அத்தியாயம் – 31
உயிரினங்களின் இயக்கங்கள் பற்றி
பகவான் கபிலரின் அறிவுரைகள்
பதம் 3.31.1 : பரம புருஷ பகவான் கூறினார்: பரமனின் மேற்பார்வையின் கீழ், அவரது பணியின் முடிவிற்கு ஏற்றபடி, உயிரினம் ஆகிய ஆத்மா, ஒரு குறிப்பிட்ட வகை உடலை மேற்கொள்ள ஆணின் விந்துவாகிய அணுக்கூறின் மூலம் ஒரு பெண்ணின் கருப்பையில் நுழையும்படி செய்யப்படுகிறது.

பதம் 3.31.2 : முதலிரவில், விந்துவும் சினையும் கலக்கின்றன, ஐந்தாம் இரவில் அந்தக் கலவை ஒரு நீர்க்குமிழியாக நுரைத்து எழுகிறது. பத்தாம் இரவில் அது சதைப்பற்றுள்ள பழம் போன்ற வடிவில் வளர்ந்து, பின்னர் படிப்படியாக தக்கவாறு சதைத் தொகுதியாக அல்லது முட்டையாக மாறுகிறது.

பதம் 3.31.3 : ஒரு மாதத்தில், தலை உருவாகிறது, இரு மாதங்களின் முடிவில் கைகள், பாதங்கள் மற்றும் பிற உறுப்புகள் வடிவம் பெறுகின்றன. மூன்று மாதங்களின் முடிவில், நகங்கள், விரல்கள், கால் விரல்கள், உரோமம், எலும்புகள் மற்றும் தோல் ஆகியவை பிறப்புறுப்பு மற்றும் உடலின் பிற உறுப்புகளான கண்கள், மூக்குத்துளைகள், காதுகள், வாய் மற்றும் மலங்கழியும் வாய் ஆகியவை தோன்றுகின்றன.

பதம் 3.31.4 : கருவுற்ற நாளிலிருந்து நான்கு மாதங்களுக்குள், உடலின் ஏழு முக்கிய ஆக்கக் கூறுகளான வெள்ளை நிணநீர், குருதி, சதை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மச்சை மற்றும் விந்து உருவாகின்றன. ஐந்து மாத முடிவில், பசியும் தாகமும் தங்களை உணரவைக்கின்றன, ஆறு மாதங்களின் முடிவில், முதிர்கரு, அதைச் சுற்றியுள்ள சவ்வினால் மூடப்பட்டு, அடிவயிற்றின் வலப்பக்கத்தில் அசையத் தொடங்குகிறது.

பதம் 3.31.5 : அன்னையால் உட்கொள்ளப்படும் உணவு மற்றும் நீரிலிருந்து அதற்குத் தேவையான சத்தைப் பெற்று, முதிர்கரு வளர்கிறது, வெறுக்கத்தக்க மலம் மற்றும் சிறுநீரின் இருப்பிடத்தில் தங்குகிறது, அது எல்லாவிதப் புழுக்களின் இனப்பெருக்க இடமாகும்.

பதம் 3.31.6 : அடிவயிற்றிலேயே பசியெனும் புழுக்களால் உடலெங்கும் மீண்டும் மீண்டும் உண்ணப்பட்டு, குழந்தை தன் மென்மைத் தன்மையால் பயங்கரமான வேதனையை அனுபவிக்கிறது. இவ்வாறு அந்த பயங்கரச் சூழ்நிலையால் நொடிக்கு நொடி அது உணர்விழக்கிறது.

பதம் 3.31.7 : அன்னை உண்ணும் கசப்பான, காரமான உணவு வகைகள் அல்லது மிக உப்பான அல்லது மிகவும் புளிப்பான உணவால், குழந்தையின் உடல் தாங்க இயலாத இடைவிடாத வலியால் துன்பப்படுகிறது.

பதம் 3.31.8 : கருவைச் சுற்றியுள்ள சவ்விற்குள் வைக்கப்பட்டு, குடல்களால் வெளியில் மூடப்பட்டு, குழந்தை அடிவயிற்றின் ஒருபுறத்தில் படுத்திருக்கிறது. அதன் தலை அதனுடைய வயிற்றை நோக்கித் திரும்பியும், அதனுடைய பின்புறமும் கழுத்தும் வில்போல் வளைந்துமிருக்கும்.

பதம் 3.31.9 : இவ்வாறு குழந்தை சுதந்தரமான அசைவு இன்றி, கூண்டில் உள்ள பறவை போல இருக்கிறது. அந்த நேரத்தில், குழந்தை அதிர்ஷ்டமானதாக இருந்தால், அவன் அவனுடைய சென்ற நூறு பிறவிகளில் ஏற்பட்ட எல்லாத் தொல்லைகளையும் நினைவு கூர முடியும், அவன் துயரத்தால் வருந்துகிறான். அந்த நிலையில் மன அமைதி சாத்தியமாகுமா?

பதம் 3.31.10 : இவ்வாறு அவன் கருக் கொண்ட ஏழாம் மாதத்திலிருந்து உணர்வு நிலை வளர்ச்சி அளிக்கப்பட்டு, பிள்ளைப் பேற்றிற்கு முன்னால் உள்ள வாரங்களில் கருவை அழுத்தும் காற்றால் குழந்தை கீழே தள்ளப்படுகிறது. அதே போலும் அருவருப்பான அடிவயிற்றுக் குழியிலிருந்து பிறந்த புழுக்கள் போல, அவனால் ஒரே இடத்தில் தங்க இயலாது.

பதம் 3.31.11 : அந்த உயிரினம் வாழ்வின் அச்சம் தரத்தக்க நிலையில், திடமான பொருட் கூறுகளின் ஏழு அடுக்குகளால் பிணைக்கப்பட்டு, தன்னை அந்த நிலையில் வைத்த பகவானிடம் கூப்பிய கைகளுடன் வணங்கி வேண்டிக்கொள்கிறது.

பதம் 3.31.12 : மனித ஆத்மா கூறுகிறது: தன்னுடைய வேறுபட்ட நிலையான வடிவங்களில் தோன்றுபவரும், உலகின் மேற்பரப்பில் நடப்பவரும் ஆகிய பரம புருஷ பகவானின் பாதகமலங்களில் சரண் அடைகிறேன். நான் அவரிடம் மட்டுமே சரண் அடைகிறேன், ஏனென்றால் அவர் எல்லாப் பயங்களிலிருந்தும் எனக்கு விடுதலை தரமுடியும், எனது பக்தியற்ற செயல்களுக்குப் பொருந்துகிற வாழ்வின் இந்த நிலையை நான் அவரிடமிருந்து பெற்று இருக்கிறேன்.

பதம் 3.31.13 : எனது செயல்களால் இப்போது கட்டுண்டிருப்பதாகத் தோன்றும், தூய ஆத்மாவாகிய, நான் மாயையின் ஏற்பாட்டால் என் அன்னையின் கருப்பையில் படுத்திருக்கிறேன். ஆனால் பாதிக்கப்படாமலும் மாற்றமில்லாமலும் என்னுடன் இங்கு இருக்கும் அவருக்கு நான் என்னுடைய மதிப்புமிக்க வணக்கங்களை அர்ப்பணிக்கிறேன். அவர் எல்லையற்றவர், செய்த செயலுக்கு வருந்தும் உள்ளம் உடையோரால் அவர் அறியப்படுகிறார். அவருக்கு நான் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை அர்ப்பணிக்கிறேன்.

பதம் 3.31.14 : ஐந்து மூலப் பொருட்களால் ஆன பூதவுடலில் நான் இருப்பதால் நான் பகவானிடமிருந்து பிரிக்கப்படுகிறேன், அதனால் நான் அடிப்படையில் புனிதமாயிருந்தும், என் குணங்களும் புலன்களும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. பரம புருஷ பகவான் இயற்கை மற்றும் உயிரினங்களின் எல்லை கடந்தவராய் இருப்பதால், அவருக்கு பருவுடல் என்பது இல்லாததால், அவர் எப்போதும் அவருடைய ஆன்மீகக் குணங்களில் பெருமையுடையவராய் இருப்பதால், நான் அவருக்கு என் வணக்கங்களை அர்ப்பணிக்கிறேன்.

பதம் 3.31.15 : மனித ஆத்மா மேலும் கூறுகிறது: உயிரினம் இயற்கையின் பாதிப்பின் கீழ் தள்ளப்பட்டு, மீண்டும் மீண்டும் வரும் பிறப்பு இறப்பின் வழியில் வாழவேண்டும் என்பதற்கான கடினமான போராட்டத்தைத் தொடர்கிறது. இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வு அவர் பரம புருஷ பகவானுடன் கொள்ளும் தொடர்பை மறந்து விடுவதால் ஏற்படுவதாகும். அதனால் பகவானின் அருள் இல்லாமல், எப்படி அவரால் பகவானின் ஆன்மீக அன்புத் தொண்டில் மீண்டும் ஈடுபட முடியும்?

பதம் 3.31.16 : வேறு யாருமின்றி பரம புருஷ பகவான், எல்லைக்குட்பட்ட பரமாத்மாவாக, பகவானின் பகுதி உருவமைப்பு ஆக, எல்லா உயிரற்ற மற்றும் உயிருள்ள பொருட்களை வழி நடத்துகிறார். அவர் காலத்தில் மூன்று பகுதிகளாகிய இறப்பு, நிகழ்வு மற்றும் எதிர்காலம் இவற்றில் இருக்கிறார். அதனால், கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா அவரது வழிகாட்டலால் வேறுபட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வின் மூன்றுவிதத் தொல்லைகளிலிருந்து விடுபட, நாம் அவரிடம் மட்டுமே சரணடைய வேண்டும்.

பதம் 3.31.17 : அவரது அன்னையின் அடிவயிற்றினுள் குருதி, மலம் மற்றும் சிறுநீரால் ஆகிய குளத்தில் விழுந்து, அவரது உடல் அன்னையின் அடிவயிறு சார்ந்த நெருப்பால் வாட்டப்பட்ட, உடலுடன் கூடிய ஆத்மா, வெளியில் வர விரும்பி, தன் மாதங்களை எண்ணிக் கொண்டு, “ஓ என் பகவானே, துயர் மிகுந்த ஆத்மாவாகிய நான் எப்போது இந்தச் சிறையிலிருந்து விடுதலை அடைவேன்?” என்று வேண்டுகிறது.

பதம் 3.31.18 : என் அன்பு பகவானே, நான் பத்து மாத வயதானவனாக மட்டுமே இருந்தாலும், உங்களின் எல்லையற்ற கருணையால் நான் உணர்வு நிலைக்கு விழிப்பூட்டப்படுகிறேன். விழுந்த ஆத்மாக்களின் நண்பனாகிய, பரம புருஷ பகவானின் இந்த அகாரணமான கருணைக்காக, எனது நன்றியைத் தெரிவிக்க வழியில்லை, ஆனால் கூப்பிய கரங்களுடன் மனதார வேண்டுதலைத் தவிர வேறு வழியில்லை.

பதம் 3.31.19 : மற்றொரு வகையான உடலில் உள்ள உயிரினம் உள்ளுணர்வால் மட்டும் பார்க்கிறது, அதற்கு அந்தக் குறிப்பிட்ட உடலின் ஒப்புக் கொள்ளும் மற்றும் ஒப்புக் கொள்ளாத புலனுக்கான பொறிக் காட்சிகள் மட்டும் தெரியும். ஆனால் எனக்கு உடல் உண்டு, அதில் என் புலன்களை என்னால் கட்டுப்படுத்த முடியும், நான் சேர வேண்டிய இடத்தைப் புரிந்துகொள்ள முடியும்; அதனால் பரம புருஷ பகவானால் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த உடலைப் பெற்ற நான், அவரது அருளால் உள்ளேயும் வெளியிலும் அவரைப் பார்க்க முடிந்த நான், எனது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 3.31.20 : அதனால், என் பகவானே, நான் பயங்கரமான சூழலில் வசித்த போதிலும், உலோகாயத வாழ்வாகிய குருட்டுக் கிணற்றில் மீண்டும் விழுவதற்காக நான் என் அன்னையின் அடிவயிற்றில் பிரிய விரும்பவில்லை. தேவமாயா எனப்படும் உங்கள் வெளிப்புறச் சக்தி, உடனே புதிதாகப் பிறந்த குழந்தையைப் பிடிக்கிறது, உடனே தொடரும் பிறப்பு இறப்பாகிய சுழற்சியின் தொடக்கமாகிய போலி அடையாளம், தொடங்குகிறது.

பதம் 3.31.21 : அதனால், மேலும் கலக்கம் அடையாமல், நான் தெளிவான உணர்வு நிலையாகிய என் நண்பரின் உதவியுடன் அறியாமையாகிய இருட்டிலிருந்து என்னை வெளிப்படுத்துவேன். விஷ்ணு பகவானின் தாமரைத் திருவடிகளை என் மனத்தில் கொள்வதன் மூலம் எளிதாக, நான் மீண்டும் பிறப்பு, இறப்புகளை எடுப்பதற்காக பல தாய்மார்களின் கருப்பைகளில் நுழைவதிலிருந்து காக்கப்படுவேன்.

பதம் 3.31.22 : பகவான் கபிலர் தொடர்ந்தார். பத்து மாதகால வாழும் உயிரினத்துக்கு கருவிலிருக்கும் பொழுதே இந்த ஆசைகள் உண்டு. ஆனால் அது பகவானை இவ்வாறு போற்றும்போது, பிள்ளைப் பேற்றிற்கு உதவும் காற்று அதனை முன்னோக்கிச் செலுத்தி, அதன் முகத்தைக் கீழ் நோக்கித் திருப்புகிறது. அதனால் அவன் குழந்தையாகப் பிறக்கலாம்.

பதம் 3.31.23 : காற்றால் திடீரென்று கீழ் நோக்கித் தள்ளப்பட்டு, குழந்தை தலை கீழாக, மூச்சின்றி, கடுந்துயரால் நினைவிழந்து, மிகுந்த துன்பத்துடன் கருப்பையிலிருந்து வெளிவருகிறது.

பதம் 3.31.24 : குழந்தை இவ்வாறு மலம் மற்றம் குருதியால் பூசப்பட்டு, பூமியில் விழுகிறது, மலத்திலிருந்து உற்பத்தியான ஒரு புழுவைப் போல அது நெளிகிறது. அது தன் மேலான அறிவை இழந்து, மாயையின் பிடியில் இங்கு சிக்கி அழுகிறது.

பதம் 3.31.25 : வயிற்றிலிருந்து வெளியில் வந்த பிறகு, குழந்தை அதன் தேவைகளைப் புரிந்துகொள்ள இயலாதவர்களிடம் பாதுகாப்பாகத் தரப்படுகிறது, இவ்வாறுதான் மனிதர்களால் வளர்க்கப்படுகிறது. தனக்குத் தரப்படும் எதையும் மறுக்க இயலாமல் காலப்போக்கில் அவன் விரும்பத்தகாத சூழ்நிலைகளில் விழுகிறான்.

பதம் 3.31.26 : வியர்வை மற்றும் உயிரினங்களால் சூழப்பட்டு அருவருப்பான படுக்கையில் படுத்துக் கொண்டு, பாவமான குழந்தை, அரிக்கும் உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற தன்னுடலைச் சொறிந்து கொள்ளும் திறமையற்றது என்றால் அதனுடைய அமர்தல், நிற்றல் அல்லது அசைதல் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

பதம் 3.31.27 : சிறிய புழுக்கள் ஒரு பெரிய புழுவைக் கடிப்பதுபோல, மென்மையான தோலையுடைய குழந்தையை அவனுடைய உதவியற்ற நிலையில், கொசுவகை, கொசுக்கள், மூட்டுப்பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்கள் கடிக்கின்றன. தன் அறிவை இழந்து, குழந்தை கடுந்துயரால் அழுகிறது.

பதம் 3.31.28 : இந்த விதத்தில் குழந்தை பலவிதத் தொல்லைகளை அனுபவித்து, தன் குழந்தைப் பருவத்தைக் கடக்கிறது, பிள்ளைப் பருவத்தை அடைகிறது. பிள்ளைப் பருவத்திலும் தான் ஒருபோதும் அடைய இயலாத பொருட்களைப் பெற ஆசைப்பட்டு வேதனை அனுபவிக்கிறான். இவ்வாறு, அறியாமையால், அவன் கோபப்பட்டு, வேதனை அடைகிறான்.

பதம் 3.31.29 : உடலின் வளர்ச்சியுடன், உயிரினமானது, தன் ஆத்மா அழியும் பொருட்டு, தன் போலி கௌரவத்தையும், கோபத்தையும் அதிகரித்துக் கொள்கிறது, அதனால் அதே போன்ற எழுச்சியுள்ளவர்களை நோக்கிப் பகைமை கொள்ளுகிறது.

பதம் 3.31.30 : அந்த அறியாமையால், உயிரினம் ஐந்து மூலப் பொருட்களால் ஆன பூதவுடலைத் தன்னுடையதாக ஏற்றுக் கொள்கிறது. இந்தத் தவறாகப் புரிந்துகொள்ளலுடன், அவர் நிலையில்லாத பொருட்களைத் தன்னுடையதாக ஏற்றுக் கொண்டு, மிகவும் இருட்டான இடத்தில் தன் அறியாமையை அதிகரித்துக் கொள்கிறார்.

பதம் 3.31.31 : அவருக்குத் தொடர்ந்து தொல்லை தரும் மூலாதாரமான, அறியாமை மற்றும் தொல்லை தரும் செயல்களின் பிடிப்புகளால் அவர் பிணிக்கப்பட்டதால் அவரைத் தொடர்ந்து வரும் உடலின் பொருட்டு,
மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பிற்கு அவரை அடிமைப்படுத்துவதற்குக் காரணமான பல்வேறு செயல்களை அவர் செய்கிறார்.

பதம் 3.31.32 : அதனால், உயிரினம், புலனுணர்வு இன்பத்தின் நாட்டத்தில் மனச்சுவையின் திருப்தியில் ஈடுபட்டுள்ள சிற்றின்ப மனமுடைய மக்களால் பாதிக்கப்பட்டு மீண்டும் நேர்மையற்ற வழியில் தொடர்பு கொண்டால், அவன் மீண்டும் முன்பு போல நரகத்திற்கும் செல்வான்.

பதம் 3.31.33 : அவர் உண்மை, தூய்மை, கருணை நிலவுலக மைய ஈர்ப்பாற்றல், ஆன்மீக அறிவுக்கூர்மை, வெட்கம், தவம், புகழ், மன்னித்தல், மனக்கட்டுப்பாடு, புலன் கட்டுப்பாடு, அதிர்ஷ்டம் மற்றும் அது போன்ற எல்லா வாய்ப்புகளும் சிறிதும் இல்லாதவராகிறார்.

பதம் 3.31.34 : ஒருவர் தன்னை உணரும் அறிவை இழந்த நாகரிகமற்ற முட்டாளுடன் தொடர்பு கொள்ளக் கூடாது, ஒரு பெண்ணின் கைகளில் நடமாடும் நாய் போன்றவருடன் தொடர்பு கொள்ளக் கூடாது.

பதம் 3.31.35 : பற்றிலிருந்து தொடங்கி வேறு எந்தப் பொருள் வரைக்கும் மனிதனிடம் சிறுகச் சிறுகச் சேரும் மோகமும் பிடிப்பும் ஓரளவுதான். பெண்ணிடம் அல்லது பெண்களிடம் வசப்படும் ஆடவரிடம் கொள்ளுகின்ற பற்றும் பாசமும் முழுமையாகி விடுகிறது.

பதம் 3.31.36 : தன் சொந்த மகளைப் பார்த்தவுடன், பிரம்மா அவளது அழகால் கலங்கி, வெட்கமின்றி ஒரு கலைமானின் வடிவில் அவளிடம் ஓடிய பொழுது அவள் ஒரு பெண்மான் வடிவை எடுத்தாள்.

பதம் 3.31.37 : பிரம்மனால் பெற்றெடுக்கப்பட்ட மனிதர்கள், தேவர்கள் மற்றும் விலங்குகளாகிய எல்லாவித வாழும் உயிரினங்களிலும் முனிவர் நாராயணரைத் தவிர வேறு யாரும் பெண்ணின் வடிவிலுள்ள மாயையின் கவர்ச்சியிலிருந்து விடுபட்டவர் அல்லர்.

பதம் 3.31.38 : அவளது புருவங்களின் வெறும் அசைவினாலேயே உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களைத் தன் பிடியில் சிக்க வைக்கும் பெண்ணின் வடிவிலுள்ள என் மாயையின் சிறந்த ஆற்றலைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

பதம் 3.31.39 : யோகத்தின் உச்சநிலையை அடைய விரும்பி எனக்குத் தொண்டு புரிவதன் மூலம் தன்னை அறிந்தவர் ஒரு போதும் கவர்ச்சிகரமான பெண்ணுடன் தொடர்பு கொள்ளக் கூடாது, ஏனெனில் முன்னேறும் பக்தருக்கு அம்மாதிரியான பெண் நரகத்தின் வாயில் போன்றவள் என்று புனித நூலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதம் 3.31.40 : பகவானால் படைக்கப்பட்ட பெண் மாயையின் பிரதிநிதித்துவம் ஆவாள். அந்த மாயாவுடன் தொடர்பு கொள்ளும் ஒருவர் புல்லால் மூடப்பட்ட குருட்டுக் கிணறு போன்ற மரணத்திற்குரியதே இந்த வழி என்று நிச்சயம் அறிய வேண்டும்.

பதம் 3.31.41 : தன்னுடைய முந்தைய பிறவியில் பெண்ணிடம் கொண்ட பற்றின் விளைவாக, உயிரினத்திற்கு ஒரு பெண்ணின் வடிவம் அளிக்கப்பெற்றது. முட்டாள்தனமாக மாயையை ஒரு ஆணின் வடிவில், அவள் கணவராக, செல்வம், சந்ததி, வீடு, மற்றும் பிற பொருட் செல்வங்களை அளிப்பவராகப் பார்க்கிறது.

பதம் 3.31.42 : அதனால், வேட்டைக்காரனின் பாடல் மானுக்கு மரணம் போல, கணவன் வீடு, குழந்தைகளை அவள் மரணத்திற்காக உள்ளவை என்று பகவானின் வெளிப்புறச் சக்தியின் ஏற்பாடாக இதனைக் கருத வேண்டும்.

பதம் 3.31.43 : அவருடைய குறிப்பிட்ட ஒரு வகையான உடலால் உலோகாயத்தில் சிக்குண்ட உயிரினம் தனக்குப் பயன் தரும் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளிற்கு அலைகிறது. இந்த விதத்தில் அவர் தனக்குப் பயன் தரும் செயல்களில் மட்டும் ஈடுபட்டு அதன் பின்விளைவை இடைவிடாமல் அனுபவிக்கிறார்.

பதம் 3.31.44 : இந்த விதத்தில் அவருடைய செயல்களுக்கேற்றபடி உயிரினம் மனம் மற்றும் புலன்களுடன் கூடிய பொருத்தமான உடலைப் பெறுகிறது. அவருடைய குறிப்பிட்டசெயலின் எதிர்ச் செயல் ஒரு முடிவுக்கு வரும் போது அது மரணம் என்றும் குறிப்பிட்ட வகை எதிர்ச் செயல் தொடங்கும் பொழுது, அது பிறப்பு என்றும் கூறப்படுகிறது.

பதங்கள் 3.31.45 – 3.31.46 : நரம்பு நோயின் துன்பத்தால் நிறத்தை அல்லது வடிவத்தைப் பார்க்கும் ஆற்றலைக் கண்கள் இழக்கும் போது, பார்வைப் புலன் குன்றுகிறது. கண்களால் காட்சியினைக் காணும் உயிர்கள் பார்க்கும் ஆற்றலை இழக்கின்றன. அதே விதத்தில் பொருட்களை தொட்டு அறியும் தன்மையான வெளிஉடல் அந்தத் திறனை முற்றுமாக இழக்கும் பொழுது, அது மரணம் ஆகும். ஒருவர் வெளியுடலைத் தான் என்று பார்க்கத் தொடங்கும் பொழுது, அது பிறப்பு எனப்படுகிறது.

பதம் 3.31.47 : அதனால் ஒருவர் மரணத்தைப் பேரச்சத்துடன் பார்க்கக் கூடாது, உடலை ஆத்மா எனக் கருதி அதனை விளக்க முயற்சி செய்யக் கூடாது. வாழ்வின் உடல் தேவைகளை அனுபவிப்பதில் மிகைப்படச் செய்யக் கூடாது. உயிரினத்தின் உண்மையான இயல்பை உணர்ந்து ஒருவர் இந்தவுலகின் பற்றிலிருந்து விடுபட்டு, குறிக்கோளோடு செல்ல வேண்டும்.

பதம் 3.31.48 : சரியான குறிக்கோள் பக்தித் தொண்டு பொருள்களிடம் நம்பிக்கை அற்ற நோக்கம் ஆகிய இவற்றை மனதிற்கொண்டு ஒருவர் இந்த மாயவுலகத்திடமிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இந்த மண்ணுலகம் பற்றிய கவலை இல்லாமல் இருக்க இதுவே வழியாகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare