அத்தியாயம் – 22
பிருது மகாராஜாவை நான்கு குமாரர்கள் சந்தித்தல்
பதம் 4.22.1
மைத்ரேய உவாச
ஜனேஷீ ப்ரக்ருணாத்ஸ்வ ஏவம் ப்ருதும் ப்ருதுவ-விக்ரமம்
தத்ரோபஜக்முர் முனயஸ் சத்வார: ஸீர்ய-வரசஸ:

மைத்ரேய உவாச:—மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; ஜனேஷீ—குடிமக்கள்; ப்ரக்ருணத்ஷீ—பிராத்திக்கும் பொழுது; ஏவம்—இவ்வாறு; ப்ருதும்—மகாராஜா பிருதுவிற்கு; ப்ருதுவ—உயர்ந்த; விக்ரமம்—சக்திவாய்ந்த; தத்ர—அங்கே; உபஜக்மு:—வந்தடைந்தனர்; முனய:—குமாரர்கள்; சர்வார:—நான்கு; ஸீர்ய—சூரியனைப் போன்று; வர்சஸ:—ஒளி.

மகாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: குடிமக்கள் இவ்வாறு மிகவும் ஆற்றல் பெற்ற மன்னரான பிருதுவைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த பொழுது செங்கதிரோனின் தங்கநிறம் அங்குமெங்கும் ஒளிவீச நான்கு குமாரர்களும் அந்த இடத்திற்கு வந்தனர்.

பதம் 4.22.2
தாம்ஸ் து ஸித்தேஸ்வரான் ராஜா வ்யோமனோ ‘வதரதோ ‘ர்ச்சிஷா
லோகான் அபாபான் குர்வாணான் ஸானுகோ ‘சஷ்ட வக்ஷிதான்

தான்—அவர்கள்; து—ஆனால்; ஸித்த-ஈஸ்வரான்—எல்லா யோகஸித்திகளிலும் தேர்ந்தவர்கள்; ராஜா—மன்னர்; வ்யோம்ன:—வானத்திலிருந்து; அவதரத:—அவதரிக்கின்ற பொழுது; அர்ச்சிஷா—அவர்களது கூசச்செய்யும் ஒளியினால்; லோகான்—எல்லா உலகங்களும்; அபாபான்—பாவம் நீங்கி; குர்வானான்—செய்கின்றபோது; ஸ அனுக:—அவர்தம் துணைவர்களுடன்; அசஷ்ட—அறிந்து கொண்டனர்; லக்ஷிதான்—அவர்களைப் பார்த்ததினால்.

வீசுகின்ற ஒளியுடன், அனைத்து யோகஸித்திகளின் தலைவர்களான நான்கு குமாரர்களையும் கண்டவுடன், மன்னரும் அவரைச் சேர்ந்தவர்களும் இவர்கள் நால்வரும் வானின்று அவதரித்து வந்தவர்கள் என்பதைப் புரிந்து கொண்டனர்.

பதம் 4.22.3
தத்-தர்ஸனோத்கதான் ப்ராணான் ப்ரத்யாதித்ஸீர் இவோத்தித:
ஸ-ஸதஸ்யானுகோ வைன்ய இந்த்ரியேஸோ குணான் இவ

தத்—அவர்; தர்ஸன—கண்டு; உத்கதான்—மிகுந்த ஆர்வம் உடையவராய்; ப்ராணான்—வாழ்க்கை; ப்ரத்யாதித்ஸீ:—அமைதியுடன் போகின்ற; இவ—போல்; உத்தித:—எழுந்து; ஸ—உடன்; ஸத்ஸ்ய—துணைவர்கள் அல்லது பின்பற்றுவோர்; அனுக:—அலுவலர்களுடன்; வைன்ய:—பிருது மன்னர்; இந்த்ரிய—ஈஸ:—வாழ்கின்ற உயிர்; குணான் இவ—ஜட இயற்கையின் குணங்களினால் பாதிக்கப்பட்ட.

குமாரர்களின் வருகையினைக் கண்டதும், பிருது மகாராஜா அவர்களை வரவேற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டார். அரசரும் அவரைச் சார்ந்த அலுவலர்களும், ஒரு பந்தப்பட்ட ஆத்மாவின் புலன்கள் ஜட இயற்கையின் குணங்களினால் எத்துணை விரைவாக கவரப்படுகின்றனவோ அதுபோல் வேகமாக எழுந்தனர்.

பதம் 4.22.4
கௌரவாத் யந்த்ரித: ஸப்ய: ப்ரஸ்ரயாதை-கந்தர:
விதிவத் பூஜயாம் சக்ரே க்ருஹீதாத்யர் ஹணாஸனான்

கௌரவாத்—பெருமைகள்; யந்த்ரித:—முற்றிலும்; ஸப்ய:—உயர்ந்த நாகரீகமுடன்; ப்ரஸ்ரய—பணிவுடன்; அதை-கந்தர:—தலைதாழ்ந்து; விதி-வத்—சாத்திரங்கள் கூறுகின்ற அறிவுரையின்படி; பூஜயாம்—வணங்கினர்; சக்ரே—செய்யப்பட்டது; க்ருஹீத—ஏற்றுக் கொண்டு; அதி—உட்பட; அர்ஹண—வரவேற்பிற்குரிய முறைகள்; ஆஸனான்—அமர்வதற்குரிய இடங்கள்.

முனிவர்கள் பெருமைகளினால் உணர்ச்சிவயப்பட்டப் பிருது மகாராஜா, சாஷ்டாங்கமாக அவர்கள் முன்னே வீழ்ந்து வணங்கினார், பிறகு சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள முறைக்கேற்ப அவர்களை வரவேற்று அவர்களுக்குரிய ஆசனங்களை மன்னர் சுட்டிக்காட்டியவுடன் அவர்களும் மன்னரது வரவேற்பினை மனதார ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய இடங்களில் அமர்ந்தனர்.

பதம் 4.22.5
தத்-பாத-ஸௌச-ஸலிலைர் மார்ஜிதாலக-பந்தன:
தத்ர ஸீலவதாம் வ்ருத்தம் ஆசாரன் மானயன்னி இவ

தத்-பாத—அவர்களின் பாதகமலங்களை; ஸௌச—கழுவினார்; ஸலிலை:—தண்ணீர் கொண்டு; மார்ஜித—தெளித்தார்; அலக—தலையின்மீது; பந்தன:—கொத்து; தத்ர—அங்கே; ஸீலவதாம்—மரியாதைக்குரிய உயர்ந்தவர்கள்; வருத்தம்—நடத்தை; ஆசாரன்—பழகுகின்ற; மாணயன்—முறையினை; இவ—போல.

அதன் பின்னர் மன்னர் நீர் கொண்டு குமாரர்களின் பத்மபாதங்களைக் கழுவி அத்தீர்த்தத்தினைத் தன் தலையில் தெளித்துக் கொண்டார். மிக உயர்ந்த நிலையில் உள்ளமன்னர்கூட அம்மரியாதைக்குரியச் செயலினைச் செய்ததின் மூலம் உயர்ந்த ஆன்மீகப் பெரியவர்களை எவ்வாறு வரவேற்க வேண்டும் என்பதை எல்லோருக்கும் எடுத்துக்காட்டினார்.

பதம் 4.22.6
ஹாடகாஸன ஆஸீனான் ஸ்வ-திஷ்ண்யேஷ்வ இவ பாவகான்
ஸ்ரத்தா-ஸம்யம-ஸம்யுக்த: ப்ரீத: ப்ராஹ பவாக்ரஜான்

ஹாடக-ஆஸனே—பொன்னாலான சிம்மாசனத்தின் மீது; ஆஸீனான்—அவர்கள் அமர்ந்த பொழுது; ஸ்வ-திஷ்ண்யேஷீ—பலி பீடத்தின் மேல்; இவ—போல; பாவகான்—தீ; ஸ்ரத்தா—மரியாதை; ஸம்யம—அடக்கம்; ஸம்யுக்த:—அலங்கரிக்கப்பட்டிருக்கின்ற; ப்ரீத:—மகிழ்ந்தனர்; ப்ராஹ—சொன்னார்; பவ—சிவபெருமான்; அக்ர-ஜான்—மூத்த சகோதரர்கள்.

இந்நான்கு மகாமுனிவர்களும் சிவபெருமானுக்கு மூத்தவர்கள் ஆதலினால் அவர்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்திருந்த தோற்றமானது பலிபீடத்தில் எரிகின்ற நெருப்பினைப்போல் இருந்தது. பிருது மகாராஜா அவர்களிடத்துக் கொண்டிருந்த உயர்ந்த மரியாதை மற்றும் மதிப்பின் காரணமாக மிகவும் அடக்கத்துடன் பேசத் தொடங்கினார்.

பதம் 4.22.7
ப்ருதுர் உவாச
அஹோ ஆசரிதம கிம் மே மங்கலம் மங்கலாயனா:
யஸ்ய வோ தர்ஸனம் ஹி ஆஸீத் துர்தர்ஸானாம் ச யோகிபி:

ப்ருது: உவாச—பிருது மன்னர் கூறினார்; அஹோ—ஓ பகவானே; ஆசரிதம்—முறை; கிம்—என்ன; மே—என்னால்; மங்கலம்—மங்கலம்; மங்கல-ஆயனா:—மங்கல வடிவானவர்களே; யஸ்ய—எதனால்; வ:—உங்கள்; தர்ஸனம்—தரிசனம்; ஹி—நிச்சயம்; ஆஸீத்—சாத்தியமானது; துர்தர்ஸானாம்—காண்பதற்கு அரியது; ச—கூட; யோகிபி:—சக்திபெற்ற யோகிகளினால்.

பிருது மன்னர் கூறினார்: எனது மரியாதைக்குரிய மகாமுனிவர்களே. மங்கலமே உருவெடுத்து வந்தவர்களே, சக்திமிக்க யோகிகளின் பார்வைக்கும் நீங்கள் அரிதானவர்கள். உண்மையில் நீங்கள் மிகவும் அரிதாகக் காணப்படுபவர்கள். எந்தவித முயற்சியுமின்றி எனக்கு நீங்கள் காட்சி தந்தமைக்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ?

பதம் 4.22.8
கிம் தஸ்ய துர்லபதரம் இஹ லோகே பரத்ர ச
யஸ்ய விப்ரா: ப்ரஸீதந்தி ஸிவோ விஷ்ணுஸ் ச ஸானுக:

கிம்—என்ன; தஸ்ய—அவரது; துர்லப-தரம்—கிடைத்தற்கு அரியது; இஹ—இவ்வுலகில்; லோகே—உலகம்; பரத்ர—மரணத்திற்குப்பின்; ச—அல்லது; யஸ்ய—எவருடைய; விப்ரா:—அந்தணர்களும், வைணவர்களும்; ப்ரஸீதந்தி—மகிழ்வுறுவர்; ஸிவ:—எல்லா மங்கலங்களும்; விஷ்ணு:—பகவான் விஷ்ணு: ச—அதுபோல; ஸ:—அனு—க:—அதனுடன் செல்கிறது.

அந்தணர்களும் வைணவர்களும் யாரைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றனரோ அவனுக்கு அரியது இம்மையிலும் மறுமையிலும் எதுவுமில்லை. அதுமட்டுமல்ல அவன் அந்தணர்களும், வைணவர்களும் சூழ்ந்திருக்கும் மங்கலம் நிறைந்த சிவபெருமான் மற்றும் பகவான் விஷ்ணு போன்றோர்களின் அருளுக்கும் பாத்திரமாகிறான்.

பதம் 4.22.9
நைவ லக்ஷயதே லோகோ லோகான் பர்யடதோ ‘பி யான்
யதா ஸர்வ-த்ருஸம் ஸர்வ ஆத்மானாம் யே ‘ஸ்ய ஹேதவ:

ந—இல்லை; ஏவ—இவ்வாறு; லக்ஷயதே—காணக்கூடிய; லோக:—மக்கள்; லோகான்—எல்லா உலகங்களிலும்; பர்யடத:—பயணித்தும்; அபி—இருந்தாலும்; யான்—எவருக்கு; யதா—எவ்வளவு; ஸர்வ-த்ருஸம்—பரமாத்மா; ஸர்வே—எல்லாவற்றிலும்; ஆத்மானம்—எல்லோரிடத்தும் இருப்பவர்; யே—எவர்கள்; அஸ்ய—பிரபஞ்சத் தோற்றத்தின்; ஹேதவ:—காரணங்கள்.

பிருத மகாராஜா தொடர்ந்து கூறினார்: எல்லோர் மனங்களிலும் இருந்து கொண்டு நடக்கின்ற எல்லாவற்றையும் ஓர் சாட்சியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முழுமுதற் கடவுளை ஒருவனால் அறிய முடியாதது போலவே, எல்லா உலகங்களுக்கும் சென்று வரும் உங்களையும் அறிய முடியாதவர்களாக மக்கள் இருக்கின்றனர். ஏன், பிரம்மதேவனும், சிவபெருமானும் கூட பரமாத்மாவை அறிய முடியாதவர்களே.

பதம் 4.22.10
அதனா அபி தே தன்யா: ஸாதவோ க்ருஹ-மேதின:
யத் க்ருஹா ஹி அர்ஹ-வர்யாம்பு-த்ருண-பூமீஸ்வரா வரா:

அதனா:—பெரிய தனவந்தனாக இல்லாது; அபி—இருந்தும்; தே—அவர்கள்; தன்யா:—பெருமை; ஸாதவ:—தெய்வீக அருளாளர்கள்; க்ருஹ-மேதின:—இல்லறத்தில் இருப்பான்; யத்-க்ருஹா:—எவனது இல்லம்; ஹி—நிச்சயம்; அர்ஹவர்ய—உயர்ந்த வணக்கத்துக்குரிய; அம்பு—தண்ணீர்; த்ருண—புல்; பூமி—நிலம்; ஈஸ்வர—எஜமானன்; அவரா:—பணியாட்கள்.

குடும்ப வாழ்க்கையில் பற்றுடையவன், பெரிய செல்வந்தனாக இல்லாது இருந்தபோதும் அவனது இல்லத்திற்கு தெய்வீக அருளாளர்கள் விஜயம் செய்தால் அவன் மிகவும் பெருமையுடையவனாகிறான். அவ்வருளாளர்களுக்கு நீரும், அமர்வதற்கான ஆசனமும், உபசாரப் பொருட்களும் வழங்கும் அந்த வீட்டின் எஜமானனும் பணியாட்களும் பெருமையடைகின்றனர். ஏன் அவனது இல்லமே பெருமையடைகின்றது.

பதம் 4.22.11
வ்யாலாலய-த்ருமா வை தேஷ்வ அரிக்தாகில-ஸம்பத:
யத்-க்ருஹாஸ் தீர்த்த-பாதீய-பாதததீர்த்த-விவர்ஜிதா:

வ்யால—விஷமுள்ள பாம்புகள்; ஆலய—வீடு; த்ருமா:—மரம்; வை—உறுதியாக; தேஷீ—அந்த வீடுகளில்; அரிக்த—அதிகமாக; அகில—எல்லாம்; ஸம்பத:—செல்வங்கள்; யத்—எது; க்ருஹா:—வீடுகள்; தீர்த்த-பாதீய—தெய்வீக அருளாளர்களின் பாதங்களிடத்து உள்ள உறவு; பாத-தீர்த்த—அவர்கள் பாதங்களைக் கழுவும் நீர்; விவர்ஜிதா:—இல்லாது.

எல்லாச் செல்வங்களும் பொருள் வளமும் பெற்றிருந்தும் ஓர் தனவந்தன் தன் வீட்டிற்கு வரும் தெய்வீக அருளாளர்களுக்கு அனுமதி மறுப்பதோ அவர்கள் திருவடிகளைக் கழுவுவதற்கு நீர் தர மறுப்பதோ எதனைப் போன்றதென்றால் விஷப்பாம்புகள் வாழும் மரத்தினைப் போன்றது அவன் மாளிகையாகும்.

பதம் 4.22.12
ஸ்வாகதம் வோ த்விஜ-ஸ்ரேஷ்டா யத்-வ்ரதானி முழுக்ஷவ:
சரந்தி ஸ்ரத்தயா தீரா பாலா ஏவ ப்ருஹந்தி ச

ஸீ-சூகதம்—நல்ல வரவு; வ:—உங்களுக்கு; த்விஜ-ஸ்ரேஷ்-டா:—அந்தணர்களில் சிறந்தோர்களே; யத்—எவர்களுடைய; வ்ரதானி—சபதங்கள்; முழுக்ஷவ:—விடுதலையை விரும்புவோர்; சரந்தி—நடப்பது; ஸ்ரத்தயா—மிக்க நம்பிக்கையுடன்; தீரா:—கட்டுப்படுத்தப்பட்ட; பாலா:—பாலர்கள்; ஏவ—போல; ப்ருஹந்தி—அநுமானிப்பது; ச—கூட.

பிருது மகாராஜா நான்கு குமாரர்களையும் வரவேற்கும் பொழுது அவர்களை அந்தணர்களில் சிறந்தோர் என்று கூறினார். அவர்களை வரவேற்றுப் பேசும்பொழுது: நீங்கள் பிறந்தநாள் தொட்டு இன்று வரை பிரம்மச்சரிய விரதத்தைக் காத்து வருகின்றீர்கள், மேலும் நீங்கள் முக்திநெறியில் நல்லனுபவம் உடையவர்களாக விளங்கிய போதிலும் உங்களைக் குழந்தைகளைப் போல் வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

பதம் 4.22.13
கச்சின் ந: குஸலம் நாதா இந்திரியார்தார்த-வேதினாம்
வ்யஸனாவாப ஏதஸ்மின் பதிதானாம் ஸ்வ-கர்மபி:

கச்சித்—உண்டா இல்லையா; ந:—எங்கள்; குஸலம்—நல்லதிர்ஷ்டம்; நாதா:—ஓ, நாதர்களே; இந்த்ரிய-அர்த—வாழ்வின் இறுதி லட்சியமே புலன் நுகர்ச்சி; அர்த—வேதினாம்—புலன் நுகர்ச்சிகளை மட்டுமே அறிந்தவர்கள்; வ்யாஸன—பிணிகள்; ஆவாபே—பெற்று; ஏதஸ்மிம்—இப்பௌதீக வாழ்வில்; பதிதானாம்—வீழ்ந்திருப்பவர்கள்; ஸ்வ-கர்மபி:—அவர்களது சொந்த திறமையினால்.

பிருது மகாராஜா அம்முனிவர்களிடம் கேட்டார், தங்களது முன்வினைப் பயனால் ஆபத்தான பௌதீக வாழ்க்கையில் வந்து சிக்கிக் கொண்ட மனிதர்களில் லட்சியமே புலன்நுகர்ச்சி ஒன்றின் மேல்தான் இருக்கின்றது அவர்களுக்கு ஏதேனும் நன்மைகள் அருளப்படுமா?

பதம் 4.22.14
பவத்ஸீ குஸல-ப்ரஸ்ன ஆத்மாராமேஷீ நேஷ்யதே
குஸலா ‘குஸவா யத்ர ந ஸந்தி மதி-வ்ருத்தய:

பவத்ஸீ—உங்களுக்கு; குஸல—நல்லதிர்ஷ்டம்; ப்ரஸ்ன:—கேள்வி; ஆத்ம-ஆரோமேஷீ—எப்போதும்; ஆன்மீக—இன்பத்தில் திளைப்பவன்; ந இஷ்யதே—தேவையில்லை; குஸல—நல்லதிர்ஷ்டம்; அகுஸவா:—அமங்கலம்; யத்ர—எங்கே; ந—இல்லை; ஸந்தி—வெளிப்படுதல்; மதி-வ்ருத்தய:—மனயூகம்; வ்ருத்தய:—ஒருங்கிணைத்து.

பிருது மகாராஜா தொடர்ந்து கூறினார்: நீங்கள் எப்போதும் ஆன்மீக இன்பத்தில் திளைப்பவர்கள் ஆதலினால் உங்களிடம் நல்லதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டத்தினைப் பற்றிக் கேட்க வேண்டிய தேவை இல்லை. மங்கலம் அல்லது அமங்கலம் போன்றவற்றினால் ஏற்படும் மனக்குழப்பங்கள் உங்களிடம் தோன்றுவதில்லை.

பதம் 4.22.15
தத் அஹம் க்ருத-விஸ்ரம்ப: ஸீஹ்ருதோ வஸ் தபஸ்வினாம்
ஸம்ப்ருச்சே பவ ஏதஸ்மின் க்ஷேம: கேனாஞ்ஜஸா பவேத்

தத்—ஆகையினால்; அஹம்—நான்; க்ருது-விஸரம்ப:—முற்றிலும் உறுதியளிக்கப்பட்டு; ஸீ-ஹ்ருத:—நண்பன்; வ:—எங்கள்; தபஸ்வினாம்—பௌதீக வேதனையில் உழன்று; ஸம்ப்ருச்சே—கேட்பதற்கு விரும்புகிறேன்; பவே—இப்பௌதீக உலகில்; ஏதஸ்மின்—இந்த; க்ஷேம:—முடிந்த உண்மை; கேன—அதன்மூலமாக; அஞ்ஜஸா:—தாமதமின்றி; பவேத்—அடையக்கூடும்.

பௌதீக வாழ்க்கை நெருப்பில் எரிந்து கொண்டிருப்பவர்களின் உற்ற துணைவர்கள் நீங்கள்தான் என்பதில் நான் உறுதியுடையவனாய் இருக்கின்றேன். ஆகையினால் இப்பௌதீக உலகில் எவ்வாறு நாங்கள் எங்கள் உயர்ந்த இலட்சியத்தினை விரைவில் எய்தக்கூடும் என்று கேட்க விரும்புகிறேன்.

பதம் 4.22.16
வ்யக்தம் ஆத்மவதாம் ஆத்மா பகவான் ஆத்ம-பாவன:
ஸ்வானாம் அநுக்ரஹாயேமாம் ஸித்த ரூபீ சரதி அஜ:

வ்யக்தம்—தெளிவாக; ஆத்ம-வதாம்—உன்னதமானவர்களின்; ஆத்மா—வாழ்க்கை இலட்சியம்; பகவான்—முழுமுதற் கடவுள்; ஆத்மபாவன:—உயிர்களைக் கடைத்தேற்றுவதையே விரும்புகின்றார்; ஸ்வானாம்—அவரது பக்தர்கள்; அநுக்ரஹாய—கருணை காட்டுவதில்; இமாம்—இந்த வழியில்; ஸித்த-ரூபீ—முற்றிலும் தன்னை உணர்ந்தோர்; சரதி—பயணிக்கின்றனர்; அஜ:—நாராயணர்.

முழுமுதற் கடவுள் தன் அங்கத்தில் முக்கிய அங்கங்களாக விளங்கும் உயிர்களைக் கடைத்தேற்றுவதிலேயே எப்போதும் ஆர்வமுடையவராக இருக்கின்றார். அவர்களின் சிறந்த நன்மைக்காக பகவான் உங்களைப் போன்ற தன்னை உணர்ந்த ஞானிகளின் வடிவத்தில் எல்லா உலகங்களுக்கும் வருகை தருகிறார்.

பதம் 4.22.17
மைத்ரேய உவாச
ப்ருத்தோஸ் தத் ஸீக்தம் ஆகார்ண்ய ஸாரம் ஸீஷ்டு மிதம் மது
ஸ்மயமான இவ ப்ரீத்யா குமார: ப்ரத்யுவாச ஹ

மைத்ரேய: உவாச—மகாமுனிவரான மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; ப்ருதோ:—பிருது மன்னரின்; தத்—அந்த; ஸீக்தம்—வேதமுடிவு; ஆகர்ண்ய—கேட்பதற்கு; ஸாரம்—மிகுந்த வலிவுடையது; ஸீஷ்டு—சரியானது; மிதம்—குறைத்தது; மது—கேட்பதற்கு இனிமையாக; ஸ்மயமான:—புன்னகையுடன்; இவ—போல; ப்ரீத்யா—மிகுந்த திருப்தியுடன்; குமார:—பிரம்மச்சாரி; ப்ரத்யுவாச—பதிலிறுத்தார்; ஹ—இவ்வாறு.

மகாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்: பிரம்மச்சாரிகளில் சிறந்த ஸனத் குமாரர்கள் பிருது மன்னரின், அர்த்தமுள்ள, சரியான, முற்றிலும் மதிப்புமிக்க வார்த்தைகளினால் ஆன, கேட்பதற்கு மிகவும் இனிமையான பேச்சினைக் கேட்டு முழு நிறைவுடன் புன்னகை பூத்து கீழ்க்கண்டபடி பேசத் துவங்கினர்.

பதம் 4.22.18
ஸனத்-குமார உவாச
ஸாது ப்ருஷ்டம் மஹாராஜ ஸர்வ-பூத-ஹிதாத்மனா
பவதா விதுஷா சாபி ஸாதூனாம் மதிர் ஈத்ருஸீ

ஸனத்-குமார உவாச:—சனத்குமாரர் கூறினார்; ஸாது—துறவி; ப்ருஷ்டம்—கேள்வி; மஹாராஜ—எனது அன்பான மன்னனே; ஸர்வ-பூத—எல்லா உயிர்களும்; ஹித-ஆத்மனா—எல்லோருடைய நலன்களையும் விரும்புகின்ற ஒருவனால்; பவதா—உன்னால்; விதுஷா—நன்கு கற்ற; ச—மேலும்; அபி—இருந்தாலும்; ஸாதூனாம்—துறவிகளினால்; மதி:—புத்தி; ஈத்ருஸீ—இதுபோல.

சனத் குமாரர் கூறினார் அன்பான பிருதுமன்னனே, உன்னால் நான் மிகவும் மென்மையாகக் கேள்வி கேட்கப்பட்டிருக்கின்றேன். இதுபோன்ற கேள்விகள் எல்லா உயிர்களுக்குமே நலன் பயப்பன, ஏனென்றால் எப்போதும் பிறர் நலன் விரும்பும் உன்னால் அல்லவா இக்கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் தெரிந்த நீயே இக்கேள்விகளைக் கேட்டிருக்கின்றாய் ஏனென்றால் அதுதானே தெய்வீக அருளாளரின் குணம். உனது நிலைக்கு உன் புத்திசாலித்தனம் சரியாகப் பொருந்துகின்றது.

பதம் 4.22.19
ஸங்கம: கலு ஸாதூனாம் உபயேஷாம் ச ஸம்மத:
யத்-ஸம்பாஷண-ஸம்ப்ரஸ்ன: ஸர்வேஷாம் விதனோதி ஸம்

ஸங்கம:—கூட்டம்; கலு—உறுதியாக; ஸாதூனாம்—பக்தர்கள்; உபயேஷாம்—இருவருக்கும்; ச—மேலும்; ஸம்மத:—ஏற்புடையது; யத்—எது; ஸம்பாஷண—விவாதம்; ஸம்ப்ரஸ்ன:—கேள்வியும் பதிலும்; ஸர்வேஷாம்—எல்லாம்; விதனோதி—விரிவடைகிறது; ஸம்—உண்மை இன்பம்.

பக்தர்கள் ஒருங்கிணைந்திருக்கும் அவையில் நடைபெறும் கேள்வி பதில்கள், விவாதம் போன்றவற்றின் முடிவுகள் பேச்சாளர் அவையினர் என இருவருக்குமே ஏற்புடையனவாக இருக்கும். இவ்வாறு இதுபோன்ற கூட்டம் எல்லோருக்கும் உண்மை இன்பத்தை அளிக்கிறது.

பதம் 4.22.20
அஸ்தி ஏவ ராஜன் பவதோ மதுத்விஷ:
பாதரவிந்தஸ்ய குணானுவாதனே
ரதிர் துராபா விதுனோதி நைஷ்டிகீ
காமம் கஷாயம் மலம் அந்தர்-ஆத்மன:

அஸ்தி—அங்கே; ஏவ—உறுதியாக; ராஜன்—ஓ, மன்னனே; பவத:—உனது; மது-த்விஷ:—பகவானின்; பாத-அரவிந்தஸ்ய—பாதகமலங்களின்; குண-அனுவாதனே—பெருமையில்; ரதி:—பற்று; துராபா—மிகவும் கடினம்; விதுனோதி—கழுவுகிறது; நைஷ்டிகீ—பின்வாங்காத; காமம்—பேராசை; கஷாயம்—பேராசையின் அடையாளமாக; மலம்—மாசு; அந்த:-ஆத்மன:—இதயத்தின் மையத்திலிருந்து.

சனத் குமாரர் தொடர்ந்து கூறுகிறார்: எனது அன்பான மன்னனே நீ ஏற்கெனவே முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளைப் போற்றிப் புகழ்வதில் நாட்டமுடையவனாக இருக்கின்றாய். இதுபோன்ற நாட்டம் அடைவதற்கு மிகவும் அரியதாகும், ஆனால் ஒருவன் பகவானின் மீது இதுபோன்ற தொய்வில்லாத நம்பிக்கை வைக்கும் போது அது அவன் மனதில் உள்ள பேராசைகளைத் தானே நீக்கி தெளிவு பெறச் செய்கிறது.

பதம் 4.22.21
ஸாஸ்த்ரேஷ்வ இயான் ஏவ ஸீனிஸ்சிதோ ந்ருணாம்
க்ஷேமஸ்ய ஸத்ருயக்-விம்ருஸேஷீ ஹேது:
அஸங்க ஆத்ம-வ்யதிரிக்த ஆத்மனி
த்ருடா ரதிர் ப்ரஹ்மணி நிர்குணே சயா

ஸாஸ்த்தேஷீ—சாத்திரங்களில்; இயான்ஏவ—இதுமட்டுமே; ஸீ-நிஸ்சித:—சாதகமான முடிவு; ந்ருணாம்—மனித சமுதாயத்திற்கு; க்ஷேமஸ்ய—முடிந்த நன்மை; ஸத்ருயக்—நிறைவான; விம்ருஸேஷீ—முழுக்கவனத்துடன்; ஹேது:—காரணம்; அஸங்க:—பற்றின்மை; ஆத்ம-வ்யதிரிக்தே—உடல் கருத்துடைய வாழ்வு; ஆத்மனி—பரமாத்மாவிற்கு; த்ருடா—வலிமையான; ரதி:—பற்று; ப்ரஹ்மணி—உன்னதமான; நிர்குணே—ஜட இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்ட பரமபுருஷர்; ச—மேலும்; யா—எவை.

ஆய்ந்து அறிந்த வேதங்களின் முடிவாக இருப்பது என்னவென்றால், மனித சமுதாயத்திற்கு நலன் பயக்கும் வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியம், உடலியற் கருத்துக்களிலிருந்து விடுபட்டு ஜட இயற்கையின் குணங்களைக் கடந்து உன்னத நிலையில் இருக்கும் பரமபுருஷ பகவான் மீது நீங்காத பற்று வைக்க வேண்டும் என்பதே.

பதம் 4.22.22
ஸா ஸ்ரத்தயா பகவத்-தர்ம-சர்யயா
ஜிஜ்ஞாஸயாத்யாத்மிக-யோக-நிஷ்டயா
யோகேஸ்வரோபாஸனயா ச நித்யம்
புண்ய-ஸ்ரவ:-கதயா புண்யயா ச

ஸா—அப்பக்தித் தொண்டு; ஸ்ரத்தயா—உறுதியான நம்பிக்கையுடன்; பகவத்-தர்ம—பக்தித் தொண்டு; சர்யயா—விவாதத்தினால்; ஜிஜ்ஞாஸ்யா—கேட்பதின் மூலம்; அத்யாத்மிக—ஆன்மீக; யோக-நிஷ்டயா—ஆன்மீக உணர்வினிடத்து ஆழ்ந்த நம்பிக்கையினால்; யோக-ஈஸ்வர—முழுமுதற் கடவுள்; உபாஸனயா—அவரைப் பிரார்த்திப்பதினால்; ச—மேலும்; நித்யம்—தொடர்ந்து; புண்ய-ஸ்ரவ:—அதைக்கேட்பதினால்; கதயா—விவாதிப்பதினால்; புண்யயா—புண்ணியத்தினால்; ச—மேலும்.

பரமபுருஷரிடம் கொண்ட பற்றினை வளர்ப்பதற்குரிய வழிகளாக, பக்தித் தொண்டில் ஈடுபடுதல், முழுமுதற் கடவுளைப் பற்றிக் கேட்டறிவது, பக்தியோகத்தினை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது, யோககேஸ்வரரை வழிபடுவது, முழுமுதற் கடவுளின் பெருமைகளை ஓதுவது போன்றவைகளாகும். இச்செயல்கள் எல்லாம் புனிதமானவைகளாகும்.

பதம் 4.22.23
அர்த்தேந்த்ரியாராம-ஸகோஷ்டி-அத்ருஷ்ணயா
தத்-ஸம்மதானாம் அபரிக்ருஹேண ச
விவிக்த-ருச்யா பரிதோஷ ஆத்மனி
வினா ஹரேர் குண-பீயூஷ-பானாத்

அர்த—அதிகமாக; இந்த்ரிய—புலன்கள்; ஆராம—நுகர்ச்சியைத் திருப்திப்படுத்த; ஸ-கோஷ்டீ—அவர்களது தொடர்பினால்; அத்ருஷ்ணயா—விருப்பமின்மையால்; தத்—அந்த; ஸம்மதானாம்—அவர்களின் சம்மதம் பெற்று; அபரிக்ரஹேன—ஒத்துக் கொள்ளாததினால்; ச—மேலும்; விவக்த-ருத்யா—வெறுப்புற்ற தன்மையினால்; பரிதோஷே—மகிழ்ச்சி; ஆத்மனி—ஆத்மா; வினா—இன்றி; ஹரே:—முழுமுதற் கடவுளின்; குண—குணங்கள்; பீயூஷ—அமிர்தம்; பானாத்—குடிக்கின்ற.

ஆன்மீக வாழ்க்கையில் வளர்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் ஒருவன் பணத்தின் மீதே குறியாக இருப்பவனிடமும், புலன் நுகர்ச்சியில் திளைப்பவனிடமும் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்களோடு மட்டுமல்லாது அவர்களோடு தொடர்புடையவர்களிடமும் கூட உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன், ஹரி என்றழைக்கப்படும் முழுமுதற் கடவுளின் பெருமை என்னும் அமிர்தத்தைப் பருகாமல் நிம்மதியாக வாழ முடியாது. புலன் இன்பம் என்னும் போதையிடம் வெறுப்படையும் பொழுதே ஒருவன் இவ்வாறு உயர்வடை முடியும்.

பதம் 4.22.24
அஹிம்ஸயா பாரமஹம்ஸ்ய-சர்யயா
ஸ்ம்ருத்யா முகுந்தாசரிதாக்ரிய ஸீதுனா
யானமர் அகானமர் நியமைஸ்சாபி அநிந்தயா
நிரீயா த்வந்வ-திதிக்ஷயாச

அஹிம்ஸயா—அஹிம்சை; பாரமஹம்ஸ்ய-சர்யயா—உயர்ந்த ஆச்சார்யர்களின் பாதையினைப் பின்பற்றுவது; ஸ்மிருத்யா—நினைப்பதினால்; முகுந்த—முழுமுதற் கடவுள்; ஆசரித-அக்ருய—அவர் செயல்களைப் பரப்புவது; ஸீதுனா—அமிர்தத்தினால்; யமை:—ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றி; அகாமை:—பௌதீக ஆசைகளற்று; நியமை:—விதிகளையும்; ஒழுங்குமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுவதினால்; ச—கூட; அபி—உறுதியாக; அநிந்தயா—நிந்திக்காது; நிரீஹயா—எளிமையாக வாழ்ந்து; த்வந்தவ—இருமை; திதிக்ஷயா—பொறுமையினால்; ச—மேலும்.

ஆன்மீக வளர்ச்சியில் பங்கு பெறுபவன் அஹிம்சாவாதியாகவும், உயர்ந்த ஆச்சார்யர்களின் பாதையினைப் பின்பற்றுபவனாகவும், முழுமுதற் கடவுளின் தீராத விளையாட்டு என்னும் அமிர்தத்தைப் பற்றியே எப்போதும் நினைப்பவனாகவும், பொருள் ஆசையின்றி ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடிப்பவனாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு ஒழுங்குமுறை விதிகளைக் கடைப்பிடிக்கும் பொழுது பிறரை நிந்திக்கக் கூடாது. ஒரு பக்தன் எப்போதும் எளிய வாழ்க்கை வாழ்ந்து, எதிரெதிர் தன்மைகளையுடைய பொருட்களின் இருமையினால் துன்புறாது இருத்தல் வேண்டும். அவன் அவற்றைப் பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பதம் 4.22.25
ஹரேர் முஹீஸ் தத்பர-கர்ண-பூர
குணாபிதானேன விஜ்ரும்பமாணயா
பக்த்யா ஹி அஸங்க: ஸத்-அஸதி அநாத்மனி
ஸ்யான் நிர்குணே ப்ரஹ்மணிசாஞ்ஜஸா ரதி:

ஹரே:—முழுமுதற் கடவுளின்; முஹீ:—தொடர்ந்து; தத்-பர—முழுமுதற் கடவுளின் தொடர்பில்; கர்ண-பூர—காதிற்கு அலங்காரம்; குண-அபிதானேன—உன்னதமானத் தன்மைகளின் விவாதங்கள்; விஜ்ரும்பமாணயா—கிருஷ்ண உணர்வினை அதிகரிப்பதின் மூலம்; பக்த்யா—பக்தியினால்; ஹி—உறுதியாக; அஸங்க:—மாசுறாது; ஸத்ஸேதி—பௌதீக உலகம்; அநாத்மணி—ஆன்மீக உணர்வினை எதிர்ப்பதற்கு; ஸ்யாத்—இருத்தல் வேண்டும்; நிர்குணே—குணங்களைக் கடந்து; ப்ரஹ்மணி—பரம் பொருளிடத்தில்; ச—மேலும்; அஞ்ஜஸா—எளிதாக; ரதி:—கவர்ச்சி.

ஒரு பக்தன் முழுமுதற் கடவுளின் தெய்வீக லீலைகளைப் பற்றித் தொடர்ந்து கேட்பதின் மூலம் பக்தித் தொண்டினை படிப்படியாக அதிகரித்துக் கொள்ள வேண்டும். இந்த லீலைகள் எல்லாம் பக்தர்களின் காதுகளை அலங்கரிக்கும் அணிகலன்களாகும். பக்தித் தொண்டு செய்வதினாலும், பௌதீகக் குணங்களைக் கடப்பதினாலும் ஒருவன் முழுமுதற் கடவுளின் உன்னதத்தில் மிக எளிதாக நிலைபெற முடியும்.

பதம் 4.22.26
யதா ரதிர் ப்ரஹ்மணி நைஷ்டிகீ புமான்
ஆச்சார்யவான் ஜ்ஞான-விராக-ரம்ஹஸா
தஹதி அவீர்யம் ஹ்ருதயம் ஜீவ-கோஸம்
பஞ்சாத்மகம் யோனிம் இவோத்திதோ ‘க்னி:

யதா—எப்பொழுது; ரதி:—பற்று; ப்ரஹ்மணி—முழுமுதற் கடவுள்; நைஷ்டிகீ—நிலைநிறுத்தப்பட்டு; புமான்—மனிதன்; ஆச்சார்யவான்—முழுமுதற் கடவுளிடம் முற்றும் சரணடைந்து; ஜ்ஞான—ஞானம்; விராக—பற்றின்மை; ரம்ஹஸா—வேகத்தினால்; தஹதி—எரிகிறது; அவீர்யம்—பேடி; ஹ்ருதயம்—இதயத்தினுள்; ஜீவ-கோஸம்—ஆத்மாவை மூடியிருக்கின்ற; பஞ்ச-ஆத்மகம்—பஞ்சபூதங்கள்; யோனிம்—பிறப்பின் வழி; இவ—போல; உத்தித:—வெளிப்படுகின்ற; அக்னி:—நெருப்பு.

ஆன்மீக குருவின் அருளினால் பற்றுக்களைத் துறந்து, தெளிவு பெற்று முழுமுதற் கடவுளிடத்து தனதுப் பற்றுதலை நிலைநிறுத்திக் கொண்ட உயிரானது பஞ்சபூதங்களினால் மூடப்பட்டு இதயத்தின் நடுவில் இருந்தாலும் எவ்வாறு விறகிலிருந்து தோன்றிய நெருப்பு அதனையே எரித்துச் சாம்பலாக்குவது போல் அது தனது பௌதீகச் சூழல்களையும் எரிக்கிறது.

பதம் 4.22.27
தக்தாஸயோ முக்த-ஸமஸ்த-தத்-குணோ
நைவாத்மனோ பஹிர் அந்தர் விசஷ்டே
பராத்மனோர் யத்-வ்யவதானாம் புரஸ்தத்
ஸ்வப்பேன யதா புருஷஸ் தத்-விநாஸே

தக்த-ஆஸய:—எல்லா பௌதீக ஆசைகளும் எரிந்து; முக்த—விடுதலை; ஸமஸ்த—எல்லாம்; தத்-குண:—ஜடத்தோடு தொடர்புடைய குணங்கள்; ந—இல்லை; ஏவ—உறுதியாக; ஆத்மன:—ஆத்மா அல்லது பரமாத்மா; பஹி:—புறத்தில்; அந்த:—அகத்தில்; விசஷ்டே—நடிக்கின்ற; பர-ஆத்மனோ:—பரமாத்மாவின்; யத்—எது; வ்யவதானாம்—வேறுபாடு; புரஸ்தத்—ஆரம்பத்தில் இருந்தது போல்; ஸ்வப்னே—கனவு; யதா—தோன்று; புருஷ:—மனிதன்; தத்—அந்த; விநாஸே—முடிகின்றது.

ஒருவன் தன்னிடத்தில் உள்ள எல்லா பௌதீக ஆசைகளையும் ஒழித்து, எல்லாப் பௌதீகத் தன்மைகளில் இருந்தும் விடுதலை பெறும்போது அவன் தன் அகத்திலும் புறத்திலும் நடக்கும் செயல்களின் வேறுபாடுகளைக் கடந்தவனாகிறான். அப்போது தன்னை உணர்வதற்கு முன்பிருந்த ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் உள்ள வேறுபாடு அழிகின்றது. கனவு முடியும் போது அதனைக் கண்டவனுக்கும் கனவிற்கும் உள்ள வேறுபாடு நீண்ட நேரம் நிலைப்பதில்லை அல்லவா.

பதம் 4.22.28
ஆத்மானம் இந்த்ரியார்தம் ச பரம் யத் உபயோர் அபி
ஸதி ஆஸய உபாதெள வை புமான் பஸயதி நான்யதா

ஆத்மானம்—ஆத்மா; இந்த்ரிய-அர்தம்—புலன் நுகர்ச்சி; ச—மேலும்; பரம்—உன்னதநிலை; யத்—எது; உபயோ:—இரண்டும்; அபி—உறுதியாக; ஸதி—இருக்கின்ற நிலை; ஆஸயே—பௌதீக ஆசைகள்; உபாதெள—தகுதி; நிலைகள்; வை—உறுதியாக; புமான்—மனிதன்; பஷ்யதி—காண்கிறான்; ந அன்யதா—வேறு வகையின்றி.

புலன் நுகர்ச்சிக்காக ஆத்மா இருக்கும் பொழுது அவன் பல்வேறு ஆசைகளை உருவாக்குகிறான், அதன் காரணமாக பல்வேறு தகுதி நிலைகளுக்குப் பாத்திரமானவனாகிறான், ஆனால் அவன் எல்லாவற்றையும் கடந்த நிலையில் இருக்கும் பொழுது முழுமுதற் கடவுளின் திருப்தி ஒன்றினைத் தவிர வேறெவற்றினிடத்தும் ஆர்வம் காட்டுவதில்லை.

பதம் 4.22.29
நிமித்தே ஸதி ஸர்வத்ர ஜலாதாவ் அபி பூருஷ:
ஆத்மனஸ் ச பரஸ்யாபி பிதாம் பஸ்யதி நான்யதா

நிமித்தே—காரணத்தைக் கொண்டு; ஸதி—இருக்கின்ற; ஸத்வத்ர—எங்கும்; ஜவ-ஆதௌஅபி—தண்ணீர் மற்றும் அதுபோல் பிரதிபலிக்கும் பிறபொருள்கள்; பூருஷ:—மனிதன்; ஆத்மன:—ஆத்மா; ச—மேலும்; பரஸ்ய அபி—மற்றொரு ஆத்மா; பிதாம்—வேறுபாடு; பஸ்யதி—காண்கிறது; ந அன்யதா—வேறொரு காரணமுமின்றி.

ஒருவன் தன் உருவத்தின் பிரதிபலிப்பை நீரிலும், எண்ணையிலும் கண்ணாடியிலும் எத்தனை வேறுபாடு உடையதாகக் காண்கின்றானோ அதுபோல் பல்வேறு காரணங்களினால் ஒருவன் தன்னிடமிருந்து மற்றொருவனை வேறுபாட்டுடன் காண்கிறான்.

பதம் 4.22.30
இந்த்ரியைர் விஷயாக்ருஷ்டைர் ஆக்ஷிப்தம் த்யாயதாம் மன:
சேதனாம் ஹரதே புத்தே: ஸ்தம்பஸ் தோயம் இவ ஹ்ரதாத்

இந்த்ரியை:—புலன்களினால்; விஷய—புலன்களைத் திருப்தி செய்யும் பொருள்கள்; ஆக்ருஷ்டை:—கவரப்பட்டு; ஆக்ஷிப்தம்—கிளர்ச்சியுறுகிறது; த்யாயதாம்—எப்போதும் நினைத்துக் கொண்டு; மன:—மனம்; சேதனாம்—விழிப்புணர்வு; ஹரதே—தொலைந்துவிடுகிறது; புத்தே:—புத்தியின்; ஸ்தம்ப:—பெரிய நாணல் செடி; தோயம்—தண்ணீர்; இவ—போல; ஹ்ரதாத்—ஏரியிலிருந்து.

ஒருவனது மனமும் புத்தியும் புலன்களுக்கு இன்பம் அளிக்கும் பொருள்களினால் கவரப்படும் பொழுது அவனது மனம் கிளர்ச்சியடைகின்றது. இவ்வாறு ஓருவன் புலன்களுக்கு இன்பம் அளிக்கும் போகப் பொருட்களைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் நீர்நிறைந்த ஏரியின் கரையில் நிற்கும் நாணல் காடு எப்படி நீர் முழுவதையும் படிப்படியாக உறிஞ்சி காலி செய்துவிடுகின்றதோ அதுபோல் அவனும் தன்னுடைய உண்மையான உணர்வினை இழந்து விடுகின்றான்.

பதம் 4.22.31
ப்ரஸ்யதி அநுஸ்ம்ருதிஸ் சித்தம் ஜ்ஞான-ப்ரம்ஸ: ஸ்ம்ருதி க்ஷயே
தத்-ரோதம் கவய: ப்ராஹீர் ஆத்மாபஹ்நவம் ஆத்மன:

ப்ரஸ்யதி—அழிகின்றது; அநுஸ்மிருதி:—தொடர்ந்து நினைப்பதினால்; சித்தம்—உணர்வு; ஜ்ஞான-ப்ரம்ஸ:—உண்மையான அறிவினை இழந்து; ஸ்ம்ருதிக்ஷயே—நினைவை அழித்து; தத்-ரோதம்—செய்கைத்திணறல்; கவய:—கற்றறிந்த அறிஞர்; ப்ராஹீ:—எண்ணங்கொண்டு; ஆத்ம—ஆத்மா; அபஹ்—நலம் அழிகின்றது; ஆத்மன:—ஆத்மாவின்.

ஒருவன் தனது உண்மை உணர்வினை விட்டு விலகும் பொழுது அவன் தனது முந்தைய நிலையினையும், தனது தற்கால நிலையினையும் நினைத்துப் பார்க்கும் சக்தியினை இழந்துவிடுகிறான். அவ்வாறு நினைவு தப்பும் பொழுது அவன் சேர்த்த அறிவெல்லாம் பொய்ம்மை அஸ்திவாரத்தின் மீது அமைந்ததாகின்றது. இந்நிலை ஏற்படும் பொழுதே கற்றறிந்த அறிஞர்கள் அவனது ஆத்மா தொலைந்து விட்டது என்று கருதுகின்றனர்.

பதம் 4.22.32
நாத: பரதரோ லோகே பும்ஸ: ஸ்வார்த-வ்யதிக்ரம:
யத்-அதி அன்யஸ்ய ப்ரேயஸ்த்வம் ஆத்மன: ஸ்வ வ்யதிக்ரமாத்

ந—இல்லை; அத:—இதன்பிறகு; பரதர:—உயர்ந்த; லோகே—இவ்வுலகில்; பும்ஸ:—உயிர்களின்; ஸ்வ-அர்த—நன்மை; வ்யதிக்ரம:—தடை; யத்-அதி—அதற்கும் மேலாக; அன்யஸ்ய—மற்றவர்களின்; ப்ரேயஸ்த்வம்—அதிக விரும்பத்தக்கது; ஆத்மன:—ஆத்மாவிற்கு; ஸ்வ—சொந்தமாக; வ்யதிக்ரமாத்—தடையாக.

ஆத்மாவைப்பற்றி அறிதலை விட பிறபொருள் பற்றிய விஷயங்களை நினைப்பது ஒருவனுக்கு அதிக சுகம் அளிக்குமென்றால் அதுவே அவன் சொந்த நன்மைக்குப் பெருந்தடையாக வந்து வாய்க்கின்றது.

பதம் 4.22.33
அர்த்தேந்த்ரியார்தாபித்யானம் ஸர்வார்தாபஹ்நவோ ந்ருணாம்
ப்ரம்ஸிதோ ஜ்ஞான-விஞ்ஞானாத் யேனாவிஸதி முக்யதாம்

அர்த்த—செல்வந்தர்கள்; இந்த்ரிய-அர்த்த—புலன்களைத் திருப்திப்படுத்துவதற்காக; அபித்யானம்—தொடர்ந்து நினைத்துக் கொண்டு; ஸர்வ-அர்த—நான்கு வகையான சாதனைகள்; அபஹ்நவ:—அழிவுறும்; ந்ருணாம்—மனிதசமுதாயத்தின்; ப்ரம்ஸித:—ஏதுமற்ற சூனியம்; ஜ்ஞான—ஞானம்; விஞ்ஞானாத்—பக்தித்தொண்டு; யேன—இவற்றினால்; ஆலிஸதி—நுழைகிறது; முக்யதாம்—அசையா வாழ்க்கை.

மனித சமுதாயம் எப்போதும் பணத்தை எவ்வாறு சம்பாதிப்பது, அதைக் கொண்டு எப்படிப் புலன் நுகர்ச்சியினைத் திருப்திப்படுத்துவது என்றே நினைத்துக் கொண்டிருந்தால் அது எல்லோரின் நலன்களையும் அழிப்பதாக அமைகின்றது. ஒருவன் முற்றிலும் அறிவு மற்றும் பக்தித் தொண்டு இல்லாதவனாக ஆகும் பொழுது அவன் மரம், கல் போன்ற அஃறிணைப் பொருளாகப் பிறக்கின்றான்.

பதம் 4.22.34
ந குர்யாத் கர்ஹிசித் ஸங்கம் தமஸ் தீவ்ரம் திதீரிஷீ:
தர்மார்த்த-காம-மோக்ஷாணாம் யத் அத்யந்த-விகாதகம்

ந—கூடாது; குர்யாத்—செயல்; கர்ஹிசித்—எந்நேரமும்; ஸங்கம்—தொடர்பு; தம:—அறியாமை; தீவ்ரம்—மிக வேகத்துடன்; திதீரிஷீ:—அறியாமைக் கடலைக் கடக்க விரும்புவோர்; தர்ம—சமயம்; அர்த—பொருள்வளம்; காம—புலன்இன்பம்; மோக்ஷணாம்—மீட்கப்படுதல்; யத்—எது; அத்யந்த—மிக அதிகம்; விகாதகம்—தடை.

அறியாமைக் கடல் கடக்க வேண்டும் என மிக அதிகம் விரும்புவோர் அவ்வறியாமைக் குணங்களோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. தற்காலிக இன்பம் அளிக்கும் செயல்கள் எல்லாம், சமய நெறிகளை அறிவதற்கும், பொருளாதார வளத்திற்கும், புலன் நுகர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் கடைசியில் விடுதலைக்கும் பெருந்தடைகளாக விளங்கும்.

பதம் 4.22.35
தத்ராபி மோக்ஷ ஏவார்த்த ஆத்யாந்திகதயேஷ்யதே
த்ரைவர்க்யோ ‘ர்தோ யதோ நித்யம் க்ராந்த-பய-ஸம்யுத:

தத்ர—அங்கு; அபி—கூட; மோக்ஷ:—விடுதலை; ஏவ—உறுதியாக; அர்த்தே—விஷயத்திற்காக; ஆத்யந்திகதயா—மிக முக்கியத்துவம் வாய்ந்தது; இஷ்யதே—அந்தவழியில் எடுத்துக்கொண்டு; த்ரை-வர்க்ய:—மற்ற மூன்றும், சமயம், பொருள்வளம், புலன்நுகர்ச்சி; அர்த்த:—ஆர்வம்; யத:—எங்கிருந்து; நித்யம்—தொடர்ந்து; க்ருத—அந்த மரணம்; பய—பயம்; ஸம்யுத:—பற்று.

இந்நான்கு கொள்கைகளில், அதாவது சமயம், பொருள்வளம், புலன் நுகர்ச்சி மற்றும் விடுதலை என்பவற்றில், விடுதலை ஒன்றினை மட்டுமே நாம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் மற்ற மூன்றும் இயற்கையின் விலக்கொணாத சட்டமான மரணத்திற்கு ஆட்படுபவைகளாகும்.

பதம் 4.22.36
பரே ‘வரே ச யே பாவா குண-வ்யதிகராத் அனு
ந தெஷாம் வித்யதே க்ஷேமம் ஈஸ-வித்வம் ஸிதாஸிஷாம்

பரே—உணர்ந்த வாழ்க்கை நிலையில்; அவரே—கீழ்நிலையுடைய வாழ்க்கை; ச—மேலும்; வ்யதிகாரத்—ஒன்றின்மேல் மற்றொரு செயலினால்; அனு—பின்தொடர்ந்து; ந—இல்லை; தேஷாம்—அவைகளின்; வித்யதே—வெளிப்பாடு; க்ஷேமம்—திருத்தம்; ஈஸ—பரமபுருஷர்; வித்வம்ஸித—அழிகிறது; ஆஸிஷாம்—ஆசிகளினால்.

இழிந்த வாழ்க்கை நிலைகளிலிருந்து வேறுபாடுடைய உயர்ந்த வாழ்வு நிலைகளை நாம், ஆசிகளாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த வேறுபாடுகள் எல்லாம் ஜட இயற்கைக் குணங்களின் பரஸ்பர மாற்றத்தினால் உண்டாகின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில் வாழ்வின் இதுபோன்ற உயர்ச்சி தாழ்ச்சிகள் எல்லாம் நிரந்தரமானவையன்று. ஏனென்றால் இவைகள் எல்லாம் பரமபுருஷ பகவானால் ஒரு நாள் அழிக்கப்படும்.

பதம் 4.22.37
தத் த்வம் நரேந்த்ர ஜகதாம் அத தஸ்தூஷாம்ச
தேஹேந்த்ரியாஸீ திஷணாத்மபிர் ஆவ்ருதானாம்
ய: க்ஷேத்ரவித்-தபதயா ஹ்ருதி விஸ்வக் ஆவி:
ப்ரத்யக் சகாஸ்தி பகவாம்ஸ் தம் அவேஹி ஸோ ‘ஸ்மி

தத்—ஆகையினால்; த்வம்—நீ; நா-இந்த்ர—அரசர்களிச் சிறந்தோனே; ஜகதாம்—அசைகின்ற; அத—ஆகையினால்; தஸ்தூஷாம்—அசைவற்ற; ச—மேலும்; தேஹ—உடல்; இந்த்ரிய—புலன்கள்; அஸீ—மூச்சுக்காற்று; திஷணா—கவனிக்கும் பொழுது; ஆத்மபி:—ஆத்மவுணர்வு; ஆவ்ருதானம்—இவ்வாறு மறைக்கப்பட்டவர்கள்; ய:—யார்; க்ஷேத்ர-வித்—இடத்தை அறிந்தவர்; தபதயா—கட்டுப்படுத்துவதினால்; ஹ்ருதி—இதயத்தினுள்; விஸ்வக்—எங்கும்; ஆவி:—தோன்றுகிறது; ப்ரத்யக்—ஒவ்வொரு உரோமத்தின் அடிவேரிலும்; சகாஸ்தி—ஒளிர்கிறது; பகவான்—முழுமுதற் கடவுள்; தம்—அவருக்கு; அவேஹி—புரிந்து கொள்ளும் முயற்சி; ஸ: அஸ்மி—நானே அது.

சனத் குமாரர் அரசருக்கு அறிவுறுத்துகிறார்: ஆகையினால் எனது அன்பிற்குரிய பிருது மன்னனே! அசையும் அசையா உயிர்களின் உடல்களினுள் இருக்கும் ஆத்மாக்களுடன் சேர்ந்து ஒவ்வொருவர் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் முழுமுதற் கடவுளை அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்வாயாக. ஒவ்வொருவர் ஆத்மாவும் பஞ்ச பூதங்களால் ஆன உடலாலும், மூச்சுக்காற்று மற்றும் புத்தி என்னும் நுண்மையான உடலினாலும் மூடப்பட்டிருக்கின்றது.

பதம் 4.22.38
யஸ்மின்ன் கிதம் ஸத்-அஸத்-ஆத்மதயா விபாதி
மாயா விவேக-விதுதிஸ்ரஜி வாஹி-பித்தி:
தம் நித்ய-முக்த-பரிஸீத்த-விஸீத்த தத்த்வம்
ப்ரத்யூத-கர்ம-கலில-ப்ரக்ருதிம் ப்ரபத்யே

யஸ்மின்—எதில்; இதம்—இந்த; ஸத்-அஸத்—பரமபுருஷரும் அவரது பல்வேறு சக்திகளும்; ஆத்மதயா—எல்லாக் காரணங்களுக்கும்; அதன் செயல்களுக்கும் ஆணிவேராக இருப்பவர்; விபாதி—ஆழ்ந்து ஆராய்ந்து விடுதலைப்படுதல்; ஸ்ரஜி—கயிற்றில்; வா—அல்லது; அஹி-—நாகம்; புத்தி:—புத்தி; தம்—அவருக்கு; நித்ய—நித்யம்; முக்த—விடுதலை; பரிஸீத்த—மாசுபெறாது; விஸீத்த—தூய்மையான; தத்த்வம்—உண்மை; ப்ரத்யூத—உன்னதமான; கர்ம—பலன் தரும் செயல்கள்; கலில—அசுத்தமானவை; ப்ரக்ருதிம்—ஆன்மீக சக்தியில் நிலைபேறுடையது; ப்ரபத்யே—அடைக்கலம் அடைதல்.

இந்த உடலிலேயே காரணமாகவும் அதன் விளைவாகவும் முழுமுதற் கடவுள் தன்னைத் தோன்றச் செய்கிறார், ஆழ்ந்த ஆராய்ச்சியினால் ஒருவன் இந்த மாயையின் ஆற்றலைக் கடந்து விடுவானானால், பாம்பைக் கயிறாக எண்ணும் தவறானக் கருத்து அவனை விட்டு விலகுகிறது. அதன்பிறகு அவன் முழுமுதற் கடவுளானவர் பெளதீகப் படைப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி தூய அகச் சக்தியில் நித்தியமாக இருப்பவர் என்பதைப் புரிந்து கொள்வான். இவ்வாறு பகவான் ஜடத்தின் மாசுக்கள் அனைத்துக்கும் மேலாகவே இருக்கின்றார். அவரையே ஒருவன் சரணடைதல் வேண்டும்.

பதம் 4.22.39
யத்-பாத-பங்கஜ-பலாஸ-விலாஸ பக்த்யா
கர்மாஸயம் க்ரதிதம் உத்க்ரதயந்தி ஸந்த:
ததவன் ந ரிக்த-மதயோ யதயோ ‘பிருத்த
ஸ்ரோதோ-கணாங் தம் அரணம் பஜ வாஸீதேவம்

யத்—எவரது; பாத—பாதம்; பங்கஜ—தாமரை; பலாஸ—இதழ்கள் அல்லது விரல்கள்; விலாஸ—ஆனந்தம்; பக்த்யா—பக்தித் தொண்டினால்; கர்ம—பலன்தரும் செயல்கள்; ஆஸயம்—ஆசை; க்ரதிதம்—கடினமான முடிச்சு; உத்க்ரதயந்தி—முற்றிலும் இல்லாது; ஸந்த:—பக்தர்கள்; தத்—அந்த; வத்—போல; ந—இல்லை; ரிப்தமதய:—பக்தித்தொண்டு செய்யாதிருப்போர்; யதவ:—எப்போதும் அதிகரிக்கின்ற; அபி—இருந்தாலும்; ருத்த—நிறுத்தப்பட்டது; ஸ்ரோத:-கணா:—புலன் இன்பத்தின் அலைகள்; தம்—அவருக்கு; அரணம்—சரணடைவதற்கரிய தகுதியுடையது; பஜ—பக்தித் தொண்டில் ஈடுபடுவது; வாஸீதேவம்—வாசுதேவரின் மைந்தரான கிருஷ்ணருக்கு.

பகவானின் தாமரைத் திருவடிகளிலுள்ள விரல்களுக்கு எப்போதும் பக்தித் தொண்டு செய்யும் பக்தர்களால் பலன்தரும் செயல்களின் மீதான வன்மைமிக்க ஆசையினை வெல்ல முடியும். இது மிகவும் கடினமானது. ஆதலினால் ஞானிகள், யோகிகள் போன்ற அப்பக்தர்கள் என்னதான் புலனுகர்ச்சி அலைகளைத் தடுத்து நிறுத்த முயன்ற போதிலும், அவர்களுக்கு அது முடியாது. அதனால் நீ, வசுதேவரின் மைந்தரான கிருஷ்ணரின் பக்தித் தொண்டில் ஈடுபடுவாயாக.

பதம் 4.22.40
க்ருச்ச்ரோ மஹான் பவார்நவம் அப்லவேஸாம்
ஷட்-வர்க-நக்ரம் அஸீகேநன திதீர்ஷந்தி
தத்த்வம் ஹரேர் பகவதோ பஜனீயம் அங்க்ரிம்
க்ருத்வோடுபம் வ்யஸனம் உத்தர துஸ்தரார்ணம்

க்ருச்ச்ர:—துன்பத்திற்குரியது; மஹான்—மிகஉயர்ந்த; இஹ—இங்கே (இந்த வாழ்க்கையில்); பவ அர்நவம்—பௌதீக வாழ்க்கைக் கடல்; அப்லவ-ஈஸாம்—முழுமுதற் கடவுளின் திருவடித்தாமரைகளைச் சரண் அடையாத, பக்தரல்லாதார்; ஷட்-வர்க—ஆறு புலன்கள்; நக்ரம்—சுறாமீன்கள்; அஸீகேன—மிக்கடினமாக; திதீர்ஷந்தி—கடப்பதற்கு; தத்—ஆகையினால்; த்வம்—நீ; ஹரே:—முழுமுதற் கடவுளின்; பகவத:—பரமபுருஷரின்; பஜனீயம்—பிரார்த்திப்பதற்குத் தகுதியான; அங்க்ரிட்—தாமரைத்திருவடி; க்ருத்வா—ஆக்கிக் கொண்டு; உடுபம்—படகு; வ்யஸனம்—எல்லாவிதமான ஆபத்துக்களில் இருந்தும்; உத்தர—கடப்பதற்கு; துஸ்த—மிகக்கடினம்; அர்ணம்—கடல்.

அறியாமைக் கடலானது கடப்பதற்கு மிகவும் அரியதொன்றாகும். ஏனென்றால் அது பயங்கரமான சுறாமீன்களால் நிரப்பப்பட்டிருக்கின்றது. பக்தர்கள் அல்லாதவர்கள் அதனைக் கடப்பதற்குப் பல்வேறு கடினமான தவங்கள், நோன்புகள் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கு எங்கள் எளிய பரிந்துரை என்னவென்றால், பகவானின் தாமரைத் திருவடிகளைச் சரண் அடையுங்கள், அவைகள் அக்கடலைக் கடப்பதற்கு உதவும் படகுகளாகும். அக்கடலைக் கடப்பது மிகவும் கடினமானதுதான். இருந்தாலும் அவரது தாமரைத் திருவடிகளைத் தஞ்சம் அடையும் பொழுது நீங்கள் எல்லா ஆபத்துக்களையும் கடந்து விடலாம்.

பதம் 4.22.41
மைத்ரேய உவாச
ஸ ஏவம் ப்ரஹ்ம-புத்ரேண குமாரேணாத்ம-மேதஸா
தர்ஸிதாத்ம-கதி: ஸம்யக் ப்ரஸஸ்யோவாச தம் ந்ருப:

மைத்ரேய உவாச—மைத்ரேய மாமுனிவர் கூறினார்; ஸ:—மன்னர்; ஏவம்—இவ்வாறு; ப்ரஹ்ம—புத்ரேன; பிரம்மதேவரின்—மைந்தன்; குமாரேண—குமாரர்களின் ஒருவரால்; ஆத்ம-மேதஸா—ஆன்மீக அறிவில் உயர்ந்த தேர்ச்சி பெற்றவர்; தர்ஸித—காட்டப்பட்டது; ஆத்ம-கதி:—ஆன்மீக உயர்வுக்கு; ஸம்யக்—முற்றிலும்; ப்ரஸஸ்ய—பிரார்த்தித்து; உவாச—கூறினார்; தம்—அவருக்கு; ந்ருப:—அரசர்.

மைத்ரேய மாமுனிவர் கூறினார்: இவ்வாறு பிரம்மதேவரின் மைந்தரும், ஆன்மீக அறிவில் உயர்ந்த தேர்ச்சி பெற்றவருமான நான்கு குமாரர்களில் ஒருவரால் ஆன்மீக ஒளி ஏற்றப்பட்டவுடன் பிருத மகாராஜா அவர்களை வணங்கிக் கீழ்க்கண்ட வார்த்தைகளைக் கூறலுற்றார்.

பதம் 4.22.42
ராஜோவாச
க்ருதோ மே ‘னுக்ரஹ: பூர்வம் ஹரிணார்தானுகம்பினா
தம் ஆபாதயிதும் ப்ரஹ்மன் பகவன் யூயம் ஆகதா:

ராஜா உவாச—மன்னர் கூறினார்; க்ருத:—நிறைவேறியது; மே—எனக்கு; அனுக்ரஹ:—அளவற்ற கருணை; பூர்வம்—முன்னர்; ஹரிணா—முழுமுதற் கடவுள் பகவான் விஷ்ணுவினால்; ஆர்த-அனுகம்பினா—துன்பத்தினால் வருந்துவோர் மீது கருணை கொண்டு; தம்—அந்த; ஆபாதயிதும்—உறுதி செய்தார்; ப்ரஹ்மன்—ஓ, அந்தணரே; பகவன்—சக்திவாய்ந்தவரே; யூயம்—நீங்கள் எல்லோரும்; அகாதா:—இங்கே வாசம் செய்திருக்கின்றீர்.

மன்னர் கூறினார்: ஓ அந்தணரே, ஆற்றல் மிக்கவரே, முன்னர் பகவான் விஷ்ணு என்மீது கொண்ட தனது அளவற்ற கருணையினால், நீங்கள் எல்லோரும் எனது மாளிகைக்கு வரவிருப்பதாகக் குறிப்பிட்டார். அதுபோல் நீங்கள் வந்ததின் மூலம் அவ்வாசையினைப் பூர்த்தி செய்துள்ளீர்கள்.

பதம் 4.22.43
நிஷ்பாதிதஸ் ச கார்த்ஸீன்யேன பகவத்பிர் க்ருணாலுபி:
ஸாதூச்சிஷ்டம் ஹி மே ஸர்வம் ஆத்மனா ஸஹ கிம் ததே

நிஷ்பாதிதச—அக்கட்டளையினை முறையாக நிறைவேற்றி; கார்த்ஸீன்யேன—முற்றிலும்; பகவத்பி:—முழுமுதற் கடவுளின் பிரதிநிதியினால்; க்ருணாலுபி:—அளவற்ற கருணையினால்; ஸாது-உச்சிஷ்டம்—தெய்வீக அருளாளர்களின் உணவின் மிச்சம்; ஹி—உறுதியாக; மே—என்னுடையது; ஸர்வம்—எல்லாம்; ஆத்மனா—மனமும் ஆத்மாவும்; ஸஹ—உடன்; கிம்—என்ன; ததே—கொடுப்பது.

எனது அன்பிற்குரிய அந்தணரே, நீர் பகவானைப் போல் கருணையுடையவர் ஆதலின் அக்கட்டளையினை முற்றிலும் நிறைவேற்றியிருக்கின்றீர். அதனால் உமக்கு காணிக்கையாக எதையாவது கொடுப்பது என் கடமையாகின்றது, ஆனால் என்னிடம் இருப்பதெல்லாம் தெய்வீக அருளாளர் பயன்படுத்திய மிச்ச உணவே அதனால் எதனை நான் கொடுப்பது?

பதம் 4.22.44
ப்ராணா தாரா: ஸீதா ப்ரஹ்மன் க்ருஹாஸ் ச ஸ-பரிச்சதா:
ராஜ்யம் பவம் மஹி கோஸ இதி ஸர்வம் நிவேதிதம்

ப்ராணா:—உயிர்; தாரா:—மனைவி; ஸீதா:—மைந்தர்கள்; ப்ராஹ்மன்—ஓ, சிறந்த அந்தணர்களே; க்ருஹா:—மாளிகை; ச—மேலும்; ஸ—உடன்; பரிச்சதா:—எல்லா அணிகலன்களும்; ராஜ்யம்—அரசு; பலம்—ஆற்றல்; மஹி—நிலம்; கோஸ:—கஜானா; இதி—இவ்வாறு; ஸர்வம்—எல்லாம்; நிவேதிதம்—அர்ப்பணிக்கின்றேன்.

மன்னர் தொடர்ந்தார்: ஆகையினால் எனது அன்பிற்குரிய அந்தணர்களே, எனது உயிர், மனைவி, மக்கள், வீடு, அலங்கார அணிகலன்கள் குறிப்பாக எனது கருவூலம் எல்லாவற்றையும் உங்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்.

பதம் 4.22.45
ஸைனா-பத்யம் ச ராஜ்யம் ச தண்ட-நேத்ருத்வம் ஏவச
ஸர்வ-லோகாதிபத்யம் ச வேத-ஸாஸ்த்ர வித் அர்ஹதி

ஸைனா-பத்யம்—சேனாதிபதி பதவி; ச—மேலும்; ராஜ்யம்—நாட்டை ஆளும் அரசபதவி; ச—மேலும்; தண்ட—ஆள்வதற்கு; நேத்ருத்வம்—தலைமை; ஏவ—உறுதியாக; ச—மேலும்; ஸர்—எல்லாம்; லோக-அதிபத்யம்—உலகத்தின் அதிபதி; ச—மேலும்; வேத-ஸாஸ்த்ர-வித்—வேதங்களின் பொருளை உணர்ந்தவர்; அர்ஹதி—தகுதியுடையவர்.

வேதங்களில் கூறப்பட்டுள்ள அறநெறிகளை முற்றிலும் கற்றுணர்ந்த ஒருவரே, படைத்தளபதியாகவும், நாட்டை ஆள்பவராகவும் தண்டனை அளிப்பவராகவும் உலகத்திற்கே அதிபதியாகவும் வரக்கூடும். அப்படிப்பட்ட பிருது மகாராஜா தன்னிடமுள்ள எல்லாவற்றையும் குமாரர்களுக்கு அர்ப்பணித்தார்.

பதம் 4.22.46
ஸ்வம் ஏவ ப்ராஹ்மணோ புங்க்தே ஸ்வம் வஸ்தே ஸ்வம் ததாதி ச
தஸ்யைவா நுக்ரஹேணான்னம் புஞ்ஜத க்ஷத்ரியாதய:

ஸ்வம்—தமது; ஏவ—உறுதியாக; ப்ராஹ்மண:—அந்தணர்; புங்க்தே—அனுபவிப்பது; ஸ்வம்—தமது; வஸ்தே—ஆடை; ஸ்வம்—தமது; ததாதீ—தானமாகக் கொடுப்பது; ச—மேலும்; தஸ்ய—அவருடையது; ஏவ—உறுதியாக; அநுக்ரஹேண—கருணையினால்; அன்னம்—உணவு தானியங்கள்; புஞ்ஜதே—உண்பது; க்ஷத்ரிய-ஆதய:—க்ஷத்ரியர்களின் கீழுள்ள சமுதாயத்தின் மற்றப்பிரிவுகள்.

சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் போன்றோர் அந்தணர்களின் அளவற்ற கருணையினாலேயே தங்கள் உணவினை உண்கின்றனர். அந்தணர்கள் தங்கள் சொந்த சொத்துக்களின் மூலமே மகிழ்ச்சியடைகின்றனர், தங்கள் சொந்த சொத்துக்களின் மூலம் வரும் ஆடைகளையே உடுத்துகின்றனர், தங்கள் சொந்தச் சொத்துக்களில் இருந்தே தானம் வழங்குகின்றனர்.

பதம் 4.22.47
யைர் ஈத்ருஸீ பகவதோ கதிர் ஆத்ம-வாத
ஏகாந்ததோ நிகம்பி: ப்ரதிபாதிதா ந:
துஷ்யந்தவ அதப்ர-கருணா: ஸ்வ க்ருதேன நித்யம்
கோ நாம தத் ப்ரதிகரோதி விநோத-பாத்ரம்

யை:—அவர்களால்; ஈத்ருஸீ—அத்தன்மை கொண்ட; பகவத:—முழுமுதற் கடவுள்; கதி:—வளர்ச்சி; ஆத்ம-வாதே—ஆன்மீகக் கருத்து; ஏகாந்த:—முற்றும் உணர்ந்த; நிகம்பி—வேத ஆதாரங்கள்; ப்ரதிபாதிதா—முடிவாக நிலைநிறுத்தப்பட்டு; ந:—நமக்கு; துஷ்யந்து—திருப்திஅடைய; அதப்ர—அளவில்லாத; கருணா:—கருணை; ஸ்வ-க்ருதேன—உங்களது செயலினால்; நித்யம்—நித்தியம்; க:—யார்; நாம—எவருமிலர்; தத்—அது; ப்ரதிகரோதி—எதிர்ச்செயல்; விநா—இன்றி; உத-பாத்ரம்—குவிந்த கரங்களினால் தண்ணீர் தருவது.

பிருது மகாராஜா தொடர்ந்து கூறினார்: முழுமுதற் கடவுளுக்குத் தொடர்புடைய ஆத்ம உணர்வுப் பாதையை, வேதங்களின் ஆதாரத்தின் அடிப்படையில் மனித சமுதாயம் மெய்யறிவு பெறவேண்டும் என்பதற்காக விளங்குவதின் மூலம், அளப்பரிய சேவைசெய்யும் மகான்களுக்குக் கைம்மாறாக அவர்களைத் தொழுவதைத்தவிர, வேறு என்ன செய்ய முடியும்? அப்படிப்பட்ட மகான்கள் அவர்களின் செயல்களின் மூலமே திருப்தியடைய முடியும். அச்செயல்கள் அவர்களது அளவற்ற கருணையினால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்படுகின்றன.

பதம் 4.22.48
மைத்ரேய உவாச
த-ஆத்ம-யோக பதய ஆதி-ராஜேன பூஜிதா:
ஸீலம் ததீயம் ஸம்ஸந்த: கே ‘பவன் மிஷதாம் ந்ருணாம்

மைத்ரேய: உவாச—மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்; தே—அவர்கள்; ஆத்ம-யோக-பதய:—பக்தித் தொண்டின் மூலம் ஆத்ம உணர்வின் நாயகர்கள் ஆனவர்கள்; ஆதி-ராஜேன—ஆதி மன்னரால் (பிருது); பூஜிதா:—வணங்கப்பட்டு; ஸீலம்—குணம்; ததீயம்—மன்னரின்; ஸம்ஸந்த:—புகழ்ந்து கொண்டு; கே—வானத்தில்; அபவன்—தோன்றினர்; மிஷதாம்—கவனிக்கும் பொழுது; ந்ருணம்—மக்களுடைய.

மாமுனிவர் மைத்ரேயர் தொடர்ந்து கூறுகிறார்: மகாராஜா பிருதுவினால் இவ்வாறு வணங்கப்பட்டவுடன் பக்தித் தொண்டின் நாயகர்களான நான்கு குமாரர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையில் அவர்கள் வான்வெளியில் தோன்றி பிருது மன்னரின் குணநலன்களை மிகவும் பாராட்டிப் பேசினர். அவைகளை எல்லோரும் கவனித்தனர்.

பதம் 4.22.49
வைன்யஸ் து துர்யோ மஹதாம் ஸம்ஸ்தித்யாத்ம-ஸிக்ஷயா
ஆப்த-காமம் இவாத்மானம் மேன ஆத்மனி அவஸ்தித:

வைன்ய:—வேன மகாராஜாவின் மைந்தன் (பிருது); து—உண்மையில்; துர்ய:—தலைவர்; மஹதாம்—உயர்ந்தவர்களில்; ஸம்ஸ்தித்யா—முற்றிலும் நிறுத்தப்பட்டு; ஆத்யாத்ம-ஸிக்ஷயா—ஆத்ம உணர்வு விஷயத்தில்; ஆப்த—அடைந்தார்; காமம்—ஆசைகள்; இவ—போல; ஆத்மானம்—சுயதிருப்தியில்; மேனே—கவனத்தில்; ஆத்மனி—ஆத்மாவில்; அவஸ்தித:—இருத்தல்.

உயர்ந்த மனிதர்களுக்கு நடுவே மகாராஜா பிருது நடுநாயகமாக விளங்கினார். காரணம் ஆன்மீக ஞானத்தில் அவர் உறுதியுடன் நிலை பெற்றிருந்ததுவேயாகும். ஆன்மீக உணர்வில் முழு வெற்றி எய்தப்பெற்றமையினால் அவர் முழுத் திருப்தியுடன் இருந்தார்.

பதம் 4.22.50
கர்மாணி ச யதா-காலம் யதா-தேஸம் யதா பலம்
யதோச்சிதம் யதா-வித்தம் அகரோத் ப்ரஹ்ம-ஸாத்-க்ருதம்

கர்மாணி—செயல்கள்; ச—கூட; யதா—காலம் காலத்திற்கும்; சூழ்நிலைக்கும் பொருந்துகின்ற; யதா-தேஸம்—இடத்திற்கும் நிலைமைக்கும் பொருந்துகின்ற; யதா-பதம்—ஒருவரது சக்திக்கேற்ற; யதா-உசிதம்—சாத்தியமாகின்ற அளவு; யதா-வித்தம்—இது சம்பந்தமாக எவ்வளவு பணம் செலவழிக்க முடியுமோ அவ்வளவு; அகரோத்—செய்யப்பட்டது; ப்ரஹ்ம-ஸத்—முழுமெய்ப்பொருளின்; க்ருதம்—செய்தது.

ஆத்ம திருப்தியுடன் பிருது மகாராஜா தன்னுடையக் கடமைகளை எத்தனை நிறைவாகச் செய்ய வேண்டுமோ அத்தனை நிறைவாக, காலத்திற்கும் நிலைமைக்கும் ஏற்றவாறும், தன்னுடைய வலிமைக்கும் பொருள் வசதிக்கும் தக்கவாறும் செய்துவந்தார். முழுமெய்ப் பொருளைத் திருப்திப்படுத்துவது ஒன்றே அவர் குறிக்கோளாக இருந்தது. இவ்வழியிலேயே அவர் செயல்பட்டார்.

பதம் 4.22.51
பலம் ப்ரஹ்மணி ஸன்ன்யஸ்ய நிர்விஷங்க: ஸமாஹித:
கர்மாத்யக்ஷம் ச மன்வான ஆத்மானம் ப்ரக்ருதே: பரம்

பலன்—பலன்; ப்ரஹ்மணி—முழுமெய்ப்பொருளின்; ஸன்ன்யஸ்ய—விட்டுவிடுதல்; நிர்விஷங்க:—மாசுபடியாமல்; ஸமாஹித:—முழு அர்ப்பணிப்புடன்; கர்ம—செயல்; அத்யக்ஷம்—கண்காணிப்பாளர்; ச—மேலும்; மன்வான:—எப்போதும் நினைத்துக் கொண்டு; ஆத்மானம்—பரமாத்மா; ப்ரக்ருதே:—ஜட இயற்கையின்; பரம்—உன்னதமான.

மகாராஜா பிருது ஜட இயற்கை கடந்த முழுமுதற் கடவுளுக்குத் தன்னை ஒரு நித்தியத் தொண்டனாக முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர். இதனைத் தொடர்ந்து அவர் செய்யும் செயல்களின் பலன்கள் எல்லாம் பகவானுக்கே அர்ப்பணிக்கப்பட்டன; அவர் எப்போதும் தன்னை எல்லாவற்றிற்கும் எஜமானராக விளங்கும் முழுமுதற் கடவுளின் தொண்டராகவே நினைத்தார்.

பதம் 4.22.52
க்ருஹேஷீ வர்த்தமனோ ‘பி ஸ ஸாம்ராஜ்ய-ஸ்ரியான்வித: நாஸஜ்ஜதேந்திரியார் தேஷீ நிரஹம்-மதிர் அர்கவத்

க்ருஹேஷீ—இல்லத்தில்; வர்த்தமான:—இருந்துகொண்டு; அபி—இருந்தாலும்; ஸ:—பிருது மன்னர்; ஸாம்ராஜ்ய—தனது ஆட்சி முழுவதும்; ஸ்ரியா—செல்வம்; அன்வித:—அமிழ்ந்தது; ந—இல்லை; அஸஜ்ஜத—கவரப்பட்டது; இந்திரிய-அர்தேஷீ—புலன்நுகர்ச்சிக்காக; நி:—இல்லை; அஹம்—நான்; மதி:—கவனம்; அர்க—சூரியன்; வத்—போல.

பிருது மகாராஜா தனது ஆட்சி முழுவதும் செழிப்பாக விளங்கினமையால் ஏராளமான செல்வவளம் பெற்றிருந்தும் ஒரு சாதாரண இல்லறத்தானாகவே தனது இல்லத்தில் இருந்தார். அவர் தனது செல்வங்களைத் தன் புலன்நுகர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. அவர் எப்போதும், ஒரு சூரியன் எவ்வாறு சூழ்நிலைகளினால் பாதிக்கப்படுவதில்லையோ அவ்வாறு ஒரு பற்றற்றவராகவே தன்னை வைத்திருந்தார்.

பதம் 4.22.53
ஏவம் அத்யாத்ம-யோகேன கர்மணி அநுஸமாசரன
புத்ரான் உத்பாதயாம் ஆஸ பாஞ்சார்சிஷி ஆத்ம-ஸம்மதான்

ஏவம்—இவ்வாறு; அத்யாத்ம-யோகேன—பக்தியோகத்தின் மூலம்; கர்மணி—செயல்கள்; அநு—எப்போதும்; ஸமாசரண்—செய்வது; புத்ரான்—மைந்தர்கள்; உத்பாதயாம் ஆஸ—பெற்றெடுப்பது; பாஞ்ச—ஐந்து; அர்சிஷி—அவனுடைய மனைவியின், அர்சி; ஆத்ம—சொந்தம்; ஸம்மதான்—அவனது விருப்பத்திற்கேற்ப.

பக்தித் தொண்டில் விடுதலை பெற்ற நிலையில் வாழ்ந்த பிருது மகாராஜா பலன் தரும் செயல்கள் அனைத்தையும் செய்ததோடு ஐந்து மைந்தர்களையும் தன் மனைவி அர்சி என்பாள் மூலம் பெற்றெடுத்தார். உண்மையில் அந்த ஐந்து மைந்தர்களையும் அவர் விருப்பத்திற்கேற்றவாறே பெற்றெடுத்தார்.

பதம் 4.22.54
விஜிதாஸ்வம் தூம்ரகேஸம் ஹர்யக்ஷம் த்ரவிணம் வ்ருகம்
ஸர்வேஷாம் லோக-பாலானாம் ததாரைக ப்ருதுர் குணான்

விஜிதாஸ்வம்—விஜிதாஸ்வன் என்ற பெயரில்; தூம்ரகேஸம்—தூம்ரகேஸன் என்ற பெயரில்; ஹர்யக்ஷம்—ஹர்யக்ஷன் என்ற பெயரில்; த்ரவிணம்—திரவிணன் என்ற பெயரில்; வ்ருகம்—விருகன் என்ற பெயரில்; ஸர்வேஷாம்—அவர்கள் அனைவரும்; லோகபாவானாம்—எல்லா உலகங்களின் தலைவர்களாக; ததார—ஏற்றுக் கொண்டு; ஏக:—ஒன்று; ப்ருத:—பிருது மகாராஜா; குணான்—எல்லாக் குணங்களும்.

தனது ஐந்து மைந்தர்களான விஜிதாஸ்வன், தூம்ரகேஸன், ஹர்யக்ஷன், திரவிணன் மற்றும் விருகன் போன்றவர்களைப் பெற்றெடுத்தப் பிறகும் பிருது மகாராஜா இவ்வுலகைத் தொடர்ந்து ஆண்டு வந்தார். அவர் மற்ற உலகங்களைச் சேர்ந்த தேவதைகளின் எல்லாக் குணங்களையும் ஏற்றுக் கொண்டார்.

பதம் 4.22.55
கோமீதாய ஜகத்-ஸ்ருஷ்டே: காலே ஸ்வே ஸ்வே ‘ச்யுதாத்மக:
மனோ-வாக்-வ்ருத்திபி: ஸெளம்யைர் குணை: ஸம்பரஞ்ஜயன் ப்ரஜா:

கோபீதாய—பாதுகாப்பதற்காக; ஜகத்-ஸ்ருஷ்டே:—உயர்ந்தபடைப்பாளர்; காலே—காலத்தில்; ஸ்வேஸ்வே—சொந்தமாக; அச்யுத-ஆத்மக:—கிருஷ்ண உணர்வோடு; மன:—மனம்; வாக்—வாக்கு; வ்ருத்திபி:—செயலினால்; ஸௌம்யை:—உயர்ந்த பெருந்தன்மையுடன்; குணை:—குணத்தினால்; ஸம்ரஞ்ஜயன்—மகிழ்கின்ற; ப்ரஜா:—குடிமக்கள்.

பிருது மகாராஜா முழுமுதற் கடவுளின் தூய பக்தராக விளங்கினமையினால் பகவானின் படைப்பான பல்வேறு குடிமக்களையும் அவர்களது பல்வேறு ஆசைகளை நிறைவேற்றி அவர்களை மகிழச் செய்வதின் மூலம் பாதுகாக்க விரும்பினார். எனவே பிருது மகாராஜா தனது மனம், வாக்கு, செயல் மற்றும் நடத்தையின் மூலம் அவர்களை எல்லா வழிகளிலும் மகிழச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பதம் 4.22.56
ராகேதி அதான்நாமதேயம் ஸோம-ராஜ இவாபர:
ஸீர்யவத் விஸ்ருஜன் க்ருஹ்ணன் ப்ரதபம்ஸ் ச புலோ வஸீ

ராஜா—அரசர்; இதி—இவ்வாறு; அதாத்—பெற்றார்; நாமதேயம்—சிறப்புப்பெயரை; ஸோம-ராஜ—சந்திர மண்டலத்தின் ராஜா; இவ—போல; அபர:—அதற்குப்பதிலாக; ஸீர்ய-வத்—சூரிய தேவனைப்போல; விஜ்ருஜன்—அளிக்கிறார்; க்ருஹன்——எடுத்துக் கொள்கிறது; ப்ரதபன்—ஆற்றல்மிகு ஆட்சியினால்; ச—மேலும்; புவ:—உலகின்; வஸீ—வருமானம்.

சந்திரமண்டலத்தின் மன்னர் ஸோமராஜனைப் போல் மகாராஜா பிருது கொண்டாடப்பட்டார். அவர் சூரியதேவன் எவ்வாறு வெம்மையையும் ஒளியையும் கொடுத்துவிட்டுப் பூமியில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொள்கிறானோ அதுபோல் பிருது மகாராஜாவும் ஆற்றலிலும் வரி வசூலிப்பதிலும் அவ்வாறே விளங்கினார்.

பதம் 4.22.57
துர்தர்ஷஸ் தேஜஸோக்னீர் மஹேந்த்ர இவ துர்ஜய:
திதிக்ஷயா தரித்ரீவ த்யெளர் இவாபீஷ்ட-தோ ந்ருணாம்

துர்தர்ஷ:—வெற்றிகொள்ள முடியாதவர்; தேஜஸா—வீரத்தில்; இவ—போல; அக்னி:—நெருப்பு; மஹா-இந்தர:—தேவேந்திரன், சொர்க்காதிபதி; இவ—போல; துர்ஜய:—தன்னேரில்லாதவர்; திதிக்ஷயா—பொறுமையினால்; தரித்ரீ—பூமி; இவ—போல; த்யென:—தேவலோகங்கள்; இவ—போல; அபீஷ்ட-த:—ஆசைகளை நிறைவேற்றினார்; ந்ருணாம்—மனித சமுதாயத்தின்.

நெருப்பினை எவ்வாறு ஒருவரால் வெற்றி கொள்ள முடியாதோ அதுபோல் பிருது மகாராஜாவின் ஆணையையும் யாராலும் மீற முடியாது. ஏனென்றால் அவர் ஆற்றலும் வலிமையும் மிக்கவராக விளங்கினார். யாராலும் வெல்ல முடியாத சொர்க்காதிபதி தேவேந்திரனை வலிமையில் நிகர்த்தவர். அதுபோல் பிருது மகாராஜா பொறுமையில் பூமியைப் போன்றவர். அவர் சொர்க்கத்தைப் போல பூமியில் வாழும் மனித இனத்தின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றினார்.

பதம் 4.22.58
வர்ஷதி ஸ்ம யதா-காமம் பர்ஜன்ய இவ தர்பயன்
ஸமுத்ர இவ துர்போத: ஸத்த்வேனாசல-ராட் இவ

வர்ஷதி—பெய்தல்; ஸ்ம—வழக்கம்; யதா-காமம்—ஒருவன் எவ்வளவு ஆசைப்பட முடியுமோ அவ்வளவு; பர்ஜன்ய:—நீர்; இவ—போல்; தர்பயன்—மகிழ்ந்து; ஸமுத்ர:—கடல்; இவ—போல; துர்போத:—புரியமுடியாத; ஸத்த்வேன—உறுதியுடன் இருக்கும் நிலையில்; அசல—மலை; ராட் இவ—மன்னரைப் போல.

மழைநீர் எவ்வாறு ஒருவனது விருப்பங்களை நிறைவேற்றுகின்றதோ அதுபோல் மகாராஜா பிருதுவும் எல்லோரின் விருப்பங்களையும் நிறைவேற்றினார். பிறரால் அறிந்துகொள்ள முடியாத ஆழமான கடலாகவும், உறுதியில் மலைகளின் ராஜா என்று சொல்லப்படும் மேருவைப் போன்றும் விளங்கினார்.

பதம் 4.22.59
தர்ம-ராட் இவ ஸிக்ஷாயாம் ஆஸ்சர்யே ஹிமவான் இவ
குவேர இவ கோஸாட்யோ குப்தார்தோ வருணோ யதா

தர்ம-ராட் இவ—(மரணதேவன்) யமதர்மராஜாவைப் போல; ஸிக்ஷாயாம்—கல்வியில்; ஆஸ்வர்யே—செல்வத்தில்; ஹிமவான்-இவ—இமவனைப் போல; குவேர:—செல்வத்தில் குபேரனை; இவ—போல; கோஸ-ஆட்ய:—செல்வங்களைப் பெற்றிருப்பதில்; குப்த-அர்த:—ரகசியம்; வருண:—வருணதேவன்; யதா—போல.

மகாராஜா பிருது கல்வியிலும் அறிவிலும் மரணத்தின் தேவனான யமராஜனைப் போன்றிருந்தார். செல்வ வளத்தில் அவர் இமவான் (இமயமலையின் அதிபதி) போல ஏராளமான மதிப்புமிக்க நகைகளையும், ஆபரணங்களையும் வைத்திருந்தார். குபேரபுரியின் தலைவன் குபேரனோடு ஒப்பிடக்கூடிய அளவிற்கு செல்வந்தராகத் திகழ்ந்தார். ரகசியங்களைக் காப்பதில் வருண பகவானை ஒத்திருந்தார்.

பதம் 4.22.60
மாதரிஸ்வேய ஸர்வாத்மா பலேன மஹாஸௌஜஸா
அவிஷஹ்யதயா தேவோ பகவான் பத-ராட் இவ

மாதரிஸ்வா—காற்று (வாயு); இவ—போல; ஸர்வ-ஆத்மா—எங்கும் வியாபித்திருப்பவர்; பலேன—உடல் வலிமையில்; மஹாஸா-ஓஜஸா—சக்தியிலும், துணிவிலும்; அவிஷஹ்யதயா—தடுக்கமுடியாத ஆற்றலில்; தேவ:—தேவர்; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; பூத—ராட் இவ—ருத்ரன் அல்லது சதாசிவனைப் போன்றவர்.

உடல் மற்றும் புலன் வலிமையில் பிருது மகாராஜா எங்கும், எதிலும் செல்லக் கூடிய காற்றினைப் போல் சக்தி மிக்கவர் ஆவார். தடுக்க முடியாத ஆற்றலில் அவர் சிவபெருமான் அல்லது சதாசிவனின் அவதாரமான எல்லாம் வல்ல இந்திரனைப் போன்றவர் ஆவார்.

பதம் 4.22.61
கந்தர்ப இவ ஸௌந்தர்யே மனஸ்வீ ம்ருக-ராட் இவ
வாத்ஸல்யே மனுவன் ந்ருணாம் ப்ரபுத்வே பகவான் அஜ:

கந்தர்ப:—மன்மதன்; இவ—போல; ஸௌந்தர்யே—அழகில்; மனஸ்வீ—நினைவாற்றலில்; ம்ருக-ராட்-இவ—விலங்குகளின் அரசன் சிங்கத்தைப் போன்றவர்; ந்ருணாம்—மனித சமுதாயத்தின்; ப்ரபுத்வே—அடக்கியாள்வதில்; பகவான்—பகவான்; அஜ:—பிரம்ம தேவன் போன்றவர்.

அழகில் அவர் மன்மதனைப் போன்றவர், நினைவாற்றலில் சிங்கத்துக்கு நிகரானவர். பாசத்தில் அவர் ஸ்வாயம்புவ மனுவைப் போன்றவர். அடக்கியாளும் திறமையில் அவர் பிரம்மதேவனுக்கு ஒப்பானவர்.

பதம் 4.22.62
ப்ருஹஸ்பதிர் ப்ரஹ்ம வாதே ஆத்மவத்த்வே ஸ்வயம் ஹரி:
பக்த்யா கோ-குரு-விப்ரேஷு விஷ்வக்ஷேனானுவர்திஷு
ஹ்ரியா ப்ரஸ்ரய-ஸீலாப்யாம் ஆத்ம-துல்ய: படுராத்யமே

ப்ருஹஸ்பதி:—தேவலோகத்தின் தலைமை குரு; ப்ரஹ்ம-வாதே—ஆன்மீக உணர்வு விஷயங்களில்; ஆத்ம வத்த்வே—தன்னை அடக்குவதில்; ஸ்வயம்—தன்னை; ஹரி:—முழுமுதற்கடவுள்; பக்த்யா—பக்தியில்; கோ—பசு; குரு—குரு; விப்ரேஷு—அந்தணர்களுக்கு; விஷ்வக்ஷேண—முதற்கடவுள்; அனுவர்திஷு—அடியவர்கள்; ஹ்ரியா—கூச்ச சுபாவத்தில் ப்ரஸ்ரய-ஷீலாப்யாம்—பெருந்தன்மைமிக்க நடத்தையினால்; ஆத்ம-துல்ய:—தனது சுயநன்மையினைப் போல்; பர-உத்யமே—இரக்க சுபாவத்தில்.

தனிப்பட்ட நடத்தையில் பிருது மகாராஜா எல்லா நற்குணங்களையும் வெளிப்படுத்துபவராக விளங்கினார். ஆன்மீக அறிவில் அவர் பிரகஸ்பதியைப் போன்றவர். சுயக்கட்டுப்பாட்டில் அவர் முழுமுதற் கடவுளைப் போன்றவர். பக்தித் தொண்டைப் பொருத்தமட்டில் ஆன்மீக குருவிற்குத் தொண்டும், அந்தணர்களுக்குப் பணியும் பசுக்களைப் பாதுகாப்பது போன்ற புனிதச் செயலைச் செய்யும் பக்தர்களின் சிறந்த அடியவராக விளங்கினார். மனித இனத்தின் மீது இரக்கம் கொண்டு செய்யும் செயல்களில் அவை தனக்குச் செய்யப்படுவது போன்ற ஈடுபாட்டுடன் செய்பவர் ஆவார்.

பதம் 4.22.63
கீர்த்யோர்த்வ-கீதயா பும்பிஸ் த்ரைலோக்யே தத்ர தத்ர ஹ
ப்ரவிஷ்ட: கர்ண-ரந்த்ரேஷு ஸ்த்ரீணாம் நாம: ஸதாம் இவ

கீர்த்யா—புகழினால்; ஊர்த்வ-கீதாயா—பெரிய பாராட்டினை; பும்பி:—பொது மக்களால்; த்ரை-லோக்யே—பிரபஞ்சம் முழுவதும்; தத்ர தத்ர—இங்கும் அங்கும்; ஹ—நிச்சயம்; பிரவிஷ்ட:—பரவியது; கர்ண-ரந்த்ரேஷு—செவித்துளைகளில்; ஸ்த்ரீணாம்—பெண்களின்; ராம்:—பகவான் ராமச்சந்திர மூர்த்தி; ஸதாம்—பக்தர்களின்; இவ—போல.

மேலுலகம், நடுவுலகம், கீழுலகம் என்று இப்பிரபஞ்சம் முழுவதும் பிருது மகாராஜாவின் புகழ் பேசப்பட்டது. எல்லாப் பெண்களும், தெய்வீக அருளாளர்களும் பகவான் ராமச்சந்திர மூர்த்தியின் புகழ் கேட்டு எத்தனை இன்புறுவார்களோ அதேபோல் பிருது மகாராஜாவின் புகழினைக் கேட்டும் இன்புற்றார்கள்.

ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “பிருது மகாராஜாவை நான்கு குமாரர்கள் சந்தித்தல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்திரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare