அத்தியாயம் – 20
மைத்ரேயருக்கும் விதுரருக்கும்
இடையே உரையாடல்
பதம் 3.20.1 : ஸ்ரீ சவுநகர் விசாரித்தார்: ஓ சூத கோஸ்வாமி, பூமி மீண்டும் கோளப்பாதையில் பொருத்தப்பட்ட பின்னர், ஸ்வாயம்புவ மனு, பின்னால் பிறப்பு எடுக்க இருப்பவர்களுக்கு விடுதலைக்கான வழிகாட்ட என்ன செய்தார்?

பதம் 3.20.2 : சவுநக ரிஷி, பகவான் கிருஷ்ணரின் சிறந்த பக்தரும், நண்பருமான விதுரரைப் பற்றி விசாரித்தார். விதுரர், தன் மூத்த அண்ணன், அவன் பிள்ளைகளுடன் சேர்ந்து பகவானின் விருப்பத்திற்கு எதிராகத் தந்திரங்கள் செய்ததால், அவருடைய உறவை விட்டு விட்டார்.

பதம் 3.20.3 : வியாசதேவரின் உடலிலிருந்து பிறந்த விதுரர் அவரை விட எந்த விதத்திலும் தாழ்ந்தவர் அல்லர். இவ்வாறு முழு மனத்துடன் அவர் கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளை ஒப்புக் கொண்டார். அவருடைய பக்தர்களிடமும் தொடர்பு கொண்டார்.

பதம் 3.20.4 : விதுரர் புனித இடங்களில் அலைந்ததால், உணர்ச்சிகளில் தூய்மை யானவரானார். இறுதியில் ஹரித்துவாரத்தை அடைந்தார். அங்கு அவர் ஆன்மீக வாழ்வின் நுட்பங்களை அறிந்த சிறந்த முனிவரைச் சந்தித்தார். அவரிடமிருந்து விசாரித்தார். எனவேதான் ஸௌனக ரிஷி கேட்டார்: மைத்ரேயரிடமிருந்து விதுரர் இன்னும் என்ன விசாரித்தார்?

பதம் 3.20.5 : விதுரருக்கும் மைத்ரேயருக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றி ஸௌனகர் விசாரித்தார். பகவானின் கறையில்லாத லீலைகளைப் பற்றிப் பல வர்ணனைகள் இருக்க வேண்டும். இத்தகைய வர்ணனைகளைக் கேட்பது, கங்கையின் நீரில் குளிப்பது போன்றதாகும். ஏனென்றால், இதனால் ஒருவரை, பாவச் செயலின் வினைவிலிருந்து விடுவிக்க இயலும்.

பதம் 3.20.6 : ஓ சூத கோஸ்வாமி, உங்களுக்கு எல்லா நன்மையும் உண்டாவதாக- தயவு செய்து, பகவானின் பெருங்குணம் உள்ள, வானளாவப் புகழத் தகுந்த செயல்களை வர்ணிக்கவும். பகவானின் அம்ருதம் போன்ற லீலைகளைக் கேட்பதனால் எந்த மாதிரியான பக்தன் மனநிறைவை அடைய முடியும்?

பதம் 3.20.7 : தைமிஸாரண்யத்தில் உள்ள சிறந்த முனிவர்களால் பேசும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட ரோமஹர்ஷணரின் மகன், சூத கோஸ்வாமியின் மனம் பகவானின் உன்னதமான லீலைகளில் லயித்திருந்தது. அவர் கூறினார்: “நான் இப்போது பேசப் போவதை தயவு செய்து கேளுங்கள்.”

பதம் 3.20.8 : ஸ்ரீ சூத கோஸ்வாமி தொடர்ந்தார்: பரதனின் சந்ததியாகிய விதுரர், பகவான் தன்னுடைய தெய்வ ஆற்றலால் காட்டுப் பன்றியின் வடிவம் எடுத்துக்கொண்டு, கடலுக்கு அடியில் இருந்த பூமியை விளையாட்டாக எடுத்துக் கொண்டு வந்து, வித்தியாசமான முறையில் ஹிரண்யாட்சனைக் கொன்ற கதையைப் பெருமகிழ்வுடன் கேட்டார். பின் விதுரர் முனிவரிடம் கீழ்வருமாறு பேசினார்.

பதம் 3.20.9 : விதுரர் கூறினார்: ஓ புனித முனிவரே, எங்களால் நினைத்துப் பார்க்க முடியாதவற்றை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். வாழும் உயிரினங்களின் மூதாதையர்களாகிய பிரஜாபதிகளைத் தோற்றுவித்த பிறகு, உயிரினங்களைப் படைக்க பிரம்மா என்ன செய்தார் என்று எனக்குக் கூறுங்கள்.

பதம் 3.20.10 : விதுரர் விசாரித்தார்: பிரம்மாவின் அறிவுரையின்படி பிரஜாபதிகள் (வாழும் பொருள்களான மரீசியும் ஸ்வாயம்புவ மனு ஆகியோரைத் தோற்றுவித்த) எவ்வாறு படைத்தார்கள், எவ்வாறு அவர்கள் இந்தத் தெளிவான அண்டத்தைத் தோற்றுவித்தார்கள்.

பதம் 3.20.11 : அவர்கள் படைப்பைத் தங்கள் உரிமைக்குரிய மனைவிகளுடன் இணைந்து உருவாக்கினார்களா, அவர்கள் தங்கள் செயலில் சுதந்தரமாக இருந்தார்களா அல்லது அவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கினார்களா?

பதம் 3.20.12 : மைத்ரேயர் கூறினார்: வாழும் உள்பொருள்களின் பார்க்க இயலாத செயலால், இயற்கையின் மூன்று வித குணங்களின் நடுநிலை அமைதி கலங்கும்பொழுது, மஹாவிஷ்ணுவால், நேரத்தின் வலிமையால், மொத்த ஜடவுலகப் பொருட்களும் உருவாக்கப்பட்டன.

பதம் 3.20.13 : ஜீவனின் விதியால் தூண்டப்பட்ட, போலியான அஹங்காரம் மூன்று வகைகளால் ஆனது, மஹா தத்துவத்திலிருந்து வெளிப்பட்டது. அதில் ரஜஸ் என்னும் குணம் மேம்பட்டிருக்கிறது. அஹங்காரத்திலிருந்து ஐந்து தத்துவங்கள் கொண்ட பல குழுக்கள் வெளிப்பட்டன.

பதம் 3.20.14 : ஜடவுலக அண்டத்தைத் தனியாக உற்பத்தி செய்ய இயலாததால், அவர்கள் பகவானது ஆற்றலின் உதவியுடன் சேர்ந்து ஒரு ஒளி மிக்க முட்டையை உற்பத்தி செய்தனர்.

பதம் 3.20.15 : ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, ஒளிவீசிய முட்டை, கடலினது நீரின் மேல் உயிரற்ற நிலையில் மிதந்தது. பின்னர் பகவான் அதனுள் சுர்போதகஸாயி விஷ்ணுவாக நுழைந்தார்.

பதம் 3.20.16 : பரமபுருஷ பகவானாகிய கர்போதகஸாயி விஷ்ணுவின் உந்தியிலிருந்து, ஒளி பொருந்திய, ஆயிரம் சூரியர்களைப் போன்ற ஒரு தாமரை மலர் முளைத்தெழுந்தது. இந்தத் தாமரை மலர், எல்லா கட்டுப் படுத்தப்பட்ட ஆன்மாக்கள் தங்கும் இடம் ஆகும். இந்தத் தாமரை மலரிலிருந்து வெளிவந்த முதல் உயிர்ப் பொருள் எல்லாம் வல்ல இறைவன் பிரம்மன் ஆவார்.

பதம் 3.20.17 : கர்போதகக் கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரமபுருஷ பகவான், பிரம்மனின் இதயத்தில் நுழைந்த பொழுது, அதைத் தாங்க அவருடைய அறிவுகூர்மையினைப் பயன்படுத்தினார். அந்த அறிவுத் திறனோடு இறைவனை வணங்கி இந்த அண்டத்தை முன்பு இருந்தது போலவே பிரமன் படைக்கத் தொடங்கினார்.

பதம் 3.20.18 : முதலில், பிரம்மன் தன் நிழலிலிருந்து, பந்தப்பட்ட ஆன்மாக்களை மூடும் அறியாமையைப் படைத்தார். அவை ஐந்து வகைப்படும். அவை தாமிஸ்ர, அந்த தாமிஸ்ர, தமஸ், மோஹம், மஹா மோஹம் என்று அழைக்கப்படுகின்றன.

பதம் 3.20.19 : அருவருப்பினால், பிரம்மா தன் அறியாமையாகிய உடலைத் தூக்கியெறிந்தார், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் உடலின் உடைமைக்காகப் பாய்ந்தார்கள். அது இரவின் வடிவில் தொடர்ந்து இருந்து வருகிறது. இரவு என்பது பசிக்கும் தாகத்துக்கும் மூலமாகும்.

பதம் 3.20.20 : பசியாலும் தாகத்தாலும் ஆட்கொள்ளப்பட்டு, அவர்கள் பிரம்மனை விழுங்கும் ஆவலுடன் எல்லாப் பக்கங்களில் இருந்தும் ஓடி, “அவரைக் கொல்லுங்கள்- தின்னுங்கள்-” என்று கத்தினார்கள்.

பதம் 3.20.21 : எல்லா தேவர்களுக்கும் தலைவரான பிரம்மா, மிகுந்த கவலையுடன் அவர்களைக் கேட்டுக் கொண்டார், “என்னைத் தின்று விடாதீர்கள். ஆனால் காப்பாற்றுங்கள். நீங்கள் என்னிடத்திலிருந்து பிறந்தவர்கள், எனவே என்னுடைய பிள்ளைகள் ஆவீர்கள். மேலும் நீங்கள் யக்ஷர்களும் ராக்ஷஸர்களும் ஆனீர்கள்.”

பதம் 3.20.22 : பின்னர் அவர் நன்மையின் ஒளியுடன் பிரகாசிக்கும் தலைமைத் தேவர்களைப் படைத்தார். அவர்களுக்கு முன் பகலின் ஒளி வடிவத்தைப் போட்டார். தேவர்களும் விளையாட்டாக அந்த ஒளி வடிவத்தைத் தமது உடைமை ஆக்கிக் கொண்டார்கள்.

பதம் 3.20.23 : பகவான் பிரம்மன், பின்னர் தன்னுடைய பிட்டத்திலிருந்து அசுரர் களுக்கும் பிறப்பளித்தார். அவர்கள் பாலுணர்வில் அளவுக்கு மீறிய ஆர்வம் உடையவர்களாய் இருந்தனர். ஏனென்றால் அவர்கள் மிகுந்த இச்சையுடையவர்களாய் இருந்தால், அவர்கள் கலவிக்காக அவரை அணுகினார்கள்.

பதம் 3.20.24 : வணங்கத் தகுந்த பிரம்மன் முதலில் அவர்களின் முட்டாள் தனத்தைக் குறித்துச் சிரித்தார். ஆனால் வெட்கமின்றி, அசுரர்கள் அவரை நெருங்கி வருவதைக் கண்டு, போகம் கொண்டவராகி, பயத்தால் விரைந்து ஓடினார்.

பதம் 3.20.25 : பக்தர்களுக்கு எல்லா வரங்களையும் அருளுபவரும், அவர்களின் துன்பங்களையும் மறையச் செய்பவரும், பக்தர்கள் யாருடைய தாமரை போன்ற பாதங்களைச் சரணடைகிறார்களோ அவரைக் காப்பாற்றும் அந்த பரமபுருஷ பகவானை பிரம்மன் அணுகினார். பக்தர்களின் திருப்திக்காக எண்ணற்ற, தெய்வீகமான உன்னத வடிவங்களில் பகவான் தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர்.

பதம் 3.20.26 : பகவானை அணுகி பிரம்மன், அவரிடம் இவ்வாறு கூறினார்: என் இறைவா, உங்கள் ஆணைப்படி, என்னால் படைக்கப்பட்ட இந்தப் பாவம் நிறைந்த அசுரர்களிடமிருந்து, தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள். அவர்கள் பாலுணர்வின் விருப்பத்தால் ஏற்பட்ட வெறியினால், என்னைத் தாக்க வந்துள்ளார்கள்.

பதம் 3.20.27 : என் பகவானே, நீங்கள் மட்டுமே துன்பமடைந்தவர்களின் துயரத்தை நீக்கும் வல்லமையுடையவர், உங்கள் திருவடிகளைச் சரணடையாதவர் களுக்கு துன்பம் தந்து அனுபவிக்கச் செய்கிறீர்கள்.

பதம் 3.20.28 : பிறரின் எண்ணங்களை மிகவும் தெளிவாகப் பார்க்கும் பகவான், பிரம்மனின் துன்பத்தைக் கூர்ந்து நோக்கி, அவரிடம் கூறினார். “உன்னுடைய இந்தத் தூய்மையற்ற உடலை உதறி எறிந்து விடு.” இவ்வாறு பகவானால் ஆணையிடப்பட்டதும் பிரம்மன் தன் உடலை உதறி எறிந்தார்.

பதம் 3.20.29 : பிரம்மனால் விடப்பட்ட உடல், பகலும்இரவும் சந்திப்பதும் உணர்ச்சியைத் தூண்டும் நேரமும் ஆகிய மாலை நேர வடிவத்தை எடுத்துக் கொண்டது. இயற்கையில் வெறியுடைய, ரஜஸ் எனும் குணத்தால் ஆளப்படும் அகரர்கள், அதை அழகிய இளநங்கையாகக் கருதினாரக்ள். அவளுடைய தாமரைப் பாதங்களில் கணகண என்று ஒலிக்கும் சலங்கைகள் இருந்தன. அவளின் கண்கள் அகன்றும் மயக்க வெறியுடனும் இருந்தன. அவளின் இடை அழகிய ஆடையாகி மூடப்பட்டு, அதைச் சுற்றி ஒரு ஒட்டியாணம் ஒளி வீசியது.

பதம் 3.20.30 : அவளின் மார்புகள், ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருத்தலால் உயர்ந்து விளங்கின. அவை எதுவும் குறுக்கிடும் அளவுக்கு இடமின்றி மிகவும் நெருக்கமாக விளங்கின. அவளுக்கு (எடுப்பான) அழகிய நாசியும், அழகிய பற்களும் இருந்தன. அவள் உதடுகளில் அழகிய புன் சிரிப்பு தவழ்ந்தது. அவள் அசுரர்களை நோக்கி ஒரு விளையாட்டான பார்வையை வீசினாள்.

பதம் 3.20.31 : வெட்கத்தில் ஆழ்ந்தவள் போல, அவள் தன் கரிய கூந்தலால் தன்னை மறைத்துக் கொண்டாள். இந்தப் பெண்ணைப் பார்த்த பொழுது, அசுரர்கள் எல்லாரும் பாலுணர்வின் விருப்பத்துடன் மயங்கினார்கள்.

பதம் 3.20.32 : அசுரர்கள் அவளைப் புகழ்ந்தனர்: ஓ, என்ன அழகு- என்ன அறிய சுயகட்டுப்பாடு-என்ன மயக்கும் இளமை-உணர்ச்சிக்கு ஆளாகி அவளுக்காக ஏங்கும் எங்களுக்கு நடுவே, உணர்ச்சியிலிருந்து முழுவதும் விடுபட்டவள் போல அவள் இயங்குகின்றாள்.

பதம் 3.20.33 : இளம் பெண்ணின் வடிவில் அவர்களுக்கு முன் தோன்றிய, அந்த மாலை நேரத்து மங்கிய ஒளி பற்றிய பல்வேறு கற்பனைகளால் திருப்திப்பட்ட தீய எண்ம் கொண்ட அசுரர்கள் அவளை மரியாதையுடன் நடத்தி, அவனிடம் விருப்பத்துடன் பின்வருமாறு பேசினார்கள்.

பதம் 3.20.34 : ஓ அழகிய பெண்ணே, நீ யார்? நீ யாருடைய மனைவி அல்லது மகள்? நீ எங்கள் முன் தோன்றுவதன் நோக்கம் என்ன? உன் விலை மதிப்பில்லாத பொருளாகிய அழகால், அதிர்ஷ்டம் அற்ற எங்களுக்கு ஆசைகாட்டி என் ஏங்க வைக்கிறாய்?

பதம் 3.20.35 : ஓ அழகிய பெண்ணே நீ யாராக இருந்தாலும் உன்னைப் பார்ப்பதற்கு நாங்கள் பாக்கியம் செய்திருக்கிறோம் நீ பந்தினை ஏந்தி விளையாடும் பொழுது, பார்ப்பவர்களின் மனத்தை எல்லாம் கிளர்ச்சி அடையச் செய்கிறாய்.

பதம் 3.20.36 : ஓ அழகிய பெண்ணே, நீ துள்ளும் பந்தைக்கொண்டு உன் கையால் பூமியை மீண்டும் மீண்டும் அடிக்கும் பொழுது உன் தாமரைப் பாதக்ஙள் ஒரு இடத்தில் தங்குவதில்லை. உன் முழுமையான மார்புகளின்பாரத்தால் அழுத்தப்பட்டு உன் இடை களைப்படைகிறது. உன் தெளிவான பார்வை மங்கியது போல் தெரிகிறது. உன் அழகிய பின்னப்பட்ட கூந்தலை நாங்கள் வணங்குகிறோம்.

பதம் 3.20.37 : அசுரர்கள், அறியாமையால் மூடப்பட்டு, மங்கிய ஒளி படைத்த மாலை நேரத்தை, மயக்கம் தரும் வடிவம் படைத்த அழகிய பெண்ணாகக் கண்டதும், அவளைப் பற்றிக் கொண்டார்கள்.

பதம் 3.20.38 : ஆழ்ந்த குறிப்புள்ள சிரிப்புடன், வணங்கத் தக்க பிரம்மன், பின்னர் தன்னுடைய அழகினால் மலர்ந்தார். அந்த அழகு சுந்தர்வர்கள், அப்ஸரஸ்களின் படைகளாக மலர்ந்து, தனக்குத் தானே அனுபவிப்பது போல் தோன்றியது.

பதம் 3.20.39 : அதன் பின்னர், பிரம்மன் பிரகாசிக்கும், அன்பிற்குரிய சந்திரஒளி வடிவத்தை விட்டுவிட்டார். அதை விஸ்வாவகவும், கந்தர்வர்களும் மகிழ்ச்சியுடன் தமது உடைமையாக்கிக் கொண்டார்கள்.

பதம் 3.20.40 : பிறகு, புகழ் வாய்ந்த பிரம்மதேவர் தன் சோம்பலிலிருந்து பேய்களையும், பிசாசுகளையும் படைத்தார். ஆனால் அவை தலைவிரி கோலத்துடன் நிர்வாணமாக நிற்பதைக் கண்டதும் அவர் தன் கண்களை மூடிக்கொண்டார்.

பதம் 3.20.41 : உயிர்ப் பொருள்களைப் படைப்பவராகிய பிரம்மதேவரால் கொட்டாவி வடிவத்தில் தூக்கியெறியப்பட்ட அவரது உடலை, பேய்களும், குட்டிச்சாத்தான்களும் உடைமையாக்கிக் கொண்டன. இது சொள்ளு விடுதல் என்பதற்குக் காரணமான தூக்கம் என்றும் அறியப்படும். இந்தப் பேய்களும் குட்டிச்சாத்தான்களும் தூய்மை யில்லாதவரைத் தாக்கும். அந்தத் தாக்குதல் மனநோய் கொண்ட நிலை என்று பேசப்படுகிறது.

பதம் 3.20.42 : வணக்கத்திற்குரியபிரம்மதேவர், வாழும் ஜீவராசிகளைப் படைப்பவர், தன்னை தான் முழுமையான ஆசையும், சக்தியும் உடையவராக அடையாளம் கண்டு கொண்டு, தன்னுடைய அருவ வடிவிலிருந்து, தன்னுடைய நாபியிலிருந்து, ஸாத்யர்களையும் பிதாக்களையும் மலரச் செய்தார்.

பதம் 3.20.43 : பிதாக்கள் தாங்களே அருவமான உடலை உடைமையாக்கிக் கொண்டனர். இந்த அருவமான உடலின் மூலமே, சடங்கு முறைகளில் தேர்ந்தவர்கள் சாத்யர்களுக்கும், பிதாக்களுக்கும் (காலம் சென்ற முன்னோர்களின் வடிவத்தில் உள்ளவர்க்கும்) ஸ்ராத்த நிகழ்ச்சியின் போது திருப்படையல் கொடுக்கிறார்கள்.

பதம் 3.20.44 : பின்னர் பகவான் பிரம்மதேவர், அவருடைய பார்வையிலிருந்து மறையும் ஆற்றலால் சித்தர்களையும், வித்யாதரர்களையும் படைத்தார். அந்தர் தான எனப்படும் அவருடைய அற்புதமான வடிவத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

பதம் 3.20.45 : ஒரு நாள், வாழும் பொருள்களைப் படைப்பவராகிய பிரம்மதேவர் தண்ணீரில் தன் பிம்பத்தைத் தானே பார்த்துப் போற்றினார். அந்த பிம்பத்திலிருந்து பிம்புருஷர்களையும் கின்னரர்களையும் படைத்தார்.

பதம் 3.20.46 : கிம்புருஷர்களும் கின்னரர்களும் பிரம்மதேவரால் விடப்பட்ட நிழல் வடிவத்தைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டனர். ஆகவே அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒவ்வொரு புலர் காலையிலும் அவருடைய அருஞ்செயல்களைப் புகழ்ந்து பாடுவதன் மூலம் எண்ணிப் பார்க்கின்றனர்.

பதம் 3.20.47 : ஒரு முறை பிரம்மன் தன் உடலை நன்கு நீட்டிப் படுத்துக் கொண்டார். படைப்பு வேலை விரைவாக நடை பெறாமலிருக்கின்றதாக கவனித்த அவர், அந்த சிடுசிடுத்த நிலையில் அந்த உடலையும் விட்டுவிட்டார்.

பதம் 3.20.48 : ஓ அன்பான விதுரனே, அந்த உடலிலிருந்து உதிர்ந்த முடி, பாம்புகளாக மாற்றம் பெற்றது. அந்த உடல் கைகள், கால்களுடன் சேர்ந்து ஊர்ந்து கொண்டிருக்கும் பொழுதே, அதிலிருந்து பயங்கரமான பாம்புகளும், படங்கள் விரிந்த நாகங்களும் தோன்றின.

பதம் 3.20.49 : முதல் உயிரான, தானாகப் பிறந்த பிரம்மன், ஒருநாள், தன் வாழ்வின் குறிக்கோள் நிறைவேறி விட்டதைப் போல் உணர்ந்தார், அந்த நேரத்தில், அவர் தன் மனத்திலிருந்து, அண்டத்தின் நன்மையான செயல்களை உயர்த்தும் மனு எனும் பெயரிய உயிர்களைத் தோற்றுவித்தார்.

பதம் 3.20.50 : தன்னடக்கமுடைய படைப்பாளர் அவர்களுக்கு, தன் சொந்த மனித வடிவத்தைக் கொடுத்தார். மனுக்களைப் பார்த்ததும், முன்பே படைக்கப் பட்டவர்களான தேவர்கள், கந்தர்வர்கள் முதலியோர், அண்டத்தின் தலைவரான பிரம்மனைப் போற்றினர்.

பதம் 3.20.51 : அவர்கள் வேண்டினர்: ஓ அண்டத்தைப் படைப்பவரே, நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். நீங்கள் எதை உற்பத்தி செய்தீர்களோ, அதனை நன்கு செய்துள்ளீர்கள். சடங்கு முறைச் செயல்கள் இப்போது மனித வடிவில் முழுமையாகப் படைக்கப்பட்டு விட்டதால், நாங்கள் அனைவரும் வேள்விப் படையல்களைப் பங்கிட்டுக் கொள்வோம்.

பதம் 3.20.52 : கடுமையான தவம், வழிபாடு, மனத்தை ஒருமுகப்படுத்துதல் மற்றும் பக்தியில் முழு ஈடுபாடு இவற்றுடன் கோபம் அற்ற நிலை இவற்றால் தன்னை தகுதியாக்கிக் கொண்டு, தன் புலன்களையும் கட்டுப்படுத்திக் கொண்ட பிரம்மதேவர் (உயிர்ப் பொருள்.) சிறந்த முனிவர்களைத் தன் பிள்ளைகளாகத் தோற்றுவித்தார்.

பதம் 3.20.53 : அண்டத்தின் பிறப்பற்ற படைப்பாளர், ஒவ்வொரு பிள்ளைக்கும் தன் உடலிலிருந்து ஒரு அங்கத்தைக் கொடுத்தார். அது ஆழ்ந்த தியானம், மனத்தை ஒருமுகப்படுத்தல், இயற்கை கடந்த ஆற்றல், தவம், வழிபாடு மற்றும் துறவு ஆகியவற்றால் விரித்துரைக்கப்படுகிறது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare