அத்தியாயம் – 12
பரீட்சித்து மகாராஜனின் பிறப்பு
பதம் 1.12.1. : சௌகை முனிவர் கூறினார்: பரீட்சித்து மகாராஜனின் தாயான உத்தரையின் கர்ப்பப்பை, அஸ்வத்தாமனால் விடப்பட்ட பயங்கரமானதும், வெல்ல முடியாததுமான பிரம்மாஸ்திரந்தால் கெடுக்கப்பட்டது. ஆனால் பரீட்சித்து மஹாராஜன் பரம புருஷரால் காப்பாற்றப்பட்டார்.

பதம் 1.12.2 : மிகவும் நுண்ணறிவுள்ளவரும், மிகச்சிறந்த பக்தருமான பரீட்சித்து மகாராஜன் எப்படி அந்த கர்பப்பையில் பிறந்தார்? அவரது மரணம் எப்படி சம்பவித்தது? மேலும் மரணத்திற்குப்பின் அவர் என்ன கதியடைந்தார்?

பதம் 1.12.3 : யாருக்கு சுகதேவ கோஸ்வாமி உன்னத அறிவைப் புகட்டினாரோ அவரை (பரீட்சித்து மகாராஜன்) பற்றி பணிவுடன் கேட்டறிய நாங்கள் ஆனைவரும் விரும்புகிறோம். தயவுசெய்து இவ்விஷயத்தைப் பற்றி பேசுங்கள்.

பதம் 1.12.4 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: யுதிஷ்டிர மகாராஜன் அவரது ஆட்சிக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் செல்வங்களை தாராளமாக வழங்கினார். அவர் தமது தந்தையைப் போலவே இருந்தார். அவருக்கு சொந்த நோக்கங்கள் எதுவும் இருக்கவில்லை. மேலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தாமரைப் பாதங்களுக்கு அவர் செய்த இடைவிடாத தொண்டின் காரணத்தால், எல்லா வகையான புலன் நுகர்வுகளில் இருந்தும் அவர் விடுபட்டிருந்தார்.

பதம் 1.12.5 : யுதிஷ்டிர மகாராஜனின் பௌதிக உடமைகள், உயர்ந்த கதியை அடைவதற்குரிய யாகங்கள், அவரது ராணி, அவரது இடையறாதத் துணைவர்களாக இருந்த அவரது சகோதரர்கள், அவரது பரந்த நிலம், அவரது மண்ணுலக ஆட்சி மற்றும் அவரது புகழ் போன்றவைகளைப் பற்றிய செய்தி ஸ்வர்க லோகங்களுக்கும் எட்டியது.

பதம் 1.12.6 : பிராமணர்களே, அரசரின் செல்வம், ஸ்வர்கவாசிகளும் அடைய விரும்பும் அளவிற்கு அவ்வளவு வசீகர சக்தியைக் கொண்டிருந்தது. ஆனால் அவர் பகவானின் தொண்டில் ஆழ்ந்திருந்ததால், அதைத் தவிர வேறெதுவும் அவரை திருப்திப்படுத்துவதாக இல்லை.

பதம் 1.12.7 : பிருகு புத்திரரே (சௌனகர்), மாவீரரான குழந்தை பரீட்சித் அவரது தாயான உத்தராவின் கர்ப்பப்பைக்குள் இருந்தபொழுது, (அஸ்வத்தாமனால் விடப்பட்ட) பிரம்மாஸ்திரத்தின் தகிக்கும் வெப்பத்தினால் துன்பப்பட்டுக் கொண்டு இருந்த அவரால், பரம புருஷர் தன்னை நோக்கி வருவதைக் காண முடிந்தது.

பதம் 1.12.8 : அவர் (பகவான்) கட்டை விரலின் அளவுக்கு மட்டுமே இருந்தபோதிலும், திவ்யமானவராக இருந்தார். அவர் மிகவும் அழகான கரு நிறமுள்ள, அழிவற்ற உடலைப் பெற்றிருந்தார். அவர் மின்னலைப் போன்றதொரு மஞ்சள் நிற ஆடையையும், பிரகாசமான தங்கக் கிரீடத்தையும் அணிந்திருந்த கோலத்தில் குழந்தைக்குக் காட்சியளித்தார்.

பதம் 1.12.9 : பகவான் நான்கு கரங்களுடனும், உருக்கிய தங்கத்தாலான காதணிகளுடனும், கோபத்தால் இரத்தம் போல் சிவந்த கண்களுடன் அழகுபடுத்தப்பட்டிருந்தார். அவர் இங்குமங்குமாக சுற்றித் திரிந்தபொழுது, அவரது கதாயுதம் எரி நட்சத்திரத்தைப் போல் இடைவிடாமல் அவரைச் சுற்றிச்சுற்றி வந்தது.

பதம் 1.12.10 : இவ்வாறாக, சூரியன் ஒரு பனித்துளியை ஆவியாக மாற்றிவிடுவதைப் போலவே பகவானும் பிரம்மாஸ்திரத்தின் வெப்பக் கதிர்களை மறைந்து போக செய்வதில் ஈடபட்டிருந்தார். குழந்தையும் பகவானைப் பார்த்து, அது யாராக இருக்கக்கூடும் என்று எண்ணியது.

பதம் 1.12.11 : இவ்வாறு குழந்தை கவனித்துக் கொண்டு இருக்கும்பொழுதே, எல்லோருடைய இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும், நேர்மையானவர்களைக் காப்பவரும், எல்லா திசைகளிலும் பரவியிருப்பவரும், காலவெளியின் எல்லைக்கு உட்படாதவருமான பரம புருஷ பகவான் திடீரென்று மறைந்துப்போனார்.

பதம் 1.12.12 : அதன் பிறகு, இராசி மண்டலத்தின் நல்ல அறிகுறிகள் அனைத்தும் தோற்றுவிக்கப்பட்டதும், வீரத்தில் பாண்டுவைப் போலவே இருக்க போகும் அவரது வாரிசும் பிறந்தார்.

பதம் 1.12.13 : பரீட்சித்து மகாராஜனின் பிறப்பால் மிகவும் திருப்தியடைந்த யுதிஷ்டிர மகாராஜன், தூய்மைப்படுத்தும் பிறப்புச் சடங்கை நிறைவேற்றச் செய்தார். தெளம்பரையும், கிருபரையும் கற்றறிந்த பிராமணர்கள் மங்களகரமான மந்திரங்களை ஓதினர்.

பதம் 1.12.14 : ஒரு மகன் பிறந்ததும், எப்படி, எங்கு, எப்பொழுது தானம் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்த அரசர், பிராமணர்களுக்கு தங்கம், நிலம், கிராமங்கள், யானைகள், குதிரைகள் மற்றும் நல்ல உணவுத் தானியங்கள் ஆகியவற்றைப் பரிசளித்தார்.

பதம் 1.12.15 : அரசரின் தான தருமங்களால் மிகவும் திருப்தியடைந்த கற்றறிந்த பிராமணர்கள், அவரை பூருக்களிலேயே தலைமையானவர் என்று அழைத்ததுடன், அவரது புத்திரரும் நிச்சயமாக பூரு வம்சத்தில் வந்தவர்தான் என்பதையும் அவருக்கு அறிவித்தனர்.

பதம் 1.12.16 : பிராமணர்கள் கூறினர்: உங்களுக்கு மரியாதை காட்டுவதற்காகவே, களங்கமற்றவரான இப்புத்திரன், சர்வசக்தி படைத்தவரும், எங்கும் பரவியிருப்பவரும், பரம புருஷருமான பகவான் ஸ்ரீ விஷ்ணுவால் உயிர்ப்பிக்கப்பட்டார். தடுக்க முடியாததொரு அமானுஷ்யமான ஆயுதத்தினால் அவர் கொல்லப்படும் நிலையில் இருந்தபொழுது அவர் காப்பாற்றப்பட்டார்.

பதம் 1.12.17 : இக்காரணத்திற்காக இக்குழந்தை பரம புருஷராலேயே காப்பாற்றப்பட்டவர் என்று இவ்வுலகில் பிரசித்தி பெறுவார். மகாபாக்கியசாலியே, இக்குழந்தை முதல்தர பக்தராக மாறி, எல்லா நற்குணங்களையும் பெற்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

பதம் 1.12.18 : மிகவும் நல்லவரான அரசர் (யுதிஷ்டிரர்) வினவினார்: ஓ மகாத்மாக்களே, இச்சிறந்த அரச குடும்பத்தில் தோன்றிய மற்றவர்களைப் போலவே இவரும் ஒரு புனித மன்னராகவும், பக்தியுள்ளவராவும், அவரது சாதனைகளில் புகழுக்கும். பெருமைகளுக்கும் உரியவராகவும்| இருப்பாரா?

பதம் 1.12.19 : கற்றறித்த பிராமணர்கள் கூறினர்: பிருதாவின் புதல்வரே, இக்குழந்தை, பிறப்பெடுக்கும் அனைவரையும் பராமரிப்பதில் மனு புத்திரரான இஷ்வாகு மகாராஜனைப் போலவே இருப்பார், பிராமண கொள்கைகளைப் பின்பற்றுவதில், குறிப்பாக வாக்குறுதியை காப்பாற்றுவதில் இவர், தசரத மகாராஜனின் புதல்வரும், பரம புருஷருமாகிய ஸ்ரீ ராமரைப் போலவே இருப்பார்.

பதம் 1.12.20 : இக்குழந்தை, உசீனர நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சிபிச்சக்கரவர்த்தியைப் போல் ஒரு கொடை வள்ளலாகவும், சரணடைந்தோரைக் காப்பவராகவும் இருப்பார். மேலும் துஷ்யந்த மகாராஜனின் புதல்வரான பரதனைப் போலவே இவரும் பரம்பரைப் பெயரையும், புகழையும் பரப்புவார்.

பதம் 1.12.21 : இக்குழந்தை, பெரும் வில்லாளிகளுக்கிடையில் அர்ஜுனைப் போல் திறமைமிக்கவராக இருப்பார். இவர் நெருப்பைப் போல் தடுக்க முடியாதவராகவும் சழுத்திரத்தைப் போல் மிஞ்ச முடியாதவராகவும் இருப்பார்.

பதம் 1.12.22 : இக்குழந்தை ஒரு சிங்கத்தைப் போல் பலசாலியும், இமயமலைகளைப் போல் புகலிடம் அளிக்க தகுதியுள்ளவருமாவார். இவர் பூமியைப் போல் பொறுமையாகவும், இவரது பெற்றோர்களைப் போல் சகிப்புத்தன்மை கொண்டவராகவும் இருப்பார்.

பதம் 1.12.23 : இக்குழந்தை சமத்துவமான மனநிலையில் பாட்டனார் யுதிஷ்டிரரைப் போல் அல்லது பிரம்மாவைப் போல் இருப்பார். இவர் கைலாசபதியான சிவபெருமானைப் போல் உதாரகுணம் உள்ளவராக இருப்பார். மேலும் லக்ஷ்மி தேவிக்கும் புகலிடமாக உள்ள பரம புருஷரான நாராயணரைப் போல், இவர் அனைவருக்கும் புகலிடமாக இருப்பார்.

பதம் 1.12.24 : இக்குழந்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார் என்பதால், கிட்டத்தட்ட அவருக்கு நிகரானவராகவே இருப்பார். பெருந்தன்மையில் இவர் ரந்திதேவ மகாராஜனின் பெருமைக்கு இணையானவராக இருப்பார். மேலும் மதத்தில் இவர் யயாதி மகாராஜனைப் போன்றிருப்பார்.

பதம் 1.12.25 : இக்குழந்தை பலி மகாராஜனைப் போல் பொறுமைமிக்கவராகவும், பிரகலாத மகாராஜனைப் போல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓர் உண்மையான பக்தராகவும், அஸ்வமேத யாகங்களைத் செய்பவராகவும் மற்றும் அனுபவமுள்ள முதியோர்களைப் பின்பற்றுபவராகவும் இருப்பார்.

பதம் 1.12.26 : இக்குழந்தை ரிஷிகளைப் போலுள்ள அரசர்களுக்குத் தந்தையாக இருப்பார். மேலும் இவர் திடீர் முன்னேற்றம் அடைந்தவர்களையும், தொல்லை தருபவர்களையும் தண்டித்து உலக அமைதியையும், தர்மத்தையும் காப்பாற்றுவார்.

பதம் 1.12.27 : ஒரு பிராமண புத்திரனால் அனுப்பப்படவிருக்கும் பாம்பின் கடியால் நிகழப் போகும் அவரது மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டபின் அவர் எல்லா பௌதிக பற்றிலிருந்து விடுபட்டு, பரம புருஷரிடம் புகலிடம் கொண்டு, அவரிடம் சரணாகதியடைவார்.

பதம் 1.12.28 : மிகச்சிறந்த தத்துவவாதியாக இருக்கப் போகும் வியாசதேவரின் மகனிடமிருந்து சரியான ஆத்ம அறிவையப் பற்றி விசாரித்த பின், இவர் எல்லா பௌதிக பற்றையும் துறந்து, பயமற்ற ஒரு வாழ்வை அடைவார்.

பதம் 1.12.29 : இவ்வாறாக ஜோதிட அறிவிலும், பிறப்புச் சடங்கைச் செய்வதிலும் கைதேர்ந்தவர்கள், இக்குழந்தையின் எதிர்கால வரலாற்றைப் பற்றி யுதிஷ்டிர மகாராஜனுக்கு உபதேசித்தனர். பிறகு இதற்குக் கைமாறாக போதுமான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டபின், அவர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களுக்கு திரும்பிச் சென்றனர்.

பதம் 1.12.30 : எனவே பிறப்பதற்கு முன் அவர் கண்ட அந்த நபரைத் தேடும் முயற்சியில், அவர் எல்லா மனிதர்களையும் சோதித்துப் பார்க்க வருவார் என்பதால், உலகில் அவர் பரீட்சித் (பரீட்சித்துப் பார்ப்பவர்) என்று புகழப்படுவார். இவ்வாறாக அவர் இடைவிடாமல் பகவானை மனதில் சிந்தித்துக் கொண்டிருப்பார்.

பதம் 1.12.31 : சந்திரன் அதன் வளர்பிறையில் நாள்தோறும் வளர்ச்சியடைவதைப் போலவே, ராஜ குமாரரும், (பரீட்சித்து) அவரது காவலர்களான பாட்டனார்களின் முழு கண்காணிப்பின் கீழ், மிகவும் விரைவாக செழிப்புடன் வளரத் துவங்கினார்.

பதம் 1.12.32 : இதே சமயத்தில் உறவினர்களுடனான சண்டையினால் விளைந்த பாவங்களிலிருந்து விடுபடுவதற்காக, ஓர் அஸ்வமேத யாகத்தை செய்வதைப் பற்றி யுதிஷ்டிர மகாராஜன் யோசித்தார். ஆனால் அபராதங்கள் மற்றும் வரிப்பணம் ஆகியவற்றைத் தவிர கூடுதலான நிதி இல்லாதிருந்ததால், சிறிது நிதியைத் திரட்ட வேண்டுமே என்ற கவலை அவருக்கு உண்டாயிற்று.

பதம் 1.12.33 : அரசரின் மனமார்ந்த விருப்பத்தைப் புரிந்துகொண்ட அவரது சகோதரர்கள், குறையற்றவரான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அறிவுரைப்படி வட திசையிலிருந்து (மருத்த மகாராஜனால் விட்டுச் செல்லப்பட்ட) போதுமான தனங்களைத் திரட்டினர்.

பதம் 1.12.34 : அச்செல்வங்களால், மூன்று அஸ்வமேத யாகங்களுக்குத் தேவையான பொருட்களை அரசரால் திரட்ட இயலும். இவ்வாறாக குருட்சேத்திர யுத்தத்திற்குப் பின் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுருந்த தரும புத்திரராகிய யுதிஷ்டிர மகாராஜன் பரம புருஷ பகவான் ஸ்ரீ ஹரியை திருப்திப்படுத்தினார்.

பதம் 1.12.35 : யாகங்களுக்கு யுதிஷ்டிர மகாராஜனால் அழைக்கப்பட்டிருந்த பரம புருஷரான ஸ்ரீகிருஷ்ணர், அவை தகுதியுள்ள (இருபிறப்பெய்திய) பிராமணர்களால் நடத்தப்படுகின்றனவா என்பதை கவனித்து கொண்டார். அதன் பிறகு, உறவினர்களின் மகிழ்ச்சிக்காக பகவான் சில மாதங்கள் அங்கு தங்கினார்.

பதம் 1.12.36 : சௌனகரே, அதன் பிறகு யுதிஷ்டிர மகாராஜன், திரௌபதி மற்றும் பிற உறவினர்கள் ஆகியோரிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட பகவான், அர்ஜுனனாலும், யது வம்சத்தின் மற்ற அங்கத்தினர்களாலும் சூழப்பட்டவராக துவாரகாபுரியை நோக்கிக் கிளம்பினார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare