அத்தியாயம் – 4
துர்வாசர் அம்பரீஷருக்குச் செய்த குற்றம்
பதம் 9.4.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: நபகனின் மகனான நாபாகன் தன் ஆன்மீக குருவின் ஆசிரமத்திலேயே நீண்ட காலம் வசித்து வந்தார். எனவே, அவர் திரும்பிவந்து ஒரு குடும்பஸ்தராக வாழமாட்டார் என்றெண்ணிய சகோதரர்கள், அவருக்கென ஒரு பாகத்தை ஒதுக்காமல், தந்தையின் சொத்தை தங்களுக்கிடையில் பங்கு போட்டுக் கொண்டனர். தன் ஆன்மீக குருவின் இடத்திலிருந்து நாபாகன் திரும்பிய போது, தங்களுடைய தந்தையையே அவருடைய பங்காக அவருக்குக் கொடுத்தனர்.

பதம் 9.4.2 : நாபாகன் கேட்டார், “அருமைச் சகோதரர்களே, தந்தையின் சொத்தில் எனக்கென்ன பாகம் வைத்திருக்கிறீர்கள்?” மூத்த சகோதரர்களும், “நம் தந்தையையே உன்னுடைய பாகமாக நாங்கள் வைத்திருக்கிறோம்” என்று பதிலளித்தனர். ஆனால் தந்தையிடம் சென்ற நாபாகன், “அருமை தந்தையே, என் மூத்த சகோதரர்கள் சொத்தில் என்னுடைய பங்காக உங்களையே கொடுத்துள்ளனர்” என்று கூறினார். தந்தையும், “அருமைப் புதல்வனே அவர்களுடைய ஏமாற்று வார்த்தைகளை நீ நம்ப வேண்டாம். நான் உன்னுடைய சொத்தல்ல” என்று பதிலளித்தார்.

பதம் 9.4.3 : நாபாகனின் தந்தை கூறினார்: அங்கிரஸ வம்சத்தினர்கள் அனைவரும் இப்பொழுது ஒரு சிறந்த யாகத்தை நடத்தப் போகிறார்கள். ஆனால் அவர்கள் சிறந்த புத்திகூர்மை உள்ளவர்கள் என்ற போதிலும், ஒவ்வொரு ஆறாவது நாள் வரும்போதும், அவர்கள் யாகம் செய்வதில் குழப்பமடைந்து, அன்றாடக் கடமைகளில் தவறுகளைச் செய்வார்கள்.

பதங்கள் 9.4.4 – 9.4.5 : நாபாகனின் தந்தை தொடர்ந்து கூறினார்: “மகாத்மாக்களான அவர்களிடம் சென்று வைஸ்வதேவரைப் பற்றிய இரு வேத மந்திரங்களையும் விளக்கிச் சொல். அச்சிறந்த முனிவர்கள் யாகத்தை நிறைவேற்றி, சுவர்க்க லோகங்களுக்குச் செல்லும் பொழுது, யாகத்தில் மிஞ்சிய அவர்களுடைய தனங்களை உனக்குக் கொடுப்பார்கள். எனவே உடனே அங்கு செல். “இவ்வாறாக தன் தந்தையின் அறிவுரைப்படியே நாபாகனும் செயற்பட்டார். அங்கிரஸ வம்சத்து முனிவர்களும் தங்களுடைய தனங்களை எல்லாம் அவருக்குக் கொடுத்தபின், சுவர்க்க லோகங்களுக்குச் சென்றனர்.

பதம் 9.4.6 : பிறகு, நாபாகன் அச்செல்வங்களைச் சேகரிக்கும்பொழுது, வடதிசையிலிருந்து வந்த கருத்த மனிதனொருவன், “இந்த யாகசாலையிலுள்ள எல்லாச் செல்வங்களும் எனக்குச் சொந்தமானவை” என்று அவரிடம் கூறினான்.

பதம் 9.4.7 : நாபாகன் கூறினார், “மாமுனிவர்கள் இச்செல்வங்கள் என்னிடம் ஒப்படைத்ததால் இவை எனக்குச் சொந்தமானவையாகும். “நாபாகன் இப்படிச் சொன்னதும், கருப்பு மனிதனும், “உமது தந்தையிடம் சென்று இப்பிரச்சினையை நாம் தீர்த்துக் கொள்வோம்” என்று கூறினான். இதைப்பற்றி நாபாகனும் தன் தந்தையிடம் வினவினார்.

பதம் 9.4.8 : நாபாகனின் தந்தை கூறினார்: தட்ச-யாகசாலையில் மாமுனிவர்களால் அர்ப்பணம் செய்யப்பட்டவை அனைத்தும் சிவபெருமானின் பாகமாக அவருக்கு அளிக்கப்பட்டவையாகும். எனவே, யாகசாலையில் உள்ளவை அனைத்தும் சிவபெருமானுக்குச் சொந்தமானவை என்பதில் சந்தேகமில்லை.

பதம் 9.4.9 : உடனே சிவபெருமானை வணங்கிய நாபாகன் பின்வருமாறு கூறினார்: வணக்கத்திற்குரியவரே, இந்த யாகசாலையில் உள்ள அனைத்தும் உங்களுடையவை என்று என் தந்தை வலியுறுத்துகிறார். எனவே நான் பெரும் மரியாதையுடன் தங்கள் முன் சிரம் தாழ்த்தி வணங்கி, என்னிடம் கருணை கொள்ளும்படி வேண்டுகிறேன்.

பதம் 9.4.10 : சிவபெருமான் கூறினார்: உன் தந்தை கூறியதெல்லாம் உண்மைதான். நீயும் அதே உண்மையைத்தான் பேசுகிறாய். எனவே, வேத மந்திரங்களை அறிந்துள்ள நான் உனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசிக்கிறேன்.

பதம் 9.4.11 : சிவபெருமான் கூறினார், “யாகத்தில் எஞ்சியுள்ள எல்லாச் செல்வங்களையும் நான் உனக்களிப்பதால், இப்பொழுது அவற்றை நீ எடுத்துக் கொள்ளலாம்.” இவ்வாறு கூறியபின், சமயக் கொள்கைகளை நன்கு அனுஷ்டிப்பவரான சிவபெருமான் அங்கிருந்து மறைந்தார்.

பதம் 9.4.12 : இக்கதையைக் காலையிலும், மாலையிலும் மிகவும் கவனத்துடன் கேட்பவர், சொல்பவர் அல்லது நினைப்பவர், நிச்சயமாக கற்றறிந்தவராகவும், வேத மந்திரங்களை அறிவதில் அனுபவமுள்ளவராகவும், தன்னுணர்வில் கைதேர்ந்தவராகவும் ஆவர்.

பதம் 9.4.13 : நாபாகனிலிருந்து அம்பரீஷ மகாராஜன் பிறந்தார். மிகச்சிறந்த பக்தரான அவர், அவரது புண்ணியச் செயல்களினால் புகழ் பெற்று விளங்கினார். என்றும் தவறாத வாக்குடைய ஒரு பிராமணரால் அவர் சபிக்கப்பட்ட போதிலும், அச்சாபத்தால் அவரைத் தொடக்கூட முடியவில்லை.

பதம் 9.4.14 : பரீட்சித்து மகாராஜன் வினவினார்: சிறந்த புண்ணிய புருஷரே, அம்பரீஷ மகாராஜன் ஒழுக்கசீலரும், புகழுக்குரியவருமாவார் என்பதில் சந்தேகமில்லை. அவரைப் பற்றி கேட்க நான் ஆசைப்படுகிறேன். என்ன ஆச்சரியம், வெல்ல முடியாததான பிராமண சாபத்தால் கூட அவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே!

பதங்கள் 9.4.15- 9.4.16 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மகா பாக்கியசாலியான அம்பரீஷ மகாராஜன், பூமியில் வற்றாததும், எல்லையற்றதும், செழிப்புடையதுமான, ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலக ஆட்சியையும் பெற்றிருந்தார். இத்தகைய ஒரு நிலையை அடைவது மிகவும் அரிது. இருப்பினும் அம்பரீஷ மகாராஜன் அதில் சிறிதும் சிரத்தை கொண்டிருக்கவில்லை. ஏனெனில் இத்தகைய செல்வம் பெளதிகமானது என்பதையும், கனவில் காணப்படும் பொருளைப் போல் இத்தகைய செல்வம் முடிவில் அழிந்துவிடும் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். இத்தகைய ஐசுவரியத்தை அடையும் பக்தரல்லாத ஒருவன் தமோ குணத்தில் ஆழ்ந்துவிடுகிறான் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

பதம் 9.4.17 : பரமபுருஷரான வாசுதேவனிடத்திலும், பகவத் பக்தர்களான சாதுக்களிடத்திலும் அம்பரீஷ மகாராஜன் சிறந்த பக்தி கொண்டிருந்தார். இந்த பக்தியினால், பிரபஞ்சம் முழுவதையும் ஒரு மண் கட்டியைப் போல் அற்பமானதாகவே அவர் எண்ணினார்.

பதங்கள் 9.4.18 – 9.4.20 : அம்பரீஷ மகாராஜன் எப்பொழுதும் தன் மனதைக் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை தியானிப்பதிலும், வார்த்தைகளை பகவானின் பெருமைகளை விவரிப்பதிலும், கரங்களை பகவானின் ஆலயத்தைச் சுத்தம் செய்வதிலும், மற்றும் செவிகளை கிருஷ்ணரைப் பற்றி அல்லது கிருஷ்ணரால் பேசப்பட்ட வார்த்தைகளைக் கேட்பதிலும் ஈடுபடுத்தினார். அவர் தன் கண்களை, கிருஷ்ணரின் விக்கிரகத்தையும், ஆலயங்களையும் மற்றும் பிருந்தாவனம், மதுரா போன்ற இடங்களையும் காண்பதில் ஈடுபடுத்தினார். அவர் தன் ஸ்பரிச உணர்வை பகவத் பக்தர்களின் உடல்களைத் தொடுவதிலும், முகரும் புலனை பகவானுக்கு நிவேதம் செய்யப்பட்ட துளசியின் நறுமணத்தை முகர்வதிலும், மற்றும் நாக்கை பகவானின் பிரசாதத்தைச் சுவைப்பதிலும் ஈடுபடுத்தினார். தன் கால்களைப் புண்ணிய ஸ்தலங்களுக்கும், பகவானின் ஆலயங்களுக்குச் செல்வதிலும், தலையை பகவான் முன் வணங்குவதிலும் மற்றும் தன் விருப்பங்களை எல்லாம் பகவானுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் தொண்டு செய்வதிலும் ஈடுபடுத்தினார். உண்மையில், அம்பரீஷ மகாராஜன் தன் புலன் நுகர்வுக்காக எதையுமே விரும்பியதில்லை. அவர் தனது புலன்களை எல்லாம் பகவானுக்குச் சம்பந்தப்பட்ட பல்வேறு பக்தித் தொண்டுகளில் ஈடுபடுத்தினார். பகவானிடமுள்ள பற்றை அதிகரிப்பதற்கும், பெளதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருப்பதற்கும் இதுதான் வழி.

பதம் 9.4.21 : அம்பரீஷ மகாராஜன் தமது அரச கடமைகளின் பயன்கள் அனைத்தையும், பௌதிக புலன்களால் அறியப்பட முடியாதவரும், பரம புருஷருமான ஸ்ரீ கிருஷ்ணருக்கே எப்பொழுதும் அர்ப்பணித்து வந்தார். அவர் பகவானிடம் விசுவாசம் கொண்ட பக்தர்களான பிராமணர்களின் அறிவுரையை ஏற்று, சிரமமின்றி உலகை ஆண்டு வந்தார்.

பதம் 9.4.22 : சரஸ்வதி நதி ஓடிய பாலைவன நாடுகளில், அம்பரீஷ மகாராஜன் அஸ்வமேத யாகத்தைப் போன்ற பெரும் யாகங்களைச் செய்து, யாகங்களுக்கெல்லாம் எஜமானரான பரமபுருஷரை திருப்திப்படுத்தினார். அத்தகைய யாகங்கள் செல்வச் சிறப்புடனும், தகுந்த உபகரணங்களுடனும் இயற்றப்பட்டன. மேலும் யாகத்தை இயற்றிய அரசரைப் பிரதிநிதித்த மாமுனிவர்களான வசிஷ்டர், அசிதர் மற்றும் கௌதமரைப் போன்றவர்களின் மேற்பார்வையில் செயற்பட்ட பிராமணர்களுக்கும் சன்மானங்கள் அளிக்கப்பட்டன.

பதம் 9.4.23 : அம்பரீஷ மகாராஜனால் ஏற்பாடு செய்யப்பட்ட யாகத்தில், அவை உறுப்பினர்களும், புரோகிதர்களும் (குறிப்பாக ஹோதா, உத்காதா, ப்ரஹ்மா மற்றும் அத்வர்யு ஆகியோர்) பகட்டாக உடையணிந்து, தேவர்களைப் போலவே காணப்பட்டனர். அவர்கள் யாகத்தை முறையாக நிறைவேற்றுவதில் கண்ணுங்கருத்துமாக இருந்தனர்.

பதம் 9.4.24 : அம்பரீஷ மகாராஜனின் இராஜ்யத்தைச் சேர்ந்த பிரஜைகள், பரமபுருஷரின் புகழுக்குரிய செயல்களைப் பற்றி கேட்பதிலும், பேசுவதிலும் பழக்கப்பட்டிருந்தனர். இதனால், தேவர்களுக்கும் மிகப்பிரியமான சுவர்க்கலோகங்களுக்கு உயர்த்தப்படுவதைக் கூட அவர்கள் விரும்பவில்லை.

பதம் 9.4.25 : பரமபுருஷருக்குத் தொண்டு செய்யும் உன்னத ஆனந்தத்தில் மூழ்கியவர்கள், பெரும் யோகிகளால் அடையப்படும் சித்திகளைக் கூட விரும்புவதில்லை. ஏனெனில், எப்பொழுதும் கிருஷ்ணரைப் பற்றியே இதயத்தில் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு பக்தரால் உணரப்படும் உன்னத ஆனந்தத்தை, இத்தகைய சித்திகள் அதிகரிப்பதில்லை.

பதம் 9.4.26 : இவ்வுலகின் பேரரசரான அம்பரீஷ மகாராஜன் பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபட்டு, கடுந்தவத்தை மேற்கொண்டார். தன் சுய தர்ம அனுஷ்டானங்களால் பரமபுருஷ பகவானை எப்பொழுதும் திருப்திப்படுத்திய அவர், படிப்படியாக எல்லா பெளதிக ஆசைகளையும் விட்டுவிட்டார்.

பதம் 9.4.27 : அம்பரீஷ மகாராஜன் மனைவிகள், குழந்தைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்ற எல்லா குடும்பப் பற்றுகளையும் துறந்தார். சக்தி மிக்க சிறந்த யானைகள், இரதங்கள், குதிரைகள், குறையாத இரத்தினங்கள், ஆபரணங்கள், ஆடைகள் மற்றும் குறையாத பொக்கிஷம் ஆகியவற்றில் வைத்திருந்த பற்றுகளையும் அவர் கைவிட்டார். அவையனைத்தும் நிலையற்ற, பெளதிகமானவை என்றெண்ணி அவற்றில் தமக்கிருந்த எல்லாப் பற்றுகளையும் அவர் கைவிட்டார்.

பதம் 9.4.28 : அம்பரீஷ மகாராஜனின் தூய பக்தியில் மிகவும் திருப்தியடைந்த பரமபுருஷர், அரசருக்குத் தமது சக்கரத்தைத் தந்தருளினார். பகைவர்களை பீதியடையச் செய்யும் அச்சக்கரம் பக்தர்களை எப்பொழுதும் எதிரிகளிடமிருந்தும், துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுகிறது.

பதம் 9.4.29 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட விரும்பிய அம்பரீஷ மகாராஜன், தமக்கு இணையான தகுதியைப் பெற்றிருந்த தமது ராணியுடன் ஒரு வருஷம் ஏகாதசி, துவாதசி விரதத்தை அனுஷ்டித்தார்.

பதம் 9.4.30 : ஒரு வருஷம் அவ்விரதத்தை அனுஷ்டித்தபின், கார்த்திகை மாதத்தில், மூன்று இரவுகள் உபவாசம் இருந்து, யமுனையில் குளித்தபின் அம்பரீஷ மகாராஜன், பரமபுருஷரான ஹரியை மதுவனத்தில் வழிபட்டார்.

பதங்கள் 9.4.31 – 9.4.32 : மகாபிஷேகத்திற்குரிய விதிகளைப் பின்பற்றிய அம்பரீஷ மகாராஜன், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகத்திற்கு, எல்லாப் பொருட்களாலும் அபிஷேகம் செய்தார். பிறகு ஆடை அணிகலன்களாலும், நறுமணமுள்ள மலர் மாலைகளாலும், பிற பொருட்களாலும் பகவானைப் பூஜித்தார். கிருஷ்ணரையும், பௌதிக ஆசைகளிலிருந்து விடுபட்ட மகாபாக்கியசாலிகளான பிராமணர்களையும் அவர் வழிபட்டார்.

பதங்கள் 9.4.33 – 9.4.35 : பிறகு வீட்டிற்கு வந்திருந்த எல்லா அதிதிகளையும், குறிப்பாக எல்லா பிராமணர்களையும் அம்பரீஷ மகாராஜன் திருப்திப்படுத்தினார். தங்கத்தகடுகளால் மூடப்பட்ட கொம்புகளையும், வெள்ளித் தகடுகளால் மூடப்பட்ட குளம்புகளையும் கொண்ட அறுபது கோடி பசுக்களையும், அவற்றுடன் கன்றுகளையும் அவர் தானம் செய்தார். ஆடைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த எல்லாப் பசுக்களும், பால் நிரம்பிய மடிகளைக் கொண்டிருந்தன. அவை சாந்தமும், இளமையும் கொண்டு அழகுடன் விளங்கின. அப்பசுக்களைத் தானம் செய்தபின், அரசர் முதலில் எல்லா பிராமணர்களுக்கும் விருந்தளித்தார். அவர்கள் திருப்தியடைந்ததும், அவர்களுடைய அனுமதியுடன் தமது ஏகாதசி விரதத்தை அவர் முடித்துக்கொள்ளத் தயாரானார். ஆனால் அச்சமயத்தில், சக்திவாய்ந்த மகாயோகியான துர்வாச முனிவர் அழையா விருந்தாளியாக அங்கு தோன்றினார்.

பதம் 9.4.36 : துர்வாச முனிவரை வரவேற்பதற்காக எழுந்து நின்ற அம்பரீஷ மகாராஜன், அவருக்கு ஆசனமளித்து, அவரை வழிபட்டார். பிறகு அந்த மாமுனிவரின் காலடியில் அமர்ந்து, உணவருந்தும்படி அரசர் அவரை வேண்டிக் கொண்டார்.

பதம் 9.4.37 : அம்பரீஷ மகாராஜனின் வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட துர்வாச முனி, அவசியமான அனுஷ்டானத்தை முடித்துவர யமுனை நதிக்குச் சென்றார். அங்கு அவர் அருவ பிரம்மத்தை தியானித்தவாறு மங்களகரமான யமுனை நீரில் மூழ்கினார்.

பதம் 9.4.38 : இதற்கிடையில், துவாதசி தினத்தில் விரதத்தை முடித்துக் கொள்வதற்கு ஒரு நாழிகை மட்டுமே எஞ்சியிருந்து. இதனால் அவசரமாக விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. ஆபத்தான இச்சூழ்நிலையில், அரசர் பிராமண பண்டிதர்களுடன் கலந்தாலோசித்தார்.

பதங்கள் 9.4.39 – 9.4.40 : அரசர் கூறினார்: “பிராமணர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை மீறுவது பெருங்குற்றம். அதேசமயம், துவாதசி தினத்தன்று விரதத்தை முடிக்கவில்லை என்றால் விரதத்தில் குறையுண்டாகும். எனவே, பிராமணர்களே, நீரைப் பருகி என் விரதத்தை நான் முடித்துக் கொள்வது மங்களகரமானதாகவும், தர்மத்தை மீறாததாகவும் இருக்குமானால், அதை நான் செய்து விடுகிறேன்.” அரசர் பிராமணர்களின் கருத்துப்படி, நீரைப் பருகுவது சாப்பிட்டதுமாகும், சாப்பிடாததுமாகும் என்பதால், அவர்களைக் கலந்தாலோசித்தபின் அரசர் இந்த முடிவுக்கு வந்தார்.

பதம் 9.4.41 : குரு வம்சத்தில் சிறந்தவரே, அம்பரீஷ மகாராஜன் சிறிது நீரைப் பருகியபின், இதயத்தில் பரமபுருஷரை தியானித்தவாறு, மகாயோகியான துர்வாச முனிவரின் வரவுக்காகக் காத்திருந்தார்.

பதம் 9.4.42 : நடுப்பகலில் செய்ய வேண்டிய அனுஷ்டானத்தை நிறைவேற்றிய பின், துர்வாசர் யமுனைக் கரையிலிருந்து திரும்பினார். அரசர் அவரை நன்கு வரவேற்று, எல்லா மரியாதைகளையும் அளித்தார். ஆனால் தன் அனுமதியின்றி அம்பரீஷ மகாராஜன் நீர் பருகியதைத் தன் யோக சக்தியால் துர்வாச முனிவர் அறிந்தார்.

பதம் 9.4.43 : உடல் நடுங்க, கண்ணிமைகள் வளைந்து, முகம் சுளித்து, இன்னமும் பசியோடிருந்த துர்வாச முனிவர், தன்முன் கூப்பிய கரங்களுடன் நின்றிருந்த அம்பரீஷ மகாராஜனிடம் பின்வருமாறு கோபத்துடன் பேசினார்.

பதம் 9.4.44 : ஐயகோ! இரக்கமற்ற இந்த மனிதனின் நடத்தையைச் சற்று கவனியுங்கள்! இவன் ஒரு விஷ்ணு பக்தனல்ல. பௌதிக செல்வத்தாலும், தன் பதவியினாலும் திமிர்பிடித்தவனாகி, தன்னையே இவன் கடவுளென்று நினைத்துக் கொண்டிருக்கிறான். மதக் கோட்பாடுகளை எப்படி இவன் அத்துமீறிப் போனான் என்பதைச் சற்று கவனியுங்கள்.

பதம் 9.4.45 : அம்பரீஷ மகாராஜனே, அதிதியாக வந்த என்னைச் சாப்பிட அழைத்துவிட்டு, எனக்கு உணவளிக்காமல் நீ முதலில் சாப்பிட்டு விட்டாய். உன் கெட்ட நடத்தையால், உனக்குப் பாடம் கற்பித்து உன்னைத் தண்டிக்கிறேன் பார்.

பதம் 9.4.46 : இதைச் சொன்ன துர்வாச முனிவரின் முகம் கோபத்தால் சிவந்தது. அம்பரீஷ மகாராஜனைத் தண்டிப்பதற்காக, தன் தலையிலுள்ள ஜடாமுடியைக் கிள்ளியெடுத்து, காலாக்னியைப் போன்றதொரு துர்தேவதையை அவர் உண்டாக்கினார்.

பதம் 9.4.47 : தீப்போன்ற அந்த துர்தேவதை, பூமி அதிர, கையில் ஒரு சூலத்துடன் அம்பரீஷ மகாராஜனை நோக்கி நடந்து வந்தது. ஆனால் அதைக் கண்டு சிறிதும் கலக்கமடையாத அரசர், கொஞ்சங்கூட அசையாமல் அங்கேயே நின்றிருந்தார்.

பதம் 9.4.48 : காட்டுத் தீ கோபங்கொண்ட பாம்பை உடனே எரித்து சாம்பலாக்குகிறது. அதுபோலவே, பக்தர்களின் பாதுகாப்புக்காக பகவானால் முன்பே அளிக்கப்பட்டிருந்த அவரது சுதர்ன சக்கரம், துஷ்ட தேவதையை உடனே எரித்துச் சாம்பலாக்கி பக்தரைக் காப்பாற்றியது.

பதம் 9.4.49 : தன் சொந்த முயற்சி தோல்வியடைந்ததையும், சுதர்சன சக்கரம் தன்னை நோக்கிப் பாய்ந்து வருவதையும் கண்ட துர்வாச முனி, மிகவும் பயந்து, தன்னுயிரைக் காத்துக் கொள்ள நாற்புறமும் ஓடினார்.

பதம் 9.4.50 : கொழுந்து விட்டெரியும் காட்டுத்தீ பாம்பைப் பின்தொடர்ந்து செல்வதைப் போலவே, பரமபுருஷ பகவானின் சக்கரம் துர்வாச முனிவரை விரட்டத் துவங்கியது. சக்கரம் தன் முதுகைத் தொடும் அளவிற்கு நெருங்கிவிட்டதைக் கண்ட துர்வாசர், மேரு மலையிலுள்ள ஒரு குகைக்குள் புகுந்துவிட எண்ணி, மிகவும் வேகமாக ஓடினார்.

பதம் 9.4.51 : துர்வாச முனி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஆகாயத்திலும், பூமியிலும், குகைகளுக்குள்ளும், கடலுக்குள்ளும், மூவுலகிலுள்ள லோக பாலகர்களின் வெவ்வேறு கிரகங்களுக்கும் மற்றும் சுவர்க்க லோகங்களுக்கும் கூட ஓடினார். ஆனால் அவர் சென்ற இடங்களுக்கெல்லாம், சுதர்சன சக்கரத்தின் சகிக்க முடியாத தீ உடனே தன்னைப் பின்தொடர்ந்து வருவதைக் கண்டார்.

பதம் 9.4.52 : அச்சம் தோய்ந்த மனதுடன், துர்வாச முனி பாதுகாப்பைத் தேடி இங்குமங்கும் சென்றார். ஆனால் எங்கும் பாதுகாப்பு கிடைக்காததால், இறுதியில் அவர் பிரம்மதேவரை அணுகி, “பிரம்ம தேவரே! பரம புருஷரால் அனுப்பப்பட்ட கொழுந்து விட்டெரியும் சுதர்சன சக்கரத்திலிருந்து தயவுசெய்து எனக்கு பாதுகாப்புக் கொடுங்கள்” என்று கூறினார்.

பதங்கள் 9.4.53 – 9.4.54 : பிரம்ம தேவர் கூறினார்: த்வி-பரார்தத்தின் முடிவில், அதாவது, பகவான் விஷ்ணுவின் லீலைகள் ஒரு முடிவுக்கு வரும்பொழுது, அவர் தமது கண்ணிமைகளை அசைப்பதன் மூலம், எங்களுடைய வசிப்பிடங்கள் உட்பட முழு பிரபஞ்சத்தையுமே அழித்து விடுகிறார். நான், சிவபெருமான், தட்சன், பிருகு மற்றும் எங்களுக்கொப்பான பிற முனிவர்கள், அத்துடன் ஜீவராசிகளை ஆள்பவர்கள், மனித சமூகத்தை ஆள்பவர்கள், மற்றும் தேவர்களை ஆள்பவர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் பரமபுருஷராகிய அந்த பகவான் விஷ்ணுவிடம் சரணடைகிறோம். அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக, அவருக்கு சிரம் பணிந்து, அவரது கட்டளைகளை நிறைவேற்றுகிறோம்.

பதம் 9.4.55 : சுதர்சன சக்கரத்தின் தீப்பிழம்பினால் பெரிதும் பாதிப்புற்ற துர்வாசர் பிரம்மதேவரால் கைவிடப்பட்டு, கைலாசவாசியான சிவபெருமானிடம் சரணடைய முயன்றார்.

பதம் 9.4.56 : சிவபெருமான் கூறினார்: அருமைப் புதல்வனே, நானும், பிரம்மதேவரும், மற்ற தேவர்களும், நாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்துடன் இப்பிரபஞ்சத்தினுள் சுற்றிக் கொண்டிருக்கிறோம். பரமபுருஷருடன் போட்டியிடும் சக்தி எங்களுக்கில்லை. ஏனெனில், பகவானின் சாதாரண உத்தரவினாலேயே எண்ணற்ற பிரபஞ்சங்களும், அவற்றின் வாசிகளும் படைக்கப்பட்டு, மீண்டும் அழிக்கப்படுகின்றன.

பதங்கள் 9.4.57 – 9.4.59 : பூரணத்துவம் அடைந்தவர்களான நான் (சிவபெருமான்), சனத் குமாரர்கள், நாரதர், மரியாதைக்குரிய பிரம்மதேவர், கபிலர் (தேவஹுதி) புத்திரர்); அபாந்தரமர் (பகவான் வியாசதேவர்), தேவலர், யமராஜர், ஆசுரி, மரீசி, அவரை தலைமையாகக் கொண்ட பல முனிவர்கள் மற்றும் வேறு பலர் ஆகிய நாங்கள் கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களை அறிந்தவர்கள். இருப்பினும், நாங்கள் பகவானின் மாயச் சக்தியால் மூடப்பட்டிருப்பதால், அந்த மாயச் சக்தி எவ்வளவு பரந்தது என்பதை எங்களால் அறிய முடியவில்லை. இந்த சுதர்சன சக்கரம் எங்களாலேயே பொறுத்துக் கொள்ள முடியாதது என்பதால், நீ அப்பரமபுருஷரிடமே சென்று உதவி தேடிக்கொள். பகவான் விஷ்ணுவையே சரணடை. அவர் உனக்கு சர்வ மங்களத்தையும் அருள்வார்.

பதம் 9.4.60 : அதன்பிறகு, சிவபெருமானிடம் சரணடைவதிலும் ஏமாற்றமடைந்த துர்வாச முனிவர், பரமபுருஷரான நாராயணர் லக்ஷ்மி தேவியுடன் நித்திய வாசம் செய்யும் வைகுண்டத்திற்கும் சென்றார்.

பதம் 9.4.61 : சுதர்சன சக்கரத்தினால் தாக்கப்பட்ட மகா யோகியான துர்வாச முனி, உடல் நடுங்க பகவான் நாராயணரின் பத்ம பாதங்களில் விழுந்து பின்வருமாறு வேண்டினார்: அழிவற்றவரே, எல்லையற்ற பகவானே, முழு பிரபஞ்சத்தையும் காத்து இரட்சிப்பவரே, தாங்கள் ஒருவரே எல்லா பக்தர்களுக்கும் விரும்பத்தக்க பொருளாக இருக்கிறீர்கள். பெருமானே நான் ஒரு பெரிய குற்றவாளி. தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்றுங்கள்.

பதம் 9.4.62 : எம்பெருமானே! பரம ஆளுனரே! அவர்களுடைய எல்லையற்ற சக்தியை அறியாமல் உங்களுக்கு மிகப்பிரியமான பக்தருக்கு நான் தீங்கிழைத்து விட்டேன். இக்குற்றத்தின் விளைவிலிருந்து தயவுசெய்து என்னைக் காத்தருள வேண்டும். தங்களால் எதையும் செய்ய முடியும். ஏனெனில், ஒருவன் நரகம் செல்லத் தகுதியுடையவனாக இருந்தாலும், அவனது இதயத்தில் தங்களுடைய புனித நாமத்தை எழச் செய்வதாலேயே அவனை உங்களால் காத்தருள முடியும்.

பதம் 9.4.63 : பரமபுருஷர் பிராமணரிடம் கூறினார்: நான் முற்றிலும் என் பக்தர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறேன். உண்மையில், பக்தர்களுக்கு நான் அடிமைப்பட்டவன். எனது பக்தர்கள் பெளதிக ஆசைகளை முற்றிலும் துறந்தவர்கள் என்பதால், அவர்களுடைய இதய ஆழத்தில் மட்டுமே நான் அமர்ந்தவனாக இருக்கிறேன். என் பக்தனின் பக்தர்களும் எனக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆதலால், என் பக்தர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

பதம் 9.4.64 : பிராமணர்களில் சிறந்தவரே, என்னை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ள சாதுக்கள் இல்லாமல், எனது உன்னத ஆனந்தத்தையும், பரம ஐசுவரியங்களையும் தனியாக அனுபவிக்க நான் விரும்பவில்லை.

பதம் 9.4.65 : தூய பக்தர்கள் எனக்குத் தொண்டு செய்வதற்காக, இப்பிறவியிலோ, அடுத்ததிலோ பெளதிக முன்னேற்றமடையும் விருப்பம் இல்லாமல், தங்களுடைய வீடு, மனைவி, மக்கள், உறவினர்கள், செல்வம் மற்றும் உயிரையும் கூட தியாகம் செய்கின்றனர் என்பதால் அத்தகைய பக்தர்களை என்னால் எப்படி கைவிட முடியும்?

பதம் 9.4.66 : கற்புடைய பெண்கள் சேவையால் தங்களுடைய நல்ல கணவன்களை வசப்படுத்துவது போல், அனைவரிடமும் சமமாக நடந்து கொள்பவர்களும், என்னிடம் பூரணமான பற்றுக் கொண்டிருப்பவர்களுமான தூய பக்தர்கள் என்னை வசப்படுத்துகின்றனர்.

பதம் 9.4.67 : எனது அன்புத் தொண்டில் ஈடுபட்டிருப்பதில் எப்பொழுதும் திருப்தியடையும் என் பக்தர்கள், நான்கு வகை முக்திகளில் கூட (சாலோக்யம், சாரூப்யம், சாமீப்யம் மற்றும் சார்ஷ்டி) சிரத்தையற்றவர்களாக உள்ளனர். என்றாலும் அவர்களது சேவையால் இவை தானாகவே அடையப்படுகின்றன. உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுவதைப் போன்ற, அழியக்கூடிய மகிழ்ச்சியைப் பற்றி என்னென்று சொல்வது?

பதம் 9.4.68 : தூய பக்தன் எப்பொழுதும் என் இதய மத்தியில் வாழ்கிறான். நான் எப்பொழுதும் தூய பக்தனின் இதயத்தில் வாழ்கிறேன். எனது பக்தர்கள் என்னையன்றி வேறெதையும் அறியார்கள். நானும் அவர்களையன்றி வேறெவரையும் அறியேன்.

பதம் 9.4.69 : பிராமணரே, உனது சொந்த பாதுகாப்பிற்காக எனது அறிவுரையை இப்பொழுது கேளும். அம்பரீஷ மகாராஜக்குத் தீங்கிழைத்ததால், உமக்கே விரோதமான காரியத்தை நீர் செய்துவிட்டீர். எனவே ஒரு கணமும் தாமதிக்காமல் உடனே அவரிடம் நீர் செல்ல வேண்டும். ஒருவன் தன் சக்தியை பக்தனுக்கெதிராக பிரயோகிக்கும் போது, அதைப் பிரயோகித்தவனுக்கே அது கெடுதியாக முடியும் என்பதில் சந்தேகமில்லை. எனவே கெடுதி செய்தவனுக்குத்தான் கெடுதி விளையும்.

பதம் 9.4.70 : பிராமணர் ஒருவருக்குத் தவமும், கல்வியும் உயர்ந்த நன்மையளிப்பவை ஆகும். நற்பண்புகள் இல்லாத ஒருவனுக்கு அத்தகைய தவமும், கல்வியும் மிகவும் ஆபத்தானவையாகும்.

பதம் 9.4.71 : எனவே பிராமண சிரேஷ்டரே, நீர் உடனே நாபாக மகாராஜனின் புத்திரரான அம்பரீஷ மகாராஜனிடம் செல்லும். உமக்கு மங்களம் உண்டாகட்டும். அம்பரீஷ மகாராஜனை உம்மால் திருப்திப்படுத்த முடியுமானால், பிறகு சாந்தி ஏற்படும்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare