அத்தியாயம் – 7
மாந்தாதா மகாராஜனின் வம்சம்
பதம் 9.7.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மாந்தாதாவின் மகன்களுள் மிகவும் பிரசித்தி பெற்றவர் அம்பரீஷர் என்று புகழப்படுபவராவார். அம்பரீஷரை அவரது பாட்டனாரான யுவனாஸ்வர் தன் மகனாக தத்து எடுத்துக் கொண்டார். அம்பரீஷரின் மகன் யௌவனாஸ்வன். யௌவனாஸ்வனின் மகன் ஹாரீதன். மாந்தாதாவின் வம்சத்தில் அம்பரீஷர், ஹாரீதன் மற்றும் யௌவனாஸ்வன் ஆகியோர் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கினர்.

பதம் 9.7.2 : நர்மதையின் பாம்பு சகோதரர்கள் அவளை புருகுத்ஸனுக்குக் கொடுத்தனர். வாசுகியால் அனுப்பப்பட்ட அவள் புருகுத்ஸனை பிரபஞ்சத்தின் அடிப்பகுதிக்கு அழைத்துச் சென்றாள்.

பதம் 9.7.3 : பிரபஞ்சத்தின் கீழ்ப்பிரதேசமான ரஸாதளத்தில், பகவான் விஷ்ணுவால் சக்தியளிக்கப்பட்டிருந்த புருகுத்ஸனால், கொல்லத் தகுந்தவர்களான கந்தர்வர்கள் அனைவரையும் கொன்றுவிட முடிந்தது. பிரபஞ்சத்தின் கீழ்ப் பிரதேசத்திற்கு நர்மதன் அழைத்து வரப்பட்ட இவ்வரலாற்றை நினைவுகூறும் எவருக்கும் பாம்புகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு நிச்சயம் என்ற வரத்தை நர்மதன் பாம்புகளிடமிருந்து பெற்றார்.

பதம் 9.7.4 : புருகுத்ஸரின் மகன் திரஸத்தஸ்யு. அவர் அனரண்யனின் தந்தையாவார். அனரண்யனின் மகன் ஹர்யஸ்வன். அவரது தந்தை பிராருணன். பிராருணன் திரிபந்தனின் தந்தையாவார்.

பதங்கள் 9.7.5 – 9.7.6 : திரிபந்தனின் மகன் சத்தியவிரதன். இவர் திரிசங்கு என்று பிரசித்தி பெற்றார்; ஒரு பிராமண புத்திரியின் திருமணத்தின்போது அவளை திரிசங்கு கடத்திச் சென்றார். இதனால் இவரது தந்தை, ஒரு சூத்திரனைவிட இழிவான சண்டாளனாகும்படி இவரைச் சபித்து விட்டார். அதன்பிறகு, விஸ்வாமித்திரரின் செல்வாக்கினால், அவர் தன் பௌதிக உடலுடனேயே சுவர்க்க லோகங்களுக்குச் சென்றார். ஆனாலும் தேவர்களின் செல்வாக்கினால் அவர் தலைகீழாக விழுந்தார். ஆயினும், விஸ்வாமித்திரரின் சக்தியால் அவர் நடு வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்; இன்று கூட ஆகாயத்தில் தலைகீழாக அவர் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

பதம் 9.7.7 : திரிசங்குவின் மகன் ஹரிச்சந்திரன். அவர் பொருட்டு விஸ்வாமித்திரருக்கும், வசிஷ்டருக்கும் கலகம் உண்டாகி, இருவரும் பறவை உருக்கொண்டு பல வருஷங்கள் சண்டையிட்டனர்.

பதம் 9.7.8 : ஹரிச்சந்திரன் தனக்கு மகனில்லாததால் மிகவும் வருத்தப்பட்டார். எனவே ஒரு சமயம், நாரதரின் அறிவுரைப்படி, அவர் வருணனிடம் சரணடைந்து, ‘எனக்கு மகனில்லை பிரபு, தாங்கள் எனக்கொரு மகனைக் கொடுப்பீர்களா?” வேண்டினார்.

பதம் 9.7.9 : பரீட்சித்து மகாராஜனே, ஹரிச்சந்திரன் பின்வருமாறு வருணனிடம் வேண்டினார், “பிரபுவே எனக்கொரு மகன் பிறந்தால், அவனாலேயே உங்களுக்கு யாகம் செய்து உங்களை திருப்திப்படுத்துவேன்”. ஹரிச்சந்திரனின் வேண்டுகோளைக் கேட்ட வருணனும், “அப்படியே ஆகட்டும்” என்று பதிலளித்தார். வருணனின் வரத்தால், ஹரிச்சந்திரனுக்கு ரோஹிதன் என்றொரு மகன் பிறந்தான்.

பதம் 9.7.10 : அதன்பிறகு, குழந்தை பிறந்ததும், ஹரிச்சந்திரனை அணுகிய வருணன், “இப்பொழுது உமக்கு ஒரு மகன் பிறந்துவிட்டான். இவனைக் கொண்டு எனக்கொரு யாகத்தை நீர் செய்யலாம்” என்று கூறினார். இதற்கு பதிலாக ஹரிச்சந்திரனும், “ஒரு மிருகம் பிறந்த பத்தாவது நாளில் அது பலியிடுவதற்குத் தகுதியுள்ளதாகிறது” என்று கூறினார்.

பதம் 9.7.11 : பத்து நாட்களுக்குப் பின் வருணன் மீண்டும் வந்து, “யாகத்தை இப்பொழுது நீர் நிறைவேற்றலாம்” என்று கூறினார். அதற்கு ஹரிச்சந்திரனும், “மிருகத்திற்குப் பற்கள் முளைக்கும்பொழுது அது பலியிடுவதற்குப் போதுமான தூய்மையை அடைகிறது” என்று பதிலளித்தார்.

பதம் 9.7.12 : பற்கள் முளைத்ததும் வருணன் வந்து, “பற்கள் முளைத்துவிட்டன. எனவே இப்பொழுது நீர் பலிகொடுக்கலாம்” என்று கூறினார். ஹரிச்சந்திரனும், “அதனுடைய எல்லாப் பற்களும் விழுந்துவிடும் பொழுது அது பலியிடத் தகுதியுடையதாகும்” என்று பதிலளித்தார்.

பதம் 9.7.13 : பற்கள் விழுந்ததும் வருணன் திரும்பிவந்து, “இப்பொழுது மிருகத்தின் பற்கள் விழுந்து விட்டதால் அதைப் பலியிடலாம்” என்று கூறினார். ஹரிச்சந்திரனும் அதற்கு, “மிருகத்திற்கு மீண்டும் பற்கள் முளைக்கும்பொழுது, அது பலியடுவதற்குப் போதுமான தூய்மையடையும்” என்று பதிலளித்தார்.

பதம் 9.7.14 : மீண்டும் பற்கள் முளைத்ததும், வருணன் வந்து, “யாகத்தை இப்பொழுது நீர் செய்யலாம்” என்று ஹரிச்சந்திரனிடம் கூறினார். ஆனால் ஹரிச்சந்திரனோ, “அரசே, யாகப்பசு ஒரு க்ஷத்திரியனாகி, எதிரியிடமிருந்து தன்னால் பாதுகாத்துக் கொள்ளும் தகுதியைப் பெறும் பொழுது அவன் தூய்மையடைவான்” என்று கூறினார்.

பதம் 9.7.15 : ஹரிச்சந்திரன் உண்மையாகவே தன் மகனிடம் மிகவும் பற்றுக் கொண்டிருந்தார். இப்பாசத்தினால், வருண தேவனைக் காத்திருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இவ்வாறாக வருணனும் காலம் வரும், வரும் என்றெண்ணிக் காத்திருந்தார்.

பதம் 9.7.16 : தன் தந்தை தன்னை யாகப்பசுவாகப் பலி கொடுக்க முடிவு செய்திருந்ததை ரோஹிதனால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே மரணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் வில்லையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டு காட்டிற்குச் சென்றார்.

பதம் 9.7.17 : வருணனால் ஏவப்பட்ட நீர்க்கோப்பு நோயினால் தந்தை பீடிக்கப்பட்டிருப்பதையும், அவரது வயிறு மிகவும் பெரிதாக உப்பிவிட்டதையும் கேள்விப்பட்ட ரோஹிதன் தலைநகருக்குத் திரும்ப எண்ணினார். ஆனால் இந்திரன் அவரைத் தடுத்துவிட்டார்.

பதம் 9.7.18 : பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரையை மேற்கொள்வது புண்ணியச் செயலாகும் என்பதால், அத்தகைய இடங்களுக்குச் சென்று வரும்படி இந்திரன் ரோஹிதனுக்கு அறிவுரை கூறினார். ரோஹிதனும், இந்திரனின் உத்தரவுப்படி ஓராண்டு காலம் வன வாசத்தை மேற்கொண்டார்.

பதம் 9.7.19 : இவ்விதமாக இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டுகளின் முடிவில் தன் தலைநகருக்குத் திரும்ப விரும்பிய ரோஹிதனை, ஒரு வயதான பிராமணராக வந்த இந்திரதேவன், முந்திய ஆண்டுகளில் கூறிய அதே வார்த்தைகளைக் கூறி அவரைத் தடுத்து வந்தார்.

பதம் 9.7.20 : அதன்பிறகு, ஆறாம் ஆண்டும் காட்டில் சுற்றித்திரிந்த பின், தன் தந்தையின் தலைநகருக்குத் திரும்பிய ரோஹிதன், அஜீகர்த்தரின் இரண்டாவது மகனான சுனசேபனை விலைக்கு வாங்கினார். பிறகு சுனசேபனை யாகப்பசுவாக உபயோகித்துக் கொள்ளும்படி தன் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு, மரியாதையுடன் அவரை அவர் வணங்கினார்.

பதம் 9.7.21 : அதன்பிறகு, சரித்திரப்புகழ் பெற்றவர்களுள் ஒருவரான ஹரிச்சந்திர மகாராஜன், பெரியதொரு நரபலி யாகத்தைச் செய்து எல்லா தேவர்களையும் திருப்திப்படுத்தினார். இவ்விதமாக வருணனால் உண்டாக்கப்பட்ட நீர்க்கோப்பு நோய் குணமடைந்தது.

பதம் 9.7.22 : அப்பெரும் நரபலி யாகத்தில், நிவேதனம் செய்யும் தலைமைப் புரோகிதராக விஸ்வாமித்திரர் இருந்தார். பூரண தன்னுணர்வு பெற்ற ஜமதக்னி, யஜுர் வேத மந்திரங்கள் ஓதும் பொறுப்பை ஏற்றிருந்தார். வசிஷ்டர் முக்கிய பிராமண புரோகிதராக இருந்தார். மற்றும் அயாஸ்ய முனி சாமவேத மந்திரங்களை ஒதும் பொறுப்பை ஏற்றிருந்தார்.

பதம் 9.7.23 : ஹரிச்சந்திரனிடம் மிகவும் திருப்தியடைந்த இந்திரன், அவருக்கு ஒரு தங்க ரதத்தைப் பரிசளித்தார். விஸ்வாமித்திரனின் மகன்களைப் பற்றி விளக்கும்போது சுனசேபனின் பெருமைகளும் விவரிக்கப்படும்.

பதம் 9.7.24 : இவ்வாறாக ஹரிச்சந்திர மகாராஜனும் அவரது மனைவியும் சத்திய சீலர்களாகவும், பொறுமையுடையவர்களாகவும், சாராம்சத்தில் சிரத்தையுள்ளவர்களாகவும் இருப்பதைக் கண்ட விஸ்வாமித்திர முனிவர், மனித வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய அழிவற்ற ஞானத்தை அவர்களுக்கு அளித்தார்.

பதங்கள் 9.7.25 -9.7.26 : ஹரிச்சந்திர மகாராஜன், பௌதிக சுகபோகங்களால் நிறைந்திருந்த தன் மனதை மண்ணுடன் கலக்கச் செய்து, அதை முதலில் தூய்மைப்படுத்தினார். பிறகு அவர் மண்ணை நீருடனும், நீரை நெருப்புடனும், நெருப்பைக் காற்றுடனும் மற்றும் காற்றை ஆகாயத்துடனும் கலக்கச் செய்தார். அதன்பிறகு ஆகாயத்தை மொத்த பெளதிக சக்தியுடனும், மொத்த பெளதிக சக்தியை ஆன்ம ஞானத்துடனும் அவர் கலக்கச் செய்தார். தான் பரமபுருஷரின் பின்னப் பகுதி என்று உணர்வதே இந்த ஆன்ம ஞானமாகும். தன்னுணர்வு பெற்ற ஆத்மா பகவத் தொண்டில் ஈடுபடும் பொழுது அவன் கண்டறிய முடியாதவனாகவும், நினைத்தற்கரியவனாகவும் ஆகிறான். இவ்வாறு ஆன்ம ஞானத்தில் நிலைபெறும் அவன் பெளதிக பந்தத்திலிருந்து முற்றிலும் விடுபட்டவனாகிறான்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare