யோகினி ஏகாதசி

யுதிஷ்டிரர் சொல்கிறார்,” ஜேஷ்ட மாதம் ( may – June) வரக்கூடிய ஜேஷ்டா ஏகாதசி பெருமையை அறிந்து கொண்டேன். தற்போது ஆஷாட மாதம் (June – July) கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய சுத்த ஏகாதசி பற்றி தங்களிடம் கேட்க விரும்புகிறேன். மது என்ற அரக்கனை கொன்ற மதுசூதனா அதைப் பற்றிய விளக்கத்தைக் கூறுவீராக..
பகவான் கூறுகிறார்,” ஆஷாட மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரக்கூடிய சுத்த ஏகாதசி பற்றி கூறுகிறேன் கேட்பீராக. யோகினி ஏகாதசி என்று புகழ் பெற்ற இது, நம் பாபங்களைக் களைந்து முக்தி தரக் கூடியது. இந்த உலகின் ஜட மாயையில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களை ஆன்மீகக் கடலின் கரைக்கு அழைத்துச் செல்லக் கூடியது. மூவுலகின் எல்லா விரத நாட்களிலும் சிறந்தது. அதன் சிறப்பை புராணங்களில் இருந்து எடுத்துக் கூறுகிறேன்.
அழகாபுரி அரசன் குபேரன், தேவர்களின் கணக்காயர், சிவபெருமானின் தீவிர பக்தர் ஆவார். அவர் ஹேமமாலி என்பவரை தோட்டக்காரராக வைத்திருந்தார். குபேரனை போல் யக்ஷனாகிய அவர் தன் அழகிய நீண்ட கண்களை உடைய மனைவி ஸ்வரூபவதியை மிகவும் விரும்பினார். தினமும் அவர் மானசரோவர் ஏரிக்குச் சென்று பூக்களைப் பறித்து வந்து குபேரனின் சிவ பூசைக்கு உதவுவார். ஒரு நாள் பூக்களை பூஜைக்கு கொண்டு வராமல் தன் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டார். தன் மனைவியின் மோகத்தில் மூழ்கி விட்டார். பூஜையின் போது குபேரன் மத்திய பூஜைக்கு பூக்கள் இல்லாததைக் கண்ட குபேரன் மிகவும் கோபம் கொண்டு கீழ்த்தரமான ஹேமமாலியை வரச் சொன்னார். தன் தவறை உணர்ந்த ஹேமமாலி பயத்துடன் வந்தார். கோபத்தால் சிவந்த கண்களையும் உதடுகள் துடிக்கவும் இருந்த குபேரனை வணங்கி நின்றார். குபேரன் அவனிடம், ” மதக் கோட்பாடுகளில் இருந்து தவறிய நீசனே வெண்குஷ்ட நோய்க்கு ஆட்பட்டு மனைவியைப் பிரிவாய். இந்த உலகில் வாழத் தகுதியை இழந்து கீழ் உலகில் சென்று துன்பம் அடைவாய் ” என்று சாபம் அளித்தார்.
ஹேமமாலி பூமியில் வெண்குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டு இருண்ட கானகத்தின் நடுவில் நீரோ, உணவோ, கிடைக்காமல், இரவில் வலியின் காரணமாக தூக்கமும் இன்றி தவித்தான். கோடையிலும் குளிரிலும் மிகவும் துயர் அடைந்தான். தூய்மையான சிவத்தொண்டு செய்ததால் பழைய நினைவுகள் அவனுக்கு இருந்தது. இரவும் பகலும் சுற்றித் திரிந்து இறுதியில் இமாலய பர்வதத்தின் ஒரு பகுதியை அடைந்தான். துறவிகளில் சிறந்த பிரம்மாவின் ஏழு நாட்களைத் தன் வாழ்நாள் என்று கொண்ட மார்க்கண்டேய ரிஷியைத் தரிசிக்கும் பேறு பெற்றார். மார்க்கண்டேய மகரிஷி இரண்டாம் பிரம்மைனைப் போல் அமைதியாகத் தன் ஆசிரமத்தில் அமர்ந்து இருந்தார். ஹேமமாலி தன் நிலைக்கு வருந்தி தொலைவில் இருந்தே தன் பணிவை வெளிப்படுத்தினான். மற்றவர் நலத்தில் அக்கறை கொண்ட மார்க்கண்டேய மகரிஷி,” நீ என்ன செய்து இந்த நிலைக்குத் தள்ளப் பட்டாய்” என்று வினவினார்.
உடனே ஹேமமாலி,” நான் குபேரனுடைய யக்ஷ வேலையாள். மானசரோவர் ஏரியில் இருந்து சிவபூஜைக்கு பூக்களை பறித்து வருவது என் பணியாகும். ஒரு நாள் மனைவியின் மேல் கொண்ட மோகத்தால் என் கடமையில் தவறினேன். அதனால் இந்த நிலைக்கு ஆட்பட்டு மனைவியையும் குடும்பத்தையும் என் சேவையையும் இழந்தேன். ஆனால் நான் செய்த புண்ணியத்தால் பக்தவத்சலம் போன்ற மற்றவரிடம் கருணையுள்ள தங்களை அடைந்தேன், என்னைக் காப்பாற்றுங்கள்” என்று பணிந்தான்.
நீ உண்மையைக் கூறியதால் உனக்கு மிகவும் உதவும் சிறந்த விரதம் பற்றி கூறுகிறேன். ஆஷாட மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி விரதம் உன் சாப விமோசனத்திற்கு உதவும்” என்று மார்க்கண்டேய மகரிஷி,” கூறினார். அதைக் கேட்டு நிலத்தில் மீண்டும் மீண்டும் விழுந்து பணிந்த ஹேமமாலியை மகரிஷி தழுவிக் கொண்டார். ஹேமமாலி மகரிஷி கூறியபடி நியமத்துடன் விரதம் இருந்து தன் சாப விமோசனம் அடைந்து, மீண்டும் தன் மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.
“பகவான்,” ஓ, யுதிஷ்டிரா,! யோகினி ஏகாதசி விரதம் மிகவும் சக்தி வாய்ந்தது. எண்பத்தி எட்டாயிரம் பிராமணர்களுக்கு போஜனம் அளித்த பயனை இந்த யோகினி ஏகாதசி விரதம் அளிக்கும். ஏகாதசி தேவி, அவர்களுக்கு எல்லா பாவங்களில் இருந்தும் விடுதலை அளித்து புனிதப் படுத்துவாள். இதுவே இந்த ஏகாதசியின் சிறப்பாகும்”. இதுவே ஆஷாட கிருஷ்ண பட்ச யோகினி ஏகாதசி சிறப்பு. இது பிரம்ம வைவர்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

