அத்தியாயம் – 3
கிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம்
பதம் 1.3.1
ஸூத உவாச
ஜக்ருஹே பௌருஷம் ரூபம் பகவான் மஹத்-ஆதிபி:
ஸம்பூதம் ஷோடச -கலம் ஆதௌ லோக-ஸிஸ்ருக்ஷயா

ஸூத உவாச—சூதர் கூறினார்; ஜக்ரே-ஏற்றார்; பௌருஷம்- விரிவங்கமான புருஷ அவதாரத்தை; ரூபம்-உருவம்; பகவான் – முழுமுதற் கடவுள்; மஹத்-ஆதிபி:—ஜடவுலக மூலப்பொருட்களுடன்; ஸம்பூதம்—இவ்வாறாக படைப்பு தோன்றியது; ஷோடச-கலம் – பதினாறு அடிப்படைக் கொள்கைகள்; ஆதௌ—ஆரம்பத்தில்; லோக—பிரபஞ்சங்கள்; ஸிஸ்ருக்ஷயா—சிருஷ்டிக்கும் எண்ணங்கொண்டு.

சூதர் கூறினார்; படைப்பின் துவக்கத்தில், புருஷ அவதாரத்தின் விஸ்வ ரூபமாக பகவான் தம்மை விரிவடையச் செய்து, பௌதிக படைப்புக்கான மூலப்பொருட்கள் அனைத்தையும் தோற்றுவித்தார். இவ்வாறாக முதலில் பௌதிக இயக்கத்திற்குரிய பதினாறு மூலப்பொருட்கள் படைக்கப்பட்டன. இம்மூலப் பொருட்கள் ஜடப் பிரபஞ்சத்தை படைக்கும் நோக்கத்திற்காகவே உண்டாக்கப்பட்டன.

பதம் 1.3.2
யஸ்யாம்பஸி சயானஸ்ய யோக – நித்ராம் விதன்வத:
நாபி-ஹ்ரதாம்புஜாத் ஆஸீத் ப்ரஹ்ம விஸ்வ-ஸ்ருஜாம் பதி:

யஸ்ய – யாருடைய; அம்பஸி-நீரில்; சயானஸ்ய-சயனத்தில் இருக்கிறார்; யோக-நித்ராம்-யோக நித்திரையில்; விதன்வத:—பணியாற்றும்; நாபி—நாபி; ஹ்ரத-ஏரியிலிருந்து அம்புஜாத்—தாமரையில் இருந்து; ஆஸீத்-தோற்றுவிக்கப்பட்டார்; ப்ரஹ்மா—ஜீவராசிகளின் பாட்டனார்; விஸ்வ—பிரபஞ்சம்; ஸ்ருஜாம்— படைப்பவர்களின்; பதி:—தலைவர்.

புருஷரின் ஒரு பாகம் பிரபஞ்ச நீரில் பள்ளி கொண்டிருக்க, அவரது உடலின் நாபிக் குளத்திலிருந்து ஒரு தாமரைத்தண்டு முளைக்கிறது. இத்தாமரைத் தண்டின் மீதுள்ள தாமரை மலரிலிருந்து, பிரபஞ்சத்திலுள்ள சிருஷ்டி கர்த்தாக்கள் அனைவருக்கும் தலைவரான பிரம்மா தோன்றுகிறார்.

பதம் 1.3.3
யஸ்யாவயவ-ஸம்ஸ்தானை: கல்பிதோ லோக-விஸ்தர:
தத் வை பகவதோ ரூபம் விசுத்தம் ஸத்வம் ஊர்ஜிதம்

யஸ்ய—யாருடைய; அவயவ—அங்க விரிவு; ஸம்ஸ்தானை:—அமைந்துள்ளன; கல்பித:- நம்பப்படுகிறது; லோக—ஜீவராசிகளின் கிரகங்கள்; விஸ்தர:—அநேக; தத் வை – ஆனால் அது இருக்கிறது; பகவத:—முழுமுதற் கடவுளின்; ரூபம்-உருவம்; விசுத்தம் -தூயதாக; ஸத்வம் – வாழ்வு; ஊர்ஜிதம்—மிகச்சிறந்த.

பிரபஞ்ச கிரக அமைப்புக்கள் அனைத்தும் புருஷரின் பரந்த உடலின் மீதுதான் அமைந்துள்ளன என்று நம்பப்படுகிறது. ஆனால் பௌதிக மூலப் பொருட்களோடு அவருக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. அவரது உடல் மிகச்சிறந்த ஆன்மீக நிலையிலேயே எப்பொழுதும் இருக்கிறது.

பதம் 1.3.4
பஸ்யந்தி அதோ ரூபம் அதப்ர-சக்ஷுஷா
ஸஹஸ்ர-பாதோரு-புஜானனாத்புதம்
ஸஹஸ்ர-மூர்த-ஸ்ரவணாக்ஷி-நாஸிகம்
ஸஹஸ்ர-மௌலி-அம்பர-குண்டலோல்லஸத்

பஸ்யந்தி- காண்கின்றனர்; அத:— ‘புருஷரின்’ ரூபத்தை; ரூபம்—ரூபம்; அதப்ர— பக்குவமடைந்த; சக்ஷுஷா—கண்களால்; ஸஹஸ்ர-பாத—ஆயிரக்கணக்கான கால்கள்; ஊரு—தொடைகள்; புஜ—ஆனன—கரங்கள் மற்றும் முகங்கள்; அத்புதம்-அற்புதமான; ஸஹஸ்ர—ஆயிரக்கணக்கான; மூர்த—தலைகள்; ஸ்ரவண—காதுகள்; அக்ஷி—கண்கள்; நாஸிகம்—மூக்குகள்; ஸஹஸ்ர—ஆயிரக்கணக்கான; மௌலி—மாலைகள்; அம்பர-ஆடைகள்; குண்டல—குண்டலங்கள்; உல்லஸத்—பிரகாசிக்கும்.

அற்புதமான கால்கள், தொடைகள், கரங்கள் மற்றும் முகங்கள் ஆகியவற்றை ஆயிரக்கணக்கில் பெற்றிருப்பவரான, தெய்வீக வடிவிலுள்ள புருஷரை, பக்தர்கள் தங்களது பக்குவமடைந்த கண்களினால் காண்கின்றனர். அவ்வுடலில் ஆயிரக்கணக்கான தலைகள், காதுகள், கண்கள் மற்றும் மூக்குகள் ஆகியவை உள்ளன. அவை ஆயிரக்கணக்கான கிரீடங்களாலும், பிரகாசிக்கும் குண்டலங்களாலும் மற்றும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

பதம் 1.3.5
ஏதன் நாநாவதாராணாம் நிதானம் பீஜம் அவ்யயம்
யஸ்யாம்சாம்சேன ஸ்ருஜ்யந்தே தேவ-திர்யன்-நராதய:

ஏதத்—இந்த (உருவம்); நானா—பலதரப்பட்ட; அவதாராணாம்—அவதாரங்களின்; நிதானம்- பிறப்பிடம்; பீஜம்—விதை; அவ்யயம்— அழிக்க முடியாத: யஸ்ய—யாருடைய; அம்ச—அம்சம்; அம்சேன—அம்சத்தின் பாகம்; ஸ்ருஜ்யந்தே—உண்டாக்கு; தேவ—தேவர்கள்; திர்யக்-மிருகங்கள்; நர-ஆதய:—மனிதர்களும், மற்றவர்களும்.

பிரபஞ்சத்திலுள்ள பல வகையான அவதாரங்களுக்கு மூலமாகவும் அழிவற்ற வித்தாகவும் இருப்பது இந்த வடிவமேயாகும் (புருஷ அவதாரத்தின் இரண்டாவது வடிவம்). இந்த வடிவத்தின் அணுக்களிலும் பகுதிகளிலும் இருந்தே தேவர்களும், மனிதர்களும், பல்வேறு ஜீவராசிகளும் படைக்கப்பட்டனர்.

பதம் 1.3.6
ஸ ஏவ ப்ரதமம் தேவ: கெளமாரம் ஸர்கம் ஆஸ்ரித:
சசார துஸ்சரம் ப்ரஹ்மா ப்ரஹ்மசர்யம் அகண்டிதம்

ஸ-அந்த; ஏவ-நிச்சயமாக; ப்ரதமம்—முதலாவதாக; தேவ: – பரம புருஷர்; கெளமாரம் – குமாரர்கள் (திருமணமாகாதவர்கள்) எனப்படும்; ஸர்கம்-படைப்பு; ஆஸ்ரித:-கீழ்; சசார—இயற்றினர்; துஸ்சரம்—மிகவும் கடினமான செயல்; ப்ரஹ்மா—பிரஹ்மனின் நிலையில்; ப்ரஹ்மசர்யம்-பிரம்மனை அறிவதற்குரிய ஒழுக்கத்தின் கீழ்; அகண்டிதம்-இடைவிடாத.

முதன்முதலாக, படைப்பின் துவக்கத்தில், பிரம்மாவின் திருமணமாகாத நான்கு புத்திரர்கள் (குமாரர்கள்) இருந்தனர். இவர்கள் பரபிரம்மத்தை உணரும் பொருட்டு பிரம்மச்சாரிய விரதத்தை ஏற்றிருந்ததால், கடுந்தவங்களை மேற்கொண்டனர்.

பதம் 1.3.7
த்விதீயம் து பவாயாஸ்ய ரஸாதல-கதாம் மஹீம்
உத்தரிஷ்யன் உபாதத்த யக்ஞேச: ஸௌகரம் வபு:

த்விதீயம்—இரண்டாவது; து-ஆனால்; பாவய-நன்மைக்காக; அஸ்ய-இவ்வுலகின்; ரஸாதல-கீழான பிரதேசத்தின்; கதாம்— சென்று; மஹீம்-பூமியை; உத்தரிஷ்யன்-தூக்கி; உபாதத்த— நிலைப்படுத்தினார்; யக்ஞேச:- உரிமையாளர் அல்லது பரம அனுபவிப்பாளர்; ஸௌகரம்- பன்றியைப் போன்ற: வபு:— அவதாரத்தை

எல்லா யாகங்களையும் அனுபவிப்பவரான பரம புருஷர் ஒரு பன்றியின் அவதாரத்தை (இரண்டாம் அவதாரம்) ஏற்றார். மேலும் பூமியின் நன்மைக்காக அவர் பிரபஞ்சத்தின் மிகத் தாழ்ந்த பிரதேசத்திலிருந்து அதை உயர்த்தினார்.

பதம் 1.3.8
த்ருதீயம் ருஷி-ஸர்கம் வை தேவர்ஷித்வம் உபேத்ய ஸ:
தந்த்ரம் ஸாத்வதம் ஆசஷ்ட நைஷ்கர்ம்யம் கர்மணாம் யத:

த்ருதீயம்-மூன்றாவது; ருஷி-ஸர்கம்—ரிஷி யுகம்; வை-நிச்சயமாக; தேவர்ஷித்வம்-தேவர்களுக்கு இடையிலான ரிஷி அவதாரம்; உபேத்ய-ஏற்றதால்; ஸ:—அவர்; தந்த்ரம்-வேத விளக்கம்; ஸாத்வதம்—குறிப்பாக பக்தித் தொண்டிற்காகவே ஏற்பட்டது; ஆசஷ்ட-தொகுத்தார்; நைஷ்கர்ம்யம்-பலன் கருதாத; கர்மணாம்— செயலின்; யத: — எதிலிருந்து

ரிஷிகளின் யுகத்தில், முழுமுதற் கடவுள், தேவரிஷி நாரதரின் வடிவில், மூன்றாவது சக்தியாவேஷ (சக்தியளிக்கப்பட்ட) அவதாரத்தை ஏற்றார். இவர், தேவர்களுக்கு இடையில் சிறந்த முனிவராக இருக்கிறார். அவர் பக்தித் தொண்டிற்குச் சம்பந்தப்பட்டவையும் பலன் கருதாத செயல்களை ஊக்குவிக்கக்கூடிய வேதங்களின் விளக்கவுரைகளையும் தொகுத்தார்.

பதம் 1.3.9
துர்யே தர்ம-கலா-ஸர்கே நர-நாராயணாவ் ருஷீ
பூத்வாத் மோபசமோபேதம் அகரோத் துஸ்சரம் தப:

துர்யே-வரிசையில் நான்காவதாக; தர்ம-கலா—தர்மராஜனின் மனைவி; ஸர்கே-பிறந்ததால்; நர-நாராயணெள—நரன், நாராயணன் எனும் பெயர்களைக் கொண்ட; ருஷீ-ரிஷிகள்; பூத்வா-ஆகி; ஆத்ம-உபசம—புலன்களை அடக்கி; உபேதம்-அடைவதற்காக; அகரோத்- மேற்கொண்டனர்; துஸ்சரம்—விடாமுயற்சியுடன் கூடிய; தப: —தவத்தை.

நான்காவது அவதாரத்தில், பகவான் தர்ம மகாராஜனின் மனைவிக்கு நரன், நாராயணன் எனும் இரட்டைக் குழந்தைகளாக அவதரித்தார். இவ்வாறாக புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுதாரணமாக விளங்கும் கடுந்தவங்களை அவர் மேற்கொண்டார்.

பதம் 1.3.10
பஞ்சம: கபிலோ நாம ஸித்தேச: கால-விப்லுதம்
ப்ரோவாசாஸுரயே ஸாங்க்யம் தத்வ-க்ராம-வினிர்ணயம்

பஞ்சம:—ஐந்தாவதானது; கபில:—கபிலர்; நாம—பெயரின்; ஸித்தேச:-பூரணத்துவம் பெற்றவர்களில் முதன்மையானவர்; கால—காலம்; விப்லுதம்-மறைந்துவிட்டது; ப்ரோவாச – கூறினார்: ஆஸுரயே-ஆஸுரி எனும் பிராமணருக்கு: ஸாங்க்யம்—தத்துவ ஆராய்ச்சி; தத்வ-க்ராம—படைப்பிற்குரிய மூலப் பொருட்களின் மொத்தம்; வினிர்ணயம்— விளக்கம்.

ஐந்தாவது அவதாரமான பகவான் கபிலர் பூரணத்துவம் பெற்றவர்களிலேயே முதன்மையானவராவார். படைப்பிற்குரிய மூலப்பொருட்களையும் பௌதிக தத்துவத்தையும் பற்றிய ஒர் விளக்கத்தை அவர் ஆஸுரி பிராமணருக்கு அளித்தார். ஏனெனில் காலப்போக்கில் இவ்வறிவு மறைந்து போய்விட்டது.

பதம் 1.3.11
ஷஷ்டம் அத்ரேர் அபத்யத்வம் வ்ருத: ப்ராப்தோ ’நஸுயயா
ஆன்வீக்ஷிகிம் அலர்காய ப்ரஹ்லாதாதிப்ய ஊசிவான்

ஷஷ்டம் – ஆறாவதான; அத்ரே: – அத்ரியின்; அபத்யத்வம் – புத்திரன்; வ்ருத:-வேண்டியதனால்; ப்ராப்த:-பெற்றார்; அனஸுயயா—அனஸூயாவினால்; ஆன்வீக்ஷிகிம்-ஆன்மீக விஷயத்தைப் பற்றி; அலர்காய—அவர்களிடம்; ப்ரஹ்லாத—ஆதிப்ய: —பிரகலாதருக்கும் மற்றவர்களுக்கும்; ஊசிவான் – பேசினார்.

புருஷரின் ஆறாவது அவதாரம் அத்ரி முனிவரின் புதல்வராகத் தோன்றினார். ஓர் அவதாரத்திற்காக பிரார்த்தனை செய்த அனஸுயாவின் கர்ப்பத்திலிருந்து அவர் பிறந்தார். அலர்கா, பிரகலாதரிடமும், மற்றவர்களிடமும் (யது, ஹைஹய முதலானவர்கள்) ஆன்மீக விஷயத்தைப் பற்றி பேசினார்.

பதம் 1.3.12
தத: ஸப்தம ஆகூத்யாம் ருசேர் யக்ஞோ ’ப்யஜாயத
ஸ யாமா த்யை:ஸுர-கணைர் அபாத் ஸ்வாயம்பு வாந்தரம்

தத: —அதன் பிறகு; ஸப்தமே-வரிசையில் ஏழாவதாக; ஆகூத்யாம்— ஆகூதியின் கர்ப்பத்தில்; ருசே:- பிரஜாபதி ருசியால், யக்ஞ:-யக்ஞராகத் தோன்றிய பகவானின் அவதாரம்; அப்யஜாயத—அவதரித்தார்; ஸ:—அவர்; யாம—ஆத்யை: -யாருடனும், மற்றவர்களுடனும்; ஸுர— கணை:-தேவர்களுடன்; அபாத் – ஆண்டார்; சுயம்புவ -அந்தரம் – ஸ்வாயம்புவ மனுவினுடைய ஆட்சிக் காலத்தின் மாற்றம்.

பிரஜாபதி ருசி மற்றும் அவரது மனைவியான ஆகூதி ஆகியோரின் புத்திரரான யக்ஞர் ஏழாவது அவதாரமாவார். சுயம்புவ மனுவின் ஆட்சிக்காலம் மாறிய பிறகு அவர் ஆட்சி நடத்தினார். அவரது புதல்வரான யமனைப் போன்ற தேவர்கள் அவருக்கு உதவியாக இருந்தனர்.

பதம் 1.3.13
அஷ்டமே மேருதேவ்யாம் து நாபேர் ஜாத உருக்ரம
தர்சயன் வர்த்ம தீராணாம் ஸர்வாஸ்ரம-நமஸ்க்ருதம்

அஷ்டமே—அவதாரங்களில் எட்டாவதாக; மேருதேவ்யாம் து – அவரது மனைவியான மேருதேவியின் கர்ப்பத்தில்; நாபே:-நாபி மகாராஜன்; ஜாத—பிறந்தார்; உருக்ரம:-சர்வ சக்தி வாய்ந்த பகவான்; தர்சயன்—காட்டுவதன் மூலமாக; தீராணாம்—பக்குவமான ஜீவன்களின்; ஸர்வ — எல்லா; ஆஸ்ரம—வாழ்வின் பிரிவுகள்; நமஸ்க்ருதம்— மதிக்கப்பட்ட.

நாபி மகாராஜன் மற்றும் அவரது மனைவியான மேருதேவி ஆகியோரின் புதல்வரான ரிஷப மகாராஜன் எட்டாவது அவதாரமாவார். இந்த அவதாரத்தில் பகவான் பூரணத்துவம் பெறும் வழியைக் காட்டினார். புலன்களை முழுமையாக கட்டுப்படுத்தியவர்களாலும், எல்லோருடைய மரியாதைக்கும் உரியவர்களாலும் இவ்வழி பின்பற்றப்படுகிறது.

பதம் 1.3.14
ரிஷிபிர் யாசிதோ பேஜே நவமம் பார்திவம் வபு:
துக்தேமாம் ஓஷதீர் விப்ராஸ் தேனாயம் ஸ உசத்தம:

ருஷிபி:-முனிவர்களால்; யாசித:-வேண்டப்பட்டதால்; பேஜே – ஏற்றார்; நவமம்—ஒன்பதாவது; பார்திவம்-பூமியை ஆள்பவர்; வபு:-உடல்; துக்த—கடிக்கும்; இமாம்—இவ்வெல்லா; ஓஷதீ: — பூமியின் விளைபொருட்கள்; விப்ரா:-பிராமணர்களே; தேன-ஆல்; அயம்—இந்த; ஸ:—அவர்; உசத்தம: – கவர்ச்சியான அழகுடன்.

பிராமணர்களே, ஒன்பதாவது அவதாரத்தில், பகவான், முனிவர்களின் பிரார்த்தனையால் ஓர் அரசரின் (பிருது) உடலை ஏற்றார். அவர் அநேக விளைச்சல்களை உற்பத்தி செய்வதற்காக நிலத்தை உழுது பயிரிட்டார். அதனால் பூமி அழகாகவும், கவர்ச்சியாகவும் காணப்பட்டது.

பதம் 1.3.15
ரூபம்ஸ ஜக்ருஹே மாத்ஸ்யம் சாக்ஷுஷோததி-ஸம்ப்லவே
நாவி ஆரோப்ய மஹீ-மய்யாம் அபாத் வைவஸ்வதம் மனும்

ரூபம்— வடிவம்; ஸ:-அவர்; ஜக்ருஹே-ஏற்றார்; மாத்ஸ்யம்—ஒரு மீனின்; சாக்ஷுஷ-சாக்ஷுஷ; உததி — நீர்; ஸம்ப்லவே-வெள்ளப் பெருக்கு; நாவி—படகின் மீது; ஆரோப்ய— வைத்துக் கொண்டு; மஹீ—பூமியை: மய்யாம்— மூழ்கிய; அபாத்-காப்பாற்றினார்; வைவஸ்வதம்—வைவஸ்வத; மனும்-மனு, மனித குலத் தந்தை.

சாக்ஷஷ மனுவின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, முழுமையான ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உலகம் நீருக்கடியில் மூழ்கிவிட்டது. ஒரு மீனின் (மச்சம்) வடிவத்தை ஏற்ற பகவான், வைவஸ்வத மனுவை ஒரு படகில் ஏறிக்கொள்ளச் செய்து அவரைக் காப்பாற்றினார்.

பதம் 1.3.16
ஸுராஸுராணாம் உததிம் மத்னதாம் மந்தராசலம்
தத்ரே கமட-ரூபேண ப்ருஷ்ட ஏகாதசே விபு:

ஸூர-சுரர்கள் (தேவர்கள்); அஸுராணாம்—அசுரர்களின்; உததிம்—கடலில்; மத்னதாம் –கடையும்; மந்தராசலம்—மந்தார மலையை; தத்ரே- தாங்கினார்; கமட – ஆமை: ரூபேண— எனும் வடிவில்; ப்ருஷ்டே-ஓடு; ஏகாதசே-வரிசையில் பதினொன்றாவதான; விபு:— மிகச் சிறந்த

பதினொன்றாவது அவதாரமாகத் தோன்றிய பகவான் ஒரு ஆமையின் வடிவத்தை ஏற்றார். அப்போது பிரபஞ்சத்தைச் சேர்ந்த சுர, அசுரர்களால் மத்தாக பாவிக்கப்பட்ட மந்தார மலைக்கு அவரது ஓடு ஒரு சுழலச்சாக இருந்தது.

பதம் 1.3.17
தான்வந்தரம் த்வாதசமம் த்ரயோதசமம் ஏவ ச
அபாயயத் ஸுரான் அன்யான் மோஹின்யா மோஹயன் ஸ்த்ரியா

தான்வந்தரம்—தன்வந்தரி எனப்படும் பகவானின் அவதாரம்; த்வாதசமம்-வரிசையில் பன்னிரண்டாவதாக; த்ரயோதசமம் – வரிசையில் பதின்மூன்றாவதாக; ஏவ-நிச்சயமாக; ச—மேலும்; அபாயயத்—பருகுவதற்காகக் கொடுத்தார்; ஸுரான்—தேவர்களுக்கு: அன்யான்- மற்றவர்கள்; மோஹின்யா-வசீகரிக்கும் அழகினால்; மோஹயன்- மயக்கும்; ஸ்த்ரியா-ஒரு பெண்ணின் வடிவில்

பன்னிரண்டாவது அவதாரத்தில் பகவான் தன்வந்தரியாகத் தோன்றினார். பதின்மூன்றாவது அவதாரத்தில், ஒரு பெண்ணின் கவர்ச்சிமிகுந்த அழகின் மூலமாக அவர் அசுரர்களை (நாத்திகர்களை) மயக்கி, தேவர்கள் பருகுவதற்காக அமிர்தத்தைக் கொடுத்தார்.

பதம் 1.3.18
ச துர்தசம் நாரஸிம்ஹம் பிப்ரத் தைத்யேந்ரம் ஊர்ஜிதம்
ததார கரஜைர் ஊராவ் ஏரகாம் கட-க்ருத் யதா

சதுர்தசம்— வரிசையில் பதினான்காவதாக; நார-ஸிம்ஹம்—பாதி மனித, பாதி சிங்க ரூபத்தில் தோன்றிய பகவானின் அவதாரம்; பிப்ரத்—அவதரித்தார்; தைத்ய-இந்ரம் —அசுர ராஜன்; ஊர்ஜிதம்—உறுதியாக அமைந்திருந்த; ததார-இரண்டாகப் பிளந்தார்; கரஜை:-நகங்களால்; ஊரௌ—மடிமீது; ஏரகாம்-பிரம்புகளை; கட-க்ருத் – தச்சன்; யதா— போலவே

பதினான்காவது அவதாரத்தில் பகவான் நாசிம்மஹராகத் தோன்றினார். தச்சனொருவன் பிரம்பைத் துளைத்து இரண்டாக பிளப்பதைப் போலவே, அசுரனான ஹிரண்யகசிபுவின் உறுதியான உடலை அவர் தமது நகங்களினால் இரண்டாகப் பிளந்தார்.

பதம் 1.3.19
பஞ்சதசம் வாமனகம் க்ருத்வாகாத் அத்வரம் பலே:
பத-த்ரயம் யாசமான: ப்ரத்யாதித்ஸுஸ்த்ரி-பிஷ்டபம்

பஞ்சதசம்—வரிசையில் பதினைந்தாவதாக; வாமனகம்—குள்ள பிராமணர்; க்ருத்வா-மேற்கொள்வதன் மூலமாக; அகாத்—சென்றார். அத்வரம்-யாக அரங்கிற்கு: பலே:-பலி மகாராஜனின்; பத-த்ரயம்—மூன்றடிகளை மட்டுமே: யாசமான:—யாசித்து: ப்ரத்யாதித்ஸு:—மனதளவில் அடைய விரும்பி; த்ரி-பிஷ்டபம்— மூன்று கிரக அமைப்புக்களைக் கொண்ட இராஜ்ஜியத்தை.

பதினைந்தாவது அவரதாரத்தில் பகவான் குள்ள பிராமணரின் (வாமனரின்) வடிவத்தை ஏற்று, பலி மகாராஜன் ஏற்பாடு செய்த யாக அரங்கிற்குச் சென்றார். மூன்று கிரக அமைப்புக்களையும் கொண்ட இராஜ்ஜியத்தைத் திரும்ப அடைய வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிய போதிலும், மூன்றடி நிலத்தை மட்டுமே அவர் யாசித்தார்.

பதம் 1.3.20
அவதாரே ஷோடசமே பஸ்யன் ப்ரஹ்ம-த்ருஹோ ந்ருபான்
த்ரி:-ஸப்த-க்ருத்வ: குபிதோ நி:-க்ஷத்ராம் அகரோன் மஹீம்

அவதாரே – பகவானின் அவதாரத்தில்: ஷோடசமே— பதினாறாவது; பஸ்யன்—கண்டு; ப்ரஹ்ம-த்ருஹ:-பிராமணர்களின் உத்தரவுகளை மதிக்காத; ந்ருபான்—அரசர்களை; த்ரி:-ஸப்த—மூவேழு தடவைகள்; க்ருத்வ:- செய்தார்; குபித:-ஈடுபட்டு; நி:-மறுப்பு; க்ஷத்ராம் – அரசாளும் பிரிவினர்; அகரோத்—நடத்தினார்; மஹீம்-பூமி.

பதினாறாவது அவதாரத்தில் பகவான் (பிருகுபதியாக) அவதரித்தார். அரசாளும் பிரிவினர் பிராமணர்களை (புத்திசாலி பிரிவினர்) எதிர்த்து செயற்பட்டதால் அவர்கள் மீது கோபம் கொண்ட பகவான், அரசாளும் பிரிவினரை (க்ஷத்திரியர்களை) இருபத்தோரு தடவைகள் வதம் செய்தார்.

பதம் 1.3.21
தத: ஸப்ததசே ஜாத: ஸத்யவத்யாம் பராசராத்
சக்ரே வேத-தரோ: சாகா த்ருஷ்ட்வா பும்ஸோ ‘ல்ப-மேதஸ:

தத:—அதன் பிறகு; ஸப்ததசே-பதினேழாவது அவதாரத்தில்; ஜாத:-அவதரித்தார்; ஸத்யவத்யாம்-சத்தியவதியின் கர்ப்பத்தில்; பராசராத்-பராசர முனிவரால்; சக்ரே — தயாரித்தார்; வேத-தரோ: – விரும்பியதைத் தரும் மரம் எனப்படும் வேதங்களின்; சாகா:—-கிளைகள்; த்ருஷ்ட்வா-காண்பதன் மூலம்: பும்ஸ:-பொதுமக்கள்; அல்ப மேதஸ:-குறைந்த அறிவுள்ள

அதன் பிறகு பகவானின் பதினேழாவது அவதாரத்தில் ஸ்ரீல வியாசதேவர் தோன்றினார். அவர் பராசர முனிவருக்கும் சத்தியவதிக்கும் புத்திரராக அவதரித்தார். பொதுவாக மக்கள் குறைந்த அறிவுள்ளவர்களாக இருப்பதைக் கண்ட அவர், ஒரு வேதத்தை பல கிளைகளாகவும், உபகிளைகளாகவும் பிரித்தார்.

பதம் 1.3.22
நர-தேவத்வம் ஆபன்ன: ஸுர-கார்ய-சிகீர்ஷயா
ஸமுத்ர-நிக்ரஹாதீனி சக்ரே வீர்யாணி அத: பரம்

நர- மனிதன்; தேவத்வம்-தெய்வீகம்; ஆபன்ன:- உருவத்தை ஏற்றதால்; ஸுர-தேவர்கள்; கார்ய-செயல்கள்; சிகீர்ஷயா – செய்யும் நோக்கத்திற்காக; ஸமுத்ர—-இந்து மகாசமுத்திரம்; நிக்ரஹ-ஆத்னி—அடக்குதல், முதலான; சக்ரே-செய்தார்; வீர்யாணி—-மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல்; அத: பரம் – அதன் பிறகு.

பதினெட்டாவது அவதாரத்தில் பகவான், மன்னராகிய ஸ்ரீ ராமராக அவதரித்தார். தேவர்களை திருப்திப்படுத்துவதற்காக அவர் இந்து மகா சமுத்திரத்தை அடக்கி, கடலுக்கு அப்புறமிருந்த இராவணனைக் கொன்று மனித சக்திக்கு அப்பாற்பட்ட தமது ஆற்றலை வெளிப்படுத்தினார்.

பதம் 1.3.23
ஏகோனவிம்சே விம்சதிமே விருஷ்ணிஷு ப்ராப்ய ஜன்மனீ
ராம-க்ருஷ்ணாவ் இதி புவோ பகவான் அஹரத் பரம்

ஏகோனவிம்சே – பத்தொன்பதாவதில்: விம்சதிமே – இருபதாவதிலும் கூட; வ்ருஷ்ணிஷு—விருஷ்ணி வம்சத்தில்; ப்ராப்ய-பெற்றதால்; ஜன்மனி—பிறவிகளை; ராம-பலராமர்; க்ருஷ்ணௌ—ஸ்ரீ கிருஷ்ணர்; இதி—-இவ்வாறாக; புவ:—-உலகின்; பகவான்-பரமபுருஷ பகவான்; அஹரத்—அகற்றினார்; பரம்-பாரத்தை.

பத்தொன்பதாவது மற்றும் இருபதாவது அவதாரங்களில் பகவான் பலராமராகவும். ஸ்ரீ கிருஷ்ணராகவும் சுயமாகத் தோன்றினார். இவ்வாறு விருஷ்ணி குலத்தில் (யது வம்சத்தில்) தோன்றிய அவர் உலகின் சுமையைப் போக்கினார்.

பதம் 1.3.24
தத: கலௌ ஸம்ப்ரவ்ருத்தே ஸம்மோஹாய ஸுர த்விஷாம்
புத்தோ நாம்னாஞ்ஜன-ஸுத: கீகடேஷு பவிஷ்யதி

தத:—அதன் பிறகு: கலௌ—-கலியுகம்: ஸம்ப்ரவ்ருத்தே – விளைந்ததால்; ஸம்மோஹாய— ஏமாற்றும் நோக்கத்திற்காக; ஸூர—ஆத்திகர்கள்; த்விஷாம்—பொறாமை கொண்டவர்கள்; புத்த:—பகவான் புத்தர்; நாம்னா- எனும் பெயர் கொண்ட; அஞ்சன-ஸுத:—அவரது தாயார் அஞ்சனையாவார்; கீகடேஷு—கயா (பீகார்) மாநிலத்தில் பவிஷ்யதி- நிகழும்

பிறகு, கலியுக ஆரம்பத்தில், கயா மாநிலத்தில், அஞ்சனாவின் புதல்வராக புத்த பகவான் தோன்றுவார். நம்பிக்கையுள்ள ஆஸ்திகர்களிடம் பொறாமை கொண்டவர்களை தந்திரமாக வழிப்படுத்துவதே அவருடைய அவதார நோக்கமாகும்.

பதம் 1.3.25
அதாஸெள யுக-ஸந்த்யாயாம் தஸ்யு- ப்ராயேஷு ராஜஸு
ஜனிதா விஷ்ணு-யசஸோ நாம்னா கல்கிர் ஜகத்-பதி:

அத-அதன்பிறகு; அஸௌ—அதே இறைவன்; யுக-ஸந்த்யாயாம்—யுகங்களின் சேர்க்கையின் போது, தஸ்யு—கொள்ளையடிப்பவர்கள்; ப்ராயேஷு – ஏறக்குறை எல்லா; ராஜஸு—ஆளுநர்களும்; ஜனிதா— பிறவியெடுப்பார்; விஷ்ணு—விஷ்ணு எனும் பெயர் கொண்ட; யசஸ:—யசா என்ற துணைப்பெயர் கொண்ட: நாம்னா—எனும் பெயரில்; கல்கி:—-பகவானின் அவதாரம்; . ஜகத்;—பதி சிருஷ்டியின் அதிபதி.

அதன் பிறகு, இரு யுகங்கள் இணையும் சமயத்தில், சிருஷ்டியின் அதிபதியான பகவான் கல்கி அவதாரத்தை ஏற்று, விஷ்ணு யசாவின் புதல்வராகத் தோன்றுவார். இச்சமயத்தில் பூமியை ஆள்பவர்கள் கெட்டு கொள்ளக்காரர்களாக மாறி இருப்பார்கள்.

பதம் 1.3.26
அவதாரா ஹி அஸங்க்யேயா ஹரேஹ் ஸத்வ-நிதேர் த்விஜா:
யதாவிதாஸின: குல்யா: ஸரஸ: ஸ்யு: ஸஹஸ்ரச:

அவதாரா-அவதாரங்கள்; ஹி—நிச்சயமாக; அஸங்க்யேயா—எண்ணற்ற; ஹரே:—பகவான் ஹரியின்; ஸத்வ-நிதே: – நற்குணம் வாய்ந்த கடலின்; த்விஜா:-பிராமணர்கள்; யதா-உள்ளபடி; அவிதாஸின: – வற்றாத; குல்யா:-சிற்றாறுகள்; ஸரஸ:-பரந்த ஏரிகளின்; ஸ்யு: – உள்ளன; ஸஹஸ்ரச:-ஆயிரக்கணக்கான.

பிராமணர்களே, பகவானுடைய அவதாரங்கள், வற்றாத நீர்த்தேக்கத்திலிருந்து பாய்ந்தோடும் சிற்றாறுகளைப் போல் எண்ணற்றவையாகும்.

பதம் 1.3.27
ருஷயோ மனவோ தேவா மனு-புத்ரா மஹௌ ஜஸ:
கலா: ஸர்வே ஹரேர் ஏவ ஸப்ரஜாபதய: ஸ்ம்ருதா:

ருஷய:- எல்லா முனிவர்களும்; மனவ:-எல்லா மனுக்களும்; தேவா – எல்லா தேவர்களும்; மனு-புத்ரா;—மனு வம்சத்தினர் அனைவரும்; மஹா—ஓஜஸ:—மிகவும் சக்தி வாய்ந்த; கலா:— அம்சத்தின் அம்சம்: ஸர்வே—அனைத்தும் சேர்ந்து: ஹரே:-பகவானின்; ஏவ-நிச்சயமாக: ஸ-ப்ரஜாபதய:-பிரஜாபதிகளுடன்; ஸ்ம்ருதா;— அறியப்படுகின்றனர்.

பிரத்தியேகமான சக்தி பெற்றவர்களாகிய ரிஷிகள், மனுக்கள், தேவர்கள் மற்றும் மனு வம்சத்தினர் ஆகிய அனைவரும் பகவானுடைய அம்சங்கள் அல்லது அம்சங்களின் அம்சங்களாவர். இதில் பிரஜாபதிகளும் அடங்குவர்.

பதம் 1.3.28
ஏதே சாம்ச கலா: பும்ஸ: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம்
இந்ராரி-வ்யாகுலம் லோகம் ம்ருதயந்தி யுகே யுகே

ஏதே – இவ்வெல்லா ; ச—மேலும்; அம்ச— அம்சங்கள்; கலா:—அம்சங்களின் அம்சங்கள்; பும்ஸ:-பகவானின்; க்ருஷ்ண:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; து—ஆனால்; பகவான்—முழுமுதற் கடவுள்; ஸ்வயம்— சுயமாக (தாமாக); இந்ர-அரி—இந்திரனின் எதிரிகள்; வ்யாகுலம்—தொல்லைப்படுத்தப்படும்; லோகம்—எல்லா கிரகங்களும்; ம்ருதயந்தி— பாதுகாப்பு அளிக்கிறார்; யுகே யுகே—வெவ்வேறு யுகங்களில்.

மேற்குறிப்பிட்ட அவதாரங்கள் அனைத்தும் பகவானின் அம்சங்களோ அல்லது அம்சங்களின் அம்சங்களோதான். ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரோ மூல முழுமுதற் கடவுளாவார். நாஸ்திகர்களால் தொல்லை விளைவிக்கப்படும் போதெல்லாம் அவர்களனைவரும் பிரபஞ்சத்தில் தோன்றுகின்றனர். ஆஸ்திகர்களைக் காப்பதற்காகவே பகவான் அவதரிக்கிறார்.

பதம் 1.3.29
ஜன்ம குஹ்யம் பகவதோ ய ஏதத் ப்ரயதோ நர:
ஸாயம் ப்ராதர் க்ருணன் பக்த்யா துஹ்க-க்ராமாத் விமுச்யதே

ஜன்ம – பிறப்பு; குஹ்யம்-மர்மமான; பகவத:—பகவானின்; ய:- ஒருவன்; ஏதத்—இவ்வெல்லா; ப்ரயத:—சிரத்தையுடன்; நர:-மனிதன்; ஸாயம்-மாலை நேரம்; ப்ராத—காலை நேரம்: க்ருணன்—-படிக்கும்; பக்த்யா-பக்தியுடன்; துஹ்க—க்ராமாத்—எல்லா துன்பங்களில் இருந்தும்; விமுச்யதே -விடுதலை அடைகிறான்.

பகவானின் மர்மமான தோற்றங்களைப் பற்றி காலையிலும், மாலையிலும், சிரத்தையுடனும், பக்தியுடனும் படிப்பவர் யாரக இருந்தாலும், அவர் வாழ்வின் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபடுவார்.

பதம் 1.3.30
ஏதத் ரூபம் பகவதோ ஹி அரூபஸ்ய சித்- ஆத்மன:
மாயா-குணைர் விரசிதம் மஹதாதிபி்ர் ஆத்மனி

ஏதத்-இவ்வெல்லா; ரூபம்—வடிவங்களும்: பகவத:-பகவானுடைய; ஹி—நிச்சயமாக; அரூபஸ்ய-ஜடவுருவம் இல்லாதவரின், சித்—ஆத்மன:—திவ்யத்தின்; மாயா—ஜடசக்தி: குணை:-குணங்களால்; விரசிதம்—உண்டாக்கப்பட்ட; மஹத்—-ஆதிபி:—பௌதிக மூலப்பொருட்களால்; ஆத்மனி—ஆத்மாவில்.

ஜடவுலகில் காணப்படும் பகவானின் விராட் ரூபம் அல்லது விஸ்வரூபத்தை பற்றிய கருத்து கற்பனையானதாகும். பகவானுக்கு உருவம் இருக்கிறது என்பதை குறைந்த அறிவு உள்ளவர்களையும், ஆரம்ப சாதகர்களையும் நம்பச் செய்வதற்காகவே அது உள்ளது ஆனால் உண்மையில் பகவானுக்கு பெளதிக உருவம் இல்லை.

பதம் 1.3.31
யதா நபஸி மேகௌகோ ரேணுர் வா பார்திவோ’நிலே
ஏவம் த்ரஷ்டரி த்ருஸ்யத்வம் ஆரோபிதம் அபுத்திபி:

யதா—அதை உள்ளவாறு; நபஸி—ஆகாயத்தில்; மேக-ஓக:- மேகக் கூட்டங்கள்; ரேணு:—புழுதி; வா—அத்துடன்; பார்திவ:—கலங்கிய நிலை; அனிலே—காற்றில்; ஏவம்— இவ்வாறாக; த்ரஷ்டரி—காண்பவருக்கு; த்ருஸ்யத்வம்—காணும் நோக்கத்திற்காக; ஆரோபிதம்— உறுதியாக கூறப்படுகிறது; அபுத்திபி:—புத்தியில் தாழ்ந்தவர்களால்.

மேகங்களும் புழுதியும் காற்றால் அடித்துச் செல்லப்படுகின்றன. ஆனால் ஆகாயம் மேகங்களால் சூழப்பட்டதாகவும், காற்று அசுத்தமாகவும் இருப்பதாக புத்தியில் தாழ்ந்தவர்கள் கூறுகின்றனர். அதைப் போன்றுதான், பெளதிகமான தேகாபிமான கருத்துக்களையும் கூட அவர்கள் ஜீவாத்மாவின் மீது சுமத்துகின்றனர்.

பதம் 1.3.32
அத: பரம் யத் அவ்யக்தம் அவ்யூட-குண-ப்ரும்ஹிதம்
அத்ருஷ்டாஸ்ருத-வஸ்துத்வாத்ஸ ஜீவோ யத் புனர்-பவ:

அத:—இந்த; பரம்- அப்பால்; யத்—எது; அவ்யக்தம்— தோற்றுவிக்கப்படாத; அவ்யூட—வழக்கமான வடிவம் இல்லாத; குண-ப்ரும்ஹிதம்; —குணங்களால் பாதிப்படைந்த; அத்ருஷ்ட—காணப்படாத; அஸ்ருத—கேட்கப்படாத; வஸ்துத்வாத்—அப்படி இருப்பதால்; ஸ: – அது; ஜீவ:—ஜீவராசி; யத் — எதுவென்று; புன-பாவ:—தொடர்ந்து பிறவிகளை எடுக்கிறான்.

இந்த ஸ்தூல உருவத்திற்கு அப்பால் மற்றொரு சூட்சுமமான உருவம் இருக்கிறது. அது சாதாரண உருவத்தைப் போல் காணப்படக்கூடியதும், கேட்டறியதக்கதும், தோன்றக்கூடியதும் அல்ல. இந்த சூட்சும சரீரத்திற்கு அப்பாற்பட்ட ஜீவனுக்கு உருவம் இருக்கிறது. இல்லையெனில் தொடர்ந்து பிறவிகளை அவனால் ஏற்றிருக்க முடியாது.

பதம் 1.3.33
யத்ரேமே ஸத்-அஸத்-ரூபே ப்ரதிஷித்தே ஸ்வ-ஸம்விதா
அவித்யயாத்மனி க்ருதே இதி தத் ப்ரஹ்ம-தர்சனம்

யத்ர—எப்போதெல்லாம்; இமே-இவை அனைத்திலும்; ஸத்—அஸத்—ஸ்தூல மற்றும் சூட்சும; ரூபே-வடிவங்களில்; ப்ரதிஷித்தே—பயனற்றுப் போகும்போது; ஸ்வ—ஸம்விதா;—தன்னுணர்வு மூலமாக; அவித்யயா —-அறியாமையால்; ஆத்மனி- ஆத்மாவில்; க்ருதே- சுமத்தப்பட்டதால்; இதி—இவ்வாறாக; தத்—அதுவே; ப்ரஹ்ம— தர்சனம்-பகவானைக் காணும் முறையாகும்.

ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களுக்கும், தூய ஆத்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எப்போது ஒருவன் தன்னுணர்வின் வாயிலாக அறிகின்றானோ, அப்போது தன்னையும், பகவானையும் அவனால் காணமுடியும்.

பதம் 1.3.34
யதி ஏஷோபரதா தேவீ மாயா வைசாரதீ மதி:
ஸம்பன்ன ஏவேதி விதுர் மஹிம்னி ஸ்வே மஹீயதே

யதி—அப்படியானால்; ஏஷா—அவை; உபரதா—குறைந்துவிட்டால்; தேவீமாயா – மாயா சக்தி; வைசாரதீ—பூரண அறிவு; மதி:—-மெய்யறிவு; லம்பன்ன- அதனால் வளப்படுத்தப்பட்டு; ஏவ—நிச்சயமாக; இதி-இவ்வாறாக; விது:—அதை உணர்ந்திருப்பதால்; மஹிம்னி–-மகிமைகளில்; ஸ்வே—ஆத்மாவின்; மஹீயதே-இருப்பதால்.

பகவானின் கருணையினால், ஜீவராசியிடமுள்ள மாயா சக்தி ஒடுக்கப்பட்டு, அவனுடைய அறிவு முழுமையாக வளப்படுத்தப்படுகின்றது. இதனால் அவன் உடனே தன்னுணர்வுடன் கூடிய மெய்யறிவைப் பெற்று, அவனுடைய சுய மகிமையில் நிலை பெறுகிறான்.

பதம் 1.3.35
ஏவம் ஜன்மானி கர்மாணி ஹி அகர் துர் அஜனஸ்ய ச
வர்ணயந்தி ஸ்ம கவயோ வேத-குஹ்யானி ஹ்ருத்-பதே:

ஏவம்-இவ்வாறாக; ஜன்மானி-பிறப்பு; கர்மாணி—செயல்கள்; ஹி – நிச்சயமாக; அகர்து:—செயலற்றவரின்; அஜனஸ்ய-பிறப்பற்றவரின் ச—மேலும்; வர்ணயந்தி-விவரிக்கின்றன; ஸ்ம—கடந்த காலத்தில்; கவய:—அறிஞர்கள்; வேத;—குஹ்யானி—வேதங்களால் கண்டறிய முடியாதவர்: ஹ்ருத்-பதே:—இதய தெய்வத்தின்

பிறப்பற்றவராகவும், செயலற்றவராகவும் இருப்பவரின் பிறவிகளையும் செயல்களையும் அறிஞர்கள் இவ்வாறு விவரிக்கின்றனர். வேத நூல்களிலும் கூட கண்டறிய முடியாதவரான அவரே இதய தெய்வமாவார்.

பதம் 1.3.36
ஸ வா இதம் விஸ்வம் அமோக-லீல:
ஸ்ருஜதி அவதி அத்தி ந ஸஜ்ஜதே ’ஸ்மின்
பூ தேஷு சாந்தர்ஹித ஆத்ம-தந்த்ர:
ஷாட்-வர்கிகம் ஜிக்ரதி ஷட்-குணேச:

ஸ:—பரம புருஷர்; வா-ஒவ்வொன்றாக மாறி: இதம்—இந்த; விஸ்வம்-தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்சங்களை; அமோக-லீலா:—களங்கமற்ற செயல்களைக் கொண்டவர்; ஸ்ருஜதி-படைக்கிறார்; அவதி அத்தி—காத்து, அழிக்கிறார்; ந—-இல்லை; ஸஜ்ஜதே—அதனால் பாதிக்கப்படுகிறார்; அஸ்மின்—அவற்றில்; பூதேஷு—எல்லா ஜீவ ராசிகளிலும்; ச—மேலும்; அந்தர்ஹித:—உள்ளே வாழும்; ஆத்ம—தந்த்ர:—சுய சுதந்திரம்; ஷாட்-வர்கிகம்—அவரது ஐஸ்வர்யங்களின் எல்லா சக்திகளையும் கொண்ட; ஜிக்ரதி—நறுமணத்தை முகர்வதைப் போல; மேலோட்டமாக பற்றுகொண்டு; ஷட்—குண—ஈச:-ஆறு புலன்களுக்கும் எஜமானர்.

களங்கப்படாத செயல்களைக் கொண்டவரான பகவான் ஆறு புலன்களுக்கும் எஜமானரும், ஆறு ஐஸ்வர்யங்களுடன் கூடிய முழு சக்தியைக் கொண்டவருமாவார். பிரபஞ்சங்களை அவர் படைத்து, காத்து; அழிக்கிறார் என்றாலும் அதனால் அவர் சிறிதும் பாதிப்படைவதில்லை. ஒவ்வொரு ஜீவராசியின் உள்ளேயும் இருப்பவரான அவர், எப்பொழுதும் சுதந்திரமாகவே இருக்கிறார்.

பதம் 1.3.37
ந சாஸ்ய கஸ்சின் நிபுணேன தாதுர் அவைதி ஜந்து: குமனீஷ ஊதீ:
நாமானி ரூபாணி மனோ-வசோபி: ஸந்தன்வதோ நட-சர்யர் இவாக்ஞ:

ந—இல்லை; ச-மேலும்; அஸ்ய—அவரது; கஸ்சித்—எவரொருவர்; நிபுணேன—சாமர்த்தியத்தால்; தாது:—படைப்பவரின்; அவைதி—அறியமுடியும்; ஐந்து:—ஜீவராசி; குமனீஷ—அறிவு பற்றாக்குறைவுடன்; ஊதீ:—பகவானின் செயல்கள்; நாமானி—அவரது நாமங்கள்; ரூபாணி—அவரது வடிவங்கள்; மன:-வசோபி:—-மனக்கற்பனையால் அல்லது சொற்பொழிவு ஆற்றுதல்; ஸந்தன்வத:—வெளிப்படுத்தி: நட-சர்யாம்— நாடகத்திற்குரிய ஒரு செயல்; இவ—போல்; அக்ஞ—மூடர்கள்.

ஒரு நாடக நடிகரைப் போல் செயற்படும் பகவானின் உருவங்கள். நாமங்கள் மற்றும் செயல்கள் ஆகியவற்றின் உன்னத தன்மையை அறிவு பற்றாக்குறையாக உள்ள மூடர்களால் அறிய முடியாது. அத்தகைய விஷயங்களை அவர்களுடைய கற்பனைகளிலோ அல்லது வார்த்தைகளிலோ கூட அவர்களால் விவரிக்க முடியாது.

பதம் 1.3.38
ஸ வேத தாது: பதவீம் பரஸ்ய
துரந்த-வீர்யஸ்ய;— ரதாங்க-பாணே:
யோ ‘மாயயா ஸந்ததயானுவ்ருத்யா
பஜேத தத்-பாத-ஸரோஜ-கந்தம்

ஸ:—அவர் மட்டுமே; வேத- அறிய முடியும்; தாது:—படைத்தவரின்; பதவீம்— பெருமைகளை: பரஸ்ய-தெய்வீகத்தின்; துரந்த—வீர்யஸ்ய—மிகவும் சக்தி வாய்ந்தவரின்; ரத—அங்க-பாணே:—ஓர் கிரகத்தின் சக்கரத்தை கரத்தில் ஏந்தியிருப்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; ய:-யாரொருவர்; அமாயயா—தயக்கமின்றி; ஸந்ததயா—இடைவெளி இல்லாமல்; அனுவ்ருத்யா—அனுகூலமாக; பஜேத—சேவை செய்கிறார்; தத்—பாத;—அவரது பாதங்களின்; ஸரோஜ—கந்தம்;—தாமரையின் மணம்.

இரதத்தின் சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தயக்கம் இல்லாமலும், அனுகூலமான முறையிலும், இடைவிடாமல் தொண்டு செய்பவர்களால் மட்டுமே பிரபஞ்சத்தைப் படைத்தவரான அவரது புகழ், சக்தி மற்றும் உன்னத தன்மை ஆகியவற்றை முழுமையாக அறிய முடியும்.

பதம் 1.3.39
அதேஹ தன்யா பகவந்த இத்தம்
யத் வாஸுதேவே’ இல-லோக-நாதே
குர்வந்தி ஸர்வாத்மகம் ஆத்ம-பாவம்
ந யத்ர பூய: பரிவர்த உக்ர:

அத— இவ்வாறாக; இஹ—இவ்வுலகில்; தன்யா:- வெற்றி; பகவன்த:—பரிபூரண உணர்வு; இத்தம்—இத்தகைய: யத்— என்ன; வாஸுதேவே-முழுமுதற் கடவுளுக்கு; அகில-அனைத்தையும் தழுவிய; லோக—நாதே;—எல்லா பிரபஞ்சங்களுக்கும் எஜமானருக்கு; குர்வந்தி— எழுப்புகின்றது; ஸர்வ—ஆத்மகம்;—நூறு சதவீதம்; ஆத்ம—ஆத்மா; பாவம்—பரவசம்; ந-ஒருபோதும் இல்லை; யத்ர-எங்கு; பூய:— மீண்டும்; பரிவர்த-தொடர்ச்சியான; உக்ர:—பயங்கரமான.

இவ்வுலகில் இத்தகைய விசாரணைகளைச் செய்வதன் மூலமாக மட்டுமே ஒருவரால் வெற்றியையும், பரிபூரண உணர்வையும் பெற முடியும். ஏனெனில், அத்தகைய விசாரணைகள், அகில லோகங்களுக்கும் எஜமானரான முழுமுதற் கடவுளிடம் பரவசமான தெய்வீக அன்பை எழுப்பி, பயங்கரமான பிறப்பு, இறப்பெனும் தொடர்ச்சியில் இருந்து பூரணமான விடுதலைக்குரிய உத்தரவாதத்தை அளிக்கின்றன.

பதம் 1.3.40
இதம் பாகவதம் நாம புராணம் ப்ரஹ்ம-ஸம்மிதம்
உத்தம-ஸ்லோக-சரிதம் சகார பகவான் ருஷி:
நிஹ்ஸ்ரேயஸாய லோகஸ்ய தன்யம் ஸ்வஸ்தி-அயனம் மஹத்

இதம்—இந்த; பாகவதம்—பரமபுருஷ பகவான் மற்றும் அவரது தூய பக்தர்களின் வரலாறுகளைக் கொண்ட நூல்; நாம—நாமத்தின்; புராணம்— புராணம்; ப்ரஹ்ம—ஸம்மிதம்;—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம்; உத்தம—ஸ்லோக—உத்தமமான சுலோக ங்களால் போற்றப்படும் பகவான்; சரிதம்—செயல்கள்; சகார—தொகுக்கப்பட்ட; பகவான்—பரம புருஷ பகவானின் அவதாரம்; ருஷி:-ஸ்ரீல வியாசதேவர்; நிஹ்ஸ்ரேயஸாய—இறுதி நன்மைக்காக; லோகஸ்ய—அனைத்து மக்களின்; தன்யம்—முழு வெற்றியுடையது; ஸ்வஸ்தி அயனம் — பேரின்பம்; மஹத்—பரிபூரணம்.

இந்த ஸ்ரீமத்-பாகவதம் பகவானின் இலக்கிய அவதாரமாகும். இது பகவானின் அவதாரமாகிய ஸ்ரீல வியாசதேவரால் தொகுக்கப்பட்டது. உலக மக்களின் இறுதி நன்மைக்காக ஏற்பட்டதாகும். மேலும் இது பூரண வெற்றியளிப்பதும், பேரின்பம் அளிப்பதும், பரிபூரணமானதும் ஆகும்.

பதம் 1.3.41
தத் இதம் க்ராஹயாம் ஆஸ ஸுதம் ஆத்மவதாம் வரம்
ஸர்வ வேதேதிஹாஸானாம் ஸாரம் ஸாரம் ஸமுத்ருதம்

தத்-அந்த: இதம்— இந்த; க்ராஹயாம் ஆஸ—ஏற்கச் செய்தார்; ஸுதம்—அவரது புதல்வரை; ஆத்மவதாம்—தன்னுணர்வு பெற்றவரின்; வரம்—மிகவும் மரியாதைக்குரிய; ஸர்வ—எல்லா; வேதே—வேத இலக்கியங்கள் (அறிவு நூல்கள்); இதிஹாஸானாம்—அனைத்து சரித்திரங்களின்; ஸாரம்—சாராம்சத்தை; ஸாரம் சாராம்சத்தை; ஸமுத்ருதம்- பிரித்தெடுத்த.

ஸ்ரீல வியாசதேவர், வேத இலக்கியங்கள் மற்றும் பிரபஞ்ச சரித்திரங்கள் ஆகிய அனைத்தின் சாராம்சத்தையும் பிரித்தெடுத்தபின், அதை ஆத்ம ஞானிகளில் சிறந்தவரான தன் புத்திரருக்கு உபதேசித்தார்.

பதம் 1.3.42
ஸ து ஸம்ஸ்ராவயாம் ஆஸ மஹாராஜம் பரீக்ஷிதம்
ப்ராயோபவிஷ்டம் கங்காயாம் பரீதம் பரமர்ஷிபி:

ஸ:—வியாசதேவரின் புதல்வர்; து-மீண்டும்; ஸம்ஸ்ராவயாம் ஆஸ—அவற்றைக் கேட்கும்படிச் செய்தார்; மஹா-ராஜம்;— மகாராஜனுக்கு; பரீக்ஷிதம்—பரீட்சித்து எனும் பெயர் கொண்ட; ப்ராய—உபவிஷ்டம்;—இறக்கும்வரை உணவோ அல்லது நீரோ இல்லாமல் அமர்ந்திருந்தவரான; கங்காயாம்—கங்கை நதிக் கரையில், பரீதம்— சூழப்பட்டு; பரம –ருஷிபி:—பெரும் முனிவர்களால்.

மரணத்தை எதிர்நோக்கி உணவும். நீரும் இல்லாமல் கங்கை நதிக் கரையில் அமர்த்துவிட்டவரான புகழ்பெற்ற பரீட்சித்து மகாராஜனுக்கு. வியாசதேவரின் புதல்வரான சுகதேவ கோஸ்வாமி பாகவதத்தை முறைப்படி உபதேசித்தார்.

பதம் 1.3.43
க்ருஷணே ஸ்வ-தாமோபகதே தர்ம-ஞானாதிபி: ஸஹ
கலௌ நஷ்ட-த்ருசாம் ஏஷ புராணர்கோ ’துனோதித:

க்ருஷ்ணே—கிருஷ்ணருடையதில்; ஸ்வ—தாம:—சொந்த வசிப்பிடத்திற்கு; உபகதே—திரும்பிச் சென்றுவிட்டதால்; தர்ம-மதம்; ஞான—அறிவு; ஆதிபி:— ஒன்றாக இணைந்து; ஹை—அவருடன்; கலௌ— கலியுகத்தில்; நஷ்ட-த்ருசாம்— தங்களது பார்வையை இழந்து விட்டவர்களின்; ஏஷ:—இவ்வெல்லா; புராண—அர்க: -சூரியனைப் போல் பிரகாசிக்கும் புராணம்; அதுனா —சற்று முன்புதான்; உதித:—உதித்துள்ளது.

இந்த பாகவத புராணம் சூரியனைப் போல் பிரகாசமானதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மதம், அறிவு போன்றவைகளுடன் அவரது சொந்த வசிப்பிடத்திற்கு புறப்பட்ட உடனேயே இது உதயமாகி இருக்கிறது. கலியுகத்தில் அறியாமை எனும் இருளினால் பார்வையை இழந்தவர்கள் இப்புராணத்திலிருந்து ஒளியைப் பெறலாம்.

பதம் 1.3.44
தத்ர கீர்தயதோ விப்ரா விப்ரர்ஷேர் பூரி-தேஜஸ:
அஹம் சாத்யகமம் தத்ர நிவிஷ்டஸ் தத்-அனுக்ரஹாத்
ஸோ ’ஹம்’ வ: ஸ்ராவயிஷ்யாமி யதாதீதம் யதா-மதி

தத்ர- அங்கு; கீர்தயத:—ஒப்பிக்கும்பொழுது; விப்ரா:— பிராமணர்களே; விப்ர—ருஷே:—சிறந்த பிராமண ரிஷியிடமிருந்து; பூரி— மிகவும்: தேஜஸ:—-சக்தி வாய்ந்த; அஹம்—நான்; ச-மேலும்; அத்யகமம்—அறிந்துகொள்ள முடிந்தது: தத்ர—அக்கூட்டத்தில்; நிவிஷ்ட:—- முழு கவனத்துடன் இருந்ததால்; தத்—அனுக்ரஹாத்:—அவரது கருணையால்; ஸ:—அதே விஷயத்தை; அஹம்—-நான்; வ:—உங்களுக்கு; ஸ்ராவயிஷ்யாமி—நீங்கள் கேட்க அனுமதிக்கிறேன்; யதா-அதீதம் யதா—மதி:—நான் உணர்ந்தபடி.

கற்றறிந்த பிராமணர்களே, சுகதேவ கோஸ்வாமி அங்கு (பரீட்சித்து மகாராஜனுக்கு) பாகவதத்தைக் கூறியபொழுது, முழு கவனத்துடன் நானும் சக்தி வாய்ந்த அந்த மாமுனிவரின் அனுக்கிரகத்தால் அவரிடமிருந்து கேட்டறிந்த அவ்விஷயத்தை என் புத்திக்கெட்டியபடி உங்களுக்குச் சொல்ல முயற்சிக்கிறேன்.


ஸ்ரீமத் பாகவதம், முதல் காண்டத்தின் “கிருஷ்ணரே எல்லா அவதாரங்களுக்கும் மூலம்” எனும் தலைப்பைக் கொண்ட மூன்றாம் அத்தியாயத்திற்கான பக்திவேதாந்தப் பொருளுரைகள் இவ்வாறு நிறைவு பெறுகின்றன. .

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare