அத்தியாயம் – 5
துர்வாசரின் உயிர் காப்பாற்றப்பட்டது
பதம் 9.5.1
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் பகவதாதிஷ்டோ துர்வாஸாஸ் சக்ர-தாபித: அம்பரீஷம் உபாவ்ருத்ய தத்-பாதௌ துஹ்கிதோ ‘க்ரஹீத்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்விதமாக; பகவதா ஆதிஷ்ட:—பரமபுருஷ பகவானால் உத்தரவிடப்பட்டு; துர்வாஸா:—மகா அஷ்டாங்க யோகியான துர்வாசர்; சக்ர-தாபித:—சுதர்சன சக்கரத்தினால் மிகவும் அலைக்கழிக்கப்பட்டதால்; அம்பரீஷம்—அம்பரீஷ மகாராஜனை; உபாவ்ருத்ய—அணுகி; தத்-பாதெள—அவரது தாமரைப் பாதங்களில்; துஹ்கித:—மிகவும் துன்புறுத்தப்பட்டு; அக்ரஹீத்—அவர் பற்றினார்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக சுதர்சன சக்கரத்தினால் மிகவும் துன்புறுத்தப்பட்ட துர்வாச முனி, பகவான் விஷ்ணுவின் அறிவுரைகளைப் பெற்றதும், உடனே அம்பரீஷ மகாராஜனை அணுகினார். பெருந் துன்பத்திற்கு உள்ளாகியிருந்ததால், முனிவர் அரசரின் தாமரைப் பாதங்களில் விழுந்து அவற்றைப் பற்றிக் கொண்டார்.

பதம் 9.5.2
தஸ்ய ஸோத்யமம் ஆவீக்ஷ்ய பாத-ஸ்பர்ச-விலஜ்ஜித: அஸ்தாவீத் தத் தரேர் அஸ்த்ரம் க்ருபயா பீடிதோ ப்ருசம்

தஸ்ய—துர்வாசரின்; ஸ:—அவர் (அம்பரீஷ மகாராஜன்); உத்யமம்—முயற்சியை; ஆவீக்ஷ்ய—கண்டபின்; பாத-ஸ்பர்ச-விலஜ்ஜித:—அவரது தாமரைப் பாதங்களை துர்வாசர் தொட்டதால் வெட்கமடைந்து; அஸ்தாவீத்—பிரார்த்தனைகள் செய்தார்; தத்-ஹரே: அஸ்த்ரம்—பரமபுருஷரின் அந்த ஆயுதத்தை நோக்கி; க்ருபயா—கிருபையால்; பீடித:—மனம் நொந்து; ப்ருசம்—மிகவும்.

அவரது தாமரைப் பாதங்களை துர்வாசர் தொட்டதால் அம்பரீஷ மகராஜன் மிகவும் வெட்கப்பட்டார். துர்வாசர் பிரார்த்தனைகள் செய்ய முற்பட்டதைக் கண்டு, இரக்கத்தினால் அவர் மிகவும் மனம் நொந்தவரானார். இதனால் அவர் பரமபுருஷரின் சிறந்த ஆயுதத்தை நோக்கி உடனே பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினார்.

பதம் 9.5.3
அம்பரீஷ உவாச
த்வம் அக்னிர் பகவான் ஸூர்யஸ் த்வம் ஸோமோ ஜ்யோதிஷாம் பதி:
த்வம் ஆபஸ் த்வம் க்ஷிதிர் வ்யோம வாயுர் மாத்ரேந்ரியாணி ச

அம்பரீஷ:—அம்பரீஷ மகாராஜன்; உவாச—கூறினார்; த்வம்—தாங்களே; அக்னி:—அக்கினியும்; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்தவரும்; ஸூர்ய:—சூரியனும்; த்வம்—தாங்களே; சோம:—சந்தினும்; ஜ்யோதிஷாம்—ஒளிரும் பொருள்களுக்கெல்லாம்; பதி:—தலைவரும்; த்வம்—தாங்களே; ஆப:—நீரும்; த்வம்—தாங்களே; க்ஷிதி:—பூமியும்; வ்யோம—ஆகாயமும்; வாயு:—காற்றும்; மாத்ர—புலன் பொருட்களும்; இந்ரியாணி—மற்றும் புலன்களும்; ச—கூட.

அம்பரீஷ மகாராஜன் கூறினார்: ஓ சுதர்சன சக்கரமே, தாங்களே அக்னியும், சக்திமிக்க சூரியனுமாவீர். ஒளிரும் பொருட்களுக்கெல்லாம் தலைவராகிய சந்திரனும் தாங்களே. தாங்களே, நீர், மண், ஆகாயம் மற்றும் காற்றுமாவீர். ஐந்து புலன் பொருட்களும் (ஓசை, ஸ்பரிசம், உருவம், சுவை மற்றும் முகர்வுணர்வு) தாங்களே. மேலும் தாங்களே புலன்களாகவும் இருக்கிறீர்.

பதம் 9.5.4
ஸுதர்சன நமஸ் துப்யம் ஸஹஸ்ராராச்யுத-ப்ரிய
ஸர்வாஸ்த்ர-காதின் விப்ராய ஸ்வஸ்தி பூயா இடஸ்பதே

ஸுதர்சன—பரமபுருஷரின் மூலப் பார்வையே; நம:—பணிவான வணக்கங்கள்; துப்யம்—தங்களுக்கு; ஸஹஸ்ர-அர—ஆயிரக்கணக்கான அரங்களைக் கொண்டவரே; அச்யுத-ப்ரிய—பரமபுருஷராகிய அச்சுதனுக்கு மிகப் பிரியமானவரே; ஸர்வ-அஸ்த்ர-காதின்—சர்வ ஆயுதங்களையும் அழிப்பவரே; விப்ராய—இந்த பிராமணருக்கு; ஸ்வஸ்தி—சர்வ மங்களம்; பூயா:—உடையவர் ஆகுங்கள்; இடஸ்பதே—ஜட உலகின் எஜமானரே.

பரமபுருஷராகிய அச்சுதனுக்கு மிகப்பிரியமானவரே, தங்களுக்கு ஆயிரக்கணக்கான அரங்களுள்ளன. ஜட உலகின் எஜமானரே, சர்வ ஆயுதங்களையும் அழிப்பவரே, பரமபுருஷரின் மூல பார்வையே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். அன்புகூர்ந்து இந்த பிராமணருக்கு மங்களம் அருளி இவரைக் காத்தருள வேண்டும்.

பதம் 9.5.5
த்வம் தர்மஸ் த்வம் ருதம் ஸத்யம் த்வம் யக்ஞோ ‘கில யக்ஞ-புக்
த்வம் லோக-பால: ஸர்வாத்மா த்வம் தேஜ: பௌருஷம் பரம்

த்வம்—தாங்களே; தர்ம:—தர்மம்; த்வம்—தாங்களே; ருதம்—உற்சாகப்படுத்தும் வாக்கியங்கள்; ஸத்யம்—சத்தியம்; த்வம்—தாங்களே; யக்ஞ:—யாகம்; அகில—பிரபஞ்சத்தின்; யக்ஞ-புக்—யாகப் பலன்களை அனுபவிப்பவர்; த்வம்—தாங்களே; லோக-பால:—அகில லோகங்களையும் பராமரிப்பவர்; ஸர்வ-ஆத்மா—எங்கும் பரவியிருப்பவர்; த்வம்—தாங்களே; தேஜ:—சக்தி; பௌருஷம்—பரமபுருஷரின்; பரம்—உன்னதமான.

ஓ சுதர்சன சக்கரமே, தங்களே தர்மமும், சத்தியமும், உற்சாகமூட்டும் வாக்கியங்களும், யாகமும் மற்றும் யாகப் பலன்களை அனுபவிப்பவரும் ஆவீர். முழு பிரபஞ்சத்தையும் காத்து இரட்சிப்பவரும், பரமபுருஷரின் கரங்களில் உன்னதமான பரம சக்தியாக இருப்பவரும் தாங்களே. தாங்கள் பகவானின் மூலப் பார்வையாக விளங்குவதால், சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறீர்கள். தங்களுடைய செயல்களினால் தான் அனைத்தும் படைக்கப்பட்டன என்பதால் தாங்கள் எங்கும் பரவியிருக்கிறீர்.

பதம் 9.5.6
நம: ஸுனாபாகில-தர்ம-ஸேதவே
ஹி அதர்ம-சீலாஸுர-தூம-கேதவே
த்ரைலோக்ய-கோபாய விசுத்த-வர்சஸே
மனோ-ஜவாயாத்புத-கர்மணே க்ருணே

நம:—தங்களுக்குப் பணிவான வணக்கங்கள்; ஸு-நாப— மங்களகரமான சக்கரக் குடத்தைப் பெற்றிருப்பவரே; அகில-தர்ம-ஸேதவே—அவரது அரங்கள் பிரபஞ்சத்தின் அடிப்பாகமாக கருதப்படுகின்றன; ஹி—உண்மையில்; அதர்ம-சீல—அதர்மமான; அஸுர—அசுரர்களுக்கு; தூம-கேதவே—அக்கினியை அல்லது அமங்களமான வால் நட்சத்திரத்தைப் போன்றவருக்கு; த்ரைலோக்ய—பெளதிகமான மூவுலகங்களை; கோபாய—பராமரிப்பவர்; விசுத்த—உன்னதமான; வ்ரசஸே—யாருடைய பிரகாசம்; மன:-ஜவாய—மனதைப் போல் வேகமான; அத்புத—அற்புதமான; கர்மணே—மிகவும் சுறுசுறுப்பான; க்ருணே—நான் உச்சரிக்கிறேன்.

ஒ சுதர்சனமே, மிகவும் மங்களகரமான குடத்தைப் பெற்றிருப்பதால் தாங்கள் தர்மத்தைத் தாங்குபவராக இருக்கிறீர். அதர்மவாதிகளான அசுரர்களுக்குத் தாங்கள் அமங்களமளிக்கும் வால் நட்சத்திரத்தைப் போன்றவராவீர். உண்மையில், மூவுலகங்களையும் காத்து இரட்சிப்பவர் தாங்கள்தான். உன்னதமான பிரகாசம் நிறைந்தவரும், மனதைப் போல் வேகமுள்ளவருமான தங்களால் அற்புதமாக செயற்பட முடியும், நம: என்று உச்சரித்து, எனது பணிவான வணக்கங்களை நான் சமர்பித்துக் கொள்கிறேன்.

பதம் 9.5.7
ஸ்வத்-தேஜஸா தர்ம-மயேன ஸம்ஹ்ருதம்
தம: ப்ரகாசஸ் ச த்ருசோ மஹாத்மனாம்
துரத்யயஸ் தே மஹிமா கிராம் பதே
த்வத்-ரூபம் ஏதத் ஸத்-அஸத் பராவரம்

ஸ்வத்-தேஜஸா—தங்களுடைய பிரகாசத்தால்; தர்ம-மயேன—தர்ம மயமான; ஸம்ஹ்ருதம்—போக்கியது; தம:—இருளை; ப்ரகாச: ச—ஒளியைக்கூட; தருச:—அனைத்துத் திசைகளின்; மஹா-ஆத்மனாம்—கற்றறிந்த மகாபுருஷர்களின்; துரத்யய:—கடக்க முடியாத; தே—தங்களுடைய; மஹிமா—மகிமைகள்; கிராம்-பதே—பேச்சுத் திறமை உடையவரே; த்வத்-ரூபம்—தங்களுடைய தோற்றம்; ஏதத்—இந்த; ஸத்-அஸத்—தோன்றியதும், தோன்றாததும்; பர-அவரம்—உயர்ந்ததும், தாழ்ந்ததுமான.

பேச்சுத் திறமை உடையவரே, தர்ம மயமான தங்களுடைய பிரகாசத்தினால் உலகில் இருள் மறைந்து, மகாத்மாக்களின் அல்லது கற்றுணர்ந்தவர்களின் அறிவு வெளிப்படுகின்றது. உண்மையில், தோன்றியும் தோன்றாதும் இருப்பவை, ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் இருப்பவை, மற்றும் உயர்ந்தவையாகவும் தாழ்ந்தவையாகவும் இருப்பவை ஆகிய அனைத்தும், தங்களுடைய பிரகாசத்தினால் தோற்றுவிக்கப்பட்ட, தங்களுடைய வெவ்வேறான வடிவங்களே என்பதால், தங்களுடைய பிரகாசத்தை மிஞ்சக்கூடியவர் ஒருவருமில்லை.

பதம் 9.5.8
யதா விஸ்ருஷ்டஸ் த்வம் அனஞ்ஜனேன வை
பலம் ப்ரவிஷ்டோ ‘ஜித தைத்ய-தானவம்
பாஹூதரோரு-அங்ரி-சிரோதராணி
வ்ருஸ்சன் அஜஸ்ரம் ப்ரதனே விராஜஸே

யதா—அப்பொழுது; விஸ்ருஷ்ட:—அனுப்பப்படும்; த்வம்—தாங்கள்; அனஞ்ஜனேன—உன்னதமான பரமபுருஷரால்; வை—உண்மையில்; பலம்—போர் வீரர்களுக்கு; ப்ரவிஷ்ட:—இடையில் புகுந்து; அஜித—சளைக்காதவராகவும், வெல்ல முடியாதவராகவும் இருப்பவரே; தைத்ய-தானவம்—அசுரர்களான தைதியர்கள் மற்றும் தானவர்களின்; பாஹு—கரங்களையும்; உதர—வயிறுகளையும்; ஊரு—தொடைகளையும்; அங்ரி—கால்களையும்; சிர-தரணி—கழுத்துகளையும்; வ்ருஸ்சன்—துண்டித்து; அஜஸ்ரம்—இடைவிடாமல்; ப்ரதனே—போர்க்களத்தில்; விராஜஸே—தாங்கள் இருக்கிறீர்கள்.

சளைக்காதவரே, பரமபுருஷரால் அனுப்பப்படும் தாங்கள், போர்க்களத்திலுள்ள தைதிய, தானவர்களுக்கிடையில் புகுந்து, அவர்களுடைய கரங்களையும், வயிறுகளையும், தொடைகளையும், கால்களையும் மற்றும் தலைகளையும் இடைவிடாமல் துண்டித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.

பதம் 9.5.9
ஸ த்வம் ஜகத்-த்ராண கல-ப்ரஹாணயே
நிரூபித: ஸர்வ-ஸஹோ கதா ப்ருதா
விப்ரஸ்ய சாஸ்மத்-குல-தைவ-ஹேதவே
விதேஹி பத்ரம் தத் அனுக்ரஹோ ஹி ந:

ஸ:—அவர்; த்வம்—தாங்கள்; ஜகத்-த்ராண—முழு பிரபஞ்சத்திற்கும் காவலரே; ஃகல-ப்ரஹாணயே—விரோதம் கொண்ட பகைவர்களைக் கொல்வதில்; நிரூபித:—ஈடுபட்டுள்ளார்; ஸர்வ-ஸஹ:—சர்வ சக்தி வாய்ந்த; கதா-ப்ருதா—பரமபுருஷரால்; விப்ரஸ்ய—இந்த பிராமணரின்; ச—கூட; அஸ்மத்—எங்களுடைய; குல-தைவ-ஹேதவே—வம்சத்தின் நன்மைக்காக; விதேஹி—அன்புகூர்ந்து செய்யுங்கள்; பத்ரம்—சர்வ நன்மைகளையும்; தத்—அந்த; அனுக்ரஹ:—அனுக்கிரகம்; ஹி—உண்மையாகவே; ந:—எங்களுக்கு.

பிரபஞ்சத்தின் காவலரே, பரமபுருஷரின் சர்வ சக்தி படைத்த ஆயுதமாக இருக்கும் தாங்கள், பகவானால் ஏவப்பட்டு பகைவர்களைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். எங்களுடைய வம்சத்தின் நன்மையை முன்னிட்டு, அன்பு கூர்ந்து இந்த ஏழை பிராமணருக்கு ஆதரவு காட்ட வேண்டும். இது நிச்சயமாக எங்களுக்கெல்லாம் நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.

பதம் 9.5.10
யதி அஸ்தி தத்தம் இஷ்டம்வா ஸ்வ-தர்மோ வா ஸ்வனுஷ்டித:
குலம் நோ விப்ர-தைவம் சேத் த்விஜோ பவது விஜ்வர:

யதி—என்றால்; அஸ்தி—இருக்கும்; தத்தம்—தானம்; இஷ்டம்—விக்கிரக ஆராதனை; வா—அல்லது; ஸ்வ-தர்ம—வர்ணாஸ்ரம கடமை; வா—அல்லது; ஸு-அனுஷ்டித:—நன்கு அனுஷ்டிக்கப்பட்டிருக்கும்; குலம்—வம்சம்; ந:—எங்களுடைய; விப்ர-தைவம்—பிராமணர்களால் உதவப்பட்ட; சேத்—அப்படி இருக்குமானால்; த்விஜ:—இந்த பிராமணர்; பவது—ஆகட்டும்; விஜ்வர:—(சுதர்சன சக்கரத்தின்) தாபமற்றவர்.

தகுதியுள்ளவர்களுக்கு எங்கள் குடும்பம் தானம் கொடுத்திருக்குமானால், சமயச் சடங்குகளையும், யாகங்களையும் நாங்கள் செய்திருப்போமானால், எங்களது வர்ணாசிரம கடமைகளை நாங்கள் சரியாகச் செய்திருப்போமானால், கற்றறிந்த பிராமணர்களால் நாங்கள் வழிநடத்தப்பட்டு இருப்போமானால், இவற்றிற்குப் பதிலாக இந்த பிராமணர் சுதர்சன சக்கரத்தின் தாபத்திலிருந்து விடுபடட்டும்.

பதம் 9.5.11
யதி நோ பகவான் ப்ரீத ஏக: ஸர்வ-குணாஸ்ரய:
ஸர்வ-பூதாத்ம-பாவேன த்விஜோ பவது விஜ்வர:

யதி—என்றால்; ந—எங்களிடம்; பகவான்—பரமபுருஷர்; ப்ரீத:—திருப்தி அடைந்திருப்பார்; ஏக:—இரண்டற்ற ஒருவரான; ஸர்வ-குண-ஆஸ்ரய:—எல்லா த்விய குணங்களுக்கும் இருப்பிடமான; ஸர்வ-பூத-ஆத்ம-பாவேன—அனைத்து ஜீவராசிகளிடமும் கொண்ட இரக்க குணத்தினால்; த்விஜ:—இந்த பிராமணர்; பவது—ஆகட்டும்; விஜ்வர:—தாபத்திலிருந்து விடுபட்டவர்.

இரண்டற்ற ஒருவரும், எல்லா திவ்ய குணங்களுக்கும் இருப்பிடமும், மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிராகவும், ஆத்மாவாகவும் இருப்பவருமான பரமபுருஷர் எங்களிடம் திருப்தி அடைந்திருப்பாரானால், பிராமணரான இந்த துர்வாச முனி தாபத்தின் துன்பத்திலிருந்து விடுபடட்டும்.

பதம் 9.5.12
ஸ்ரீ-சுக உவாச
இதி ஸம்ஸ்துவதோ ராஜ்ஞோ விஷ்ணு-சக்ரம் ஸுதர்சனம்
அசாம்யத் ஸர்வதோ விப்ரம் ப்ரதஹத் ராஜ-யாச்ஞயா

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ஸம்ஸ்துத:—பிரார்த்னை செய்யப்பட்டதால்; ராஜ்ஞா:—அரசரால்; விஷ்ணு-சக்ரம்—பகவான் விஷ்ணுவின் சக்ராயுதம்; ஸுதர்சனம்—சுதர்சனம் என்ற சக்கரத்தின்; அசாம்யத்—தொடர்ந்து தொல்லை விளைவிக்கவில்லை; ஸர்வத:—எல்லா வகையிலும்; விப்ரம்—பிராமணரை; ப்ரதஹத்—தகிக்கச் செய்து; ராஜ—அரசரின்; யாச்ஞயா—பிரார்த்தனையால்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சுதர்சன சக்கரத்தையும், பகவான் விஷ்ணுவையும் அரசர் துதித்ததால், அவரது பிரார்த்தனைக்கிணங்கி, பிராமணரான துர்வாசரைத் தகித்த சுதர்சன சக்கரம் சாந்தமாயிற்று.

பதம் 9.5.13
ஸ முக்தோ ‘ஸ்த்ராக்னி-தாபேன துர்வாஸா: ஸ்வஸ்திமாம்ஸ் தத:
ப்ரசசம்ஸ தம் உர்வீசம் யுஞ்ஜான: பரமாசிஷ:

ஸ:—அவர், துர்வாச முனிவர்; முக்த:—விடுபட்டதால்; அஸ்த்ர-அக்னி-தாபேன—சுதர்சன சக்கரத்தினுடைய தீயின் வெப்பத்திலிருந்து; துர்வாஸா:—சிறந்த யோகியான துர்வாசர்; ஸ்வஸ்திமான்—வெப்பத்திலிருந்து விடுபட்டதால், முற்றிலும் திருப்தியடைந்த; தத:—பிறகு; ப்ரசசம்ஸ—புகழ்ந்து போற்றினார்; தம்—அவரை; உர்வீ-ஈசம்—அரசர்; யுஞ்ஜான:—செய்தும்; பரம-ஆசிஷ:—மிகச்சிறந்த வரங்களை.

மிகவும் சக்திவாய்ந்த யோகியான துர்வாச முனி, சுதர்சன சக்கரத்தின் வெப்பத்திலிருந்து விடுபட்டதும், உண்மையாகவே திருப்தியடைந்து, அம்பரீஷ மகாராஜனின் குணங்களைப் போற்றி, அவருக்கு மிகச்சிறந்த வரங்களை அளித்தார்.

பதம் 9.5.14
துர்வாச உவாச
அஹோ அனந்த-தாஸானாம் மஹத்வம் த்ருஷ்டம் அத்ய மே
க்ருதாகஸோ ‘பி யத் ராஜன் மங்களானி ஸமீஹஸே

துர்வாஸா: உவாச—துர்வாச முனி கூறினார்; அஹோ—ஆச்சரியம்; அனந்த-தாஸானாம்—பரமபுருஷருடைய பக்தர்களின்; மஹத்வம்—பெருமைகள்; த்ருஷ்டம்—காணப்பட்டன; அத்ய—இன்று; மே—என்னால்; க்ருத-ஆகஸ: அபி—நான் குற்றம் புரிந்தவன் என்ற போதிலும்; யத்—இருப்பினும்; ராஜன்—அரசே; மங்களானி—மங்களத்தை; ஸமீஹஸே—தாங்கள் வேண்டுகிறீர்கள்.

துர்வாச முனி கூறினார்: அரசே, நான் குற்றம் செய்தவன் என்ற போதிலும், தாங்கள் என் மங்களத்திற்காக வேண்டினீர்கள் என்பதால், பரமபுருஷருடைய பக்தர்களின் பெருமையை இன்று நான் கண் கூடாகக் கண்டேன்.

பதம் 9.5.15
துஷ்கர: கோ நு ஸாதூணாம் துஷ்த்யஜோ வா மஹாத்மனாம்
யை: ஸங்ருஹீதோ பகவான் ஸாத்வதாம் ரிஷபோ ஹரி:

துஷ்கர:—செய்வதற்குக் கடினமானது; க:—என்ன; நு—உண்மையில்; ஸாதூணாம்—பக்தர்களுக்கு, துஸ்த்யஜ:—கைவிடுவதற்குச் சாத்தியமில்லாதது; வா—எது; மஹா-ஆத்மானம்—மகா புருஷர்களுக்கு; யை:—யாரால்; ஸங்ருஹீத:—(பக்தித் தொண்டால்) அடைந்தவர்களுக்கு; பகவான்—பரமபுருஷரை; ஸாத்வதாம்—தூய பக்தர்களுக்கு; ரிஷப:—தலைவரான; ஹரி:—பகவான்.

தூய பக்தர்களின் தலைவரான பரமபுருஷரை அடைந்தவர்களுக்கு, செய்யவும், கைவிடவும் முடியாதது என்ன இருக்கிறது?

பதம் 9.5.16
யன்-நாம-ஸ்ருதி-மாத்ரேண புமான் பவதி நிர்மல:
தஸ்ய தீர்த்த-பத: கிம் வா தாஸானாம் அவசிஷ்யதே

யத்-நாம—பகவானின் புனித நாமத்தை; ஸ்ருதி-மாத்ரேண—கேட்பதாலேயே; புமான்—ஒருவன்; பவதி—அடைகிறான்; நிர்மல:—தூய்மை; தஸ்ய—அவரின்; தீர்த்த-பத:—யாருடைய பாதங்களில் புண்ணிய ஸ்தலங்கள் உள்ளனவோ அந்த பகவானின்; கிம் வா—என்ன; தாஸானாம்—தொண்டர்களால்; அவசிஷ்யதே—செய்யக்கிடப்பது.

பகவானின் தொண்டர்களுக்குச் சாத்தியமில்லாதது என்ன இருக்கிறது? அவரது புனித நாமத்தைக் கேட்பதாலேயே ஒருவர் தூய்மையடைகிறார்.

பதம் 9.5.17
ராஜன் அனுக்ருஹீதோ ‘ஹம் த்வயாதிகருணாத்மனா
மத்-அகம் ப்ருஷ்டத: க்ருத்வா ப்ராணா யன் மே ‘பிரக்ஷிதா:

ராஜன்—அரசே; அனுக்ருஹீத:—மிகவும் ஆதரிக்கப்பட்டேன்; அஹம்—நான்; த்வயா—தங்களால்; அதி-கருண-ஆத்மனா—நீங்கள் கருணையுள்ளம் படைத்தவர் என்பதால்; மத்-அகம்—என்குற்றங்களை; ப்ருஷ்டத:—காணவில்லை; க்ருத்வா—அப்படிச் செய்து; ப்ராணா:—உயிரை; யத்—அந்த; மே—என்; அபிரக்ஷிதா:—காப்பாற்றினீர்கள்.

அரசே, என் குற்றங்களையும் பொருட்படுத்தாமல் தாங்கள் என்னுயிரைக் காப்பாற்றினீர்கள். எனவே பரம கருணாமூர்த்தியான தங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டவனானேன்.

பதம் 9.5.18
ராஜா தம் அக்ருதாஹார ப்ரத்யாகமன-காங்க்ஷயா சரணாவ் உபஸங்ருஹ்ய ப்ரஸாத்ய ஸமபோஜயத்

ராஜா—அரசர்; தம்—அவரை, துர்வாசரை; அக்ருத-ஆஹார:—உணவருந்தாமல் இருந்த; ப்ரத்யாகமண—திரும்புவதை; காங்க்ஷயா—விரும்பிய; சரணெள—பாதங்களை; உபஸங்ருஹ்ய—அணுகி; ப்ரஸாத்ய—மகிழ்வித்து; ஸமபோஜயத்—விருந்து போஜனம் செய்வித்தார்.

துர்வாச முனிவர் திரும்பி வருவதை எதிர்பார்த்திருந்த அரசர் உணவருந்தாமல் காத்திருந்தார். எனவே முனிவர் திரும்பி வந்ததும் அரசர் அவரது தாமரை பாதங்களில் விழுந்து, அவரை மகிழ்வித்துத் திருப்தியாக போஜனம் செய்வித்தார்.

பதம் 9.5.19
ஸோ ‘சித்வாத்ருதம் ஆனீதம் ஆதித்யம் ஸார்வ-காமிகம் த்ருப்தாத்மா ந்ருபதிம் ப்ராஹ புஜ்யதாம் இதி ஸாதரம்

ஸ:—அவர் (துர்வாசர்); அசித்வா—திருப்தியாக உணவருந்திய பின்; ஆத்ருதம்—மிகவும் மரியாதையுடன்; ஆனீதம்—வரவேற்றார்; ஆதித்யம்—அறுசுவை உணவுகளை அளித்தார்; ஸார்வ-காமிகம்—எல்லாச்சுவைகளையும் திருப்திப்படுத்தும்; த்ருப்த-ஆத்மா—இவ்வாறு முற்றிலும் திருப்தியடைந்த; ந்ருபதிம்—அரசரிடம்; ப்ராஹ—கூறினார்; புஜ்யதாம்—அன்பிற்குரிய அரசே, தாங்களும் உணவருந்துங்கள்; இதி—இவ்வாறாக; ஸ-ஆதரம்—மிகவும் மரியாதையுடன்.

இவ்வாறாக துர்வாச முனிவரை அரசர் மரியாதையுடன் வரவேற்றார். அறுசுவை உணவுகளை உண்டு மிகவும் திருப்தியடைந்த துர்வாசர், “தயவுகூர்ந்து தாங்களும் உணவருந்துங்கள்” என்று பேரன்புடன் அரசரை வேண்டிக்கொண்டார்.

பதம் 9.5.20
ப்ரீதோ ‘ஸ்மி அனுக்ருஹீதோ ‘ஸ்மி தவ பாகவதஸ்ய வை
தர்சன-ஸ்பர்சனாலாபைர் ஆதித்யேனாத்ம-மேதஸா

ப்ரீத:—மிகவும் திருப்தியடைந்தேன்; அஸ்மி—நான்; அனுக்ருஹீத:—மிகவும் அனுக்கிரகிக்கப்பட்டேன்; அஸ்மி—நான்; தவ—உங்களை; பாகவதஸ்ய—தாங்கள் ஒரு தூய பக்தரென்பதால்; வை—உண்மையாகவே; தர்சன—உங்களைக் காண்பதாலும்; ஸ்பர்சன—உங்கள் பாதங்களைத் தொடுவதாலும்; ஆலாபை:—உங்களுடன் பேசுவதாலும்; ஆதித்யேன—உங்களுடைய உபசரணையால்; ஆத்ம-மேதஸா—என் சுய புத்தியால்.

துர்வாச முனி கூறினார்: அன்பிற்குரிய அரசே, தங்களிடம் நான் மிகவும் திருப்தியடைந்தேன். தங்களை ஒரு சாதாரண மனிதர் என்று எண்ணி, முதலில் உங்களுடைய உபசரணையை நான் ஏற்று கொண்டேன். ஆனால் பகவானின் பக்தர்களிலேயே மிகச் சிறந்தவர் தாங்கள்தான் என்பதைப் பிறகுதான் என் சுய புத்தியைக் கொண்டு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே, தங்களைக் கண்டதாலும், தங்களுடைய பாதங்களைத் தொட்டதாலும், தங்களுடன் பேசியதாலுமே நான் திருப்தியடைந்து, தங்களுக்குக் கடமைப்பட்டவனானேன்.

பதம் 9.5.21
கர்மாவதாதம் ஏதத் தே காயந்தி ஸ்வ:-ஸ்த்ரியோ முஹு: கீர்த்திம் பரம-புண்யாம் ச கீர்த்தயிஷ்யதி பூர் இயம்

கர்ம—செயல்; அவதாதம்—களங்கமற்ற; ஏதத்—இவ்வெல்லா; தே—தங்களுடைய; காயந்தி—பாடுவார்கள்; ஸ்வ:-ஸ்த்ரிய:—தேவ மங்கைகள்; முஹு:—எப்பொழுதும்; கீர்த்திம்—பெருமைகளை; பரம-புண்யாம்—பரம புண்ணியம் வாய்ந்த; ச—கூட; கீர்த்தயிஷ்யதி—இடைவிடாது பாடுவார்கள்; பூ:—முழு உலகமும்; இயம்—இந்த.

வானுலக வாழ்வு பெற்ற தேவமங்கைகள் இடைவிடாமல் ஒவ்வொரு கணமும் தங்களது களங்கமற்ற குணத்தைப் பற்றி பாடிக்கொண்டே இருப்பார்கள். இவ்வுலக மக்களும் உங்களுடைய பெருமைகளை எப்பொழுதும் பாடுவார்கள்.

பதம் 9.5.22
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் ஸங்கீர்த்ய ராஜானம் துர்வாஸா: பரிதோஷித: யயௌ விஹாயஸாமந்த்ரிய ப்ரஹ்மலோகம் அஹைதுகம்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறாக; ஸங்கீர்த்ய—போற்றியவாறு; ராஜானம்—அரசரை; துர்வாஸா:—சிறந்த அஷ்டாங்க யோகியான துர்வாச முனி; பரிதோஷித:—எல்லா வகையிலும் திருப்தியடைந்து; யயௌ—அந்த இடத்தை விட்டு அகன்றார்; விஹாயஸா—ஆகாய மார்க்கமாய்; ஆமந்த்ரிய—அனுமதி பெற்று; ப்ரஹ்மலோகம்—இப்பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த கிரகத்திற்கு; அஹைதுகம்—எங்கு கற்பனையான வறட்டுத் தத்துவம் இல்லையோ அங்கு.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக எல்லா வகையிலும் திருப்தியடைந்த மகா யோகியான துர்வாசர், அரசரிடம் அனுமதி பெற்று, தொடர்ந்து அரசரின் புகழைப் பாடிக்கொண்டே அந்த இடத்தை விட்டகன்று, ஆகாய மார்க்கமாக, நாஸ்திகர்களும், கற்பனையான வறட்டுத் தத்துவவாதிகளும் இல்லாத பிரம்ம லோகத்திற்குச் சென்றார்.

பதம் 9.5.23
ஸம்வத்ஸரோ ‘த்யகாத் தாவத் யாவதா நாகதோ கத: முனிஸ் தத் தர்சனாகாங்க்ஷோ ராஜாப்-பக்ஷோ பபூவ ஹ

ஸம்வத்ஸர:—ஓராண்டு காலம்; அத்யகாத்—கடந்தது; தாவத்—எதுவரை; யாவதா—அதுவரை; ந—இல்லை; ஆகத:—திரும்பினார்; கத:—அந்த இடத்தைவிட்டகன்ற துர்வாச முனி; முனி:—மாமுனிவர்; தத்-தர்சன-ஆகாங்க்ஷ:—மீண்டும் அவரைக் காண விரும்பி; ராஜா—அரசர்; அப்-பக்ஷ:—நீரைமட்டும் பருகி; பபூவ—இருந்தார்; ஹ—உண்மையில்.

அம்பரீஷ மகாராஜனின் இடத்தை விட்டகன்ற துர்வாச முனி ஓராண்டு காலம் திரும்பி வரவில்லை. அதுவரை அரசர் உபவாசமிருந்து நீரை மட்டுமே பருகி வந்தார்.

பதம் 9.5.24
கதே ‘த துர்வாஸஸி ஸோ ‘ம்பரீஷோ த்விஜோபயோகாதிபவித்ரம் ஆஹரத்
ரிஷேர் விமோக்ஷம் வ்யஸனம் ச வீக்ஷ்ய
மேனே ஸ்வ-வீர்யம் ச பரானுபாவம்

கதே—அவர் திரும்பி வந்ததும்; அத—பிறகு; துர்வாஸஸி—மகாயோகியான துர்வாசர்; ஸ:—அவர், அரசர்; அம்பரீஷ:—அம்பரீஷ மகாராஜன்; த்விஜ-உபயோக—தூய பிராமணருக்கு ஏற்ற; அதி-பவித்ரம்—மிகவும் தூய உணவை; ஆஹரத்—அவருக்கு ஆகாரம் அளித்து, தானும் உண்டார்; ரிஷே:—மகா முனிவரின்; விமோக்ஷம்—விடுபட்டு; வ்யஸனம்—சுதர்சன சக்கரத்தால் எரிந்து போகும் பேராபத்திலிருந்து; ச—மேலும்; வீக்ஷ்ய—கண்டு; மேனே—கருதினார்; ஸ்வ-வீர்யம்—தமது சொந்த சக்தியைப் பற்றி; ச—கூட; பர-அனுபாவம்—பரமபுருஷரிடம் அவருக்கிருந்த தூய பக்தியினால்.

ஓராண்டிற்குப் பின் துர்வாசர் திரும்பிவந்தார். அம்பரீஷ மகாராஜனும் தூய அறுசுவை உணவு வகைகளால் அவரை போஜனம் செய்வித்து, தானும் உண்டார். பிராமணரான துர்வாசர் எரிந்து சாம்பலாகும் பேராபத்திலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கண்ட அரசர், பகவானின் அருளால் தமக்கும் பெரும் சக்தியிருப்பதை உணர்ந்தார். ஆனால் அனைத்தும் பகவானால் செய்யப்பட்டன என்பதால், எந்த பாராட்டையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

பதம் 9.5.25
ஏவம் விதானேக-குண: ஸ ராஜா
பராத்மனி ப்ரஹ்மணி வாஸுதேவே
க்ரியா-கலாபை: ஸமுவாஹ பக்திம்
யயாவிரிஞ்ச்யான் நிரயாம்ஸ் சகார

ஏவம்—இவ்வாறாக; விதா-அனேக-குண:—அநேக நற்குணங்களைக் கொண்ட; ஸ—அவர், அம்பரீஷ மகாராஜன்; ராஜா—அரசர்; பர-ஆத்மனி—பரமாத்மாவிடம்; ப்ரஹ்மணி—பிரம்மத்திடம்; வாஸுதேவே—பரமபுருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம், வாசுதேவனிடம்; க்ரியா-கலாபை:—வழக்கமான செயல்களினால்; ஸமுவாஹ—நிறைவேற்றினார்; பக்திம்—பக்தித் தொண்டை; யயா—அத்தகைய செயல்களால்; ஆவிரிஞ்ச்யான்—மிக உயர்ந்த கிரகம் முதற்கொண்டு; நிரயான்—நரக லோகங்கள் வரை; சகார—எல்லா இடங்களிலும் அபாயமிருப்பதை அவர் உணர்ந்தார்.

இவ்விதமாக, பக்தித் தொண்டினால் அநேக உன்னத குணங்களைப் பெற்றிருந்த அம்பரீஷ மகாராஜன், பிரம்மத்தையும், பரமாத்மாவையும், பரமபுருஷ பகவானையும் பூரணமாக அறிந்திருந்ததால், அவர் பக்தித் தொண்டை சிறப்பாக நிறைவேற்றினார் அவருக்கிருந்த தூய பக்தியினால், இந்த ஜட உலகிலுள்ள மிக உயர்ந்த கிரகத்தைக் கூட அவர் நரகத்துக்கொப்பாகவே கருதினார்.

பதம் 9.5.26
ஸ்ரீ-சுக உவாச
அதாம்பரீஷஸ் தனயேஷு ராஜ்யம்
ஸமான-சீலேஷு விஸ்ருஜ்ய தீர:
வனம் விவேசாத்மனி வாஸுதேவே
மனோ ததத் த்வஸ்த-குண-ப்ரவாஹ:

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அத—இவ்விதமாக; அம்பரீஷ:—அம்பரீஷ மகாராஜன்; தனயேஷு—தம் மகன்களுக்கு; ராஜ்யம்—இராஜ்யத்தை; ஸமான-சீலேஷு—தமக்குச் சமமான குணம் படைத்த; விஸ்ருஜ்ய—பிரித்துக் கொடுத்துவிட்டு; தீர:—மிகவும் கற்றறிந்தவரான அம்பரீஷ மகாராஜன்; வனம்—வனத்தில்; விவேச—புகுந்தார்; ஆத்மனி—பரமபுருஷரிடம்; வாஸுதேவே—வாசுதேவன் எனப்படும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்; மன:—மனதை; ததத்—நிறுத்தி; த்வஸ்த—வெற்றிகொண்டு; குண-ப்ராவாஹ:—ஜட இயற்கைக் குணங்களின் அலைகளை.

ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அதன்பிறகு, அம்பரீஷ மகாராஜன் தமது பக்தி வாழ்வின் முதிர்ந்த நிலையின் காரணத்தாலும், பெளதிக விஷயங்களுடன் தொடர்ந்து வாழ விரும்பாததாலும், சுறுசுறுப்பான குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்றார். தமக்குச் சமமான குணம் படைத்த தன் மகன்களுக்கிடையில் இராஜ்யத்தை பிரித்துக் கொடுத்த அவர், வானப்பிரஸ்த வாழ்வை ஏற்று, பகவான் வாசுதேவனிடம் மனதைப் பூரணமாக ஒருமுகப்படுத்துவதற்காக வனத்திற்குச் சென்றார்.

பதம் 9.5.27
இதி ஏதத் புண்யம் ஆக்யானம் அம்பரீஷஸ்ய பூபதே ஸங்கீர்த்தயன் அனுத்யாயன் பக்தோ பகவதோ பவேத்

இதி—இவ்வாறு; ஏதத்—இந்த; புண்யம் ஆக்யானம்—மிகவும் புண்ணியமான இச்சரித்திரத்தை; அம்பரீஷஸ்ய—அம்பரீஷ மகாராஜனின்; பூபதே—அரசே (பரீட்சித்த மகாராஜனே); ஸங்கீர்த்தயன்—பாடுவதால்; அனுத்யாயன்—அல்லது தியானிப்பதால்; பக்த:—ஒரு பக்தராக; பகவத:—பரமபுருஷரின்; பவேத்—ஆக முடியும்.

அம்பரீஷ மகாராஜனின் செயல்களைப் பற்றிய இப்புண்ணிய கதையைப் பாடுபவர் அல்லது நினைப்பவர் யாராயினும் அவர் பகவானின் தூய பக்தராவார் என்பது நிச்சயம்.

பதம் 9.5.28
அம்பரீஷஸ்ய சரிதம் யே ஸ்ருண்வந்தி மஹாத்மன: முக்திம் ப்ரயாந்தி தே ஸர்வே பக்த்யா விஷ்ணோ: ப்ரஸாதத:

அம்பரீஷஸ்ய—அம்பரீஷ மகாராஜனின்; சரிதம்—சரித்திரத்தை; யே-ஸ்ருண்வந்தி—கேட்பவர்; மஹா-ஆத்மன:—தூய பக்தரான மகாபுருஷரின்; முக்திம்—முக்தியை; ப்ரயாந்தி—அடைவது நிச்சயம்; தே ஸர்வே—அத்தகைய நபர்கள் அனைவரும்; பக்த்யா—பக்தித் தொண்டாலேயே; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; ப்ரஸாதத:—கருணையால்.

பகவானின் கருணையால், தூய பக்தரான அம்பரீஷ மகாராஜனின் சரித்திரத்தைக் கேட்பவர் முக்தியடைவார் அல்லது தாமதமின்றி உடனே ஒரு பக்தராக மாறுவார் என்பது நிச்சயம்.


ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “துர்வாசரின் உயிர் காப்பாற்றப்பட்டது” எனும் தலைப்பை கொண்ட ஐந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare