அத்தியாயம் – 13
சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா
கவர்ந்து செல்லல்
பதம் 10.13.1
ஸ்ரீ-சுக உவாச
ஸாது ப்ருஷ்டம் மஹா-பாக த்வயா பாகவதோத்தம
யன் நூதனயஸீசஸ்ய ஸ்ருண்வன் அபி கதாம் முஹு:
ஸ்ரீ-சுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸாது ப்ருஷ்டம்—உமது விசாரணையால் நான் மிகவும் கௌரவிக்கப்பட்டேன்; மஹா-பாக—நீர் சிறந்த பாக்கியசாலியாவீர்; த்வயா—உம்மால்; பாகவத-உத்தம—பக்தர்களில் சிறந்தவரே; யத்—ஏனெனில்; நூதனயஸி—நீர் புதுமை புதுமையாகச் செய்கிறீர்; ஈசஸ்ய—பரமபுருஷரின்; ஸ்ருண்வன் அபி—நீர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த போதிலும்; கதாம்—லீலைகளை; முஹு:—மீண்டும், மீண்டும்.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பக்தர்களில் சிறந்தவரும், பேரதிர்ஷ்டசாலியுமான பரீட்சித்து மகாராஜனே, நீர் மிகவும் நன்றாக விசாரணை செய்துள்ளீர். ஏனெனில் பகவானின் லீலைகளை நான் இடையறாது கேட்டுக்கொண்டிருந்த போதிலும் அவரது செயல்களை நீர் புதுமை, புதுமையாகக் காண்கிறீர்.
பதம் 10.13.2
ஸதாம் அயம் ஸார-ப்ருதாம் நிஸர்கோ
யத்-அர்த-வாணீ-ஸ்ருதி-சேதஸாம் அபி
ப்ரதி-க்ஷணம் நவ்ய-வத் அச்யுதஸ்ய யத்
ஸ்த்ரியா விடானாம் இவ ஸாது வார்தா
ஸதாம்—பக்தர்களின்; அயம்—இந்த; ஸார-ப்ருதாம்—வாழ்வின் சாராம்சத்தை ஏற்றுக் கொண்டுள்ளவர்களான, பரமஹம்ஸர்கள்; நிஸர்க:—அம்சம் அல்லது அடையாளம்; யத்—எது; அர்த-வாணீ—வாழ்வின் நோக்கம், இலாபத்திலுள்ள நோக்கம்; ஸ்ருதி—புரிந்து கொள்ளும் நோக்கம்; சேதஸாம் அபி—உன்னத விஷயங்களிலுள்ள ஆனந்தத்தை ஏற்றுக் கொள்வதை வாழ்வின் நோக்கமாகக் கொள்ள முடிவு செய்துள்ளவர்கள்; ப்ரதி-க்ஷணம்—ஒவ்வொரு கணமும்; நவ்ய-வத்—புத்தம் புதியதுபோல் இருப்பதாக; அச்யுதஸ்ய—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; யத்—ஏனெனில்; ஸ்த்ரியா:—பெண்ணைப் பற்றிய அல்லது பாலுறவு பற்றிய (விஷயம்); விடானாம்—பெண்களிடம் பற்றுக் கொண்டுள்ள சிற்றின்ப வெறியர்களின்; இவ—அதுபோலவே; ஸாதுவார்தா—நிஜமான உரையாடல்.
வாழ்வின் சாராம்சத்தை ஏற்றுக்கொண்டுள்ள பரமஹம்ச பக்தர்கள் கிருஷ்ணரிடம் இதயபூர்வமான அன்பு கொண்டுள்ளனர். அவர்களுடைய வாழ்வின் இலட்சியமும் அவரே. கிருஷ்ணரின் லீலைகள் என்றும் புதியவையாக இருப்பதால், இயல்பாகவே அவரைப் பற்றி மட்டுமே அவர்கள் பேசுகின்றனர், பெண்கள் மற்றும் சிற்றின்பம் போன்ற விஷயங்களில் உலகாயதவாதிகள் பற்றுக் கொண்டிருப்பது போலவே, அவர்கள் கிருஷ்ண கதைகளில் பற்றுக் கொண்டுள்ளனர்.
பதம் 10.13.3
ஸ்ருணுஷ்வாவஹிதோ ராஜன் அபி குஹ்யம் வதாமி தே
ப்ரூயு: ஸ்னிக்தஸ்ய சிஷ்யஸ்ய குரவோ குஹ்யம் அபி உத
ஸ்ருணுஸ்வ—தயவுசெய்து கேளும்; அவஹித:—முழு கவனத்துடன்; ராஜன்—அரசே (பரீசித்து மகாராஜனே); அபி—என்ற போதிலும்; குஹ்யம்—(சாதாரண மனிதனால் கிருஷ்ணரின் செயல்களைப் புரிந்து கொள்ள முடியாது என்பதால்) மிகவும் இரகசியமானது; வதாமி—நான் விளக்கப் போகிறேன்; தே—உமக்கு; ப்ரூயு:—விவரிக்கின்றனர்; ஸ்னிக் தஸ்ய—அடக்கமுள்ள; சிஷ்யஸ்ய—ஒரு சீடனுக்கு; குரவ:—ஆன்மீக குருமார்கள்; குஹ்யம்—மிகவும் இரகசியமானது; அபி உத—என்ற போதிலும்.
அரசே, தயவுசெய்து மிகவும் கவனமாகக்கேளும். பரமபுருஷரின் செயல்கள் மிகவும் அந்தரங்கமானவை என்பதால் அவற்றை எந்த சாதாரண மனிதனாலும் புரிந்துகொள்ள முடியாது. என்றாலும் அவற்றைப் பற்றி உமக்கு நான் கூறுகிறேன். ஏனெனில், மிகவும் இரகசியமானவையும், புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமானவையுமான விஷயங்களைக்கூட அடக்கமுள்ள ஒரு சீடனுக்கு ஆன்மீக குரு விவரிக்கிறார்.
பதம் 10.13.4
ததாக-வதனான் ம்ருத்யோ ரக்ஷித்வா வத்ஸ-பாலகான்
ஸரித்-புலினம் ஆனீய பகவான் இதம் அப்ரவீத்
ததா—அதன்பிறகு; அக-வதனாத்—அகாசுரனின் வாயிலிருந்து: ம்ருத்யோ:—மரண சொரூபமான; ரக்ஷித்வா—காப்பாற்றியபின்; வத்ஸ-பாலகான்—எல்லா இடைச் சிறுவர்களையும், கன்றுகளையும்; ஸரித்-புலினம்—நதிக்கரைக்கு; ஆனீய—அழைத்து வந்த; பகவான்—பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர்; இதம்—இவ்வார்த்தைகளை; அப்ரவீத்—கூறினார்.
பிறகு, மரணசொரூபமான அகாசுரனின் வாயிலிருந்து சிறுவர்களையும், கன்றுகளையும் காப்பாற்றியதும், பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களனைவரையும் நதிக்கரைக்கு அழைத்து வந்து பின்வரும் வார்த்தைகளைப் பேசினார்.
பதம் 10.13.5
அஹோ ‘திரம்யம் புலினம் வயஸ்யா:
ஸ்வ-கேலி-ஸம்பன் ம்ருதுலாச்ச-பாலுகம்
ஸ்ஃபுடத்-ஸரோ-கந்த-ஹ்ருதாலி-பத்ரிக-
த்வனி-ப்ரதித்வான-வஸத்-த்ருமாகுலம்
அஹோ—ஓ; அதி-ரம்யம்—மிக, மிக அழகாக உள்ளது; புலினம்—நதிக்கரை; வயஸ்யா:—எனது பிரிய நண்பர்களே; ஸ்வ-கேலி-ஸம்பத்—விளையாட்டுக் கேளிக்கைகளுக்குரிய எல்லா உபகரணங்களும் நிறைந்துள்ளன; ம்ருதுல-அச்ச-பாலுகம்—மிகவும் மிருதுவான, சுத்தமான மணல் கரை; ஸ்ஃபுடத்—முழுமையாக மலர்ந்துள்ள; ஸர:-கந்த—தாமரையின் நறுமணத்தால்; ஹ்ருத—கவரப்பட்டு; அலி—தேனீக்களின்; பத்ரிக—மற்றும் பறவைகளின்; த்வனி-ப்ரதித்வான—அவற்றின் கீச்சிடும் மற்றும் அசைவின் சப்தங்களும், இச்சபதங்களின் எதிரொலிகளும்; லஸத்—எங்கும் சுழன்ற; த்ரும-ஆகுலம்—நல்ல மரங்கள் நிறைந்துள்ளன.
எனது பிரிய நண்பர்களே! இந்த நதிக்கரையின் ரம்மியமான சூழ்நிலையின் காரணத்தால், இது மிகவும் அழகுபெற்று விளங்குவதைக் கவனியுங்கள், மலரும் தாமரைகள் எப்படி தங்கள் நறுமணத்தால் தேனீக்களையும், பறவைகளையும் கவர்கின்றன என்பதையும் கவனியுங்கள். தேனீக்களின் ரீங்காரமும், பறவைகளின் கீச்சிடும் ஓசைகளும், காட்டிலுள்ள மரங்கள் முழுவதிலும் எதிரொலிக்கின்றன. மேலும், இங்குள்ள மணல் சுத்தமாகவும், மிருதுவாகவும் உள்ளன. எனவே, நம்முடைய விளையாட்டுக்கும், லீலைகளுக்கும் ஏற்ற மிகச்சிறந்த இடமாக இதை நாம் கருத வேண்டும்.
பதம் 10.13.6
அத்ர போக்தவ்யம் அஸ்மாபிர் திவாரூடம் க்ஷுதார்திதா:
வத்ஸா: ஸமீபே ‘ப: பீதவா சரந்து சனகைஸ் த்ருணம்
அத்ர—இங்கு, இந்த இடத்தில்; போக்தவ்யம்—நம் சிற்றுண்டி உண்ணப்பட வேண்டும்; அஸ்மாபி:—நம்மால்; திவ-ஆரூடம்—இப்பொழுது மிகவும் தாமதமாகிவிட்டது; க்ஷுதா அர்திதா:—நாம் பசியால் களைத்து விட்டோம்; வத்ஸா:—கன்றுகள்; ஸமீபே—அருகாமையில்; அப:—நீர்; பீத்வா—குடித்தபின்; சரந்து—அவை தின்னட்டும்; சனகை:—மெதுவாக; த்ருணம்—புல்லை.
இப்பொழுது மிகவும் தாமதமாகி நமக்குப் பசியும் வந்துவிட்டது. இங்கேயே நம்முடைய சிற்றுண்டியை நாம் உட்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன், கன்றுகளும் இங்கு நீரைக் குடித்துவிட்டு மெதுவாக இங்குமங்கும் புல்லை மேய்ந்துகொண்டு திரியட்டும்.
பதம் 10.13.7
ததேதி பாயயித்வார்பா வத்ஸான் ஆருத்ய சாத்வலே
முக்த்வா சிக்யானி புபிஜு: ஸமம் பகவதா முதா
ததா இதி—கிருஷ்ணர் விருப்பம் தெரிவித்ததும், மற்ற இடைச்சிறுவர்கள் சம்மதித்தனர்; பாயயித்வா அர்பா:—அவர்கள் நீர் குடிக்கச் செய்தனர்; வத்ஸான்—கன்றுகளை; ஆருத்ய—அவைகளை மரங்களோடு கட்டி, மேய விட்டனர்; ஸாத்வலே—பசுமையான இளம் புற்கள் இருந்த இடத்தில்; முக்த்வா—திறந்து; சிக்யானி—உணவு வகைகளையும் மற்ற பொருட்களையும் வைத்திருந்த அவர்களுடைய பைகளை; புபஜு:—சென்று அனுபவித்தனர்; ஸமம்—சமமாக; பகவதா—பரமபுருஷருடன்; முதா—உன்னத ஆனந்தத்துடன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட இடைச்சிறுவர்கள், கன்றுகளுக்கு ஆற்று நீரைக் காட்டியபின், பசுமையான, இளம் புற்கள் உள்ள இடத்தில் அவைகளை மரங்களுடன் கட்டிப் போட்டனர். பிறகு அச்சிறுவர்கள் தங்கள் உணவுப் பைகளைத் திறந்து கிருஷ்ணருடன் மிகவும் ஆனந்தமாக உணவருந்தத் துவங்கினர்.
பதம் 10.13.8
க்ருஷ்ணஸ்ய விஷ்வக் புரு-ராஜி-மண்டலைர்
அப்யானனா: ஃபுல்ல-த்ருசோ வ்ரஜார்பகா:
ஸஹோபவிஷ்டா விபினே விரேஜுஸ்
சதா யதாம்போருஹ-கர்ணிகாயா:
க்ருஷ்ணஸ்ய விஷ்வக்—கிருஷ்ணரைச் சுற்றிலும்; புரு-ராஜி-மண்டலை:—சாகாக்களின் வெவ்வேறு வட்டங்களால்; அப்யானனா:—கிருஷ்ணர் அமர்ந்திருந்த மையப்பகுதியை அனைவரும் நோக்கியபடி; ஃபுல்ல-த்ருச:—உன்னத ஆனந்தத்தின் காரணத்தால் அவர்களது முகங்கள் மிகவும் பிரகாசமாக காட்சியளிக்க; வ்ரஜ-அர்பகா:—விரஜபூமியின் இடைச்சிறுவர்கள் அனைவரும்; ஸஹ-உபவிஷ்டா:—கிருஷ்ணருடன் அமர்ந்து; விபினே—காட்டில்; விரேஜு:—மிகவும் நன்றாகவும், அழகாகவும் செய்யப்பட்டு; சதா:—இதழ்களும், இலைகளும்; யதா—போல்; அம்போருஹ—ஒரு தாமரையின்; கர்ணிகாயா:—மத்தியின்.
ஒரு தாமரையின் கர்ணிகை அதன் இதழ்களால் சூழப்பட்டிருப்பது போலவே, கிருஷ்ணர் மத்தியில் அமர்ந்திருக்க, மிகவும் அழகாகக் காணப்பட்ட அவரது நண்பர்கள் அனைவரும் அவரைச் சுற்றி வரிசை வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களுள் ஒவ்வொருவரும் கிருஷ்ணர் தன்னைப் பார்ப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் அவரைப் பார்க்க முயன்றனர். இவ்வாறாக அவர்களனைவரும் தங்கள் வன போஜனத்தை அனுபவித்தனர்.
பதம் 10.13.9
கேசித் புஷ்பைர் தலை: கேசித் பல்லவையர் அங்குரை: ஃபலை:
சிக்பிஸ் த்வக்பிர் த்ருஷத்பிஸ் ச புபுஜு: க்ருத-பாஜனா:
கேசித்—யாரோ ஒருவன்; புஷ்பை:—மலர்களால்; தலை:—நல்ல இலைகளால்; கேசித்—யாரோ ஒருவன்; பல்லவையர்:—இலைக் கொத்துக்களின் மேல்; அங்குரை:—மலர்த் தளிர்களின் மேல்; ஃபலை:—மற்றும் சிலர் பழங்களின் மேல்; சிக்பி:—சிலர் உண்மையில் பைகளில் அல்லது பொட்டலங்களில்; த்வக்பி:—மரப் பட்டைகளால்; த்ருஷத்பி:—பாறைகளின் மேல்; ச—மேலும்; புபுஜு:—மகிழ்ந்தனர்; க்ருத-பாஜனா:—உண்பதற்கானத் தட்டுகளை அவர்கள் தயாரித்து விட்டது போல்.
இடைச்சிறுவர்களுள் சிலர், தங்கள் சிற்றுண்டியை மலர்களின் மேலும், சிலர் இலைகள், பழங்கள் அல்லது இலைக் கொத்துக்களின் மேலும் வைத்தனர் மற்றும் சிலர் உண்மையில் தங்கள் பைகளிலும், சிலர் மரப்பட்டைகளின் மேலும், சிலர் பாறைகளின் மேலும் வைத்தனர். சிறுவர்கள் இவற்றையே தங்களது உணவுத் தட்டுகளாகக் கருதி தங்கள் சிற்றுண்டியை உண்டனர்.
பதம் 10.13.10
ஸர்வே மிதோ தர்சயந்த: ஸ்வ-ஸ்வ-போஜ்ய-ருசிம் ப்ருதக்
ஹஸத்தோ ஹாஸயந்தஸ் சா-ப்யவஜஹ்ரு: ஸஹேஸ்வரா:
ஸர்வே:—இடைச்சிறுவர்கள் அனைவரும்; மிதோ:—ஒருவன் மற்றவனிடம்; தர்சயந்த:—காட்டி; ஸ்வ-ஸ்வ-போஜ்ய-ருசிம் ப்ருதக்—வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட, தனிப்பட்ட சுவைகளுடைய வெவ்வேறு வகையான உணவு வகைகளை; ஹஸந்த:—சுவைத்தபின், அவர்களனைவரும் சிரித்தனர்; ஹாஸயந்த: ச—மேலும் மற்றவர்களையும் சிரிக்கச் செய்தனர்; அப்யவஜஹ்ரு:—சிற்றுண்டியை உண்டு மகிழ்ந்தனர்; ஸஹ-ஈஸ்வரா:—கிருஷ்ணருடன்.
எல்லா இடைச்சிறுவர்களும், போஜனம் செய்யும்போது அவரவர் உண்டிகளின் ருசியை ஒருவருக்கொருவர் தனித்தனியே தெரிவித்துக் கொண்டும். சிரித்துக் கொண்டும், மற்றவர்களை சிரிக்கச் செய்து கொண்டும் கிருஷ்ணருடன் உணவை உண்டு மகிழ்ந்தனர்.
பதம் 10.13.11
பிப்ரத் வேணும் ஜடர-படயோ: ஸ்ருங்க-வேத்ரே ச கக்ஷே
வாமே பாணௌ மஸ்ருண-கவலம் தத்-ஃபலானி அங்குலீஷு
திஷ்டன் மத்யே ஸ்வ-பரிஸுஹ்ருதோ ஹாஸயன் நர்மபி: ஸ்வை:
ஸ்வர்கே லோகே மிஷதி புபுஜே யக்ஞ-புக் பால-கேலி:
பிப்ரத் வேணும்—புல்லாங்குழலைச் செருகி; ஜடர-படயோ:—இடைக்கும், இடைக் கச்சைக்கும் இடையில்; ஸ்ருங்க-வேத்ரே—கொம்பூதியையும், பசுக்களை மேய்க்கும் பிரம்பையும்; ச—கூட; கக்ஷே—இடையில்; வாமே—இடது புறத்தில்; பாணௌ—கையிலெடுத்து; மஸ்ருண-கவலம்—அரிசியையும், தயிரையும் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல்தர கொம்பூதியை; தத்-ஃபலானி—வில்வக்கனி போன்ற பொருத்தமான பழத்துண்டுகளை; அங்குலீஷு—விரல்களுக்கிடையில்; திஷ்டன்—இப்படி இருந்துகொண்டு; மத்யே—மத்தியில்; ஸ்வ-பரி-ஸுஹ்ருத:—அவரது சொந்த அந்தரங்க சகாக்களை; ஹாஸயன்—சிரிக்கச் செய்து; நர்மபி:—தமாஷான் வார்த்தைகளால்; ஸ்வை:—அவரது சொந்த; ஸ்வர்கே லோகே மிஷதி—அற்புதமான இக்காட்சியை சுவர்க்க லோக வாசிகள் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுது; புபுஜே—கிருஷ்ணர் அனுபவித்து மகிழ்ந்தார்; யஜ்ஞ-புக் பால-கேலி:—வேள்வியில் நிவேதனம் செய்யப்படும் உணவை ஏற்றுக் கொள்பவரான அவர், பிள்ளைப் பிராயத்து லீலைகளின் பொருட்டு, அவரது தோழர்களுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தார்.
கிருஷ்ணர் யஜ்ஞ-புக் எனப்படுகிறார். அதாவது வேள்வியில் நிவேதனம் செய்யப்பட்ட உணவை மட்டுமே அவர் உண்கிறார். ஆனால் தமது பிள்ளைப் பிராயத்து லீலைகளை வெளிப்படுத்தும் பொருட்டு அவர் இப்பொழுது தமது வலப்புற இடைக்கச்சையில் அவரது புல்லாங்குழலையும், இடப்புற இடைக்கச்சையில் அவரது கொம்பூதியையும், பசுக்களை மேய்க்கும் பிரம்பையும் செருகியபடி அமர்ந்திருந்தார். இடது கையில் தயிர் சாதத்தையும், விரல்களுக்கிடையில் பழத்துண்டுகளையும் அவர் பிடித்திருந்தார். தாமரையின் வட்டமான அடுக்குக்களைப் போலிருந்த சிறுவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த அவர், தம் நண்பர்களை எல்லாம் பார்த்தபடி, அவர்களைக் கேலி செய்து, அவர்களுக்கிடையில் மகிழ்ச்சி பொங்கும் சிரிப்பை மூட்டியபடி அவர்களுடன் உணவருந்தினர். அப்பொழுது, இச்சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சுவர்க்கலோக வாசிகள், யக்ஞ நிவேதனங்களை மட்டுமே உண்பவரான பரமபுருஷர், இப்பொழுது வனத்தில் தம் நண்பர்களுடன் உணவருந்துவதைக் கண்டு வியப்படைந்தனர்.
பதம் 10.13.12
பாரதைவம் வத்ஸ-பேஷு புஞ்ஜானேஷுவ் அச்யுதாத்மஸு
வத்ஸாஸ் த்வ் அந்தர்-வனே தூரம் விவிகஸ் த்ருண-லோபிதா:
பாரத—பரீட்சித்து மகாராஜனே; ஏவம்—இவ்வாறு (அவர்கள் வனபோஜனம் செய்துகொண்டு இருக்கும் வேளையில்); வத்ஸ-பேஸு—கன்றுகளை மேய்க்கும் எல்லாச் சிறுவர்களுடனும்; புஞ்ஜானேஷு—உணவருந்துவதில் ஈடுபட்டு; அச்யுத-ஆத்மஸு—அவர்களனைவரும் அச்சுதரான கிருஷ்ணருக்கு மிகவும் நெருங்கியவர்களாகவும், பிரியமானவர்களாகவும் இருந்ததால்; வத்ஸா:—கன்றுகள்: து—ஆனால்; அந்த:-வனே—அடர்ந்த வனத்தினுள்; தூரம்—தூரமாக; விவிக:—புகுந்தன; த்ருண-லோபிதா:—பசுமையான புல்லினால் வசீகரிக்கப்பட்டு.
பரீட்சித்து மகாராஜனே. தங்கள் இதய அந்தரங்கத்தில் கிருஷ்ணரைத் தவிர வேறெதையும் அறிந்திராத இடைச்சிறுவர்கள் வனத்தில் கிருஷ்ணருடன் போஜனம் செய்துகொண்டிருக்கையில் பசுமையான புல்லினால் வசீகரிக்கப்பட்ட கன்றுகள், வனத்தினுள் வெகுதூரம் சென்றுவிட்டன.
பதம் 10.13.13
தான் த்ருஷ்ட்வா பய-ஸந்த்ரஸ்தான் ஊசே க்ருஷ்ணோ ‘ஸ்ய பீ-பயம்
மித்ராணி ஆசான் மா விரமாதே-ஹானேஷ்யே வத்ஸகான் அஹம்
தான்—அக்கன்றுகள் செல்வதை; த்ருஷ்ட்வா—கண்டு; ஸந்த்ர ஸ்தான்—அடர்ந்த காட்டினுள் செல்லும் கன்றுகளை பயங்கர மிருகங்கள் தாக்கிவிடும் என்ற அச்சத்தால் கலக்கமடைந்த இடைச் சிறுவர்களிடம்; ஊசே—கிருஷ்ணர் கூறினார்; க்ருஷ்ண: அஸ்ய பீ-பயம்—எல்லா வகையான பயங்களுக்கும் பயத்தை விளைவிப்பவரான கிருஷ்ணர் (கிருஷ்ணர் இருக்கும்பொழுது, அச்சமில்லை); மித்ராணி—பிரிய நண்பர்களே; ஆசாத்—நீங்கள் மகிழ்ச்சியுடன் உணவருந்துவதை; மா-விரமத—நிறுத்த வேண்டாம்; இஹ—இங்கு இதே இடத்திற்கு; அனேஷ்யே—நான் அழைத்து வருகிறேன்; வத்ஸகான்—கன்றுகளை; அஹம்—நான்.
பயத்திற்கே பயமாகிய கிருஷ்ணர் பயத்தால் பீடிக்கப்பட்ட இடைச் சிறுவர்களின் பயத்தைப் போக்க எண்ணி, “பிரிய நண்பர்களே! போஜனம் செய்வதை நிறுத்த வேண்டாம். நானே நேரில் சென்று உங்களுடைய கன்றுகளை இங்கு கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
பதம் 10.13.14
இதி உக்த்வாத்ரி-தரீ-குஞ்ச-காஹ்வரேஷ்வ் ஆத்ம-வத்ஸகான்
விசின்வன் பகவான் க்ருஷ்ண: ஸபாணி-கவலோ யயௌ
இதிஉக்த்வா—(“நானே சென்று உங்களுடைய கன்றுகளைக் கொண்டு வருகிறேன்”) இப்படிச் சொல்லி; அத்ரி-தரீ-குஞ்ச-கஹ்வ ரேஷு—மலைகள், மலைக்குகைகள், புதர்கள் மற்றும் சந்துகள் ஆகிய எல்லா இடங்களிலும்; ஆத்ம-வத்ஸகான்—அவரது சொந்த நண்பர்களுடைய; விசின்வன்—தேடியபடி; பகவான்—பரமபுருஷரான; க்ருஷ்ண:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ஸ-பாணி-கவல:—அவருடைய தயிரையும், சாதத்தையும் கையில் எடுத்துக்கொண்டு; யயௌ—புறப்பட்டார்.
“உங்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்பட வேண்டாம், நான் சென்று கன்றுகளைத் தேடி வருகிறேன்” என்று கிருஷ்ணர் கூறினார். பிறகு, தயிரையும், சாதத்தையும் கையில் எடுத்துக்கொண்டு உடனே தம் நண்பர்களின் கன்றுகளைத் தேடிக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். தம் நண்பர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, எல்லா மலைகளிலும், மலைக்குகைகளிலும், புதர்களிலும், சந்துகளிலும் கன்றுகளை அவர் தேடத்துவங்கினார்.
பதம் 10.13.15
அம்போஜன்ம-ஜனிஸ் தத்-அந்தர-கதோ மாயார்பகஸ்யேசிதுர்
த்ரஷ்டும் மஞ்சு மஹித்வமன்யத் அபி தத்வத்ஸான் இதோ வத்ஸபான்
நீத்வான்யத்ர குரூத்வஹாந்தரததாத் கே ‘வஸ்திதோ ய: புரா
த்ருஷ்ட்வாகாஸுர-மோக்ஷணம் ப்ரபவத: ப்ராப்த: பரம் விஸ்மயம்
அம்போஜனம்-ஜனி:—தாமரையிலிருந்து பிறந்த பிரம்மதேவர்; தத்-அந்தர-கத:—இப்பொழுது இடைச் சிறுவர்களுடன் உணவருந்தி மகிழும் லீலைகளில் ஈடுபட்டுள்ள கிருஷ்ணருடனான விவகாரங்களில் சிக்கிக் கொண்டார்; மாயா-அர்பகஸ்ய—கிருஷ்ணரின் மாயையால் உருவாக்கப்பட்ட சிறுவர்களின்; ஈசிது:—பரம ஆளுனரின்; த்ரஷ்டும்—காண; மஞ்ஜு—மிகவும் இன்பமூட்டும்; மஹித்வம் அன்யத்அபி—பகவானின் மற்ற மகிமைகளையும்; தத்-வத்ஸான்—அவர்களுடைய கன்றுகளை; இத:—அவர்கள் இருந்த இடத்தை விட்டு; வத்ஸ-பான்—மற்றும் கன்றுகளை மேய்க்கும் இடைச் சிறுவர்களை; நீத்வா—அவர்களைக் கொண்டு வந்து; அன்யத்ர—வேறொரு இடத்திற்கு; குரூத்வஹ—பரீட்சித்து மகாராஜனே; அந்தர-ததாத்—சில காலம் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தார்; கே அவஸ்தித: ய:—ஆகாயத்திலுள்ள உயர்க் கிரக அமைப்பில் வசிக்கும் இந்த பிரம்மா; புரா—முன்பு; த்ருஷ்ட்வா—கண்டார்; அகாஸுர-மோக்ஷணம்—அகாசுரன் கொல்லப்பட்டு, பெளதிகத் துன்பத்திலிருந்து மோட்சமடைந்த அற்புதத்தை; ப்ரபவத:—சர்வ வல்லமையுடைய பரமபுருஷரின்; ப்ராப்த: பரம் விஸ்மயம்—மிகவும் ஆச்சரியமடைந்தார்.
பரீட்சித்து மகாராஜனே, ஆகாயத்திலுள்ள உயர் கிரக அமைப்பில் வாழும் பிரம்மா, முன்பு அகாசுரனைக் கொன்று அவனுக்கு மோட்சமளித்த சர்வசக்தி படைத்த ஸ்ரீ கிருஷ்ணரின் செயல்களைக் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளார். இப்பொழுது அதே பிரம்மா தன் சொந்த சக்தியின் ஒரு பகுதியைக் காட்ட விரும்பியதுடன், சாதாரண இடைச் சிறுவர்களுடன் விளையாடுவது போல் தமது பாலிய லீலைகளில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணரின் சக்தியையும் காண விரும்பினார். எனவே, கிருஷ்ணர் இல்லாத சமயம் பார்த்து, பிரம்மா எல்லாச் சிறுவர்களையும், கன்றுகளையும் வேறொரு இடத்திற்கு எடுத்துச் சென்றார். இவ்விதமாக அவர் சிக்குண்டவரானார். ஏனெனில், கிருஷ்ணர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பதை விரைவில் அவர் காணப்போகிறார்.
பதம் 10.13.16
ததோ வத்ஸான் அத்ருஷ்ட்வைத்ய புலினே ‘பி ச வத்ஸபான்
உபௌ அபி வனே க்ருஷ்ணோ விசிகாய ஸமந்தத:
தத:—அதன்பிறகு; வத்ஸான்—கன்றுகளை; அத்ருஷ்ட்வா—வனத்தில் காணாமல்; ஏத்ய—பிறகு; புலினே அபி—யமுனைக் கரைக்கு; ச—கூட; வத்ஸாபான்—இடைச் சிறுவர்களைக் காண இயலவில்லை; உபௌ அபி—அவர்கள் இருவரையும் (கன்றுகளையும், இடைச் சிறுவர்களையும்); வனே—வனத்தில்; க்ருஷ்ண:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; விசிகாய—எல்லா இடங்களிலும் தேடினார்; ஸமந்தத:—இங்குமங்குமாக.
அதன்பிறகு, கன்றுகளைக் காணாது நதிக்கரைக்குத் திரும்பிய கிருஷ்ணர், அங்கு இடைச் சிறுவர்களும் காணாமற் போய்விட்டதைக் கண்டார். இவ்விதமாக என்ன நடந்தது என்பதை அறியாதவர்போல், கன்றுகளையும், சிறுவர்களையும் அவர் தேடத் துவங்கினார்.
பதம் 10.13.17
க்வாபி அத்ருஷ்ட்வாந்தர்-விபினே வத்ஸான் பாலாம்ஸ் ச விஸ்வ-வித்
ஸர்வம் விதி-க்ருதம் க்ருஷ்ண: ஸஹஸவஜகாம ஹ
க்வ அபி—எங்கும்; அத்ருஷ்ட்வா—காணாமல்; அந்த:-விபினே—வனத்தில்; வத்ஸான்—கன்றுகளையும்; பாலான் ச—அவற்றின் காவலர்களான இடைச் சிறுவர்களையும்; விஸ்வ-வித்—பிரபஞ்ச சிருஷ்டி முழுவதிலும் நிகழும் அனைத்தையும் அறிந்துள்ள கிருஷ்ணர்; ஸர்வம்—அனைத்தும்; விதி-க்ருதம்—பிரம்மாவின் வேலைதான்; க்ருஷ்ண:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ஸஹஸா—உடனே; அவஜகாம ஹ—என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
கன்றுகளையும், இடைச் சிறுவர்களையும் வனத்தில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க இயலாத கிருஷ்ணரால், இது பிரம்மதேவரின் வேலைதான் என்பதை உடனே புரிந்துகொள்ள முடிந்தது.
பதம் 10.13.18
தத: க்ருஷ்ணோ முதம் கர்தும் தன்-மாத்ரூணாம் ச கஸ்ச ச
உபயாயிதம் ஆத்மானம் சக்ரே விஸ்வ-க்ருத் ஈஸ்வர:
தத:—அதன்பிறகு; க்ருஷ்ண:—பரமபுருஷர்; முதம்—மகிழ்ச்சியை; கர்தும்—ஏற்படுத்த; தத்-மாத்ரூணாம் ச—இடைச் சிறுவர்கள் மற்றும் கன்றுகளின் தாய்களுக்கு; கஸ்ய-ச—மற்றும் பிரம்மாவுக்கும் (மகிழ்ச்சியை); உபயாயிதம்—கன்றுகளாகவும், இடைச்சிறுவர்களாகவும் விரிவடைய; ஆத்மானம்—தம்மை; சக்ரே—செய்தர்; விஸ்வ-க்ருத்-ஈஸ்வர:—முழு பிரபஞ்சத்தையும் படைத்தவர் அவரே என்பதால், அது அவருக்குக் கடினமாக இருக்கவில்லை.
அதன்பிறகு பிரம்மாவிற்கும் கன்றுகளின் தாய்களுக்கும் இடைச்சிறுவர்களின் தாய்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக, முழு பிரபஞ்ச சிருஷ்டிக்கும் கர்த்தாவான கிருஷ்ணர் தம்மையே கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் விரிவடையச் செய்தார்.
பதம் 10.13.19
யாவத் வத்ஸப-வத்ஸகால்பக-வபுர் யாவத் கராங்ரி-ஆதிகம்
யாவத் யஷ்டி-விஷாண-வேணு-தல-சிக் யாவத் விபூஷாம்பரம்
யாவச் சீல-குணபிதாக்ருதி-வயோ யாவத் விஹாராதிகம்
ஸர்வம் விஷ்ணுமயம் கிரோ ‘ங்க-வத்தஜ: ஸர்வஸ்வரூபோ பபௌ
யாவத் வத்ஸப—இடைச் சிறுவர்களைப் போலவே; வத்ஸக-அல்லக-வபு:—மேலும் கன்றுகளின் இளம் உடல்களைப் போலவே; யாவத்கர-அங்ரி-ஆதிகம்—அவர்களுடைய கை, கால்கள் குறிப்பிட்ட வேறுபாடுகள் உள்ளபடி; யாவத் யஷ்டி-விஷாண-வேணு-தல-சிக்—அவர்களது உடல்களைப் போன்று மட்டுமல்லாமல், அவர்களது ஊது கொம்புகள், புல்லாங்குழல்கள், கோல்கள், உணவுப் பைகள் முதலியவை போலவும்; யாவத் விபூஷா-அம்பரம்—அவர்களுடைய ஆபரணங்கள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள்கொண்ட ஆடைகள் ஆகியவற்றைப் போலவே; யாவத் சீல-குண-அபிதா-ஆக்ருதி-வய:—அவர்களுடைய சரியான குணம், பழக்கங்கள், அம்சங்கள், இயல்புகள் மற்றும் வெளிப்படையான தேக அம்சங்கள்; யாவத் விஹார-ஆதிகம்—அவர்களின் சுவைகளுக்கு அல்லது பொழுது போக்குகளுக்கு ஏற்ப அதேபோன்ற; ஸர்வம்—அனைத்துமே; விஷ்ணு-மயம்—வாசுதேவரின் (விஷ்ணுவின்) அம்சங்களாயின; கிர: அங்க-வத்—குரல்களும் அவர்களுடையதைப் போலவே; அஜ:—கிருஷ்ணர்; ஸர்வ-ஸ்வரூப: பபௌ—தன்னைப் போலவே எவ்வித மாற்றமுமில்லாமல் அனைத்தையும் நுணுக்கமாகப் படைத்தார்.
கிருஷ்ணர் தமது வாசுதேவ அம்சத்தினால், எத்தனை இடைச் சிறுவர்களும், கன்றுகளும் காணாமற் போயினரோ அத்தனை பேர்களாக தம்மை விரிவடைச் செய்தார். அந்த விரிவங்கங்கள், குறிப்பிட்ட வகையான கைகால்களுடனும், மற்ற அவயங்களுடனும், அவர்களுடைய கோல்களுடனும், ஊதுகொம்புகளுடனும், புல்லாங்குழல்களுடனும், உணவுப் பைகளுடனும், பலவிதமாக அணிவிக்கப்பட்ட குறிப்பிட்ட வகையான ஆடை, ஆபரணங்களுடனும், வெவ்வேறு பெயர்கள், வயதுகள் மற்றும் உருவங்கள் ஆகியவற்றுடனும், மேலும் அவர்களுடைய குறிப்பிட்ட செயல்கள் மற்றும் இயல்புகள் ஆகியவற்றுடனும் விளங்கினர். இவ்வாறு தம்மை விரிவடையச் செய்ததன் மூலமாக, “உலகெல்லாம் விஷ்ணுமயம்” (ஸமக்ர-ஜகத் விஷ்ணுமயம்) என்ற கூற்றை அழகிய கிருஷ்ணர் மெய்ப்பித்தார்.
பதம் 10.13.20
ஸ்வயம் ஆத்மாத்ம-கோவத்ஸான் ப்ரதிவார்யாத்ம-வத்ஸபை:
க்ரீடன் ஆத்ம-விஹாரைஸ் ச ஸர்வாத்மா ப்ராவிசத் வ்ரஜம்
ஸ்வயம் ஆத்மா—பரமாத்மாவாகிய கிருஷ்ணர்; ஆத்ம-கோ-வத்ஸான்—இப்பொழுது தாமே கன்றுகளாக விரிவடைந்தார்; ப்ரதிவார்ய ஆத்ம-வத்ஸபை—மீண்டும் கன்றுகளை அடக்கியாளும் இடைச் சிறுவர்களாகவும் அவர் விரிவடைந்தார்; க்ரீடன்—இவ்வாறாக இவ்வுன்னத லீலைகளில் அவரே அனைத்துமாக இருந்தார்; ஆத்ம-விஹாரை: ச—தம்மைத்தாமே பல்வேறு வழிகளில் அனுபவித்து; ஸர்வ-ஆத்மா—பரமாத்மாவான கிருஷ்ணர்; ப்ராவிசத்—புகுந்தார்; வ்ரஜம்—நந்த மகாராஜன் மற்றும் யசோதை ஆகியோரின் நிலமான விரஜ பூமியில்.
எல்லாக் கன்றுகளும், இடைச் சிறுவர்களும் எப்படி இருந்தனரோ, அதேபோன்று காட்சியளிக்கும் வகையில் இப்பொழுது கிருஷ்ணர் தம்மை விரிவடையச் செய்தார். அதேசமயத்தில் அவர்களது தலைவராகவும் தோன்றிய கிருஷ்ணர், முன்பு அவர்களுடைய சகவாசத்தின் போது வழக்கமாக அவர் எப்படிச் செயற்பட்டாரோ, அதேபோன்று நந்த கோகுலத்தில் அவர் பிரவேசித்தார்.
பதம் 10.13.21
தத்-தத்-வத்ஸான் ப்ருதந் நீத்வா தத்-தத்-கோஷ்டே நிவேஸ்ய ஸ:
தத்-தத்-ஆத்மாபவத் ராஜம்ஸ் தத்-தத்-ஸத்ம ப்ரவிஷ்டவான்
தத்-தத்-வத்ஸான்—வெவ்வோறு பசுக்களுக்குச் சொந்தமான கன்றுகளை; ப்ருதக்—தனித்தனியாக; நீத்வா—கொண்டுவந்து; தத்-தத்-கோஷ்டே—அந்தந்த கன்றுகளின் மாட்டுத் தொழுவத்திற்கு; நிவேஸ்ய—புகுந்து; ஸ:—கிருஷ்ணர்; தத்-தத்-ஆத்மா—வெவ்வேறு தனிப்பட்ட ஆத்மாக்களைப் போல்; அபவத்—அவர் தம்மை அவ்வாறு விரிவடையச் செய்து கொண்டார்; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; தத்-தத்-ஸத்ம—அவரவர் வீடுகளில்; ப்ரவிஷ்டவான்—புகுந்தனர் (இவ்வாறு எல்லா இடங்களிலும் கிருஷ்ணர் புகுந்தார்).
பரீட்சித்து மகாராஜனே, தம்மை வெவ்வேறு கன்றுகளாகவும், வெவ்வேறு இடைச் சிறுவர்களாகவும் விரிவடையச் செய்துகொண்ட கிருஷ்ணர், வெவ்வேறு மாட்டுத் தொழுவங்களில் கன்றுகளாகவும், வெவ்வேறு வீடுகளில் வெவ்வேறு சிறுவர்களாகவும் புகுந்தார்.
பதம் 10.13.22
தன்-மாதரோ வேணு-ரவ-த்வரோத்திதா
உத்தாப்ய தோர்பி: பரிரப்ய நிர்பரம்
ஸ்னேஹ-ஸ்னுத-ஸ்தன்ய-பய:-ஸுதாஸவம்
மத்வா பரம் ப்ரஹ்ம ஸுதான் அபாயயன்
தத்-மாதர:—அந்தந்த இடைச் சிறுவர்களின் தாய்கள்; வேணு-ரவ—இடைச்சிறுவர்களால் எழுப்பப்பட்ட புல்லாங்குழல்கள் மற்றும் ஊதுகொம்புகளுடைய ஓசைகளின் காரணத்தால்; த்வர—உடனே; உத்திதா:—அவரவர் வீட்டுக் கடமைகளை விட்டொழிந்து; உத்தாப்ய—உடனே தங்கள் மகன்களைத்தூக்கி; தோர்பி:—அவர்களது இரு கரங்களால்; பரிரப்ய—தழுவிக்கொண்டு; நிர்பரம்—எந்த பாரத்தையும் உணராமல்; ஸ்னேஹ-ஸ்னுத—தீவிர அன்பினால் அது சுரந்தது; ஸ்தன்ய-பய:—அவர்களுடைய முலைப்பால்; ஸுதா-ஆஸவம்—அமுதபானம் போல் அதைச் சுவைத்து; மத்வா—பாலை அவ்வாறு ஏற்றுக்கொண்டு; பரம்—பரமனான; ப்ரஹ்ம—கிருஷ்ணர்; ஸுதான் அபாயயன்—அவரவர் மகன்களுக்கு ஊட்டத் துவங்கினர்.
தங்கள் மகன்களால் வாசிக்கப்பட்ட புல்லாங்குழல்கள் மற்றும் ஊதுகொம்புகளின் ஓசைகளைக் கேட்ட அவர்களுடைய தாய்கள், உடனே தங்களின் வீட்டு வேலைகளை விட்டுவிட்டு, தங்கள் பிள்ளைகளைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, இரு கைகளாலும் அவர்களைத் தழுவிக் கொண்டனர். பிறகு குறிப்பாக கிருஷ்ணரிடமுள்ள பேரன்பின் காரணத்தால் பெருகியோடிய தங்கள் முலைப்பாலை அவர்களுக்கு ஊட்டத் துவங்கினார். உண்மையில் கிருஷ்ணரே அனைத்துமாவார். ஆனால் அப்பொழுது பேரன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்திய அவர்கள் பரப்பிரம்மனாகிய கிருஷ்ணருக்குப் பாலூட்டுவதில் விசேஷ ஆனந்தம் அடைந்தனர். கிருஷ்ணரும் தம் தாய்களிடமிருந்து அமுத பானமோவென பாலைப் பருகினார்.
பதம் 10.13.23
ததோ ந்ருபோன்மர்தன-மஜ்ஜ-லேபனா-
லங்கார-ரக்ஷா-திலகாசனாதிபி:
ஸம்லாலித: ஸ்வாசரிதை: ப்ரஹர்ஷயன்
ஸாயம் கதோ யாம-யமேன மாதவ:
தத:—அதன்பிறகு; ந்ருப—அரசே (பரீட்சித்து மகாராஜனே); உன்மர்தன—தைலம் தடவி தேகத்தைப் பிடித்து விட்டும்; மஜ்ஜ—குளிப்பாட்டியும்; லேபன—உடலில் தைலமும், சந்தனமும் தேய்த்தும்; அலங்கார—ஆபரணங்களால் அலங்கரித்தும்; ரக்ஷா—பாதுகாப்பு மந்திரங்களை உச்சரித்தும்; திலக—உடலின் பன்னிரண்டு இடங்களில் திலகங்களால் அலங்கரித்தும்; அசன-ஆதிபி:—மற்றும் அவர்களுக்கு உணவூட்டியும்; ஸம்லாலித:—இவ்வாறு தாய்களால் பராமரிக்கப்பட்டு; ஸ்வ-ஆசரிதை:—இயல்பான அவர்களது நடத்தையினால்; ப்ரஹர்ஷயன்—தாய்களை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தி; ஸாயம்—மலையில்; கத:—வந்தார்; யாம-யமேன—ஒவ்வொரு செயலுக்குரிய குறிப்பிட்ட நேரத்தில்; மாதவ:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
பரீட்சித்து மகாராஜனே, அதன்பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் மாலையில் திரும்பிவந்து ஒவ்வொரு இடைச் சிறுவனின் வீட்டிலும் புகுந்து, முந்திய சிறுவர்களைப் போலவே கடமைகளில் ஈடுபட்டார். இவ்வாறாக அவர்களுடைய தாய்களை அவர் உன்னத ஆனந்தத்தால் உற்சாகப்படுத்தினார். தாய்கள் சிறுவர்களுக்கு எண்ணெய் தேய்த்தும், அவர்களைக் குளிப்பாட்டியும், அவர்களது உடல்களில் சந்தனம் பூசியும், ஆபரணங்களால் அவர்களை அலங்கரித்தும், பாதுகாப்பு மந்திரங்களை உச்சரித்தும், அவர்களது உடல்களைத் திலகங்களால் அலங்கரித்தும் மற்றும் அவர்களுக்கு உணவளித்தும் அவர்களைக் கவனித்துக் கொண்டனர். இவ்விதமாக அந்தத் தாய்கள் சுயமாக கிருஷ்ணருக்குச் சேவைசெய்தனர்.
பதம் 10.13.24
காவஸ் ததோ கோஷ்டம் உபேத்ய ஸத்வரம்
ஹுங்கார-கோஷை: பரிஹூத-ஸங்கதான்
ஸ்வகான் ஸ்வகான் வத்ஸதரான அபாயயன்
முஹுர் லிஹந்த்ய: ஸ்ரவத் ஔதஸம் பய:
காவ:—கன்றுகள்; தத:—அதன்பிறகு; கோஷ்டம்—மாட்டுத் தொழுவங்களை; உபேத்ய—அடைந்து; ஸத்வரம்—விரைவில்; ஹுங்கார-கோஷை:—மகிழ்ச்சியாக கதறல் ஓசைகளைச் செய்வதன் மூலம்; பரிஹூத-ஸங்கதான்—பசுக்களை அழைக்க; ஸ்வகான் ஸ்வகான்—தங்கள் தங்கள் தாய்களைப் பின்தொடர்ந்த; வத்ஸதரான—அந்தந்தக் கன்றுகள்; அபாயயன்—அவைகளுக்குப் பாலூட்டி; முஹு:—திரும்பத் திரும்ப; லிஹந்த்ய:—கன்றுகளை நக்கி; ஸ்ரவத் ஒளதஸம் பய:—அவற்றின் மடிகளிலிருந்து ஏராளமான பால் சுரந்தது.
அதன்பிறகு, எல்லாப் பசுக்களும் அவற்றின் வெவ்வேறு தொழுவங்களில் புகுந்து உரக்கக் கதறி தங்கள் தங்கள் கன்றுகளை அழைத்தன, கன்றுகள் வந்ததும் தாய்கள் கன்றுகளின் உடல்களை நக்கியபடி, தங்கள் மடிகளிலிருந்து சுரக்கும் அதிகமான பாலை அவைகளுக்கு ஊட்டின.
பதம் 10.13.25
கோ-கோபீனாம் மாத்ருதாஸ்மின் ஆஸீத் ஸ்னேஹர்திகாம் வினா
புரோவத் ஆஸ்வ் அபி ஹரேஸ் தோகதா மாயயா வினா
கோ-கோபீனாம்—பசுக்களிடமும், வயதான இடைப் பெண்களான கோபியர்களிடமும்; மாத்ருதா—தாய்ப்பாசம்; அஸ்மின்—கிருஷ்ணரிடம்; ஆஸீத்—சாதாரணமாக அங்கு இருந்தது; ஸ்னேஹ—பாசத்தின்; ருதி காம்—எவ்வித அதிகரிப்பும்; வினா—இல்லாமல்; புர:-வத்—முன் போலவே; ஆஸூ—பசுக்களுக்கும், கோபியர்களுக்கும் இடையில் இருந்தது; அபி—என்ற போதிலும்; ஹரே:—கிருஷ்ணரின்; தோகதா—கிருஷ்ணர் என் மகன்; மாயயா வினா—மாயையின்றி.
முதல் துவக்கத்திலிருந்தே கோபியர்களுக்கு கிருஷ்ணரிடம் தாய்ப்பாசம் இருந்து வந்தது. உண்மையில், கிருஷ்ணரிடம் அவர்களுக்கிருந்த பாசம், சொந்த மகன்களிடம் இருந்ததைவிட அதிகமாகும். இவ்வாறாக பாசத்தைக் காட்டுவதில் அவர்கள் கிருஷ்ணருக்கும், சொந்த மகன்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் கண்டனர். ஆனால் இப்பொழுது அந்த வேறுபாடு மறைந்தது.
பதம் 10.13.26
வ்ரஜெளகஸாம் ஸ்வ-தோகேஷு ஸ்நேஹ-வல்லி ஆப்தம் அன்வஹம்
சனைர் நிஹ்ஸீம வவ்ருதே யதா க்ருஷ்ணே த்வ் அபூர்வவத்
வ்ரஜ-ஓகஸாம்—விரஜவாசிகள் அனைவருக்கும்; ஸ்வ-தோகேஷு—தங்கள் சொந்த மகன்களிடம்; ஸ்னேஹ-வல்லீ—பாசக் கொடியானது; ஆ-அப்தம்—ஒரு வருஷத்திற்கு; அனு-அஹம்—தினமும்; சனை:—சிறுகச்சிறுக; நிஹ்ஸிம—எல்லையில்லாமல்; வவ்ருதே—வளர்ச்சியடைந்தது; யதா க்ருஷ்ணே—கிருஷ்ணரைத் தங்களது மகனாக ஏற்று; து—உண்மையாகவே; அபூர்வ-வத்—முன்பு அப்படி இல்லாததுபோல்.
விரஜ வாசிகளான இடையர்குலப் பெண்களும், ஆண்களும் முன்பு, தங்கள் சொந்த குழந்தைகளைவிட கிருஷ்ணரிடம் அதிக பாசம் கொண்டிருந்தனர். எனினும் இப்பொழுது ஒரு வருஷமாக, கிருஷ்ணர் அவர்களது சொந்த மகன்களாக ஆகியிருந்ததால், தங்கள் மகன்களிடம் அவர்களுக்கிருந்த பாசம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே போனது. கிருஷ்ணரேயாகிய தங்கள் மகன்களிடம் அவர்களுக்கு ஏற்பட்ட பாசப் பெருக்கிற்கு ஓரளவேயில்லை. அவர்கள் கிருஷ்ணரை எப்படி நேசித்தார்களோ, அப்படியே தங்கள் குழந்தைகளை நேசிப்பதிலும், தினந்தோறும் புதுப்புது உற்சாகத்தை அவர்கள் கண்டனர்.
பதம் 10.13.27
இத்தம் ஆத்மாத்மனாத்மானம் வத்ஸ-பால-மிஷேண ஸ:
பாலயன் வத்ஸபோ வர்ஷம் சிக்ரீடே வன-கோஷ்டயோ:
இத்தம்—இவ்விதமாக; ஆத்மா—பரமாத்மாவான கிருஷ்ணர்; ஆத்மனா—தாமே; ஆத்மானம்—தாமாகவே; வத்ஸ-பால-மிஷேண—இடைச்சிறுவர்கள் மற்றும் கன்றுகளின் ரூபத்துடன்; ஸ:—கிருஷ்ணரே; பாலயன்—பராமரித்தும்; வத்ஸ-ப:—கன்றுகளை மேய்த்தும்; வர்ஷம்—தொடர்ந்து ஒரு வருஷத்திற்கு; சிக்ரீடே—லீலைகளை அனுபவித்து மகிழ்ந்தார்; வன-கோஷ்டயோ:— பிருந்தாவனத்திலும், வனங்களிலும்.
இடைச் சிறுவர்களாகவும், கன்றுக் கூட்டங்களாகவும் மாறியிருந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களைத் தாமே பராமரித்து வந்தார். இவ்வாறாக, பகவான் தமது லீலைகளை பிருந்தாவனத்திலும், வனங்களிலும் ஒரு வருஷத்திற்குத் தொடர்ந்து நிகழ்த்தினார்.
பதம் 10.13.28
ஏகதா சாரயன் வத்ஸான் ஸ-ராமோ வனம் ஆவிசத்
பஞ்ச-ஷாஸு த்ரி-யாமாஸு ஹாயனாபூரணீஷ்வ் அஜ:
ஏகதா—ஒருநாள்; சாரயன் வத்ஸான்—கன்றுகளை மேய்த்துக்கொண்டு இருக்கும்பொழுது; ஸ-ராம:—பலராமருடன்; வனம்—வனத்தில்; ஆவிசத்—புகுந்தார்; பஞ்ச-ஷாஸு—ஜந்தாறு; த்ரி-யாமாஸு—இரவுகள்; ஹாயன—ஒரு ழுழு வருஷம்; ஆபூர்ணீஷு—நிறைவு பெறாமல் இருக்கும்பொழுது (ஒரு வருஷம் பூர்த்தியாக ஐந்தாறு நாட்கள் இருக்கும்பொழுது); அஜ:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
ஒரு நாள், ஒரு வருஷம் பூர்த்தியாவதற்கு ஐந்தாறு இரவுகளுக்கு முன், கிருஷ்ணர் பலராமருடன் கன்றுகளை மேய்த்துக்கொண்டு வனம்சென்றார்.
பதம் 10.13.29
ததோ விதுராச் சரதோ காவோ வத்ஸான் உபவ்ரஜம்
கோவர்தனாத்ரி-சிரஸி சரந்த்யோ தத்ருகஸ் த்ருணம்
தத:—அதன்பிறகு; விதூராத்—தூரமில்லாத இடத்திலிருந்து; சாரதா:—மேய்ந்து கொண்டிருக்கும் பொழுது; காவோ:—எல்லாப் பசுக்களும்; வத்ஸான்—அவற்றின் கன்றுகளும்; உபவ்ரஜம்—பிருந்தாவனத்திற்கு அருகில் மேய்ந்து கொண்டிருப்பதை; கோவர்தன-அத்ரி-சிரஸி—கோவர்தன மலைப்போல்; சரந்த்ய:—மேய்ந்து கொண்டே காணும் பொருட்டு; தத்ருக:—கண்டன; த்ருணம்—அருகில் இளம் புல்லை.
அதன்பிறகு, கோவர்தன மலையுச்சியில் மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் பசும்புல் இருக்கிறதா என்று கீழே பார்த்தன. அப்பொழுது அருகாமையில், கோகுலத்தினருகில் தங்கள் கன்றுகள் புல் மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டன.
பதம் 10.13.30
த்ருஷ்ட்வாத தத்-ஸ்னேஹ-வசோ ‘ஸ்ம்ருதாத்மா
ஸ கோ-வ்ரஜோ ‘த்யாத்மப-துர்க-மார்க:
த்வி-பாத் ககுத்-க்ரீவ உதாஸ்ய-புச்சோ
‘காத் துங்க்ருதைர் ஆஸ்ரு-பயா-ஜவேன
த்ருஷ்ட்வா—பசுக்கள் தங்கள் கன்றுகள் கீழே இருப்பதைக் கண்டதும்; அத—அதன்பிறகு; தத்-ஸ்னேஹ-வச:—கன்றுகளிடம் அதிகரித்திருந்த அன்பின் காரணத்தால்; அஸ்ம்ருத-ஆத்மா—அவை தங்களையே மறந்துவிட்டாற்போல்; ஸ:—அந்த; கோ-வ்ரஜ:—மாட்டு மந்தை; அதி-ஆத்ம-ப-துர்க-மார்க:—வழி கரடுமுரடாக இருந்த போதிலும், கன்றுகளிடம் பாசம் அதிகரித்திருந்த காரணத்தால், மேய்ப்பவர்களையும் தாண்டிக்கொண்டு; த்வி-பாத்—இரண்டு கால் பாய்ச்சலில்; ககுத்-க்ரீவ:—அவைகளின் திமில்களோடு அவற்றின் கழுத்துகளும் அசைந்தாட; உதாஸ்ய-புச்ச:—அவற்றின் தலைகளையும், வால்களையும் தூக்கிக் கொண்டு; அகாத்—வந்தன; ஹுங்க்ருதை:—உரக்க முக்காரம் இட்டுக் கொண்டு; ஆஸ்ரு-பயா:—காம்புகளிலிருந்து பால் சுரந்தோட; ஜவேன—மிகவும் வேகமாக.
கோவர்தன மலையின் உச்சியிலிருந்து தங்கள் சொந்தக் கன்றுகளைக் கண்ட பசுக்கள், அவற்றிடம் ஏற்பட்ட அன்புப் பெருக்கால் தங்களையும், மேய்ப்பவர்களையும் மறந்து, வழி மிகவும் கரடுமுரடாக இருந்தபோதிலும், தங்கள் கன்றுகளை நோக்கி இரண்டுகால் பாய்ச்சலில் ஓடின. அவை தங்கள் நிறைந்த மடிகளிலிருந்து பால் பெருகியோட தலைகளையும் வால்களையும் தூக்கிக்கொண்டு, கழுத்துக்களுடன் அவற்றின் திமில்களும் அசைந்தாட, தங்கள் கன்றுகளுக்குப் பாலுட்ட அவற்றை அடையும்வரை மிகவும் வேகமாக ஒடின.
பதம் 10.13.31
ஸமேத்ய காவோ ‘தோ வத்ஸான் வத்ஸவத்யோ ‘பி அபாயயன்
கிலந்த்ய இவ சாங்கானி லிஹந்த்ய: ஸ்வௌதஸம் பய:
ஸமேத்ய—கூடி; காவ:—எல்லாப் பசுக்களும்; அதோ:—கோவர்தன மலையின் அடிவாரத்தில்; வத்ஸான்—அவற்றின் எல்லாக் கன்றுகளும்; வ்தஸ-வத்ய:—அவற்றிலிருந்து புதுக் கன்றுகள் பிறந்திருப்பது போல்; அபி—புதுக் கன்றுகள் இருந்த போதிலும்; அபாயயன்—அவற்றிற்குப் பாலூட்டின; கிலந்த்ய:—அவற்றை விழுங்கி விடுவது; இவ—போல்; ச—மேலும்; அங்கானி—அவற்றின் உடல்களை; லிஹந்த்ய:—புதிதாகப் பிறந்த கன்றுகளை அவை நக்குவதுபோல்; ஸ்வ-ஓதஸம் பய:—அவற்றின் சொந்த மடிகளிலிருந்து பால் சுரக்க.
பசுக்கள் புதிய கன்றுகளை ஈன்றிருந்தன ஆனால் கோவர்தன மலையிலிருந்து கீழே வந்த அப்பசுக்கள், வளர்த்த கன்றுகளிடம் ஏற்பட்ட பாசப் பெருகினால், அவற்றிற்குத் தங்கள் மடிப்பாலை ஊட்டின. மேலும் அக்கன்றுகளை விழுங்கிவிட விரும்புவது போல் அவற்றை நக்கவும் துவங்கின.
பதம் 10.13.32
கோபாஸ் தத்-ரோதனாயாஸ-மௌக்ய-லஜ்ஜோரு-மன்யுனா
துர்காத்வ-க்ருச்ரதோ ‘ப்யேத்ய கோ-வத்ஸைர் தத்ருக: ஸுதான்
கோபா:—இடையர்கள்; தத்-ரோதன-ஆயாஸ—அவற்றின் கன்றுகளை நோக்கிச் செல்வதிலிருந்து அவற்றைத் தடுக்கும் முயற்சியில்; மௌக்ய—தோல்வியடைந்ததால்; லஜ்ஜா—வெட்கமடைந்து; உரு-மன்யுனா—மேலும் அதேசமயம் கோபமும் அடைந்து; துர்க-அத்வ-க்ருச்ரத:—மிகவும் கரடுமுரடான வழியைப் பெருங்கஷ்டத்துடன் அவர்கள் கடந்தபோதிலும்; அப்யேத்ய—அங்கு சென்றடைந்ததும்; கோ-வத்ஸை:—கன்றுகளுடன்; தத்ருக:—கண்டு; ஸுதான்—அவரவர் மகன்களையும்.
பசுக்கள் அவற்றின் கன்றுகளை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் முயற்சி வீணானதால், இடையர்கள் வெட்கமும், கோபமும் அடைந்தனர். கரடுமுரடான வழியைப் பெரும் சிரமத்துடன் கடந்துவந்த போதிலும், கீழே வந்து தங்கள் சொந்த மகன்களைக் கண்ட அவர்கள் பாசப் பெருக்கில் மூழ்கடிக்கப்பட்டனர்.
பதம் 10.13.33
தத்-ஈக்ஷணோத்ப்ரேம-ரஸாப்லுதாசயா
ஜாதானுராகா கத-மன்யவோ ‘ர்பகான்
உதுஹ்ய தோர்பி: பரிரப்ய மூர்தனி
க்ராணைர் அவாபு: பரமாம் முதம் தே
தத்-ஈக்ஷண-உத்ப்ரேம-ரஸ-ஆப்லுத-ஆசயா:—தங்கள் மகன்களைக் கண்ணுற்றதால், இடையர்களின் மனதில் தந்தைப் பாசம் பெருக்கெடுத்தது; ஜாத-அனுராகா:—பெரும் ஆசை அல்லது கவர்ச்சி ஏற்படுவதை உணர்ந்து; கத-மன்யவ:—அவர்களுடைய கோபம் மறைந்தது; அர்பகான்—அவர்களது இளம் மகன்களை; உதுஹ்ய—தூக்கி; தோர்பி:—தங்கள் கைகளால்; பரிரப்ய—தழுவிக்கொண்டு; மூர்தனி—தலைமேல்; க்ராணை:—முகர்ந்து; அவாபு:—அடைந்தனர்; பரமாம்—மிகவுயர்ந்து; முதம்—ஆனந்தத்தை; தே—அந்த இடையர்கள்.
அப்பொழுது, தங்கள் மகன்களைக் கண்ணுற்றதால் கோபம் நீங்கி, மனதில் பெருக்கெடுத்த அன்பு வெள்ளத்தில் மூழ்கியவர்களாய், பிள்ளைகளைக் கைகளால் தூக்கி இறுகத் தழுவி, உச்சி மோந்து பரம சந்தோஷமடைந்தனர்.
பதம் 10.13.34
தத: ப்ரவயஸோ கோபாஸ தோகாஸ்லேஷ-ஸுனிர்வ்ருதா:
க்ருச்ராச் சனைர் அபகதாஸ் தத்-அனுஸ்ம்ருதி-உதஸ்ரவ:
தத:—அதன்பிறகு; ப்ரவயஸ்:—வயது முதிர்ந்த; கோபா:—இடையர்கள்; தோக-ஆஸ்லேஷ-ஸுனிர்வ்ருதா:—தங்கள் மகன்களைத் தழுவி பெருமகிழ்ச்சியடைந்தனர்; க்ருச்ராத்—சிரமத்துடன்; சனை:—சிறிதுசிறிதாக; அபகதா:—அவ்வாறு தழுவிய நிலையை விட்டு, வனம் திரும்பினர்; தத்-அனுஸ்ம்ருதி-உத-ஸ்ரவ:—தங்கள் மகன்களை நினைத்துக் கொண்ட அவர்களது கண்களிலிருந்து கண்ணீர் பெருகியோடத் துவங்கியது.
அதன்பிறகு, வயதான இடைர்கள், தங்கள் மகன்களைத் தழுவியதன் மூலம் பெருமகிழ்ச்சியடைந்தனர், படிப்படியாகவும் மிகுந்த சிரமத்துடனும் தயக்கத்துடனும் அவர்களைத் தழுவுவதை நிறுத்திவிட்டு வனத்திற்குத் திரும்பினர். ஆனால் அந்த இடையர்கள் தங்கள் மகன்களை நினைத்துக் கொண்டவுடன், அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியோடத் தொடங்கியது.
பதம் 10.13.35
வ்ரஜஸ்ய ராம: ப்ரேமர்தேர் வீக்ஷ்யௌத்கண்ட்யம் அனுக்ஷணம்
முக்த-ஸ்தனேஷ்வ் அபத்யேஷ்வ் அபி அஹேது-வித் அசிந்தயத்
வ்ரஜஸ்ய—பசு மந்தையின்; ராம:—பலராமர்; ப்ரேம-ருதே:—அன்புப் பெருக்கின் காரணத்தால்; வீக்ஷ்ய—கண்டபின்; ஔத்கண்ட்யம்—பற்று; அனு-க்ஷணம்—இடைவிடாத; முக்த-ஸ்தனேஷு—வளர்ந்து, ஊட்ட மறந்த; அபத்யேஷு—அக்கன்றுகள் தொடர்பாக; அபி—கூட; அஹேது-வித்—காரணத்தை அறியாமல்; அசிந்தயத்—பின்வருமாறு யோசிக்கத் துவங்கினார்.
பாசப் பெருக்கின் காரணத்தால், வளர்ந்து ஊட்ட மறந்த கன்றுகளிடம் கூட பசுக்கள் இடையறாத பற்றுக் கொண்டிருந்தன. இப்பற்றைக் கண்ட பலதேவர், இதற்குக் காரணம் தெரியாமல் பின்வருமாறு யோசிக்கலானார்.
பதம் 10.13.36
கிம் ஏதத் அத்புதம் இவ வாஸுதேவே ‘கி—லாத்மனி
வ்ரஜஸ்ய ஸாத்மனஸ் தோகேஷ்வ் அபூர்வம் ப்ரேம வர்ததே
கிம்—என்ன; ஏதத்—இது; அத்புதம்—ஆச்சரியம்; இவ—அது போல்; வாஸுதேவே—வாசுதேவரிடம்; அகில-ஆத்மனி—அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவன; வ்ரஜஸ்ய—அனைத்து விரஜ வாசிகளுக்கும்; ஸ-ஆத்மன:—என்னோடு சேர்த்து; தோகேஷு—இச்சிறுவர்களிடம்; அபூர்வம்—முன்பு இல்லாத; ப்ரேம—பாசம்; வர்ததே—அதிகரிக்கிறது.
என்ன ஆச்சரியம்! எல்லா ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் எனக்கும், விரஜவாசிகளுக்கும் இருக்கும் அதே பாசம், இச்சிறுவர்களிடமும், கன்றுகளிடமும் இதுவரை இல்லாதபடி பெருகிக்கொண்டே போகிறதே!
பதம் 10.13.37
கேயம் வா குத ஆயாதா தைவீ வா நாரி உதாஸுரீ
ப்ராயோ மாயாஸ்து மே பர்துர் நான்யா மே ‘பி விமோஹினீ
கா—யார்; இயம்—இந்த; வா—அல்லது; குத:—எங்கிருந்து; ஆயாதா—வந்திருகிறாள்; தைவீ—தேவதையா; வா—அல்லது; நாரி—பெண்ணா; உத—அல்லது; ஆஸுரீ—துர்த்தேவதையா; ப்ராய:—பெரும்பாலான விஷயங்களில்; மாயா—மாயச்சக்தி; அஸ்து—ஆக இருக்க வேண்டும்; மே—எனது; பர்து:—என் பிரபுவின், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; ந—முடியாது; அன்யா—வேறு எவராகவும்; மே—எனது; அபி—நிச்சயமாக; விமோஹினீ—குழப்புபவர்.
இந்த மாயச் சக்தி யார்? இவள் எங்கிருந்து வந்தாள்? இவள் ஒரு தேவதையா அல்லது துர்த்தேவதையா? இவள், என் பிரபுவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மாயச் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் வேறு யாரால் என்னை இப்படிக் குழப்ப இயலும்?
பதம் 10.13.38
இதி ஸஞ்சிந்த்ய தாசார்ஹோ வத்ஸான் ஸ-வயஸான் அபி
ஸர்வான் ஆசஷ்ட வைகுண்டம் சக்ஷுஷா வயுனேன ஸ:
இதி ஸஞ்சிந்த்ய—இவ்விதம் ஆலோசித்து; தாசார்ஹ:—பலதேவர்; வத்ஸான்—கன்றுகளையும்; ஸ-வயஸான்—தம் சகாக்களுடன்; அபி—கூட; ஸர்வான்—எல்லா; ஆசஷ்ட—கண்டார்; வைகுண்டம்—ஸ்ரீ கிருஷ்ணராகவே; சக்ஷுஷா வயுனேன—ஞானக் கண்ணால்; ஸ:—அவர் (பலதேவர்).
இவ்விதம் ஆலோசித்த பலதேவர், ஞானக்கண்ணால் எல்லாக் கன்றுகளையும், கிருஷ்ணரின் நண்பர்களையும், ஸ்ரீ கிருஷ்ணரின் விரிவங்கங்களாகவே கண்டார்.
பதம் 10.13.39
நைதே ஸுரேசா ரிஷயோ ந சைதே
த்வம் ஏவ பாஸிச பித்-ஆஸ்ரயே ‘பி
ஸர்வம் ப்ருதக் த்வம் நிகமாத் கதம் வதேதி
உக்தேன வ்ருத்தம் ப்ரபுணா பலோ ‘வைத்
ந—இல்லை; ஏதே—இச்சிறுவர்கள்; ஸுர-ஈசா:—தேவர்களில் சிறந்தவனே; ரிஷய:—மாமுனிவர்கள்; ந—இல்லை; ச—மேலும்; ஏதே—இக்கன்றுகள்; த்வம்—நீ (கிருஷ்ணர்); ஏவ—ஒருவனே; பாஸி—தோன்றியிருக்கிராய்; ஈச—பரம ஈசுவரனே; பித்-ஆஸ்ரயே—பலவித வேற்றுமைகளுக்கு இருப்பிடமாக; அபி—கூட; ஸர்வம்—அனைத்துமாக; ப்ருதக்—இருக்கிறாய்; த்வம்—நீ (கிருஷ்ணர்); நிகமாத்—சுருக்கமாக; கதம்—எப்படியென்று; வத—கூறியருள வேண்டும்; இதி—இவ்வாறு; உக்தேன—(பலதேவரால்) கேட்டுக்கொள்ளப்பட்டு; வ்ருத்தம்—நிலைமையை; ப்ரபணா—ஸ்ரீ கிருஷ்ணரால் (விவரிக்கப்பட்டு); பல:—பலதேவர்; அவைத்—புரிந்து கொண்டார்.
பகவான் பலதேவர்கூறினார்: “பரம ஈசுவரரே! நான் முன்நினைத்தபடி, இச்சிறுவர்கள் சிறந்த தேவர்களுமல்ல, இக்கன்றுகள் நாரதரைப் போன்ற மாமுனிவர்களுமல்ல. எல்லாவித வேறுபாடுகளுடனும் நீரே இப்படித் தோன்றியிருப்பதை இப்பொழுது நான் காண்கிறேன். நீர் ஒருவரே என்றபோதிலும், கன்றுகள் மற்றும் சிறுவர்களின் வெவ்வேறு ரூபங்களில் காட்சியளிக்கிறீர். இதைச் சுருக்கமாக எனக்கு விளக்கியருள வேண்டுகிறேன்.” பகவான் பலதேவரால் இப்படி கேட்டுக் கொள்ளப்பட்டதும், கிருஷ்ணர் நிலைமையை விளக்கினார். பல தேவரும் அதைப் புரிந்து கொண்டார்.
பதம் 10.13.40
தாவத் ஏத்யாத்மபூர் ஆத்ம-மானேன த்ருடி-அனேஹஸா
புரோவத் ஆப்தம் க்ரீடந்தம் தத்ருசே ஸ-கலம் ஹரிம்
தாவத்—இவ்வளவு காலமாக; ஏத்ய—திரும்பி வந்ததும்; ஆத்ம-பூ:—பிரம்மதேவர்; ஆத்ம-மானேன—அவரது (பிரம்மாவின்) சொந்த கணக்குப்படி; த்ருடி-அனேஹஸா—ஒரு நொடிப் பொழுதில்; புர:-வத்—முன்போலவே; ஆ-அப்தம்—(மனித கணக்குப்படி) ஓராண்டு காலம்; க்ரீடந்தம்—விளையாடுவதை; தத்ருசே—அவர் கண்டார்; ஸ-கலம்—அவரது விரிவங்கங்களுடன்; ஹரிம்—பகவான் ஸ்ரீ ஹரி (ஸ்ரீ கிருஷ்ணர்).
பிரம்மதேவர், (தமது சொந்தக் கணக்குப்படி ஒரு நொடிப் பொழுதிற்குப் பிறகு திரும்பி வந்தபோது, மனிதக் கணக்குப்படி ஓராண்டுகாலம் கடந்துவிட்ட போதிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது விரிவங்கங்களான சிறுவர்களுடனும், கன்றுகளுடனும் முன் போலவே விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
பதம் 10.13.41
யாவந்தோ கோகுலே பாலா: ஸ-வத்ஸா: ஸர்வ ஏவ ஹி
மாயாசயே சயானா மே நாத்யாபி புனர் உத்திதா:
யாவந்த:—அத்தனை பேரும்; கோகுலே—கோகுலத்திலுள்ள; பாலா:—சிறுவர்கள்; ஸ-வத்ஸா:—அவர்களுடைய கன்றுகளுடன்; ஸர்வே—எல்லா; ஏவ—உண்மையில்; ஹி—என்பதால்; மாயா-ஆசயே—மாயப்படுக்கையில்; சயானா:—உறங்கிக்கொண்டு இருக்கின்றனர்; மே—எனது; ந—இல்லை; அத்ய—இன்று; அபி—கூட; புன:—மீண்டும்; உத்திதா:—எழுந்துவிட்டனர்.
பிரம்மதேவர் எண்ணினார்: கோகுலத்திலிருந்த அத்தனை சிறுவர்களையும், கன்றுகளையும் நான் என் மாயப் படுக்கையில் உறங்க வைத்திருக்கிறேன். இன்றுவரை அவர்கள் இன்னும் எழவில்லை.
பதம் 10.13.42
இத ஏதே ‘த்ர குத்ரத்யா மன்-மாயா-மோஹிதேதரே
தாவந்த ஏவ தத்ராப்தம் க்ரீடந்தோ விஷ்ணுனா ஸமம்
இத:—இக்காரணத்தினால்; ஏதே—தங்கள் கன்றுகளுடன் கூடிய இச்சிறுவர்கள்; அத்ர—இங்கு; குத்ரத்யா:—எங்கிருந்து வந்தனர்; மத்-மாயா-மோஹித-இதரே—எனது மாயையால் மயக்கப்பட்டு உள்ளவர்களிலிருந்து வேறுபட்டுள்ள; தாவந்த:—அதே எண்ணிக்கையுள்ள சிறுவர்கள்; ஏவ—உண்மையில்; தத்ர—அங்கு; ஆ-அப்தம்—ஓராண்டு காலமாக; க்ரீடந்த:—விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்; விஷ்ணுனா ஸமம்—கிருஷ்ணருடன்.
அதே எண்ணிக்கையுள்ள சிறுவர்களும், கன்றுகளும் ஓராண்டு காலமாக கிருஷ்ணருடன் விளையாடிக்கொண்டு இருக்கின்றனர். என்றாலும் எனது மாயச் சக்தியால் மயக்கப்பட்டவர்களிலிருந்து வேறுபட்டவர்களாகிய இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்?
பதம் 10.13.43
ஏவம் ஏதேஷு பேதேஷு சிரம் த்யாத்வா ஸ ஆத்ம-பூ:
ஸத்யா: கே கதரே நேதி ஞாதும் நேஷ்டே கதஞ்சன
ஏவம்—இவ்வாறு; ஏதேஷு பேதேஷு—தனித்தனியாக உள்ள இச்சிறுவர்களுக்கிடையில்; சிரம்—நீண்ட நேரம்; த்யாத்வா—யோசித்தபின்; ஸ:—அவர்; ஆத்ம-பூ:—பிரம்மதேவர்; ஸத்யா:—உண்மையானவர்கள்; கே—யார்; கதரே—யார்; ந—இல்லாதவர்; இதி—இவ்வாறு; க்ஞாதும்—புரிந்துகொள்ள; ந—இல்லை; இஷ்டே—முடிந்தது; கதஞ்சன—எவ்வழியிலும்.
இவ்வாறு நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்த பிரம்மதேவர், தனித் தனியாகப் பிரிந்திருந்த இரு பிரிவுகளைச் சேர்ந்த இச்சிறுவர்களில் உண்மையானவர்கள் யார்; அல்லாதவர்கள் யார் என்பதை அறிய முயன்றும் முடியவில்லை.
பதம் 10.13.44
ஏவம் ஸம்மோஹயன் விஷ்ணும் விமோஹம் விஸ்வ-மோஹனம்
ஸ்வயைவ மாயயாஜோ ‘பி ஸ்வயம் ஏவ விமோஹித:
ஏவம்—இவ்வாறு; ஸம்மோஹயன்—மயக்க விரும்பி; விஷ்ணும்—சர்வவியாபகமுள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; விமோஹம்—ஒருபோதும் மயக்கப்பட முடியாதவரான; விஸ்வ-மோஹனம்—ஆனால் பிரபஞ்சம் முழுவதையுமே மயக்குபவர்; ஸ்வயா—அவராகவே (பிரம்மா); ஏவ—உண்மையில்; மாயயா—மாயச் சக்தியினால்; அஜ:—பிரம்மதேவர்; அபி—கூட; ஸ்வயம்—அவராகவே; ஏவ—ஐய்யமின்றி; விமோஹித:—குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டு மயங்கிப் போனார்.
இவ்வாறு சர்வ வியாபகமுள்ளவரும் உலகனைத்தையும் மயக்குபவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பிரம்மதேவர் மயக்க விரும்பியதால் தன்னுடைய சொந்த மாயச் சக்திக்குத் தானே மயங்கிப்போனார்.
பதம் 10.13.45
தம்யாம் தமோவன் நைஹாரம் கத்யோதார்சிர் இவாஹனி
மஹதீதர-மாயைஸ்யம் நிஹந்தி ஆத்மனி யுஞ்ஜத:
தம்யாம்—இருண்டு கிடக்கும் ஓரிரவிலுள்ள; தம:-வத்—இருளைப் போல்; நைஹாரம்—உறைபனியால் உண்டாக்கப்பட்ட; கத்யோத-அர்சி:—மின்மினிப்பூச்சியின் ஒளி; இவ—போலவே; அஹனி—பகல்நேரத்தில், சூரிய ஒளியில்; மஹதி—பெரும் சக்திபடைத்த ஒருவரில்; இதர-மாயா—கீழான மாயச் சக்தி; ஜஸ்யாம்—திறமையை; நிஹந்தி—அழித்து விடுகிறது; ஆத்மனி—அவருக்குள்ளேயே; யுஞ்ஜத:—உபயோகிக்க முயல்பவரின்
இருண்டு கிடக்கும் இரவிலுள்ள உறைபனிக்கும், பகல்நேர ஒளியிலுள்ள ஒரு மின்மினிப்பூச்சியின் ஒளிக்கும் எந்த மதிப்பும் இல்லை. அதுபோலவே, பெரும் சக்தி படைத்த ஒருவருக்கெதிராகத் தன் மாயச் சக்தியை உபயோகிக்க முயலும் கீழான ஒருவரால் எதையும் சாதிக்க முடியாது; மாறாக, கீழான அந்த நபரின் சக்தி குறைந்து விடுகிறது.
பதம் 10.13.46
தாவத் ஸர்வே வத்ஸ-பாலா: பஸ்யதோ ‘ஜஸ்ய தத்-க்ஷணாத்
வ்யத்ருஸ்யந்த கன-ஸ்யாமா: பீத-கௌசேய-வாஸஸ:
தாவத்—அதுவரை; ஸர்வே—அனைவரும்; வத்ஸ-பாலா:—கன்றுகளும், அவற்றை மேய்க்கும் சிறுவர்களும்; பஸ்யத:—அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே; அஜஸ்ய—பிரம்மாதேவரின்; தத்-க்ஷணாத்—உடனே; வ்யத்ருஸ்யந்த—காணப்பட்டனர்; கன-ஸ்யாமா:—நீல நிற மழை மேகங்களையொத்த ஒரு நிறத்தை உடையவர்கள் போல்; பீத-கௌசேய-வாஸஸ:—மற்றும் மஞ்சள் பட்டாடைகள் அணிந்தும்.
பிறகு, பிரம்மதேவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கன்றுகளும் அவற்றை மேய்க்கும் சிறுவர்களும், உடனே நீல மழைமேகங்களின் நிறத்தை உடையவர்களாகவும் மஞ்சள் பட்டாடைகள் அணிந்தவர்களாகவும் காணப்பட்டனர்
பதங்கள் 10.13.47 – 10.13.48
சதுர்-புஜா: சங்க-சக்ர-கதா-ராஜீவ-பாணய:
கிரீடின: குண்டலினோ ஹாரினோ வன-மாலின:
ஸ்ரீவத்ஸாங்கத-தோ-ரத்ன-கம்பு-கங்கண-பாணய:
நூபுரை: கடகைக் பாதா: கதி-ஸூத்ராங்குலீயகை:
சது-புஜா:—நான்கு புஜங்களை உடையவர்களாகவும்; சங்க-சக்ர-கதா-ராஜீவ-பாணய:—சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை கைகளில் ஏந்தியவர்களாகவும்; கிரீடின:—தலைகளில் கிரீடங்கள் அணிந்தவர்களாகவும்; குண்டலின:—குண்டலங்கள் அணிந்தவர்களாகவும்; ஹாரிண:—முத்தாரம் அணிந்தவர்களாகவும்; வன-மாலின:—வன மாலைகள் அணிந்தவர்களாகவும்; ஸ்ரீவத்ஸ-அங்கத-தோ-ரத்ன-கம்பு-கங்கண-பாணய:—மார்புகளில் ஸ்ரீதேவியின் சின்னத்தைத் தாங்கியவர்களாகவும், கைகளில் கடகங்கள் பூண்டவர்களாகவும், சங்குபோல் மூன்று தோடுகளுடைய கழுத்துக்களில் கௌஸ்துப மாலைகள் அணிந்தவர்களாகவும், மற்றும் முன்கைகளில் கைவளைகள் பூண்டவர்களாகவும்; நூபுரை:—பாதங்களில் ஆபரணங்களுடனும்; கடகை:—கணுக்கால்களில் காப்புகளுடனும்; பாதா:—அழகாக காணப்பட்டனர்; கதி-ஸூத்ர-அங்குலீ-யகை:—புனிதமான இடைக் கச்சைகளுடனும், விரல்களில் மோதிரங்களுடனும்.
அப்புருஷர்கள் அனைவருக்கும் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்திய நான்கு கரங்கள் இருந்தன. அவர்கள் தங்களுடைய தலைகளில் கிரீடங்களையும், காதுகளில் குண்டலங்களையும், கழுத்துக்களில் வன மாலைகளையும் அணிந்திருந்தனர். அவர்களது வலது மார்பின் மேற்புறத்தில் ஸ்ரீ தேவியின் அடையாளம் இருந்தது. அவர்கள் தங்கள் கைகளில் கடகங்களையும், சங்குக் கழுத்துகளில் கௌஸ்துப மாலைகளையும், முன்கைகளில் கைவளைகளையும் அணிந்திருந்தனர். மேலும் கணுக்கால்களில் காப்புகளுடனும், பாதங்களில் ஆபரணங்களுடனும், இடைகளில் புனிதக் கச்சைகளுடனும் காணப்பட்ட அவர்கள் மிகவும் அழகாக இருந்தனர்.
பதம் 10.13.49
அங்ரி-மஸ்தகம் ஆபூர்ணாஸ் துலஸீ-நவ-தாமபி:
கோமலை: ஸர்வ-காத்ரேஷு பூரி-புண்யவத்-அர்பிதை:
ஆ-அங்ரி-மஸ்தகம்—பாதங்களிலிருந்து தலையுச்சிவரை; ஆபூர்ணா:—முழுமையாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன; துலஸீ-நவ-தாமபி:—பசுமையான துளசி மாலைகளால்; கோமலை:—இளமையான, மிருதுவான; ஸர்வ-காத்ரேஷு—உடலின் எல்லா அங்கங்களின் மீதும்; பூரி-புண்யவத்-அர்பிதை:—கேட்டல், பாடுதல் முதலியவைகளால், பரமபுருஷரை வழிபடுவதெனும் மிகச்சிறந்த புண்ணியச் செயலில் ஈடுபட்டுள்ள பக்தர்களால் அர்ப்பணிக்கப்படும்.
அவர்களுடைய பாதங்களிலிருந்து தலையுச்சிவரையுள்ள உடலின் ஒவ்வொரு அங்கமும் பச்சையான இளம் துளசி மாலைகளால் நன்கு அலங்களிக்கப்பட்டு இருந்தது. அத்துளசி மாலைகள், கேட்டல், பாடுதல் என்று மிகச்சிறந்த புண்ணியச் செயல்களால் பகவானை வழிபடுவதில் ஈடுபட்டுள்ள பக்தர்களால் அர்ப்பணிக்கப்பட்டவையாகும்.
பதம் 10.13.50
சந்ரிகா-விசத-ஸ்மேரை: ஸாருணாபாங்க-வீக்ஷிதை:
ஸ்வகார்தானாம் இவ ரஜ:-ஸத்வாப்யாம் ஸ்ரஷ்ட்ரு-பாலகா:
சந்ரிகா-விசத-ஸ்மேரை:—பெரும் முழுநிலவின் ஒளி போன்ற தூய புன்னகையினால்; ஸ-அருண-அபாங்க-வீக்ஷிதை:—அவர்களுடைய சிவந்த கண்களின் தெளிந்த பார்வைகளினால்; ஸ்வக-அர்தானாம்—அவரது சொந்த பக்தர்களுடைய ஆசைகளின்; இவ—அதுபோல்; ரஜ:-ஸத்வாப்யாம்—ரஜோ மற்றும் சத்வ குணங்களினால்; ஸ்ரஸ்ட்டு-பாலகா:—படைத்தவர்களும், காப்பவர்களுமாவர்.
அந்த விஷ்ணு மூர்த்திகள், பெருகும் நிலவொளியை ஒத்த அவர்களுடைய தூய புன்னகையாலும், அவர்களுடைய சிவந்த கடைக்கண் பார்வைகளாலும், தங்கள் சொந்த பக்தர்களின் விருப்பங்களைப் படைத்துக் காத்தனர். ரஜோ மற்றும் சத்வ குணங்களால் செய்தது போல் இதை அவர்கள் செய்தனர்.
பதம் 10.13.51
ஆத்மாதி-ஸ்தம்ப-பர்யந்தைர் மூர்த்திமத்பிஸ் சராசரை:
ந்ருத்ய-கீதாதி-அனேகார்ஹை: ப்ருதக் ப்ருதக் உபாஸிதா:
ஆத்மா-ஆதி-ஸ்தம்ப-பர்யந்தை:—பிரம்மதேவரிலிருந்து அற்ப ஜீவராசிவரை; மூர்த்தி-மத்பி:—ஏதோ ஒரு உருவத்தை ஏற்று; சர-அசரை:—அசைவன, அசையாதன ஆகிய இரண்டும்; ந்ருத்ய-கீத-ஆதி-அனேக-அர்ஹை:—ஆடுதல், பாடுதல் முதலான பல்வேறு வழிபாட்டு முறைகளால்; ப்ருதக் ப்ருதக்—வெவ்வேறாக; உபாஸிதா:—வழிபடப்படுபவர்கள்.
நான்கு தலைகளுடைய பிரம்மதேவர் முதல், அற்ப ஜீவராசி வரையுள்ள அசையும், அசையாத ஜீவன்களனைத்தும் உருவங்களை ஏற்றுக் கொண்டுள்ளன. அவை, தங்கள் தகுதிக்கேற்ப, ஆடுதல், பாடுதல் முதலான பல்வேறு வழிபாட்டு முறைகளால் அந்த விஷ்ணு மூர்த்திகளை வெவ்வேறாக வழிபடுகின்றன.
பதம் 10.13.52
அணிமாத்யைர் மஹிமபிர் அஜாத்யாபிர் விபூதிபி:
சதுர்-விம்சதிபிஸ் தத்வை: பரீதா மஹத்-ஆதிபி:
அணிமா-ஆத்யை:—அணிமா முதலான; மஹிமபி:—ஐசுவரியங்களால்; அஜா-ஆத்யாபி:—அஜா முதலான; விபூதிபி:—சக்திகளால்; சது:-விம்சதிபி:—இருபத்துநான்கு; தத்வை:—ஜட உலக சிருஷ்டிக்கான மூலப் பொருட்களால் (தத்துவங்களால்); பரீதா:—(எல்லா விஷ்ணு மூர்த்திகளும்) சூழப்பட்டிருந்தனர்; மஹத்-ஆதிபி:—மஹத்-தத்வம் முதலான.
விஷ்ணு மூர்த்திகள் அனைவரும், அணிமா-சித்தி முதலான ஐசுவரியங்களாலும், அஜா முதலான மாயச் சக்திகளாலும், மற்றும் ஜட உலகபடைப்பிற்கான மஹத்-தத்வம் முதலான இருபத்துநான்கு மூலப்பொருட்களாலும் சூழப்பட்டிருந்தனர்.
பதம் 10.13.53
கால-ஸ்வபாவ-ஸம்ஸ்கார-காம-கர்ம-குணாதிபி:
ஸ்வ-மஹி-த்வஸ்த-மஹிபிர் மூர்த்திமத்பிர் உபாஸிதா:
கால—காலத்தினால்; ஸ்வபாவ—சொந்த சுபாவம்; ஸம்ஸ்கார— சீர்திருத்தம்; காம—ஆசை; கர்ம—பலனை எதிர்பார்க்கும் செயல்; குண—மூன்று ஜட இயற்கைக் குணங்கள்; ஆதிபி:—முதலியவைகளால்; ஸ்வ-மஹி-த்வஸ்த-மஹிபி:—பகவானுடைய சக்திக்குக் கீழ்ப்படிந்த அவர்களுடைய சொந்த சுதந்திரம்; மூர்த்தி-மத்பி:—உருவம் பெற்றுள்ள; உபாஸிதா:—வழிபடப்பட்டனர்.
பிறகு, எவற்றின் சுதந்திரம் பகவானின் சக்திக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்துள்ளனவோ, அந்த காலத் தத்துவமும் (கால), சகவாசத்தினால் ஏற்படும் ஒருவனது சொந்த சுபாவமும் (ஸ்வாபவ), புனிதச் சடங்கும் (ஸம்ஸ்கார), இச்சையும் (காம), பலன் கருதும் செயலும் (கர்ம), மற்றும் ஜட இயற்கையின் முக்குணங்களும் (குண) வெவ்வேறு வடிவங்களை ஏற்று விஷ்ணு-மூர்த்திகளை வழிபடுவதையும் பிரம்ம தேவர் கண்டார்.
பதம் 10.13.54
ஸத்ய-க்ஞானந்தானந்த-மாத்ரைக-ரஸ-மூர்த்தய:
அஸ்ப்ருஷ்ட-பூரி-மாஹாத்ம்யா அபி ஹி உபநிஷத்-த்ருசாம்
ஸத்ய—நித்தியமான; ஞான—முழு அறிவுடைய; அனந்த—எல்லையற்ற; ஆனந்த—பூரண ஆனந்தம்; மாத்ர—மட்டுமே; ஏக-ரஸ—எப்பொழுதும் இருக்கும்; மூர்த்தய:—உருவங்கள்; அஸ்ப்ருஷ்ட-பூரி-மாஹாத்ம்யே:—அவருடைய பெரும் மகத்துவம் தீண்டப்படாதது; அபி—கூட; ஹி—காரணமாக; உபநிஷத்-த்ருசாம்—உபநிஷதங்களைக் கற்பதில் ஈடுபட்டுள்ள அந்த ஞானிகளால்.
விஷ்ணு-மூர்த்திகள் அனைவருக்கும், அறிவும் ஆனந்தமும் நிறைந்த காலத்தின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்ட நித்தியமான, எண்ணற்ற ரூபங்கள் இருந்தன. அவர்களுடைய பெரும் மகிமையானது, உபநிஷதங்களைக் கற்பதில் ஈடுபட்டுள்ள ஞானிகளால் தொடவும் முடியாததாக இருந்தது.
பதம் 10.13.55
ஏவம் ஸக்ருத் ததர்சாஜ: பர-ப்ரஹ்மாத்மனோ ‘கிலான்
யஸ்ய பாஸா ஸர்வம் இதம் விபாதி ஸ-சராசரம்
ஏவம்—இவ்வாறு; ஸக்ருத்—ஒரே சமயத்தில்; ததர்ச—பார்த்தார்; அஜ:—பிரம்மதேவர்; பர-ப்ரஹ்ம—பரப்பிரம்மனின்; ஆத்மன:—விரிவங்கங்கள்; அகிலான்—கன்றுகள், சிறுவர்கள் முதலான அனைவரையும்; யஸ்ய—எவருடைய; பாஸா—தோற்றத்தினால்; ஸர்வம்—எல்லாம்; இதம்—இந்த; விபாதி—தோற்றுவிக்கப்படுகிறதோ; ஸ-சர-அசரம்—அசைவன, அசையாதன அனைத்தும்.
இவ்வாறாக, யாருடைய சக்தியால் அசையும், அசையாத ஜீவராசிகளுடன் கூடிய இந்த முழு பிரபஞ்சமும் தோற்றுவிக்கப்படுகிறதோ, அந்த பரப்பிரம்மனை பிரம்மதேவர் கண்டார். அதே சமயத்தில், எல்லாக் கன்றுகளையும். சிறுவர்களையும்கூட பகவானின் விரிவங்கங்களாகவே அவர் கண்டார்.
பதம் 10.13.56
ததோ ‘திகுதுகோத்வ்ருத்ய-ஸ்திமிதைகாதசேந்ரிய:
தத்-தாம்னாபூத் அஜஸ் தூஷ்ணீம் பூர்-தேவி-அந்தீவ புத்ரிகா
தத:—பிறகு; அதிகுதுக-உத்வ்ருத்ய-ஸ்திமித-ஏகாதச-இந்ரிய:—யாருடைய பதினோரு புலன்களும் பேராச்சரியத்தினால் அதிர்ந்து, பிறகு உன்னத ஆனந்தத்தினால் பிரமித்தனவோ; தத்-தாம்னா—அந்த விஷ்ணு-மூர்த்திகளின் பிரகாசத்தினால்; அபூத்—ஆனார்; அஜ:—பிரம்மதேவர்; தூஷ்ணீம்—மௌனம்; பூ:-தேவீ-அந்தி—கிராம தேவதையின் முன்னிலையில் (க்ராம்ய-தேவதா); இவ—போன்று; புத்ரிகா—ஒரு குழந்தையால் செய்யப்பட்ட ஒரு மண் பொம்மை.
பிறகு, அந்த விஷ்ணு மூர்த்திகளுடைய பிரகாசத்தினால், யாருடைய பதினொரு புலன்களும் பேராச்சரியத்தில் திளைத்து, உன்னத ஆனந்தத்தினால் பிரமித்தனவோ, அந்த பிரம்மதேவர் கிராம தேவதையின் முன்னிலையில் உள்ள ஒரு குழந்தையின் மண் பொம்மைபோல் மௌனமானார்.
பதம் 10.13.57
இதீரேசே ‘தர்க்யே நிஜ-மஹிமனி ஸ்வ-ப்ரமிதிகே
பரத்ராஜாதோ ‘தன்-நிரஸன-முக-ப்ரஹ்மக-மிதௌ
அனீசே ‘பி த்ரஷ்டும் கிம் இதம் இதி வா முஹ்யதி ஸதி
சச்சாதாஜோ க்ஞாத்வா ஸபதி பரமோ ‘ஜா-ஜவனிகாம்
இதி—இவ்வாறாக; இரா-ஈசே—சரஸ்வதியின் (இராவின்) பதியான பிரம்மதேவர்; அதர்க்யே—அப்பாற்பட்டவராவார்; நிஜ-மஹிமனி—யாருடைய சுய மகத்துவம்; ஸ்வ-ப்ரமிதிகே—சுயமாகத் தோன்றுபவர், ஆனந்தமயமானவர்; பரத்ர—அப்பாற்பட்டவர்; அஜாத:—பௌதிக சக்தி (ப்ரக்ருதி); அதத்—சம்பந்தமில்லாத; நிரஸன-முக—பொருத்தமற்ற அதை விலக்குவதன் மூலம்; ப்ரஹ்மக—வேதங்களின் மணிமுடிகளால்; மிதௌ—யாரிடம் அறிவு உள்ளதோ அவரால்; அனீசே—முடியவில்லை; அபி—கூட; த்ரஷ்டும்—பார்க்க; கிம்—என்ன; இதம்—இது; இதி—இவ்வாறு; வா—அல்லது; முஹ்யதி ஸதி—குழப்பமடைந்ததால்; சச்சாத—அகற்றினார்; அஜ:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ஞாத்வா—புரிந்து கொண்டதும்; ஸபதி—உடனே; பரம:—அனைவரிலும் சிறந்தவரான; அஜா-ஜவனிகாம்—மாயத் திரையை.
பரப்பிரம்மமானவர் மனக்கற்பனைக்கு அப்பாற்பட்டவரும், சுயமாகத் தோன்றுபவரும், சுய ஆனந்தத்துடன் வாழ்பவரும், பெளதிக சக்திக்கு அப்பாற்பட்டவருமாவார். பொருந்தாத அறிவைத் தவறென நிரூபிக்கும் மணிமுடி போன்ற வேத வாக்கியங்களால் அவர் அறியப்படுகிறார். இவ்வாறாக, எந்த பரமபுருஷருடைய மகிமை நான்கு கரங்களுடைய விஷ்ணு-மூர்த்திகளால் வெளிப்படுத்தப்பட்டதோ, அந்த பரப்பிரம்மனால், சரஸ்வதியின் பதியான பிரம்மதேவர் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டார். “என்ன இது?” என்று பிரம்மா சிந்தித்தார். பிறகு அவரால் பார்க்கக்கூட முடியவில்லை. பிறகு பிரம்மாவின் நிலையைப் புரிந்துகொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உடனே தமது யோகமாயையின் திரையை அகற்றினார்.
பதம் 10.13.58
ததோ ‘ர்வாக் ப்ரதிலப்தாக்ஷ: க: பரேதவத் உத்தித:
க்ருச்ராத் உன்மீல்ய வை த்ருஷ்டீர் ஆசஷ்டேதம் ஸஹாத்மனா
தத:—பிறகு; அர்வாக்—வெளிப்புறமாக; ப்ரதிலப்த-அக்ஷ:—உணர்வுவரப் பெற்றார்; க:—பிரம்மதேவர்; பரேத-வத்—இறந்தவன் போல்; உத்தித:—எழுந்தார்; க்ருச்ராத்—மிகவும் சிரமத்துடன்; உன்மீல்ய—திறந்து; வை—உண்மையில்; த்ருஷ்டீ:—அவரது கண்களை; ஆசஷ்ட—அவர் கண்டார்; இதம்—இப்பிரபஞ்சத்தையும்; ஸஹ-ஆத்மனா—தன்னுடன்.
பிறகு, புற உணர்வு திரும்பப்பெற்ற பிரம்மதேவர், உயிரிழந்தவன் உயிர்பெற்று எழுவதுபோல் எழுந்தார். மிகவும் சிரமத்துடன் தன் கண்களைத் திறந்த அவர் தன்னையும், பிரபஞ்சத்தையும் கண்டார்.
பதம் 10.13.59
ஸபதி ஏவாபித: பஸ்யன் திசோ ‘பஸ்யத் புர:-ஸ்திதம்
வ்ருந்தாவனம் ஜனாஜீவ்ய-த்ருமாகீர்ணம் ஸமா-ப்ரியம்
ஸபதி—உடனடியாக; ஏவ—உண்மையில்; அபித:—சுற்றம்; பஸ்யன்—நோக்கி; திச:—திசைகளிலும்; அபஸ்யத்—பிரம்மதேவர் கண்டார்; புர:-ஸ்திதம்—தன்முன் இருப்பதை; வ்ருந்தாவனம்—பிருந்தாவனம்; ஜன-ஆஜீவ்ய-த்ரும-ஆகீர்ணம்—மக்களுக்கு ஜீவாதாரமாக உள்ள, மரங்களடர்ந்த; ஸமா-ப்ரியம்—மற்றும் எல்லாப் பருவங்களிலும் சமமாக இன்பம் அளிப்பதுவுமான.
பிறகு சுற்றியும் நோக்கிய பிரம்மதேவர், உடனே, மரங்களடர்ந்ததும், மக்களுக்கு ஜீவாதாராமாக உள்ளதும், எல்லாப் பருவங்களிலும் சமமாக இன்பமளிப்பதுவுமான பிருந்தாவனம் தன்னெதிரில் இருப்பதைக் கண்டார்.
பதம் 10.13.60
யத்ர நைஸர்க-துர்வைரா: ஸஹாஸன் ந்ரு-ம்ருகாதய: மித்ராணீவாஜிதாவாஸ-த்ருத-ருட்-தர்ஷகாதிகம்
யத்ர—எங்கு; நைஸர்க—இயற்கையாகவே; துர்வைரா:—விரோதம் கொண்டு வாழும்; ஸஹ ஆஸன்—இணைந்து வாழும்; ந்ரு—மனிதர்களும்; ம்ருக-ஆதய:—மற்றும் மிருகங்களும்; மித்ராணி—நண்பர்கள்; இவ—போல; அஜித—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; ஆவாஸ—வசிப்பிடம்; த்ருத—சென்றுவிடும்; ருட்—கோபம்; தர்ஷக-ஆதிகம்—தாகம் முதலானவை.
பிருந்தாவனம் பகவானின் உன்னத வசிப்பிடமாகும். அங்கு பசியோ, கோபமோ அல்லது தாகமோ இல்லை. மனிதர்களும், கொடிய மிருகங்களும் இயல்பாகவே விரோதமுள்ளவர்கள் என்றாலும், அவர்கள் உன்னத நட்புறவில் இணைந்து வாழ்கின்றனர்.
பதம் 10.13.61
தத்ரோத்வஹத் பசுப-வம்ச-சிசுத்வ-நாட்யம்
ப்ரஹ்மாத்வயம் பரம் அனந்தம் அகாத-போதம்
வத்ஸான் ஸகீன் இவ புரா பரிதோ விசின்வத்
ஏகம் ஸ-பாணி-கவலம் பரமேஷ்தை அசஷ்ட
தத்ர—அங்கு (பிருந்தாவனத்தில்); உத்வஹத்—ஏற்று; பசுப-வம்ச-சிசுத்வ—நாட்யம்-இடையர்குலத்து குழந்தைபோல் நடித்து (கிருஷ்ணரின் மற்றொரு பெயர் கோபாலன், “பசுக்களைப் பராமரிப்பவர்”); ப்ரஹ்ம—பரப்பிரம்மம்; அத்வயம்—இரண்டற்ற; பரம்—பரமன்; அனந்தம்—எல்லையற்றவர்; அகாத-போதம்—எல்லையற்ற அறிவுடையவர்; வத்ஸான்—கன்றுகள்; ஸகீன்—மற்றும் அவரது நண்பர்களான சிறுவர்கள்; இவ புரா—முன்போலவே; பரித:—எல்லா இடங்களிலும்; விசின்வத்—தேடிக்கொண்டு; ஏகம்—தனியாக; ஸ-பாணி-கவலம்—கையில் ஒரு பிடி உணவுடன்; பரமேஷ்தி—பிரம்ம தேவர்; அசஷ்ட—கண்டார்.
பிறகு, இரண்டற்ற ஒருவரும், பூரண அறிவுடையவரும், எல்லையற்றவருமான பரப்பிரம்மன், ஆயர்குலத்துக் குழந்தையின் வேடத்தை ஏற்று, கையில் ஒரு பிடி உணவுடன், கன்றுகளையும், அவரது நண்பர்களான இடைச் சிறுவர்களையும், முன்போலவே தனியாக எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருப்பதை பிரம்மதேவர் கண்டார்.
பதம் 10.13.62
த்ருஷ்ட்வா த்வரேண நிஜ-தோரணதோ ‘வதீர்ய
ப்ருத்வ்யாம் வபு: கனக-தண்டம் இவாபிபாத்ய
ஸ்ப்ருஷ்ட்வா சதுர்-முகுட-கோடிபிர் அங்ரி யுக்மம்
நத்வா முத்-அஸ்ரு-ஸுஜலைர் அக்ருதாபிஷேகம்
த்ருஷ்ட்வா—கண்டபின்; த்வரேண—விரைந்து; நிஜ-தோரணத:—அவருடைய அன்ன வாகனத்திலிருந்து; அவதீர்ய—இறங்கி; ப்ருத்வ்யாம்—பூமியில்; வபு:—தனது உடலை; கனக-தண்டம் இவ—தங்கத் தடிபோல்; அபிபாத்ய—கீழே விழுந்து; ஸ்ப்ருஷ்ட்வா—தொட்டு; சது:-முகுட-கோடிபி:—அவரது நான்கு கிரீடங்களில் நுனிகளால்; அங்ரி-யுக்மம்—இரு தாமரைப் பாதங்களை; நத்வா—வணங்கி; மத்-அஸ்ரு-ஸு-ஜலை:—அவரது ஆனந்தக் கண்ணீரால்; அக்ருத—செய்தார்; அபிஷேகம்—(அவரது தாமரைப் பாதங்களை) அபிஷேகம்.
இதைக்கண்ட பிரம்மதேவர் உடனே தன் அன்ன வாகனத்திலிருந்து இறங்கி, தங்கத்தடி போல் கீழே விழுந்து, தன் தலைகளிலுள்ள நான்கு கிரீடங்களின் நுனிகளால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களைத் தொட்டு வணங்கி, ஆனந்தக் கண்ணீரால் அவற்றை அபிஷேகம் செய்தார்.
பதம் 10.13.63
உத்தாயோத்தாய க்ருஷ்ணஸ்ய
சிரஸ்ய பாதயோ: பதன்
ஆஸ்தே மஹித்வம் ப்ராக்-த்ருஷ்டம்
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா புன: புன:
உத்தாய உத்தாய—திரும்பத்திரும்ப எழுந்து; க்ருஷ்ணஸ்ய—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; சிரஸ்ய—நீண்ட நேரமாக; பாதயோ:—தாமரைப் பாதங்களில்; பதன்—விழுந்தபடி; ஆஸ்தே—கிடந்தார்; மஹித்வம்—மகத்துவத்தை; ப்ராக்-த்ருஷ்டம்—முன்பு அவர் கண்ட; ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா—நினைத்து, நினைத்து; புன: புன:—மீண்டும் மீண்டும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் நீண்ட நேரமாக மீண்டும் மீண்டும் விழுந்தும், எழுந்து கொண்டும் இருந்த பிரம்மதேவர், சற்றுமுன் தான் கண்ட பகவானின் மகத்துவத்தைத் திரும்பத்திரும்ப நினைவு கூர்ந்தார்.
பதம் 10.13.64
சனைச் அதோத்தாய விம்ருஜ்ய லோசனே
முகுந்தம் உத்வீக்ஷ்ய வினம்ர-கந்தர:
க்ருதாஞ்ஜலி: ப்ரஸ்ரயவான் ஸமாஹித:
ஸ-வேபதுர் கத்கதயைலதேலயா
சனை:—மெதுவாக; அத—பிறகு; உத்தாய—எழுந்து; விம்ருஜ்ய—துடைத்துக்கொண்டு; லோசனே—அவரது இரு கண்களையும்; முகுந்தம்—முகுந்தனை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை; உத்வீக்ஷ்ய—நிமிர்ந்து பார்த்து; வினம்ர-கந்தர:—அவரது கழுத்து வளைந்து; க்ருத-அஞ்ஜலி:—கூப்பிய கரங்களுடன்; ப்ரஸ்ரய-வான்—மிகவும் அடக்கமாக; ஸமாஹித:—ஆழ்ந்த சிந்தனையுடன்; ஸ-வேபது:—அவரது உடல்நடுங்க; கத்கதயா—தழுதழுத்த; ஐலத—பிரம்மா துதிக்கக் துவங்கினார்; லீலயா—வார்த்தைகளால்.
பிறகு மெதுவாக எழுந்து, கண்களைத் துடைத்துக் கொண்ட பிரம்மதேவர், முகுந்தனைப் பார்த்துத் தலைகுனிந்தவராக, உடல் நடுங்க, ஆழ்ந்த சிந்தனையுடன், மிகவும் அடக்கமாக, தழுதழுத்த வார்த்தைகளால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைத் துதிக்கலானார்.
ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா கவர்ந்து செல்லல்” எனும் தலைப்பை கொண்ட பதிமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.