அத்தியாயம் – 10
பூரணத்தின் வைபவம்
பதம் 10.1
ஸ்ரீ-பகவான் உவாச
பூய ஏவ மஹா-பாஹோ ஷ்ருணு மே பரமம் வச:
யத் தே (அ)ஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹித-காம்யயா

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பூய: – மீண்டும்; ஏவ – நிச்சயமாக; மஹா-பாஹோ – பலம் பொருந்திய புயங்களை உடையவனே; ஷ்ரு’ணு – கேட்பாயாக; மே – எனது; பரமம் — பரமமான; வச: – கூற்று; யத் — எதுவோ அது; தே – உனக்கு; அஹம் – நான்; ப்ரீயமாணாய – உன்னை பிரியமானவனாக எண்ணுவதால்; வக்ஷ்யாமி – கூறுகிறேன்; ஹித-காம்யயா – உன்னுடைய நன்மைக்காக.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பலம் பொருந்திய புயங்களையுடைய அர்ஜுனா, நீ எனக்கு பிரியமான நண்பன் என்பதால், இதுவரை நான் விளக்கியதைக் காட்டிலும் சிறந்த ஞானத்தை தற்போது உன்னுடைய நலனிற்காக உரைக்கப் போகிறேன். இதனை மீண்டும் கேட்பாயாக.

பதம் 10.2
ந மே விது: ஸுர-கணா: ப்ரபவம் ந மஹர்ஷய:
அஹம் ஆதிர் ஹி தேவானாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஷ:

ந – இல்லை; மே – எனது; விது: – அறிவது; ஸூர-கணா: – தேவர்கள்; ப்ரபவம் — மூலம்; ந – என்றுமில்லை; மஹா-ரு’ஷய: – மகா ரிஷிகள்; அஹம் – நான்: ஆதி: – ஆதி; ஹி – நிச்சயமாக; தேவானாம் – தேவர்களின்; மஹா-ருஷீணாம் – மகா ரிஷிகளின்; ச – கூட; ஸர்வஷ: – எல்லா விதங்களிலும்.

தேவர்களோ மகா ரிஷிகளோ கூட என்னுடைய வைபவங்களை அறிவதில்லை. ஏனெனில், எல்லா விதங்களிலும் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் நானே ஆதியாவேன்.

பதம் 10.3
யோ மாம் அஜம் அனாதிம் ச வேத்தி லோக-மஹேஷ்வரம்
அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வ-பாபை: ப்ரமுச்யதே

ய: – யாராயினும்; மாம் – என்னை; அஜம் – பிறப்பற்ற; அநாதிம் – ஆதியற்ற; ச – மேலும்; வேத்தி – அறிகிறானோ; லோக – உலகங்களின்; மஹா-ஈஷ்வரம் – பரம ஆளுநர்; அஸம்மூட – குழப்பமடையாத; ஸ: – அவன்; மர்த்யேஷு —மரணத்திற்கு உட்பட்டவர்களின் மத்தியில்; ஸர்வ-பாபை: – எல்லாவித பாவ விளைவுகளிலிருந்தும்; ப்ரமுச்யதே – விடுதலை பெறுகிறான்.

எவனொருவன், என்னைப் பிறப்பற்றவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிகின்றானோ, மனிதர்களிடையே குழப்பமற்றவனான அவன் மட்டுமே, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறான்.

பதம் 10.4 – 10.5
புத்திர் க்ஞானம் அஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஷம:
ஸுகம் து:கம் பவோ (அ)பாவோ பயம் சாபயம் ஏவ ச

அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ் தபோ தானம் யஷோ (அ)யஷ:
பவந்தி பாவா பூதானம் மத்த ஏவ ப்ருதக்-விதா:

புத்தி: — புத்தி; ஜ்ஞானம் – ஞானம்; அஸம்மோஹ: – ஐயத்திலிருந்து விடுபட்டு; க்ஷமா – மன்னித்தல்; ஸத்யம் – வாய்மை; தம: – புலனடக்கம்; ஷம: – மன அடக்கம்; ஸுகம் – சுகம்; து:கம் – துக்கம்; பவ: – பிறப்பு: அபாவ: — இறப்பு; பயம் – பயம்; ச – மேலும், அபயம் – அச்சமின்மை; ஏவ – கூட; ச – மேலும்; அஹிம்’ஸா – அகிம்சை; ஸமதா – சமத்துவம்; துஷ்டி: – திருப்தி; தப: – தவம்; தானம் – தானம்; யஷ: – புகழ்; அயஷ: – இகழ்ச்சி; பவந்தி — தோன்றுகின்ற; பாவா: – இயற்கைகள்; பூதானாம் – உயிரினங்களின்; மத்த: – என்னிடமிருந்து; ஏவ – நிச்சயமாக; ப்ருதக்-விதா: – பல்வேறு விதமாக அமைக்கப்பட்டு.

புத்தி, ஞானம், ஐயம், மயக்கத்திலிருந்து விடுதலை, மன்னித்தல், வாய்மை, புலனடக்கம், மன அடக்கம், சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, அச்சம், அச்சமின்மை, அகிம்சை, சமத்துவம், திருப்தி, தவம், தானம், புகழ் மற்றும் இகழ்ச்சி—என உயிர்வாழிகளிடம் காணப்படும் பல்வேறு குணங்கள் அனைத்தும் என்னால் படைக்கப்பட்டவையே.

பதம் 10.6
மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மனவஸ் ததா
மத்-பாவா மானஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா:

மஹா-ரு’ஷய: – மகா ரிஷிகள்; ஸப்த – ஏழு: பூர்வே – முன்பு; சத்வார: — நான்கு; மனவ: – மனுக்கள்; ததா — கூட; மத்-பாவா: – என்னால் பிறந்த; மானஸா: – மனதிலிருந்து; ஜாதா: – பிறந்தவர்கள்; யேஷாம் – அவர்களிலிருந்து; லோகே – உலகத்தில்; இமா: – இந்த எல்லா; ப்ரஜா: – மக்கள்.

ஏழு மகா ரிஷிகளும், அவர்களுக்கு முந்தைய நான்கு ரிஷிகளும், (மனித சமுதாயத்தைத் தோற்றுவித்தவர்களான) மனுக்களும், என்னிடமிருந்து, எனது மனதால் பிறந்தவர்களே. பல்வேறு லோகங்களில் வாழும் எல்லா உயிரினங்களும், அவர்களிடமிருந்து தோன்றியவையே.

பதம் 10.7
ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத:
ஸோ (அ)விகல்பேன யோகேன யுஜ்யதே நாத்ர ஸம்ஷய:

ஏதாம் – இவ்வெல்லா; விபூதிம் – வைபவம்; யோகம் – யோகசக்தி; ச — கூட; மம – எனது; ய: – யாரொருவன்; வேத்தி – அறிகின்றானோ; தத்த்வத: – உண்மையில்; ஸ: – அவன்; அவிகல்பேன – பிறழாத; யோகேன – பக்தித் தொண்டில்; யுஜ்யதே – ஈடுபட்டுள்ளான்; ந – இல்லை; அத்ர — இதில்; ஸம்ஷய: — சந்தேகம்.

எனது இத்தகு வைபவத்தையும் யோக சக்தியையும் எவன் உண்மையாக அறிகின்றானோ, அவன் களங்கமற்ற பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றான்; இதில் சந்தேகம் இல்லை.

பதம் 10.8
அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ-ஸமன்விதா:

அஹம் – நானே; ஸர்வஸ்ய — அனைத்தின்; ப்ரபவ: — உற்பத்தி மூலம்; மத்த: – என்னிடமிருந்தே; ஸர்வம் – எல்லாம்; ப்ரவர்ததே: – தோன்றுகின்றன; இதி – இதனை; மத்வா — அறிந்தவன்; பஜந்தே – பக்தனாகின்றான்; மாம் – எனக்கு; புதா: – அறிவு சான்றவன்; பாவ-ஸமன்விதா: – மிகுந்த கவனத்தோடு.

ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயப்பூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.

பதம் 10.9
மச்-சித்தா மத்-கத-ப்ராணா போதயந்த: பரஸ்பரம்
கதயந்தஷ் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச

மத்-சித்தா: – அவர்களுடைய மனங்களை என்னில் முழுமையாக ஈடுபடுத்தி; மத்-கத-ப்ராணா: — அவர்களுடைய வாழ்வை எனக்கு அர்ப்பணித்து; போதயந்த: – போதித்துக் கொண்டு; பரஸ்பரம் – தங்களுக்குள்; கதயந்த: -பேசிக் கொண்டு; ச – மேலும்; மாம் – என்னைப் பற்றி; நித்யம் – நித்தியமாக; துஷ்யந்தி — திருப்தியடைகின்றனர்; ச — மேலும்: ரமந்தி – தெய்வீக ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர்; ச – மேலும்.

எனது தூய பக்தர்களின் சிந்தனைகள் என்னில் மூழ்கியுள்ளன. அவர்களது வாழ்க்கை எனது தொண்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், என்னைப் பற்றி தங்களுக்குள் உரையாடுவதிலும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்வதிலும் இவர்கள் பெரும் திருப்தியும் ஆனந்தமும் அடைகின்றனர்.

பதம் 10.10
தேஷாம் ஸதத-யுக்தானாம் பஜதாம் ப்ரீதி-பூர்வகம்
ததாமி புத்தி-யோகம் தம் யேன மாம் உபயாந்தி தே

தேஷாம் – அவர்களுக்கு; ஸதத-யுக்தானாம் – எப்போதும் ஈடுபட்டுள்ள; பஜதாம் – பக்தித் தொண்டு செய்வதில்; ப்ரீதி-பூர்வகம் — அன்பான பரவசத்துடன்; ததாமி – நான் அளிக்கிறேன்; புத்தி-யோகம் – உண்மை அறிவை; தம் – அதை; யேன — எதனால்; மாம் – என்னிடம்; உபயாந்தி – வருகின்றனரோ; தே — அவர்கள்

எனக்கு அன்புடன் தொண்டு செய்வதில் இடையறாது ஈடுபட்டுள்ளவர்களுக்கு, என்னிடம் வந்தடைவதற்குத் தேவையான அறிவை நானே வழங்குகிறேன்.

பதம் 10.11
தேஷாம் ஏவானுகம்பார்தம் அஹம் அக்ஞான-ஜம் தம:
நாஷயாம்-யாத்ம-பாவ-ஸ்தோ க்ஞான – தீபேன பாஸ்வதா

தேஷாம் – அவர்களுக்கு; ஏவ – நிச்சயமாக; அனுகம்பா-அர்தம் – விஷேச கருணையைக் காட்ட; அஹம் – நான்; அஜ்ஞான-ஐம் – அறியாமையின் காரணமாக; தம: – இருள்; நாஷயாமி – அழிக்கின்றேன்; ஆத்ம-பாவ —அவர்களது இதயத்தில்; ஸ்த: – நிலைபெற்று; ஜ்ஞான – ஞானத்தின்; தீபேன – தீபத்தினால்; பாஸ்வதா – ஒளிவிடும்.

அவர்களிடம் விஷேச கருணையைக் காட்டுவதற்காக, அவர்களது இதயத்தினுள் வசிக்கும் நான், அறியாமையினால் பிறந்த இருளை ஞானமெனும் சுடர்விடும் தீபத்தினால் அழிக்கின்றேன்.

பதம் 10.12 – 10.13
அர்ஜுன உவாச
பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான்
புருஷம் ஷாஷ்வதம் திவ்யம் ஆதி-தேவம் அஜம் விபும்

ஆஹுஸ் த்வாம் ருஷய: ஸர்வே தேவர்ஷிர் நாரதஸ் ததா
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே

அர்ஜுன: உவாச – அர்ஜுனன் கூறினான்; பரம் – பரம; ப்ரஹ்ம – உண்மை; பரம் — பரம; தாம – இருப்பிடம்; பவித்ரம் — தூய்மையானவர்; பரமம் – பரம; பவான் – நீரே; புருஷம் – புருஷர்; ஷாஷ்வதம் – நித்தியமானவர்; திவ்யம் -திவ்யமானவர்; ஆதி-தேவம் — ஆதிதேவர்; அஜம் – பிறப்பற்றவர்; விபும் – மிகப் பெரியவர்; ஆஹு: – கூறுகின்றனர்; த்வாம் — உம்மை; ரு’ஷய: – ரிஷிகள்; ஸர்வே – எல்லா; தேவ-ரு’ஷி – தேவர்களின் ரிஷியாகிய; நாரத: – நாரதர்; ததா — அவ்வாறே; அஸித: – அஸிதர்; தேவல: – தேவலர்; வ்யாஸ: – வியாசர்; ஸ்வயம் – தாங்களே; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; ப்ரவீஷி – விளக்குகின்றீர்; மே – எனக்கு.

அர்ஜுனன் கூறினான்: நீரே பரபிரம்மன், உன்னத இருப்பிடம், மிகவும் தூய்மையானவர், பரம சத்தியம். நீரே நித்தியமானவர், திவ்யமானவர், ஆதி தேவர், பிறப்பற்றவர், மிகப் பெரியவர். உம்மைப் பற்றிய இந்த உண்மையினை, நாரதர், அஸிதர், தேவலர், வியாஸர் போன்ற மிகச்சிறந்த ரிஷிகளும் உறுதி செய்துள்ளனர், இப்பொழுது நீரே இதனை எனக்கு அறிவித்துள்ளீர்.

பதம் 10.14
ஸர்வம் ஏதத் ருதம் மன்யே யன் மாம் வதஸி கேஷவ
ந ஹி தே பகவன் வ்யக்திம் விதுர் தேவா ந தானவா:

ஸர்வம் – அனைத்தையும்; ஏதத் – இந்த; ருதம் – உண்மையாக; மன்யே – நான் ஏற்கின்றேன்; யத் – எவற்றை; மாம் – என்னிடம்; வதஸி – நீர் கூறினீரோ; கேஷவ – கிருஷ்ணரே; ந – இல்லை; ஹி – நிச்சயமாக; தே -உமது; பகவன் — பகவானே; வ்யக்திம் – வியக்தித்துவத்தை; விது: – அறிதல்; தேவா: — தேவர்கள்; ந – இல்லை; தானவா: -அசுரர்கள்.

கிருஷ்ணா, தாங்கள் எனக்குக் கூறியவற்றை எல்லாம் உண்மை என நான் முழுமையாக ஏற்கின்றேன். பகவானே, தேவர்களோ, அசுரர்களோ, உமது வியக்தித்துவத்தை அறிய முடியாது.

பதம் 10.15
ஸ்வயம் ஏவாத்மனாத்மானம் வேத்த த்வம் புருஷோத்தம
பூத-பாவன பூதேஷ தேவ-தேவ ஜகத்-பதே

ஸ்வயம் – சுயமாக; ஏவ – நிச்சயமாக; ஆத்மனா – உம்மாலேயே; ஆத்மானம் – உம்மை; வேத்த: – அறிகின்றீர்; த்வம் – நீர்; புருஷ-உத்தம – புருஷர்களில் உத்தமரே; பூத-பாவன — அனைத்திற்கும் மூலமே; பூத-ஈஷ – அனைத்திற்கும் இறைவனே; தேவ-தேவ — தேவர்களின் தேவரே; ஜகத்-பதே – அகிலத்தின் இறைவனே.

உத்தம புருஷரே, அனைத்திற்கும் மூலமே, அனைவருக்கும் இறைவனே, தேவர்களின் தேவரே, அகிலத்தின் இறைவனே, உண்மையில், உமது சுய அந்தரங்க சக்தியின் மூலம் நீரே உம்மை அறிவீர்.

பதம் 10.16
வக்தும் அர்ஹஸ் யஷேஷேண திவ்யா ஹ்யாத்ம-விபூதய:
யாபிர் விபூதிபிர் லோகான் இமாம்ஸ் த்வம் வ்யாப்ய திஷ்ட ஸி

வக்தும் – கூறுவதற்கு; அர்ஹஸி – நீங்கள் விரும்பினால்; அஷேஷேண — விவரமாக; திவ்யா: – திவ்யமான; ஹி – நிச்சயமாக; ஆத்ம – தங்களது சுய; விபூதய: – வைபவங்கள்; யாபி – எவற்றால்; விபூதிபி: – வைபவங்கள்; லோகான் – எல்லா உலகங்களிலும்; இமான் – இந்த; த்வம் – நீங்கள்; வ்யாப்ய – வியாபித்து; திஷ்டஸி – இருக்கின்றீர்.

எந்த வைபவங்களால் இந்த உலகம் முழுவதும் தாங்கள் வியாபித்து இருக்கின்றீர்களோ, தங்களுடைய அந்த திவ்யமான வைபவங்களை தயவுசெய்து எனக்கு விவரமாகக் கூறுங்கள்.

பதம் 10.17
கதம் வித்யாம் அஹம் யோகிம்ஸ் த்வாம் ஸதா பரிசிந்தயன்
கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோ (அ)ஸி பகவன் மயா

கதம் – எவ்வாறு; வித்யாம் அஹம் – நான் அறியலாம்; யோகின் – ஓ உன்னத யோகியே; த்வாம் – உம்மை; ஸதா – எப்போதும்; பரிசிந்தயன் – எண்ணிக் கொண்டு; கேஷு — எந்த; கேஷு – எந்த; ச – மேலும்; பாவேஷு – இயல்புகள்; சிந்த்ய: அஸி — நீர் நினைவு கூறப்படலாம்; பகவன் — பகவானே; மயா — என்னால்.

உன்னத யோகியாகிய கிருஷ்ணரே, நான் உம்மை இடையறாது நினைப்பதும் அறிவதும் எங்ஙனம்? பகவானே, வேறு எந்த எந்த உருவங்களில் உம்மை நினைவு கொள்ள முடியும்?

பதம் 10.18
விஸ்தரேணாத்மனோ யோகம் விபூதிம் ச ஜனார்தன
பூய: கதய த்ருப்திர் ஹி ஷ்ருண்வதோ நாஸ்தி மே (அ)ம்ருதம்

விஸ்தரேண – விவரமாக; ஆத்மன: – உமது; யோகம் – யோக சக்தி; விபூதிம் — வைபவங்கள்; ச — மேலும்; ஜன-அர்தன – நாத்திகரை அழிப்பவரே; பூய: – மீண்டும்; கதய – விளக்கவும்; த்ரு’ப்தி: — திருப்தி; ஹி – நிச்சயமாக; ஷ்ரு’ணவத: – கேட்டு; ந அஸ்தி – மேலும் இல்லை; மே – எனது; அம்ரு’தம் — அமிர்தம்.

ஜனார்தனா, உமது வைபவங்களின் யோக சக்தியைப் பற்றி தயவுசெய்து விவரமாகக் கூறவும். உம்மைப் பற்றிக் கேட்பதில் நான் ஒருபோதும் நிறைவடைவதில்லை. ஏனெனில், உம்மைப் பற்றி அதிகமாகக் கேட்கும்போது, உமது வார்த்தைகளின் அமிர்தத்தை நான் அதிகமாக சுவைக்க விரும்புகிறேன்.

பதம் 10.19
ஸ்ரீ-பகவான் உவாச
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்ம-விபூதய:
ப்ராதான்யத: குரு-ஷ்ரேஷ்ட நாஸ்த்-யந்தோ விஸ்தரஸ்ய மே

ஸ்ரீ-பகவான் உவாச – புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; ஹந்த – ஆம்; தே – உனக்கு; கதயிஷ்யாமி – நான் கூறுகின்றேன்; திவ்யா – தெய்வீகமான; ஹி – நிச்சயமாக; ஆத்ம-விபூதய: – எனது சுய வைபவங்கள்; ப்ராதான்யத: – முக்கியமான; குரு-ஷ்ரேஷ்ட – குருக்களில் சிறந்தவனே; ந அஸ்தி — இல்லை; அந்த: – எல்லை; விஸ்தரஸ்ய – விரிவுக்கு; மே – எனது.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: அப்படியே ஆகட்டும், நான் எனது தெய்வீகமான தோற்றங்களைப் பற்றி உனக்குக் கூறுகின்றேன். ஆனால் நான் முக்கியமானவற்றை மட்டுமே கூறப் போகின்றேன். ஏனெனில், அர்ஜுனா, எனது வைபவங்களோ எல்லையற்றவை.

பதம் 10.20
அஹம் ஆத்மா குடாகேஷ ஸர்வ-பூதாஷய-ஸ்தித:
அஹம் ஆதிஷ் ச மத்யம் ச பூதானாம் அந்த ஏவ ச

அஹம் – நான், ஆத்மா – ஆத்மா; குடாகேஷ – அர்ஜுனா; ஸர்வ-பூத – எல்லா உயிர்களின்; ஆஷய-ஸ்தித: – உள்ளிருக்கும்; அஹம் – நான்; ஆதி: – ஆரம்பம்; ச – மேலும்; மத்யம் – நடு; ச – மேலும்; பூதானாம் – எல்லா உயிர்களின்; அந்த: – இறுதி; ஏவ – நிச்சயமாக; ச- மேலும்.

அர்ஜுனா, எல்லா உயிர்களின் இதயங்களிலும் வீற்றிருக்கும் பரமாத்மா நானே. எல்லா உயிர்களின் ஆரம்பமும் நடுவும் இறுதியும் நானே.

பதம் 10.21
ஆதித்யானாம் அஹம் விஷ்ணுர் ஜ்யோதிஷாம் ரவிர் அம்ஷுமான்
மரீசிர் மருதா அஸ்மி நக்ஷத்ராணாம் அஹம் ஷஷீ

ஆதித்யானாம் — ஆதித்தியர்களில்; அஹம் – நான்; விஷ்ணு: — முழுமுதற் கடவுள்; ஜ்யோதிஷாம் – ஜோதிகளில்; ரவி: – சூரியன்; அம்ஷு-மான் – பிரகாசமான; மரீசி: – மரீசி; மருதாம் – மருத்துகளில்; அஸ்மி – நான்; நக்ஷத்ராணாம் — நட்சத்திரங்களில்; அஹம் – நான்; ஷஷீ – நிலவு.

ஆதித்தியர்களில் நான் விஷ்ணு; ஜோதிகளில் பிரகாசிக்கும் சூரியன்; மருத்துகளில் நான் மரீசி; நட்சத்திரங்களில் நான் நிலவு.

பதம் 10.22
வேதானாம் ஸாம-வேதோ (அ)ஸ்மி தேவானாம் அஸ்மி வாஸவ:
இந்த்ரியாணாம் மனஷ் சாஸ்மி பூதானாம் அஸ்மி சேதனா

வேதானாம் — வேதங்களில்; ஸாம-வேத: – ஸாம வேதம்; அஸ்மி – நான்; தேவானாம் — தேவர்களில்; அஸ்மி – நான்; வாஸவ: – ஸ்வர்க மன்னன்; இந்த்ரியாணாம் – புலன்களில்; மன: – மனம்; ச – மேலும்: அஸ்மி – நான்; பூதானாம் – உயிர்வாழிகளில்; அஸ்மி – நான்; சேதனா — உயிர் சக்தி

வேதங்களில் நான் ஸாம வேதம்; தேவர்களில் நான் ஸ்வர்க மன்னனான இந்திரன்; புலன்களில் நான் மனம்; உயிர்வாழிகளில் நான் உயிர் சக்தி (உணர்வு).

பதம் 10.23
ருத்ராணாம் ஷங்கரஷ் சாஸ்மி வித்தேஷோ யக்ஷ-ரக்ஷஸாம்
வஸுனாம் பாவகஷ் சாஸ்மி மேரு: ஷிகரிணாம் அஹம்

ருத்ராணாம் – ருத்ரர்களில்; ஷங்கர: – சிவபெருமான்; ச – மேலும்; அஸ்மி – நான்; வித்த-ஈஷ: -செல்வத்தின் அதிபதி; யக்ஷ-ரக்ஷஸாம் – யக்ஷர்களிலும், ராக்ஷசர்களிலும்; வஸுனாம் — வசுக்களில்; பாவக: – நெருப்பு; ச – மேலும்; அஸ்மி – நான்; மேரு: – மேரு; ஷிகரிணாம் – மலைகளில்; அஹம் – நான்.

எல்லா ருத்திரர்களிலும் நான் சிவபெருமான்; யக்ஷ, ராக்ஷசர்களில் நான் செல்வத்தின் இறைவன் (குபேரன்); வசுக்களில் நான் நெருப்பு (அக்னி); மலைகளில் நான் மேரு.

பதம் 10.24
புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம்
ஸேனாநீனாம் அஹம் ஸ்கந்த: ஸரஸாம் அஸ்மி ஸாகர:

புரோதஸாம் — புரோகிதர்களில்; ச – மேலும்; முக்யம் – முக்கியமான; மாம் – என்னை; வித்தி — புரிந்துகொள்வாயாக; பார்த: – பிருதாவின் மகனே; ப்ரு’ஹஸ்பதிம் – பிருஹஸ்பதி; ஸேனானீனாம் — சேனாதிபதிகளில்; அஹம் – நான்; ஸ்கந்த: — கார்த்திகேயன்; ஸரஸாம் – நீர்த் தேக்கங்களில்; அஸ்மி – நான்; ஸாகர: – சமுத்திரம்.

அர்ஜுனா, புரோகிதர்களில், தலைவரான பிருஹஸ்பதியாக என்னை அறிந்துகொள், சேனாதிபதிகளில் நான் கார்த்திகேயன்; நீர்த் தேக்கங்களில் நான் சமுத்திரம்.

பதம் 10.25
மஹர்ஷீணாம் ப்ருகுர் அஹம் கிராம் அஸ்ம்-யேகம் அக்ஷரம்
யக்ஞானாம் ஜப-யக்ஞோ (அ)ஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:

மஹா-ருஷீணாம் – மகா ரிஷிகளில்; ப்ரு’கு: – பிருகு; அஹம் – நான்; கிராம் – அதிர்வுகளில்; அஸ்மி – நான்; ஏகம்-அக்ஷரம் – பிரணவம்; யஜ்ஞானாம் – யாகங்களில்; ஜப-யஜ்ஞ: – ஜபம்; அஸ்மி — நான்; ஸ்தாவராணாம் – அசையாதவற்றில்; ஹிமாலய: – இமயமலை.

மகா ரிஷிகளில் நான் பிருகு; சப்தங்களில் நான் திவ்யமான ஓம்காரம்; யாகங்களில் நான் திருநாம ஜபம்: அசையாதனவற்றில் நான் இமயமலை.

பதம் 10.26
அஷ்வத்த: ஸர்வ-வ்ருக்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத:
கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தானாம் கபிலோ முனி:

அஷ்வத்த: – அரமரம்; ஸர்வ-வ்ருக்ஷாணாம் – எல்லா மரங்களிலும்; தேவ- ரு’ஷீணாம் – தேவ ரிஷிகளில்; ச – மேலும்; நாரத — நாரதர்; கந்தர்வாணாம் – கந்தர்வர்களில் (கந்தர்வ லோகவாசிகளில்); சித்ரரத: – சித்ரரதன்; ஸித்தானாம் – சித்தர்களில்; கபில: முனி: – கபில முனிவர்.

எல்லா மரங்களில் நான் ஆலமரம்; தேவ ரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வர்களில் நான் சித்ரரதன்; சித்தர்களில் நான் கபில முனி.

பதம் 10.27
உச்சை: ஷ்ரவஸம் அஷ்வானாம் வித்தி மாம் அம்ருதோத்பவம்
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம்

உச்சை: ஷ்ரவஸம் – உச்சைஷ்ரவா; அஷ்வானாம் — குதிரைகளில்; வித்தி – அறிவாயாக; மாம் — என்னை; அம்ரு’த-உத்பவம் — கடலைக் கடைந்த போது தோன்றிய; ஐராவதம் – ஐராவதம்; கஐ-இந்த்ராணாம் — பட்டத்து யானைகளில்; நராணாம் – மனிதர்களில்; ச – மேலும்; நர-அதிபம் — மன்னன்.

குதிரைகளுள், அமிர்தத்திற்காகக் கடலை கடைந்தபோது தோன்றிய உச்சைஷ்ரவா என்று என்னை அறிவாயாக. பட்டத்து யானைகளில் நான் ஐராவதம்; மனிதர்களில் நான் மன்னன்.

பதம் 10.28
ஆயுதானாம் அஹம் வஜ்ரம் தேனூனாம் அஸ்மி காமதுக்
ப்ரஜநஷ் சாஸ்மி கந்தர்ப: ஸர்பாணாம் அஸ்மி வாஸுகி:

ஆயுதானாம் — ஆயுதங்களில்; அஹம் – நான்; வஜ்ரம் — வஜ்ராயுதம் (இடி);
தேனூனாம் – பசுக்களில்; அஸ்மி – நான்; காம-துக் – சுரபி பசு; ப்ரஜன: – இனவிருத்தி செய்வதில்; ச – மேலும்; அஸ்மி – நான்; கந்தர்ப: – மன்மதன்; ஸர்பாணாம் – சர்ப்பங்களில்; அஸ்மி — நான்; வாஸுகி: – வாஸுகி.

ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம்; பசுக்களில் நான் சுரபி; இனவிருத்தியாளர்களில் நான் காமதேவனான மன்மதன்; சர்ப்பங்களில் (பாம்புகளில்) நான் வாஸுகி.

பதம் 10.29
அனந்தஷ் சாஸ்மி நாகானாம் வருணோ யாதஸாம் அஹம்
பித்ரூணாம் அர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாம் அஹம்

அனந்த: – அனந்தன்; ச – மேலும்; அஸ்மி – நான்; நாகானாம் – நாகங்களில்; வருண: – நீரைக் கட்டுப்படுத்தும் தேவனான வருணன்; யாதஸாம் – நீர்வாழ் இனங்களில்; அஹம் – நான்; பித்ரூ’ணாம் – முன்னோர்களில்; அர்யமா – அர்யமா; ச – மேலும்; அஸ்மி – நான்; யம: – மரணத்தின் அதிபதி; ஸம்யமதாம் — நீதிபதிகளில்; அஹம் – நான்.

நாகங்களில் (பல தலையுடைய பாம்புகளில்) நான் அனந்தன்; நீர்வாழினங்களில் நான் வருண தேவன்; முன்னோர்களில் நான் அர்யமா; நீதிபதிகளில் நான் மரணத்தின் அதிபதியான எமன்.

பதம் 10.30
ப்ரஹலாதஷ் சாஸ்மி தைத்யானாம் கால: கலயதாம் அஹம்
ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோ (அ)ஹம் வைனதேயஷ் ச பக்ஷிணாம்

ப்ரஹ்லாத: – பிரகலாதன்; ச – மேலும்; அஸ்மி – நான்; தைத்யானாம் – அசுரர்களில்; கால: — காலம்; கலயதாம் — அடக்குபவர்களில்; அஹம் – நான்; ம்ரு’காணாம் – மிருகங்களில்; ச – மேலும்; ம்ருக-இந்த்ர: – சிங்கம்; அஹம் – நான்; வைனதேய: – கருடன்; ச – மேலும்; பக்ஷிணாம் – பறவைகளில்.

தைத்ய அசுரர்களில், பக்தியில் சிறந்த பிரகலாதன் நான்; அடக்கி ஆள்பவற்றில் நான் காலம்; மிருகங்களில் நான் சிங்கம்; பறவைகளில் நான் கருடன்.

பதம் 10.31
பவன: பவதாம் அஸ்மி ராம: ஷஸ்த்ர-ப்ருதாம்-அஹம்
ஜஷாணாம் மகரஷ் சாஸ்மி ஸ்ரோதஸாம் அஸ்மி ஜாஹ்னவீ

பவன: – வாயு; பவதாம் – தூய்மைப்படுத்துபவற்றில்; அஸ்மி – நான்; ராம: – இராமர்; ஷஸ்த்ர-ப்ரு’தாம் —- ஆயுதம் தரித்தவர்களில்; அஹம் – நான்; ஜஷாணாம் – எல்லா மீன்களிலும்; மகர: – மகர மீன்; ச – மேலும்; அஸ்மி – நான்; ஸ்ரோதஸாம் – பாயும் நதிகளில்; அஸ்மி – நான்; ஜாஹ்னவீ – கங்கை.

தூய்மைப்படுத்துபவற்றில் நான் வாயு; ஆயுதம் தரித்தவர்களில் நான் இராமன்; மீன்களில் நான் மகர மீன்; பாயும் நதிகளிலே நான் கங்கை.

பதம் 10.32
ஸர்காணாம் ஆதிர் அந்தஷ் ச மத்யம் சைவாஹம் அர்ஜுன
அத்யாத்ம-வித்யா வித்யானாம் வாத: ப்ர்வததாம் அஹம்

ஸர்காணாம் — படைப்புகளில்; ஆதி – ஆரம்பம்; அந்த: – இறுதி; ச – மேலும்; மத்யம் – நடு; ச – மேலும்; ஏவ – நிச்சயமாக; அஹம் – நான்; அர்ஜுன – ஓ அர்ஜுனா; அத்யாத்ம-வித்யா – ஆன்மீகக் கல்வி; வித்யானாம் — கல்விகளில்; வாத: – இயற்கையான முடிவு; ப்ரவததாம் – விவாதங்களில்; அஹம் – நான்.

எல்லாப் படைப்புகளின் ஆதியும், அந்தமும், நடுவும் நானே. அர்ஜுனா, அறிவில் நான் ஆத்மாவைப் பற்றிய அறிவு; விவாதிப்போரில் நான் முடிவான உண்மை.

பதம் 10.33
அக்ஷராணாம் அ-காரோ (அ)ஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச
அஹம் ஏவாக்ஷய: காலோ தாதாஹம் விஷ்வதோ-முக:

அக்ஷராணாம் — எழுத்துக்களில்; அ-கார: – முதல் எழுத்து; அஸ்மி – நான்; த்வந்த்வ: – இருமைச் சொல்; ஸாமாஸிகஸ்ய – கூட்டுச் சொற்களில்; ச – மேலும்; அஹம் – நான்; ஏவ – நிச்சயமாக; அக்ஷய: – நித்தியமான; கால: – காலம்; தாதா – படைப்பாளி; அஹம் – நான்; விஷ்வத-முக: – பிரம்மா.

எழுத்துக்களில் நான் முதல் எழுத்தாகிய ‘அ’; கூட்டுச்சொற்களில் நான் த்வந்த்வ. தீராத காலமும் நானே; படைப்பாளிகளில் நான் பிரம்மா.

பதம் 10.34
ம்ருத்யு: ஸர்வ-ஹரஷ் சாஹம் உத்பவஷ் ச பவிஷ்யதாம்
கீர்தி: ஸ்ரீர் வாக் ச நாரீணாம் ஸம்ருதிர் மேதா த்ருதி: க்ஷமா

ம்ருத்யு: – மரணம்; ஸர்வ-ஹர: – அனைத்தையும் அழிக்கும்; ச – மேலும்; அஹம் — நான்; உத்பவ: — உற்பத்தி; ச – மேலும்; பவிஷ்யதாம் — வருங்காலத் தோற்றங்கள்; கீர்தி: – புகழ்; ஸ்ரீ: – அழகு அல்லது ஐஸ்வர்யம்; வாக் – அழகிய பேச்சு; ச – மேலும்; நாரீணாம் – பெண்களின்; ஸ்ம்ரு’தி: – ஞாபகசக்தி; மேதா – அறிவு; த்ருதி: — திடம்; க்ஷமா – பொறுமை.

நானே எல்லாவற்றையும் அழிக்கும் மரணம்; உருவாகுபவை அனைத்திற்கும் உற்பத்தியாளனும் நானே. பெண்களின் புகழ், அதிர்ஷ்டம், அழகிய பேச்சு, ஞாபக சக்தி, அறிவு, உறுதி மற்றும் பொறுமையும் நானே.

பதம் 10.35
ப்ருஹத்-ஸாம ததா ஸாம்னாம் காயத்ரீ சந்தஸாம் அஹம்
மாஸானாம் மார்க-ஷீர்ஷோ (அ)ஹம் ருதூனாம் குஸுமாகர:

ப்ருஹத்-ஸாம – பிருஹத் ஸாமம்; ததா – கூட; ஸாம்னாம் – ஸாம வேத பாடல்களில்; காயத்ரீ — காயத்ரி மந்திரம்; சந்தஸாம் – கவிதைகளில்; அஹம் – நான்; மாஸானாம் – மாதங்களில்; மார்க-ஷீர்ஷ: – மார்கஷீர்ஷ; அஹம் – நான்; ருதூனாம் — பருவங்களில்; குஸும-ஆகர: – வசந்தம்.

ஸாம வேத மந்திரங்களில் நான் ப்ருஹத் ஸாமம்; கவிதைகளில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கஷீர்ஷ (நவம்பர்-டிசம்பர்); பருவங்களில் நான் மலர்கள் நிறைந்த வசந்த காலம்.

பதம் 10.36
த்யூதம் சலயதாம் அஸ்மி தேஜஸ் தேஜஸ்வினாம் அஹம்
ஜயோ (அ)ஸ்மி வ்யவஸாயோ (அ)ஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாம் அஹம்

த்யூதம் – சூது; சலயதாம் – ஏமாற்றுபவற்றில்; அஸ்மி – நான்; தேஜ: – தேஜஸ்; தேஜஸ்வினாம் – ஒளிர்பவற்றில்; அஹம் – நான்; ஜய: – வெற்றி; அஸ்மி – நான்; வ்யவஸாய: – சாகசம் அல்லது தீரச் செயல்; அஸ்மி — நான்; ஸத்த்வம் – வலிமை; ஸத்த்வ-வதாம் – பலம் பொருந்தியவர்களில்; அஹம் – நான்.

ஏமாற்றுபவற்றில் நான் சூது; ஒளிர்பவற்றில் நான் தேஜஸ். நானே வெற்றி, நானே தீரச் செயல், நானே பலவான்களின் பலம்.

பதம் 10.37
வ்ருஷ்ணீனாம் வாஸுதேவோ (அ)ஸ்மி பாண்டவானாம் தனஞ்ஜய:
முனீனாம் அப்-யஹம் வ்யாஸ: கவீனாம் உஷனா கவி:

வ்ரு’ஷ்ணீனாம் – விருஷ்ணி குலத்தவர்களில்; வாஸுதேவ: — துவாரகை கிருஷ்ணர்; அஸ்மி – நான்; பாண்டவானாம் – பாண்டவர்களில்; தனஞ்ஜய: – அர்ஜுனன்; முனீனாம் – முனிவர்களில்; அபி – மேலும்; அஹம் – நான்; வ்யாஸ: – வியாசர் வேத இலக்கியங்களைத் தொகுத்தவர்; கவீனாம் – சிந்திப்பவர்களில்; உஷனா – உஷனா; கவி: – சிந்திப்பவர்.

விருஷ்ணி குலத்தவர்களில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் நான் அர்ஜுனன்; முனிவர்களில் நான் வியாசர்; பெரும் சிந்தனையாளர்களில் நான் உஷனா.

பதம் 10.38
தண்டோ தமயதாம் அஸ்மி நீதிர் அஸ்மி ஜிகீஷதாம்
மௌனம் சைவாஸ்மி குஹ்யானாம் க்ஞானம் க்ஞானவதாம் அஹம்

தண்ட: – தண்டனை; தமயதாம் – அடக்கியாளும் முறைகளில்; அஸ்மி – நான்; நீதி: — நீதி; அஸ்மி — நான்; ஜிகீஷதாம் – வெற்றியை விரும்புபவர்களில்; மௌனம் – மௌனம்; ச – மேலும்; ஏவ – கூட; அஸ்மி – நான்; குஹ்யானாம் – இரகசியங்களில்; ஜ்ஞானம் – ஞானம்; ஜ்ஞான-வதாம் – ஞானிகளின்; அஹம் – நான்.

அடக்கியாளும் முறைகளில் நான் தண்டனை. வெற்றியை நாடுபவர்களில் நான் நீதி; இரகசியங்களில் நான் மௌனம்; ஞானிகளில் நான் ஞானம்.

பதம் 10.39
யச் சாபி ஸர்வ-பூதானாம் பீஜம் தத் அஹம் அர்ஜுன
ந தத் அஸ்தி வினா யத் ஸ்யான் மயா பூதம் சராசரம்

யத் – என்னவெல்லாம்; ச – மேலும்; அபி – இருக்குமோ; ஸர்வ-பூதானாம் – எல்லாப் படைப்புகளின்; பீஜம் — விதை; தத் – அந்த; அஹம் – நான்; அர்ஜுன — அர்ஜுனா; ந – இல்லை; தத் – அது; அஸ்தி – அங்கு; வினா – இன்றி; யத் — எது; ஸ்யாத் – இருக்கின்றது; மயா — என்னால்; பூதம் – படைக்கப்பட்ட உயிர்வாழிகள்; சர-அசரம் — அசைகின்ற, அசையாத.

மேலும், அர்ஜுனா, இருக்கும் எல்லா உயிர்வாழிகளையும் உற்பத்திசெய்யும் விதை நானே, அசைபவை மற்றும் அசையாதவற்றில் நான் இன்றி இருக்கக்கூடியது ஒன்றும் இல்லை.

பதம் 10.40
நாந்தோ (அ)ஸ்தி மம திவ்யானாம் விபூதீனாம் பரந்தப
ஏஷ தூத்தேஷத: ப்ரோக்தோ விபூதேர் விஸ்தரோ மயா

ந – இல்லை; அந்த: – எல்லை; அஸ்தி — இருக்கின்றது; மம – எனது; திவ்யானாம் — தெய்வீகமான; விபூதீனாம் – வைபவங்கள்; பரந்தப – எதிரிகளை வெல்பவனே; ஏஷ: – இவையெல்லாம்; து – ஆனால்; உத்தேஷத: – உதாரணங்களாக; ப்ரோக்த: – பேசப்பட்டவை; விபூதே: – வைபவங்களின்; விஸ்தர: – விரிந்த; மயா – என்னால்.

எதிரிகளை வெல்வோனே, என்னுடைய தெய்வீகத் தோற்றங்களுக்கு எல்லையே இல்லை. நான் உன்னிடம் கூறியவை அனைத்தும் எனது விரிவான வைபவங்களின் ஓர் உதாரணமே.

பதம் 10.41
யத் யத் விபூதிமத் ஸத்த்வம் ஸ்ரீமத் ஊர்ஜுதம் ஏவ வா
தத் தத் ஏவாவகச்ச த்வம் மம தேஜோ- (அ)ம்ஷ-ஸம்பவம்

யத் யத் – என்னவெல்லாம்; விபூதி – வைபவங்கள்; மத் – உள்ளனவோ; ஸத்த்வம் – இருப்பில்; ஸ்ரீ-மத் – அழகான; ஊர்ஜிதம் – புகழ் கொண்ட; ஏவ – நிச்சயமாக; வா – அல்லது; தத் தத் – அவையெல்லாம்; ஏவ – நிச்சயமாக; அவகச்ச – அறிய வேண்டும்; த்வம் – நீ; மம – எனது; தேஜ: – தேஜஸின்; அம்ஷ – அம்சம்; ஸம்பவம் – தோன்றிய.

அழகான, புகழத்தக்க வைபவங்கள் அனைத்தும், என்னுடைய தேஜஸின் சிறு பொறியிலிருந்து தோன்றுபவையே என்பதை அறிவாயாக.

பதம் 10.42
அத வா பஹுனைதேன கிம் க்ஞாதேன தவார்ஜுன
விஷ்டப்யாஹம் இதம் க்ருத்ஸ்னம் ஏகாம்ஷேன ஸ்திதோ ஜகத்

அத வா – அல்லது; பஹுனா – பற்பல; ஏதேன – இதுபோன்ற; கிம் – என்ன; ஜ்ஞாதேன – அறிவதால்; தவ – உனக்கு; அர்ஜுன: – அர்ஜுனா; விஷ்டப்ய – நுழைந்து; அஹம் – நான்; இதம் – இந்த; க்ரு‘த்ஸ்னம் – அனைத்து; ஏக – ஒரு; அம்ஷேன – பகுதியால்; ஸ்தித: – நிலைபெற்ற; ஜகத் – அகிலம்.

ஆனால், இதனை விவரமாக அறிவதன் தேவை என்ன அர்ஜுனா? என்னுடைய சிறு அம்சத்தின் மூலமாக, நான் இந்த பிரபஞ்சம் முழுவதிலும் புகுந்து அதனைத் தாங்குகின்றேன்.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare