அத்தியாயம் – 22
அஜமீடரின் வம்சத்தினர்
பதம் 9.22.1
ஸ்ரீ-சுக உவாச
மித்ராயுஸ் ச திவோதாஸாச் ச்யவனஸ் தத்-ஸுதோ ந்ருப
ஸுதாஸ: ஸஹதேவோ ‘த ஸோமகோ ஜந்து-ஜன்மக்ருத்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மித்ராயு:—மித்ராயு; ச—மேலும்; திவோதாஸாத்—திவோதாசரிலிருந்து பிறந்தார்; ச்யவன:—சியவனர்; தத்-ஸுத:—மித்ராயுவின் மகன்; ந்ருப—அரசே; ஸுதாஸ:—சுதாசர்; ஸஹதேவ:—ஸஹதேவர்; அத—அதன்பிறகு; ஸோமக:—சோமகர்; ஜந்து-ஜன்ம-க்ருத்—ஜந்துவின் தந்தை.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, திவோதாஸரின் மகன் மித்ராயு. மித்ராயுவிலிருந்து சியவனர், சுதாசர், சஹதேவர், சோமகர் ஆகிய நான்கு மகன்கள் வந்தனர். சோமகர் ஜந்துவின் தந்தையாவார்.

பதம் 9.22.2
தஸ்ய புத்ர-சதம் தேஷாம் யவீயான் ப்ருஷத: ஸுத:
ஸ தஸ்மாத் த்ருபதோ ஜக்ஞே ஸர்வ-ஸம்பத்-ஸமன்வித:

தஸ்ய—அவருடைய (சோமகருடைய); புத்ர-சதம்—நூறு மகன்கள்; தேஷாம்—அவர்களில்; யவீயான்—இளையவர்; ப்ருஷத:—பிருஷதர்; ஸுத:—மகன்; ஸ:—அவர்; தஸ்மாத்—அவரிலிருந்து (பிருஷதரிலிருந்து); த்ருபத:—துருபதர்; ஜக்ஞே—பிறந்தார்; ஸர்வ-ஸம்பத்—சகல ஐசுவரியங்களால்; ஸமன்வித:—அலங்கரிக்கப்பட்ட.

சோமகருக்கு நூறு மகன்கள் இருந்தனர். அவர்களுள் பிருஷதர் இளையவராவார். பிருஷதரிலிருந்து துருபத மகாராஜன் பிறந்தார். இவர் எல்லா மேலதிகாரத்திலும் சிறந்து விளங்கினார்.

பதம் 9.22.3
த்ருபதாத் த்ரெளபதி தஸ்ய த்ருஷ்டத்யும்னாதய: ஸுதா:
த்ருஷ்டத்யும்னாத் த்ருஷ்டகேதுர் பார்ம்யா: பாஞ்சாலகா இமே

த்ருபதாத்—துருபதரிலிருந்து; த்ரௌபதீ—புகழ்பெற்ற பாண்டவர்களின் மனைவியான திரௌபதி; தஸ்ய—அவருடைய (துருபதருடைய); த்ருஷ்டத்யும்ன-ஆதய:—திருஷ்டத்யும்னர் முதலான; ஸுத:—மகன்கள்; த்ருஷ்டத்யும்னாத்—திருஷ்டத்யும்னரிலிருந்து; த்ருஷ்ட கேது:—திருஷ்டகேது என்ற மகன்; பார்ம்யா—பர்மியாஸ்வரின் வம்சத்தவர்கள் அனைவரும்; பாஞ்சாலகா:—அவர்கள் பாஞ்சாலகர்கள் என்று அறியப்பட்டனர்; இமே—இவர்களனைவரும்.

துருபத மகாராஜனிலிருந்து திரெளபதி பிறந்தாள். துருபத மகாராஜனுக்கு திருஷ்டத்யும்னன் முதலான பல மகன்களும் இருந்தனர். திருஷ்டத்யும்னரிலிருந்து திருஷ்டகேது என்ற மகன் வந்தார். இவர்களனைவரும் பர்மியாஸ்வரின் வம்சத்தினர் அல்லது பாஞ்சால வம்சம் என்று அறியப்படுகின்றனர்.

பதங்கள் 9.22.4 – 9.22.5
யோ ‘ஜமீட-ஸுதோ ஹி அன்ய ரிக்ஷ: ஸம்வரணஸ் தத:
தபத்யாம் ஸூர்ய-கன்யாயாம் குருக்ஷேத்ர-பதி: குரு:

பரீக்ஷி: ஸுதனுர் ஜஹ்னுர் நிஷதஸ் ச குரோ: ஸுதா:
ஸுஹோத்ரோ ‘பூத் ஸுதனுஷஸ் ச்யவனோ ‘த தத: க்ருதீ

ய:—யார்; அஜமீட-ஸுத:—அஜமீடரிலிருந்து பிறந்த ஒரு மகன்; ஹி—உண்மையில்; அன்ய:—மற்றொரு; ரிக்ஷ:—ரிக்ஷர்; ஸம்வரண:—சம்வரணர்; தத:—அவரிலிருந்து (ரிக்ஷரிலிருந்து); தபத்யாம்-தபதி; ஸூர்ய-கன்யாயாம்—சூரிய தேவனுடைய மகளின் கர்பத்தில்; குருக்ஷேத்ர-பதி:—குருட்சேத்திரத்தின் மன்னர்; குரு:—குரு பிறந்தார்; பரீக்ஷி: ஸுதனு: ஜஹ்னு: நிஷத: ச—பரீக்ஷி, சுதனு, ஜஹ்னு மற்றும் நிஷதர்; குரோ:—குருவின்; ஸுதா:—மகன்கள்; ஸுஹோத்ர:—சுஹோத்ரர்; அபூத்—பிறந்தார்; ஸுதனுஷ:—சுதனுவிலிருந்து; ச்யவன:—சியவனர்; அத—சுஹோத்ரரிலிருந்து; தத:—அவரிலிருந்து (சியவனரிலிருந்து); க்ருதீ—கிருதி என்ற ஒரு மகன்.

அஜமீடரின் மற்றொரு மகன் ரிக்ஷர் எனப்பட்டார். ரிக்ஷரிலிருந்து சம்வரணர் என்ற மகன் வந்தார். சம்வரணரிலிருந்து அவரது மனைவியும், சூரியதேவரின் மகளுமான தபதியின் கர்பத்தின் மூலமாக குருட்சேத்திரத்தின் அரசரான குரு வந்தார். குருவிற்கு பரீக்ஷி, சுதனு, ஜஹ்னு, நிஷதர் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். சுதனுவிலிருந்து சுஹோத்ரரும், சுஹோத்ரரிலிருந்து சியவனரும், சியவனரிலிருந்து கிருதியும் பிறந்தனர்.

பதம் 9.22.6
வஸுஸ் தஸ்யோபரிசரோ ப்ருஹத்ரத-முகாஸ் தத:
குசாம்ப-மத்ஸ்ய-ப்ரத்யக்ர-சேதிபாத்யாஸ் ச சேதிபா:

வஸு:—வசு என்ற ஒரு மகன்; தஸ்ய—அவருடைய (கிருதியின்); உபரிசர:—வசுவின் குடும்பப் பெயர்; ப்ருஹத்ரத-முகா:—பிருஹத்ரதர் முதலான; தத:—அவரிலிருந்து (வசுவிலிருந்து); குசாம்ப—குசாம்பர்; மதஸ்ய—மத்ஸ்யர்; ப்ரத்யக்ர—பிரத்யக்ரர்; சேதிப-ஆத்யா:—சேதிபரும் மற்றவர்களும்; ச—கூட; சேதி-பா:—அவர்களனைவரும் சேதி நாட்டின் அரசர்களாயினர்.

கிருதியின் மகன் உபரிசர வசு. பிருஹத்ரதன் முதலான அவரது மகன்களுள் குசாம்பர், மத்ஸ்யர், பிரத்யக்ரர் மற்றும் சேதிபர் ஆகியோரும் அடங்குவர். உபரிசத வசுவின் மகன்களனைவரும் சேதி நாட்டு அரசர்களாயினர்.

பதம் 9.22.7
ப்ருஹத்ரதாத் குசாக்ரோ ‘பூத் ரிஷபஸ் தஸ்ய தத்-ஸுத:
ஜக்ஞே ஸத்யஹிதோ ‘பத்யம் புஷ்பவாம்ஸ் தத்-ஸுதோ ஜஹு:

ப்ருஹத்ரதாத்—பிருஹத்ரதரிலிருந்து; குசாக்ர:—குசாக்ரர்; அபூத்—ஒரு மகன் பிறந்தார்; ரிஷப:—ரிஷபர்; தஸ்ய—அவருடைய (குசாக்ரருடைய); தத்-ஸுத:—அவருடைய (ரிஷபருடைய) மகன்; ஜக்ஞே—பிறந்தார்; ஸத்யஹித:—சத்யஹிதர்; அபத்யம்—குழந்தை; புஷ்பவான்—புஷ்பவான்; தத்-ஸுத:—அவரது (புஷ்பவானின்) மகன்; ஜஹு:—ஜஹு.

பிருஹத்ரதரிலிருந்து குசாக்ரர் பிறந்தார். அவரிலிருந்து ரிஷபரும், ரிஷபரிலிருந்து சத்யஹிதரும் பிறந்தனர். சத்யஹிதரின் மகன் புஷ்பவான். புஷ்பவானின் மகன் ஜஹு.

பதம் 9.22.8
அன்யஸ்யாம் அபி பார்யாயாம் சகலே த்வே ப்ருஹத்ரதாத்
யே மாத்ரா பஹிர் உத்ஸ்ருஷ்டே ஜரயா சாபிஸந்திதே
ஜீவ ஜீவேதி க்ரீடந்த்யா ஜராஸந்தோ ‘பவத் ஸுத:

அன்யஸ்யாம்—மற்றொரு; அபி—மேலும்; பார்யாயாம்—மனைவியில்; சகலே—பாகங்கள்; த்வே—இரு; ப்ருஹத்ரதாத்—பிருஹத்ரரிலிருந்து; யே—அந்த இரு பகுதிகள்; மாத்ரா—தாயால்; பஹி: உத்ஸ்ருஷ்டே—ஒதுக்கிவிட்டதால்; ஜரயா—ஜரா என்ற அரக்கியால்; ச—மேலும்; அபிஸந்திதே—அவை இணைக்கப்பட்ட பொழுது; ஜீவ ஜீவ இதி—ஜீவராசியே உயிர்பெற்றெழு; க்ரீடந்த்யா—அவ்வாறு விளையாடியபடி; ஜராஸந்த:—ஜராசந்தன்; அபவத்—உற்பத்தி செய்யப்பட்டான்; ஸுத:—ஒரு மகன்.

பிருஹத்ரதர் மற்றொரு மனைவியின் கர்பத்தில் ஒரு மகனின் இருபாதிகளைப் பெற்றார். அந்த இரு பாதிகளைக் கண்ட அந்த தாய் அவற்றை வேண்டாமென்று விலக்கிவிட்டாள். பிறகு ஜரா என்ற ஓர் அரக்கி அவ்விரு பகுதிகளையும் விளையாட்டாக இணைத்து, “உயிர் பெற்றெழு, உயிர் பெற்றெழு!” என்று கூறினாள். இவ்வாறாக ஜராசந்தன் என்ற மகன் பிறந்தான்.

பதம் 9.22.9
ததஸ் ச ஸஹதேவோ ‘பூத் ஸோமாபிர் யச் ஸ்ருதஸ்ரவா:
பரீக்ஷிர் அனபத்யோ ‘பூத் ஸுரதோ நாம ஜாஹ்னவ:

தத: ச—மேலும் அவனிலிருந்து (ஜராசந்தன்); ஸஹதேவ:—சஹதேவர்; அபூத்—பிறந்தார்; ஸோமாபி:—சோமாபி; யத்—அவருடைய (சோமாபியின்); ஸ்ருதஸ்ரவா:—சுருதஸ்ரவர் என்ற மகன்; பரீக்ஷி:—பரீக்ஷி என்ற குருவின் மகன்; அனபத்ய:—மகனில்லாதவர்; ஆபூத்—ஆனார்; ஸுரத:—சுரதர்; நாம—என்ற பெயருடைய; ஜாஹ்னவ:—ஜஹ்னுவின் மகனாவார்.

ஜராசந்தனிலிருந்து சஹதேவன் என்ற மகன் வந்தார். சஹதேவனிலிருந்து சோமாபியும், சோமாபியிலிருந்து சுருதஸ்ரவரும் வந்தனர். பரீக்ஷி என்று அழைக்கப்பட்ட குருவின் மகளுக்கு மகன்களில்லை. ஆனால் ஜஹ்னு என்ற குருவின் மகனுக்கு சுரதன் என்ற ஒரு மகன் இருந்தார்.

பதம் 9.22.10
ததோ விதூரதஸ் தஸ்மாத் ஸார்வபௌமஸ் ததோ ‘பவத்
ஜயஸேனஸ் தத்-தனயோ ராதிகோ ‘தோ ‘யுதாயு அபூத்

த:—அவரிலிருந்து (சுரதரிலிருந்து); விதூரத:—விதூரதர் என்ற ஒரு மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து (விதூரதரிலிருந்து); ஸார்வ பௌம:—சார்வ பௌமர் என்ற மகன்; தத:—அவரிலிருந்து (சார்வபெளமரிலிருந்து); அபவத்—பிறந்தார்; ஜயஸேன:—ஜயசேனர்; தத்-தனய:—ஜயசேனர் என்ற மகன்; ராதிக:—ராதிகர்; அத:—அவரிலிருந்து (ராதிகரிலிருந்து); அயுதாயு:—அயுதாயு; அபூத்—பிறந்தார்.

சுருதரிலிருந்து விதூரதர் என்ற மகன் வந்தார். அவரிலிருந்து சார்வபெளமர் பிறந்தார். அவரிலிருந்து ஜயசேனர் வந்தார். ஜயசேனரிலிருந்து ராதிகரும், ராதிகரிலிருந்து அயுதாயுவும் வந்தனர்.

பதம் 9.22.11
ததஸ் சாக்ரோதனஸ் தஸ்மாத் தேவாதிதிர் அமுஷ்ய ச
ரிக்ஷஸ் தஸ்ய திலீபோ ‘பூத் ப்ரதீபஸ் தஸ்ய சாத்மஜ:

தத:—அவரிலிருந்து (அயுதாயுவிலிருந்து); ச—மேலும்; அக்ரோதன:—அக்ரோதனர் என்ற மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து (அக்ரோதனரிலிருந்து); தேவாதிதி:—தேவாதிதி என்ற ஒரு மகன்; அமுஷ்ய—அவருடைய (தேவாதிதியினுடைய); ச—கூட; ரிக்ஷ:—ரிக்ஷருடைய; தஸ்ய—அவருடைய (ரிக்ஷர்); திலீப:—திலீபர் என்ற மகன்; அபூத்—பிறந்தார்; ப்ரதீப:—பிரதீபர்; தஸ்ய—அவருடைய (திலீபருடை); ச—மேலும்; ஆத்ம-ஜ:—மகன்.

அயுதாயுவிலிருந்து அக்ரோதனர் என்ற மகன் வந்தார். அவரது மகன் தேவாதிதி. தேவாதிதியின் மகன் ரிக்ஷர், ரிக்ஷரின் மகன் திலீபர். திலீபரின் மகன் பிரதீபர்.

பதங்கள் 9.22.12 – 9.22.13
தேவாபி: சாந்தனுஸ் தஸ்ய பாஹ்லீக இதி சாத்மஜா:
பித்ரு-ராஜ்யம் பரித்யஜ்ய தேவாபிஸ் து வனம் கத:

அபவச் சாந்தனூ ராஜா ப்ராந் மஹாபிஷ-ஸம்க்ஞித:
யம் யம் கராப்யாம் ஸ்ப்ருசதி ஜீர்ணம் யௌவனம் ஏதி ஸ:

தேவாபி:—தேவாபி; சாந்தனு:—சாந்தனு; தஸ்ய—அவருடைய (பிரதீபருடைய); பாஹ்லீக:—பாஹ்லீகர்; இதி—இவ்வாறு; ச—கூட; ஆத்ம-ஜா:—மகன்கள்; பித்ரு-ராஜ்யம்—தந்தையின் உடைமையான அந்த இராஜ்யத்தை; பரித்யஜ்ய—விட்டுவிட்டு; தேவாபி:—மூத்தவரான தேவாபி; து—உண்மையாக; வனம்—வனத்திற்கு; கத:—சென்றார்; அபவத்—இருந்தார்; சாந்தனு:—சாந்தனு; ராஜா—அரசர்; ப்ராக்—முன்பு; மஹாபீஷ—மஹாபீஷர்; ஸம்க்ஞித:—மிகவும் புகழ்பெற்ற; யம் யம்—யாரையெல்லாம்; கராப்யாம்—அவரது கைகளால்; ஸ்ப்ருசதி—தொடுகிறாரோ; ஜீர்ணம்—மிகவும் முதியவர் என்ற போதிலும்; யௌவனம்—இளமையை; ஏதி—அடைவார்; ஸ:—அவர்.

பிரதீபரின் மகன்கள் தேவாபி, சாந்தனு, பாஹ்லிகர் ஆகியோராவர். தேவாபி தன் தந்தையின் இராஜ்யத்தை விட்டு வனம் சென்றார். ஆகவே சாந்தனு அரசரானார். முற்பிறவியில் மஹாபிஷர் என்று அறியப்பட்ட சாந்தனுவிற்கு, தன் கைகளால் ஒருவரைத் தொடுவதாலேயே அவரை முதுமையிலிருந்து இளமையானவராக மாற்றும் திறமை இருந்தது.

பதங்கள் 9.22.14 – 9.22.15
சாந்திம் ஆப்னோதி சைவாக்ரியாம் கர்மணா தேன சாந்தனு:
ஸமா த்வாதச தத்-ராஜ்யே ந வவர்ஷ யதா விபு:

சாந்தனுர் ப்ராஹ்மணைர் உக்த: பரிவேத்தாயம் அக்ரபுக்
ராஜ்யம் தேஹி அக்ரஜாயாசு புர-ராஷ்ட்ர-விவ்ருத்தயே

சாந்திம்—புலன்நுகர்விற்கேற்ற இளமையை; ஆப்னோதி—ஒருவர் பெறுகிறார்; ச—கூட; ஏவ—உண்மையாக; அக்ரியாம்—முக்கியமாக; கர்மணா—அவரது கையின் ஸ்பரிசத்தால்; தேன—இதன் காரணமாக; சாந்தனு:—சாந்தனு எனப்பட்டார்; ஸமா:—ஆண்டுகள்; த்வாதச—பன்னிரண்டு; தத்-ராஜ்யே—அவரது இராஜ்யத்தில்; ந—இல்லை; வவர்ஷ—மழையை அனுப்பினார்; யதா—அப்பொழுது; விபு:—மழைக்கு அதிபதியாக உள்ள சுவர்க்க ராஜனான இந்திரன்; சாந்தனு:—சாந்தனு; ப்ராஹ்மணை:—கற்றறிந்த பிராமணர்களால்; உக்த:—அறிவுறுத்தப்பட்ட பொழுது; பரிவேத்தா—ஆக்கிரமிப்பு செய்ததால் குறையுடையவராகி; அயம்—இதை; அக்ர-புக்—உமது தமையன் இருக்கும் பொழுதே அனுபவிக்கிறீர்; ராஜ்யம்—இராஜ்யத்தை; தேஹி—கொடுத்து விடுங்கள்; அக்ரஜாய—உமது தமையனுக்கு; ஆசு—உடனே; புர-ராஷ்ட்ர—உமது வீடு மற்றும் இராஜ்யத்தின்; விவ்ருத்தயே—முன்னேற்றத்திற்கு.

அந்த அரசரால், முக்கியமாக தன் கையால் தொடும் அனைவரையும் புலன்நுகர்வு விஷயத்தில் மகிழ்ச்சியடையச் செய்ய முடிந்தது என்பதால், அவருடைய பெயர் சாந்தனு என்றாயிற்று. ஒருசமயம் அவரது இராஜ்யத்தில் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மழை பெய்யவில்லை. இதனால் அந்த அரசர் கற்றறிந்த பிராமண ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்தார். அவர்களும், “நீங்கள் உங்களுடைய தமையனின் உடைமையை அனுபவிப்பதால், குறையுடையவராக இருக்கிறீர்கள். உமது இராஜ்யமும், வீடும் மேன்மையுற, இந்த இராஜ்யத்தை நீர் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்” என்று கூறினர்.

பதங்கள் 9.22.16 – 9.22.17
ஏவம் உக்தோ த்விஜைர் ஜ்யேஷ்டம் சந்தயாம் ஆஸ ஸோ ‘ப்ரவீத்
தன்-மந்த்ரி-ப்ரஹிதைர் விப்ரைர் வேதாத் விப்ரம்சிதோ கிரா

வேத-வாதாதிவாதான் வை ததா தேவோ வவர்ஷ ஹ
தேவாபிர் யோகம் ஆஸ்தாய கலாப-க்ராமம் ஆஸ்ரித:

ஏவம்—(மேலே குறிப்பிட்டது போல்) இவ்வாறு; உக்த:—அறிவுறுத்தப்பட்டு; த்விஜை:—பிராமணர்களால்; ஜ்யேஷ்டம்—அவரது தமையனான தேவாபியை; சந்தயாம் ஆஸ—இராஜ்யப் பொறுப்பை ஏற்கும்படி வேண்டினார்; ஸ:—அவர் (தேவாபி); அப்ரவீத்—கூறினார்; தத்-மந்த்ரி—சாந்தனுவின் மந்திரியால்; ப்ரஹிதை:—தூண்டப்பட்டு; விப்ரை:—பிராமணர்களால்; வேதாத்—வேத விதிகளிலிருந்து; விப்ரம் சித:—விழுந்தார்; கிரா—அத்தகைய வார்த்தைகளால்; வேத-வாத-அதிவாதான்—வேத விதிகளை நித்தித்த வார்த்தைகளான; வை—நிச்சயமாக; ததா—அந்த நேரத்தில்; தேவ:—இந்தர தேவர்; வவர்ஷ—மழை பொழிந்தார்; ஹ—கடந்த காலத்தில்; தேவாபி:—தேவாபி; யோகம் ஆஸ்தாய—அஷ்டாங்க யோக முறையை ஏற்று; கலாப-க்ராமம்-கலாப—கிராமத்தை; ஆஸ்ரித:—தஞ்சமடைந்தார் (இன்னும் அங்கு வாழ்ந்து வருகிறார்).

பிராமணர்கள் இவ்வாறு கூறியதும், சாந்தனு மகாராஜன் வனம் சென்று தன் தமையனான தேவாபியை இராஜ்யப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். ஏனெனில் பிரஜைகளைப் பராமரிப்பது ஓர் அரசரின் கடமையாகும். ஆனால் முன்பு, சாந்தனுவின் மந்திரியான அஸ்வவாரர், வேத விதிகளை மீறி, தன்னை அரச பதவிக்குத் தகுதியற்றவராகச் செய்து கொள்ளும்படி தேவாபியைத் தூண்டி விடுமாறு சில பிராமணர்களை ஏவினார். அந்த பிராமணர்களும் தேவாபியை வேதக் கொள்கைகளிலிருந்து விலகச் செய்தனர். எனவே சாந்தனுவால் கேட்டுக்கொள்ளப்பட்ட பொழுது அரச பதவியை ஏற்றுக் கொள்ள தேவாபி சம்மதிக்கவில்லை. மாறாக, அவர் வேதக் கொள்கைகளை நிந்தித்ததால் இழிவடைந்தவரானார். இச்சூழ்நிலையின் காரணமாக சாந்தனு மீண்டும் அரசரானார். இதனால் மகிழ்ந்த இந்திரன் மழையைப் பொழிந்தார். தேவாபி பிறகு அஷ்டாங்க-யோக மார்கத்தை ஏற்று தன் மனதையும் புலன்களையும் அடக்குவதற்காக கலாப-கிராமத்திற்குச் சென்றார். அங்கு தான் அவர் இன்னும் வாழ்ந்து வருகிறார்.

பதங்கள் 9.22.18 – 9.22.19
ஸோம-வம்சே கலௌ நஷ்டே க்ருதாதெள ஸ்தாபயிஷ்யதி
பாஹ்லிகாத் ஸோமதத்தோ ‘பூத் பூரிர் பூரிஸ்ரவாஸ் தத:

சலஸ் ச சாந்தனோர் ஆஸீத் கங்காயாம் பீஷ்ம ஆத்மவான்
ஸர்வ-தர்ம-விதாம் ஸ்ரேஷ்டோ மஹா-பாகவத: கவி:

ஸோம-வம்சே—சந்திரவம்சம்; கலௌ—இக்கலியுகத்தில்; நஷ்டே—மறைந்துவிடும்பொழுது; க்ருத-ஆதௌ—அடுத்த சத்தியயுகத்தின் ஆரம்பத்தில்; ஸ்தாபயிஷ்யதி—ஸ்தாபித்தார்; பாஹ்ஸிகாத்—பாலிகரிலிருந்து; ஸோமதத்த:—சோமதத்தர்; அபூத்—உண்டானார்; பூரி:—பூரி; பூரிஸ்ரவா:—பூரிஸ்ரவர்; தத:—அதன் பிறகு; சல ச—சலன் என்ற ஒரு மகன்; சாந்தனோ:—சாந்தனுவிலிருந்து; ஆஸீத்—உண்டானார்; கங்காயாம்—சாந்தனுவின் மனைவியான கங்காவின் கருவில்; பீஷ்ம:—பீஷ்மர் என்ற ஒரு மகன்; ஆத்மவான்—தன்னுணர்வு பெற்ற; ஸர்வ-தர்ம-விதாம்—அனைத்து ஆன்மீகிகளிலும்; ஸ்ரேஷ்ட:—மிகச் சிறந்தவரான; மஹா-பாகவத:—மகா பாகவதரும்; கவி:—மேலும் கற்றறிந்த ஒரு பண்டிதருமான.

இக்கலியுகத்தில் சந்ர-வம்சம் ஒரு முடிவுக்கு வந்ததும், தேவாபி, அடுத்த சத்ய-யுகத்தின் துவக்கத்தில் சந்ர— வம்சத்தை மீண்டும் இவ்வுலகில் ஸ்தாபிப்பார். பாஹ்லீகரிலிருந்து (சாந்தனுவின் சகோதார்) சோமதத்தர் என்ற மகன் வந்தார். அவருக்கு பூரி, பூரிஸ்வரர், சலர் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். சாந்தனுவிலிருந்து அவரது மனைவியான கங்கையின் கர்பத்தின் மூலமாக பீஷ்மர் வந்தார். அவர் மேன்மைக்குரிய, தன்னுணர்வு பெற்ற பக்தரும், கற்றறிந்த பண்டிதருமாவார்.

பதம் 9.22.20
வீர-யூதாக்ரணீர் யேன ராமோ ‘பி யுதி தோஷித:
சாந்தனோர் தாஸ-கன்யாயாம் ஜக்ஞே சித்ராங்கத: ஸுத:

வீர-யூத-அக்ரணி:—வீரர்களில் தலைசிறந்தவரான பீஷ்மதேவர்; யேன—யாரால்; ராம: அபி—பகவானின் அவதாரமான பரசுராமர் கூட; யுதி—ஒரு போரில்; தோஷித:—(பீஷ்மதேவரால் தோற்கடிக்கப்பட்டு) மகிழ்விக்கப்பட்டார்; சாந்தனோ:—சாந்தனுவால்; தாச-கன்யாயாம்—ஒரு சூத்திரரின் மகளென்று அறியப்பட்ட சத்தியவதியின் கர்பத்தில்; ஜக்ஞே—பிறந்தார்; சித்ராங்கத:—சித்ராங்கதர்; ஸுத:—ஒரு மகன்.

பீஷ்மதேவர் வீரர்களுக்கெல்லாம் முதன்மையானவராக விளங்கினார். அவர் பகவான் பரசுராமரைப் போரில் வென்றபோது, பகவான் பரசுராமர் அவரிடம் மிகவும் திருப்தியடைந்தார். சாந்தனுவின் விந்தினால் ஒரு மீனவ புத்திரியான சத்யவதியின் கர்பத்தில் சித்ராங்கதர் பிறந்தார்.

பதங்கள் 9.22.21 – 9.22.24
விசித்ரவீர்யஸ் சாவரஜோ நாம்னா சித்ராங்கதோ ஹத:
யஸ்யாம் பராசராத் ஸாக்ஷாத் அவதீர்ணோ ஹரே: கலா

வேத-குப்தோ முனி: க்ருஷ்ணோ யதோ ‘ஹம் இதம் அத்யகாம்
ஹித்வா ஸ்வ-சிஷ்யான் பைலாதீன் பகவான் பாதராயண:

மஹ்யம் புத்ராய சாந்தாய பரம் குஹ்யம் இதம் ஜகௌ
விசித்ரவீர்யோ ‘தோவாஹ காசீராஜ-ஸுதே பலாத்

ஸ்வயம்வராத் உபானீதே அம்பிகாம்பாலிகே உபே
தயோர் ஆசக்த-ஹ்ருதயோ க்ருஹீதோ யக்ஷ்மணா ம்ருத

விசித்ரவீர்ய:—சாந்தனுவின் மகனான விசித்ரவீரியர்; ச—மேலும்; அவரஜ:—இளைய சகோதரர்; நாம்னா—சித்ராங்கதர் என்ற ஒரு கந்தர்வரால்; சித்ராங்கத:—சித்ராங்கதர்; ஹத:—கொல்லப்பட்டார்; யஸ்யாம்—சத்தியவதி சாந்தனுவை மணக்கும் முன்பாக அவளது கர்பத்தில்; பராசராத்—பராசர முனிவரின் விந்தினால்; ஸாக்ஷாத்—நேரடியாக; அவதீர்ண:—அவதரித்தார்; ஹரே:—பரமபுருஷரின்; கலா—அம்சம்; வேத-குப்த:—வேதங்களைக் காப்பவரான; முனி:—மாமுனிவரான; க்ருஷ்ண:—கிருஷ்ண துவைபாயனர்; யத:—எவரிலிருந்து; அஹம்—நான் (சுகதேவ கோஸ்வாமி); இதம்—இதை (ஸ்ரீமத் பாகவதத்தை); அத்யகாம்—முற்றிலும் கற்றறிந்தேன்; ஹித்வா—விலக்கிவிட்டு; ஸ்வ-சிஷ்யான்—அவரது சீடர்களை; பைல-ஆதீன்—பைலர் முதலான; பகவான்—பகவானின் அவதாரமான; பாதராயண:—வியாசதேவர்; மஹ்யம்—எனக்கு; புத்ராய—ஒரு மகன்; சாந்தாய—புலன் நுகர்விலிருந்து உண்மையாக விலகியிருந்த; பரம்—பரம; குஹ்யம்—இரகசியமான; இதம்—இந்த வேத இலக்கியத்தை (ஸ்ரீமத் பாகவதத்தை); ஜகௌ—உபதேசித்தார்; விசித்ரவீர்ய:—விசித்ரவீரியர்; அத—அதன் பிறகு; உவாஹ—மணந்தார்; காசீராஜ-ஸுதே—காசிராஜனின் இரு புதல்விகளை; பலாத்—பலாத்காரமாக; ஸ்வயம்வராத்—சுயம்வர அரங்கிலிருந்து; உபானீதே—கொண்டுவரப்பட்ட; அம்பிகா-அம்பாலிகே—அம்பிகா மற்றும் அம்பாலிகா; உபே—அவ்விருவரும்; தயோ:—அவர்களிடம்; ஆஸக்த—அளவுக்கதிகமாக பற்றுக் கொண்டதால்; ஹ்ருதய:—அவரது இதயம்; க்ருஹீத:—கெட்டுப்போய்; யக்ஷ்மணா—க்ஷயரோகத்தினால்; ம்ருத:—அவர் மரணமடைந்தார்.

விசித்ரவீரியனின் தமையனான சித்ராங்கதன், சித்ராங்கதன் என்ற அதே பெயருடைய ஒரு கந்தர்வரால் கொல்லப்பட்டார். சத்யவதி சாந்தனுவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக, வேதங்களின் தலைமை அதிகாரியும், பராசர முனிவரின் புதல்வரும், கிருஷ்ண துவைபாயனர் என்று அறியப்படுபவருமான வியாசதேவரைப் பெற்றெடுத்தாள். வியாசதேவரிலிருந்து நான் (சுகதேவ கோஸ்வாமி) பிறந்தேன். அவரிடமிருந்து ஸ்ரீமத் பாகவதம் என்ற இந்த மகா காவியத்தை நான் கற்றறிந்தேன். பரமபுருஷரின் அவதாரமான வேதவியாசர், பைலர் முதலான அவரது சீடர்களை விலக்கிவிட்டு, எல்லா பெளதிக ஆசைகளிலிருந்தும் நான் விடுபட்டிருந்ததால், எனக்கு இந்த ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார். காசிராஜனின் இரு புதல்விகளான அம்பிகாவும், அம்பாலிகாவும் பலவந்தமாக கடத்தப்பட்ட பொழுது, விசித்ரவீரியர் அவர்களை மணந்து கொண்டார். ஆனால் அவ்விரு மனைவிகளிடம் அவர் அளவுக்கதிகமான பற்றுக் கொண்டிருந்ததால், அவருக்கு இதய நோய் ஏற்பட்டு, க்ஷயரோகத்தினால் மரணமடைந்தார்.

பதம் 9.22.25
க்ஷேத்ரே ‘ப்ரஜஸ்ய வை ப்ராதுர் மாத்ரோக்தோ பாதராயண:
த்ருதராஷ்ட்ரம் ச பாண்டும் ச விதுரம் சாபி அஜீஜனத்

க்ஷேத்ரே—மனைவிகளிலும், பணிப்பெண்ணிலும்; அப்ரஜஸ்ய—குழந்தையற்ற விசித்ரவீர்யரின்; வை—உண்மையில்; ப்ராது:—சகோதரனின்; மாத்ரா உக்த:—தாயினால் உத்தரவிடப்பட்டு; பாதராயண:—வியாசதேவர்; த்ருதராஷ்ட்ரம்—திருதராஷ்டிரர் என்ற ஒரு மகன்; ச—மேலும்; பாண்டும்—பாண்டு என்ற ஒரு மகன்; ச—கூட; விதுரம்—விதுரர் என்ற ஒரு மகன்; ச—கூட; அபி—உண்மையில்; அஜீஜனத்—பெற்றார்.

பாதராயனர் என்ற ஸ்ரீல வியாசதேவர், தம் தாயான சத்யவதியின் உத்தரவுப்படி, மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார். தமது சகோதரராகிய விசித்ரவீரியரின் இரு மனைவிகளான அம்பிகா மற்றும் அம்பாலிகாவின் கர்பங்களில் இரு மகன்களையும், விசித்ரவீரியரின் பணிப்பெண்ணின் மூலமாக மூன்றாவது மகனையும் அவர் பெற்றார். இந்த மகன்கள், திருதராஷ்டிரர், பாண்டு, விதுரர் ஆகியோராவர்.

பதம் 9.22.26
காந்தார்யாம் த்ருதராஷ்ட்ரஸ்ய ஜக்ஞே புத்ர-சதம் ந்ருப
தத்ர துர்யோதனோ ஜ்யேஷ்டோ துஹ்சலா சாபி கன்யகா

காந்தார்யாம்—காந்தாரியின் கர்பத்தில்; த்ருதராஷ்ட்ரஸ்ய—திருதராஷ்டிரரின்; ஜக்ஞே—பிறந்தனர்; புத்ர-சதம்—நூறு மகன்கள்; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே; தத்ர—அந்த மகன்களில்; துர்யோதன:—துரியோதனன் என்ற மகன்; ஜ்யேஷ்ட:—மூத்தவனாவான்; துஹ்சலா—துச்சலை; ச அபி—கூட; கன்யகா—ஒரு மகள்.

அரசே, திருதராஷ்டிரரின் மனைவியான காந்தாரி நூறு மகன்களையும், ஒரு மகளையும் பெற்றெடுத்தாள். மூத்த மகன் துரியோதனனாவான். துச்சலை அந்த மகளின் பெயராகும்.

பதங்கள் 9.22.27 – 9.22.28
சாபான் மைதுன-ருத்தஸ்ய பாண்டோ: குந்த்யாம் மஹா-ரதா:
ஜாதா தர்மானிலேந்ரேப்யோ யுதிஷ்டிர-முகாஸ் த்ரய:

நகுல: ஸஹதேவஸ் ச மாத்ருயாம் நாஸத்ய-தஸ்ரயோ:
த்ரௌபத்யாம் பஞ்ச பஞ்சப்ய: புத்ராஸ் தே பிதரோ ‘பவன்

சாபாத்—சபிக்கப்பட்டதால்; மைதுன-ருத்தஸ்ய—உடலுறவு வாழ்விலிருந்து விலகியிருக்க வேண்டியதாயிற்று; பாண்டோ:—பாண்டுவின்; குந்த்யாம்—குந்தியின் கர்பத்தில்; மஹா-ரதா:—சிறந்த வீரர்கள்; ஜாதா:—பிறந்தனர்; தர்ம—தர்மராஜனால்; அனில—வாயுதேவனால்; இந்ரேப்ய:—வருண தேவரான இந்திரனால்; யுதிஷ்டிர:—யுதிஷ்டிரர்; முகா:—முதலான; த்ரய:—மூன்று மகன்கள் (யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன்); நகுல:—நகுலன்; ஸஹதேவ:—சஹதேவர்; ச—கூட; மாத்ருயாம்—மாத்ரியின் கர்பத்தில்; நாஸத்ய-தஸ்ரயோ:—அஸ்வினி குமாரர்களான நாஸத்ரர் மற்றும் தஸ்ரரால்; த்ரௌபத்யாம்—திரௌபதியின் கர்பத்தில்; பஞ்ச—ஐந்து; பஞ்சப்ய:—ஐந்து சகோதரர்களிலிருந்து (யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலர், சஹதேவர்); புத்ரா:—மகன்கள்; தே—அவர்கள்; பிதர:—பெரியப்பன்கள்; அபவன்—ஆயினர்.

பாண்டு, ஒரு முனிவரால் சபிக்கப்பட்ட காரணத்தால் உடலுறவு வாழ்விலிருந்து விலகியிருக்க வேண்டியதாயிற்று. ஆகவே அவரது மூன்று மகன்களான யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் ஆகியோர் அவரது மனைவியான குந்தியின் கர்பத்தின் மூலமாக தர்மராஜனாலும், வாயு தேவனாலும், வருணதேவனாலும் பெற்றெடுக்கப்பட்டனர். பாண்டுவின் இராண்டாவது மனைவியான மாத்ரி இரு அஸ்வின்-குமாரர்களின் மூலமாக நகுலனையும், சஹதேவனையும் பெற்றெடுத்தாள். யுதிஷ்டிரர் முதலான ஐந்து சகோதரர்களும் திரௌபதியின் கர்பத்தின் மூலமாக ஐந்து மகன்களைப் பெற்றனர். இந்த ஐந்து மகன்களும் உமது பெரியப்பன்களாவர்.

பதம் 9.22.29
யுதிஷ்டிராத் ப்ரதிவிந்ய: ஸ்ருதஸேனோ வ்ருகோதராத்
அர்ஜுனாச் ச்ருதகீர்த்திஸ் து சதானீகஸ் து நாகுலி:

யுதிஷ்டிராத்—யுதிஷ்டிரரிலிருந்து; ப்ரதிவிந்ய:—பிரதிவிந்தியர் என்ற ஒரு மகன்; ஸ்ருதஸேன:—சுருதசேனர்; வ்ருகோதராத்—பீமனால் பெற்றெடுக்கப்பட்டார்; அர்ஜுனாத்—அர்ஜூனனிலிருந்து; ஸ்ருதகீர்த்தி:—சுருதகீர்த்தி என்ற ஒரு மகன்; து—உண்மையில்; சதனீக:—சதனீகர் என்ற மகன்; து—உண்மையில்; நாகுலி:—நகுலனின்.

யுதிஷ்டிரரிலிருந்து பிரதிவிந்தியர் என்ற மகன் வந்தார். பீமனிலிருந்து சுருதசேனர் என்ற மகனும், அர்ஜுனனிலிருந்து சுருதகீர்த்தி என்ற மகனும், நகுலனிலிருந்து சதாநீகர் என்ற மகனும் வந்தனர்.

பதங்கள் 9.22.30 – 9.22.31
ஸஹதேவ-ஸுதோ ராஜஞ் ச்ருதகர்மா ததாபரே
யுதிஷ்டிராத் து பெளரவ்யாம் தேவகோ ‘த கடோத்கச:

பீமஸேனாத் ஹிடிம்பாயாம் கால்யாம் ஸர்வகதஸ் தத:
ஸஹதேவாத் ஸுஹோத்ரம் து விஜயாஸூத பார்வதீ

ஸஹதேவ-ஸுத:—சஹதேவரின் மகன்; ராஜன்—அரசே; ஸ்ருதகர்மா—சுருதகர்மா; ததா—அத்துடன்; அபரே—மற்றவர்கள்; யுதிஷ்டிராத்—யுதிஷ்டிரரிலிருந்து; து—உண்மையில்; பெளரவ்யாம்—பெளரவியின் கர்பத்தில்; தேவக:—தேவகன் என்ற ஒரு மகன்; அத—தவிரவும்; கடோத்கச:—கடோத்கஜன்; பீமஸேனாத்—பீமசேனரிலிருந்து; ஹிடிம்பாயாம்—ஹிடிம்பாவின் கர்பத்தில்; கால்யாம்—காளீயின் கர்பத்தில்; ஸர்வகத:—சர்வகதன்; தத:—அதன்பிறகு; ஸஹதேவாத்—சஹதேவரிலிருந்து; ஸுஹோத்ரம்—சுஹோத்ரர்; து—உண்மையில்; விஜயா—விஜயா; அஸூத—பெற்றெடுத்தாள்; பார்வதீ—இமாலய அரசரின் மகள்.

அரசே, சஹதேவரின் மகன் சுருதகர்மா எனப்படுவார். மேலும் யுதிஷ்டிரரும் அவரது சகோதரர்களும் மற்ற மனைவிகளின் மூலமாக மற்ற மகன்களைப் பெற்றார். பீமசேனர் ஹிடிம்பா என்ற அவரது மனைவியின் மூலமாக கடோத்கஜன் என்ற மகனையும், காளீ என்ற அவரது மனைவியின் மூலமாக சர்வகதன் என்ற மகனையும் பெற்றார். அதுபோலவே சஹதேவர் மலை ராஜனின் மகளும், தனது மனைவியுமான விஜயாவின் மூலமாக சுஹோத்ரர் என்ற மகனைப் பெற்றார்.

பதம் 9.22.32
கரேணுமத்யாம் நகுலோ நரமித்ரம் ததார்ஜுன:
இராவந்தம் உலுப்யாம் வை ஸுதாயாம் பப்ருவாஹனம்
மணிபுர-பதே: ஸோ ‘பி தத்-புத்ர: புத்ரிகா-ஸுத:

கரேணுமத்யாம்—கரேணுமதி என்ற மனைவியில்; நகுல:—நகுலன்; நரமித்ரம்—நரமித்ரர் என்ற மகன்; ததா—மேலும்; அர்ஜுன:—அர்ஜுனன்; இராவந்தம்—இராவான்; உலுப்யாம்—உலுபி என்ற நாக கன்னிகையின் கர்பத்தில்; வை—உண்மையில்; ஸுதாயாம்—புதல்வியில்; பப்ருவாஹனம்—பப்ருவாஹனன் என்ற ஒரு மகன்; மணிபுர-பதே:—மணிபுர அரசரின்; ஸ:—அவர்; அபி—என்றபோதிலும்; தத்-புத்ர:—அர்ஜுனரின் மகன்; புத்ரிகா-ஸுத:—அவரது தாய்வழி பாட்டனின் மகன்.

நகுலன் ரேணுமதி என்ற தன் மனைவியின் மூலமாக நரமித்ரன் என்ற மகனைப் பெற்றார். அதுபோலவே அர்ஜுனன் நாகர்களின் மகளும், உலுபி எனப்படுபவளுமான தன் மனைவியின் மூலமாக இராவான் என்ற மகனையும், மணிப்புர இளவரசியின் கர்பத்தின் மூலமாக பப்ருவாஹனன் என்ற மகனையும் பெற்றார். பப்ருவாஹனன் மணிப்புர அரசரின் ஸ்வீகார புத்திரரானார்.

பதம் 9.22.33
தவ தாத: ஸுபத்ராயாம் அபிமன்யுர் அஜாயத
ஸர்வாதிரதஜித் வீர உத்தராயாம் ததோ பவான்

தவ—உமது; தாத:—தந்தை; ஸுபத்ராயாம்—சுபத்திரையின் கர்பத்தில்; அபிமன்யு:—அபிமன்யு; அஜாயத—பிறந்தார்; ஸர்வ-அதிரத-ஜித்—அதிரதர்களையும் வெல்லக்கூடிய சிறந்த வீரரான; வீர:—ஒரு சிறந்த வீரர்; உத்தராயாம்—உத்தரையின் கர்பத்தில்; தத:—அபிமன்யுவிலிருந்து; பவான்—நீர்.

பரீட்சித்து மகாராஜனே, உமது தந்தையான அபிமன்யு, சுபத்திரையின் கர்பத்திலிருந்து அர்ஜுனரின் மகனாகப் பிறந்தார். அவர் எல்லா அதிரதர்களையும் (ஆயிரம் ரத வீரர்களுடன் போரிடக் கூடியவர்கள்) வென்றவராவார். அவரிலிருந்து விராட்ராஜனின் புதல்வியான உத்தரையின் கர்பத்தின் மூலமாக நீர் பிறந்தீர்.

பதம் 9.22.34
பரிக்ஷீணேஷு குருஷு த்ரௌணேர் ப்ரஹ்மாஸ்த்ர-தேஜஸா
த்வம் ச க்ருஷ்ணானுபாவேன ஸஜீவோ மோசிதோ ‘ந்தகாத்

பரிக்ஷீணேஷு—குருட்சேத்திர யுத்தத்தில் அழிக்கப்பட்டதால்; குருஷு—துரியோதனன் போன்ற குரு வம்சத்தவர்கள்; த்ரௌணே:—துரோணாசார்யரின் மகனான அஸ்வத்தாமன்; ப்ரஹ்மாஸ்த்ர- தேஜஸா—பிரம்மாஸ்திரத்தின் வெப்பத்தினால்; த்வம்—நீரும் கூட; க்ருஷ்ண-அனுபாவேன—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையால்; ஸ-ஜுவ:—உமது உயிருடன்; மோசித:—விடுவிக்கப்பட்டீர்; அந்தகாத்—மரணத்திலிருந்து.

குருட்சேத்திரப் போர்க்களத்தில் குரு வம்சம் அழிக்கப்பட்ட பிறகு, துரோணாச்சாரியரின் மகனால் பிரயோகிக்கப்பட்ட பிரம்மாஸ்திரத்தினால் நீரும் கொல்லப்படும் தறுவாயில் இருந்தீர். ஆனால் பரம புருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் கருணைால் மரணத்திலிருந்து நீர் காப்பாற்றப்பட்டீர்.

பதம் 9.22.35
தவேமே தனயாஸ் தாத ஜனமேஜய-பூர்வகா:
ஸ்ருதஸேனோ பீமஸேன உக்ரஸேனஸ் ச வீர்யவான்

தவ—உமது; இமே—இவ்வெல்லா; தனயா:—மகன்கள்; தாத—பரீட்சித்து மகாராஜனே; ஜனமேஜய—ஜனமேஜயன்; பூர்வகா:—முதலான; ஸ்ருதஸேன:—சுருதசேனர்; பீமஸேன:—பீமசேனர்; உக்ரஸேன:—உக்ரசேனர்; ச—கூட; வீர்யவான்—எல்லோரும் மிகவும் சக்திவாய்ந்தவர்கள்.

அரசே, உமது நான்கு மகன்களான ஜனமேஜயன், சுருதசேனர், பீமசேனர், உக்ரசேனர் ஆகியோர் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். இவர்களில் ஜனமேஜயன் மூத்தவராவார்.

பதம் 9.22.36
ஜனமேஜயஸ் த்வாம் விதித்வா தக்ஷகான் நிதனம் கதம்
ஸர்பான் வை ஸர்ப-யாகாக்னௌ ஸ ஹோஷ்யதி ருஷான்வித:

ஜனமேஜய:—மூத்த மகன்; த்வாம்—உம்மைப்பற்றி; விதித்வா—அறிந்து; தக்ஷகாத்—தக்ஷக நாகத்தினால்; நிதனம்—மரணம்; கதம்—அடைந்ததை; ஸர்பான்—பாம்புகளை; வை—உண்மையில்; ஸர்ப-யாக-அக்னௌள—பாம்புகளையெல்லாம் கொன்று விடுவதற்குரிய யாகத்தீயில்; ஸ:—அவர் (ஜனமேஜயன்); ஹோஷ்யதி—ஒரு யாகத்தைச் செய்வார்; ருஷா-அன்வித:—கடுங்கோபமடைந்து.

தக்ஷகன் என்ற பாம்பினால் உமக்கு ஏற்படப் போகும் மரணத்தின் காரணத்தால், உமது மகனான ஜனமேஜயன் கடுங்கோபமடைந்து, உலகிலுள்ள எல்லாப் பாம்புகளையும் கொன்று விடுவதற்குரிய ஒரு யாகத்தைச் செய்வார்.

பதம் 9.22.37
காலஷேயம் புரோதாய துரம் துரக மேதஷாட்
ஸமந்தாத் ப்ருதிவீம் ஸர்வாம் ஜித்வா யக்ஷ்யதி சாத்வரை:

காலஷேயம்—கலஷரின் மகன்; புரோதாய—புரோகிதராக ஏற்று; துரம்—துரரை; துரக-மேதஷாட்—அவர் துரக மேதஷாட் (பல அஸ்வமேத யாகங்களைச் செய்தவர்) என்று அறியப்படுவார்; ஸமந்தாத்—எல்லாப் பகுதிகளும் உட்பட; ப்ருதிவீம்—உலகின்; ஸர்வம்—எல்லா இடங்களையும்; ஜித்வா—வென்று; யக்ஷ்யதி—யாகங்கள் செய்வார்; ச—மேலும்; அத்வரை:—அஸ்வமேத யக்ஞங்கள் செய்வதன் மூலமாக.

ஜனமேஜயன், உலகமுழுவதையும் வென்ற பிறகு, கலஷரின் மகனான துரரைத் தனது புரோகிதராக ஏற்று அஸ்வமேத யக்ஞங்களைச் செய்வார். அதற்காக அவர் துரங்க-மேதஷாட் என்று அறியப்படுவார்.

பதம் 9.22.38
தஸ்ய புத்ர: சதானீகோ யாக்ஞவல்க்யாத் த்ரயீம் படன்
அஸ்த்ர ஞானம் க்ரியா ஞானம் சௌனகாத் பரம் ஏஷ்யதி

தஸ்ய—ஜனமேஜயனின்; புத்ர:—மகன்; சதானீக:—சதானீகர்; யாக்ஞவல்க்யாத்—யாக்ஞவல்க்யர் என்ற மாமுனிவரிடமிருந்து; த்ரயீம்—மூன்று வேதங்களை (ஸாம, யஜுர், ரிக்); படன்—நன்கு கற்று; அஸ்த்ர-ஞானம்—அஸ்திர கலையை; க்ரியா-ஞானம்—சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யும் கலையை; சௌனகாத்—சௌனக ரிஷியிடமிருந்து; பரம்—தெய்வீக அறிவை; ஏஷ்யதி—அடைவார்.

சதாநீகர் என்ற ஜனமேஜயனின் புதல்வர், யாக்ஞவல்க்யரிடமிருந்து வேதங்களையும், கிரியா முறைகளைச் செய்யும் கலையையும் கற்பார். மேலும் அவர் கிருபாசாரியாரிடமிருந்து யுத்த கலையையும், சௌனகரிடமிருந்து தெய்வீக விஞ்ஞானத்தையும் கற்றுக் கொள்வார்.

பதம் 9.22.39
ஸஹஸ்ரானீகஸ் தத்-புத்ரஸ் ததஸ் சைவாஸ்வமேதஜ:
அஸீமக்ருஷ்ணஸ் தஸ்யாபி நேமிசக்ரஸ் து தத்-ஸுத:

ஸஹஸ்ரானீக:—சஹஸ்ரானீகர்; தத்-புத்ர:—சதானீகரின் மகன்; தத:—அவரிலிருந்து (சஹஸ்ரனீகரிலிருந்து); ச—கூட; ஏவ—நிச்சயமாக; அஸ்வமேதஜ:—அஸ்வமேதஜர்; அஸீமக்ருஷ்ண:—அஸீமக்ருஷ்ணர்; தஸ்ய—அவரிலிருந்து (அஸ்வமேதஜரிலிருந்து); அபி—கூட; நேமிசக்ர:—நேமிசக்ரர்; து—உண்மையில்; தத்-ஸுத:—அவரது மகன்.

சஹஸ்ராநீகர் சதாநீகரின் மகனாக இருப்பார். அவரிலிருந்து அஸ்வமேதஜர் என்ற மகன் வருவார். அஸ்வமேதஜரிலிருந்து அசீம கிருஷ்ணர் வருவார். நேமிசக்ரர் அவரது மகனாக இருப்பார்.

பதம் 9.22.40
கஜாஹ்வயே ஹ்ருதே நத்யா கௌசாம்ப்யாம் ஸாது வத்ஸ்யதி
உக்தஸ் ததஸ் சித்ரரதஸ் தஸ்மாச் சுசிரத: ஸுத:

கஜாஹ்வயே—ஹஸ்தினாபுர நகரம் (புதுடில்லி); ஹ்ருதே—மூழ்கடிக்கப்பட்டு; நத்யா—நதியால்; கௌசாம்ப்யாம்—கௌசாம்பி என்ற இடத்தில்; ஸாது—ஏற்றவாறு; வத்ஸ்யதி—அங்கு வாழ்வார்; உக்த:—புகழப்படுவார்; தத:—அதன்பிறகு; சித்ரரத:—சித்ரரதர்; தஸ்மாத்—அவரிலிருந்து; சுசிரத:—சுசிரதன்; ஸுத:—மகனான.

ஹஸ்தினாபுர நகரம் (புதுடில்லி) நதியால் மூழ்கடிக்கப்படும் பொழுது, நேமிசக்ரர் கௌசாம்பி என்ற இடத்தில் வசிப்பார். அவரது மகன் சித்ரரதன் என்று புகழ் பெறுவார். சுசிரதன் சித்ரரதனின் மகனாக இருப்பார்.

பதம் 9.22.41
தஸ்மாச் ச வ்ருஷ்டிமாம்ஸ் தஸ்ய ஸுஷேணோ ‘த மஹீபதி:
ஸுனீதஸ் தஸ்ய பவிதா ந்ருசக்ஷுர் யத் ஸுகீனல:

தஸ்மாத்—அவரிலிருந்து (சுசிரதரிலிருந்து); ச—மேலும்; வ்ருஷ்டி மான்—விருஷ்டிமான் என்ற மகன்; தஸ்ய—அவரது (மகன்); ஸுஷேண:—சுஷேணர்; அத—அதன்பிறகு; மஹீ-பதி:—முழு உலகிற்கும் சக்கரவர்த்தியாவார்; ஸுனீத:—சுனீதர்; தஸ்ய—அவருடைய; பவிதா—இருப்பார்; ந்ருசக்ஷு:—அவரது மகனான நிருசக்ஷு; யத்—அவரிலிருந்து; ஸுகீனல:—சுகீனலன்.

சுசிரதனிலிருந்து விருஷ்டிமான் என்ற மகன் வருவார். அவரது மகனான சுஷேணர் முழு உலகிற்கும் சக்கரவர்த்தியாக இருப்பார். சுனீதர் சுஷேணரின் மகனாக இருப்பார். நிருசக்ஷு சுனீதரின் மகனாக இருப்பார். நிருசக்ஷுவிலிருந்து சுகீநலன் என்ற மகன் வருவார்.

பதம் 9.22.42
பரிப்லவ: ஸுதஸ் தஸ்மான் மேதாவீ ஸுனயாத்மஜ:
ந்ருபஞ்சயஸ் ததோ தூர்வஸ் திமிஸ் தஸ்மாஜ் ஜனிஷ்யதி

பரிப்லவ:—பரிப்பிலவன்; ஸுத:—மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து (பரிப்பவரிலிருந்து); மேதாவீ—மேதாவி; ஸுனய-ஆத்மஜ:—சுனயரின் மகன்; ந்ருபஞ்ஜய:—நிருபஞ்ஜயர்; தத:—அவரிலிருந்து; தூர்வ:—தூர்வர்; திமி:—திமி; தஸ்மாத்—அவரிலிருந்து; ஜனிஷ்யதி—பிறப்பார்.

பரிப்பிலவன் சுகீநலனின் மகனாக இருப்பார். அவரது மகனாக சுனயர் இருப்பார். சுனயரிலிருந்து மேதாவி என்ற மகனும், மேதாவியிலிருந்து நிருபஞ்சயரும், நிருபஞ்சயரிலிருந்து தூர்வரும், தூர்வரிலிருந்து திமியும் வருவார்கள்.

பதம் 9.22.43
திமேர் ப்ருஹத்ரதஸ் தஸ்மாச் சதானீக: ஸுதாஸஜ:
சதானீகாத் துர்தமனஸ் தஸ்யாபத்யம் மஹீனர:

திமே:—திமியின்; ப்ருஹத்ரத:—பிருஹத்ரதர்; தஸ்மாத்—அவரிலிருந்து (பிருஹத்ரதரிலிருந்து); சதானீக:—சதானீகர்; ஸுதாஸ-ஜ:—சுதாஸரின் மகன்; சதானீகாத்—சதானீகரிலிருந்து; துர்தமன:—துர்தமனர் என்ற ஒரு மகன்; தஸ்ய அபத்யம்—அவரது மகன்; மஹீனர:—மஹீனரர்.

திமியிலிருந்து பிருஹத்ரதரும், அவரிலிருந்து சுதாஸரும், சுதாஸரிலிருந்து சதாநீகரும் வருவார்கள். சதாநீகரிலிருந்து துர்தமனர் வருவார். அவரிலிருந்து மஹீனரர் என்ற மகன் வருவார்.

பதங்கள் 9.22.44 – 9.22.45
தண்டபாணிர் நிமிஸ் தஸ்ய க்ஷேமகோ பவிதா யத:
ப்ரஹ்ம-க்ஷத்ரஸ்ய வை யோனிர் வம்சோ தேவர்ஷி-ஸத்க்ருத:

க்ஷேமகம் ப்ராப்ய ராஜானாம் ஸம்ஸ்தாம் ப்ராப்ஸ்யதி வை கலௌ
அத மாகத-ராஜானோ பாவினோ யே வதாமி தே

தண்டபாணி:—தண்டபாணி; நிமி:—நிமி; தஸ்ய—அவரிலிருந்து (மஹீனரரிலிருந்து); க்ஷேமக:—க்ஷேமகர் என்ற மகன்; பவிதா—பிறப்பார்; யத:—யாரிலிருந்து (நிமியிலிருந்து); ப்ரஹ்ம-க்ஷத்ரஸ்ய—பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின்; வை—உண்மையில்; யோனி:—பிறப்பிடம்; வம்ச:—அந்த வம்சம்; தேவ-ரிஷி-ஸத்க்ருத:—மாமுனிவர்களாலும், தேவர்களாலும்; க்ஷேமகம்—மன்னர் க்ஷேமகர்; ப்ராப்ய—இந்த கட்டம் வரை; ராஜானம்—சக்கரவர்த்தி; ஸம்ஸ்தாம்—அவர்களுக்கு ஒரு முடிவு; ப்ராப்ஸ்யதி—ஏற்பட்டுவிடும்; வை—நிச்சயமாக; கலௌ—இந்த கலியுகத்தில்; அத—அதன்பிறகு; மாகத-ராஜான:—மாகத வம்சத்திலுள்ள அரசர்கள்; பாவின:—எதிர்காலத்தை; யே—எல்லோருடைய; வதாமி—நான் விவரிக்கப்போகிறேன்; தே—உமக்கு.

மஹீனரரின் மகனாக தண்டபாணி இருப்பார். நிமி அவரது மகனாக இருப்பார். அவரிலிருந்து க்ஷேமக மகாராஜன் பிறப்பார். நான் இப்பொழுது பிராமணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் பிறப்பிடமானதும், தேவர்களாலும், மாமுனிவர்களாலும் பூஜிக்கப்படுவதுமான சந்ர-வம்சத்தைப் பற்றி உமக்கு விவரித்தேன். இக்கலியுகத்தில் க்ஷேமகர் தான் கடைசி சக்கரவர்த்தியாக இருப்பார். இப்பொழுது நான் மாகத வம்சத்தின் எதிர்காலத்தைப் பற்றி விவரிக்கப்போவதைக் கவனமாகக் கேளும்.

பதங்கள் 9.22.46 – 9.22.48
பவிதா ஸஹதேவஸ்ய மார்ஜாரிர் யச் ச்ருதஸ்ரவா:
ததோ யுதாயுஸ் தஸ்யாபி நிர்மித்ரோ ‘த தத்-ஸுத:

ஸுனக்ஷத்ர: ஸுனக்ஷத்ராத் ப்ருஹத்ஸேனோ ‘த கர்மஜித்
தத: ஸுதஞ்ஜயாத் விப்ர: சுசிஸ் தஸ்ய பவிஷ்யதி

க்ஷேமோ ‘த ஸுவ்ரதஸ் தஸ்மாத் தர்மஸூத்ர: ஸமஸ் தத:
த்யுமத்ஸேனோ ‘த ஸுமதி: ஸுபலோ ஜனிதா தத:

பவிதா—பிறப்பார்; ஸஹதேவஸ்ய—சஹதேவரின் மகன்; மார்ஜாரி:—மார்ஜாரி; யத்—அவரது மகன்; ஸ்ருதஸ்ரவா:—சுருதஸ்ரவர்; தத:—அவரிலிருந்து; யுதாயு:—யுதாயு; தஸ்ய—அவரது மகன்; அபி—மேலும்; நிர்மித்ர:—நிர்மித்ரர்; அத—அதன்பிறகு; தத்-ஸுத:—அவரது மகன்; ஸுனக்ஷத்ர:—சுனக்ஷத்ரர்; சுனக்ஷத்ராத்—சுனக்ஷத்ரரிலிருந்து; ப்ருஹத்ஸேன:—பிருஹத்ஸேனர்; அத—அவரிலிருந்து; கர்மஜித்—கர்மஜித்; தத:—அவரிலிருந்து; ஸுதஞ்ஜயாத்—சுதஞ்ஜயரிலிருந்து; விப்ர:—விப்ரர்; சுசி:—சுசி என்ற மகன்; தஸ்ய—அவரிலிருந்து; பவிஷ்யதி—பிறப்பார்; க்ஷேம:—க்ஷேமர் என்ற மகன்; அத—அதன்பிறகு; ஸுவ்ரத:—சுவ்ரதர் என்ற மகன்; தஸ்மாத்—அவரிலிருந்து; தர்மஸூத்ர:—தர்மசூத்ரர்; ஸம:—சமர்; தத:—அவரிலிருந்து; த்யுமத்ஸேன:—தியுமத்சேனர்; அத—அதன்பிறகு; ஸுமதி:—சுமதி; ஸுபல:—சுபலர்; ஜனிதா—பிறப்பார்; தத:—அதன்பிறகு.

ஜராசந்தனின் மகனான சஹதேவருக்கு மார்ஜாரி என்ற மகன் இருப்பார். மார்ஜாரியிலிருந்து சுருதஸ்ரவரும், அவரிலிருந்து யுதாவும், அவரிலிருந்து நிர்மித்ரரும் வருவார்கள். சுனக்ஷத்ரர் நிர்மித்ரரின் மகனாக இருப்பார். அவரிலிருந்து பிருஹத்சேனரும், பிருஹத்சேனரிலிருந்து கர்மஜித்தும் வருவார்கள். சுதஞ்ஜயர் கர்மஜித்தின் மகனாக இருப்பார். அவரது மகனாக விப்ரரும், விப்ரரின் மகனாக சுசியும் இருப்பார்கள். சுசியின் மகனாக க்ஷேமரும், அவரது மகனாக சுவ்ரதரும், சுவ்ரதரின் மகனாக தர்மசூத்ரரும் இருப்பார்கள். தர்ம சூத்ரரிலிருந்து சமன் வருவார். சமனிலிருந்து தியுமத் சேனரும், அவரிலிருந்து சுமதியும், சுமதியிலிருந்து சுபலரும் வருவார்கள்.

பதம் 9.22.49
ஸுனீத: ஸத்யஜித் அத விஸ்வஜித் யத் ரிபுஞ்ஜய:
பார்ஹத்ரதாஸ் ச பூபாலா பாவ்யா: ஸாஹஸ்ர-வத்ஸரம்

ஸுனீத:—சுபலரிலிருந்து சுனீதர் வருவார்; ஸத்யஜித்—சத்யஜித்; அத—அவரிலிருந்து; விஸ்வஜித்—விஸ்வஜித்திலிருந்து; யத்—எவரிலிருந்து; ரிபுஞ்சய:—ரிபுஞ்சயர்; பார்ஹத்ரதா:—எல்லோரும் பிருஹத்ரதரின் வம்சத்தில் வருவார்கள்; ச—மேலும்; பூபாலா:—அந்த அரசர்களனைவரும்; பாவ்யா:—பிறப்பார்கள்; ஸாஹஸ்ர-வத்ஸரம்—தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு.

சுபலரிலிருந்து சுனீதரும், சுனீதரிலிருந்து சத்யஜித்தும், அவரிலிருந்து விஸ்வஜித்தும், விஸ்வஜித்திலிருந்து ரிபுஞ்சயரும் வருவார்கள். இவர்களனைவரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உலகை ஆளவிருக்கும் பிருஹத்ரதனின் வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.


ஸ்ரீமத் பாகவதம், ஒன்பதாம் காண்டத்தின் “அஜமீடரின் வம்சத்தினர்” எனும் தலைப்பை கொண்ட இருபத்திரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare