அத்தியாயம் – 24
கோவர்தன கிரியை வழிபடுதல்
பதம் 10.24.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தமது சகோதரர் பலராமருடன் சேர்ந்து அதே இடத்தில் அமர்ந்து கொண்டு பகவான் கிருஷ்ணர், இந்திரனுக்கு வேள்வி செய்வதற்கான ஏற்பாடுகளில் ஆயர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்ததைக் கண்டார்.

பதம் 10.24.2 : எல்லாம் அறியவல்ல பரமாத்மா ஆதலினால் பரமபுருஷ பகவான் கிருஷ்ணர் என்ன நடக்கிறது என்பதை நன்கறிவார். இருந்தும் அவர் தமது தந்தை நந்த மகாராஜாவின் தலைமையின் கீழ் உள்ள பெரியவர்களிடம் மிக்க பணிவுடன் வினவினார்.

பதம் 10.24.3 : (பகவான் கிருஷ்ணர் கூறினார்:) அன்புத் தந்தையே, எதற்காக இத்தனை பரபரப்புடன் செயல்படுகிறீர்கள்? இதனால் என்ன நன்மை? இது ஒரு வேள்விச் சடங்கானால் யாருடைய திருப்திக்காக இது செய்யப்படுகிறது? இதனைச் செய்வதனால் கிடைக்கும் பலன் என்ன?

பதம் 10.24.4 : ஓ, தந்தையே! அருள்கூர்ந்து உரைக்கவும். நான் அதனை அறிந்து கொள்ள பேராவலுடையவனாக இருக்கின்றேன். மேலும் அதனை நான் சிரத்தையுடனும் கேட்பேன். எல்லோரிடத்தும் சமபார்வையுடன், என்னுடையது, பிறருடையது என்னும் பேதம் இன்றியும், நண்பர்கள், பகைவர்கள், நடுநிலையாளர்கள் என்று வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையற்றவர்களாகவும் இருக்கும் சாதுக்கள் தம்மிடம் இரகசியங்களை மறைத்து வைத்துக் கொள்வதில்லை.

பதம் 10.24.5 : நடுநிலையாளனைப் பகைவனைப் போல் கருதி விலக்கி வைத்து விடலாம். ஆனால் ஒரு நண்பனை தன்னைப் போல் கருதி ஒருவன் நடத்துதல் வேண்டும்.

பதம் 10.24.6 : இவ்வுலகிலுள்ள மக்கள் செயல்களைச் செய்யும் பொழுது சில சமயம் என்ன செய்கின்றோம் என்று அறிந்து செய்கின்றனர். சில சமயம் என்ன செய்கின்றோம் என்று அவர்கள் அறிவதில்லை. என்ன செய்கின்றோம் என்று அறிந்து செய்பவர்கள் தங்கள் செயல்களில் வெற்றியடைகின்றனர். மாறாக அறியாது செய்பவர்கள் தோல்வியடைகின்றனர்.

பதம் 10.24.7 : அப்படியென்றால், உங்களுடைய சடங்குச் செயல்கள் என்னவென்று எனக்கு விளக்கியருள வேண்டும். இது வேதத்தினை அடிப்படையாகக் கொண்ட விழாவா அல்லது ஒரு சாதாரண சமூகத்தின் மரபுவழியாக வந்த ஒன்றா?

பதம் 10.24.8 : நந்த மகாராஜா பதில் கூறினார்: தேவர்களின் தலைவனான இந்திரன் மழைக்கு அதிபதியாவான். மேகங்கள் அவனது தூதர்கள் ஆகும். அவை நேரடியாக மழை பொழிகின்றன. அவையே எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியும் ஜீவனும் அளிக்கின்றன.

பதம் 10.24.9 : நாம் மட்டுமல்ல அன்பு மைந்தனே! மழை பொழியும் மேகங்களுக்குத் தலைவனான இந்திரனைப் பிற மனிதர்களும் வழிபடுகின்றனர். அவனது மழையினால் விளையும் தானியங்களையும் பிற பொருட்களையும் நாம் அவனை வழிபட்டு அவனுக்கு அர்ப்பணிக்கின்றோம்.

பதம் 10.24.10 : இந்திரனுக்கு வேள்விகளில் அர்ப்பணிக்கப்படும் நிவேதனங்களை ஏற்றுக் கொள்வதின் மூலம் மக்கள் தங்கள் வாழ்க்கை ஜீவனத்தை நடத்துவதோடு, தர்மம், பொருளாதார வளர்ச்சி மற்றும் புலனுகர்ச்சி என்னும் மூன்று குறிக்கோள்களையும் எய்தப் பெறுகின்றனர். அதனால் கடினமாக உழைக்கும் மக்களின் பலன்களுக்குப் பொறுப்பாக தேவேந்திரனே விளக்குகின்றான்.

பதம் 10.24.11 : சமய தர்மம் என்பது வலிமையான மரபினை அடிப்படையாகக் கொண்டது. காமம், பகை, அச்சத்தின் காரணமாக யாரேனும் ஒருவன் தர்மத்தைப் புறக்கணித்தானென்றால் அவனது வாழ்க்கை ஒளி பெறுவதோ அல்லது நிறைவுபெறுவதோ இல்லை.

பதம் 10.24.12 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பகவான் கேசவன் (கிருஷ்ணர்) தமது தந்தை நந்தமகாராஜா மற்றும் விரஜத்தைச் சேர்ந்த பெரியவர்களிடமிருந்து இதனைக் கேட்டவுடன், தேவேந்திரனுக்கு சினம் உண்டாகும் வண்ணம் பின்வருமாறு கூறலுற்றார்.

பதம் 10.24.13 : பகவான் கிருஷ்ணர் கூறினார்: கர்ம பலனால் மட்டுமே ஓர் உயிர் பிறக்கிறான். கர்மத்தினாலேயே அவன் அழியவும் செய்கிறான். கர்மத்தினாலேயே அவனது சுகம், துக்கம், அச்சம், பாதுகாப்பு உணர்வு போன்ற அனைத்தும் எய்தப்படுகின்றன.

பதம் 10.24.14 : அவ்வாறு மற்றவர்களின் செயல்களுக்குப் பலன்தரக்கூடிய பரம நெறியாளர் ஒருவர் இருந்தாரென்றால் அவரும் செயலைச் செய்யும் ஒருவனைச் சார்ந்தே இருத்தல் வேண்டும். பலன்தரும் செயல்கள் செய்யப்படவில்லையென்றால் பிறகு அச்செயல்களுக்குப் பலன் அளிப்பவரைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

பதம் 10.24.15 : இவ்வுலகிலுள்ள உயிர்வாழிகள் அவரவர் முன்பு செய்த செயல்களின் விளைவுகளைக் கட்டாயமாக அனுபவிக்குமாறு செய்யப்படுகின்றனர். அவர்களின் இயற்கைக்குப் பிறந்த ஊழ் என்னும் விதியினை மாற்ற இந்திரனாலும் முடியாது. பிறகு ஏன் மக்கள் அவனை வழிபட வேண்டும்?

பதம் 10.24.16 : தனிப்பட்ட ஒவ்வொருவனும் அவனது தன்னியல்பான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறான். அதனால் அவன் அந்த இயற்கையினைப் பின்பற்ற வேண்டியவனாகிறான். இப்பிரபஞ்சம் முழுவதும், அதிலுள்ள தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் உயிர்களின் பந்தப்பட்ட இயற்கையின் அடிப்படையிலேயே இருக்கின்றது.

பதம் 10.24.17 : ஆத்மா உயர்ந்த மற்றும் தாழ்ந்த பல்வேறு வகையான பெளதிக உடல்களை ஏற்றுக் கொள்வதற்கும் துறப்பதற்கும் ஒருவனது கர்மமே காரணமாகிறது. இக்கர்மமே அவனைப் பகைவனாகவும், நண்பனாகவும், நடுநிலையாளனாகவும், அவனது ஆன்மீககுருவாகவும் நெறிப்படுத்தும் தேவனாகவும் இருக்கின்றது.

பதம் 10.24.18 : ஆகையினால் ஒருவன் மிகவும் அக்கறையுடன் கர்மத்தினை மட்டுமே வழிபட வேண்டும். ஒருவன் அவனது இயற்கைக்குத் தொடர்புடைய நிலையில் இருந்துகொண்டு அவனுக்குரிய கடமைகளைச் செய்தல் வேண்டும். அதன் மூலமாக நாம் நலமுடன் வாழலாம். ஆதலினால் அதுவே உண்மையில் நாம் வழிபடும் தெய்வமாகும்.

பதம் 10.24.19 : நமது வாழ்விற்கு ஆதாரமாக ஒன்று இருந்து நாம் பிறிதொன்றினை அடைக்கலம் புகுந்தோமென்றால் உண்மையான நன்மையினை நாம் எவ்வாறு எய்த முடியும்? தனது கள்ளக் காதலனுடன் தொடர்பு கொண்டு எந்தவிதமான பயனும் அடையாத கற்பில்லாப் பெண்ணைப் போன்றவர்களாவோம் நாம்.

பதம் 10.24.20 : வேதங்களைக் கற்பதினாலும், கற்பிப்பதினாலும் அந்தணனும், பூமியைக் காப்பதின் மூலம் அரசகுலத்தைச் சேர்ந்தவனும், வாணிகம் செய்வதின் மூலம் வைசியனும், இருபிறப்பாளர்களான இவ்வுயர் குலத்தினர்க்குத் தொண்டு செய்வதின்மூலம் சூத்திரனும் தனது வாழ்க்கையினை நடத்துகிறான்.

பதம் 10.24.21 : வைசியருக்கான சுதர்மங்கள் நான்கு வகைப்படும் அவை: விவசாயம், வணிகம், பசுப்பாதுகாப்பு, மற்றும் நிதித் தொழில் என்பவையாகும். இவற்றுள் நாம் பசுக்களைப் பாதுகாக்கும் தொழிலில் எப்போதும் ஈடுபட்டிருக்கின்றோம்.

பதம் 10.24.22 : படைத்தல், காத்தல், அழித்தல் என்பவற்றுக்குக் காரணம் ஜட இயற்கையின் முக்குணங்களாகும். அவை சத்துவகுணம், ரஜோ குணம், மற்றும் தமோ குணம் ஆகும். குறிப்பாக ரஜோ குணத்தினால் இப்பிரபஞ்சம் படைக்கப்படுகிறது. பாலியல் உறவினால் அது பல்வகை வேறுபாடுகள் நிறைந்ததாகிறது.

பதம் 10.24.23 : ரஜோ குணத்தினால் தூண்டப்பெற்ற மேகங்கள் தம்மிடமுள்ள நீரை மழையாக எல்லாவிடங்களிலும் பொழிகின்றன. இம்மழையினால் எல்லா உயிர்களும் வாழ்வில் நன்மையடைகின்றன. இந்த ஏற்பாட்டில் தேவேந்திரனின் பங்கு என்ன இருக்கின்றது?

பதம் 10.24.24 : அன்புத் தந்தையே! நமது இல்லங்கள் நகரங்களிலோ பட்டினங்களிலோ அல்லது கிராமங்களிலோ இல்லை. வனவாசிகளான நாம் எப்போதும் காடுகளிலும் மலைகளிலுமே வாழ்கின்றோம்.

பதம் 10.24.25 : ஆகையினால் பசுக்களுக்கும், அந்தணர்களுக்கும், கோவர்தனகிரிக்கும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் யாகத்தினைத் தொடங்குங்கள்! இந்திரனது யாகத்திற்காகச் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு இந்த யாகம் நடைபெறட்டும்.

பதம் 10.24.26 : இனிப்புப் பாயசத்திலிருந்து காய்கறிகளின் சாறுவரையிலான எல்லா வகையான உணவுகளும் தயாராகட்டும்! வறுத்துப் பொறித்த பல்வேறு வகையான அப்பம், பணியாரங்கள் போன்றவையெல்லாம் தயாராகட்டும். பாலைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவு வகைகளும் இந்த வேள்விக்குப் பயன்படுத்தப்படட்டும்.

பதம் 10.24.27 : வேத மந்திரங்களை நன்குணர்ந்த அந்தணர்களே யாக அக்னியை வளர்த்தல் வேண்டும். பிறகு நீங்கள் அப்புரோகிதர்களுக்கு நல்ல உணவளித்துப் பசுக்களையும், பிற பொருட்களையும் தட்சணையாக அளித்தல் வேண்டும்.

பதம் 10.24.28 : இழிந்த நாய்கள் மற்றும் நாயைத்தின்னும் சண்டாளன் உள்ளிட்ட அனைவருக்கும் அவரவர்க்குரிய உணவினை அளித்து நீங்கள் பசுக்களுக்கும் புற்களைக் கொடுக்க வேண்டும். அடுத்தாற்போல் கோவர்தனகிரிக்கும் உங்களது மரியாதைகளை அர்ப்பணித்தல் வேண்டும்.

பதம் 10.24.29 : ஒவ்வொருவரும் தனது திருப்திக்கு உண்டு, கண்ணைக் கவரும் வண்ண உடைகள் அணிந்து, மங்களகரமான சந்தனத்தினை உடல் முழுதும் பூசி பசுக்களையும், அந்தணர்களையும், யாகாக்னியையும், கோவர்தனகிரியையும் வலம் வந்து வணங்க வேண்டும்.

பதம் 10.24.30 : ஓ, தந்தையே! இதுவே எனது கருத்தாகும். உங்களுக்கும் இது உடன்பாடென்றால் இதனைச் செய்வீராக. இப்படிச் செய்தால் அவ்வேள்வி, பசுக்களுக்கும், அந்தணர்களுக்கும், கோவர்தனகிரிக்கும் ஏன், எனக்கும் கூட மகிழ்ச்சியளிக்கும்.

பதம் 10.24.31 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கால சக்தியாக விளங்கும் பகவான் கிருஷ்ணர் தேவேந்திரனின் வீண் ஆணவத்தினை அழிக்க வேண்டுமென்று விரும்பினார். ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றினைக் கேட்ட நந்தமகாராஜாவும், ஆயர்குலப் பெரியவர்களும், அதில் உண்மை இருக்கிறது என்று அதனை அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

பதங்கள் 10.24.32 – 10.24.33 : மதுசூதனர் சொன்ன அனைத்தையும் ஆயர்குலத்தினர் அப்படியே நிறைவேற்றினர். புனித வேத மந்திரங்களை அந்தணர்களைக் கொண்டு ஓதச் செய்தனர். இந்திரனது வேள்விக்காக வைத்திருந்த பொருட்களை இவ்வேள்விக்குப் பயன்படுத்திக் கொண்டனர். கோவர்தனகிரிக்கும், அந்தணர்களுக்கும் மரியாதைகளை அர்ப்பணித்தனர். பசுக்களுக்குப் பசும்புற்களை வழங்கினர். பசுக்களையும், காளைகளையும் கன்றுகளையும் தம் முன்பாக நிறுத்தி அவர்கள் கோவர்தன கிரியைச் சுற்றி வலம் வந்தனர்.

பதம் 10.24.34 : கண்ணைக்கவரும் வண்ணம் தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்ட கோபியர்கள் எருதுகள் பூட்டிய வண்டிகளில் அமர்ந்து கிருஷ்ணரின் பெருமைகளைப் பாடிக் கொண்டே சென்றனர். அவர்களின் பாடல் அந்தணர்களின் ஆசி உரைகளுடன் ஒன்றுகலந்தது.

பதம் 10.24.35 : ஆயர்குலத்தாரிடம் நம்பிக்கை வரச்செய்வதற்காக கிருஷ்ணர் பிறகு முன்பு எங்கும் காணப்படாத ஒரு பெரிய வடிவத்தினை மேற்கொண்டார். “நான்தான் கோவர்தன கிரி” என்று கூறியபடியே அவர் நிவேதனங்கள் அனைத்தையும் உண்டார்.

பதம் 10.24.36 : விரஜத்திலுள்ள மக்களுடன் சேர்ந்து பகவானும் கோவர்தனகிரியின் வடிவத்தினை வழிபட்டார். இவ்வாறு அவரே வந்தனங்கள் செய்து அதனை உண்மை என நிரூபித்தார். பிறகு அவர் “சற்று இம்மலையினைப் பாருங்கள், அது தானே தனது வடிவில் நம் கண் முன் தோன்றி நமக்கு கருணை செய்கிறது” என்று கூறினார்.

பதம் 10.24.37 : இக்கோவர்தன மலை தான் விரும்பும் எந்த வடிவத்தையும் எடுப்பார். தன்னைப் புறக்கணிக்கும் இக்காட்டில் உள்ளோரை அழிப்பார். ஆகையினால் நாம், நமது மற்றும் நமது பசுக்களின் நலனுக்காக அவருக்கு வந்தனம் செய்வோம்.

பதம் 10.24.38 : இவ்வாறு ஆயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் பகவான் வாசுதேவரால் தூண்டப்பெற்று, கோவர்தனகிரிக்குரிய வேள்வியினை முறையாக நிறைவேற்றிவிட்டுப் பசுக்களுடனும், அந்தணர்களுடனும், பகவான் கிருஷ்ணருடனும் சேர்ந்து தங்களது கிராமமான விரஜத்திற்குத் திரும்பினர்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare