அத்தியாயம் – 19
யயாதி மகாராஜன் முக்தியடைதல்
பதம் 9.19.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, யயாதி பெண்களிடம் மிகவும் பற்றுக் கொண்டிருந்தார். ஆனால் காலப் போக்கில் காம சுகத்திலும் அதன் கெட்ட விளைவுகளிலும் வெறுப்புக் கொண்ட அவர், இந்த வாழ்வு முறையைத் துறந்து, பின்வரும் கதையைத் தன் பிரிய மனைவியிடம் விவரித்தார்.

பதம் 9.19.2 : பிரியமுள்ள மனைவியே, சுக்ராசாரியரின் மகளே, இவ்வுலகில் என்னைப் போலவே ஒருவன் இருந்தான். அவனுடைய வாழ்க்கைச் சரித்திரத்தைக் கூறுகிறேன் கேள். இத்தகைய ஒரு குடும்பஸ்தனின் வாழ்வைப் பற்றிக் கேட்பதன் மூலமாக, இல்லற வாழ்விலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எப்பொழுதும் வருத்தப்படுவார்கள்.

பதம் 9.19.3 : தன் புலன்களை திருப்திப்படுவதற்காக ஓர் ஆண் ஆடு சாப்பிட்டுக் கொண்டே, தற்செயலாக ஒரு கிணற்றருகில் சென்றது. கர்ம பலன்களின் ஆதிக்கத்தினால் தூண்டப்பட்ட ஒரு பெண்ணாடு அக்கிணற்றில் விழுந்து நிராதரவாக நின்று கொண்டிருப்பதைக் கண்டது.

பதம் 9.19.4 : அந்த பெண்ணாட்டைக் கிணற்றிலிருந்து வெளியேற்றும் உபாயத்தைத் திட்டமிட்டபின், அது சுலபமாக வெளியேறும் வகையில், காம இச்சை கொண்ட அந்த ஆண் ஆடு தன் கொம்புகளின் முனைகளால் கிணற்றின் விளிம்பில் மண்ணைத் தோண்டியது.

பதங்கள் 9.19.5 – 9.19.6 : அழகிய இடைகளுடைய அந்த பெண்ணாடு கிணற்றிலிருந்து வெளியேறி, மிகவும் அழகான அந்த ஆண் ஆட்டைக் கண்டு, அதையே தன் கணவனாக ஏற்றுக்கொள்ள விரும்பியது. பெண்ணாடு அப்படிச் செய்ததும், ஆண் ஆட்டின் அழகிய தேக அமைப்பையும், அழகிய தாடி மீசைகளையும், விந்து பாய்ச்சும் திறமையையும், உடலுறவு கலையில் உள்ள திறமையையும் கண்டு வேறு பல பெண்ணாடுகளும் அதையே தங்கள் கணவனாக ஏற்க விரும்பின. எனவே, பேய் பிடித்தவன் வெறித்தனத்தைக் காட்டுவது போல், பல பெண்ணாடுகளால் கவரப்பட்ட அச்சிறந்த ஆணாடு, காமக் கேளிக்கைகளில் ஈடுபட்டு, இயல்பாகவே தனது உண்மையான கடமையாகிய தன்னுணர்வை மறந்தது.

பதம் 9.19.7 : கிணற்றில் விழுந்த அந்த பெண்ணாடு, தன் பிரியமுள்ள ஆண் ஆடு மற்றொரு பெண்ணாட்டுடன் உடலுறவு கொள்வதைக் கண்டதும், அந்த ஆட்டின் செயல்களை அதனால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

பதம் 9.19.8 : மற்றொரு பெண் ஆட்டுடனான தன் தலைவனின் நடத்தையைக் கண்டு வருத்தப்பட்ட பெண் ஆடு, உண்மையில் அந்த ஆண் ஆடு தன் நண்பனல்ல என்றும், கடினமான இதயமுள்ளது என்றும், தற்காலிகமாக மட்டுமே தன் நண்பனாக இருந்தது என்றும் எண்ணியது. எனவே, அதன் கணவன் காம இச்சை கொண்டிருந்த காரணத்தால், அது அந்த ஆண் ஆட்டை விட்டுவிட்டு தன்னுடைய முந்திய காவலரிடம் சென்றது.

பதம் 9.19.9 : மனைவிக்கு அடங்கிய அந்த ஆண் ஆடு, மிகவும் வருத்தத்துடன் சாலையில் அந்த பெண் ஆட்டைப் பின்தொடர்ந்து சென்று அதை முகத்துதி செய்ய முயன்றது. ஆனால் ஆண் ஆட்டினால் அதை திருப்திப்படுத்த இயலவில்லை.

பதம் 9.19.10 : அந்த பெண் ஆடு, மற்றொரு பெண் ஆட்டைப் பராமரித்து வந்த ஒரு பிராமணரின் வசிப்பிடத்திற்குச் சென்றது. அந்த பிராமணரும் கோபங்கொண்டு அந்த ஆண் ஆட்டின் தொங்கும் பீஜங்களைத் துண்டித்து விட்டார். ஆனால் அந்த ஆண் ஆடு வேண்டிக் கொண்டதால், அந்த பிராமணர் பிறகு தனது யோக சக்தியினால் அவற்றை மறுபடியும் இணைத்தார்.

பதம் 9.19.11 : அருமை மனைவியே, தன் பீஜங்களை திரும்பப்பெற்ற அந்த ஆண் ஆடு, கிணற்றிலிருந்து தான் பெற்ற பெண் ஆட்டுடன் சுகம் அனுபவித்தது. அது பற்பல ஆண்டுகள் இவ்வாறு சுகம் அனுபவித்த போதிலும், இன்றுவரை அது முழுமையாக திருப்தியடையவில்லை.

பதம் 9.19.12 : அழகிய புருவமுடைய பிரிய மனைவியே, நான் அந்த ஆண் ஆட்டைப் போன்றவன். ஏனெனில் சிறுமதி படைத்த நான் உன்னுடைய அழகினால் கவரப்பட்டு, தன்னுணர்வெனும் உண்மையான கடமையை மறந்துவிட்டேன்.

பதம் 9.19.13 : ஒருவனுக்கு அரிசி, பார்லி, மற்ற உணவுத் தானியங்கள், தங்கம், மிருகங்கள் மற்றும் பெண்கள் உட்பட, இவ்வுகிலுள்ள அனைத்தும் வேண்டிய அளவுக்கு இருந்தாலும், காம இச்சையுள்ளவனுக்கு மனத்திருப்தி இருக்காது. எதுவுமே அவனை திருப்திப்படுத்தாது.

பதம் 9.19.14 : நெருப்பில் நெய்யை ஊற்றுவதானது நெருப்பைக் குறைக்காது, மாறாக அதை அதிகப்படுத்தும். காம இச்சைகளைத் தொடர்ந்து அனுபவிப்பதன் மூலம் அதை நிறுத்தும் முறை ஒருபோதும் வெற்றியடையாது. (உண்மையில், ஒருவன் தானாக முன்வந்து பெளதிக ஆசைகளை நிறுத்த வேண்டும்.)

பதம் 9.19.15 : ஒரு மனிதன் பொறாமை கொள்ளாதவனாகவும், யாருக்கும் துரதிர்ஷ்டத்தை விரும்பாதவனாகவும் இருந்தால், அவன் சமநிலையுடையவனாக இருக்கிறான். அத்தகைய ஒருவருக்கு, எல்லா திசைகளும் மகிழ்ச்சியாகத் தோன்றும்.

பதம் 9.19.16 : பெளதிக சுகத்தில் அளவுக்கதிகமாக பற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு, புலன்நுகர்வைக் கைவிடுவது மிகக் கடினம். முதுமையினால் பலமிழந்த நிலையில் இருக்கும் பொழுது கூட ஒருவனால் இத்தகைய புலன்நுகர்வு ஆசைகளைக் கைவிட முடியாது. எனவே, உண்மையில் மகிழ்ச்சியை விரும்பும் ஒருவன், எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணமான இத்தகைய திருப்தியடையாத ஆசைகளைக் கைவிட வேண்டும்.

பதம் 9.19.17 : புலன்கள் மிகவும் வலிமையுள்ளவை என்பதால், முதிர்ந்த அறிவுள்ளவன் கூட உடலுறவினால் கவரப்படக்கூடும். எனவே ஒருவன் தன் சொந்த தாயுடனோ, சகோதரியுடனோ அல்லது மகளுடனோகூட ஒரே ஆசனத்தில் அமர தன்னை அனுமதிக்கக் கூடாது.

பதம் 9.19.18 : முழுமையாக ஆயிரம் ஆண்டுகளை நான் விஷய சுகத்தை அனுபவிப்பதில் கழித்துள்ளேன். எனினும், இத்தகைய சுகத்தை அனுபவிப்பதிலுள்ள என் ஆசை தினமும் பெருகிக் கொண்டே போகிறது.

பதம் 9.19.19 : எனவே, இப்பொழுது நான் இந்த ஆசைகளையெல்லாம் கைவிட்டு, பரமபுருஷரை தியானிப்பேனாக. மனதால் இட்டுக்கட்டப்படும் இருமைகளிலிருந்தும், பொய் அகங்காரத்திலிருந்தும் விடுபட்டு, நான் வன விலங்குகளுடன் வனத்தில் சஞ்சரிப்பேனாக.

பதம் 9.19.20 : பெளதிக சுகமானது, நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ, இப்பிறவியிலோ அல்லது அடுத்ததிலோ, இவ்வுலகிலோ அல்லது சுவர்க்க லோகங்களிலோ இருப்பதானாலும், அது நிலையற்றதும், பயனற்றதுமாகும் என்பதையும், அறிவுள்ளவன் அதை அனுபவிக்க முயலவோ அல்லது அதைப்பற்றி நினைக்கவோ கூடாது என்பதையும் அறிந்திருப்பவன் ஆத்மாவை அறிந்தவனாவான். தொடர்ந்து பௌதிக இருப்பிற்கும், தனது உண்மை சொரூபத்தை மறந்திருப்பதற்கும் பெளதிக சுகம் தான் காரணம் என்பதை, தன்னுணர்வு பெற்ற இத்தகைய ஒருவர் நன்கு அறிவார்.

பதம் 9.19.21 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இப்பொழுது எல்லா பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்ட யயாதி மகாராஜன், தன் மனைவியான தேவயானியிடம் இவ்வாறு பேசியபின், தன் இளைய மகனான பூருவை அழைத்து அவனிடம் இளமையை திருப்பிக் கொடுத்துத், தன் முதுமையை அவனிடமிருந்து திரும்ப வாங்கிக் கொண்டார்.

பதம் 9.19.22 : யயாதி மகாராஜன் தனது இராஜ்யத்தின் தென்கிழக்குப் பகுதியைத் துருஹ்யு என்ற தன் மகனுக்கும், தென்பகுதியை யது என்ற மகனுக்கும், மேற்குப் பகுதியை துர்வஸு என்ற மகனுக்கும், மற்றும் வடபகுதியை அனு என்ற மகனுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

பதம் 9.19.23 : யயாதி தன் இளைய மகனான பூருவை மண்ணுலகம் முழுவதற்கும் சக்கரவர்த்தியாகவும், அதன் செல்வங்களுக்கு அதிபதியாகவும் ஆக்கி, பூருவின் தமையன்களை அவனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துவிட்டு, வனம் சென்றார்.

பதம் 9.19.24 : பரீட்சித்து மகாராஜனே, ஆறுவகை விஷய சுகங்களைப் பல ஆண்டுகள் அனுபவித்துப் பழக்கப்பட்டிருந்த யயாதி, சிறகு முளைத்ததும் பறவை கூட்டை விட்டுப் பறந்து செல்வது போல், ஒரு நொடியில் அதை விட்டுச் சென்றார்.

பதம் 9.19.25 : யயாதி மகாராஜன் பரமபுருஷரான வாசுதேவரிடம் முழுமையாக சரணடைந்ததால், அவர் ஜட இயற்கைக் குணங்களின் களங்கத்திலிருந்து விடுபட்டார். அவர் பெற்ற தன்னுணர்வின் காரணத்தால், அவரால் உன்னதத்தின் (பரப்பிரம்மன், வாசுதேவர்) மீது தன் மனதைப் பதிக்க முடிந்தது. இவ்வாறாக இறுதியில் அவர் பகவானுடைய ஒரு சகாவின் நிலையை அடைந்தார்.

பதம் 9.19.26 : ஆண், பெண் ஆடுகளைப் பற்றிய யயாதி மகாராஜனின் கதையைக் கேட்ட தேவயானி, கணவன் மனைவிக்கிடையிலான சந்தோஷத்திற்காக ஒரு வேடிக்கையான தமாஷ் போல் கூறப்பட்ட இக்கதை, உண்மையில், தனது உண்மையான ஆதார நிலைக்குத் தன்னை விழிப்புறச் செய்துகொள்வதற்காகக் கூறப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டாள்.

பதங்கள் 9.19.27 – 9.19.28 : அதன்பிறகு, சுக்ராசாரியின் மகளான தேவயானி, கணவன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனான தனது பெளதிக சகவாசம், ஒரு விடுதி நிறையவுள்ள சுற்றுப்பயணிகளுடனான சகவாசத்தைப் போன்றது என்பதைப் புரிந்து கொண்டாள். ஒரு கனவில் நிகழ்வது போலவே, சமூகம், நட்பு மற்றும் அன்பு ஆகியவை தொடர்பான உறவு முறைகள் பரமபுருஷரின் மாயையால் உண்டாக்கப்படுகின்றன. கிருஷ்ணரின் கருணையால், தேவயானி ஜட உலகிலுள்ள தனது கற்பனையான நிலையைக் கைவிட்டாள். கிருஷ்ணரிடம் தன் மனதை முழுமையாகப் பதித்து, ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களிலிருந்து அவள் விடுபட்டாள்.

பதம் 9.19.29 : பரமபுருஷராகிய பகவான் வாசுதேவரே! முழு பிரபஞ்ச தோற்றத்தையும் படைத்தவர் தாங்களேயாவீர். தாங்கள் எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக வாழ்கிறீர்கள். தாங்கள் சிறியதிலும் சிறிதாக இருப்பினும், பெரிதிலும் பெரிதாகவும், சர்வ வியாபகமுடையவராகவும் இருக்கிறீர்கள். தங்களால் செய்யப்பட வேண்டியது எதுவுமில்லை என்பதால் தாங்கள் முற்றிலும் மௌனமாகக் காணப்படுகிறீர்கள். ஆனால் இதற்குத் தங்களுடைய சர்வ வியாபகமுடைய தன்மையும், சகல ஐசுவரிய முழுமையுமே காரணம். எனவே தங்களுக்கு தனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare