ஏகாதசி விரதத்தின் மஹத்துவம்

ஏகாதசி விரதத்தின் மஹத்துவம்:

விரதங்களில் அதி முக்கியமானது ஏகாதசி விரதம் ஆகும். வேத சாஸ்திரங்கள், ஏகாதசி பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான நாள் எனக் குறிப்பிடுகின்றன. ஏகாதசியன்று விரதம் இருப்பதன் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவருளைப் பெறலாம்.


ஏகாதசி என்றால் என்ன?

சமஸ்கிருதத்தில் “ஏகாதசி” என்றால் பதினொன்று என்று பொருள். அமாவாசை மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொன்றாவது நாளே ஏகாதசி ஆகும். இந்த இரண்டு நாள்களிலும் ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 


ஏகாதசி பிறந்த கதை

ஸத்ய யுகத்தில் ஒரு சமயம் முரா என்று சொல்லக்கூடிய ஒரு பூதம் வசித்து வந்தது. அந்த பயங்கர பூதம் தேவர்களையும், தேவர் தலைவன் இந்திரனையும், சூரியக் கடவுள் விவஸ்வானையும், எட்டு வசுக்களையும், பிரம்மன், வாயு, அக்னி போன்றோரையும் தோற்கடித்து எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு கோபத்துடன் முராவின் தலைநகர் சந்த்ராவதியை முற்றுகையிடும்படி இந்திரனுக்கு ஆணையிட்டார்.

ஹரியின் தலைமையில் பெரும் போர் நடந்தது. பல்வேறு பூதங்கள் போரில் கொல்லப்பட்டன. பகவான் ஹரி முராவுடன் ஆயிரம் தேவ வருடங்கள் போரிட்டு, தளர்வினால் பதாரிக ஆசிரமத்தில் ஹைமவதி என்ற ஒரு அழகிய குகையில் ஒய்வெடுக்கச் சென்றார்.

பின்தொடர்ந்த முரா ஹரியைக் கொல்ல முடிவு செய்தது.

அப்போது பகவான் ஹரியின் உடலிலிருந்து ஒரு அழகிய பெண் வெளிப்பட்டு தன்னிடமிருந்த ஆயுதங்களால் முராவைத் தாக்கத் துவங்கியது. தொடர்ந்து மின்னலைப் போல் தாக்கிய பெண் யாராக இருக்கக் கூடும் என முரா எண்ணிக்கொண்டிருந்தபோதே அந்தப் பெண் முராவின் எல்லா ஆயுதங்களையும், தேரையும் சிதைத்து இறுதியில் அந்த பூதத்தின் கழுத்தையும் அறுத்தது. பகவான் ஹரி விழித்ததும் கூப்பிய கரங்களுடன் இருந்த அந்தப் பெண்ணையும் இறந்து கிடந்த பூதத்தையும் கண்டு அவளுக்கு ஒரு வரம் அளித்தார். அப்போது அந்தப் பெண், “பிரபு நீங்கள் எனக்கு வரம் தருவதானால் இந்த நாளில் முழு விரதம் இருப்பவர்களின் பாபங்களை களையும் வல்லமை தாருங்கள். நான் தோன்றிய இந்த நாளில் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுடன் உபவாசம் இருப்பவர்கள் இந்த உலகின் மகிழ்ச்சியை முழுதும் அனுபவித்துப் பின்னர் ஹரியுடைய பாதாரவிந்தத்தில் இருக்கக் கூடிய பாக்கியத்தைப் பெறட்டும். இதுவே நான் தங்களிடம் பெற விழையும் வரமாகும். உபவாசம் இருப்பவர்கள் அனைவரும் பக்தி, செல்வம் மற்றும் மோட்சத்தை பெறட்டும்,” என்று வேண்டிக் கொண்டாள்.

பகவான் ஹரியும் மகிழ்ந்து, “என் உடலின் ஆழ்நிலை ஆற்றலால் நீ உதித்தது பௌர்ணமி கடந்து பதினொன்றாம் நாள் ஆதலால் நீ ஏகாதசி என்று பெயர் பெறுகிறாய். ஏகாதசியன்று விரதம் இருப்பவர்களின் எல்லா பாபங்களையும் களைந்து என் சரணத்தில் இருக்கக் கூடிய பாக்கியத்தை அளிப்பேன்” என்று வரமளித்தார்.


ஏகாதசி விரதம் ஏன் கடைபிடிக்கவேண்டும்?

ஏகாதசி விரதம் இருப்பதை எல்லா சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. இந்த விரதம் இருப்பதால் மற்றெல்லா விரதங்களின் பலனையும் அடையலாம். ஆனால் மற்றெல்லா விரதங்களைக் கடைபிடித்தாலும் ஏகாதசி விரதத்தின் பலனை அடைய இயலாது. மேலும் ஏகாதசி விரதத்தினைக் கடைபிடிக்காமல் தானிய உணவினை உண்பது, பாவங்கள் செய்த கர்மத்தை உண்டாக்கும்.

ஒவ்வொரு 30 மற்றும் 48 வது நாளிலும், உடல் தன்னைத்தானே சுத்திகரித்து, புத்துயிர் பெற்று, மீண்டும் செயல்படுகிறது. மேலும், அந்த நேரத்தில் நிறைய உணவை உட்கொள்வது உடலில் எதிர்மறையான உணர்வு மற்றும் அசௌகரியத்தை உருவாக்கலாம். இது சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை சுழற்சியுடன் தொடர்புடையது.


பாவங்களை நீக்கும் ஏகாதசி:

முறைப்படி இருக்கும் ஏகாதசி விரதம் ஒருவரை அனைத்து வகைப் பாவங்களிலிருந்து விடுவிப்பதுடன் விரதம் இருப்பவர்களின் மூதாதையர்களையும் நற்கதி அடையச் செய்யும்.


ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

ஏகாதசி விரதத்தின் மிகமுக்கியமான அங்கம், புலன்களையும், மனதையும் கட்டுப்படுத்தி தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளால் ஆன உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். **(குறிப்பாக அரிசி சாதம் மட்டுமல்லாமல், இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட அனைத்துப் பலகாரங்கள், நவதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள், பருப்பு வகைகளும், பயறு வகைகளும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டுதல் உட்பட) ஏகாதசி அன்று முற்றிலும் விலக்கப்படவேண்டும்.)**


விரதம் கடைபிடிக்க இத்தனை கவனம் தேவைப்படுவதால்,

1. முதல் தர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் ஏகாதசி விரதம் கடைபிடிப்பார்கள். அல்லது 2. துளசி தீர்த்தம் மட்டும் உட்கொண்டும். 3.நீர் உணவுகளான நீர், மோர், பால், தயிர், இள்நீர் போன்றவை உட்கொண்டும். 4. பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டும்.

நிர்ஜலா: நாள் முழுவதும் எந்த விதமான உணவையும் (தண்ணீர் உட்பட) உட்கொள்ளக்கூடாது. சஜலா: தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் மற்றும் பிற திரவ உணவுப் பொருட்களால் உடலை நாள் முழுவதும் இயக்க வேண்டும். ஃபராலி: பால் மற்றும் பழங்களை மட்டும் எடுத்துக் கொள்வது எதுவாக இருப்பினும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்தபிறகு பிரசாதமாக உண்ண வேண்டும். ஏகாதசி மற்றும் விரத நாட்களில் குறைந்தது 16 சுற்றுகள் ஜபம் செய்யவேண்டும்.<


ஏகாதசி அன்று செய்யவேண்டியது என்ன…?

ஏகாதசி முழுவதும், பகவானின் நாமம் சொல்வது அதிலும் குறிப்பாக கலியுக தாரக மந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே., ஹரே ராம, ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, மஹாமந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பது மிகவும் சிறந்தது.

நாம ஜபம் செய்தல், பகவத் கீதை, பாகவதம் படித்தல்,

இறைவனை தரிசிக்க ஆலயம் செல்லுதல்,

பகவத்கைங்கரியத்திலும், அவரது நாம ரூப லீலைகளைப் பாடியும், ஜபித்தும், கேட்டும் அன்றைய தினத்தை இறைவன் ஹரிக்காக முழுவதும் அர்ப்பணிக்க வேண்டும்.


ஏகாதசி அன்று செய்யக்கூடாதது என்ன…?

ஏகாதசி அன்று, சினிமா செல்வதோ, பரமபதம் ஆடுவதோ, வீண்பேச்சுக்களில் காலத்தை விரயம் செய்வதோ அல்லது அவசியமின்றி உறங்குவதோ விரதத்திற்கு சற்றும் உதவாது. திருமணம் போன்ற உலக காரியங்களை ஏகாதசி அன்று தவிர்ப்பது நல்லது.


ஏகாதசி விரதத்தின் பலன்கள்:

பகவானை எண்ணி, பகவானுக்கும் நமக்கும் உள்ள ஆத்மா- பரமாத்மா உறவை உணர்ந்து, பகவானின் திருப்பாதங்களை அடைவதே ஏகாதசி விரதத்தின் முக்கிய அம்சமாகும். தெரிந்தோ தெரியாமலோ செய்த அனைத்துப் பாவங்களிலிருந்தும் நிவாரணம் பெறச்செய்கிறது.

இருப்பினும், பௌதீக பலன்களும் நிறைய உள்ளன. அவற்றுள் சில

* ஏகாதசி மனதைத் தூய்மையாக்கி, உடலின் நச்சு நீக்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. * எந்த வகையான கட்டிகள் உருவாவதையும் தடுக்கிறது மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் நோய்களைத் தவிர்க்கிறது. * சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, இதனால் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது. * கொழுப்புகளை ஆற்றலாக மாற்ற உதவுகிறது, எனவே தேவையற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் சுத்தப்படுத்தப்படுகிறது. * உண்ணாவிரதத்திற்குப் பிறகு உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். * ஏகாதசி விரதம் உங்களின் ஆன்மீக பலத்தை அதிகரிக்கும். * உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


ஏகாதசி விரதம் முடிப்பது எவ்வாறு..?

ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று, வைஷ்ணவ நாட்காட்டிகளில் காட்டியுள்ளபடி, குறிப்பிட்ட நேரத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட தான்ய உணவை (ஏகாதசி அன்று எதை சாப்பிடவில்லையோ அதை சாப்பிடலாம்) உட்கொண்டு ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பது, எந்த அளவு முக்கியமோ, அதே அளவு அடுத்த நாளான துவாதசியன்று குறிப்பிட்ட நேரத்தில் விரத்தை முடிப்பதும் முக்கியமாகும்.


குறிப்பு: விரதம் முடிக்கும் நேரம் இடத்திற்கு இடம் சற்று மாறுபடும். 

** ஹரே கிருஷ்ணா ** 

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare