அத்தியாயம் – 24
கோவர்தன கிரியை வழிபடுதல்
பதம் 10.24.1
ஸ்ரீ-ஸுக உவாச
பகவான் அபி தத்ரைவ பலதேவேன ஸம்யுத:
அபஸ்யன் நிவஸன் கோபான் இந்த்ர-யாக-க்ருதோத்யமான்

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பகவான்—முழுமுதற்கடவுள்; அபி—கூட; தத்ர-ஏவ—அதே இடத்தில்; பலதேவேன—பகவான் பலராமருடன்; ஸம்யுத:—சேர்ந்து; அபஸ்யத்—கண்டனர்; நிவஸன்—இருந்துகொண்டு; கோபன்—ஆயர்குலத்தார்; இந்த்ர—இந்திரனுக்கு; யாக—வேள்விசெய்வதற்காக; க்ருத—செய்து கொண்டிருந்தனர்; உத்யமான்—பெருமுயற்சிகள்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தமது சகோதரர் பலராமருடன் சேர்ந்து அதே இடத்தில் அமர்ந்து கொண்டு பகவான் கிருஷ்ணர், இந்திரனுக்கு வேள்வி செய்வதற்கான ஏற்பாடுகளில் ஆயர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்ததைக் கண்டார்.

பதம் 10.24.2
தத்-அபிஜ்ஞோ ‘பி பகவான் ஸர்வாத்மா ஸர்வ-தர்ஸன:
ப்ரஸ்ரயாவனதோ ‘ப்ருச்சத் வ்ருத்தான் நந்த-புரோகமான்

தத்-அபிஜ்ஞ:—அதைப் பற்றி நன்கு அறிந்து; அபி—இருந்த போதிலும்; பகவான்—பரமபுருஷ பகவான்; ஸர்வ-ஆத்மா—அனைவரின் இதயத்திலும் வீற்றிருக்கும் பரமாத்மா; ஸர்வ-தர்ஷண:—எல்லாம் அறிந்த முழுமுதற்கடவுள்; ப்ரஸ்ரய-அவனத:—பணிவுடன் தலைவணங்கி; அப்ருச்சத்—வினவினார்; வ்ருத்தான்—பெரியவர்களிடம்; நந்த-புர:-கமான்—நந்தமகராஜாவின் தலைமையின் கீழ் உள்ளவர்கள்.

எல்லாம் அறியவல்ல பரமாத்மா ஆதலினால் பரமபுருஷ பகவான் கிருஷ்ணர் என்ன நடக்கிறது என்பதை நன்கறிவார். இருந்தும் அவர் தமது தந்தை நந்த மகாராஜாவின் தலைமையின் கீழ் உள்ள பெரியவர்களிடம் மிக்க பணிவுடன் வினவினார்.

பதம் 10.24.3
கத்யதாம் மே பித: கோ ‘யம் ஸம்ப்ரமோ வ உபாகத:
கிம் பலம் கஸ்ய வோத்தேஸ: கேன வா ஸாத்யதே மக:

கத்யதாம்—விளக்கியருள்வீராக; மே—எனக்கு; பித:—தந்தையே; க:—என்ன; அயம்—இந்த; ஸம்ப்ரம:—பரபரப்பான செயல்கள்; வ:—தங்களிடம்; உபாகத:—வருதல்; கிம்—என்ன; பலம்—பலன்; கஸ்ய—யாருக்காக; வா—மற்றும்; உத்தேஸ:—பொருட்டு; கேன—எதற்காக; வா—மற்றும்; ஸாத்யதே—செய்யப்படுகிறது; மக:—இந்த வேள்வி.

(பகவான் கிருஷ்ணர் கூறினார்:) அன்புத் தந்தையே, எதற்காக இத்தனை பரபரப்புடன் செயல்படுகிறீர்கள்? இதனால் என்ன நன்மை? இது ஒரு வேள்விச் சடங்கானால் யாருடைய திருப்திக்காக இது செய்யப்படுகிறது? இதனைச் செய்வதனால் கிடைக்கும் பலன் என்ன?

பதம் 10.24.4
ஏதத் ப்ரூஹி மஹான்காமோ மஹ்யம் ஸுஜஸ்ரூஷவே பித:
ந ஹி கோப்யம் ஹி ஸாதூனாம் க்ருத்யம் ஸர்வாத்மானாம் இஹ
அஸ்தி அஸ்வ-பர-த்ருஷ்டீனாம் அமித்ரோதாஸ்த-வித்விஷாம்

ஏதத்—இந்த; ப்ரூஹி—கூறுவீராக; மஹான்—பெரிய; காம—விருப்பம்; மஹ்யம்—எனக்கு; ஸுஸ்ரூஷவே—முழு நம்பிக்கையுடன் கேட்கத் தயாராக இருக்கிறேன்; பித:—ஓ, தந்தையே; ந—இல்லை; ஹி—உண்மையில்; கோப்யம்—இரகசியமாக வைத்துக் கொள்வதற்கு; ஹி—உறுதியாக; ஸாதூனாம்—சாதுக்களின்; க்ருத்யம்—செயல்கள், ஸர்வ-ஆத்மனாம்—எல்லோரையும் சமமாகப் பார்ப்பவர்கள்; இஹ—இவ்வுலகில்; அஸ்தி—அங்கே; அஸ்வ-பர-த்ருஷ்டீனாம்—தங்களுக்குரியது, பிறர்க்குரியது என்று அவர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை; அமித்ர-உதாஸ்த-வித்விஷாம்—நண்பர்கள் என்றும் நடுநிலையாளர்கள் என்றும், பகைவர்கள் என்றும் அவர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.

ஓ, தந்தையே! அருள்கூர்ந்து உரைக்கவும். நான் அதனை அறிந்து கொள்ள பேராவலுடையவனாக இருக்கின்றேன். மேலும் அதனை நான் சிரத்தையுடனும் கேட்பேன். எல்லோரிடத்தும் சமபார்வையுடன், என்னுடையது, பிறருடையது என்னும் பேதம் இன்றியும், நண்பர்கள், பகைவர்கள், நடுநிலையாளர்கள் என்று வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையற்றவர்களாகவும் இருக்கும் சாதுக்கள் தம்மிடம் இரகசியங்களை மறைத்து வைத்துக் கொள்வதில்லை.

பதம் 10.24.5
உதாஸீனோ ‘ரி-வத் வர்ஜ்ய ஆத்ம-வத் ஸுஹ்ருத் உச்யதே

உதாஸீன:—வேறுபாடற்றவன்; அரிவத்—பகைவனைப் போன்று; வர்ஜ்ய:—தவிர்க்கப்படக் கூடியவனாவான்; ஆத்ம-வத்—தன்னைப் போன்று; ஸுஹ்ருத்—ஒரு நண்பன்; உச்யதே—கூறப்படுகிறது.

நடுநிலையாளனைப் பகைவனைப் போல் கருதி விலக்கி வைத்து விடலாம். ஆனால் ஒரு நண்பனை தன்னைப் போல் கருதி ஒருவன் நடத்துதல் வேண்டும்.

பதம் 10.24.6
ஜ்ஞாத்வாஜ்ஞாத்வா ச கர்மாணி ஜனோ ‘யம் அனுதிஷ்டதி
விதுஷ: கர்ம-ஸித்தி: ஸ்யாத் யதா நாவிதுஷோ பவேத்

ஜ்ஞாத்வா—அறிந்துகொண்டவர்கள்; அஜ்ஞாத்வா—அறிந்து கொள்ளாதவர்கள்; ச—மற்றும்; கர்மாணி—செயல்கள்; ஜன:—பொது மக்கள்; அயம்—இவை; அனுதிஷ்டதி—செய்கின்றனர்; விதுஷ:—ஞானமுடைய ஒருவன்; கர்ம-ஸித்தி:—செயலின் பலனை எய்துகிறான்; ஸ்யாத்—எழுகின்றது; யதா—போன்று; ந—இல்லை; அவிதுஷ—மூடன் ஒருவன்; பவேத்—உண்டாகின்றது.

இவ்வுலகிலுள்ள மக்கள் செயல்களைச் செய்யும் பொழுது சில சமயம் என்ன செய்கின்றோம் என்று அறிந்து செய்கின்றனர். சில சமயம் என்ன செய்கின்றோம் என்று அவர்கள் அறிவதில்லை. என்ன செய்கின்றோம் என்று அறிந்து செய்பவர்கள் தங்கள் செயல்களில் வெற்றியடைகின்றனர். மாறாக அறியாது செய்பவர்கள் தோல்வியடைகின்றனர்.

பதம் 10.24.7
தத்ர தாவத் க்ரியா-யோகோ பவதாம் கிம் விசாரித:
அத வா லௌகிகஸ் தன் மே ப்ருச்சத: ஸாது பண்யதாம்

தத்ர தாவத்—அப்படியென்றால்; க்ரியா-யோக:—இப்பலன்தரும் செயல்; பவதாம்—உங்களுடைய; கிம்—என்ன; விசாரித:—வேதங்களில் இருந்து அறிந்தால்; அத வா—அல்லது; லௌகிக:—சாதாரண மரபா; தத்—அது; மே—எனக்கு; ப்ருச்சத:—வினவுகின்ற; ஸாது—தெளிவாக; பண்யதாம்—விளக்கம் அளிக்க வேண்டும்.

அப்படியென்றால், உங்களுடைய சடங்குச் செயல்கள் என்னவென்று எனக்கு விளக்கியருள வேண்டும். இது வேதத்தினை அடிப்படையாகக் கொண்ட விழாவா அல்லது ஒரு சாதாரண சமூகத்தின் மரபுவழியாக வந்த ஒன்றா?

பதம் 10.24.8
ஸ்ரீ-நந்த உவாச
பர்ஜன்யோ பகவான் இந்த்ரோ மேகாஸ் தஸ்யாத்ம-மூர்தய:
தே ‘பிவர்ஷந்தி பூதானாம் ப்ரீணனம் ஜீவனம் பய:

ஸ்ரீ-நந்த: உவாச—ஸ்ரீ நந்தமகாராஜா கூறினார்; பர்ஜன்ய:—மழை; பகவான்—தேவர் தலைவன்; இந்த்ர:—இந்திரன்; மேகா:—மேகங்கள்; தஸ்ய—அவனது; ஆத்ம-மூர்தய:—தனித்தூதர்கள்; தே—அவை; அபிவர்ஷந்தி—நேரடியாக மழை பொழிகின்றன; பூதானாம்—எல்லா உயிர்வாழிகளுக்கும்; ப்ரீணனம்—நுகர்ச்சி; ஜீவனம்—உயிரளிக்கும் சக்தி; பய:—பால் (போன்று).

நந்த மகாராஜா பதில் கூறினார்: தேவர்களின் தலைவனான இந்திரன் மழைக்கு அதிபதியாவான். மேகங்கள் அவனது தூதர்கள் ஆகும். அவை நேரடியாக மழை பொழிகின்றன. அவையே எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியும் ஜீவனும் அளிக்கின்றன.

பதம் 10.24.9
தம் தாதோ வயம் அன்யே ச வார்முசாம் பதிம் ஈஸ்வரம்
த்ரவ்யைஸ் தத்-ரேதஸா ஸித்தைர் யஜந்தே க்ர துபிர் நரா:

தம்—அவரது; தாத—அன்புமைந்தனே; வயம்—நாம்; அன்யே—பிறர்; ச—மேலும்; வா:-முசாம்—மேகங்களின்; பதிம்—தலைவன்; ஈஸ்வரம்—சக்திமிக்க நெறியாளர் ஆவார்; த்ரவ்யை:—பல்வேறு பொருட்களுடன்; தத்-ரேதஸா—அவனுடைய நீர்வடிவ வெளிப்பாட்டினால்; ஸித்தை:—உண்டாக்கின்றது; யஜந்தே—அவர்கள் வழிபடுகின்றனர்; க்ரதுபி:—அக்னி வேள்விகளால்; நரா:—மனிதர்கள்.

நாம் மட்டுமல்ல அன்பு மைந்தனே! மழை பொழியும் மேகங்களுக்குத் தலைவனான இந்திரனைப் பிற மனிதர்களும் வழிபடுகின்றனர். அவனது மழையினால் விளையும் தானியங்களையும் பிற பொருட்களையும் நாம் அவனை வழிபட்டு அவனுக்கு அர்ப்பணிக்கின்றோம்.

பதம் 10.24.10
தச்-சேஷேணோபஜீவந்தி த்ரி-வர்க-பல ஹேதவே
பும்ஸாம் புருஷ-காராணாம் பர்ஜன்ய: பல பாவன:

தத்—அவ்வேள்வி; ஸேஷேண—அவிர்பாகத்தினால்; உபஜீவந்தி—அவர்கள் வாழ்க்கை ஜீவனம் நடத்துகின்றனர்; த்ரி-வர்க—மனித வாழ்வின் மூன்று குறிக்கோள்களை உடைய; (தர்மம், பொருளாதார வளர்ச்சி, புலனுகர்ச்சி); பலஹேதவே—பலனுக்காக; பும்ஸாம்—மனிதர்களுக்காக; புருஷ-காராணாம்—மனித முயற்சியில் ஈடுபடுதல்; பர்ஜன்ய:—தேவேந்திரன்; பலபாவன:—விரும்பிய பலன்களை எய்துவதற்காக வழிமுறைகள்.

இந்திரனுக்கு வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் நிவேதனங்களை ஏற்றுக் கொள்வதின் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கை ஜீவனத்தை நடத்துவதோடு, தர்மம், பொருளாதார வளர்ச்சி மற்றும் புலனுகர்ச்சி என்னும் மூன்று குறிக்கோள்களையும் எய்தப் பெறுகின்றனர். அதனால் கடினமாக உழைக்கும் மக்களின் பலன்களுக்குப் பொறுப்பாக தேவேந்திரனே விளக்குகின்றான்.

பதம் 10.24.11
ய ஏனம் விஸ்ருஜேத் தர்மம் பரம்பர்யாகதம் நர:
காமாத் த்வேஷாத் பயாத் லோபாத் ஸ வை நாப்னோதி ஸோபனம்

ய:—யாரேனும் ஒருவன்; ஏனம்—இந்த; விஸ்ருஜேத்—புறக்கணிப்பது; தர்மம்—தர்மநெறிகளை; பரம்பர்ய—பரம்பரையாக; ஆகதம்—பெறப்படுகின்றது; நர:—ஒருவன்; காமாத்—காமத்தின் காரணமாக; த்வேஷாத்—துவேஷத்தின் காரணமாக; பாயாத்—பயத்தின் காரணமாக; லோபாத்—பேராசையின் காரணமாக; ஸ:—அவன்; வை—நிச்சயமாக; ந அப்னோதி—அடைய முடியாது; ஸோபனம்—புண்ணியம்.

சமய தர்மம் என்பது வலிமையான மரபினை அடிப்படையாகக் கொண்டது. காமம், பகை, அச்சத்தின் காரணமாக யாரேனும் ஒருவன் தர்மத்தைப் புறக்கணித்தானென்றால் அவனது வாழ்க்கை ஒளி பெறுவதோ அல்லது நிறைவுபெறுவதோ இல்லை.

பதம் 10.24.12
ஸ்ரீ-ஸுக உவாச
வசோ நிஸம்ய நந்தஸ்ய ததான்யேஷாம் வ்ரஜௌகஸாம்
இந்த்ராய மன்யும் ஜனயன் பிதரம் ப்ராஹ கேஸல:

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; வச:—வார்த்தைகள்; நிஸம்ய—கேட்டு; நந்தஸ்ய—நந்தமகாராஜாவின்; ததா—மற்றும்; அன்யேஷாம்—பிறரின்; வ்ரஜ-ஓகஸாம்—விரஜத்தைச் சேர்ந்தவர்கள்; இந்த்ராய—இந்திரனிடத்தில்; மன்யும்—சினம்; ஜனயன்—உண்டாக்க; பிதரம்—தமது தந்தையிடம்; ப்ராஹ—கூறினார்; கேஸல:—பகவான் கிருஷ்ணர்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பகவான் கேசவன் (கிருஷ்ணர்) தமது தந்தை நந்தமகாராஜா மற்றும் விரஜத்தைச் சேர்ந்த பெரியவர்களிடமிருந்து இதனைக் கேட்டவுடன், தேவேந்திரனுக்கு சினம் உண்டாகும் வண்ணம் பின்வருமாறு கூறலுற்றார்.

பதம் 10.24.13
ஸ்ரீ-பகவான் உவாச
கர்மணா ஜாயதே ஜந்து:-கர்மணைவ ப்ரளீயதே
ஸுகம் து: கம் பயம் ஷேமம் கர்மனணவாபிபத்யதே

ஸ்ரீ-பகவான் உவாச—முழுமுதற்கடவுள் கூறினார்; கர்மணா—கர்மத்தின் பலனால்; ஜாயதே—பிறக்கிறான்; ஜந்து:—உயிர்வாழி; கர்மணா—கர்மத்தினால்; ஏவ—மட்டுமே; ப்ரளீயதே—அவன் அழிகிறான்; ஸுகம்—சுகம்; து:கம்—துக்கம்; பயம்—பயம்; ஷேமம்—பாதுகாப்பு; கர்மணா ஏவ—கர்மத்தினால் மட்டுமே; அபிபத்யதே—பெறப்படுகின்றன.

பகவான் கிருஷ்ணர் கூறினார்: கர்ம பலனால் மட்டுமே ஓர் உயிர் பிறக்கிறான். கர்மத்தினாலேயே அவன் அழியவும் செய்கிறான். கர்மத்தினாலேயே அவனது சுகம், துக்கம், அச்சம், பாதுகாப்பு உணர்வு போன்ற அனைத்தும் எய்தப்படுகின்றன.

பதம் 10.24.14
அஸ்தி சேத் ஈஸ்வர: கஸ்சித் பல-ரூபி அன்ய-கர்மணாம்
கர்தாரம் பஜதே ஸோ ‘பி ந ஹி அகர் து: ப்ரபுர் ஹிஸ:

அஸ்தி—அங்கே; சேத்—தற்சமயம்; ஈஸ்வர:—ஒரு பரம நெறியாளர்; கஸ்சித்—ஒருவர்; பல-ரூபி—பலன்களை அளிப்பவராக; அன்ய-கர்மனாம்—பிறருடைய செயல்களின்; கர்தாரம்—செயலைச் செய்பவன்; பஜதே—சார்ந்திருத்தல்; ஸ:—அவர்; அபி—கூட; ந—இல்லை; ஹி—உண்மையில்; அகர் து:—செயலைச் செய்யாத ஒருவனின்; ப்ரபு:—தலைவர்; ஹி—நிச்சயமாக; ஸ:—அவர்.

அவ்வாறு மற்றவர்களின் செயல்களுக்குப் பலன்தரக்கூடிய பரம நெறியாளர் ஒருவர் இருந்தாரென்றால் அவரும் செயலைச் செய்யும் ஒருவனைச் சார்ந்தே இருத்தல் வேண்டும். பலன்தரும் செயல்கள் செய்யப்படவில்லையென்றால் பிறகு அச்செயல்களுக்குப் பலன் அளிப்பவரைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

பதம் 10.24.15
கிம் இந்த்ரேணேஹ பூதானாம் ஸ்வ-ஸ்வ-கர்மானுவர்தினாம்
அனீஸேனான்யதா கர்தும் ஸ்வபாவ-விஹிதம் ந்ருணாம்

கிம்—என்ன; இந்த்ரேண—இந்திரனுடன்; இஹ—இங்கே; பூதானாம்—உயிர்வாழிகள்; ஸ்வ-ஸ்வ—அவரவர்க்குரிய; கர்ம—பலன் தரும் செயலின்; அனுவர்தினாம்—விளைவுகளை அனுபவிக்கின்றவர்கள்; அனீஸேன—(இந்திரன்) இயலாதவனாவான்; அன்யதா—இல்லையேல்; கர்தும்—செய்வதற்கு; ஸ்வபாவ—அவர்களின் பந்தப்பட்ட இயற்கையினால்; விஹிதம்—அது அடையப் பெறுகின்றது; ந்ருணாம்—மனிதர்களுக்கு.

இவ்வுலகிலுள்ள உயிர்வாழிகள் அவரவர் முன்பு செய்த செயல்களின் விளைவுகளைக் கட்டாயமாக அனுபவிக்குமாறு செய்யப்படுகின்றனர். அவர்களின் இயற்கைக்குப் பிறந்த ஊழ் என்னும் விதியினை மாற்ற இந்திரனாலும் முடியாது. பிறகு ஏன் மக்கள் அவனை வழிபட வேண்டும்?

பதம் 10.24.16
ஸ்வபாவ-தந்த்ரோ ஹிஜன: ஸ்வபாவம் அனுவர்ததே
ஸ்வபாவ-ஸ்தம் இதம் ஸர்வம் ஸ-தேவாஸுர-மானுஷம்

ஸ்வபாவ—அவனது பந்தப்பட்ட இயற்கை; தந்த்ர:—கட்டுப்பாட்டின் கீழ்; ஹி—உண்மையில்; ஜன:—ஒரு மனிதன்; ஸ்வபாவம்—அவனது இயற்கை; அனுவர்ததே—அவன் பின்பற்றுகிறான்; ஸ்வபாவ-ஸ்தம்—பந்தப்பட்ட எண்ணங்களின் அடிப்படையில்; இதம்—இவ்வுலகம்; ஸர்வம்—முழுவதும்; ஸ:—உடன்; தேவ—தேவர்கள்; அஸுர—அரக்கர்கள்; மானுஷம்—மற்றும் மனிதன்.

தனிப்பட்ட ஒவ்வொருவனும் அவனது தன்னியல்பான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறான். அதனால் அவன் அந்த இயற்கையினைப் பின்பற்ற வேண்டியவனாகிறான். இப்பிரபஞ்சம் முழுவதும், அதிலுள்ள தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் உயிர்களின் பந்தப்பட்ட இயற்கையின் அடிப்படையிலேயே இருக்கின்றது.

பதம் 10.24.17
தேஹான் உச்சாவசான் ஜந்து: ப்ராப்யோத்ஸ்ருஜதி கர்மணா
ஸத்ருர் மித்ரம் உதாஸீன: கர்மைவ குருர் ஈஸ்வர:

தேஹான்—பௌதிக உடல்கள்; உச்ச-அவசான்—உயர்ந்த மற்றும் தாழ்ந்த; ஜந்து:—கட்டுண்ட ஆத்மா; ப்ராப்ய—எய்துகின்றனர்; உத்ஸ்ருஜதி—துறக்கின்றனர்; கர்மணா—அவனது பௌதிகச் செயல்களின் விளைவுகளினால்; ஸத்ரு:—அவனது பகைவன்; மித்ரம்—நண்பன்; உதாஸீன:—நடுநிலையாளன்; கர்ம—பெளதிகச் செயல்; ஏவ—மட்டும்; குரு:—அவனது ஆன்மீகக்குரு; ஈஸ்வர:—அவனது தலைவன்.

ஆத்மா உயர்ந்த மற்றும் தாழ்ந்த பல்வேறு வகையான பெளதிக உடல்களை ஏற்றுக் கொள்வதற்கும் துறப்பதற்கும் ஒருவனது கர்மமே காரணமாகிறது. இக்கர்மமே அவனைப் பகைவனாகவும், நண்பனாகவும், நடுநிலையாளனாகவும், அவனது ஆன்மீககுருவாகவும் நெறிப்படுத்தும் தேவனாகவும் இருக்கின்றது.

பதம் 10.24.18
தஸ்மாத் ஸம்பூஜயேத் கர்ம ஸ்வபாவ-ஸ்த: ஸ்வ-கர்ம-க்ருத்
அஞ்ஜஸா யேன வர்தேத தத் ஏவாஸ்ய ஹி தைவதம்

தஸ்மாத்—ஆகையினால்; ஸம்பூஜயேத்—ஒருவன் முற்றிலும் வழிபட வேண்டும்; கர்ம—அவனுக்குரிய குறிப்பிட்ட கடமையினை; ஸ்வபாவ—அவனது சுய பந்தப்பட்ட இயற்கைக்குத் தொடர்புடைய நிலையில்; ஸ்த:—இருந்துகொண்டு; ஸ்வ-கர்ம—அவனுக்குரிய கடமை; க்ருத்—செய்து; அஞ்ஜஸா—இடையூறு இன்றி; யேன—அதன் மூலம்; வர்தேத—ஒருவன் வாழ்கிறான்; தத்—அது; ஏவ—உறுதியாக; அஸ்ய—அவனுடைய; ஹி—உண்மையில்; தைவதம்—வழிபடும் தெய்வமாகும்.

ஆகையினால் ஒருவன் மிகவும் அக்கறையுடன் கர்மத்தினை மட்டுமே வழிபட வேண்டும். ஒருவன் அவனது இயற்கைக்குத் தொடர்புடைய நிலையில் இருந்துகொண்டு அவனுக்குரிய கடமைகளைச் செய்தல் வேண்டும். அதன் மூலமாக நாம் நலமுடன் வாழலாம். ஆதலினால் அதுவே உண்மையில் நாம் வழிபடும் தெய்வமாகும்.

பதம் 10.24.19
ஆஜீவ்யைகதரம் பாவம் யஸ் த்வ் அன்யம் உபஜீவதி
ந தஸ்மாத் விந்ததே ஷேமம் ஜாரான் நாரி அஸதீ யதா

ஆஜீவ்ய—அவனது வாழ்வின் ஆதாரம்; ஏகதரம்—ஒன்று; பாவம்—உள்பொருள்; ய:—யார்; து—ஆனால்; அன்யம்—மற்றொன்றினை; உபஜீவதி—தஞ்சமடைதல்; ந—இல்லை; தஸ்மாத்—அதிலிருந்து; விந்ததே—நன்மை; ஷேமம்—உண்மையான நன்மை; ஜாராத்—கள்ளக் காதலன்; நாரீ—ஒருபெண்; அஸதீ—கற்பில்லாதவள்; யதா—போன்று.

நமது வாழ்விற்கு ஆதாரமாக ஒன்று இருந்து நாம் பிறிதொன்றினை அடைக்கலம் புகுந்தோமென்றால் உண்மையான நன்மையினை நாம் எவ்வாறு எய்த முடியும்? தனது கள்ளக் காதலனுடன் தொடர்பு கொண்டு எந்தவிதமான பயனும் அடையாத கற்பில்லாப் பெண்ணைப் போன்றவர்களாவோம் நாம்.

பதம் 10.24.20
வர்தேத ப்ரஹ்மணோ விப்ரோ ராஜன்யே ரக்ஷயா புவ:
வைஸ்யஸ் து வார்தயா ஜீவேச் சூத்ரஸ் து த்விஜ-ஸேவயா

வர்தேத—வாழ்கிறான்; ப்ரஹ்மணா—வேதங்களினால்; விப்ர:—அந்தணர்கள்; ராஜன்ய:—ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன்; ரக்ஷயா—பாதுகாப்பதினால்; புவ:—பூமியை; வைஸ்ய:—வைசியன்; து—மாறாக; வார்தயா—வணிகத்தினால்; ஜீவேத்—ஜீவிக்கிறான்; ஸூத்ர:—சூத்திரன்; து—மற்றும்; த்விஜ-ஸேவயா—இருபிறப்பாளரான அந்தணர்கள், சத்திரியர்கள், மற்றும் வைசியர்களுக்குச் சேவை புரிவதின் மூலம்.

வேதங்களைக் கற்பதினாலும், கற்பிப்பதினாலும் அந்தணனும், பூமியைக் காப்பதின் மூலம் அரசகுலத்தைச் சேர்ந்தவனும், வாணிகம் செய்வதின் மூலம் வைசியனும், இருபிறப்பாளர்களான இவ்வுயர் குலத்தினர்க்குத் தொண்டு செய்வதின்மூலம் சூத்திரனும் தனது வாழ்க்கையினை நடத்துகிறான்.

பதம் 10.24.21
க்ருஷி-வாணிஜ்ய-கோ-ரக்ஷா குஸீதம் தூர்யம் உச்யதே
வார்தா சதுர்-விதா தத்ர வயம் கோ-வ்ருத்தயோ அனிஸம்

க்ருஷி—விவசாயம்; வாணிஜ்ய—வணிகம்; கோ-ரக்ஷா—பசுக்களைப் பாதுகாத்தல்; குஸீதம்—நிதித்தொழில்; தூர்யம்—நான்கு; உச்யதே—கூறப்படுகிறது; வார்தா—சுதர்மம்; சதுர்:-விதா—நான்குவகை; தத்ர—இவற்றுள்; வயம்—நாம்; கோ-வ்ருத்தய—பசுக்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளோம்; அனிஸம்—இடைவிடாது.

வைசியருக்கான சுதர்மங்கள் நான்கு வகைப்படும் அவை: விவசாயம், வணிகம், பசுப்பாதுகாப்பு, மற்றும் நிதித் தொழில் என்பவையாகும். இவற்றுள் நாம் பசுக்களைப் பாதுகாக்கும் தொழிலில் எப்போதும் ஈடுபட்டிருக்கின்றோம்.

பதம் 10.24.22
ஸத்த்வம் ரஜஸ் தம இதி ஸ்திதி-உத்பத்தி-அந்த-ஹேதவ:
ரஜஸோத்பத்யதே விஸ்வம் அன்யோன்யம் விவிதம் ஜகத்

ஸத்த்வம்—சத்துவ குணம்; ரஜ:—ரஜோ குணம்; தம:—தமோகுணம்; இதி—இவ்வாறு; ஸ்திதி—காத்தல்; உத்பத்தி—படைத்தல்; அந்த—அழித்தல்; ஹேதவ:—காரணங்கள்; ரஜஸா—ரஜோ குணத்தினால்; உத்பத்யதே—உண்டானது; விஸ்வம்—இப்பிரபஞ்சம்; அன்யோன்யம்—ஆண் பெண் உறவினால்; விவிதம்—பல்வகை வேறுபாடுகள் உடையதாகிறது; ஜகத்—இவ்வுலகம்.

படைத்தல், காத்தல், அழித்தல் என்பவற்றுக்குக் காரணம் ஜட இயற்கையின் முக்குணங்களாகும். அவை சத்துவகுணம், ரஜோ குணம், மற்றும் தமோ குணம் ஆகும். குறிப்பாக ரஜோ குணத்தினால் இப்பிரபஞ்சம் படைக்கப்படுகிறது. பாலியல் உறவினால் அது பல்வகை வேறுபாடுகள் நிறைந்ததாகிறது.

பதம் 10.24.23
ரஜஸா சோதிதா மேகா வர்ஷந்தி அம்பூனி ஸர்வத:
ப்ரஜாஸ் தைர் ஏவ ஸித்யந்தி மஹேந்த்ர: கிம் கரிஷ்யதி

ரஜஸா—ரஜோகுணத்தினால்; சோதிதா:—தூண்டப்பெற்ற; மேகா:—மேகங்கள்; வ்ரஷந்தி—பொழிகின்றன; அம்பூனி—தமது நீரினை; ஸர்வத:—எங்கெங்கும்; ப்ரஜா:—மக்கள்; தை:—நீரினால்; ஏவ—மட்டும்; ஸித்யந்தி—தமது வாழ்க்கையினை நடத்துகின்றனர்; மஹா-இந்த்ர:—தேவேந்திரன்; கிம்—என்ன; கரிஷ்யதி—செய்யக் கூடும்.

ரஜோ குணத்தினால் தூண்டப்பெற்ற மேகங்கள் தம்மிடமுள்ள நீரை மழையாக எல்லாவிடங்களிலும் பொழிகின்றன. இம்மழையினால் எல்லா உயிர்களும் வாழ்வில் நன்மையடைகின்றன. இந்த ஏற்பாட்டில் தேவேந்திரனின் பங்கு என்ன இருக்கின்றது?

பதம் 10.24.24
ந ந: புரோ ஜனபதா ந க்ராமா ந க்ருஹா வயம்
வனௌகஸஸ் தாத நித்யம் வன-ஸைல-நிவாஸின:

ந—இல்லை; ந:—நமக்கு; புர:—நகரங்கள்; ஜன-பதா:—வளர்ச்சி பெற்ற குடியிருப்புக்கள் உள்ள இடம்; ந—இல்லை; க்ராமா:—கிராமங்கள்; ந—இல்லை; க்ருஹா:—நிரந்தர இல்லங்களில் வசிப்பதில்லை; வயம்—நாம்; வன-ஓகஸ:—வனங்களில் வாழ்கிறோம்; தாத—அன்புத் தந்தையே; நித்யம்—நித்தியமாக; வன—வனங்களில்; ஸைல—மலைகளில்; நிவாஸின:—வாழ்கின்றோம்.

அன்புத் தந்தையே! நமது இல்லங்கள் நகரங்களிலோ பட்டினங்களிலோ அல்லது கிராமங்களிலோ இல்லை. வனவாசிகளான நாம் எப்போதும் காடுகளிலும் மலைகளிலுமே வாழ்கின்றோம்.

பதம் 10.24.25
தஸ்மாத் கவாம் ப்ராஹ்மணானாம் அத்ரேஸ் சாரப்யதாம் மக:
ய இந்த்ர-யாக-ஸம்பாராஸ் தைர் அயம் ஸாத்யதாம் மக:

தஸ்மாத்—ஆகையினால்; கவாம்—பசுக்களின்; ப்ராஹ்மணானாம்—அந்தணர்களின்; அத்ரே:—மற்றும் மலையின் (கோவர்தனம்); ச—மற்றும்; ஆரப்யதாம்—நடக்கட்டும்; மக:—வேள்வி; யே—இவை; இந்த்ரயாக—இந்திர யாகத்திற்காக; ஸம்பாரா:—பொருட்கள்; தை:—அவற்றினால்; அயம்—இந்த; ஸாத்யதாம்—நடைபெறலாம்; மக:—வேள்வி;

ஆகையினால் பசுக்களுக்கும், அந்தணர்களுக்கும், கோவர்தனகிரிக்கும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் யாகத்தினைத் தொடங்குங்கள்! இந்திரனது யாகத்திற்காகச் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு இந்த யாகம் நடைபெறட்டும்.

பதம் 10.24.26
பச்யந்தாம் விவிதா: பாகா: ஸூபாந்தா: பாயஸாதய:
ஸம்யாவாபூப-ஸஷ்குல்ய: ஸர்வ-தோஹஸ் ச க்ருஹ்யதாம்

பச்யந்தாம்—உணவுகள் தயாராகட்டும்; விவிதா:—பல்வகை; பாகா:—வேகவைத்த உணவுகள்; ஸூப-அந்தா:—காய்கறிகளின் ரசத்தினால் ஆன திரவ உணவுகள்; பாயஸ-ஆதய:—பாயசம் போன்ற இனிப்பு வகைகள்; ஸம்யாவ-ஆபூப—வறுத்த, பொறித்த உணவு வகைகள்; ஸஷ்குல்ய:—இனிப்புப் பணியாரங்கள்; ஸர்வ—அனைத்தும்; தோஹ:—பசுவின் பாலைப் பயன்படுத்திச் செய்யப்படும் எல்லாவகையான உணவு வகைகளும்; ச—மற்றும்; க்ருஹ்யதாம்—எடுத்துக் கொள்ளப்படட்டும்.

இனிப்புப் பாயசத்திலிருந்து காய்கறிகளின் சாறுவரையிலான எல்லா வகையான உணவுகளும் தயாராகட்டும்! வறுத்துப் பொறித்த பல்வேறு வகையான அப்பம், பணியாரங்கள் போன்றவையெல்லாம் தயாராகட்டும். பாலைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவு வகைகளும் இந்த வேள்விக்குப் பயன்படுத்தப்படட்டும்.

பதம் 10.24.27
ஹூயந்தாம் அக்னயை: ஸம்யக் ப்ராஹ்மணைர் ப்ரஹ்ம-வாதிபி:
அன்னம் பஹு-குணம் தேப்யோ தேயம் வோ தேனு-தக்ஷிணா:

ஹூயந்தாம்—செய்யப்பட வேண்டும்; அக்னயை:—அக்கினி வேள்வி; ஸம்யக்—உரிய முறையில்; ப்ராஹ்மணை:—அந்தணர்களால்; ப்ரஹ்ம வாதிபி:—வேதங்களைக் கற்ற; அன்னம்—உணவு; பஹு-குணம்—நன்கு தயார் செய்யப்பட்ட; தேப்ய:—அவர்களுக்கு; தேயம்—அளிக்க வேண்டும்; வ:—உங்களால்; தேனு-தக்ஷிணா:—தட்சணையாக பசுக்களும், தானங்களும் அளித்தல் வேண்டும்.

வேத மந்திரங்களை நன்குணர்ந்த அந்தணர்களே யாக அக்னியை வளர்த்தல் வேண்டும். பிறகு நீங்கள் அப்புரோகிதர்களுக்கு நல்ல உணவளித்துப் பசுக்களையும், பிற பொருட்களையும் தட்சணையாக அளித்தல் வேண்டும்.

பதம் 10.24.28
அன்யேப்யஸ் சாஸ்வ-சாண்டாள-பதிதேப்யோ யதார்ஹத:
யவஸம் ச கவாம் தத்த்வா கிரயே தீயதாம் பலி:

அன்யேப்ய:—பிறருக்கு; ச—மற்றும்; ஆ-ஸ்வ-சண்டாள—கீழான நாய்களுக்கும், நாயைத்தின்னும் சண்டாளர்களுக்கும்; பதிதேப்ய:—இழிந்தவர்களுக்கும்; யதா—போன்று; அர்ஹத:—அவரவர்க்குரிய; யவஸம்—புல்; ச—மற்றும்; கவாம்—பசுக்களுக்கு; தத்த்வா—அளித்தல்; கிரயே—கோவர்தன கிரி என்னும் மலைக்கு; தீயதாம்—அளித்தல் வேண்டும்; பலி:—மரியாதைக்குரிய அர்ப்பணிப்புகள்.

இழிந்த நாய்கள் மற்றும் நாயைத்தின்னும் சண்டாளன் உள்ளிட்ட அனைவருக்கும் அவரவர்க்குரிய உணவினை அளித்து நீங்கள் பசுக்களுக்கும் புற்களைக் கொடுக்க வேண்டும். அடுத்தாற்போல் கோவர்தனகிரிக்கும் உங்களது மரியாதைகளை அர்ப்பணித்தல் வேண்டும்.

பதம் 10.24.29
ஸ்வ்-அலங்க்ருதா புக்தவந்த: ஸ்வ-அனுவிப்தா: ஸு-வாஸஸ:
ப்ரதக்ஷிணாம் ச குருத கோ-விப்ராவை-பர்வதான்

ஸு-அலங்க்ருதா:—அழகாக அலங்கரித்து; புக்தவந்த:—உங்களது திருப்திக்கு உண்டு; ஸு-அனுவிப்தா:—மங்களகரமான சந்தனத்தினைப் பூசி; ஸு-வாஸஸ:—புத்தாடைகள் அணிந்து; ப்ரதக்ஷிணாம்—வலம் வந்து; ச—மற்றும்; குருத—நீங்கள் செய்தல் வேண்டும்; கோ—பசுக்களின்; விப்ர—அந்தணர்கள்; அவை—யாகாக்னி; பர்வதான்—மற்றும் மலையினை (கோவர்தனகிரியை).

ஒவ்வொருவரும் தனது திருப்திக்கு உண்டு, கண்ணைக் கவரும் வண்ண உடைகள் அணிந்து, மங்களகரமான சந்தனத்தினை உடல் முழுதும் பூசி பசுக்களையும், அந்தணர்களையும், யாகாக்னியையும், கோவர்தனகிரியையும் வலம் வந்து வணங்க வேண்டும்.

பதம் 10.24.30
ஏதன் மம மதம் தாத க்ரியதாம் யதி ரோசதே
அயம் கோ-ப்ராஹ்மணாத்ரீணாம் மஹ்யம் ச தயிதோ மகோ:

ஏதத்—இந்த; மம—எனது; மதம்—கருத்தினை; தாத—ஓ, தந்தையே; க்ரியதாம்—செயல்படுத்தலாம்; யதி—அவ்வாறு செய்தால்; ரோசதே—அது மகிழ்ச்சியளிக்கும்; அயம்—இந்த; கோப்ராஹ்மண-அத்ரீணாம்—பசுக்களுக்கும், அந்தணர்களுக்கும், கோவர்தனகிரிக்கும்; மஹ்யம்—எனக்கு; ச—மற்றும்; தயித:—போற்றுதற்குரிய; மக:—வேள்வியாகும்.

ஓ, தந்தையே! இதுவே எனது கருத்தாகும். உங்களுக்கும் இது உடன்பாடென்றால் இதனைச் செய்வீராக. இப்படிச் செய்தால் அவ்வேள்வி, பசுக்களுக்கும், அந்தணர்களுக்கும், கோவர்தனகிரிக்கும் ஏன், எனக்கும் கூட மகிழ்ச்சியளிக்கும்.

பதம் 10.24.31
ஸ்ரீ-ஸுக உவாச
காலாத்மனா பகவதா ஸக்ர-தர்ப்ப-ஜிகாம்ஸயா
ப்ரோக்தம் நிஸம்ய நந்தாத்யா: ஸாத்வ் அக்ருஹ்ணந்த தத்-வச:

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; கால-ஆத்மனா—கால சக்தியாக வெளிப்படும்; பகவதா—முழுமுதற் கடவுளினால்; ஸக்ர—இந்திரனின்; தர்ப்ப—கர்வம்; ஜிகாம்ஸயா—அழிக்க விரும்பி; ப்ரோக்தம்—கூறியதை; நிஷம்ய—கேட்டு; நந்த-ஆத்யா:—நந்தமகாராஜாவும் ஆயர்குலப் பெரியவர்களும்; ஸாது—நன்று என்று; அக்ருஹ்ணந்த—அவர்கள் ஒத்துக் கொண்டனர்; தத்-வச:—அவர் வார்த்தைகளை.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கால சக்தியாக விளங்கும் பகவான் கிருஷ்ணர் தேவேந்திரனின் வீண் ஆணவத்தினை அழிக்க வேண்டுமென்று விரும்பினார். ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றினைக் கேட்ட நந்தமகாராஜாவும், ஆயர்குலப் பெரியவர்களும், அதில் உண்மை இருக்கிறது என்று அதனை அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

பதங்கள் 10.24.32 – 10.24.33
ததா ச வ்யதது: ஸர்வம் யதாஹ மதுஸூதன:
வாசயித்வா ஸ்வஸ்தி-அயனம் தத்-த்ரவ்யேண கிரி-த்விஜான்

உபஹ்ருத்ய பவீன் ஸம்யக் ஆத்ருதா யவஸம் கவாம்
கோ-தனானி புரஸ்க்ருத்ய கிரிம் சக்கு: ப்ரதக்ஷிணம்

ததா—இவ்வாறு; ச—மற்றும்; வ்யதது:—அவர்கள் நிறைவேற்றினர்; ஸர்வம்—எல்லாம்; யதா—போன்று; ஆஹ—அவர் கூறினார்; மதுஸூதன:—பகவான் கிருஷ்ணர்; வாசயித்வா—ஓதச் செய்தனர் (அந்தணர்கள்); ஸ்வஸ்தி-அயனம்—மங்களகரமான மந்திரங்கள்; தத்-த்ரவ்யேண—இந்திரனின் யாகத்திற்குரிய பொருட்கள்; கிரி—மலைக்கு; த்விஜான்—மற்றும் அந்தணர்களுக்கு; உபஹ்ருத்ய—அளித்தனர்; பவீன்—மரியாதைக்காக அளிக்கும் பரிசுகள்; ஸம்யக்—எல்லோரும் இணைந்து; ஆத்ருத:—மரியாதையுடன்; யவஸம்—பசும்புல்; கவாம்—பசுக்களுக்கு; கோ-தனானி—காளைகள், பசுக்கள் மற்றும் கன்றுகள்; புரஸ்க்ருத்ய—முன்னர் இட்டு; கிரிம்—மலையினை; சக்ரு:—அவர்கள் செய்தனர்; ப்ரதக்ஷிணம்—சுற்றிவலம் வந்தனர்.

மதுசூதனர் சொன்ன அனைத்தையும் ஆயர்குலத்தினர் அப்படியே நிறைவேற்றினர். புனித வேத மந்திரங்களை அந்தணர்களைக் கொண்டு ஓதச் செய்தனர். இந்திரனது வேள்விக்காக வைத்திருந்த பொருட்களை இவ்வேள்விக்குப் பயன்படுத்திக் கொண்டனர். கோவர்தனகிரிக்கும், அந்தணர்களுக்கும் மரியாதைகளை அர்ப்பணித்தனர். பசுக்களுக்குப் பசும்புற்களை வழங்கினர். பசுக்களையும், காளைகளையும் கன்றுகளையும் தம் முன்பாக நிறுத்தி அவர்கள் கோவர்தன கிரியைச் சுற்றி வலம் வந்தனர்.

பதம் 10.24.34
அநாம்ஸி அனடுத்-யுக்தானி தே சாருஹ்ய ஸ்வ்-அலங்க்ருதா:
கோப்யஸ் ச க்ருஷ்ண-வீர்யாணி காயந்த்ய: ஸ-த்விஜாஸிஷ:

அநாம்ஸி—வண்டிகள்; அனடுத்-யுக்தானி—எருதுகள் பூட்டப்பட்ட; தே—அவர்கள்; ச—மற்றும்; ஆருஹ்ய—பயணம் செய்து; ஸு-அலங்க்ருதா:—நன்கு அலங்கரித்து; கோப்ய:—கோபியர்கள்; ச—மற்றும்; க்ருஷ்ண-வீர்யாணி—பகவான் கிருஷ்ணரின் பெருமைகளை; காயந்த்ய:—பாடிக்கொண்டு; ஸ—ஒருங்கிணைந்து; த்விஜ—அந்தணர்களின்; ஆஸிஷ:—ஆசிகள்.

கண்ணைக்கவரும் வண்ணம் தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்ட கோபியர்கள் எருதுகள் பூட்டிய வண்டிகளில் அமர்ந்து கிருஷ்ணரின் பெருமைகளைப் பாடிக் கொண்டே சென்றனர். அவர்களின் பாடல் அந்தணர்களின் ஆசி உரைகளுடன் ஒன்றுகலந்தது.

பதம் 10.24.35
க்ருஷ்ண த்வ் அன்யதமம் ரூபம் கோப-விஸ்ரம்பணம் கத:
ஸைலோ ‘ஸ்மீதி ப்ருவன் பூரி பலிம் ஆதத் ப்ருஹத்-வபு:

க்ருஷ்ண:—பகவான் கிருஷ்ணர்; து—பிறகு; அன்யதமம்—பிறிதொரு; ரூபம்—உன்னத வடிவம்; கோப-விஸ்ரம்-பணம்—ஆயர்களிடத்தில் நம்பிக்கை உண்டாக்குவதற்காக; கத:—மேற்கொண்டார்; ஸைல:—மலை; அஸ்மி—நான்; இதி—இவ்வார்த்தைகள்; ப்ருவான்—கூறியபடி; பூரி—ஏராளமான; பலிம்—நிவேதனங்களை; ஆதத்—அவர் உண்டார்; ப்ருஹத்-வபு:—அவரது பெரிய வடிவத்தில்.

ஆயர்குலத்தாரிடம் நம்பிக்கை வரச்செய்வதற்காக கிருஷ்ணர் பிறகு முன்பு எங்கும் காணப்படாத ஒரு பெரிய வடிவத்தினை மேற்கொண்டார். “நான்தான் கோவர்தன கிரி” என்று கூறியபடியே அவர் நிவேதனங்கள் அனைத்தையும் உண்டார்.

பதம் 10.24.36
தஸ்மை நமோ வ்ரஜ-ஜனை: ஸஹ சக்ர ஆத்மனாத்மனே
அஹோ பஸ்யத ஸைலோ ‘ஸௌ ரூபீ நோ ‘னுக்ரஹம்வ்யதாத்

தஸ்மை—அவருக்கு; நம:—வந்தனங்கள்; வ்ரஜ-ஜனை:—விரஜத்திலுள்ள மக்களுடன்; ஸஹ—இணைந்து; சக்ரே—அவர் செய்தார்; ஆத்மனா—அவரால்; ஆத்மனே—அவருக்கு; ஆஹோ—ஆ!; பஸ்யத—சற்றுப் பாருங்கள்; ஸைல:—மலை; அஸௌ—இந்த; ரூபீ—தனிப்பட்டுத் தோன்றிய; ந:—நமக்கு; அனுக்ரஹம்-கருணை; வ்யதாத்—செய்கிறது.

விரஜத்திலுள்ள மக்களுடன் சேர்ந்து பகவானும் கோவர்தனகிரியின் வடிவத்தினை வழிபட்டார். இவ்வாறு அவரே வந்தனங்கள் செய்து அதனை உண்மை என நிரூபித்தார். பிறகு அவர் “சற்று இம்மலையினைப் பாருங்கள், அது தானே தனது வடிவில் நம் கண் முன் தோன்றி நமக்கு கருணை செய்கிறது” என்று கூறினார்.

பதம் 10.24.37
ஏஷோ ‘வஜானதோ மர்த்யான் காம-ரூபீ வனௌகஸ:
ஹந்தி ஹி அஸ்மை நமஸ்யாம: ஸர்மணே ஆத்மனோ கவாம்

ஏஷ:—இது; அவஜானத்:—புறக்கணித்தவர்களை; மர்த்யான்—மரணத்திற்குரியவர்கள்; காம-ரூபீ—அது விரும்பும் வடிவத்தினை எடுக்கும் (மலையின் மீது வாழும் பாம்புகள் போன்ற); வன-ஓகஸ:—வனத்தில் வாழ்பவர்கள்; ஹந்தி—அழிக்கும்; ஹி—உறுதியாக; அஸ்மை—அவருக்கு; நமஸ்யாம:—நாம் வந்தனம் செய்வோம்; ஸர்மனே—பாதுகாப்பிற்காக; ஆத்மன:—நமக்காகவும்; கவாம்—பசுக்களுக்காகவும்.

இக்கோவர்தன மலை தான் விரும்பும் எந்த வடிவத்தையும் எடுப்பார். தன்னைப் புறக்கணிக்கும் இக்காட்டில் உள்ளோரை அழிப்பார். ஆகையினால் நாம், நமது மற்றும் நமது பசுக்களின் நலனுக்காக அவருக்கு வந்தனம் செய்வோம்.

பதம் 10.24.38
இதி அத்ரி-கோ-த்விஜ-மகம் வாஸுதேவ-ப்ரசோதிதா:
யதா விதாய தே கோபா ஸஹ-க்ருஷ்ணா வ்ரஜம் யயு:

இதி—இவ்வாறு; அத்ரி—கோவர்தன கிரிக்கு; கோ—பசுக்கள்; த்விஜ—அந்தணர்கள்; மகம்—பெரிய வேள்வி; வாஸுதேவ—பகவான் கிருஷ்ணரால்; ப்ரசோதிதா:—தூண்டினார்; யதா—முறையாக; விதாய—நிறைவேற்றி; தே—அவர்கள்; கோபா:—கோபாலர்கள்; ஸஹ-க்ருஷ்ணா:—பகவான் கிருஷ்ணருடன் சேர்ந்து; வ்ரஜம்—விரஜத்திற்கு; யயு:—அவர்கள் சென்றனர்.

இவ்வாறு ஆயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் பகவான் வாசுதேவரால் தூண்டப்பெற்று, கோவர்தனகிரிக்குரிய வேள்வியினை முறையாக நிறைவேற்றிவிட்டுப் பசுக்களுடனும், அந்தணர்களுடனும், பகவான் கிருஷ்ணருடனும் சேர்ந்து தங்களது கிராமமான விரஜத்திற்குத் திரும்பினர்.

ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “கோவர்தன கிரியை வழிபடுதல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்து நான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare