உத்பன்ன ஏகாதசி

சூத கோஸ்வாமி “ஓ பிராமணர்களே! நீண்ட நாட்களுக்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏகாதசி விரதம் இருப்பது பற்றியும் அதனால் ஏற்படும் பயன் பற்றியும் கூறியுள்ளார். பிராமணர்களில் சிறந்தவர்களே! ஏகாதசி எவ்வாறு துவங்கியது, அதன் பெருமைகள் பற்றி கேட்பவர்கள் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்ந்து நேரடியாக விஷ்ணுவின் பதம் சென்றடைவர்” என்றார்.

ப்ரீத்தாவின் மகனாகிய அர்ஜூனன், “ஓ ஜனார்த்தனா, பொதுவாக ஏகாதசி விரதம் இருப்பதால் அடையும் பலன் பற்றிக் கூறவும் ” என்றார்.

கிருஷ்ணர், “ஓ அர்ஜுனா, குளிர் காலத்துவக்கமாகிய மார்க்கசீரிஷ மாதம் (நவம்பர் – டிசம்பர்) வரும் ஏகாதசி அன்று புதியதாக விரதம் மேற்கொள்பவர்கள் துவங்கலாம்.

பின்னர் பக்தன் முதல் தரமான பூ, உணவு கொண்டு கோவிந்தனை பூஜிக்க வேண்டும். தூய பக்தியுடன் விளக்கேற்றி  பூஜிக்க வேண்டும். சிற்றின்பம் முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

ஏகாதசி விரதம் இருப்பவர் கிருஷ்ண பக்ஷ, சுக்ல பக்ஷ ஏகாதசியை பாரபட்சம் பார்க்காமல் சமமாக பாவிக்க வேண்டும்.

இப்பொழுது ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன் பற்றி கூறுகிறேன். சங்காசுரனை பகவான் அழித்த  சங்கோதர என்ற இடத்தில் குளிப்பதை விடவும், கதாதரனை நேரில் பார்ப்பதை விடவும் பதினாறு மடங்கு அதிக பலன் தரக் கூடியது ஏகாதசி விரதம்.  சாதாரண நாளில் தானம் செய்வதை விட பௌர்ணமி திங்கட் கிழமை தானம் செய்வது ஆயிரம் மடங்கு பலன் தரக் கூடியது.   சங்கராந்தி அன்று தானம் செய்வது நானூறு ஆயிரம் மடங்கு பலன் தரும். ஆனால் ஏகாதசி விரதம் எல்லாவற்றையும் விட அதிக பலன்,  குருக்ஷேத்திரத்தில் சூரிய அல்லது சந்திர கிரகணத்தின் போது கிடைக்கும் பலனை விடவும் அதிக பலன் தரும். நம்பிக்கையுடன் ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்கள் நூறு அசுவமேத யாகம் செய்த பலன் அடைவர். மேலும் ஒரு முறை ஏகாதசி விரதம் இருப்பதால் வேதம் கற்ற பிராமணருக்கு ஆயிரம் பசு தானம் செய்த பலனையும் அடைவர்.

ஒரு ப்ரஹ்மசாரிக்கு உணவு அளிப்பவன் பத்து பிராமணருக்கு உணவு அளித்தற்கான பலனில் பத்து மடங்கு பலனை அடைகிறான்.  அவனுக்குத் தேவையான நிலத்தை தானம் அளித்த ஆயிரம் மடங்கு பலனை, நல்ல படித்த மணமகனுக்கு கன்யாதானம் செய்த ஆயிரம் மடங்கு பலன் அடைகிறான்.

இதை விட பத்து மடங்கு நல்லது தன் மகனை பிரதி பலன் பார்க்காமல் ஆன்மீக வழியில் படிக்க வைத்து நல்வழிப் படுத்துவது. இதை விட பத்து மடங்கு பலன் பசித்தவருக்கு உணவு அளிப்பது, எனவே தேவை பட்டவருக்கு தானியம் அளித்து உதவுவதை விட சிறந்த தானம் இல்லை.  இதைச் செய்வதன் மூலம் மூதாதையர்கள், தேவர்கள் மிக மகிழ்வர்.   ஆனால் ஏகாதசி விரத பலனை அளவிட முடியாது.

ஸ்ரீ ஹரியின் புனித நாளில் தானியம்,மாமிசம்,  தவிர்த்து முழு உண்ணா விரதம் மேற்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று பகவானை முழுவதும்  நினைத்து,  உண்ணாவிரதம் இருப்பது, யாத்திரைகள், புனித ஸ்தலத்தில் நீராடுதல், தங்குதல், யாக யக்ஞம் புரிதலை விட மிக உன்னதமானதாகும். உயர்ந்த பலனை நல்கும்.

அர்ஜூனன்,” பகவானே தங்கள் கூற்றுப்படி ஆயிரம் வேதிய தானங்கள் ஒரு ஏகாதசி விரதத்திற்கு ஈடாகாது.   இது எப்படி சாத்தியம்” என்றார்.   

கிருஷ்ணர், “அர்ஜுனா! சத்திய யுகத்தில் முரா என்ற அசுரன் இருந்தான்.  பயங்கரமான இவன் தேவர்களையும், தேவர் தலைவன் இந்திரனையும், சூரிய கடவுள் விவசுவனையும், எட்டு வசுக்கள், வாயு, அக்னி எல்லோரையும் நடுங்கச் செய்தான். இந்திரன் சிவனை அணுகி, “நாங்கள் எங்கள் இருப்பிடம் தொலைத்து பூமியில் உழன்று கொண்டிருக்கிறோம். எங்கள் கதி என்ன?” என்று புலம்பினார்.

சிவன் உடனே ” தேவர்களில் சிறந்தவரே! ஜெகன்னாதர் ஆகிய கருட வாகன விஷ்ணுவை அவருடைய இருப்பிடத்தில் தரிசித்து உங்களைக் காக்கும் படி வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார்.  கிருஷ்ணர்,” ஓ அர்ஜுனா! இந்திரன் சிவன் கூறியது போல் தேவர்களுடன் விஷ்ணுவை அடைந்தான். பள்ளி கொண்ட விஷ்ணுவின் கோலத்தைப் பார்த்து தங்கள் கை கூப்பி, “மேன்மையானவரே! தங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம். தேவர்கள் போற்றத் தக்கவனும், அசுரர்களின் பகைவனும், மது என்ற அரக்கனை கொன்றவனும் ஆகிய கமலக் கண்ணனே! எங்களை ரட்சிப்பீர்! முராவிடம் இருந்து தப்பிக்க தங்களை நாடி வந்தோம். நீரே தாயும் தந்தையும், படைப்பவனும், காப்பவனும், அழிப்பவனும் ஆவீர்.  நீரே மூன்று உலகத்தையும் நடத்துபவர், எங்கள் துயர் தீர்ப்பீர்! நீரே சூரிய, சந்திர அக்னி கடவுள். நீரே தூய வெண்ணையும், மந்திர ஆகமமாகவும், ஜபமாகவும் இருக்கிறீர்.   நீரே தானத்தின் மூலமாகவும், பயனாகவும் உள்ளீர்.   நீரின்றி எதுவும் இயங்காது.   தம்மை நாடி வந்தவரின் துயர் தீர்ப்பவர், அடைக்கலம் புகுந்த எம்மை ரட்சிப்பீர். அசுரர்களிடம் தோற்று, பூமியில் தள்ளப் பட்டு திரியும் எங்களைக் காப்பீர்” என்றனர்.

விஷ்ணு உடனே,” உங்களை இந்த நிலைக்குத் தள்ளிய அசுரன் யார் என்ற விவரம் பயப்படாமல் கூறுவீர்” என்றார். இந்திரன் “எங்கள் துயர் தீர்க்க வல்லவரே! முன்பு பிரம்ம வம்சத்தில் நடிஜங்கா என்ற அசுரன் இருந்தான். எல்லோரும் பயப்படக் கூடிய அவன் மகன் தான் முரன்.  அவனுடைய தலைநகர் சந்திராவதியில் இருந்து கொண்டு எல்லா தேவரையும் தங்கள் இடத்தை விட்டு துரத்தி அடித்தான்.  இந்திரன், அக்னி, வாயு, ஈசன், சோமன் என்ற சந்திரன், நைத்ரி என்ற திசைக் கடவுள், வருணர் எல்லோரையும் விரட்டினான். சூரியன் போலவும், மேகமாகவும் மாறி எங்களை துன்புறுத்துகிறான்” என்றார். விஷ்ணு உடனே மிகவும் கோபத்துடன், ” முரனின் தலை நகர் சந்திரவதிக்கு உடனே செல்லுங்கள்” என்றார்.

இந்திரன் மற்றும் தேவர் எல்லோரும் கூடி செல்ல அதைக் கண்டு முரன் ஆயுதம் ஏந்திய தன் பரிவாரத்துடன் கத்தியபடி தாக்கினான்.  தேவர்கள் பயந்து பத்து திசைகளிலும் சிதறி ஓடினர்.  போர்க் களத்தில் ஹிருஷிகேசரைப் பார்த்து அசுரர்கள் பாய்ந்து வந்தனர்.  கதை, சக்கரம், கத்தி ஏந்திய விஷ்ணுவிடம் வந்ததும் அவர்  அசுரர்களுடைய உடல் பாகங்களை தன் கூர்மையான அம்பு போன்ற ஆயுதங்களால் சிதைத்தார். பல அசுரர் பகவான் கையால் மாண்டனர்.  இறுதியாக முரன் வந்தான்.   விஷ்ணுவின் ஆயுதங்களை எளிதாகத் தடுத்து நிறுத்தினான் முரன்.   விஷ்ணு தன் கதை போன்ற கைகளால் ஆயிரம் பூலோக வருடங்கள் போரிட்டு வலுவிழந்து, பின் பத்ரிகாஸ்ரமம் புறப்பட்டார்.  யோகிகளின் சிறந்த யோகீஷ்வரர் அங்குள்ள ஹிமவதி குகையில் புகுந்து கொண்டார். அந்த அழகிய குகை தொண்ணூற்றாறு மைல் விட்டமும் ஒரே ஒரு வாயில் மட்டும் உடையது.  உள்ளே புகுந்து தூங்கத் தொடங்கியதும் முரனும்  தொடர்ந்து வந்து ஹரியை கொல்லத் தலைப் பட்டான்.  அவன் திட்டமிட்ட தருணம் விஷ்ணுவின் உடலில் இருந்து ஒரு அழகிய பெண் தோன்றினாள். பல ஆயுதங்களை கையில் ஏந்திய அவள் தொடர்ச்சியாக முரனுடன் போரிட்டாள்.  முரன் அவள் யாராக இருக்கும் என்று சிந்தித்த நொடி அவன் கையில் இருந்த எல்லா ஆயுதங்களையும் தட்டி ரதத்தில் இருந்து வீழ்த்தினாள். உடனே முரன் கோபத்துடன் அவளை நோக்கிச் செல்ல அந்தப் பெண் முரன் தலையை வெட்டி வீழ்த்தினாள். முரன் கீழே விழுந்து யமராஜரை சென்று அடைந்தான்.   மற்ற அசுரர்கள் பயந்து பாதாள லோகம் சென்றனர்.

விஷ்ணு தன் நித்திரையில் இருந்து விழித்துப்  பணிவோடு வணங்கிய பெண்ணை பார்த்து,  “யார் இந்த பொல்லாத அரக்கனை கொன்றது? தேவர்களையும் கந்தர்வர்கள், இந்திரன், மருத் மற்றும் நாகர்களையும் என்னையும் தோற்கடித்து குகையில் ஒளியச் செய்தவனைக் கொன்றது யார்?”  என்று கேட்டார்.

அந்தப் பெண், “முரன் தங்களை குகையில் ஒளியச் செய்து கொல்லத் திட்டம் இட்டதும் நான் தங்கள் உடலிலிருந்து தோன்றி அவனை அழித்து தேவர்களை காத்தேன்.  தங்கள் சக்தியிலிருந்து வெளிப்பட்ட மகாசக்தி நான். தேவர்களையும், மூவுலகையும் காக்க அவனை கொன்றேன்” என்றாள்.

விஷ்ணு மிக மகிழ்ந்து, “குற்றமற்றவளே எல்லோரையும் காத்த உன் செயலால் மிக மகிழ்ந்தேன்.  உனக்கு வேண்டிய வரத்தைக் கேட்பாயாக,” என்றார்.   அந்தப் பெண்,” ஏகாதசி விரதம் இருப்பவரது பாபம் நீங்கவும், “புலனடக்கத்துடன் விரதம் இருப்பவர் இந்த உலகில் எல்லா மகிழ்வையும் அடைந்து ஒரு பில்லியன் கற்ப ஆண்டுகள் விஷ்ணுவின் ஸ்தலத்தில் இருக்க வரம் தாரும்” என்றாள். “முறைப்படி விரதம் இருப்பவர் ஏராளமான செல்வம், வசதி மற்றும் இறுதியில் இவ்வுலகத்தில் இருந்து விடுதலை அடையும் வரம் தரவும்” என்றாள்.

விஷ்ணு இவ்வுலக மக்கள் அனைவரும் முறைப்படி விரதம் இருந்து மூவுலகும் போற்ற வாழ்ந்து என்னை அடையட்டும். என்னுடைய சக்தியாகிய நீ பதினொன்றாம் நாள் தோன்றியதால் ஏகாதசி என்று பெயர் பெறுவாய்.  அன்று விரதம் இருந்து தங்கள் பாபம் நீங்கப் பெறுவதோடு என்னையும் அடைவர். எனக்கு மிகவும் பிரியமான நாட்கள் மூன்றாம் நாளான திரிதீயம், எட்டாம் நாளான அஷ்டமி, ஒன்பதாம் நாளான நவமி, பதினான்காம் நாள் சதுர்த்தசி, மற்றும் ஏகாதசி.  ஏகாதசி அன்று விரதம் இருந்து  என்னை துதிப்பவர் தானம் செய்வதை விடவும், பல புண்ணிய ஸ்தல யாத்திரை செய்வதை விடவும் பயன் அடைவர்” என்று கூறி மறைந்தார். “அன்று முதல் ஏகாதசி விரதம் மிகவும் பிரபலம் ஆனது.

விரதம் இருப்பவர் பகை தொலைத்து, உயர் பதவி அளித்து, ஆன்மீக முன்னேற்றம் அளித்து தூய வாழ்வு வாழச் செய்வேன்.  பிருதாவின் மைந்தனே!  இதுவே ஏகாதசி வரலாறு.  ஏகாதசி விரதம் இருந்து துவாதசி உணவு உண்டு, அசுவமேத யாகம் செய்த பலன் அடைவீர்.  துவாதசி அன்று புண்டரீகாட்சனை இரட்சிக்க வேண்டி மலரும், நீரும் பாதத்தில் அர்ப்பித்து அஷ்டாட்சரா மந்திரம் மூன்று முறை ஜபித்து பாதத்தில் அர்ப்பித்த நீரை அருந்த வேண்டும்.

விரதம் இருப்பவர் குளித்து முழுவதும் பகவத் சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு,  பகவான் விஷ்ணுவின் பெருமையை எவன் மற்றவரிடம் இருந்து பக்தியுடன் கேட்கிறானோ அவன் நற்கதி அடைந்து பத்து மில்லியன் கல்பம் பகவானிடம் வசிக்கிறான்.  ஏகாதசியின் பெருமையை ஒரு வரி கேட்டாலும் கூட பிராமணரைக் கொன்ற பெரும் பாவத்தில் இருந்து விடுபடு்கிறான்.  பகவான் விஷ்ணுவின் பாதங்களை அடையும் இதை விடச் சிறந்த விரதம் வேறு எதுவும் இல்லை.

இதுவே  பவிஷ்ய – உத்தர புராணத்தில் கூறப்பட்ட,  மார்க்கசீரிஷ கிருஷ்ண ஏகாதசி அல்லது உத்பன்ன ஏகாதசியின் பெருமை ஆகும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare