அத்தியாயம் – 24
பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர்
பதம் 9.24.1
ஸ்ரீ-சுக உவாச
தஸ்யாம் விதர்போ ‘ஜனயத் புத்ரௌ நாம்னா குச-க்ரதௌ
த்ருதீயம் ரோமபாதம் ச விதர்ப-குல-நந்தனம்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தஸ்யாம்—அப்பெண்ணில்; விதர்ப:—சைப்யாவிற்குப் பிறந்த விதர்பன் என்ற அந்த மகன்; அஜனயத்—பெற்றெடுத்தாள்; புத்ரௌ—இரு மகன்களை; நாம்னா—என்ற பெயருடைய; குச—க்ரதௌ—குசன் மற்றும் கிரதன்; த்ருதீயம்—ஒரு மூன்றாவது மகனான; ரோமபாதம் ச—ரோமபாதரையும் கூட; விதர்ப-குல-நந்தனம்—விதர்ப வம்சத்தினருக்குப் பிரியமான.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: விதர்பர் தன் தந்தையால் கொண்டு வரப்பட்ட பெண்ணின் கர்பத்தில் குசன், கிரதன், ரோமபாதர் என்ற மூன்று மகன்களைப் பெற்றார். விதர்ப வம்சத்தில் வந்த ரோமபாதர் எல்லோருக்கும் பிரியமானவராக இருந்தார்.

பதம் 9.24.2
ரோமபாத-ஸுதோ பப்ருர் பப்ரோ: க்ருதிர் அஜாயத
உசிகஸ் தத்-ஸுதஸ் தஸ்மாச் சேதிஸ் சைத்யாதயோ ந்ருபா:

ரோமபாத-ஸுத:—ரோமபாதரின் மகன்; பப்ரு—பப்ரு; பப்ரோ:—பப்ருவிலிருந்து; க்ருதி:—கிருதி; அஜாயத—பிறந்தார்; உசிக:—உசிகர்; தத்—ஸுத:—கிருதியின் மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து (உசிகரிலிருந்து); சேதி:—சேதி; சைத்ய—சைத்யர் (தமகோஷர்); ஆதய:—மற்றும் பிறர்; ந்ருபா:—அரசர்கள்.

ரோமபாதரின் மகன் பப்ரு. அவரிலிருந்து கிருதி என்ற மகன் வந்தார். கிருதியின் மகன் உசிகர். உசிகரின் மகன் சேதி. சேதியிலிருந்து சைத்யர் என்ற அரசரும் மற்றவர்களும் பிறந்தனர்.

பதங்கள் 9.24.3 – 9.24.4
க்ரதஸ்ய குந்தி: புத்ரோ ‘பூத் வ்ருஷ்ணிஸ் தஸ்யாத நிர்வ்ருதி:
ததோ தசார்ஹோ நாம்னாபூத் தஸ் வ்யோம: ஸுதஸ் தத:

ஜீமூதோ விக்ருதிஸ் தஸ்ய யஸ்ய பீமரத: ஸுத:
ததோ நவரத: புத்ரோ ஜாதோ தசரதஸ் தத:

க்ரதஸ்ய—கிரதரின்; குந்தி:—குந்தி: புத்ர:—ஒரு மகன்; அபூத்—பிறந்தார்; வ்ருஷ்ணி:—விருஷ்ணி; தஸ்ய—அவருடைய; அத—பிறகு; நிர்வ்ருதி:—நிர்விருதி; தத:—அவரிலிருந்து; தசார்ஹ:—தசார்ஹர்; நாம்னா—என்பவர்; அபூத்—பிறந்தார்; தஸ்ய—அவருடைய; வ்யோம:—வியோமர்; ஸுத:—ஒரு மகன்; தத:—அவரிலிருந்து; ஜீமூத:—ஜீமூதர்; விக்ருதி:—விக்ருதி; தஸ்ய—அவருடைய (ஜீமூதரின் மகன்); யஸ்ய—எவருடைய (விக்ருதி); பீமரத:—பீமரதர்; ஸுத:—ஒரு மகன்; தத:—அவரிலிருந்து (பீமரதர்); நவரத:—நவரதர்; புத்ர:—ஒரு மகன்; ஜாத:—பிறந்தார்; தசரத:—தசரதர்; தத:—அவரிலிருந்து.

கிரதரின் மகன் குந்தி. குந்தியின் மகன் விருஷ்ணி. விருஷ்ணியின் மகன் நிவ்ருதி. நிவ்ருதியின் மகன் தஸார்ஹர், அவரிலிருந்து வியோமரும், வியோமரிலிருந்து ஜீமூதரும், அவரிலிருந்து விக்ருதியும், விக்ருதியிலிருந்து பீமரதரும், அவரிலிருந்து நவரதரும், நவரதரிலிருந்து தசரதரும் வந்தனர்.

பதம் 9.24.5
கரம்பி: சகுணே: புத்ரோ தேவராதஸ் தத்-ஆத்மஜ:
தேவக்ஷத்ரஸ் ததஸ் தஸ்ய மது: குருவசாத் அனு:

கரம்பி:—கரம்பி; சகுனே:—சகுனியிலிருந்து: புத்ர:—ஒரு மகன்; தேவராத:—தேவராதர்; தத்-ஆத்மஜ:—அவருடைய மகன் (கரம்பி); தேவக்ஷத்ர—தேவக்ஷத்ரர்; தத:—அதன்பிறகு; தஸ்ய—அவரிலிருந்து (தேவக்ஷத்ரரிலிருந்து); மது:—மது; குருவசாத்—மதுவின் மகனான குருவசரிலிருந்து; அனு:—அனு.

தசரதரிலிருந்து சகுனி என்ற ஒரு மகன் வந்தார். சகுனியிலிருந்து கரம்பி என்ற மகன் வந்தார். கரம்பியின் மகன் தேவராதர். அவரது மகன் தேவக்ஷத்ரர். அவரது மகன் மது. மதுவின் மகன் குருவசர். அவரிலிருந்து அனு என்ற மகன் வந்தார்.

பதங்கள் 9.24.6 – 9.24.8
புருஹோத்ரஸ் து அனோ: புத்ரஸ் தஸ்யாயு: ஸாத்வதஸ் தத:
பஜமானோ பஜிர் திவ்யோ வ்ருஷ்ணிர் தேவாவ்ருதோ ‘ந்தக:

ஸாத்வதஸ்ய ஸுதா: ஸப்த மஹாபோஜஸ் ச மாரிஷ
பஜமானஸ்ய நிம்லோசி: கிங்கணோ த்ருஷ்டிர் ஏவ ச

ஏகஸ்யாம் ஆத்மஜ: பத்ன்யாம் அன்யஸ்யாம் ச த்ரய: ஸுதா:
சதாஜிச் ச ஸஹஸ்ராஜித் அயுதாஜித் இதி ப்ரபோ

புருஹோத்ர:—புருஹோத்ரர்; து—உண்மையில்; அனோ:—அனுவின்; புத்ர:—மகன்; தஸ்ய—அவருடைய (புருஹோத்ரரின்); அயு:—அயு; ஸாத்வத:—சாத்வதர்; தத:—அவரிலிருந்து (அயுவிலிருந்து); பஜமான:—பஜமானர்; பஜி:—பஜி; திவ்ய:—திவ்யர்; வ்ருஷ்ணி:—விருஷ்ணி; தேவாவ்ருத:—தேவாவிருதர்; அந்தக:—அந்தகர்; ஸாத்வதஸ்ய—சாத்வதரின்; ஸுதா:—மகன்கள்; ஸப்த—எழுவர்; மஹாபோஜ: ச—அத்துடன் மஹாபோஜரும்; மாரிஷா—சிறந்த அரசரே; பஜமானஸ்ய—பஜமானரின்; நிம்லோசி:—நிம்லோசி; கிங்கண:—கிங்கணர்; திருஷ்டி:—திருஷ்டி; ஏவ—உண்மையில்; ச—கூட; ஏகஸ்யாம்—ஒரு மனைவியிலிருந்து பிறந்த; ஆத்மஜ—மகன்கள்: பத்ன்யாம்—ஒரு மனைவியால்; அன்யஸ்யாம்—மற்றொரு; ச—மேலும்; த்ரய:—மூன்று; ஸுதா:—மகன்கள்; சதாஜித்—சதாஜித்; ச—கூட; ஸஹஸ்ராஜித்—சஹஸ்ராஜித்; அயுதாஜித்—அயுதாஜித்; இதி—இவ்வாறு; ப்ரபோ—அரசே.

அனுவின் மகன் புருஹோத்ரர். அவரது மகன் அயு. அயுவின் மகன் சாத்வதர், சிறந்த ஆசிய மன்னரே, சாத்வதருக்கு பஜமானர், பஜி, திவ்யர், விருஷ்ணி, தேவாவிருதர், அந்தகர், மஹாபோஜர் என்ற ஏழு மகன்கள் இருந்தனர். பஜமானர் அவரது ஒரு மனைவியின் மூலமாக நிம்லோசி, கிங்கனர், திருஷ்டி என்ற மூன்று மகன்களைப் பெற்றார். அவரது பிற மனைவிகளிலிருந்து சதாஜித், சஹஸ்ராஜித், அயுதாஜித் என்ற வேறு மூன்று மகன்கள் வத்தனர்.

பதம் 9.24.9
பப்ரூர் தேவாவ்ருத-ஸுதஸ் தயோ: ஸ்லோகௌ படந்தி அமூ
யதைவ ஸ்ருணுமோ தூராத் ஸம்பஸ்யாமஸ் ததாந்திகாத்

பப்ரு:—பப்ரு; தேவாவ்ருத—தேவாவிருதரின்: ஸுத:—மகன்; தயோ:—அவர்களைப் பற்றிய; ஸ்லோகெள—இரு சுலோகங்கள்; படந்தி—முந்திய தலைமுறையைச் சேர்ந்த அங்கத்தினர்கள் எல்லோரும்; அமூ—அவை; யதா—என்று; ஏவ—உண்மையில்; ஸ்ருணும:—நாம் கேட்டிருக்கிறோம்; தூராத்—தூரத்திலிருந்து; ஸம்பஸ்யாம:—உண்மையாக பார்க்கிறோம்; ததா—அவ்வாறே; அந்திகாத்—இப்பொழுது கூட.

தேவாவிருதரின் மகன் பப்ரு. தேவாவிருதர் மற்றும் பப்ரு ஆகியோரைப் பற்றிய புகழ்பெற்ற இரு துதிப்பாடல்கள் உள்ளன. எமது முன்னோர்களால் பாடப்பட்ட அவற்றை, தூரத்திலிருந்து நாம் கேட்டிருக்கிறோம். அவர்களது குணங்களை விவரிக்கும் அதே ஸ்தோத்திரங்களை இப்பொழுதும் நான் கேட்கிறேன் (ஏனெனில் முன்பு கேட்கப்பட்டது இன்றும் தொடர்ந்து பாடப்பட்டு வருகிறது).

பதங்கள் 9.24.10 – 9.24.11
பப்ரு: ஸ்ரேஷ்டோ மனுஷ்யாணாம் தேவைர் தேவாவ்ருத: ஸம:
புருஷா: பஞ்ச-ஷஷ்டிஸ் ச ஷட்-ஸஹஸ்ராணி சாஷ்ட ச

யே ‘ம்ருதத்வம் அனுப்ராப்தா பப்ரோர் தேவாவ்ருதாத் அபி
மஹாபோஜோ ‘திதர்மாத்மா போஜா ஆஸம்ஸ் தத்-அன்வயே

பப்ரு:—பப்ரு மகாராஜன்; ஸ்ரேஷ்ட:—அரசர்களில் மிகச்சிறந்தவராவார்; மனுஷ்யாணாம்—மனிதர்களில்; தேவை:—தேவர்களுடன்; தேவாவ்ருத:—தேவாவிருத மகாராஜன்; ஸம:—சம நிலையிலுள்ள; புருஷா:—நபர்கள்; பஞ்ச-ஷஷ்டி:—அறுபத்தைந்து; ச—மேலும்; ஷட்-ஸஹஸ்ராணி—ஆறாயிரம்; ச—கூட; அஷ்ட—எட்டாயிரம்; ச—கூட; யே—அவர்களெல்லோரும்; அம்ருதத்வம்—பெளதிக பந்தத்திலிருந்து முக்தியை; அனுப்ராப்தா:—அடைந்தனர்; பப்ரோ:—பப்ருவுடனான சகவாசத்தினால்; தேவாவ்ருதாத்—தேவாவிருதனுடனான சகவாசத்தினால்; அபி—உண்மையில்; மஹாபோஜ:—மன்னர் மஹாபோஜர்; அதி-தர்ம-ஆத்மா—தர்மாத்மாவான; போஜா:—போஜர்கள் என்ற அரசர்கள்; ஆஸன்—தோன்றினார்; தத்-அன்வயே—அவருடைய (மஹா போஜரின்) வம்சத்தில்.

“மனிதருக்கிடையில் பப்ரு சிறந்தவரென்றும், தேவாவிருதர் தேவர்களுக்குச் சமமானவர் என்றும் முடிவு செய்யப்பட்டது. பப்ரு மற்றும் தேவாவிருதரின் சகவாசத்தின் காரணத்தால் 14,065 என்ற எண்ணிக்கையுடைய அவர்களது வம்சத்தவர்கள் அனைவரும் முக்தியடைந்தனர். மிகச்சிறந்த பக்திமானாக விளங்கிய மஹாபோஜ வம்சத்தில் போஜ அரசர்கள் தோன்றினர்.

பதம் 9.24.12
வ்ருஷ்ணே: ஸுமித்ரா: புத்ரோ ‘பூத் யுதாஜிச் ச பரந்தப
சினிஸ் தஸ்யானமித்ரஸ் ச நிக்னோ ‘பூத் அனமித்ரத:

வ்ருஷ்ணே:—சாத்வதரின் மகனான விருஷ்ணியின்; ஸுமித்ர:—சுமித்ரர்; புத்ர:—ஒரு மகன்; அபூத்—தோன்றினார்; யுதாஜித்—யுதாஜித்; ச—கூட; பரம்-தப—எதிரிகளை அடக்கக்கூடிய அரசே; சினி:—சினி; தஸ்ய—அவருடைய; அனமித்ர:—அனமித்ரர்; ச—மேலும்; நிக்ன:—நிக்னர்; அபூத்—தோன்றினார்; அனமித்ரத:—அனமித்ரரிலிருந்து.

அரசே, எதிரிகளை அடக்கக் கூடியவரான பரீட்சித்து மகாராஜனே, விருஷ்ணியின் மகன்கள் சுமித்ரர், யுதாஜித் ஆகியோராவர். யுதாஜித்திலிருந்து சினியும், அனமித்ரரும் வந்தனர். அனமித்ரரிலிருந்து நிக்னர் என்ற மகன் வந்தார்.

பதம் 9.24.13
ஸத்ராஜித: ப்ரஸேனஸ் ச நிக்னஸ்யாதாஸது: ஸுதெள
அனிமித்ர-ஸுதோ யோ ‘ன்ய: சினிஸ் தஸ்ய ச ஸத்யக:

ஸத்ராஜித:—சத்ராஜிதர், ப்ரஸேன: ச—பிரசேனர் கூட; நிக்னஸ்ய—நிக்னரின் மகன்கள்; அத—இவ்வாறு; அஸது:—இருந்தனர்; ஸுதெள—இரு மகன்கள்; அனமித்ர-ஸுத:—அனமித்ரரின் மகன்; ய:—அவர்; அன்ய:—மற்றொரு; சினி:—சினி; தஸ்ய—அவருடைய; ச—கூட; ஸத்யக:—சத்யகர் என்ற மகன்.

நிக்னரின் இரு மகன்கள் சத்ராஜிதர் மற்றும் பிரசேனர். அனமித்ரரின் மற்றொரு மகன் மற்றொரு சினி ஆவார். அவரது மகன் சத்யகர்.

பதம் 9.24.14
யுயுதான: ஸாத்யகிர் வை ஜயஸ் தஸ்ய குணிஸ் தத:
யுகந்தரோ ‘னமித்ரஸ்ய வ்ருஷ்ணி: புத்ரோ ‘பரஸ் தத:

யுயுதான:—யுயுதானர்; ஸாத்யகி:—சாத்யகரின் மகன்; வை—உண்மையில்; ஜய:—ஜயன், தஸ்ய—அவருடைய (யுயுதானருடைய); குணி:—குணி; தத:—அவரிலிருந்து (ஜயனிலிருந்து); யுகந்தர:—யுகந்தரர்; அனமித்ரஸ்ய—அனமித்ரர் என்ற ஒரு மகன்; வ்ருஷ்ணி:—விருஷ்ணி; புத்ர:—ஒரு மகன்; அபர:—மற்ற; தத:—அவரிலிருந்து.

சத்யகரின் மகன் யுயுதானர். அவரது மகன் ஜயன். ஜயனிலிருந்து குணி என்ற மகனும், குணியிலிருந்து யுகந்தரர் என்ற மகனும் வந்தனர். அனமித்ரரின் மற்றொரு மகன் விருஷ்ணி எனப்படுவார்.

பதம் 9.24.15
ஸ்வஃபல்கஸ் சித்ரரதஸ் ச காந்தின்யாம் ச ஸ்வஃபல்கத:
அக்ரூர-ப்ரமுகா ஆஸன் புத்ரா த்வாதச விஸ்ருதா:

ஸ்வஃபல்க:—ஸ்வபல்கர்; சித்ரரத: ச—மற்றும் சித்ரரதர்; காந்தின்யாம்—காந்தினி என்ற மனைவியின் மூலமாக; ச—மேலும்; ஸ்வஃபல்கத:—ஸ்வபல்கரிலிருந்து; அக்ரூர—அக்ரூரர்; ப்ரமுகா:—முதலான; ஆஸன்—இருந்தனர்; புத்ரா:—மகன்கள்; த்வாதச—பன்னிரண்டு; விஸ்ருதா:—மிகவும் புகழ்பெற்றவர்கள்.

விருஷ்ணியிலிருந்து ஸ்வபல்கர், சித்ரரதர் என்ற மகன்கள் வந்தனர். ஸ்வபல்கரிலிருந்து அவரது மனைவி காந்தினியின் மூலமாக அக்ரூரர் வந்தார். அக்ரூரர் மூத்தவராவார். ஆனால் பன்னிரண்டு வேறு மகன்களும் இருந்தனர். அவர்கள் அனைவருமே மிகவும் புகழ் பெற்றவர்கள்.

பதங்கள் 9.24.16 – 9.24.18
ஆஸங்க: ஸாரமேயஸ் ச ம்ருதுரோ ம்ருதுவித் கிரி:
தர்மவ்ருத்த: ஸுகர்மா ச க்ஷேத்ரோபேக்ஷோ ‘ரிமர்தன:

சத்ருக்னோ கந்தமாதஸ் ச ப்ரதிபாஹுஸ் ச த்வாதச
தேஷாம் ஸ்வஸா ஸுசாராக்யா த்வாவ் அக்ரூர-ஸுதாவ் அபி

தேவவான் உபதேவஸ் ச ததா சித்ரரதாத்மஜா:
ப்ருதுர் விதூரதாத்யாஸ் ச பஹவோ வ்ருஷ்ணி-நந்தனா:

ஆஸங்க:—ஆஸங்கர்; ஸாரமேய:—சாரமேயர்; ச—கூட; ம்ருதுர:—மிருதுரர்; ம்ருதுவித்—மிருதுவித்; கிரி:—கிரி; தர்மவ்ருத்த:—தர்மவிருத்தர்; ஸுகர்மா—சுகர்மா; ச—மேலும்; க்ஷேத்ரோபேக்ஷ:—க்ஷேத்ரோபேக்ஷர்; அரிமர்தன:—அரிமர்தனர்; சத்ருக்ன:—சத்ருக்னர்; கந்தமாத:—கந்தமாதர்; ச—மற்றும்; ப்ரதிபாஹு:—பிரதிபாஹு; ச—மேலும்; த்வாதச—பன்னிரண்டு; தேஷாம்—பேர்களும்; ஸ்வஸா—சகோதரி; சுசாரா—சுசாரா; ஆக்யா—புகழ்பெற்ற; த்வௌ—இரு; அக்ரூர—அக்ரூரரின்; ஸுதௌ—மகன்கள்; அபி—கூட; தேவவான்—தேவவான்; உபதேவ: ச—மற்றும் உபதேவர்; ததா—அதன்பிறகு; சித்ரரத-ஆத்மஜா:—சித்ரரதரின் மகன்கள்; ப்ருது: விதூரத—பிருது மற்றும் விதூரதர்; ஆத்யா:—முதலான; ச—கூட; பஹவ:—பல; வ்ருஷ்ணி-நந்தனா:—விருஷ்ணியின் மகன்கள்.

இந்த பன்னிருவரின் பெயர்கள் ஆசங்கர், சாரமேயர், மிருதுரர், மிருதுவித், கிரி, தர்மவிருத்தர், சுகர்மா, க்ஷேத்ரோபேக்ஷர், அரிமர்தனர், சத்ருக்னர், கந்தமாதர், பிரதிபாஹு என்பனவாகும். இச்சகோதரர்களுக்குச் சுசாரா என்ற ஒரு சகோதரியும் இருந்தாள். அக்ரூரரிலிருந்து தேவவான், உபதேவர் என்ற இரு மகன்கள் வந்தனர். சித்ரரதருக்கு பிருது, விதூரதர் முதலான பல மகன்கள் இருந்தனர். அவர்களனைவரும் விருஷ்ணி வம்சத்தைச் சேர்ந்தவர்களாக அறியப்பட்டனர்.

பதம் 9.24.19
குகுரோ பஜமானஸ் ச சுசி: கம்பலபர்ஹிஷ:
குகுரஸ்ய ஸுதோ வஹ்னிர் விலோமா தனயஸ் தத:

குகுர:—குகுரர்; பஜமான:—பஜமானர்; ச—மேலும்; சுசி:—சுசி; கம்பலபர்ஹிஷ:—கம்பலபர்ஹிஷர்; குகுரஸ்ய—குகுரரின்; ஸுத:—ஒரு மகன்; வஹ்னி:—வஹ்னி; விலோமா—விலோமா; தனய:—மகன்; தத:—அவரிலிருந்து (வஷ்னியிலிருந்து).

குகுரர், பஜமானர், சுசி, கம்பலபர்ஹிஷர் ஆகியோர் அந்தகரின் நான்கு மகன்களாவர். குகுரரின் மகன் வஹ்னி, அவரது மகன் விலோமா.

பதம் 9.24.20
கபோதரோமா தஸ்யானு: ஸகா யஸ்ய ச தும்புரு:
அந்தகாத் துந்துபிஸ் தஸ்மாத் அவித்யோத: புனர்வஸு:

கபோதரோமா—கபோதரோமர்; தஸ்ய—அவருடைய (மகன்கள்); அனு:—அனு; ஸகா—நண்பர்; யஸ்ய—யாருடைய; ச—மேலும்; தும்புரு:—தும்புரு; அந்தகாத்—அனுவின் மகனான அந்தகர்; துந்துபி:—துந்துபி என்ற ஒரு மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து (துந்துபியிலிருந்து); அவித்யோத:—அவித்யோதர் என்ற ஒரு மகன்; புனர்வஸு:—புனர்வசு என்ற ஒரு மகன்.

விலோமாவின் மகன் கபோதரோமா. அவரது மகன் அனு. அனுவின் நண்பர் தும்புரு. அனுவிலிருந்து அந்தகர் வந்தார். அந்தகரிலிருந்து துந்துபியும், அவரிலிருந்து அவித்யோத்தரும் வந்தனர். அவித்யோத்தரிலிருந்து புனர்வசு என்ற மகன் வந்தார்.

பதங்கள் 9.24.21 – 9.24.23
தஸ்யாஹுகஸ் சாஹுகீ ச கன்யா சைவாஹுகாத்மஜௌ தேவகஸ் சோக்ரஸேனஸ் ச சத்வாரோ தேவகாத்மஜா:

தேவவான் உபதேவஸ் ச ஸுதேவோ தேவவர்தன: தேஷாம் ஸ்வஸார: ஸப்தாஸன் த்ருததேவாதயோ ந்ருப

சாந்திதேவோபதேவா ச ஸ்ரீதேவா தேவரக்ஷிதா
ஸஹதேவா தேவகீ ச வஸுதேவ உவாஹ தா:

தஸ்ய—அவரிலிருந்து (புனர்வஸுவிலிருந்து); ஆஹுக:—ஆஹுகர்; ச—மேலும், ஆஹ-கீ—ஆஹுகி: ச—கூட; கன்யா—ஒரு மகள்; ச—மேலும்; ஏவ—உண்மையில்; ஆஹுக—ஆஹுகரின்; ஆத்மஜௌ—இரு மகன்கள்; தேவக—தேவகர்; ச—மற்றும்; உக்ரஸேன:—உக்ரசேனர்; ச—கூட; சத்வார:—நான்கு; தேவக-ஆத்மஜா:—தேவகரின் மகன்கள்; தேவவான்—தேவவான்; உபதேவ:—உபதேவர்; ச—மேலும்; ஸுதேவ:—சுதேவர்; தேவவர்தன:—தேவவர்தனர்; தேஷாம்—அவர்களில்; ஸ்வஸார:—சகோதரிகள்; ஸப்த—ஏழு; ஆஸன்—இருந்தனர்; த்ருததேவா-ஆதய:—திருததேவா முதலான; ந்ருப—அரசே (பரீட்சித்து மகாராஜனே); சாந்திதேவா—சாந்திதேவா; உபதேவா—உபதேவா; ச—மேலும்; ஸ்ரீதேவா—ஸ்ரீதேவா; தேவரக்ஷிதா—தேவரக்ஷிதா; ஸஹதேவா—சஹதேவா; தேவகீ—தேவகி; ச—மேலும்; வஸுதேவ:—கிருஷ்ணரின் தந்தையான ஸ்ரீ வசுதேவர்; உவாஹ—மணந்தார்; தா:—அவர்களை.

புனர்வசுவிற்கு முறையே ஆஹுகர் மற்றும் ஆஹுகி என்ற ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். ஆஹுகருக்கு தேவகர், உக்ரசேனர் என்ற இரு மகன்கள் இருந்தனர். தேவகருக்கு தேவவான், உபதேவர், சுதேவர், தேவவர்தனர் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். மேலும் அவருக்கு சாந்திதேவா, உபதேவா, ஸ்ரீதேவா, தேவரக்ஷிதா, சஹதேவா, தேவகீ, திருததேவா என்ற ஏழு புதல்விகளும் இருந்தனர். இவர்களுள் திருததேவா மூத்தவளாவாள். கிருஷ்ணரின் தந்தையான வசுதேவர் இந்த ஏழு சகோதரிகளையும் மணந்து கொண்டார்.

பதம் 9.24.24
கம்ஸ: ஸுனாமா ன்யக்ரோத: கங்க: சங்கு: ஸுஹுஸ் ததா
ராஷ்ட்ரபாலோ ‘த த்ருஷ்டிஸ் ச துஷ்டிமான் ஔக்ரஸேனய:

கம்ஸ:—கம்சன்; ஸுனாமா—சுனாமா; ன்யக்ரோத:—நியக்ரோதர்; கங்க:—கங்கர்; சங்கு:—சங்கு; ஸுஹூ:—சுஹு; ததா—அத்துடன்; ராஷ்ட்ரபால்:—ராஷட்ரபாலர்; அத—அதன்பிறகு; த்ருஷ்டி:—திருஷ்டி; ச—மேலும்; துஷ்டிமான்—துஷ்டிமான்; ஔக்ரஸேனய:—உக்ரசேனரின் மகன்கள்.

கம்சன், சுனாமா, நியக்ரோதர், கங்கர், சங்கு, சுஹு, ராஷ்ட்ரபாலர், திருஷ்டி, துஷ்டிமான் ஆகியோர் உக்ரசேனரின் மகன்களாவர்.

பதம் 9.24.25
கம்ஸா கம்ஸவதீ கங்கா சூரபூ ராஷ்ட்ரபாலிகா
உக்ரஸேன-துஹிதரோ வஸுதேவானுஜ-ஸ்த்ரிய:

கம்ஸா—கம்சா; கம்ஸவதீ—கம்சவதீ; கங்கா—கங்கா; சூரபூ—சூரபூ; ராஷ்ட்ரபாலிகா—ராஷ்ட்ரபாலிகா; உக்ரஸேன-துஹிதர:—உக்ரசேனரின் புதல்விகள்; வஸுதேவ-அனுஜ—வசுதேவரின் இளைய சகோதரர்களின்; ஸ்த்ரிய:—மனைவிகள்.

கம்சா, கம்சவதீ, கங்கா, சூரபூ, ராஷ்ட்ரபாலிகா ஆகியோர் உக்ரசேனரின் புதல்விகளாவர். அவர்கள் வசுதேவருடைய இளைய சகோதரர்களின் மனைவிகளாயினர்.

பதம் 9.24.26
சூரோ விதூரதாத் ஆஸீத் பஜமானஸ் து தத்-ஸுத:
சினிஸ் தஸ்மாத் ஸ்வயம் போஜோ ஹ்ருதிகஸ் தத்-ஸுதோ மத:

சூர:—சூரர்; விதூரதாத்—சித்ரரதரின் மகனான விதூரதரிலிருந்து; ஆஸீத்—பிறந்தார்; பஜமான:—பஜமானர்; து—மேலும்; தத்-ஸுத:—அவருடைய (சூரரின்) மகன்; சினி:—சினி; தஸ்மாத்—அவரிலிருந்து; ஸ்வயம்—சுயமாக; போஜ:—புகழ்பெற்ற போஜ மன்னர்; ஹ்ருதிக:—இருதிகர்; தத்-ஸுத:—அவருடைய (போஜரின்) மகன்; மத:—புகழ்பெற்றவர்.

சித்ரரதனின் மகன் விதூரதன். அவரது மகன் சூரர். சூரரின் மகன் பஜமானர். அவரது மகன் சினி. சினியின் மகன் போஜர். போஜரின் மகன் இருதிகர்.

பதம் 9.24.27
தேவமீட: சததனு: க்ருதவர்மேதி தத்-ஸுதா:
தேவமீடஸ்ய சூரஸ்ய மாரிஷா நாம பத்னி அபூத்

தேவமீட:—தேவமீடர்; சததனு:—சததனு; க்ருதவர்மா—கிருதவர்மர்; இதி—இவ்வாறு; தத்-ஸுதா:—அவருடைய (கிருதிகரின்) மகன்கள்: தேவமீடஸ்ய—தேவமீடரின்; சூரஸ்ய—சூரரின்; மாரிஷா—மாரிஷா; நாம—என்ற; பத்னீ—மனைவி; அபூத்—இருந்தாள்.

தேவமீடர், சததனு, கிருதவர்மா ஆகியோர் கிருதிகரின் மூன்று மகன்களாவர். தேவமீடரின் மகன் சூரர். சூரரின் மனைவி மாரிஷா என்பவளாவாள்.

பதங்கள் 9.24.28 – 9.24.31
தஸ்யாம் ஸ ஜனயாம் ஆஸ தச புத்ரான் அகல்மஷான்
வஸுதேவம் தேவபாகம் தேவஸ்ரவஸம் ஆனகம்

ஸ்ருஞ்ஜயம் ஸ்யாமகம் கங்கம் சமீகம் வத்ஸகம் வ்ருகம்
தேவ-துந்துபயோ நேதுர் ஆனகா யஸ்ய ஜன்மனி

வஸுதேவம் ஹரே: ஸ்தானம் வதந்தி ஆனகதுந்துபிம்
ப்ருதா ச ஸ்ருததேவா ச ஸ்ருதகீர்த்தி: ஸ்ருதஸ்ரவா:

ராஜாதிதேவீ சைதேஷாம் பகின்ய: பஞ்ச கன்யகா:
குந்தே: ஸக்யு: பிதா சூரோ ஹி அபுத்ரஸ்ய ப்ருதம் அதாத்

தஸ்யாம்—அவளில் (மாரிஷாவில்); ஸ:—அவர் (சூரர்); ஜனயாம் ஆஸ—பெற்றார்; தச—பத்து; புத்ரான்—மகன்களை; அகல்மஷான்—களங்கமற்ற; வஸுதேவம்—வசுதேவர்; தேவபாகம்—தேவபாகர்; தேவஸ்ரவஸம்—தேவஸ்ரவா; ஆனகம்—ஆனகர்; ஸ்ருஞ்ஜயம்—சிருஞ்சயர்; ஸ்யாமகம்—சியாமகர்; கங்கம்—கங்கர்; சமீகம்—சமீகர்; வத்ஸகம்—வத்ஸகர்; வ்ருகம்—விருகன்; தேவ-துந்துபய:—தேவர்களால் பேரிகைகள் முழங்கப்பட்டன; நேது:—கொட்டப்பட்டன; ஆனகா:—ஒரு வகையான மத்தளம்; யஸ்ய—யாருடைய; ஜன்மனி—பிறப்பின்போது; வஸுதேவம்—வசுதேவருக்கு; ஹரே:—பரமபுருஷரின்; ஸ்தானம்—அந்த இடம்; வதந்தி—அவர்கள் அழைக்கின்றனர்; ஆனகதுந்துபிம்—ஆனக துந்துபி; ப்ருதா—பிருதா; ச—மேலும்; ஸ்ருததேவா—சுருததேவர்; ச—மேலும்; ஸ்ருதகீர்த்தி:—சுருதகீர்த்தி; ஸ்ருதஸ்ரவா:—சுருதஸ்ரவர்; ராஜாதிதேவீ—ராஜாதிதேவி; ச—மேலும்; ஏதேஷாம்—இவர்களின்; பகின்ய:—சகோதரிகள்; பஞ்ச—ஐந்து; கன்யகா:—(சுரரின்) புதல்விகள்; குந்தே:—குந்தியின்; ஸக்யு:—ஒரு நண்பர்; பிதா—தந்தை; சூர:—சூரர்; ஹி—உண்மையில்; அபுத்ரஸ்ய—மகனில்லாத (குந்தியின்); ப்ருதாம்—பிருதா; அதாத்—கொடுத்தார்.

சூர மகாராஜன் மாரிஷாவின் மூலமாக வசுதேவர், தேவபாகர், தேவஸ்ரவா, ஆனகர், சிருஞ்சயர், சியாமகர், கங்கர், சமீகர், வத்ஸகர், விருகர் ஆகியோரைப் பெற்றார். இந்த பத்து மகன்களும் கங்களமற்ற புண்ணியவான்களாவர். வசுதேவர் பிறந்த பொழுது விண்ணுலக தேவர்கள் பேரிகைகளை (துந்துபிகளை) முழங்கினர். ஆகவே புருஷோத்தமராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் தோற்றத்திற்குத் தகுந்த இடத்தை அளித்தவரான வசுதேவர் ஆனகதுந்துபி என்றும் அறியப்பட்டார். சூர மகாராஜனின் ஐந்து புதல்விகளாக பிருதா, சுருததேவா, சுருதகீர்த்தி, சுருதஸ்ரவா, ராஜாதிதேவி ஆகியோர் வசுதேவரின் சகோதரிகளாவர். சூரர் பிருதாவைத் தன் நண்பரான குந்திக்குக் கொடுத்தார். குந்திக்கு மகப்பேறு இல்லை. எனவே பிருதாவின் மற்றொரு பெயர் குந்தீ என்பதாகும்.

பதம் 9.24.32
ஸாப துர்வாஸஸோ வித்யாம் தேவ-ஹூதீம் ப்ரதோஷிதாத்
தஸ்யா வீர்ய-பரீக்ஷார்த்தம் ஆஜுஹாவ ரவிம் சுசி:

ஸா—அவள் (குந்தி, அல்லது பிருதா) ஆப—பெற்றாள்; துர்வாஸஸ:—மாமுனிவரான துர்வாசரிடமிருந்து; வித்யாம்—யோக சக்தியை; தேவ-ஹூதீம்—எந்த தேவரையும் அழைக்கக்கூடிய; ப்ரதோஷிதாத்—திருப்தியடைந்த; தஸ்யா:—அதைக்கொண்டு (குறிப்பிட்ட யோக சக்தியைக் கொண்டு); வீர்ய—ஆற்றலை; பரீக்ஷ-அர்த்தம்—சோதிப்பதற்கு; ஆஜுஹாவ—அழைத்தாள்; ரவிம்—சூரிய தேவனை; சுசி:—புனிதவதி (பிருதா).

ஒரு சமயம் துர்வாசர் பிருதாவினுடைய தந்தையான குந்தியின் வீட்டில் ஒரு விருந்தாளியாக வந்திருந்தபொழுது, பிருதா அவருக்குச் சேவை செய்து அவரை திருப்திப்படுத்தினாள். எனவே ஒருவித யோக சக்தியை அவரிடமிருந்து அவள் பெற்றாள். அதைக் கொண்டு எந்த தேவரையும் அவளால் அழைக்க இயலும். அந்த யோக சக்தியின் ஆற்றலைச் சோதிக்க விரும்பிய புனிதவதியான குந்தீ, உடனே சூரிய தேவனை அழைத்தாள்.

பதம் 9.24.33
ததைவோபாகதம் தேவம் வீக்ஷ்ய விஸ்மித-மானஸா
ப்ரத்யயார்த்தம் ப்ரயுக்தா மே யாஹி தேவ க்ஷமஸ்வ மே

ததா—அப்பொழுது; ஏவ—உண்மையாகவே; உபாகதம்—அவள் முன்) தோன்றியதை; தேவம்—சூரிய தேவன்; வீக்ஷ்ய—கண்டு; விஸ்மித-மானஸா—மிகவும் ஆச்சரியமடைந்து; ப்ரத்யய-அர்த்தம்—அந்த யோக சக்தியின் ஆற்றலைக் காண்பதற்காகவே; ப்ரயுக்தா—நான் இதை உபயோகித்தேன்; மே—என்னை; யாஹி—அன்புடன் திரும்பிச் செல்லுங்கள்; தேவ—தேவரே; க்ஷமஸ்வ—மன்னித்து; மே—என்னை.

குந்தீ சூரியதேவனை அழைத்த உடனேயே அவர் அவள் முன் தோன்றினார். அதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்த அவள், “இந்த யோக சக்தியின் வலிமையை நான் சோதித்துப் பார்க்க விரும்பினேன், அவ்வளவுதான். தேவையில்லாமல் தங்களை நான் அழைத்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன். தயவுசெய்து என்னை மன்னித்து திரும்பிச் செல்லுங்கள்” என்று சூரியதேவனிடம் கூறினாள்.

பதம் 9.24.34
அமோகம் தேவ-ஸந்தர்சம் ஆததே த்வயி சாத்மஜம்
யோனிர் யதா ந துஷ்யேத கர்த்தாஹம் தே ஸுமத்யமே

அமோகம்—வீண்போகாது; தேவ-ஸந்தர்சம்—தேவர்களின் தரிசனம்; ஆததே—நான் கொடுக்கப் போகிறேன் (என் விந்தை); த்வயி—உனக்கு; ச—மேலும்; ஆத்மஜம்—ஒரு மகனை; யோனி:—கன்னித்தன்மை; யதா—அவ்வாறு; ந—இல்லாதபடி; துஷ்யேத—களங்கமடைய; கர்த்தா—ஏற்பாடு செய்கிறேன்; அஹம்—நான்; தே—உனக்கு; ஸுமத்யமே—அழகுப் பெண்ணே.

சூரியதேவன் கூறினார்: அழகிய பிருதாவே, தேவர்களுடனான உனது சந்திப்பு வீண் போகாது. ஆகவே எனது விந்தை உனது கர்பத்தில் நான் பதிக்கப்போகிறேன். இதனால் நீ ஒரு மகனுக்குத் தாயாவாய். நீ இன்னும் திருமணமாகாத ஒரு பெண்ணாக இருப்பதால், உனது கன்னித்தன்மையைப் பாதுகாக்க நான் ஏற்பாடு செய்கிறேன்.

பதம் 9.24.35
இதி தஸ்யாம் ஸ ஆதாய கர்பம் ஸூர்யோ திவம் கத:
ஸத்ய: குமார: ஸஞ்ஜக்ஞே த்விதீய இவ பாஸ்கர:

இதி—இவ்வாறு; தஸ்யாம்—அவளுக்குள் (பிருதா); ஸ:—அவர் (சூரிய தேவன்); ஆதாய—விந்தைச் செலுத்தி; கர்பம்—கர்பம்; ஸூர்ய:—சூரிய தேவன்; திவம்—சுவர்க்க லோகங்களில்; கத:—திரும்பினார்; ஸத்ய:—உடனே; குமார:—ஒரு குழந்தை; ஸஞ்ஜக்ஞே—பிறந்தது; த்விதீய:—இரண்டாவது; இவ—போல்; பாஸ்கர:—சூரியதேவன்.

இவ்வாறு கூறிய பிறகு சூரியதேவன் தன் விந்தைப் பிருதாவின் கர்பத்திற்குள் செலுத்திவிட்டு சுவர்க்க லோகத்திற்குத் திரும்பிச் சென்றார். அதன்பிறகு குந்திதேவிக்கு உடனே ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை இரண்டாவது சூரிய தேவனைப் போல் காட்சியளித்தது.

பதம் 9.24.36
தம் ஸாத்யஜன் நதீ-தோயே க்ருச்ரால் லோகஸ்ய பிப்யதீ
ப்ரபிதாமஹஸ் தாம் உவாஹ பாண்டுர் வை ஸத்ய-விக்ரம:

தம்—அக்குழந்தையை; ஸா—அவள் (குந்தி); அத்யஜத்—விட்டு விட்டாள்; நதீ-தோயே—நதிநீரில்; க்ருச்ராத்—மிகவும் வருத்தத்துடன்; லோகஸ்ய—பொதுமக்களுக்கு; பிப்யதீ—அஞ்சி; ப்ரபிதாமஹ:—(உமது) முப்பாட்டனார்; தாம்—அவளை (குந்தியை); உவாஹ—மணந்து கொண்டார்; பாண்டு:—பாண்டு என்ற அரசர்; வை—உண்மையில்; ஸத்ய-விக்ரம:—புண்ணியவானும், பராக்கிரமசாலியுமான.

மக்களின் தூற்றுதலுக்கு அஞ்சிய குந்தி, மிகவும் கஷ்டத்துடன் அவளது குழந்தையிடமுள்ள பாசத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. தன் விருப்பத்திற்கெதிராக அவள் அக்குழந்தையை ஒரு பெட்டகத்தில் வைத்து மூடி, நதிநீரில் மிதந்து செல்லும்படி விட்டுவிட்டாள். பரீட்சித்து மகாராஜனே, உமது முப்பாட்டனாரும், புண்ணியவானும், பராக்கிரமசாலியுமான பாண்டு மகாராஜன் பிறகு குந்தியை மணந்து கொண்டார்.

பதம் 9.24.37
ஸ்ருததேவாம் து காரூஷோ வ்ருத்தசர்மா ஸமக்ரஹீத்
யஸ்யாம் அபூத் தந்தவக்ர ரிஷி-சப்தோ திதே: ஸுத:

ஸ்ருததேவாம்—குந்தியின் ஒரு சகோதரியாகிய சுருததேவாவை; து—ஆனால்; காரூஷ:—காரூஷ மன்னரான; வ்ருத்தசர்மா—விருத்தசர்மா; ஸமக்ரஹீத்—மணந்தார்; யஸ்யாம்—யார் மூலமாக; அபூத்—பிறந்தான்; தந்தவக்ர:—தந்தவக்ரன்; ரிஷி-சப்த:—முன்பு சனக, சனாதன முனிவர்களால் சபிக்கப்பட்ட; திதே:—திதியின்; ஸுத:—மகன்.

காரூஷ மன்னரான விருத்தசர்மா, குந்தியின் சகோதரியான சுருத தேவாவை மணந்தார். அவளது கர்பத்திலிருந்து தந்தவக்ரன் பிறந்தான். சனகர் முதலான முனிவர்களால் சபிக்கப்பட்ட தந்தவக்ரன் முன்பு இரண்யாக்ஷன் என்ற பெயருடன் திதியின் மகனாகப் பிறந்திருந்தான்.

பதம் 9.24.38
கைகேயோ த்ருஷ்ட கேதுஸ் ச ஸ்ருதகீர்த்திம் அவிந்தத
ஸந்தர்னாதயஸ் தஸ்யாம் பஞ்சாஸன் கைகயா: ஸுதா:

கைகேய:—கேகய நாட்டு அரசரான; த்ருஷ்டகேது:—திருஷ்டகேது; ச—கூட; ஸ்ருதகீர்த்திம்—சுருதகீர்த்தி என்ற குந்தியின் ஒரு சகோதரியை; அவிந்தத—மணந்தார்; ஸந்தர்தன-ஆதய:—சந்தர்தனர் முதலான; தஸ்யாம்—அவள் மூலமாக (சுருதகீர்த்தி); பஞ்ச—ஐந்து; ஆஸன்—இருந்தனர்; கைகயா:—கேகய நாட்டரசரின் மகன்கள்; ஸுதா:—மகன்கள்.

கேகய நாட்டு அரசரான திருஷ்டகேது மகாராஜன் குந்தியின் மற்றொரு சகோதரியான சுருதகீர்த்தியை மணந்தார். சுருதகீர்த்திக்கு சந்தர்தனன் முதலான ஐந்து மகன்கள் இருந்தனர்.

பதம் 9.24.39
ராஜாதிதேவ்யாம் ஆவந்த்யௌ ஜயஸேனோ ‘ஜனிஷ்ட ஹ
தமகோஷஸ் சேதி-ராஜ: ஸ்ருதஸ்ரவஸம் அக்ரஹீத்

ராஜாதிதேவ்யாம்—குந்தியின் மற்றொரு சகோதரியான ராஜாதி தேவியின் மூலமாக; ஆவந்த்யெய—(விந்தன், அனுவிந்தன் என்ற) மகன்களை; ஜயஸேன:—மன்னர் ஜயசேனர்; அஜனிஷ்ட—பெற்றெடுத்தார்; ஹ—முன்பு; தமகோஷ:—தமகோஷர்; சேதி-ராஜ:—நாட்டரசர்; ஸ்ருதஸ்ரவஸம்—சுருதஸ்ரவா என்ற மற்றொரு சகோதரியை; அக்ரஹீத்—மணந்தார்.

ஜயசேனர், மற்றொரு சகோதரியான ராஜாதிதேவியின் கர்பத்தில் விந்தன், அனுவிந்தன் என்ற இரு மகன்களைப் பெற்றார், அது போலவே, சேதி நாட்டரசர் சுருதஸ்ரவாவை மணந்தார். இந்த அரசரின் பெயர் தமகோஷர் என்பதாகும்.

பதம் 9.24.40
சிசுபால: ஸுதஸ் தஸ்யா: கதிதஸ் தஸ்ய ஸம்பவ:
தேவபாகஸ்ய கம்ஸாயாம் சித்ரகேது-ப்ருஹத்பலௌ

சிசுபால:—சிசுபாலன்; ஸுத:—மகன்; தஸ்யா:—அவளுடைய (சுருதஸ்ரவா); கதித:—(ஏழாவது காண்டத்தில்) முன்பே விவரிக்கப்பட்டது; தஸ்ய—அவருடைய; ஸம்பவ:—பிறப்பு; தேவாபகஸ்ய—வசுதேவரின் ஒரு சகோதரரான தேவபாகரிடமிருந்து; கம்ஸாயாம்—அவரது மனைவியான கம்சாவின் கர்பத்தில்; சித்ரகேது—சித்ரகேது; ப்ருஹத்பலௌ—மற்றும் பிருஹத்பலன்.

சுருதஸ்ரவாவின் மகன் சிசுபாலன். அவனது பிறப்பு (ஸ்ரீமத் பாகவதத்தின் ஏழாம் காண்டத்தில்) முன்பே விவரிக்கப்பட்டுள்ளது. வசுதேவரின் சகோதரரான தேவபாகர் என்பவர் தன் மனைவி கம்சாவின் மூலமாக சித்ரகேது, பிருஹத்பலன் என்ற இரு மகன்களைப் பெற்றார்.

பதம் 9.24.41
கம்ஸவத்யாம் தேவஸ்ரவஸ: ஸுவீர இஷுமாம்ஸ் ததா
பக: கங்காத் து கங்காயாம் ஸத்யஜித் புருஜித் ததா

கம்ஸவத்யாம்—கம்சவதியின் கர்பத்தில்; தேவஸ்ரவஸ:—வசுதேவரின் ஒரு சகோதரரான தேவஸ்ரவரிலிருந்து; ஸுவீர—சுவிரர்; இஷுமான்—இஷுமன்; ததா—மேலும்; பக:—பகன்; கங்காத்—கங்கனிலிருந்து; து—உண்மையில்; கங்காயாம்—கங்கா என்ற மனைவியில்; ஸத்யஜித்—சத்யஜித்; புருஜித்—புருஜித்; ததா—அத்துடன்.

வசுதேவரின் சகோதரரான தேவஸ்ரவா கம்சவதியை மணந்து அவள் மூலமாக சுவீரன் இஷுமன் என்ற இரு மகன்களைப் பெற்றார். கங்கன் தன் மனைவியான கங்காவின் மூலமாக பகன், சத்யஜித், புருஜித் என்ற மூன்று மகன்களைப் பெற்றார்.

பதம் 9.24.42
ஸ்ருஞ்ஜயோ ராஷ்ட்ரபால்யாம் ச வ்ருஷ-துர்மர்ஷணாதிகான்
ஹரிகேச-ஹிரண்யாக்ஷெள சூரபூம்யாம் ச ஸ்யாமக:

ஸ்ருஞ்சய:—சிருஞ்சயர்; ராஷ்ட்ரபால்யாம்—அவரது மனைவியான ராஷ்ட்ரபாலிகாவின் மூலமாக; ச—மேலும்; வ்ருஷ-துர்மர்ஷண-ஆதிகான்—விருஷர், துர்மர்ஷணர் முதலான மகன்களைப் பெற்றார்; ஹரிகேச—ஹரிகேசர்; ஹிரண்யாக்ஷௌ—மற்றும் இரண்யாக்ஷன்; சூரபூம்யாம்—சூரபூமியின் கர்பத்தில்; ச—மேலும்; ஸ்யாமக:—சியாமக மகாராஜன்.

சிருஞ்சய மகாராஜன் தன் மனைவி ராஷ்ட்ரபாலிகாவின் மூலமாக, விருஷன், துர்மர்ஷணன் முதலான மகன்களைப் பெற்றார். சியாமக மகாராஜன் தன் மனைவி சூரபூமியின் மூலமாக ஹரிகேசன், இரண்யாக்ஷன் என்ற இரு மகன்களைப் பெற்றார்.

பதம் 9.24.43
மிஸ்ரகேஸ்யாம் அப்ஸரஸி வ்ருகாதீன் வத்ஸகஸ் ததா
தக்ஷ-புஷ்கர-சாலாதீன் துர்வாக்ஷ்யாம் வ்ருக ஆததே

மிஸ்ரகேஸ்யாம்—மிஸ்ரகேசியின் கர்பத்தில்; அப்ஸரஸி—அப்ஸரஸ் பிரிவைச் சேர்ந்த; வ்ருக-ஆதீன்—விருகனையும், மற்ற மகன்களையும்; வத்ஸக:—வத்ஸகர்; ததா—கூட; தக்ஷ-புஷ்கர-சால-ஆதீன்—தக்ஷன், புஷ்கரன், சாலன் முதலான மகன்கள்; துர்வாக்ஷ்யாம்—அவரது மனைவியான துர்வாக்ஷியின் கர்பத்தில்; வ்ருக:—விருகன்; ஆததே—பெற்றான்.

அதன்பிறகு வத்ஸக மகாராஜன், அவரது மனைவியும், ஓர் அப்சரஸ்ஸுமான மிஸ்ரகேசியின் கர்பத்தின் மூலமாக விருக்கன் முதலான மகன்களைப் பெற்றார். விருக்கன் அவனது மனைவியான துர்வாக்ஷியின் மூலமாக தக்ஷன், புஷ்கரன், சாலன் போன்றவர்களைப் பெற்றான்.

பதம் 9.24.44
ஸுமித்ரார்ஜுனபாலாதீன் ஸமீகாத் து ஸுதாமனீ
ஆனக: கர்ணிகாயாம் வை ரிததாமா-ஜயாவ் அபி

ஸுமித்ர—சுமித்ரர்; அர்ஜுனபால—அர்ஜுனபாலர்; ஆதீன்—முதலான; ஸமீகாத்—சமீக மன்னரிலிருந்து; து—உண்மையில்; ஸுதாமனீ—அவரது மனைவியான சுதாமனியின் கர்பத்தில்; ஆனக:—ஆனக மன்னர்; கர்ணிகாயாம்—அவரது மனைவியான கர்ணிகாவின் கர்பத்தில்; வை—உண்மையில்; ரிததாமா—ரிததாமரும்; ஜயெள—ஜயனும்; அபி—உண்மையில்.

சமீகரிலிருந்து அவரது மனைவியான சுதாமனியின் கர்பத்தின் மூலமாக சுமித்ரரும், அர்ஜுனபாலரும், மற்ற மகன்களும் வந்தனர். ஆனக மகாராஜன் அவரது மனைவி கர்ணிகாவின் மூலமாக ரிததாமர், ஜயன் என்ற இரு மகன்களைப் பெற்றார்.

பதம் 9.24.45
பௌரவீ ரோஹிணீ பத்ரா மதிரா ரோசனா இளா
தேவகீ-ப்ரமுகாஸ் சாஸன் பத்ன்ய ஆனகதுந்துபே:

பௌரவீ—பௌரவி; ரோஹிணீ—ரோகிணி; பத்ரா—பத்ரா; மதிரா—மதிரா; ரோசனா—ரோசனா; இளா—இளை; தேவகீ—தேவகி; ப்ரமுகா:—முதலான; ச—மேலும்; ஆஸன்—இருந்தனர்; பத்ன்ய:—மனைவிகள்; ஆனைதுந்துபே:—ஆனகதுந்துபி என்று அறியப்பட்ட வசுதேவரின்.

தேவகீ, பௌரவி, ரோகிணி, பத்ரா, மதிரா, ரோசனா, இளை ஆகியோரும் மற்றவர்களும் ஆனகதுந்துபியின் (வசுதேவரின்) மனைவிகளாவர். இவர்கள் அனைவரிலும் தேவகி முக்கியமானவளாவாள்.

பதம் 9.24.46
பலம் கதம் ஸாரணம் ச துர்மதம் விபுலம் த்ருவம்
வஸுதேவஸ் து ரோஹிண்யாம் க்ருதாதீன் உதபாதயத்

பலம்—பலன்; கதம்—கதன்; ஸாரணம்—சாரணன்; ச—கூட; துர்மதம்—துர்மதன்; விபுலம்—விபுலன்; த்ருவம்—துருவன்; வஸுதேவ:—(கிருஷ்ணரின் தந்தையான) வசுதேவர்; து—உண்மையில்; ரோஹிண்யாம்—ரோகிணீ என்ற மனைவியில்; க்ருத-ஆதீன்—கிருதர் முதலான மகன்களை; உதபாதயத்—பெற்றார்.

வசுதேவர் அவரது மனைவி ரோகிணியின் மூலமாக பலன், கதன், சாரணர், துர்மதர், விபுலர், துருவர், கிருதர் போன்ற மகன்களைப் பெற்றார்.

பதங்கள் 9.24.47 – 9.24.48
ஸுபத்ரோ பத்ரபாஹுஸ் ச துர்மதோ பத்ர ஏவ ச
பௌரவ்யாஸ் தனயா ஹி ஏதே பூதாத்யா த்வாதசாபவன்

நந்தோபநந்த-க்ருதக-சூராத்யா மதிராத்மஜா:
கௌசல்யா கேசினம் து ஏகம் அஸூத குல-நந்தனம்

ஸுபத்ர:—சுபத்திரை; பத்ரபாஹு:—பத்ரபாஹு; ச—மேலும்; துர்மத:—துர்மதர்; பத்ர:—பத்ரர்; ஏவ—நிச்சயமாக; ச—கூட; பௌரவ்யா:—பௌரவி என்ற மனைவியின்; தனயா:—மகன்கள்; ஹி—உண்மையில்; ஏதே—அவர்களனைவரும்; பூத-ஆத்யா:—பூதர் முதலான; த்வாதச—பன்னிரண்டு; அபவன்—பிறந்தனர்; நந்த-உபநந்த-க்ருதக-சூர-ஆத்யா:—நந்தர், உபநந்தர், கிருதகர், சூரர் மற்றும் பிறர்; மதிரா-ஆத்மஜா:—மதிராவின் மகன்கள்; கௌசல்யா—கௌசல்யா; கேசினம்—கேசி என்ற ஒரு மகன்; து ஏகம்—ஒரு; அஸூத—பெற்றெடுத்தாள்; குல-நந்தனம்—ஒரு மகனை.

பெளரவியின் கர்பத்திலிருந்து பூதர், சுபத்ரர், பத்ரபாஹு, துர்மதர், பத்ரர் ஆகியோர் உட்பட பன்னிரண்டு மகன்கள் வந்தனர். நந்தர், உபநந்தர், கிருதகர், சூரர், மற்றும் பிறர் மதிராவின் கர்பத்திலிருந்து பிறந்தவர்களாவர். பத்ரா (கெளசல்யா), கேசி என்ற ஒரே ஒரு மகனைப் பெற்றாள்.

பதம் 9.24.49
ரோசனாயாம் அதோ ஜாதா ஹஸ்த-ஹேமாங்கதாதய:
இளாயாம் உருவல்காதீன் யது-முக்யான் அஜீஜனத்

ரோசனாயாம்—ரோசனா என்ற மற்றொரு மனைவியில்; அத:—அதன்பிறகு; ஜாதா:—பிறந்தனர்; ஹஸ்த—ஹஸ்தன்; ஹேமாங்கத—ஹேமாங்கதன்; ஆதய:—முதலானவர்கள்; இளாயாம்—இளை என்ற மற்றொரு மனைவியில்; உருவல்க-ஆதீன்—உருவல்கர் முதலான மகன்கள்; யது-முக்யான்—யது வம்சத்திலுள்ள முக்கியமானவர்களை; அஜீஜனத்—அவர் பெற்றார்.

வசுதேவர் அவரது மற்றொரு மனைவியான ரோசனாவின் மூலமாக ஹஸ்தன், ஹேமாங்கதன் போன்ற மகன்களைப் பெற்றார். மேலும் இளை என்ற அவரது மனைவியின் மூலமாக அவர் உருவல்கர் முதலான மகன்களைப் பெற்றார். இவர்களனைவரும் யது வம்சத்தில் முக்கியமானவர்களாக விளங்கினர்.

பதம் 9.24.50
விப்ருஷ்டோ த்ருதேவாயாம் ஏக ஆனகதுந்துபே:
சாந்திதேவாத்மஜா ராஜன் ப்ரசம-ப்ரஸிதாதய:

விப்ருஷ்ட—விப்ருஷ்டர்; த்ருததேவாயாம்—திருததேவா என்ற மனைவியின் கர்பத்தில்; ஏக:—ஒரு மகன்; ஆனகதுந்துபே:—ஆனகதுந்துபியின்; சாந்திதேவா-ஆத்மஜா:—சாந்திதேவா என்ற மற்றொரு மனைவியின் மகன்கள்; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; ப்ரசம-ப்ரஸித-ஆதய:—பிரசமர், பிரஸிதர் மற்றும் பிற மகன்கள்.

ஆனகதுந்துபியின் மனைவிகளுள் ஒருத்தியான திருததேவாவின் கர்பத்திலிருந்து விப்ருஷ்டர் என்ற மகன் வந்தார். வசுதேவரின் மற்றொரு மனைவியான சாந்திதேவாவின் மகன்கள் பிரசமர், பிரசிதர் போன்றவர்களாவர்.

பதம் 9.24.51
ராஜன்ய-கல்ப-வர்ஷாத்யா உபதேவா-ஸுதா தச
வஸு-ஹம்ஸ-ஸுவம்சாத்யா: ஸ்ரீதேவாயாஸ் து ஷட் ஸுதா:

ராஜன்ய—ராஜன்யர்; கல்ப—கல்பர்; வர்ஷ-ஆத்யா:—வர்ஷரும் மற்றவர்களும்; உபதேவா-ஸுதா:—வசுதேவரின் மற்றொரு மனைவியான உபதேவாவின் மகன்கள்; தச—பத்து; வஸு—வசு; ஹம்ஸ—ஹம்ஸர்; ஸுவம்ச—சுவம்சர்; ஆத்யா:—முதலானவர்கள்; ஸ்ரீதேவாயா:—ஸ்ரீதேவா என்ற மற்றொரு மனைவிக்குப் பிறந்தனர்; து—ஆனால்; ஷட்—ஆறு; ஸுதா:—மகன்கள்.

வசுதேவருக்கு உபதேவா என்ற ஒரு மனைவியும் இருந்தாள். அவள் மூலமாக ராஜன்யர், கல்பர், வர்ஷர் முதலான பத்து மகன்கள் வந்தனர். மற்றொரு மனைவியான ஸ்ரீதேவாவிலிருந்து வசு, ஹம்ஸர், சுவம்ஸர் போன்ற ஆறு மகன்கள் வந்தனர்.

பதம் 9.24.52
தேவரக்ஷிதயா லப்தா நவ சாத்ர கதாதய:
வஸுதேவ: ஸுதான் அஷ்டாவ் ஆததே ஸஹதேவயா

தேவரக்ஷிதயா—தேவரக்ஷிதா என்ற மனைவியின் மூலமாக; லப்தா:—பெற்றார்; நவ—ஒன்பது; ச—கூட; அத்ர—இங்கு; கதா-ஆதய:—கதன் முதலான மகன்கள்; வஸுதேவ:—ஸ்ரீல வசுதேவர்; ஸுதான்—மகன்களை; அஷ்டௌ—எட்டு; ஆததே—பெற்றார்; ஸஹதேவயா—ஸஹதேவா என்ற மனைவியில்.

வசுதேவரின் விந்தின் மூலமாக தேவரக்ஷிதாவின் கர்பத்தில் கதா முதலான ஒன்பது மகன்கள் பிறந்தனர். தர்மமே உருவான வசுதேவருக்கு சஹதேவா என்ற ஒரு மனைவியும் இருந்தாள். அவளது கர்பத்தின் மூலமாக சுருதர், பிரவரர் முதலான எட்டு மகன்கள் பிறந்தனர்.

பதங்கள் 9.24.53 – 9.24.55
ப்ரவர-ஸ்ருத-முக்யாம்ஸ் ச ஸாக்ஷாத் தர்மோ வஸூன் இவ
வஸுதேவஸ் து தேவக்யாம் அஷ்ட புத்ரான் அஜீஜனத்

கீர்த்திமந்தம் ஸுஷேணம் ச பத்ரஸேனம் உதார-தீ:
ரிஜும் ஸம்மர்தனம் பத்ரம் ஸங்கர்ஷணம் அஹீஸ்வரம்

அஷ்டமஸ் து தயோர் ஆஸீத் ஸ்வயம் ஏவ ஹரி: கில
ஸுபத்ரா ச மஹாபாகா தவ ராஜன் பிதாமஹீ

ப்ரவர—பிரவரர்; ஸ்ருத—சுருதர்; முக்யான்—முதலான; ச—மேலும்; ஸாக்ஷாத்—நேரடியாக; தர்ம—தர்ம சொரூபமாவார்; வஸூன் இவ—சுவர்க்க லோகங்களிலுள்ள முக்கிய வஸுக்களைப் போலவே; வஸுதேவ:—கிருஷ்ணரின் தந்தையான ஸ்ரீல வசுதேவர்; து—உண்மையில்; தேவக்யாம்—தேவகியின் கர்பத்தில்; அஷ்ட—எட்டு; புத்ரான்—மகன்களை; அஜீஜனத்—பெற்றார்; கீர்த்திமந்தம்—கீர்த்திமான்; ஸுஷேணம்—மற்றும் சுஷேணர்; பத்ரஸேனம்—பத்ரசேனர்; உதார-தீ:—இவர்கள் முழு தகுதியுடையவர்கள்; ரிஜும்—ரிஜு; ஸம்மர்தனம்—சம்மர்தனர்; பத்ரம்—பத்ரர்; ஸங்கர்ஷணம்—சங்கர்ஷணர்; அஹி-ஈஸ்வரம்—பரம ஆளுனரும்; சேஷ—அவதாரமுமான; அஷ்டம:—எட்டாவதாக; து—ஆனால்; தயோ:—இருவருக்கும் (தேவகிக்கும், வசுதேவருக்கும்); ஆஸீத்—தோன்றினார்; ஸ்வயம் ஏவ—தாமாகவே நேரடியாக; ஹரி:—பரமபுருஷர்; கில—என்னென்று சொல்வது; ஸுபத்ரா—சுபத்திரை என்ற ஒரு தங்கை; ச—மேலும்; மஹாபாகா—மிகவும் பாக்கியசாலியான; தவ—உமது; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; பிதாமஹீ—பாட்டி.

சஹதேவாவுக்குப் பிறந்த பிரவரர், சுருதர் போன்ற எட்டு மகன்கள், சுவர்க்க லோகங்களிலுள்ள எட்டு வஸுக்களின் அவதாரங்களாவர். வசுதேவர் தேவகியின் கர்பத்தின் மூலமாக உயர்ந்த தகுதியுடைய எட்டு மகன்களைப் பெற்றார். இவர்களுள் கீர்த்திமான், சுஷேணர், பத்ரசேனர், ரிஜு, சம்மர்தனர், பத்ரர் மற்றும் பரமபுருஷரும், சேஷ அவதாரமுமான சங்கர்ஷணர் ஆகியோரும் அடங்குவர். எட்டாவது மகன் பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணராவார். ஒரே புதல்வியும், மகா பாக்கியசாலியுமான சுபத்திரை உமது பாட்டியாவாள்.

பதம் 9.24.56
யதா யதா ஹி தர்மஸ்ய க்ஷயோ வ்ருத்திஸ் ச பாப்மன:
ததா து பகவான் ஈச ஆத்மானம் ஸ்ருஜதே ஹரி:

யதா—எப்பொழுதெல்லாம்; யதா—எங்கெல்லாம்; ஹி—உண்மையில்; தர்மஸ்ய—தர்மம்; க்ஷய:—சீரழிந்து; வ்ருத்தி:—அதிகரிக்கிறதோ; ச—மேலும்; பாப்மன:—பாவச் செயல்; ததா—அப்போது; து—நிச்சயமாக; பகவான்—பரமபுருஷர்; ஈச:—பரம ஈசுவரர்; ஆத்மானம்—நேரடியாக; ஸ்ருஜதே—அவதரிக்கிறார்; ஹரி:—பரமபுருஷர்.

எப்பொழுதெல்லாம் தர்மம் சீரழிந்து அதர்மம் அதிகரிக்கிறதோ அப்பொழுது பரம ஆளுனரும், பரமபுருஷருமாகிய பகவான் ஸ்ரீ ஹரி தன்னிச்சையாகத் தோன்றுகிறார்.

பதம் 9.24.57
ந ஹி அஸ்ய ஜன்மனோ ஹேது: கர்மணோ வா மஹீபதே
ஆத்ம-மாயாம் வினேசஸ்ய பரஸ்ய த்ரஷ்டூர் ஆத்மன:

ந—இல்லை; ஹி—நிச்சயமாக; அஸ்ய—அவருடைய (பரம புருஷருடைய) ஜன்ம:—தோற்றத்தின், அல்லது பிறப்பின்; ஹேது:—காரணம் இருக்கிறது; கர்மண:—அல்லது செயற்படுவதற்கு; வா—அல்லது; மஹீபதே—அரசே (பரீட்சித்து மகாராஜனே); ஆத்ம-மாயாம்—வீழ்ந்த ஆத்மாக்களிடம் உள்ள அவரது உயர்ந்த இரக்கம்; வினா—இல்லாமல்; ஈசஸ்ய-பரம—பரம ஆளுனரின்; பரஸ்ய—ஜட உலகிற்கு அப்பாற்பட்ட பரமபுருஷரின்; த்ரஷ்டு:—எல்லோருடைய செயல்களுக்கும் சாட்சியாக உள்ள பரமாத்மாவின்; ஆத்மன:—அனைவருடைய பரமாத்மாவின்.

ஆனால் அரசே, பரீட்சித்து மகாராஜனே, பகவானின் சொந்த விருப்பத்தைப் பொறுத்தவரை, அவரது தோற்றத்திற்கோ, மறைவிற்கோ அல்லது செயல்களுக்கோ எந்த காரணமும் இல்லை. பரமாத்மா என்ற முறையில் அனைத்தையும் அவர் அறிவார். அதனால் அவரை பாதிக்கக் கூடிய எந்த காரணமும் இல்லை. கர்ம பலன்கள் கூட அவரை பாதிப்பதில்லை.

பதம் 9.24.58
யன் மாயா-சேஷ்டிதம் பும்ஸ: ஸ்திதி-உத்பத்தி-அப்யயாய ஹி
அனுக்ரஹஸ் தன்-நிவ்ருத்தேர் ஆத்ம-லாபாய சேஷ்யதே

யத்—எதெல்லாம்; மாயா-சேஷ்டிதம்—பரமபுருஷரால் ஆரம்பிக்கப்பட்ட இயற்கைச் சட்டங்கள்; பும்ஸ:—ஜீவராசிகளின்; ஸ்திதி—ஆயுள்; உத்பத்தி—பிறப்பு; அப்யயாய—அழிவு; ஹி—நிச்சயமாக; அனுக்ரஹ:—இரக்கம்; தத்-நிவ்ருத்தே:—பிறவிச் சக்கரத்தை நிறுத்துவதற்குரிய பிரபஞ்ச சக்தியின் படைப்பும், வெளிப்பாடும்; ஆத்ம-லாபாய—இவ்வாறு பரமபதத்தை அடைவதெனும்; ச—உண்மையில்; ஈஷ்யதே—இந்த நோக்கத்திற்காகவே சிருஷ்டி ஏற்பட்டுள்ளது.

பரமபுருஷர் அவரது இரக்கத்தினால் ஜீவராசிக்கு முக்தியளித்து, அந்த ஜீவராசியின் பிறப்பு, இறப்பு பெளதிக வாழ்வின் நீடிப்பு ஆகியவற்றை நிறுத்துவதற்காகவே, இப்பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களில் தமது பௌதிக சக்தியின் மூலமாக செயற்படுகிறார். இவ்வாறாக ஜீவராசி பகவானின் இராஜ்யமான பரமபதத்தை அடைய அவர் சக்தியளிக்கிறார்.

பதம் 9.24.59
அஷெஹிணீனாம் பதிபிர் அஸுரைர் ந்ருப-லாஞ்சனை:
புவ ஆக்ரம்யமாணாயா அபாராய க்ருதோத்யம:

அக்ஷெஹிணீனாம்—பெரும்படைபலத்தைப் பெற்றுள்ள அரசர்களின்; பதிபி:—அத்தகைய அரசர்களால் அல்லது அரசாங்கத்தால்; அஸுரை:—(இத்தகைய படைபலம் அவர்களுக்குத் தேவையில்லை என்றாலும். அநாவசியமாக அதை உருவாக்குவதால் அவர்கள்) உண்மையில் அசுரர்களாவர்; ந்ருப-லாஞ்சனை:—(எப்படியோ ஆட்சியை அவர்கள் கைப்பற்றியுள்ள போதிலும்) அரசர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்களாவர்; புவ:—பூமியில்; ஆக்ரம்யமாணாயா:—ஒருவரையொருவர் தாக்கும் நோக்கத்துடன்; அபாராய—பூமியில் அசுரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு வழிவகுக்கின்றனர்; க்ருத-உத்யம—உற்சாகத்துடன் (படை பலத்தை அதிகரிப்பதற்காக நாட்டின் நிதி முழுவதையும் அவர்கள் செலவிடுகின்றனர்).

அரசாங்கத்தை ஆக்ரமித்துக் கொண்டுள்ள அசுரர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்கள் போல் உடை அணிந்துள்ள போதிலும். அவர்கள் அரசாங்கத்தின் கடமையை அறிந்திருக்கவில்லை. இதன் விளைவாக, இறைவனின் ஏற்பாட்டினால், பெரும் படைபலத்தைப் பெற்றுள்ள இத்தகைய அசுரர்கள் ஒருவரோடொருவர் யுத்தம் செய்கின்றனர். இவ்வாறாக பூமியில் அசுரர்களால் ஏற்பட்டுள்ள பெரும் பாரம் குறைக்கப்படுகிறது. பரமபுருஷரின் விருப்பத்தால் அசுரர்கள் தங்களுடைய படைபலத்தை அதிகரிக்கின்றனர். அதனால் அவர்களுடைய எண்ணிக்கை குறையும். பக்தர்களுக்கும் கிருஷ்ண உணர்வில் முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு கிட்டும்.

பதம் 9.24.60
கர்மாணி அபரிமேயாணி மனஸாபி ஸுரேஸ்வரை:
ஸஹ-ஸங்கர்ஷணஸ் சக்ரே பகவான் மதுஸூதன:

கர்மானி—செயல்களை; அபரிமேயாணி—அளவிட முடியாத, எல்லையற்ற; மனஸா அபி—மனதில் கண்ட இத்தகைய திட்டங்களால் கூட; ஸுர-ஈஸ்வரை:—பிரபஞ்ச நிர்வாகிகளான பிரம்மா, சிவன் போன்றவர்களால்; ஸஹ-ஸங்கர்ஷண:—சங்கர்ஷணருடன் (பலதேவர்); சக்ரே—செய்தார்; பகவான்—பரமபுருஷர்; மது-ஸூதன:—மது என்ற அரக்கனைக் கொன்ற.

பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரானவர், சங்கர்ஷணர் மற்றும் பலராமர் ஆகியோரின் ஒத்துழைப்புடன், பிரம்மதேவர், சிவபெருமான் போன்றவர்களால் கூட புரிந்துகொள்ள முடியாத செயல்களைச் செய்தார். (உதாரணமாக, பூமியின் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு, அசுரர்களைக் கொல்லும் நோக்கத்துடன் ஸ்ரீ கிருஷ்ணர் குருட்சேத்திர யுத்தத்தை ஏற்பாடு செய்தார்).

பதம் 9.24.61
கலௌ ஜனிஷ்யமாணானாம் துஹ்க-சோக-தமோ-நுதம்
அனுக்ரஹாய பக்தானாம் ஸுபுண்யம் வ்யதனோத் யச:

கலௌ—இக்கலியுகத்தில்; ஜனிஷ்யமாணானாம்—எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் பந்தப்பட்ட ஆத்மாக்களின்; துஹ்க-சோக-தம:-நுதம்—அறியாமையால் ஏற்படும் எல்லையற்ற அவர்களுடைய துன்பத்தையும், வருத்தத்தையும் குறைக்கும் பொருட்டு; அனுக்ரஹாய—கருணை காட்டுவதற்காக; பக்தானாம்—பக்தர்களுக்கு; ஸு-புண்யம்—மிகவும் புண்ணியமுள்ள உன்னத செயல்களை; வ்யதனோத்—விரிவடையச் செய்தார்; யச:—அவரது மகிமைகளை அல்லது மதிப்பை.

எதிர்காலத்தில் வரப்போகும் கலியுகத்தில் பிறவி எடுக்கவிருக்கும் பக்தர்களுக்கு அகாரணமான கருணையைக் காட்டும் பொருட்டு, பரம புருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவானை நினைப்பதாலேயே பெளதிக வாழ்வின் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் ஒருவன் விடுபடும் வகையில் செயற்பட்டார். (அதாவது, எதிர்காலத்தில் வரப்போகும் பக்தர்கள் பகவத்கீதையில் கூறப்பட்டுள்ள கிருஷ்ண உணர்வு உபதேசங்களை ஏற்றுக் கொள்வதன் மூலமாக பௌதிக துன்பங்களிலிருந்து விடுபடக்கூடிய முறையில் பகவான் செயற்பட்டார்).

பதம் 9.24.62
யஸ்மின் ஸத்-கர்ண-பீயுஷே யஸஸ்-தீர்த்த-வரே ஸக்ருத்
ஸ்ரோத்ராஞ்ஜலிர் உபஸ்ப்ருஸ்ய துனுதே கர்ம-வாஸனாம்

யஸ்மின்—ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் நிகழ்த்திய உன்னத செயல்களின் வரலாற்றில்; ஸத்-கர்ண-பீயுஷே—உன்னதமான, புனிதமடைந்த செவிகளின் தேவைகளை திருப்திப்படுத்துபவரான; யச:-தீர்த்த-வரே—பகவானின் உன்னத செயல்களைப் பற்றி கேட்பதன் மூலமாக, மிகவும் புனிதமான இடத்தில் தன்னை வைத்துக் கொண்டு; ஸக்ருத்—ஒருமுறை மட்டும், உடனேயே; ஸ்ரோத்ர-அஞ்சலி:—உன்னதமான செய்தியைக் கேட்பதெனும் வடிவில்; உபஸ்ப்ருஸ்ய—தொட்டு (கங்கை நீர்போலவே); துனுதே—அழித்துவிடுகிறது; கர்ம-வாஸனாம்—பலன் கருதும் செயல்களிலுள்ள விருப்பத்தை (கர்ம வாசனைகளை).

பகவத் பக்தர்கள் பகவானின் மகிமைகளைப் புனிதமடைந்த தங்களுடைய உன்னதமான செவிகளால் கேட்பதாலேயே, உறுதியான பௌதிக ஆசைகளிலிருந்தும், பலன் கருதும் செயல்களிலுள்ள ஈடுபாட்டிலிருந்தும் உடனே விடுபடுகின்றனர்.

பதங்கள் 9.24.63 – 9.24.64
போஜ-வ்ருஷ்ணி-அந்தக-மது-ஸூரஸேன-தசார்ஹகை:
ஸ்லாகனீயேஹித: சஸ்வத் குரு-ஸ்ருஞ்ஜய-பாண்டுபி:

ஸ்னிக்த-ஸ்மிதேக்ஷிதோதாரைர் வாக்யைர் விக்ரம-லீலயா
ந்ருலோகம் ரமயாம் ஆஸ மூர்த்யா ஸர்வாங்க-ரம்யயா

போஜ—போஜ வம்சத்தாலும்; வ்ருஷ்ணி—விருஷ்ணிகளாலும்; அந்தக—அந்தகர்களாலும்; மது—மதுக்களாலும்; சூரஸேன—சூரசேனர்களாலும்; தசார்ஹகை:—தசார்ஹகர்களாலும் உதவப்பட்டு; ஸ்லாகனீய—புகழ்ச்சிக்குரிய; ஈஹித:—முயற்சிகளால்; சஸ்வத்—எப்பொழுதும்; குரு-ஸ்ருஞ்சய-பாண்டுபி:—பாண்டவர்கள், குருக்கள் மற்றும் சிருஞ்சயர்களால் உதவப்பட்டு; ஸ்னிக்த—பாசமுள்ள; ஸ்மித—புன்னகை; ஈக்ஷித—என்று கருதப்படும்; உதாரை:—உதாரகுணம்; வாக்யை:—உபதேசங்கள்; விக்ரம-லீலயா—வீரப்பராக்கிரம லீலைகள்; ந்ரு-லோகம்—மனித சமூகத்தை; ரமயாம் ஆஸ—மகிழ்வித்தார்; மூர்த்யா—அவரது சுய ரூபத்தினால்; ஸர்வ-அங்க-ரம்யயா—உடலின் எல்லா அங்கங்களாலும் அனைவரையும் மகிழ்விக்கும் ரூபம்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் போஜ, விருஷ்ணி, மது, அந்தக, சூரசேன, தசார்ஹ, குரு, சிருஞ்சய மற்றும் பாண்டு வம்சத்தவர்களின் உதவியுடன் பல்வேறு செயல்களைப் புரிந்தார். பகவான் தமது உன்னதமான உடலில் தோன்றி அவரது இனிய புன்னகைகளாலும், அவரது அன்பான நடத்தையாலும், அவரது உபதேசங்களாலும், கோவர்தன மலையைத் தூக்கியது போன்ற அவரது அசாதாரணமான லீலைகளாலும் மனித சமூகம் முழுவதையும் மகிழ்வித்தார்.

பதம் 9.24.65
யஸ்யானனம் மகர-குண்டல-சாரு-கர்ண-
ப்ராஜத்-கபோல-ஸுபகம் ஸவிலாஸ-ஹாஸம்
நித்யோத்ஸவம் ந தத்ருபுர் த்ருஷிபி: பிபந்த்யோ நார்யோ
நராஸ் ச முதிதா: குபிதா நிமேஸ் ச

யஸ்ய—யாருடைய; ஆனனம்—முகம்; மகா-குண்டல-சாரு-கர்ண—சுறா மீன்களையொத்த காதணிகளாலும், அழகிய செவிகளாலும் அழகு பெற்று விளங்கிய; ப்ராஜத்—அழகாக அலங்கரிக்கப்பட்ட; கபோல—நெற்றி; ஸுபகம்—எல்லா ஐசுவரியங்களையும் வெளிப்படுத்தும்; ஸ-விலாஸ-ஹாஸம்—இன்பப்புன்னகையுடன் கூடிய; நித்ய-உத்ஸவம்—அவரைக்காணும் போதெல்லாம் ஒருவர் விழாக்கோலத்தை உணர்கிறார்; நாதத்ருபு:—அவர்களால் திருப்தியடைய இயலவில்லை; த்ருசிபி:—பகவானின் ரூபத்தைப் பார்த்து; பிபந்த்ய:—கண்களால் பருகுவது போல்; நார்ய:—பிருந்தாவனத்துப் பெண்கள் எல்லோரும்; நரா:—எல்லா ஆண் பக்தர்களும்; ச—மேலும்; முதிதா:—முற்றிலும் திருப்தியடைந்தனர்; குபிதா:—கோபங்கொள்கின்றனர்; நிமே:—கண்களின் இமைப்பால் தடை ஏற்படும்போது; ச—கூட.

ஸ்ரீ கிருஷ்ணரின் திருமுகம் சுறாமீன்களையொத்த காதணிகளைப் போன்ற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவருடைய செவிகள் மிகவும் அழகானவை. அவருடைய கன்னங்கள் பொலிவுடன் விளங்குகின்றன. மேலும் அவருடைய புன்னகை அனைவரையும் கவர்ந்திழுப்பதாக உள்ளது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்ப்பவர் ஒரு விழாக் கோலத்தைப் பார்ப்பார். அவரது திருமுகமும், உடலும் அனைவரும் பார்த்து, பூரண திருப்தியடையும் வகையில் உள்ளன. ஆனால் தங்களுடைய கண்களின் நொடிப்பொழுது இமைப்பினால் ஏற்படும் தடங்கலுக்காக பக்தர்கள் சிருஷ்டிக் கர்த்தாவிடம் கோபம் கொள்கின்றனர்.

பதம் 9.24.66
ஜாதோ கத: பித்ரு-க்ருஹாத் வ்ரஜம் வ்ரஜம் எதிதார்த்தோ
ஹத்வா ரிபூன் ஸுத-சதானி க்ருதோருதார:
உத்பாத்ய தேஷு புருஷ: க்ரதுபி: ஸமீஜே
ஆத்மானம் ஆத்ம-நிகமம் ப்ரதயஞ் ஜனேஷு

ஜாத:—வசுதேவரின் புதல்வராகப் பிறந்த பின்; கத:—சென்றுவிட்டார்; பித்ரு-க்ருஹாத்—அவரது தந்தையின் வீடுகளிலிருந்து; வ்ரஜம்—பிருந்தாவனத்திற்கு; ஏதித-அர்த்த:—(பிருந்தாவனத்தின்) நிலையை உயர்த்துவதற்கு; ஹத்வா—அங்கு கொன்று; ரிபூன்—பல அசுரர்களை; ஸுத-சதானி—நூற்றுக்கணக்கான மகன்களை; க்ருத-உரு-தார:—மகளிர் திலகங்களாக விளங்கிய பல ஆயிரக்கணக்கான மனைவிகளை ஏற்று; உத்பாத்ய—பெற்றார்; தேஷு—அவர்களில்; புருஷ:—ஒரு மனிதரை ஒத்துள்ள பரமபுருஷர்; க்ரதுபி:—பல யாகங்களால்; ஸமீஜே—வழிபட்டார்; ஆத்மானம்—(தாம் சகல யக்ஞங்களாலும் பூஜிக்கப்படுபவர் என்பதால்) தம்மையே; ஆத்ம-நிகமம்—வேத நியமங்களுக்கேற்ப அப்படியே; ப்ரதயன்—வேதக் கொள்கைகளை பரப்பிக் கொண்டு; ஜனேஷு—பொது ஜனங்களுக்கிடையில்.

லீலா புருஷோத்தமர் எனப்படும் பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வசுதேவரின் புதல்வராகத் தோன்றினார். ஆனால் உடனே தன் தந்தையின் வீட்டை விட்டு, தமது அந்தரங்க பக்தர்களுடனான அன்பான உறவுமுறையை விரிவடையச் செய்வதற்காக பிருந்தாவனத்திற்குச் சென்றார். பிருந்தாவனத்தில் பகவான் பல அசுரர்களைக் கொன்றார். அதன்பிறகு துவாரகைக்கு திரும்பிச் சென்ற அவர், மகளிர் திலகங்களான பல மனைவிகளைத் திருமணம் செய்து கொண்டு, அவர்கள் மூலமாக நூற்றுக்கணக்கான மகன்களைப் பெற்றார். மேலும் இல்லற வாழ்வின் விதிமுறைகளை ஸ்தாபிக்கும் பொருட்டு, தம்மையே வழிபடுவதற்குரிய யாகங்களையும் அவர் செய்தார்.

பதம் 9.24.67
ப்ருத்வ்யா: ஸ வை குரு-பரம் க்ஷபயன் குரூணாம்
அந்த:-ஸமுக்த-கலினா யுதி பூப-சம்வ:
த்ருஷ்ட்யா விதூய விஜயே ஜயம் உத்விகோஷ்ய
ப்ரோச்யோத்தவாய ச பரம் ஸமகாத் ஸ்வ-தாம

ப்ருத்வ்யா:—பூமியில்; ஸ:—அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்); வை—உண்மையில்; குரு-பரம்—பெரும்பாரத்தை; க்ஷபயன்—முற்றிலும் அழித்து; குரூணாம்—குரு வம்சத்தில் பிறந்துள்ளவர்களின்; அந்த:-ஸமுத்த-கலினா—சகோதரர்களுக்கிடையில் கருத்து வேறுபாட்டினால் பகையுணர்ச்சியைத் தூண்டியதன் மூலம்; யுதி—குருட்சேத்திர யுத்தத்தில்; பூப-சம்வ:—எல்லா அசுர அரசர்களையும்; த்ருஷ்ட்யா—அவரது பார்வையால்; விதூய—அவர்களுடைய பாவச் செயல்களைத் துடைத்து; விஜயே—வெற்றியில்; ஜயம்—வெற்றியை; உத்விகோஷ்ய—(அர்ஜுனனுக்கு வெற்றியை) பெற்றுத் தந்தார்; ப்ரோச்ய—உபதேசங்கள் அருளி; உத்தவாய—உத்தவருக்கு; ச—மேலும்; பரம்—உன்னதமான; ஸமகாத்—திரும்பிச் சென்றார்; ஸ்வ-தாம—அவரது சொந்த இடத்திற்கு.

அதன்பிறகு, உலக பாரத்தைக் குறைப்பதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குடும்ப அங்கத்தினர்களுக்கிடையில் ஒரு கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தினார். குருட்சேத்திரப் போர்க்களத்தில் தமது பார்வையாலேயே எல்லா அசுர மன்னர்களையும் கொன்று அர்ஜுனனுக்கு அவர் வெற்றியை தேடித் தந்தார். இறுதியாக அவர் உத்தவருக்கு உன்னத வாழ்வைப் பற்றியும், உன்னத பக்தியைப் பற்றியும் உபதேசித்தார். அதன்பிறகு அவர் அவரது சுயரூபத்தில் தமது உலகிற்கு திரும்பிச் சென்றார்.


ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர்” எனும் தலைப்பை கொண்ட இருபத்திநான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare