அத்தியாயம் – 19
காட்டுத் தீயை விழுங்குதல்

பதம் 10.19.1
ஸ்ரீ-ஸுக உவாச
க்ரீடாஸக்தேஷு கோபேஷு தத்-காவோ தூர-சாரிணீ:
ஸ்வைரம் சரந்த்யோ விவிஸுஸ் த்ருண-லோபேன கஹ்வரம்

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; க்ரீடா—தமது விளையாட்டில்; ஆஸக்தேஷு—அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த பொழுது; கோபேஷு—கோபாலர்கள்; தத்-காவ:—அவர்கள் பசுக்கள்; தூர-சாரிணீ:—வெகு தூரத்திற்குச் சென்றன; ஸ்வைரம்—சுதந்திரமாக; சரந்த்ய:—மேய்ந்துகொண்டு; விவிஸு:—அவை புகுந்தன; த்ருண—புல்தேடி; லோபேன—ஆசை கொண்டு; கஹ்வரம்—ஒரு அடர்ந்த காட்டிற்குள்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஆயர்குலச் சிறுவர்கள் தம்மை மறந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்த பொழுது அவர்கள் பசுக்கள் வெகு தூரத்திற்குச் சென்று விட்டன. தம்மை யாரும் கவனியாத போது அவை புல்லைத் தேடிக் காட்டின் அடர்ந்த பகுதிக்குள் சென்றுவிட்டன.

பதம் 10.19.2
அஜா காவோ மஹிஷ்யஸ் ச நிர்விஸந்த்யோ வனாத் வனம்
ஈஸீ காடவீம் நிர்விவிஸு: க்ரந்தந்த்யோ தாவ-தர்ஷிதா:

அஜா:—ஆடுகள்; காவ:—பசுக்கள்; மஹிஷ்ய:—எருமைகள்; ச—மற்றும்; நிர்விஷந்த்ய:—நுழைந்தன; வனாத்—ஒரு காட்டிலிருந்து; வனம்—மற்றொரு காட்டிற்கு; ஈஸுகா-அடவீம்—மூங்கில் காடு; நிர்விவிஸு:—அவை புகுந்தன; க்ரந்தந்த்ய:—அலறிக் கொண்டு; தாவ—ஒரு காட்டுத் தீயின் காரணமாக; தர்ஷிதா:—தாகம்.

ஆடுகளும், பசுக்களும், எருமைகளும், ஒரு பெரிய காட்டிலிருந்து, மற்றொரு காட்டிற்குள் புகுந்து இறுதியில் மூங்கில் மரங்கள் நிறைந்த பகுதியினை அடைந்தன. அருகில் எரிந்து கொண்டிருந்த காட்டுத் தீயின் காரணமாக அவற்றிற்கு நா வறட்சி ஏற்பட்டு அவை தாகத்தில் தவித்தன. அதனால் அவை துன்பம் தாளாது பெருங்குரலெடுத்து அழுதன.

பதம் 10.19.3
தே ‘பஸ்யந்த: பஸூன் கோபா: க்ருஸ்ண-ராமாதயஸ் ததா
ஜாதானுதாபா ந விதுர் விசின்வந்தோ கவாம் கதிம்

தே—அவர்கள்; அபஸ்யந்த:—காணாது; பஸூன்—விலங்குகளை; கோபா:—கோபாலர்கள்; க்ருஷ்ண-ராம-ஆதய:—கிருஷ்ணர் மற்றும் பலராமர் தலைமையில் உள்ளவர்கள்; ததா—பிறகு; ஜாத-அனுதாபா:—அனுதாபங் கொண்டு; ந விது:—அவர்கள் அறியவில்லை; விசின் வந்த:—தேடிக் கொண்டு; கவாம்—பசுக்களை; கதிம்—வழியில்.

தங்கள் கண்முன்பு பசுக்கள் இல்லாததைக் கண்ட கிருஷ்ணரும், ராமரும், அவர்களது ஆயர்குல நண்பர்களும், அவற்றைப் புறக்கணித்தமைக்காக மிக்க மன வருத்தமுற்றனர். அச்சிறுவர்கள் நாலாபுறமும் தேடினர். ஆனால் அவை எங்கு சென்றன என்பதை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

பதம் 10.19.4
த்ருணைஸ் தத்-குர-தச்-சின்னைர் கோஷ்-பதைர் அங்கிதைர் கவாம்
மார்கம் அன்வகமன் ஸர்வே நஷ்டா ஜீவ்யா விசேதஸ:

த்ருணை:—புற்களின் அடையாளங்களினால்; தத்—அப்பசுக்களின்; குர—குளம்புகளினால்; தத்—மற்றும் பற்கள்; சின்னை:—அவை கடிபட்டிருப்பதை; கோ:-பதை:—குளம்படித் தடங்கள்; அங்கிதை:—(நிலத்தின் சில இடங்களில்) அவை பதிந்திருந்தன; கவாம்—பசுக்களின்; மார்கம்—பாதை; அன்வகமன்—அவர்கள் பின்பற்றிச் சென்றனர்; ஸர்வே—அனைவரும்; நஷ்ட-ஆஜீவ்யா:—தங்கள் வாழ்க்கையினையே இழந்தவர்களாக; விசேதஸ:—கவலையில்.

பிறகு அச்சிறுவர்கள், பசுக்கள் பாதையில் விட்டுச் சென்ற குளம்படித் தடங்களைக் கொண்டும், அவை கால்களால் மிதித்தும், பற்களால் கடித்தும் விட்டுச் சென்ற புற்களின் அடையாளத்தைக் கொண்டும் அவற்றைத் தேடத் தொடங்கினார். ஆயர்குலச் சிறுவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையினையே இழந்துவிட்டவர்களாக பெருந் துன்பத்தில் ஆழ்ந்தனர்.

பதம் 10.19.5
முஞ்ஜாடவ்யாம் ப்ரஷ்ட-மார்கம் க்ரந்தமானம் ஸ்வ-கோதனம்
ஸம்ப்ராப்ய த்ருஷிதா: ஸ்ராந்தாஸ் ததஸ் தே ஸன்ன்யவர்தயன்

முஞ்ஜா-அடவ்யாம்—முஞ்ஜா வனத்தில்; ப்ரஷ்ட-மார்கம்—வழி தவறிய; க்ரந்தமானம்—அழுதுகொண்டு; ஸ்வ—தமது; கோ-தனம்—பசுக்கள் (மற்றும் பிற விலங்குகள்); ஸம்ப்ராப்ய—கண்டு; த்ருஷிதா:—தாகத்துடன் இருந்த; ஸ்ராந்தா:—களைப்புற்று; தத:—பின்னர்; தே—அவர்கள் (ஆயர்குலச் சிறுவர்கள்); ஸன்ன்யவர்தயன்—அனைவரும் திரும்பி வந்தனர்.

இறுதியில் முஞ்ஜாவனத்தில், ஆயர்குலச் சிறுவர்கள் தமது உயிரினும் மேலான பசுக்கள், வழி தவறி வந்து அழுதுகொண்டு நிற்பதைக் கண்டனர். பிறகு அச்சிறுவர்கள் மிகுந்த களைப்புடனும், தாகத்துடனும் அப்பசுக்களை வீட்டுக்குச் செல்லும் பாதையில் ஓட்டிச் சென்றனர்.

பதம் 10.19.6
தா ஆஹுதா பகவதா மேக-கம்பீரயா கிரா
ஸ்வ-நாம்னாம் நினதம் ஸ்ருத்வா ப்ரதிநேது: ப்ரஹர்ஷிதா:

தா:—அவை; ஆஹுதா:—அழைக்கப்பட்டவுடன்; பகவதா—முழுமுதற் கடவுளால்; மேக-கம்பீரயா—மேகங்கள் போன்று பெருத்த ஓசையுடன்; கிரா—அவரது குரல் ஒலி; ஸ்வ-நாம்னாம்—அவற்றிற்குரிய பெயர்களில்; நினதம்—ஒலி; ஸ்ருத்வா—கேட்டு; ப்ரதிநேது:—அவை பதிலளித்தன; ப்ரஹரிஸிதா:—மிக்க மகிழ்ச்சியுடன்.

மேகங்கள் ஒலிப்பன போன்று உரத்த குரலில் முழுமுதற் கடவுள் அவ்விலங்குகளை அழைத்தார். தமது பெயர்களைச் சொல்லி அழைப்பதைக் கேட்டவுடன் அப்பசுக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் பகவானை நோக்கி பதிலுக்கு ஒலி எழுப்பின.

பதம் 10.19.7
தத: ஸமந்தாத் தவ-தூமகேதுர்
யத்ருச்சயாபூத் க்ஷய-க்ருத் வனௌகஸாம்
ஸமீரித: ஸாரதினோல்பணோல்முகைர்
விலேலிஹான: ஸ்திர-ஜங்கமான் மஹான்

தத:—பிறகு; ஸமந்தாத்—எல்லா பக்கங்களிலும்; தவ-தூமகேது:—ஒரு பயங்கரக் காட்டுத்தீ; யத்ருச்சயா—திடீரென்று; அபூத்—தோன்றியது; க்ஷய-க்ரத்—அழிப்பதுபோல் அச்சுறுத்தி; வன-ஓகஸாம்—அக்காட்டில் இருந்த அனைத்தையும்; ஸமீரித:—செலுத்தப்படும்; ஸாரதினா—காற்று என்னும் அதன் சாரதியால்; உல்பண—பயங்கரமான; உல்முகை:—எரிநட்சத்திரம் போன்ற தீப்பொறிகளுடன்; விலேலிஹான:—நாவினை நீட்டியது; ஸ்திர-ஜங்கமான்—அசையும் அசையா உயிர்கள் அனைத்தையும் நோக்கி; மஹான்—மிகப் பெரிய.

அப்பொது திடீரென்று காட்டிலுள்ள எல்லா உயிர்களையும் அழித்து விடுவதுபோல் அச்சுறுத்தும் பயங்கர காட்டுத் தீ எல்லாப் பக்கங்களிலும் தோன்றியது. ஒரு ரத சாரதியைப் போல் காற்று அத்தீயை முன்னோக்கி வேகமாகச் செலுத்தியது. எரிமீனைப் போன்று தீப்பொறிகள் நாலா திசைகளிலும் சிதறின. உண்மையில் அப்பயங்கரத் தீ தனது நாக்குகளை அசையும், அசையா உயிர்கள் அனைத்தையும் நோக்கி நீட்டியது.

பதம் 10.19.8
தம் ஆபதந்தம் பரிதோ தவாக்னிம்
கோபாஸ் ச கவா: ப்ரஸமீக்ஷ்ய பீதா:
ஊகஸ் ச க்ருஷ்ணம் ஸ-பலம் ப்ரபன்னா
யதா ஹரிம் ம்ருத்யு-பயார்திதா ஜனா:

தம்—அது; ஆபதந்தம்—அவர்களை நோக்கி; பரித:—எல்லாப் பக்கங்களிலும்; தவ-அக்னிம்—காட்டுத் தீ; கோபா:—ஆயர்குலச் சிறுவர்கள்; ச—மற்றும்; காவ:—பசுக்கள்; ப்ரஸமீக்ஷ்ய—கூர்மையாகக் கவனித்து; பீதா:—அச்சத்துடன்; ஊக:—அவர்கள் கூறினர்; ச—மற்றும்; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; ஸு-பலம்—மற்றும் பகவான் பலராமர்; ப்ரபன்னா:—தஞ்சம் புகுந்தது; யதா—போன்று; ஹரிம்—முழுமுதற் கடவுள்; ம்ருத்யு—மரணத்தின்; பய—பயத்தினால்; அர்திதா:—துன்புற்ற; ஜனா:—மனிதர்கள்.

பசுக்களும், ஆயர்குலச் சிறுவர்களும் நாலாபக்கங்களிலும் காட்டுத் தீயால் தாம் தாக்கப்படுவது கண்டு மிகுந்த அச்சத்திற்காளாயினர். மரணத்திற்கு அஞ்சுபவர்கள் எவ்வாறு முழுமுதற் கடவுளைச் சரணடைவார்களோ அதுபோல் அச்சிறுவர்கள் கிருஷ்ணரையும், பலராமரையும் சரணடைந்தனர். அச்சிறுவர்கள் அவர்களிடம் பின்வருமாறு கூறினர்.

பதம் 10.19.9
கிருஷ்ண கிருஷ்ண மஹா வீர ஹே ராமாமோக-விக்ரம தாவாக்னினா தஹ்யமானான் ப்ரபன்னாம்ஸ் த்ராதும் அர்ஹத:

க்ருஷ்ண க்ருஷ்ண—ஓ, கிருஷ்ணா, கிருஷ்ணா; மஹா-வீர—ஓ, மகா வீரரே; ஹே ராம—ஓ ராமா; அமோக-விக்ரம—உமது வீரம் ஒரு நாளும் தோற்பதில்லை; தாவ-அக்னினா—காட்டுத் தீயால்; தஹ்யமானான்—எரிக்கப்படுபவர்கள்; ப்ரபன்னாம்ஸ்—சரணடைந்தவர்கள்; த்ராதும்-அர்ஹத:—காத்தருள்வீராக.

(ஆயர்குலச் சிறுவர்கள் கூறினர்:) ஓ, கிருஷ்ணா! கிருஷ்ணா! ஆற்றல் மிக்கவரே, தோல்வியடையாத வீரமுடைய ஓ, ராமா! காட்டுத் தீக்கு அஞ்சி உனை வந்து சரணடைந்திருக்கும் உங்கள் பக்தர்களைக் காத்தருள்வீராக.

பதம் 10.19.10
நூனம் த்வத்-பாந்தவா: க்ருஷ்ண ந சார்ஹந்தி அவஸாதிதும்
வயம் ஹி ஸர்வ-தர்ம-ஜ்ஞ த்வன்-நாதாஸ் த்வத்-பராயணா:

நூனம்—நிச்சயமாக; த்வத்—உமது; பாந்தவா:—நண்பர்கள்; க்ருஷ்ண—எங்கள் அன்பிற்குரிய ஸ்ரீ கிருஷ்ணரே; ந—இல்லை; ச—மற்றும்; அர்ஹந்தி—உரியது; அவஸாதிதும்—அழிவிற்கு; வயம்—நாம்; ஹி—மேலும்; ஸர்வ-தர்ம-ஜ்ஞ—ஓ, அனைத்து உயிர்களின் இயற்கையினையும் நன்கறிந்தவரே; த்வத்-நாதாஸ்—உம்மை எங்கள் இறைவனாகக் கொண்டவர்கள்; த்வத்-பராயணா:—உம்மைப் பணிந்தவர்கள்.

கிருஷ்ணா! உமது உயிர் நண்பர்கள் அழிந்துவிடக்கூடாது. ஒ, எல்லா உயிர்களின் இயற்கையினையும் நன்கறிந்தவரே, உம்மை எமது தெய்வமாக நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். மேலும் உம்மைச் சரண் புகுந்திருக்கும் ஆத்மாக்கள் நாங்கள்.

பதம் 10.19.11
ஸ்ரீ-ஸுக உவாச
வசோ நிஸம்ய க்ருபணம் பந்தூனாம் பகவான் ஹரி:
நிமீலயத மா பைஷ்ட லோசனானீதி அபாஷத

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; வச:—வார்த்தைகள்; நிஸம்ய—கேட்டு; க்ருபணம்—இரங்கத்தக்க; பந்தூனாம்—அவரது நண்பர்களின்; பகவான்—முழுமுதற் கடவுள்; ஹரி:—ஹரி; நிமீலயத—மூடுவீராக; மா பைஷ்ட—அஞ்ச வேண்டாம்; லோசனானி—உங்கள் கண்களை; இதி—இவ்வாறு; அபாஷத—அவர் கூறினார்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மனதினை உருகச் செய்யும், தமது நண்பர்களின் இவ்வார்த்தைகளைக் கேட்ட முழுமுதற் கடவுs; அவர்களிடம் “உங்கள் கண்களை சிறிது மூடுங்கள், அஞ்ச வேண்டாம்” என்று கூறினார்.

பதம் 10.19.12
ததேதி மீலிதாக்ஷேஷூ பகவான் அக்னிம் உல்பணம்
பீத்வா முகேன தான் க்ருச்ச்ராத் யோகாதீஸோ வ்யமோசயத்

ததா—அப்படியே செய்கிறோம்; இதி—இவ்வாறு கூறி; மீலித—மூடினர்; அக்ஷேஷூ—அவர்களது விழிகளை; பகவான்—பரமபுருஷ பகவான்; அக்னிம்—நெருப்பு; உல்பணம்—பயங்கர; பீத்வா—பருகினார்; முகேன—அவரது வாயினால்; தான்—அவர்களை; க்ருச்ச்ராத்—ஆபத்திலிருந்து; யோக-ஆதீஸ:—யோக சக்திகளின் நாயகர்; வ்யமோசயத்—காப்பாற்றினார்.

“அப்படியே செய்கிறோம்” என்று பதிலளித்த சிறுவர்கள் உடனே தமது விழிகளை மூடிக் கொண்டனர். பிறகு யோக சக்திகளிள் நாயகரான பரமபுருஷ பகவான் தனது வாயினைத் திறந்து அப்பயங்கரக் காட்டுத்தீயை முழுவதும் விழுங்கி தமது நண்பர்களை ஆபத்திலிருந்து காத்தருளினார்.

பதம் 10.19.13
ததஸ் ச தே ‘க்ஷீணி உன்மீல்ய புனர் பாண்டீரம் ஆபிதா:
நிஸம்ய விஸ்மிதா ஆஸன்ன் ஆத்மானம் காஸ் ச மோசிதா:

தத:—பிறகு; ச—மற்றும்; தே—அவர்கள்; அக்ஷீணி—அவர்களது விழிகள்; உன்மீல்ய—திறந்தனர்; புன:—மீண்டும்; பாண்டீரம்—பாண்டீரரிடம்; ஆபிதா:—கொண்டு வரப்பட்டனர்; நிஸம்ய—பார்த்தனர்; விஸ்மிதா:—ஆச்சரியத்தில் மூழ்கினர்; ஆஸன்—அவர்கள் இருந்தனர்; ஆத்மானம்—தாமும்; கா:—பசுக்களும்; ச—மற்றும்; மோசிதா:—காப்பாற்றப்பட்டு.

ஆயர்குலச் சிறுவர்கள் மீண்டும் தமது விழிகளைத் திறந்து பார்த்த போது அவர்களும், பசுக்களும் பயங்கரக் காட்டுத் தீயிலிருந்து காப்பாற்றப்பட்டு பாண்டீர மரத்தின் அடியில் இருப்பதைக் கண்டு பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

பதம் 10.19.14
க்ருஷ்ணஸ்ய யோக-வீர்யம் தத் யோக-மாயானுபாவிதம்
தாவாக்னேர் ஆத்மன: க்ஷேமம் வீக்ஷ்ய தே மேனிரே ‘மரம்

க்ருஷ்ணஸ்ய—பகவான் கிருஷ்ணரின்; யோக-வீர்யம்—யோக சக்தி; தத்—அது; யோக-மாயா—அவரது அகச் சக்தியின் மாயையினால்; அனுபாவிதம்—நிகழ்ந்தது; தாவ—அக்னே:—காட்டுத் தீயிலிருந்து; ஆத்மன:—அவர்களின்; க்ஷேமம்—காத்தது; வீக்ஷ்ய—கண்டு; தே—அவர்கள்; மேனிரே—நினைத்தனர்; அமரம்—ஒரு தேவர் என்று.

பகவானது அகச் சக்தியின் வெளிப்பாடான யோக சக்தியால் காட்டுத்தீயிலிருந்து தாம் காப்பாற்றப்பட்டதைக் கண்ட ஆயர்குலச் சிறுவர்கள் கிருஷ்ணர் நிச்சயம் ஒரு தேவராகத் தான் இருத்தல் வேண்டும் என்று கருதினர்.

பதம் 10.19.15
கா: ஸன்னிவர்த்ய ஸாயாஹ்னே ஸஹ-ராமோ ஜனார்தன:
வேணும் விரணயன் கோஷ்டம் அகாத் கோபைர் அபிஷ்டுத:

கா:—பசுக்கள்; ஸன்னிவர்த்ய—திரும்பினர்; ஸாய-அஹ்னே—மாலைக் கருக்கலில்; ஸஹ-ராம:—பலராமருடன் சேர்ந்து; ஜனார்தன:—ஸ்ரீ கிருஷ்ணர்; வேணும்—அவரது புல்லாங்குழல்; விரணயன்—அருமையாக இசை எழுப்பிக் கொண்டு; கோஷ்டம்—ஆயர்பாடிக்கு; அகாத்—அவர் சென்றார்; கோபை:—கோபாலர்களுடன்; அபிஷ்டுத:—போற்றப்பட்டு.

மாலைக் கருக்கல் ஆனவுடன் கிருஷ்ணரும், பலராமரும் பசுக்களை ஒட்டிக்கொண்டு தமது இல்லத்திற்குப் புறப்பட்டனர். ஆயர்குலச் சிறுவர்கள் அவரது புகழ் பாடிக் கொண்டு உடன் வர, கிருஷ்ணர் தமது புல்லாங்குழலிலிருந்து இனிய கீதம் இசைத்தவாறே ஆயர்பாடியினை அடைந்தார்.

பதம் 10.19.16
கோபீனாம் பரமானந்த ஆஸீத் கோவிந்த-தர்ஷனே
க்ஷணம் யுக-ஸதம் இவ யாஸாம் யேன விநாபவத்

கோபீனாம்—இளங்கோபியர்களுக்கு; பரம-ஆனந்த:—பரமானந்தம்; அஸீத்—எழுந்தது; கோவிந்த-தர்ஷனே—கோவிந்தனைக்கண்டு; க்ஷணம்—ஒருக் கணம்; யுக-ஸதம்—நூறு யுகங்கள்; இவ—போன்று; யாஸாம்—அவர்களுக்கு; யேன—அவர் (கிருஷ்ணர்); விநா—இன்றி; அபவத்—ஆனது.

கோவிந்தன் இல்லம் திரும்பியதைக் கண்ட இளங்கோபியர்கள் பரமானந்தம் அடைந்தனர். அவரை ஒரு கணம் பிரிந்தால் கூட அது அவர்களுக்கு நூறு யுகங்கள் போன்றதாகும்.

ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “காட்டுத் தீயை விழுங்குதல்” எனும் தலைப்பை கொண்ட பத்தொன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare