அத்தியாயம் – 10
ஸ்ரீ கிருஷ்ணரின் துவாரகை பயணம்
பதம் 1.10.1 : சௌனக முனி வினவினார் அவரது உரிமையுள்ள பரம்பரைச் சொத்தை அபகரிக்க விரும்பிய எதிரிகளைக் கொன்றபின், சமயவாதிகளிலேயே மிகச்சிறந்தவரான யுதிஷ்டிர மகாராஜன், அவரது சகோதரர்களின் உதவியுடன் பிரஜைகளை எப்படி ஆண்டார்?. நிச்சயமாக கட்டுப்பாடற்ற உணர்வுடன் இராஜ்ஜியத்தை அவரால் சுதந்திரமாக அனுபவித்திருக்க முடியாது.

பதம் 1.10.2 : சூத கோஸ்வாமி கூறினார். உலகைப் பராமரிப்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், காட்டுத் தீயைப் போன்ற கோபக்கனலால் அழிக்கப்பட்ட குரு வம்சத்தை பழைய நிலைக்குக் கொண்டுவந்து, யுதிஷ்டிர மகாராஜனை அவரது சொந்த இராஜ்ஜியத்தில் திரும்பவும் ஸ்தாபித்த பிறகு மனத் திருப்தி அடைந்தார்.

பதம் 1.10.3 : பிஷ்மதேவரும், வெல்ல முடியாதவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பேசியதைக் கேட்டு ஞானோதயம் பெற்ற யுதிஷ்டிர மகாராஜனின் எல்லா சந்தேகங்களும் தீர்ந்துவிட்டதால், அவர் அறிவுபூர்வமான விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவ்வாறாக அவரது இளைய சகோதரர்கள் அவரைப் பின்தொடர, பூமியையும், கடல்களையும் அவர் ஆட்சிபுரிந்தார்.

பதம் 1.10.4 : யுதிஷ்டிர மகாராஜனின் ஆட்சிக் காலத்தில், மேகங்கள் மக்களுக்குப் போதுமான மழையைப் பொழிந்தன, பூமியோ மனிதனின் எல்ல தேவைகளையும் மிகுதியாக உற்பத்தி செய்தது. பசு, அதன் பருத்த பால் சுரபிகளாலும், மகிழ்ச்சியான மனோநிலையினாலும் மேய்ப்பு நிலங்களை ஈரமாக்குவது வழக்கம்.

பதம் 1.10.5 : நதிகள், சமுத்திரங்கள், குன்றுகள், மலைகள், காடுகள், கொடிகள் மற்றும் சக்தி வாய்ந்த மருந்து சாமான்கள் ஆகியவை, ஒவ்வொரு பருவ காலத்திலும், தாங்கள் செலுத்தும் வரியாக, அவற்றின் உற்பத்தில் பொருட்களை அரசருக்கு மிகுதியாக அளிக்கின்றன.

பதம் 1.10.6 : அரசருக்கு எதிரிகளே இல்லை என்பதால், எந்த சமயத்திலும் ஜீவராசிகள் மனவேதனைகளாலோ, வியாதிகளாலோ, அதிகமான உஷ்ணத்தாலோ, குளிராலோ பாதிப்படையவில்லை.

பதம் 1.10.7 : ஸ்ரீ ஹரி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது உறவினர்களை சமாதானப்படுத்தவும், அவரது சொந்த தங்ககையை (சுபத்ரா) திருப்திப்படுத்தவும். ஒரு சில மாதங்கள் ஹஸ்தினாபுரத்தில் வசித்தார்.

பதம் 1.10.8 : அதன் பிறகு, புறப்படுவதற்கு அனுமதி கேட்ட பகவானுக்கு மன்னர் சம்மதித்ததும், பகவான் யுதிஷ்டிர மகாராஜனின் பாதங்களில் சிரம் தாழ்த்தி அவரை வணங்கினார். அரசரும் அவரை தழுவிக் கொண்டார். இதன்பிறகு மற்றவர்களால் தழுவிக் கொள்ளப்பட்ட பகவான் அவர்களது வணக்கங்களை ஏற்றுக் கொண்டதும் தமது இரதத்தில் ஏறினார்.

பதங்கள் 1.10.9 – 1.10.10 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை விட்டுப் பிரிவது சாத்தியமில்லை என்பதால், அச்சமயத்தில் சுபத்ரா, திரௌபதி, குந்தி, உத்தரா, காந்தாரி, திருதராஷ்டிரர், யுயுத்ஸு, கிருபாச்சாரியர், நகுலன், சகாதேவன், பீமசேனன், தெளம்ய மற்றும் சத்தியவதி ஆகிய அனைவரும் கிட்டத்தட்ட மூர்ச்சையடையும் நிலைக்கு வந்துவிட்டனர்.

பதங்கள் 1.10.11 – 1.10.12 : தீய உறவை ஒழித்து தூய பக்தர்களின் சகவாசத்தினால் பரம புருஷரை அறிந்துகொண்ட புத்திசாலிகள் பகவானின் பெருமைகளை ஒரே ஒருமுறை மட்டுமே கேட்டிருந்தாலும், அவற்றை திரும்பத்திரும்ப கேட்பதிலிருந்து அவர்களால் ஒருபோதும் விலகி நிற்க முடியாது. அப்படியானால், பகவானுடன் நெருக்கமான சகவாசம் கொண்டும், நேருக்குநேராக அவரை பார்த்துக் கொண்டும், அவரை தொட்டுக் கொண்டும், அவருடன் பேசிக் கொண்டும், உறங்கிக் கொண்டும், அமர்ந்து கொண்டும் மற்றும் அவருடன் உணவருந்திக் கொண்டும் இருந்த பாண்டவர்களால் அவரது பிரிவை எப்படி சகித்துக்கொள்ள இயலும்?

பதம் 1.10.13 : கவர்ச்சியெனும் பாத்திரத்திற்குள் அவர்களுடைய இதயங்கள் அனைத்தும் அவருக்காக கரைந்தன. அவர்கள் மனக் கலவரத்துடன் இங்குமங்கும் நடந்தவாறு, கண்களைச் சிமிட்டாமல் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

பதம் 1.10.14 : கிருஷ்ணரைப் பற்றிய கவலையால், பெண் உறவினர்கள், கண்களில் கண்ணீர் மல்க அரண்மனையிலிருந்து வெளியே வந்தனர், அவர்களால் பெருங்கஷ்டத்துடன்தான் அவர்களது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடிந்தது. புறப்படும் வேளையில் கண்ணீர் விடுவது துரதிர்ஷ்டத்தை விளைவிக்கும் என்று அவர்கள் அஞ்சினர்.

பதம் 1.10.15 : பகவான் ஹஸ்தினாபுர அரண்மனையிலிருந்து புறப்படும்பொழுது. மிருதங்கம், தோல, நக்ர, துந்துரீ மற்றும் துந்துபி போன்ற வெவ்வேறு வகையான மத்தளங்கள் வெவ்வேறு வகையான புல்லாங்குழல்கள், வீணை, கோமுகா மற்றும் பேரீ-ஆகிய அனைத்தும், அவருக்கு மரியாதை காட்டுவதற்காக ஒன்றாக ஒலித்தன.

பதம் 1.10.16 : பகவானைக் காண வேண்டும் என்ற அன்பான ஆவலால், குருக்களின் அரச குடும்பத்துப் பெண்கள் அரண்மனை உச்சிக்கு எறிச்சென்று. வெட்கமும், பாசமும் கலந்த புன்னகையுடன் பகவான் மீது மலர்களைப் பொழிந்தனர்.

பதம் 1.10.17 : அப்பொழுது மாவீரரும், உறக்கத்தை வென்றவரும், பேரன்பிற்கு உரியவரும் பரம புருஷரின் நெருங்கிய நண்பருமான அர்ஜுனன், இரத்தினங்களாலான கைப்பிடியையும், ஜரிகை முத்துக்களாலான சித்திர வேலைப்பாடுகளையும் கொண்ட ஒரு குடையைக் கையிலெடுத்தார்.

பதம் 1.10.18 : உத்தவரும், ஸாத்யகியும் அலங்கார விசிறிகளால் பகவானுக்கு காற்று விசிறத் துவங்கினர். மதுவின் தலைவரான பகவான், மலர் தூவிய ஆசனத்தில் அமர்ந்து, வழிநெடுக அவர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

பதம் 1.10.19 : கிருஷ்ணருக்கு வழங்கப்பட்ட உபசாரங்கள் ஒரு மனிதனின் வேடத்தை இப்பொழுது ஏற்றுள்ள பரம்பொருளுக்கு உரியவை என்பதால், அவை பொருத்தமானவையும் அல்ல, பொருத்தமற்றவையும் அல்ல இங்குமங்கும் பேசப்படுவது, கேட்டது.

பதம் 1.10.20 : ஹஸ்தினாபுரத்திலுள்ள எல்லா வீடுகளின் கூரைகளிலும் நின்றிருந்த பெண்கள், உத்தமமான சுலோகங்களினால் பாடப்படுபவரான, பகவானின் திவ்யமான குணங்களைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து அவரைப் பற்றி பேச ஆரம்பித்தனர். இப்பேச்சு வேத மந்திரங்களை விட கவர்ச்சிமிக்கதாக இருந்தது.

பதம் 1.10.21 : அவர்கள் கூறினர்: நம் சிந்தனையில் தெளிவாக உள்ள அந்த மூல முழுமுதற் கடவுள் இதோ இருக்கிறார். ஜட இயற்கைக் குணங்கள் தோன்றுவதற்கு முன் அவர் மட்டுமே இருந்தார். மேலும் அவர் பரம புருஷர் என்பதால், எல்லா ஜீவராசிகளும், சக்தி முடக்கப்பட்டு, இரவில் உறங்குவதைப் போல் அவருக்குள் ஐக்கியமாகிவிடுகின்றன.

பதம் 1.10.22 : பரம புருஷர் அவரது அங்க உறுப்புக்களான ஜீவராசிகளுக்கு மீண்டும் பெயர்களையும் உருவங்களையும் அளிக்க விரும்பி, அவற்றை ஜட இயற்கையின் வழிகாட்டலின் கீழ் வைத்தார். அவரது சுய ஆற்றலால், மறுபடியும் சிருஷ்டியைச் செய்ய ஜட இயற்கைக்கு சக்தியளிக்கப்படுகிறது.

பதம் 1.10.23 : அசையாத பக்தித் தொண்டாலும், உயிர் மற்றும் புலன்கள் ஆகியவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாலும், பெளதிக உணர்விலிருந்து முற்றிலும் தூய்மை அடைந்துள்ள சிறந்த பக்தர்கள் பகவானின் திவ்யமான உருவத்தை அனுபவிக்கின்றனர். அதே பரம புருஷ பகவான் இதோ இருக்கிறார். இந்த பக்திதான் வாழ்வை தூய்மைப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

பதம் 1.10.24 : அன்புத் தோழிகளே, வேத நூல்களின் அந்தரங்கமான பகுதிகளில், பகவானின் கவர்ச்சியானதும், அந்தரங்கமானதுமான லீலைகள் அவரது சிறந்த பக்தர்களால் விவரிக்கப்பட்டுள்ளன. அதே பரம புருஷ பகவான் இதோ இருக்கிறார். இவர் ஜடவுலகைப் படைத்து, காத்து, அழிப்பதுடன், அதனால் பாதிப்படையாமலும் இருக்கிறார்.

பதம் 1.10.25 : எப்போதெல்லாம் அரசர்களும், நிர்வாகிகளும் மிருகங்களைப் போல் மிகத்தாழ்ந்த குணங்களில் வாழ்கிறார்களோ, அப்போது உன்னத உருவிலுள்ள பகவான் அவரது பரம சக்தியை, வெளிப்படுத்துகிறார். மேலும் பக்தியுள்ளவர்களுக்கு விசேஷ கருணையைக்காட்டும் அவர், அற்புதச் செயல்களை நிகழ்த்துவதுடன், வேறுபட்ட காலங்களுக்கும், யுகங்களுக்கும் தேவையான அதே திவ்ய ரூபங்களையும் தோற்றுவிக்கிறார்.

பதம் 1.10.26 : ஓ! யது மகாராஜனின் வம்சம் எவ்வளவு உயர்வாக புகழப்படுகிறது. அனைத்து ஜீவராசிகளின் உன்னத தலைவரான லக்ஷ்மி தேவியின் கணவன் அவரது பிறப்பை ஏற்று, அவரது பிள்ளைப் பிராயத்தில் சுற்றிச் திரிந்த இடமான மதுராபுரி எவ்வளவு புண்ணியம் வாய்ந்தது!

பதம் 1.10.27 : துவாரகை ஸ்வர்க லோகங்களின் பெருமைகளையும் வென்று, பூமியின் புகழை உயர்த்தியிருப்பது அற்புதம்தான் என்பதில் சந்தேகவில்லை. துவாரகா வாசிகள், அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆத்மாவாக இருப்பவரை (கிருஷ்ணர்) அவரது அன்பான உருவில் எப்பொழுதும் கண்டு கொண்டே இருக்கின்றனர். அவரும் இனிய புன்னகையுடன் அவர்களைக் காண்கிறார்.

பதம் 1.10.28 : தோழிகளே, அவர் கைப்பிடித்த அவரது மனைவிகளை பற்றி சிந்தித்துப் பாருங்கள். அகில லோகநாயகனினுடைய அதர அமிர்தத்தை (முத்தமிடுவதால்) இப்பொழுது இடைவிடாமல் சுவைத்து அனுபவிப்பதற்கு, அவர்கள் எப்படியெல்லாம் விரதங்களையும் புனித ஸ்நானங்களையும், கேள்விகளையும் மற்றும் பூரணமான வழிபாடுகளையும் நிறைவேற்றி இருக்க வேண்டும்! விருந்தாவனத்து கோபிர்கள் அத்தகைய அன்பை எதிர்பார்த்துத்தான் அடிக்கடி மூர்ச்சை அடைத்தனர்.

பதம் 1.10.29 : பிரதியும்னன், ஸாம்பன் மற்றும் அம்பன் போன்றவர்கள் இப்பெண்களின் குழந்தைகளாவர். சிசுபாலனை தலைமையாக கொண்ட சக்தி வாய்ந்த அரசர்களைத் தோற்கடித்தபின், ருக்மிணி, சத்தியபாமா மற்றும் ஜாம்பவதியைப் போன்ற பெண்கள், அவர்களது சுயம்வரச் சடங்குகளில் இருந்து பலாத்காரமாக பகவானால் தூக்கிச் செல்லப்பட்டனர். மேலும் பௌமாசுரனையும், அவனது ஆயிரக்கணக்கான உதவியாளர்களையும் அவர் கொன்றபின், மற்ற பெண்களும் அவரால் பலாத்காரமாக தூக்கிச் செல்லப்பட்டனர்.

பதம் 1.10.30 : இப்பெண்கள் அனைவரும் தனிப்பட்ட குணத்தையோ தூய்மையையோ பெற்றிருக்கவில்லை என்றபோதிலும் அவர்கள் தங்களது வாழ்வுகளை பெருமைக்குரியதாகவும், மங்களகரமானதாகவும் மாற்றிக் கொண்டனர். தாமரைக் கண்களை உடைய பரம புருஷராண அவர்களுடைய கணவர் அவர்களை வீட்டில் தனியாக விட்டு சென்றதே இல்லை. அவர்களுக்கு அவர் மதிப்புயர்ந்த அன்பளிப்புகளை அளித்து அவர்களது இதயங்களை எப்பொழுதும் திருப்திப்படுத்தினார்.

பதம் 1.10.31 : தலைநகரான ஹஸ்தினாபுரத்துப் பெண்கள் அவரை வணங்கி, இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கும் வேளையில், அவர்களது வணக்கங்களை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்ட பகவான், அவரது கருணையை பார்வையாலேயே அவர்கள் மீது செலுத்தியவாறு நகரிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

பதம் 1.10.32 : யுதிஷ்டிர மகாராஜன் ஒருவருக்கும் விரோதியல்ல என்றாலும் அசுரர்களின் எதிரியான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு துணையாகச் செல்ல அவர் நான்கு தற்காப்புப் பிரிவுகளை (குதிரை, யானை, தேர் மற்றும் காலாட்படை) அமர்த்தினார். எதிரியின் காரணத்தாலும் பகவானிடமுள்ள சிநேகத்தாலுமே மகாராஜன் இதைச் செய்தார்.

பதம் 1.10.33 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இருந்த ஆழ்ந்த பாசத்தினால், குரு வம்சத்தைச் சேர்ந்த பாண்டவர்கள் அவரை வழியனுப்புவதற்காக நீண்ட தூரம் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். இனி வரப்போகும் பிரிவை எண்ணி அவர்கள் கலக்கமடைந்தனர். ஆனால் அவர்களை திரும்பிச் செல்லும்படி பகவான் கேட்டுக் கொண்டார். பிறகு அவர் தமது பிரியமான சகாக்களுடன் துவாரகையை நோக்கிப் புறப்பட்டார்.

பதங்கள் 1.10.34 – 1.10.35 : சௌனகரே, பகவான் பிறகு குருஜாங்களம், பாஞ்சாலம், சூரசஸனா, யமுனா நதிக் கரையிலுள்ள நிலப்பரப்பு, பிரம்மாவர்தம், குருட்சேத்திரம், மத்ஸ்யம், ஸாரஸ்வதம், பாலைவனங்களைக் கொண்ட மாகாணம் மற்றும் நீர்ப்பஞ்சமுள்ள நிலப்பகுதி ஆகிய இடங்களை நோக்கி முன்னேறிச் சென்றார். இம் மாகாணங்களைக் கடந்து சென்றபின், படிப்படியாக அவர் ஸௌவீர மற்றும் ஆபீர மாகாணங்களை அடைந்தார். பிறகு மேற்கே சென்று, இறுதியாக துவாரகையை அடைந்தார்.

பதம் 1.10.36 : இம்மாகரணங்களைக் கடந்து செல்லும்பொழுது அவர் வரவேற்று, வழிபடப்பட்டு பல வகையான அன்பளிப்புகள் அளிக்கப்பட்டார். இல்வெல்லா இடங்களிலும், மாலையில் சந்தியா வந்தனத்தைச் செய்வதற்காக பகவான் பிரயாணத்தை நிறுத்தினார். இது சூரியாஸ்தமனத்திற்குப் பிறகு முறையாக அனுஷ்டிக்கப்பட்டது.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare