பெரியாழ்வார் திருமொழி
(வண்ணமாடங்கள்)
வண்ண மாடங்கள் சூழ் -திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் – நம்பி பிறந்தினில்
எண்ணைய் சுண்ணம்-எதிரதிர் தூவிட
கண்ணன் முற்றம்- கலந்து அளறு ஆயிற்றே.
ஓடுவார் விழுவார் – உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் – எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் – பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் – ஆயிற்று ஆய்ப்பாடியே
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் – புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார்- இவன் நேரில்லை காண்
திரு வோணத்தான்- உலகாளும் என்பார்களே.
உறியை முற்றத்து – உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் – நன்றாகத் தூவுவார்
செரிமென் கூந்தல் – அவிழத் திளைத்து
எங்கும் அறிவு அழிந்தனர் – ஆய்ப்பாடி ஆயரே.
கொண்ட, தாள் உறி – கோலக் கொடுமழு
தண்டினர்- பறியோலைச் சயனத்தர்
விண்ட முல்லை – அரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் -புகுந்து நெய்யாடினார்.
கையும் காலும் நிமிர்த்துக் – கடார நீர்
பைய ஆட்டிப் – பசுஞ் சிறு மஞ்சளால்
ஐய நா, வழித்தாளுக்கு அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே.
வாயுள் வையகம்-கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் – அருந் தெய்வம்
பாய சீருடைப் – பண்பு உடைப் பாலகன்
மாயன் என்று – மகிழ்ந்தனர் மாதரே.
பத்து நாளும் கடந்த – இரண்டாம் நாள்
எத்திசையும் – சயமரம் கோடித்து
மத்த மாமலை – தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து – உகந்தனர் ஆயரே.
கிடக்கில் தொட்டில் – கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் – மருங்கை இறுத்திடும்
ஒடுக்கி புல்கில் – உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் – நான் மெலிந்தேன்,நங்காய்!
செந்நெலார் வயல் சூழ் – திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் – நம்பி பிறந்தமை
மின்னு நூல் – விட்டு சித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு – இல்லை பாவமே.(2)
** ஹரே கிருஷ்ணா **

