அத்தியாயம் – 11
விஸ்வரூபம்
பதம் 11.1
அர்ஜுன உவாச
மத்-அனுக்ரஹாய பரமம் குஹ்யம் அத்யாத்மா-ஸம்க்ஞிதம்
யத் த்வயோக்தம் வசஸ் தேன மோஹோ (அ)யம் விகதோ மம
அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; மத்-அனுக்ரஹாய – எனக்கு கருணை காட்டுவதற்காக; பரமம் – பரம; குஹ்யம் – இரகசியம்; அத்யாத்ம – ஆன்மீக; ஸம்ஜ்ஞிதம் – விஷயத்தில்; யத் – எவை; த்வயா – உம்மால்; உக்தம் – கூறப்பட்டனவோ; வச: – சொற்கள்; தேன – அவற்றால்; மோஹ: – மயக்கம்; அயம் – இந்த; விகத: – விலகிவிட்டது; மம – எனது.
அர்ஜுனன் கூறினான்: ஆன்மீகம் சம்பந்தமான பரம இரகசியங்களை அன்புடன் எனக்கு வழங்கியுள்ளீர். தங்களது இத்தகு அறிவுரைகளைக் கேட்டதால், இப்போது எனது மயக்கம் தெளிந்து விட்டது.
பதம் 11.2
பவாப்யயௌ ஹி பூதானம் ஷ்ருதௌ விஸ்தரஷோ மயா
த்வத்த: கமல-பத்ராக்ஷ மாஹாத்ம்யம் அபி சாவ்யயம்
பவ – தோற்றம்; அப்யயௌ – மறைவு; ஹி – நிச்சயமாக; பூதானாம் – எல்லா உயிர்களின்; ஷ்ருதௌ – கேட்கப்பட்டது; விஸ்தரஷ: – விவரமாக; மயா – என்னால்; த்வத்த: – உம்மிடமிருந்து; கமல-பத்ர-அக்ஷ – தாமரைக் கண்களை உடையவரே; மாஹாத்ம்யம் – பெருமைகள்; அபி – கூட; ச – மேலும்; அவ்யயம் – முடிவற்ற.
தாமரைக் கண்களை உடையவரே, ஒவ்வோர் உயிர்வாழியின் தோற்றம் மற்றும் மறைவினைப் பற்றி உம்மிடமிருந்து விவரமாகக் கேட்ட நான், தற்போது உமது அழிவற்ற பெருமைகளை உணர்ந்துள்ளேன்.
பதம் 11.3
ஏவம் ஏதத் யதாத்த த்வம் ஆத்மானம் பரமேஷ்வர
த்ரஷ்டும் இச்சாமி தே ரூபம் ஐஷ்வரம் புருஷோத்தம
ஏவம் – இவ்வாறு; ஏதத் – இந்த; யதா – உள்ளது உள்ளபடி; ஆத்த – பேசிய பின்; த்வம் – நீங்கள்; ஆத்மானம் – தாங்களே; பரம-ஈஷ்வர – முழுமுதற் கடவுளே; த்ரஷ்டும் – காண்பதற்கு; இச்சாமி – விரும்புகின்றேன்; தே – உங்களுடைய; ரூபம் – உருவம்; ஐஷ்வரம் – ஐஸ்வர்யம்; புருஷ-உத்தம – உத்தம புருஷரே.
உத்தம புருஷரே, உன்னத உருவே, நான் தங்களை தங்களுடைய உண்மை நிலையில் என் முன் காண்கின்றேன் என்றபோதிலும், தங்களைப் பற்றி தாங்களே விளக்கியபடி, இந்த பிரபஞ்சத் தோற்றத்திற்குள் தாங்கள் எவ்வாறு உட்புகுந்து உள்ளீர் என்பதைக் காண நான் விரும்புகின்றேன். உமது அந்த ஐஸ்வர்ய ரூபத்தினைக் காண நான் ஆவலுடன் உள்ளேன்.
பதம் 11.4
மன்யஸே யதி தச் சக்யம் மயா த்ரஷ்டும் இதி ப்ரபோ
யோகேஷ்வர ததோ மே த்வம் தர்ஷயாத்மானம் அவ்யயம்
மன்யஸே யதி – நீங்கள் நினைத்தால்; தத் – அந்த; ஷக்யம் – சாத்தியமாகும்; மயா – என்னால்; த்ரஷ்டும் – காண; இதி – இவ்வாறு; ப்ரபோ – இறைவா; யோக-ஈஷ்வர – எல்லா யோக சக்திகளின் இறைவனே; தத: – பிறகு; மே – எனக்கு; த்வம் – நீங்கள்; தர்ஷய – காட்டும்; ஆத்மானம் – தங்களை; அவ்யயம் – நித்திய.
உமது விஸ்வரூபத்தை என்னால் பார்க்க முடியும் என்று தாங்கள் நினைத்தால், எம்பெருமானே, எல்லா யோக சக்திகளின் இறைவனே, அந்த எல்லையற்ற விஸ்வரூபத்தை எனக்குக் காட்டியருளும்.
பதம் 11.5
ஸ்ரீ-பகவான் உவாச
பஷ்யே மே பார்த ரூபாணி ஷதஷோ (அ)த ஸஹஸ்ரஷ:
நானா-விதானி திவ்யானி நானா-வர்ணாக்ருதீனி ச
ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; பஷ்ய – காண்பாயாக; மே – எனது; பார்த – பிருதாவின் மகனே; ரூபாணி – உருவங்கள்; ஷதஷ: – நூற்றுக்கணக்கான; அத – மேலும்; ஸஹஸ்ரக்ஷ: -ஆயிரக்கணக்கான; நானா – பலதரப்பட்ட; விதானி – பலவிதமான; திவ்யானி – திவ்யமான; நானா – பலதரப்பட்ட; வர்ண – வர்ணங்கள்; ஆக்ரு’தீனி – உருவங்கள்; ச – மேலும்.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பிருதாவின் மகனே, எனதன்பு அர்ஜுனா, இலட்சக்கணக்கான வடிவில் பலதரப்பட்ட நிறத்துடன் தோன்றும் எனது பலவகையான திவ்ய ரூபத்தினை, எனது வைபவத்தினை இப்போது காண்பாயாக.
பதம் 11.6
பஷ்யாதித்யான் வஸுன் ருத்ரான் அஷ்வினௌ மருதஸ் ததா
பஹூன்-யத்ருஷ்ட-பூர்வாணி பஷ்யாஷ்சர்யாணி பாரத
பஷ்ய – காண்பாயாக; ஆதித்யான் – அதிதியின் பன்னிரண்டு மைந்தர்கள்; வஸூன் – எட்டு வசுக்கள்; ருத்ரான் – ருத்திரரின் பதினொன்று உருவங்கள்; அஷ்வினௌ – இரண்டு அஸ்வினிகள்; மருத: – நாற்பத்தி ஒன்பது மருத்துகள் (வாயு தேவர்கள்); ததா – மேலும்; பஹூனி – பற்பல; அத்ரு’ஷ்ட – நீ கண்டிராத; பூர்வாணி – இதற்கு முன்பு; பஷ்ய – பார்; ஆஷ்சர்யாணி – ஆச்சரியமான அனைத்தையும்; பாரத – பாரதர்களில் சிறந்தவனே.
பாரதர்களில் சிறந்தவனே, ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், அஸ்வினி குமாரர்கள் மற்றும் இதர தேவர்கள் அனைவரையும் இங்கே பார். இதற்கு முன்பு யாரும் கண்டிராத, கேட்டிராத பல ஆச்சரியமான விஷயங்களையும் பார்.
பதம் 11.7
இஹைக-ஸ்தம் ஜகத் க்ருத்ஸ்னம் பஷ்யாத்ய ஸ-சராசரம்
மம தேஹே குடாகேஷ யச் சான்யத் த்ரஷ்டும் இச்சஸி
இஹ – இதில்; ஏக-ஸ்தம் – ஒரு இடத்தில்; ஜகத் – அகிலம்; க்ரு‘தஸ்னம் –முழுமையாக; பஷ்ய – பார்; அத்ய – உடனடியாக; ஸ – உடன்; சர – அசைகின்ற; அசரம் – அசையாத; மம – எனது; தேஹே – இந்த உடலில்; குடாகேஷ – அர்ஜுனா; யத் – அந்த; ச – மேலும்; அன்யத் – இதர; த்ரஷ்டும் – காண்பதற்கு; இச்சஸி – நீ விரும்புகின்றாயோ.
அர்ஜுனா, நீ பார்க்க விரும்புபவை அனைத்தையும், எனது இந்த உடலில் உடனடியாகப் பார்! இப்போது நீ விரும்புபவை மட்டுமின்றி, எதிர்காலத்தில் நீ எதையெல்லாம் காண விரும்புவாயோ, அவை அனைத்தையும் இந்த விஸ்வரூபம் உனக்குக் காட்டும். அசைகின்றவை, அசையாதவை—அனைத்தும் ஒரே இடத்தில் இங்கே முழுமையாக உள்ளன.
பதம் 11.8
ந து மாம் ஷக்யஸே த்ரஷ்டும் அநேனைவ ஸ்வ-சக்ஷுஷா
திவ்யம் ததாமி தே சக்ஷு பஷ்ய மே யோகம் ஐஷ்வரம்
ந – என்றுமில்லை; து – ஆனால்; மாம் – என்னை; ஷக்யஸே – முடியும்; த்ரஷ்டும் – காண; அனேன – இதனால்; ஏவ – நிச்சயமாக; ஸ்வ-சக்ஷுஷா – உனது சொந்த கண்களால்; திவ்யம் – திவ்யமான; ததாமி – அளிக்கின்றேன்; தே – உனக்கு; சக்ஷு: – கண்கள்; பஷ்ய – காண; மே – எனது; யோகம்-ஐஷ்வரம் – யோக சக்தியின் ஐஸ்வர்யம்.
ஆனால் உன்னுடைய தற்போதைய கண்களால் என்னை நீ காண முடியாது. எனவே, நான் உனக்கு திவ்யமான கண்களைத் தருகிறேன். எனது யோகத்தின் ஐஸ்வர்யத்தைப் பார்.
பதம் 11.9
ஸஞ்ஜய உவாச
ஏவம் உக்த்வா ததோ ராஜன் மஹா-யோகேஷ்வரோ ஹரி:
தர்ஷயாம் ஆஸ பார்தாய பரமம் ரூபம் ஐஷ்வரம்
ஸஞ்ஜய: உவாச – சஞ்ஜயன் கூறினான்; ஏவம் – இவ்வாறு; உக்த்வா – கூறிய; தத: – பின்; ராஜன் – மன்னனே; மஹா-யோகேரஷ்வர: – மிகவும் வலிமை வாய்ந்த யோகி; ஹரி: – முழுமுதற் கடவுளான கிருஷ்ணர்; தர்ஷயாம் ஆஸ – காட்டினார்; பார்தாய – அர்ஜுனனுக்கு; பரமம் – பரம; ரூபம் ஐஷ்வரம் – விஸ்வரூபம்.
சஞ்ஜயன் கூறினான்: மன்னா, இவ்வாறு கூறிய பின்னர், எல்லா யோக சக்திகளுக்கும் இறைவனாக விளங்கும் முழுமுதற் கடவுள், தமது விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டினார்.
பதம் 11.10 – 11.11
அனேக-வக்த்ர-நயனம் அனேகாத்புத-தர்ஷனம்
அனேக-திவ்யாபரணம் திவ்யானேகோத்யதாயுதம்
திவ்ய-மால்யாம்பர-தரம் திவ்ய-கந்தானுலேபனம்
ஸர்வாஷ்சர்ய-மயம் தேவம் அனந்தம் விஷ்வதோ-முகம்
அனேக – பல்வேறு; வக்த்ர – வாய்கள்; நயனம் — கண்கள்; அனேக – பல்வேறு; அத்புத – அற்புதமான; தர்ஷனம் – காட்சிகள்; அனேக – பற்பல; திவ்ய – திவ்யமான; ஆபரணம் – ஆபரணங்கள்; திவ்ய – திவ்யமான; அனேக – பல்வேறு; உத்யத – தாங்கிய; ஆயுதம் – ஆயுதங்கள்; திவ்ய – திவ்யமான; மால்ய – மாலைகள்; அம்பர – ஆடைகள்; தரம் – அணிந்து; திவ்ய – திவ்யமான; கந்த – வாசனை; அனுலேபனம் – தரிக்கப்பட்ட; ஸர்வ – எல்லா; ஆஷ்சர்ய-மயம் – ஆச்சரியமான; தேவம் – ஒளிர்கின்ற; அனந்தம் — எல்லையற்ற; விஷ்வத:-முகம் — எங்கும் நிறைந்தது.
அந்த விஸ்வரூபத்தில், அனேக கண்களையும் அனேக வாய்களையும் அனேக அற்புதமான தரிசனங்களையும் அர்ஜுனன் கண்டான். பற்பல தெய்வீகமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ரூபம், திவ்யமான ஆயுதங்கள் பலவற்றை தாங்கியிருந்தது. தெய்வீகமான மாலைகளையும் ஆடைகளையும் அணிந்திருந்த அவரது உடலில், பல்வேறு திவ்யமான வாசனைப் பொருள்கள் பூசப்பட்டிருந்தது. அவையனைத்தும் அற்புதமாக, பிரகாசமாக, எல்லையற்றதாக, எங்கும் பரவிக் காணப்பட்டது.
பதம் 11.12
திவி ஸூர்ய-ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபத் உத்திதா
யதி பா: ஸ்த்ருஷீ ஸா ஸ்யாத் பாஸஸ் தஸ்ய மஹாத்மன:
திவி – ஆகாயத்தில்; ஸூர்ய – சூரியன்; ஸஹஸ்ரஸ்ய – பல்லாயிரக்கணக்கான; பவேத் – இருப்பதுபோல; யுகபத் – ஒரே சமயத்தில்; உத்திதா – உதித்தன; யதி: – ஆனால்; பா: – ஒளி; ஸத்ரு’ஷீ – அதுபோல; ஸா – அந்த; ஸ்யாத் – இருக்கலாம்; பாஸ: – வெளிச்சம்; தஸ்ய – அவரது; மஹா-ஆத்மன: – மிகச்சிறந்த பகவான்.
ஆகாயத்தில் பல்லாயிரக்கணக்கான சூரியன்கள் ஒரே சமயத்தில் உதயமானால், அந்த பரம புருஷருடைய விஸ்வரூப ஜோதிக்கு ஒருவேளை சமமாகலாம்.
பதம் 11.13
தத்ரைக-ஸ்தம் ஜகத் க்ருத்ஸ்னம் ப்ரவிபக்தம் அனேகதா
அபஷ்யத் தேவ-தேவஸ்ய ஷரீரே பாணடவஸ் ததா
தத்ர – அங்கே; ஏக-ஸ்தம் – ஒரே இடத்தில்; ஜகத் – அகிலம்; க்ரு’த்ஸ்னம் – முழுமையாக; ப்ரவிபக்தம் – பிரிந்திருந்த; அனேகதா – பல்வேறு விதமாக; அபஷ்யத் – காண முடிந்தது; தேவ-தேவஸ்ய – முழுமுதற் கடவுளின்; ஷரீரே – விஸ்வரூபத்தில்; பாண்டவ: – அர்ஜுனன்; ததா – அச்சமயத்தில்.
அச்சமயத்தில், இறைவனுடைய விஸ்வரூபத்தில், பற்பல ஆயிரங்களாகப் பிரிந்திருந்த அகிலத்தின் பல்வேறு விஸ்தாரங்களையெல்லாம் ஒரே இடத்தில் அர்ஜுனனால் காண முடிந்தது.
பதம் 11.14
தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்ட-ரோமா தனஞ்ஜய:
ப்ரணம்ய ஷிரஸா தேவம் க்ருதாஞ்ஜலிர் அபாஷத
தத: – அதன்பின்; ஸ: – அவன்; விஸ்மய-ஆவிஷ்ட: – வியப்பினால் மூழ்கி; ஹ்ரு’ஷ்ட-ரோமா – பரவசத்தால் அவனது உடலெங்கும் மயிர்க்கூச்சலுடன்; தனஞ்ஜய: – அர்ஜுனன்; ப்ரணம்ய – வணங்கிக்கொண்டு; ஷிரஸா – தலையால்; தேவம் – முழுமுதற் கடவுளுக்கு; க்ருதி-அஞ்ஜலி – கூப்பிய கரங்களுடன்; அபாஷத – பேசத்தொடங்கினான்.
பின்னர், வியப்பினாலும் குழப்பத்தினாலும் மூழ்கிய அர்ஜுனன், தனது உடலில் மயிர்க்கூச்செறிய, சிரம் தாழ்த்தி வணங்கியபடி, கூப்பிய கரங்களுடன் முழுமுதற் கடவுளிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினான்.
பதம் 11.15
அர்ஜுன உவாச
பஷ்யாமி தேவாம்ஸ் தவ தேவ தேஹே
ஸர்வாம்ஸ் ததா பூத-விஷேஷ-ஸங்கான்
ப்ரஹ்மாணம் ஈஷம் கமலாஸன-ஸ்தம்
ருஷீம்ஷ் ச ஸர்வான் உரகாம்ஷ் ச திவ்யான்
அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; பஷ்யாமி – காண்கிறேன்; தேவான் – எல்லா தேவர்களையும்; தவ – உமது; தேவ – இறைவா; தேஹே – உடலில்; ஸர்வான் – எல்லா; ததா – கூட; பூத – உயிர்வாழிகள்; விஷேஷ-ஸங்கான் – விசேஷமாகக் கூடிய; ப்ரஹ்மாணம் – பிரம்மதேவர்; ஈஷம் – சிவபெருமான்; கமல-ஆஸன-ஸ்தம் – தாமரை மலரில் அமர்ந்த; ரு’ஷீன் – ரிஷிகள்; ச – மேலும்; ஸர்வான் – எல்லா; உரகான் – நாகங்கள்; ச – மேலும்; திவ்யான் – திவ்யமான.
அர்ஜுனன் கூறினான்: எனது அன்பிற்குரிய இறைவனே, கிருஷ்ணா! எல்லா தேவர்களும், பற்பல இதர உயிரினங்களும் உமது உடலில் சிறப்பாக வீற்றிருப்பதை நான் காண்கிறேன். தாமரை மலரில் அமர்ந்துள்ள பிரம்மதேவர், சிவபெருமான், பல்வேறு ரிஷிகள் மற்றும் திவ்யமான நாகங்களையும் நான் காண்கின்றேன்.
பதம் 11.16
அனேக-பாஹூதர-வக்த்ர-நேத்ரம்
பஷ்யாமி த்வாம் ஸர்வதோ (அ)னந்த-ரூபம்
நாந்தம் ந மத்யம் ந புனஸ் தவாதிம்
பஷ்யாமி விஷ்வேஷ்வர விஷ்வ-ரூப
அனேக – பற்பல; பாஹு – கைகள்; உதர – வயிறுகள்; வக்த்ர – வாய்கள்; நேத்ரம் – கண்கள்; பஷ்யாமி – காண்கிறேன்; த்வாம் – உமக்கு; ஸர்வத: – எல்லாப் புறங்களினின்றும்; அனந்த-ரூபம் — எண்ணிலடங்காத உருவங்கள்; ந அந்தம் – முடிவு இல்லை; ந மத்யம் – நடு இல்லை; ந புன: – மீண்டும் இல்லை; தவ – உமது; ஆதிம் – ஆரம்பம்; பஷ்யாமி – காண்கிறேன்; விஷ்வேஷ்வர – அகிலத்தின் இறைவனே; விஷ்வ-ரூப – விஸ்வரூபமே.
உலகத்தின் இறைவனே, விஸ்வரூபமே, நான் உமது உடலில் பற்பல கைகளும் வயிறுகளும் வாய்களும் கண்களும் எல்லையற்று எங்கும் பரவியிருப்பதைக் காண்கிறேன். உம்மில் நான் ஆதியையோ, நடுவையோ, முடிவையோ காணவில்லை.
பதம் 11.17
கிரீடினம் கதினம் சக்ரிணம் ச
தேஜோ-ராஷிம் ஸர்வதோ தீப்திமந்தம்
பஷ்யாமி த்வாம் துர்னிரீக்ஷ்யம் ஸமந்தாத்
தீப்தானலார்க-த்யுதிம் அப்ரமேயம்
கிரீடினம் – மகுடங்களுடன்; கதினம் – கதைகளுடன்; சக்ரிணம் – சக்கரங்களுடன்; ச – மேலும்; தேஜ:ராஷிம் – பிரகாசமான ஜோதி; ஸர்வத: – எல்லாத் திக்குகளிலும்; தீப்தி-மந்தம் – ஒளிர்ந்து கொண்டு; பஷ்யாமி – காண்கிறேன்; த்வாம் – உம்மை; துர்னிரீக்ஷ்யம் – காணக் கடினமான; ஸமந்தாத் – எங்கும்; தீப்த-அனல – கொதிக்கும் நெருப்பு; அர்க – சூரியன்; த்யுதிம் – சூரிய ஒளி; அப்ரமேயம் – அளக்கவியலாத.
அளக்க முடியாத சூரிய ஒளி அல்லது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பினைப் போன்று, எல்லா திசைகளிலும் பிரகாசமாக விளங்கும் ஜோதியினால், உமது உருவத்தை பார்ப்பதற்குக் கடினமாக உள்ளது. இருப்பினும், பற்பல மகுடங்கள், கதைகள் மற்றும் சக்கரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள உமது உருவம் எல்லா இடங்களிலும் பிரகாசமாக விளங்குகின்றது.
பதம் 11.18
த்வம் அக்ஷரம் பரமம் வேதிதவ்யம்
த்வம் அஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதானம்
த்வம் அவ்யய: ஷாஷ்வத-தர்ம-கோப்தா
ஸனாதனஸ் த்வம் புருஷோ மதோ மே
த்வம் – நீர்; அக்ஷரம் – வீழ்ச்சியடையாத; பரமம் – பரமன்; வேதிதவ்யம் – புரிந்து கொள்ளப்பட வேண்டியவர்; த்வம் – நீர்; அஸ்ய – இந்த; விஷ்வஸ்ய – அகிலத்தின்; பரம் – பரமன்; நிதானம் – ஆதாரம்; த்வம் – நீரே; அவ்யய: – அழிவற்ற; ஷாஷ்வத-தர்ம-கோப்தா – தர்மத்தின் நித்திய பாதுகாவலர்; ஸநாதன: – நித்திய; த்வம் – நீர்; புருஷ: – புருஷர்; கடவுள்; மத: மே – இஃது எனது அபிப்பிராயம்.
அறிய வேண்டியவைகளில் முதன்மையானவர் நீரே; எல்லா அகிலங்களுக்கும் இறுதி ஆதாரம் நீரே. நீர் அழிவற்றவர், மிகப் பழமையானவர், தர்மத்தின் நித்திய பாதுகாவலர் மற்றும் புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள். இதுவே எனது அபிப்பிராயம்.
பதம் 11.19
அனாதி-மத்யாந்தம் அனந்த-வீர்யம்
அனந்த-பாஹும் ஷஷி-ஸூர்ய-நேத்ரம்
பஷ்யாமி த்வாம் தீப்த-ஹூதாஷ-வக்த்ரம்
ஸ்வ-தேஜஸா விஷ்வம் இதம் தபந்தம்
அனாதி – ஆரம்பமில்லாத; மத்ய – நடு; அந்தம் – இறுதி; அனந்த – அளவிட முடியாத; வீர்யம் – பெருமைமிகு; அனந்த – அளவிட முடியாத; பாஹும் – கைகள்; ஷஷி – சந்திரன்; ஸூர்ய – சூரியன்; நேத்ரம் – கண்கள்; பஷ்யாமி – காண்கிறேன்; த்வாம் – நீர்; தீப்த – எரிகின்ற; ஹுதாஷ-வக்த்ரம் – உமது வாயிலிருந்து வெளிவரும் நெருப்பு; ஸ்வ-தேஜஸா – உமது தேஜஸால்; விஷ்வம் – அகிலம்; இதம் – இந்த; தபந்தம் – வெப்பம்.
நீர் ஆரம்பமும் நடுவும் இறுதியும் இல்லாதவர். உமது பெருமை அளவிட முடியாதது, தங்களது கைகள் அளவிட முடியாதவை, சூரியனும் சந்திரனும் உமது கண்கள். உமது வாயிலிருந்து வெளிவரும் நெருப்பு ஜூவாலையையும், உமது சுய தேஜஸால் இந்த அகிலம் முழுவதையும் தாங்கள் எரிப்பதையும் நான் காண்கின்றேன்.
பதம் 11.20
த்யாவ் ஆ-ப்ருதிவ்யோர் இதம் அந்தரம் ஹி
வ்யாப்தம் த்வயைகேன திஷஷ் ச ஸர்வா:
த்ருஷ்ட்வாத்பபூதம் ரூபம் உக்ரம் தவேதம்
லோக-த்ரயம் ப்ரவ்யதிதம் மஹாத்மன்
த்யௌ – வானிலிருந்து; ஆ-ப்ரு’திவ்யோ: – பூமி வரை; இதம் – இதற்கு; அந்தரம் – இடையிலும்; ஹி – நிச்சயமாக; வ்யாப்தம் – வியாபித்துள்ளீர்; த்வயா – தாங்கள்; ஏகேன – ஒருவரே; திஷ: – திசைகளில்; ச – மேலும்; ஸர்வா: – எல்லா; த்ரு’ஷ்ட்வா – காண்பதால்; அத்புதம் – அற்புதமான; ரூபம் – ரூபம்; உக்ரம் – பயங்கரமான; தவ – உமது; இதம் – இந்த; லோக – லோகம்; த்ரயம் – மூன்று; ப்ரவ்யதிதம் – குழம்பியுள்ளது; மஹா-ஆத்மன் – மஹாத்மாவே.
தாங்கள், ஒருவரே என்றபோதிலும், வானம், பூமி, மற்றும் இரண்டிற்கும் இடைப்பட்ட இடம் என எல்லா திசைகளிலும் வியாபித்துள்ளீர். மஹாத்மாவே, இந்த அற்புதமான உக்கிர ரூபத்தைக் கண்டு, மூவுலகமும் குழம்பியுள்ளது.
பதம் 11.21
அமீ ஹி த்வாம் ஸுர-ஸங்கா விஷந்தி
கேசித் பீதா: ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி
ஸ்வஸ்தீத்-யுக்த்வா மஹர்ஷி-ஸித்த-ஸங்கா:
ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி: புஷ்கலாபி:
அமீ – அனைவரும்; ஹி – நிச்சயமாக; த்வாம் – உம்மில்; ஸுர-ஸங்கா: – தேவர்கள்; விஷந்தி – நுழைகின்றனர்; கேசித் – அவர்களில் சிலர்; பீதா: – பயத்தினால்; ப்ராஞ்ஜலய: – கூப்பிய கரங்களுடன்; க்ரு’ணந்தி – பிரார்த்தனை செய்கின்றனர்; ஸ்வஸ்தி – அமைதி; இதி – என்று; உக்த்வா – கூறிக்கொண்டு; மஹா-ரிஷி – மகா ரிஷிகள்; ஸித்த- ஸங்கா: – சித்தர்கள்; ஸ்துவந்தி – மந்திரங்களைப் பாடுகின்றனர்; த்வாம் – உமக்கு; ஸ்துதிபி: -பிரார்த்தனைகளுடன்; புஷ்கலாபி: – வேத மந்திரங்கள்.
தேவர்கள் அனைவரும் உம்மிடம் சரணடைந்து, உம்மில் புகுந்து கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் மிகவும் அச்சமுற்று, கூப்பிய கரங்களுடன் பிரார்த்தனை செய்கின்றனர். மகா ரிஷிகளும் சித்தர்களும் “அமைதி!” என்று கதறியபடி, வேத மந்திரங்களைப் பாடி உம்மிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
பதம் 11.22
ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா
விஷ்வே (அ)ஷ்வினௌ மருதஷ் சோஷ்மபாஷ் ச
கந்தர்வ-யக்ஷாஸுர-ஸித்த -ஸங்கா
வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஷ் சைவ ஸர்வே
ருத்ர – சிவபெருமானின் பல்வேறு தோற்றங்கள்; ஆதித்யா: – ஆதித்தியர்கள்; வஸவ: – வசுக்கள்; யே – அவர்கள் அனைவரும்; ச – மேலும்; ஸாத்யா: – ஸாத்தியர்கள்; விஷ்வே – விஷ்வதேவர்கள்; அஷ்வினௌ – அஸ்வினி குமாரர்கள்; மருத: – மருத்துக்கள்; ச – மேலும்; உஷ்ம-பா: – முன்னோர்கள்; ச – மேலும்; கந்தர்வ – கந்தர்வர்கள்; யக்ஷ – யக்ஷர்கள்; அசுர – அசுரர்கள்; ஸித்த – ஸித்தர்கள்; ஸங்கா: – கூட்டங்கள்; வீக்ஷந்தே – காண்கின்றனர்; த்வாம் – உம்மை; விஷ்மிதா: – வியப்புடன்; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; ஸர்வே – எல்லாரும்.
சிவபெருமானின் பல்வேறு தோற்றங்கள், ஆதித்தியர்கள், வசுக்கள், ஸாத்தியர்கள், விஷ்வதேவர்கள், இரு அஸ்வினிகள், மருத்துக்கள், முன்னோர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சித்தர்கள் என அனைவரும் உம்மை வியப்புடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.
பதம் 11.23
ரூபம் மஹத் தே பஹு-வக்த்ர-நேத்ரம்
மஹா-பாஹோ பஹு-பாஹூரு-பாதம்
பஹூதரம் பஹு-தம்ஷ்ட்ரா-கராலம்
த்ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதிதாஸ் ததாஹம்
ரூபம் – உருவம்; மஹத் – மிகச்சிறந்த; தே – உமது; பஹு – பற்பல; வக்த்ர – முகங்கள்; நேத்ரம் – கண்கள்; மஹா-பாஹோ – வலிமையான புயங்களை உடையவரே; பஹு – பல; பாஹு – கைகள்; ஊரு – தொடைகள்; பாதம் – கால்கள்; பஹு-உதரம் – பற்பல வயிறுகள்; பஹு-தம்ஷ்ட்ரா – பற்பல பற்கள்; கராலம் – பயங்கரமான; த்ரு’ஷ்ட்வா – கண்டு; லோகா: – எல்லா உலகங்களும்; ப்ரவ்யதிதா: – குழம்பி இருக்கின்றன; ததா – அதுபோல; அஹம் – நானும்.
வலிமையான புயங்களை உடையவரே, உமது பற்பல முகங்கள், கண்கள், கைகள், வயிறுகள், கால்கள் மற்றும் உமது பற்பல பயங்கரமான பற்களைக் கண்டு, தேவர்கள் உட்பட உலகிலுள்ள அனைவரும் குழம்பியுள்ளனர். அவர்களைப் போலவே நானும் குழம்பியுள்ளேன்.
பதம் 11.24
நப:-ஸ்ப்ருஷம் தீப்தம் அனேக-வர்ணம்
வ்யாத்தானனம் தீப்த-விஷால-நேத்ரம்
த்ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதிதாந்தர்-ஆத்மா
த்ருதிம் ந விந்தாமி ஷமம் ச விஷ்ணோ
நப:-ஸ்ப்ரு’ஷம் – வானைத்தொடும்; தீப்தம் – ஒளிர்கின்ற; அனேக – பல; வர்ணம் — நிறம்; வ்யாத்த – திறந்த; ஆனனம் — வாய்கள்; தீப்த – ஒளிர்கின்ற; விஷால – மிகவும் பரந்த; நேத்ரம் – கண்கள்; த்ரு’ஷ்ட்வா – கண்டு; ஹி – நிச்சயமாக; த்வாம் – நீர்; ப்ரவ்யதிதா – குழம்பி; அந்த: – உள்ளே; ஆத்மா – ஆத்மா; த்ரு’திம் – திடமாக; ந – இல்லை; விந்தாமி – உடையவனாய்; ஷமம் – மனதின் சமநிலை; ச – மேலும்; விஷ்ணோ – விஷ்ணுவே.
எங்கும் நிறைந்த விஷ்ணுவே, வானத்தைத் தொடும் உமது பற்பல ஒளிரும் நிறங்கள், திறந்த வாய்கள், மற்றும் பிரகாசிக்கக் கூடிய விசாலமான கண்களுடன் உம்மை நான் காணும்போது, எனது மனம் பயத்தினால் குழம்புகின்றது. எனது மனதின் சமநிலையை தக்கவைப்பது இனிமேல் என்னால் இயலாது.
பதம் 11.25
தம்ஷ்ட்ரா-கராலானி ச தே முகானி
த்ருஷ்ட்வைவ காலானல-ஸன்னிபானி
திஷோ ந ஜானே ந லபே ச ஷர்ம
ப்ரஸீத தேவேஷ ஜகன்-நிவாஸ
தம்ஷ்ட்ரா – பற்கள்; கராலானி – பயங்கரமான; ச – மேலும்; தே – உமது; முகானி – முகங்கள்; த்ரு’ஷ்ட்வா – கண்டு; ஏவ – இவ்வாறு; கால-அனல – காலத்தின் இறுதியில் உலகினை அழிக்கும் நெருப்பு; ஸன்னிபானி – போல; திஷ – திசைகள்; ந – இல்லை; ஜானே – அறிவது; ந – இல்லை; லபே –அடைவது; ச – மேலும்; ஷர்ம – கருணை; ப்ரஸீத – மகிழ்வீராக; தேவ-ஈச – தேவர்களின் இறைவனே; ஜகத்-நிவாஸ – உலகங்களின் அடைக்கலமே.
தேவர்களின் இறைவனே, உலகங்களின் அடைக்கலமே, என்னிடம் கருணை கொள்ளும். கால நெருப்பினைப் போன்ற உமது முகங்களையும், பயங்கரமான பற்களையும், கண்டபின் எனது மனதை நிலைநிறுத்த முடியவில்லை. எல்லா திசைகளிலும் நான் குழம்பியுள்ளேன்.
பதம் 11.26 – 11.27
அமீ ச த்வாம் த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா:
ஸர்வே ஸஹைவாவனி-பால-ஸங்கை:
பீஷ்மோ த்ரோண: ஸூத-புத்ரஸ் ததாஸௌ
ஸஹாஸ்மதீயைர் அபி யோத -முக்யை:
வக்த்ராணி தே த்வரமாணா விஷந்தி
தம்ஷ்ட்ரா-கராலானி பயானகானி
கேசித் விலக்னா தஷனாந்தரேஷு
ஸந்த்ருஷ்யந்தே சூர்ணிதைர் உத்தமாங்கை:
அமீ – இவர்கள் அனைவரையும்; ச – மேலும்; த்வாம் – நீர்; த்ரு’தராஷ்ட்ரஸ்ய — திருதராஷ்டிரரின்; புத்ரா: – மைந்தர்கள்; ஸர்வே – எல்லாம்; ஸஹ – உடன்; ஏவ – நிச்சயமாக; அவனி-பால – போர்புரியும் மன்னர்கள்; ஸங்கை: – கூட்டம்; பீஷ்ம: – பீஷ்மதேவர்; த்ரோண: – துரோணாசாரியர்; ஸூத-புத்ர: – கர்ணன்; ததா – மேலும்; அஸௌ – அந்த; ஸஹ –கூட; அஸ்மதீயை: – நமது; அபி – மேலும்; யோத-முக்யை: – போர் வீரர்களில் முக்கியமானவர்கள்; வக்த்ராணி — வாய்கள்; தே – உமது; த்வரமாணா: – அவசரமாக; விஷந்தி – நுழைகின்றனர்; தம்ஷ்ட்ரா – பற்கள்; கராலானி – கொடிய; பயானகானி – அச்சமூட்டுகின்ற; கேசித் – அவர்களில் சிலர்; விலக்னா: – தாக்கப்பட்டு; தஷன-அந்தரேஷு – பற்களுக்கிடையே; ஸந்த்ரு’ஷ்யந்தே – காணப்படுகின்றனர்; சூர்ணிதை: – பொடியாக்கப்பட்டு; உத்தம-அங்கை: – தலைகள்.
தனது கூட்டத்தைச் சேர்ந்த மன்னர்களுடன் திருதராஷ்டிரரின் எல்லாப் புத்திரர்கள், பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் நமது முக்கிய வீரர்களும் உம்முடைய வாய்களுக்குள்ளே விரைந்து நுழைகின்றனர். அவர்களில் சிலர் உமது பற்களுக்கிடையே நசுக்கப்படுவதையும் நான் காண்கிறேன்.
பதம் 11.28
யதா நதீனாம் பஹவோ (அ)ம்பு-வேகா:
ஸமுத்ரம் ஏவாபிமுகா த்ரவந்தி
ததா தவாமீ நர-லோக-வீரா
விஷந்தி வக்த்ராண்-யபி விஜ்வலந்தி
யதா – போல; நதீனாம் – நதிகளின்; பஹவ: – பல்வேறு; அம்பு-வேகா: – நீரின் அலைகள்; ஸமுத்ரம் – கடல்; ஏவ – நிச்சயமாக; அபிமுகா: – நோக்கி; த்ரவந்தி – பாய்கின்றன; ததா — அதுபோல; தவ – உமது; அமீ – இவர்கள் எல்லாம்; நர-லோக-வீரா: – மனித சமூகத்தின் மன்னர்கள்; விஷந்தி – நுழைகின்றனர்; வக்த்ராணி – வாய்கள்; அபிவிஜ்வலந்தி – எரிகின்ற.
நதிகளின் பல்வேறு அலைகள் கடலை நோக்கிச் செல்வது போல, இந்த மாவீரர்கள் அனைவரும் எரிகின்ற உமது வாயினுள் நுழைகின்றனர்.
பதம் 11.29
யதா ப்ரதீப்தம் ஜ்வலனம் பதங்கா
விஷந்தி நாஷாய ஸ்ம்ருத்த-வேகா:
ததைவ நாஷாய விஷந்தி லோகாஸ்
தவாபி வக்த்ராணி ஸம்ருத்த-வேகா:
யதா – போல; ப்ரதீப்தம் – எரியும்; ஜ்வலனம் – நெருப்பு; பதங்கா: – விட்டில் பூச்சி; விஷந்தி – நுழைகின்றன; நாஷாய – அழிவிற்காக; ஸம்ரு’த்த – முழு; வேகா: – வேகம்; ததா ஏவ – அதுபோலவே; நாஷாய – அழிவிற்காக; விஷந்தி — நுழைகின்றனர்; லோகா: – எல்லா மக்களும்; தவ – உமது; அபி – மேலும்; வக்த்ராணி – வாய்கள்; ஸம்ரு’த்த-வேகா: – முழு வேகத்துடன்.
கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் அழிவை நோக்கி நுழையும் விட்டில் பூச்சிகளைப் போல, எல்லா மக்களும் உமது வாய்களில் முழு வேகத்துடன் நுழைவதை நான் காண்கிறேன்.
பதம் 11.30
லேலிஹ்யஸே க்ரஸமான: ஸமந்தால்
லோகான் ஸமக்ரான் வதனைர் ஜ்வலத்பி:
தேஜோபிர் ஆபூர்ய ஜகத் ஸமக்ரம்
பாஸஸ் தவோக்ரா: ப்ரதபந்தி விஷ்ணோ
லேலிஹ்யஸே – நக்கிக் கொண்டு; க்ரஸமான: – விழுங்கிக் கொண்டு; ஸமந்தாத் – எல்லாத் திசைகளிலிருந்தும்; லோகான் – மக்கள்; ஸமக்ரான் – அனைவரும்; வதனை: – வாய்களால்; ஜ்வலத்பி: – எரிகின்ற; தேஜோபி: -தேஜஸினால்; ஆபூர்ய – நிரப்பியுள்ள; ஜகத் – அகிலம்; ஸமக்ரம் – எல்லாம்; பாஸ: – கதிர்கள்; தவ – உமது; உக்ரா: – பயங்கரமான; ப்ரதபந்தி – தகிக்கின்ற; விஷ்ணோ – எங்கும் நிறைந்த இறைவனே.
விஷ்ணுவே, கொழுந்து விட்டெரியும் உமது வாய்களின் மூலம் எல்லா திசைகளிலும் உள்ள மக்கள் அனைவரையும் தாங்கள் விழுங்கிக் கொண்டுள்ளதை நான் காண்கிறேன். உமது தேஜஸினால் அகிலம் முழுவதையும் நிறைத்துக் கொண்டு, உக்கிரமான தகிக்கக்கூடிய கதிர்களுடன் தாங்கள் வீற்றுள்ளீர்.
பதம் 11.31
ஆக்யாஹி மே கோ பவான் உக்ர-ரூபோ
நமோ (அ)ஸ்து தே தேவ-வர ப்ரஸீத
விக்ஞாதும் இச்சாமி பவந்தம் ஆத்யம்
ந ஹி ப்ரஜானாமி தவ ப்ரவ்ருத்திம்
ஆக்யாஹி – தயவுசெய்து விளக்குங்கள்; மே – எனக்கு; க: – யார்; பவான் — நீங்கள்; உக்ர-ரூப – உக்கிரமான ரூபம்; நம:அஸ்து – வணக்கங்கள்; தே – உமக்கு; தேவ-வர – தேவர்களில் சிறந்தவரே; ப்ரஸீத – கருணை காட்டுங்கள்; விஜ்ஞாதும் – அறிவதற்கு; இச்சாமி – விரும்புகிறேன்; பவந்தம் – உம்மை; ஆத்யம் – ஆரம்பம்; ந – இல்லை; ஹி – நிச்சயமாக; ப்ரஜானாமி – அறியலாமா; தவ – உமது; ப்ரவ்ரு’த்திம் – நோக்கம்.
தேவர்களின் இறைவனே, உக்கிரமான ரூபமே, தாங்கள் யார் என்பதை தயவு செய்து எனக்குக் கூறும். உமக்கு எனது வணக்கங்கள்; என்னிடம் கருணை காட்டும். தாங்களே ஆதி புருஷர். உங்களது நோக்கம் என்ன என்பதை அறியாததால், அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன்.
பதம் 11.32
ஸ்ரீ-பகவான் உவாச
காலோ (அ)ஸ்மி லோக-க்ஷய-க்ருத் ப்ரவ்ருத்தோ
லோகான் ஸமாஹர்தும் இஹ ப்ரவ்ருத்த:
ருதே (அ)பி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே
யே (அ)வஸ்திதா: ப்ரத்யனீகேஷு யோதா:
ஸ்ரீ-பகவான் உவாச – முழுமுதற் கடவுள் கூறினார்; கால: – காலம்; அஸ்மி – நான்; லோக – உலகங்களை; க்ஷய-க்ரு’த் – அழிப்பவன்; ப்ரவ்ருத்த: – மிகப் பெரியவன்; லோகான் – மக்கள் அனைவரையும்; ஸமாஹர்தும் – அழிப்பதில்; இஹ – இவ்வுலகிலுள்ள; ப்ரவ்ரு’த்த: – ஈடுபட்டுள்ளேன்; ரு’தே – தவிர; அபி – கூட; த்வாம் – உங்களை; ந – இல்லை; பவிஷ்யந்தி – இருக்கப்போவது; ஸர்வே – எல்லா; யே – யாரெல்லாம்; அவஸ்திதா: – இருப்பவர்கள்; ப்ரதி-அனீகேஷு – எதிர்தரப்பில்; யோதா: – வீரர்கள்.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: காலம் நான், உலகங்களை அழிப்பவற்றில் மிகப்பெரியவன், எல்லா மக்களையும் அழிப்பதற்காக நான் வந்துள்ளேன். உங்களைத் தவிர (பாண்டவர்களைத் தவிர) இரு தரப்பிலும் உள்ள எல்லா வீரர்களும் அழிக்கப்படுவர்.
பதம் 11.33
தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யஷோ லபஸ்வ
ஜித்வா ஷத்ரூன் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்
மயைவைதே நிஹதா: பூர்வம் ஏவ
நிமித்த-மாத்ரம் பவ ஸவ்ய-ஸாசின்
தஸ்மாத் – எனவே; த்வம் – நீ; உத்திஷ்ட – எழு; யஷ: – புகழ்; லபஸ்வ – இலாபமடை; ஜித்வா – வென்று; ஷத்ரூன் – எதிரிகளை; புங்க்ஷ்வ – அனுபவி; ராஜ்யம் – ராஜ்ஜியத்தை; ஸம்ரு’த்தம் — வளமான; மயா – என்னால்; ஏவ – நிச்சயமாக; ஏதே – இவர்களெல்லாம்; நிஹதா: – கொல்லப்பட்டுவிட்டனர்; பூர்வம் ஏவ – ஏற்பாட்டின்படி; நிமித்த-மாத்ரம் – காரணமாக மட்டும்; பவ – ஆவாயாக; ஸவ்ய-ஸாசின் – ஸவ்யஸாசியே.
எனவே, எழுந்து போரிடத் தயாராகு. உனது எதிரிகளை வென்று, புகழுடன் வளமான அரசினை அனுபவிப்பாயாக. எனது ஏற்பாட்டால் இவர்கள் அனைவரும் ஏற்கனவே மரணத்தைக் கண்டுவிட்டனர். எனவே, ஸவ்யஸாசியே, போரில் ஒரு கருவியாக மட்டும் செயல்படுவாயாக.
பதம் 11.34
த்ரோணம் ச பீஷ்மம் ச ஜயத்ரதம் ச
கர்ணம் ததான்யான் அபி யோத -வீரான்
மயா ஹதாம்ஸ் த்வம் ஜஹி மா வ்யதிஷ்டா
யுத்யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்னான்
த்ரோணம் ச – துரோணரும்; பீஷ்மம் ச – பீஷ்மரும்; ஜயத்ரதம் ச – ஜயத்ரதனும்; கர்ணம் – கர்ணன்; ததா – மேலும்; அன்யான் – பிறர்; அபி – நிச்சயமாக; யோத-வீரான் – பெரும் போர்வீரர்கள்; மயா – என்னால்; ஹதான் – ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்; த்வம் – நீ; ஜஹி – அழிப்பது; மா – இல்லை; வ்யதிஷ்டா: – குழப்பமடைய; யுத்யஸ்வ – போரிடு; ஜேதா அஸி – நீ வெற்றி பெறுவாய்; ரணே – போரில்; ஸபத்னான் – எதிரிகளை.
திருதராஷ்டிரரிடம் சஞ்சயன் கூறினான்: மன்னா, முழுமுதற் கடவுளிடமிருந்து இத்தகு உரையைக் கேட்ட அர்ஜுனன், கூப்பிய கரங்களுடன் நடுங்கியபடி மீண்டும் மீண்டும் அவரை வணங்கினான். மிகுந்த பயத்துடன் குரல் தழுதழுத்த வண்ணம் அவன் கிருஷ்ணரிடம் பின்வருமாறு கூறத் தொடங்கினான்.
பதம் 11.35
ஸ்ஞஜய உவாச
ஏதச் ச்ருத்வா வசனம் கேஷவஸ்ய
க்ருதாஞ்ஜலிர் வேபமான: கிரீடீ
நமஸ்க்ருத்வா பூய ஏவாஹ க்ருஷ்ணம்
ஸ-கத்கதம் பீத-பீத: ப்ரணம்ய
ஸஞ்ஜய: உவாச – சஞ்ஜயன் கூறினான்; ஏதத் – இவ்வாறு; ஷ்ருத்வா – கேட்ட; வசனம் – உரையாடல்; கேஷவஸ்ய – கிருஷ்ணரின்; க்ருத-அஞ்ஜலி: – கூப்பிய கரங்களுடன்; வேபமான: – நடுங்கிக் கொண்டு; கிரீடீ – அர்ஜுனன்; நமஸ்-க்ரு’த்வா – வணங்கிக் கொண்டு; பூய – மீண்டும்; ஏவ — மேலும்; ஆஹ – கூறினான்; க்ரு’ஷ்ணம் – கிருஷ்ணரிடம்; ஸ-கத்கதம் – தழுதழுத்த குரலுடன்; பீத-பீத: – மிகுந்த பயத்துடன்; ப்ரணம்ய – வணங்கினான்.

பதம் 11.36
அர்ஜுன உவாச
ஸ்தானே ஹ்ருஷீகேஷ தவ ப்ரகீர்த்யா
ஜகத் ப்ரஹ்ருஷ்யத்-யனுரஜ்யதே ச
ரக்ஷாம்ஸி பீதானி திஷோ த்ரவந்தி
ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்த -ஸங்கா:
அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; ஸ்தானே – சரியாக; ஹ்ரு’ஷீக-ஈஷ – புலன்களின் உரிமையாளரே; தவ – உமது; ப்ரகீர்த்யா – பெருமைகளால்; ஜகத் – முழு உலகமும்; ப்ரஹ்ருஷ்யதி – மகிழ்கின்றனர்; அனுரஜ்யதே – பற்றுதல் கொண்டு; ச – மேலும்; ரக்ஷாம்ஸி – அசுரர்கள்; பீதானி – பயத்தினால்; திஷ: – எல்லாத் திசைகளிலும்; த்ரவந்தி – பறக்கின்றனர்; ஸர்வே – அனைவரும்; நமஸ்யந்தி – வந்தனை செய்து கொண்டு; ச – மேலும்; ஸித்த-ஸங்கா: – சித்தர்கள்.
அர்ஜுனன் கூறினான்: புலன்களின் அதிபதியே, உமது திருநாமத்தைக் கேட்பதால் உலகம் ஆனந்தம் அடைகின்றது, அதன் மூலம் அனைவரும் உம்மிடம் பற்றுதல் கொள்கின்றனர். சித்தர்கள் மரியாதையுடன் உம்மை வணங்கும் அதேசமயத்தில், அசுரர்கள் அச்சமுற்று இங்குமங்கும் ஓடுகின்றனர். இவையனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றன.
பதம் 11.37
கஸ்மாச் ச தே ந நமேரன் மஹாத்மன்
கரீயஸே ப்ரஹ்மணோ (அ)ப்-யாதி-கர்த்ரே
அனந்த தேவேஷ ஜகன்-நிவாஸ
த்வம் அக்ஷரம் ஸத்-அஸத் தத் பரம் யத்
கஸ்மாத் – ஏன்; ச – மேலும்; தே – உம்மிடம்; ந – இல்லை; நமேரன் – தக்க வணக்கங்களை சமர்ப்பிக்க; மஹா-ஆத்மன் – மிகப் பெரியவரே; கரீயஸே – சிறந்தவர்; ப்ரஹ்மண: – பிரம்மாவை விட; அபி – இருந்தும்; ஆதி-கர்த்ரே – முதல் படைப்பாளருக்கு; அனந்த — எல்லையற்ற; தேவ-ஈஷ – தேவர்களின் தேவரே; ஜகத்-நிவாஸ – அகிலத்தின் அடைக்கலமே; த்வம் – நீங்கள்; அக்ஷரம் – அழிவற்ற; ஸத்-அஸத் – காரணம், விளைவு; தத் பரம் – பரமமான; யத் – ஏனெனில்.
மஹாத்மாவே, பிரம்மாவை விடச் சிறந்தவரே, நீங்களே ஆதி படைப்பாளர். எனவே, அவர்கள் மரியாதை கலந்த வணக்கங்களை ஏன் உங்களுக்கு செலுத்தக் கூடாது? எல்லையற்றவரே, தேவர்களின் தேவனே, அகிலத்தின் அடைக்கலமே, தாங்கள் அழிவற்றவர், எல்லா காரணங்களுக்கும் காரணம், இந்த ஜடத் தோற்றத்திற்கு அப்பாற்பட்டவர்.
பதம் 11.38
த்வம் ஆதி-தேவ: புருஷ: புராணஸ்
த்வம் அஸ்ய விஷ்வஸ்ய பரம் நிதானம்
வேத்தாஸி வேத்யம் ச பரம் ச தாம
த்வயா ததம் விஷ்வம் அனந்த-ரூப
த்வம் – நீர்; ஆதி-தேவ: – ஆதிதேவர்; புருஷ: – புருஷர்; புராண: – பழையவர்; த்வம் – நீர்; அஸ்ய – இந்த; விஷ்வஸ்ய – அகிலத்தின்; பரம் – பரமமான; நிதானம் — அடைக்கலம்; வேத்தா – அறிபவர்; அஸி – நீர்; வேத்யம் – அறியப்படுபவர்; ச – மேலும்; பரம் – பரமமான; ச – மேலும்; தாம – அடைக்கலம்; த்வயா – உம்மால்; ததம் – நுழையப்பட்டு; விஷ்வம் – அகிலம்; அனந்த-ரூப – எல்லையற்ற ரூபமே.
நீரே ஆதி தேவர், புருஷர், மிகவும் பழமையானவர், படைக்கப்பட்ட இந்த உலகத்தின் இறுதி அடைக்கலம், அனைத்தையும் அறிந்தவரும், அறியப்பட வேண்டியவரும் நீரே. பௌதிக குணங்களுக்கு அப்பாற்பட்ட உன்னத அடைக்கலம் நீரே. எல்லையற்ற ரூபமே, பிரபஞ்சத் தோற்றம் முழுவதும் தாங்கள் பரவியுள்ளீர்.
பதம் 11.39
வாயுர் யமோ (அ)க்னிர் வருண: ஷஷாங்க:
ப்ரஜாபதிஸ் த்வம் ப்ரபிதாமஹஷ் ச
நமோ நமஸ் தே (அ)ஸ்து ஸஹஸ்ர-க்ருத்வ:
புனஷ் ச பூயோ (அ)பி நமோ நமஸ் தே
வாயு: – வாயு; யம: – எமன்; அக்னி: – அக்னி; வருண: – வருணன்; ஷஷ-அங்க: – சந்திரன்; ப்ரஜாபதி: – பிரம்மா; த்வம் – நீர்; ப்ரபிதாமஹ: – பிதாமகனின் தந்தை; ச – மேலும்; நம: – எனது வணக்கங்கள்; நம: – மீண்டும் எனது வணக்கங்கள்; தே – உமக்கு; அஸ்து — இருக்கட்டும்; ஸஹஸ்ர-க்ரு’த்வ: – ஆயிரம் முறைகள்; புன: ச – மீண்டும்; பூய: – மீண்டும்; அபி – கூட; நம: – எனது வணக்கங்கள்; நம: தே – உமக்கு எனது வணக்கங்கள்.
நீரே வாயு, நீரே எமன்! நீரே அக்னி, நீரே வருணன், நீரே சந்திரன். முதல் உயிர்வாழியான பிரம்மாவும் நீரே, அந்த பிதாமகனின் தந்தையும் நீரே. எனவே, எனது மரியாதை கலந்த வணக்கங்களை உமக்கு ஆயிரமாயிரம் முறைகள் மீண்டும் மீண்டும் நான் சமர்ப்பிக்கின்றேன்.
பதம் 11.40
நம: புரஸ்தாத் அத ப்ருஷ்டதஸ் தே
நமோ (அ)ஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ
அனந்த-வீர்யாமித-விக்ரமஸ் த்வம்
ஸர்வம் ஸ்மாப்னோஷி ததோ (அ)ஸி ஸர்வ:
நம: – வணங்குகின்றேன்; புரஸ்தாத் – முன்னிருந்து; அத – மேலும்; ப்ரு’ஷ்டத: – பின்னிருந்து; தே – உம்மை; நம: அஸ்து – எனது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்; தே – உமக்கு; ஸர்வத: – எல்லா திக்குகளிலிருந்தும்; ஏவ – உண்மையில்; ஸர்வ – ஏனெனில் நீரே எல்லாம்; அனந்த-வீர்ய – எல்லையற்ற சக்தி; அமித-விக்ரம: – எல்லையற்ற வலிமை; த்வம் – நீர்; ஸர்வம் – எல்லாம்; ஸமாப்னோஷி – நிறைகின்றீர்; தத: – எனவே; அஸி – நீங்களே; ஸர்வ: – எல்லாம்.
முன்னிருந்தும் பின்னிருந்தும் எல்லாத் திக்குகளில் இருந்தும் உமக்கு வணக்கங்கள்! எல்லையற்ற சக்தியே, எல்லையற்ற வலிமையின் இறைவன் நீரே! தாங்கள் எங்கும் பரவியிருப்பதால் நீரே எல்லாம்!
பதம் 11.41 – 11.42
ஸகேதி மத்வா ப்ரஸபம் யத் உக்தம்
ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸ்கேதி
அஜானதா மஹிமானம் தவேதம்
மயா ப்ரமாதாத் ப்ரணயேன வாபி
யச் சாவஹாஸார்தம் அஸத்-க்ருதோ (அ)ஸி
விஹார-ஷய்யாஸன-போஜனேஷு
ஏகோ (அ)த வாப்-யச்யுத தத்-ஸமக்ஷம்
தத் க்ஷாமயே த்வாம் அஹம் அப்ரமேயம்
ஸகா – நண்பன்; இதி – என்று; மத்வா — எண்ணிக் கொண்டு; ப்ரஸபம் – அகந்தையுடன்; யத் – என்னவெல்லாம்; உக்தம் – கூறப்பட்ட; ஹே க்ரு’ஷ்ண – கிருஷ்ணா; ஹே யாதவ – யாதவா; ஹே ஸகே – என்னருமை நண்பனே; இதி – என்று; அஜானதா – அறியாமல்; மஹிமானம் – பெருமைகளை; தவ – உமது; இதம் – இந்த; மயா – என்னால்; ப்ரமாதாத் — முட்டாள் தனத்தினால்; ப்ரணயேன – அன்பினால்; வா அபி – இருக்கலாம்; யத் – என்னென்ன; ச – மேலும்; அவஹாஸ அர்தம் — கேளிக்கையாக; அஸத்-க்ரு’த: – மரியாதையின்றி; அஸி – நீங்கள்; விஹார – இளைப்பாறியபோது; ஷய்யா – படுத்திருந்தபோது; ஆஸன – அமர்ந்திருந்தபோது; போஜனேஷு – அல்லது உடன் உணவருந்தியபோது; ஏக: – தனியாக; அத வா – அல்லது; அபி – மேலும்; அச்யுத – இழிவற்றவரே; தத்-ஸமக்ஷம் – சமமானவர்கள் மத்தியில்; தத் – அவற்றிற்காக; க்ஷமயே – மன்னிப்பை வேண்டுகிறேன்; த்வாம் – தங்களிடமிருந்து; அஹம் – நான்; அப்ரமேயம் – அளவிட இயலாத.
உம்மை எனது நண்பன் என்று எண்ணிக்கொண்டு, உமது பெருமைகளை அறியாமல் “கிருஷ்ணா,” “யாதவா,” “நண்பனே” என்றெல்லாம் நான் உம்மை அகந்தையுடன் அழைத்துள்ளேன். பித்தத்தினாலோ பிரேமையினாலோ நான் செய்தவை அனைத்தையும் தயவுசெய்து மன்னிக்கவும். பொழுது போக்கான கேளிக்கையின் போதும், ஒரே படுக்கையில் படுத்திருந்த போதும், அல்லது உடன் அமர்ந்து உணவருந்திய போதும், நான் தங்களை சில சமயங்களில் தனியாகவும் சில சமயங்களில் நண்பர்களுக்கு மத்தியிலும் அவமரியாதை செய்துள்ளேன். இழிவடையாதவரே, இத்தகைய குற்றங்களுக்காக தயவுசெய்து என்னை மன்னிப்பீராக.
பதம் 11.43
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வம் அஸ்ய பூஜ்யஷ் ச குரூர் கரீயான்
ந த்வத்-ஸமோ (அ)ஸ்த யப்யதிக: குதோ (அ)ன்யோ
லோக-த்ரயே (அ)ப்-யப்ரதிம-ப்ரபாவ
பிதா – தந்தை; அஸி – நீங்கள்; லோகஸ்ய – உலகம் முழுவதற்கும்; சர – அசைகின்ற; அசரஸ்ய – அசையாத; த்வம் – நீங்கள்; அஸ்ய – இந்த; பூஜ்ய: -வழிபாட்டிற்குரிய; ச – மேலும்; குரு: – குரு; கரீயான் – புகழத்தக்க; ந – இல்லை; த்வத்-ஸம – உமக்கு சமமாக; அஸ்தி – இருக்க; அப்யதிக: – உயர்ந்த; குத: – எவ்வாறு சாத்தியம்; அன்ய: – மற்ற; லோக-த்ரயே – மூவுலகங்களில்; அபி – மேலும்; அப்ரதிம-ப்ரபாவ — அளவிட முடியாத வலிமையே.
இந்த பிரபஞ்சத் தோற்றத்திலுள்ள அசைகின்ற, அசையாத அனைத்திற்கும் தாங்களே தந்தை. வழிபாட்டிற்கு உரியவர்களில் முதன்மையானவரும், பரம ஆன்மீக குருவும் நீரே. உமக்கு சமமாகவோ, உம்முடன் ஒன்றாகவோ யாரும் ஆக முடியாது. அவ்வாறு இருக்கையில், அளவற்ற சக்தியின் இறைவனே, இந்த மூவுலகில் உம்மைவிட உயர்ந்தவர் யார் இருக்க முடியும்?
பதம் 11.44
தஸ்மாத் ப்ரணம்ய ப்ரணிதாய காயம்
ப்ரஸாதயே த்வாம் அஹம் ஈஷம் ஈட்யம்
பிதேவ புத்ரஸ்ய ஸகேவ ஸக்யு:
ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தேவ ஸோடும்
தஸ்மாத் – எனவே; ப்ரணம்ய — வணக்கங்களை சமர்ப்பிக்க; ப்ரணிதாய – கீழே விழுந்து; காயம் — உடல்; ப்ரஸாதயே – கருணையை வேண்டி; த்வாம் – உம்மிடம்; அஹம் – நான்; ஈஷம் – பரம புருஷரிடம்; ஈட்யம் — வந்தனைக்குரிய; பிதா இவ – தந்தையைப் போன்று; புத்ரஸ்ய – மகனுடன்; ஸகா இவ – நண்பனைப் போன்று; ஸக்யு: – நண்பனிடம்; ப்ரிய: – பிரியமானவன்; ப்ரியாயா: – பிரியமானவளிடம் அர்ஹஸி – தாங்கள்; தேவ – என் இறைவனே; ஸோடும் – பொறுத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வோர் உயிர்வாழியாலும் வணங்கப்பட வேண்டிய பரம புருஷர் நீரே. எனவே, நான் எனது மரியாதைக்குரிய வணக்கங்களை கீழே விழுந்து சமர்ப்பித்து உமது கருணையை வேண்டுகிறேன். எவ்வாறு தந்தை தனது மகனுடைய குற்றங்களையும், நண்பன் நண்பனுடைய குற்றங்களையும், கணவன் மனையினுடைய குற்றங்களையும் பொறுத்துக் கொள்கிறார்களோ, அதுபோல, என்னுடைய தவறுகள் அனைத்தையும் தாங்கள் பொறுத்து அருள்வீராக.
பதம் 11.45
அத்ருஷ்ட-பூர்வம் ஹ்ருஷிதோ (அ)ஸ்மி த்ருஷ்ட்வா
பயேன ச ப்ரவ்யதிதம் மனோ மே
தத் ஏவ மே தர்ஷய தேவ ரூபம்
ப்ரஸீத தேவேஷ ஜகன்-நிவாஸ
அத்ருஷ்ட-பூர்வம் — இதற்கு முன்பு காணாத; ஹ்ரு’ஷித: – மனமகிழ்ந்து; அஸ்மி – நான்; த்ரு’ஷ்ட்வா – பார்த்து; பயேன் – பயத்தால்; ச – மேலும்; ப்ரவ்யதிதம் – குழம்பி; மன: – மனம்; மே – எனது; தத் – அந்த; ஏவ – நிச்சயமாக; மே – எனக்கு; தர்ஷய – காண்பிக்கவும்; தேவ – இறைவனே; ரூபம் – உருவம்; ப்ரஸீத – கருணைகொள்ளும்; தேவி-ஈஷ – தேவர்களின் இறைவனே; ஜகத்-நிவாஸ – அகிலத்தின் அடைக்கலமே.
இதுவரை நான் என்றுமே கண்டிராத விஸ்வரூபத்தைப் பார்த்த பிறகு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அதே சமயத்தில் பயத்தினால் எனது மனம் குழம்புகின்றது. எனவே, தேவர்களின் இறைவனே, அகிலத்தின் அடைக்கலமே, என் மீது கருணைக் காட்டி மீண்டும் தங்களது தெய்வீக ரூபத்தைக் காட்டி அருள்புரிவீராக.
பதம் 11.46
கிரீடினம் கதினம் சக்ர-ஹஸ்தம்
இச்சாமி த்வாம் த்ரஷ்டும் அஹம் ததைவ
தேனைவ ரூபேண சதுர்-புஜேன
ஸஹஸ்ர-பாஹோ பவ விஷ்வ-மூர்தே
கிரீடினம் – மகுடத்துடன்; கதினம் – கதையுடன்; சக்ர-ஹஸ்தம் – கையில் சக்கரத்துடன்; இச்சாமி – விரும்புகின்றேன்; த்வாம் – உம்மை; த்ரஷ்டும் – காண; அஹம் – நான்; ததா ஏவ – அவ்வாறு; தேன ஏவ – அந்த; ரூபேண – ரூபத்தில்; சது:-புஜேன – நான்கு கரங்களுடைய; ஸஹஸ்ர-பாஹோ – ஆயிரம் கைகளுடையவரே; பவ – ஆகுங்கள்; விஷ்வ-மூர்தே – விஸ்வரூபமே.
விஸ்வரூபமே, ஆயிரம் கரங்களுடைய இறைவனே, தலையில் மகுடத்துடனும் கைகளில் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலருடனும் விளங்கும் உமது நான்கு கை உருவில் உம்மைக் காண நான் விரும்புகிறேன். உம்மை அந்த ரூபத்தில் காண நான் பேராவல் கொண்டுள்ளேன்.
பதம் 11.47
ஸ்ரீ-பகவான் உவாச
மயா பரஸன்னேன தவார்ஜுனேதம்
ரூபம் பரம் தர்ஷிதம் ஆத்ம-யோகாத்
தேஜோ-மயம் விஷ்வம் அனந்தம் ஆத்யம்
யன் மே த்வத் அன்யேன ந த்ருஷ்ட-பூர்வம்
ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; மயா – என்னால்; ப்ரஸன்னேன – மகிழ்வுடன்; தவ – உனக்கு; அர்ஜுன – அர்ஜுனா; இதம் – இந்த; ரூபம் – உருவம்; பரம் – தெய்வீகமான; தர்ஷிதம் – காட்டப்பட்ட; ஆத்ம-யோகாத் – எனது அந்தரங்க சக்தியால்; தேஜ: மயம் – ஒளிமிக்க; விஷ்வம் – முழு உலகம்; அனந்தம் – எல்லையற்ற; ஆத்யம் — மூலம்; யத் — எது; மே – எனது; த்வத் அன்யேன – உன்னைத் தவிர; ந த்ரு’ஷ்ட-பூர்வம் – யாரும் முன்பு கண்டதில்லை.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதன்பு அர்ஜுனா, எனது அந்தரங்க சக்தியின் மூலம் இந்த தெய்வீகமான விஸ்வரூபத்தை நான் இந்த உலகத்தினுள் மகிழ்வுடன் காண்பித்தேன். எல்லையற்றதும் பிரகாசம் மிக்கதுமான இந்த ஆதி ரூபத்தை, இதற்குமுன் உன்னைத் தவிர வேறு யாரும் கண்டதில்லை.
பதம் 11.48
ந வேத-யக்ஞாத்யயனைர் ந தானைர்
ந ச க்ரியாபிர் ந தபோபிர் உக்ரை:
ஏவம்-ரூப: ஷக்ய அஹம் ந்ரு-லோகே
த்ரஷ்டும் த்வத் அன்யேன குரு-ப்ரவீர
ந – இல்லை; வேத-யஜ்ஞ – யாகத்தால்; அத்யயனை: – அல்லது வேதக்கல்வியால்; ந – இல்லை; தானை: – தானத்தினால்; ந – இல்லை; ச – மேலும்; க்ரியாபி: – புண்ணியச் செயல்களால்; ந – இல்லை; தபோபி: – கடும் தவங்களால்; உக்ரை: – கடுமையான; ஏவம்-ரூப: – இந்த உருவில்; ஷக்ய: – முடியும்; அஹம் – நான்; ந்ரு’-லோகே – இந்த ஜடவுலகில்; த்ரஷ்டும் – காண்பதற்கு; த்வத் – உன்னைவிட; அன்யேன – மற்றவரால்; குரு-ப்ரவீர – குரு வம்ச வீரர்களில் சிறந்தவனே.
குரு வம்ச வீரர்களில் சிறந்தவனே, எனது இந்த விஸ்வரூபத்தை உனக்குமுன் யாரும் என்றும் கண்டதில்லை. ஏனெனில், வேதங்களைப் படிப்பதாலோ, யாகங்களைச் செய்வதாலோ, தானங்களாலோ, புண்ணியச் செயல்களாலோ, கடும் தவங்களாலோ, எனது இந்த உருவத்தை ஜடவுலகில் காண்பது என்பது இயலாததாகும்.
பதம் 11.49
மா தே வ்யதா மா ச விமூட -பாவோ
த்ருஷ்ட்வா ரூபம் கோரம் ஈத்ருங் மமேதம்
வ்யபேத-பீ: ப்ரீத-மனா: புனஸ் த்வம்
தத் ஏவ மே ரூபம் இதம் ப்ரபஷ்ய
மா – இல்லாமல் இருக்கட்டும்; தே – உனக்கு; வ்யதா — சிக்கல்; மா – இல்லாமல் இருக்கட்டும்; ச – மேலும்; விமூட-பாவ: – குழப்பம்; த்ரு’ஷ்ட்வா – காண்பதால்; ரூபம் – உருவம்; கோரம் – பயங்கரமான; ஈத்ரு’க் — இதுபோன்ற; மம – எனது; இதம் – இந்த; வ்யபேத-பீ: – எல்லாவித பயத்திலிருந்தும் விடுபடுவாயாக; ப்ரீத-மனா: – மனதில் மகிழ்வுற்று; புன: – மீண்டும்; த்வம் – நீ; தத் – அந்த; ஏவ – இவ்வாறு; மே – எனது; ரூபம் – உருவம்; இதரம் – இந்த; ப்ரபஷ்ய – காண்பாயாக.
எனது இந்த கோரமான உருவத்தைக் கண்டு நீ மிகவும் பாதிக்கப்பட்டு குழம்பியுள்ளாய். இனி இது முடிவு பெறட்டும். என் பக்தனே, எல்லாக் குழப்பங்களிலிருந்தும் விடுபடுவாயாக. அமைதியான மனதுடன் நீ விரும்பும் உருவத்தை தற்போது நீ காணலாம்.
பதம் 11.50
ஸஞ்ஜய உவாச
இத்-யர்ஜுனம் வாஸுதேவஸ் ததோ-க்த்வா
ஸ்வகம் ரூபம் தர்ஷயம் ஆஸ பூய:
ஆஷ்வாஸயாம் ஆஸ ச பீதம் ஏனம்
பூத்வா புன: ஸௌம்ய-வபுர் மஹாத்மா
ஸஞ்ஜய: உவாச – சஞ்ஜயன் கூறினான்; இதி – இவ்வாறு; அர்ஜுனம் – அர்ஜுனனிடம்; வாஸுதேவ: – கிருஷ்ணர்; ததா – இவ்விதமாக; உக்த்வா – கூறிக் கொண்டு; ஸ்வகம் – தமது சுய: ரூபம் – உருவம்; தர்ஷயம் ஆஸ – காட்டினார்; பூய: – மீண்டும்; ஆஷ்வாஸயம் ஆஸ – உற்சாகப்படுத்தினார்; ச – மேலும்; பீதம் – அச்சமுற்று இருந்த; ஏனம் – அவனை; பூத்வா – ஆகி; புன: – மீண்டும்; ஸௌம்ய வபு: – அழகிய உருவம்; மஹா-ஆத்மா – மிகச்சிறந்தவர்.
திருதராஷ்டிரரிடம் சஞ்ஜயன் கூறினான்: புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணர், அர்ஜுனனிடம் இவ்வாறு பேசிய பிறகு, நான்கு கரங்களை உடைய தனது சுய உருவையும் இறுதியில் இரண்டு கரங்களுடனான உருவையும் காட்டி, அச்சமுற்று இருந்த அர்ஜுனனை உற்சாகப்படுத்தினார்.
பதம் 11.51
அர்ஜுன உவாச
த்ருஷ்ட்வேதம் மானுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜனார்தன
இதானீம் அஸ்மி ஸம்வ்ருத்த: ஸ-சேதா: ப்ரக்ருதிம் கத:
அர்ஜுன: உவாச: – அர்ஜுனன் கூறினான்; த்ரு’ஷ்ட்வா – கண்டு; இதம் – இந்த; மானுஷம் – மனித; ரூபம் – உருவம்; தவ – உமது; ஸெளம்யம் – மிகவும் அழகான; ஜனார்தன – எதிரிகளை அழிப்பவரே; இதானீம் – இப்போது; அஸ்மி –நான்; ஸம்வ்ரு’த்த: – நிலைத்திருக்கிறேன்; ஸ-சேதா: – எனது உணர்வில்; ப்ரக்ரு’திம் — எனது சுய இயற்கையை; கத: – அடைந்துள்ளேன்.
கிருஷ்ணரை அவரது உண்மையான உருவில் கண்டபோது, அர்ஜுனன் கூறினான்: ஓ ஜனார்தனா, மனிதனைப் போன்று தோன்றக்கூடிய மிகவும் அழகான இந்த உருவத்தைக் கண்டு, எனது மனம் தற்போது அமைதியடைந்துள்ளது, நான் எனது சுய இயல்பினை மீண்டும் அடைந்துள்ளேன்.
பதம் 11.52
ஸ்ரீ-பகவான் உவாச
ஸு-துர்தர்ஷம் இதம் ரூபம் த்ருஷ்டவான் அஸி யன் மம
தேவா அப்-யஸ்ய ரூபஸ்ய நித்யம் தர்ஷன-காங்க்ஷிண:
ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; ஸு-துர்தர்ஷம் – காண்பதற்கு மிகவும் அரிதான; இதம் – இந்த; ரூபம் – உருவம்; த்ரு’ஷ்டவான்-அஸி – நீ கண்டதைப்போல; யத் – எந்த; மம – எனது; தேவா: – தேவர்கள்; அபி – கூட; அஸ்ய – இதை; ரூபஸ்ய – உருவத்தின்; நித்யம் – நித்தியமாக; தர்ஷன – காங்க்ஷிண: – காண விரும்புகின்றனர்.
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதன்பு அர்ஜுனா, இப்போது நீ பார்க்கும் எனது இந்த உருவம் காண்பதற்கு மிகவும் அரிதானது. பிரியமான இந்த உருவத்தை தரிசிப்பதற்கான வாய்ப்பை தேவர்களும் எப்போதும் நாடுகின்றனர்.
பதம் 11.53
நாஹம் வேதைர் ந தபஸா ந தானேன ந சேஜ்யயா
ஷக்ய ஏவம்-விதோ த்ரஷ்டும் த்ருஷ்டவான் அஸி மாம் யதா
ந – என்றுமில்லை; அஹம் – நான்; வேதை: – வேதக் கல்வியால்; ந – என்றுமில்லை; தபஸா – கடுந்தவங்களால்; ந – என்றுமில்லை; தானேன – தானத்தால்; ந – என்றுமில்லை; ச – மேலும்; இஜ்யயா – வழிபாட்டினால்; ஷக்ய – இது சாத்தியம்; ஏவம்-வித: – இதுபோன்று; த்ரஷ்டும் – காண்பதற்கு; த்ரு’ஷ்டவான் – காண்கின்ற; அஸி – நீ; மாம் – என்னை; யதா – போல.
உனது தெய்வீக கண்களால் நீ காண்கின்ற இந்த உருவம், வேதங்களைக் கற்பதாலோ, கடுந்தவங்களைச் செய்வதாலோ, தானங்களைக் கொடுப்பதாலோ, வழிபாடு செய்வதாலோ புரிந்துகொள்ளப்படக் கூடியது அல்ல. என்னை உள்ளபடி உணர்வதற்கு இந்த வழிகள் உதவாது.
பதம் 11.54
பக்த்யா த்வ் அனன்யயா ஷக்ய அஹம் ஏவம்-விதோ (அ)ர்ஜுன
க்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன ப்ரவேஷ்டும் ச பரந்தப
பக்த்யா – பக்தித் தொண்டால்; து – ஆனால்; அனன்யயா — பலன்நோக்குச் செயல்களாலும் கற்பனை ஞானத்தாலும் கலக்காத; ஷக்ய: – முடியும்; அஹம் – நான்; ஏவம்-வித: – இதுபோன்று; அர்ஜுன – அர்ஜுனா; ஜ்ஞாதும் – அறிய; த்ரஷ்டும் – காண; ச – மேலும்; தத்த்வேன – உண்மையில்; ப்ரவேஷ்டும் – நுழைய; ச – மேலும்; பரந்தப – எதிரிகளை வெல்வோனே.
எனதன்பு அர்ஜுனா, உன் முன் நிற்கும் என்னை, கலப்பற்ற பக்தித் தொண்டினால் மட்டுமே இதுபோன்று நேரடியாகக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியும். இவ்வழியில் மட்டுமே என்னைப் பற்றிய உண்மையின் இரகசியங்களிலே உன்னால் நுழைய முடியும்.
பதம் 11.55
மத்-கர்ம-க்ரூன் மத்-பரமோ மத்-பக்த: ஸங்க-வர்ஜித:
நிர்வைர: ஸர்வ-பூதேஷு ய: ஸ மாம் ஏதி பாண்டவ
மத்-கர்ம-க்ரு’த் – என்னுடைய செயல்களில் ஈடுபட்டு; மத்-பரம: – என்னை பரமனாக அறிந்து; மத்-பக்த: – எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு; ஸங்க-வர்ஜித: – பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மன அனுமானத்தின் களங்கத்திலிருந்து விடுபட்டு; நிர்வைர: – எதிரியற்று; ஸர்வ-பூதேஷு – எல்லா உயிர்களிடத்தும்; ய: – யாரொருவன்; ஸ: – அவன்; மாம் – என்னிடம்; ஏதி – வருகின்றான்; பாண்டவ – பாண்டுவின் மைந்தனே.
எனதன்பு அர்ஜுனா, எவனொருவன், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மனக் கற்பனைகளின் களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளானோ, எனக்காக
செயல்படுகிறானோ, என்னை தனது வாழ்வின் பரம இலக்காக வைத்துள்ளானோ, மற்றும் எல்லா உயிர்களிடத்திலும் நண்பனாக உள்ளானோ, அவன் நிச்சயமாக என்னை வந்தடைகின்றான்.