துளசி ஆரத்தி செய்யும் முறை
துளசி
துளசி எல்லா விதத்திலும் மங்களகரமானது. துளசியைக் காண்பதாலும், தொடுவதாலும், துளசியிடம் பிரார்த்தனை செய்வதாலும், துளசியின் முன்பாக நமஸ்கரிப்பதாலும், துளசியைப் பற்றிக் கேட்பதாலும், துளசியை வளர்ப்பதாலும் எங்கும் எப்பொழுதும் மங்களமுண்டாகும்.
மேற்கூறிய வகையில் துளசியை வழிபடும் எவரும் வைகுண்ட லோகத்தில் நித்யவாஸம் செய்வர்.” (ஸ்கந்த புராணம்)பக்தித் தொண்டில் துளசியை வழிபடுதல் மிகவும் அவசியம். துளசி கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான செடி, அவருக்கு அவளது இலைகளும் மொட்டுகளும் மிகவும் பிரியமானவை.
எனவே, பக்தர்கள் ஒன்று அல்லது இரண்டு துளசிச் செடிகளை இல்லத்தில் வைத்து, தினமும் நீர் விட்டு, நமஸ்கரித்து, கவனமாகப் பார்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
எங்கெல்லாம் துளசி நன்றாக வளர்கிறதோ, பக்தியும் நன்றாக வளர்ச்சி பெறும்.
துளசி ஆரத்தி செய்யும் முறை
துளசிக்கென்று வீட்டின் முற்றத்தில் ஒரு மாடம் அமைத்து தினமும் அங்கே ஆரத்தி செய்தல் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும்.
அத்தகு வசதி இல்லாதவர்கள் பொதுவாக துளசி ஆரத்தியினை வீட்டின் அறையில் வைத்து வழிபடலாம். ஆரத்தியின்போது துளசி வளர்க்கப்படும் மண்தொட்டியானது (பூந்தொட்டியானது) அழகிய வஸ்திரத்தால் அலங்கரிக்கப்படுகிறது.

துளசியை உள்ளே கொண்டு வருகையில், ஒரு பக்தர் கீழ்கண்ட மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.
வ்ருந்தாயை துளஸீ-தேவ்யை ப்ரியாயை-கேஷவஸ்ய ச விஷ்ணு-பக்தி-ப்ரதே தேவி ஸத்யவத்யை நமோ நம:
ஆரத்தியுடன் இணைந்து, நமோ நம: துளஸீ என தொடங்கும் பாடல் (கீர்த்தனங்கள் பகுதியைப் பார்க்கவும்) பாடப்பட வேண்டும்.
ஆரத்தி செய்யும் முறை
(துளசி ஆரத்திக்கு சங்கு, வஸ்திரம் மற்றும் பஞ்ச தீபம் தேவையில்லை) ஒரு நெய் தீபம் போதுமானது.
நெய் தீபம்
ஆரத்தி தட்டில் ஆசமன பாத்திரம், மணி, மூன்று ஊதுபத்திகள் (தீப்பெட்டி), ஒரு நெய் விளக்கு, மற்றும் மலர்களைக் கொண்ட ஒரு சிறு தட்டு ஆகியவை இருக்க வேண்டும்.
முதலில் ஆசமனம் செய்து விட்டு, பின்னர் ஊதுபத்தியை ஏற்றி அர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் ஏற்றப்பட்ட நெய்தீபமும் மலர்களும் காற்றில் வட்டமிடும் முறையில் அர்ப்பணம் செய்யப்பட வேண்டும்.
ஊதுபத்தியை அர்ப்பணம் செய்த பின்னர், அதனை ஒரு தாங்கியில் (ஊதுபத்தி ஸ்டாண்ட்) வைப்பதால் அது தொடர்ந்து நறுமணம் தரும், நெய் தீபம் அர்ப்பணம் செய்த பின், மலர்களை அர்ப்பணித்தபின், சில மலர்களை துளசியின் அடிக்கிளையில் வைத்து வழிபடவேண்டும்.
துளசிப் பாடலைப் பாடிய பின்னர், துளசியை வலம் வந்து நீர் துளிகள் மூன்று முறை ஊற்றவேண்டும்.
வலம் வரும்போது கீழ்கண்ட மந்திரத்தை உச்சரிக்கவேண்டும்:
யானி கானி ச பாபானி ப்ரஹ்ம-ஹத்யாதிகானி ச தானி தானி ப்ரணஷ்யந்தி ப்ரதக்ஷிண: பதே பதே
இதைத் தொடர்ந்து பல முறை ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம் பாடிய பின்னர் கீர்த்தனத்தை முடிக்க வேண்டும்.
** ஹரே கிருஷ்ணா **

