அத்தியாயம் – 21
பிருது மகாராஜாவிடம் கட்டளைகள்
பதம் 4.21.1 : மகாமுனிவர் மைத்ரேயர் விதுரரிடம் கூறினார்: மன்னர் தன் நகருக்குள் வந்த பொழுது அந்நகரம் முத்துக்களாலும், மலர்களாலும், வாயில்கள் பொன்னாலும், அழகிய துணிமணிகளாலும் அலங்கரிக்கப்பட்டு நகரமெங்கும் தூப தீபங்களினால் நறுமணம் நிரம்பி இருந்தது.

பதம் 4.21.2 : அகுரு என்னும் மூலிகையிலிருந்து எடுத்த வாசனை திரவியமும், சந்தனமும் கலந்த பன்னீர் ரதவீதிகள், சந்துகள், சிறு நந்தவனங்கள் போன்று நகரின் எல்லா இடங்களிலும் தெளிக்கப்பட்டிருந்தன. அதோடு எங்கும், உரிக்காத பழங்களாலும், மலர்களினாலும், நனைந்த தானியங்களினாலும் பல்வேறு வகைக்கனிமப் பொருள்களினாலும் தீபங்களினாலும் இதுபோன்று மங்களப் பொருள்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

பதம் 4.21.3 : தெருக்களின் நான்முனை சந்துகளில் பழக்குலைகளும், மலர்களும், வாழைமரங்களும், பாக்குமரக்கிளைகளும், நிறைந்திருந்தன. இவைகளெல்லாம் சேர்த்து செய்யப்பட்ட அலங்காரங்கள் எங்கெங்கும் நிறைந்து காண்போர் கண்களைக் கவர்ந்தன.

பதம் 4.21.4 : மன்னர் தனது நகரின் வாயிலில் நுழையும் பொழுது குடிமக்கள் எல்லோரும் மங்களப் பொருட்களை, தீபங்கள், மலர்கள் மற்றும் இனிய தயிர்ப் பண்ணியங்கள் இவற்றைத் தத்தம் கைகளில் வைத்துக்கொண்டு வரவேற்றனர். அரசர் மேலும், அங்கம் முழுதும் தங்கமும் வைரமும் கொண்டு பூட்டிய அணிகளோடு குறிப்பாக அவர்கள் காதுகளில் ஆடும் குண்டலங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள வந்த மணமாகாத இள நங்கையாளர்களாலும் வரவேற்கப்பட்டார்.

பதம் 4.21.5 : அரசர் தன் அரண்மனைக்குள் நுழைந்த பொழுது சங்குகளும், துந்துபிகளும் முழங்கின. புரோகிதர்கள் வேத மந்திரங்களை முழங்கினர், புரோகிதர்கள் பல்வேறு வகைப் பிரார்த்தனைகள் செய்தனர். தன்னை வரவேற்க இத்துணை நிகழ்ச்சிகள் நடந்தும் அவைகளினால் அரசர் துளியளவு கூட பாதிக்கப்படவில்லை.

பதம் 4.21.6 : உயர்ந்த குடிமக்களும், சாதாரண குடிமக்களும் அரசனைத் தங்கள் இதயபூர்வமாக வரவேற்றனர். அரசரும் அவர்களுக்கு அவர்கள் விரும்பிய ஆசிகளை வழங்கினார்.

பதம் 4.21.7 : பிருது மன்னர் உயர்ந்த ஆத்மாக்களுக்கெல்லாம் உயர்ந்தவர் ஆவார். ஆகையினால் எல்லோராலும் வணங்கப்பட்டார். இப்பூமண்டலத்தை அவர் ஆளும்போது செயற்கரிய செயல்கள் பலவற்றை அவர் செய்தாலும் எப்போதும் பெருந்தன்மை உடையவராகவே விளங்கினார். அவர் எய்திய வெற்றிகளும், பெருமைகளும் இப்பிரபஞ்சம் முழுவதும் பரவியது அதன்பின்னர் இறுதியில் அவர் முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகளை அடைந்தார்.

பதம் 4.21.8 : ஸுத கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: ஓ, ஸௌனகரே, உயர்ந்த முனிவர்களின் தலைவரே, மைத்ரேய முனிவர் விதுரரிடம் உண்மையான அரசரும், முழுமையான தகுதி பெற்றவரும், பெருமைமிக்கவரும் உலகம் முழுவதும் புகழப்பட்டவருமான பிருது மகாராஜாவின் பல்வேறு செயல்களைப் பற்றிக் கூறியவுடன் சிறந்த பக்தரான விதுரர் மிகவும் பணிவுடன் மைத்ரேய முனிவரைப் பிரார்த்தித்து கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்கலானார்.

பதம் 4.21.9 : விதுரர் கூறினார்: எனது அன்பிற்குரிய அந்தணர் மைத்ரேயரே, மகாமுனிவர்களினாலும் அந்தணர்களாலும் பிருது மன்னர் அரியணையில் அமர்த்தப்பட்டதை நினைக்கும்பொழுது புத்தி மேன்மையடைகிறது. தேவர்கள் எல்லோரும் அவருக்கு அளித்த கணக்கிலடங்காத பரிசுகளோடு, பகவான் விஷ்ணுவிடமிருந்து தனிப்பட்ட முறையில் அவர் பெற்ற ஆற்றலினையும் சேர்த்து அவர்தன் செல்வாக்கினைப் பெருக்கிக் கொண்டார். இவ்வாறு அவர் இப்பூமியினை செழிக்கச் செய்தார்.

பதம் 4.21.10 : பிருது மகாராஜா தன் செயல்களினால் உயர்ந்தவராக விளங்கியதோடு, பெருந்தன்மை மிக்க முறையில் அவர் ஆட்சி செலுத்திய விதமும் எல்லா அரசர்களாலும், வெவ்வேறு உலகத்தைச் சேர்ந்த தேவர்களாலும் இன்றும் பின்பற்றப்படுகின்றன. அப்படி அவர் பெருமைகளைப் பற்றிக் கேட்க முயலாதவன் எங்கே இருக்கக் கூடும்? நானும் பிருது மகாராஜாவைப் பற்றி மேலும் மேலும் கேட்க விழைகின்றேன். ஏனென்றால் அவையெல்லாம் புனித மிக்கவையும், மங்களகரமானவையும் ஆகும்.

பதம் 4.21.11 : மகாமுனிவர் மைத்ரேயர் விதுரரிடம் கூறினார்: எனது அன்பார்ந்த விதுரனே, மகாராஜா பிருது, கங்கை, யமுனை என்ற இரு நதிகளுக்கும் இடையே இருந்த நிலப்பகுதியில் வாழ்ந்தார். எல்லாவித செல்வ வளங்களும் பெற்ற அவர் தனது கடந்த காலத்தில் செய்த புண்ணியச் செயலின் பலன்களைக் குறைப்பதற்காகத் தமது நல்லதிர்ஷ்டத்தை அனுபவிப்பது போல் தோன்றியது.

பதம் 4.21.12 : மகாராஜா பிருது ஓர் ஈடு இணையற்ற மன்னர் ஆவார். பூமிப்பந்தின் ஏழு தீவுகளையும் ஆள்வதற்கான செங்கோல் அவரிடம் இருந்தது. மகான்களும், அந்தணர்களும் முழுமுதற் கடவுளின் சந்ததியினரான வைணவர்களையும் தவிர, மாற்றுதற்குரிய அவரது கட்டளைகளை யாரும் மீற முடியாது.

பதம் 4.21.13 : ஒரு காலத்தில் பிருத மன்னர் மிகப் பெரிய வேள்வி ஒன்றினைச் செய்தார். அதில் வெவ்வேறு உலகத்தைச் சேர்ந்த தேவர்கள் மகாமுனிவர்கள், அந்தணர்கள் மற்றும் சிறந்த அரசர்கள் என்னும் ராஜ ரிஷிகள் எல்லோரும் குழுமி இருந்தனர்.

பதம் 4.21.14 : அப்பெரிய கூட்டத்தில் இருந்த பெரியவர்களை பிருது மகாராஜா அவரவர்க்கு உரியமுறையில் முதற்கண் வணங்கினார். அதன்பிறகு அவர் விண்மீன் கூட்டங்களுக்கிடையே வெண்ணிலவு எழுந்தாற் போல் அக்கூட்டத்தின் நடுவே எழுந்து நின்றார்.

பதம் 4.21.15 : பிருது மன்னரின் உடல் உயர்ந்தும், கட்டுறுதி வாய்ந்தும், கம்பீரமாகவும் இருந்தது. அவர் கரங்கள் நீண்டு அகன்று உறுதியாகவும், கண்கள் எழுஞாயிறு போல் ஒளிமிக்கனவாகவும் இருந்தன. அவர் மூக்கு கூர்மையாகவும் முகம் எழில் நிறைந்தும் அவரது தோற்றம் பொலிவு மிக்கதாகவும் இருந்தது புன்னகைக்கும் போது தெரியும் பற்கள் சீராக அமைந்திருந்தன.

பதம் 4.21.16 : பிருது மகாராஜாவின் மார்பு அகன்றும், இடுப்பு உறுதியுடையதாகவும், வயிற்றின் மீதுள்ள கோடுகள் ஆலமரத்தின் இலையினைப் போன்றும் இருந்தது. அவரது தொப்புள் சுழித்தும், ஆழமாகவும், தொடைகள் பொன்நிறமாகவும், மேல்பாதங்களின் முன்பகுதி வளைந்துமிருந்தது.

பதம் 4.21.17 : அவரது தலைமுடி கரிய வண்ணத்தில், சுருண்டு, சீராகவும், கழுத்து வெண் சங்கினைப்போல் மங்களகரமான வரிகள் கொண்டும் இருந்தது. விலை உயர்ந்த அரைக்கச்சை உடுத்தி தனது உடலின் மேல் பகுதியினை மெல்லிய துணியினால் அவர் போர்த்தி இருந்தார்.

பதம் 4.21.18 : வேள்வியைச் செய்வதற்கு பிருது மகாராஜா தீட்சை பெற்றவுடன் தனது உயர்ந்த ஆடை அணிகலன்களைக் கழற்றி தனியே வைத்தவுடன் அவர் உடல் வண்ணம் பார்வைக்குத் தெரிந்தது. கறுப்புமான் தோலின் இயற்கை மீது அவர் அமர்ந்து கொண்டு தனது விரல்களில் தர்ப்பைப் புல்லினால் ஆன பௌத்திரத்தை அணிந்து கொண்டது அவரது இயற்கை அழகினை மேலும் அதிகரித்தது. பார்ப்பவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. வேள்வியைத் தொடங்குவதற்கு முன்பாக என்னென்ன விதிமுறைகள் உள்ளனவோ அவை எல்லாவற்றையும் அவர் முறையாக நிறைவேற்றினார்.

பதம் 4.21.19 : கூடியிருந்த அனைவரின் மகிழ்ச்சியையும் அதிகரித்து அவர்களை உற்சாகப்படுத்துவது போல் அவர்கள் எல்லோரையும் விண்மீன்களின் மேல் வெண்பனித்துளிகள் சிதறி இருக்கின்றாற்போல் ஒளிரும் தன் இரு விழிகளினால் ஒரு முறை மேலோட்டமாகப் பார்த்தார். பிறகு அவர் தனது உற்சாகமான குரலினால் அவர்களிடம் பேசத் துவங்கினார்.

பதம் 4.21.20 : மகாராஜா பிருது ஆற்றிய உரை முழுவதும் உருவகம் போன்ற சொல்லணிகள் நிறைந்ததாகவும், தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், கேட்பதற்கு இனிமை பயப்பதாகவும் இருந்தது. அங்கிருந்த அனைவரும் நன்மை பெற வேண்டும் என்பதற்காக, முழுமெய்ப் பொருளை உணர்ந்த தமது அனுபவத்தை அவர் எடுத்துரைப்பது போல் தோன்றியது.

பதம் 4.21.21 : பிருது மன்னர் கூறினார்: கூட்டத்தில் இருக்கின்ற உயர்ந்த பெரியோர்களே! உங்களுக்கெல்லாம் நன்மையே உண்டாவதாகுக. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்ற மகாத்மாக்களே! எனது பிரார்த்தனையை அருள் கூர்ந்து கேட்பீராக உண்மையாகவே ஒருவன் அறிந்து கொள்ளும் ஆவல் மிக்கவனாக இருந்தால் அவன் தனது எண்ணத்தினை உங்களைப் போன்ற உயர்ந்த ஆத்மாக்களின் முன்னேதான் முதலில் எடுத்துரைப்பான்.

பதம் 4.21.22 : பிருது மன்னர் தொடர்ந்து கூறினார்: பரமபுருஷ பகவானது கருணையினால் நான் இப்பூமண்டலத்தின் மன்னனாக்கப்பட்டு அதற்குரிய செங்கோலை, மக்களின் மீது ஆட்சி செலுத்துவதற்காக ஏற்றிருக்கின்றேன். அவர்களை ஆபத்துக்களிலிருந்து காத்து வேதங்களின் விதிமுறைகளின்படி நிறுவப்பட்ட அவரவர் குலதர்மங்களுக்குரிய தொழில்களில் அவர்களை ஈடுபடவும் வைத்திருக்கின்றேன்.

பதம் 4.21.23 : மகாராஜா பிருது கூறினார்: ஓர் அரசனாக இருந்து கொண்டு நான் நிறைவேற்றுகின்ற கடமைகளின் மூலம், வேதங்களில் ஞானமிக்கப் பெரியோர்கள் குறிப்பிடுகின்ற விரும்பத்தகும் லட்சியங்களை என்னால் அடையக்கூடும் என நான் நினைக்கின்றேன். எல்லா நிகழ்வுகளையும் பார்க்கின்ற முழுமுதற் கடவுளின் கருணையினால் இந்த இலக்கினை என்னால் நிச்சயம் அடையமுடியும்.

பதம் 4.21.24 : எந்த ஒரு மன்னன் தன் குடிமக்களுக்கு அவர்களுக்குரிய கடமைகள் என்று வர்ணாசிரம தர்மம் குறிப்பிட்டுள்ளவைகளைப் பற்றிக் கற்றுக் கொடுக்காது சுங்கத்தீர்வைகளையும், வரிகளையும் மட்டும் அவர்களிடம் இருந்து வசூலித்துக் கொண்டிருக்கின்றானோ அவன் குடிமக்களின் பழிபாவச் செயல்களின் பலன்களையும் அனுபவிக்க வேண்டிய பொறுப்பினை ஏற்க வேண்டியதிருக்கும். இக்கீழ்நிலைக்கும் மேலாக அவன் தன் அதிர்ஷ்டத்தையும் இழந்தவனாகிறான்.

பதம் 4.21.25 : பிருத மகாராஜா தொடர்ந்து கூறினார்: ஆகையினால் எனது அன்பான குடிமக்களே, மரணத்திற்குப்பின் உங்கள் மன்னர் நலம்பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் வர்ணாஸ்ரம தர்மத்தில் உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நிறைவேற்றவும் எப்போதும் உங்கள் மனதில் முழுமுதற் கடவுளையே சிந்தித்துக்கொண்டும் இருத்தல் வேண்டும். அவ்வாறு செய்வதினால் நீங்கள் நன்மை அடைவீர்கள். மரணத்திற்குப் பின்பு உங்கள் மன்னர் நன்மை அடையும் பொருட்டு அவருக்கு நீங்கள் ஆசிகள் அருள்வீராக.

பதம் 4.21.26 : மனத்தூய்மையுடைய தேவர்களையும், முன்னோர்களையும், தெய்வீக அருளாளர்களையும், மரணத்திற்குப் பின் ஒரு செயலின் பலனானது அதைச் செய்தவனாலும், செய்யத் தூண்டியவனாலும் அதற்கு ஆதரவு அளித்தோராலும் ஒரு சமமாகப் பங்கிட்டுக் கொள்ளப்படுவதினால். எனது கோரிக்கையினை நீங்கள் எல்லோரும் அருள் கூர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பதம் 4.21.27 : எனது மரியாதைக்குரிய சகோதர, சகோதரிகளே, சரித்திரங்களின் உறுதியான கூற்று என்னவென்றால், எல்லோருக்கும் மேலாக உயர்ந்த அதிகாரமுடையவர் ஒருவர் நிச்சயம் உண்டு என்றும் அவரே நம் செயல்களுக்குத் தகுந்த பலன்களை நமக்கு அருள்பவர் என்பதுமாகும். அப்படி இல்லையென்றால் குறிப்பிட்ட சிலர் மட்டும் ஏன் இம்மையிலும் மறுமையிலும் அழகும் ஆற்றலும் மிக்கவர்களாக விளங்கவேண்டும்?

பதங்கள் 4.21.28 – 4.21.29 : இது வேதங்களினால் மட்டும் அல்ல, மிக உயர்ந்த பெரியவர்களான மனு, உத்தானபாதர், துருவன், பிரியவிரதன், மற்றும் எனது தாத்தா அங்கன் மேலும் சிறந்த பெரியோர்களாலும், சாதாரண உயிர்களினாலும் மகாராஜா பிரஹலாதன் மற்றும் பலி மகாராஜா போன்றவர்களாலும், இவர்கள் அனைவருமே கதாயுதத்தைக் கரங்களில் ஏந்தியிருக்கின்ற முழுமுதற் கடவுளினிடத்தில் நம்பிக்கை உடையவர்கள் எனும் செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பதம் 4.21.30 : மரணத்தின் பேரனும் எனது தந்தையுமான வேனன் போன்றவர்கள் சமய அறநெறிகளின்பால் குழப்பமுற்று வெறுக்கத்தக்கவர்களாக ஆன போதிலும் முன்னர் குறிப்பிடப்பட்ட உயர்ந்த பெரியவர்கள், முழுமுதற் கடவுள் ஒருவரே சமயங்களின் பலன்கள், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்ச்சி, விடுதலை அல்லது சொர்க்கத்திற்கு உயர்த்துதல் போன்ற ஆசிகளை அருள்பவராக விளங்குகிறார் என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.

பதம் 4.21.31 : முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளிடத்து நாட்டங்கொண்டு தொண்டு செய்வோன் மனம் எண்ணிலடங்கா பிறவிகளின் மூலம் சேர்ந்திருக்கின்ற அழுக்கினின்றும், துன்பத்தினின்றும் நீங்கி உடனே தூய்மையடைகின்றது. பகவானின் பத்மபாதங்களின் விரல்களினின்று சுரந்து வரும் கங்கை நீரினைப் போல் அச்செயலானது உடனே மனதினைச் சுத்தம் செய்து ஆன்மீக அல்லது கிருஷ்ண உணர்வினைப் படிப்படியாக அதிகரிக்கச் செய்கின்றது.

பதம் 4.21.32 : ஒரு பக்தன் முழுமுதற் கடவுளின் திருவடித்தாமரைகளைச் சரண் அடையும் பொழுது, தவறான கருத்துக்கள் மற்றும் மன யூகங்கள் போன்றவை நீங்கி தூய்மையடைந்து பற்றற்ற நிலைக்குரியவனாய்த் தன்னை வெளிப்படுத்துகிறான். இது பக்தியோகத்தைத் தவறாது கடைப்பிடிக்கும் பொழுதே ஒருவனுக்குச் சாத்தியமாகிறது. பகவானின் பத்மபாதங்களைச் சரணடையும் பக்தன் மும்முனைத் துன்பங்கள் கொண்ட இப்பௌதீக வாழ்க்கைக்கு மீண்டும் வரமாட்டான்.

பதம் 4.21.33 : பிருது மகாராஜா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்துகிறார்: எப்போதும் உங்கள் மனம் வாக்கு காயம் முதலியவைகளையும் உங்களது செயலினால் வரும் பலன்களையும் ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாக இருந்து இறைவனது பக்திப் பணிக்கே செலவிடுதல் வேண்டும். உங்களது திறமைக்கும், கடமைக்கும் ஏற்ப எந்தவிதமான எதிர்ப்பார்ப்புகளும் இன்றி முழு நம்பிக்கையுடன் இறைவனது திருவடித் தாமரைகளுக்குப் பணி செய்வீர்களாக. அதனால் நீங்கள் வாழ்வின் இறுதி இலட்சியத்தினை நிச்சயம் அடைவீர்கள்.

பதம் 4.21.34 : முழுமுதற் கடவுள் தெய்வீகமானவர் ஆதலினால், ஜட உலகினால் அவர் மாசடைவது கிடையாது. அவர் பௌதீக விகாரங்களற்ற பரிசுத்த ஆத்மாவாக இருந்தபோதிலும் பந்தப்பட்ட ஆத்மாக்களின் நன்மைக்காக அவர் பல்வேறு விதமான பெயர்களில் பல்வேறு விதமான தேவர்களுக்கு ஏராளமானப் பௌதீகப் பொருட்களினால் செய்யப்படும் பல்வேறு வேள்விகள், சடங்குகள் மற்றும் மந்திரங்கள் போன்றவற்றை மறுதலிக்காது ஏற்றுக் கொள்கின்றார்.

பதம் 4.21.35 : முழுமுதற் கடவுள் எல்லாவற்றிலும் வியாபித்திருக்கின்றார். எனினும் அவர் ஜட இயற்கை காலம் விருப்பம் மற்றும் சுய தர்மங்கள் கலந்த இணைப்பிலிருந்து உருவாகும் பல்வேறு உடல்களிலும் கூடத் தம்மை வெளிப்படுத்துகின்றார். நெருப்பின் தன்மை அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் அது பற்றுகின்ற விறகின் வடிவிற்கும் அமைப்பிற்கும் ஏற்ப தீக்கொழுந்துகள் வேறுபடுவது போல் பல்வேறு வடிவான உணர்வுகள் வளர்கின்றன.

பதம் 4.21.36 : முழுமுதற் கடவுள் ஒருவரே எல்லா வேள்விகளின் நாயகராகவும் அனுபவிப்பவராகவும் விளங்குகின்றார், அவரே உயர்ந்த ஆன்மீக குருவாகவும் இருக்கின்றார். இப்பூதலத்தில் வாழ்கின்ற, என்னோடு உறவு கொண்டிருக்கும் என் குடிமக்களே, நீங்கள் அனைவருமே உங்களுக்குரிய கடமைகளின் மூலம் அவரை வணங்குகின்றீர். நீங்கள் என்மீதும் கருணையுடைவர்களாக இருக்கின்றீர்கள். ஆகவே எனது குடிமக்களே! எனது நன்றியினை ஏற்றுக்கொள்வீராக.

பதம் 4.21.37 : அந்தணர்களும், வைணவர்களும் பொறுமை, தவம், ஞானம், கல்வி போன்றவற்றினால் தனிப்பட்ட பெருமை படைத்தவர்கள். இவ்வரிய ஆன்மீகச் சொத்துக்களைப் பெற்றிருப்பதினால் அவர்கள் அரச குடும்பத்தினைக் காட்டிலும் உயர்ந்தவர்கள். ஆகையினால் அரச குலத்தினர் இவ்விரு இனத்தாரிடமும் தனது பௌதீக வலிமையினைச் காட்டவோ அல்லது தவறிழைக்கவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

பதம் 4.21.38 : முழுமுதற் கடவுள் பழமையிலும் பழமையானவர், நித்தியக் கடவுள், உயர்ந்தோரினும் மிக உயர்ந்தவர், அவரது அசைக்க முடியாத நற்பெயரினால் எல்லா வளங்களையும், இப்பிரபஞ்சத்தையே தூய்மை செய்யும் பெயரையும் அவர், அந்தணர்கள் மற்றும் வைணவர்களின் திருவடித் தாமரைகளைப் பிரார்த்தித்ததின் மூலமே அடைந்தார்.

பதம் 4.21.39 : முழுமுதற் கடவுள், எப்போதும் சுதந்திரமானவர், எல்லோர் மனதிலும் நிறைந்திருப்பவர், தனது காலடித் தடத்தினைப் பின்பற்றுவோர்களினிடத்தும் அந்தணர் மற்றும் வைணவர்கள் சந்ததியினருக்கு எந்தவித ஒளிவு மறைவுமின்றி தொண்டு செய்வோரிடத்தும் மகிழ்ச்சியடைபவர், அந்தணர்களிடத்தும் வைணவர்களிடத்தும் மிகவும் அன்புடையவர் ஆதலினால் அவர்களும் எப்போதும் அவரிடத்து அன்புடையவர்களே.

பதம் 4.21.40 : அந்தணர்க்கும் வைணவர்க்கும் தொடர்ந்து ஒருவன் தொண்டு செய்வதினால் அவனது மனத்துக்கண் உள்ள மாசு நீங்குகிறது. அதனால் அவன் இப்பௌதீக பந்தத்தினின்று விடுதலை பெற்று உயர்ந்த அமைதியும், திருப்தியும் அடைகிறான். அந்தணர்க்குத் தொண்டாற்றும் பலன் தரும் செயலைவிட இவ்வுலகில் உயர்ந்தது ஏதுமில்லை, யாருக்காக வேள்விகள் செய்யப்படுகின்றனவோ அத்தேவர்களுக்கும் இது மகிழ்ச்சியளிப்பதாகும்.

பதம் 4.21.41 : அனந்தன் எனப்படும் முழுமுதற் கடவுளானவர் வேள்வியில் பல்வேறு தேவர்களின் பெயர்களில் அர்ப்பணிக்கப்படுபவைகளை அக்னியின் மூலம் உண்கிறார் எனினும் இவ்வாறு அக்னியின் மூலம் உண்பதில் அவர் அடையும் மகிழ்ச்சியைவிட மகாமுனிவர்கள் மற்றும் பக்தர்கள் வாயின் மூலம் வரும் அர்ப்பணிப்புக்களை ஏற்றுக் கொள்வதில் தான் அவர் அதிக மகிழ்ச்சியடைகிறார், காரணம் அப்போது அவர் பக்தர்களின் உறவினைப் பிரியாமல் இருக்கின்றார்.

பதம் 4.21.42 : அந்தணக் கலாச்சாரத்தில் ஓர் அந்தணனின் பரம நிலை நித்தியமாகப் பேணப்படுகிறது, காரணம் வேதங்களின் நெறிகளை அவன் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்கிறான். அவனிடம் தவம், வேத முடிவு, மெய்யறிவு, மன அடக்கம், தியானம் போன்ற எல்லாம் இருக்கின்றன. அதனால், கண்ணாடியில் முகம் தெளிவாகத் தெரிவது போல அவனிடம் வாழ்வின் உண்மை லட்சியம் பிரகாசமாக இருக்கிறது.

பதம் 4.21.43 : இங்கிருக்கும் மரியாதைக்குரியவர்களே, எனது வாழ்வின் இறுதிவரை அந்தணர் மற்றும் வைணவர்களின் திருவடித் தாமரையிலிருக்கும் தூசியினை எனது இந்த மணிமுடியின் மீது நான் சுமக்க வேண்டும் என்பதற்கு உங்களது மேலான ஆசிகளை யாசிக்கின்றேன். எவன் ஒருவன் தன் தலையின் மீது அவர்கள் பாத தூசியினைச் சுமந்து கொண்டிருக்கின்றானோ அவன் தன் வாழ்நாளில் செய்த பாவங்களின் விளைவுகளில் இருந்து விடுபட்டு முடிவில் நயத்தகும் நற்குணங்களைப் பெற்றவனாகிறான்.

பதம் 4.21.44 : நன்னடத்தை, உயர்குணம், நல்லோரைச் சரணடையும் தன்மை போன்ற அந்தணக் குணங்களையுடையவன் எவனும் இவ்வுலகின் எல்லாச் செல்வங்களும் எய்தப் பெறுகிறான். ஆதலினால் நான் முழுமுதற் கடவுளினிடத்தும் அவர் துணைவர்களிடத்தும் வேண்டுவதெல்லாம் அந்தணரிடத்தும், பசுவினிடத்தும், என்னிடத்தும் மகிழ்ச்சி கொள்வீராக என்பதுதான்.

பதம் 4.21.45 : மகாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: பிருது மன்னரின் மனங்கவர்ந்த பேச்சினைக் கேட்டு அங்கே இருந்த தேவர்களும், பித்ரு லோகத்தைச் சேர்ந்தவர்களும், அந்தணர்களும் மற்றும் தெய்வீக அருளாளர்களும் தங்கள் நல்லெண்ணத்தை அவரைப் பாராட்டியதின் மூலம் வெளிப்படுத்தினர்.

பதம் 4.21.46 : வேதங்கள் கூறுகின்றன தனது மைந்தன் அல்லது புத்திரனால் ஒருவன் தேவலோகத்தை அடைகிறான் என்று. அதுபோல் கொடூரமான பாவங்களைச் செய்து அந்தணர்களின் சாபத்தினால் கொல்லப்பட்ட பிருது மகாராஜாவின் தந்தையான வேனன் தனது மகனான பிருது மகாராஜாவினால் இருண்ட நரக வாழ்க்கையிலிருந்து மீண்டு ஒளிமிக்க தேவலோகத்தை அடைந்தார் என்று அங்கே குழுமி இருந்த அனைவரும் ஒருசேரக் கூறினார்கள்.

பதம் 4.21.47 : அதுபோல் பாவச் செயல்களே செய்து முழுமுதற் கடவுளையும் மறுதலித்த ஹிரண்யகசிபு இருள்சூழ்ந்த நரகத்தினை அடைந்தான் ஆனால் அவனது உயர்ந்த மகனான பிரஹலாத மகாராஜாவின் அருளினால் அவன் நரகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வீடுபேறு பெற்ற முழுமுதற் கடவுளை அடைந்தான்.

பதம் 4.21.48 : தெய்வீக அருளான அந்தணர்கள் பிருது மகாராஜாவிடம் இவ்வாறு கூறினார்கள்; வீரர்களில் சிறந்தவரே ஓ, பூமியின் தந்தையே, இப்பிரபஞ்சத்தின் நாயகரும், குற்றமற்றவருமான முழுமுதற் கடவுளிடத்து சிறந்த பக்தி வைத்திருக்கின்ற நீர் நீண்ட வாழ்நாள் பெறுவீராக.

பதம் 4.21.49 : கூட்டத்தினர் தொடர்ந்து கூறினர்: எமது அன்பிற்குரிய பிருது மன்னரே, நீர், அந்தணர்கள் போற்றி வணங்கும் பெருமைகள் எல்லாவற்றினும் மிகச் சிறந்த பெருமையினையுடைய முழுமுதற் கடவுளின் நற்கீர்த்தியினை நாளும் பிறருக்கு எடுத்துரைப்பதினால் உமது புகழ் எல்லாவற்றினும் மேலாகத் தூய்மை பெற்று விளங்குகிறது. எங்களது நல்லதிர்ஷ்டம் நீர் எங்களுக்குத் தலைவராக வாய்த்திருப்பது, ஆதலினால் நாங்கள் பகவானின் நேரடிப் பிரதிநிதியின் கீழ் வாழ்வதாக உணர்கின்றோம்.

பதம் 4.21.50 : எமது அன்பிற்குரிய தலைவரே, உமது குடிமக்களின் மீது ஆட்சி செலுத்துவது உமக்கு விதிக்கப்பட்ட கடமையாகிறது. இது உம்போன்ற பெரியவருக்கு அற்புதமானது ஒன்றும் அல்ல, காரணம் நீர் கருணையும் குடிமக்களின் நலன்களின் மீது அக்கறையும் அன்பும் உடையவர் ஆதலினால். இதுதான் உமது சிறந்த தன்மையாகும்.

பதம் 4.21.51 : குடிமக்கள் தொடர்ந்து கூறினர்: இன்று நீர் எமது கண்களைத் திறந்ததோடு இருட்கடலின் மறுகரையை எப்படி அடைவது என்றும் விளக்கினீர். எமது முன்னை வினைகளாலும், முழுமுதற் கடவுளின் ஏற்பாட்டினாலும், நாங்கள் பலன்தரும் செயல்கள் என்னும் வலைதனில் சிக்கிக் கொண்டோம். அதனால் எங்கள் பார்வையை இழந்து இப்பிரபஞ்சத்திற்குள் ஓயாது அலையும் ஒரு நிலையில் இருக்கின்றோம்.

பதம் 4.21.52 : அன்பிற்குரிய மன்னரே, நீர் உமது சுத்த சத்துவ நிலையில் இருக்கின்றீர். ஆகையினால் நீர் பகவானின் நிறைவான பிரதிநிதியாக விளங்குகின்றீர். உமது வீரத்தினாலேயே நீர் புகழப்படுகின்றீர், அதனால் நீர் இவ்வுலகம் முழுவதிலும் அந்தணக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவதின் மூலமும், ஓர் சத்திரியனாக உமது ஆட்சியின் கீழ் உள்ள அனைவரையும் பாதுகாப்பதின் மூலமும் இவ்வுலகம் முழுவதையும் இரட்சிக்கின்றீர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare