழில்மிக்க நீர்ப்பறவைகள் எல்லாம் திரிந்து கொண்டிருந்தன.

பதம் 4.24.22 : அந்த ஏரியின் கரையில் ஏராளமான மரங்களும், கொடிகளும் இருந்தன. மதுவுண்டு மயங்கிய தும்பிஇன வண்டுகள் ரீங்காரமிட்டும் பறந்து கொண்டிருந்தன. இவ்வண்டுகளின் ஒலியினால் மரங்கள் எல்லாம் மகிழ்ச்சியுற்றன போல் காட்சியளித்தன. தாமரை மலர்களிலுள்ள மகரந்தத்துகள் காற்றிலே கலந்து எங்கும் பரவின. இந்த எழில் கோலங்கள் எல்லாம் இணைந்து ஒரு விழாக்காலச் சூழ்நிலையைத் தோற்றுவித்தன.

பதம் 4.24.23 : அரசனின் மைந்தர்கள் மத்தள ஓசை முழவோசை மற்றும் ஒழுங்கான இனிய சங்கீத ஒலி இவையெல்லாம் கேட்டு மிகவும் வியப்படைந்தனர்.

பதங்கள் 4.24.24 – 4.24.25 : தேவர்களின் தலைவரான சிவபெருமான் தன் துணைவர்கள் சூழ தண்ணீரினின்று எழுந்து வருவரைக் காணும் நல்லதிர்ஷ்டத்தினைப் பிரசேதர்கள் பெற்றனர். அவர் உடல் வண்ணம் உருக்கிவார்த்த பொன்னின் நிறமாகவும், கண்டம் நீல நிறமாகவும் இருக்க, அவர் மூன்று விழிகளைக் கொண்டவராக இருந்தார், அவை மூன்றும் தன் பக்தர்களைக் கருணையுடன் நோக்கின. பல்வேறு இசைக்கலைஞர்கள், இசைக்கருவிகளை மீட்டி அவர் புகழைப்பாடிக் கொண்டு உடன் வந்தனர். சிவபெருமானைக் கண்டவுடன் பிரசேதர்கள் மிகவும் வியப்பெய்தி அவரது தாமரைத் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி தங்கள் மரியாதையினைத் தெரிவித்தனர்.

பதம் 4.24.26 : சிவபெருமான் பொதுவாகப் புனிதர்களையும், உயர் தன்மை கொண்டோர்களையும் காப்பவர் ஆதலினால் பிரசேதர்களின் மீது அவர் மிகவும் மகிழ்ச்சி கொண்டார். இளவரசர்களின் மீது கொண்ட மகிழ்ச்சியில் அவர் பின்வருமாறு பேசலானார்.

பதம் 4.24.27 : சிவபெருமான் கூறினார்: நீங்கள் எல்லோரும் மன்னர் பிராசீனபர்ஹியின் மைந்தர்கள், உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். நீங்கள் எல்லோரும் எதற்காகப் போய்க் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை நானும் அறிவேன், உங்கள் மீது கொண்ட கருணையினால் உங்கள் கண்களுக்கு நான் காட்சியளிக்கின்றேன்.

பதம் 4.24.28 : சிவபெருமான் தொடர்ந்து கூறினார்: ஜட இயற்கை மற்றும் உயிர்வாழிகள் அனைத்தையும் ஆட்டுவிக்கும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரைச் சரண்புகும் ஒருவன் எனது அன்பிற்கும் உண்மையில் பாத்திரமானவனாகின்றான்.

பதம் 4.24.29 : நூறு பிறவிகளில் தன்னுடைய சுதர்மத்தை எவன் ஒழுங்காக நிறைவேற்றுகின்றானோ அவன் பிரம்மதேவனின் பதவியை அடைகிறான். அதனிலும் தகுதிமிக்குடையவனாக மாறும் பொழுது அவன் சிவபெருமானை அடைகிறான். பகவான் கிருஷ்ணன் அல்லது விஷ்ணுவை மாசில்லாதப் பக்தித் தொண்டின் மூலம் சரண்புகுவோன் உடனடியாக தெய்வீக உலகை அடைகிறான். சிவபெருமானும் பிற தேவர்களும் இப்பௌதீக உலக அழிவிற்குப் பின்னரே இதுபோன்ற தெய்வீக உலகை அடைவர்.

பதம் 4.24.30 : நீங்கள் எல்லோரும் பகவானின் பக்தர்கள். ஆதலினால் முழுமுதற் கடவுளைப் போன்று நீங்களும் மதிக்கத்தக்கவர்களே என்று நான் பாராட்டுகின்றேன். இவ்வாறுதான் பக்தர்களும் எனக்கு மரியாதை செய்கின்றனர், நானும் அவர்களிடம் அன்பு பூண்டிருக்கிறேன். இவ்வாறு என்னைப் போல் பக்தர்கள் மீது அன்புகொண்டவர் வேறு எவரும் இருக்க முடியாது.

பதம் 4.24.31 : நான் இப்பொழுது ஒதப்போகும் மந்திரம் உன்னதமானது, தூயது மற்றும் மங்கலமானது என்பது மட்டுமல்ல, தனது வாழ்க்கையின் இறுதி லட்சியத்தினை அடைய வேண்டும், என்று விரும்புபவனுக்குரிய உயர்ந்த பிரார்த்தனையுமாகும். நான் இதனை ஓதும்பொழுது, அருள்கூர்ந்து நீங்கள் எல்லோரும் கவனத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் கேட்பீராக!

பதம் 4.24.32 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: மன்னரின் மைந்தர்கள் தன் முன்னே கூப்பிய கரங்களுடன் நிற்க, அவர்களிடம், பகவான் நாராயணரின் சிறந்த பக்தரும், அளவற்ற கருணையும், தன்னிகரற்றவருமான சிவபெருமான் தொடர்ந்து கூறினார்.

பதம் 4.24.33 : சிவபெருமான், முழுமுதற் கடவுளுக்கு, கீழ்வரும் பிரார்த்தனையினைச் சமர்ப்பித்தார் ஓ, முழுமுதற் கடவுளே எல்லாப் புகழும் உமக்கே ஆகுக. தன்னுணர்வு பெற்ற எல்லோருக்கும் நீர் மங்கலமானவராக விளங்குவது போல் எனக்கும் விளங்குவீராக. நீர் அருளிய அறிவுரைகளின் தன்மையினாலேயே நீர் வணங்கப்படக்கூடியவர். நீரே பரமாத்மா ஆதலினால் எனது வந்தனங்களை பரமாத்மாவாக விளங்கும் உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 4.24.34 : என் பகவானே, நீரே உமது நாபியிலிருந்து வந்த தாமரை மலரின் வன்மையினால் படைப்பிற்கே மூலாதாரமாக விளங்குகின்றீர், நீரே புலன்களையும், புலனுகர்ச்சிப் பொருட்களையும் கட்டுப்படுத்தும் உயர்ந்தவர் ஆவீர், நீரே எங்கும் எதிலும் வியாபித்திருக்கும் வாசுதேவர் ஆவீர், நீர் மிக்க அமைதியுடையவர். நீர் சுயமாகப் பிரகாசிக்கும் ஜோதி உடையவர்! ஆதலினால் நீர் ஆறுவகையான மாற்றங்களுக்கு ஆளாவதில்லை.

பதம் 4.24.35 : எனது அன்பான பகவானே, நீரே சூட்சுமப் பொருட்களுக்கு மூலகாரணமாக விளங்குபவர், எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்தவும், பிரிக்கவும் செய்கின்ற நாயகரும் நிரே, தன்னிகரற்ற மூர்த்தியான சங்கர்ஷ்ணராகவும், ஞானங்களுக்கெல்லாம் நாயக மூர்த்தியாகவும் விளங்கும் பிரத்யும்னரும் நீரே. ஆதலினால் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு உரித்தாக்குகின்றேன்.

பதம் 4.24.36 : எனது அன்பிற்குரிய பகவானே, எல்லாவற்றையும் இயக்கும் பரமமூர்த்தியாக விளங்கும் அநிருத்தரே, நீரே மனம் மற்றும் புலன்களின் நாயகராக இருக்கின்றீர்! ஆகையினால் எனது வணக்கங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்கின்றேன். நீரே உமது வாயிலிருந்து வரும் செந்தழலின் மூலம் இவ்வுலகை அழிக்கின்ற சக்திமிக்கவராக இருப்பதினால் அனந்தராகவும், சங்கர்ஷணராகவும் அறியப்படுகின்றீர்.

பதம் 4.24.37 : எனது பகவானே, ஓ, அநிருத்தரே, சொர்க்கத்தின் கதவுகளும் விடுதலையின் கதவுகளும் திறப்பதற்கு நீரே அதிகாரியாக இருக்கின்றீர். நீரே உயிரின் தூய இருதயத்தில் எப்போதும் வீற்றிருக்கின்றீர். ஆதலினால் எனது வணக்கங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன். நீரே பொன்னைப் போன்ற வீர்யத்தை (சுக்கிலம்) உடையவராக விளங்குகின்றீர்; சாதுர் ஹோத்ரம் எனத் தொடங்கும் வேத வேள்விகளுக்கு நீரே நெருப்பு வடிவில் உதவுகின்றீர். ஆகையினால் உமக்கு எனது வந்தனங்களைத் தெரிவிக்கின்றேன்.

பதம் 4.24.38 : எனது பகவானே, நீரே பித்ருலோகத்தையும் படைத்தீர் எல்லாத் தேவர்களையும் படைத்தீர். நீரே சந்திரனின் தன்னேரில்லாத் தெய்வமாகவும், மூன்று வேதங்களின் தலைவராகவும் விளங்குகின்றீர். நீரே உயிர்வாழிகள் அனைத்தின் திருப்திக்கும் மூல ஆதாரமாக விளங்குகின்றபடியால் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை உமக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

பதம் 4.24.39 : எனது அன்பிற்கினிய பகவானே, நீரே எல்லா உயிர்களையும் தம்முள் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் விஸ்வரூப வடிவமாக விளங்குகின்றீர். நீரே மூன்று லோகங்களையும் காத்து அவற்றிலுள்ள உயிர்களின் மனம், காயம், புலன்கள் மற்றும் உயிர்க்காற்று போன்றவற்றையும் காக்கின்றீர். ஆகையினால் உமக்கு எனது மரியாதையுடன் கூடிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 4.24.40 : எனது அன்பிற்குரிய இறைவனே, உமது உன்னதமான ஒலி அதிர்வுகளின் விரிவின் மூலம் எல்லாவற்றிலும் இருக்கும் உண்மையாகப் பொருள் என்னவென்று விளக்குகின்றீர், நீரே உள்ளும் புறமும் வியாபித்திருக்கும் வானமாக விளங்குகின்றீர், பௌதீக உலகினுள்ளும் அதற்கு மேலும் செய்யப்படும் புண்ணியச் செயல்களின் இறுதி இலட்சியமாக நீரே இருக்கின்றீர். ஆகையினால் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை உமக்கு நான் சமர்ப்பிக்கின்றேன்.

பதம் 4.24.41 : எனதன்பான இறைவனே நீரே புண்ணியச் செயல்களின் பலனைக் காண்பவரக இருக்கின்றீர். நாட்டமும் நீரே நாடாமையும் நீரே. அவர்கள் செய்யும் வினையின் பலனும் நீரே. அதர்மத்தின் காரணமாக உண்டாகும் துன்ப வாழ்விற்கும் நீரே காரணமாவீர். அதனால்தான் நீர் மரண தேவனாகவும் விளங்குகின்றீர் உமக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களைச் சமர்ப்பிக்கின்றேன்.

பதம் 4.24.42 : எனது அன்பான இறைவனே, வரங்கள் எல்லாம் அருள்பவர்களின் நீர் ஒருவரே மிகவுயர்ந்தவர்; ஆனந்திப்பவர் எல்லோரினும் நீரே மிகச்சிறந்த பரமானந்தரும் பழமையானவரும் ஆவீர். அறிவு, மனம், உண்மை போன்ற உலகிலுள்ள எல்லா சூச்சுமப் பொருள்களின் நாயகராக நீரே விளங்குகின்றீர், பகவான் கிருஷ்ணரே நீரே காரணங்கள் எல்லாவற்றிற்கும் மூல காரணம். நீரே சமய அறநெறிகள் அனைத்திலும் மிகச்சிறந்தவர், மிகவுயர்ந்த மனம் உடையவர். உமது ஞானம் எந்நிலையிலும் ஒருபோதும் தடுத்து நிறுத்தப்படாதது ஆகும். ஆகையினால் நான் மீண்டும் மீண்டும் எனது வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 4.24.43 : எம்பெருமானே, கர்மீ, கர்மவினை, கர்மவினையின் பயன் இவற்றின் பரம ஆளுநர் நீரே ஆவீர். ஆகையினால் நீரே மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றையும் கட்டுப்படுத்துபவர் ஆவீர். ருத்திரரான நீரே ஆணவத்தை அடக்கும் உயர்ந்தவராக விளங்குகின்றீர். அறிவின் ஆதாரமாகவும் வேதக்கட்டளைகளின் செயல்களாகவும் நீரே இருக்கின்றீர்.

பதம் 4.24.44 : எனது அன்பான இறைவனே, உமது அன்பிற் சிறந்த பக்தர்கள் உம்மை எந்த வடிவில் வணங்குகின்றனரோ அவ்வடிவத்தினையே காண நானும் விழைகிறேன். உமக்குப் பல ரூபங்கள் உண்டு. இருந்தாலும் உமது பக்தர்கள் விரும்பும் சிறப்பான வடிவினையேக் காண நானும் விரும்புகிறேன். என் மீது கருணை கொண்டு அவ்வடிவினைக் காட்டி அருள் செய்வீராக, ஏனென்றால் பக்தர்கள் வணங்கும் அவ்வடிவமே புலன்களின் தேவைகளை நிறைவாகத் திருப்தி செய்யக்கூடியது.

பதங்கள் 4.24.45 -4.24.46 : பகவானின் எழில் தோற்றம் கார்மேக வண்ணம் போன்றது. மழைச் சரங்களின் மினுமினுப்பை அவர் உடல் அழகினும் காணலாம். உண்மையில் அவர் அழகுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்த பேரழகு உடையவர். பகவான், நான்கு கரத்துடனும், கற்பனையிலும் காணவொண்ணா முக எழிலும், தாமரை விழிகளும், கூரிய நாசியும், மனதினை மயங்கச் செய்யும் புன்னகையும், எழில் நுதலும், சமமாக அணி செய்யப்பட்ட இருசெவிகளும் உடையவராக விளங்குகின்றார்.

பதங்கள் 4.24.47 – 4.24.48 : பகவான் தனது இதழ்விரிந்த கருணைமிகு புன்னகையினாலும், பக்தர்களைப் பார்க்கும் ஓரவிழிப் பார்வையினாலும் உயர் நேர்த்தியான அழகுடையவராகத் திகழ்கின்றார். அவரது கார்குழல் சுருள் சுருளாகவும், காற்றில் மிதக்கும் அவரது ஆடைகள் தாமரை மலரில் இருந்து பறக்கும் மகரந்த தூளைப் போன்றும் காட்சியளிக்கும். அவரது ஒளிரும் குண்டலங்கள், தகத்தகாயக் கிரீடம், வளையல்கள், மாலை, சலங்கை, ஒட்டியாணம் (மேகலை) முதலியவற்றுடன் பல்வேறு அணிகளும் அவற்றோடு, சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலர் எல்லாம் சேர்ந்து அவர் மார்பில் தவழும் கௌத்துப மாலையின் இயற்கை அழகினை மேலும் அதிகரிக்கும்.

பதம் 4.24.49 : பகவானின் தடந்தோள்கள் சிங்கத்தினுடையவை போன்றிருக்கும். இத்தோள்களின் மீது எப்போதும் மின்னும் மாலைகள், கழுத்தணிகள் மற்றும் வீரர்கள் அணியும் சின்னங்கள் இருக்கும். இவற்றைத் தவிர கௌத்துப மணிமாலையின் எழிலும் உண்டு, அவரது மேக வண்ண மார்பில் ஸ்ரீவத்ஸ என்னும் கோடுகள் உண்டு, அவை அதிர்ஷ்ட தேவதையின் சின்னங்களாகும். இக்கோடுகளின் பளபளப்பு தங்கத்தைச் சோதிக்க உரைகல்லில் தேய்க்கவரும் பொற்கோடுகளைத் தோற்கடிக்கும். உண்மையில் அக்கோடுகள் உரைகல்லில் உள்ள பொற்கோடுகளை நிச்சயம் தோற்கடிக்கும்.

பதம் 4.24.50 : பகவானின் வயிறு மூன்று அலையலையான வரிகளுடன் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். அவரது அடிவயிறு ஆலிலை போன்றிருக்கும். அவர் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும்பொழுது ஏற்படும் அசைவினால் அவர் வயிற்றின் மீதுள்ள வரி அலைகள் பார்ப்பதற்கு மிக மிக அழகானதாக இருக்கும். பகவானின் ஆழமான உந்திச்சுழியின் தோற்றம் இப்பிரபஞ்சம் முழுதுமே அதனின்று வெளியே வந்து மீண்டும் அதனுள்ளேயே செல்ல விரும்புவது போல் தோன்றும்.

பதம் 4.24.51 : பகவானின் இடுப்பின் கீழ்ப்பகுதி கருமையானதாகவும் மஞ்சள் நிற ஆடையினால் மறைக்கப்பட்டும் இருக்கும். அதிலுள்ள இடுப்புவாரில் தங்கப் பூவேலைகள் செய்யப்பட்டிருக்கும். அவரது சமச்சீரான தாமரைத் திருவடிகள், பின்காலின் சதைப்பகுதி, தொடைகள் மற்றும் கால்களிலுள்ள மூட்டுக்கள் எல்லாம் விசேஷ அழகுடையனவாகும். அவரது முழு உடலும் கட்டழகு மிக்கதாகத் தோன்றும்.

பதம் 4.24.52 : எனது அன்பிற்குரிய இறைவனே! கூதிர்காலத்தில் விரிந்து மலரும் செந்தாமரை மலர்களைப் போன்று உமது இரு திருவடிகளும் காட்சியளிக்கின்றன. உமது திருவடித் தாமரையின் விரல்களிலுள்ள நகங்கள் உயர்ந்த ஜோதிகளைப்போல் ஒளிர்வனவாகும். அவ்வொளி பந்தப்பட்ட ஆத்மாக்களின் மனதிலுள்ள இருட்டை விரட்டியடிக்கும் தன்மை கொண்டதாகும். எனது அன்பான இறைவனே! ஒரு பக்தனின் மனதிலுள்ள எல்லாவிதமான இருளையும் எப்போதும் விரட்டும் உமது வடிவினை அருள்கூர்ந்து எனக்குக் காட்டுவீராக. அனைவரின் உயர்ந்த ஆன்மீகக் குருவாக விளங்குபவர் நீரே; ஆகையினால் அறியாமை இருளினால் மூடப்பட்டிருக்கும் அனைத்துப் பத்தப்பட்ட ஆத்மாக்களுக்கும் ஆன்மீக குருவாக விளங்கும் நீரே ஞான ஒளியேற்றுவீராக.

பதம் 4.24.53 : போற்றுதற்குரிய இறைவனே, தனது வாழ்வினைத் தூய்மை செய்ய விரும்புவோர் மேலே கூறியுள்ளவாறு உமது திருவடித் தாமரைகளின் தியானத்தில் எப்போதும் ஈடுபட்டிருக்க வேண்டும். தனது சுதர்மத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று ஆழ்ந்த விருப்பமுடையோரும், அச்சத்தினின்று விடுதலை பெற விரும்புவோரும் பக்தியோகத்தினைப் பின்பற்ற வேண்டும்.

பதம் 4.24.54 : எனது அன்பான இறைவனே, சொர்க்கத்தினை ஆளும் மன்னனும் தனது வாழ்வின் இறுது லட்சியமான பக்தித் தொண்டினையே அடைய விரும்புகிறான். உம்மோடு ஒன்றாய் இணைந்திருப்போர்க்கு (அஹம் ப்ரஹ்மாஸ்மி) உயர்ந்த அடையும் இடமாகவும் நீரே இருக்கின்றீர். இருந்தாலும் அவர்கள் உம்மை அடைவது அத்துணை எளிதன்று. ஆனாலும் ஒரு பக்தன் உம்மை மிக எளிதாக அடைந்து விடுகிறான்.

பதம் 4.24.55 : எனது அன்பிற்குரிய இறைவனே, தூய பக்தித் தொண்டானது விடுதலை பெற்றோர்கள் கூட செய்வதற்கு அரிதானது, ஆனாலும் பக்தித் தொண்டு ஒன்றே உம்மைத் திருப்திப்படுத்துகிறது. வாழ்க்கையில் முழுநிறைவு பெறவேண்டும் என்று உண்மையில் நினைப்பவர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு வேறு எந்த வழியை நாடமுடியும்?

பதம் 4.24.56 : அவரது புருவங்களின் சிறு அசைவிலேயே கண்ணுக்குப் புலனாகாத கால தேவன் இப்பிரபஞ்சம் முழுவதையும் வென்றழிப்பான். அவ்வெல்வதற்கரியக் கால தேவனும் உமது திருவடித் தாமரைகளைச் சரண் புகுந்த பக்தர்களை அணுகுவதற்கும் அஞ்சுவான்.

பதம் 4.24.57 : ஒரு நொடியில் துளியளவு நேரம் ஒரு பக்தனுடன் ஒருவன் தொடர்பு கொண்டால், கர்மம் மற்றும் ஞானத்தின் கவர்ச்சிக்கு அவன் ஆளாவதில்லை. இவ்வாறிருக்க, ஜனனமரண துன்பத்திற்கு ஆளாகும் தேவர்களின் வரங்களை அவன் ஏன் நாடப் போகிறான்?

பதம் 4.24.58 : எனது அன்பிற்குரிய இறைவனே! உமது திருவடித் தாமரைகளே எல்லா மங்கலப் பொருட்களுக்கும் மூலாதாரமாக விளங்குகின்றன. அவைகளே பாவத்தின் அழுக்குகளை அழிக்கவும் செய்கின்றன. ஆகையினால் பகவானே, உமது திருவடித் தாமரைகளைத் தொழுது முற்றிலும் தூய்மையடைந்தவர்களும், பந்தப்பட்ட ஆத்மாக்களின் மீது கருணையுடையவர்களுமான உமது பக்தர்களின் தொடர்பு எனக்குக் கிடைக்குமாறு அருள்புரிதல் வேண்டும். இதுபோன்ற பக்தர்களுடன் தொடர்புகொள்வதற்கு என்னை அனுமதிப்பதே எனக்கு நீர் அருளும் சிறந்த வரமாகக் கருதுகிறேன்.

பதம் 4.24.59 : பக்திதேவியின் அருளாலும், பக்தித்தொண்டினாலும், இதயத்தை முற்றிலும் தூய்மை செய்து கொண்ட பக்தன், இருட் கிணறு தனது போன்றிருக்கும் புறச்சக்தியினால் குழப்பமடைவதில்லை. இவ்வாறு ஜட அழுக்குகள் முழுவதையும் நீங்கித் தூய்மையடைந்த பக்தன் உமது நாமம், வடிவம், புகழ், செயல்கள் போன்றவற்றை மிக மகிழ்ச்சியுடன் அறிந்து கொள்ளும் திறன் பெறுகிறான்.

பதம் 4.24.60 : எனது அன்பிற்குரிய பகவானே, வானத்தைப் போன்றும், சூரிய ஒளியைப் போன்றும் அருவமான பிரம்மம் எங்கும் பரவி இருக்கிறது. எங்கும் வியாபித்திருப்பதும் தன்னுள் இப்பிரபஞ்சத்தைக் கொண்டிருப்பதுமான அந்த அருவப் பிரம்மம் நீரே ஆவீர்.

பதம் 4.24.61 : எனது அன்பிற்குரிய இறைவனே, உம்மிடம் பல்வகை ஆற்றல்கள் இருக்கின்றன; இவ்வாற்றல்களை நீர் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி இருக்கிறீர். இதுபோன்ற ஆற்றல்களினால் ‘இவ்வுலகைப் படைத்தீர். இது நிரந்தரமானது போன்று காத்தும் இறுதியில் அழிக்கவும் செய்கிறீர். இதுபோன்ற மாற்றங்களினாலும் மாறுபாடுகளினாலும் நீர் பாதிப்படைவதில்லை. ஆனால் உயிர்கள் பாதிப்படைகின்றன. ஆகையினால் அவை இவ்வியல் உலகத்தோற்றத்தினை உம்மிடமிருந்து வேறாகவும், பிரித்தும் காண்கின்றன. என் இறைவனே, நீர் எப்போதும் சுதந்திரமானவர். இவ்வுண்மையினை நான் நன்கு அறிவேன்.

பதம் 4.24.62 : எனது அன்பிற்குரிய இறைவனே, உமது உலகளாவியத் தோற்றமானது புலன்; மனம், புத்தி, ஆணவம் (இது பௌதீகமானது) மற்றும் உமது பகுதி விரிவான பரமாத்மா, எல்லாவற்றையும் இயக்குபவர் என்ற ஐந்து மூலப் பொருள்களினால் ஆனது. பக்தரல்லாத யோகிகள் கர்ம யோகி மற்றும் ஞான யோகி போன்றோர் தத்தமக்குரிய இடத்திற்கேற்ற செயல்களினால் உம்மை வணங்குகின்றனர். வேதங்கள் மற்றும் அவற்றின் துணைமுடிவுகளான சாத்திரங்கள் போன்றவை நீரே வணங்கத்தக்கவர் என்று கூறுகின்றன. இதுவே எல்லா வேதங்களின் முடிவானக் கூற்றாகும்.

பதம் 4.24.63 : அன்பிற்குரிய பகவானே, நீரே பரமபுருஷர், காரணங்கள் எல்லாவற்றிற்கும் மூல காரணர். பௌதீக உலகைப் படைப்பதற்கு முன்னால் உமது பௌதீகச் சக்தியானது துயில் கொண்டிருந்தது. உமது பௌதீகச் சக்தியானது கிளர்ச்சியுற்றப் பொழுது மூன்று குணங்களான சத்துவ, ரஜோ, தமோ குணங்கள் செயல்படத் தொடங்கின; அதன் விளைவாக ஆணவம், வான், காற்று, தீ, நீர், நிலம் மற்றும் பல்வேறு தேவர்களும், மகாமுனிவர்களும் தோன்றலாயினர். இவ்வாறு பௌதீக உலகம் படைக்கப்பட்டது.

பதம் 4.24.64 : உமது சுய ஆற்றலினால் படைப்பு நிகழ்ந்த பின், நீர் அப்படைப்பிற்குள்ளேயே நான்கு வகை வடிவங்களில் நுழைந்தீர். உயிர்களின் உள்ளங்களில் அமர்ந்து கொண்டு, நீர் அவர்களை அறிந்து கொண்டதோடு அவர்கள் தம் புலன்களினால் எவ்வாறு மகிழ்கின்றனர் என்பதையும் அறிகின்றீர். பௌதீகப் படைப்பின் மகிழ்ச்சி எனப்படுவது தேனடைக்குள் தேனைச் சேமித்து அத்தேனைத் தேனீக்கள் அனுபவித்து மகிழ்வதைப் போன்றதாகும்.

பதம் 4.24.65 : எனது அன்பிற்கினியவரே, உமது முழு அதிகாரமும் நேரடியாக உணர்ந்து கொள்ளக் கூடியதல்ல, ஆனால் யுக இறுதியில் இவ்வுலகம் அழிபடுகின்ற பொழுது அதன் செயல்களில் இருந்து ஒருவரால் யூகித்துக் கொள்ள முடியும். காலத்தின் வேகம் மிகவும் வலிமையுடையது. எவ்வாறு ஒரு விலங்கு மற்றொரு விலங்கினைக் கொன்று தின்கிறதோ அதுபோல் இவ்வுலகில் உள்ள அனைத்தும் சிலவற்றால் அழிக்கப்படும். காற்று எவ்வாறு மேகங்களைச் சிதறடிக்கிறதோ அதுபோல் காலம் எல்லாவற்றையும் சிதறடிக்கும்.

பதம் 4.24.66 : எனது அன்பிற்குரிய இறைவனே, பௌதீக உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும், தமது இச்சைகளை நிறைவேற்ற இதைச் செய்யலாமா அல்லது அதைச் செய்யலாமா என்று திட்டமிடுவதிலேயே எப்போதும் காலத்தைக் கழிக்கின்றன. இது அடங்கா ஆசையினாலேயே விளைகிறது. பௌதீக இன்பங்கள் மீதுள்ள பேரவா உயிர்களிடம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் பகவானே! நீர் எப்போதும் எச்சரிக்கையுடன் இருந்து எவ்வாறு பாம்பு எலியினை கண்மூடிக் கண்திறப்பதற்குள், பிடித்து விழுங்கி விடுகிறதோ அதுபோல் உரிய காலத்தில் பேரவா கொண்ட உயிர்களை எடுத்துக் கொள்கிறீர்.

பதம் 4.24.67 : எனது அன்பான இறைவனே, கற்றவனாயிருந்தாலும் உம்மை வணங்காதவன் வாழ்க்கைப் பாழாகிறது. இதை அறிந்தால் அவன் ஏன் உமது திருவடித் தாமரைகளை வணங்காதிருக்கப் போகிறான்? எமது தந்தையும் ஆன்மீக குருவுமான பிரம்மதேவனே உம்மை எந்தவிதத் தயக்கமுமின்றி வழிபட்டவர் ஆவார். அவரையே பதினான்கு மனுக்களும் பின்பற்றினர்.

பதம் 4.24.68 : எனது அன்பிற்குரிய பகவானே, கற்றறிந்த அறிஞர்கள் நீரே பரப்பிரம்மம் என்றும் பரமாத்மா என்றும் நன்கறிவர். இறுதியில் எல்லாவற்றையும் அழிப்பவராக ருத்திரர் விளங்குவதால் அவரைக்கண்டு இவ்வுலகம் முழுதுமே அஞ்சினாலும், கல்வியில் சிறந்தவர்கள் அஞ்சாது அடையும் இடமாக நீரே விளங்குகின்றீர்!

பதம் 4.24.69 : எனது அன்பிற்குரிய அரச புத்திரர்களே, நீங்கள் தூய்மையான உள்ளத்துடன் அரசனுக்குரிய காரியங்களை ஆற்றுவீராக! பகவானின் திருவடித்தாமரைகளின் மீது மனதை வைத்து இம்மந்திரத்தினை ஜெபிப்பீராக. பகவான் மகிழ்ந்தார் என்றால் மங்கலங்களும் உண்டாகும்.

பதம் 4.24.70 : ஆகையினால் மன்னன் மைந்தர்களே, முழுமுதற் கடவுளை ஹரி என்பவர் எல்லோர் உள்ளங்களிலும் வீற்றிருக்கின்றார். அவர் உங்கள் உள்ளங்களிலும் எப்போதும் இருக்கிறார். ஆகையினால் பகவானின் புகழினை ஜெபித்து எப்போதும் அவரைத் தியானிப்பீர்களாக.

பதம் 4.24.71 : அன்பான இளவரசர்களே! பிரார்த்தனையின் மூலம் பகவானின் புனித நாமத்தைச் ஜெபிக்கும் யோகமுறையினை உங்களுக்கு விளக்கியிருக்கிறேன். நீங்கள் எல்லோரும் இம்முக்கியமான ஸ்தோத்திரத்தினை உங்கள் மனதிற் கொண்டு மாபெரும் முனிவர்களாக வருவதற்கு சபதம் மேற்கொள்வீராக. மகாமுனிவர்களைப் போல் மௌனத்தில் ஆழ்ந்து பயபக்தியுடன் முழுக்கவனம் கொடுத்து இம்முறையினை பயிற்சி செய்வீராக.

பதம் 4.24.72 : எல்லாவற்றையும் படைத்தவரான நான்முகப் பிரம்மனாலே இப்பிரார்த்தனை முதலில் நமக்கு அருளப்பட்டது. பிருகுவின் தலைமையின் கீழுள்ள படைப்பாளர்கள் படைக்க வேண்டும் என்று விரும்பியதினால் அவர்களுக்கும் இது அறிவுறுத்தப்பட்டது.

பதம் 4.24.73 : இவ்வாறு அனைத்துப் பிரஜாபதிகளும் பிரம்மதேவனால் படைப்பதற்குக் கட்டளையிடப்பட்ட பொழுது, நாங்கள் பகவானைப் புகழ்ந்து பாடியதனால் எல்லா அறியாமைகளில் இருந்தும் முற்றிலும் விடுதலை பெற்றோம். இவ்வாறு பல்வேறு உயிர்களைப் படைப்பதற்குரிய திறமையை நாங்கள் பெற்றோம்.

பதம் 4.24.74 : பகவான் கிருஷ்ணரிடம் எப்போதும் தன் மனதை வைத்து முழு ஈடுபாட்டுடனும் பயபக்தியுடனும் இந்த ஸ்தோத்திரத்தினை (பிரார்த்தனை) ஜெபிப்பவன் எந்தவித தாமதமுமின்றி வாழ்வில் மிக உயர்ந்த நிறைவைப் பெறுகிறான்.

பதம் 4.24.75 : இப்பௌதீக உலகில் அடைவதற்குரியவை எத்துணையோ இருக்கின்றன. அவற்றுள் எல்லாம் தலையானது ஞானமேயாகும். ஏனெனில் ஞானமெனும் படகினால் தான் அறியாமைக் கடலினை ஒருவன் கடக்கமுடியும். இல்லையெனில் அக்கடல் கடப்பதற்கரியதாகும்.

பதம் 4.24.76 : முழுமுதற் கடவுளை பக்தித் தொண்டின் மூலம் வழிபடுவது ஒருவனுக்குக் கடினமானதாக இருந்தால் அவன் என்னால் இயற்றிப் பாடப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தினை (பிரார்த்தனையினை) படித்தானாயின் முழுமுதற் கடவுளின் கருணைக்கு விரைவில் பாத்திரமாவான்.

பதம் 4.24.77 : மங்கலமான வரங்கள் அனைத்திலும் உயர்ந்த நேசிப்பிற்குரியவராக முழுமுதற் கடவுளே விளங்குகிறார். நான் பாடிய பாடலைப் பாடும் மனிதன் முழுமுதற் கடவுளை மகிழ்ச்சிப்படுத்துகிறான். இவ்வாறு பகவானின் பக்தித் தொண்டில் நிலைநிற்கும் பக்தன் தான் விரும்பும் அனைத்தையும் பகவானிடமிருந்து பெறுகிறான்.

பதம் 4.24.78 : ஒரு பக்தன் அதிகாலையில் எழுந்து கூப்பியகரங்களுடன் சிவபெருமான் பாடியப் பிரார்த்தனைப் பாடலை ஓதியும், அதனைப் பிறர் கேட்கும்படியும் செய்தானென்றால் அவன் பலன்தரும் செயல்களின் எல்லாக் கட்டுக்களில் இருந்தும் உறுதியாக விடுதலை பெறுகிறான்.

பதம் 4.24.79 : எனது அன்பிற்குரிய அரச புத்திரர்களே, நான் உங்களுக்கு இசைத்த இப்பிரார்த்தனையானது உண்மையில் பரமாத்மாவான முழுமுதற் கடவுளை மகிழ்ச்சியடையச் செய்வதற்கே இசைக்கப்பட்டது. உங்களுக்கு எனது அறிவுரை, பெருந்தவங்களுக்கு ஈடான இப்பிரார்த்தனைகளை நீங்களும் இசைக்க வேண்டும் என்பதே. இவ்வழியில் நீங்கள் முதிர்ச்சி பெற்றால் உங்கள் வாழ்க்கை வெற்றியடைவதோடு நீங்கள் அடைய விரும்பும் எல்லாவற்றையும் தோல்வியின்றி உறுதியாக அடையலாம்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare