அத்தியாயம் – 13
பகவான் வராஹரின் தோற்றம்
பதம் 3.13.1
ஸ்ரீ ஸுக உவாச
நிஸம்ய-வாசம் வததோ முனே: புண்யதமாம் ந்ருப
பூய: பப்ரச்ச கௌரவ்யோ வாஸுதேவ-கதாத்ருத:

ஸ்ரீ ஸுக:-உவாச- ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; நிஸம்ய – கேட்டபின்னர்; வாசம் – உரையாடல்களை; வதத: கூறிக்கொண்டிருக்கும் பொழுது; முனே:-மைத்ரேய முனிவரின்; புண்ய- தமாம்- புண்ணியம் மிக்க; ந்ருப- ஒ, மன்னனே; பூய:- மீண்டும் ; பப்ரச்ச- வினவினார்; கௌரவ்ய:-குருகுலத்தில் சிறந்தவர் (விதுரர்);வாஸு தேவ—கதா- முழுமுதற் கடவுளான வாசு தேவரின் வரலாற்றினை; ஆத்ருத:—ஒருவர் என்றும் வழிபடக் கூடிய.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஓ, மன்னனே, மைத்ரேய முனிவரிடமிருந்து இப்புண்ணியக் கதைகள் அனைத்தையும் கேட்ட விதுரர், தான் போற்றுகின்ற முழுமுதற் கடவுளின் வழிபடுதற்குரிய சரிதத்தினைக் கூறுமாறு அவரை வேண்டினார்.

பதம் 3.13.2
விதுர உவாச
ஸ வை ஸ்வாயம்புவ: ஸம்ராட் ப்ரிய: புத்ர: ஸ்வயம்புவ:
ப்ரதிலப்ய ப்ரியாம் பத்னீம் கிம் சகார ததோ முனே

விதுர: உவாச- விதுரர் கூறினார்; ஸ;-அவர்; வை- எளிதாக: ஸ்வாயம்புவ:-சுவாயம்புவ மனு; ஸம்ராட்—சக்கரவர்த்தி; ப்ரிய: பிரியமான; புத்ர:-புத்திரன்; ஸ்வயம்புவ:- பிரம்மதேவரின்; ப்ரதிலப்ப-பெற்ற பிறகு; ப்ரியாம்- மிகுந்த நேசிப்பிற்குரிய: பத்னீம்- மனைவி; கிம்- என்ன; சகார-செய்தார்; தத:- அதன்பிறகு; முனே- ஓ. மாமுனிவரே.

விதுரர் கூறினார்: ஓ, மாமுனிவரே, பிரம்மதேவரின் பாசத்திற்குரிய மைந்தன் சுவாயம்புவமனு, தனது மிகுந்த நேசிப்பிற்குரிய மனைவியினை அடைந்த பின்னர் என்ன செய்தார்?

பதம் 3.13.3
சரிதம் தஸ்ய ராஜருஷேர் ஆதி-ராஜஸ்ய ஸத்தம
ப்ரூஹி மே ஸ்ரத்ததானாய விஷ்வக்ஷேனாஸ்ரயோ ஹி அஸௌ

சரிதம்-சரிதம்; தஸ்ய-அவரது: ராஜருஷே:-ராஜ ரிஷி: ஆதி- ராஜஸ்ய-ஆதி அரசர்: ஸத்தம-ஒ. புனிதமானவரே; ப்ருஹி- அன்புடன் உரைப்பீராக; மே – எனக்கு: ஸ்ரத்ததானாய-மிகவும் ஆவலுடன் பெறுவதற்காயிருக்கும் ஒருவர்; விஷ்வஷேன- முழுமுதற் கடவுளின்; ஆஸ்ரய:-சரண்புகுந்த ஒருவர்; ஹி-உறுதியாக; அஸௌ- மன்னர்.

ஓ. புனிதரில் சிறந்தோரே, ஆதி அரசரும், மன்னர்க்கெல்லாம் மன்னருமானவர் (மனு) முழுமுதற் கடவுளான ஹரியின் மிகச்சிறந்த பக்தராவார். ஆகையினால் அவரது மேன்மைமிகு நடத்தை மற்றும் செயல்களைப் பற்றிக் கேட்பது மிகவும் பயனுடையதாகும். அவற்றை விளக்கி அருள்வீராக. நான் அவற்றைக் கேட்பதற்கு மிகவும் ஆவலுடையவனாயிருக்கிறேன்.

பதம் 3.13.4
ஸ்ருதஸ்ய பும்ஸாம் ஸுசிரோ – ஸ்ரமஸ்ய
நன்வ அஞ்ஜஸா ஸூரிபிர் ஈடிதோ ‘ர்த:
தத் தத் குணானுஸ்ரவணம் முகந்த-
பாதாரவிந்தம் ஹ்ருதயேஷு யேஷாம்

ஸ்ருதஸ்ய-செவிகளின் மூலம் கேட்கும் மனிதர்கள்; பும்ஸாம்- அப்படிப்பட்டவர்கள்; ஸுசிர—நீண்ட நாட்களுக்கு; ஸ்ரமஸ்ய-மிகுந்த சிரமத்துடன்; நனு-நிச்சயமாக; அஞ்ஜஸா-விரிவாக ; ஸூரிபி:-தூய பக்தர்களினால்; ஈடித:- விளக்கப்படுவதினால்; அர்த:- கூற்றுக்கள்; தத் -அந்த; தத்—அந்த; குண—உன்னதக் குணங்கள்; அனுஸ்வரணம்- சிந்தித்து: முகுந்த-முக்தியருளும் முழுமுதற் கடவுள்; பாத- அரவிந்தம் – தாமரைத் திருவடி: ஹ்ருதயேஷு – இதயத்தினுள்;யேஷாம்-அவர்களின்.

தமது ஆன்மீக குருவினிடம் மிகுந்த சிரமத்துடனும், நீண்ட நாட்களுக்கும் பக்தர்களைப் பற்றிக் கேட்க விரும்புவோர் தூய பக்தர்களின் குணங்களையும், செயல்களையும் பற்றத் தூய பக்தர்களின் வாயினின்றே கேட்டல் வேண்டும். தமது பக்தர்களுக்கு முக்தியருளும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளை தூய பக்தர்கள் எப்பொழுதும் தங்கள் உள்ளங்களில் சிந்தித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

பதம் 3.13.5
ஸ்ரீ ஸுக உவாச
இதி ப்ருவாணம் விதுரம் வினீதம்
ஸஹஸ்ர-ஸீர்ஷ்ணஸ் சரணோபதானம்
ப்ரஹ்ருஷ்ட-ரோமா பகவத்-கதாயாம்
ப்ரணீயமானோ முனிர் அப்யசஷ்ட

ஸ்ரீ ஸுக: உவாச- ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி- இவ்வாறு; ப்ருவாணம்- கூறியது; விதுரம்-விதுரனுக்கு; வினீதம்- மிக்க நேர்மையான; ஸஹஸ்ர-ஸீருஷ்ண்:-முழுமுதற் கடவுளான கிருஷ்ணர்; சரண—தாமரைத் திருவடி; உபதானம்- தலையணை; ப்ரஹ்ருஷ்ட-ரோமா— மெய்ம்மறத்தலினால் மயிர்க்கூச்செறிதல்; பகவத்-முழுமுதற் கடவுளுடனானத் தொடர்பு; கதாயாம்- வார்த்தைகளில்; ப்ரணியமான:-அவ்வேகத்தினால் பாதிக்கப்பட்டு; முனி:- முனிவர்; அப்யசஷ்ட—பேசுவதற்கு முயற்சித்தார்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் விதுரரின் மடியின் மீது தனதுத் தாமரைத் திருவடிகளை வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்வார். ஏனெனில் விதுரர் மிகுந்த நேர்மையும் பணிவும் மிக்கவராவார். மைத்ரேய முனிவர் விதுரரின் வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். மைத்ரேயரது உணர்வுகளினால் உந்தப்பட்ட விதுரர் கூற ஆரம்பித்தார்.

பதம் 3.13.6
மைத்ரேய உவாச
யதா ஸ்வ-பார்யயா ஸார்தம் ஜாத: ஸ்வாயம்புவோ மனு:
ப்ராஞ்ஜலி: ப்ரணதஸ் சேதம் வேத-கர்பம் அபாஷத

மைத்ரேய: உவாச-மைத்ரேயர் கூறினார்; யதா—அப்பொழுது; ஸ்வ-பார்யயா—தனது மனைவியுடன்; ஸார்தம்- ஒருங்கு சேர்ந்து; ஜாத:-தோன்றிய; ஸ்வாயம்புவ:-சுவாயம்புவ மனு; மனு:- மனிதகுலத்தின் தந்தை; ப்ராஞ்ஜலி:-கூப்பிய கரங்களுடன்; ப்ரணத:- வணங்கினார்; ச-மேலும்; இதம்- இந்த; வேத-கர்பம்- வேத ஞானத்தின் உறைவிடத்திற்கு; அபாஷத-கூறினார்.

மைத்ரேய முனிவர் விதுரரிடம் கூறினார்: மனித குலத்தின் தந்தையான மனு தன் மனைவியுடன் தோன்றி, வேத ஞானக் கடலான பிரம்மதேவரைக் கூப்பிய கரங்களுடன் பின்னர் வணங்கி இவ்வாறு கூறத்தொடங்கினார்.

பதம் 3.13.7
த்வம் ஏக: ஸர்வ-பூதானாம் ஜன்ம-க்ருத் வ்ருத்தித: பிதா
ததாபி ந: ப்ரஜானாம் தே ஸுஸ்ருஷா கேன வா பவேத்


த்வம்—நீர்; ஏக: – ஒருவர்; ஸர்வ—அனைத்து; பூதானாம் — உயிர்வாழிகள்; ஜன்ம-க்ருத்- ஈன்றெடுத்தவர்; வ்ருத்தி—த: பிழைப்பிற்கான ஆதாரம்; பிதா- தந்தை; ததா அபி-இன்று வரை; ந:- நாங்கள்; ப்ரஜானாம் – பிறந்துள்ள நாங்கள் அனைவரும்; தே- உமக்கு; ஸுஸ்ருஷா-தொண்டு; கேன—எவ்வாறு; வா—அல்லது; பவேத்-சாத்தியமாகலாம்.

உயிர்கள் அனைவர்க்கும் நீரே தந்தையாகவும் அவர்கள் வாழ்க்கையின் ஆதாரமாகவும் விளங்குகிறீர். ஏனென்றால் அவர்கள் அனைவரும் உம்மிடமிருந்தே பிறந்தனர். நாங்கள் எவ்வாறு உமக்குச் சேவை செய்யலாம் என்பதை அருள்கூர்ந்து உரைப்பீராக.

பதம் 3.13.8
தத் விதேஹி நமஸ் துப்யம் கர்மஸ்வ் ஈட்யாத்ம-ஸக்திஷு
யத் க்ருத்வேஹ யஸோ விஷ்வக் அமுத்ர ச பவேத் கதி:

தத்—அந்த; விதேஹி-வழிகாட்டுதல்; நம:-எனது வந்தனங்கள்; துப்யம் -உமக்கு; கர்மஸு-கடமைகளில்; ஈட்ய—ஒ, வணங்கத்தக்கவரே; ஆத்ம-ஸக்திஷு – எங்களது உழைக்கும் திறனுக்கேற்ப; யத்—அது; க்ருத்வா-செய்தல்; இஹ-இவ்வுலகில்; யஸ:-புகழ்; விஷ்வக்—எங்கும்; அமுத்ர-மறுவுலகில்; ச-மேலும்; பவேத்— இருத்தல் வேண்டும்; கதி:- வளர்ச்சி.

ஒ, வணக்கத்திற்குரியவரே, எங்களது உழைக்கும் திறனுக்கேற்ப, கடமையினை நிறைவேற்றுவதற்கான வழியினை எங்களுக்குக் காட்டியருள்வீராக. அதனால் நாங்கள் இம்மையில் புகழுக்காகவும் மறுமையில் வளர்ச்சிக்காகவும் அதனைப் பின்பற்றக்கூடும்.

பதம் 3.13.9
ப்ரஹ்மோவாச
ப்ரீதஸ் துப்யம் அஹம் தாத ஸ்வஸ்தி ஸ்தாத் வாம் க்ஷிதீஸ்வர
யன் நிர்வ்யாலீகேன ஹ்ருதா ஸாதி மேதி ஆத்மனார்பிதம்

ப்ரஹ்மா உவாச-பிரம்மதேவர் கூறினார்; ப்ரீத:-மகிழ்ச்சியுற்று: துப்யம்—உனக்கு ; அஹம்-நான்; தாத—அன்பு மைந்தனே; ஸ்வஸ்தி- எல்லா நன்மைகளும்; ஸ்தாத்-உண்டாகட்டும்; வாம்- உங்கள் இருவருக்கும்; க்ஷிதி-ஈஸ்வர—ஓ, உலகின் தலைவனே; யத்- ஏனெனில்; நிர்வ்யலீகேன- எவ்விதத் தயக்கமுமின்றி; ஹ்ருதா- இதயத்தினால்; ஸாதி-அறிவுரை அளித்தல்; மா-எனக்கு; இதி- இவ்வாறு; ஆத்மனா—தன்னையே; அர்பிதம்- சரணடைதல்.

பிரம்ம தேவர் கூறினார்; அன்பு மைந்தனே, ஓ, உலகின் நாயகனே, உன்மீது நான் மிக்க மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். மேலும் உனக்கும் உன் மனைவிக்கும் எல்லா ஆசிகளும் கிடைப்பதாக. எனது அறிவுரைகளுக்காக எவ்விதத் தயக்கமுமின்றி இதயபூர்வமாக என்னை நீ சரணடைந்திருக்கின்றாய்.

பதம் 3.13.10
ஏதாவதி ஆத்மஜைர் வீர கார்யா ஹி அபசிதிர் குரௌ
ஸக்த்யாப்ரமத்தைர் க்ருஹ்யேத ஸாதரம் கத-மத்ஸரை:

ஏதாவதி-இதனைப் போலவே; ஆத்மஜை:-சந்ததியினர்; வீர- ஓ, வீரனே; கார்யா-செய்யப்படுதல் வேண்டும்; ஹி- நிச்சயமாக; அபசிதி:- வழிபாடு; குரெள-தம்மினும் உயர்ந்தோர்க்கு; ஸக்த்யா- முழுச் சக்தியுடன்; அப்ரமத்தை:-புத்தி சுவாதீனமுள்ளவர்களால்; க்ருஹ்யேத -ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்; ஸ-ஆதரம்- மிக்க மகிழ்ச்சியுடன்; கத—மத்ஸரை:-காழ்ப்புணர்ச்சி சிறிதும் அற்றவர்களினால்.

ஓ, வீரனே, உனது முன்னுதாரணம், ஒரு மைந்தன் தன் தந்தையுடன் கொள்ளும் உறவிற்கு நன்கு பொருந்துவதாகும். மேலோர்க்கு இதுபோன்ற மரியாதையே தேவைப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியற்றவனாகவும் தெளிவுடையவனாகவும் இருப்பவன் தனது தந்தையின் கட்டளையை மகிழ்ச்சியுடன் தன் சிரமேற் தாங்கிக் கொண்டு அதனை தனது முழுத்திறமையையும் பயன்படுத்தி நிறைவேற்றுகின்றான்.

பதம் 3.13.11
ஸ த்வம் அஸ்யாம் அபத்யானி ஸத்ருஸானி ஆத்மனோ குணை:
உத்பாத்ய ஸாஸ தர்மேண காம் யஜ்ஞை: புருஷம் யஜ

ஸ:—ஆகையினால் அந்தப் பணிவுடைய மைந்தன் ஆதலினால்; த்வம்—உன்னைப் போல்; அஸ்யாம்-அவளிடத்தில்; அபத்யானி- குழந்தைகள்: ஸத்ருஸானி-இணையான தகுதியுடன்; ஆத்மன:- உனது; குணை:- குணங்களுடன்; உத்பாத்ய-பெற்றெடுத்து; ஸாஸ-ஆள்வாயாக; தர்மேண—பக்தித் தொண்டுக் கொள்கைகளின் அடிப்படையில்; காம் – உலகம்; யஜ்ஞை:–வேள்விகளினால்; புருஷம் – முழுமுதற் கடவுள்; யஜ- வழிபடுதல்.

என்னிடம் பணிவன்பு கொண்ட மைந்தன் நீ ஆதலினால் உன்னிடம் நான் கேட்பது உன்னைப் போன்ற நற்குணமுள்ள குழந்தைகளை உன் மனைவியினிடத்தில் நீ பெற்றெடுப்பாயாக. முழுமுதற் கடவுளுக்குரிய பக்தித் தொண்டுக் கொள்கைக்கேற்ப இவ்வுலகினை ஆள்வாயாக. இவ்வாறு பகவானை வேள்விகளின் மூலம் வழிபடுவாயாக.

பதம் 3.13.12
பரம் ஸுஸ்ருஷணம் மஹ்யம் ஸ்யாத் ப்ரஜா-ரக்ஷயா ந்ருப
பகவாம்ஸ் தே ப்ரஜா-பர்துர் ஹ்ருஷீகேஸோ ‘நுதுஷ்யதி

பரம் – மிகவுயர்ந்த; ஸூஸ்ரூஷணம்-பக்தித்தொண்டு; மஹ்யம்- எனக்கு; ஸ்யாத்- இருத்தல் வேண்டும்; ப்ரஜா-பௌதிக உலகில் பிறந்திருக்கும் உயிர்வாழிகள்; ரக்ஷயா-அழிவிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதினால்; ந்ருப—ஒ, அரசனே; பகவான்- முழுமுதற்கடவுள்; தே-உன்னுடன்; ப்ரஜா-பர்து:-உயிர்வாழிகளைக் காப்பவருடன்; ஹ்ருஷீ கேஸ:-புலன்களின் தலைவர்; அநுதுஷ்யதி-திருப்தியடைதல்.

ஓ, மன்னனே, இந்த உலகிலுள்ள உயிர்களுக்குச் சரியான பாதுகாப்பு கொடுப்பதே எனக்கு நீ செய்யும் சிறந்த சேவையாகும். கட்டுப்பட்ட ஆத்மாக்களை நன்கு பாதுகாப்பவன் நீ என்பதனை முழுமுதற் கடவுள் அறிந்தார் என்றால் புலன்களின் நாயகனான அவர் உன்மீது மிகுந்த மகிழ்ச்சியடைவார்.

பதம் 3.13.13
யேஷாம் ந துஷ்டோ பகவான் யஜ்ஞ-லிங்கோ ஜனார்தன:
தேஷாம் ஸ்ரமோ ஹி அபார்தாய யத் ஆத்மா நாத்ருத: ஸ்வயம்

யேஷாம் எவருடன்; ந-இல்லை; துஷ்ட: திருப்தியடைதல்;பகவான்- முழுமுதற் கடவுள்; யஜ்ஞ- லிங்க:-வேள்வியின் வடிவம்;ஜனார்தன:- பகவான் கிருஷ்ணர் அல்லது விஷ்ணு தத்துவம்; தேஷாம்- அவர்களின்; ஸ்ரம: சிரமம்; ஹி – உறுதியாக; அபார்தாய- பயனின்றி; யத்—ஏனென்றால் ; ஆத்மா—பரமாத்மா; ந- இல்லை; ஆத்ருத:மதித்தல்; ஸ்வயம் — அவருக்குரிய.

முழுமுதற் கடவுளான ஜனார்தனனே (பகவான் கிருஷ்ணர்) வேள்விகளின் அனைத்துப் பலன்களையும் ஏற்றுக் கொள்ளும் வடிவமாகத் திகழ்கிறார். அவர் திருப்தியுறவில்லையென்றால் முன்னேறுவதற்கான அனைத்து முயற்சிகளும் வீணேயாகும். அவரே இறுதி ஆத்மாவாக இருப்பவர். அவரைத் திருப்திப்படுத்தாதவன் அவனது சொந்த நலன்களையே புறக்கணிக்கிறான்.

பதம் 3.13.14
மனுர் உவாச
ஆதேஸே ‘ஹம் பகவதோ வர்தேயாமீவ-ஸூதன
ஸ்தானம் த்வ் இஹானுஜானீ: ப்ரஜானாம் மம ச ப்ரபோ

மனு: உவாச-ஸ்ரீ மனு கூறினார்; ஆதேஸே-கட்டளையின் கீழ்: அஹம்—நான்; பகவத:- உமது சக்திமிக்க; வர்தேய- தங்கி இருத்தல்; அமீவ-ஸூதன -ஓ, பாவங்களைமாய்ப்பவரே; ஸ்தானம்—இடம்; து-ஆனால்; இஹ—இவ்வுலகில்; அனுஜானீ:- எனக்கு தெரிவிப்பீராக; ப்ரஜானாம்—எனக்குப் பிறக்கும் உயிர்கள்; மம-எனது; ச-மேலும்; ப்ரபோ-ஓ, பகவானே.

ஸ்ரீ மனு கூறினார்: ஓ, அனைத்து ஆற்றல்களும் மிக்கவரே, பாவங்களை மாய்ப்பவரே, உமது கட்டளைக்கு நான் கீழ்ப்படிகிறேன். அருள்கூர்ந்து எனக்குரிய இருப்பிடத்தையும், எனக்குப் பிறக்கப் போகும் உயிர்களையும் பற்றி அறிவிப்பீராக.

பதம் 3.13.15
யத் ஒக: ஸர்வ-பூதானாம் மஹீ மக்னா மஹாம்பஸி
அஸ்ய உத்தரணே யத்னோ தேவ தேவ்யா விதீயதாம்

யத்—ஏனெனில்; ஓக: – வசிப்பிடம்; ஸர்வ-எல்லோர்க்கும்;பூதானாம்— உயிர்வாழிகள்; மஹீ-பூமி; மக்னா—மூழ்கி இருக்கிறது; மஹா-அம்பஸி-மகா நீரில்; அஸ்யா:-இதன்; உத்தரணே-எடுத்தல்; யத்னா:- முயற்சி; தேவ-ஓ, தேவர்களின் தலைவனே; தேவ்யா:- இப்பூமியின்; விதீயதாம்-செய்யப்படல் வேண்டும்.

ஓ, தேவர்களின் தலைவனே, மகாநீரினுள் மூழ்கியிருக்கும் பூமியினை வெளிக்கொணர்வதற்கு அருள்கூர்ந்து முயற்சிப்பீராக. ஏனெனில் உயிர்கள் அனைத்திற்கும் அதுவே இருப்பிடமாகும். இது உமது முயற்சியினாலும் பகவானின் கருணையினாலுமே நடை பெறக் கூடியதாகும்.

பதம் 3.13.16
மைத்ரேய உவாச
பரமேஷ்டீ த்வ் அபாம் மத்யே ததா ஸன்னாம் அவேக்ஷ்ய காம்
கதம் ஏனாம் ஸமுன்னேஷ்ய இதி தத்யௌ தியா சிரம்

மைத்ரேய: உவாச- ஶ்ரீ மைத்ரேய முனிவர் கூறினார்; பரமேஷ்டீ- பிரம்ம தேவர்; து-மேலும்; அபாம்-நீர்; மத்யே-அடியில்; ததா- இவ்வாறு; ஸன்னாம்—இருக்கும்; அவேஷ்ய-கண்டு; காம்-பூமி; கதம்- எவ்வாறு; ஏனாம் -இந்த; ஸமுன்னேஷ்யே-நான் தூக்குவது; இதி-இவ்வாறு: தத்யௌ-சிந்தித்தார்; தியா-புத்தியினால்; சிரம்- நீண்ட நேரம்.

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: பூமி நீருக்கடியில் இருப்பதைக் கண்ட பிரம்ம தேவர் அதனை எவ்வாறு வெளியே எடுக்கலாம் என்று நீண்ட நேரம் சிந்தித்தார்.

பதம் 3.13.17
ஸ்ருஜதோ மே க்ஷிதிர் வார்பி: ப்லாவ்யமானா ரஸாம் கதா
அதாத்ர கிம் அநுஷ்டேயம் அஸ்மாபி: ஸர்க-யோஜிதை:
யஸ்யாஹம் ஹ்ருதயாத் ஆஸம் ஸ ஈஸோ விததாது மே

ஸ்ருஜத:-படைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது; மே – எனது ; க்ஷிதி:- பூமி; வார்பி:-நீரினால்; ப்லாவ்யமானா-வெள்ளத்தில் மூழ்கி; ரஸாம்-நீரின் அடியில்: கதா-சென்றுவிட்டது; அத-அதனால் ; அத்ர—இதனைப் பொருத்தவரை; கிம் – என்ன; அநுஷ்டேயம்- செல்வதற்கு உகந்தது; அஸ்மாபி:-நம்மால்; ஸர்க— படைத்தல்; யோஜிதை:-ஈடுபடுதல்; யஸ்ய-அவர் ஒருவரிடமிருந்து; அஹம்- நான்; ஹ்ருதயாத்- இதயத்திலிருந்து; ஆஸம்—பிறத்தல்; ஸ:—அவர்; ஈஸ:-பகவான்; விததாது—வழிகாட்டுவார்; மே- எனக்கு.

பிரம்மதேவர் நினைத்தார்: படைப்புத் தொழிலில் நான் ஈடுபட்டிருந்தபொழுது பூமியானது பிரளய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கடலின் அடியில் சென்றுவிட்டது. படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நம் போன்றோர் செய்யக் கூடியது என்ன? பகவானே இதற்கு வழிகாட்டுதல் சிறந்ததாகும். அவருக்குத் தெரிவிப்போம் என்று எண்ணினார்.

பதம் 3.13.18
இதி அபித்யாயதோ நாஸா-விவராத் ஸஹஸானக
வராஹ-தோகோ நிரகாத் அங்குஷ்ட-பரிமாணக:

இதி- இவ்வாறு; அபித்யாயத:- சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது; நாஸா-விவராத்-நாசித் துவாரத்திலிருந்து; ஸஹஸா-திடீரென்று; அனக:-ஓ, பாவமற்றவனே; வராஹ-தோக:-வராஹத்தின் சிறிய வடிவம்; நிரகாத்-வெளியே வந்தது; அங்குஷ்ட-கட்டை விரலின் மேற்பகுதி; பரிமாணக:- பரிமாணமுடையது.

ஓ, பாவமற்ற விதுரனே, பிரம்ம தேவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது திடீரென்று அவரது நாசித் துவாரத்திலிருந்து ஒரு சிறிய பன்றி வடிவம் வெளியே வந்தது. அப்பன்றியின் பரிமாணம் ஒரு கட்டை விரலின் மேற்பகுதியினைக் காட்டிலும் மிகச் சிறியதாகும்.

பதம் 3.13.19
தஸ்யாபிபஸ்யத: க-ஸ்த: க்ஷணேன கில பாரத
கஜ-மாத்ர: ப்ரவங்குதே தத் அத்புதம் அபூன் மஹத்

தஸ்ய-அவரது; அபிபஷ்யத:-இவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது; க – ஸ்த:-வானத்தில் இருந்து; க்ஷணேன—க்ஷண நேரத்தில்; கில-உண்மையாக; பரத—ஓ, பரதகுலத் தோன்றலே; கஜ-மாத்ர:-ஓர் யானையினைப் போல்; ப்ரவங்ருதே-முழுவதும் விரிவடைந்து: தத்— அந்த; அத்புதம்-அற்புதம்; அபூத்-மாறியது; மஹத்- பூதாகரமான வடிவில்.

ஓ, பாரதகுலத் தோன்றலே, பிரம்ம தேவர் பகவானைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அப்பன்றி வானையடைந்து ஒரு பெரிய யானையினைப் போல் மிகப் பெரிய அற்புதமான உருவமாக மாறியது.

பதம் 3.13.20
மரீசி-ப்ரமுகைர் விப்ரை: குமாரைர் மனுனா ஸஹ
த்ருஷ்ட்வா தத் ஸௌகரம் ரூபம் தர்கயாம் ஆஸ சித்ரதா

மரீசி-மாமுனிவர் மரீசி; ப்ரமுகை:- தலைமையில்; விப்ரை:- அனைத்து அந்தணர்களும்; குமாரை:-நான்கு குமாரர்களுடன்; மனுனா -மனுவுடன் சேர்ந்து; ஸஹ-உடன்; திருஷ்ட்வா—கண்டு; தத்- அந்த; ஸௌகரம்-பன்றியினைப் போன்ற தோற்றம்; ரூபம்-உருவம்; தர்கயாம் ஆஸ-தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்; சித்ரதா— பல்வேறு வழிகளில்.

வானில் பன்றியினைப் போல் தோன்றிய அற்புத உருவினைக் கண்ட பிரம்ம தேவர், மரீசியின் தலைமைக்கு உட்பட்ட கீழுள்ள அந்தணர்கள், குமாரர்கள் மற்றும் மனு போன்றோர் தங்களுக்குள் பல்வேறு விதமாக விவாதிக்கத் தொடங்கினர்.

பதம் 3.13.21
கிம் ஏதத் ஸூகர-வ்யாஜம் ஸத்த்வம் திவ்யம் அவஸ்திதம்
அஹோ பதாஸ்சர்யம் இதம் நாஸாயா மே விநிஹ்ஸ்ருதம்

கிம்- என்ன; ஏதத்-இந்த; ஸூகர-பன்றி; வ்யாஜம்- பொய்த் தோற்றம்; ஸத்த்வம்–உயிர்த்தோற்றம்; திவ்யம்- அற்புதமானது; அவஸ்திதம்- இருத்தல்; அஹோ-பத—ஓ இது; ஆஸ்சர்யம்-மிகவும் ஆச்சரியமானது; இதம்- இந்த ; நாஸாயா:-நாசியிலிருந்து; மே- எனது; விநிஹ்ஸ்ருதம்- வெளியே வந்தது.

அசாதாரணமான ஓர் உயிர், பன்றியாக பொய்த்தோற்றம் கொண்டு வந்துள்ளதோ? இது எனது நாசியிலிருந்து வெளியே வந்தது மிகவும் ஆச்சரியகரமானதாகும்.

பதம் 3.13.22
த்ருஷ்டோ ‘ங்குஷ்ட-ஸிரோ மாத்ர: க்ஷணாத் கண்ட-ஷிலா-ஸம:
அபி ஸ்வித் பகவான் ஏஷ யஜ்ஞோ மே கேதயன் மன:

திருஷ்ட-காண்பதற்கு; அங்குஷ்ட-கட்டை விரலின்; ஸிர-நுனி: மாத்ர:- மாத்திரமே; க்ஷணாத்—உடனடியாக; கண்ட-ஷிலா—பெரிய பாறாங்கல்லை; ஸம:-போன்று; அபி-ஸ்வித்-அல்லது; பகவான்- முழுமுதற் கடவுள்; ஏஷ:-இது; யஜ்ஞ-விஷ்ணு; மே-எனது; கேதயன்- குழப்புகிறது; மன:-மனம்.

முதன்முதலில் இப்பன்றி கட்டை விரலின் நுனியாகவே தோன்றியது. கணப்பொழுதில் அது ஒரு பெரிய பாறாங்கல் அளவிற்கு மாறிவிட்டது. எனது மனம் மிகுந்த குழப்பமுறுகிறது. இவர் முழுமுதற் கடவுளான விஷ்ணுவாக இருப்பாரோ?

பதம் 3.13.23
இதி மீமாம்ஸதஸ் தஸ்ய ப்ரஹ்மண: ஸஹ ஸூனுபி:
பகவான் யஜ்ஞ-புருஷோ ஜகர்ஜாகேந்த்ர-ஸன்னிப:

இதி-இவ்வாறு; மீமாம்ஸத:- விவாதித்துக் கொண்டிருந்த பொழுது; தஸ்ய -அவரது; ப்ரஹ்மண:-பிரம்ம தேவரின்; ஸஹ- உடனிருந்தோர்; ஸூனுபி:-அவரது புதல்வர்கள்; பகவான்- முழுமுதற் கடவுள்; யஜ்ஞ—பகவான் விஷ்ணு; புருஷ:-பரம புருஷர்; ஜகர்ஜ- ஒலி எழுப்பினார்; அக- இந்திர-பெரிய மலையொன்று: ஸன்னிப: போன்று.

பிரம்மதேவர் இவ்வாறு தன் புதல்வர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தபொழுது முழுமுதற் கடவுளான விஷ்ணு ஒரு பெரிய மலை சப்தித்தாற் போன்று ஒலி செய்தார்.

பதம் 3.13.24
ப்ரஹ்மாண” ஹர்ஷயாம் ஆஸ ஹரிஸ் தாம்ஸ் ச த்விஜோத்தமான்
ஸ்வ-கர்ஜிதேன ககுப: ப்ரதிஸ்வனயதா விபு:

ப்ரஹ்மாணம்-பிரம்ம தேவருக்கு: ஹர்ஷயாம் ஆஸ்-புத்துணர்ச்சி: ஹரி:- முழுமுதற் கடவுள்: தான்—அவர்கள் எல்லோரும்; ச – மேலும்; த்விஜ-உத்தமான்–உயர்நிலை பெற்ற அந்தணர்கள்; ஸ்வ – கர்ஜிதேன-அவரது சுர்ஜனையினால்; ககுப:-எல்லாத் திசைகளிலும்; ப்ரதிஸ்வனயதா—அது எதிரொலித்தது;விபு:-சர்வ வல்லமை படைத்தவர்.

சர்வ வல்லமையுள்ள முழுமுதற் கடவுள், பிரம்ம தேவரையும், உயர்நிலை பெற்ற அந்தணர்களையும் புத்துணர்ச்சி பெறச் செய்யும் வண்ணம் மீண்டும் தமது அசாதாரணமான பலத்த குரலில் கர்ஜித்தார். அவ்வொலி எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தது.

பதம் 3.13.25
நிஸம்ய தே கர்கரிதம் ஸ்வ-கேத-
க்ஷயிஷ்ணு மாயாமய ஸூகரஸ்ய
ஜனஸ்-தப: ஸத்ய-நிவாஸினஸ் தே
த்ரிபி: பவித்ரைர் முனயோ ‘க்ருணன் ஸ்ம

நிஸம்ய-கேட்டபின்னர்; தே-அவர்கள்; கர்கரிதம்- ஆரவார ஒலி; ஸ்வ-கேத—சுய துக்கம்; க்ஷயிவிஷ்ணு-அழிக்கின்ற; மாயா – மய- கருணைமயமான; ஸூகரஸ்ய-பகவான் வராஹர்; ஜன: – ஜனலோகம்; தப: தபலோகம்; ஸத்ய-சத்திய லோகம்; நிவாஸின: – வசிப்பவர்கள்; தே-அனைவரும்; த்ரிபி:-மூன்று வேதங்களிலிருந்து; பவித்ரை:- மங்கலகரமான மந்திரங்களினால்; முனய:-அறிஞர்களும், முனிவர்களும்; அக்குணன் ஸ்ம- ஓதினர்.

ஜனலோகம், தபலோகம், சத்தியலோகம் போன்றவற்றில் வாழும் மாமுனிவர்களும், மகான்களும், கருணை நிறைந்த பகவான் வராஹரின் மங்களம் ஆரவார ஒலியினைக் கேட்டு மூன்று வேதங்களில் இருந்து மங்களகரமான மந்திரங்களை ஓதினர்.

பதம் 3.13.26
தேஷாம் ஸதாம் வேத-விதான-மூர்திர்
ப்ரஹ்மாவதார்யாத்ம- குணானுவாதம்
விநத்ய பூயோ விபுதோதயாய
கஜேந்த்ர-லீலோ ஜலம் ஆவிவேஸ

தேஷாம் – அவர்களின்; ஸதாம்- உயர்ந்த பக்தர்களின்; வேத- அறிவுமயமான; விதான- மூர்தி:-விரிவின் வடிவம்; ப்ரஹ்ம- வேத ஒலி; அவதார்ய- நன்றாக அறிந்துகொண்டு; ஆத்ம-அவரது; குண – அனுவாதம்-உன்னதப் புகழ்; விநத்ய- எதிரொலி; பூய:- மீண்டும்; விபுத-உன்னத அறிஞர்களின்; உதயாய-உயர்வு அல்லது பயன்; கஜேந்த்ர-லீல:-கஜேந்திர லீலையினைப் போல்; ஜலம்—நீர்; ஆவிவேஸ- புகுந்தார்.

கஜேந்திரன் என்னும் யானையினைப் போல், அவர் தமது சிறந்த பக்தர்களின் வேத மந்திர வழிபாட்டுக்குப் பதில் கூறுவது போல் மீண்டும் கர்ஜனை செய்து நீரினுள் இறங்கினார். வேத மந்திரங்கள் துதிக்கும் பொருளாக இருப்பவர் பகவானே ஆவார். அதனால் தனது பக்தர்களின் பிரார்த்தனைகள் தனக்கானவையே என்பதை அவர் நன்கறிந்திருந்தார்.

பதம் 3.13.27
உத்க்ஷிப்த-வால: க-சர: கடோர:
ஸடா விதுன்வன் கர-ரோமஸ-த்வக்
குராஹதாப்ர: ஸித-தம்ஷ்ட்ர ஈக்ஷா-
ஜ்யோதிர் பபாஸே பகவான் மஹீத்ர:

உத்க்ஷிப்த—வால:-வாலை வீசிச் சுழற்றியபடி; க-சர: -வானத்தில்; கடோர:-மிகவும் கடினமான; ஸடா:- தோளின் மீதுள்ள உரோமங்கள்; விதுன்வன்—அலைப்புண்டது; கர—கூர்மையான; ரோமஷ- த்வக்- உரோமங்களினால் நிறைந்த உடல்; குர- ஆஹத- கால் குளம்புகளினால் தாக்குதல்; அப்ர:-மேகங்கள்; ஸித- தம்ஷ்ட்ர— வெண்மை நிறத் தந்தங்கள்; ஈக்ஷா—பார்வை; ஜ்யோதி:-ஜோதிமயம்; பபாஸே-ஒர் ஒளி வெளிப்படத் தொடங்கியது; பகவான்-முழுமுதற்கடவுள்: மஹீ-த்ர:-உலகினைத் தாங்குபவர்.

பூமியை மீட்பதற்காக நீரினுள் புகுவதற்கு முன்னால் பகவான் வராஹர் வானில் வாலை வேகமாகச் சுழற்றியபடி பறந்தார். அவரது அடர்ந்த உரோமங்கள் அலை பாய்ந்தன. அவரது பார்வை ஒளி வீசியது. மின்னுகின்ற தந்தங்களினாலும், காலடிக் குளம்புகளினாலும் அவர் வானிலுள்ள மேகங்களைச் சிதறடித்தார்.

பதம் 3.13.28
கிராணேன ப்ருதிவ்யா: பதவீம் விஜிக்ரன்
க்ரோடாபதேஸ: ஸ்வயம் அத்வராங்க :
கரால-தம்ஷ்ட்ரோ ‘பி அகரால-த்ருக்ப்யாம்
உத்வீக்ஷ்ய விப்ரான் க்ருணதோ ‘விஸத் கம்

கிராணேன-மோப்பத்தினால்; ப்ருத்வ்யா:-பூமியின்; பதவீம்- இருப்பிடத்தை; விஜிக்ரன்-பூமியினைத் தேடினார்; க்ரோட- அபதேஸ:- பன்றியின் வடிவம் எடுத்து: ஸ்வயம்- தனிப்பட்ட முறையில்; அத்வர-உன்னதமான;அங்க:-உடல்; கரால—அச்சந்தரும்; தம்ஷ்ட்ர:-(தந்தங்கள்); பற்கள்; அபி—அதற்குப் பதிலாக; அகரால— அச்சந் தருவதில்லை; திருக்ப்யாம்—அவரது பார்வை; உத்வீக்ஷ்ய- அவர்கள் மீது சென்றது; விப்ரான்—அந்தண பக்தர்கள் அனைவரும்; க்ருணத:-பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தோர்; அவிஷத்-புகுந்தார்; கம்—நீரினுள்.

தனிப்பட்ட முறையில் அவர் பரமபுருஷ பகவானான விஷ்ணுவே ஆதலினால் அவர் உன்னதமானவரே. ஆனால், அவர் பன்றி வடிவம் எடுத்திருந்ததினால் பூமியினைத் தனது மோப்பத்தினால் தேடினார். அவரது தந்தங்கள் இரண்டும் கூர்மையாகவும் அச்சந்தரும் வகையிலும் இருந்தன. அவரது பார்வை தன்னைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த அந்தணப் பக்தர்களின் மேல் சென்றது. அதன்பின் அவர் நீரினுள் புகுந்தார்.

பதம் 3.13.29
ஸ வஜ்ர-கூடாங்க-நிபாத-வேக
விஸீர்ண-குக்ஷி: ஸ்தனயன்ன் உதன்வான்
உத்ஸ்ருஷ்ட-தீர்கோர்மி-புஜைர் இவார்தஷ்
சுக்ரோஷ யஜ்ஞேஷ்வா பாஹி மேதி

ஸ;-அந்த; வஜ்ர- கூட-அங்க-மலை போன்ற பெரிய உடல்; நிபாத – வேக-நீரினுள் புகுந்த வேகத்தில்; விஸீர்ண- பிளந்தது ; குக்ஷி:- மையப்பகுதி ; ஸ்தனயன்—எதிரொலி போன்று; உதன்வான்- சமுத்திரம்; உத்ஸ்ருஷ்ட-உருவாக்கியது: தீர்க—உயரமான: ஊர்மி -அலைகள்; புஜை:-கரங்களினால்; இவ-ஆர்த:-துன்பத்திற்காளான ஒருவனைப் போன்று; சுக்ரோஷ- உருக்கமாகப் பிரார்த்தித்தான்; யஜ்ஞ-ஈஸ்வர-ஓ, வேள்விகளின் நாயகனே; பாஹி- காப்பீராக; மா-எனக்கு; இதி-இவ்வாறு.

மாமலையொன்று நீரினுள் விழுந்தாற்போல் பகவான் வராஹர் நீரினுள் புகுந்தவுடன் அவரது வேகத்தைத் தாங்க மாட்டாது கடல் இரண்டாகப் பிளந்தது. அப்பொழுது பெரிய அலைக்கரங்கள் இரண்டு அக்கடலில் தோன்றி பகவானைப் பிரார்த்திப்பது போன்று “ஓ, வேள்விகளின் நாயகனே, என்னை இரண்டாகத் துண்டித்து விடாதீர், அன்புடன் என்னைக் காத்தருள்வீராக” என்று கதறியது.

பதம் 3.13.30
குரை: ஹுரப்ரைர் தரயம்ஸ் தத் ஆப
உத்பாத பாரம் த்ரி-பரூ ரஸாயாம்
ததர்ஷ காம் தத்ர ஸுஷுப்ஸுர் அக்ரே
யாம் ஜீவ-தானீம் ஸ்வயம் அப்யதத்த

குரை:-காலடிக் குளம்புகளினால்; க்ஷூரப்ரை:-ஒரு கூர்மையான ஆயுதத்துடன் ஒப்பிடக்கூடிய; தரயன்-கிழித்து; தத்-அந்த; ஆப: -நீர்; உத்பார—பாரம்- அளவில்லாத ஒன்றின் அளவினைக் கண்டார்; த்ரி- பரு:-வேள்விகளின் நாயகன்; ரஸாயாம்-நீரினுள்; ததர்ஸ- கண்டுபிடித்து; காம்-பூமி; தத்ர—அங்கே; ஸுஷுப்ஸு:—கிடந்த; அக்ரே- ஆரம்பத்தில்; யாம் -அவர்களின்; ஜீவ- தானீம்- உயிர் வாழிகள் அனைத்தின் உறைவிடம்; ஸ்வயம்- தானே; அப்யதத்த— தூக்கினார்.

பகவான் வராஹர் அம்புபோல் கூர்மையாக இருந்த தனது காலடிக் குளம்புகளினால் அக்கடலைக் கிழித்துச் சென்று ஆழங்காணவே முடியாத அதன் ஆழத்தைச் சென்றடைந்தார். அடியில் உயிர்களின் உறைவிடமான பூமி அன்றுதான் படைக்கப் பட்டது போல் அப்படியே இருந்தது. அவர் அதனைத் தானேத் தூக்கினார்.

பதம் 3.13.31
ஸ்வ-தம்ஷ்ட்ரயோக்ருத்ய மஹீம் நிமக்னாம்
ஸ உத்தித: ஸம்ருருசே ரஸாயா:
தத்ராபி தைத்யம் கதயாபதந்தம்
ஸுநாப-ஸந்தீபித-தீவ்ர-மன்யு:

ஸ்வ-தம்ஷ்ட்ரயா—அவரது தந்தங்களினால்; உத்ருத்ய-உயர்த்தி; மஹீம் – பூமி: நிமக்னாம்- மூழ்கியிருந்த; ஸ:-அவர்; உத்தித:- எழுந்தார்; ஸம்ருருசே- ஒளிமயமாகத் தோன்றியது; ரஸாயா:- தண்ணீரிலிருந்து; தத்ர—அங்கே; அபி-மேலும்: தைத்யம்-அசுரனுக்கு: கதயா- கதாயுதத்துடன்; ஆபதந்தம்-அவரை நோக்கி வேகமாக வந்தான்; ஸுநாப-கிருஷ்ணச் சக்கரம்; ஸந்தீபித-கண்ணைப் பறிக்கும் ஒளி; தீவ்ர—வேகம்; மன்யு:-சினம்.

பகவான் வராஹர் மிக எளிதாகப் பூமியினைத் தனது தந்தங்களினால் தூக்கிக் கொண்டு நீரினின்று மேலே வந்தார். இவ்வாறு அவரது தோற்றம் ஒளிமிக்கதாக விளங்கியது. சுதர்ஸனச் சக்கரத்தினைப் போல் அவரது சினம் பொங்கியெழுந்தது. அவர் தன்னுடன் யுத்தத்திற்கு வந்த அசுரனை (இரண்யாக்ஷன்) உடனே கொன்றார்.

பதம் 3.13.32
ஜகான ருந்தானம் அஸஹ்ய-விக்ரமம்
ஸ லீலயேபம் ம்ருகராட் இவாம்பஸி
தத்-ரக்த-பங்காங்கித-கண்ட- துண்டோ
யதா கஜேந்த்ரோ ஜகதீம் விபிந்தன்

ஜகான—கொன்றார்; ருந்தானம்-தடுத்த எதிரி; அஸஹ்ய-தாங்க முடியாத; விக்ரமம் வீரம்; ஸ:-அவரது; லீலயா—எளிதில்; இபம்- யானை; ம்ருக-ராட்-சிங்கம்; இவ-போன்று; அம்பஸி- நீரினுள்; தத் -ரக்த -அவனது குருதியினால்: பங்க—அங்கித-உடம்பெல்லாம் கறையாகி; கண்ட- கன்னங்கள்; துண்ட—நாக்கு; யதா—இருப்பதைப் போன்று; கஜேந்திர:— யானை; ஜகதீம்-பூமி:விபிந்தன்- தோண்டுதல்.

சிங்கம் ஒன்று யானையினைக் கொன்றது போல் பகவான் வராஹர் நீரினுள் வைத்தே அவ்வசுரனைக் கொன்றார். அவரது நாவிலும், கன்னங்களிலும் இரத்தக் கறை படிந்திருந்தன. அவரது இக்கோலம் செம்மண் நிலத்தினைத் தோண்டிய யானை சிவந்து காணப்படுவது போல் இருந்தது.

பதம் 3.13.33
தமால-நீலம் ஸித-தந்த-கோட்யா
க்ஷமாம் உத்க்ஷிபந்தம் கஜ-லீலயாங்க
ப்ரஜ்ஞாய பத்தாஞ்ஜலயோ அநுவாகைர்
விரிஞ்சி-முக்யா உபதஸ்துர் ஈசம்

தமால- தமாலம் என்னும் நீல வண்ண மரம்; நீலம்—நீலம்; ஸித- வெண்மை; தந்த- தந்தங்கள்; கோட்யா—வளைந்த நுனியில்; க்ஷமாம்-பூமி; உத்கக்ஷிபந்தம்- நிறுத்தி; கஜ-லீலயா-யானையினைப் போன்று விளையாடி; அங்க-ஒ, விதுரா; ப்ரஜ்ஞாய-இதை நன்கறிந்த பின்னர்; பத்த-குவித்த; அஞ்ஜலய:-கரங்கள்; அநுவாகை:-வேத மந்திரங்களினால்; விரிஞ்சி-பிரம்ம தேவர்; முக்யா:—தலைமையின் கீழ்; உபதஸ்து:-பிரார்த்தனைகள் செய்தனர்; ஈசம்— முழுமுதற் கடவுளுக்கு.

ஒரு யானையினைப் போல் கம்பீரமாக விளையாடிய பகவான் தனது இரு வளைந்த தந்தங்களின் நுனியில் பூமிப் பந்தை நிறுத்தினார். அவரது உடல் வண்ணம் தமால மரத்தினைப் போல் நீல நிறமாகத் தோன்றியதிலிருந்து இவரே முழுமுதற் கடவுள் என்பதை நன்கறிந்து கொண்ட பிரம்ம தேவர் உள்ளிட்ட தேவர்கள் அவரை இருகரம் கூப்பி வேத மந்திரங்களினால் துதித்தனர்.

பதம் 3.13.34
ருஷய ஊசு:
ஜிதம் ஜிதம் தே ‘ஜித யஜ்ஞ-பாவன
த்ரயீம் தனும் ஸ்வாம் பரிதுன்வதே நம:
யத் ரோம-கர்தேஷு நிலில்யுர் அத்தயஸ்
தஸ்மை நம: காரண ஸூகராய தே

ருஷய: ஊசு:-புகழ்மிக்க முனிவர்கள் கூறினர்; ஜிதம்—எல்லாப் புகழும்; ஜிதம்- எல்லா வெற்றியும்; தே-உமக்கே; அஜித—ஓ, வெற்றி கொள்ள முடியாதவரே; யஜ்ஞ- பாவன- வேள்விகளின் மூலமே அறிந்து கொள்ளப்படுபவர்; த்ரயீம்-வேதங்களின் உருவமானவர்; தனும்—அவரது உடல்; ஸ்வாம்-சொந்தம்; பரிதுன்வதே- அசைவு; தம:- வந்தனங்கள்; யதி—அவரது; ரோம-உரோமங்கள்; கர்தேஷு— துளைகள்; நிலில்யு:-மூழ்கியிருந்த; அத்தய:-கடல்கள்; தஸ்மை- அவருக்கு; நம:- வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றோம்; காரண- ஸூகராய-சில காரணங்களுக்காக எடுக்கப்பட்ட பன்றி வடிவத்திற்கு; தே-உமக்கு.

எல்லா முனிவர்களும் மிகுந்த மரியாதையுடன் துதித்தனர்: ஓ. வெற்றி கொள்ள முடியாதவரே, வேள்விகளின் நாயகனே; அனைத்து வெற்றியும் அனைத்துப் புகழும் உமக்கே ஆகுக! வேதங்களின் வடிவம் நீரே! உமது மயிர்க்கால்களின் அடியிலேயே அனைத்துக் கடல்களும் சங்கமிக்கின்றன; ஒரு குறிப்பிட்டக் காரணத்திற்காக (பூமியைக் காப்பதற்காக) நீர் இப்பொழுது வராஹ அவதாரம் எடுத்திருக்கின்றீர்.

பதம் 3.13.35
ரூபம் தவைதன் நனு துஷ்க்ருதாத்மனாம்
துர்தர்ஷனம் தேவ யத் அத்வராத்மகம்
சந்தாம்ஸி யஸ்ய த்வசி பர்ஹி-ரோமஸ்வ்
ஆஜ்யம் ட்ருஷி தவ் அங்க்ரிஷு சாதுர்-ஹோத்ரம்

ரூபம் வடிவம்; தவ-உமது; ஏதத் – இந்த; நனு—ஆனால்; துஷ்க்குத-ஆத்மனாம் வீணர்களுக்கு:துர்தர்ஷனம்- காண்பதரிது;தே-ஓ. தேவனே; யத்–அந்த; அத்வர-ஆதிமகம்-வேள்விகளால் துதிக்கைப்படுபவர்; சந்தாம்ஸி – காயத்ரி மந்திரம் போன்ற பிற; யஸ்ய-அவரது; த்வசி—தோலின் தொடுதலினால்; பர்ஹி:-தர்ப்பைப் புல்; ரோமஷு—உடல் உரோமங்கள்; ஆஜ்யம்—தூய வெண்ணெய்; த்ருஷி-விழிகளில்; து—கூட; அங்கீரிஷு—நான்கு கால்களின் மேல்; சாது:-ஹோத்ரம்-நான்கு வகையான பலன்தரும் செயல்கள்.

ஒ, பகவானே, வேள்விகளைச் செய்வதின் மூலம் உமது வடிவம் வழிபடப்படுகிறது, ஆயினும் துராத்மாக்களினால் அதனைக் காண முடியாது. அனைத்து வேத மந்திரங்களும் காயத்ரி மந்திரம் போன்றவையும் உமது தோலின் தொடர்பினாலானவையே. உமது உடலிலுள்ள உரோமங்கள் தர்ப்பைப் புற்களாகும். உமது விழிகளோ தூய வெண்ணெயினைப் போலிருக்கும். உமது நான்கு பாதங்களும் நான்கு வகையானப் பலன்தரும் செயல்களாகும்.

பதம் 3.13.36
ஸ்ரக் துண்ட ஆஸீத் ஸ்ருவ ஈச நாஸயோர்
இடோதரே சமஸா: கர்ண-ரந்த்ரே
ப்ராஸித்ரம் ஆஸ்யே க்ரஸனே க்ரஹாஸ் து தே
யச் சர்வணம் தே பகவன்ன அக்னி-ஹோத்ரம்

ஸ்ரக்- வேள்விக்கான ஹோம பாத்திரம்; துண்டே-நாக்கின் மேல்; ஆஸீத்-இருக்கிறது; ஸ்ருவ:-வேள்விக்கான மற்றொரு பாத்திரம்; ஈச-ஓ, பகவானே; நாஸயோ-நாசித்துளைகள்; இடா—உண்பதற்கான பாத்திரம்; உதரே-உதரம் (வயிறு); சமஸா- வேள்விக்கான மற்றொரு பாத்திரம்; கர்ண—ரந்திரே- செவித் துளைகள்; ப்ராஸித்ரம் – பிரம்ம தேவரின் பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது; ஆஸ்யே- வாயினுள்; க்ரஸனே- கண்டத்தில்; க்ரஹா:-சோம பாத்திரங்கள் என்று அறியப்படுகின்றன; து-ஆனால்; தே-உமது; யத்-அந்த; சர்வணம்-மெல்லுதல்; தே-உமது; பகவன்—ஓ, எந்தன் பகவானே; அக்னி-ஹோத்ரம்-வேள்வித் தீயின் மூலம் நீர் உண்பது.

ஒ, பகவானே, உமது நாக்கு வேள்வியின் ஹோமபாத்திரமாகும். உமது நாசித்துளைகளோ வேள்வியின் மற்றொரு பாத்திரமாகும். உமது வயிறோ வேள்வியின் உண்ணும் பாத்திரமாகும். வேள்வியின் மற்றொரு பாத்திரம் உமது செவித் துளைகள் ஆகும். உமது வாயினுள் பிரம்ம தேவரின் வேள்விப் பாத்திரம் இருக்கிறது. உமது தொண்டைக் குழலோ சோமம் என்றறியப்படும் வேள்விப் பாத்திரமாகும். மேலும் எதையெல்லாம் நீர் மெல்லுகிறீரோ அது அக்னி – ஹோத்ரமாகும்.

பதம் 3.13.37
தீக்ஷானுஜன்மோபஸத: ஸிரோதரம்
த்வம் ப்ராயணீயோதயனீய- தம்ஷ்ட்ர:
ஜிஹ்வா ப்ரவர்க்யஸ் தவ ஸீர்ஷகம் க்ரதோ:
ஸத்யாவஸத்யம் சிதயோ ‘ஸவோ ஹி தே

தீக்ஷா—தீட்சை; அனுஜன்ம-ஆன்மீகப் பிறப்பு அல்லது தொடர்ந்து வரும் அவதாரங்கள்; உபஸத:-மூன்று வகையான விருப்பங்கள் (உறவு, செயல்கள், இறுதி இலட்சியம்); ஸீர:-தரம்-கழுத்து; த்வம்- நீர்; ப்ராயணீய-தீட்சையில் விளைவிற்குப் பின்னர்; உதயனீய—ஆசையின் இறுதிச் சடங்குகள்; தம்ஷ்ட்ர:- தந்தங்கள்; ஜிஹ்வா-நாக்கு; ப்ரவர்க்ய:-முன்வினைச் செயல்கள்; தவ-உமது; ஸீர்ஷகம்-தலை; கிரதோ:-வேள்வியின்; ஸத்ய-வேள்வியில்லாத தீ; ஆவஸத்யம்- வழிபாட்டின் நெருப்பு; சிதய:-அனைத்து ஆசைகளின் கூட்டல்; அஸவ:-உயிர்மூச்சு; ஹி-நிச்சயமாக; தே-உமது.

மேலும், ஒ, பகவானே, மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும் உமது தோற்றமானது பல்வேறு தீட்சைகளின் விருப்பத்திற்கானதேயாகும். உமது கழுத்தோ மூன்று விருப்பங்களின் இடமாக உள்ளது. உமது தந்தங்களோ தீட்சையின் பயனாகவும் அனைத்து ஆசைகளின் முடிவாகவும் இருக்கின்றன. உமது நாவோ தீட்சைகளின் முன்னைய வினைகளாகும். உமது சிரமோ வேள்வியில்லாத நெருப்பாகவும், வழிபாட்டு நெருப்பாகவும் விளங்குகிறது. உமது உயிர்ச் சக்திகளோ அனைத்து ஆசைகளின் ஒருங்கிணைப்பாக இருக்கின்றன.

பதம் 3.13.38
ஸோமஸ் து ரேத: ஸவனானி அவஸ்தித:
ஸம்ஸ்தா-விபேதாஸ் தவ தேவ தாதவ:
ஸத்ராணி ஸர்வாணி ஸரீர-ஸந்திஸ்
த்வம் ஸர்வ-யஜ்ஞ-க்ரதுர் இஷ்டி-பந்தன:

ஸோம: து ரேத:-உமது சுக்கிலம் சோம என்றழைக்கப்படும் வேள்வியாகும்; ஸவனானி – அதிகாலையில் செய்யப்படும்சடங்குகள்; அவஸ்தித:-உடல் வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்; ஸம்ஸ்தா- விபேதா:-ஏழுவகையான வேள்விகள்;தவ-உமது;தேவ-ஒ. தேவனே; தாதவ:-தசை, தோல் போன்ற உடலுக்கான தாதுப் பொருட்கள்;ஸத்ராணி- பன்னிரெண்டு நாட்களுக்கு மேலாகச் செய்யப்படும் வேள்விகள்: ஸர்வாணி-இவையெல்லாம்; ஷரீர-உடலின்;ஸந்தி:- இணைப்புக்கள்;த்வம்-உமது மேலாண்மையின்;ஸர்வ—அனைத்தும்; யஜ்ஞ – அசோம வேள்விகள்; க்ரது:-சோமவேள்விகள்; இஷ்டி-இறுதி விருப்பம்; பந்தன;-கட்டப்படுதல்.

பகவானே உமது சுக்கிலம் சோம யக்ஞம் என்று அழைக்கப்படுகிறது. உமது வளர்ச்சி அதிகாலையில் செய்யப்படும் சமயச் சடங்குகளாகும். உமது தோலும் தொடு உணர்ச்சிகளும் அக்கினிஷ்டோம வேள்வியின் ஏழு பொருட்களாகும். உமது உடல் இணைப்புக்கள் எல்லாம் பன்னிரெண்டு நாட்களில் செய்யப்படும் பல்வேறு வேள்விகளின் அடையாளங்களாகும். ஆகையினால் நீரே சோம, அசோம போன்ற அனைத்து வேள்விகளுக்கும் உட்பொருளாக விளங்குகிறீர். மேலும் நீர் வேள்விகளினால் மட்டுமே கட்டப்படக் கூடியவரும் ஆவீர்.

பதம் 3.13.39
நமோ நமஸ் தே ‘கில-மந்த்ர-தேவதா
த்ரவ்யாய ஸர்வ-க்ரதவே க்ரியாத்மனே
வைராக்ய-பக்த்யாத்மஜயானுபாவித-
ஜ்ஞானாய வித்யா-குரவே நமோ நம:

நம: நம:- உமக்கு வந்தனங்கள்; தே-வணங்குதற்குரிய உமக்கு; அகில— எல்லாம் உள்ளிட்ட; மந்த்ர-மந்திரங்கள்; தேவதா-பரமபுருஷபகவான்; த்ரவ்யாய-வேள்விச் சடங்குகளைச் செய்வதற்குரிய அனைத்துப் பொருட்களுக்கும்; ஸர்வ—க்ரதவே—அனைத்து வகையான வேள்விகளுக்கும்; க்ரியா-ஆத்மனே வேள்விகள் அனைத்தின் பரம வடிவமாக விளங்கும் உமக்கு; வைராக்ய-வைராக்கியம் (துறவு); பக்த்யா—பக்தித் தொண்டு; ஆத்ம-ஜய-அனுபாவித-மனதை வெற்றி கொள்வதின் மூலம் உணரப்படுவது; ஜ்ஞானாய—அந்த ஞானம்; வித்யா-குரவே- எல்லாவிதமான ஞானத்திற்கும் பரம ஆன்மீக குருவானவர்; நம: நம:–மீண்டும் எனது மரியாதைக்குரிய வந்தனங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

ஓ, பகவானே, நீரே முழுமுதற் கடவுள்; பிரபஞ்சப் பிரார்த்தனைகளினாலும், வேத மந்திரங்களினாலும், வேள்விப் பொருட்களினாலும் வணங்கப்படுகிறீர். உமக்கு எமது வந்தனங்கள். கண்ணுக்குப் புலனாகின்ற மற்றும் புலனாகாத அனைத்துப் பௌதிக மாசுக்களில் இருந்தும் விடுதலை பெற்றத் தூய மனதினாலேயே உம்மை உணர முடியும். பக்தித் தொண்டில் ஞானத்தின் பரம ஆன்மீக குருவாக விளங்கும் உமக்கு எனது வந்தனங்கள் உரியதாகுக.

பதம் 3.13.40
தம்ஷ்ட்ராக்ர-கோட்யா பகவம்ஸ் த்வயா த்ருதா
விராஜதே பூதர பூ: ஸ-பூதரா
யதா வனன் நிஹ்ஸரதோ ததா த்ருதா
மதன்-கஜேந்த்ரஸ்ய ஸ-பத்ர-பத்மினீ

தம்ஷ்ட்ர-அக்ர—கோட்யா- தந்தங்களின் நுனிகளினால்; பகவன்-ஓ. முழுமுதற் கடவுளே; த்வயா- உம்மால்; த்ருதா- நிறுத்தப்பட்டது: விராஜதே -அழகாக இருக்கிறது; பூ-தர—ஒ, பூமியைத் தூக்கி நிறுத்தியவரே; பூ-பூமி; ஸ-பூதரா-மலைகளுடன்; யதா-இருப்பதைப் போன்று; வனாத்- நீரிலிருந்து; நிஹ்ஸரத:- வெளியே வந்தது; ததா-தந்தத்தினால்; திருதா-பிடித்தது; மதம் – கஜேந்த்ரஸ்ய-மதம் கொண்ட யானை; ஸ-பத்ர இலைகளுடன்; பத்மினீ— தாமரை மலர்.

ஒ, பூமியைத் தூக்கி நிறுத்தியவரே, மலைகளுடன் கூடிய இப்பூமியினை உமது தந்தங்களினால் நீர் தூக்கிய காட்சியானது இலைகளுடன் கூடிய தாமரை மலரினை மதம் கொண்ட யானையானது தனது துதிக்கையினால் தூக்கிக் கொண்டு நீரிலிருந்து வெளி வருவதைப் போலிருந்தது.

பதம் 3.13.41
த்ரயீமயம் ரூபம் இதம் ச ஸெளகரம்
பூ-மண்டலேனாத ததா த்ருதேன தே
சகாஸ்தி ஷ்ருங்கோட-கனேன பூயஸா
குலாசலேந்த்ரஸ்ய யதைவ விப்ரம:

த்ரயீ-மயம்-வேதங்களின் உருவமானவர்; ரூபம் -வடிவம்; இதம்- இந்த; ச-மேலும்; ஸெளகரம்-பன்றி; பூ-மண்டலேன:- பூ மண்டலத்தினால்; அத-இப்பொழுது; ததா-தந்தங்களினால்; த்ருதேன-நிறுத்தப்பட்டது; தே-உமது; சகாஸ்தி-ஒளிர்தல்; ஷ்ருங்க-ஊட-மலைச் சிகரங்களினால் நிறுத்தப்பட்ட; கனேன- மேகங்களினால்; பூயஸா-மிக அழகுபடுத்துகிறது; குல-அசல- இந்தரஸ்ய-பெரும் மலைகளின்; யதா—இருப்பதைப் போன்று; ஏவ- உறுதியாக ; விப்ரம:- அலங்காரம்.

ஒ, பகவானே, பெரிய மலைகளின் உச்சிச் சிகரங்கள் மேகங்களினால் அணி செய்யப்படும்பொழுது அழகு பெறுகின்றன. உமது உன்னத உடலும் எழில் மிக்கதாக விளங்குகிறது. ஏனெனில் உமது தந்தங்களினால் நீவிர் பூமியைத் தூக்கி அவற்றின் நுனியில் அதனை நிறுத்தியிருப்பதினாலேயாம்.

பதம் 3.13.42
ஸமஸ்தாபயைனாம் ஜகதாம் ஸ-தஸ்துஸாம்
லோகாய பத்னீம் அஸி மாதரம் பிதா
விதேம சாஸ்யை நமஸா ஸஹ த்வயா
யஸ்யாம் ஸ்வ-தேஜோ அக்னிம் இவாரணாவ் அதா:

ஸம்ஸ்தாபய-ஏன் இப்பூமியினைத் தூக்கியது; ஜகதாம்- அசைகின்ற; ஸ-தஸ்து ஸாம்–அசையாத; லோகாய-அவற்றின் இருப்பிடத்திற்காக; பத்னீம்-மனைவி; அஸி -நீர்; மாதரம்- அன்னை; பிதா – தந்தை; விதேம-நாங்கள் அளிக்கிறோம்; ச-மேலும்; அஸ்யை-அன்ளைக்கு; நமஸா- எல்லா வந்தனங்களுடன்; ஸஹ- உடன்; த்வயா-உம்முடன்; யஸ்யாம்- எதனை; ஸ்வ-தேஜ:-உமது தனித்த சக்தியினால்; அக்னிம்-அக்கினி; இவ-போன்று; அரணௌ— அரணிக் கட்டையில்; அதா:-வைத்திருத்தல்.

ஓ, பகவானே, அசைகின்ற, அசையாத அனைத்து உயிர்களுக்கும் உறைவிடமாகத் திகழும் இப்பூமியானது அன்னையென்றால், நீரே பரம தந்தையாக விளங்குகிறீர். அன்னை பூமியுடன் சேர்ந்த நாங்கள் எங்கள் மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்குச் செலுத்துகிறோம். அரணிக் கட்டையில் ஒரு தேர்ந்த வேள்விக்காரன் நெருப்பினை இணைத்திருப்பது போல் நீர் அன்னை பூமியினிடத்தில் உமது சுயச் சக்தியினை இணைத்திருக்கிறீர்.

பதம் 3.13.43
க: ஷ்ரத்ததீதான்யதமஸ் தவ ப்ரபோ
ரஸாம் கதாய புவ உத்விபர்ஹணம்
ந விஸ்மயோ அஸொ த்வயி விஸ்வ-விஸ்மயே
யோ மாயயேதம் ஸஸ்ருஜே அதி விஸ்மயம்

க:-வேறுயார்; ஷ்ரத்ததித- முயற்சிக்கக் கூடும்; அன்யதம:- உம்மைத் தவிர வேறு எவரும்; தவ-உமது; ப்ரபோ-ஓ, பகவானே; ரஸாம்- தண்ணீரினுள்; கதாயா:-கிடந்தபொழுது; புவ:- புவியின்; உத்விபர்ஹணம் -மீட்டல்; ந-இல்லை; விஸ்மய:-அதிசயம்; அஸென—இச்செயல்; த்வயி—உமக்கு; விஸ்வ-பிரபஞ்சம்; விஸ்மயே- அதிசயங்களினால் ஆனது; ய: – அவர்; மாயயா-சக்திகளினால்; இதம்- இந்த; ஸஸ்ருஜே-படைத்தல்; அத்விஸ்மயம்-எல்லா அதிசயங்களையும் கடந்ததாகும்.

முழுமுதற் கடவுளான உம்மைத் தவிர வேறு யார் நீரினுள்ளிருந்த பூமியை மீட்டிருக்கக் கூடும்? இது ஒன்றும் உமக்கு அதிசயமானதல்ல. ஏனென்றால் பிரபஞ்சப் படைப்பிலேயே நீர் மிகவும் வியத்தகு செயல்புரிந்தவர் ஆவீர். உமது சக்தியினாலேயே நீர் இவ்வற்புதமானப் பிரபஞ்சத்தினைப் படைத்திருக்கிறீர்.

பதம் 3.13.44
விதுன்வதா வேதமயம் நிஜம் வபுர்
ஜனஸ்-தப:-ஸத்ய-நிவாஸினோ வயம்
ஸடா-ஸிகோத்தூத-சிவாம்பு- பிந்துபிர்
விம்ருஜ்யமானா ப்ருஸம் ஈஸ பாவிதா:

விதுன்வதா-குலுக்கும் பொழுது; வேத-மயம்—வேதங்களின் உருவமானவர்; நிஜம்—தனது; வபு:-உடல்; ஜன:- ஜனலோகம்; தப:- தபலோகம்; ஸத்ய-சத்தியலோகம்; நிவாஸின:-வாழ்பவர்கள்; வயம்- நாங்கள்; ஸடா-தோளின் மீது தொங்கும் குழல்கள்; ஷிக-உத்தூத—தலை முடியின் நுனியிலுள்ள நீர் முத்துக்கள்; சிவ- மங்கலமானது; அம்பு-நீர்; பிந்துபி:- துளிகளினால்; விம்ருஜ்யமானா:—எங்கள் மீது தெறித்து ; ப்ருஷம்-உயர்ந்த; ஈஸ—ஓ, பரமபுருஷ பகவானே; பாவிதா: தூய்மை செய்கிறது.

ஓ, பரமபுருஷ பகவானே, ஐயத்திற்கிடமின்றி நாங்கள் அனைவரும் ஜனலோகம், தபலோகம் மற்றும் சத்திய லோகம் என்னும் புண்ணிய லோகங்களைச் சேர்ந்தவர்களாயினும் உமது தோள்களின் மீது தொங்கும் மயிர்க்குழல்களின் நுனியில் மின்னும் நீர் முத்துக்கள், நீர் உமது தோள்களைக் குலுக்குவதினால் எங்கள் மீது தெறித்து எங்களைப் புனிதப்படுத்துகின்றன.

பதம் 3.13.45
ஸ வை பத ப்ரஷ்ட-மதிஸ் தவைஷதே
ய: கர்மணாம் பாரம் அபார-கர்மண:
யத்-யோகமாயா-குண-யோக- மோஹிதம்
விஸ்வம் ஸமஸ்தம் பகவன் விதேஹி ஸம்

ஸ:- அவர்; வை-உறுதியாக; பத-அந்தோ; ப்ரஷ்ட – மதி:- மதியற்ற; தவ—உமது : ஏஷதே-விருப்பங்கள்; ய:-எவர்; கர்மணாம்- செயல்களின்; பாரம்-வரையறை;அபார-கர்மண:- அளவற்ற செயல்களை உடைய ஒருவரின்; யத்—அவரால்; யோக-யோக ஸித்தி; மாயா-சக்தி; குண-ஜட இயற்கையின் குணங்கள்; யோக— யோக ஸித்தி; மோஹிதம்-குழப்பமடைதல்; விஸ்வம்-பிரபஞ்சம்; ஸமஸ்தம்- மொத்தத்தில்; பகவன்—ஓ, முழுமுதற் கடவுளே; விதேஹி-மகிழ்ந்து அருள்புரிவீர்; ஸம்-மங்கள ஆசிகளை.

ஓ, பகவானே, உமது அற்புதச்செயல்களுக்கோர் எல்லை என்பது எந்தக் காலத்திலும் இல்லை. அப்படி யாரேனும் அவ்வெல்லையினைக் காண விரும்பினால் அவன் நிச்சயம் மதியிலியே ஆவான். இவ்வுலகிலுள்ள அனைவரும் சக்தி வாய்ந்த மாயையினால் கட்டப்பட்டிருக்கின்றனர். உமது அளவற்றக் கருணையினை இப்பந்தப்பட்ட ஆத்மாக்களிடத்து அருள் கூர்ந்து அளிக்க வேண்டும்.

பதம் 3.13.46
மைத்ரேய உவாச
இதி உபஸ்தீய மானோ அஸௌ முனிபிர் ப்ரஹ்ம-வாதிபி:
ஸலிலே ஸ்வ-குராக்ராந்த உபாதத்தாவிதாவனிம்

மைத்ரேய: உவாச-மைத்ரேயர் கூறினார்; இதி- இவ்வாறு; உபஸ்தீயமான:-போற்றப்பட்டு; அஸௌ-பகவான் வராஹர்; முனிபி: -மாமுனிவர்களினால்; ப்ரஹ்ம-வாதிபி:- உன்னதமானவர்களினால்; ஸலிலே-நீரின் மேல்; ஸ்வ-குர- ஆக்ராந்தே—தனது காலடிக் குளம்புகளினால் தொட்டு; உபாதத்த—இட்டார்; அவிதா- காத்தருள்பவர்; அவனிம்—அவனியை (பூமி).

மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: பகவான் இவ்வாறு மாமுனிவர்கள் மற்றும் ஞானிகளினால் துதிக்கப்பட்ட பின்னர் பூமியைத் தனது காலடிக் குளம்புகளினால் தொட்டு நீரின் மேல் இட்டார்.

பதம் 3.13.47
ஸ இத்தம் பகவான் உர்வீம் விஷ்வக்ஷேண: ப்ரஜாபதி:
ரஸாயா லீலயோன்னீதாம் அப்ஸு ந்யஸ்ய யயௌ ஹரி:

ஸ:-அவர்; இத்தம்—இவ்வாறாக; பகவான்-முழுமுதற் கடவுள்; உர்வீம்ப- பூமி; விஷ்வக்ஷேண:-பகவான் விஷ்ணுவின் மற்றொரு பெயர்; ப்ரஜா-பதி:- உயிர்வாழிகளின் இறைவன்; ரஸாயா:-நீரினுள்ளிருந்து; லீலயா-மிக எளிதில்; உன்னீதாம்- எடுத்து; அப்ஸு- நீரின் மேல்; ந்யஸ்ய-இட்டு; யயௌ-தமது உறைவிடம் சென்றார்; ஹரி:-முழுமுதற் கடவுள்.

இவ்வாறாக உயிர்களை காப்பவரும் முழுமுதற் கடவுளுமான பகவான் விஷ்ணு நீரினுள் கிடந்த பூமியினை எடுத்து வந்து மீண்டும் நீரின் மேல் அதனை மிதக்கும்படி விட்டு விட்டு தனது இருப்பிடம் சென்றார்.

பதம் 3.13.48
ய ஏவம் ஏதாம் ஹரி-மேதஸோ ஹரே:
கதாம் ஸுபத்ராம் கதனீய-மாயின:
ஸ்ருண்வீத பக்த்யா ஸ்ரவயேத வோஸதீம்
ஜனார்தனோ அஸ்யாஸு ஹ்ருதி ப்ரஸீததி

ய:- எவர்; ஏவம்–இவ்வாறு; ஏதாம்-இந்த; ஹரி-மேதஸ:- பக்தர்களின் ஜடத் தோற்றத்தினை அழிப்பவர்; ஹரே:-முழுமுதற் கடவுளின்; கதாம்- சரிதத்தினை; ஸு-பத்ராம்—மங்களகரமான; கதனீய-எடுத்துரைக்கத் தகுதியானது; மாயின:-அவரது அந்தரங்கச் சக்தியின் கருணையால்; ஸ்ருண்வீத-கேட்டு; பக்த்யா-பக்தியில், ஸ்ரவயேத-பிறரைக் கேட்க வைத்து; வா—இதுவோ; உஷதீம்- மிக்க மகிழ்ச்சியுடன்; ஜனார்தன:-பகவான்; அஸ்ய—அவரது; ஆஸு-மிக விரைவில்; ஹ்ருதி-இதயத்தினுள்ளே; ப்ரஸீத்தி- மிக்க மகிழ்ச்சியடைவார்.

மதிப்பு மிக்க இம்மகாக் கதையினை, பகவான் வராஹரைப் பற்றிய மங்களகரமான இந்த உயர் சரிதத்தினை பக்தித் தொண்டின் உணர்வோடு எடுத்துக் கூறினாலும், கூறக் கேட்டாலும் அனைவரின் உள்ளங்களிலும் வீற்றிருக்கும் பகவான் அதனால் மிக்க மகிழ்ச்சியடைவார்.

பதம் 3.13.49
தஸ்மின் ப்ரஸன்னே ஸகலாஸிஷாம் ப்ரபௌ
கிம் துர்லபம் தாபிர் அலம் லவாத்மபி:
அனன்ய-த்ருஷ்ட்யா பஜதாம் குஹாஸய:
ஸ்வயம் விதத்தே ஸ்வ-கதிம் பர: பராம்

தஸ்மின்- அவருக்கு; ப்ரஸன்னே-மகிழ்ச்சியுற்று; ஆஸிஷாம் —சகல ஆசிகளையும்; ப்ரபௌ—பகவானுக்கு; கிம்- என்ன அது; துர்லபம் -பெறுதற்கரியது; தாபி:-அவைகளுடன்; அலம் – அப்பால்; லவ – ஆக்மபி:-முக்கியமில்லாத நன்மைகள்; அனன்ய-திருஷ்ட்யா—பக்தித் தொண்டைத் தவிர வேறெதுவுமில்லை; பஜதாம் – பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள்; குஹா– ஆஸய:-உள்ளத்தில் குடியிருப்பவர்; ஸ்வயம்—சுயமாக; விதத்தே -நிறைவேற்றுதல்; ஸ்வ- கதிம் -தனது உறைவிடத்திற்கு; பர:-பரம: பராம் -உன்னதமான.

முழுமுதற் கடவுள் யாதேனும் தனிப்பட்ட ஒருவனிடத்து மகிழ்ச்சியடைந்தாரென்றால், அவன் அடைய முடியாததென்பது எதுவுமே இல்லை. உன்னதமான பேறு பெறுவதினால் ஒருவன் மற்றவை எல்லாம் முக்கியமற்றன என்பதை உணர்ந்து கொள்கிறான். உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுவதின் மூலம் ஒருவன் அனைவரது உள்ளங்களிலும் வீற்றிருக்கும் பகவான் அருளினால் உயர்ந்த நிறைவான நிலையை எய்துகிறான்.

பதம் 3.13.50
கோ நாம் லோகே புருஷார்த-ஸாரவித்
புரா-கதானாம் பகவத்-கதா-ஸுதாம்
ஆபீய கர்ணாஞ்ஜலிபிர் பவாபஹம்
அஹோ விரஜ்யேத விநா நரேதரம்

க:-அவர்; நாம-உண்மையில்; லோகே-உலகில்; புருஷ- அர்த- வாழ்க்கையின் இலட்சியம்; ஸார-வித்- சாரத்தை அறிந்த ஒருவன்; புரா-கதானாம்-கடந்த காலச் சரித்திரங்கள் எல்லாவற்றின்; பகவத்- முழுமுதற் கடவுளைப் பற்றிய; கதா-ஸுதாம்-முழுமுதற் கடவுளைப் பற்றிய சரித அமிர்தத்தினை; ஆபீய-பருகுவதினால்; கர்ண-அஞ்ஜலிபி:-செவியினால் கேட்பதினால்; பவ-அபஹாம்- அது பௌதிகத் துன்பங்கள் அனைத்தையும் நீக்கும்; அஹோ- அந்தோ; விரஜ்யேத-மறுக்கக் கூடும்; விநா-தவிர்த்த; நர-இதரம் – மனிதனைத் தவிர மற்றவர்கள்.

மனிதனைத் தவிர வேறு யார் இவ்வுலகில் வாழ்ந்தாலும், தனது வாழ்வின் இறுதி இலட்சியத்தில் விருப்பமின்றியா இருப்பான்? ஒருவனை உலகியல் துன்பங்களில் இருந்து விடுதலையளிக்கும் முழுமுதற் கடவுளின் செயல்களைப் பற்றி விவரிக்கும் அவரது அமிர்தம் போன்ற சரிதத்தினை பருகுவதற்கு யாரே மறுத்தல் கூடும்?


ஸ்ரீமத் பாகவதம், மூன்றாம் காண்டத்தின், “பகவான் வராஹரின் தோற்றம்” எனும் தலைப்பைக் கொண்ட பதின்மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றன.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare