அத்தியாயம் – 18
மன்னர் யயாதி தன் இளமையை
திரும்பப் பெறுதல்
பதம் 9.18.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: உடல்பெற்ற ஆத்மாவிற்கு ஆறு புலன்கள் இருப்பது போல், நகுஷ மன்னருக்கு யதி, யயாதி, சம்யாதி, ஆயதி, வியதி மற்றும் கிருதி என்ற ஆறு மகன்கள் இருந்தனர்.

பதம் 9.18.2 : அரச பதவியில் அல்லது தலைமை அரசாங்கப் பதவியில் புகுந்தவனால் தன்னுணர்வின் பொருளை அறிய முடியாது. இதையறிந்த நகுஷரின் மூத்த மகனான யதி, தன் தந்தையால் அளிக்கப்பட்ட இராஜ்யத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

பதம் 9.18.3 : யயாதியின் தந்தையான நகுஷர் இந்திரனின் மனைவி சசியைத் தொந்தரவு செய்த காரணத்தால், சசி அகஸ்தியரிடமும், மற்ற பிராமணர்களிடமும் புகார் செய்தாள். இப்புனித பிராமணர்களும் நகுஷரை, சுவர்க்க லோகங்களிலிருந்து விழுந்து, ஒரு மலைப்பாம்பின் நிலைக்கு இழிவடையும்படி சபித்தனர். இதன் விளைவாக யயாதி அரசரானார்.

பதம் 9.18.4 : யயாதி மகாராஜனுக்கு நான்கு தம்பிகள் இருந்தனர். இந்நால்வரும் நான்கு திசைகளை ஆள அவர் அனுமதித்தார். யயாதி, சுக்ராசார்யரின் மகள் தேவயானியையும், விருஷபர்வாவின் மகள் சர்மிஷ்டையையும் மணந்து கொண்டு உலகை ஆண்டுவந்தார்.

பதம் 9.18.5 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: சுக்ராசாரியர் மிகவும் சக்திவாய்ந்த ஒரு பிராமணர். யயாதி மகாராஜனோ ஒரு க்ஷத்திரியர். எனவே க்ஷத்திரிய குலத்திற்கும், பிராமண குலத்திற்கும் இடையிலான இந்த பிரதிலோம விவாகம் எப்படி ஏற்பட்டது என்பதை அறிய நான் ஆவலாக உள்ளேன்.

பதங்கள் 9.18.6 – 9.18.7 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஒருநாள், விருஷபர்வாவின் மகளும், இயற்கையாகவே கோபமான சுபாவம் உள்ளவளும், ஆனால் கபடமற்றவளுமான சர்மிஷ்டை, சுக்ராசாரியரின் மகளான தேவயானியுடனும், ஆயிரக்கணக்கான தோழிகளுடனும் அரண்மனைத் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தாள். அத்தோட்டம் தாமரைகளாலும், பூமரங்களாலும் மற்றும் பழ மரங்களாலும் அடர்ந்திருந்தது. மேலும் இனிமையாகப் பாடும் பறவைகளும், வண்டுகளும் அங்கு வசித்து வந்தன.

பதம் 9.18.8 : தாமரைக் கண்களையுடைய அந்த இளம் பெண்கள் ஒரு குளத்தருகில் வந்ததும் அதில் குளித்து மகிழ விரும்பினார்கள். இவ்வாறாக தங்கள் ஆடைகளைக் கரையில் வைத்துவிட்டுச் சென்ற அவர்கள், ஒருவர் மேலொருவர் நீரை வாரி இறைத்துக் கொண்டு விளையாடத் துவங்கினர்.

பதம் 9.18.9 : நீரில் விளையாடிக் கொண்டிருந்த அம்மங்கைகள் திடீரென்று சிவபெருமான் மனைவி பார்வதியுடன் தன் எருதின்மேல் அமர்ந்தபடி கடந்து செல்வதைக் கண்டனர். நிர்வாணமாக இருந்ததால் வெட்கத்திற்குள்ளான அப்பெண்கள் விரைவாக நீரிலிருந்து வெளியேறி, தங்களுடைய ஆடைகளால் தங்களை மூடிக்கொண்டனர்.

பதம் 9.18.10 : சர்மிஷ்டை அறியாமல், தேவயானியின் உடையைத் தன்னுடையது என்றெண்ணி அணிந்து கொண்டாள். இதனால் கோபமடைந்த தேவயானி பின்வருமாறு கூறினாள்.

பதம் 9.18.11 : ஐயோ! பணிப்பெண்ணான இந்த சர்மிஷ்டையின் செயலைப் பாருங்கள். வேள்வியில் உபயோகிப்பதற்கென உள்ள நெய்யைப் பறித்துச் செல்லும் ஒரு நாயைப் போல், எந்த மரியாதையையும் பொருட்படுத்தாமல், என்னுடைய ஆடையை இவள் அணிந்து கொண்டாள்.

பதங்கள் 9.18.12 – 9.18.14 : நாங்கள், பரமபுருஷரின் முகமாக ஏற்றுக் கொள்ளப்படும் தகுதி பெற்ற பிராமணர்களுக்கு இடையில் உள்ளவர்களாவோம். பிராமணர்கள் தங்கள் தவத்தினால் முழு பிரபஞ்சத்தையும் படைத்துள்ளனர். அவர்கள் பரமபுருஷரை எப்பொழுதும் தங்கள் இதயத்தின் ஆழத்தில் வைத்துள்ளனர். அவர்கள் நல்லதிர்ஷ்டத்திற்கான வழியை, வேதப் பண்பாடு எனும் வழியைக் கற்பித்துள்ளனர். இவ்வுலகில் வழிபடத்தக்கவர்களாக இருப்பவர்கள் அவர்கள் மட்டுமே என்பதால், அவர்கள் லோக பாவகர்களான தேவர்களாலும், பரமாத்மாவும், தூய்மைப்படுத்துபவரும், லக்ஷ்மிதேவியின் கணவருமான பரம புருஷராலும் கூட துதிக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றனர். மேலும் நாங்கள் பிருகு வம்சத்தில் வந்திருப்பதால், இன்னும் அதிக மரியாதைக்கு உரியவர்களாவோம். அப்படியிருந்தும், அசுர குலத்தைச் சேர்ந்த இவளது தந்தை எங்களுடைய சீடர் என்ற போதிலும், வேத அறிவுக்குப் பொறுப்பேற்கும் ஒரு சூத்திரனைப் போல், இவள் என் உடையை உடுத்திக் கொண்டாள்.

பதம் 9.18.15 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இப்படி கடுமையான வார்த்தைகளால் திட்டப்பட்ட சர்மிஷ்டை கடுங்கோபமடைந்தாள். அவள் பாம்பு போல் பெருமூச்சு விட்டபடி உதட்டைத் தன் பற்களால் கடித்துக்கொண்டு, சுக்ராசாரியரின் மகளிடம் பின்வருமாறு பேசலானாள்.

பதம் 9.18.16 : பிச்சைக்காரி, நீ உன் நிலையை அறியாததால் அதிகமாகப் பிதற்றுகிறாய். நீங்கள் எல்லோரும் எங்கள் வீட்டில் காக்கைகள் போல் வாழ்க்கைத் தேவைகளுக்காக காத்திருக்கவில்லையா?

பதம் 9.18.17 : குரு புத்திரியான தேவயானியை இத்தகைய இரக்கமற்ற வார்த்தைகளால் சர்மிஷ்டை அவமதித்து, கோபத்தால் அவளுடைய ஆடைகளைப் பறித்துக் கொண்டு அவளைக் கிணற்றில் தள்ளினாள்.

பதம் 9.18.18 : தேவயானியைக் கிணற்றில் தள்ளியபின் சர்மிஷ்டை தன் வீடு திரும்பினாள். இதற்கிடையில், வேட்டையாடுவதில் ஈடுபட்டிருந்த மன்னர் யயாதி, நீர் பருக கிணற்றுக்குச் சென்று தற்செயலாக அந்த தேவயானியைக் கண்டார்.

பதம் 9.18.19 : தேவயானி கிணற்றில் நிர்வாணமாக இருப்பதைக் கண்ட மன்னர் யயாதி, உடனே தன் மேலாடையை அவளுக்குக் கொடுத்தார். அவளிடம் மிகவும் அன்பு கொண்ட அவர் தன் கையால் அவளது கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார்.

பதங்கள் 9.18.20 – 9.18.21 : தேவயானி அன்பும் பாசமும் நிறைந்த சொற்களால் மன்னர் யயாதியிடம் பின்வருமாறு கூறினாள்: சிறந்த வீரரே, அரசே, பகைவர்களின் நகரங்களை வெல்பவரே, என் கரம் பற்றியதால் என்னை உங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டீர்கள். மற்றொருவன் என்னைக் கைப்பிடிக்க வேண்டாம். ஏனெனில், கணவன் மனைவி என்ற நம்முடைய இந்த சம்பந்தம் இறையருளால் கூட்டிவைக்கப்பட்டதாகும், எந்தவொரு மனிதனாலும் அல்ல.

பதம் 9.18.22 : கிணற்றில் விழுந்ததால் உம்மை நான் சந்தித்தேன். உண்மையில், இது தெய்வத்தின் ஏற்பாடாகும். கற்றறிந்த பண்டிதரான பிருஹஸ்பதியின் மகனான கசனை நான் சபித்தபின், நான் ஒரு பிராமணரைக் கணவராக அடையமாட்டேன் என்று அவனும் என்னைச் சபித்தான். எனவே பெருந்தோள் படைத்தவரே, நான் ஒரு பிராமணருக்கு மனைவியாவது சாத்தியமில்லை.


பதம் 9.18.23 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இத்தகைய ஒரு திருமணம் சாஸ்திரங்களுக்கு ஏற்புடையதல்ல என்பதால் மன்னர் யயாதி அதை விரும்பவில்லை. ஆயினும், அது விதியின் ஏற்பாடு என்பதாலும், தேவயானியின் அழகால் கவரப்பட்டதாலும், அவளது வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டார்.

பதம் 9.18.24 : அதன்பிறகு, கற்றறிந்த அந்த அரசர் தன் அரண்மனைக்குத் திரும்பியதும், அழுது கொண்டே தன் வீடு திரும்பிய தேவயானி, சர்மிஷ்டையின் காரணத்தால் நிகழ்ந்தவற்றையெல்லாம் தன் தந்தையான சுக்ராசாரியரிடம் கூறினாள். அவள் கிணற்றில் தள்ளப்பட்டு அரசரால் காப்பாற்றப்பட்டதைக் கூறினாள்.

பதம் 9.18.25 : நிகழ்ந்ததை தேவயானியிடமிருந்து கேட்ட சுக்ராசாரியரின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. அவர் புரோகிதத் தொழிலை வெறுத்து, உஞ்ச-வருத்தியை (வயலில் தானியங்களைச் சேகரிப்பதை) துதித்துக் கொண்டு, தன் மகளுடன் வீட்டை விட்டுச் சென்றார்.

பதம் 9.18.26 : மன்னர் விருஷபர்வர், சுக்ராசாரியர் தன்னைத் தண்டிக்கவோ அல்லது சபிக்கவோதான் வந்து கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார். இதனால், அவர் தன் வீட்டிற்கு வருமுன்பாக, விருஷபர்வர்
வெளியில் சென்று, வழியில் தன் குருவின் பாதங்களில் விழுந்து அவரை திருப்திப்படுத்தி, அவரது கடுங்கோபத்தைத் தடுத்தார்.

பதம் 9.18.27 : சுக்ராசாரியர் சில நொடிகள் கோபங்கொண்டார் என்றாலும், விருஷபர்வரால் திருப்திப்படுத்தப்பட்டு அவரிடம் பின்வருமாறு கூறினார். அரசே, இவ்வுலகில் என் மகளான இவளை என்னால் கைவிடவோ, அலட்சியப்படுத்தவோ முடியாது. எனவே தயவு செய்து இந்த தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றுவீராக.

பதம் 9.18.28 : சுக்ராசாரியரின் வார்த்தைகளைக் கேட்ட விருஷபர்வர் தேவயானியின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டு அவளது வார்த்தைக்களுக்காகக் காத்திருந்தார். தேவயானியும் பிறகு பின்வருமாறு தன் விருப்பத்தைக் கூறினாள்: “என் தந்தையின் உத்தரவுப்படி எப்பொழுது நான் விவாகம் செய்து கொள்கிறனோ, அப்பொழுது இந்த சர்மிஷ்டை அவளது தோழிகளுடன் என் பணிப்பெண்ணாக என்னுடன் வரவேண்டும்”.

பதம் 9.18.29 : சுக்ராசாரியரின் அதிருப்தி ஆபத்தைக் கொண்டுவரும் என்பதை அறிந்த விருஷபர்வர், அவரது திருப்தி பௌதிக இலாபத்தைக் கொண்டுவரும் என்பதையும் சரியாக எண்ணிப்பார்த்தார். எனவே அவர் சுக்ராசாரியரின் உத்தரவை நிறைவேற்றி, ஓரடிமைபோல் அவருக்குச் சேவை செய்தார். அவர் தன் மகள் சர்மிஷ்டையை தேவயானியிடம் கொடுத்தார். அவளும், ஆயிரக்கணக்கான மற்ற பெண்களுடன் ஓர் அடிமைபோல் தேவயானிக்குப் பணிவிடை செய்தாள்.

பதம் 9.18.30 : சுக்ராசாரியர் தேவயானியை யயாதிக்குத் திருமணம் செய்து வைத்து, சர்மிஷ்டையை அவளுடன் அனுப்பினார். ஆனால் அவர், “அரசே, இப்பெண் சர்மிஷ்டையை உம்முடன் உமது படுக்கையில் படுக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது” என்று அரசரை எச்சரித்தார்.

பதம் 9.18.31 : பரீட்சித்து மகாராஜனே, தேவயானி ஒரு நல்ல மகனுடன் இருப்பதைக் கண்ட சர்மிஷ்டை, ஒரு சமயம் கருத்தரிக்க ஏற்ற சமயத்தில் மன்னர் யயாதியை அணுகினாள். தனிமையான ஓரிடத்தில், தன் தோழி தேவயானியின் கணவரான அந்த அரசரிடம், தனக்கும் ஒரு மகனைக் கொடுக்கும்படி வேண்டினாள்.

பதம் 9.18.32 : அரசகுமரியான சர்மிஷ்டை தனக்கு ஒரு மகன் வேண்டுமென்று மன்னர் யயாதியை வேண்டியதால், சமயக் கொள்கைகளை நன்கு அறிந்திருந்த அவர் அவளது விருப்பத்தை நிறைவேற்றச் சம்மதித்தார். அவர் சுக்ராசாரியரின் எச்சரிக்கையை எண்ணிப் பார்த்தார். எனினும், இச்சேர்க்கை பரமனின் விருப்பம் என்றெண்ணி சர்மிஷ்ட்டையுடன் உடலுறவு கொண்டார்.

பதம் 9.18.33 : யது, துர்வசு என்ற புத்திரர்களை தேவயானி பெற்றாள். விருஷபர்வரின் மகளான சர்மிஷ்டை துருஹ்யன், அனு, பூரு என்பவர்களைப் பெற்றாள்.

பதம் 9.18.34 : சர்மிஷ்டையிடம் தோன்றிய கரு தன் கணவருடையது என்பதையறிந்த கர்வமுள்ள தேவயானி கோபத்தினால் ஆவேசமடைந்து, தன் தந்தையின் வீடு சென்றாள்.

பதம் 9.18.35 : அதிக காம இச்சையுள்ள யயாதி மகாராஜன் தன் மனைவியைப் பின்தொடர்ந்து சென்று, இனிய வார்த்தைகளைப் பேசியும், அவளது பாதங்களைப் பிடித்துவிட்டும் அவளை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் எந்த வழியினாலும் அவளை அவரால் சமாதானப்படுத்த முடியவில்லை.

பதம் 9.18.36 : கடுங்கோபங் கொண்ட சுக்ராசாரியர் அரசரை நோக்கி, “பொய்யனான மூடனே, பெண்களிடம் மயங்கியவனே! நீ பெரும் தவறிழைத்தாய். எனவே அழகைக் கெடுக்கும் மூப்பு உன்னிடம் புகுந்து கொள்ளட்டும்” என்று சபித்தார்.

பதம் 9.18.37 : மன்னர் யயாதி கூறினார், “வழிபாட்டுக்குரிய கற்றறிந்த பிராமணரே, உமது மகளிடம் நான் கொண்ட காம இச்சைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. “அதற்கு சுக்ராசாரியர் பதிலளித்தார், “தன் இளமையை உமக்களிக்கச் சம்மதிக்கும் ஒருவனுடன் உமது முதுமையை நீர் மாற்றிக் கொள்ளலாம்.”

பதம் 9.18.38 : சுக்ராசாரியரிடமிருந்து இவ்வரத்தைப் பெற்ற யயாதி, தன் மூத்த மகனிடம், “என் பிரிய மகனே யது, என் மூப்பை நீ ஏற்றுக்கொண்டு, உனது இளமையை எனக்குக் கொடுப்பாயா?” என்று வேண்டினார்.

பதம் 9.18.39 : பிரிய மகனே, என் சிற்றின்ப இச்சைகளில் நான் இன்னும் திருப்தியடையவில்லை. என்னிடம் உனக்கு அன்பு இருக்குமானால், உன் தாய்வழி பாட்டனாரால் கொடுக்கப்பட்ட மூப்பை நீ ஏற்றுக் கொண்டு, உன் இளமையை எனக்குக் கொடுத்தால் இன்னும் சில ஆண்டுகள் நாள் வாழ்வை அனுபவிப்பேன்.

பதம் 9.18.40 : யது பதிலளித்தார்: தந்தையே, நீங்களும் முன்பு வாலிபராக இருந்தவர் தான். இப்பொழுது நீங்கள் முதுமையை அடைந்துவிட்டீர்கள் ஆனால் உங்களுடைய முதுமையை நான் ஏற்க மாட்டேன். ஏனெனில், பெளதிக சுகத்தை அனுபவித்தாலொழிய ஒருவனால் துறவு வாழ்வை ஏற்க முடியாது.

பதம் 9.18.41 : பரீட்சித்து மகாராஜனே, யயாதி அவ்வாறே தன் மகன்களான துர்வசு, துருஹ்யு, அனு ஆகியோரிடம் அவர்களுடைய இளமைக்குப் பதிலாக தன் முதுமையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். ஆனால் அவர்கள் தர்மத்தை அறியாதவர்கள் என்பதால், நிலையற்ற இளமையை நிலையானது என்றெண்ணி தங்கள் தந்தையின் உத்தரவை ஏற்க மறுத்து விட்டனர்.

பதம் 9.18.42 : மன்னர் யயாதி பிறகு, இம்மூன்று சகோதர்களுக்கும் இளையவனும், ஆனால் அதிக தகுதியுடையவனுமான பூருவிடம், “பிரிய மகனே, உன் தமையன்களைப் போல், நீ உத்தரவை மீறுபவனாக இருக்காதே, ஏனெனில் அது உன் கடமையல்ல.” என்று வேண்டிக் கொண்டார்.

பதம் 9.18.43 : பூரு பதிலளித்தான்: மனிதரில் சிறந்தவரே, இவ்வுலகில் யார்தான் தன் தந்தையிடம் பட்ட கடனை அடைக்க இயலும்? தன் தந்தையின் கருணையால் ஒருவன் மனித ரூபத்தைப் பெறுகிறான். அந்த மனித ரூபத்தைக் கொண்டு, ஒருவனால் பரமபுருஷரின் ஒரு சகாவாக ஆகமுடியும்.

பதம் 9.18.44 : தந்தையின் எண்ணத்தை அறிந்து அதற்கேற்ப செயற்படுபவன் உத்தமன். தந்தையின் உத்தரவைக் கேட்டு செயற்படுபவன் மத்தியமன். தந்தையின் உத்தரவைக் கேட்டு சிரத்தையின்றி செயற்படுபவன் அதமன். ஆனால் தந்தையின் உத்தரவை நிறைவேற்ற மறுப்பவன் தந்தையின் மலத்துக்கொப்பானவன்.

பதம் 9.18.45 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக, பரீட்சித்து மகாராஜனே, பூரு என்ற மகன், தன் தந்தையான யயாதியின் முதுமையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். யயாதியும் தன் மகனின் இளமையைப் பெற்றுக்கொண்டு, தேவைக்கேற்ப இந்த ஜட உலகை அனுபவித்தார்.

பதம் 9.18.46 : அதன்பிறகு, ஏழு தீவுகளைக் கொண்ட முழு உலகிற்கும் அரசரான மன்னர் யயாதி, ஒரு தந்தைபோல் பிரஜைகளை ஆண்டு வந்தார். அவர் தன் மகனின் இளமையை எடுத்துக் கொண்டதால் அவரது புலன்கள் பழுதற்றவையாக இருந்தன. மேலும் அவர் விரும்பிய அளவுக்கு பெளதிக சுகத்தை அனுபவித்தார்.

பதம் 9.18.47 : யயாதி மகாராஜனின் பிரியமுள்ள மனைவியான தேவயானி, தனிமையான இடங்களில், தன் மனம், வார்த்தைகள், உடல் மற்றும் வேறுபல பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு, தன் கணவனுக்கு எப்பொழுதும் இயன்றளவு அதிகமான உன்னத ஆனந்தத்தைக் கொண்டு வந்தாள்.

பதம் 9.18.48 : அனைத்து தேவர்களுக்கும் இருப்பிடமும், அனைத்து வேத ஞானத்தின் இலக்கும். பரமபுருஷருமான ஸ்ரீ ஹரியை மகிழ்விக்கும் பொருட்டு, மன்னர் யயாதி பல்வேறு யக்ஞங்களைச் செய்து, பிராமணர்களுக்கு ஏராளமான காணிக்கைகளைக் கொடுத்தார்.

பதம் 9.18.49 : பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்தவரும், பரமபுருஷருமான வாசுதேவன், மேகங்களைத் தாங்கியுள்ள ஆகாயம் போல், சர்வ வியாபகமுள்ளவராக தம்மை வெளிப்படுத்துகிறார். சிருஷ்டி அழிக்கப்படும் பொழுது, அனைத்தும் பரமபுருஷரான விஷ்ணுவுக்குள் ஒடுங்கிவிடுவதால் பலவகைப்பட்ட நிலை மறைந்துவிடுகிறது.

பதம் 9.18.50 : நாராயணராக எல்லோர் இதயங்களிலும் இருப்பவரும், எங்கும் பரவியிருப்பினும் பெளதிக கண்களுக்குப் புலப்படாதவருமான பரம புருஷரை யயாதி மகாராஜன் பௌதிக ஆசைகளின்றி வழிபட்டார்.

பதம் 9.18.51 : தூய்மையடையாத புலன்களைத் (கத்—இந்ரிய) தூய்மைப்படுத்துவதற்கு ஒருவன் தன் புலன்களையும், மனதையும் கிருஷ்ண உணர்வில் ஈடுபடுத்த வேண்டும். ஸர்வோபாதி-விணிர் முக்தம்-தத்-பரத்வேன நிர்மலம். ஒருவன் எல்லா வகையான பட்டம் பதவிகளிலிருந்தும் விடுபட வேண்டும். ஒருவன் தன்னை பெளதிக உலகுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் பொழுது அவனுடைய புலன்கள் தூய்மையற்றவையாக உள்ளன. ஆனால் ஒருவன் ஆன்மீகத் தன்னுணர்வு பெற்று, தன்னை பகவத் பக்தனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பொழுது, அவனுடைய புலன்கள் உடனே தூய்மையடைகின்றன. தூய்மையடைந்த புலன்களை பகவத் தொண்டில் ஈடுபடுத்துவதற்கு பக்தி என்று பெயர். ஹ்ரிஷீகேண ஹ்ரிஷீகேச-ஸேவனம் பக்திர் உச்யதே. ஒருவன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு புலன்களை அனுபவிக்கக் கூடும். ஆனால் தன் புலன்களை அவன் தூய்மைப்படுத்தாவிட்டால் அவனால் மகிழ்ச்சியடைய முடியாது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare