அத்தியாயம் – 11
துருவ மகாராஜனுக்கு சுயம்புவ மனுவின் அறிவுரை
பதம் 4.11.1
மைத்ரேய உவாச
நிஸம்ய கததாம் ஏவம் ருஷீணாம் தனுஷி த்ருவ:
ஸந்ததே ‘ஸ்த்ரம் உபஸ்ப்ருஸ்ய யன் நாராயன-நிர்மிதம்

மைத்ரேய: உவாச—மைத்ரேய முனிவர் தொடர்ந்து கூறினார்; நிஸம்ய—கேட்டவுடன்; கததாம்—வார்த்தைகள்; ஏவம்—இவ்வாறு; ருஷீணாம்—முனிவர்களின்; தனுஷி—தனது அம்பினை; த்ருவ:—துருவமகாராஜா; ஸந்ததே—பொருத்தினார்; அஸ்த்ரம்—ஒர் அம்பினை; உபஸ்ப்ருஸ்ய—தண்ணீரைத் தொட்டு; யத்—எது; நாராயண—நாராயணர்; நிர்மிதம்—செய்யப்பட்டது.

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: மகாமுனிவர்களின் வார்த்தைகளினால் உற்சாகமடைந்து துருவ மன்னர் தண்ணீரைத் தொட்டு ஆசமனம் செய்தார். பிறகு பகவான் நாராயணரால் உருவாக்கப்பட்ட ஓர் அம்பை தன் வில்லில் பூட்டி நாணேற்றினார்.

பதம் 4.11.2
ஸந்தீயமான ஏதஸ்மின் மாயா குஹ்யக-நிர்மிதா:
க்ஷிப்ரம் வினேஸீர் விதுர க்லேஸா ஜ்ஞானோதயே யதா

ஸந்தீயமானே—அவர் தன் வில்லில் பூட்டி நாணேற்றிய பொழுது; ஏதஸ்மின்—இந்த நாராயணாஸ்திரத்தை; மாயா:—மாயைக் காட்சிகள்; குஹ்யக-நிர்மிதா:—யக்ஷர்களால் ஏற்படுத்தப்பட்டது; க்ஷிப்ரம்—உடனடியாக; வினெஸீ:—அழிக்கப்பட்டன; விதுர—ஓ விதுரனே; க்லேஸா:—மாயையின் இன்ப துன்பங்கள்; ஜ்ஞான—உதயே ஞானோதயம்; யதா—போன்று.

துருவமன்னர் நாராயணாஸ்திரத்தைத் தனது வில்லில் பொருத்திய உடனேயே யக்ஷர்களால் தோற்றுவிக்கப்பட்டிருந்த மாயதந்திரங் காட்சிகள் அனைத்தும், ஆத்மாவை முற்றிலும் உணர்ந்து கொண்டவுடன் ஒருவனது உலகியல் இன்ப துன்பங்கள் எல்லாம் எவ்வாறு அவனை விட்டு நீங்குகிறதோ அதுபோன்று நீங்கின.

பதம் 4.11.3
தஸ்யார்ஷாஸ்த்ரம் தனுஷி ப்ரயூஞ்ஜத:
ஸீவர்ண-புங்கா:கல ஹம்ஸ-வாஸஸ:
விநி: ஸ்ருதா த்விவிஸீர் த்விஷத்-பலம்
யதா வனம் பீம-ரவா: ஸிகண்டின:

தஸ்ய—துருவன்; ஆர்ஷ-அஸ்த்ரம்—நாராயண ரிஷியால் அளிக்கப்பட்ட ஆயுதம்; தனுஷி—அவர் வில்லில்; ப்ரயுஞ்ஜுத:—பொருத்தினார்; ஸீவர்ண-புங்கா:—(அம்புகள்) தங்கத்தினாலானது; கலஹம்ஸ-வாஸஸ:—அதன்பின்னுள்ள இறகுகள் அன்னத்தின் சிறகுகள் போன்றிருந்தன; விநி:-ஸ்ருதா:—வெளியே பாய்ந்து வந்தது; ஆவிவிஷீ:—புகுந்தது; த்விஷத் பலம்—எதிரி வீரர்கள்; யதா—போன்று; வனம்—வனத்தினுள்; பீம-ரவா:—பேரோசை எழுப்பிக் கொண்டு; ஸிகண்டின:—மயில்கள்.

தங்கத்தினால் ஆனதும் அன்னத்தின் தூவிகளைப் போன்ற
இறகினையுடையதும் ஆன நாராயண ரிஷியினால் அளிக்கப்பட்ட அம்புகளை துருவ மன்னர் தன் வில்லில் பூட்டி நாணேற்றி எய்தார். அவை மயில்கள் வனத்தினுள் பேரோசை எழுப்பிக் கொண்டு புகுவன போல் பகைவர் கூட்டத்தினுள் புகுந்தன.

பதம் 4.11.4
தைஸ் திக்ம-தாரை: ப்ரதனே ஸிலீ-முகைர்
இதஸ் தத: புண்ய-ஜனா உபத்தோ:
தம் அப்யதாவன் குபிதா உதாயுதா:
ஸீபர்ணம் உன்னத்த-பணா இவாஹயா:

தை:—அவை; திக்ம-தாரை:—கூரியமுனையுடையவை; ப்ரதனே—யுத்தகளத்தில்; ஸிவீ-முகை:—அம்புகள்; இத: தத:—இங்குமங்கும்; புண்ய-ஜனா:—யக்ஷர்கள்; உபத்ருதா:—பொங்கியெழுந்து; தம்—துருவ மன்னரை நோக்கி; அப்யதாவன்—விரைந்தனர்; குபிதா:—ஆத்திரங்கொண்டு; உதாயுதா:—ஏந்திய ஆயுதங்களுடன்; ஸீபர்ணம்—கருடனை நோக்கி; உன்னத்த-பணா:—விரிந்த படங்களுடன்; இவ—போன்று; அஹய:—நாகங்கள்.

கூரிய முனையுடைய அவ்வம்புகள் எதிரி வீரர்களைக் கலக்கமடையவும் உணர்விழக்கவும் செய்தன. இருந்தும் யுத்தகளத்தில் இருந்த சில யக்ஷர்கள் மிகுந்த ஆத்திரத்துடன் பொங்கி எழுந்து தமது ஆயுதங்களினால் துருவ மன்னரை தாக்கத் தொடங்கினர். கருடனைக் கண்டு சீறும் நாகங்கள் தங்கள் படங்களை விரித்துக்கொண்டு பாய்ந்து வருவனபோல், துருவ மன்னரை வெல்லவேண்டும் என்பதற்காக அனைத்து யக்ஷர்களும் தங்கள் ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு ஓடிவந்தனர்.

பதம் 4.11.5
ஸ தான் ப்ரஷத்கைர் அபிதாவதோ ம்ருதே
நிக்ருத்த-பாஹீரு-ஸிரோதரோதரான்
நினாய லோகம் பரம் அர்க-மண்டலம்
வ்ரஜந்தி நிர்பித்ய யம் ஊர்த்வ-ரேதஸ:

ஸ:—அவர், (துருவ மன்னர்); தான்—அனைத்து யக்ஷர்கள்; ப்ருஷத்கை:—அவரது அம்புகளினால்; அபிதாவத:—முன்னேறி; ம்ருதே—யுத்தகளத்தில்; நிக்ருத்த—பிரித்தார்; பாஹீ—கரங்கள்; ஊரு——தொடைகள்; ஸீர-தர—கழுத்து; உதரான்—வயிறுகள்; நிரைய—அனுப்புதல்; லோகம்—லோகத்திற்கு; பரம்—பரம; அர்க-மண்டலம்—சூரிய மண்டலம்; வ்ரஜந்தி—செல்ல; நிர்பித்ய—கிழித்துக் கொண்டு; யம்—எது; ஊர்த்வ-ரேதஸ:—சுக்கிலத்தை எக்காலத்திலும் வெளியேற்றாதவர்கள்.

முன்னேறி வரும் எதிரிகளைப் பார்த்த துருவ மன்னர் தனது அம்புகளினால் அவர்களைத் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்தார். அவர்களது கரங்களையும், உடல்களையும், கால்களையும், வயிறுகளையும் தனித் தனியே வெட்டி எறிந்து அந்த யக்ஷர்களை, தமது சுக்கிலத்தை எப்போதும் வெளியேற்றாத பிரம்மச்சாரிகள் மட்டுமே அடையக்கூடிய சூரிய மண்டலத்திற்கும் மேலாக உள்ள உலகங்களுக்கு அனுப்பினார்.

பதம் 4.11.6
தான் ஹன்யமானான் அபிவீக்ஷ்ய குஹ்யகான்
அநாகஸஸ் சித்ர-ரதேன பூரிஸ:
ஒளத்தானபாதிம் க்ருபயா பிதாமஹோ
மனுர் ஜநாதோபகத: ஸஹர்ஷிபி:

தான்—அந்த யக்ஷர்கள்; ஹன்யமானான்—அழிக்கப்படுதல்; அதிவீக்ஷ்ய—கண்டு; குஹ்யகான்—யக்ஷர்கள்; அநாகஸ:—குற்றமற்ற; சித்ர-ரதேன—சித்திர இரதத்தினையுடைய துருவ மன்னர்; பூரிஸ:—மிகுந்த; ஒளத்தானபாதிம்—உத்தானபாதனின் மைந்தனுக்கு; க்ருபயா—கருணையினால்; பிதா—மஹ:—தாத்தா; மனு:—சுயம்புவமனு; ஜகாத—அறிவுரை வழங்க; உபகத:—அணுகினார்; ஸஹ-ருஷிபி:—மாமுனிவர்களிடம்.

துருவ மன்னனின் தாத்தாவான சுயாம்புவ மனு உண்மையில் குற்றமிழைக்காத யக்ஷர்களும் துருவ மகாராஜாவினால் கொல்லப்படுதல் கண்டு அவரது மிகுந்த கருணையினால் துருவருக்கு அறிவுரை வழங்குவதற்காகச் சகமுனிவர்களுடன் அவரிடம் வந்தார்.

பதம் 4.11.7
மனுர் உவாச
அலம் வத்ஸாதிரோஷேண தமோ-த்வாரேண பாப்மனா
யேன புண்ய-ஜனான் ஏதான் அவதீஸ் த்வம் அநாகஸ:

மனு:உவாச—மனு கூறினார்; அலம்—போதும்; வத்ஸ—எனதன்பு மைந்தனே; அதிரோஷேன—அதீதகோபம்; தம:-த்வாரேண—அறியாமை வழியாகும்; பாப்மனா—பாவமானது; யேன—எதனால்; புண்ய-ஜனான்—யக்ஷர்கள்; ஏதான்—அனைவரும்; அவதீ:—நீ கொல்வது; த்வம்—நீ; அராகஸ:—குற்றமற்ற.

பகவான் மனு கூறினார்: அன்பு புத்திரனே! அருள் கூர்ந்து நிறுத்துவாயாக. தேவையற்ற ஆத்திரம் நன்மை செய்யாது நரகத்திற்கு வழிகாட்டும். இப்போது நீ குற்றமற்ற பிற யக்ஷர்களைக் கொல்வதின் மூலம் வரம்பு மீறியவனாகிறாய்.

பதம் 4.11.8
நாஸ்மத்-குலோசிதம் தாத கர்மைதத் ஸத்-விகர்ஹிதம்
வதோ யத் உபதேவானம் ஆரப்தஸ் தே ‘க்ருதைனஸாம்

ந—இல்லை; அஸ்மத்-குல—நமது குலம்; உசிதம்—பொருத்தமானதல்ல; தாத—எனதன்புக் குழந்தையே; கர்ம—செயல்; ஏதத்—இந்த; ஸத்—சமயச்சான்றோர்களினால்; விகர்ஹிதம்—தடைசெய்யப்பட்டிருக்கிறது; வத:—கொல்லுதல்; யத்—எது; உபதேவானாம்—யக்ஷர்களின்; ஆரப்த:—மேற்கொள்ளப்பட்டது; தே—உன்னால்; அக்ருத- ஏனஸாம்—பாவமற்ற அவர்களின்.

என் அன்புக் குழந்தையே, பாவமற்ற யக்ஷர்களை அழிக்கின்ற உனது செயலானது சமயச்சான்றோர்களினால் அங்கீகரிக்கப்பட்ட தன்று. மேலும் இது சமயம் மற்றும் சமயமல்லாத நெறிகளை நன்கறிந்த நம் குடும்பத்திற்குப் பொருந்தாததுவுமாகும்.

பதம் 4.11.9
நன்வ ஏகஸ்யாபராதேன ப்ரஸங்காத் பஹவோ ஹதா:
ப்ராதுர் வதாபிதப்தேன த்வயாங்க ப்ராதுர்-வத்ஸல

நனு—உறுதியாக; ஏதஸ்ய—ஒருவனின் (யக்ஷன்); அபாதேன—குற்றத்திற்காக; ப்ரஸாங்காத்—ஏனெனில் அவர்களின் தொடர்பினால்; பஹவ:-அனேக:-ஹதா:—கொல்லப்பட்டிருக்கின்றனர்; ப்ராதுர்—உனது சகோதரனின்; வத—மரணத்தினால்; அபிதப்தேன—துக்கத்தினால்; த்வயா—உன்னால்; அங்க—அன்புக்குழந்தையே; ப்ராதுர்-வத்ஸல—உனது தம்பியின் மீது பாசமுடையவனே.

எனதன்புக் குழந்தையே, நீ உனது சகோதரனிடம் மிகுந்த பாசமுடையவன் என்பதும் யக்ஷர்களினால் அவன் கொல்லப்பட்டது உனக்கு மிகுந்த சோகத்தை தந்ததும் உண்மைதான். ஆயினும் ஒரு யக்ஷனின் குற்றத்திற்காக, அறியாத பல யக்ஷர்களை நீ கொன்றிருக்கிறாய் என்பதை எண்ணிப்பார்ப்பாயாக.

பதம் 4.11.10
நாயம் மார்கோ ஹி ஸாதூனாம் ஹ்ருஷீகேஸானுவர்தினாம்
யத் ஆத்மானம் பராக் க்ருஹ்ய பஸீவத் பூத-வைஸஸம்

ந—இல்லை; அயம்—இந்த; மார்க:—மார்க்கம்; ஹி—உறுதியாக; ஸாதூனாம்—சான்றோர்களின்; ஹ்ருஷீகேஸ—முழுமுதற் கடவுளின்; அனுவர்தினாம்—பாதையினைப் பின்பற்றுவது; யத்—எது; ஆத்மானம்—ஆத்மா; பராக்—உடல்; க்ருஹ்ய—நினைப்பது; பஸீவத்—விலங்குகள் போல; பூத—உயிர்வாழிகள்; வைஸஸம்—கொல்லுதல்.

ஒருவன் உடலை ஆத்மாவாகக் கருதி விலங்குகளைப் போன்று பிற உடல்களை அழித்தல் கூடாது. இது முழுமுதற் கடவுளின் பக்தித் தொண்டின் பாதையில் பயணிக்கும் சமயச் சான்றோர்களினால் குறிப்பாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றது.

பதம் 4.11.11
ஸர்வ-பூதாத்ம-பாவேன பூதாவாஸம் ஹரிம் பவான்
ஆராத்யாப துராராத்யம் விஷ்ணோஸ் தத் பரமம் பதம்

ஸர்வ பூத—அனைத்து உயிர்வாழிகளிடத்தும்; ஆத்ம—பரமாத்மாவுக்கு; பாவேன—தியானத்துடன்; பூத—அனைத்து தோற்றங்களும்; ஆவாஸம்—இருப்பிடம்; ஹரிம்—பகவான் ஹரி; பவான்—நீ; ஆராத்ய—வழிபட்டு; ஆப—எய்தியுள்ளாய்; துராராத்யம்—இணங்கச் செய்வதற்கரிய; விஷ்ணோ:—பகவான் விஷ்ணு; தத்—அந்த; பரமம்—பரம; பதம்—பதம்.

வைகுண்ட லோகத்திலுள்ள ஹரியின் பரம பதத்தினை அடைவது மிகவும் கடினமானதொன்றாகும். ஆயினும் நீ அவரை அனைத்து உயிர்களின் பரம இருப்பிடமாக எண்ணி வழிபடுகின்ற காரணத்தினால் இங்கே செல்வதற்கு ஏற்கெனவே உறுதி செய்யப் பெற்றிருக்கும் பாக்கியவானாவாய்.

பதம் 4.11.12
ஸ த்வம் ஹரேர் அனுதாயதஸ் தத்-பும்ஸாம் அபி ஸம்மத:
கதம் த்வ அவத்யம் க்ருதவான் அனுஸிக்ஷன் ஸதாம் வ்ரதம்

ஸ:—அந்தமனிதன்; த்வம்—நீ; ஹரே:—பரமபுருஷ பகவானால்; அனுத்யாத:—எப்போதும் நினைவு கொள்ளப்பட்டு; தத்—அவரது; பும்ஸாம்—பக்தர்களினால்; அபி—மேலும்; ஸம்மத:—மதிக்கப்பட்ட; கதம்—ஏன்; து—பிறகு; அவத்யம்—வெறுக்கத்தக்க (செயல்); க்ருதவான்—நீ செய்தது; அனுஸிக்ஷன்—உதாரணப்படுத்துதல்; ஸதாம்—சான்றோர்களினால்; வ்ரதம்—உறுதி.

நீ பகவானின் தூய பக்தன் என்ற காரணத்தினால் பகவான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கின்றார். மேலும் நீ அவரின் அனைத்து நம்பிக்கைக்குரிய பக்தர்களினாலும் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றாய். உனது வாழ்க்கையோ எல்லோராலும் பின்பற்றப்படுவதற்குரிய ஒன்றாகும். நான் ஆச்சரியப்படுகிறேன் நீ ஏன் இத்துணை வெறுக்கத்தக்கச் செயல்கள் செய்தாய்? என்று.

பதம் 4.11.13
திதிக்ஷயா கருணயா மைத்ரயா சாகில-ஜந்துஷீ
ஸமத்வேன ச ஸர்வாத்மா பகவான் ஸம்ப்ரஸீததி

திதிக்ஷயா—பொறுமையால்; கருணயா—கருணையால்; மைத்ருயா—நட்பினால்; ச—மேலும்; அகில—அகிலம்; ஜந்துஷீ—உயிர்களினிடத்து; ஸமத்வேன—சமத்துவம்; ச—மேலும்; ஸர்வ-ஆத்மா—பரமாத்மா; பகவான்—முழுமுதற் கடவுள்; ஸம்ப்ரஸீததி—மிகுந்த திருப்தியுறுவார்.

பகவான் தனது பக்தன் பிற உயிர்களிடத்து பொறுமை, கருணை, நட்பு மற்றும் சமத்துவமாக நடந்து கொள்கிறான் என்றால் மிகுந்த திருப்தியடைகிறார்.

பதம் 4.11.14
ஸம்ப்ரஸன்னே பகவதி புருஷ: ப்ராக்ருதைர் குணை:
விமுக்தோ ஜீவ-நிர்முக்தோ ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி

ஸம்ப்ரஸன்னே—திருப்தியடைவதினால்; பகவதி—முழுமுதற் கடவுள்; புருஷ:—ஒரு மனிதன்; ப்ராக்ருதை:—ஜடஇயற்கையின்; குணை:—குணங்களிலிருந்து; ஜீவ—நிர்முக்த:—நுண்ணுடலிலிருந்தும் கூட விடுதலை பெறுகின்றனர்; ப்ரஹ்ம—அளவில்லாத; நிர்வாணம்—ஆன்மீக இன்பம்; ருச்சதி—அடைவர்.

முழுமுதற் கடவுளைத் தனது வாழ்நாளில் உண்மையாகத் திருப்திப்படுத்துபவன் பூத மற்றும் நுண்ணிய உலகியல் நிலைகளில் இருந்து விடுதலை பெறுகிறான். இவ்வாறு அவன் இயற்கையின் குணங்களில் இருந்து விடுதலையடையும் பொழுது அவன் அளவற்ற ஆன்மீக இன்பத்தினைப் பெறுகிறான்.

பதம் 4.11.15
பூதை: பஞ்சபிர் ஆரப்தைர் யோஷித் புருஷ ஏவ ஹி
தயோர் வ்யவாயாத் ஸம்பூதிர் யோஷித்-புருஷயோர் இஹ

பூதை:—உலகியல் பொருள்களினால்; பஞ்சபி:—ஐந்து; ஆரப்தை:—பெருகுகிறது; யோஷித்—பெண்; புருஷ:—ஆண்; ஏவ—போன்று; ஹி—உறுதியாக; தயோ:—அவர்களின்; வ்யவாயாத்—பாலுறவு வாழ்க்கையினால்; ஸம்பூதி:—மீண்டும் படைத்தல்; யோஷித்—பெண்களின்; புருஷயோ:—ஆண்களின்; இஹ—இப்பௌதீக உலகில்.

பஞ்ச பூதங்களினால் உலகின் படைப்பு ஆரம்பமாகிறது. இவை மூலமே ஆண், பெண் என்ற உடல்கள் உள்ளிட்ட அனைத்துமே படைக்கப்படுகின்றன. ஆண், பெண், இருவரிடையே உள்ள பாலுறவு வாழ்க்கையினால் உலகானது மேலும் விரிவடைகிறது.

பதம் 4.11.16
ஏவம் ப்ரவர்ததே ஸர்க: ஸ்திதி: ஸம்யம ஏவ ச
குண-வ்யதிகாரத் ராஜன் மாயயா பரமாத்மன:

ஏவம்—இவ்வாறு; ப்ரவர்ததே:—ஏற்படுகிறது; ஸர்க:—படைப்பு; ஸ்திதி:—காத்தல்; ஸம்யம்:—அழித்தல்; ஏவ—உறுதியாக; ச—மேலும்; குண—குணங்களின்: வ்யதி-காரத்—தொடர்பினால்; ராஜன்—ஓ அரசனே; மாயயா—மாயையினால்; பரம-ஆத்மன:—முழுமுதற் கடவுளின்.

மனு தொடர்ந்து கூறலுற்றார்: அன்பார்ந்த துருவ மன்னனே, முழுமுதற் கடவுளின் மாயையாகிய உலகச் சக்தியினாலும் மற்றும் ஜட இயற்கையின் முக்குணங்களின் தொடர்பினாலும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் நடைபெறுகின்றன.

பதம் 4.11.17
நிமித்த-மாத்ரம் தத்ராஸுன் நிர்குண: புருஷர்ஷப:
வ்யக்தாவ்யக்தம் இதம் விஸ்வம் யத்ர ப்ரஹ்மதி லோஹவத்

நிமித்த-மாத்ரம்—நிமித்தக் காரணம்; தத்ர—அங்கு; ஆஸுத்—இருந்தது; நிர்குண—மாசுறாத; புருஷ-ருஷப:—பரமபுருஷர்; வ்யக்த—தோற்றம்; அவ்யக்தம்—தோன்றாதது; இதம்—இந்த; விஸ்வம்—உலகம்; யத்ர—எங்கு; ப்ரமதி—நகர்தல்; லோஹ-வத்—இரும்புபோன்ற.

முழுமுதற் கடவுள் இயற்கையின் குணங்களினால் மாசடையாதவராக விளங்குகிறார். உலகப் படைப்பைப் பொருத்தமட்டிலும் அவர் நிமித்தக்காரணராகவே இருக்கின்றார். அவர் தன் தூண்டுதலை அளிக்கும் பொழுது மேலும் பல காரணங்களும், விளைவுகளும் உற்பத்தியாகின்றன. அதனால் இவ்வுலகம் முழுவதும் காந்தத்தின் ஒட்டு மொத்த சக்தியினால் இரும்பு நகர்வதைப் போன்று நகர்கிறது.

பதம் 4.11.18
ஸ கால்வ இதம் பகவான் கால-ஸக்த்யா
குண-ப்ரவாஹேண விபக்த-வீர்ய:
கரோதி அகர்தைவ நிஹந்தி அஹந்தா
சேஷ்டா விபூம்ன: கலு துர்விபாவ்யா

ஸ:—அவர்; கலு—எவ்வாறேனும்; இதம்—இந்த (பிரபஞ்சம்); பகவான்—முழுமுதற் கடவுள்; கால—காலம்; ஸக்த்யா—சக்தியினால்; குண-ப்ரவாஹேண—இயற்கைக்குணங்களின் தொடர்பினால்; விபக்த—பிரிந்து; வீர்ய:—வீர்யத்தினால் (அவரது); கரோதி—செயல்படுதல்; அகர்தா—செய்யாதவர்; ஏவ—இருந்தாலும்; நிஹந்தி—கொல்கிறார்; அஹந்தா—கொல்லாதவர்; சேஷ்டா—சக்தி; விபூம்ன:—பகவானின்; கலு—உறுதியான; துர்விபாவ்யா—நினைப்பதற்கரியது.

முழுமுதற் கடவுள் தனது நினைத்தற்கரிய காலம் என்னும் பரம சக்தியால் ஜட இயற்கையின் முக்குணங்களின் தொடர்பிற்குக் காரணமாக இருக்கின்றார். அதனால் பல்வேறு சக்தியின் பல விகாரங்கள் வெளிப்படுகின்றன. அவர் செய்வது போல் தோன்றும். ஆனால் அவர் செய்பவரல்லர். அவர் கொல்வது போல் தோன்றும். ஆனால் அவர் கொல்பவரல்லர். எனவே அவரது நினைத்தற்கரிய சக்தியினாலேயே எல்லாம் நிகழ்கின்றனவென்று புரிந்து கொள்ளப்படுகிறது.

பதம் 4.11.19
ஸோ ‘னந்தோ ‘ந்தகர: காலோ ‘நாதிர் ஆதி-க்ருத் அவ்யய:
ஜனம் ஜனேன ஜனயன் மாரயன் ம்ருத்யுனாந்தகம்

ஸ:—அவர்; அனந்த:—எல்லையற்ற; அந்த-கர:—அழிப்பவர்; கால:—காலம்; அநாதி:—தொடக்கமில்லாதவர்; ஆதி-க்ருத்— எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக விளங்குபவர்; அவ்யய:—குறைவில்லாத; ஜனம்—உயிர்கள்; ஜனேன—உயிர்வாழிகளினால்; ஜனயன்—பிறப்பதற்குரிய காரணம்; மாரயன்—கொல்வது; ம்ருத்யுனா—மரணத்தினால்; அந்தகம்— கொள்பவர்கள்.

அன்புக் குழந்தை துருவனே, முழுமுதற் கடவுள் எப்போதும் இருக்கிறார், ஆனால் காலத்தின் வடிவில் அவரே அனைத்தையும் அழிக்கிறார். அனைத்திற்கும் அவரே தொடக்கமாக இருந்தும் அவருக்குத் தொடக்கமில்லை, அனைத்துக் காலத்தினால் தீர்ந்து போயினும் அவர் தீர்ந்துபோவதும் இல்லை. தந்தை என்னும் முகவரால் உயிர்கள் படைக்கப்படுகின்றன. மரணம் என்னும் முகவரால் மீண்டும் அழிக்கப்படுகின்றன. ஆயினும் அவர் பிறப்பு, இறப்புகளிலிருந்து நித்திய விடுதலை பெற்றவராகவே விளங்குகிறார்.

பதம் 4.11.20
ந வை ஸ்வ-பஷோ ‘ஸ்ய விபக்ஷ ஏவ வா
பரஸ்ய ம்ருத்யோர் விஸத: ஸமம் ப்ரஜா:
தம் தாவமானம் அனுதாவந்தி அனீஸா
யதா ரஜாம்ஸி அனிலம் பூத-ஸங்கா:

ந—இல்லை; வை—எவ்வாறேனும்; ஸ்வ-பக்ஷ:—நட்பு; அஸ்ய—முழுமுதற் கடவுளின்; விபக்ஷ:—பகவான்; ஏவ—உறுதியாக; வா—அல்லது; பரஸ்ய—பரம் பொருளின்; ம்ருத்யோ:—காலவடிவில்; விஸந:—நுழைந்து; ஸமம்—சமமாக; ப்ரஜா:—உயிர்வாழிகள்; தம்—அவரது; தாவமானம்—அசைதல்; அநுதாவந்தி—பின்தொடர்ந்து; அனீஸா:—சார்ந்திருக்கும் உயிர்வாழிகள்; யதா—போன்று; ராஜாம்ஸி—தூசுகள்; அனிலம்—காற்று; பூத-ஸங்கா:—பிற பெளதீகப் பொருள்கள்.

முழுமுதற் கடவுள் இந்த உலகில் அவரது நித்தியக்கால வடிவில் இருக்கின்றார். மேலும் அவர் எல்லோரிடத்தும் சமமானவராகவும் இருக்கின்றார். அவருக்கு நண்பர்களும் இல்லை; பகைவர்களும் இல்லை. காலத்தின் நீதிக்குட்பட்டு ஒவ்வொருவரும் தமது சொந்தக் கர்மவினை அல்லது பயன் தரும் செயல்களுக்கேற்ப இன்பங்களையோ அல்லது துன்பங்களையோ அனுபவிக்கின்றனர். காற்றடிக்கும் பொழுது தூசுகள் வானில் பறப்பதுபோல் ஒருவனது குறிப்பிட்ட கர்மவினைக்கேற்ப உலகில் அவன் இன்பமோ அல்லது துன்பமோ அடைகிறான்.

பதம் 4.11.21
ஆயுஷோ ‘ பசயம் ஜந்தோஸ் தனதவோபசயம் விபு:
உபாப்யம் ரஹித: ஸ்வ-ஸ்தோ து:ஸ்தஸ்ய விததாதி அஸௌ

ஆயுஷ:—ஆயுட்காலம்; அபசயம்—குறைதல்; ஜந்தோ:—உயிர்வாழிகளின்; ததா—அதுபோல்; ஏவ—மேலும்; உபசயம்—கூடுதல்; விபு:—முழுமுதற் கடவுள்; உபாப்யாம்—இரண்டிலிருந்தும்; ரஹித:—விடுதலை; ஸ்வ-ஸ்த:—எப்போதும் அவரது உன்னத நிலையில் இருத்தல்; து:-ஸ்தஸ்ய—கர்ம விதிகளின் கீழுள்ள உயிர்கள்; விததாதி—அருள்கிறார்; அஸெள—அவர்.

முழுமுதற் கடவுளான விஷ்ணு அனைத்துச் சக்திகளும் நிரம்பியவர். அவரே ஒருவனுக்கு அவன் பலன்தரும் செயல்களின் விளைவைப் பரிசாக அளிக்கின்றார். ஓர் உயிரின் வாழ்நாள் அதிகமாகவும், மற்றொரு உயிரின் வாழ்நாள் குறைவானதாக இருப்பினும் அவர் எப்போதும் உன்னத நிலையிலேயே இருக்கின்றார். அவரது வாழ்நாளில் கூடுதல் அல்லது குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

பதம் 4.11.22
கேசித் கர்ம வதந்தி ஏனம் ஸ்வபாவம் அபரே ந்ருப
ஏகே காலம் பரே தைவம் பும்ஸ: காமம் உதாபரே

கேசித்—சில; கர்ம—பலன்தரும் செயல்கள்; வதந்தி—விளக்குதல்; ஏனம்—அந்த; ஸ்வபாவம்—இயற்கை; அபரே—பிறர்; ந்ருப—அன்பிற்குரிய துருவ மன்னனே; ஏகே—சிலர்; காலம்—காலம்; பரே—பிறர்; தைவம்—விதி; பும்ஸ:—உயிர்களின்; காமம்—இச்சை; உத—கூட; அபரே—பிறர்.

பல்வேறு வகையான வாழ்க்கை வேறுபாடுகள், அவர்களது இன்ப துன்பங்கள் போன்றவையெல்லாம் கர்ம வினையின் பலன்கள் என்று சிலரால் விளக்கப்படுகின்றன. சிலர் இது இயற்கையினாலென்றும், சிலர் காலத்தினாலென்றும், சிலர் விதியினாலென்றும், மேலும் சிலர் இது விருப்பத்தினால் ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

பதம் 4.11.23
அவ்யக்தஸ்யாப்ரமேயஸ்ய மானா-ஸக்தி-உதயஸ்ய ச
ந வை சிகீர்ஷிதம் தாத போவேதாத ஸ்வ ஸம்பவம்

அவ்யக்தஸ்ய—வெளிப்படாத; அப்ரமேயஸ்ய—உன்னதத்தின்; நான—பல்வேறு; ஸக்தி—சக்திகள்; உதயஸ்ய—உயர்வு பெறச்செய்பவர்; ச—மேலும்; ந—இல்லை; வை—உறுதியாக; சிகீர்ஷிதம்—திட்டம்; தாத—எனதன்புக் குழந்தையே; க:—யார்; வேத—அறியப்படுவது; அத—அதனால்; ஸ்வ—சுயமாக; ஸம்பவம்—மூலம்.

உண்மையே வடிவான இறைவன் குறையுடைய புலன் முயற்சியினாலும் நேரடியாகவும் அறியப்படக் கூடியவர் அன்று. உலகியல் ஆற்றலையொத்த பல்வேறு ஆற்றல்களின் நாயகராக அவரே விளங்குகிறார்; ஆகையினால் அவர் அனைத்துக் காரணங்களுக்கும் மூலகாரணமாக விளங்குவதினால் அவரை மனயூகங்களினால் ஒருவராலும் அறியமுடியாது என்பதே முடிந்த முடிவாகும்.

பதம் 4.11.24
ந சைதே புத்ரக ப்ராதுர் ஹந்தாரோ தனதானுகா:
விஸர்காதானயோஸ் தாத பும்ஸோ தைவம் ஹி காரணம்

ந—இல்லை; ச—மேலும்; ஏதே—இவர்களெல்லாம்; புத்ரக—எனதன்புக் குழந்தையே; ப்ராது:—உனது சகோதரர்களின்; ஹந்தார:—கொலையாளிகள்; தனத—குபேரனின்; அனுகா:—அடியவர்கள்; விஸர்க—பிறப்பின், ஆதானயோ:—மரணத்தின்; தாத—எனதன்புக் குழந்தையே; பும்ஸ:—ஓர் உயிரினது; தைவம்—பரம்பொருள்; ஹி—உறுதியாக; காரணம்—காரணம்.

எனதன்புக் குழந்தையே! குபேரனின் சந்ததியினரான இந்த யக்ஷர்கள் உண்மையில் உனது சகோதரனைக் கொன்ற கொலையாளிகள் அல்லர்; உயிர்களின் பிறப்பு, இறப்புக்கு எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக விளங்கும் பரம்பொருளே மூல காரணமாக விளங்குகிறார்.

பதம் 4.11.25
ஸ ஏவ விஸ்வம் ஸ்ருஜதி ஸ ஏவாவதி ஹந்தி ச
அதாபி ஹி அனஹங்காரான் நாஜ்யதே குண-கர்மபி:

ஸ—அவர்; ஏவ—உறுதியாக; விஸ்வம்—இப்பிரபஞ்சம்; ஸ்ருஐதி—படைக்கிறது: ஸ:—அவர்; ஏவ—உறுதியாக; அவதி—காப்பது; ஹந்தி—அழிப்பது; ச—மேலும்; அத அபி—மேலும்; ஹி—உறுதியாக; அனஹங்காராத்—ஆணவமின்றி; ந—இல்லை; அஜ்யதே—சிக்கிக்கொள்வது; குண—ஜட இயற்கையின் குணங்களினால்; கர்மபி:—செயல்களினால்.

முழுமுதற் கடவுளே! இந்த உலகினைப் படைக்கவும், காக்கவும், உரிய காலத்தில் அழிக்கவும் செய்கிறார். ஆயினும் அவர் இச்செயல்களுக்கெல்லாம் உன்னதமானவராக விளங்குவதினால் அவர் இச்செயல்களினாலோ அல்லது இயற்கையின் குணங்களினாலோ வரும் ஆணவத்தினால் பாதிக்கப்படுவதே இல்லை.

பதம் 4.11.26
ஏஷ பூதானி பூதாத்மா பூதோஸோ பூத-பாவன:
ஸ்வ-ஸக்த்யா மாயயா யுக்த: ஸ்ருஜதி அத்தி ச பாதி ச

ஏஷ:—இந்த; பூதானி—படைக்கப்பட்ட உயிர்கள்; பூத—ஆத்மா— அனைத்து உயிர்களின் பரமாத்மா; பூத-ஈஸ:—எல்லோரையும் ஆட்டுவிப்பவர்; பூத-பாவன:—அனைவரையுங் காப்பவர்; ஸ்வ-ஸக்த்யா—அவரது சுயச்சக்தியின் மூலம்; மாயயா—மாயையினால்; யுக்த:—அச்செயல் முகவர் மூலம்; ஸ்ருஜதி—படைக்கிறது; அத்தி—அழித்தல்; ச—மேலும்; பாதி—காத்தல்; ச—மேலும்.

முழுமுதற் கடவுளே அனைத்து உயிர்களிலும் பரமாத்மாவாக விளங்குகிறார். அவரே அனைவரையும் காப்பவராகவும், ஆட்டுவிப்பவராகவும் இருக்கின்றார்; அவரது புறச்சக்தியாகிய மாயை என்னும் செயல் முகவரால் அவர் எல்லோரையும் படைக்கவும், காக்கவும், அழிக்கவும் செய்கிறார்.

பதம் 4.11.27
தம் ஏவ ம்ருத்யும் அம்ருதம் தாத தைவம்
ஸர்வாத்மனோபேஹி ஜகத்-பராயணம்
யஸ்மை பலிம் விஸ்வ-ஸ்ருஜோ ஹரந்தி
காவோ யதா வை ந ஸி தாம-யந்த்ரிதா:

தம்—அவருக்கு; ஏவ—உறுதியாக; ம்ருத்யும்—மரணம்; அம்ருதம்—இறவாத்தன்மை; தாத—எனதன்புக் குழந்தையே; தைவம்—பரம்பொருள்; ஸர்வ-ஆத்மனா—அனைத்து நிலைகளிலும்; உபேஹி—சரணம்; ஜகத்—உலகின்; பராயணம்—இறுதி லட்சியம்; யஸ்மை—அவருக்கு: பலிம்—அர்ப்பணித்தல்: விஸ்வ-ஸ்ருஜ—பிரம்மா போன்ற அனைத்துத் தேவர்களும்; ஹரந்தி—தாங்குதல்; காவ:—காளைமாடு; யதா—போன்று; வை—தோல்வியின்றி; நாலி—மூக்கில்; தாம—கயிறினால்; யந்த்ரிதா:—கட்டுப்படுத்துதல்.

எனதன்புக் குழந்தை துருவனே, உலக வளர்ச்சியின் இறுதி லட்சியமாக விளங்கும் முழுமுதற் கடவுளை சரண் புகுவாயாக. முரட்டுக் காளையின் மூக்கில் மூக்கணாங் கயிறு போட்டு அதன் சொந்தக்காரன் அதனை அடக்குவது போல பிரம்மதேவன் உள்ளிட்ட அனைத்துத் தேவர்களும் அவரது கட்டுப்பாட்டின் கீழேயே செயல்படுகின்றனர்.

பதம் 4.11.28
ஸ பாஞ்ச-வர்ஷோ ஜனனீம் த்வம் விஹாய
மாது: ஸப்தன்யா வசஸா பின்ன-மர்மா
வனம் கதஸ தபஸா ப்ரத்யக்-அக்ஷம்
ஆராத்ய லேபே மூர்த்னி பதம் த்ரி லோக்யா:

ய:—எவரொருவர்; பாஞ்ச-வர்ஷ:—ஐந்து வயது; ஜனனீம்—அன்னை; த்வம்—நீ; விஷாய—விட்டுவிட்டு; மாது:—அன்னையின்; ஸ—பத்னியா; சக—கிழத்தியின்; வசஸா—வார்த்தைகளினால்; பின்ன-மர்மா—இதயம் வருந்தி; வனம்—வனத்திற்கு; கத:—சென்று; தபஸா—தவம்; ப்ரத்யம்-அஹம்—பரமபுருஷ பகவான்; ஆராத்ய—வழிபட்டு; லேபே—எய்தினால்; மூர்த்னி—உயர்ந்த; பதம்—நிலை; த்ரி-லோக்யா:—மூன்று லோகங்களிலும்.

அன்புள்ள துருவனே, ஐந்து வயதிற்குள்ளாகவே உனது அன்னையின் சக கிழத்தியின் வார்த்தைகளினால் மனம் துன்புற்று உனது அன்னையின் பாதுகாப்பையும் உதறித் தள்ளிவிட்டு முழுமுதற் கடவுளை உணர்வதற்காக வனம் சென்று தவத்தில் ஈடுபட்டாய். அதன் விளைவாக மூன்று உலகங்களிலும் மிக உயர்ந்த நிலையினை நீ எய்தியிருக்கின்றாய்.

பதம் 4.11.29
தம் ஏனம் அங்காத்மனி முக்த-விக்ரஹே
வ் யபாஸ்ரிதம் நிர்குணம் ஏகம் அக்ஷரம்
ஆத்மானம் அன்விச்ச விமுக்தம் ஆத்ம-த்ருக்
யஸ்மின்ன் இதம் பேதம் அஸத் ப்ரதீயதே

தம்—அவரது; ஏனம்—அந்த; அங்க—அன்பார்ந்த துருவனே; ஆன்மனி—மனதில்; முக்த-விக்ரஹே—சினத்திலிருந்து விடுபடுதல்; வியபாஸ்ரிதம்—நிலையடைதல்; நிர்குணம்—உன்னதமான; ஏகம்—ஒருவர்; அக்ஷரம்—குற்றமில்லா பிரம்மம்; ஆத்மானம்—ஆத்மா; அன்விச்ச—கண்டுகொள்ள முயல்; விமுக்தம்—மாசற்றவர்; ஆத்ம-த்ருக்—பரமாத்மாவைப் பார்க்கின்ற; யஸ்மின்—எதனில்; இதம்—இந்த; பேதம்—வேறுபாடு; அஸத்—உண்மையற்ற; ப்ரதீயதே—தோன்றுவது.

ஆகையினால் அன்புத் துருவனே! குற்றமற்ற பிரம்மமாக விளங்கும் இறைவனிடம் உனது கவனத்தைச் செலுத்துக. உனது உண்மை நிலையில் இருந்து கொண்டு முழுமுதற் கடவுளை எதிர் கொள்வாயாக. இவ்வாறு உனது தன்னுணர்வினால் இப்பரு உலகின் வேறுபாடுகள் அனைத்தும் மின்னி மறைவன என்று கண்டு கொள்வாய்.

பதம் 4.11.30
த்வம் ப்ரத்யக்-ஆத்மனி ததா பகவதி அனந்த
ஆனந்த-மாத்ர உபபன்ன-ஸமஸ்த-ஸக்தௌ
பக்திம் விதாய பரமாம் ஸௌனகர் அவித்யா
க்ரந்திம் விபோத்ஸ்யஸி மமாஹம் இதி ப்ரரூடம்

த்வம்—நீ; ப்ரத்யக்-ஆத்மனி—பரமாத்மாவிற்கு; ததா—அந்நேரம்; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; அனந்தே—அளவில்லாதவர்; ஆனந்த-மாத்ரே—அனைத்து இன்பங்களின் உறைவிடம்; உபபன்ன—நிறைந்தவர்; ஸம்ஸ்த—எல்லாம்; ஸக்தௌ—சக்திகள்; பக்திம்—பக்தித் தொண்டு; விதாய—செய்வதினால்; பரமாம்—பரம; ஸனைக:—மிகவிரைவில்; அவித்யா—மாயையினால்; க்ரந்திம்—முடிச்சு; விபேத்ஸ்யஸி—விடுவாயாக; மம—எனது; அஹம்—நான்; இதி—இவ்வாறு; ப்ரரூடம்—உறுதியாக நிற்றல்.

இவ்வாறு உனது இயற்கை நிலையினை மீண்டும் எய்தி அனைத்துயிர்களிடத்தும் பரமாத்மாவாகவும், அனைத்து இன்பங்களின் சக்திமிக்க உறைவிடமாகவும் திகழும் இறைவனுக்குத் தொண்டு செய்வாயென்றால் மிகவிரைவில் நான், எனது, என்னும் மாயா உணர்வு உன்னிடமிருந்து ஒழியும்.

பதம் 4.11.31
ஸம்யச்ச ரோஷம் பத்ரம் தே ப்ரதீபம் ஸ்ரேயஸாம் பரம்
ஸ்ருதேன பூயஸா ராஜன்ன் அகதேன யதாமயம்

ஸம்யச்ச—விடுவாயாக; ரோஷம் சினம்; பத்ரம்—எல்லா நன்மைகளும்; தே—உனக்கு; ப்ரதீபம்—பகைவன்; ஸ்ரேயஸாம்—அனைத்து நன்மைகளும்; பரம்—மிகவுயர்ந்த; ஸ்ருதேன—கேட்பதினால்; பூயஸா—தொடர்ந்து; ராஜன்—எனதன்புக்குரிய மன்னனே; அகதேன—மருத்துவத்தினால்; யதா—போன்ற; ஆமயம்—பிணி.

அன்பார்ந்த மன்னனே, நோய் தீர்க்கும் மருந்தாக விளங்கும் நான் சொன்ன கருத்துக்களைச் சிந்திப்பாயாக. சினம் ஒழி, ஆன்மீக உணர்வுப் பாதையில் முன்னேற விடாது தடுக்கும் மோசமான எதிரி இச்சினமேயாகும். உனக்கு அனைத்துச் சிறப்புகளும் உண்டாவதாக. எனது அறிவுரைகளைப் பின்பற்றுவாயாக.

பதம் 4.11.32
யேனோ பஸ்ருஷ்டாத் புருஷால் லோக உத்விஜதே ப்ருஸம்
ந புதஸ் தத்-வஸம் கச்சேத் இச்சன்ன அபயம் ஆத்மன:

யேன—எதன்மூலம்; உபஸ்ருஷ்டாத்—உணர்ச்சிவயப்படும். பொழுது; புருஷாத்—அம்மனிதனால்; லோக:—எல்லோரும்; உத்விஜதே—அச்சமடைகின்றனர்; ப்ருஸம்—மிகுந்த; ந—இல்லை; புது—ஒரு கற்றறிந்தவன்; தத்—சினத்தின்; வஸம்—வசம்; கச்சேத்—செல்ல வேண்டும்; இச்சம்—இச்சை; அபய—அச்சமற்ற விடுதலை; ஆத்மன:—ஆத்மாவின்.

உலகிலிருந்து விடுதலையடைய விரும்பும் ஒருவன் சினத்திற்கு அடிமையாதல் கூடாது. ஏனெனில் சினத்தினால் குழப்பமுற்றோன் பிறரின் அச்சத்திற்கு ஆதாரமாகிறான்.

பதம் 4.11.33
ஹேலனம் கிரிஸ-ப்ராதுர் தனதஸ்ய த்வயா க்ருதம்
யஜ் ஜக்னிவான் புண்ய-ஜனான் ப்ராத்ரு-க்னான் இதி அமர்ஷித:

ஹேலனம்—அவமரியாதைக்குரிய நடத்தை; கிரிஸ—சிவ பெருமானின்; ப்ராது:—சகோதரர்; தனதஸ்ய—குபேரனுக்கு; த்வயா—உன்னால்; க்ருதம்—செய்யப்பட்டது; யத்—ஏனென்றால்; ஜஹ்னிவான்—நீ கொன்றிருக்கிறாய்; புண்ய-ஜனான்—யக்ஷர்கள்; ப்ராதுர்—உனது சகோதரனின்; க்னான்—கொலையாளிகள்; இதி—இவ்வாறு; (நினைத்து); அமர்ஷித:—சினம்.

அன்பார்ந்த துருவனே, உனது அன்புச் சகோதரனை யக்ஷர்கள் கொன்றனர் என்று கருதி நீ அவர்களில் பலரை அழித்துவிட்டாய். உனது இச்செயலின் மூலம் நீ தேவர்களின் பொருளாளரும் சிவபெருமானின் சகோதரருமான குபேரனின் கோபத்தைத் தூண்டியிருக்கிறாய். உனது செயல்களின் மூலம் நீ சிவபெருமானையும், குபேரனையும் அவமதிக்கிறாய் என்பதைப் புரிந்து கொள்வாயாக.

பதம் 4.11.34
தம் ப்ரஸாதய வத்ஸாஸு ஸன்னத்யா ப்ரஸ்ரயோக்திபி:
ந யாவன் மஹதாம் தேஜ: குலம் நோ ‘பி பவிஷ்யதி

தம்—அவரது; ப்ரஸாதய—அமைதிப்படுத்து; வத்ஸ—எனதன்புக் குழந்தையே; ஆஸு—உடனடியாக; ஸன்னத்யா—வணக்கங்களைச் செலுத்துவதன் மூலம்; ப்ரஸ்ரயா—மரியாதையான நடத்தையினால்; உத்திபி:—கனிவான வார்த்தைகளினால்; ந யாவத்—முன்னர்; மஹதாம்—மகான்களின்; தேஜ:—மனக் கொதிப்பு; குலம்—குலத்தினை; ந:—நமது; அபிபவிஷ்யதி—பாதிக்கும்.

இக்காரணத்தினால் எனதன்புக் குழந்தையே, உடனடியாக உனது கனிவான வார்த்தைகளினாலும், வழிபாட்டினாலும் குபேரனை அமைதிப்படுத்துவாயாக. அதனால் அவரது மனக் கொதிப்பு நமது குடும்பத்தைப் பாதிக்காதிருக்கலாம்.

பதம் 4.11.35
ஏவம் ஸ்வாயம்புவ: பௌத்ரம் அனுஸாஸ்யம் மனுர் த்ருவம்
தேனாபிவந்தித: ஸாகம் ரிஷிபி: ஸ்வ-புரம் யயௌ

ஏவம்—இவ்வாறு; ஸ்வாயம்புவ:—பகவான் சுவாயம்புவ மனு; பௌத்ரம்—தனது பேரனுக்கு; அனுஸாஸ்ய—அறிவுரை வழங்கிய பின்னர்; மனு:—பகவான் மனு; த்ருவம்—துருவ மன்னருக்கு; தேன—அவரால்; அபிவந்தித:—மரியாதைகளை அர்ப்பணித்து; ஸாகம்—சேர்ந்து; ரிஷிபி:—முனிவர்களுடன்; ஸ்வ-புரம்—தமது இருப்பிடத்திற்கு; யயௌ—சென்றார்.

இவ்வாறு சுயாம்புவ மனு தனது பேரனான துருவனுக்கு அறிவுரைகள் வழங்கிய பின்னர் அவரால் மரியாதை செலுத்தப்பட்டார். அதன் பிறகு பகவான் மனுவும், அவருடன் வந்த மாமுனிவர்களும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.


ஸ்ரீமத் பாகவதம், நான்காம் காண்டத்தின் “சுவாயம்புவ மனு துருவ மன்னரை யுத்தத்தை நிறுத்தச் சொல்லுதல்” எனும் தலைப்பை கொண்ட பதினொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare