அத்தியாயம் – 27
தேவேந்திரனும் அன்னை சுரபியும் வழிபடுதல்
பதம் 10.27.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கோவர்தன கிரியைத் தூக்கி நாசகார மழையிலிருந்து விரஜவாசிகளைப் பகவான் கிருஷ்ணர் காத்தபிறகு பசுக்களின் அன்னையான சுரபி தனது உலகிலிருந்து கிருஷ்ணரைத் தரிசிப்பதற்காக இந்திரனுடன் சேர்ந்து வந்தாள்.

பதம் 10.27.2 : பகவானிடம் தவறிழைத்துவிட்டதற்காக இந்திரன் பெரிதும் நாணினான். பகவானை ஒரு தனிமையான இடத்தில் சந்தித்து சூரியனைப் போன்று ஒளிரும் தனது கிரீடம் பகவானது தாமரைத் திருவடிகளில் பட அவரை வீழ்ந்து வணங்கினான்.

பதம் 10.27.3 : இந்திரன் இப்பொழுது சக்திவாய்ந்த கிருஷ்ணரின் உன்னத சக்தியைப் பற்றி கேட்ட, கண்ட பிறகு, மூவுலகங்களின் தலைவன் என்ற அவனது பொய் அகங்காரம் முறியடிக்கப்பட்டது. அவன் தன் இருகரங்களைக் குவித்துப் பணிவுடன் வணங்கியபடி பகவானிடம் இவ்வாறு கூறினான்.

பதம் 10.27.4 : தேவேந்திரன் கூறினான்: சத்துவ குணத்தின் வெளிப்பாடான உமது உன்னத வடிவம் எந்தவிதமான மாற்றமில்லாததும், ஞான ஒளியுடையதும், ரஜோ, தமோ குணங்கள் அற்றதுமாகும். மாயை மற்றும் அறியாமையினை அடிப்படையாகக் கொண்ட ஜட இயற்கையின் ஆற்றல் மிக்கப் பிரவாகம் உம்மிடம் வெளிப்படுவதில்லை.

பதம் 10.27.5 : பிறகு எவ்வாறு உம்மிடம் காமம், குரோதம், லோபம் என்னும் சாதாரண மனிதனின் அடையாளங்கள் இருக்க முடியும்? இவை ஒருவனின் முந்தைய பௌதிக வாழ்வின் ஈடுபாட்டின் காரணமாக உண்டாவதோடு அவன் மேலும் உலகியல் வாழ்வில் சிக்கிக் கொள்வதற்குக் காரணமும் ஆகின்றன. மேலும் தாங்கள் பரமபுருஷ பகவான் ஆதலினால் துஷ்டர்களை அழித்து தர்ம நெறிகளைக் காக்கின்றீர்.

பதம் 10.27.6 : இப்பிரபஞ்சத்தின் தந்தையும் ஆன்மீகக் குருவும், பரமநெறியாளரும் நீரே, கடப்பதற்கரிய காலமும் நீரே, பாவிகளின் நன்மைக்காக அவர்களைத் தண்டிப்பவரும் நீரே. உமது விருப்பத்திற்கேற்ப நீர் மேற்கொள்ளும் பல்வேறு அவதாரங்களிலும், தம்மை இவ்வுலகின் தலைவன் என்று கருதுபவர்களின் வீண் ஆணவத்தினை நீக்குவதற்காக உறுதியுடன் செயல்படுகின்றீர்.

பதம் 10.27.7 : தம்மை அப்பிரபஞ்சத்தின் தலைவர்களாகக் கருதும் என்னைப் போன்ற மூடர்கள் கூடக் காலத்திற்கும் அஞ்சாதவராக நீர் இருப்பதைக் காணும்பொழுது உடனடியாகத் தமது எண்ணத்தினை உதறித்தள்ளி நேரடியாக ஆன்மீக வளர்ச்சிப் பாதையினை மேற்கொள்கின்றனர். இவ்வாறு நீர் தீயவர்களையும் கூட அவர்களுக்கு உபதேசிப்பதின் மூலம் தண்டிக்கின்றீர்.

பதம் 10.27.8 : எனது ஆட்சி அதிகாரத்தின் ஆணவத்தில் அமிழ்ந்து, உமது மாண்பினை அறியாது உம்மிடம் தவறிழைத்து விட்டேன். ஒ, பிரபுவே என்னை மன்னித்தருள்வீராக. எனது புத்தி குழம்பி இருந்தது. அதனால் எனது உணர்வு மீண்டும் மாசு பெறாதிருப்பதாக.

பதம் 10.27.9 : ஓ, உன்னத பகவானே, இப்புவியின் பாரத்தினை அதிகரித்து இதற்குப் பல்வேறு இடையூறுகளைச் செய்யும் போர்வெறி பிடித்த தலைவர்களை அழிப்பதற்காக நீர் இவ்வுலகில் அவதரிக்கின்றீர். ஓ, பகவானே, அதே சமயம் நீர் உமது தாமரைத் திருவடிகளுக்கு நம்பிக்கையுடன் தொண்டு செய்பவர்களின் நன்மைக்காகவும் செயல்படுகின்றீர்.

பதம் 10.27.10 : முழுமுதற்கடவுளே, மகாத்மாவே, எங்கும் வியாபித்திருப்பவரே எல்லா உயிர்களின் இதயங்களிலும் இருப்பவரே! உமக்கு எனது வந்தனங்கள். யதுகுலத்தின் தலைவரான கிருஷ்ணரே, உமக்கு எனது வந்தனங்கள் உரித்தாகுக.

பதம் 10.27.11 : தமது பக்தர்களின் விருப்பங்களுக்கேற்ப உன்னத உடல்களை மேற்கொள்பவருக்கும், தூய உணர்வுடைய வடிவம் உடையவருக்கும், எல்லா உயிர்களுக்கும் வித்தாகவும், ஆத்மாவாகவும் இருக்கும் அவருக்கு நான் எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

பதம் 10.27.12 : போற்றுதற்குரிய பகவானே, எனது வேள்வி தடை செய்யப்பட்டது கண்டு அகந்தையின் காரணமாக நான் கடுஞ்சினங் கொண்டேன். அதனால் உமது ஆயர்குலத்தினைக் கடுமையான மழை மற்றும் சூறைக் காற்றினால் நான் அழித்துவிட முயன்றேன்

பதம் 10.27.13 : எனது ஆணவத்தினை அழித்து எனது முயற்சியினை (விருந்தாவனத்தினைத் தண்டித்தல்) தோல்வியுறச் செய்ததின் மூலம் ஓ, பகவானே, நீர் எனக்குக் கருணை காட்டியுள்ளீர். பரமபுருஷ பகவானும், ஆன்மீக குருவும் பரமாத்மாவும் ஆனவரே, உம்மைச் சரணடைவதற்காக இப்போது நான் வந்திருக்கின்றேன்.

பதம் 10.27.14 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இந்திரனால் இவ்வாறு போற்றப்பட்டவுடன் முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணர் புன்னகை புரிந்து மேகங்களின் ஒலியைப் போன்ற கம்பீரமான குரலில் பின்வருமாறு கூறினார்.

பதம் 10.27.15 : முழுமுதற்கடவுள் கூறினார்: அன்பிற்குரிய இந்திரனே, உன்மீது கொண்ட கருணையினாலேயே நான் உனக்குரிய யாகத்தினைத் தடுத்து நிறுத்தினேன். தேவலோகத்தின் தலைவன் என்னும் உனது செல்வத்தினால் நீ செருக்குற்றிருந்தாய். அதனால் நீ எப்போதும் என்னையே நினைத்திருக்க வேண்டும் என்று நான் உளம் கொண்டேன்.

பதம் 10.27.16 : தனது அதிகாரம் மற்றும் செல்வத்தினால் மதிமயங்கிக் கண்கள் குருடாகிப் போன ஒருவனால் அவனுக்குத் தண்டனை தருவதற்காக கையில் கண்டத்துடன் அவன் அருகில் நிற்கும் என்னைக் காண முடியாது. அவனது உண்மையான நலத்தினை நான் விரும்புவதினால் அவனது பௌதிக உயர்நிலையிலிருந்து அவனைப் பிடித்துக் கீழே தள்ளுகிறேன்.

பதம் 10.2717. : இந்திரனே! இப்போது நீ செல்லலாம். எனது கட்டளையினை நிறைவேற்றிக் கொண்டு உனக்கு அளிக்கப்பட்டிருக்கும் தேவலோகத் தலைவன் பதவியில் இருப்பாயாக. ஆனால் அதேசமயம் ஆணவம் இன்றி அறிவிலே தெளிவுடன் இருப்பீராக.

பதம் 10.27.18 : பிறகு அன்னை சுரபி தனது வாரிசுகளான பசுக்களுடன் சேர்ந்து பகவான் கிருஷ்ணருக்கு வந்தனம் செய்தாள். தனது முன்னே ஆயர்குலச் சிறுவனாக அமர்ந்திருக்கும் முழுமுதற்கடவுளிடம் அவள் மிகவும் மரியாதையுடன் அவரது கவனத்தினை அவர் தம்மீது வைக்குமாறு வேண்டிக் கொண்டாள்.

பதம் 10.27.19 : அன்னை சுரபி கூறினாள்: ஓ, கிருஷ்ணா, கிருஷ்ணா, மகா யோகியே! ஒ, இப்பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவும், ஆதாரமாகவும் இருப்பவரே! நீரே இவ்வுலகின் தலைவர், ஓ, குற்றமற்றவரே, உமது கருணையினாலேயே நாங்கள் உம்மை எமது தலைவராக அடையப் பெற்றிருக்கின்றோம்.

பதம் 10.27.20 : நாங்கள் வணங்கும் தெய்வம் நீரே. ஆகையினால் ஓ, பிரபஞ்ச நாதனே! நீர், பசுக்கள், அந்தணர்கள், தேவர்கள் மற்றும் முனிவர்கள் போன்ற எங்கள் அனைவருக்கும் இந்திரன் ஆவீராக.

பதம் 10.27.21 : பிரம்மதேவனின் கட்டளையின்படி ‘நீரே எமது இந்திரன்’ என்று முடிசூட்டுவதற்கான மங்கள நீராட்டினை நாங்கள் உமக்குச் செய்வோம். ஓ, பிரபஞ்சத்தின் ஆத்மாவே! பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காகவே நீர் இவ்வுலகில் அவதரித்திருக்கின்றீர்.

பதங்கள் 10.27.22 – 10.27.23 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு பகவான் கிருஷ்ணரை வேண்டிக் கொண்ட அன்னை சுரபி தனது பாலினால் அவருக்கு மங்கள நீராட்டு செய்வித்தாள். அதிதி மற்றும் பிற அன்னையர்களால் கட்டளையிடப்பட்ட இந்திரனும் ஆகாய கங்கையின் நீரைத் தனது வாகனமான ஐராவதம் என்னும் யானையின் தும்பிக்கையில் சுமந்து வரச் செய்து அந்நீரைக் கொண்டு பகவானுக்கு மங்கள நீராட்டு செய்வித்தான். இவ்வாறு தேவர்கள் மற்றும் மாமுனிவர்களின் துணையுடன் இந்திரன் தாஸார்ஹ குலத்தைச் சேர்ந்த பகவான் கிருஷ்ணருக்கு முடிசூட்டி அவருக்குக் கோவிந்தன் என்னும் நாமமும் அளித்தான்.

பதம் 10.27.24 : தும்புரு, நாரதர், மற்றும் பிற கந்தர்வர்கள் போன்றோர் வித்யாதரர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்களுடன் சேர்ந்து இவ்வுலகம் முழுவதையும் தூய்மை செய்யும், பகவான் ஹரியின் கீர்த்திகளை இசைப்பதற்கு அங்கே வந்து கூடினர். மேலும் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட தேவர்களின் மனைவியர் பகவானைக் கௌரவிக்கும் பொருட்டு அவ்விசைக்கேற்ப நர்த்தனமாடினர்.

பதம் 10.27.25 : மிகவும் முக்கியமான தேவர்கள் பகவானின் கீர்த்திகளைப் போற்றிப்பாடி அற்புத நறுமண மலர்களை அவரைச் சுற்றித் தூவினர். மூவுலகங்களும் பரம திருப்தியுற்றன. பசுக்கள் புவியின் மேற்பரப்பினைத் தமது பாலினால் நனைத்தன.

பதம் 10.27.26 : பல்வேறு வகையான இனிய சுவையுடைய ரஸங்களுடன் நதிகள் பெருக்கெடுத்து ஓடின. மரங்கள் தேனைப் பொங்கிப் பிரவகித்தன. உணவிற்கான தாவரங்கள் பயிர் செய்யாமலேயே விளைந்தன. மற்றும் மலைகள் தமக்குள்ளே மறைத்து வைத்திருந்த நவரத்தினங்களை அளித்தன.

பதம் 10.27.27 : ஓ, குருகுலத்தின் சிறந்த பரீக்ஷித்துவே! பகவான் கிருஷ்ணரின் மங்கள நீராட்டு விழாவினால், எல்லா உயிர்களும்! குறிப்பாக இயற்கையிலேயே கொடிய தன்மையுடைய உயிர்களுங்கூட முற்றிலும் பகைமை ஒழிந்தன.

பதம் 10.27.28 : பசுக்கள் மற்றும் ஆயர்குலத்தினரின் தலைவரான பகவான் கோவிந்தனை மங்கள நீராட்டிய பிறகு தேவேந்திரன் பகவானிடம் அனுமதி பெற்றுத் தேவர்களும், பிற மேன்மக்களும் பின் தொடரத் தனது தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare