அத்தியாயம் 14
வேன மகாராஜனின் கதை
பதம் 4.14.1 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறலுற்றார்: ஓ, வீரரிற் சிறந்த விதுரனே, பிருகு முனிவரின் தலைமையின் கீழுள்ள முனிவர்கள் அனைவரும் எப்போதும் பொதுமக்களின் நலன்களைப் சிந்திப்போராவர். மன்னர் அங்கன் இல்லாமையினால் குடி மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை என்பதைக் கண்டு ஆள்பவன் இல்லாவிடில் மக்கள் தான்தோன்றிகளாகவும் ஒழுங்கீனர்களாகவும் மாறிவிடுவர் என்பதைப் புரிந்து கொண்டனர்.

பதம் 4.14.2 : ராஜமாதாவான அரசி சுனீதாவை மாமுனிவர்கள் அனைவரும் சந்தித்து அவள் அனுமதியின் பேரில் வேனனை இவ்வுலகின் மன்னனாக முடிசூட்டினர். ஆயினும் அமைச்சர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

பதம் 4.14.3 : வேனன் மிகவும் கொடியவன் என்பது எல்லோரும் அறிந்ததே; அதனால் அந்நாட்டிலுள்ள அனைத்துத் திருடர்களும், தீயோரும் அவன் அரியணை ஏறியதைக் கேள்வியுற்று அஞ்சி நடுநடுங்கினர். பாம்புகளுக்கு அஞ்சி வளைகளில் ஓடி ஒளிந்து கொள்ளும் எலிகளைப் போல் அவர்கள் அனைவரும் அச்சத்தினால் தம்மை மறைத்துக் கொண்டனர்.

பதம் 4.14.4 : மன்னன் அரியாசனத்தில் ஏறியவுடன், அவர் எண்வகை வளங்களைப் பெற்று வீரமுடன் திகழ்ந்தான். காலப்போக்கில் மிகுந்த கர்வம் கொண்டு தனது தவறான ஆணவத்தினால் எல்லோரையும் விட தானே பெரியவன் என்று அவன் எண்ணினான். பின்னர் உயர்ந்த மகான்களை அவமதிக்கத் தொடங்கினான்.

பதம் 4.14.5 : தனது செல்வவளங்களினால் கர்வமுற்ற வேனன், தன் இரதத்தில் ஏறிக்கொண்டு, கட்டுப்படுத்த முடியாத மதம் பிடித்த யானையினைப் போல் விண்ணும் மண்ணும் நடுநடுங்குமாறு தன் நாடு முழுவதும் சுற்றி வந்தான்.

பதம் 4.14.6 : இருபிறப்பாளர்கள் (அந்தணர்கள்) அனைவரும் அன்றிலிருந்து வேள்விகள் செய்வதற்கும் தானம் செய்வதற்கும் அல்லது தூய்மை செய்யப்பட்ட வெண்ணெய் போன்றவற்றை வேள்வியில் ஆகுதி செய்வதற்கும் தடை செய்யப்பட்டனர். அனைத்து வகையான சமயச் சடங்குகளையும் நிறுத்தும்படி வேனன் தன் நாடு முழுவதும் முரசறிவித்தான்.

பதம் 4.14.7 : மன்னன் வேனனின் கொடுங்கோன்மையினையும், கொடிய செயல்களையும் கண்டு முனிவர்கள் அனைவரும் ஒன்று கூடி உலகிலுள்ள பேராபத்தும், அபாயமும் மக்களை நெருக்கிக் கொண்டிருப்பதாக முடிவு செய்தனர். இதனால் அவர்கள் கருணை மீதூறத் தங்களுக்குள் கவலைப்பட்டுக் கொண்டனர். ஏனெனில் மக்கள் நலனை முன்னிட்டு முன்பு வேள்விகளை முன்னின்று நடத்தியது இவர்களேயாவர்.

பதம் 4.14.8 : மாமுனிவர்கள் தங்களுக்குள் ஆலோசித்துக் கொண்டிருந்த பொழுது, மக்கள் இரண்டு நிலைகளிலும் அபாயத்திற்காளாகியிருப்பதைக் கண்டனர். இருதலைக் கொள்ளி எறும்பு போல் மிகவும் ஆபத்தான சூழலில் சிக்கிக் கொண்டிருந்தனர் அவர்கள். அதாவது பொது மக்கள் அனைவரும் ஒருபுறம் பொறுப்பற்ற மன்னனாலும், மறுபுறம் திருடர்கள் மற்றும் துஷ்டர்களினாலும் அபாயத்திற்காளாகியிருந்தனர்.

பதம் 4.14.9 : நாட்டை ஒழுங்கீனத்திலிருந்து காக்கவும், அரசனில்லாத அரசியல் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகவே தகுதியற்றவனாயிருந்த போதிலும் அவர்கள் வேனனை முடிசூடச் செய்தனர். அந்தோ! மக்கள் இப்போது மன்னனாலேயே துன்புறுத்தப்படுகின்றனர். இச்சூழ்நிலைகளில் மக்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக வாழ்தல் கூடும்?

பதம் 4.14.10 : முனிவர்கள் தங்களுக்குள் இவ்வாறு சிந்தித்தனர்: சுனீதாவின் வயிற்றிலிருந்து பிறந்ததினால் மன்னன் வேனன் இயற்கையிலேயே ஓர் கலகக்காரனாவான். இக்கொடிய வேந்தனை ஆதரிப்பது பாம்பிற்குப் பால் வார்ப்பது போன்றதாகும். தற்போது இவனே அனைத்துத் துன்பங்களுக்கும் மூல காரணனாக விளங்குகிறான்.

பதம் 4.14.11 : நாம் இவ்வேனனை இந்நாட்டின் குடிமக்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்பதற்காக அரசனாக்கினோம். ஆனால் அவனோ இப்போது குடிமக்களின் எதிரியாகிவிட்டான். இக்குறைகளை யெல்லாம் தவிர்த்து மீண்டும் ஒருமுறை நாம் அவனை திருத்துவதற்கு முயல வேண்டும். இதனைச் செய்வதின் மூலம் அவன் செய்த பாவத்தின் பலன்கள் நம்மை அடையாதவாறு நாம் தப்பிக்கலாம்.

பதம் 4.14.12 : தெய்வீக முனிவர்கள் இவ்வாறு சிந்தித்தனர்: உண்மையில் நாம் அவனது கொடிய தன்மைகளை நன்கு அறிந்திருந்தோம். இருந்தும் அவனை நாம் அறியணை ஏற்றினோம். வேனன் நமது அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுமாறு செய்ய முடியாவிட்டால் மக்களின் கண்டனத்திற்கு நிச்சயம் அவன் ஆளாவான். அப்போது நாம் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம். பிறகு நமது ஆன்ம பலத்தினால் நாம் அவனை எரித்துச் சாம்பலாக்குவோம்.

பதம் 4.14.13 : இவ்வாறு தீர்மானித்த மாமுனிவர்கள் மன்னன் வேனனிடம் சென்றனர். அவர்கள் தங்கள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, கனிவான வார்த்தைகளினால் அவனைச் சமாதானப்படுத்தி பின்வருவனவற்றைக் கூறலாயினர்.

பதம் 4.14.14 : மாமுனிவர்கள் கூறினர்: அன்பார்ந்த மன்னனே, உனக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வந்திருக்கின்றோம். அதனை அன்புகூர்ந்து, மிகுந்த கவனத்துடன் கேட்பாயாக. அவ்வாறு நீ செய்தால், உனது, ஆயுள், செல்வம், ஆற்றல் மற்றும் புகழ் போன்றவையெல்லாம் அதிகரிக்கும்.

பதம் 4.14.15 : சமய அறநெறிகளை தங்கள் வாக்கு, மனம், புத்தி, மற்றும் காயத்தினால் பின்பற்றுபவர்கள் துன்பங்களற்ற தேவ உலகினை அடைவர். உலகப்பாதிப்பு அவர்களை விட்டு நீங்குவதால் அவர்கள் வாழ்வில் அளவற்ற ஆனந்தத்தினை அடைவர்.

பதம் 4.14.16 : முனிவர்கள் தொடர்ந்து கூறினர்: ஓ, சிறந்த வீரனே, இக்காரணத்தினால் நீ பொதுமக்களின் ஆன்மீக வாழ்க்கையினை அழிப்பதற்கு காரணமாகிவிடக் கூடாது. உனது செயல்களினால் அவர்களது ஆன்மீக வாழ்வு கெடுமானால் நீ நிச்சயமாக உனது அரியணையிலிருந்தும், செல்வத்திலிருந்தும் கீழே விழ நேரிடும்.

பதம் 4.14.17 : முனிவர்கள் மேலும் தொடர்ந்து கூறினர்: மன்னன் மக்களை அநியாயமிக்க அமைச்சர்களிடம் இருந்தும், திருடர்களிடமிருந்தும், தீயவரிடமிருந்தும் காக்கும் பொழுது அப்புண்ணியச் செயல்களின் பலனாக அவர்கள் அளிக்கும் வரிகளை ஏற்றுக் கொள்கிறான். இவ்வாறு புண்ணியம் செய்யும் அரசன் இகத்தில் மட்டுமின்றி பரத்திலும் இன்பமெய்துகிறான்.

பதம் 4.14.18 : புனிதமான மன்னனின் ஆட்சியின் கீழுள்ள நாட்டிலும், நகரங்களிலும் உள்ள மக்கள் வர்ண மற்றும் ஆஷ்ரமத்தின் எண் வகையான சமுதாய நிலைகளைப் பின்பற்றுகின்றனர். மேலும் அங்குள்ள குடிமக்கள் அனைவரும் தத்தமக்குரிய சுதர்மங்களினால் முழுமுதற் கடவுளை வழிபடுகின்றனர்.

பதம் 4.14.19 : ஓ, சான்றோனே, ஒரு மன்னன், இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூல காரணம் முழுமுதற் கடவுளே என்றும், அவரே அனைவரிடத்தும் மூலக்கருவாக விளங்குகிறார் என்றும் உணர்ந்து அவரை வழிபட்டான் என்றால் பகவான் திருப்தியடைவார்.

பதம் 4.14.20 : முழுமுதற் கடவுள் பிரபஞ்சத்தை ஒழுங்குபடுத்தும் தேவர்களால் வழிபடப்படுபவராவார். அவர் திருப்தியுற்றால் நம்மால் அடைவதற்குரியதென்று எதுவுமில்லை. எனவே ஒவ்வொரு உலகைச் சேர்ந்த ஆதிபத்தியத் தேவர்களும், அவ்வுலகங்களில் வாழ்பவர்களும் அவரை வழிபடுவதற்காக அனைத்து வகையான வழிபாட்டுப் பொருட்களையும் அர்ப்பணிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர்.

பதம் 4.14.21 : அன்பார்ந்த மன்னனே, அனைத்துலகங்களின் ஆதிபத்தியத் தேவர்களுடன் சேர்ந்து, முழுமுதற் கடவுளே அனைத்துலகங்களிலும் செய்யப்படும் எல்லா வேள்விகளையும் அனுபவிப்பவராக விளங்குகிறார். பரமபுருஷ பகவானே மூன்று வேதங்களாகவும், எல்லாவற்றின் உரிமையாளராகவும், அனைத்துத் தவங்களின் இறுதி லட்சியமாகவும் இருக்கிறார். ஆகவே உனது உயர்வுக்காகப் பல்வேறு வேள்விகளைச் செய்வதில் உனது குடிமக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். உண்மையில் உன் குடிமக்களை வேள்விகளைச் செய்யுமாறு நீ எப்போதும் பணித்தல் வேண்டும்.

பதம் 4.14.22 : உனது நாட்டிலுள்ள அந்தணர்கள் அனைவரும் பகவானின் பிற விரிவுகளான தேவர்கள் அனைவரையும் வேள்விகளின் மூலம் திருப்தி செய்தால் அவர்களின் செயல்களினால் திருப்தியடையும் தேவர்கள் உனக்கு வேண்டிய வரங்களை அருள்வர். ஆகையினால் வீரரிற் சிறந்தோனே! வேள்விகள் செய்வதை மட்டும் நிறுத்திவிடாதே. அவ்வாறு நீ நிறுத்தினால் அது தேவர்களை அவமதிப்பதாகும்.

பதம் 4.14.23 : மன்னன் வேனன் பதிலுரைத்தான் நீங்களெல்லாம் அனுபவசாலிகள் அல்லர். சமயத்திற்குப் புறம்பான நெறிகளை சமயநெறிகளாக நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பது வருத்தத்திற்குறியது. உண்மையில் நீங்கள் அனைவரும் உங்களைக் காக்கும் உண்மைக் கணவனைத் துறந்து விட்டு கள்ளக்காதலனைத் தேடி வழிபடுகின்றீர் என்று நான் கருதுகிறேன்.

பதம் 4.14.24 : முழுமுதற் கடவுளின் வடிவமாகத் திகழும் மன்னனை உண்மையில் ஒட்டுமொத்த அறியாமையின் காரணமாக வணங்காதவர்கள் இம்மையில் இவ்வுலகில் மட்டுமல்லாது மறுமையில் அவ்வுலகிலுங்கூட மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.

பதம் 4.14.25 : நீங்கள் தேவர்களிடம் அதிகமாகப் பக்தி செலுத்துகின்றீர்களே உண்மையில் அவர்கள் யார்? ஆதலினால் இத்தேவர்களிடம் நீங்கள் வைக்கும் நேசமானது, மணமுடித்துக் கைப்பற்றியக் கணவனைக் கைவிட்டு விட்டு தன் கள்ளக்காதலன் மீது கற்பிழந்த பெண் வைக்கும் நேசத்தைப் போன்றதாகும்.

பதங்கள் 4.14.26 – 4.14.27 : பகவான் விஷ்ணு: பிரம்மதேவன்; சிவபெருமான்; வாயுதேவன் (காற்றுக்கடவுள்); யமன் (காலதேவன்); சூரியதேவன்; மழைக்கடவுள்; குபேரன் (பொருளாளர்); சந்திரதேவன்; பூமியின் ஆதிபத்திய தேவன்; அக்னித்தேவன் (நெருப்புக்கடவுள்); வருணன் (நீர்க்கடவுள்); இவர்களெல்லாம் வரமருளவும் சபிக்கவும் கூடிய ஆற்றல் மிக்கவர்கள். ஆயினும் இவர்கள் அனைவரும் ஒரு மன்னனின் உடலில் குடியிருக்கின்றனர். இக்காரணத்தினாலேயே மன்னன் அனைத்துத் தேவர்களுக்கும் உறைவிடம் என்றறியப்படுகிறான், இத்தேவர்கள் அனைவரும் மன்னனின் பாகங்களேயாவர்.

பதம் 4.14.28 : மன்னன் வேனன் தொடர்ந்து கூறினான்: ஓ, அந்தணர்களே, இக்காரணத்தினால், என்மீது நீங்கள் கொண்டுள்ள தவறான கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள், மேலும் உங்கள் சமயச் சடங்குகளின் மூலம் என்னை வழிபட்டு அனைத்துப் பொருட்களையும் எனக்கு அளிப்பீராக. நீங்கள் அறிவுடையோரானால் வேள்விகளில் அர்ப்பணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள என்னைவிடச் சிறந்தவன் எவனுமில்லை என்பதைப் புரிந்து கொள்வீர்.

பதம் 4.14.29 : மைத்ரேய மாமுனிவர் தொடர்ந்து கூறினார்: இவ்வாறு மன்னன் தனது பாவ வாழ்க்கையின் பலனால் மதி மூடனாகி, நேர்மையான பாதையிலிருந்து தடம் புரண்டு, உண்மையில் தனது அனைத்து சௌபாக்கியம் இழந்து போனான். அவன் முனிவர்கள் தம் முன் மிகவும் மரியாதையுடன் வைத்த வேண்டுகோளை மறுத்தான். இதன் காரணமாக அனைவராலும் தூற்றப்பட்டான்.

பதம் 4.14.30 : அன்பார்ந்த விதுரனே, உனக்கு மங்கலம் உண்டாகட்டும். இம்மூட மன்னன் தன்னை மிகவும் கற்றவனாகக் கருதிக் கொண்டு இவ்வாறு மாமுனிவர்களை அவமதித்தான். மன்னனின் வார்த்தைகளினால் மனம் நொந்துபோன முனிவர்கள் மன்னன் மீது மிகுந்த ஆத்திரங்கொண்டனர்.

பதம் 4.14.31 : மாமுனிவர்கள் அனைவரும் ஒரு சேரக் கூவினர். இவனைக் கொல்லுங்கள்! இவனைக் கொல்லுங்கள்! இவனே அனைவருக்கும் அச்சம் தருகின்ற பாவியாவான். இவன் உயிரோடிருந்தால் வெகு விரைவிலேயே இவன் இம்முழு உலகையும் எரித்துச் சாம்பலாக்கி விடுவான். இது உறுதி.

பதம் 4.14.32 : மகாமுனிவர்கள் தொடர்ந்தனர்: இப்புனிதமற்ற நாணயமற்ற மனிதன் அரியணையில் அமர்வதற்குத் தகுதியற்றவன். இவன் சிறிதும் நாணமின்றி முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவைக் கூட அவமதிக்கத் துணிந்துவிட்டான்.

பதம் 4.14.33 : புனிதமற்றவனான மன்னன் வேனனைத்தவிர வேறு யார் முழுமுதற் கடவுளை நிந்தனை செய்வார்? அவரது கருணையாலன்றோ ஒருவன் அனைத்து வகையான மங்கலங்களையும், செல்வங்களையும் பெறுகிறான்.

பதம் 4.14.34 : மாமுனிவர்கள் தங்கள் கொடிய கோபத்தினால் உடனே மன்னனைக் கொன்றுவிட வேண்டுமென்று முடிவு செய்தனர். ஆனால் முழுமுதற் கடவுளை நிந்தித்தக் குற்றத்தினால் மன்னன் வேனன் முன்னமேயே இறந்தவனாகிவிட்டான். இவ்வாறு எந்த வித ஆயுதங்களையும் பயன்படுத்தாது முனிவர்கள் தங்கள் வாயினின்று வந்த ஓசையின் மூலமாகவே மன்னன் வேனனைக் கொன்றனர்.

பதம் 4.14.35 : முனிவர்கள் அனைவரும் தங்கள் ஆஸ்ரமங்களுக்குத் திரும்பிச் சென்ற பின்னர், மன்னன் வேனனின் அன்னையான சுனீதா தன் மைந்தனின் மரணத்தை எண்ணி மிகவும் துயருற்றாள். அவள் மந்திரங்களினாலும், சில மூலிகைத் தைலங்களினாலும் தன் மைந்தனின் உடலைப் பாதுகாக்க வேண்டுமென்று தீர்மானித்தாள்.

பதம் 4.14.36 : ஒருநாள் அதே முனிவர்கள் சரஸ்வதி நதியில் நீராடி வேள்வித் தீயில் பொருள்களை ஆகுதி செய்வதான நித்தியக் கடமைகளைச் செய்யத் தொடங்கினர். இவ்வாறு அவர்கள் அந்நதிக்கரையில் அமர்ந்து கொண்டு இறைவனைப் பற்றியும் அவரது திருவிளையாடல்களைப் பற்றியும் தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கினர்.

பதம் 4.14.37 : அந்நாட்களில் நாட்டில் பல்வேறு இடையூறுகள் தோன்றி மக்களைப்பீதியடையச் செய்தன. ஆகையினால் அனைத்து முனிவர்களும் தங்களுக்குள் பேசிக் கொள்ளத் தொடங்கினர்: மன்னன் மாண்டதினால் மக்களைக் காப்பதற்கு எவருமில்லை, இதனால் திருடர்களாலும், துஷ்டர்களாலும் மக்கள் தொல்லையுற துன்ப்பட நேரிடலாம்.

பதம் 4.14.38 : இவ்வாறு அம்மாமுனிவர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தபொழுது திடீரென்று அனைத்துத் திக்குகளிலிருந்தும் பயங்கரமான புழுதிப் புயல் எழுந்தது. இப்புயலானது பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் திருடர்கள் மற்றும் கயவர்கள் ஓடிக்கொண்டிருந்ததினால் ஏற்பட்டதாகும்.

பதங்கள் 4.14.39 – 4.14.40 : புழுதிப் புயலைக் கண்ட முனிவர்கள், மன்னன் வேனனின் மறைவினால் அதிக அளவில் ஒழுங்கீனங்கள் நடைபெறுகின்றன என்பதைப் புரிந்து கொண்டனர். அரசாங்கம் இல்லையென்றால் நாட்டில் சட்டம் ஒழுங்கு இராது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களில் செல்வந்தர்களைக் கொள்ளையடிக்கும் கொலைக்காரத் திருடர்கள் மற்றும் துஷ்டர்களின் செயல்கள் எழுச்சி பெறுகின்றன. மன்னனைக் கொன்றது போல் அம்மாமுனிவர்கள் தங்கள் சக்தியினால் இவ்விடையூறுகளைக் குறைக்கக் கூடியவர்களாக இருந்தும் தாங்கள் அவ்வாறு செய்வது தவறு என்று கருதினர். ஆகையினால் அவர்கள் இதனைத் தடுக்கும் முயற்சிகள் எதையும் செய்யவில்லை.

பதம் 4.14.41 : அம்மாமுனிவர்கள், ஓர் அந்தணண் அமைதியும், ஒரு சார்பும் இல்லாதவனாவான், ஏனெனில் அவன் எல்லோரிடத்தும் சமபார்வை உடையவன். இருந்தாலும் ஏழை மக்களைப் புறக்கணிப்பதென்பது அவன் கடமையில்லையே என்று சிந்திக்கத் தொடங்கினர். அவ்வாறு புறக்கணித்தால் அவனது ஆன்மீகச் சக்தியானது ஓட்டைப் பானையில் ஊற்றிவைக்கப்பட்ட நீர் ஒழுகுவதின் மூலம் கரைந்து விடுவதைப் போல் குறைந்துவிடுகிறது.

பதம் 4.14.42 : அம்முனிவர்கள், மன்னன் அங்கனின் வம்ச பரம்பரையானது முற்றுப்பெற்று விடக்கூடாது என்று தீர்மானித்தனர். ஏனெனில் அவ்வம்சத்தின் வீர்யமானது மிகவும் ஆற்றல் மிக்கது என்பதோடு அதனின்று தோன்றிய புதல்வர்கள் இறைவனின் பாதம் பணிந்த பக்தர்களுமாவர்.

பதம் 4.14.43 : இவ்வாறு தீர்மானித்த பின்னர் அம்மாமுனிவர்கள் இறந்து போன மன்னன் வேனனின் தொடைகளை மிகுந்த விசையுடனும் ஒரு குறிப்பிட்ட முறையிலும் வேகமாகக் கடைந்தனர். அவ்வாறு கடைந்ததின் விளைவாக ஒரு குள்ளமான மனிதன் மன்னன் உடலிலிருந்து பிறந்தான்.

பதம் 4.14.44 : மன்னன் வேனனின் தொடைகளிலிருந்து பிறந்த மனிதனின் பெயர் பாஹீகன் என்பதாகும். அவன் உடல் நிறம் காக்கையைப் போன்று கரியதாயிருந்தது. அவன் உடலிலிருந்த அனைத்துப் பாகங்களும், கைகள், கால்கள் எல்லாம் குட்டையாக இருந்தன. ஆனால் தாடைகள் அகன்று பெரியவையாயிருந்தன, அவன் மூக்கு சப்பையாகவும், கண்கள் சிவந்தும், தலைமுடி தாமிர நிறத்துடனும் இருந்தன.

பதம் 4.14.45 : அவன் மிக்க பணிவும், அடக்கமும் வாய்ந்தவனாகயிருந்தான், அவன் உடலிலிருந்து தோன்றியவுடன், தலைதாழ்ந்து, “ஐயன்மீர்”, எனக்கு என்ன கட்டளை? என்று கேட்டான். மாமுனிவர்கள், “அங்கே அமர்வாயாக” என்ற பதில் கூறினர். இவ்வாறு நைஷாத குலத்தின் தலைவனான நிஷாதன் தோன்றினான்.

பதம் 4.14.46 : அவன் (நிஷாதன்) பிறந்த பிறகு மன்னன் வேனன் செய்த அனைத்துப் பாவங்களின் பலன்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான். அதனால் இந்நைஷாதர்களின் குலத்தினர் எப்போதும் பாவச் செயல்களான திருடுதல், கொள்ளையடித்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்றவற்றிலேயே ஈடுபட்டிருந்தனர். அதனால் அவர்கள் காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் மட்டுமே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare