அத்தியாயம் – 17
காளிங்களின் வரலாறு

பதம் 10.17.1
ஸ்ரீ-ராஜோவாச
நாகாலயம் ரமணகம் கதம் தத்யாஜ காளிய:
க்ருதம் கிம் வா ஸுபர்ணஸ்ய தேனைகேனாஸமஞ்ஜஸம்

ஸ்ரீ-ராஜா உவாச—மன்னர் கூறினார்; நாக—நாகங்களின்; ஆலயம்—உறைவிடம்; ரமணகம்—ரமணகத் தீவு; கதம்—ஏன்; தத்யாஜ—துறந்து; காளிய:—காளிங்கன்; க்ருதம்—செய்யப்பபட்டது; கிம்-வா—மற்றும் ஏன்; ஸுபர்ணஸ்ய—கருடனின்; தேன—அவனுடன் (காளிங்கன்); ஏகேன—மட்டும்; ஆஸமஞ்ஜஸம்—பகைமை.

(காளிங்கனைப் பகவான் கிருஷ்ணர் எவ்வாறு தண்டித்தார் என்பதை அறிந்து கொண்ட) மன்னர் பரீக்ஷித்து வினவினார்: காளிங்கன் ஏன் நாகங்களின் இருப்பிடமான ரமணகத் தீவினை நீங்கினான் என்றும், கருடன் ஏன் அவனிடம் பகைமை பாராட்டினார் என்றும் கேட்டார்.

பதங்கள் 10.17.2 – 10.17.3
ஸ்ரீ-ஸுக உவாச
உபஹார்யை: ஸர்ப்ப-ஜனைர் மாஸு மாஸுஹ யோ பலி:
வானஸ்பத்யோ மஹா-பாஹோ நாகானாம் ப்ராங்-நிரூபித:

ஸ்வம் ஸ்வம் பாகம் ப்ரயச்சந்தி நாகா: பர்வணி பர்வணி
கோபீதாயாத்மன: ஸர்வே ஸுபர்ணாய மஹாத்மனே

ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; உபஹார்யை:—அளிப்பதற்குத் தகுதி உடையவர்கள்; ஸர்ப்ப-ஜனை:—நாக இனத்தினால்; மாஸி மாஸி—ஒவ்வொரு மாதமும்; இஹ—இங்கே (நாகங்களின் இருப்பிடத்தில்); ய:—இது; பலி:—அர்ப்பணிப்புகள்; வானஸ்பத்ய:—ஒரு மரத்தின் அடியில்; மஹா-பாஹோ—ஓ, வலிமைமிக்கக் கரங்களையுடைய பரீக்ஷித்துவே; நாகானாம்—நாகங்களுக்கு; ப்ராக்—முன்னர்; நிரூபித:—விதிக்கப்பட்ட; ஸ்வம் ஸ்வம்—தத்தமக்குரிய; பாகம்—பாகத்தினை; ப்ரயச்சந்தி—அவர்கள் படைத்தனர்; நாகா:—நாகங்கள்; பர்வணி பர்வணி—மாதம் ஒருமுறை; கோபீதாய—பாதுகாப்பிற்காக; ஆத்மன:—அவர்களின்; ஸர்வே—அனைவரின்; ஸுபர்ணாய—கருடனுக்கு; மஹா-ஆத்மனே—சக்திமிக்க.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கருடனால் கொன்று தின்னப்படுவதைத் தவிர்க்க விரும்பிய நாகங்களெல்லாம் ஒன்று கூடி, தாம் ஒவ்வொன்றும் மாதம் ஒருமுறை அவருக்கு வேண்டிய உணவுப் பொருட்களை ஓர் மரத்தின் அடியில் படைத்துவிடுவதாக அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. இவ்வாறு ஒ, வலிமைமிக்கக் கரங்களையுடைய பரீக்ஷித்து மன்னனே, அவை ஒவ்வொன்றும் தமது பாதுகாப்பிற்கு விலையாக விஷ்ணுவின் சக்திமிக்க வாகனமான கருடனுக்கு ஒவ்வொரு மாதமும் அவருக்குரிய பங்கினை அளித்து வந்தன.

பதம் 10.17.4
விஷ-வீர்ய-மதாவிஷ்ட: காத்ரவேயஸ் து காளிய:
கதர்தீ-க்ருத்ய கருடம் ஸ்வயம் தம் பபுஜே பலிம்

விஷ—அவனது விஷத்தின் காரணமாக; வீர்ய—அவனது வலிமை; மத—புத்திமயக்கம்; ஆவிஷ்ட:—ஆழ்ந்து; காத்ரவேய:—கத்ருவின் மைந்தன்; து—மாறாக; காளிய:—காளிங்கன்; கதர்தீ-க்ருதய—மதிக்காது; கருடம்—கருடன்; ஸ்வயம்—அவனது; தம்—அது; பபுஜே—தின்றான்; பலிம்—உணவுப்பொருட்களை.

பெரும்பாலும் எல்லா நாகங்களும் முறையாகவும், ஒழுங்காகவும் கருடனுக்கு உணவுப் பொருட்களை அளித்துத் தமது கடமையைச் செய்த போதிலும் ஒரே ஒரு நாகம் கத்ருவின் மைந்தனும் முரட்டுக் குணம் உடையவனுமான காளிங்கன் என்னும் நாகம் கருடனுக்குப் படைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கருடன் உண்பதற்கு முன்பே தான் உண்டு வந்தான். இவ்வாறு காளிங்கன் பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடனை நேரடியாக அவமதித்தான்.

பதம் 10.17.5
தச் ச்ருத்வா குபிதோ ராஜன் பகவான் பகவத்-ப்ரிய:
விஜிகாம்ஸுர் மஹா-வேக: காளியம் ஸமுபாத்ரவத்

தத்—அது; ஸ்ருத்வா—கேட்டு; குபித:—சினங்கொண்டு; ராஜன்—ஒரு ராஜனே; பகவான்—ஆற்றல்மிக்க கருடபகவான்; பகவத்-ப்ரிய:—முழுமுதற்கடவுளின் பிரியத்திற்குரியவர்; விஜிகாம்ஸு:—கொல்வதற்கு விரும்பி; மஹா-வேக:—பெரும் வேகத்துடன்; காளியம்—காளியனிடம்; ஸமுபாத்ரவத்—விரைந்துவந்தார்.

ஓ, மன்னனே, முழுமுதற்கடவுளின் அன்பிற்குரியவரான ஆற்றல் மிக்கக் கருடபகவான் இதனைக் கேள்விப்பட்டுப் பெருஞ்சினம் கொண்டார். காளிங்கனைக் கொல்வதற்கு விரும்பி அவர் அதிவேகத்துடன் காளிங்கனை நோக்கி வந்தார்.

பதம் 10.17.6
தம் ஆபதந்தம் தரஸா விஷாயுத:
ப்ரத்யப்யயாத் உத்தித-நைக-மஸ்தகக:
தத்பி: ஸுபர்ணம் வ்யதஸத் தத்-ஆயுத:
கரால-ஜிஹ்வோச் வஸிதோக்ர-லோசன:

தம்—அவர், கருடன்; ஆபதந்தம்—தாக்கினார்; தரஸா—வேகமாக; விஷ—விஷத்தின்; ஆயுத:—அவன் வைத்திருந்த ஆயுதம்; ப்ரதி—நோக்கி; அப்யயாத்—ஓடினான்; உத்தித—உயர்ந்தன; ந ஏக—பல; மஸ்தக:—அவனது தலைகள்; தத்பி:—விஷப்பற்களுடன்; ஸுபர்ணம்—கருடன்; வ்யதஸத்—கடித்தான்; தத்-ஆயுத:—அவனது கூர்மையான விஷப்பற்கள் என்னும் ஆயுதங்களினால்; கரால—அச்சம்; ஜிஹ்வா—அவனது நாக்குகள்; உச்வஸி—விரிந்தன; உக்ர—பயங்கரமாக; லோசன:—அவனது விழிகள்.

விஷத்தினை ஆயுதமாகக் கொண்ட காளிங்கன் மீது கருடன் வேகமாக வந்து வீழ்ந்தவுடன், அவன் அவரைத் திருப்பித் தாக்குவதற்காகத் தனது எண்ணற்ற தலைகளைப் படங்களாக விரித்தான். பிளவுண்ட தனது நாக்குகளைக் காட்டித் தனது விழிகளை அகல விரித்து உக்கிரமாகப் பார்த்தான். பிறகு காளிங்கன் தனது கூர்மையான விஷப் பற்களினால் கடித்தான்.

பதம் 10.17.7
தம தார்க்ஷய-புத்ர: ஸ நிரஸ்ய மன்யுமான்
ப்ரசண்ட-வேகோ மதுஸூதனாஸன:
பக்ஷேண ஸவ்யேன ஹிரண்ய-ரோசிஷா
ஜகான கத்ரு-ஸுதம் உக்ர-விக்ரம:

தம்—அவனை, காளிங்கனை; தார்க்ஷ்ய-புத்ர:—காச்யபரின் மைந்தன்; ஸ:—அவர், கருடன்; நிரஸ்ய—தடுத்து; மன்யு-மான்—சினம் மிக்கவராக; ப்ரசண்ட-வேக:—பயங்கரமான வேகத்துடன் சென்று; மதுஸூதன-ஆஸன:—பகவான் மதுசூதனரின் வாகனமான; பக்ஷேண—தனது சிறகினால்; ஸவ்யேன—இடது; ஹிரண்ய—பொன்னைப்போல்; ரோசிஷா—அதன் ஒளி; ஜகான—அவர் தாக்கினார்; கத்ரு-ஸுதம்—கத்ருவின் மைந்தன் (காளிங்கன்); உக்ர—உக்கிரமாக; விக்ரம:—அவரது வீரம்.

தார்க்ஷ்யனின் சினங்கொண்ட புத்திரரான கருடன் அதிபயங்கர வேகத்துடன் வந்து காளிங்கனைத் தாக்கினார். பகவான் மதுசூதனரின் ஆற்றல் மிக்க வாகனமான கருடன், பொன்னைப்போல் மின்னும் தனது இடது சிறகினால் கத்ருவின் மைந்தனான காளிங்கனை உக்கிரமாகத் தாக்கினார்.

பதம் 10.17.8
ஸுபர்ண-பக்ஷாபிஹத: காளியோ ‘தீவ விஹ்வல:
ஹ்ரதம் விவேஸ காளிந்த்யாஸ் தத்-அகம்யம் துராஸதம்

ஸுபர்ண—கருடனின்; பக்ஷ—சிறகினால்; அபிஹத:—தாக்குதல்; காளிய:—காளிங்கன்; அதீவ—அதீதமாக; விஹ்வல:—மனக்கிலேசமுற்று; ஹ்ரதம்—ஒரு குளம்; விவேஸ—புகுந்து கொண்டான்; காளிந்தய:—யமுனைநதியின்; தத்-அகம்யம்—கருடனால் அணுக முடியாத; துராஸதம்—புகுவதற்கு அரிய.

கருடனின் சிறகினால் தாக்கப்பட்ட காளிங்கன் மிகுந்த மனக்கிலேசத்திற்கு ஆளானான். பிறகு அவன் யமுனை நதியின் அருகிலிருந்த ஒரு குளத்தினுள் புகுந்துகொண்டான். கருடனால் இக்குளத்தினுள் புகமுடியாது, ஏன் அக்குளத்தினை நெருங்கக் கூட முடியாது.

பதம் 10.17.9
தத்ரைகதா ஜல-சரம் கருடோ பக்ஷ்யம் ஈப்ஸிதம்
நிவாரித: ஸௌபரிணா ப்ரஸஹ்ய க்ஷுதிதோ ‘ஹரத்

தத்ர—அங்கே (அக்குளத்தில்); ஏகதா—ஒருமுறை; ஜல சரம்—நீர் வாழ் உயிர்; கருட:—கருடன்; பக்ஷ்யம்—அவரது உணவு; ஈப்ஸிதம்—விரும்பினார்; நிவாரித:—தடுத்தார்; ஸௌபரிணா—சௌபரிமுனிவர்; ப்ரஸஹ்ய—ஊக்கமுடன்; க்ஷுதித:—மிக்கப் பசியோடு; அஹரத்—அவர் பிடித்தார்.

கருடன் மிகவும் விரும்பி உண்ணும் உணவு மீன் ஆதலினால் ஒருமுறை அவர் அக்குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து உண்பதற்காக வந்தார். அக்குளத்தினுள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த சௌபரி என்னும் முனிவரால் அங்கே மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டிருந்த போதிலும் கருடன் மிகுந்த பசியுடன் இருந்ததினால், துணிச்சலுடன் மீனைப் பிடித்தார்.

பதம் 10.17.10
மீனான் ஸு-து: கிதான் த்ருஷ்ட்வா தீனான் மீன-பதெள ஹதே
க்ருபயா ஸௌபரி: ப்ராஹ தத்ரத்ய-க்ஷேமம் ஆசரன்

மீனான்—மீன்கள்; ஸு-து: கிதான்—மிகவும் துக்கிப்பதை; த்ருஷ்ட்வா—கண்டு; தீனான்—தீனர்களான; மீன-பதெள—மீன்களின் தலைவன்; ஹதே—கொல்லப்பட்டது; க்ருபயா—இரக்கம் கொண்டு; ஸௌபரி:—சௌபரிய முனிவர்; ப்ராஹ—கூறினார்; தத்ரத்ய—அங்கு வசிப்பவையின்; க்ஷேமம்—நலத்திற்காக; ஆசரன்—செயல்பட முயன்றார்.

அக்குளத்தில் தமது தலைவனை இழந்ததினால் பிற மீன்கள் யாவும் வருந்துவதைக் கண்ட சௌபரி முனிவர், அக்குளத்திலுள்ள உயிர்களின் மீது மிகுந்த கருணையுடையவராகத் தன்னைக் கருதிக் கொண்டு பின் வரும் சாபத்தினைக் கருடனுக்கு அளித்தார்.

பதம் 10.17.11
அத்ர ப்ரவிஸ்யோ கருடோ யதி மத்ஸ்யன் ஸ காததி
ஸத்ய: ப்ராணைர் வியுஜ்யேத ஸத்யம் தத் ப்ரவீமி அஹம்

அத்ர—அக்குளத்தில்; ப்ரவிஸ்ய—புகுந்து; கருட:—கருடன்; யதி—எனில்; மத்ஸ்யான்—மீன்; ஸ:—அவர்; காததி—உண்பது; ஸத்ய:—உடனே; ப்ராணை:—பிராணனை; வியுஜ்யேத—இழப்பார்; ஸத்யம்—சத்தியம்; ஏதத்—இது; ப்ரவீமி—கூறுவது; அஹம்—நான்.

கருடன் மீண்டும் அக்குளத்திற்கு வந்து மீனைப்பிடித்தால் அவர் உடனே தனது உயிரை இழப்பார். நான் சொல்லும் இது சத்தியமாகும்.

பதம் 10.17.12
தத் காளிய: பரம் வேத நான்ய: கஸ்சன லேலிஹ:
அவாத்ஸீத் கருடாத் பீத: க்ருஷ்ணேன ச விவாஸித

தம்—அது; காளிய:—காளிங்கன்; பரம்—மட்டும்; வேத—அறிவான்; ந—இல்லை; அன்ய:—பிறர்; கஸ்சன—எவரும்; லேலிஹ:—நாகம்; அவாத்ஸீத்—வசித்துவந்தான்; கருடாத்—கருடனின்; பீத:—அஞ்சி; க்ருஷ்ணேன—கிருஷ்ணரால்; ச—மற்றும்; விவாஸித:—விரட்டினார்.

பிற நாகங்களுக்குத் தெரியாத இவ்வுண்மையினை காளிங்கன் மட்டுமே அறிந்திருந்தான். அதனால் அவன் கருடனுக்கு அஞ்சி யமுனைக் குளத்தில் வசித்துவந்தான். பிறகு பகவான் கிருஷ்ணர் அவனை அங்கிருந்து விரட்டி அடித்தார்.

பதங்கள் 10.17.13 – 10.17.14
க்ருஷ்ணம் ஹ்ரதாத் விநீஷ்க்ராந்தம் திவ்ய-ஸ்ரக்-கந்த-வாஸஸம்
மஹா-மணி-கணாகீர்ணம் ஜாம்பூநத-பாரிஷ்க்ருதம்

உபலப்யோத்திதா: ஸர்வே லப்த-ப்ராணா இவாஸவ:
ப்ரமோத-நிப்ருதாத்மானோ கோபா: ப்ரீத்யாபிரேபிரே

க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; ஹ்ரதாத்—குளத்திலிருந்து வெளியே வருதல்; விநீஷ்க்ராந்தாம்—எழுந்து; திவ்ய—திவ்யமான; ஸ்ரக்—மாலைகள் அணிந்து; கந்த—நறுமணம்; வாஸஸம்—ஆடைகள்; மஹா-மணி-கண—ஏராளமான இரத்தினங்களினால்; ஆகீர்ணம்—மறைத்து; ஜாம்பூநத—பொன்னுடன்; பரிஷ்க்ருதம்—அலங்கரித்து; உபலப்ய—கண்டு; உத்திதா:—எழுந்தனர்; ஸர்வே—அனைவரும்; லப்த-ப்ராணா:—அவர்கள் மீண்டும் சுய உணர்வு பெற்று; இவ:—போன்று; அஸவ:—உணர்வுகள்; ப்ரமோத—மகிழ்ச்சியுடன்; நிப்ருத-ஆத்மான:—நிறைந்து; கோபா:—ஆயர்குலத்தோர்; ப்ரீத்யா—பாசத்துடன்; அபிரேபிரே—அவரைத் தழுவிக் கொண்டனர்.

(கிருஷ்ணர் காளிங்கனைத் தண்டித்ததைப் பற்றி விளக்கிய சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்:) கிருஷ்ணர் திவ்யமான மாலைகள் அணிந்து, நறுமணத் தைலங்கள் பூசி, கண்ணைக் கவரும் ஆடைகளும், இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற பொன் ஆபரணங்களும் அணிந்து கொண்டு அக்குளத்திலிருந்து வெளியே வந்தார். அவரைக் கண்ட ஆயர்குலத்தோர் அனைவரும், உணர்ச்சியற்று வீழ்ந்திருந்தவன் மீண்டும் உணர்வு பெற்று எழுந்ததுபோல் உடனே அவரைப் பாசத்துடன் தழுவிக் கொண்டனர்.

பதம் 10.17.15
யஸோதா ரோஹிணீ நந்தோ கோப்யோ கோபாஸ் ச கௌரவ
க்ருஷ்ணம் ஸமேத்ய லப்தேஹா ஆஸன் ஸுஷ்கா நகா அபி

யஸோதா ரோஹிணீ நந்த:—யசோதை, ரோகிணி, மற்றும் நந்த மகாராஜா; கோப்ய:—கோபியர்கள்; கோபா:—கோபாலர்கள்; ச—மற்றும்; கௌரவ—ஓ, குருகுலத்தில் பிறந்த பரீக்ஷித்துவே; க்ருஷ்ணம்—பகவான் கிருஷ்ணர்; ஸமேத்ய—சந்தித்தல்; லப்த—திரும்பப் பெற்றனர்; ஈஹா:—அவர்களது உணர்வினை; ஆஸன்—ஆயீனர்; ஸுஷ்கா:—பட்டுப்போன; நகா:—மரங்கள்; அபி—கூட.

யசோதை, ரோகிணி, நந்தமகாராஜா, கோபியர்கள், கோபாலர்கள் அனைவரும் உணர்வு பெற்று எழுந்தவுடன் கிருஷ்ணரை நோக்கி விரைந்தனர். ஓ, குருகுலத் தோன்றலே, பட்டுப்போன மரங்கள் கூட அவரைக் கண்டு மீண்டும் தளிர்த்தன.

பதம் 10.17.16
ராமஸ் சாச்யுதம் ஆலிங்க்ய ஜஹாஸாஸ்யானுபாவ-வித்
ப்ரேம்ணா தம் அங்கம் ஆரோப்ய புன: புனர் உதைக்ஷத
காவோ வ்ருஷா வத்ஸதர்யோ லேபிரே பரமாம் முதம்

ராம:—பகவான் பலராமர்; ச—மற்றும்; அச்யுதம்—குற்றமற்ற முழு முதற்கடவுளான பகவான் கிருஷ்ணர்; ஆலிங்க்ய—தழுவிக்கொண்டார்; ஜஹாஸ—சிரித்தார்; அஸ்ய—அவரது; அனுபாவ-வித்—அவரது சர்வ சக்தியினை நன்கறிந்தவர்; ப்ரேம்ணா—அன்பினால்; தம்—அவரை; அங்கம்—தனது மடியில் தூக்கி வைத்துக் கொண்டார்; ஆரோப்ய—எழுந்து; புன: புன:—மீண்டும், மீண்டும்; உதைக்ஷத—பார்த்தார்; காவ:—பசுக்கள்; வ்ருஷா:—காளைகள்; வத்ஸதர்ய:—பெட்டைக் கன்றுகள்; லேபிரே—எய்தின; பரமாம்—பரம; முதம்—ஆனந்தம்.

தனது குற்றமற்ற தம்பியின் சர்வ சக்தியினை நன்கறிந்திருந்த பகவான் பலராமர் அவரை ஆவிசேரத் தழுவிக்கொண்டார். அன்புப் பெருக்கினால் பலராமர் கிருஷ்ணரைத் தனது மடியில் தூக்கி வைத்துக் கொண்டு அவரையே வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார். பசுக்களும், காளைகளும், பெட்டைக் கன்றுகளும் கூட பரமானந்த நிலை எய்தின.

பதம் 10.17.17
நந்தம் விப்ரா: ஸமாகத்ய குரவ: ஸ-களத்ரகா:
ஊகஸ் தே காளிய-க்ரஸ்தோ திஷ்ட்யா முக்தஸ் தவாத்மஜ:

நந்தம்—நந்தமகாராஜாவினிடத்து; விப்ரா:—அந்தணர்கள்; ஸமாகத்ய—வந்து; குரவ:—மரியாதைக்குரிய பெரியவர்கள்; ஸ-களத்ரகா:—தமது மனைவியருடன்; ஊக:—கூறினர்; தே—அவர்கள்; காளிய-க்ரஸ்த:—காளிங்கனால் பிடிக்கப்பட்ட; திஷ்ட்யா—தெய்வ விதியினை; முக்த:—விடுபட்டார்; தவ—உமது; ஆத்ம-ஜ:—மைந்தன்.

அந்தணர்கள் அனைவரும் தமது மனைவியருடன் சேர்ந்து நந்த மகாராஜாவிடம் வந்தனர். அவர்கள் அவரிடம் ‘உமது மைந்தன் காளிங்கனின் பிடியில் சிக்கியிருந்தான், ஆனால் தெய்வானு கூலத்தினால் இப்போது அவன் விடுபட்டு விட்டான்’ என்று கூறினர்.

பதம் 10.17.18
தேஹி தானம் த்வி-ஜாதீனாம் க்ருஷ்ண-நிர்முக்தி-ஹேதவே
நந்த: ப்ரீத-மனா ராஜன் கா: ஸுவர்ணம் ததாதிஸத்

தேஹி—நீ அளித்தல் வேண்டும்; தானம்—தானம்; த்வி-ஜாதீனாம்—அந்தணர்களுக்கு; க்ருஷ்ண-நிர்முக்தி—கிருஷ்ணரின் நன்மைக்காக; ஹேதவே—நோக்கத்திற்காக; நந்த:—நந்தமகாராஜா; ப்ரீத-மனா:—தனது மனதினுள்ளே மகிழ்ந்து; ராஜன்—ஓ, பரீக்ஷித்து மன்னனே; கா:—பசுக்கள்; ஸுவர்ணம்—பொன்; ததா—பின்னர்; ஆதிஸத்—அளித்தார்.

பிறகு அந்த அந்தணர்கள் நந்த மகாராஜாவிடம் கூறினர், “உமது மைந்தன் கிருஷ்ணனுக்கு எப்போதும் எந்தவிதமான ஆபத்துக்களும் வராமல் இருக்க வேண்டுமென்றால் நீர் அந்தணர்களுக்குத் தானமளித்தல் வேண்டும்” என்று ஓ, அரசனே, இதனைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த நந்தமகாராஜா அவர்களுக்கு பொன்னாலான பொருட்களையும், பசுக்களையும் தானமாக அளித்தார்.

பதம் 10.17.19
யஸோதாபி மஹா-பாகா நஷ்ட-லப்த-ப்ரஜா ஸதீ
பரிஷ்வஜ்யாங்கம் ஆரோப்ய முமோசாஸ்ரு-கலாம் முஹூ:

யஸோதா—அன்னை யசோதை; அபி—மற்றும்; மஹா-பாகா—மகாபாக்கியசாலியான; நஷ்ட—இழந்த; லப்த—மீண்டும் பெற்றாள்; ப்ரஜா—அவளது மைந்தன்; ஸதீ—பத்தினிப் பெண்; பரிஷ்வஜ்ய—தழுவிக் கொண்டான்; அங்கம்—தனது மடியின்மீது; ஆரோப்ய—எழுந்து; முமோச—அவள் விடுவித்தாள்; அஸ்ரு—கண்ணீர்; கலாம்—மழைபோல்; முஹு:—தொடர்ந்து.

தனது மைந்தனை இழந்து மீண்டும் பெற்ற பாக்கியசாலியான அன்னை யசோதை அவரைத் தனது மடியின் மீது வைத்துக் கொண்டாள். அப்பத்தினிப் பெண், அவரை மீண்டும் மீண்டும் உச்சிமுகர்ந்து, தனது கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளம் பெருக அழுதாள்.

பதம் 10.17.20
தாம் ராத்ரிம் தத்ர ராஜேந்த்ர க்ஷுத்-த்ருட்ப்யாம் ஸ்ரம-கர்ஷிதா:
ஊஷுர் வ்ரஜெளகஸோ காவ: காளிந்த்யா உபகூலத:

தாம்—அந்த; ராத்ரிம்—இரவு; தத்ர—அங்கே; ராஜு-இந்த்ர—ஓ, ராஜ ராஜனே; க்ஷுத்-த்ருட்ப்யாம்—பசிதாகத்தினால்; ஸ்ரம—சிரமத்தினால்; கர்ஷிதா:—பலவீனமடைந்த; ஊஷு:—அவர்கள் இருந்தனர்; வ்ரஜ-ஓகஸ:—விருந்தாவனவாசிகள்; காவ:—மற்றும் பசுக்கள்; காளிந்த்யா:—யமுனையின்; உபகூலத:—கரை அருகே.

ஓ, அரசர்களுக்கெல்லாம் அரசனே (பரீக்ஷித்து), விருந்தாவன வாசிகள் அனைவரும் பசி, தாகம், மற்றும் சிரமத்தின் காரணமாக மிகவும் பலவீனமாக இருந்த காரணத்தினால் அவர்கள் தமது பசுக்களுடன் அன்றைய இரவு காளிந்தி நதியின் கரையிலேயே கண்துயின்றனர்.

பதம் 10.17.21
ததா ஸுசி-வனோத்பூதோ தாவாக்னி: ஸர்வதோ வ்ரஜம்
ஸுப்தம் நிஸீத ஆவ்ருத்ய ப்ரதக்தும் உபசக்ரமே

ததா—பின்னர்; ஸுசி—கோடையின்; வன—வனத்தில்; உத்பூத:—எழுந்த; தாவ-அக்னி:—பெருநெருப்பு; ஸர்வத:—எல்லாப்பக்கங்களிலும்; வ்ரஜம்— விருந்தாவனவாசிகளின்; ஸுப்தம்—உறங்கிக் கொண்டிருந்த; நிஸீதே—இரவின் நடு ஜாமத்தில்; ஆவ்ருத்ய—சூழ்ந்து கொண்டது; ப்ரதக்தும்—எரிக்க; உபசக்ரமே—தொடங்கியது.

பிருந்தாவன மக்களெல்லாம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அன்றைய இரவின் நடு ஜாமத்தில், கோடை வெம்மையினால் வறண்டு போயிருந்த காட்டில் பெருந்தீ பற்றிக் கொண்டது, அத்தீ விரஜத்தைச் சேர்ந்தோரின் எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு அவர்களைத் தகிக்கத் தொடங்கியது.

பதம் 10.17.22
தத உத்தாய ஸம்ப்ராந்த தஹ்யமானா வ்ரஜெகஸ:
க்ருஷ்ணம் யயுஸ் தே ஸரணம் மாய-மனுஜம் ஈஸ்வரம்

தத:— பின்னர்; உத்தாய—விழித்தெழுந்து; ஸம்ப்ராந்த:—கொந்தளித்து; தஹ்யமானா:—எரிக்கப்படும்; வ்ரஜு-ஓகஸ:—விரஜ வாசிகள்; க்ருஷ்ணம்—கிருஷ்ணரிடம்; யயு:—சென்றனர்; தே—அவர்கள்; ஸரணம்—அடைக்கலத்திற்கு; மாயா—அவரது சக்தியால்; மனுஜம்—மனிதனைப்போல் தோன்றியவர்; ஈஸ்வரம்—முழுமுதற்கடவுள்.

காட்டுத்தீயின் வெம்மையினால் விழித்தெழுந்த விருந்தாவனவாசிகள் எங்கே தாம் அந்த காட்டுத் தீயினால் எரிக்கப்பட்டு விடுவோமோவென்று அஞ்சினார். அதனால் அவர்கள், தமது ஆன்மீகச் சக்தியால் மானிட வடிவில் தோன்றியிருக்கும் பரமபுருஷபகவான் கிருஷ்ணரைத் தஞ்சமடைந்தனர்.

பதம் 10.17.23
க்ருஷ்ண க்ருஷ்ண மஹா-பாக ஹே ராமாமித-விக்ரம
ஏஷ கோரதமோ வஹ்னிஸ் தாவகான் க்ரஸதே ஹி ந:

க்ருஷ்ண—ஓ கிருஷ்ணா; க்ருஷ்ண—ஓ கிருஷ்ணா; மஹா-பாக—ஓ, எல்லாவளங்களும் நிறைந்த பகவானே; ஹே ராம—ஓ, பகவான் பலராமா; அனைத்து இன்பங்களுக்கும் ஆதாரமானவரே; அமித-விக்ரம—எல்லையற்ற சக்தி கொண்ட நீ; ஏஷ:—இது; கோரதம:—மிகப்பயங்கரமான; வஹ்னி—நெருப்பு; தாவகான்—உங்களது; க்ரஸதே—விழுங்குகின்ற; ஹி—உண்மையில்; ந:—எம்மை.

(விருந்தாவனவாசிகள் கூறினர்:) கிருஷ்ணா! கிருஷ்ணா!! ஓ, எல்லா வளங்களும் நிறைந்த பகவானே, ஓ, ராமா! சர்வசக்தி உடையவரே, உங்கள் பக்தர்களாகிய எங்களை இப்பயங்கரமான காட்டுத் தீ விழுங்கப் பார்க்கிறது.

பதம் 10.17.24
ஸு-துஸ்தரான் ந: ஸ்வான் பாஹி காலாக்னே: ஸுஹ்ருத: ப்ரபோ
ந ஸக்னுமஸ் த்வச்-சரணம் ஸந்த்யக்தும் அகுதோ-பயம்

ஸு-துஸ்தராத்—கடப்பதற்கு அரிய; ந:—எம்மை; ஸ்வான்—உமது பக்தர்கள்; பாஹி—காத்தருள்வீராக; கால-அக்னே:—இக்காலாக்னியிலிருந்து; ஸுஹ்ருத:—உங்கள் உண்மையான நண்பர்கள்; ப்ரபோ—ஓ, பிரபுவே; ந ஸக்னும:—நாங்கள் சக்தியற்றவர்கள்; த்வத்-சரணம்—உமது திருவடிகள்; ஸந்த்யக்தும்—விட்டுவிடுவதற்கு; அகுத: பயம்—அது அனைத்துப் பயங்களையும் நீக்கும்.

ஒ, பகவானே! நாங்கள் உமது உண்மை நண்பர்களும் பக்தர்களும் ஆவோம். கடத்தற்கரிய இக்காலாக்னியிலிருந்து எம்மைக் காத்தருள்வீராக. எல்லாப் பயங்களையும் நீக்கும் உமது தாமரைத் திருவடிகளை நாங்கள் ஒருபோதும் துறக்க மாட்டோம்.

பதம் 10.17.25
இத்தம் ஸ்வ-ஜன-வைக்லவ்யம் நிரீக்ஷ்ய ஜகத்-ஈஸ்வர:
தம் அக்னிம் அபிபத் தீவ்ரம் அனந்தோ ‘னந்த-ஸக்தி-த்ருக்

இத்தம்—இவ்வாறு; ஸ்வ-ஜன—அவரது பக்தர்கள்; வைக்லவ்யம்—துன்புறும் நிலை; நிரீக்ஷ்ய—கண்டு; ஜகத்-ஈஸ்வர:—ஜகத்தீஸ்வரர்; தம்—அது; அக்னிம்—அக்கினியை; அபிபத்—விழுங்கினார்; தீவ்ரம்—பயங்கரமான; அனந்த:—எல்லையற்ற பகவான்; அனந்த-ஸக்தி-த்ருக்—எல்லையற்ற சக்தியுடையவர்.

தமது பக்தர்கள் துன்புறுவதைக் கண்ட ஜகத்தீஸ்வரரும், எல்லையற்ற சக்தியுடையவருமான ஸ்ரீ கிருஷ்ணர், அப்பயங்கரக் காட்டுத்தீயைத் தானே விழுங்கினார்.

ஸ்ரீமத் பாகவதம், பத்தாம் காண்டத்தின் “காளிங்கனின் வரலாறு” எனும் தலைப்பை கொண்ட பதினேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare