அத்தியாயம் – 36
அரிஷ்டாசுரனை வதம் செய்தல்
பதம் 10.36.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பிறகு அரிஷ்டாசுரன் என்பவன் கோகுலத்திற்கு வந்தான். முதுகில் பெரும் திமிலையுடைய காளைமாடு வடிவம் கொண்ட அவன் தனது காலடிக்குளம்புகளினால் நிலத்தைக் கிழித்து இப்பூமியையே நடுங்கச் செய்தான்.

பதம் 10.36.2 : அரிஷ்டாசுரன் மிகவும் பயங்கரமான ஒலி எழுப்பி நிலத்தை தனது காலடிக் குளம்புகளினால் உதைத்தான். அவனது வால் வானம் நோக்கி உயர்ந்திருந்தது. அவன் சிறிது சிறிதாக சாணமும், மூத்திரமும் கழிந்து கொண்டு தனது கொம்புகளின் கூர்மையான முனைகளினால் மண் சுவர்களைக் கிழிக்கத் தொடங்கினான்.

பதங்கள் 10.36.3 – 10.36.4 : அன்பார்ந்த அரசனே, கூர்மையான கொம்புகளையுடைய அரிஷ்டாசுரனின் திமிலை மலையென்று தவறாக எண்ணி மேகங்கள் அதன்மீது தவழ்ந்தன. ஆயர்குலத்தின் ஆண்களும், பெண்களும் அசுரனைக் கண்டவுடன் அச்சத்தினால் நடுநடுங்கினர். அவன் எழுப்பிய ஒலியின் பயங்கரத்தினால் சினைமாடுகளின் கருவும், கர்ப்பிணிப் பெண்களின் கருவும் சிதைந்தன.

பதம் 10.36.5 : வளர்ப்புப் பிராணிகள் கோகுலத்தை விட்டு அச்சத்தினால் ஓடின. ஓ மன்னனே! அங்கு வசிப்பவர்கள் அனைவரும் “கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று கூவிக் கொண்டே கோவிந்தனைச் சரணடைவதற்காக ஓடினர்.

பதம் 10.36.6 : ஆயர்குலத்தினர் குழப்பமுற்று அச்சத்தினால் ஓடிவருவதைத் கண்டவுடன் பரமபுருஷபகவான் அவர்களை “அஞ்ச வேண்டாம்” என்று கூறி அமைதிப்படுத்தினார். பிறகு அவர் விருஷபாசுரனைப் பின் வருமாறு அழைத்தார்.

பதம் 10.36.7 : மூடனே! நீ இவ்வாறு செய்வதின் நோக்கமென்ன கேடுகெட்டவனே, உன்னைப் போன்ற துஷ்டர்களைத் தண்டிப்பதற்காக நான் இங்கே இருக்கும்பொழுது நீ ஆயர்குலத்தினரையும் அவர்களின் விலங்குகளையும் அச்சுறுத்துகின்றாயே.

பதம் 10.36.8 : இவ்வாறு கூறியபடி குற்றமற்றவரான பகவான் ஹரி தமது கரதலத்தினால் அவரது புஜங்களைத் தட்டி ஓசை எழுப்பி அரிஷ்டாசுரனை மேலும் சினங்கொள்ளச் செய்தார். பிறகு பகவான் தமது வலிமைமிக்கதும், பாம்பின் உடலைக் போன்றும் தோன்றுகின்ற கரத்தினை ஒரு நண்பனின் தோளில் போட்டபடி அவ்வசுரனைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

பதம் 10.36.9 : இவ்வாறு சினமூட்டப்பட்ட அரிஷ்டாசுரன் தனது காலடிக் குளம்பினால் நிலத்தினை உதைத்தான். பிறகு மேகங்கள் தவழ்கின்ற வானை நோக்கி உயர்த்தப்பட்ட வாலுடன், மிகவும் குரோதமுடையவனாக கிருஷ்ணரை நோக்கிப் பாய்ந்து வந்தான்.

பதம் 10.36.10 : தனது கொம்புகளின் கூர்மையான நுனிகளை முன்னோக்கி வைத்த படியும், இரத்தமயமான தனது விழிகளின் ஓரங்களினால் பகவான் கிருஷ்ணரைக் குரோதத்துடன் பார்த்தபடியும், அரிஷ்டாசுரன், இந்திரனால் எறியப்பட்ட வஜ்ராயுதம் போன்று முழு வேகத்துடன் அவரை நோக்கிப் பாய்ந்து வந்தான்.

பதம் 10.36.11 : பரமபுருஷ பகவான் கிருஷ்ணர் அதிர்ஷ்டாசுரனின் கொம்புகளைப் பற்றித் தனது பகையானையுடன் சண்டை செய்யும்போது ஓர் யானை செய்வது போல் அவனை பதினெட்டு அடிகள் தூரத்தில் தூக்கி எறிந்தார்.

பதம் 10.36.12 : பரமபுருஷ பகவானால் இவ்வாறு தோற்கடிக்கப்பட்டவுடன் விருஷபாசுரன் எழுந்துநின்று பெருமூச்சுவிட்டான். அவனது உடலெங்கும் வேர்வை பெருக்கெடுத்து ஓடியது. அவன் ஆத்திரத்தில் மந்தமதி கொண்டு மீண்டும் அவரைத் தாக்குவதற்காகப் பாய்ந்தான்.

பதம் 10.36.13 : அரிஷ்டாசுரன் தாக்கியபொழுது பகவான் கிருஷ்ணர் அவனது கொம்புகளைப் பற்றி நிறுத்தித் தமது பாதத்தினால் அவனைத் தாக்கி நிலத்தில் வீழ்த்தினார். பிறகு பகவான் அவனை ஒரு ஈரத்துணியை அடித்துத் துவைப்பது போல் நிலத்தில் துவைத்தார். இறுதியாக அவர் அவனது கொம்புகளில் ஒன்றைப் பிடுங்கி, அதனைக் கொண்டே அவன் கீழே விழும் வரை தாக்கினார்.

பதம் 10.36.14 : இரத்த வாந்தியெடுத்து, மூத்திரமும், சாணமும் தொடர்ந்து கழிந்து தனது கால்களை உதைத்து, கண்களைச் சுழற்றி, இவ்வாறு அரிஷ்டாசுரன் மிகுந்த வேதனையுடன் மரணத்தின் இருப்பிடம் சென்றான். தேவர்கள் பகவான் கிருஷ்ணர்மீது மலர்மாரி பொழிந்து அவரைப் போற்றித் துதித்தனர்.

பதம் 10.36.15 : இவ்வாறு அரிஷ்டன் என்னும் காளை அசுரனைக் கொன்ற பிறகு, கோபியர்களின் கண்களுக்கு உற்சவமாக விளங்கும் அவர் பலராமருடன் சேர்ந்து கோகுலத்தினுள் நுழைந்தார்.

பதம் 10.36.16 : அற்புதத் செயல்கள் புரியும் கிருஷ்ணரால் அரிஷ்டாசுரன் கொல்லப்பட்ட பின்னர் நாரத முனிவர் கம்சனைக் காண்பதற்காகச் சென்றார். தெய்வீகப் பார்வையுடைய ஆற்றல் மிகு அம்முனிவர் மன்னரிடம் பின்வருமாறு பேசலுற்றார்.

பதம் 10.36.17 : (கம்சனிடம் நாரதர் கூறினார்:) உண்மையில் யசோதைக்கு பிறந்தது பெண்குழந்தையாகும். கிருஷ்ணர் தேவகியின் மைந்தராவார். பலராமரோ ரோகிணியின் புதல்வராவார். அச்சத்தின் காரணமாக வசுதேவர் கிருஷ்ணரையும், பலராமரையும் தமது நண்பரான நந்த மகாராஜாவிடம் ஒப்படைத்தார். அவர்களிருவரே உமது ஆட்களைக் கொன்றவர்களாவர்.

பதம் 10.36.18 : இதனைக் கேட்டதும், போஜர்களின் தலைவன் கோபம் கொண்டான். உணர்ச்சிவயப்பட்டுத் தன்னை மறந்தான். கூரிய வாளினை எடுத்து வசுதேவரைக் கொல்லத் துணிந்தான்.

பதம் 10.36.19 : ஆனால் நாரதர், வசுதேவரின் இரண்டு புதல்வர்களே அவனது மரணத்திற்குக் காரணமாவர் என்று எடுத்துக்கூறி கம்சனைத் தடுத்து நிறுத்தினார். பிறகு கம்சன் வசுதேவரையும், அவருடைய மனைவியையும் சேர்த்து இரும்புச் சங்கிலியால் பிணைத்தான்.

பதம் 10.36.20 : நாரத மகரிஷி அங்கிருந்து சென்ற பின்னர், கம்சராஜன் கேசி என்னும் அசுரனை அழைத்து “ராமரையும், கிருஷ்ணரையும் கொல்வாயாக” என்று கட்டளையிட்டான்.

பதம் 10.36.21 : போஜர்களின் மன்னரான கம்சன் பின்னர் முஷ்டிகன், சாணூரன், சலன், தோசலன் போன்றவர்களின் தலைமையின் கீழுள்ள தனது அமைச்சர்களையும், தனது யானைப் பாகர்களையும் அழைத்து வரச்செய்தான். அரசன் அவர்களிடம் பின்வருமாறு கூறினான்.

பதங்கள் 10.36.22 – 10.36.23 : எனதன்பிற்குரிய வீரர்களான சாணூரனே, முஷ்டிகனே, இதனைக் கேட்பீராக. ஆனகதுந்துபியின் (வசுதேவரின்) புதல்வர்களான ராமரும், கிருஷ்ணரும் நந்த கோபனின் ஆயர்பாடியில் வசிக்கின்றனர். எனது மரணம் அவ்விருவர்களாலேயே நிகழும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அவர்களிருவரும் இங்கே கொண்டுவரப்பட்டவுடன், மல்யுத்தம் என்னும் போர்வையில் அவர்களைக் கொல்வீராக.

பதம் 10.36.24 : பார்வையாளர் மேடைகள் பல சூழ்ந்திருக்க, மல்யுத்த அரங்கம் ஒன்றினை உருவாக்குங்கள். போட்டியைக் காண்பதற்காக நகரவாசிகளையும், வெளியூர்வாசிகளையும் அழைத்து வாருங்கள்.

பதம் 10.36.25 : பாக்கியசாலியான எனது யானைப்பாகனே! குவலய பீடம் என்னும் யானையை மல்யுத்த அரங்கத்தின் வாயிலில் நிறுத்தி எனது இரு பகைவர்களையும் கொல்வாயாக.

பதம் 10.36.26 : சதுர்த்தசியன்று தனுர்யாகத்தினை வேதவிதிகளுக்கேற்பத் தொடங்குதல் வேண்டும். நல்வரம் அருளும் சிவபெருமானுக்கு உரிய மிருகங்களை யாகத்தில் பலியிட வேண்டும்.

பதம் 10.36.27 : இவ்வாறு தனது அமைச்சர்களுக்குக் கட்டளையிட்ட கம்சன் அடுத்து யதுகுலத்தின் சிறந்த அக்ரூரரை அழைத்து வரச் செய்தான். சுய நல வித்தையில் கைதேர்ந்தவன் கம்சன் ஆதலினால் அவன் அக்ரூரரின் கரங்களைத் தனது கரங்களினால் பற்றிக் கொண்டு அவரிடம் பின்வருமாறு கூறினான்.

பதம் 10.36.28 : தானத்தில் சிறந்த எனதன்பிற்குரிய அக்ரூரரே, மரியாதையின் நிமித்தம் நீர் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். போஜர்கள் மற்றும் விருஷ்ணிக்களில் எம்மிடம் உம்மைப் போல் அன்பு பூண்டவர் வேறு எவருமிலர்.

பதம் 10.36.29 : மேன்மை மிகு அக்ரூரரே, நீர் எப்பொழுதும் உமது கடமைகளை மரியாதையுடன் நிறைவேற்றுபவர் ஆவீர். தேவேந்திரன் பகவான் விஷ்ணுவைத் தனது இலட்சியங்கள் ஈடேறுவதற்காகச் சரணடைந்தது போல் நான் இப்போது உம்மை நம்பியே இருக்கின்றேன்.

பதம் 10.36.30 : ஆனக துந்துபியின் இரு புதல்வர்களும் வாழும், நந்கோபரின் விரஜத்திற்குச் சென்று, இங்கே அவர்களைத் தாமதமின்றி இந்த ரதத்தில் அழைத்து வருவீராக.

பதம் 10.36.31 : விஷ்ணுவின் பாதுகாப்பின் கீழுள்ள தேவர்கள் எனது மரணத்திற்காக இந்த இரு சிறுவர்களையும் அனுப்பியுள்ளனர். அவர்களிருவரையும் இங்கு அழைத்து வருவீராக. மேலும் நந்தகோபரையும், ஆயர்களையும் கூட மரியாதையின் நிமித்தம் பரிசுப் பொருட்களுடன் அழைத்து வரவும்.

பதம் 10.36.32 : கிருஷ்ணரையும், பலராமரையும் நீர் இங்கே கொண்டு வந்தபிறகு, நான் அவர்களிருவரையும் மரணத்தைப் போன்ற சக்தியுடைய எனது யானையினால் கொல்லச் செய்வேன். சந்தர்ப்ப வசத்தினால் அவர்கள் தப்பிவிட்டார்களென்றால் மின்னலைப் போன்று வலிமையுடைய எனது மல்யுத்த வீரர்களால் நான் அவர்களைக் கொல்லச் செய்வேன்.

பதம் 10.36.33 : அவ்விருவர்களும் கொல்லப்பட்டவுடன், வேதனையில் ஆழ்ந்திருக்கும் வசுதேவரையும் அவரது உறவினர்களான விருஷ்ணிக்களையும், போஜர்களையும், தாசரதர்களையும் கொல்வேன்.

பதம் 10.36.34 : மேலும் நான், எனது இராஜ்ஜியத்தின் மீது ஆசை கொண்ட என் வயதான தந்தை உக்கிரசேனனையும், அவரது சகோதரர் தேவகளையும், எனது பிற பகைவர்கள் அனைவரையும் கூடக் கொல்வேன்.

பதம் 10.36.35 : பிறகு, எனது நண்பரே, இப்பூமி, குத்தும் முட்களின்றி இருக்கும்.

பதம் 10.36.36 : எனது மூத்த உறவினரான ஜராசந்தனும், எனதன்பிற்குரிய நண்பன் துவிவிதனும், சம்பரனையும், நரகனையும், பாணனையும் போன்று எனது நலன் விரும்பிகளாவர். அவர்களின் உதவியுடன் தேவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் இங்குள்ள அரசர்கள் அனைவரையும் கொன்று பின்னர் நான் இந்த பூமியை ஆள்வேன்.

பதம் 10.36.37 : இப்போது எனது எண்ணத்தினை நீர் அறிந்திருப்பீர். ஆகையினால் உடனே சென்று கிருஷ்ணரையும், பலராமரையும், தனுர் யாகத்தினைக் காண்பதற்கும், யதுக்களின் தலைநகர் வளத்தினைக் காண்பதற்கும் அழைத்து வருவீராக.

பதம் 10.36.38 : ஸ்ரீ அக்ரூரர் கூறினார்: “ஓ, மன்னரே, துரதிரிஷ்டம் வராதிருப்பதற்காக நீர் ஒரு வழிமுறையினை மிகுந்த தேர்ச்சியுடன் வடிவமைத்திருக்கின்றீர். ஒருவனது செயலின் பலனை விதியே நிர்ணயிப்பதினால் வெற்றி, தோல்வியினிடத்து ஒருவன் சமமாக இருத்தல் வேண்டும்.”

பதம் 10.36.39 : சாதாரண மனிதன், தனது விருப்பங்களை நிறைவேற்றவிடாது விடுத்த போதிலும்கூட அவன் தனது விருப்பத்திற்கேற்ப செயல்படுவதில் தீவிரமாக இருக்கிறான். அதனால் அவன் இன்பம் துன்பம் என்னும் இரண்டினையும் எதிர்கொள்கிறான். எது எப்படி இருந்த போதிலும், உமது கட்டளையினை நான் நிறைவேற்றுவேன்.

பதம் 10.36.40 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அக்ரூரருக்கு இவ்வாறு கட்டளையிட்டபின் கம்ச மன்னன் தனது அமைச்சர்களுக்கு விடை கொடுத்து தனது அந்தப்புரத்திற்குச் சென்றான். அக்ரூரரும் தமது இல்லம் திரும்பினார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare