அத்தியாயம் – 13
இயற்கையும், அனுபவிப்பவனும், உணர்வும்
பதம் 13.1 – 13.2
அர்ஜுன உவாச
ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ர-க்ஞம் ஏவ ச
ஏதத் வேதிதும் இச்சாமி க்ஞானம் க்ஞேயம் ச கேஷவ

ஸ்ரீ-பகவான் உவாச
இதம் ஷரீரம் கௌந்தேய க்ஷேத்ரம் இத்-யபி தீயதே
ஏதத் யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ர-க்ஞ இதி தத்-வித:

அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; ப்ரக்ரு’திம் — இயற்கை; புருஷம் – அனுபவிப்பவன்; ச – மற்றும்; ஏவ – நிச்சயமாக; க்ஷேத்ரம் – களம்; க்ஷேத்ரஜ்ஞம் — களத்தை அறிபவன்; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்; ஏதத் – இவற்றையெல்லாம்; வேதிதும் – புரிந்துகொள்ள; இச்சாமி – விரும்புகின்றேன்; ஜ்ஞானம் – அறிவு; ஜ்ஞேயம் – அறியப்படும் பொருள்; ச – மேலும்; கேஷவ – கிருஷ்ணரே;
ஸ்ரீ-பகவான் உவாச – முழுமுதற் கடவுள் கூறினார்; இதம் – இந்த; ஷரீரம் – உடல்; கௌந்தேய – குந்தியின் மகனே; க்ஷேத்ரம் – களம்; இதி – என்று; அபிதீயதே – அறியப்படுகின்றது; ஏதத் – இதை; ய: – எவனொருவன்; வேத்தி – அறிகின்றானோ; தம் – அவன்; ப்ராஹு: – அறியப்படுகின்றான்; க்ஷேத்ரஜ்ஞ – களத்தை அறிபவன்; இதி – இவ்வாறு; தத்-வித: – இதை அறிந்தவர்கள்.

அர்ஜுனன் கூறினான்: எனதன்பு கிருஷ்ணரே, இயற்கை (பிரக்ருதி), அனுபவிப்பவன் (புருஷ), களம் (க்ஷேத்ர), களத்தை அறிபவன் (க்ஷேத்ரக்ஞ), அறிவு (க்ஞானம்), அறியப்படும் பொருள் (க்ஞேயம்) ஆகியவற்றைப் பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: குந்தியின் மகனே, இந்த உடல், களம் (க்ஷேத்ர) என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுடலை அறிபவன், களத்தை அறிபவன் (க்ஷேத்ரக்ஞ) என்று அழைக்கப்படுகிறான்.

பதம் 13.3
க்ஷேத்ர-க்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வ-க்ஷேத்ரேஷு பாரத
க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞயோர் க்ஞானம் யத்-தஜ்-க்ஞானம் மதம் மம


க்ஷேத்ர-ஜ்ஞம் – களத்தை அறிபவன்; ச – மற்றும்; அபி – நிச்சயமாக; மாம் — என்னை; வித்தி – அறிவாய்; ஸர்வ – எல்லா; க்ஷேத்ரேஷு – உடல்களங்களிலும்; பாரத – பரதனின் மகனே; க்ஷேத்ர – செயல்களின் களம் (உடல்); க்ஷேத்ர-ஜ்ஞயோ – களத்தை அறிபவனும்; ஜ்ஞானம் – அறிவு; யத் – எந்த; தத் – அந்த; ஜ்ஞானம் – அறிவு; மதம் – அபிப்பிராயம்; மம – எனது.

பரத குலத் தோன்றலே, நானும் எல்லா உடல்களிலும் அறிபவனாக உள்ளேன் என்பதை புரிந்துகொள். உடலையும் அதனை அறிபவனையும் புரிந்துகொள்வதே ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. இதுவே எனது அபிப்பிராயம்.

பதம் 13.4
தத் க்ஷேத்ரம் யச் ச யாத்ருக் ச யத்-விகாரி யதஷ் ச யத்
ஸ ச யோ யத்-ப்ரபாவஷ் ச தத் ஸமாஸேன மே ஷ்ருணு


தத் – அந்த; க்ஷேத்ரம் – செயல்களின் களம்; யத் – என்ன; ச – மற்றும்; யாத்ரு’க் — உள்ளது உள்ளபடி; ச – மற்றும்; யத் – எது; விகாரி – மாறுகின்றது; யத: – எதிலிருந்து; ச – மற்றும்; யத் – என்ன; ஸ: – அவன்; ச – மற்றும்; ய: – யார்; யத் – என்ன; ப்ரபாவ: – செல்வாக்கு; ச – மற்றும்; தத் – அதை; ஸமாஸேன – சுருக்கமாக; மே – என்னிடமிருந்து; ஷ்ரு’ணு – கேள்.

செயல்களின் களம் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது, அதன் மாற்றங்கள் யாவை, அஃது எப்போது உண்டாக்கப்படுகின்றது, செயல்களின் களத்தை அறிபவன் யார், அவனது செல்வாக்குகள் யாவை, என்பதைப் பற்றிய எனது சுருக்கமான உரையை இனிக் கேட்பாயாக.

பதம் 13.5
ருஷிபிர் பஹுதா கீதம் சந்தோபிர் விவிதை: ப்ருதக்
ப்ரஹ்ம-ஸூத்ர-பதைஷ் சைவ ஹேதுமத்பிர் வினிஷ்சிதை:

ரு’ஷிபி: – அறிவிற் சிறந்த முனிவர்களால்; பஹுதா – பல வழிகளில்; கீதம் – விளக்கப்பட்டுள்ளது; சந்தோபி: – வேத மந்திரங்களால்; விவிதை: – பல்வேறு; ப்ருதக் – பலவாறு; ப்ரஹ்ம-ஸூத்ர – வேதாந்தத்தின்; பதை: -பதங்களினால்; ச – மற்றும்; ஏவ – நிச்சயமாக; ஹேது-மத்பி: – காரணம் மற்றும் விளைவுகளுடன்; வினிஷ்சிதை: – மிகவும் நிச்சயமான.

செயல்களின் களம் மற்றும் செயல்களை அறிபவனைப் பற்றிய அறிவு, பற்பல முனிவர்களினால் பல்வேறு வேத நூல்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேதாந்த சூத்திரத்தின் பதங்களில், காரணம் மற்றும் விளைவுகளுடன் இவை மிகவும் நுணுக்கமாக விளக்கப்பட்டுள்ளன.

பதம் 13.6 – 13.7
மஹா-பூதான்-யஹங்காரோ புத்திர் அவ்யக்தம் ஏவ ச
இந்த்ரியாணி தஷைகம் ச பஞ்ச சேந்த்ரிய-கோசரா:

இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸங்காதஷ் சேதனா த்ருதி:
ஏதத் க்ஷேத்ரம் ஸமாஸேன ஸ-விகாரம்-உதாஹ்ருதம்

மஹா-பூதானி – பெரும் மூலப்பொருட்கள்; அஹங்கார: – அஹங்காரம்; புத்தி: – புத்தி; அவ்யக்தம் – தோன்றாதது; ஏவ – நிச்சயமாக; ச – மற்றும்; இந்த்ரியாணி – புலன்கள்; தஷ-ஏகம் – பதினொன்று; ச – மேலும்; பஞ்ச – ஐந்து; ச – கூட; இந்த்ரிய-கோ-சரா: – புலன்களின் பொருட்கள்; இச்சா – விருப்பம்; த்வேஷ: – வெறுப்பு; ஸுகம் – இன்பம்; து:கம் – துன்பம்; ஸங்காத: – மொத்த; சேதனா – உயிரின் அறிகுறிகள்; த்ரு’தி: – திட நம்பிக்கை; ஏதத் – இவையெல்லாம்; க்ஷேத்ரம் – செயல்களின் களம்; ஸமாஸேன – சுருக்கமாக; ஸ-விகாரம் – மாறுபாடுகளுடன்; உதாஹ்ருதம் – உதாரணம் காட்டி விளக்கப்பட்டுள்ளன.

பஞ்சபூதம், அஹங்காரம், புத்தி, அவ்யக்தம், பத்து புலன்கள், மனம், ஐந்து புலன் பொருள்கள், விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உயிரின் அறிகுறிகள், திட நம்பிக்கை—இவையெல்லாம் சுருக்கமாக செயல்களின் களம் மற்றும் அதன் மாறுபாடுகள் என்று கருதப்படுகின்றன.

பதம் 13.8 – 13.12
அமானித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திர் ஆர்ஜவம்
ஆசார்யோபாஸனம் ஷௌசம் ஸ்தைர்யம் ஆத்ம வினிக்ரஹ:

இந்த்ரியார்தேஷு வைராக்யம் அனஹங்கார ஏவ ச
ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி – து: க-தோஷானுதர்ஷனம்

அஸக்திர் அனபிஷ்வங்க: புத்ர-தார-க்ருஹாதிஷு
நித்யம் ச ஸம-சித்தத்வம் இஷ்டானிஷ்டோபபத்திஷு

மயி சானன்ய-யோகேன பக்திர் அவ்யபிசாரிணீ
விவிக்த-தேஷ-ஸேவித்வம் அரதிர் ஜன-ஸம்ஸதி

அத்யாத்ம-க்ஞான-நித்யத்வம் தத்த்வ-க்ஞானார்த-தர்ஷனம்
ஏதஜ் க்ஞானம் இதி ப்ரோக்தம் அக்ஞானம் யத் அதோ (அ)ன்யதா

அமானித்வம் – அடக்கம்; அதம்பித்வம் – கர்வமில்லாமை; அஹிம்ஸா – அகிச்சை; க்ஷாந்தி: – பொறுமை ஆர்ஜவம் – எளிமை; ஆசார்ய-உபாஸனம் – அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுகுதல்; ஷௌசம் – தூய்மை; ஸ்தைர்யம் – தளராமை; ஆத்ம-விநிக்ரஹ: – சுயக் கட்டுப்பாடு; இந்த்ரிய-அர்தேஷு – புலன்களின் விஷயத்தில்; வைராக்யம் – துறவு; அனஹங்கார: – அஹங்காரமின்றி இருத்தல்; ஏவ – நிச்சயமாக; ச- மேலும்; ஜன்ம – பிறப்பு; ம்ரு’த்யு – இறப்பு; ஜரா – முதுமை; வ்யாதி – நோய்; து:க: – துன்பம்; தோஷ – களங்கம்; அனுதர்ஷனம் — கவனித்துக் கொண்டு; அஸக்தி: – பற்றுதலின்றி; அனபிஷ்வங்க: – தொடர்பின்றி; புத்ர – மகன்; தார – மனைவி; க்ருஹ-ஆதிரஷு – வீடு முதலான; நித்யம் – நித்யமான; ச – மேலும்; ஸம-சித்தத்வம் – சமநிலையோடு; இஷ்ட – விருப்பத்திற்குரிய; அனிஷ்ட – வெறுப்பிற்குரிய; உபபத்திஷு – அடைவதால்; மயி – என்னிடம்; ச – மேலும்; அனன்ய யோகேன – கலப்படமற்ற பக்தித் தொண்டால்; பக்தி: – பக்தி; அவ்யபிசாரிணீ – இடைவிடாமல்; விவிக்த – தனியான; தேஷ – இடம்; ஸேவித்வம் – விரும்பி; அரதி: – பற்றின்றி; ஜன-ஸம்ஸதி – பொதுமக்களிடம்; அத்யாத்ம – ஆத்மா பற்றிய; ஜ்ஞான – ஞானம்; நித்யத்வம் – நிலையான தன்மை; தத்த்வ-ஜ்ஞான — தத்துவ ஞானம்; அர்த – பொருளுக்காக; தர்ஷனம் – தத்துவம்; ஏதத் – இவையெல்லாம்; ஜ்ஞானம் – ஞானம்; இதி – இவ்வாறு; ப்ரோக்தம் – அறிவிக்கின்றேன்; அஜ்ஞானம் – அறியாமை; யத் – எது; அத: – இதிலிருந்து; அன்யதா – பிற.

அடக்கம், கர்வமின்மை, அகிம்சை, பொறுமை, எளிமை, அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுகுதல், தூய்மை, தளராமை, சுயக்கட்டுப்பாடு, புலனுகர்ச்சிப் பொருள்களைத் துறத்தல், பொய் அஹங்காரம் இல்லாதிருத்தல், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றின் துன்பத்தினை கவனித்தல், குழந்தைகள், மனைவி, வீடு மற்றும் இதர பந்தத்திலிருந்து விடுபட்டு இருத்தல், விருப்பு வெறுப்புகளில் சமநிலை, என் மீதான நித்தியமான களங்கமற்ற பக்தி, தனிமையான இடங்களில் வாழ விரும்புதல், பொதுமக்களிடமிருந்து விலகியிருத்தல், ஆத்ம ஞானத்தின் முக்கியத்துவத்தை ஏற்றல், பரம சத்தியத்தை அறிவதற்கான தத்துவ ஆய்வு—இவையனைத்தையும் நான் ஞானமாக அறிவிக்கின்றேன், இவற்றைத் தவிர மற்றவை அனைத்தும் அறியாமையே ஆகும்.

பதம் 13.13
க்ஞேயம் யத் தத் ப்ரவக்ஷ்யாமி யஜ் க்ஞாத்வாம்ருதம் அஷ்னுதே
அனாதி மத்-பரம் ப்ரஹ்ம ந ஸத் தன் நாஸத் உச்யதே

ஜ்ஞேயம் – அறியப்படும் பொருள்; யத் – எது; தத் – அந்த; ப்ரவக்ஷ்யாமி – இப்போது விளக்குகின்றேன்; யத் – எதை; ஜ்ஞாத்வா – அறிவதால்; அம்ரு’தம் – அமிர்தம்; அஷ்னுதே – சுவைப்பாய்; அனாதி – ஆரம்பமற்ற; மத்-பரம் – எனக்குக் கீழ்ப்பட்ட; ப்ரஹ்ம – ஆத்மா; ந – அல்ல; ஸத் – காரணம்; தத் — அந்த; ந – அல்ல; அஸத் – விளைவு; உச்யதே – கூறப்படுகின்றது.

தற்போது, எதை அறிவதால் நீ அமிர்தத்தை சுவைப்பாயோ, அந்த அறியப்படும் பொருளை நான் உனக்கு விளக்குகின்றேன். ஆரம்பம் இல்லாததும், எனக்குக் கீழ்ப்பட்டதும், பிரம்மன், ஆத்மா என்று அழைக்கப்படுவதுமான இது, ஜடவுலகின் காரணம் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு விளங்குகின்றது.

பதம் 13.4
ஸர்வத: பாணி-பாதம் தத் ஸர்வதோ (அ)க்ஷி-ஷிரோ-முகம்
ஸர்வத: ஷ்ருதிமல் லோகே ஸர்வம் ஆவ்ருத்ய திஷ்டதி


ஸர்வத: – எங்கும்; பாணி – கரங்கள்; பாதம் – கால்கள்; தத் – அந்த; ஸர்வத: – எங்கும்; அக்ஷி – கண்கள்; ஷிர: – தலை; முகம் – முகம்; ஸர்வத: – எங்கும்; ஷ்ருதி-மத் – காதுகள் இருக்கின்றன; லோகே – உலகத்தில்; ஸர்வம் – எல்லா; ஆவ்ரு’த்ய – திரையிட்டு; திஷ்டதி – இருக்கின்றது.

அவரது கரங்கள், கால்கள், கண்கள், மற்றும் முகங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எல்லா இடங்களிலும் அவரது காதுகளும் உள்ளன. இவ்வாறாக எங்கும் வீற்றிருப்பவராக பரமாத்மா விளங்குகின்றார்.

பதம் 13.15
ஸர்வேந்த்ரிய-குணாபாஸம் ஸர்வேந்த்ரிய-விவர்ஜிதம்
அஸக்தம் ஸர்வ-ப்ருச் சைவ நிர்குணம் குண-போக்த்ரு ச

ஸர்வே – எல்லா; இந்த்ரிய – புலன்கள்; குண – குணங்கள்; ஆபாஸம் – மூல காரணம்; ஸர்வ – எல்லா; இந்த்ரிய – புலன்கள்; விவர்ஜிதம் – இல்லாமல்; அஸக்தம் – பற்றின்றி; ஸர்வ-ப்ரு’த் – அனைவரையும் பராமரிப்பவர்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; நிர்குணம் — ஜட குணங்கள் இன்றி; குண-போக்த்ரு’ – குணங்களின் எஜமானர்; ச – மேலும்.

எல்லா புலன்களுக்கும் மூலகாரணம் பரமாத்மாவே, இருப்பினும் அவரிடம் புலன்கள் கிடையாது. அவரே எல்லா உயிர்வாழிகளையும் பராமரிப்பவர், இருப்பினும் அவர் பற்றற்றவராக உள்ளார். அவர் இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டவர், அதே சமயத்தில், ஜட இயற்கையின் எல்லா குணங்களுக்கும் அவரே எஜமானர்.

பதம் 13.16
பஹிர்-அந்தஷ் ச பூதானாம் அசரம் சரம் ஏவ ச
ஸூக்ஷ்மத்வாத் தத் அவிக்ஞேயம் தூர-ஸ்தம் சாந்திகே ச தத்

பஹி: – வெளியே; அந்த: – உள்ளே; ச – மேலும்; பூதானாம் – எல்லா உயிர்வாழிகளின்; அசரம் – அசையாத; சரம் – அசைகின்ற; ஏவ – கூட; ச – மேலும்; ஸூக்ஷ்மத்வாத் – சூட்சுமமாக இருப்பதால்; தத் – அந்த; அவிஜ்ஞேயம் – அறிய முடியாத; தூர-ஸ்தம் – வெகு தூரத்தில்; ச – மேலும்; அந்திகே – அருகில்; ச – மேலும்; தத் – அந்த.

பரம உண்மை, எல்லா உயிர்வாழிகளின் உள்ளும் புறமும் உள்ளார், அசைவன மற்றும் அசையாதவற்றிலும் உள்ளார். அவர் சூட்சுமமானவர் என்பதால், ஜடப் புலன்களின் வலிமையால் காண்பதற்கோ அறிவதற்கோ அப்பாற்பட்டவர். மிக மிகத் தொலைவில் இருப்பினும், அவர் அனைவரின் அருகிலும் உள்ளார்.

பதம் 13.17
அவிபக்தம் ச பூதேஷு விபக்தம் இவ ச ஸ்திதம்
பூத-பர்த்ரு ச தஜ் க்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச

அவிபக்தம் – பிரிவின்றி; ச – மேலும்; பூதேஷு – எல்லா உயிர்வாழிகளிலும்; விபக்தம் – பிரிவுற்று; இவ – உள்ளதுபோல; ச – கூட; ஸ்திதம் — நிலைபெற்று; பூத-பர்த்ரு’ — எல்லா உயிர்வாழிகளையும் காப்பவர்; ச – கூட; தத் – அந்த; ஜ்ஞேயம் – புரிந்துகொள்ளப்பட வேண்டும்; க்ரஸிஷ்ணு – அழிக்கிறார்; ப்ரப-விஷ்ணு – விருத்தி செய்கிறார்; ச – மேலும்.

எல்லா உயிர்களுக்குமிடையே பரமாத்மா பிரிந்திருப்பதாகத் தோன்றினாலும், அவர் ஒருபோதும் பிரிக்கப்பட முடியாதவர். அவர் ஒருவராகவே இருக்கின்றார். அவரே எல்லா உயிர்வாழிகளையும் காப்பவர் என்றபோதிலும், அழிப்பவரும் விருத்தி செய்பவரும் அவரே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பதம் 13.18
ஜ்யோதிஷாம் அபி தஜ் ஜ்யோதிஸ் தமஸ: பரம் உச்யதே
க்ஞானம் க்ஞேயம் க்ஞான-கம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்


ஜ்யோதிஷாம் – பிரகாசிக்கின்ற பொருட்கள் எல்லாவற்றிலும்; அபி – கூட; தத் – அந்த; ஜ்யோதி – ஒளியின் மூலம்; தமஸ: – இருட்டு; பரம் – அப்பாற்பட்ட; உச்யதே – கூறப்படுகின்றது; ஜ்ஞானம் – அறிவு; ஜ்ஞேயம் – அறியப்படும் பொருள்; ஜ்ஞான-கம்யம் – அறிவின் இலக்கு; ஹ்ரு’தி – இதயத்தில்; ஸர்வஸ்ய – ஒவ்வொருவரின்; விஷ்டிதம் – வீற்றுள்ளார்.

பிரகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூலம் அவரே. அவர் ஜடத்தின் இருட்டிற்கு அப்பாற்பட்டவராகவும் தோன்றாதவராகவும் உள்ளார். அவரே அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும், அறிவின் இலக்காகவும் உள்ளார். அவர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றுள்ளார்.

பதம் 13.19
இதி க்ஷேத்ரம் ததா க்ஞானம் க்ஞேயம் சோக்தம் ஸமாஸத:
மத்-பக்த ஏதத் விக்ஞாய மத்-பாவாயோபபத்யதே


இதி – இவ்வாறு; க்ஷேத்ரம் – செயல்களின் களம் (உடல்); ததா – கூட; ஜ்ஞானம் – அறிவு; ஜ்ஞேயம் – அறியப்படும் பொருள்; ச – மேலும்; உக்தம் – விவரிக்கப்பட்டுள்ளது; ஸமாஸத: – சுருக்கமாக; மத்-பக்த: – எனது பக்தன்; ஏதத் — இவற்றையெல்லாம்; விஜ்ஞாய – புரிந்துகொண்ட பின்; மத்-பாவாய – என் இயற்கையை; உபபத்யதே – அடைகின்றான்.

இவ்வாறாக, செயல்களின் களம் (உடல், க்ஷேத்ர), அறிவு (க்ஞானம்), அறியப்படும் பொருள் (க்ஞேயம்), ஆகியவை சுருக்கமாக என்னால் விவரிக்கப்பட்டன. எனது பக்தர்கள் மட்டுமே இவற்றை முழுமையாகப் புரிந்துகொண்டு, எனது இயற்கையை அடைய முடியும்.

பதம் 13.20
ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்த்யனாதீ உபாவ் அபி
விகாராம்ஷ் ச குணாம்ஷ் சைவ வித்தி ப்ரக்ருதி-ஸம்பவான்

ப்ரக்ரு’திம் – ஜட இயற்கை; புருஷம் – உயிர்வாழிகள்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; வித்தி – நீ அறியவேண்டும்; அனாதி – ஆரம்பமில்லாத; உபௌ – இரண்டும்; அபி – கூட; விகாரான் – மாற்றங்கள்; ச – மேலும்; குணான் – இயற்கையின் முக்குணங்கள்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; வித்தி – அறிய வேண்டும்; ப்ரக்ரு’தி — ஜட இயற்கை; ஸம்பவான் – உற்பத்தி செய்யப்பட்ட.

ஜட இயற்கையும் உயிர்வாழிகளும் ஆரம்பமற்றவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது மாற்றங்களும் ஜடத்தின் குணங்களும், ஜட இயற்கையின் உற்பத்திப் பொருள்களே.

பதம் 13.21
கார்ய-காரண கர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிர் உச்யதே
புருஷ: ஸுக-து: கானாம் போக்த்ருத்வே ஹேதுர் உச்யதே

கார்ய – செயல்; காரண – காரணம்; கர்த்ரு’த்வே – படைப்பின் விஷயத்தில்; ஹேது: – கருவி; ப்ரக்ரு’தி: – ஜட இயற்கை; உச்யதே – கூறப்படுகின்றது; புருஷ: – உயிர்வாழிகள்; ஸுக – இன்பம்; து:கானாம் – மற்றும் துன்பம்; போக்த்ரு’த்வே – அனுபவிப்பதில்; ஹேது: – கருவி; உச்யதே – கூறப்படுகின்றது.

எல்லா செயல்களுக்கும் விளைவுகளுக்கும் இயற்கையே காரணமாகக் கூறப்படுகிறது, இருப்பினும் இவ்வுலகின் பல்வேறு இன்ப துன்பங்களுக்கு உயிர்வாழியே காரணமாகக் கூறப்படுகின்றது.

பதம் 13.22
புருஷ: ப்ரக்ருதி-ஸ்தோ ஹி புங்க்தே ப்ரக்ருதி-ஜான் குணான்
காரணம் குண்-ஸங்கோ (அ)ஸ்ய ஸத்-அஸத்-யோனி-ஜன்மஸு

புருஷ: – உயிர்வாழி; ப்ரக்ரு’தி-ஸ்த: — ஜட சக்தியில் நிலைபெற்று; ஹி – நிச்சயமாக; புங்க்தே – அனுபவிக்கின்றான்; ப்ரக்ரு’தி-ஜான் – ஜட இயற்கையினால் உருவாக்கப்பட்டு; குணான் — இயற்கையின் குணங்கள்; காரணம் – காரணம்; குண-ஸங்க: – இயற்கை குணங்களின் சங்கத்தினால்; அஸ்ய – உயிர்வாழியின்; ஸத்-அஸத் – நல்ல; தீய:யோனி – வாழ்வினங்களில்; ஜன்மஸு – பிறப்பில்.

இவ்வாறாக, ஜட இயற்கையிலுள்ள உயிர்வாழி, இயற்கையின் முக்குணங்களை அனுபவித்துக் கொண்டு, வாழ்வின் வழிகளை பின்பற்றுகின்றான். இவை ஜட இயற்கையின் தொடர்பினால் ஏற்படுபவை. இவ்வாறு பல்வேறு இனங்களில் அவன் நன்மை தீமைகளைச் சந்திக்கின்றான்.

பதம் 13.23
உபத்ரஷ்டானுமந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர:
பரமாத்மேதி சாப்-யுக்தோ தேஹே (அ)ஸ்மின் புருஷ: பர:

உபத்ரஷ்டா – மேற்பார்வை செய்பவர்; அனுமந்தா – அனுமதிப்பவர்; ச –மேலும்; பர்தா – தலைவர்; போக்தா – பரம அனுபவிப்பாளர்; மஹா-ஈஷ்வர: – பரம புருஷர்; பரமாத்மா – பரமாத்மா; இதி – கூட; ச – மேலும்; அபி – உண்மையில்; யுக்த: – கூறப்படுகின்றார்; தேஹே – உடலில்; அஸ்மின் – இந்த; புருஷ: – அனுபவிப்பாளர்; பர: – தெய்வீகமான.

இருப்பினும், இவ்வுடலில் மற்றொருவரும் இருக்கின்றார், அவர் தெய்வீக அனுபவிப்பாளர். அவரே இறைவன், பரம உரிமையாளர். மேற்பார்வையிட்டு அனுமதி வழங்குபவரும், பரமாத்மா என்று அறியப்படுபவரும் அவரே.

பதம் 13.24
ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ
ஸர்வதா வர்தமானோ (அ)பி ந ஸ பூயோ (அ)பிஜாயதே

ய: – யாராயினும்; ஏவம் – இவ்வாறு; வேத்தி – புரிந்துகொள்கின்றானோ; புருஷம் – உயிர்வாழிகள்; ப்ரக்ரு’திம் – ஜட இயற்கை; ச – மேலும்; குணை: – ஜட இயற்கையின் குணங்கள்; ஸஹ – உடன்; ஸர்வதா – எல்லா வழிகளிலும்; வர்தமான: – அமைந்து; அபி – இருந்தும் கூட; ந – என்றுமில்லை; ஸ: – அவன்; பூய: – மீண்டும்; அபிஜாயதே – பிறவியெடுப்பது.

உயிர்வாழி, குணங்களுடனான இவற்றின் உறவு ஆகியவஜட இயற்கை, ற்றைப் பற்றிய இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்பவன், நிச்சயமாக முக்தி அடைகின்றான். அவனது தற்போதைய நிலை எவ்வாறு இருந்தாலும் சரி, அவன் மீண்டும் இங்கே பிறவியெடுக்கப் போவதில்லை.

பதம் 13.25
த்யானேனாத்மனி பஷ்யந்தி கேசித் ஆத்மானம் ஆத்மனா
அன்யே ஸாங்க்யேன யோகேன கர்ம-யோகேன சாபரே

த்யானேன – தியானத்தால்; ஆத்மனி — தனக்குள்; பஷ்யந்தி – காண்கின்றனர்; கேசித் – சிலர்; ஆத்மானம் – பரமாத்மா; ஆத்மனா – மனதால்; அன்யே – பிறர்; ஸாங்க்யேன — தத்துவ விவாதங்களால்; யோககேன – யோக முறையால்; கர்ம-யோகேன – பலனை எதிர்பார்க்காத செயல்களால்; ச – மேலும்; அபரே – பிறர்.

தங்களுக்குள் இருக்கும் பரமாத்மாவினை, சிலர் தியானத்தினாலும், சிலர் ஞானத்தை வளர்ப்பதாலும், வேறு சிலர் பலனை எதிர்பாராது செயல்படுவதாலும் காண்கின்றனர்.

பதம் 13.26
அன்யே த்வ ஏவம் அஜானந்த: ஷ்ருத்வான்யேப்ய உபாஸதே
தே (அ)பி சாதிதரந்த் யேவ ம்ருத்யும் ஷ்ருதி-பராயணா:

அன்யே – பிறர்; து – ஆனால்; ஏவம் – இவ்வாறு; அஜானந்த – ஆன்மீக அறிவு இன்றி; ஷ்ருத்வா – கேட்பதால்; அன்யேப்ய: – பிறரிடமிருந்து; உபாஸதே – வழிபடத் தொடங்குகின்றனர்; தே – அவர்கள்; அபி – கூட; ச – மேலும்; அதிதரந்தி – கடக்கின்றனர்; ஏவ – நிச்சயமாக; ம்ரு’த்யும் — மரணத்தின் வழி; ஷ்ருதி-பராயணா: – கேட்கும் முறையில் விருப்பமுற்று.

வேறு சிலர், ஆன்மீக ஞானத்தில் ஆழ்ந்த அனுபவம் இல்லாத போதிலும், பிறரிடமிருந்து முழுமுதற் கடவுளைப் பற்றி கேட்டதன் அடிப்படையில் அவரை வழிபடத் தொடங்குகின்றனர். அதிகாரிகளிடமிருந்து கேட்பதற்கான தங்களது இயல்பின் காரணத்தால் அவர்களும் பிறப்பு இறப்பின் வழியினைக் கடந்து செல்கின்றனர்.

பதம் 13.27
யாவத் ஸஞ்ஜாயதே கிஞ்சித் ஸத்த்வம் ஸ்தாவர-ஜங்கமம்
க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ-ஸம்யோகாத் தத் வித்தி பரதர்ஷப

யாவத் — என்னவெல்லாம்; ஸஞ்ஜாயதே – வருகின்றதோ; கிஞ்சித் – ஏதேனும்; ஸத்த்வம் – இருப்பு; ஸ்தாவர – அசைவற்ற; ஜங்கமம் – அசைகின்ற; க்ஷேத்ர – உடல்; க்ஷேத்ர-ஜ்ஞ – உடலை அறிபவன்; ஸம்யோகாத் – இடையிலான கலவை; தத் வித்தி – நீ அதை அறிய வேண்டும்; பரத-ருஷப – பாரதர்களின் தலைவனே.

பாரதர்களின் தலைவனே, அசைவன, அசையாதவை என எதையெல்லாம் நீ காண்கின்றாயோ, அவையெல்லாம் செயல்களின் களமும் களத்தை அறிபவனும் இணைந்த கலவையேயாகும்.

பதம் 13.28
ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஷ்வரம்
வினஷ்யத்ஸ்வ்-அவினஷ்யந்தம் ய: பஷ்யதி ஸ பஷ்யதி

ஸமம் – சமமாக; ஸர்வேஷு – எல்லா; பூதேஷு – உயிர்வாழிகளிலும்; திஷ்டந்தம் — வசிக்கின்ற; பரம-ஈஷ்வரம் – பரமாத்மா; வினஷ்யத்ஸு – அழியக்கூடியவற்றில்; அவினஷ்யந்தம் – அழிவற்ற; ய: – எவனொருவன்; பஷ்யதி — காண்கின்றானோ; ஸ: – அவனே; பஷ்யதி – உண்மையில் காண்கின்றான்.

எல்லா உடல்களிலும் ஜீவாத்மாவுடன் இணைந்து பரமாத்மாவைக் காண்பவனும், அழியக்கூடிய உடலினுள் இருக்கும் ஆத்மாவும் பரமாத்மாவும் அழிவடைவதில்லை என்பதைப் புரிந்துகொள்பவனுமே, உண்மையில் காண்பவனாவான்.

பதம் 13.29
ஸமம் பஷ்யன் ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதம் ஈஷ்வரம்
ந ஹினஸ்த் யாத்மனாத்மானம் ததோ யாதி பராம் கதிம்

ஸமம் – சமமாக; பஷ்யன் – காண்கின்ற; ஹி – நிச்சயமாக; ஸர்வத்ர – எங்கும்; ஸமவஸ்திதம் – சமமாக நிலைபெற்ற; ஈஷ்வரம் – பரமாத்மா; ந – இல்லை; ஹினஸ்தி – இழிவடைவது; ஆத்மனா – மனதால்; ஆத்மானம் – ஆத்மா; தத: – பின்னர்; யாதி – அடைகின்றான்; பராம் – தெய்வீகமான; கதிம் – இலக்கை.

பரமாத்மா, எல்லா இடங்களிலும், எல்லா உயிர்வாழியிலும் சமமாக வீற்றிருப்பதைக் காண்பவன், தனது மனதால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதில்லை. இவ்வாறு அவன் தெய்வீக இலக்கை அணுகுகின்றான்.

பதம் 13.30
ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணானி ஸர்வஷ:
ய: பஷ்யதி ததாத்மானம் அகர்தாரம் ஸ பஷ்யதி

ப்ரக்ரு’த்யா – ஜட இயற்கையினால்; ஏவ – நிச்சயமாக; ச – மேலும்; கர்மாணி – செயல்கள்; க்ரியமாணானி – செய்யப்படுகின்றன; ஸர்வஷ: – எல்லா விதங்களிலும்; ய: – எவனொருவன்; பஷ்யதி – காண்கின்றான்; ததா – மேலும்; ஆத்மானம் – தன்னை; அகர்தாரம் — செய்யாதவனாக; ஸ: – அவன்; பஷ்யதி — பக்குவமாகக் காண்கின்றான்.

எவனொருவன், ஜட இயற்கையினால் படைக்கப்பட்ட உடலே எல்லாச் செயல்களையும் செய்கின்றது என்பதையும், ஆத்மா எதையும் செய்வதில்லை என்பதையும் காண்கின்றானோ, அவனே உண்மையில் காண்கின்றான்.

பதம் 13.31
யதா பூத-ப்ருதக்-பாவம் ஏக-ஸ்தம் அனுபஷ்யதி
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா

யதா – எப்போது; பூத – உயிர்வாழிகளின்; ப்ரு’தக்-பாவம் – தனிப்பட்ட அடையாளங்கள்; ஏக-ஸ்தம் – ஒன்றில் அமைந்திருப்பதை; அனுபஷ்யதி — அதிகாரிகளின் மூலமாகக் காண முயல்பவன்; தத: ஏவ – அதன்பின்; ச – மேலும்; விஸ்தாரம் – விரிந்த; ப்ரஹ்ம – பூரணம்; ஸம்பத்யதே – அவன் அடைகின்றான்; ததா – அச்சமயத்தில்.

அறிவுள்ள மனிதன், பல்வேறு ஜட உடல்களில் பல்வேறு தோற்றங்களைக் காண்பதை நிறுத்தி, உயிர்வாழிகள் எவ்வாறு எங்கும் பரந்துள்ளனர் என்பதை எப்போது காண்கின்றானோ, அப்போது அவன் பிரம்மன் உணர்வை அடைகின்றான்.

பதம் 13.32
அனாதித்வான் நிர்குணத்வாத் பரமாத்மாயம் அவ்யய:
ஷரீர-ஸ்தோ (அ)பி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே

அனாதித்வாத் – நித்தியமான தன்மையால்; நிர்குணத்வாத் – திவ்யமாக இருப்பதால்; பரம – ஜட இயற்கைக்கு அப்பாற்பட்ட; ஆத்மா – ஆத்மா; அயம் – இந்த; அவ்யய – அழிவற்ற; ஷரீர-ஸ்த: – உடலில் வீற்று; அபி – இருந்தாலும்; கௌந்தேய – குந்தியின் மகனே; ந கரோதி – எதையும் செய்வதில்லை; ந லிப்யதே – அவன் பந்தப்படுவதும் இல்லை.

நித்தியத்தின் பார்வையை உடையவர்கள், அழிவற்ற ஆத்மா தெய்வீகமானது, நித்தியமானது, இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டது என்பதைக் காண முடியும். ஜடவுடலின் தொடர்பில் இருந்தாலும் கூட, அர்ஜூனா, ஆத்மா எதையும் செய்வதோ பந்தப்படுவதோ இல்லை.

பதம் 13.33
யதா ஸர்வ-கதம் ஸௌக்ஷ்ம்யாத் ஆகாஷம் நோபலிப்யதே
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே

யதா — போல; ஸர்வ-கதம் – எங்கும் பரவியிருப்பதை; ஸௌக்ஷ்ம்யாத் – நுண்ணியமானதால்; ஆகாஷம் – ஆகாயம்; ந – என்றுமில்லை; உபலிப்யதே – கலப்பது; ஸர்வத்ர – எங்கும்; அவஸ்தித: – நிலைபெற்று; தேஹே – உடலில்; ததா – அது போல; ஆத்மா – ஆத்மா; ந – என்றும்; உபலிப்யதே – கலப்பது.

எங்கும் நிறைந்திருந்தாலும் தனது நுண்ணிய இயற்கையினால், ஆகாயம் எதனுடனும் கலக்காமல் இருக்கின்றது. அதுபோல, பிரம்மனின் பார்வையில் நிலைபெற்றுள்ள ஆத்மா, உடலில் அமைந்திருந்தாலும் உடலுடன் கலப்பதில்லை.

பதம் 13.34
யதா ப்ரகாஷயத்-யேக: க்ருத்ஸ்னம் லோகம் இமம் ரவி:
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்னம் ப்ரகாஷயதி பாரத

யே – யாரெல்லாம்; து – ஆனால்; தர்ம – தர்மத்தின்; அம்ரு’தம் – அமிர்தம்; இதம் – இந்த; யதா – போல; உக்தம் – கூறப்பட்டுள்ளது; பர்யுபாஸதே – முழுமையாக ஈடுபட்டு; ஷ்ரத்ததானா – நம்பிக்கையுடன்; மத்-பரமா: – முழுமுதற் கடவுளான என்னையே எல்லாமாக ஏற்று; பக்தா: – பக்தர்கள்; தே – அவர்கள்; அதீவ – மிகமிக; மே – எனக்கு; ப்ரியா – பிரியமானவர்கள்.

பரதனின் மைந்தனே, ஒரே ஒரு சூரியன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் பிரகாசமாக்குவதைப்போல, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகின்றான்.

பதம் 13.35
க்ஷேத்ர-க்ஷேத்க்ஞயோர் ஏவம் அந்தரம் க்ஞான-சக்ஷுஷா
பூத-ப்ரக்ருதி-மோக்ஷம் ச யே விதுர் யாந்தி தே பரம்

யே – யாரெல்லாம்; து – ஆனால்; தர்ம – தர்மத்தின்; அம்ரு’தம் – அமிர்தம்; இதம் – இந்த; யதா – போல; உக்தம் – கூறப்பட்டுள்ளது; பர்யுபாஸதே – முழுமையாக ஈடுபட்டு; ஷ்ரத்ததானா – நம்பிக்கையுடன்; மத்-பரமா: – முழுமுதற் கடவுளான என்னையே எல்லாமாக ஏற்று; பக்தா: – பக்தர்கள்; தே – அவர்கள்; அதீவ – மிகமிக; மே – எனக்கு; ப்ரியா – பிரியமானவர்கள்.

உடலுக்கும் உடலின் உரிமையாளனுக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை ஞானக் கண்களைக் கொண்டு அறிந்து, ஜட இயற்கையின் பந்தத்திலிருந்து முக்தி பெறுவதற்கான வழிமுறையையும் புரிந்துகொண்டவர்கள், பரம இலக்கினை அடைகின்றனர்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare