அத்தியாயம் – 34
நந்த மகாராஜாவைக் காத்து சங்கசூடனை அழித்தல்
பதம் 10.34.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஒருசமயம் ஆயர்கள் பகவான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்று ஆர்வங்கொண்டு மாட்டு வண்டிகளில் அம்பிகா வனத்திற்குப் பயணம் சென்றனர்.

பதம் 10.34.2 : ஓ, மன்னனே! அவர்கள் அங்கே சென்று சரஸ்வதி நதியில் நீராடி பல்வேறு பூஜைப் பொருட்களைக் கொண்டு ஆற்றல்மிக்க பகவான் பசுபதியையும் அவரது துணைவியான தேவி அம்பிகையையும் பக்தியுடன் வழிபட்டனர்.

பதம் 10.34.3 : ஆயர்கள் அந்தணர்களுக்குப் பசுக்களையும், பொன்களையும், ஆடைகளையும் தேன் கலந்த சாதத்தையும் தானமாக அளித்தனர். பிறகு அவர்கள் “தேவர் நம்மீது பிரியம் வைப்பாராக” என்று அவரை வழிபட்டனர்.

பதம் 10.34.4 : நந்தன், சுநந்தன் மற்றும் பாக்கியசாலிகளான பிற ஆயர்கள் அன்றைய இரவுப் பொழுதை மிகவும் கடுமையான விரதம் மேற்கொண்டு சரஸ்வதி நதியின் கரையில் கழித்தனர். அவர்கள் வெறும் நீரை மட்டுமே பருகி விரதம் இருந்தனர்.

பதம் 10.34.5 : அந்த இரவில் பயங்கரப் பசிகொண்ட ஒரு பெரிய பாம்பு புதரிலிருந்து தோன்றியது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்த நந்தமகாராஜாவை நோக்கித் தனது வயிற்றினால் ஊர்ந்து வந்த அப்பாம்பு அவரை விழுங்கத் தொடங்கியது.

பதம் 10.34.6 : பாம்பின் பிடியில் சிக்கிக்கொண்ட நந்தமகாராஜா “கிருஷ்ணா, கிருஷ்ணா! என் அன்பு மைந்தனே! இப்பெரிய பாம்பு என்னை விழுங்கிக் கொண்டிருக்கின்றது! உன்னைச் சரணடைந்துள்ள என்னைக் காத்தருள்வாயாக!” என்று கூக்குரலிட்டுக் கதறினார்.

பதம் 10.34.7 : நந்தமகாராஜாவின் கூக்குரலைக் கேட்ட ஆயர்கள் உடனே விழித்தெழுந்து, அவர் பாம்பினால் விழுங்கப்படுவதைக் கண்டனர். அதிர்ச்சியுற்ற அவர்கள், எரிந்துகொண்டிருந்த தீப்பந்தங்களினால் அப்பாம்பைத் தாக்கினர்.

பதம் 10.34.8 : தீப்பந்தங்கள் அதனைச் சுட்டும் அப்பாம்பு நந்த மகாராஜாவை விடுவிக்கவில்லை. பின்னர் பக்தர்களின் தலைவரான பரமபுருஷ பகவான் அந்த இடத்திற்கு வந்து தமது பாதத்தினால் அப்பாம்பினைத் தொட்டார்.

பதம் 10.34.9 : பரமபுருஷ பகவானின் தெய்வீகப் பாதம் பட்டவுடனே அப்பாம்பின் பாவங்கள் எல்லாம் அழிந்தொழிந்தன. அதனால் அவன் தனது பாம்பு உடல் நீங்கப் பெற்று வணங்கத்தக்க வித்யாதரனாகத் தோன்றினான்.

பதம் 10.34.10 : பரமபுருஷ பகவான் ரிஷிகேசர், பொன்னாலான கழுத்தணிகள் அணிந்து ஒளி வீசிக் கொண்டிருந்த உடலுடன் தம் முன்னே மிக்க பணிவுடன் வணங்கியபடி நின்றுகொண்டிருந்த அப்புருஷனை அவன் யாரென்று வினவினார்.

பதம் 10.34.11 : (பகவான் கிருஷ்ணர் கூறினார்:) அன்பரே! தாங்கள் மிக்க எழிலுடன் மிகவும் அற்புதமாகத் தோன்றுகின்றீர். தாங்கள் யார்? யாருடைய பலவந்தத்தினால் நீர் இப்பாம்பு வடிவம் பெற்றீர்?

பதங்கள் 10.34.12 – 10.34.13 : பாம்பு பதில் கூறியது: நானே நன்கறியப்பட்ட சுதர்ஸனன் என்னும் பெயருடைய வித்யாதரன் ஆவேன். நான் வளமிக்கவனாகவும், எழில்மிக்கவனாகவும் இருந்தேன். நான் எல்லாத் திசைகளிலும், எனது விருப்பம் போல் என்னுடைய விமானத்தில் பறந்து திரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒருமுறை ஆங்கிரஸ முனிவரின் சீடபரம்பரையில் வந்த சில முனிவர்களைப் பார்த்தேன். எனது அழகினால் கர்வம்கொண்டு நான் அவர்களை ஏளனம் செய்தேன். நான் செய்த பாவத்தினால் அவர்கள் இந்த இழிவடிவினைப் பெறுமாறு செய்தனர்.

பதம் 10.34.14 : உண்மையில் எனது நன்மைக்காகவே என்னை அக்கருணை மிகு முனிவர்கள் சபித்துள்ளனர். ஏனென்றால் இப்போது அனைத்து உலகங்களின் தலைவராகிய பரமகுருவின் பாதம் என் மீது பட்டு, அதன் காரணமாக எனது அனைத்துப் பாவங்களும் நீங்கிவிட்டன.

பதம் 10.34.15 : எம்பெருமானே, பெளதிக உலகிற்கு அஞ்சி உம்மைச் சரண் புகுந்தவர்களின் அனைத்துப்பயங்களையும் நீர் அழிக்கின்றீர். உமது பாதம் தொட்டதால் நான் இப்போது முனிவர்களின் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றுள்ளேன். ஓ, துன்பங்களை அழிப்பவரே, எனது உலகிற்கு என்னைத் திரும்பிச் செல்ல அருள்கூர்ந்து அனுமதிப்பீராக.

பதம் 10.34.16 : ஓ, மகாயோகியே, மகாபுருஷரே, பக்தர்களின் தலைவரே, நான் உம்மைச் சரண் புகுந்தேன். உமது விருப்பம் போல் எனக்குக் கட்டைளையிடுவீராக. ஓ, பிரபஞ்சத்தை ஆள்பவர்களின் பகவானான பரமபுருஷ பகவானே.

பதம் 10.34.17 : ஓ, குற்றமற்றவரே! உமது தரிசனத்தால் அந்தணர்களின் தண்டனையிலிருந்து உடனே நான் விடுதலை பெற்றுவிட்டேன். உமது பெயரானது அதனை ஓதுகின்றவரையும், அவ்வோதுதலைக் கேட்கின்றவர்களையும் தூய்மை செய்கின்றது. அவ்வாறிருக்க உமது தாமரைத் திருவடிகளின் ஸ்பரிசம் எத்தனை அதிகம் நன்மை செய்வதாகும்?

பதம் 10.34.18 : பகவான் கிருஷ்ணரிடமிருந்து இவ்வாறு அனுமதி பெற்ற தேவனான சுதர்ஸனன் அவரைச் சுற்றி வலம் வந்து, வீழ்ந்து வணங்கித் தனது தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான். நந்தமகாராஜாவும் கூட அவரது துன்பத்திலிருந்து இவ்வாறு மீட்கப்பட்டார்.

பதம் 10.34.19 : ஸ்ரீ கிருஷ்ணரின் மேலான ஆற்றலைக் கண்டு விரஜத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த ஆச்சரியத்திற்காளாயினர். அன்பிற்குரிய மன்னனே, பிறகு அவர்கள் பகவான் சிவபெருமானை வழிபட்டு, கிருஷ்ணரின் ஆற்றல் மிகு செயல்களை வழியெங்கும் மரியாதையுடன் விவரித்தபடியே விரஜத்திற்குத் திரும்பி வந்தனர்.

பதம் 10.34.20 : ஒரு சமயம் அற்புதச் செயல்களைச் செய்யும் பகவனான கோவிந்தனும் பகவான் பலராமரும், இரவு வேளையில் வனத்தில் விரஜத்தைச் சேர்ந்த கோபியர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பதம் 10.34.21 : கிருஷ்ணரும், பலராமரும், மலர்மாலைகளும், அழுக்கற்ற தூய ஆடைகளும் அணிந்திருந்தனர். அவர்களின் அங்கங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு, நறுமணச் சந்தனம் பூசப்பட்டிருந்தன. கோபியர்கள் அவர்கள் மீதான பாசத்தினால் கட்டுண்டு அவர்களது கீர்த்திகளை மனதினை ஈர்க்கும் வண்ணம் பாடிக்கொண்டிருந்தனர்.

பதம் 10.34.22 : நிலவு உதித்தெழுதல், விண்மீன்கள் தோன்றுதல், குமுத மலர்களின் நறுமணம் கலந்த காற்று வீசுதல், மல்லிகை மலர்களின் நறுமணத்தினால் மதிமயங்கிய தும்பிகளின் பாடல் போன்ற அடையாளங்களினால் சுட்டப்படும் இரவின் ஆரம்பத்தினை இரு பகவான்களும் போற்றினர்.

பதம் 10.34.23 : கிருஷ்ணரும் பலராமரும் இணைந்து பாடியது ஒரே சமயத்தில் ஸ்வர வரிசைகளின் முழு ஸ்தாயினையும் முறைப்படி வெளிப்படுத்தியது. அவர்களின் பாடல் அனைத்து உயிர்களின் மனதிற்கும் செவிகளுக்கும் இன்பமளித்தன.

பதம் 10.34.24 : அவர்களின் பாடலைக் கேட்ட கோபியர்கள் அப்படியே அசைவற்று இருந்தனர். “ஓ, மன்னனே, அவர்கள் தம்மையே மறந்திருந்ததினால் அவர்களின் நேர்த்தியான ஆடைகள் நெகிழ்ந்ததையோ, அவர்களின் கூந்தலும், அணிந்திருந்த மாலையும் குலைந்ததையோ அவர்கள் அறியவில்லை.”

பதம் 10.34.25 : பகவான் கிருஷ்ணரும், பகவான் பலராமரும் அவர்களின் விருப்பப்படி கேட்போர் கள்வெறிகொள்ளும் அளவிற்குப் பாடிக் கொண்டிருந்த பொழுது குபேரனின் சங்கசூடன் என்னும் பெயரினன் அங்கு வந்தான்.

பதம் 10.34.26 : ஓ, மன்னனே! பகவான் இருவரும் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே சங்கசூடன் அங்கிருந்த பெண்களை மிக்க ஆணவத்தோடு வடதிசையினை நோக்கி விரட்டத் தொடங்கினான். கிருஷ்ணரையும், பலராமரையும் தமது தலைவர்களாக ஏற்றுக்கொண்ட அப்பெண்கள் பெருங்குரலில் அலறத் தொடங்கினர்.

பதம் 10.34.27 : “கிருஷ்ணா! ராமாவென்று” தமது பக்தர்கள் அலறியதைக் கேட்டும், ஒரு திருடனால் திருடப்படும் பசுக்களைப் போல் அவர்கள் விரட்டப்படுவதையும் கண்டு, கிருஷ்ணரும், பலராமரும் அந்த அசுரனின் பின்னே ஒடினர்.

பதம் 10.34.28 : பகவான்கள் இருவரும் “அஞ்ச வேண்டாம்” என்று அவர்களை நோக்கிக் கூறினர். பிறகு அவர்கள் இருவரும் பருத்தும், நெடிதும் வளர்ந்திருந்த ஸால மரத்தின் உறுதியான கம்புகளை எடுத்துக் கொண்டு விரைந்து ஓடிக்கொண்டிருந்த குஹ்யகர்களின் மிக இழிந்தவனைப் பின்தொடர்ந்து ஓடினர்.

பதம் 10.34.29 : சங்கசூடன், அவர்கள் இருவரும் காலம் மற்றும் மரணத்தின் வடிவங்களாகத் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டவுடன் அவன் மிகுந்த கவலைக்கு ஆளானான். குழப்பமுற்ற அவன், அப்பெண்களை விட்டு விட்டுத் தனது உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஓடினான்.

பதம் 10.34.30 : பகவான் கோவிந்தன் அவ்வசுரனின் தலைமீதிருந்த இரத்தினக்கல்லை எடுக்க வேண்டும் என்னும் ஆர்வத்தில் அவன் எங்கெங்கு ஓடிய போதிலும் அவனைப் பின்தொடர்ந்து ஓடினார். இதற்கிடையில் பகவான் பலராமர் அப்பெண்களைக் காக்கும் பொருட்டு அவர்களுடன் நின்று கொண்டார்.

பதம் 10.34.31 : அன்பார்ந்த மன்னனே, வெகு தொலைவில் ஓடிக்கொண்டிருந்த சங்கசூடனைப் பகவான் ஏதோ அருகில் ஓடுபவனைப் போல முந்திச் சென்றார். பிறகு பகவான் தமது முஷ்டியினால் துராத்மாவான அந்த அசுரனின் தலையை அதில் அணியப் பெற்றிருந்த சூடாமணியுடன் சேர்த்து தனியே துண்டித்தார்.

பதம் 10.34.32 : இவ்வாறு அசுரன் சங்கசூடனைக் கொன்று அவன் தனது தலையில் அணிந்திருந்த ஒளிவீசும் இரத்தினத்தை எடுத்துக் கொண்டுவந்து பகவான் கிருஷ்ணர் அதனைக் கோபியர்கள் பார்த்துக் கொண்டிருக்க மிக்க திருப்தியுடன் தமது மூத்த சகோதரருக்கு அளித்தார்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare