அத்தியாயம் – 13
பகவான் வராஹரின் தோற்றம்
பதம் 3.13.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஓ, மன்னனே, மைத்ரேய முனிவரிடமிருந்து இப்புண்ணியக் கதைகள் அனைத்தையும் கேட்ட விதுரர், தான் போற்றுகின்ற முழுமுதற் கடவுளின் வழிபடுதற்குரிய சரிதத்தினைக் கூறுமாறு அவரை வேண்டினார்.

பதம் 3.13.2 : விதுரர் கூறினார்: ஓ, மாமுனிவரே, பிரம்மதேவரின் பாசத்திற்குரிய மைந்தன் சுவாயம்புவமனு, தனது மிகுந்த நேசிப்பிற்குரிய மனைவியினை அடைந்த பின்னர் என்ன செய்தார்?

பதம் 3.13.3 : ஓ. புனிதரில் சிறந்தோரே, ஆதி அரசரும், மன்னர்க்கெல்லாம் மன்னருமானவர் (மனு) முழுமுதற் கடவுளான ஹரியின் மிகச்சிறந்த பக்தராவார். ஆகையினால் அவரது மேன்மைமிகு நடத்தை மற்றும் செயல்களைப் பற்றிக் கேட்பது மிகவும் பயனுடையதாகும். அவற்றை விளக்கி அருள்வீராக. நான் அவற்றைக் கேட்பதற்கு மிகவும் ஆவலுடையவனாயிருக்கிறேன்.

பதம் 3.13.4 : தமது ஆன்மீக குருவினிடம் மிகுந்த சிரமத்துடனும், நீண்ட நாட்களுக்கும் பக்தர்களைப் பற்றிக் கேட்க விரும்புவோர் தூய பக்தர்களின் குணங்களையும், செயல்களையும் பற்றத் தூய பக்தர்களின் வாயினின்றே கேட்டல் வேண்டும். தமது பக்தர்களுக்கு முக்தியருளும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளை தூய பக்தர்கள் எப்பொழுதும் தங்கள் உள்ளங்களில் சிந்தித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

பதம் 3.13.5 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணர் விதுரரின் மடியின் மீது தனதுத் தாமரைத் திருவடிகளை வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்வார். ஏனெனில் விதுரர் மிகுந்த நேர்மையும் பணிவும் மிக்கவராவார். மைத்ரேய முனிவர் விதுரரின் வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். மைத்ரேயரது உணர்வுகளினால் உந்தப்பட்ட விதுரர் கூற ஆரம்பித்தார்.

பதம் 3.13.6 : மைத்ரேய முனிவர் விதுரரிடம் கூறினார்: மனித குலத்தின் தந்தையான மனு தன் மனைவியுடன் தோன்றி, வேத ஞானக் கடலான பிரம்மதேவரைக் கூப்பிய கரங்களுடன் பின்னர் வணங்கி இவ்வாறு கூறத்தொடங்கினார்.

பதம் 3.13.7 : உயிர்கள் அனைவர்க்கும் நீரே தந்தையாகவும் அவர்கள் வாழ்க்கையின் ஆதாரமாகவும் விளங்குகிறீர். ஏனென்றால் அவர்கள் அனைவரும் உம்மிடமிருந்தே பிறந்தனர். நாங்கள் எவ்வாறு உமக்குச் சேவை செய்யலாம் என்பதை அருள்கூர்ந்து உரைப்பீராக.

பதம் 3.13.8 : ஒ, வணக்கத்திற்குரியவரே, எங்களது உழைக்கும் திறனுக்கேற்ப, கடமையினை நிறைவேற்றுவதற்கான வழியினை எங்களுக்குக் காட்டியருள்வீராக. அதனால் நாங்கள் இம்மையில் புகழுக்காகவும் மறுமையில் வளர்ச்சிக்காகவும் அதனைப் பின்பற்றக்கூடும்.

பதம் 3.13.9 : பிரம்ம தேவர் கூறினார்; அன்பு மைந்தனே, ஓ, உலகின் நாயகனே, உன்மீது நான் மிக்க மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். மேலும் உனக்கும் உன் மனைவிக்கும் எல்லா ஆசிகளும் கிடைப்பதாக. எனது அறிவுரைகளுக்காக எவ்விதத் தயக்கமுமின்றி இதயபூர்வமாக என்னை நீ சரணடைந்திருக்கின்றாய்.

பதம் 3.13.10 : ஓ, வீரனே, உனது முன்னுதாரணம், ஒரு மைந்தன் தன் தந்தையுடன் கொள்ளும் உறவிற்கு நன்கு பொருந்துவதாகும். மேலோர்க்கு இதுபோன்ற மரியாதையே தேவைப்படுகிறது. காழ்ப்புணர்ச்சியற்றவனாகவும் தெளிவுடையவனாகவும் இருப்பவன் தனது தந்தையின் கட்டளையை மகிழ்ச்சியுடன் தன் சிரமேற் தாங்கிக் கொண்டு அதனை தனது முழுத்திறமையையும் பயன்படுத்தி நிறைவேற்றுகின்றான்.

பதம் 3.13.11 : என்னிடம் பணிவன்பு கொண்ட மைந்தன் நீ ஆதலினால் உன்னிடம் நான் கேட்பது உன்னைப் போன்ற நற்குணமுள்ள குழந்தைகளை உன் மனைவியினிடத்தில் நீ பெற்றெடுப்பாயாக. முழுமுதற் கடவுளுக்குரிய பக்தித் தொண்டுக் கொள்கைக்கேற்ப இவ்வுலகினை ஆள்வாயாக. இவ்வாறு பகவானை வேள்விகளின் மூலம் வழிபடுவாயாக.

பதம் 3.13.12 : ஓ, மன்னனே, இந்த உலகிலுள்ள உயிர்களுக்குச் சரியான பாதுகாப்பு கொடுப்பதே எனக்கு நீ செய்யும் சிறந்த சேவையாகும். கட்டுப்பட்ட ஆத்மாக்களை நன்கு பாதுகாப்பவன் நீ என்பதனை முழுமுதற் கடவுள் அறிந்தார் என்றால் புலன்களின் நாயகனான அவர் உன்மீது மிகுந்த மகிழ்ச்சியடைவார்.

பதம் 3.13.13 : முழுமுதற் கடவுளான ஜனார்தனனே (பகவான் கிருஷ்ணர்) வேள்விகளின் அனைத்துப் பலன்களையும் ஏற்றுக் கொள்ளும் வடிவமாகத் திகழ்கிறார். அவர் திருப்தியுறவில்லையென்றால் முன்னேறுவதற்கான அனைத்து முயற்சிகளும் வீணேயாகும். அவரே இறுதி ஆத்மாவாக இருப்பவர். அவரைத் திருப்திப்படுத்தாதவன் அவனது சொந்த நலன்களையே புறக்கணிக்கிறான்.

பதம் 3.13.14 : ஸ்ரீ மனு கூறினார்: ஓ, அனைத்து ஆற்றல்களும் மிக்கவரே, பாவங்களை மாய்ப்பவரே, உமது கட்டளைக்கு நான் கீழ்ப்படிகிறேன். அருள்கூர்ந்து எனக்குரிய இருப்பிடத்தையும், எனக்குப் பிறக்கப் போகும் உயிர்களையும் பற்றி அறிவிப்பீராக.

பதம் 3.13.15 : ஓ, தேவர்களின் தலைவனே, மகாநீரினுள் மூழ்கியிருக்கும் பூமியினை வெளிக்கொணர்வதற்கு அருள்கூர்ந்து முயற்சிப்பீராக. ஏனெனில் உயிர்கள் அனைத்திற்கும் அதுவே இருப்பிடமாகும். இது உமது முயற்சியினாலும் பகவானின் கருணையினாலுமே நடை பெறக் கூடியதாகும்.

பதம் 3.13.16 : ஸ்ரீ மைத்ரேயர் கூறினார்: பூமி நீருக்கடியில் இருப்பதைக் கண்ட பிரம்ம தேவர் அதனை எவ்வாறு வெளியே எடுக்கலாம் என்று நீண்ட நேரம் சிந்தித்தார்.

பதம் 3.13.17 : பிரம்மதேவர் நினைத்தார்: படைப்புத் தொழிலில் நான் ஈடுபட்டிருந்தபொழுது பூமியானது பிரளய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கடலின் அடியில் சென்றுவிட்டது. படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நம் போன்றோர் செய்யக் கூடியது என்ன? பகவானே இதற்கு வழிகாட்டுதல் சிறந்ததாகும். அவருக்குத் தெரிவிப்போம் என்று எண்ணினார்.

பதம் 3.13.18 : ஓ, பாவமற்ற விதுரனே, பிரம்ம தேவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது திடீரென்று அவரது நாசித் துவாரத்திலிருந்து ஒரு சிறிய பன்றி வடிவம் வெளியே வந்தது. அப்பன்றியின் பரிமாணம் ஒரு கட்டை விரலின் மேற்பகுதியினைக் காட்டிலும் மிகச் சிறியதாகும்.

பதம் 3.13.19 : ஓ, பாரதகுலத் தோன்றலே, பிரம்ம தேவர் பகவானைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அப்பன்றி வானையடைந்து ஒரு பெரிய யானையினைப் போல் மிகப் பெரிய அற்புதமான உருவமாக மாறியது.

பதம் 3.13.20 : வானில் பன்றியினைப் போல் தோன்றிய அற்புத உருவினைக் கண்ட பிரம்ம தேவர், மரீசியின் தலைமைக்கு உட்பட்ட கீழுள்ள அந்தணர்கள், குமாரர்கள் மற்றும் மனு போன்றோர் தங்களுக்குள் பல்வேறு விதமாக விவாதிக்கத் தொடங்கினர்.

பதம் 3.13.21 : அசாதாரணமான ஓர் உயிர், பன்றியாக பொய்த்தோற்றம் கொண்டு வந்துள்ளதோ? இது எனது நாசியிலிருந்து வெளியே வந்தது மிகவும் ஆச்சரியகரமானதாகும்.

பதம் 3.13.22 : முதன்முதலில் இப்பன்றி கட்டை விரலின் நுனியாகவே தோன்றியது. கணப்பொழுதில் அது ஒரு பெரிய பாறாங்கல் அளவிற்கு மாறிவிட்டது. எனது மனம் மிகுந்த குழப்பமுறுகிறது. இவர் முழுமுதற் கடவுளான விஷ்ணுவாக இருப்பாரோ?

பதம் 3.13.23 : பிரம்மதேவர் இவ்வாறு தன் புதல்வர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தபொழுது முழுமுதற் கடவுளான விஷ்ணு ஒரு பெரிய மலை சப்தித்தாற் போன்று ஒலி செய்தார்.

பதம் 3.13.24 : சர்வ வல்லமையுள்ள முழுமுதற் கடவுள், பிரம்ம தேவரையும், உயர்நிலை பெற்ற அந்தணர்களையும் புத்துணர்ச்சி பெறச் செய்யும் வண்ணம் மீண்டும் தமது அசாதாரணமான பலத்த குரலில் கர்ஜித்தார். அவ்வொலி எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தது.

பதம் 3.13.25 : ஜனலோகம், தபலோகம், சத்தியலோகம் போன்றவற்றில் வாழும் மாமுனிவர்களும், மகான்களும், கருணை நிறைந்த பகவான் வராஹரின் மங்களம் ஆரவார ஒலியினைக் கேட்டு மூன்று வேதங்களில் இருந்து மங்களகரமான மந்திரங்களை ஓதினர்.

பதம் 3.13.26 : கஜேந்திரன் என்னும் யானையினைப் போல், அவர் தமது சிறந்த பக்தர்களின் வேத மந்திர வழிபாட்டுக்குப் பதில் கூறுவது போல் மீண்டும் கர்ஜனை செய்து நீரினுள் இறங்கினார். வேத மந்திரங்கள் துதிக்கும் பொருளாக இருப்பவர் பகவானே ஆவார். அதனால் தனது பக்தர்களின் பிரார்த்தனைகள் தனக்கானவையே என்பதை அவர் நன்கறிந்திருந்தார்.

பதம் 3.13.27 : பூமியை மீட்பதற்காக நீரினுள் புகுவதற்கு முன்னால் பகவான் வராஹர் வானில் வாலை வேகமாகச் சுழற்றியபடி பறந்தார். அவரது அடர்ந்த உரோமங்கள் அலை பாய்ந்தன. அவரது பார்வை ஒளி வீசியது. மின்னுகின்ற தந்தங்களினாலும், காலடிக் குளம்புகளினாலும் அவர் வானிலுள்ள மேகங்களைச் சிதறடித்தார்.

பதம் 3.13.28 : தனிப்பட்ட முறையில் அவர் பரமபுருஷ பகவானான விஷ்ணுவே ஆதலினால் அவர் உன்னதமானவரே. ஆனால், அவர் பன்றி வடிவம் எடுத்திருந்ததினால் பூமியினைத் தனது மோப்பத்தினால் தேடினார். அவரது தந்தங்கள் இரண்டும் கூர்மையாகவும் அச்சந்தரும் வகையிலும் இருந்தன. அவரது பார்வை தன்னைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த அந்தணப் பக்தர்களின் மேல் சென்றது. அதன்பின் அவர் நீரினுள் புகுந்தார்.

பதம் 3.13.29 : மாமலையொன்று நீரினுள் விழுந்தாற்போல் பகவான் வராஹர் நீரினுள் புகுந்தவுடன் அவரது வேகத்தைத் தாங்க மாட்டாது கடல் இரண்டாகப் பிளந்தது. அப்பொழுது பெரிய அலைக்கரங்கள் இரண்டு அக்கடலில் தோன்றி பகவானைப் பிரார்த்திப்பது போன்று “ஓ, வேள்விகளின் நாயகனே, என்னை இரண்டாகத் துண்டித்து விடாதீர், அன்புடன் என்னைக் காத்தருள்வீராக” என்று கதறியது.

பதம் 3.13.30 : பகவான் வராஹர் அம்புபோல் கூர்மையாக இருந்த தனது காலடிக் குளம்புகளினால் அக்கடலைக் கிழித்துச் சென்று ஆழங்காணவே முடியாத அதன் ஆழத்தைச் சென்றடைந்தார். அடியில் உயிர்களின் உறைவிடமான பூமி அன்றுதான் படைக்கப் பட்டது போல் அப்படியே இருந்தது. அவர் அதனைத் தானேத் தூக்கினார்.

பதம் 3.13.31 : பகவான் வராஹர் மிக எளிதாகப் பூமியினைத் தனது தந்தங்களினால் தூக்கிக் கொண்டு நீரினின்று மேலே வந்தார். இவ்வாறு அவரது தோற்றம் ஒளிமிக்கதாக விளங்கியது. சுதர்ஸனச் சக்கரத்தினைப் போல் அவரது சினம் பொங்கியெழுந்தது. அவர் தன்னுடன் யுத்தத்திற்கு வந்த அசுரனை (இரண்யாக்ஷன்) உடனே கொன்றார்.

பதம் 3.13.32 : சிங்கம் ஒன்று யானையினைக் கொன்றது போல் பகவான் வராஹர் நீரினுள் வைத்தே அவ்வசுரனைக் கொன்றார். அவரது நாவிலும், கன்னங்களிலும் இரத்தக் கறை படிந்திருந்தன. அவரது இக்கோலம் செம்மண் நிலத்தினைத் தோண்டிய யானை சிவந்து காணப்படுவது போல் இருந்தது.

பதம் 3.13.33 : ஒரு யானையினைப் போல் கம்பீரமாக விளையாடிய பகவான் தனது இரு வளைந்த தந்தங்களின் நுனியில் பூமிப் பந்தை நிறுத்தினார். அவரது உடல் வண்ணம் தமால மரத்தினைப் போல் நீல நிறமாகத் தோன்றியதிலிருந்து இவரே முழுமுதற் கடவுள் என்பதை நன்கறிந்து கொண்ட பிரம்ம தேவர் உள்ளிட்ட தேவர்கள் அவரை இருகரம் கூப்பி வேத மந்திரங்களினால் துதித்தனர்.

பதம் 3.13.34 : எல்லா முனிவர்களும் மிகுந்த மரியாதையுடன் துதித்தனர்: ஓ. வெற்றி கொள்ள முடியாதவரே, வேள்விகளின் நாயகனே; அனைத்து வெற்றியும் அனைத்துப் புகழும் உமக்கே ஆகுக! வேதங்களின் வடிவம் நீரே! உமது மயிர்க்கால்களின் அடியிலேயே அனைத்துக் கடல்களும் சங்கமிக்கின்றன; ஒரு குறிப்பிட்டக் காரணத்திற்காக (பூமியைக் காப்பதற்காக) நீர் இப்பொழுது வராஹ அவதாரம் எடுத்திருக்கின்றீர்.

பதம் 3.13.35 : ஒ, பகவானே, வேள்விகளைச் செய்வதின் மூலம் உமது வடிவம் வழிபடப்படுகிறது, ஆயினும் துராத்மாக்களினால் அதனைக் காண முடியாது. அனைத்து வேத மந்திரங்களும் காயத்ரி மந்திரம் போன்றவையும் உமது தோலின் தொடர்பினாலானவையே. உமது உடலிலுள்ள உரோமங்கள் தர்ப்பைப் புற்களாகும். உமது விழிகளோ தூய வெண்ணெயினைப் போலிருக்கும். உமது நான்கு பாதங்களும் நான்கு வகையானப் பலன்தரும் செயல்களாகும்.

பதம் 3.13.36 : ஒ, பகவானே, உமது நாக்கு வேள்வியின் ஹோமபாத்திரமாகும். உமது நாசித்துளைகளோ வேள்வியின் மற்றொரு பாத்திரமாகும். உமது வயிறோ வேள்வியின் உண்ணும் பாத்திரமாகும். வேள்வியின் மற்றொரு பாத்திரம் உமது செவித் துளைகள் ஆகும். உமது வாயினுள் பிரம்ம தேவரின் வேள்விப் பாத்திரம் இருக்கிறது. உமது தொண்டைக் குழலோ சோமம் என்றறியப்படும் வேள்விப் பாத்திரமாகும். மேலும் எதையெல்லாம் நீர் மெல்லுகிறீரோ அது அக்னி – ஹோத்ரமாகும்.

பதம் 3.13.37 : மேலும், ஒ, பகவானே, மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும் உமது தோற்றமானது பல்வேறு தீட்சைகளின் விருப்பத்திற்கானதேயாகும். உமது கழுத்தோ மூன்று விருப்பங்களின் இடமாக உள்ளது. உமது தந்தங்களோ தீட்சையின் பயனாகவும் அனைத்து ஆசைகளின் முடிவாகவும் இருக்கின்றன. உமது நாவோ தீட்சைகளின் முன்னைய வினைகளாகும். உமது சிரமோ வேள்வியில்லாத நெருப்பாகவும், வழிபாட்டு நெருப்பாகவும் விளங்குகிறது. உமது உயிர்ச் சக்திகளோ அனைத்து ஆசைகளின் ஒருங்கிணைப்பாக இருக்கின்றன.

பதம் 3.13.38 : பகவானே உமது சுக்கிலம் சோம யக்ஞம் என்று அழைக்கப்படுகிறது. உமது வளர்ச்சி அதிகாலையில் செய்யப்படும் சமயச் சடங்குகளாகும். உமது தோலும் தொடு உணர்ச்சிகளும் அக்கினிஷ்டோம வேள்வியின் ஏழு பொருட்களாகும். உமது உடல் இணைப்புக்கள் எல்லாம் பன்னிரெண்டு நாட்களில் செய்யப்படும் பல்வேறு வேள்விகளின் அடையாளங்களாகும். ஆகையினால் நீரே சோம, அசோம போன்ற அனைத்து வேள்விகளுக்கும் உட்பொருளாக விளங்குகிறீர். மேலும் நீர் வேள்விகளினால் மட்டுமே கட்டப்படக் கூடியவரும் ஆவீர்.

பதம் 3.13.39 : ஓ, பகவானே, நீரே முழுமுதற் கடவுள்; பிரபஞ்சப் பிரார்த்தனைகளினாலும், வேத மந்திரங்களினாலும், வேள்விப் பொருட்களினாலும் வணங்கப்படுகிறீர். உமக்கு எமது வந்தனங்கள். கண்ணுக்குப் புலனாகின்ற மற்றும் புலனாகாத அனைத்துப் பௌதிக மாசுக்களில் இருந்தும் விடுதலை பெற்றத் தூய மனதினாலேயே உம்மை உணர முடியும். பக்தித் தொண்டில் ஞானத்தின் பரம ஆன்மீக குருவாக விளங்கும் உமக்கு எனது வந்தனங்கள் உரியதாகுக.

பதம் 3.13.40 : ஒ, பூமியைத் தூக்கி நிறுத்தியவரே, மலைகளுடன் கூடிய இப்பூமியினை உமது தந்தங்களினால் நீர் தூக்கிய காட்சியானது இலைகளுடன் கூடிய தாமரை மலரினை மதம் கொண்ட யானையானது தனது துதிக்கையினால் தூக்கிக் கொண்டு நீரிலிருந்து வெளி வருவதைப் போலிருந்தது.

பதம் 3.13.41 : ஒ, பகவானே, பெரிய மலைகளின் உச்சிச் சிகரங்கள் மேகங்களினால் அணி செய்யப்படும்பொழுது அழகு பெறுகின்றன. உமது உன்னத உடலும் எழில் மிக்கதாக விளங்குகிறது. ஏனெனில் உமது தந்தங்களினால் நீவிர் பூமியைத் தூக்கி அவற்றின் நுனியில் அதனை நிறுத்தியிருப்பதினாலேயாம்.

பதம் 3.13.42 : ஓ, பகவானே, அசைகின்ற, அசையாத அனைத்து உயிர்களுக்கும் உறைவிடமாகத் திகழும் இப்பூமியானது அன்னையென்றால், நீரே பரம தந்தையாக விளங்குகிறீர். அன்னை பூமியுடன் சேர்ந்த நாங்கள் எங்கள் மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்குச் செலுத்துகிறோம். அரணிக் கட்டையில் ஒரு தேர்ந்த வேள்விக்காரன் நெருப்பினை இணைத்திருப்பது போல் நீர் அன்னை பூமியினிடத்தில் உமது சுயச் சக்தியினை இணைத்திருக்கிறீர்.

பதம் 3.13.43 : முழுமுதற் கடவுளான உம்மைத் தவிர வேறு யார் நீரினுள்ளிருந்த பூமியை மீட்டிருக்கக் கூடும்? இது ஒன்றும் உமக்கு அதிசயமானதல்ல. ஏனென்றால் பிரபஞ்சப் படைப்பிலேயே நீர் மிகவும் வியத்தகு செயல்புரிந்தவர் ஆவீர். உமது சக்தியினாலேயே நீர் இவ்வற்புதமானப் பிரபஞ்சத்தினைப் படைத்திருக்கிறீர்.

பதம் 3.13.44 : ஓ, பரமபுருஷ பகவானே, ஐயத்திற்கிடமின்றி நாங்கள் அனைவரும் ஜனலோகம், தபலோகம் மற்றும் சத்திய லோகம் என்னும் புண்ணிய லோகங்களைச் சேர்ந்தவர்களாயினும் உமது தோள்களின் மீது தொங்கும் மயிர்க்குழல்களின் நுனியில் மின்னும் நீர் முத்துக்கள், நீர் உமது தோள்களைக் குலுக்குவதினால் எங்கள் மீது தெறித்து எங்களைப் புனிதப்படுத்துகின்றன.

பதம் 3.13.45 : ஓ, பகவானே, உமது அற்புதச்செயல்களுக்கோர் எல்லை என்பது எந்தக் காலத்திலும் இல்லை. அப்படி யாரேனும் அவ்வெல்லையினைக் காண விரும்பினால் அவன் நிச்சயம் மதியிலியே ஆவான். இவ்வுலகிலுள்ள அனைவரும் சக்தி வாய்ந்த மாயையினால் கட்டப்பட்டிருக்கின்றனர். உமது அளவற்றக் கருணையினை இப்பந்தப்பட்ட ஆத்மாக்களிடத்து அருள் கூர்ந்து அளிக்க வேண்டும்.

பதம் 3.13.46 : மாமுனிவர் மைத்ரேயர் கூறினார்: பகவான் இவ்வாறு மாமுனிவர்கள் மற்றும் ஞானிகளினால் துதிக்கப்பட்ட பின்னர் பூமியைத் தனது காலடிக் குளம்புகளினால் தொட்டு நீரின் மேல் இட்டார்.

பதம் 3.13.47 : இவ்வாறாக உயிர்களை காப்பவரும் முழுமுதற் கடவுளுமான பகவான் விஷ்ணு நீரினுள் கிடந்த பூமியினை எடுத்து வந்து மீண்டும் நீரின் மேல் அதனை மிதக்கும்படி விட்டு விட்டு தனது இருப்பிடம் சென்றார்.

பதம் 3.13.48 : மதிப்பு மிக்க இம்மகாக் கதையினை, பகவான் வராஹரைப் பற்றிய மங்களகரமான இந்த உயர் சரிதத்தினை பக்தித் தொண்டின் உணர்வோடு எடுத்துக் கூறினாலும், கூறக் கேட்டாலும் அனைவரின் உள்ளங்களிலும் வீற்றிருக்கும் பகவான் அதனால் மிக்க மகிழ்ச்சியடைவார்.

பதம் 3.13.49 : முழுமுதற் கடவுள் யாதேனும் தனிப்பட்ட ஒருவனிடத்து மகிழ்ச்சியடைந்தாரென்றால், அவன் அடைய முடியாததென்பது எதுவுமே இல்லை. உன்னதமான பேறு பெறுவதினால் ஒருவன் மற்றவை எல்லாம் முக்கியமற்றன என்பதை உணர்ந்து கொள்கிறான். உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுவதின் மூலம் ஒருவன் அனைவரது உள்ளங்களிலும் வீற்றிருக்கும் பகவான் அருளினால் உயர்ந்த நிறைவான நிலையை எய்துகிறான்.

பதம் 3.13.50 : மனிதனைத் தவிர வேறு யார் இவ்வுலகில் வாழ்ந்தாலும், தனது வாழ்வின் இறுதி இலட்சியத்தில் விருப்பமின்றியா இருப்பான்? ஒருவனை உலகியல் துன்பங்களில் இருந்து விடுதலையளிக்கும் முழுமுதற் கடவுளின் செயல்களைப் பற்றி விவரிக்கும் அவரது அமிர்தம் போன்ற சரிதத்தினை பருகுவதற்கு யாரே மறுத்தல் கூடும்?

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare