வாமன (பரிவர்தினி) ஏகாதசி

ஓ கிருஷ்ணா! பத்ரபாத அல்லது ரிஷிகேஷ் மாதத்தில் (ஆகஸ்ட் – செப்டம்பர்) சுக்ல பட்சத்தில் வரக் கூடிய ஏகாதசியின் பெயர், விரதம் இருப்பதால் அடையும் பயன் ஆகியன பற்றிக் கூறுங்கள்” என்று கேட்டார்.
கிருஷ்ணர், “ஓ யுதிஷ்டிரா! இந்த ஏகாதசி வாமன ஏகாதசி என்று அழைக்கப்படும், நம்மை உலகப் பற்றில் இருந்து விடுவிக்கும் வல்லமை வாய்ந்தது. அன்று விரதம் இருப்பவர் தங்கள் பாபம் முற்றும் தொலைத்து விடுவதால் இது ஜெயந்தி ஏகாதசி என்றும் அழைக்கப் படும். இதைப் பற்றி கேட்பதாலேயே நம் பாபம் எளிதாக தொலையும். குதிரையை தானம் செய்த பலன் கிடைக்கும்.
இந்த ஏகாதசி அன்று விரதம் இருப்பவர் தாமரை மலர் போன்று கண்கள் இருக்கும் பகவானை வாமனராக வழிபட வேண்டும். இதனால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இறந்த பின் நேரடியாக ஶ்ரீ ஹரியை அடைவர். மூவுலகிலும் இதை விட சிறந்த விரதம் இல்லை.
இந்த நன்னாளில் தான், நித்திரை செய்யும் விஷ்ணு மறுபுறம் திரும்பிப் படுப்பாராம். எனவே இது பரிவர்தினி ஏகாதசி என்றும் வழங்கப்படும்.
ஓ ஜனர்தனா! தாங்கள் எவ்வாறு நித்திரை செய்கிறீர்கள், ஒரு புறம் படுப்பதால் ஜடப் பொருள்கள் என்ன ஆகும்? பலி மகாராஜாவை எவ்வாறு கட்டி போடுகிறீர்கள்? பிராமணர்களை எவ்வாறு திருப்தி படுத்துவது? போன்ற வினாக்களுக்கு விடை தாருங்கள்?”
மேலும் பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளபடி எவ்வாறு சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது என்பது பற்றியும் விளக்குவீராக “.
பகவான் உடனே,” இந்த ஏகாதசி பற்றி கேட்டாலே பாபம் தொலையும். திரேதா யுகத்தில் பலிச் சக்கரவர்த்தி இருந்தார். அவர் அரக்கர் வம்சத்தில் பிறந்தாலும் என்னிடம் பக்தியோடு இருந்தார். வேதங்களை சொல்லி பல யாகங்கள் செய்தார். இருபிறவி எடுத்த பிராமணர்களை தொழுது தினமும் வேள்வியில் அவர்களை ஈடுபடுத்தினார். இவருக்கு இந்திரனுடன் ஏற்பட்ட போரில், என்னால் இந்திரனுக்கு அளிக்கப்பட்ட நாட்டை பலி கைப்பற்றினார். எனவே இந்திரனும் தேவர்களும் என்னிடம் பலிச்சக்கரவர்த்தி பற்றி முறையிட்டனர். பிரஹஸ்பதியுடன் என்னைச் சரணடைந்து வேத கோஷங்கள் முழங்கினர். எனவே நான் எனது ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரம் எடுக்க நேர்ந்தது. இந்த வாமன அவதாரத்தில் பிராமணனாக சென்று பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் தானமாகக் கேட்டேன். அவர் சம்மதித்தவுடன் விஸ்வரூபம் எடுத்து ஒரு அடியால் பூவுலகத்தையும், தொடையால் புவர்லோகத்தையும், இடுப்பால் சுவர்கத்தையும், மகரலோகத்தை வயிற்றிலும், ஜனலோகத்தை மார்பாலும், தபலோகத்தை கழுத்தாலும், சத்யலோகத்தை முகம் மற்றும் கழுத்தாலும் அளந்தேன். இந்த பிரஞ்சத்தையே சூரிய சந்திரன் உடன் முழுதும் வியாபித்து இருந்தேன். இதைக் கண்டு இந்திரனும், தேவர்களும், பாம்புகளின் தலைவனாகிய சேஷனும் வேத கோஷங்கள் முழங்கத் தொடங்கினர். பலிச் சக்கரவர்த்தியின் கைகளைப் பற்றி அரசே முதல் அடியால் உலகையும், இரண்டாம் அடியால் விண்ணுலகத்தையும் அளந்தேன். மூன்றாம் அடி நிலம் எங்கே என்று கேட்க பலி சக்கரவர்த்தி பணிவுடன், பகவானே என்னை மன்னித்து என் சிரசின் மீது வைத்து அருளுங்கள்” என்றார். நானும் என் பாதத்தை அவன் சிரசில் வைத்து அவரை பாதாள லோகம் அனுப்பினேன், அவர் பணிவுக்கு மகிழ்ந்து அவர் அரண்மனையில் தங்குவதாக ஒப்புக் கொண்டேன்.
இந்த பரிவர்தினி ஏகாதசியில, விரோசனனின் மகனும், பிரஹ்லாதனின் பேரனும் ஆகிய பலி என்னுடைய சிலையை அரண்மனையில் நிறுவினார். கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஹரிபோதினி ஏகாதசி வரை நான் பாற்கடலில் பள்ளி கொள்வேன். நான் திரும்பி படுக்கும் இந்நாளில் பக்தர்கள் திரிவிக்ரமன், வாமனனை வணங்கி, தயிர் சாதமும், வெள்ளியும் தானமாக அளித்துத் தங்கள் பாபங்கள் நீங்கி, பூலோகத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து, பகவானை அடைவர். இதைப் பற்றி கேட்பவர் தேவலோகம் சென்று நிலவைப் போல் பிரகாசிப்பர். இந்த ஏகாதசி ஆனது ஆயிரம் குதிரைகளை தானம் செய்த பலன் தரக் கூடியது.
இதுவே பத்ரபாத மாதம் சுக்ல பட்ச வாமன ஏகாதசி அல்லது பரிவர்தினி ஏகாதசி விரத பயனாக பிரம்ம வைவரத்த புராணத்தில் கூறப்பட்ட செய்தியாகும்.

