அத்தியாயம் – 2
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நினைவு
பதம் 3.2.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: சிறந்த பக்தரான உத்தவர், பிரியமுள்ளவரைப் (ஸ்ரீ கிருஷ்ணரை) பற்றிய செய்தியைக் கூறும்படி விதுரரால் கேட்டுக்கொள்ளப்பட்ட பொழுது, பகவானை நினைத்ததனால் உண்டான பிரிவாற்றாமையால் உத்தவரால் உடனே பதில் கூற முடியவில்லை.

பதம் 3.2.2 : அவர் ஐந்து வயது நிரம்பிய பாலகனாக இருந்தபோதிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தொண்டில் மிகவும் ஆழ்ந்து விட்டவராக இருந்ததால், காலை உணவுக்கு அவரது தாயாரால் அழைக்கப்பட்டபொழுது அதை அவர் விரும்பவில்லை.

பதம் 3.2.3 : இவ்வாறாக உத்தவர் சிறு வயதிலிருந்தே பகவானுக்குத் தொடர்ந்து தொண்டு செய்து வந்தார். தொண்டு செய்யும் மனப்பான்மை முதுமையிலும் சிறிதும் தளரவில்லை. பகவானைப் பற்றிய செய்தி அவரிடம் கேட்கப்பட்ட உடனேயே அவரைப் பற்றிய அனைத்தையும் உடனே அவர் நினைவு கூர்ந்தார்.

பதம் 3.2.4 : ஒரு கணம் அவர் தேக அசைவின்றி மௌனமாக இருந்தார். பக்திப்பர வசத்தினால், பகவானின் தாமரைப் பாதங்களைச் சிந்திப்பதெனும் அமுதவெள்ளத்தில் அவர் ஆழ்ந்துவிட்டவரானார். மேலும் அந்நிலையில் அவர் இன்னும் ஆழ்ந்து செல்வது போல் காணப்பட்டார்.

பதம் 3.2.5 : பூரண பரவசத்தினால் உத்தவரின் உடலில் எல்லா உன்னத மாற்றங்களும் ஏற்பட்டு இருந்ததையும், பிரிவாற்றாமையால் அவரது கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணீரை அவர் துடைக்க முயன்றதையும் விதுரர் கண்டார். இவ்வாறாக பகவானின் ஆழ்ந்த அன்பில் உத்தவர் முற்றிலும் ஒன்றிப் போயிருந்ததை விதுரரால் புரிந்து கொள்ள முடிந்தது.

பதம் 3.2.6 : விரைவில் பகவானின் உலகிலிருந்து மனித உலகிற்குத் திரும்பி வந்த மிகச்சிறந்த பக்தரான உத்தவர், கண்களை துடைத்துக் கொண்டவுடன், பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி, விதுரரிடம் மகிழ்ச்சியாகப் பேசினார்.

பதம் 3.2.7 : ஸ்ரீ உத்தவர் கூறினார் விதுரரே, உலக சூரியனான கிருஷ்ணர் மறைந்து விட்டார். எங்கள் வீடு காலமெனும் மலைப்பாம்பால் விழுங்கப்பட்டு விட்டது. எங்கள் குலத்தவரின் நலத்தைப் பற்றி நான் என்ன சொல்லட்டும்.

பதம் 3.2.8 : பல கிரகங்களை உள்ளடக்கிய இப்பிரபஞ்சம் துர்பாக்கியமானது. அதிலும் யாதவர்கள் அதிக துர்பாக்கியசாலிகள். ஏனெனில் (நீரில் பிரதிபலிக்கும்) சந்திரனை மீன்கள் உணராமல், தங்களைப் போல் ஒரு ஜந்து என்று எண்ணுவதைப் போல், பகவான் ஹரியுடன் வாழ்ந்தும், அவர் பரம புருஷரென்பதை இவர்கள் அறியவில்லை.

பதம் 3.2.9 : யது வம்சத்தினர் அனுபவமுள்ள பக்தர்களாகவும், உடற்வற்று விஞ்ஞானத்தில் நிபுணர்களாகவும் இருந்தனர். இதற்கும் மேலாக, பகவானின் எல்லா வகையான பொழுது போக்குகளிலும் அவருடனேயே எப்பொழுதும் இருந்தனர். இருப்பினும், எல்லா இடங்களிலும் வாழும் ஒரே பரம்பொருளாக மட்டுமே அவரை அவர்களால் அறிய முடிந்தது.

பதம் 3.2.10 : பகவானின் மாயைச் சக்தியினால் குழப்பமடைந்துள்ளவர்களின் வார்த்தைகளால், பூரண சரணாகதியடைத்துள்ள ஆத்மாக்களின் புத்தியை எந்தச் சூழ்நிலையிலும் திசை திருப்ப முடியாது.

பதம் 3.2.11 : பொதுமக்களின் பார்வையின் முன் தமது நித்தியமான சுயரூபத்தைக் காட்டிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தேவையான தவத்தைச் செய்யாததால் தம்மை (உள்ளபடி) காண முடியாதவர்களின் பார்வையிலிருந்து தமது உருவத்தை மறைத்துக் கொண்டார்.

பதம் 3.2.12 : பகவான் தமது அந்தரங்கச் சக்தியான யோகமாயையினால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவர் தமது லீலைகளுக்குப் பொருத்தமான நித்திய ரூபத்துடன் வருகிறார். வைகுண்ட நாதராக தமது நித்திய ரூபத்திலுள்ள பகவான் உட்பட, தங்களுடைய சொந்த ஐசுவரியத்தில் செருக்குடையவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த லீலைகள் அற்புதமானவையாக இருந்தன. இவ்வாறாக, அவரது (ஸ்ரீ கிருஷ்ணரின்) உன்னதமான உடல் அணிகலன்களுக்கெல்லாம் அணிகலனாக விளங்குகிறது.

பதம் 3.2.13 : பிரபஞ்சத்தின் மேல், கீழ் மற்றும் மத்திய லோகங்களைச் சேர்ந்த எல்லா தேவர்களும், யுதிஷ்டிர மகாராஜனால் செய்யப்பட்ட ராஜஸூய யாக அரங்கில் கூடினர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அழகிய தேக அம்சங்களைக் கண்ட அவர்கள், மனிதர்களைப் படைத்தவரான பிரம்மாவின் சிருஷ்டியிலேயே ஸ்ரீகிருஷ்ணர் தான் மிகமிக சாமர்த்தியமாக படைக்கப்பட்டவர் என்ற ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டனர்.

பதம் 3.2.14 : விரஜ பூமியின் கன்னிப்பெண்கள் ஸ்ரீ கிருஷ்ணருடன் சிரித்தும், நகைச் சுவையாகப் பேசியும், பார்வைகளைப் பரிமாறியும் அவருடன் லீலைகளில் ஈடுபட்டிருந்தனர். பிறகு கிருஷ்ணர் அவர்களைவிட்டுச் சென்றதால் மனவருத்தம் அடைந்தனர். கண்களாலேயே அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவர்கள், மதி மயங்கி கீழே அமர்ந்து விட்டதால், குடும்பக் கடமைகளை அவர்களால் நிறைவேற்ற இயலவில்லை.

பதம் 3.2.15 : பரம கருணாமூர்த்தியும், ஜட ஆன்மீக உலகங்களை ஆள்பவருமான பரமபுருஷர், பிறப்பற்றவராவார். ஆனால் அமைதியே உருவான அவரது பக்தர்களுக்கும், பௌதிக இயற்கைக் குணங்களிலுள்ளவர்களுக்கும் இடையில் உராய்வு ஏற்படும்பொழுது, மஹத்-தத்வம் பின் தொடர, அவர் அக்னி போல் பிறவியெடுக்கிறார்.

பதம் 3.2.16 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பற்றவர் என்ற போதிலும், அவர் எப்படி வசுதேவரின் சிறைக்கூடத்தில் பிறந்தார் என்பதையும், அங்கு தமது தந்தையின் பாதுகாப்பைவிட்டு எப்படி பிருந்தாவனத்திற்குச் சென்று, எதிரியின் பயத்தினால் மாறுவேடத்தில் வாழ்ந்து வந்தார் என்பதையும், எல்லையற்ற சக்தியுடையவராக இருந்தும், எப்படி அச்சத்தால் மதுராபுரியிலிருந்து தப்பி ஒடினார் என்பதையும் நினைக்கும் பொழுது, குழப்பமான இச்சம்பவங்கள் எனக்குத் துயரத்தை விளைவிக்கின்றன.

பதம் 3.2.17 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கம்சனுக்கஞ்சி வீட்டைவிட்டு வெளியேறி இருந்ததால், தமது பெற்றோருக்கு தங்களால் (கிருஷ்ணர், பலராமர்) பாத சேவை செய்ய முடியாததற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். “அன்புள்ள தாயே, அன்புள்ள தந்தையே இந்த இயலாமைக்காக தயவு செய்து எங்களை மன்னித்துவிடுங்கள்” என்று அவர் கூறினார். பகவானின் இத்தகைய நடத்தைகள் எல்லாம் என் இதயத்திற்கு துன்பத்தைத் தருகின்றன.

பதம் 3.2.18 : அவரது தாமரைப் பாதங்களின் தூசியை ஒரு முறையேனும் முகர்ந்த பின், யாரால் அவரை மறக்க இயலும்? கிருஷ்ணர் தமது புருவங்களை உயர்த்தியதாலேயே, உலகிற்கு பாரமாக இருந்தவர்களுக்கு உயிரை போக்கவல்ல அடியைக் கொடுத்துள்ளார்.

பதம் 3.2.19 : சேதி ராஜன் (சிசுபாலன்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வெறுத்த போதிலும், யோகப் பயிற்சியில் அவனால் எப்படி வெற்றியடைய முடிந்தது என்பதை நீங்களே நேரில் கண்டிருக்கிறீர்கள். உண்மையான யோகிகளும் கூட தங்களுடைய அநேக பயிற்சிகளின் மூலமாக இத்தகைய வெற்றியை அடையப் பேரவா கொண்டுள்ளனர். அவரது பிரிவாற்றாமையை யாரால்தான் சகித்துக் கொள்ள இயலும்?

பதம் 3.2.20 : குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் கூடியிருந்த மற்ற வீரர்கள், அர்ஜுனனுடைய அம்புகளின் தாக்குதலால் தூய்மையடைந்து, கண்ணுக்கு இனிமையான கிருஷ்ணரின் தாமரை முகத்தை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே பகவானின் உலகை அடைந்தனர்.

பதம் 3.2.21 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லாவகையான மூன்றுகளுக்கும் பகவானும் எல்லாவகையான செல்வங்களையும் பெற்றிருந்ததால், பரம சுதந்திரமானவருமாவார். சிருஷ்டியின் லோக பாலகர்கள் தங்களுடைய கோடிக்கணக்கான கிரீடங்களுடன் அவரது பாதங்களில் பணிந்து அவரை ஆராதிக்கின்றனர்.

பதம் 3.2.22 : எனவே விதுரரே, அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்) அரியாசனத்தில்அமர்ந்திருந்த உக்ரசேன மகாராஜன் முன் நின்றுகொண்டு, “அரசே, இதைத் தங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்” என்று கூறி தாழ்மையுடன் தமது விளக்கத்தை அளிப்பது வழக்கம். எனவே விதுரரே, இதை நினைவு கூறும்பொழுது, அவரது தொண்டர்களான நமக்கு, இது துன்பத்தை அல்லவா தருகிறது!

பதம் 3.2.23 : அந்தோ- நேர்மையற்றவளான (பூதனை என்ற) அரக்கி, கொடிய விஷத்தை தயாரித்து அதைத் தன் ஸ்தனத்தில் தடவிக் கொண்டு, பகவானுக்குப் பாலுட்டமுயன்றாள். அவளுக்கும் தன் தாயின் அந்தஸ்தை அளித்த அவரைவிட அதிக கருணையுள்ளவரும், நான் புகலிடம் கொள்ளக்கூடியவருமான வேறொருவர் எப்படி இருக்கக்கூடும்?

பதம் 3.2.24 : பகவானிடம் விரோதம் கொண்டிருந்த அசுரர்கள், பக்தர்களை விட உயர்ந்தவர்களென நான் கருதுகிறேன். ஏனெனில், பகையுணர்ச்சியில் ஆழ்ந்து பகவானுடன் போரிடும்பொழுது, தார்ஷ்ய (கசியபர்) புத்திரரான கருடனின் தோள்களில் தூக்கிச் செல்லப்பட்டவரும், சக்கராயுதத்தை கரத்தில் ஏந்தியிருப்பவருமான பகவானை அவர்களால் காணமுடிந்தது.

பதம் 3.2.25 : பூமியின் நலனைக் குறித்து, பிரம்மாவால் பிரார்த்திக்கப்பட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், போஜராஜனின் சிறைக்கூடத்தில், தன் மனைவியான தேவகியின் கர்ப்பத்தில், வசுதேவரால் பெற்றெடுக்கப்பட்டார்.

பதம் 3.2.26 : அதன்பிறகு, கம்சனுக்கு அஞ்சிய அவரது தந்தை, அவரை நந்த மகாராஜனின் கோகுலத்திற்கு கொண்டு வந்தார். அங்கு அவர், தமது தமையனான பலதேவருடன், மறைந்திருக்கும் தீ போல் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.

பதம் 3.2.27 : சர்வ வல்லமையுடைய பகவான், அவரது பிள்ளைப் பருவத்தில் இடைச்சிறுவர்களாலும், கன்றுகளாலும் சூழப்பட்டிருந்தார். இவ்வாறாக மரங்களாலும், பறவைகளின் கீச்சிடும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டிருந்த அடர்ந்த தோட்டங்களைக் கொண்ட யமுனை நதிக்கரையில் அவர் பிரயாணம் செய்தார்.

பதம் 3.2.28 : குழந்தைப் பருவத்து லீலைகளை பகவான் பிருந்தாவன வாசிகளுக்கு மட்டுமே வெளிப்படுத்தினார். ஒரு குழந்தையைப் போல், சில சமயங்களில் அழுவது போலவும், சில சமயங்களில் சிரிப்பது போலவும் காணப்பட்டார். அப்படிச் செய்யும்பொழுது அவர் ஒரு சிங்கக்குட்டியைப்போல காணப்படுவார்.

பதம் 3.2.29 : எல்லா சௌகரியங்களுக்கும், செல்வங்களுக்கும் உறைவிடமான பகவான், மிகவும் அழகிய காளைகளை மேய்க்கும் பொழுது, தமது புல்லாங்குழலை வாசித்து, தம்மிடம் விசுவாசம் கொண்டிருந்த இடைச் சிறுவர்களை அவர் உற்சாகப்படுத்தினார்.

பதம் 3.2.30 : போஜராஜனான கம்சன், கிருஷ்ணரைக் கொல்வதற்காக, விரும்பிய ரூபத்தை ஏற்கவல்ல பெரும் சூனியகாரர்களை நியமித்தான். ஆனால் ஒரு குழந்தை பொம்மைகளை உடைத்து விடுவதைப் போலவே, பகவான் சுலபமாக அவர்களைக் கொன்றார்.

பதம் 3.2.31 : யமுனை நதியின் ஒரு பாகம், ஊர்வனவற்றின் தலைவனால் (காளியனால்) விஷப்படுத்தப்பட்டதால், பிருந்தாவன வாசிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர். பகவான் அந்த ஸர்ப்ப ராஜனை நீருக்கடியில் தண்டித்து, அவனை அங்கிருந்து விரட்டிவிட்டார். பிறகு நதிக்குள்ளிருந்து வெளியில் வந்த அவர், பசுக்களை அந்த நீரைக் குடிக்கச் செய்து, அந்த நீர் மீண்டும் அதன் இயல்பான நிலைக்கு வந்துவிட்டதென்பதை நிரூபித்தார்.

பதம் 3.2.32 : பரம புருஷராகிய கிருஷ்ணர் நந்த மகாராஜனின் செல்வச் சிறப்புடைய பொருளாதார பலத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு பசுக்களை வழிபட விரும்பினார். அதேசமயம் சுவர்க்க ராஜனான இந்திரனுக்கு ஒரு பாடம் கற்பிக்கவும் விரும்பினார். இவ்வாறாக பிராமண பண்டிதர்களின் உதவியுடன் பசுக்களையும், மேய்ப்பு நிலத்தையும் வழிபடும்படி தம் தந்தைக்கு அவர் அறிவுரை கூறினார்.

பதம் 3.2.33 : அமைதியான விதுரரே, மரியாதைக்கு இழுக்கு நேர்ந்ததால் தேவேந்திரன், பிருந்தாவனத்தில் இடைவிடாத மழைபொழியச் செய்தார். இதனால் பசுக்களின் பூமியான பிருந்தாவன வாசிகள் பெருந்துன்பத்திற்குள்ளாயினர். ஆனால் கருணையுள்ளம் படைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்தன மலையை குடையாகத் தூக்கி ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றினார்.

பதம் 3.2.34 : நிலவொளியால் பிரகாசப்படுத்தப்பட்டிருந்த, மூன்றாவது பருவமான இலையுதிர் காலத்தின் ஓரிரவில், தமது இனிய பாடல்களால் பெண்களின் மத்தியில் கவர்ச்சிப் பொருளாக இருந்து பகவான் இன்பம் அனுபவித்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare