அத்தியாயம் – 28
கிருஷ்ணர் வருணனின் பிடிவிலிருந்து
நந்த மகாராஜாவை விடுவித்தல்
பதம் 10.28.1
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
ஏகாதஸ்யாம் நிராஹார: ஸ்மப்யர்ச்ய ஜனார்தனம்
ஸ்நாதும் நந்தஸ் து காளிந்த்யாம் த்வாதஸ்யாம் ஜலம் ஆவிஸத்

ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ பாதராயணீ (சுகதேவ கோஸ்வாமி) கூறினார்; ஏகாதஸ்யாம்—ஏகாதசியில் (அமாவாசை கழிந்த பதினோராம் நாள்); நிர்-ஆஹார:—உண்ணாமல் விரதம் இருந்து; ஸமப்யர்ச்ய—வழிபட்டார்; ஜனார்தனம்—முழுமுதற் கடவுளை பகவான் ஜனார்தனனை; ஸ்நாதும்—நீராடுவதற்காக (குறிப்பிட்டபடி விரதத்தை முடிக்கும் முன்பாக); நந்த:—நந்த மகாராஜா; து—ஆனால்; காளிந்த்யாம்—யமுனை நதியில், மகாராஜா; த்வாதஸ்யாம்—பன்னிரெண்டாம் நாள் துவாதசியன்று; ஜலம்—நீர்; ஆவிஸத்—இறங்கினார்.

ஸ்ரீ பாதராயணி கூறினார்: ஏகாதசியன்று விரதமிருந்து பகவான் ஜனார்தனனை வழிபட்ட நந்தமகாராஜா மறுநாள் துவாதசியன்று காளிந்தி நதியில் நீராடுவதற்காக இறங்கினார்.

பதம் 10.28.2
தம் க்ருஹீத்வானயத் ப்ருத்யோ வருணஸ்யா ஸீரோ ‘ந்திகம்
அவஜ்ஞாயாஸீரீம் வேலாம் ப்ரவிஷ்டம் உதகம் நிஸி

தம்—அவரை; க்ருஹீத்வா—பிடித்து; அனயத்—கொணர்ந்தான்; ப்ருத்ய:—ஒரு சேவகன்; வருணஸ்ய—வருணனின், (சமுத்திரத் தேவன்); அஸீர:—அசுரன்; அந்திகம்—முன்பாக (அவனது எஜமானன்); அவஜ்ஞாய—புறக்கணித்தார்; ஆஸீரீம்—அசுப; வேலாம்—நேரம்; ப்ரவிஷ்டம்—நீராடினார்; உதகம்—நீரில்; நிஸி—நடுநிசியில்.

அசுப நேரத்தில் நந்தமகாராஜா நீராடிய காரணத்தினால் வருணனின் சேவகனான ஓர் அசுரன் அவரைப் பிடித்துவந்து தன் எஜமானன் முன்பு நிறுத்தினான்.

பதம் 10.28.3
சுக்ருஸீஸ் தம் அபஸ்யந்த: க்ருஷ்ண ராமேதி கோபகா:
பகவாம்ஸ் தத் உபஸ்ருத்ய பிதரம் வருணாஹ்ருதம்
தத்-அந்திகம் கதோ ராஜன் ஸ்வானாம் அபய-தோவிபு:

சுக்ருஸீ:—அவர்கள் கூவி அழைத்தனர்; தம்—அவரை; அபஸ்யந்த:—காணாமல்; க்ருஷ்ண—ஓ, கிருஷ்ணா; ராம—ஓ, ராமா; இதி—இவ்வாறு; கோபகா:—கோபாலர்கள்; பகவான்—பரமபுருஷ பகவான் கிருஷ்ணர்; தத்—அது; உபஸ்ருத்ய—கேட்டு; பிதரம்—அவரது தந்தை; வருண—வருணனால்; ஆஹ்ருதம்—பிடித்துச் செல்லப்பட்டுள்ளார்; தத்—வருணனின்; அந்திகம்—முன்பாக; கத:—சென்றார்; ராஜன்—அன்பார்ந்த பரீக்ஷித்து மன்னனே; ஸ்வானாம்—அவரது பக்தர்களின்; அபய—அச்சத்தைக் கெடுப்பவர்; த:—அளிப்பவர்; விபு:—எல்லாம் வல்ல பகவான்.

நந்தமகாராஜாவைக் காணாத ஆயர்கள் “ஓ, கிருஷ்ணா! ஓ, ராமா!” என்று பெருங்குரலெடுத்துக் கூவி அழைத்ததைக் கேட்ட பகவான் கிருஷ்ணர் தமது தந்தை வருணனால் சிறை செய்யப்பட்டுள்ளார். என்பதைப் புரிந்துகொண்டார். அதன்பின் தமது பக்தர்களின் அச்சத்தைக் கெடுக்கும் எல்லாம் வல்ல பகவான் வருணதேவனின் அவைக்களத்திற்குச் சென்றார்.

பதம் 10.28.4
ப்ராப்தம் வீக்ஷ்ய ஹ்ருஷீகேஸம் லோக-பால: ஸபர்யயா
மஹத்யா பூஜயித்வாஹ தத்-தர்ஷன-மஹோத்ஸவ:

ப்ராப்தம்—வந்தது; வீக்ஷ்ய—கண்டு; ஹ்ருஷீகேஸம்—புலன்களை நெறிப்படுத்துபவரான பகவான் கிருஷ்ணர்; லோக—அவ்வுலகின் (நீர் நிறைந்த பகுதி); பால:—ஆதிபத்தியத்தேவன் (வருணன்); ஸபர்யயா—மரியாதைக்குரிய வந்தனங்களுடன்; மஹத்யா—விரிவான; பூஜயித்வா—வழிபட்டு; ஆஹ—கூறினான்; தத்—பகவான் கிருஷ்ணரின்; தர்ஷன—தரிசனத்தினால்; மஹா—மகா; உத்ஸவ:—கொண்டாட்டமுடன்.

பகவான் ரிஷிகேஸர் அங்கே வந்ததைக் கண்ட வருண தேவன் அவரை விரிவாக வழிபட்டார். பகவானைத் தரிசித்ததினால் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த வருணன் பின்வருமாறு கூறினார்.

பதம் 10.28.5
ஸ்ரீ-வருண உவாச
அத்ய மே நிப்ருதோ தேஹோ ‘த்யைவார்தோ ‘திகத ப்ரபோ
த்வத்-பாத-பாஜோ பகவன்ன் அவாபு: பாரம் அத்வன:

ஸ்ரீ-வருண உவாச—ஸ்ரீ வருணதேவன் கூறினார்; அத்ய—இன்று; மே—என்னால்; நிப்ருத:—வெற்றிகரமாக நிறைவேறியது; தேஹ:—எனது பெளதிக உடல்; அத்ய—இன்று; ஏவ—உண்மையில்; அர்த—வாழ்க்கை லட்சியம்; அதிகத:—உணரப்படுகிறது; ப்ரபோ—ஓ, பகவானே; த்வத்—உமது; பாத—திருவடித்தாமரை; பாஜ:—தொண்டு செய்வோர்; பகவன்—ஓ, முழுமுதற்கடவுளே; அவாபு:—எய்தப் பெற்றது; பாரம்—கடந்த நிலை; அத்வன:—பாதையின் (பெளதிக வாழ்க்கையின்).

ஸ்ரீ வருணர் கூறினார்: எனது உடல் தனது இயக்கத்தினை இப்போது நிறைவு செய்துவிட்டது. ஓ, பகவானே, எனது வாழ்க்கை லட்சியம் உண்மையில் ஈடேறிவிட்டது. ஓ, முழுமுதற் கடவுளே! உமது தாமரைத் திருவடிகளை ஏற்றுக்கொண்டவர்களால் மட்டுமே உலகியல் வாழ்க்கைப் பாதையினைக் கடந்து செல்ல முடியும்.

பதம் 10.28.6
நமஸ் துப்யம் பகவதே ப்ரஹ்மனே பரமாத்மனே
ந யத்ர ஸ்ரூயதே மாயா லோக-ஸ்ருஷ்டி-விகல்பனா

நம:—வந்தனங்கள்; துப்யம்—உமக்கு; பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; ப்ரஹ்மணே—முழுமெய்ப்பொருள்; பரம-ஆத்மனே—பரமாத்மா; ந—இல்லை; யத்ர—இவரிடத்தில்; ஸ்ரூயதே—கேட்கப்படுகிறதின்; மாயா—மாயை, பௌதிக செயல்; லோக—இவ்வுலகின்; ஸ்ருஷ்டி—படைப்பு; விகல்பனா—அது ஏற்பாடு செய்கிறது.

இவ்வுலகின் படைப்பிற்கு உதவும் மாயாசக்தியின் கறையே படியாத முழுமுதற்கடவுளே, முழுமெய்ப்பொருளே, பரமாத்மாவே! உமக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக.

பதம் 10.28.7
அஜானதா மாமகேன மூடேனாகார்ய-வேதினா
ஆனிதோ ‘யம் தவ பிதா தத் பவான் க்ஷந்தும் அர்ஹதி

அஜானதா—அறியாமை மிக்கவனால்; மாமகேன—எனது சேவகனால்; மூடேன—மூடன்; அகார்ய-வேதினா—அவனது கடமை என்னவென்று அறியாது; அனீத:—கொணர்ந்தான்; அயம்—இவன்; தவ—உமது; பிதா—தந்தையை; தத்—அது; பவான்—தாங்கள்; க்ஷந்தும் அர்ஹதி—மன்னித்தருள வேண்டும்.

இங்கு அமர்ந்திருக்கும் தங்கள் தந்தையை, தனது கடமை என்ன வென்று அறியாத மதியற்ற எனது சேவகன் அறியாமையில் இங்கே அழைத்து வந்துவிட்டான். இதற்காக எங்களை மன்னித்தருள வேண்டும்.

பதம் 10.28.8
மமாபி அனுக்ரஹம் க்ருஷ்ண கர்தும் அர்ஹஸி அஸேஷ-த்ருக்
கோவிந்த நீயதாம் ஏஷ பிதா தே பித்ரு-வத்ஷல

மம—எனக்கு; அபி—கூட; அனுக்ரஹம்—கருணை; க்ருஷ்ண—ஓ, பகவான் கிருஷ்ணரே; கர்தும் அர்ஹஸி—புரிவீராக; அஸேஷ—எல்லாவற்றையும்; த்ருக்—ஓ, நீர் காண்பவர்; கோவிந்த—ஓ, கோவிந்தனே; நீயதாம்—அழைத்துச் செல்லலாம்; ஏஷ:—இந்த; பிதா—தந்தை; தே—உமது; பித்ரு-வத்ஸல—ஓ, பெற்றோர் மீது பேரன்புடையவரே.

ஓ, கிருஷ்ணா, ஓ, எல்லாவற்றையும் காண்பவரே, உமது கருணையினை எனக்கும் கூட அருள்வீராக. உமது தந்தையின் மீது நீர் பேரன்புடையவர். ஆதலினால் அவரை அருள்கூர்ந்து அழைத்துச் செல்வீராக.

பதம் 10.28.9
ஸ்ரீ-ஸீக உவாச
ஏவம் ப்ரஸாதித: க்ருஷ்ணே பகவான் ஈஸ்வரேஸ்வர:
ஆதாயாகாத் ஸ்வ-பிதரம் பந்தூனாம் சாவஹன் முதம்

ஸ்ரீ-ஸீக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; ப்ரஸாதித:—திருப்தியுற்று; க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; பகவான்—முழுமுதற்கடவுள்; ஈஸ்வர—நெறியாளர்கள் அனைவரின்; ஈஸ்வர:—நெறியாளர்; ஆதாய—அழைத்துக் கொண்டு; அகாத்—சென்றார்; ஸ்வ-பிதரம்—அவரது தந்தை; பந்தூனாம்—தமது உறவினர்களிடம்; ச—மற்றும்; ஆவஹன்—அழைத்துக்கொண்டு; முதம்—மகிழ்ச்சியுடன்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு வருணனால் திருப்தி செய்யப்பட்ட முழுமுதற் கடவுளும், ஆள்பவர்கள் அனைவரின் பரம ஆளுனரான ஸ்ரீ கிருஷ்ணர் தமது தந்தையை அழைத்துக் கொண்டு தமது இல்லம் திரும்பினார். அவர்களைக் கண்டு அவரது உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பதம் 10.28.10
நந்தஸ் த்வ் அதீந்த்ரயம் த்ருஷ்ட்வா லோக-பால-மஹோதயம்
க்ருஷ்ணே ச ஸன்னதிம் தேஷாம் ஜ்ஞாதிப்யோ விஸ்மிதோ ‘ப்ரவீத்

நந்த:—நந்த மகாராஜா; து—மற்றும்; அதீந்த்ரியம்—இதற்கு முன் காணாத; த்ருஷ்ட்வா—கண்டு; லோக-பால—சமுத்திரலோகத்தின் ஆதி பத்தியத் தேவர், வருணன்; மஹா-உதயம்—பெரும் வளம்; க்ருஷ்ணே—கிருஷ்ணருக்கு; ச—மற்றும்; ஸன்னதிம்—வந்தனம் செய்து; தேஷாம்—அவர்களால், (வருணன் மற்றும் அவரது அடியவர்களால்); ஜ்ஞாதிப்ய:—அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு; விஷ்மிதா:—வியப்புடன்; அப்ரவீத்—கூறினார்.

சமுத்திரலோகத்தின் ஆதிபத்தியத் தேவரான வருணனின் பெரும் வளத்தினை முதன்முதலில் கண்டும், வருணனும் அவரது பணியாட்களும் கிருஷ்ணரை மிக்கப் பணிவுடன் வணங்கியதைக் கண்டும் நந்த மகாராஜா பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினார். அவர் இந்த அதிசயத்தினைத் தமது சக ஆயர்களுக்கு விளக்கிக் கூறினார்.

பதம் 10.28.11
தே சௌத்ஸீக்ய-தியோ ராஜன் மத்வா கோபாஸ் தம் ஈஸ்வரம்
அபி ந: ஸ்வ-கதிம் ஸீக்ஷ்மாம் உபாதாஸ்யத் அதீஸ்வர:

தே—அவர்கள்; ச—மற்றும்; ஒளத்ஸீக்ய—ஆர்வம் நிறைந்தவர்களாக; திய:—அவர்களது மனம்; ராஜன்—ஓ, மன்னனே; மத்வா—நினைந்து; கோபா:—கோபாலர்கள்; தம்—அவரை; ஈஸ்வரம்—பரமபுருஷபகவான்; அபி—கூட; ந:—நமக்கு; ஸ்வ-கதிம்—அவரது உறைவிடம்; ஸீக்ஷ்மாம்—உன்னதமான; உபாதாஸ்யத்—அருள்புரிவாரா; அதீஸ்வர:—பரம நெறியாளர்.

(வருணனிடம் கிருஷ்ணர் புரிந்த லீலையைக் கேட்டு) ஆயர்கள் கிருஷ்ணர் நிச்சயம் பரமபுருஷ பகவானாகத்தான் இருத்தல் வேண்டும் என்று கருதினர். ஓ, மன்னனே, அவர்களது மனங்கள் ஆர்வத்தால் நிரம்பி வழிந்தன. அவர்கள் “பரம புருஷ பகவான் தமது உன்னத உறைவிடத்தினை நமக்கு அருள்வாரா?” என்று எண்ணினர்.

பதம் 10.28.12
இதி ஸ்வானாம் ஸ பகவான் விஜ்ஞாயாகில-த்ருக் ஸ்வயம்
ஸங்கல்ப-ஸித்தயே தேஷாம் க்ருபயைதத் அசிந்தயத்

இதி—இவ்வாறு; ஸ்வானாம்—அவரது பக்தர்கள்; ஸ:—அவர்; பகவான்—முழுமுதற்கடவுள்; விஜ்ஞாய—அறிந்து கொண்டு; அகில-த்ருக்—எல்லாவற்றையும் காணவல்ல; ஸ்வயம்—தம்முள்; ஸங்கல்ப—அவர்கள் கற்பனை செய்த விருப்பம்; ஸித்தயே—உணர்வதற்காக; தேஷாம்—அவர்களின்; க்ருபயா—கருணையுடன்; ஏதத்—இவ்வாறு (பின்வரும் சுலோகத்தில் உள்ளவாறு); அசிந்தயத்—எண்ணினார்.

எல்லாவற்றையும் காணவல்லவர் ஆதலினால் முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர் ஆயர்கள் தம் மனதில் எண்ணியதை அறிந்து கொண்டார். அவர்களது விருப்பத்தினை நிறைவேற்றுவதின் மூலம் அவர்களுக்குக் கருணைபுரிய விரும்பிய பகவான் பின்வருமாறு எண்ணினார்.

பதம் 10.28.13
ஜனோ வை லோக ஏதஸ்மின்ன் அவித்யா-காம-கர்மபி:
உச்சாவசாஸு கதிஷீ ந வேத ஸ்வாம் கதிம் ப்ரமன்

ஜன—மக்கள்; வை—நிச்சயமாக; லோக—உலகில்; ஏதஸ்மின்—இந்த; அவித்யா—ஞானமின்றி; காம—ஆசைகளின் காரணமாக; கர்மபி:—செயல்கள்; உச்சா—உயர்ந்த; அவசாஸு—மற்றும் தாழ்ந்த; கதிஷீ—இலக்குகள்; ந வேத—அறிந்து கொள்ளாமல்; ஸ்வாம்—அவனுக்குரிய; கதிம்—இலக்கு; ப்ரமன்—அலைகின்றனர்.

(பகவான் கிருஷ்ணர் எண்ணினார்) இவ்வுலகிலுள்ள மக்கள் தங்களது உயர்ந்த மற்றும் தாழ்ந்த இலக்குகளுக்கு இடையிலேயே அலைந்துகொண்டிருக்கின்றனர். இவ்விலக்குகளை அவர்கள் விருப்பித்திற்கேற்பச் செய்யும் செயல்களின் மூலமும் ஞானமின்மையாலுமே எய்தப் பெறுகின்றனர். இவ்வாறு மக்கள் தங்கள் உண்மையான இலக்கு எதுவென்று அறியாதிருக்கின்றனர்.

பதம் 10.28.14
இதி ஸஞ்சிந்த்ய பகவான் மஹா-காருணிகோ ஹரி:
தர்ஸயாம் ஆஸ லோகம் ஸ்வம் கோபானாம் தமஸ: பரம்

இதி—இவ்வார்த்தைகளினால்; ஸஞ்சிந்த்ய—தமக்குள் கருதிய; பகவான்—முழுமுதற்கடவுள்; மஹா-காருணிக—மகாக் கருணையுடையவர்; ஹரி:—பகவான் ஹரி; தர்ஸயாம் ஆஸ—காண்பித்தார்; லோகம்—லோகத்தினை (வைகுண்டம்); ஸ்வம்—அவரது; கோபானாம்—ஆயர்களுக்கு; தமஸ:—பௌதிக இருள்; பரம்—மேலே.

இவ்வாறு ஆழ்ந்து சிந்தித்து பெருங்கருணையுடைய முழுமுதற் கடவுள் பகவான் ஹரி, பெளதிக இருளுக்கு மேலேயுள்ள தமது உறைவிடத்தை ஆயர்களுக்குக் காட்டியருளினார்.

பதம் 10.28.15
ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் யத் ப்ரஹ்ம-ஜ்யோதி: ஸநாதனம்
யத் த்ஹி பஸ்யந்தி முனயோ குணாபாயே ஸமாஹிதா:

ஸத்யம்—அழிவற்ற; ஜ்ஞானம்—ஞானம்; அனந்தம்—அளவற்ற; யத்—இது; ப்ரஹ்ம—பரிபூரண; ஜ்யோதி:—ஜோதி; ஸநாதனம்—நித்தியமான; யத்—இது; ஹி—உண்மையில்; பஸ்யந்தி—காண்கின்றனர்; முனய—முனிவர்கள்; குண—ஜட இயற்கைக் குணங்கள்; அபாயே—அவை நீங்கும் பொழுது; ஸமாஹிதா:—சமாதிநிலையில் ஆழ்ந்து.

பகவான் கிருஷ்ணர் அளவற்றதும், உணர்வுடையதும், நித்தியமானதுமான அழிவற்ற ஆன்மீக ஜோதியைக் காட்டியருளினார். முனிவர்களின் உணர்வு ஜட இயற்கைக் குணங்களிலிருந்து விடுதலை பெறும் பொழுது, சமாதி நிலையில் அவர்கள் அந்த ஆன்மீகத் தோற்றத்தினைத் தரிசிக்கின்றனர்.

பதம் 10.28.16
தே து ப்ரஹ்ம-ஹ்ரதம் நீதா மக்னா: க்ருஷ்ணேன சோத்ருதா:
தத்ருஸீர் ப்ரஹ்மணோ லோகம் யத்ராக்ரூரோ ‘த்யகாத் புரா

தே—அவர்கள்; து—மற்றும்; ப்ரஹ்ம-ஹ்ரதம்—பிரம்மரதம் என்னும் குளத்திற்கு; நீதா:—அழைத்து வரப்பட்டு; மக்னா:—மூழ்கினர்; க்ருஷ்ணேன—கிருஷ்ணரால்; ச—மற்றும்; உத்த்ருதா:—வெளியே வந்தனர்; தத்ருஸீ:—அவர்கள் கண்டனர்; ப்ரஹமண:—முழுமெய்ப்பொருளின்; லோகம்—உன்னத லோகம்; யத்ர—இங்கே; அக்ருர:—அக்ரூரர்; அத்யகாத்—கண்டார்; புரா—முன்னர்.

பிரம்மரதம் என்னும் குளத்திற்கு ஆயர்களை பகவான் கிருஷ்ணர் அழைத்துவந்து, அதில் மூழ்கி அவர்களை மீண்டும் வெளிவரச் செய்தார். ஆயர்கள் முழுமெய்ப்பொருளின் உலகினைப் பார்த்த இந்த இடத்தில் இருந்துதான் அக்ரூரரும் ஆன்மீக உலகினைப் பார்த்தார்.

பதம் 10.28.17
நந்தாதயஸ் து தம் த்ருஷ்ட்வா பரமானந்த-ந்வ்ருதா:
க்ருஷ்ணம் ச தத்ரச் சந்தோபி: ஸ்தூயமானம் ஸீ-விஸ்மிதா:

நந்த-ஆதய:—நந்த மகாராஜாவின் தலைமையின் கீழுள்ள ஆயர்கள்; து—மற்றும்; தம்—அது; த்ருஷ்ட்வா—கண்டு; பரம—பரம; ஆனந்த—ஆனந்தம்; நிவ்ருதா:— அடைந்தனர்; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; ச—மற்றும்; தத்ர—அங்கே; சந்தோபி:—வேத மந்திரங்களினால்; ஸ்தூயமானம்—போற்றப்படுதல்; ஸீ—மிகவும்; விஸ்மிதா:—ஆச்சரியமடைந்தனர்.

நந்தமகாராஜாவும், ஆயர்களும் உன்னத உறைவிடத்தினைத் தரிசித்தவுடன் பரமானந்தம் எய்தினர். அங்கே கிருஷ்ணர் வீற்றிருக்க அவரை வேதங்களின் வடிவங்கள் போற்றித் துதிப்பதைக் கண்டு அவர்கள் மிகுந்த வியப்பெய்தினர்.


ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “கிருஷ்ணர் வருணனின் பிடியிலிருந்து நந்தமகாராஜாவை விடுவித்தல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தெட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare