அத்தியாயம் – 17
காளிங்களின் வரலாறு
பதம் 10.17.1 : (காளிங்கனைப் பகவான் கிருஷ்ணர் எவ்வாறு தண்டித்தார் என்பதை அறிந்து கொண்ட) மன்னர் பரீக்ஷித்து வினவினார்: காளிங்கன் ஏன் நாகங்களின் இருப்பிடமான ரமணகத் தீவினை நீங்கினான் என்றும், கருடன் ஏன் அவனிடம் பகைமை பாராட்டினார் என்றும் கேட்டார்.
பதங்கள் 10.17.2 – 10.17.3 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கருடனால் கொன்று தின்னப்படுவதைத் தவிர்க்க விரும்பிய நாகங்களெல்லாம் ஒன்று கூடி, தாம் ஒவ்வொன்றும் மாதம் ஒருமுறை அவருக்கு வேண்டிய உணவுப் பொருட்களை ஓர் மரத்தின் அடியில் படைத்துவிடுவதாக அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. இவ்வாறு ஒ, வலிமைமிக்கக் கரங்களையுடைய பரீக்ஷித்து மன்னனே, அவை ஒவ்வொன்றும் தமது பாதுகாப்பிற்கு விலையாக விஷ்ணுவின் சக்திமிக்க வாகனமான கருடனுக்கு ஒவ்வொரு மாதமும் அவருக்குரிய பங்கினை அளித்து வந்தன.
பதம் 10.17.4 : பெரும்பாலும் எல்லா நாகங்களும் முறையாகவும், ஒழுங்காகவும் கருடனுக்கு உணவுப் பொருட்களை அளித்துத் தமது கடமையைச் செய்த போதிலும் ஒரே ஒரு நாகம் கத்ருவின் மைந்தனும் முரட்டுக் குணம் உடையவனுமான காளிங்கன் என்னும் நாகம் கருடனுக்குப் படைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கருடன் உண்பதற்கு முன்பே தான் உண்டு வந்தான். இவ்வாறு காளிங்கன் பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடனை நேரடியாக அவமதித்தான்.
பதம் 10.17.5 : ஓ, மன்னனே, முழுமுதற்கடவுளின் அன்பிற்குரியவரான ஆற்றல் மிக்கக் கருடபகவான் இதனைக் கேள்விப்பட்டுப் பெருஞ்சினம் கொண்டார். காளிங்கனைக் கொல்வதற்கு விரும்பி அவர் அதிவேகத்துடன் காளிங்கனை நோக்கி வந்தார்.
பதம் 10.17.6 : விஷத்தினை ஆயுதமாகக் கொண்ட காளிங்கன் மீது கருடன் வேகமாக வந்து வீழ்ந்தவுடன், அவன் அவரைத் திருப்பித் தாக்குவதற்காகத் தனது எண்ணற்ற தலைகளைப் படங்களாக விரித்தான். பிளவுண்ட தனது நாக்குகளைக் காட்டித் தனது விழிகளை அகல விரித்து உக்கிரமாகப் பார்த்தான். பிறகு காளிங்கன் தனது கூர்மையான விஷப் பற்களினால் கடித்தான்.
பதம் 10.17.7 : தார்க்ஷ்யனின் சினங்கொண்ட புத்திரரான கருடன் அதிபயங்கர வேகத்துடன் வந்து காளிங்கனைத் தாக்கினார். பகவான் மதுசூதனரின் ஆற்றல் மிக்க வாகனமான கருடன், பொன்னைப்போல் மின்னும் தனது இடது சிறகினால் கத்ருவின் மைந்தனான காளிங்கனை உக்கிரமாகத் தாக்கினார்.
பதம் 10.17.8 : கருடனின் சிறகினால் தாக்கப்பட்ட காளிங்கன் மிகுந்த மனக்கிலேசத்திற்கு ஆளானான். பிறகு அவன் யமுனை நதியின் அருகிலிருந்த ஒரு குளத்தினுள் புகுந்துகொண்டான். கருடனால் இக்குளத்தினுள் புகமுடியாது, ஏன் அக்குளத்தினை நெருங்கக் கூட முடியாது.
பதம் 10.17.9 : கருடன் மிகவும் விரும்பி உண்ணும் உணவு மீன் ஆதலினால் ஒருமுறை அவர் அக்குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து உண்பதற்காக வந்தார். அக்குளத்தினுள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த சௌபரி என்னும் முனிவரால் அங்கே மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டிருந்த போதிலும் கருடன் மிகுந்த பசியுடன் இருந்ததினால், துணிச்சலுடன் மீனைப் பிடித்தார்.
பதம் 10.17.10 : அக்குளத்தில் தமது தலைவனை இழந்ததினால் பிற மீன்கள் யாவும் வருந்துவதைக் கண்ட சௌபரி முனிவர், அக்குளத்திலுள்ள உயிர்களின் மீது மிகுந்த கருணையுடையவராகத் தன்னைக் கருதிக் கொண்டு பின் வரும் சாபத்தினைக் கருடனுக்கு அளித்தார்.
பதம் 10.17.11 : கருடன் மீண்டும் அக்குளத்திற்கு வந்து மீனைப்பிடித்தால் அவர் உடனே தனது உயிரை இழப்பார். நான் சொல்லும் இது சத்தியமாகும்.
பதம் 10.17.12 : பிற நாகங்களுக்குத் தெரியாத இவ்வுண்மையினை காளிங்கன் மட்டுமே அறிந்திருந்தான். அதனால் அவன் கருடனுக்கு அஞ்சி யமுனைக் குளத்தில் வசித்துவந்தான். பிறகு பகவான் கிருஷ்ணர் அவனை அங்கிருந்து விரட்டி அடித்தார்.
பதங்கள் 10.17.13 – 10.17.14 : (கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்ததைப் பற்றி விளக்கிய சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்:) கிருஷ்ணர் திவ்யமான மாலைகள் அணிந்து, நறுமணத் தைலங்கள் பூசி, கண்ணைக் கவரும் ஆடைகளும், இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற பொன் ஆபரணங்களும் அணிந்து கொண்டு அக்குளத்திலிருந்து வெளியே வந்தார். அவரைக் கண்ட ஆயர்குலத்தோர் அனைவரும், உணர்ச்சியற்று வீழ்ந்திருந்தவன் மீண்டும் உணர்வு பெற்று எழுந்ததுபோல் உடனே அவரைப் பாசத்துடன் தழுவிக் கொண்டனர்.
பதம் 10.17.15 : யசோதை, ரோகிணி, நந்தமகாராஜா, கோபியர்கள், கோபாலர்கள் அனைவரும் உணர்வு பெற்று எழுந்தவுடன் கிருஷ்ணரை நோக்கி விரைந்தனர். ஓ, குருகுலத் தோன்றலே, பட்டுப்போன மரங்கள் கூட அவரைக் கண்டு மீண்டும் தளிர்த்தன.
பதம் 10.17.16 : தனது குற்றமற்ற தம்பியின் சர்வ சக்தியினை நன்கறிந்திருந்த பகவான் பலராமர் அவரை ஆவிசேரத் தழுவிக்கொண்டார். அன்புப் பெருக்கினால் பலராமர் கிருஷ்ணரைத் தனது மடியில் தூக்கி வைத்துக் கொண்டு அவரையே வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார். பசுக்களும், காளைகளும், பெட்டைக் கன்றுகளும் கூட பரமானந்த நிலை எய்தின.
பதம் 10.17.17 : அந்தணர்கள் அனைவரும் தமது மனைவியருடன் சேர்ந்து நந்த மகாராஜாவிடம் வந்தனர். அவர்கள் அவரிடம் ‘உமது மைந்தன் காளிங்கனின் பிடியில் சிக்கியிருந்தான், ஆனால் தெய்வானு கூலத்தினால் இப்போது அவன் விடுபட்டு விட்டான்’ என்று கூறினர்.
பதம் 10.17.18 : பிறகு அந்த அந்தணர்கள் நந்த மகாராஜாவிடம் கூறினர், “உமது மைந்தன் கிருஷ்ணனுக்கு எப்போதும் எந்தவிதமான ஆபத்துக்களும் வராமல் இருக்க வேண்டுமென்றால் நீர் அந்தணர்களுக்குத் தானமளித்தல் வேண்டும்” என்று ஓ, அரசனே, இதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த நந்தமகாராஜா அவர்களுக்கு பொன்னாலான பொருட்களையும், பசுக்களையும் தானமாக அளித்தார்.
பதம் 10.17.19 : தனது மைந்தனை இழந்து மீண்டும் பெற்ற பாக்கியசாலியான அன்னை யசோதை அவரைத் தனது மடியின் மீது வைத்துக் கொண்டாள். அப்பத்தினிப் பெண், அவரை மீண்டும் மீண்டும் உச்சிமுகர்ந்து, தனது கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம் பெருக அழுதாள்.
பதம் 10.17.20 : ஓ, அரசர்களுக்கெல்லாம் அரசனே (பரீக்ஷித்து), விருந்தாவன வாசிகள் அனைவரும் பசி, தாகம், மற்றும் சிரமத்தின் காரணமாக மிகவும் பலவீனமாக இருந்த காரணத்தினால் அவர்கள் தமது பசுக்களுடன் அன்றைய இரவு காளிந்தி நதியின் கரையிலேயே கண்துயின்றனர்.
பதம் 10.17.21 : பிருந்தாவன மக்களெல்லாம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அன்றைய இரவின் நடு ஜாமத்தில், கோடை வெம்மையினால் வறண்டு போயிருந்த காட்டில் பெருந்தீ பற்றிக் கொண்டது, அத்தீ விரஜத்தைச் சேர்ந்தோரின் எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு அவர்களைத் தகிக்கத் தொடங்கியது.
பதம் 10.17.22 : காட்டுத்தீயின் வெம்மையினால் விழித்தெழுந்த விருந்தாவனவாசிகள் எங்கே தாம் அந்த காட்டுத் தீயினால் எரிக்கப்பட்டு விடுவோமோவென்று அஞ்சினார். அதனால் அவர்கள், தமது ஆன்மீகச் சக்தியால் மானிட வடிவில் தோன்றியிருக்கும் பரமபுருஷபகவான் கிருஷ்ணரைத் தஞ்சமடைந்தனர்.
பதம் 10.17.23 : (விருந்தாவனவாசிகள் கூறினர்:) கிருஷ்ணா! கிருஷ்ணா!! ஓ, எல்லா வளங்களும் நிறைந்த பகவானே, ஓ, ராமா! சர்வசக்தி உடையவரே, உங்கள் பக்தர்களாகிய எங்களை இப்பயங்கரமான காட்டுத் தீ விழுங்கப் பார்க்கிறது.
பதம் 10.17.24 : ஒ, பகவானே! நாங்கள் உமது உண்மை நண்பர்களும் பக்தர்களும் ஆவோம். கடத்தற்கரிய இக்காலாக்னியிலிருந்து எம்மைக் காத்தருள்வீராக. எல்லாப் பயங்களையும் நீக்கும் உமது தாமரைத் திருவடிகளை நாங்கள் ஒருபோதும் துறக்க மாட்டோம்.
பதம் 10.17.25 : தமது பக்தர்கள் துன்புறுவதைக் கண்ட ஜகத்தீஸ்வரரும், எல்லையற்ற சக்தியுடையவருமான ஸ்ரீ கிருஷ்ணர், அப்பயங்கரக் காட்டுத்தீயைத் தானே விழுங்கினார்.

