அத்தியாயம் – 7
விதுரரின் தொடர்ந்த விசாரணைகள்
பதம் 3.7.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, மாமுனிவரான மைத்ரேயர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்பொழுது, துவைபாயனரின் கற்றறிந்த புதல்வரான விதுரர், இக்கேள்வியைக் கேட்பதன் மூலமாக இனிமையான முறையில் ஒரு விண்ணப்பத்தை வெளியிட்டார்.

பதம் 3.7.2 : ஸ்ரீவிதுரர் கூறினார்: சிறந்த பிராமணரே, பரமபுருஷர், பரம ஆன்மீக முழுமையாகவும், மாற்றமற்றவராகவும் இருப்பதால், ஜடஇயற்கைக் குணங்களுடனும், அவற்றின் செயல்களுடனும் அவர் எப்படி தொடர்பு கொண்டிருக்கிறார்? இது அவருடைய லீலை என்றால் மாற்றமற்றவரான அவரது செயல்கள் எப்படி இயற்கைக் குணங்களின் கலப்படமில்லாமல் வெளிப்படுகின்றன?

பதம் 3.7.3 : சிறுவர்கள் மற்ற சிறுவர்களுடன் விளையாடுவதிலும், பலவித பொழுது போக்குகளில் ஈடுபடுவதிலும் உற்சாகம் கொண்டுள்ளனர். ஆசையால் அவர்கள் தூண்டப்படுவதுதான் இதற்குக்காரணம். ஆனால் பகவானுக்கு இத்தகைய ஆசை உண்டாவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், எப்பொழுதும் அவர் சுயதிருப்தியுடையவராகவும், அனைத்திலும் பற்றற்றவராகவும் இருக்கிறார்.

பதம் 3.7.4 : மூன்று ஜட இயற்கைக் குணங்களைக் கொண்டு, பகவான் இப்பிரபஞ்ச சிருஷ்டியை ஏற்படுத்தியுள்ளார். அக்குணங்களினால் அவர் சிருஷ்டியைப் பராமரித்து, பிறகு மீண்டும் மீண்டும் அதை அழிக்கிறார்.

பதம் 3.7.5 : தூய ஆத்மா தூய உணர்வாவான். அவன் சூழ்நிலைகளாலோ, காலத்தாலோ, சந்தர்ப்பங்களாலோ, கனவுகளாலோ அல்லது மற்ற காரணங்களாலோ தன் உணர்வை இழப்பதே இல்லை. அப்படியானால் அவன் எப்படி அறியாமையில் ஈடுபட்டான்?

பதம் 3.7.6 : பகவான் பரமாத்மாவாக ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறார். பிறகு ஏன் ஜீவராசியின் செயல்கள் துரதிர்ஷ்டத்திலும், துன்பத்திலும் முடிவுறுகின்றன?

பதம் 3.7.7 : பண்டித சிரேஷ்டரே, இந்த அறியாமையினால் சங்கடத்தினால் என் புத்தி மிகவும் பேதலித்துப்போய் இருக்கிறது. எனவே அதைத் தெளிவுபடுத்தும்படி நான் வேண்டுகிறேன்.

பதம் 3.7.8 : ஸ்ரீசுகதேவகோஸ்வாமி கூறினார்: அரசே, விதுரரின் கேள்வியால் இவ்வாறு திகைப்படைந்தது போல் முதலில் காணப்பட்ட மைத்ரேயர், முழுமையான இறையுணர்வுபெற்றவர் என்பதால், பிறகு தயக்கமில்லாமல் பதிலளித்தார்.

பதம் 3.7.9 : ஸ்ரீமைத்ரேயர் கூறினார்:பரப்பிரம்மன், அல்லது பரமபுருஷர் மாயையினால் கவரப்பட்டவராகவும், அதேசமயம் பந்தப்படாதவராகவும் இருக்கிறார் என்ற கோட்பாட்டை சில பந்தப்பட்ட ஆத்மாக்கள் முன்வைக்கின்றனர். இது நியாயவாதத்திற்கு முற்றிலும் எதிரானதாகும்.

பதம் 3.7.10 : தனது சுய அடையாளத்தைக் குறித்து ஜீவராசி துக்கப்படுகிறான். தன் தலை துண்டிக்கப்பட்டதாகக் கனவு காணும் ஒரு மனிதனைப் போல், அவனுக்குத் தன் உண்மையான நிலை புலப்படவில்லை.

பதம் 3.7.11 : நீரில் பிரதிபலிக்கும் சந்திரன், நீரின் தன்மையுடன் உறவு கொண்டதால், பார்ப்பவருக்கு நடுங்குவது போல் காணப்படுகிறது. அதுபோலவே ஜடத்துடன் தொடர்பு கொண்ட ஆத்மாவும் ஜடத்தின் தன்மையைக் கொண்டிருப்பதாகக் காணப்படுகிறது.

பதம் 3.7.12 : ஆனால் பரமபுருஷரான வாசுதேவனின் கருணையால், பற்றில்லாமல் பகவானுக்கு பக்தித் தொண்டைச் செய்யும் முறையின்மூலம், சுயசொரூபத்தைப் பற்றிய அந்த தப்பபிப்பிராயத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ளமுடியும்.

பதம் 3.7.13 : பரமாத்மாவான பரமபுருஷரில் புலன்கள் திருப்தியடைந்து, அவருடன் கலந்துவிடும்பொழுது, ஆழ்ந்த உறக்கத்திற்குப்பின் கிடைக்கும் திருப்தியைப் போல், எல்லாத் துன்பங்களும் முற்றிலும் அழிந்துவிடுகின்றன.

பதம் 3.7.14 : பரமபுருஷரான ஸ்ரீகிருஷ்ணரின் உன்னதமான நாமம், உருவம் முதலியவைகளைப் பற்றி கேட்பதாலும், பாடுவதாலுமே, எல்லையற்ற துன்பச் சூழ்நிலைகளை ஒருவரால் களைந்துவிடமுடியும். எனவே பகவானின் தாமரைப் பாதங்களுடைய புழுதியின் நறுமணச்சுவையால் கவரப்பட்டுள்ளவர்களைப் பற்றி என்னென்று சொல்வது?

பதம் 3.7.15 : விதுரர் கூறினார்: சக்தி வாய்ந்த முனிவரே, தலைவரே, பரமபுருஷரையும், ஜீவராசிகளையும் பற்றிய என்னுடைய எல்லாச் சந்தேகங்களும் தங்களுடைய நம்பகமான வார்த்தைகளால் இப்பொழுது தீர்ந்தன. என் மனம் இப்பொழுது பூரணமாக அவற்றினுள் ஆழ்ந்து கொண்டிருக்கிறது.

பதம் 3.7.16 : கற்றறிந்த முனிவரே, உங்களுடைய விளக்கங்கள் உள்ளபடி மிகவும் சிறப்பாக உள்ளன. பந்தப்பட்ட ஆத்மாவின் தொல்லைகளுக்கு பகவானின் புறச்சக்தியின் அசைவைத்தவிர வேறு காரணமில்லை.

பதம் 3.7.17 : கடைத்தரமான மூடர்கள் மற்றும் புத்திக்கு மேற்பட்ட நிலையில் உள்ளவர்கள் ஆகிய இருவருமே இன்பம் அனுபவிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இடைப்பட்டவர்கள் பௌதிகத் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

பதம் 3.7.18 : ஆனால், அன்பிற்குரியவரே, பௌதிகத் தோற்றம் உண்மையானதாகக் காணப்பட்டபோதிலும், அதில் சாராம்சம் இல்லை என்பதை என்னால் இப்பொழுது புரிந்து கொள்ள முடிகிறது என்பதால், தங்களுக்கு நான் கடமைப் பட்டவனாக இருக்கிறேன். தங்களுடைய பாதங்களுக்குத் தொண்டு செய்வதனால், எனது பொய்யான கருத்தை விட்டொழிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

பதம் 3.7.19 : ஆன்மீக குருவின் பாதங்களுக்குத் தொண்டு செய்வதன் மூலமாக, மது என்ற அரக்கனின் மாற்றமற்ற எதிரியும், தமக்கு செய்யப்படும் சேவையின் காரணத்தால், பௌதிகத் துன்பங்களை அழித்து விடுபவருமான அப்பரமபுருஷரின் தொண்டில், உன்னத பரவசத்தை ஒருவரால் வளர்த்துக் கொள்ள முடியும்.

பதம் 3.7.20 : மிகக் குறைந்த தவம் செய்தவர்களால், பகவானின் இராஜ்யமான வைகுண்ட லோகங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் தூய பக்தர்களின் தொண்டைப் பெறுவது மிகக் கடினம். தேவர்களின் இறைவனும், ஜீவராசிகளை ஆள்பவருமான பரமபுருஷரைப் போற்றிப் புகழ்வதில் தூயபக்தர்கள் நூறு சதவீதம் ஈடுபடுகின்றனர்.

பதம் 3.7.21 : மொத்த பௌதிக சக்தியான மஹத்-தத்வத்தைப் படைத்து, புலன்களையும், புலனுறுப்புக்களையும் கொண்ட பிரம்மாண்டமான பிரபஞ்சரூபத்தையும் படைத்த பிறகு, பரமபுருஷர் அதற்குள் பிரவேசித்தார்.

பதம் 3.7.22 : காரணக்கடலில் பள்ளி கொண்டுள்ள புருஷ அவதாரம், பௌதிக சிருஷ்டிகளிலுள்ள ஆதி புருஷர் என்று அழைக்கப்படுகிறார். யாருக்குள் எல்லாக்கிரகங்களும், அவற்றின் வாசிகளும் வாழ்கின்றனவோ, அந்த விராட்-ரூபத்தில், பகவானுக்குப் பல ஆயிரக்கணக்கான கால்களும், கரங்களும் உள்ளன.

பதம் 3.7.23 : சிறந்த பிராமணரே, பகவானின் விராட்-ரூபமும் புலன்களும், புலன் பொருட்களும் மேலும் பத்து வகையான உயிர்க் காற்றுகளும், மூவகையான உயிர்ச் சக்திகளுடன் இருக்கின்றன என்று தாங்கள் கூறினீர்கள். இப்பொழுது நீங்கள் விரும்பினால், குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த வெவ்வேறு சக்திகளைப் பற்றி விளக்கியருளுங்கள்.

பதம் 3.7.24 : பிரபுவே, மகன்கள், பேரன்கள் மற்றும் குடும்ப அங்கத்தினர்களின் உருவங்களில் தோன்றியுள்ள சக்தி, பல வகையான உயிரினங்களுக்கிடையில் பிரபஞ்சம் முழுவதிலும் பரவியுள்ளதென்று நான் நினைக்கிறேன்.

பதம் 3.7.25 : கற்றறிந்த பிராமணரே, தேவர்களின் தலைவரும், பிரஜாபதியுமான பிரம்மா எப்படி யுகங்களின் தலைவர்களான பல்வேறு மனுக்களை ஏற்படுத்த முடிவு செய்தார் என்பதை தயவு செய்து விவரிக்க வேண்டுகிறேன். மனுக்களையும், அவர்களுடைய வம்சத்தையும் கூட விளக்கியருள வேண்டுகிறேன்.

பதம் 3.7.26 : மித்திரரின் புதல்வரே,பூமிக்கு மேலும், கீழும் உள்ள கிரகங்கள் எப்படி அமைந்துள்ளன என்பதையும், அவற்றின் அளவையும், மற்றும் மண்ணுலகங்களின் அளவையும் கூட அன்புடன் விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 3.7.27 : மேலும், கீழ்ப்பட்ட மனித இனம், மனிதர்கள், கருவிலிருந்து பிறப்பவை, வியர்வையிலிருந்து பிறப்பவை, இருமுறை பிறப்பவை (பறவைகள்) மற்றும் தாவரங்கள் மற்றும் காய்கறிகள் என வெவ்வேறு பிரிவுகளிலுள்ள ஜீவராசிகளைப் பற்றியும், அவற்றின் உற்பத்திகளையும், உபபிரிவுகளையும் கூட அன்புடன் விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 3.7.28 : ஜட இயற்கைக் குணங்களின் அவதாரங்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் ஆகியோரைப் பற்றியும், பரமபுருஷரின் அவதாரங்களைப் பற்றியும் அவரது பெருந்தன்மையான செயல்களைப் பற்றியும் கூட தயவு செய்து விளக்கியருளுங்கள்.

பதம் 3.7.29 : மாமுனிவரே, மனித சமூகத்தின் சமூக மற்றும் ஆன்மீகப் பிரிவுகளை, அவற்றின் அறிகுறிகள் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றிற் கேற்பவும், சமமான மனநிலை மற்றும் புலனடக்கம் ஆகியவற்றின் தனிப்பட்ட குணங்களுக்கேற்பவும் விவரிக்க வேண்டுகிறேன். மேலும் சிறந்த முனிவர்களின் பிறப்புகளையும், வேதங்களின் பிரிவுகளையும் கூட தயவுகூர்ந்து விளக்கியருளுங்கள்.

பதம் 3.7.30 : வெவ்வேறு யாகங்கள், யோக மார்க்கங்கள், பகுத்தறிவுக் கல்வி மற்றும் பக்தித் தொண்டு ஆகியவற்றின் விரிவுகளையும் கூட, அவற்றின் கட்டுப்பாட்டு விதிகளுடன் விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 3.7.31 : நாஸ்திகர்களின் குறைகள் மற்றும் முரண்பாடுகள், இனக்கலப்பின் நிலை, மேலும் பல்வேறு உயிரினங்களிலுள்ள ஜீவராசிகளின் குறிப்பிட்ட இயற்கைக் குணங்கள் மற்றும் செயல் ஆகியவற்றிற்கேற்ப உள்ள அவற்றின் அசைவுகள் ஆகியவற்றையும் கூட தயவு செய்து விளக்கியருளுங்கள்.

பதம் 3.7.32 : மத அனுஷ்டானம், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு மற்றும் மோட்சம் ஆகியவற்றைப் பற்றியும், வெவ்வேறு ஜீவனோபாய மார்க்கங்களையும், மற்றும் வெவ்வேறு நீதி, நெறிகளையும் கூட வேத நூல்களில் கூறப்பட்டுள்ள தற்கேற்ப விவரிக்க வேண்டும்.

பதம் 3.7.33 : முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்குரிய விதி முறைகளையும், பித்ருலோக சிருஷ்டியையும், கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் ஒளிரும் பொருட்களிலுள்ள கால அட்டவணையையும், அவற்றின் சூழ்நிலைகளைப் பற்றியும் கூட தயவு செய்து விளக்கியருளுங்கள்.

பதம் 3.7.34 : தானம், தவம் மற்றும் நீர்த்தேக்கங்கள் தோண்டுதல் ஆகியவற்றின் பலன்களையும் விளக்குங்கள். மேலும் வீட்டை விட்டுப் பிரிந்து சென்றவர்களின் நிலையையும், ஆபத்தான நிலையிலுள்ள ஒரு மனிதனின் கடமையையும் கூட தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.

பதம் 3.7.35 : பாவமற்றவரே, அனைத்து ஜீவராசிகளையும் ஆள்பவரான பரம புருஷர், எல்லா மதங்களுக்கும், மதக் கடமைகளில் ஈடுபடும் எல்லா மாணவர்களுக்கும் தந்தையென்பதால், அவரை முழுமையாக திருப்திப்படுத்தும் வழியை தயவு செய்து விளக்க வேண்டும்.

பதம் 3.7.36 : பிராமண சிரேஷ்டரே, ஆன்மீக குருமார்களாக இருப்பவர்கள் வறியவர்களிடம் மிகவும் அன்புடையவர்களாக உள்ளனர். அவர்கள் தங்களுடைய ஆதரவாளர்களாலும், சீடர்களாலும் மற்றும் மகன்களாலும் கேட்கப்படாமலேயே அவர்களிடம் எப்பொழுதும் அன்பு கொண்டுள்ளனர். மேலும் அறிவு எனப்படும் அனைத்தையும் அவர்கள் விவரிக்கின்றனர்.

பதம் 3.7.37 : ஜட இயற்கையின் மூலப்பொருட்களுக்கு எத்தனை அழிவுகள் உள்ளன என்பதையும், அழிவுக்குப் பிறகு, உறங்கும் பகவானுக்குத் தொண்டு செய்ய பிழைத்திருப்பவர் யார் என்பதையும் தயவு கூர்ந்து விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 3.7.38 : ஜீவராசிகளையும், பரம புருஷரையும் பற்றிய உண்மைகள் என்னென்ன? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்னென்ன? வேத ஞானத்தின் விசேஷ மதிப்பென்ன? மேலும் ஆன்மீக குருவிற்கும், அவரது சீடர்களுக்கும் என்ன அவசியம் உள்ளது.

பதம் 3.7.39 : இத்தகைய அறிவின் மூலத்தை களங்கமற்ற பகவத் பக்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இத்தகைய பக்தர்களின் உதவியின்றி, பக்தித் தொண்டு மற்றும் துறவு ஆகியவற்றின் அறிவை ஒருவரால் எப்படிப் பெற இயலும்?

பதம் 3.7.40 : அன்பிற்குரிய முனிவரே, பரம புருஷரான ஹரியின் லீலைகளை அறியும் நோக்கத்துடன் தான் இக்கேள்விகளை எல்லாம் தங்களிடம் நான் கேட்டேன். நீங்கள் அனைவருக்கும் நண்பரென்பதால், தங்களுடைய பார்வையை இழத்தவர்களுக்காக அவற்றை அன்புடன் விளக்கியருள வேண்டுகிறேன்.

பதம் 3.7.41 : களங்கமற்றவரே, இக்கேள்விகளுக்குத் தாங்கள் அளித்த பதில்கள் எல்லா பௌதிகத் துன்பங்களையும் தடுத்து விடும். இத்தகைய அறிவு தானமானது, வேத தானங்கள், யாகங்கள், தவங்கள் முதலான அனைத்தையும் விட உயர்ந்ததாகும்.

பதம் 3.7.42 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறக பரம புருஷரைப் பற்றிய விஷயங்களை விவரிப்பதில் எப்பொழுதும் உற்சாகம் கொள்பவரான முனி கிரேஷ்டர்,விதுரரால் ஊக்கமளிக்கப்பட்டு, புராணங்களிலுள்ள விவரமான வர்ணணைகளை கூறத் துவங்கினார். பகவானின் உன்னத செயல்களைப் பற்றி பேசியதால் அவர் மிகவும் உற்சாகமடைந்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare